2018 மாநாட்டு செய்தியறிக்கை

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பதினேழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு
இன்று (ஞாயிறு, 8 சூலை 2018) நிறைவுற்றது

உத்தமம் நிறுவனமும் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்திய பதினேழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று ஞாயிறு சூலை 8 2018 மிகச் சிறப்புடன் நிறைவுறுகிறது என்பதை மிக்க மகிழ்வுடனும், மனநிறைவுடனும் உத்தமம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். இம்மாநாடு வெள்ளிக்கிழமை 6, சனிக்கிழமை 7, மற்றும் ஞாயிறு 8 தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.
இம்மாநாடு மிகச்சிறப்பாக நடைபெறும் பொருட்டு எல்லா உதவிகளையும் நல்கிய கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குமார இராமசாமி அவர்களுக்கும் மற்றும் எல்லா பேராசிரியர்களுக்கும் உத்தமம் சார்பாக மனமுவந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இம்மாநாடு வழக்கம்போல் ஆராய்ச்சிக்கட்டுரைப் படைப்பு, கணினி பயிற்சிப் பட்டறைகள் மற்றும் மக்கள் அரங்கம் என மூன்று பிரிவுகளாக சிறப்பாக அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. இம்மூன்று நாட்களில் 62 ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிவுசார் தேடுபொருள் என்ற பொருண்மையில் கட்டுரைகள் படைக்கப்பட்டன. இக்கட்டுரைகள்

● திறமைசார் கையடக்கக் கணினிகளில் (ஸ்மார்ட்போன்கள்) தமிழில் உரையாடல்
● உரை-பேச்சு- உரை (TTS) நிரலிகள்
● திறமைசான்ற தேடு பொறிகள்
● இயந்திர வழி தமிழ் கற்றல்
● இயந்திர உதவியுடன் மொழிபெயர்ப்பு
● உரை பகுப்பாய்வு மற்றும் தரவுச் சுரங்கங்கள்
● ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழ்ப் பயன்பாடுகளுக்கான முக்கியத்துவம்
● திறவுநிலை தமிழ் மென்பொருட்கள் மற்றும் தமிழ்ப்படுத்தல்
● அறிவுநிலை சொல் செயலாக்கம்
● எழுத்துப்பிழை சரிபார்ப்பு
● இலக்கணச் சரிபார்ப்பு
● இயற்கை மொழி பகுப்பாய்வு, (NLP)
● தமிழ்க் கணினிமொழியியல் மற்றும் தரவு மொழியியல்
● கணினி உதவியுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற தலைப்புகள்

இக்கட்டுரையாளர்கள் குறிப்பாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்சு, கனடா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் இருந்தும் வருகை தந்தனர்.  இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக தமிழ் ஆசிரியர்களுக்கென சிறப்புப் பயிலரங்குகள் இரு தினங்களில் நடைபெற்றன குறிப்பாகச் செயலி உருவாக்கம் உட்பட பல தலைப்புகளில் பயிலரங்கங்கள் நடைபெற்றன.

வெவ்வேறு தலைப்புகளில் மூன்று நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். மக்கள் அரங்கத்தில் வெவ்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் நடைபெற்றன. கண்காட்சி அரங்கில் அரசு கல்வி நிறுவனங்கள் ஊடகத்துறையினர் எனப் பதினைந்து கூடங்கள் இடம்பெற்றன. பொது மக்களுக்குப் பயன்படும் மென்பொருள்கள், இணையம், கணினி குறித்த நூல்கள், கல்விநிறுவனங்கள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொள்ளும் கண்காட்சி அரங்குகளும் இடம்பெற்றன.

இம்மூன்று நாட்களாக நடைபெற்ற பல கருத்து பரிமாற்றங்களின் பலனாக கீழே கண்டுள்ள சில திட்டங்கள் உத்தமம் நிறுவனத்தின் பெயரால் பரிந்துரைக்கின்றோம்

  1.  தமிழ் விசைப்பலகை “தமிழ்99” –இல், இந்திய ரூபாய் சின்னத்தை இணைத்தல்
  2.  ஓருங்குறி தமிழ் எழுத்துமுறை அறிமுகப்படுத்தப் பட்ட போதிலும் அரசு செயலகங்கள் சிலவற்றில் இன்னமும் வேறுஎழுத்துரு முறைகள் பயன்பாட்டில் உள்ளன. தரப்படுத்தப்பட்ட உள்ளீடு முறைகள் அவசியமானது.
  3. .தநா, .கல்வி, .வணி போன்ற தமிழ் இணைய முகவரிகள் பெறுவதற்கு ICANN அமைப்பிற்கு தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் விண்ணப்பித்தல் அவசியம்
  4.  ஆசிரியர்களுக்கான தமிழ்க் கணிமை சம்பந்தப்பட்ட பயிற்சிகள் நடத்துதல்
  5.  மாற்றுவலு உள்ளோர்க்கான பிரெய்லி குறியீடுகள் தமிழை உள்வாங்குவதற்காக அடுத்த பதிப்பிற்கு மேம்படுத்துதல்
  6.  இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்களை மேம்மடுத்த உத்தமம் அமைப்பு கூகிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்

அடுத்த உலகத் தமிழ் இணைய மாநாடு, இலங்கையில் நடத்த செயற்குழு தனது ஒப்புதலை அளித்துள்ளது. இது குறித்து எமது இலங்கை உறுப்பினர்களான திரு த. தவரூபன், கெ. சர்வேஸ்வரன் ஆகியோர் இலங்கையின் பல்கலைக்கழகம் ஒன்றுடன் ஒப்புதல் பெற்றவுடன் உறுதி செய்யப்படும்.

சில கூட்டு முயற்சித் திட்டங்கள்

கூகிள் நிறுவனமும் உத்தமும்

  • இணையத்தில் உள்ளடக்கங்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்த உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளடக்க உருவாக்குனர்கள் மற்றும் பதிப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கூகிள் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுதல்
  • கூகிள் அட்சென்ஸ் இல் தமிழ் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் உள்ளடக்கப்படாத கூகிளின் ஏனைய வெளியீடுகளிலுமு் தமிழை உள்ளடக்க கூகுள் நிறுவனத்துடன் செயற்படல்.
  • கூகிளின் தமிழ் மொழிபெயர்ப்பு செயலிகளில் தேவையான மாற்றங்களை உள்வாங்குவதற்கு தேவையான ஆலோசனைகள் பின்னுாட்டங்களை அளித்தல்.

இவண்
அப்பாசாமி முருகையன்,
தலைவர்
உத்தமம்