pm logo

சுந்தர சண்முகனார் எழுதிய
சிலம்போ சிலம்பு! - பாகம் 1
(சிலப்பதிகாரம் - திறனாய்வு)

cilampO cilampu
(literary analysis of cilappatikAram)
by caNmuka cuntaranAr
In Tamil script, Unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading, correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சுந்தர சண்முகனார் எழுதிய
சிலம்போ சிலம்பு! பாகம் - 1 (திறனாய்வு)


Source:
தித்திக்கும் திறனாய்வு
ஆசிரியர்: ஆராய்ச்சி அறிஞர் முனைவர் சுந்தர சண்முகனார்
தமிழ் - அகராதித் துறைப் பேராசிரியர் (ஓய்வு)
தமிழ்ப் பேரவைச் செம்மல்
மதுரை காமராசர் பல்கலைக் கழகம், புதுச்சேரி - 11.
வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு தி.நகர், சென்னை-17,
முதல் பதிப்பு: அக்டோபர் 1992
உரிமை ஆசிரியருக்கு
திருநாவுக்கரசு தயாரிப்பு
விலை: ரூ.54-00
அச்சிட்டோர்: சபாநாயகம் பிரிண்டர்ஸ், கீழவீதி, சிதம்பரம்.
-----------------------

பதிப்புரை


நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் சுவையை, முனைவர் சுந்தர சண்முகனார் அவர்கள் நீண்ட நாட்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூல் வடிவில் தமிழ் அறிந்த மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளின் காப்பியச் சுவையையும் கவித் திறத்தையும் பொருத்தமான பாத்திரப் படைப்புகளையும் விருவிருப்பான கதை ஓட்டத் தையும் இந்நூலின் மூலம் சிறப்பாகக் காண முடிகிறது.

முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த தொரு திறனாய்வு நூல், ஒரு புதுப் படைப்பிலக்கியம் போலவே படைக்கப்பட்டுள்ளது.

உரைநடை வடிவில் நூல் அமைந்துள்ளதால் எல்லோரும் இதனைப் படித்துணரலாம். சிலப்பதிகாரச் செய்யுள் பகுதிக ளுடன் அங்கங்கே மேற்கோள் காட்டிக் காப்பியத்தின் சாரத்தைப் பேராசிரியர் சுந்தர சண்முகனார் அவர்கள் இனிய எளிய நகைச்சுவையும் கலந்த தமிழில் மக்களுக்கு எடுத்து இயம்பியுள்ளார்கள்.

சிலப்பதிகாரத்திற்குக் கிடைத்துள்ள சிறந்த இந்த ஆய்வு நூலைப் படிப்பவர்கள் சிலப்பதிகாரம் முழுவதையும் படித்துச் சுவைக்க வேண்டுமென்ற ஆவல் கொள்வார்கள் என்பது உறுதி.

காப்பியத்தில் உள்ள செம்பொருளை, ஆசிரியர் சுந்தர சண்முகனார், 'மூவேந்தர் காப்பியம்' முதல் 'சில சிக்கல் தீர்வுகள்' வரையிலான முப்பத்தொரு தலைப்புகள் இட்டுச் சுவைபெற விளக்கியுள்ளார்.

ஆசிரியர் தம் கருத்துக்கு அரணாகப் பல நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டியிருப்பதன்றி, உலகியல் அனுபவ நிகழ்ச்சிகள் பலவும் தந்து தம் கருத்துகளை நிறுவிச் சாதனை படைத்துள்ளார்.

இந்நூலை அளித்துள்ள முனைவர் சுந்தர சண்முகனார் தமிழ் மக்களின் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவராவார்.

தமிழ் மக்கள் இந்நூலைப் பெரிதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையில் வானதி பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளேன். ஏற்று மகிழுங்கள்.

      வானதி ஏ. திருநாவுக்கரசு
-------------------
பொருளடக்கம்

புகுவாயில்
1. மூவேந்தர் காப்பியம்
2. இயல் இசை நாடகப்பொருள் - தொடர் நிலைச் செய்யுள்
3. இரட்டைக் காப்பியங்கள்
4. தெய்வப் பொதுவுடைமை
5. காப்பியக் கட்டுக் கோப்பு
6. ஊழ் வினை
7. கனா
8. நிமித்தம்
9. புராணக் கதைகள்
10. அழுகைச் சுவை
11. காப்பியத்தில் கலைகள்
12. சிலம்பில் போர்கள்
13. வாணிகம்
14. பழக்க வழக்க மரபுகள்
15. இயற்கைக் காட்சிப் புனைவு
16. உவமை உருவகங்கள்
17. காப்பியத்தில் கானல் வரியின்
18. காப்பிய முன்னோட்டச் சுவை
19. கோவலன் நிலைமை
20. கண்ணகியின் கற்புநிலை
21. கவுந்தி யடிகளின் கடமை உணர்வு
22. மாதவியின் மன உறுதி
23. பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு
24. மாதரியின் மாண்பு
25. பொற்கொல்லனின் பொய்ம்மை
26. புகார் சோழர் சிறப்பு
27. மதுரை பாண்டியன் சிறப்பு
28. வஞ்சி - சேரர் சிறப்பு
29. சிறப்பான சுவைச் செய்திகள்
30. கண்ணகி பாண்டியன் மகளா?
31. சில சிக்கல் தீர்வுகள்
----------------------

புகுவாயில்


சிலப்பதிகாரம்

கழகக் காலத்தை அடுத்தவரும் சமண சமயப் பற்று உடையவருமாகிய இளங்கோவடிகள், மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் வாயிலாகக் கேட்டறிந்த கண்ணகி யின் வரலாற்றில் கண்ணகியின் சிலம்பு முதன்மை பெற் றிருப்பதால் சிலம்பு தொடர்பான சிலப்பதிகாரம் என்னும் பெயரிட்டு நூல் இயற்றினார். இரும்பு + பாதை = இருப்புப் பாதை, கரும்பு+வில் = கருப்புவில் என்பனபோல, சிலம்பு + அதிகாரம் - சிலப்பதிகாரம் என்றாயிற்று. அதிகரிப்பது அதிகாரம். அதிகரித்தல் என்பது, தொடர்ந்து வளர்தல் விருத்தியடைதல் எனப் பொருள்படும். அதிகாரம் என்னும் சொல்லுக்கு 'நூல்' என்னும் பொருள் பிங்கல நிகண்டில் கூறப்பட்டுள்ளது. எனவே, சிலம்பு தொடர்பான நூல் சிலப்பதிகாரம் எனப் பெயர் சூட்டப் பெற்றது. இது, சிலம்பு எனச் சுருக்கமாகவும் பெயர் வழங்கப் பெறும்.

இந்நூல் தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகும். இவற்றுள், தமிழ்நாட்டில் நடந்த வரலாறு பற்றியவை சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்களே. இவ்விரண்டனுள் சிலப்பதிகாரம் முதன்மை உடையது. சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் கோயிலைக் கட்டினான் - இளவல் இளங்கோ இந்தச் சொல் கோயிலைக் கட்டினார்.

சிலம்போ சிலம்பு

'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்று சுப்பிரமணிய பாரதியாரால் பாராட்டப் பெற்ற இந்நூல் ஒலி நயமும் உணர்ச்சியைப் பெருக்கும் ஆற்றலும் உடையது.

பெண்மைப் புரட்சியாகிய இந்நூல், இன்பியலாகத் தொடங்கப் பெற்றிருப்பினும் இறுதியில் துன்பியலாகவே முடிக்கப்பெற்றுள்ளது. இருப்பினும், வாழ்த்துக் காதை போன்ற பகுதிகளால் இளங்கோ அடிகள் ஓரளவு செயற்கை யான மங்கல முடிவு தந்துள்ளார்.

ஆசிரியர் கூற்றாக வரும் இடங்கள் சில அரிய நடையில் இருப்பினும், கதை மாந்தர்களின் கூற்றாக வரும் இடங்கள் அவர்கட்கு ஏற்ற நடையில் நடைபோடுகின்றன. நாடகக் காப்பியம் ஆயிற்றே - நடையின் சுவைக்குச் சொல்லவா வேண்டும்!

பல காலங்களில் நடைபெற்ற பல்வேறு கதைச் செய்திகள் சூழ்நிலைக்கு ஏற்ப இடம் பெற்றிருப்பதால், பொய்க் கற்பனைகள் கொண்டது சிலம்பு எனச் சொல்லத் தோன்றினாலும், எத்தனையோ வேறு காப்பியங்களை நோக்க, சிலம்பில் பொய்க் கற்பனைகள் குறைவே. முற்றிலும் கற்பனை கலவாது காப்பியம் எழுதுவது அரிது. அவ்வாறு எழுதின் அது காப்பியமாகாது - வரலாற்று நூலாகும்; ஆனால் இது காப்பியம்.

குடிமக்கள் காப்பியமாகத் திகழும் சிலம்பில் இலக்கிய நயத்திற்குக் குறைவே இல்லை. கலைகள் பற்றித் தனி நூல் எழுதுதல் வேண்டும்.

நூல்வடிவம்

முன்னமேயே சிலப்பதிகாரம் பற்றிப் பல திறனாய்வு நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. காலம் கடந்து இப்போது இந்நூலை யான் எழுதியது ஏன்? பல ஆண்டுகட்கு முன், யான் தமிழ் எம்.ஏ. தேர்வுக்குப் படித்த போது, இரண்டு குறிப்புச் சுவடிகள் (Note Books) நிறையக் குறிப்பெடுத்து வைத்தேன். இடையில் பல ஆண்டுகள் மூளைக்கட்டிப் பிணியால் யான் படுக்கையில் கிடந்ததாலும், இந்தக் குறிப்புச் சுவடிகள் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மறைந்து கிடந்ததாலும், குறிப்புகட்கு நூல் வடிவம் தர இயலவில்லை. அண்மையில் வேறொன்றைத் தேடும் முயற்சியின்போது, பரண்மேல் இருந்த தாள் கட்டு ஒன்றி லிருந்து இக் குறிப்புச் சுவடிகள் தற்செயலாகக் கிடைத்தன. இந்தக் குறிப்புகளை ஓரளவு சுருக்கியும் புதிய கருத்துக்கள் சில சேர்த்தும் இந்நூல் வடிவைப் படைத்தேன். குறிப்பு களை வீணாக்கக் கூடாதல்லவா?

தமிழ் வித்துவான், தமிழ் எம்.ஏ. ஆகிய தேர்வுகட்குப் படித்த போதினும்,கல்லூரியில் பாடம் நடத்திய போதினும், இப்போதே, சிலப்பதிகாரத்தை ஓரளவாவது முறையாகப் படித்ததான உளநிறைவு ஏற்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் கடக்க அரிதாகிய பெருங்கடல். அதிலிருந்து சில முத்துக்களே இந்நூலில் அறிமுகம் செய்யப் பெற்றுள்ளன. பக்கக் கட்டுப்பாடும் நினைவிருக்கிறது.

திறனாய்வு

என் திறனாய்வுக் கருத்துக்கள் சில, வேறு சிலருடையன வற்றோடு மாறுபட்டிருக்கலாம். யான் தமிழ் எம்.ஏ. தேர்வில் விருப்பப் பாடமாக இலக்கியத் திறனாய்வை எடுத்துக் கொண்டேன். திறனாய்வு பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள சில நூல்களைப் படித்துள்ளேன். இதுதான் திறனாய்வு - இவ்வாறு செய்வதுதான் திறனாய்வு என எவரும் வரையறுத்துக் கூறுவதற்கில்லை. ஒவ் வொருவரின் கோட்பாட்டிலும் வேறுபாடு இருக்கலாம். எனவே, எனது திறனாய்வும் ஏதோ ஒருவாறு இருக்கலாம்.

தித்திக்கும் திறனாய்வு எனச் சுருக்கமாகப் பெயர் தரப் பட்டுள்ளது. இதனைத் தித்திக்கச் செய்யும் திறனாய்வு என விரித்துக் கொள்ள வேண்டுகிறேன். அதாவது, சிலப்பதிகாரத்தைத் தித்திக்கச் செய்யும் திறனாய்வு என்பது இதன் கருத்தாகும். சிலப்பதிகாரத்தைத் தித்திக்கச் செய்ய, எனக்குத் தெரிந்த அளவு என்னால் இயன்ற அளவு முயன்றிருக்கிறேன் அவ்வளவுதான்.

மற்றும் இளங்கோ சிலப்பதிகாரத்தைத் தித்திக்கும்படிச் செய்திருக்கும் திறனை ஆய்வு செய்தல் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

என் கருத்துகட்கு அரணாக, இலக்கிய மேற்கோள்களும் உலக வழக்குத் தொடர்களும் செய்திகளும் ஓரளவு தந்துள் ளேன். நகைச்சுவைக்காகச் சில தொடர்களும் செய்திகளும் தந்துள்ளேன். அவற்றைக் கொச்சையாக எண்ணாதிருக்க வேண்டுகிறேன். இடையிடையே மாற்றுச் சுவை வேண்டுமல்லவா?

கூறியது கூறல்

பலரோடு - பலவற்றோடு தொடர்புடைய ஒரு கருத்தே, அவரவரைப் பற்றியும் - அவையவை பற்றியும் கூறியுள்ள பகுதிகளில் திரும்பத் திரும்ப வரலாம். "கூறியது கூறினும் குற்றம் இல்லை - வேறொரு பொருளை விளைக்குமாயின்" என்னும் கோட்பாட்டின்படி, இத்தகைய கூறியது கூறலை அன்புகூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன். மூளைக் கட்டிப் பிணி தொடர்பான தொல்லையோடு எழுபதாம் அகவையைக் கடந்துவிட்ட அடியேன் இயன்றதைச் செய்துள்ளேன். ஏற்றருள்க.

இந்நூலை நன்முறையில் அழகாக வெளியிட்ட புத்தக வித்தகர் மதிப்புமிகு ஏ.திருநாவுக்கரசு அவர்கட்கு மிக்க நன்றி செலுத்துகிறேன். சபாநாயகர் அச்சகத்தாருக்கும் நன்றி. வணக்கம்.

புதுச்சேரி- 11
15-9-1992         சுந்தர சண்முகன்
--------------------------

1. மூவேந்தர் காப்பியம்

மன்னராட்சி நடைபெற்ற பண்டைக் காலத்தில் மன்னர்கள் ஒருவரோ டொருவர் போரிட்டுக் கொண்டனர். குடியரசாட்சி புரியும் இருபதாம் நூற்றாண்டிலும் போருக்குக் குறைவில்லை. நாட்டுத் தலைவர்களின் தூண்டுதலால் நாடுகள் ஒன்றோ டொன்று போரிடுகின்றன. போரூக்கம் என்னும் இயல்பூக்கம் எல்லாருக்கும் உண்டெனினும் அதை அமைதி (Sublimation) செய்து திசை திருப்பி வெல்வதற்கு உரிய பொறுப்பு பெரும்பாலும் அரசுத் தலைவர்களிடம் இருப்பதாகத் தோன்றவில்லை.

குறிப்பாகத் தமிழகத்தை எடுத்துக் கொள்ளிலும் பண்டைக் காலத்தில் சோழர், பாண்டியர், சேரர் என்னும் முடியுடை மூவேந்தர்களும் அவர்களைச் சார்ந்த அல்லது சாராத சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் இடைவிடாது தொடர்ந்து ஒருவரோ டொருவர் போரிட்டுக் கொண்டனர். வரலாறு என்னும் தலைப்பில் உலகில் எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்கின், பெரும்பாலும் போர்களைப் பற்றிய செய்திகளே இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

பண்டு தமிழகத்தில் ஔவையார் போன்ற புலவர்கள் சிலர் வேந்தர்களிடையே தூது சென்று அமைதி காக்கப் பாடுபட்டதாகத் தெரிகிறது. புலவர்கள் சிலர் தம்மை ஆதரித்த மன்னர்களைப் போற்றிப் புகழ்ந்த பாடல்களைக் காண்கிறோம். சேர - பாண்டிய - சோழர் ஆகிய முடியுடை மூவேந்தர்களையும் ஒத்த நோக்கில் காணும் உயரிய ஒருமைப்பாட்டுப் புலவர் ஒருவர் இருந்தார் எனில், அவர் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகளே என்று கூறலாம்.

அடிகள் தமது நூலை, (சோழர்க்கு உரிய) புகார்க் காண்டம்,(பாண்டியர்க்கு உரிய) மதுரைக் காண்டம், (சேரர்க்கு உரிய) வஞ்சிக் காண்டம் என முப் பெருங் காண்டங்களாகப் பகுத்து அமைத்துள்ளமையால், அவரது நூலாகிய சிலப்பதிகாரம் 'மூவேந்தர் காப்பியம்' என்னும் பெருமை யுடைத்து. இதற்கு இன்னும் சான்றுகள் பல உள.

வேனில் காதை

வேனில் காதையில் இளவேனில் காலம் வந்தது பற்றி ஆசிரியர் கூறுகிறார். வடக்கே திருவேங்கடமும் தெற்கே குமரியும் எல்லையாக உள்ள தமிழகத்தில், மதுரை, உறந்தை, வஞ்சி, புகார் ஆகிய இடங்களில் அரசு செய்கின்ற மன்மதனின் துணை யாகிய இளவேனில் வந்தது என்று பாடியுள்ளனர்:

"நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண் புனல் நன்னாட்டு
மாட மதுரையும் பீடார் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் புகாரும்
அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ் துணை யாகிய
இன்னிள வேனில் வந்தனன்" (1-7)

என்பது பாடல் பகுதி. இளவேனில் காலம் வந்தது என்று சொல்ல வந்த இடத்தில், மூவேந்தர்களின் தலைநகர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய தேவையே இல்லை. அப்படி யிருந்தும், பாண்டியர்க்கு உரிய மதுரையையும், சோழர்க்கு உரிய உறந்தையையும் புகாரையும், சேரர்க்கு உரிய வஞ்சி யையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தமது ஒருமைப் பாட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தற்கு இந்த இடத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஆசிரியர்.

நெடியோன் திருமால். தொடியோள் = தொடியணிந்த குமரி கடல் என்னும் பொருள் உடைய 'பௌவம்' என்பது, கிழக்கு எல்லை மேற்கு எல்லைகள் போல் தெற்கு எல்லையும் கடலே என்பதை அறிவிக்கிறது. குமரிக் கோடு கொடுங்கடல் கொண்டதை, இந்த இடத்திலே உரை யாசிரியர் அடியார்க்கு நல்லார் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

யாப்பமைதி

இளங்கோவின் யாப்பமைதி ஒன்று இங்கே கவனிக்கத் தக்கது. முதல் சீருக்குச் சிறப்பாக மூன்றாம் சீரிலே அல்லது நான்காம் சீரிலே மோனை யமைப்பார் - அவ்வாறு மோனை யமைக்காவிடின் எதுகை அமைத்து விடுவார். மேலே தந்துள்ள பாடல் பகுதியை நோக்கின் இது புலனாகும். நெடியோன் - தொடியோள் எதுகை. தமிழ் - தண் - மோனை. மாட பீடார் - எதுகை. கலி எதுகை. கலி -ஒலி - எதுகை. அரைசு - உரைசால் எதுகை. மன்னன் - மகிழ் - மோனை. இவ்வாறே மற்ற இடங்களிலும் கண்டு கொள்ளலாம்.

நடுகல் காதை

கண்ணகி மூவேந்தர் வாயிலாக மூன்று படிப்பினைகளை அளித்தாளாம். அரசர் செங்கோல் வழுவாது ஆண்டால் தான் பெண்களின் கற்பு சிறக்கும் என்பதைச் சோழன் வாயிலாக அறிவித்தாளம். செங்கோல் வழுவினால் நேரிய மன்னர்கள் உயிர் வாழமாட்டார்கள் என்பதைப் பாண்டியன் வாயிலாகத் தெரிவித்தாளாம். மன்னர்கள் தாம் சொன்ன சூளுரையை முடித்தாலன்றிச் சினம் நீங்கார் - முடித்தே தீர்வார் என்பதை, வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தினாளாம். பாடல்:

'அருந்திறல் அரசர் முறை செயின் அல்லது
பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து,
செங்கோல் வளைய உயிர் வாழாமை
தென்புலம் காவல் மன்னவற்கு அளித்து,
வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை
வடதிசை மருங்கின் மன்னவர் அறியக்
குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்து" (207-217)

என்பது பாடல் பகுதி. ஆர் புனை சென்னி அரசர் = ஆத்தி மாலை சூடிய சோழர். தென்புலம் காவல் மன்னன் = தமிழ் நாட்டின் தென் பகுதியாகிய பாண்டிய நாட்டைக் காக்கும் பாண்டிய மன்னன். குடதிசை வாழும் கொற்றவன் தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியை ஆளும் சேரன்செங்குட்டுவன். இந்த இடத்திலும் முப்பெரு வேந்தர்களையும் இணைத்துக் காட்டியுள்ளார் அடிகள்.

வாழ்த்துக் காதை

வாழ்த்து

வாழ்த்துக் காதையில் மகளிர் மாறி மாறி மூவேந்தரைப் பற்றிப் பாடியுள்ளாது. 'வாழ்த்து' என்னும் தலைப்பில்,

“வாழியரோ வாழி வருபுனல் நீர் வையை
சூழு மதுரையார் கோமான்தன் தொல்குலமே" (13)

“வாழியரோ வாழி வருபுனல் நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியர் கோமான் தன் தொல் குலமே" (14)

"காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்" (15)

என மதுரையார் கோமானும் வஞ்சியார் கோமானும் காவிரி நாடனும் வாழ்த்தப்பெற்றுள்ளனர். அவர்தம் நாட்டு நீர் வளமும் சிறப்பிக்கப் பெற்றுள்ளன. நீர் வந்து கொண்டே யுளதாம் (வருபுனல்) காவிரி நாடன் சோழன்.

அம்மானை வரி

பெண்டிர் மூவர் கூடிக் காய் போட்டுப் பாடியாடும் ஒரு வகை ஆட்டம் அம்மானையாகும். முதலில் ஒருத்தி ஒரு வினா எழுப்புவாள். அதற்கு அடுத்தவள் விடையிறுப்பாள். மூன்றாமவள் கருத்தை முடித்து வைப்பாள். வாழ்த்துப் பாக்களை அடுத்து, சோழனைப் பற்றிப்பாடும் அம்மானைப் பாடல்கள் நான்கு உள்ளன. அவற்றுள், மாதிரிக்காக முதல் பாடலை மட்டும் காண்போம்.

"வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை?
ஓங்கரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன் காண் அம்மானை
சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானை" (16)

பெண்டிர் மூவரும் தமது பாடல்வரியின் இறுதியில் அம்மானை - அம்மானை எனக் கூறி யாடுவர். இவ்வாறு இன்னும்
மூன்று பாடல்கள் உள்ளன. அடுத்துப் பாண்டியனிடம் செல்லலாம்.

கந்துகவரி

கந்துகம் = பந்து. வரி = பாட்டு. பந்தாடிக்கொண்டு பாடும் பாட்டு இது. இந்தப் பகுதியில் நான்கு - நான்கு வரிகள் கொண்ட மூன்று பாடல்கள் உள்ளன. ஒரு பாட்டில் உள்ள மூன்றாவது நான்காவது அடிகளே மூன்று பாடல்களிலும் மூன்றாவது - நான்காவது அடிகளாக உள்ளன. பாடல்:

“தென்னன் வாழ்கவாழ்க என்று சென்றுபந் தடித்துமே
தேவரார மார்பன் வாழ்க என்றுபந் தடித்துமே" (21)

என்பன மூன்று பாடல்களின் இறுதியிலும் வருவனவாகும்.

ஊசல் வரி

சோழனுக்கு அம்மானை வரி யாயிற்று; பாண்டியனுக்குக் கந்துகவரி யாயிற்று. மூன்றாவதாகச் சேரனுக்கு ஊசல் வரிப்பாட்டுகள் மூன்று பாடப்பட்டுள்ளன. ஊசல்-ஊஞ்சல். மூன்று பாடல்களின் இறுதி அடிகள் மட்டும் வருமாறு:

"கொடுவில் பொறி பாடி ஆடாமோ ஊசல்' (23)
"கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்'' (24)
"விறல்வில் பொறிபாடி ஆடாமோ ஊசல்'' (25)

சேரனின் வில் இலச்சினையும் கடம்பு எறிந்த வெற்றி யும் குறிப்பிடப்பட்டுள்ளன. வாழ்த்துக் காதையில் இறுதியாக மூவர்க்கும் ஒவ்வொன்று வீதம் வள்ளைப் பாட்டுகள் பாடப்பட்டுள்ளன. உரலில் ஒரு பொருளை இட்டு உலக்கையால் குற்றிக் கொண்டே ஒரு தலைவனைக் குறித்துப் பாடும் பாட்டு வள்ளைப் பாட்டாகும். அவை வருக:

வள்ளைப் பாட்டு

"தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்
ஆழிக் கொடித் திண்தேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித் தடவரைத்தோள் பாடலே பாடல்
பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்" (26)

"பாடல்சால் முத்தம் பவழ உலக்கையான்
மாட மதுரை மகளிர் குறுவரே
வானவர்கோன் ஆரம்வாங்கியதோள் பஞ்சவன்தன்
மீனக் கொடிபாடும் பாடலே பாடல்"
வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்” (27)

“சந்துஉரல் பெய்து தகைசால் அணிமுத்தம்
வஞ்சி மகளிர் குறுவரே வான்கோட்டால்
கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை
படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல்
பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல்" (28)

இவை விளையாட்டுப் பாடல்களாகும். கரும்பாகிய உலக்கையாலும், பவழ உலக்கையாலும், யானைக் கோட்டு (தந்தத்து) உலக்கையாலும் குற்றுவார்களாம். உரல் சந்தன மரத்தால் ஆனதாம். சுவைத்தற்கு உரிய இலக்கியம் அல்லவா இது! மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் 'திருப்பொற்சுண்ணம்' என்னும் பகுதி ஒன்றுள்ளது. அதிலுள்ள இருபது பாடல்களின் இறுதியிலும் "பொற் சுண்ணம் இடித்து நாமே" என்னும் தொடர் இருக்கும்.

இந்த வாழ்த்துக் காதையை நோக்குங்கால், மூவேந்தரின் சிறப்பைப் புகழ்ந்து கூறுவதற்கே
கூறுவதற்கே இந்தக் காதையை இளங்கோ வடிகள் பயன்படுத்திக் கொண்டாரோ என்று வியக்கத் தோன்றுகிறது.

ஆய்ச்சியர் குரவை

இமய மலையில் பாண்டியர்க்கு உரிய மீன் இலச்சினை யும் சோழரின் புலி இலச்சினையும் சேரர்க்கு உரித்தான வில் இலச்சினையும் பொறிக்கப்பட்ட செய்தி ஆய்ச்சியர் குரவைப் பகுதியின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்
பட்டுள்ளது.

"கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும்...'' (1,2)

என்பது பாடல் பகுதி.

கட்டுரை காதை

மதுரையின் நகர்த் தெய்வ மாகிய மதுராபதி கண்ணகிக்குக் கூறுவதாக உள்ளது கட்டுரை காதை. இதிலும் மூவேந்தரின் சிறப்புகள் மொழியப்பட்டுள்ளன.

சேரர்

பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரில் படை மறவர்க்கு உணவு அளித்த செய்தி, பல்யானைச் செல்கெழு குட்டுவன் மறையவனாம் பாலைக் கௌதம னார்க்குச் செய்த உதவி, நெடுஞ் சேரலாதன் கடம்பு எறிந்த வென்றி, இமய மலையில் வில் பொறித்த வெற்றி ஆகிய சேரர் புகழ் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. பாடல்:

''பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை
திருநிலை பெற்ற பெருநாள் இருக்கை” (55, 56)

"குலவுவேல் சேரன் கொடைத் திறம் கேட்டு" (62)

"வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேல் சேரலன்" (63,64)

"கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்க' (81-84)

என்பன பாடல் பகுதிகள். அடுத்துச் சோழர் பற்றியன:-

சோழர்

புறாவுக்காக நிறைத் தட்டில் ஏறித் தசை அரிந்து தந்த சிபி, கன்றைக் கொன்ற தன் மகனைக் கொன்று ஆவுக்கு முறை வழங்கிய மனுநீதி சோழன் - ஆகிய சோழரின் பெருமை குறிக்கப்பட்டுள்ளது. பாடல்:

'புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்
பூம்புனல் பழனப் புகார்நகர் வேந்தன்" (58-59)

என்பது பாடல் பகுதி. அடுத்துப் பாண்டியர் பற்றியன:

பாண்டியர்

பாண்டியன் நெடுஞ்செழியனது ஆட்சியில், மறை ஒலி தவிர, ஆராய்ச்சி மணியின் ஒலி கேட்ட தில்லையாம்; அவன் செங்கேல் முறை யறிந்த கொற்றவனாம்; குடிபழி தூற்றும் கொடியன் அல்லனாம்:

"மறைநா ஓசை அல்லது யாவதும்
மணிநா ஓசை கேட்டலும் இலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்' (31-34)

என்பது பாடல் பகுதி.

கட்டுரை

கட்டுரை காதையின் இறுதியிலுள்ள 'கட்டுரை' என்னும் பகுதியில் பாண்டியனின் சிறப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது. பாண்டியர்குலம் அறமும் மறமும் ஆற்றலும் உடையது. மதுரை மூதூர் பண்பு மேம்பட்டது. விழாக்களும், குடி வளமும், கூழ் (உணவு) வளமும், வையைப் பேராறு தரும் செழிப்பும், பொய்யாத வானம் பொழியும் நீர் வளமும், வரிக் கூத்தாட்டும், குரவைக் கூத்தாட்டும் மற்றும் பிற வளங்களும் உடையது. செங்கோல் தவறினமைக்காகத் தேவியுடன் அரசு கட்டில் துறந்து வீழ்ந்து இறந்து வளைந்த கோலை நிமிர்த்திய பாண்டியன் நெடுஞ்செழியனைப் பெற்றது.
பாடல்:

'முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படை விளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத் தவருடை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ் சுரந் தூட்டலும்
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும்
ஆரபடி சாத்துவதி என்றிரு விருத்தியும்
நேரத் தோன்றும் வரியும் குரவையும்
என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்பொடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ் செழியன்......" (1-18)

என்பது பாடல் பகுதி.

இவ்வாறாக, இளங்கோ அடிகள், முடியுடை மூவேந்தர் களையும் ஒத்த நோக்கில் கண்டு சிறப்பித்துக் கூறியிருப்பதன் வாயிலாக, தமது சிலப்பதிகாரத்தை 'மூவேந்தர் காப்பியம்' என மொழியும்படிச் செய்துள்ளார். இந்த ஒற்றுமை நோக்கு இன்றைய உலகில் இடம் பெறுமாயின், இப்போது துன்ப உலகமாக இருப்பது இன்ப உலகமாக மாறும்.

குடிமக்கள் காப்பியம்

இந்தக் காப்பியம் மூவேந்தர்களையும் சிறப்பித்திருப்ப தால் மூவேந்தர் காப்பியம் எனக் கூறப்படினும், காப்பியக் கதைத் தலைவனும் தலைவியு மாகிய கோவலனும் கண்ணகி யும் குடிமக்கள் ஆதலின் இதனைக் குடிமக்கள் காப்பியம் எனவும் விதந்து கூறலாம்.
------------------

2. இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள்

சிலப்பதிகாரத்தில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கூறுகளும் இருப்பதாலும், பொருள் (கதைப் பொருள்) தொடர்ந்து அமைந்திருப்பதாலும், இந்நூல் இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று சிறப்பிக்கப்படுகிறது.

நாடகம் என்றாலே கதைத் தொடர்புடையது என்பதும், அதிலே நடிப்போடு இயலும் இசையும் கலந்திருக்கும் என்பதும் பெறப்படும். தமிழை, இயல்-இசை-நாடகம் என்னும் கூறுகள் உடைமையால் முத்தமிழ் என்பர். நாடகத்தில் இந்த முக்கூறும் இருப்பதால் சுருக்கமாக நாடகம் ஒன்றையேகூட முத்தமிழ் எனலாம். ஆயினும், சிலப்பதிகாரத்தில் இந்த முக்கூறுகளும் இருக்கும் பகுதிகளை ஒவ்வொன்றாகக் காணலாம்:

இயல்

இயல் என்பது, இசையும் நடிப்பும் இல்லாமல் கருத்து சொல்லும் பகுதி. சிலம்பில் உள்ள ஆசிரியம் - கலி - வெண்பா ஆகியவை இயல் கூறுகள். மற்றும், கதையமைப்பு, கவுந்தி- சாரணர்-மாடலன் முதலியோர் கூறும் அறிவுரைகள் அறவுரைகள், பல்வேறு சுவை நிலைகள், அரசநீதி, பத்தினி வழிபாடு, மூன்று உண்மைகளை நிலைநாட்டல், நீதி நிலை நாட்டல், பல புனைவுகள் (வருணனைகள்), நாடு-நகர்- அரசுச் செய்திகள், பல படிப்பினைகள் -முதலியன இயல்
பகுதிகளாம். தொல்காப்பியர் கூறியுள்ள உரையொடு புணர்ந்த பழமை' யாகிய தொன்மை என்பதற்கு நச்சினார்க் கினியர் சிலப்பதிகாரத்தை எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார்.

இசை

அரங்கேற்று காதையில், இசை யாசிரியன், தண்ணுமை குழல் யாழ் ஆசிரியர்கள் ஆகியோரின் இயல்புகள் கூறப் பட்டுள்ளன. வேனில் காதையில் நிலாமுற்றத்தில் மாதவி இசைத்தலும், கானல் வரிப் பாடல்களும், புறஞ்சேரி யிறுத்த காதையில் கோவலன் பாணர்களுடன் பாடியதும், புணர்ந்த மகளிரின் இசையும், வேட்டுவவரி ஆய்ச்சியர் குரவை குன்றக் குரவை ஆகிய இசைப் பாடல்களும், நடுகல் காதையில், படை மறவர்கட்குச் செங்குட்டுவன் இசை விருந்து அளித்ததும், வாழ்த்துக் காதையில், பெண்டிர் மூவர் முறையே சோழனைப் புகழ்ந்து அம்மானை வரியும் பாண்டியனைப் புகழ்ந்து கந்துக வரியும் -சேரனைப் புகழ்ந்து ஊசல் வரியும் - மூவேந்தர்களையும் சேர்த்துப் புகழ்ந்து வள்ளைப் பாட்டும் பாடியுள்ளமையும், இன்ன பிறவும் இசைப் பகுதிகளாகும்.

நாடகம்

இயலும் இசையும் அமைந்திருத்தலே நாடக உறுப்பு தானே.

இந்தக் காப்பியக் கதை தெருக் கூத்தாகவும், மேடை நாடகமாகவும், திரை ஓவிய நாடகமாகவும் நடிக்கப் படுகிறது.
அரங்கேற்று காதையில் அரங்க அமைப்பு விளக்கப் பெற்றுள்ளது. நாடகத்திற்கு வேண்டிய கதை மாந்தர்கள்
பொருத்தமாக உள்ளனர். தலைவன் (Hero) கோவலன். தலைவி (Heroine) கண்ணகி. கண்ணகிக்குக் கெடுமகள் (வில்லி) மாதவி. கோவலனுக்குக் கெடுமகன் (வில்லன்) பொற்கொல்லன்.

திருமணம், காதல், பிரிவு, துயரம், மறம், துணிவு, உடன்போக்கு, பரத்தைமை, கவுந்தி துணை, மாதரி அடைக்கலம், பொய்க்குற்றம் சாட்டப்படல்,கொலை, கண்ணகியின் மற எழுச்சி, மதுரை எரிதல், பாண்டியனும்
தேவியும் இறத்தல், கண்ணகி வழிபாடு, சிலர் துறவு பூணுதல், சிலர் இறத்தல், சேரனின் போர் - இவையெல்லாம் நாடகத்திற்கு ஒத்துவரும் காட்சிக் கூறுகளாகும்.

மற்றும், பின் வருவதை முன்னரே அறிவிக்கும் முன்னோட்ட நிமித்தங்கள் இருப்பது நாடகச் சுவையாகும். இது இப்போது 'Direction' எனப் புகழப்படுகிறது.

கொலைகாரப் பாண்டியனது நேர்மையையும் ஆட்சிச் சிறப்பையும் முன்னாலே புகழ்ந்திருப்பது ஒரு நல்ல கட்டம்.
பல பகுதிகள் மாறி மாறி உரையாடும்படி அமைந் திருப்பது, சொன்ன அடியையே திரும்பத் திரும்பச் சொல்லுதல்,
இடையிடையே உரையிடையிட்ட பாட்டுகளும் கட்டுரைகளும் அமைந்திருத்தல் ஆகியவை நாடகக் கூறுகள்.
கடலாடு காதையில், கொடு கொட்டி, பாண்டரங்கம், அல்லியத் தொகுதி,மல், துடி, குடை, குடம், பேடு, மரக்கால், பாவை, கடையம் என்னும் பதினோர் ஆடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேனில் காதையில், கண் கூடு வரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள் வரி என்னும் எட்டு நடிப்புக் கூறுகள் சொல்லப் பட்டுள்ளன.

ஐந்திணைக் கூறுகளுள் மருதக் கூறு இந்திர விழவூர் எடுத்த காதையிலும், நெய்தல் கூறு கானல்வரிக் காதையிலும், பாலைக்கூறு வேட்டுவவரிக் காதையிலும், முல்லைக்கூறு ஆய்ச்சியர் குரவைக் காதையிலும், குறிஞ்சிக் கூறு குன்றக் குரவைக் காதையிலும் இடம்பெற்றுள்ளன.

நாடகக் களம்

The Art of play Writing என்னும் ஆங்கில நூலை யான் நாற்பது ஆண்டுகட்கு முன்பு படித்தேன். படித்த போது, இதன் படியே சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறதே - ஒருவேளை, சிலப்பதிகாரத்தைப் பார்த்துத்தான் யாராவது இந்த இலக்கணத்தை வகுத்திருப்பார்களா? என்று ஐயப்படும்படியாகவும் இருந்தது. இது நிற்க-

சேக்சுபியரின் (Shakespeare) நாடகங்களில் ஐந்து களங்கள் (Acts) இருக்கும். அந்த வகையில் சிலப்பதி காரத்தைப் பின் வருமாறு ஐந்து கட்டங்களாகப் பகுக்கலாம்.

1. தொடக்கம்: திருமணம் (மங்கல வாழ்த்துப் பாடல்) முதல் கானல் வரி வரையும் தொடக்கம் ஆகும்.
2. வளர்ச்சி: கானல் வரியிலிருந்து அடைக்கலக் காதைவரை வளர்ச்சியாகும். (வளர்ச்சியிலேயே ஒரு
திருப்பம் என்றும் கூறலாம்).
3. உச்ச கட்டம் (climax):கொலைக்களக் காதை. இது 30 காதைகளுள் 16-ஆம் காதையாகும்.
4. திருப்பம்: கண்ணகியின் மாற்றமும் மதுரை அழிவும் தொடங்கிக் கண்ணகி சேரநாடு செல்லும் வரை திருப்பமாகும்..
5. முடிவு: தேவர்களும் கோவலனும் மேலேயிருந்து வந்து கண்ணகியை மேலுக்கு அழைத்துச் செல்லுதல் முதல் கண்ணகி வழிபாடு -வாழ்த்து வரந்தரு காதை வரை முடிவாகும்.

இவற்றையே சுருக்கினால், (1) தொடக்கம் - புகார்க் காண்டம், (2) நடு - மதுரைக் காண்டம், (3) முடிவு வஞ்சிக்காண்டம் என்னும் மூன்றுக்குள் அடக்கலாம்.

சுருங்கக்கூறின், காப்பியம் இன்பியலில் (comedy) தொடங்கித் துன்பியலில் (Tragedy) முடிந்தது எனலாம். துன்பியல் முடிவு வஞ்சிக் காண்டத்திற்குத் திறப்பு விழா செய்தது.

கூறியது கூறல்

சொன்னதையே திரும்பச் சொன்னால் 'கூறியது கூறல்' என்னும் குற்றமாகும் என்பர். "கூறியது கூறினும் குற்றம் இல்லை வேறொரு பொருளை விளைக்கு மாயின்"- என்னும் நூற்பா கூறியது கூறலுக்கு மாற்றாகும். மன எழுச்சிகள் தோன்றும்போது அழுத்தம் திருத்தம் ஏற்படவும் கருத்தை வலியுறுத்தவும் கூறியதை மீண்டும், கூறுதல் ஒரு வகை நாடகக்கூறு என்னும் கருத்தை 'The Art of Play Writing' என்னும் நூலில் படித்த நினைவு இருக்கிறது. இந்தக் கூறு சிலப்பதிகாரத்தில் உள்ளது.

கானல் வரியில் இது இடம் பெற்றிருப்பது வேறொரு தலைப்பில் கூறப்பட்டுள்ளது. இனி, கண்ணகி இதைக் கையாண்டிருப்பதைக் காணலாம்.

கணவன் கொலையுண்டான் என்பதை யறிந்த கண்ணகி ஊர்சூழ்வரிக் கதையில் பின்வருமாறு
கூறியனவாக உள்ளது.

“காதல் கணவணைக் காண்பனே ஈதொன்று
காதல் கணவணைக் கண்டால் அவன் வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
தீதறு நல்லுரை கேளாது ஒழிவனெல்
நோதக்க செய்தனன் தென்னன் இதுவொன்று" (19:10-14)

"பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்'' (51-59)

"நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையா" (73 -- 74)

வழக்குரை காதையில், பாண்டியனது அரண்மனை
வாயில் காவலனை நோக்கிக் கண்ணகி கூறியது:

"வாயிலோயே வாயி லோயே
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாள் என்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே" (20:24-29)

வாயில் காவலன் பாண்டியனிடம் சென்று கூறியது:

"பொற்றொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாளே
கணவனை இழந்தாள் கடையகத்தாளே, என" (20: 42 - 44)

இவ்வாறு கூறியது கூறல் நாடகத்திற்கு ஒருவகை ஒலிநயச் சுவை பயக்கிறது. இவை யெல்லாம் நாடகக் கூறுகள் ஆகும். சொல்நயம் பொருள்நயம்போல ஒலி நயமும் நாடகத்திற்கு வேண்டும் அல்லவா? மற்றும், நாடகம் பார்ப்பவர்கள் நாடகக் கதைப் பகுதிகளை நடிகர்களின் வாயிலாகவே அறிந்துகொள்வது போல், இயற்கைக் காட்சிப் புனைவுகள் நீங்கலாக, மற்ற கதைப் பகுதிகள், சிலம்பில் பெரும்பாலும் கதை மாந்தர்களின் பேச்சைக் கொண்டே அறியும்படி அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒன்று:- இந்தக் கால நாடகங்களில் -திரை ஓவியங்களில், முன்னால் நடந்த நிகழ்ச்சிகளுள் சில, நாடகத்தின் இடையிலோ முடிவிலோ அறிவிக்கப் படுதல் போன்ற அமைப்பு சிலம்பிலும் உள்ளது. ஓர் எடுத்துக்காட்டு: கோவலன் இளமையில் ஆற்றிய கொடைச் செயல், இரக்கச் செயல், துணிவுச் செயல் முதலியன, பதினைந்தாவது காதையாகிய அடைக்கலக் காதையில் சாவதற்கு முன் மாடலன் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை யெல்லாம் சிறந்த நாடகக் கூறுகளாகும்.

எனவே, இயல் இசை நாடகப் பொருள் தொடர் நிலைச் செய்யுள் காப்பியம் என்னும் மணி மகுடம் சிலப்பதிகாரத்திற்குச் சூட்டப்பட்டிருப்பது நனிசாலும்.
-----------------------

3. இரட்டைக் காப்பியங்கள்

ஏதேனும் ஒரு வகையில் ஒற்றுமை உடைய - அல்லது- தொடர்புடைய இரண்டை இரட்டை என்பது மரபு. இரட்டைப் பிள்ளைகள், இரட்டைப் புலவர்கள், இரட்டை மாட்டு வண்டி, இரட்டை நகரங்கள் (ஐதராபாத்- செகந்தராபாத்) முதலியன இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.

இவ்வாறு தமிழ்நூல்களுள் 'இரட்டைக் காப்பியங்கள்' என்றால், அப்பெயர், சிலப்பதிகாரம் - மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களைக் குறிக்கும். கோவலன் - கண்ணகி ஆகியோரைப் பற்றியது சிலப்பதிகாரம். கோவலன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மாதவிக்கும் கோவலனுக்கும் மகளாகிய மணிமேகலை என்பவளைப் பற்றியது மணிமேகலை. முன்னதை இயற்றியவர் இளங்கோ வடிகள். பின்னதை இயற்றியவர் மதுரைக் கூல வாணிகன் சாத்தனார். இனி இரண்டிற்கும் உரிய தொடர்புகளைக் காணலாம்.

கோவலன், கண்ணகி, சித்திராபதி, வயந்த மாலை, மாதவி, மணிமேகலை ஆகிய கதை மாந்தர்கள் இரண்டிலும் இடம் பெற்றுள்ளனர்.

ஒன்று மகள் கதை; மற்றொன்று பெற்றோர் கதை. மாதவியின் மகளாகிய மணிமேகலைக்குக் கண்ணகியும் பெற்றோளாக (தாயாக) மாதவியால் குறிப்பிடப் பட்டுள்ளாள். இது ஒருவகை உயர்ந்த பண்பாடு. மணிமேகலை - ஊர் அலர் உரைத்தகாதையில் சித்திரா பதியால் அனுப்பப்பட்ட வயந்த மாலையிடம் மாதவி இவ்வாறு சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:

"காவலன் பேரூர் கனையெரி மூட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை" (2:54,55)

என்பது பாடல் பகுதி. இராமாயணத்தில், இராமன் தாய் கைகேயி - கைகேயியின் மகன் இராமன் என்றும், பரதன் தாய் கோசலை - கோசலையின் மைந்தன் பரதன் என்றும் உயரிய பண்பின் அடிப்படையில் கூறும் உறவுமுறை போன்றது இது. எனவே, இரண்டையும் ஒரு குடும்பக் காப்பியம் எனலாம்.

மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனுடன் வந்த இளங்கோவைச் சாத்தனார் கண்டு, கோவலன் கொலையுண்டதும் பாண்டியனும் தேவியும் இறந்தமையும் ஊர் எரிவும் கூறி, பின்னர்க் கண்ணகிமுன் மதுராபதித் தெய்வம் தோன்றி அவளது பழம் பிறப்புச் சாப வரலாற்றையும், பதினான்காம் நாள் கோவலனைக் காண்பாள் என்பதையும் கூறியதை யான் அறிந்துள்ளேன் எனக் கூறினார். செங்குட்டுவனிடமும் இச்செய்தி கூறப் பட்டது.

உடனே இளங்கோ, சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஒரு காப்பியம் நாம் இயற்றுவோம் என்றார். மூவேந் தர்க்கும் பொதுவாகிய அப்படியொரு நூலை இளங்கோ அடிகளே இயற்றுமாறு சாத்தனார் கூற அடிகள் சிலப்பதி காரம் இயற்றினார். சாத்தனாரும் மணிமேகலைக் காப்பியத்தை இயற்றினார்.

சிலப்பதிகாரப் பதிகத்தின் இறுதியில் உள்ள,

'உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்" (87-89)

என்னும் பகுதியும், மணிமேகலைப் பதிகத்தின் இறுதியில் உள்ள

'இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனென்” (95 - 98)

என்னும் பகுதியும் ஈண்டு குறிப்பிடத் தக்கன.

சிலப்பதிகாரத்தின் இறுதியில் 'நூல் கட்டுரை’ என்னும் தலைப்புடைய பாடலின் இறுதியில் உள்ள

‘“மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்" (17 -18)

என்னும் பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கது. மணிமேகலை என்னும் தொடர்நிலைச் செய்யுளோடு கூட்டி உரைக்கப் படும் பொருள் முடிந்த சிலப்பதிகாரக் காப்பியம் முற்றுதல் உற்றது-என்பது இதன் பொருள்.

இதனால், இளங்கோவும் சாத்தனாரும் பேசிக் கொண்டு இரட்டைக் காப்பியங்களை ஒருவர்க் கொருவர் அறிவித்துக் கொண்டு இயற்றினர் என உய்த்துணரலாம்.

மற்றும், இரண்டு காப்பியங்களிலும் பல செய்திகள் ஒத்துள்ளன. அவை:-

இரண்டிலும் முப்பது கதைகள் உள்ளன. இரண்டிலுமே ஒவ்வொரு காதையின் முடிவிலும் 'என்' என்னும் ஈற்றுச் சொல் உள்ளது.

பாசறை போல் பல்வேறு பறவைகள் வீற்றிருத்தல் யானை முன் பறையறைதல் - பூதச் சதுக்கம் - முசு குந்தன் நிலை - தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் நிலை- சமண புத்தச்சார்பு - பல மதங்கள் பற்றிய விவரம்-
ஞாயிறாகிய கணவனை இழத்தல்-காலைக் காட்சி- அந்தி மாலைக் காட்சி-ஞாயிறு திங்கள் புனைவு - கடற்கரை- சோலைக் காட்சிகள் - நாடு நகர அரசர் சிறப்புகள்-மணி மேகலை துறவால் நன்மணி கடலில் வீழ்ந்தாற்போல் வருந்துதல் - கற்புடைய மகளிர் தெய்வம் தொழாமை- முதலிய செய்திகள் இரண்டு காப்பியங்களிலும் இடம் பெற்றுள்ளன. விரிப்பின் பெருகும்.

இவ்வளவு ஒற்றுமைத் தொடர்புகள் இருப்பினும், இளங்கோ அடிகள் சமண சமயச்சார்புடையவர் போலவும், சாத்தனார் புத்த சமயச் சார்பினராகவும் தோன்றுதல் வியப்பாயிருக்கலாம். இக்காலத்தில், தந்தையும் மகனும் வெவ்வேறு அரசியல் கட்சியினராகவும், தமையனும் தம்பியும் வெவ்வேறு கட்சியினராகவும். நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் ஒருவர்க் கொருவர் வெவ்வேறு கட்சியினராகவும் இருப்பினும், பல நிகழ்ச்சிகளில் இணைந்து செயல்படுகின்றனர் அன்றோ? அவ்வாறே இளங்கோவையும் சாத்தனாரையும் கருதல் வேண்டும்.

இளங்கோ சாத்தனாரை, 'தண் தமிழ் ஆசான் சாத்தன்', 'நன்னூல் புலவன் சாத்தன்' என்று புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
------------

4. தெய்வப் பொதுவுடைமை


உலகில் பொருளியலில் பொதுவுடைமை பேசப் படுகிறது. இன்னும் எது-எதிலே பொதுவுடைமைப் பேசப் படலாம். ஆனால், தெய்வக் (சமயக்) கொள்கையில் பொது வுடைமை பேசுவது-மேற்கொள்வது ஒரு பெரிய புரட்சியே யாகும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' (2104) என்று திருமூலர் சொன்னார். எல்லா ஆறுகளும் கடலில் கலப்பது போல, எல்லாச் சமயக் கொள்கைகளும் ஒரே கடவுள் கொள்கையில் சென்று முடிகின்றன வாதலின், சமயப் பூசல் வேண்டா என்று சிலர் கரடியாய்க் கத்து கின்றனர். ஆனால், இக்கொள்கையில் வெற்றி கிடைத்ததா?

உலகில் பின்பற்றப்படும் பெரிய மதங்களுள் ஒவ் வொன்றிலும் சில அல்லது பல பிரிவுகள் இருப்பது வியப் பிற்கும் வேதனைக்கு உரியதாகும். ஒரு மதத்துக் கடவுள் திருமேனி தெருவில் ஊர்வலம் வரும்போது, மற்றொரு மதத்தினர் தம் வீட்டுத் தெருக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொள்ளும் நடைமுறை உண்மையை செய்தியை நோக்குங்கால், இது குறித்து மேலும் கூறுவதற்கு என்ன இருக்கிறது?

இந்த அடிப்படையுடன் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்திற்கு வருவோம். இளங்கோ அடிகளைப்
பெரிய பொது வுடைமையாளர் எனலாம். நூலை மூவேந்தர்க்கும் பொதுவான காப்பியமாக அமைத்தது
போலவே, எல்லாத் தெய்வங்கட்கும் பொதுக் காப்பிய மாகவும் அமைத்துள்ளார் எனலாம். மன்னர் மரபில்
தோன்றினும், துறவு மேற்கொண்டோர்க்கு இஃதல்லவோ பெரிய தகுதி (இலக்கணம்) ஆகும். இனி, தெய்வத் தொடர்பாக அவர் கூறியுள்ள செய்திகளைக் காதை வாரியாகக் காணலாம்.

பதிகம்

மதுரையில், முடியில் கொன்றை மாலையணிந்த சிவன் எழுந்தருளியுள்ள வெள்ளியம்பலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

'கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருள் கிடந்தேன்" (40-41)

என்பது பாடல் பகுதி. சிவனுக்கு உரிய அம்பலங்கள் ஐந்து எனக் கூறுவர். அவை: பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தின அம்பலம், தாமிர அம்பலம், ஓவிய (சித்திர) அம்பலம் என்பன. சிதம்பரம் - பொன்னம்பலம். மதுரை - வெள்ளியம்பலம். திருவாலங்காடு - இரத்தின அம்பலம். திருநெல்வேலி - தாமிர அம்பலம். நெல்லை மாவட்டத்துக் குற்றாலம் ஓவிய அம்பலம் ஆகும். இவ்வைந்தனுள் ஒறாகிய மதுரை வெள்ளியம்பலம் பதிகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மனையறம் படுத்த காதை

கோவலன் கண்ணகியின் நலம் பாராட்டுகிறான். ஆறு முங்களுடைய முருகன் தன் வேலை நீள வாட்டத்தில் இரண்டாகப் பிளந்து நின் இரண்டு கண்களாகத் தந் துள்ான் - என்கிறான். பெண்டிரின் கண்கட்கு வேலை உவிக்கும் மரபுப்படி இந்தக் கற்பனையுள்ளது:

"அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அஞ்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது'' (49-52)

என்பது பாடல் பகுதி, பதுமையார் என்ற பெண்ணின் கண்கள் முருகனின் இரண்டு வேல் பகுதிபோல் இருந்தது என்னும் கருத்து சீவக சிந்தாமணி - பதுமையார் இலம்பகத் திலும் உள்ளது:

"ஓக்கிய முருகன் வைவேல் ஓரிரண்டனை கண்ணாள் (126)

என்பது பாடல் பகுதி. இவ்வாறாக, மனையறம் படுத்த காதையில் முருகன் இடம் பெற்றுள்ளான்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனுக்குத் திருவிழா நடைபெற்றது. அப்போது, சிவன் முதலிய கடவுளர்
கோயில்களிலும் சிறப்புப் பூசனைகள் செய்யப் பெற்றனவாம்:

"பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
... ... ....
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்'' (169-173-78)

பிறவா யாக்கைப் பெரியோன் எனச் சிவனை இளங்கா இனம் தெரிந்து கூறியிருப்பது பொருத்தமா யுள்ளது. சிவன் மக்களின் உடம்புடன் பல திருவிளையாடகள் புரிந்துள்ளார் என நூல்கள் கூறுகின்றன. ஆனால்,மற்வர் போல் எந்தப் பெற்றோர்க்கும் பிறக்க வில்லை; திடீரன மக்கள் உருக் கொண்டு வந்து ஆடல்கள் செய்துள்ளார் என்றே - நூல்கள் கூறியுள்ளன.

தொண்ணூற் றாறு வகைச் சிற்றிலக்கியங்ளுள் 'பிள்ளைத் தமிழ்' என்பதும் ஒன்று. கடவுளரையா, பெரியோர்களையோ, வள்ளல்களையோ சிறு பிள்ளையாகக் கொண்டு அவர்கள் மேல் பத்துப் பருவங்கள் அமைத்து, ஒரு பருவத்துக்குப் பத்துப் பாக்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்கள் தமிழில் பாடும் நூலுக்குப் பிள்ளைத் தமிழ் என்பது பெயராம். பல கடவுளர்க்குப் பிள்ளைத் தமிழ் பாடப் பெற்றுள்ளது. சிவனுக்கு மட்டும் பிள்ளைத் தமிழ் நூல் இல்லை. சிவன் பிள்ளையாகப் பிறக்காததனால் அவர் மேல் யாரும் பிள்ளைத் தமிழ் பாடவில்லை. இந்த மரபை ஒட்டிச் சிவனைப் "பிறவா யாக்கைப் பெரியோன்" என்று இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

அறு முகச் செவ்வேள் = முருகன். வெண் சங்கு போன்ற வெண்மேனி உடைய கடவுள் பல தேவன். நீல மேனி நெடியோன் = திருமால். மாலை வெண் குடை மன்னவன் இந்திரன்.

இந்திரனை மட்டும் 'மன்னவன்' என்று கூறியிருப்பது தொல்காப்பிய மரபை ஒட்டிய தாகும். தொல்காப்பியர் அகத்திணையியலில், முல்லை - குறிஞ்சி - மருதம் - நெய்தல் என்னும் நிலங்கட்கு உரிய தெய்வங்களைப் பின்வருமாறு கூறியுள்ளார்:

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன்மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே" (5)

என்பது நூற்பா. முதலது முல்லை- முதலது முல்லை - திருமால். அடுத்தது குறிஞ்சி - முருகன். மூன்றாவது மருதம் - இந்திரன். நான்காவது நெய்தல் - வருணன்,

இந்திரனை மட்டும் வேந்தன் என்று கூறியது ஏன்? இந்திரன் என்னும் வட மொழிச் சொல்லுக்கு வேந்தன் (மன்னன்) தலைவன் என்று பொருள் கொள்வர். எடுத்துக் காட்டுகள்:- நரேந்திரன் = மக்கள் தலைவன். சுரேந்திரன் = தேவர் தலைவன். இராசேந்திரன் = மன்னர் மன்னன் மன்னர்களின் தலைவன். கஜேந்திரன் = யானைகளின் தலைவன் - இன்ன பிற.

தேவர் உலகம் என ஒன்று இருப்பதாகவும், அங்கே தேவர்கள் எனப்படுபவர் பலர் இருப்பதாகவும், அவர்களின் தலைவன் இந்திரன் என்பதாகவும், அதனால் அவன் தேவேந்திரன் எனப்படுவதாகவும் கூறுவர். எனவேதான், தொல்காப்பியர் வேந்தன் என்று கூறியுள்ள மரபை ஒட்டி இளங்கோ மன்னவன் என்று கூறியுள்ளார்.

நாடு காண் காதை

மணிவண்ணன் கோட்டம்

மாதவியைப் பிரிந்து வந்த கோவலனும் கண்ணகியும் வைகறை யாமத்தில் யாரும் அறியாமல் புகாரை விட்டுப் பிரிந்து செல்லலாயினர். அப்போது, வழியில் உள்ள, பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் நீலமணி நிறத் தனாகிய திருமாலின் கோயிலை வலஞ்செய்து சென்றார்களாம்.

"அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணி வண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து'' (9, 10)

என்பது பாடல் பகுதி.

புத்த விகாரம்

போதி (அரச) மரத்தடிப் புத்த தேவனின் அருள் மொழியை வானத்தில் திரியும் சாரணர் வந்து ஓதுகின்ற -
இந்திரனால் அமைக்கப்பட்ட புத்தப் பள்ளிகள் ஏழைப் போற்றிச் சென்றனராம் கோவலனும் கண்ணகியும்.

''பணைஐந் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி" (11-14)

என்பது பாடல் பகுதி.

அருகன் மேடை

சமண அடியார்களாகிய சாவகர்கள் அமைத்த அருகன் சிலாதலத்தைக் (கல்பீட மேடையைக்) கோவலனும் கண்ணகியும் சுற்றிவந்து வணங்கினராம்.

"உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதலம் தொழுது வலங்கொண்டு" (24-25)

என்பது பாடல் பகுதி.

அருகன் பெயர்கள்

கோவலனும் கண்ணகியும் வழியில் கவுந்தி அடிகள் என்னும் சமணப் பெண் துறவியுடன் சேர்ந்து கொண்டனர். வழியில் சமணச் சாரணர்கள் சமணக் கடவுளாகிய அருகனைப் பின்வரும் பெயரால் குறிப்பிட்டுப் போற்றினார்.

"அறிவன் அறவோன் அறிவு வரம் பிகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி
இறைவன் குரவன் இயல் குணன் எங்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள் முனி
பண்ணவன் எண்குணன் பரத்தில் பரம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன்..." (176-189)

சைனக் கடவுளாகிய அருகனுக்கு இவ்வளவு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள், பகவன். இறைவன், எண்குணன் என்னும் பெயர்கள் திருக்குறள் - கடவுள் வாழ்த்துப் பகுதியிலும் உள்ளன. மற்றும், பரமன், சங்கரன் ஈசன், சதுமுகன் (நான் முகன்) என்னும் பெயர்கள் முறையே சிவனையும் பிரமனையும் குறிக்கும் பெயர் களாகும். சைனமதம் இந்து மதத்திலிருந்து பிரிந்ததாதலின், அங்கும் சிவன், திருமால், பிரமன் உண்டு. நன்னூல் என்னும் இலக்கணநூல் இயற்றிய சமணராகிய பவணந்தி முனிவர், நன்னூலின் எழுத்ததிகாரத் தொடக்கத்தில்,

“பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான் முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே''

எனப் பாடியுள்ள காப்புச் செய்யுளில் நான்முகனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த சொல்லதிகாரத்தின் தொடக் கத்தில்,

''முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை
அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே”

எனப் பாடிய காப்புச்செய்யுளில் அச்சுதனைக் (திருமாலைக்) குறிப்பிட்டுள்ளார். நன்னூலில் பொருளதிகாரம் இல்லை. பவணந்தியார் பொருளதிகாரமும் இயற்றினார்- அது கிடைக் காமல் போய்விட்டது என்று கூறுபவரும் உளர். ஒருவேளை பவணந்தியார் பொருளதிகாரம் இயற்றியது உண்மையாயிருப்பின், அதன் தொடக்கத்தில் சிவனைக் குறிப்பிட்டிருக்கலாம்.

இப்பெயர்கட் கிடையே 'சிவகதி நாயகன்' என்னும் பெயர் ஒன்றும் உள்ளது. சிவகதி என்பது வீடுபேறு. சைனர்களும் வீடு பேற்றைச் சிவகதி என வழங்குவது எண்ணத்தக்கது.

இதன் பின்னர்க் கவுந்தியடிகளும் அருகன் பெயர்களைக் கூறிப்போற்றின.அவர் குறிப்பிட்ட பெயர்களாவன:-

"ஒரு மூன்று அவித்தோன், காமனை வென்றோன், ஐவரை வென்றோன், அருளறம் பூண்டோன், அருகர் அறவன், அறிவோன், மலர்மிசை நடந்தோன், இறுதியில் இன்பத்து இறை என்பன. இவற்றுள் ஒன்றாய 'மலர்மிசை நடந்தோன்' என்னும் பெயர், திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பகுதியில் உள்ள 'மலர்மிசை ஏகினான்' என்னும் பெயரை நினைவுறுத்துகிறது.

சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகவன், இறைவன், எண் குணன், மலர்மிசை நடந்தோன், ஐவரை வென்றோன், பொறிவாயில் ஐந்தவித்தான்), அறவன் (அறவாழி) என்னும் பெயர்களைக் கொண்டு, திருவள்ளு வரைச் சமணர் என்று கூறுவாரும் உளர். இஃது இருக் கட்டும். நாம் திருவள்ளுவரை எல்லாச் சமயத்திற்கும் எல்லா மதங்கட்கும் பொதுவானவர் என்றே கூறுவோ மாக! திருக்குறளைப் பொதுமறை என்றே எண்ணி ஓது வோமாக!

காடு காண் காதை

அருக வணக்கம்

இந்தப் பகுதியின் தொடக்கத்தில், அசோக மரத்தின் கீழ் அமர்ந்த அருக தேவனைத் தொழுத செய்தி கூறப் பட்டுள்ளது.

"கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியின் தோற்றத்து அறிவனை வணங்கி” (3,4)

திருமாலின் திருவோலக்கம்

கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும் உறையூரைக் கடந்து சென்று ஓர் இளமரக் காவில் தங்கி யிருந்தபோது மாங்காடு என்னும் ஊர் மறையவன் ஒருவன் ஆங்கு வந்தான். அவனை நோக்கி, நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்றெல்லாம் கோவலன் வினவினான். மறையவன் பதில் இறுக்கிறான்:

என் ஊர் மாங்காடு - மறையவன் நான். காவிரி நடு அரங்கத்தில் அறிதுயில் கொள்ளும் அரங்கனை வணங்கினேன். மற்றும், திருவேங்கட மலையில், கருமுகில் மின்னலோடு வானவில் ஏந்தி இருந்தாற் போன்று, பொன்னாடையும் மணியாரமும் கொண்ட கரிய திருமால், இருபக்கக் கைகளிலும் ஆழியும் (சக்கரமும்) வெண் சங்கும் ஏந்தினால் போல், மாலையில் ஒரு பக்கல் ஞாயிறும் மறு பக்கல் வெண் திங்களும் விளங்க வீற்றிருந்த திருக் கோலத் தையும் கண்டு வணங்கி வந்தேன் - என்று கூறினான். பாடல்:

“விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலத் தானத்து
மின்னுக் கொடிஉடுத்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டுஎன்று என்உளம் கவற்ற
வந்தேன் குடமழை மாங்காட் டுள்ளேன்” (39-53)

என்பது பாடல் பகுதி. திருவேங்கடத்துத் திருமாலைப் பற்றி இளங்கோ அடிகள் கூறியுள்ள பகுதியை நோக்குங்கால், இன்னோ ரன்ன செய்தியைக் கொண்ட வேறு இலக்கியப் பகுதிகளும் நினைவிற்கு வருகின்றன. ' இலக்கிய ஒப்புமை காண்டல்' என்னும் முறையில் அவற்றையும் காண்போமே:

சாத்தனார் மணிமேகலை நூலில் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில் இப்படி ஒரு கற்பனை செய்துள்ளார்; புகார் என்னும் மங்கை, மாலையில் ஒரு பக்கல் வெண்தோடும் மற்றொரு பக்கல் பொன் தோடும் அணிந்திருந்தாற் போன்று, கீழ்பால் திங்களும் மேல்பால் ஞாயிறும் விளங்கின என்று கூறியுள்ளார்.

"புலவரை இறந்த புகார்எனும் பூங்கொடி
குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்
வெள்ளி வெண் தோட்டோடு பொன்தோடாக..."

என்பது பாடல் பகுதி. பரிபாடல் என்னும் நூலிலும் திருமாலைப் பற்றி இப்படி ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. திருமாலின் ஒரு கையில் ஞாயிறு மண்டிலம் போல் ஆழியும் (சக்கரமும்), மற்றொரு கையில் வெண் திங்கள் மண்டிலம் போல் வெண் சங்கும் உள்ளனவாம்.

"பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த
இருவேறு மண்டிலத் திலக்கம்போல
நேமியும் வளையும் ஏந்திய கையால்... " (13-7-9)

என்பது பாடல் பகுதி. திருவரங்கத்திலும் திருவேங்கடத்தி லும் திருமாலைக் கண்டு வணங்கவேண்டுமென மாங்காட்டு மறையவனின் கண்கள் அவன் மனத்தை உறுத்தினவாம் என்னும் பொருளில் உள்ள "என் கண் காட்டு என்று உளம் கவற்ற வந்தேன்" என்னும் பகுதி சுவைக்கற்பாலது.

மாங்காட்டு மறையவன் மேலும் வழியில் குறிப்பிட்ட ஒரு மலையைச் சுட்டிக் கூறுகின்றான். ஓங்கி உயர்ந்த அம் மலைப் பகுதியில் உள்ள நெடியோனாகிய திருமாலை வணங்கி, உள்ளத்தில் அவன் திருவடிகளைப் பதித்து, அம் மலையை மூன்று முறை சுற்றி வந்து தொழ வேண்டுமாம்.

"ஓங்குயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது
சிந்தையில் அவன்தன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால்..." (105-107)

என்பது பாடல் பகுதி. திருமால் உயர்ந்தோன் எனக் குறிக்கப்பட்டுள்ளார். உலகை அளக்க நெடுவிக்கிரம வடிவம் எடுத்ததால், திருமாலை நெடியோன் என்றும் உயர்ந்தோன் என்றும் கூறுதல் மரபு. கோயிலையோ மலையையோ மற்றும் இன்னோரன்ன பிறவற்றையோ மூன்று முறை சுற்றும் மக்களின் வழக்கம் இங்கே சுட்டப்பட்டுள்ளது.

கொற்றவை

கோவலன் முதலிய மூவரும் வழி கடந்து கொற்றவை கோட்டம் ஒன்றை அடைந்தனராம்; கொற்றவை நெற்றிக் கண் உடையவளாம்; விண்ணோர் வணங்கும் பெண் தெய்வமாம்.வான நாட்டாளாம்; ஐயை எனப்படுபவளாம்.

“விழிநுதல் குமரி விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்" (214-216)

வேட்டுவ வரி

வேட்டுவ வரிப் பகுதியில், கொற்றவைக்கு வழங்கும் பல்வேறு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:

"மதியின் வெண்தோடு சூடும் சென்னி!
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து அணங்காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல் பலர் தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற்கு இளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை" (54-71)

என்னும் பெயர்கள் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள், மதிசூடும் சென்னி, நுதல் நாட்டத்து (நெற்றிக் கண்) நஞ்சுண்ட கண்டி (நீலகண்டன்), நெடுமலை வளைத்தோள் (மேருமலையைச் சிவன் வில்லாக வளைத் தான்), சூலம் ஏந்தி (சிவன்), கரியின் உரிவை போர்த்து சிவன் யானைத்தோல் போர்த்தமை), அரியின் உரிவை (சிவனுக்குப் புலித்தோல் ஆடை), என்னும் பெயர்களை நோக்குங்கால், சிவனின் தேவியாகிய சிவையைக் (உமா தேவியைக்) கொற்றவையாக கூறப்பட்டிருக்கும் குறிப்பு தோன்றுகிறது. இளங்கோ அடிகள் இவ்வளவு பெயர்களை யும் நினைவில் வைத்துத் தந்திருப்பது வியப்பு.

கொன்றையும் துளவமும்

கொன்றை மலரும் துளசியும் இணையத் தொடுத்த மாலையணிந்து அரக்கர் அழிய அமரரைக் காத்துக் குமரிக் கோலத்துடன் கொற்றவை வென்றிக் கூத்தாடினாளாம்.

"கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப் பிணையல் தோள்மேல் இட்டாங்கு
அசுரர் வாட அமரர்க்கு ஆடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே" (10-ஆம் பாடல்)

இங்கே, சிவனுக்கு உரிய கொன்றை மலரும் திருமாலுக்கு உரிய துளசியும் இணையத் தொடுத்த மாலை அணிந்ததாகக் கூறியதன் வாயிலாக, சைவ-வைணவ வேறுபாடு அற்ற பொது நோக்கைக் காணலாம். "அரியும் சிவனும் ஒண்ணு (ஒன்று) - அறியாதவர் வாயில் மண்ணு என்னும் மக்களின் பழமொழி இங்கே பளிச்சிடுவதைக் காணலாம்.

மற்றும் வேட்டுவ வரியின் இறுதியிலும் இத்தகைய கருத்து இடம்பெற்றுள்ளது. யாரும் உண்ணாத நஞ்சைக் கொற்றவை உண்டு தேவர்க்கு அருள் புரிந்தாளாம்; மேலும், தன் மாமனாகிய கம்சனது சூழ்ச்சியால் ஏற்பட்ட மருதமரங்களை ஓடித்தாளாம்; மாமன் அனுப்பிய உருளும் வண்டியை உதைத்து அழித்தாளாம்.

"உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்''(22-1)

"மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச
உருளும் சகடம் உதைத்தருள் செய்குவாய்" (22:3,4)

நஞ்சுண்டவர் சிவன், இச்செயல் கொற்றவைக்கு ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளது. மருத மரங்களை ஒடித்ததும் உருளும் சகடத்தை உதைத்ததும், திருமாலின் தெய்வப் பிறவியாகிய (அவதாரமாகிய) கண்ணனின் செயலாகும். இச்செயல்களும் கொற்றவைமேல் ஏற்றப்பட்டுள்ளன. ஈண்டும், சைவவைணவ வேறுபாடற்ற பொது நோக்கைக் காணலாம். 'இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில், பிற இலக்கியக் கூற்றுகள் சில இவண் காண்பாம்.

கம்ப இராமாயணம்

ஒருவரே இருவராயுள்ள சிவனும் திருமாலும் வில் வைத்திருந்தனராம். யார் வில் வலியது என்பதைக் காண நான்முகன் இருவர்க்கும் போர் மூட்டினாராம். Eஇச்செய்தி பாலகாண்டம்- பரசு ராமப்படலத்தில் உள்ளது.

"யாரினும் உயர்ந்த மூலத்து
ஒருவராம் இருவர் தம்மை
மூரிவெஞ் சிலைமேல் இட்டு
மொய்யமர் மூட்டிவிட்டான்” (28)

என்பது பாடல் பகுதி. மற்றும் பூதத்தாழ்வார் பாடிய இயற்பா - மூன்றாம் திருவந்தாதியில் உள்ள (திவ்யப் பிரபந்தம்)

“அரன், நாரணன் நாமம்; ஆள் விடை, புள் ஊர்தி;
உரைநூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அரிப்பு, அளிப்பு; கையது வேல்,
உருவம் எரி, கார்மேனி ஒன்று" (5)

"பொன் திகழும் மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்" (98)

என்னும் பாடல்களும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன.

கால் கோள் காதை

முடியிலும் தோளிலும்

சேரன் செங்குட்டுவன் வட நாடு நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, சிவன் கோயிலில் அளித்த திருவடி மாலையைத் தன் முடியில் சூடிக் கொண்டானாம். பின்னர்த் திருமால் கோயிலில் அளித்த மாலையைத் தோளில் அணிந்து கொண்டானாம்.

"ஆடக, மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகித் தகைமையின் செல்வுழி" (62-67)

சிவன் கோயிலும் திருமால் கோயிலும் இருந்ததாகவும் முதலில் சிவன் கோயில் அளித்ததை முடியில் சூடியதால் பின்னர்த் திருமால் கோயிலில் அளித்ததைச் செங்குட்டுவன் தோளில் அணிந்து கொண்டதாகவும் கூறப்பட்டிருப்பதி லிருந்து, செங்குட்டுவனுக்குச் சமய வேற்றுமை இல்லை என்பது புலனாகும்.

இந்நூலின் வேட்டுவ வரியில் கொற்றவையின் புகழும் ஆய்ச்சியர் குரவையில் திருமாலின் சிறப்பும், குன்றக் குரவையில் முருகன் பெருமையும் விளக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாகச் சிலப்பதிகாரம் எல்லாத் தெய்வங்களும் வீற்றிருக்கும் பொதுவான சொல் கோயிலாகத் திகழ்கிறது.

உறவினர் மதங்கள்

கோவலனும் கண்ணகியும் இறந்ததும், மாதவியும் மணிமேகலையும் புத்த மதத்தைத் தழுவினர். இருவரின் தந்தைமார்களுள் கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் புத்தமதத்தில் சேர்ந்தார்; கண்ணகியின் தந்தை மாநாய்கன் சமண மதத்தில் சேர்ந்தார். எனவே, மதங்கள் உறவைக் கெடுக்கவில்லை என்பது போதரும். இக்காலத்திலும், உற வினர்களுக்குள் ஒரு குடும்பத்தார் சைவராகவும் மற்றொரு குடும்பத்தினர் வைணவராகவும் இருப்பதைக் காணலாம்.

இளங்கோ அடிகள் எதிலும் அகப்பட்டுக் கொள்ளாமல் மிகவும் விழிப்பாய் வேலை செய்திருக்கிறார். மணிமேகலை எழுதிய சாத்தனார் பச்சையாக - வெளிப்படையாகப் புத்தம் பரப்பியுள்ளார். இளங்கோ எந்த மதத்திற்கு முதன்மை கொடுத்துள்ளார் எனில், சமணத்திற்கே எனப் பதில் இறுக்கலாம். சாரணர் வாயிலாகவும் கவுந்தி வாயிலாகவும் சமணம் பரப்பியுள்ளார். எனவே, அவரைத் தனிப்பட்ட முறையில், சமணச் சார்புடையவர் என்று கூறுகின்றனர். அவருடைய தமையன் சேரன் செங்குட்டுவனோ சைவச் சார்புடையவனாகப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளான். இருப்பினும் எல்லா மதங்கட்கும் இடம் கொடுத்துள்ளான்.

சாத்தனார் தனிப்பட்டவ ராதலின் வெளிப்படையாகப் புத்தம் பரப்பினார். இளங்கோ மன்னர் குடும்பத்தினர்- ஆட்சியில் உள்ள செங்குட்டுவனின் இளவல் - எனவே, இவர், மதப் பொதுவுடைமையையே மக்களிடையே வைத்துச் சென்றுள்ளார்.
--------------------

5. காப்பியக் கட்டுக்கோப்பு

இன்னின்னவை அமைந்திருப்பது காப்பியமாகும். இவ் வாறிருப்பது சிறு காப்பியம் - அவ்வாறு இருப்பது பெருங் காப்பியம் - என்றெல்லாம் வரையறைகளும் கூறப்பட்டுள் ளன. ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகக் கூறலாம். எவரும் எந்த வரையறையையும் கட்டாயப்படுத்த இயலாது. இன்றியமையாத பெரும்பாலான அமைப்புகள் இருப்பின் சரிதான். இந்த அடிப்படையுடன், சிலப்பதிகாரத்தில் உள்ள காப்பியக் கட்டுக்கோப்புக் கூறுகள் சில காண்பாம்:-

வாழ்த்து:- திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும், பூம்புகார் போற்றுதும்- என்பனவற்றைக் கடவுள் வாழ்த்து வணக்கம்போல் கொள்ளலாம். மங்கலமாகத் தொடங்கும் இந்தப் பகுதிக்கு 'மங்கல வாழ்த்துப் பாடல்' என்னும் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.

வருபொருள் உரைத்தல்:- அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துதல் கிடைப்பது, ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் - என்பன வருபொருள் உரைத்தலாம். பதிகத்தில் பின்னால் வரப் போகிற முப்பது காதைகளையும் குறிப்பிட்டிருப்பதும் அதுவேயாம்.

நால் பொருள்: அறம்,பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் இடம் பெற்றிருத்தல். கவுந்தி, மாடலன், சாரணர் முதலியோர் கூறியன அறம். கோவலன் பொருள் தேட முயலுதல், பாண்டியனது அரசியல், சேரர்களின் போர் வெற்றி முதலியன பொருள் ஆகும். கண்ணகியும் கோவல னும் இன்புற்றது, மாதவியும்) கோவலனும் களிப்பாட்டயர்ந்தது. ஊர் மக்கள் இன்பமாகப் பொழுது கழித்தது முதலியன இன்பமாகும். கண்ணகியும் கோவலனும் மேலுலகு செல்லுதல், சேரன் வேள்வி இயற்றுதல், கண்ணகிக் கோட்ட வழிபாடு முதலியன வீட்டின்பாற் படும்.

நிகரில் தலைவன் - தலைவி:- பெருங்குடியில் பிறந்த கோவலனும் கண்ணகியும் நிகரில்லாத காப்பியத் தலைவர்களாவர்.

மலை, கடல், நாடு, நகர் புனைவுகள்: இமயத்தில் கல் எடுத்தல், குன்றக் குரவை முதலியவை மலைப் பகுதியாம்.

புகார் மக்கள் கடலில் குளித்த கடலாடு காதை கடல் பற்றியது. சோழ நாட்டுப் புனைவும் பாண்டிய நாட்டுப் புனைவும், மதுரைப் புனைவும், சேரர் புனைவும் நாடு - நகரப் புனைவுகளாம் (வருணனைகளாம்).

பருவம்: வேனில் வந்தது - வேனில் காதை பெரும் பொழுது. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை சிறு பொழுது.

இரு சுடர்த் தோற்றம். திங்கள்: மாலையாகிய குறும்பை ஓட்டித் திங்கள் மீனர சாளுதல். ஞாயிறு: ஊர் காண் காதையில் பறவைகள் ஒலிக்கத் தாமரை மலர ஞாயிறு தோன்றுதல் மதுரையைத் துயில் எழுப்பல். இந்திர விழவூர் எடுத்த காதையில் - நிலமகளின் இருளாகிய போர்வையைக் கதிராகிய கையால் நீக்கி ஞாயிறு தோன்றும் மலையில் (உதய கிரியில்) தோன்றிமை முதலியன.

மற்றும், வேங்கடத்தில் மாலையில், கிழக்குப் பக்கம் திங்களும், மேற்குப் பக்கம் ஞாயிறும் தோற்றமளித்தல்.

மணம். கண்ணகி கோவலன் மணம். முடிசூடல்: ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் மறைந்த பின், அவன் இளவல் வெற்றிவேல் செழியன் முடிசூடிக் கொண்டமை.

பொழில் நுகர்தல்: கானல் வரி -புகார் மாந்தர்கள் பொழுது போக்கியது. புனல் விளையாடல்: இந்திர விழாவின்போது புனலாடியது கடலாடு காதைப் புனலாட்டம்.

மதுக்களி = புகார் மக்கள் களித்தமை. பிள்ளை பெறல்: கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை பிறந்தமை. மாலதியின் மனங்குளிரப் பாசண்டச் சாத்தன் குழந்தையாய்த் தோன்றல். மணிமேகலைக்குப் பெயரிடு விழா.

புலவியில் புலத்தலும் கலவியில் கலத்தலும்: கோவலன் மாதவி, பாண்டியன் அவன் மனைவி, புகார் மாந்தர் ஆகியோர் புலவியில் புலந்து கலவியில் கலந்தமை.

மந்திரம்: செங்குட்டுவன் சூழ்வு (மந்திராலோசனை) செய்தமை. தூது: மாதவி வயந்த மாலையையும் கோசிகனையும் கோவலனிடம் தூது அனுப்பியமை.

செலவு - இகல்வென்றி: செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றமை. காப்பிய உட்பிரிவு: முப்பது காதைகள் அமைத்திருப்பது.

மெய்ப்பாட்டுச் சுவை: தொல்காப்பியத்தில் கூறப் பட்டுள்ள நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாட்டுச் சுவைகள் சிலம்புக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.

நகை: கணவனைப் பிரிந்த கண்ணகி மாமன் மாமியை மகிழ்விக்கப் பொய்ச் சிரிப்பு சிரித்தாள். மாதவியிடமிருந்து கணவன் வந்தபோது சிரித்தபடி அவனை வரவேற்றாள். சாலினி தன்னைப் பாராட்டியபோது கண்ணகி கூச்சப்பட்டுப் புன்னகை புரிந்தாள். மற்றும்,-கோவலனும் கண்ணகியும் புகாரைவிட்டு ஒரு காவதத் தொலைவு கடந்ததுமே, கால் நோகப் பெருமூச்செறிந்து, கோவலனை நோக்கி, மதுரை மூதூர் எது - இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று மெல்லப் பல் தெரியச் சிரித்தபடிக் கேட்டாளாம் கண்ணகி. அண்மையில் தான் மதுரை உள்ளது என்று கோவலன் கூறிச் சிரித்தானாம். எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கின் காரணமாக நகை தோன்றும் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். மேற்கூறிய நகைகளைக் கண்ணகியின் பேதைமை காரணமாக வெளிப் பட்டவை என்று கூறலாம்.

சேரன் செங்குட்டுவனுக்கு அஞ்சி, வடபுல மன்னர்கள் சிலர் பல்வேறு மாறு கோலம் கொண்டு தப்பித்து ஓடிய செய்தி வேறு தலைப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மிக்க நகைச்சுவை தருவதாகும். இது எள்ளல் காரணமாக எழுந்தது எனலாம்.

அழுகை: கண்ணகி மாலதி முதலியோரின் அழுகை.

இளிவரல் (இழிவு): கோவலனையும் கண்ணகியையும் எள்ளி நகையாடிய பரத்தனும் பரத்தையும் நரிகளாக்கப் பட்டு வருந்தியது.

மருட்கை (வியப்பு): சாரணர் வான்வழி வருதல், கவுந்தி பரத்தையர்களை நரியாகச் சபித்தல், கண்ணகி டப்பக்க முலையைத் திருகி எறிந்து மதுரையை எரித்தல், முன் பிறவியும், மறு பிறவியும் அறிதல் - முதலியன.

அச்சம்: யானை கிழ அந்தணனைத் துதிக்கையால் பற்றினபோது தோன்றிய அச்சம். மாதரி முதலியோர் தீய நிமித்தம் கண்டபோது அஞ்சினமை. அரசால் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனது அச்சம் - முதலியன.

பெருமிதம் (வீரம்): கோவலன் யானையை அடக்கினமை. கோவலன் கருணை மறவனாகவும், இல்லோர் செம்ம லாகவும் விளங்கினமை. கோவலன், மாதவி ஆகியோர் யாழ் வாசிக்கும் கலைத்திறன் உடைமை. மாதவியின் ஆடல் பாடல் கலைத்திறன். செங்குட்டுவனின் வடபுல வெற்றி - முதலியன.

வெகுளி: கண்ணகியின் சினத்தால் பாண்டியனும், தேவியும், மதுரையும் அழிந்தமை. செங்குட்டுவன் சினத்தால் கனக விசயர் கல் சுமந்தமை. வெற்றிவேல் செழியன் பொற் கொல்லனுக்கு இறப்பு ஒறுப்பு கொடுத்தமை -முதலியன.

உவகை: கோவலனும் கண்ணகியும் மனையறம் புரிந்தமை. கோவலன் செல்வச் செழிப்பால் மாதவியை அடைந்து இன்பம் துய்த்தமை. மக்கள் கடலாடியும் பொழிலில் பொழுது போக்கியும் மகிழ்ச்சியாய் விளங்கினமை - முதலாயின.

மற்றும், மூவேந்தர் இடம் பெற்றிருத்தல், பல சமயக் கோட்பாடுகள் - பல கடவுள் கோயில்கள் - பல மன்றங்கள் - பல இயற்கைக் காட்சிகள் வாணிகம் - பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் - வேட்டுவ வரி -ஆய்ச்சியர் குரவை குன்றக் குரவை முதலியன இடம் பெற்றிருத்தல் முதலிய பல்லாற்றானும், சிலப்பதிகாரம் கட்டுக்கோப்புடைய ஒரு பெருங் காப்பியம் என்னும் பெரும் பெயருக்கு மிகவும் தக்கது என்பது ஒருதலை.
----------------

6. ஊழ் வினை

ஊழின் வலிமை

சிலப்பதிகாரம் ஊழ்வினையின் துணை கொண்டே நடைபோடுகிறது. ஊழ்வினையில் நம் நாட்டு மக்களுள் பெரும்பாலார்க்கு மிக்க நம்பிக்கை உள்ளது. இந்து, சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் ஊழ்வினையை வலியுறுத்துகின்றன. திருவள்ளுவர் திருக்குறளில் 'ஊழ்' என்னும் தலைப்பு இட்டுப் பத்துப் பாடல்களில் ஊழ்வினை நம்பிக்கையை ஊட்டியுள்ளார் எனலாம். மக்கள், என்ன சூழ்ந்து - எவ்வளவு சூழ்ந்து ஒரு செயல் புரிய முயன்றாலும் வலிமை ஊழ்வினையின் படியே நடக்கும்; ஊழினும் யுடையது ஒன்றும் இல்லை என்னும் கருத்தில் பாடியுள்ள

''ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்" (380)

என்னும் ஒரு குறளே போதுமே! மற்றும், சோர்வு இன்றி ஊக்கத்துடன் விடாது தொடர்ந்து செயலாற்றுபவர்கள் ஊழையும் அப்பால் தள்ளி வென்றுவிடுவர் என்னும் கருத்துடைய

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்' (620)

என்னும் குறளையும் வள்ளுவர் பாடியுள்ளார். 'ஊழையும்' என்பதில் உள்ள 'உம்' உயர்வு சிறப்பு உம்மையாகும். வெல்ல முடியாத ஊழையுங்கூட வெல்வர் என்பதிலிருந்து, ஊழ் வெல்ல முடியாதது என்பது பெறப்படுகின்றது.

ஊழ் - விளக்கம்

ஊழ் என்பதுதான் என்ன? முன் பிறவியில் நல்லன செய்திருப்பின் இப்பிறவியில் நல்லன நடக்கும்; முன் பிறவி யில் தீயன செய்திருப்பின் இப்பிறப்பில் தீயனவே நேரும். இதே போல, இப்பிறப்பில் நல்லன புரியின் அடுத்த பிறப்பில் நல்லனவே நடைபெறும்; இப்பிறப்பில் தீயன செய்யின் அடுத்த பிறவியில் தீயனவே நேரும் - என்பது தான் ஊழின் விளக்கம்.

ஊழின் கண்டு பிடிப்பு
முற்பிறவியில் நல்லனவோ - தீயனவோ செய்தது எவ்வாறு இப்பிறப்பில் தெரியும்? இது போலவே அடுத்த பிறப்பில் நல்லனவோ - தீயனவோ நடக்கப் போவது இப்பிறவியிலேயே எவ்வாறு தெரியும்?

முன்னோர்கள் எண்ணிப் பார்த்திருக்கிறார்கள் - இப்பிறவியில் நல்லன செய்பவன் துன்புறுகிறான் - தீயன செய்பவன் இன்புறுகிறான் - இதற்குக் காரணம் என்ன?- என்று பல நாட்கள் - பல்லாண்டுகள் எண்ணிப் பார்த் திருக்கிறார்கள். அதற்குச் சரியான பொருத்தமான விடை கிடைக்கவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் ஒரு முடிவுக்கு வரலாயினர். அதாவது:- இப்பிறவியில் நல்லது பெறுபவன் முற்பிறப்பில் நல்லது செய்திருக்கலாம்; இப்பிறவியில் தீயது பெறுபவன் முற்பிறவியில் தீயது செய்திருக்கலாம். இதேபோல, இப்பிறவியில் நல்லது பெறுபவன் தீயவனாய்த் தீயது செய்தால் அடுத்த பிறவி யில் தீயது பெறுவான்; இப்பிறவியில் தீயது பெறுபவன் நல்லவனாய் நல்லது செய்யின் அடுத்த பிறவியில் நல்லது பெறுவான் - என உய்த்துணர்வாக - ஊகமா - உத்தேசமாக ஒரு முடிவுக்கு வந்தனர். இத்தகைய சூழ்நிலைகட்கு 'ஊழ்' என்ற 'மகுடமும்' சூட்டிவிட்டனர்.

திருவள்ளுவரின் திணறல்

திருவள்ளுவரே ஓரிடத்தில் திணறியுள்ளார். பொறாமை கொண்ட தீய நெஞ்சுடையவனுடைய வளர்ச்சியும், பொறாமையற்ற நல்ல நெஞ்சத்தவனின் கேடும் இயற்கைக்கு மாறாயிருத்தலின், இந்தச் சூழ்நிலை எண்ணி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும் - என்னும் கருத்தமைந்த

"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்" (169)

என்னும் குறளை இயற்றியுள்ளார். முன்னோர்கள் இந்த அடிப்படையிலேயே, 'ஊழ்' என்னும் இல்லாத ஒன்றை பொருந்தாத ஒன்றைப் புதிதாய்க் கண்டுபிடித்து வழி வழியாக மக்களின் தலையில் சுமத்திவிட்டுப் போய் விட்டனர்.

பொருத்தமான தீர்வு

ஒரு பிறவியிலேயே முன்னால் நல்லது செய்தவன் பின்னால் நல்லது பெறுவான்; முன்னால் தீயது செய்தவன் அப்பிறவியிலேயே பின்னால் தீயது பெறுவான். இவ்வாறு ஒரு பிறவிக்குள்ளேயே முன்னால் செய்யப்பெறும் நல்லன - கெட்டனவற்றிற்கு 'ஊழ் வினை' என்னும் பெயர் பொருந்துவதாகும். இந்தக் கருத்தை ஒளவைப் பாட்டியும் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" எனக் கொன்றை வேந்தனில் (74) கூறியுள்ளார். திருவள்ளுவரும், முற்பகலில் பிறர்க்குத் துன்பம் செய்யின், பிற்பகலில் தங்கட்குத் துன்பங்கள் யாரும் செய்யாமலேயே தாமாகவே வந்து சேரும் - என்னும் கருத்தில்,

"பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்''

என்று ஒரு குறள் பாடியுள்ளார். ஒரு பிறவியிலேயே முற்பகுதி - பிற்பகுதி என்னாமல், ஒரு பகலிலேயே (ஒரு நாளிலேயே) முற்பகல் - பிற்பகல் என்று தொடர்புறுத்தி யுள்ளார். இந்தச் சூழ்நிலையை உண்மையான மிகப் பெரிய ஊழாகச் சொல்லலாம்.

இவ்வாறாக, ஒரு பிறவியிலேயே முற்பகுதி - பிற்பகுதி, ஒரு பகலிலேயே முற்பகல் - பிற்பகல் என்பன பொருத்த மான ஒருவகைத் தீர்வாகும்.

இதற்கு மற்றொருவகைத் தீர்வும் சொல்லலாம்: நல்லவர்க்கு நல்லதோ கெட்டதோ, தீயவர்க்குத் தீயதோ- நல்லதோ நடப்பது, இயற்கையாக - தற்செயலாக - யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நடப்பது ஒரு தீர்வாகும். போக்கு வரவு வண்டியில் அகப்பட்டு இறத்தல், புயல், வெள்ளம், நில நடுக்கம், எரிமலை, போர், கொலை முதலியவற்றால் உடைமையையோ -உயிரையோ இழத்தல் போன்றவை, இயற்கையாக - தற் செயலாக நடக்கும் தீமைகளாகும். பிள்ளையில்லாதவரின் சொத்து கிடைத்தல், குலுக்கல் (இலாட்டரி) சீட்டு போன்றவற்றால் திடீர்ப் பணக்காரர் ஆதல் போன்றவை இயற்கையாக - தற்செயலாகக் கிடைக்கும் நன்மைகளாகும். இவற்றோடு ஊழ்வினை என ஒன்றைக் கொண்டுவந்து, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடுவது போல் தொடர் புறுத்துவது பொருந்தாததாகும். இந்த அடிப்படையுடன் சிலப்பதிகாரத்திற்குச் செல்வாம்.

சிலம்பில் பல இடங்களில் ஊழ்வினை வலியுறுத்தப்பட் டுள்ளது. முன்பிறவித் தொடர்புக் கதையும் காட்டப்பட் டுள்ளது. இருப்பினும், இவற்றை அறிவியல் ஆய்வு முறையில் நோக்கின், முற்பகல் செய்தது பிற்பகலில் விளைந்ததாகவும், ஒரு பிறவியிலேயே முன்பாதியில் செய்தது பின்பாதியில் விளைந்ததாகவும், இயற்கையாக -தற் செயலாக நடந்ததாகவும் தெரியவரும். இனி நூலுள் புகுந்து ஒவ்வொன்றாகக் காணலாம்.

பதிகம்

பதிகத்திலேயே ஊழ் வினைக் குறிப்பு உள்ளது. கோவலனுக்கு இருந்த ஊழ்வினையால் பாண்டியன்
ஆராயாது கொல்லச் செய்தானம்:

“வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரானாகி" (27-28)

என்பது பாடல் பகுதி. அரசியலில் தவறு இழைத்தோர்க்கு அறமே எமனாகும் - பத்தினியைப் பெரியோரும் ஏத்துவர்- ஊழ்வினை விடாது வந்து ஊட்டும் - என்னும் மூன்று செய்திகள் சிலப்பதிகாரத்தால் தெரியவருமாம்.

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்...'' (55, 56, 57)

என்பது பாடல் பகுதி.

கானல் வரி

கானலில் மாதவி யாழ் மீட்டிப் பாடியது வஞ்சகப் பொருள் உடையது என ஐயுற்ற கோவலன், தனது
ஊழ்வினையும் சேர்ந்து கொள்ள, முழுமதிபோன்ற முகமுடைய மாதவியைப் பிரிந்தான். பாடல்:

"யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினை
வந்து உருத்த தாகலின்
உவவுற்ற திங்கள் முகத்தாளைக்
கவவுக்கை ஞெகிழ்ந்தனனால்" (52:4, 5)

என்பது பாடல் பகுதி.

கனாத் திறம் உரைத்த காதை

கண்ணகி முன் பிறவியில் தன் கணவன் தொடர்பான ஒரு நோன்பு இயற்றுவதில் பிழை செய்து விட்டதாகத் தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழி கண்ணகியிடம் கூறினாளாம். பாடல்:

"கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க் கெடுக..." (55,56)

மற்றும், பழைய ஊழ்வினை கூட்டியதால், ஞாயிறு தோன்றுவதற்கு முன்பே, வைகறையில் கோவலன் கண்ணகியுடன் புகாரை விட்டுப் போக எண்ணினான்.

மூதை, வினை கடைக்கூட்ட வியங்கொண்டான் கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்

என்பது, இறுதி வெண்பாவின் இறுதிப் பகுதி.

நாடு காண் காதை

கோவலனும் கண்ணகியும் ஊழ்வினை செலுத்தியதால்
மதுரை நோக்கிப் புறப்பட்டனராம்.

''ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப" (4)

என்பது பாடல் பகுதி.

கோவலனும் கண்ணகியும் வழியில் ஒரு சோலையில் தங்கியிருக்கையில், ஒரு சாரணர் வந்து தோன்றினர். கோவலனும் கண்ணகியும் கவுந்தியுடன் சேர்ந்து, எங்கள் பழைய வினை கெட்டொழிக என வேண்டிச் சாரணரைத் தொழுதனராம்:

"தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்
பண்டைத் தொல்வினை பாறுக என்றே
கண்டறி கவுந்தியொடு காலுற வீழ்ந்தோர்" (163-165)

என்பது பாடல் பகுதி.

சாரணர் ஒருவர் கவுந்தியடிகளிடம் பின்வருமாறு கூறினார். உருத்து வந்த ஊழ்வினை ஒழிக என எவர் முயலினும் ஒழியாது. விதைத்த விதை முளைத்து முதிர்ந்து பயன் அளிப்பது போல், ஊழ்வினை பயன் அளித்தே தீரும்.

"கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்து வந்துஎய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா" (170-173)

என்பது பாடல் பகுதி. நல்லூழுக்கு உரியவையல்லாத பொருள்களை வருந்திக் காத்தாலும் வளராவாம்; ஊழின் படி தமக்கு உரிய பொருள்களை வெளியில் கொண்டுபோய்க் கொட்டினும் போகாவாம் என்னும் கருத்து செறிந்த
·
'பரியினும் ஆகாவாம் பாலல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம" (376)

என்னும் குறளும், மழை பெய்யாது வறண்டபோது பெய் என்றால் பெய்யாது - மழை நிரம்பப் பெய்யுங்கால் நிறுத்து என்றால் நிறுத்தாது -அதுபோல், ஊழ்வினையும் தீவினை செய்யுங்கால் அதை நீக்கவும் முடியாது - நல்லது செய்யின் அதனை விலக்கவும் முடியாது என்னும் கருத்து அமைந்த -

''உறற்பால நீக்கல் உறுவார்க்கும் ஆகா
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை; அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்" (104)

என்னும் நாலடியார்ப் பாடலும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன.

ஊர் காண் காதை

கவுந்தி கோவலனுக்குக் கூறுகிறார்: பெரியோரின் அறிவுரைகளை அறிவற்றவர்கள் ஏற்று ஒழுகாமல், தீவினை வந்து உருத்தும் போழ்து அறியாமை காரணமாகத் துன்புறுவர். பாடல்:

''யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்
தீதுடை வெவ்வினை உருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்" (30-32)
(யாப்பு அறை = அறிவு அற்ற. கந்து = காரணம்)

மேலும் கவுந்தி கூறுகிறார்: சூதாட்டத்தால் நலிவுற்ற நளன், தன் மனைவியை நடுக்காட்டில் நள்ளிரவில் விட்டுச் சென்றது ஊழ்வினையால் அல்லவா? பாடல்:

“அடவிக் கானகத்து ஆயிழை தன்னை
இடையிருள் யாமத்து இட்டு நீக்கியது
வல்வினை யன்றோ?'' (54-56)

மதுரையின் புறஞ்சேரியிலே, கவுந்தி, கோவலன், மாதவி ஆகிய மூவரும் தங்கியிருந்தபோது மாடலன் என்னும் மறையவன் ஆங்கு வந்தான். அவன் கோவலனை நோக்கிப் புகழ்மொழி கூறி, கோவலா! யான் அறிந்துள்ள வரையும் நீ இப்பிறப்பில் நல்ல அறச் செயல்கள் புரிந் துள்ளாய். இப்போது இந்தக் கண்ணகியோடு ஈங்கு வந்து அல்லல் உழப்பதற்குக் காரணம், முன் பிறவியில் செய்த வினையாய் இருக்கலாம்-என்று அறிவித்தான்.

"இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது" (91-93)

என்பது பாடல் பகுதி.

கொலைக் களக் காதை

கோவலன் சிலம்பு விற்கக் கடைத்தெருவுக்குப் புறப் படு முன், கண்ணகியுடன் உருக்கமாக உரையாடுகின்றான்:
கண்ணகியே! நாம் இவ்வாறு துன்புறுவதற்குக் காரணம் யாராவது செய்த மாயமா யிருக்கலாமோ அல்லது நமது
பழைய வலிமையுடைய ஊழ்வினையா யிருக்கலாமோ! யான் உள்ளம் கலங்குகிறேன் - ஒன்றும் புரியவில்லை- என்று கூறினான்.

"மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ
யான்உளம் கலங்கி யாவதும் அறியேன்" (61,62)

என்பது பாடல் பகுதி.

பொற்கொல்லன் பாண்டிய மன்னனிடம் சென்று, சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டுக் கொண்டான் என்று கூற, கோவலனுக்கும் பாண்டியனுக்கும் பழைய தீய ஊழ் வினை விளைவுதரும் காலமாயிருந்ததால், அந்தக் கள்வனைக் கொல்லுக என்று கூறினான். அவ்வாறே, பழைய தீய ஊழ்வினையாகிய வலையிலே சிக்கிக்கொண் டிருந்த கோவலன் கொல்லப்பட்டான் பாடல்:

“வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி" (148,149)

"தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த
கோவலன் தன்னைக் குறுகின னாகி" (156,157)

என்பது பாடல் பகுதி.

கோவலன், பழைய தீய ஊழ்வினை உருத்தியதால் பாண்டியனது செங்கோல் வளைந்து கொடுங்கோல் ஆக, வெட்டப்பட்டுக் கீழே விழுந்தான்.

“காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்" (216,217)

கொலைக் களக் காதையின் இறுதியில் பின்வரும் வெண்பா உள்ளது.

"நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகிதன் கேள்வன் காரணத்தால் மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை"

பாண்டியனுக்குப் பழைய தீய ஊழ்வினை இருந்ததால் கோவலன் காரணமாகச் செங்கோல் வளைந்தது. எனவே, உலகமக்களே! நல்வினை-தீவினை என்னும் இருவினையும் நம்மை வந்து சேரும்; ஆதலின் எப்போதுமே நல்ல அறச் செயல்களையே செய்யுங்கள் - என்று உலகுக்கு ஆசிரியர் கூறும் அறிவுரையாக இப்பாடல் அமைந்துள்ளது.

கட்டுரை காதை

மதுரையின் காவல் தெய்வமாகிய மதுராபதி கண்ணகியை நோக்கி, பழைய ஊழ்வினை வந்து பயன் அளிக்கத் தொடங்கிவிடின், ஒழுங்கற்றவர்கள் எவ்வளவு தவம் இப்போது செய்யினும் ஊழைவெல்ல முடியாது.

"உம்மை வினைவந்து உருத்த காலைச்
செம்மை யிலோர்க்குச் செய்தவம் உதவாது" (171, 172)

குன்றக் குரவை

மதுரையும் பாண்டியனும் அழிந்தபின், கண்ணகி நெடுவேள் குன்றம் அடைந்தாள். குன்றத்து மக்கள் கண்ணகியை நோக்கி யாரென்று வினவக் கண்ணகி கூறினாள்: பழைய தீய வலிய ஊழ் வினை வந்து உருத்த தால், மதுரையும் பாண்டியனும் அழிய, கணவனை இழந்த கொடு வினையேன் யான் என்று கூறினாள்:

''மணமதுரையோடு அரசு கேடுற
வல்வினை வந்து உருத்தகாலைக்
கணவனை அங்கு இழந்து போந்த
கடுவினையேன் யான் என்றாள்" (5,6)

நீர்ப் படைக் காதை

கனக விசயர் தலையில் கல்லேற்றி வந்த மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் மறையவன் மாடலன் கோவலன் வரலாறு கூறினான்: புகார்க் கடற்கரையிலே, பழைய தீய ஊழ்வினை வந்து உருத்ததால், மாதவி பாடிய வரிப் பாடலில் மாற்றுப் பொருள் கண்ட கோவலன் அவளை விட்டுப் பிரிந்து கண்ணகியிடம் வந்து சேர்ந்தான் என்று கூறினான். பாடல்:

"மாதவி மடந்தை வரிநவில் பாணியொடு
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்தெழக்
கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன்
மாட மூதூர் மதுரை புக்கு .. (58-61)

நடுகல் காதை

செங்குட்டுவனிடம் அறவேள்வி செய்யுமாறு மாடலன் தூண்டிய போது, பின் வரும் கருத்தைக் கூறினான். முன் செய்த ஊழ் வினையின் வழிப்படி உயிர் இயங்கும் என்பது மெய்யாளர் மொழிந்த மேலான கருத்தாகும் - என்றான்.
பாடல்:

"செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை” (167,168)

ஈண்டு இது, புறநானூற்றில் உள்ள

"நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்' (192:9-11)

என்னும் பாடல் பகுதியோடு ஒப்பிட்டு நோக்கத் தக்கது.

வரம் தரு காதை

மாலதி என்பாள் மாற்றாள் குழந்தைக்குப் பால் சுரந்து ஊட்டினாளாம். பழைய தீய ஊழ் வினை உருத்த தால் எமன் குழந்தையின் உயிரைக் கொண்டு சென்றானாம்.

"மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்
பால்சுரந் தூட்டப் பழவினை உருத்துக்
கூற்றுயிர் கொள்ளக் குழவிக்கு இரங்கி" (74-76)

இவ்வாறு ஊழ் வினை சிலப்பதிகாரத்தில் ஒரு (சுமார்) இருபது இடங்கட்கு மேல் குறிப்பிடப் பட்டுள்ளது. கட்டுரை காதையில், மதுரையின் காவல் தெய்வமாகிய மதுராபதி கண்ணகியிடம், கோவலனது முன் பிறப்பு வரலாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது:-

கலிங்க நாட்டில் உள்ள சிங்கபுரம் என்னும் பகுதியில் வசு என்பவனும், கபிலபுரம் என்னும் பகுதியில் குமரன் என்பவனும் அரசாண்டு கொண்டிருந்தனர். இவர்கள் பகை கொண்டு ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முயன்றனர். இரு பகுதிக்கும் இடையே ஆறு காத எல்லைக்குள் யாரும் இயங்குவது இல்லை. இந்நிலையில், சங்கமன் என்னும் பன்மணி நகை வாணிகன் தன் மனைவி நீலி என்பவளோடு, கபிலபுரத்திலிருந்து கள்ளத் தனமாகச் சிங்கபுரம் சென்று நகை மணி வணிகம் புரிந்து கொண்டிருந்தான். அப்போது, சிங்கபுரத்து மன்னனின் பணியாளனாகிய பரதன் என்பவன், சங்கமன் பகைவனது ஒற்றன் எனத் தங்கள் மன்னனிடம் பொய்யாகக் காட்டிக் கொடுத்துக் கொல்லச் செய்து விட்டான். இறந்து போன சங்கமனின் மனைவியாகிய நீலி என்பாள் பெரிதும் வருந்திப் பதினான்காம் நாள் ஒரு மலை மீது ஏறி நின்று, என் கணவன் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்தவன், அடுத்த பிறவியில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப் படுவானாக. அவன் மனைவி யான் அடைந்துள்ள நிலையை அடைவாளாக எனக் கெடுமொழி (சாபம்) இட்டு இறந்து போனாள். அந்தப் பரதன் என்பவனே கோவலனாகப் பிறந்தான்; நீலியின் கெடு மொழிப்படியே பொய்க் குற்றம் சுமத்தப் பட்டுக் கொல்லப் பட்டான். அவன் மனைவி கண்ணகி பதினான்காம் நாள் ஒரு மலை உச்சியில் வாணாளை முடித்துக் கொண்டாள் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

இந்தக் கதை ஊழ்வினையையும் அதன் வலிமையையும் நம்பச் செய்யும் கட்டுக் கதை என்றே தோன்றுகிறது.

சிலம்பிசைப் பாட்டரங்கம்

ஊழ்வினை வந்து உருத்து ஊட்டியதால்தான், உரை சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல் கிடைத்தது. தமிழகத்தில் இருந்த கண்ணகி கோயில்கள் துரோபதை கோயிலாகவும் வேறு அம்மன் கோயிலாகவும் மாற்றப் படினும், பழைய வழக்கப்படி, அம்மன் கோயில்களில் பூசாரிகள் இரண்டு கைகளிலும் சிலம்புகளைப் பிடித்துக் கொண்டு அவற்றை ஒலிக்கச் செய்தபடியே பாடல்கள் பாடிக் கதைப் பாட்டரங்கம் நடத்துகின்றனர். இப்படி ஒரு கலை தமிழகத்தில் வளர்ந்திருப்பது கண்ணகியின் சிலம்பு தொடர்பினாலே யாகும். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டியதின் பயனோ இது!
---------------

7. கனா

சிலப்பதிகாரத்தில் 'கனாத்திறம் உரைத்த காதை' என்னும் பெயரில் ஒரு காதை உள்ளது. கானாக்களைப் பற்றிப் பல விதமான கருத்துகள் பலரால் அறிவிக்கப் பட்டுள்ளன. கனா நூல் எனப் பெயரிட்டு, அந்தாதித் தொடையாய் முப்பது கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் அமைத்துப் பொன்னவன் என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். கனா பற்றிக் கூறப்படும் சில கருத்துக்கள் வருமாறு:-

மக்கள் உறங்கும்போது உடல் படுக்கையில் கிடக்க, உயிர் பிரிந்து சென்று பல செயல்களில் ஈடுபட்டு மீண்டும் வந்து உடம்பில் கூடுகிறது.

மக்களின் எண்ணங்கள் அல்லது விருப்பங்களே உறங்கும்போது கனவாக மலர்கின்றன.

ஐம்புலன்களாலும் இதற்குமுன் பட்டறிந்த நிகழ்ச்சிகளே - நுகர்வுகளே கனவில்
பல மாறுதல்களுடன் தோன்றுகின்றன.

நல்ல கனாவாயின் பின் நல்லது நடக்கும்; கெட்ட தாயின் பின் கெட்டதே நிகழும்.

வைகறையில் கண்ட கனா அவ்வாறே பலிக்கும் -- சீவகசிந்தாமணி 219

கனவுக்கும் பின் நனவில் (பகலில்) நடக்கும் நிகழ்ச்சி கட்கும் தொடர்பே இல்லை.

பின்னால் பகலில் நடக்கப்போவதை முன்னமேயே உறக்கத்தில் அறிவிக்கும் ஒருவகைக் குறிப்பே கனவு என்பது.

கனவுகள் மக்களின் விருப்பு-வெறுப்புகளைக் குறிக் கின்றன என்பது பிளேட்டோ போன்றோரின் கருத்து.

உறங்கும்போது சில உள் உறுப்புகள் வேலை செய்து தூண்டுவதால் கனவுகள் ஏற்படுகின்றன என்பது அரிஸ்ட்டாட்டில் (Aristatle) போன்றோரின் கருத்தாகும்.

இவ்வாறு பல்வேறு கருத்துகள் பலரால் சொல்லப் படினும், ஒவ்வொருவரும் தாம் கண்ட கனாக்களின் துணை கொண்டு-அதாவது தமது சொந்தப் பட்டறிவைக் கொண்டு எந்தக் கருத்து சரியானது என்று உய்த்துணரலாம்.

இந்த அடிப்படையுடன் சிலப்பதிகாரத்திற்கு வருவோம். முப்பெருங் கனவு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாய்க் காண்பாம்:

1. கனாத் திறம் உரைத்த காதை

புகாரில் இருந்தபோது கனா கண்ட கண்ணகி அதனைத் தேவந்தி என்னும் தன் பார்ப்பனத் தோழியிடம் பின் வருமாறு கூறுகிறாள்:

யான் கண்ட கனவால் என் நெஞ்சம் ஏதோ ஐயுறு கின்றது. என் கணவர் என் கை பற்றி எங்கோ அழைத்துச் சென்றார். இறுதியில் ஒரு பெரிய நகரத்தை அடைந்தோம். அங்கே யாரோ எங்கள் மேல் பொய்க் குற்றம் சுமத்திப் பொய்யுரை யொன்றை இடுதேளிட்டுக் கூறினர். அதனால் என் கணவர் கோவலனுக்குத் தீங்கு நேரிட்டது என்று பலர் ' சொல்லக் கேட்டேன். அது பொறாமல், அவ்வூர் அரசன் முன் சென்று வழக்குரைத்தேன். அதனால், அவ்வரசர்க்கும் அவ்வூருக்கும் தீங்கு நேர்ந்தது. அந்தத் தீங்கு மிகவும் கொடிய தாதலின் மேலும் அதைப் பற்றி நின்னிடம் கூற மனம் வரவில்லை. பின்னர் யானும் என் கணவரும் உயர்ந்த நிலை அடைந்தோம். அதைக் கூறின் நகைப்பிற்கு இடமாகும் - என உரைத்தாள். இது கண்ணகி கண்ட கனா ஆகும். இனிப் பாடல் பகுதி வருமாறு:-

“கடுக்கும் என்நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போயோர் பெரும்பதியுள் பட்டோம்
பட்ட பதியில் படாததொரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேளிட்டு என்றன்மேல்
கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
காவலன் முன்னேயான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்குற்ற தீங்குமொன் றுண்டால் ராடன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோ டுற்ற உறுவனோடு யானுற்ற
நற்றிறம் கேட்கின் நகையாகும் .." (45-54)

என்பது பாடல் பகுதி.

இடுதேள் இடுதல் என்றால், ஒருவர் மேல் தேளை இடுவது போன்ற கொடுமையைச் சுமத்தலாகும்.சிலர், மெழுகினாலாவது வேறு ஏதாவ தொன்றினாலாவது செய்யப்பட்ட பொய்த்தேளை ஒருவர்மேல் போட்டு அஞ்சச்செய்வதும் உண்டு. இங்கே இடுதேள் என்பது, தேள் போல் தீமை தரும் கொடும் பழி என்பதைக் குறிக்கும்.

உலகியலில், ஒருவர் கெட்ட கனா காணின் அதை வெளியிட நாணுவதோ - அஞ்சுவதோ உண்டு. பிறர்க்குக் கேடு நேர்ந்ததாகக் கண்ட கனவைக் கூறுவதற்குப் பெரும் பாலும் மக்கள் ஒருப்படார்.

இங்கே கனாவினால் உய்த்துணரப் படுவன: இடுதேள் இடுதல்போல் கோவலன் மீது திருட்டுக் குற்றம் சுமத்துவதாகும். தீக் கனா என்பது, பாண்டியனும் அவன் தேவியும் வரும் அழிய இருப்பதாகும். இதைச் சொல்லக் கண்ணகிக்கு உள்ளம் ஒருப்பட வில்லை.

"நற்றிறம் கேட்கின் நகையாகும்" என்பதில் உள்ள கருத்து, இறுதியில் கோவலனும் கண்ணகியும் தேவர்களால் வரவேற்கப்பெற்று மேலுலகம் செல்லுதலாகும். இது கிடைத்தற்கு அரிய பேறு ஆதலின், தங்கட்கு இது
கிடைத்ததாகக் கூறின், ஓகோ, இவர்கட்கு இவ்வளவு பேரவாவா என்று சிலர் எள்ளி நகையாடக் கூடும் - என்று கண்ணகி எண்ணினாள் - என்பது கருத்து.

கோவலன் கொல்லப்பட்ட பின்பு, மா துயர் எய்திய கண்ணகி, முன்பு தான் கண்ட இந்தக் கனவை நினைத்துப் பார்த்தாளாம்.அதாவது, அந்தக் கனவின்படி நடந்துள்ளதாக எண்ணினாளாம். பாடல்:

"தீவேந்தன் தனைக்கண்டு இத்திறம் கேட்பல் யான் என்றாள்
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீக் கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங் கயற்கண் நீர் சோர
நின்றாள் நினைந்தாள்" (ஊர்சூழ் வரி: 71-74)

என்பது பாடல் பகுதி.

இந்தக் கனாவைக் கண்ணகி உண்மையில் கண்டிருப் பாளா? கண்ணகி இக்கனா கண்டதாகக் காப்பியச் சுவைக்காக - ஒரு முன்னோட்டமாக ஆசிரியர் இளங்கோ அடிகள் எழுதியுள்ள கற்பனையா இது? இரண்டாவது உண்மையா யிருக்கலாம். சொல்லி வைத்தாற்போல் இவ்வளவையும் தவறாமல் முன்கூட்டிக் கனவில் காண இயலுமா என்ன?
அடுத்து இரண்டாவது கனா நிகழ்ச்சியைக் காண்பாம்:

2. அடைக்கலக் காதை

கோவலன் மதுரை நகரைச் சுற்றிப் பார்த்து விட்டுப் புறஞ்சேரியில் தங்கியிருந்தபோது, ஆங்கு வந்து பழகிய மாடலன் என்னும் மறையவனிடம் கோவலன் தான் கண்ட கனவைக் கூறுகிறான்.

யான், ஒரு குறுமகனால், வேந்தன் நகரில், கண்ணகி நடுங்கு துயர் எய்த, கூறை (உடை) கொள்ளப்பட்டுப் பன்றிமேல் ஊர்ந்ததாகவும், மற்றும் யான் கண்ணகியோடு துறவியர் பெற்றி எய்திய தாகவும், காமன் செயலற்று ஏங்க மணிமேகலையை மாதவி அறவோன்முன் அளித்ததாகவும் நனவுபோலக் கனவு கண்டேன் என்று கோவலன் விவரித்தான்.

இந்தக் கனவும், மதுரையில் கோவலனுக்கு நடக்க இருக்கும் கொடுமையையும், அதன்பின் அவனும் கண்ணகி யும் மேலுலகம் செல்ல இருப்பதையும், மகள் மணிமேகலை துறவு கொள்ளப் போவதையும் முன்கூட்டி அறிவிப்பதாகும். பாடல்:

"கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறைங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்தம் பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமே கலையை மாதவி அளிப்பவும்
நனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிது ஈங்குறும்....'' (95-106)

குறு மகன் = பொற் கொல்லன், கடி நகர் = மதுரை. நாறு ஐங் கூந்தல் = கூந்தலை உடைய கண்ணகி. கோட்டு மா = பன்றி. ஆயிழையோடு பிணிப்பு அறுத்தோர் தம் பெற்றி எய்துதல் = பற்றற்ற துறவியர் அடையும் மேலுலகத்தைக் கண்ணகியோடு அடைதல். காமக் கடவுள் கையற்று ஏங்கல் = மணிமேகலையை வைத்துக் காம வேட்டையாட முடியாததால் மன்மதன் செயல் அறுதல். போதி அறவோன் = புத்தன்.

உலகியலில் முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு செய்தி இங்கே நினைவு செய்யப்பட் டுள்ளது. அதாவது: மாபெருங்குற்றம் செய்தவனை, மொட்டை அடித்து முகத்தில் கரும்புள்ளியும் செம்புள்ளியும் குத்திப் போதுமான உடையின்றிக் கழுதைமேல் ஏற்றி ஊர் சுற்றிவரச் செய்வது பண்டைய பழக்கமாம். அது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. கழுதைக்குப் பதிலாக ஈண்டு பன்றி குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த நிகழ்ச்சி, கோவலன் கொடுமைக்கு உள்ளாகப் போகிறான் என்பதைக் குறிக்கும். இதனால் கண்ணகி துயர் எய்தப் போகிறாள். மாதவி தன் மகள் மணிமேகலையைத் துறவு கொள்ளச் செய்யப் போகிறாள்.

இவ்வாறு கனவைச் சொல்லிவந்த கோவலன் இறுதியில் 'கடிது ஈங்கு உறும்' என்று கூறியுள்ளான். அதாவது, இது மதுரையிலே விரைவில் நடைபெறுமாம். கனவு காணின் அதன்படி நடைபெறும் என்ற நம்பிக்கையினை அடிப்படை யாகக் கொண்டது இது. கோவலன் ஓரளவாவது இதனோடு தொடர்புடைய கனவு ஏதாவது கண்டிருக்கலாம். அல்லது, இஃதும், காப்பிய முன்னோட்டச் சுவைக்காக அடிகளால் செய்யப் பெற்ற கற்பனையாகவும் இருக்கலாம்.

3. வழக்குரை காதை

பாண்டியன் மனைவியாகிய கோப்பெருந்தேவி, கோவலன் கொலையுண்ட முதல்நாள் இரவு தான் கண்ட தீய கனவை முதலில் தோழியிடம் கூறுகிறாள்: தோழீ! மன்னனின் செங்கோலும் வெண்குடையும் நிலத்தில் வீழ்ந்தன. ஆராய்ச்சி மணி அடிக்கப்பட்டது. எட்டு திசை களும் அதிர்ந்தன. கதிரவனை இருள் விழுங்கிற்று. இரவிலே வான வில் தோன்றியது. பகலில் விண்மீன்கள் விழுந்தன. இவ்வாறு கனாக் கண்டேன். க்கனவை அரசர்க்கு அறிவிப்பேன் - என்றாள். பாடல்;

"ஆங்குக் ….. …. ….. ….
குடையொடு கோல்வீழ, நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென் காண்எல்லா!
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா! வி
டுங்கொடி வில்இர, வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா!" (1-7)

இது பாடல் பகுதி. எல்லா = தோழீ. கடை மணி = குறை சொல்லி முறையிட வருவோர் அடிக்க வாயிலில் கட்டித் தொங்கும் ஆராய்ச்சி மணி. இர = இரவு. வில் கொடி விடும் = இந்திர வில் எனப்படும் வானவில் வண்ணக் கொடி போல் தோன்றல். "காண்பென் காண் எல்லா' எனத் திரும்பத் திரும்ப மும்முறை சொல்லியிருப்பது ஒருவகை இலக்கிய - காப்பியச் சுவையாகும்.

தோழியிடம் இவ்வாறு தெரிவித்த தன் கனவைத் தேவி பாண்டியனிடமும் கூறினாள்:

"செங் கோலும் வெண் குடையும்
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்,
நங் கோன்றன் கொற்ற வாயில்
மணி நடுங்க நடுங்கும் உள்ளம்,
இரவு வில்லிடும், பகல்மீன் விழும்,
நான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவ தோர் துன்பம் உண்டு
மன்னவர்க் கியாம் உரைத்து மென (9-12)

என்பது பாடல் பகுதி. ஒரே செய்தி பாடலில் இருமுறை கூறப்பட்டுள்ளது. ஒன்று தோழி அறிவதற்காக மற்றொன்று, மன்னன் முதல் மற்றவரும் அறிவதற்காகும்.
-
செங்கோலும் வெண்குடையும் படுக்கையாய் விழ வில்லையாம் - தலைகீழாய் மறிந்து வீழ்ந்தனவாம். வாயிலில் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருக்கிறதே தவிர, மன்னனின் ஆட்சியில் ஒரு குறையும் இல்லாததால் இது வரையும் யாராலும் அடிக்கப்படா திருந்த மணியின் ஒலி, கனவில் அடிக்கப்பட்டுக் கேட்கப்பட்டதாம். உள்ளம் நடுங்கும்படி மணி நடுங்கிற்றாம். மணி அசைந்து ஒலி எழுப்பியது என்னாமல், நடுங்கியதாகக் கூறப்பட்டிருப்பது பொருள் பொதிந்த தாகும்.

'இரவு வில் இடும்' என்பதை இக்காலத்தார்க்கு விளக்குவது எளிது. பகலில்தான் வானவில் தோன்றுவது வழக்கம். அன்று கனவில் இரவில் வானவில் தெரிந்ததாம். முற்பகலில் கீழ்த்திசையில் ஞாயிறு காய்ந்து கொண் டிருக்கும் போது அதற்கு நேர் எதிரில் மேற்கே மழை பெய்யின், ஞாயிற்றின் ஒளி மழையை ஊடுருவி அப்பால் செல்ல ஒளிச் சிதறல் ஏற்பட்டு அதற்கும் மேற்கே பல வண்ண வடிவிலே வில் போன்று வளைந்த ஓர் அமைப்பு தெரியும். பிற்பகலில் மேற்குத் திசையில் ஞாயிறு தெரியும்போது அதற்கு நேர் எதிரில் கிழக்கே மழை பெய்யின், ஞாயிற்றின் ஒளி மழையை ஊடுருவி அப்பால் செல்ல ஒளிச் சிதறல் ஏற்பட்டு அதற்கும் கிழக்கே பல வண்ண வடிவிலே வில் போன்று வளைந்த ஓர் அமைப்பு தெரியும். இதையே வானவில் என்கின்றனர்.

எனவே, மேற்சொன்னபடி பகலிலேதான் வானவில் தோன்றும் என்பது
புலனாகிறது. இரவில் மழை பெய்யினும் ஞாயிற்று ஒளி இன்மையால் வானவில் தோன்ற வாய்ப்பு இல்லை. எனவேதான், இரவில் வானவில் தோன்றியதாகக் கண்ட கனவு ஏதோ துன்பம் தரும் அறிகுறியாகும் என்று கருதப்பட்டிருக்கிறது.

மன்னன் இறப்பதற்கு முன் காணும் கெட்ட கனவு, பின்னர் மன்னன் இறப்பதற்கு அறிகுறியாக இருந்தமை வேறு இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது. இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் அவற்றுள் சில காண்பாம். முதலில் கம்ப இராமாயணம் வருக:

திரிசடை தான் கண்ட கெட்ட கனாக்களைச் சீதையிடம் கூறுகிறாள். அன்னாய் கேள்! இராவணனின் தலையில் எண்ணெய் பிசுபிசுக்க, கழுதை- பேய் பூட்டிய தேரின்மேல் சிவப்பு உடை உடுத்து எமன் இருக்கும் தென்புலம் அடைந்தான். இராவணனின் மக்களும் சுற்றமும் மற்றவர் களும் தென்புலம் சென்றனர் - திரும்பவில்லை. இராவணன் வளர்த்த வேள்வித் தீ அணைந்து விட்டது. அவ்விடத்தில் கறையான் கூட்டம் மிக்கிருந்தது. தூண்டா மணி விளக்கு தூண்டாமலேயே திடீரெனப் பேரொளி வீசிற்று. இராவணனது அரண்மனை இடியால் பிளவுபட்டது.

இன்னும் கேள்! ஆண்யானைகளே யன்றிப் பெண் யானைகளும் மதம் பிடித்தன. கொட்டப்படாமலேயே முரசு தானாக முழங்கிற்று. முகில் கூட்டம் இல்லாமலேயே வானம் வெடிபட இடித்தது. விண்மீன்கள் உதிர்ந்தன. பகல் இல்லாத இரவில் ஞாயிறு ஒளி வீசுவது போல் தோன்றியது. ஆடவர் சூடிய கற்பக மாலைகள் புலால் நாற்றம் வீசின. தோரணங்கள் அறுந்தன. யானைகளின் மருப்புகள் ஒடிந்தன. (பூரண) நிறை குடத்து நீர் கள்ளைப் போல் பொங்கிற்று. திங்களைப் பிளந்து கொண்டு விண் மீன்கள் எழுந்தன. வானம் குருதி மழை பொழிந்தது. தண்டம், ஆழி (சக்கரம்), வாள், வில் என்னும் படைக் கலங்கள் ஒன்றோடொன்று போர் புரிந்து கொண்டன.

மங்கையரின் தாலிகள், கையில் வாங்குபவர் இல்லாம லேயே தாமாக அறுந்து மார்பகத்தில் விழுந்தன. மயன் மகளாகிய (இராவணனின் மனைவி) மண்டோதரியின்
கூந்தல் சரிந்தது. இரண்டு சீயங்கள் சிங்கங்கள்) மலையி லிருந்து புலிக் கூட்டத்தை உடன் அழைத்துக்கொண்டு வந்து யானைகள் வாழும் காட்டிற்குள் புகுந்து யானைகளை வளைத்து நெருக்கிக் கொன்றன. வனத்தில் இருந்த மயில் ஒன்று வனம் விட்டு அப்பால் சென்றது. (இரண்டு சீயங்கள் = ராம இலக்குமணர்கள், மலைப் புலிகள் = வானரப் படைகள். யானைகள் = அரக்கர்கள், யானைக்காடு இலங்கை, மயில் = சீதை)

மேலும் கேள்! ஆயிரம் விளக்குகளின் ஒளியையுடைய ஒரு திரு விளக்கினைத் திருமகள் (இலக்குமி) ஏந்திக் கொண்டு இராவணன் வீட்டிலிருந்து வீடணன் வீட்டிற்குச் சென்றாள். (இராவணன் அழிய, வீடணன் ஆட்சிக்கு வருவான் என்பது குறிப்பு).

இது கம்ப இராமாயணக் கதை. சுந்தர காண்டம் - காட்சிப் படலத்தில் (40-53) இதைக் காணலாம். சீவக சிந்தாமணி நூலிலும் இத்தகைய குறிப்பு உள்ளது.

சீவகனைக் கருக்கொண்டிருந்த தாய் தான் கண்ட தீய கனவினைத் தன் கணவன் சச்சந்த மன்னனிடம் கூற சச்சந்தன் தான் சாகக் கூடும் என்பதை முன்கூட்டி அறிந்து, மயில் பொறியில் அமர்ந்து பறந்து அரண்மனையை விட்டுத் தப்பித்துச் செல்ல முன்கூட்டியே மனைவியைப் பழக்கினானாம். கனவின்படியே, சச்சந்த மன்னன், அமைச்சன் கட்டியங்காரனால் கொல்லப்பட்டான்.

சேக்சுபியர் (Shakespeare) எழுதியுள்ள ஜூலியஸ் சீசர்' (Julius caesar) என்னும் நாடகத்திலும் இன்னதோர் செய்தி இடம் பெற்றுள்ளது. மன்னன் சீசர், ஒரு நாள் இரவு, சூழ்நிலை தக்கதா யின்மையின், தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவன். மனைவி 'கால்பர்னியா' (Calpurnia) என்னும் அரசி அப்போது ஒரு தீய கனவு கண்டு அலண்டு போய்க் கத்தினாள். அரசியின் கனவை அறிந்த சீசர் இந்தக் கனவைப் பற்றிய நிலைமையை துறவியர் வாயிலாக அறியலான போது, அவன் வெளியில் போகாமல் இருப்பது நல்லது என்ற அறிவுரை கிடைத்தது. அரசி, மன்னன் அரண்மனையை விட்டு மறுநாள் வெளியே போகவே கூடாது என மிகவும் கண்டிப்பாய் வற்புறுத்தி மண்டியிட்டு வேண்டிக் கொண்டாள். மன்னர்க்கு உடல் நலம் இன்மையின் அவர் பேரவைக்கு வர முடியவில்லை என்று அறிவிக்குமாறு ஆண்டனி (Antony) என்பவனிடம் சொல்லி அனுப்பினாள். இவ்வளவு செய்தும், மிகவும் துணிச்சலுடைய சீசர் பேரவைக்குச் சென்றான் - கொல்ல வும் பட்டான். இது ஒரு முன்னோட்டக் கனவாகும்.

அமெரிக்கக் குடியரசின் தலைவராயிருந்த 'ஆபிரகாம் லிங்கன்' (Abraham Lincoln) தாம் கொலை செய்யப்படப் போவதை முன் கூட்டி ஒரு கனவின் வாயிலாக அறிந்திருந் தாராம்; அதைத் தம் நாள் குறிப்புச் சுவடியில் (டைரியில்) குறித்தும் வைத்திருந்தாராம். இஃதும் ஒரு முன்னோட்டம்.

சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைக் கோவூர் கிழார் பாடியதாக உள்ள புறநானூற்றுப் பாடல் ஒன்றில் இத்தகைய கனவுக் கருத்து ஒன்று சுவையாகச் சொல்லப் பட்டுள்ளது. சோழனின் பகைவர்கள், கெட்ட கனவு கண்டு, பின்னால் தமக்கு வரவிருக்கும் துன்பங்களை எண்ணி, இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தால், தம் குழந்தைகட்கு முன்கூட்டியே முத்தம் கொடுத்துக் கொஞ்சி ஆவல் தீர்கிறார்களாம். தாம் கண்ட தீக் கனவைத் தம் மனைவியர் அஞ்சுவர் எனக் கருதி அவர்கட்குத் தெரிவிக்கா மல் மறைக்கிறார்களாம். அத்தகைய கனவு நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

எட்டுத் திசைகளிலும் எரி கொள்ளிகள் வீழ்ந்தன. வற்றல் மரங்கள் பற்றி எரிகின்றன. ஞாயிறு பலவிடங்களி லும் தோன்றுகிறது. தீய பறவைகள் தீக்குரல் எழுப்பு கின்றன.
பற்கள் யாரும் கொட்டாமலேயே தரையில் கொட்டுகின்றன. தலை மயிரில் எண்ணெய் வார்க்கப்படு கிறது. பன்றி மேல் ஊர்கின்றனர். ஆடை களையப்படு கின்றனர். படைக் கலங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிலுடன் கவிழ்ந்து கீழே விழுகின்றன - இவை கனவில்
கனவில் கண்டவை. இச்செய்தி, "காலனும் காலம் பார்க்கும்" என்று தொடங் கும் புறநானூற்றுப் பாடலில் (41) இடம் பெற்றுள்ளது.

இதுகாறும் கூறப்பட்டுள்ள செய்திகளால், தீய கனாக்கள் காணின் தீமை நிகழும் என்ற நம்பிக்கை ஒன்று மக்களிடையே இருந்தது. (இருக்கின்றது) என்பது புலனாகும். சாவை முன் கூட்டி அறிவிக்கும் தீய கனவு நிகழ்ச்சி கள் எத்தகையன என்பதும் புலனாகும்.

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள மூன்று கனவு களும் பின்னால் இறப்பு நேரும் என்னும் குறிப்பு உணர்த்து வனவாய் உள்ளன. இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ள செய்திகளும் சிலப்பதிகாரச் செய்திகளோடு ஒத்துள்ளமையை அறியலாம். (பாடல்களை அவ்வந்நூலில் கண்டு கொள்ளலாம். ஈண்டு தரின் பக்கங்கள் பெருகிவிடும்),
------------

8. நிமித்தம்

நிமித்தம் என்பது சகுனம். பின்னால் நிகழ உள்ள நன்மையையோ அல்லது தீமையையோ முன் கூட்டிக் குறிப்பால் அறிவிக்கும் குறி (அறிகுறி) நிமித்தம் எனப்படும். இந்த அறிகுறிகளை அறிந்து விளக்குபவனுக்கு நிமித்திகன் (சகுனி) என்ற பெயர் வழங்கப்படுகிறது. அரசவையில் நிமித்திகன் ஒருவன் இருப்பதுண்டு. நிமித்தம் என்னும் பொருளில் 'சொகினம்' என்னும் சொல் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ளது.

"ஆடமைத் தோளி விரிச்சியும் சொகினமும்
வேறு படஅஞ்சி விதிப்புற் றன்று'' (264 - கொளு)

என்பது பாடல். 310 ஆம் கொளுவின் பழைய உரையிலும் இது ஆளப்பட்டுள்ளது.

"உயர்ந்த மூங்கிலன்ன தோளினாள், சொகின விகற் பத்தாலே வடித்த வேலினையுடைய தலைவன் வாரா தொழிய அதற்கு அழிந்தது" என்பது உரைப்பகுதி.

தொல்காப்பியம், பதிற்றுப் பத்து, புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களில் 'உன்னம்' என்னும் பெயரும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. பாடல்கள்:

“உடல்வேந் தடுக்கிய உன்ன நிலையும்” (தொல்-பொருள்-புறம்- 5:8)

"தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்
புன்கால் உன்னம் சாய …. " (பதிற்றுப்பத்து - 40:16, 17)

உன்னமரம் தழைத்தால் நல்ல சகுனமாம்; சாய்ந்தால் தீய சகுனமாம். சாய்ந்தாலும் மன்னன் அஞ்சவில்லையாம்.

"பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப்
புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ” (பதிற்றுப்பத்து - 61:5,6)

பொன் போன்ற பூவையும் சிறிய இலையையும் உடைய உன்னமரம் தீய சகுனம் காட்டினும், பகைபோல் அதற்கு எதிராகப் போர்மேல் மன்னன் செல்வானாம்.


"துன்னரும் சிறப்பின் தொடுகழல் மன்னனை
உன்னம் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று" (கொளு)

"துன்னருந் தானைத் தொடுகழலான் துப்பெதிர்ந்து
முன்னர் வணங்கார் முரண்முருங்க - மன்னரும்
ஈடெலாம் தாங்கி இகலவிந்தார் நீயும்நின்
கோடெலாம் உன்னம் குழை" (பு.பொ.வெ.மாலை - உன்ன நிலை-243)

உன்ன மரமே! பகைவர் அழிந்தனர்; நம் மன்னன் வென் று விட்டான்; எனவே, நீ இன்னும் நன்றாகத் தழைக்கலாம் என்று கூறுவதாக உள்ளது இப்பாடல். உன்ன மரம் சகுனத்திற்கு உரிய பொருளா யிருப்பதால் சகுனம் என்னும் பொருளில் உன்னம் வழங்கப்படுவ துண்டு.

காரி (கரிக் குருவி) கத்தினும் தீய நிமித்தமாம். பகைவரின் இடத்தில் காரி கத்தியதாம். அதனால் தம் மன்னனுக்கு வெற்றி கிடைக்கும் என்னும் பொருளில் புறப் பொருள் வெண்பா மாலையில் ஒரு பாடல் உள்ளது.

“வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுள் காரி கலுழ்ம்" (3:3, 4)

என்பது பாடல் பகுதி. :சீவக சிந்தாமணி முதலிய நூல் களிலும் இக்கருத்து உள்ளது. பழைய பறவைகள் போகப் புதிய பறவைகள் வரினும் தீய நிமித்தமாகும் என்னும் ஒரு செய்தி புறநானூற்றில் புகலப்பட்டுள்ளது.

தற்செயலாகக் காதில் விழும் சொற்களில் மங்கலம் உள்ளமை - இல்லாமையைக் கொண்டும் நன்மை தீமைகள் கணிக்கப்படுவதுண்டாம். இதற்கு விரிச்சி, வாய்ப்புள் என்னும் பெயர்கள் உள்ளன. பாக்கத்தில் (சிற்றூர்ப்பக்கம்) சென்று வாய்ச் சொல் கேட்பதற்குப் 'பாக்கத்து விரிச்சி' என்னும் பெயர் தொல் - பொருள் - புறத்திணையியலில் (58) கூறப்பட்டுள்ளது. விரிச்சி, வாய்ப்புள் என்னும் பெயர்கள் புறப்பொருள் வெண்பா மாலையில் கூறப் பட்டுள்ளன.

மற்றும் பூனை, நரி போன்றவை சில குறுக்கே போகக் கூடாதாம்."நரி வலம்போனால் என்ன - இடம் போனால் என்ன - மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் போதும்' என்னும் முது மொழியும் ஈண்டு எண்ணத் தக்கது. மற்றும் ஒற்றைப் பார்ப்பான், கைம்பெண் போன்ற சிலர் எதிரே வரினும் தீய நிமித்தமாகும் என நம்புபவர்கள் உளர் - இது சரியன்று.

இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு அறிந்த இளங்கோ அடிகள் தம் நூலிலும் நிமித்தங்கள் சிலவற்றை அறிமுகப் படுத்தியுள்ளார். அவை வருமாறு:-

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

புகாரில் இந்திர விழா நடைபெற்ற நாளில் கண்ணகி யின் கண் இடப் புறம் - அதாவது இடக்கண் துடித்ததாம்; மாதவியின் கண் வலப்புறம் - அதாவது வலக்கண் துடித்த தாம். பெண்கட்கு இடப்புறத்து உறுப்புகள் துடித்தால் நன்மையும் வலப்பக்கத்து உறுப்புகள் துடித்தால் தீமையும் உண்டாகும் என்பது ஒருவகை நிமித்தம். இதற்கு நேர்மாறாக, ஆண்கட்கு வலப்பக்கம் துடித்தால் நன்மையும் இடப்பக்கம் துடித்தால் தீமையும் உண்டாகுமாம்.

கண்ணகிக்கு இடப்புறம் துடித்ததால் வரவிருக்கும் நன்மையாவது, இன்னும் அண்மையில் கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியிடம் வரப்போகிறான் என்பதாம். மாதவிக்கு வலம் துடித்ததால் அறியப்படுவது, அண்மையில் கோவலன் மாதவியை விட்டுப் பிரியப் போகிறான் என்பது. பாடல்:

"கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உண்ணிறை கரந்தகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென்" (237-40)

என்பது பாடல் பகுதி. கண்ணகி கண் இடத்தினும் மாதவி கண் வலத்தினும் துடித்தன என நிரல் நிறையாகப் பொருள் கொள்ளல் வேண்டும். எண்ணுமுறை = நிரல்நிறை. Respectively - என்பதற்குத் தமிழ் எண்ணுமுறை.

நாடு காண் காதை

சனி என்னும் கரிய கோள் (கிரகம்) புகைந்து பகை வீடுகளில் சென்று மாறு-பட்டிருப்பினும், தோன்றக் கூடாத தூமகேது என்னும் ஒருவகை விண்மீன் தோன்றினும், கிழக்கே தோன்ற வேண்டிய வெள்ளி தெற்கே தோன்றினும் நாட்டிற்குக் கேடாம். இப்பேர்ப்பட்ட நிலையிலும் காவிரியில் தவறாது தண்ணீர் வரும். (இந்தக் காலத்தில்).

"கலியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்'' (102, 103)

இவ்வாறு நிகழ்வதும் தீய நிமித்தமாம்.

வேட்டுவ வரி

பகைவரின் ஆனிரையைக் கவர்ந்துவர மறவன் ஒருவன் வெட்சி மலர்சூடிப் புறப்பட்டான். கொற்றவையின் நோக்கும் அவனுக்குக் கிடைத்தது. இதனால், பகைவர் ஊரில் காரி (கரிக் குருவி) குரல் எழுப்பிப் பகைவர்க்கு நேர விருக்கும் கேட்டினை அறிவித்ததாம். பாடல்:

'உட்குடைச் சீறூர் ஒருமகன் ஆனிரை கொள்ள உற்ற காலை
வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுள் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்" (12)

காரி (கரிக்குருவி) போன்ற கூவக் கூடாத பறவைகள் கூவுவதும் தீய நிமித்தமாம்.

கொலைக் களக் காதை

வெளியே செல்லுங்கால் மாடு முட்ட வரினும் அது தீய நிமித்தமாம். கோவலன், கண்ணகியிடமிருந்து ஒரு சிலம்பைப் பெற்றுக் கொண்டு, கடைத்தெருவில் போய் விற்பதற்காக மாதிரி வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியில் செல்லலானான். அப்போது ஒரு காளைமாடு அவனை முட்ட முயன்றது. எப்படியோ தப்பித்துக் கொண்டான். இவ்வாறு மாடு மறித்து முட்ட வந்தது தீய சகுன ம் என்பதை அவன் அறியவில்லை. அதை அறியும் குலத்தினன் அல்லன் அவன். எனவே, வீட்டிற்குத் திரும்பி வராமல் தொடர்ந்து கடைத்தெருவிற்குச் சென்று, கொலைக் குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டான். பாடல்:

"பல்லான் கோவலர் இல்லம் நீங்கி
வல்லா நடையின் மறுகில் செல்வோன்
இமில்ஏறு எதிர்ந்தது இழுக்கென அறியான்
தன்குலம் அறியும் தகுதியன் றாதலின்." (98-101)

என்பது பாடல் பகுதி. கவலையோடு தளர்ந்த நடையுடன் தெருவில் சென்றான் என்பது, 'வல்லா நடையின் மறுகில் செல்வோன்' என்னும் தொடரின் உருக்கமான கருத்தாகும்.

உலகியலில் சிலர், ஒரு வேலையின் நிமித்தம் வெளியில் புறப்பட்டுச் செல்லுங்கால், எதிரில் தீய குறிகள் தென்படின் வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவதுண்டு. ஆனால் கோவலனது தலையெழுத்து வேறுவிதமா யிருந்தது. என் செய்வது!

திருடர்கள் திருடச் செல்லும்போது நிமித்தம் பார்ப்பார் களாம். பெறுதற்கரிய பெரும் பொருள் எளிதில் கைக்குக் கிடைக்கும்போல் தோன்றினும், புறப்படும்போது நிமித்தம் தீயதா யிருப்பின் திருடச் செல்ல மாட்டார்கள் என்னும் செய்தி கொலைக் களக் காதையில் கூறப்பட்டுள்ளது.

"நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும்
புகற்கிலர் அரும்பொருள் வந்துகைப் புகினும்''(178-179)

என்பது பாடல் பகுதி. திருடர்களும் சகுனம் பார்ப்பார்களா என வியக்கத் தோன்றலாம். மற்றவரினும் திருடர்களே கட்டாயம் சகுனம் பார்க்க வேண்டும். ஏனெனில், திருடர் கட்கு அந்தக் காலத்தில் சாவு ஒறுப்பு (மரண தண்டனை) கொடுக்கப்பட்டதால், தாங்கள் அகப்பட்டுக் கொள்ளாமல் வெற்றியுடன் திரும்பி வரவேண்டும் என்பதற்காக அவர்கள் கட்டாயம் சகுனம் பார்ப்பார்களாம்.

ஆய்ச்சியர் குரவை

ஆயர்பாடியில் பல தீய நிமித்தங்கள் நடைபெற்றதாக இடைக்குல மடந்தை மாதரி தன் மகள் ஐயையோடு கலந்து உரையாடுகிறாள். அந்தத் தீய நிமித்தங்களாவன:

குடத்தில் உள்ள பால் புரை குத்தியும் தயிராகத் தோய வில்லை. எருதின் கண்களிலிருந்து நீர் சொரிந்தது. காய்ச்சினால் வெண்ணெய் உருக வில்லை. ஆட்டுக் குட்டிகள் துள்ளி ஓடி யாடி விளையாடவில்லை.ஆனிரைகள் நடுங்கி அழுவதுபோல் அரற்றின. அவற்றின் கழுத்து மணிகள் அறுந்து கீழே விழுந்தன. பாடல்: உரைப்பாட்டு மடை:

1. குடப்பால் உறையா; குவியிமில் ஏற்றின்
மடக்கண் நீர்சோரும்; வருவதொன் றுண்டு.

2. உறிநறு வெண்ணெய் உருகா உருகும்
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு.
---------------

9. புராணக் கதைகள்

இக்காலத்து அறிவியலார் நம்ப முடியாத புராணக் கதைகள் பல பண்டைய இலக்கியங்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் சிலப்பதிகாரத்திற்கும் பங்கு உண்டு. சில புராணக் கதைகளை இதிலிருந்து காணலாம்:

அவுணரும் முசுகுந்தனும் (கடலாடு காதை)

அவுணர்கள் முசுகுந்த மன்னனுக்குத் தொல்லை தந்தனர். ஒரு பூதம் தொல்லை-யினின்றும் அவனைக் காத்ததாம்:

'கடுவிசை அவுணர் கணங்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொளைந்தன ராகி
நெஞ்சிருள் கூர நிகர்த்து மேலிட்ட
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவன் ஏவ
இருந்து பலியுண்ணும் இடனும்..." (7-13)

என்பது பாடல் பகுதி. சுருக்கமாகக் கூறப்பட்டுள்ள இப்பகுதியில் ஒரு பெரிய கதை மறைந்துள்ளது. அதாவது: அமிழ்தத்தைக் கலுழன் கவர்ந்து சென்று விட்டான். இந்திரன் புகார் நகரைத் தான் காப்பதாக ஒப்புக் கொண்ட முசுகுந்த மன்னனிடம் ஒப்படைத்து அவனுக்குத் துணையாக ஒரு பூதத்தை அமர்த்தி விட்டுப் போனான். அவுணர்கள் மன்னனோடு போரிட்டுத் தோற்றனர். பின்னர், அவுணர்கள் இருள் உண்டாகச் செய்யும் ஓர் கணை தொடுத்து எல்லா இடங்களையும் இருள் மயமாக்கினர். பூதம் தம் ஆற்றலால் இருளைப் போக்கி முசுகுந்தனுக்குத் துணை புரிந்தது. பின்னர் வந்த இந்திரன் அந்தப் பூதத்தை முசுகுந்தனுக்கு மெய்க்காவலாக இருக்கப் பணித்தான். அதன்படி அது புகாரில் இருப்பதாயிற்று.

இந்தக் கதையை, சிலப்பதிகாரத்தின் பழைய உரை ஆசிரியராகிய அடியார்க்கு நல்லார் எடுத்துக் கூறி இதற்குச் சான்றாக மேற்கோள் பாடல் ஒன்றும் தம் உரையில் தந்துள்ளார். அது வருக:

"முன்னாள் இந்திரன்...
காவல் அழித்துச் சேவல் கொண் டெழுந்த
வேட்கை அமுதம் மீட்க எழுவோன்
இந்நகர் காப்போர் யாரென நினைதலும்,
நேரியன் எழுந்து நீவரு காறும்
தார்கெழு மார்ப தாங்கல்என் கடனென,
உவந்தனன் கேட்டுப் புகழ்ந்த இப்பூதம்
நின்வழி யாகென நிறீஇப் பெயர்வுழிக்
கடுவிசை அவுணர் கணம் கொண்டு ஈண்டிப்
பொருது போர் தொலைந்தன ராகிப் பெரிதழிந்து
ஆழ்ந்த நெஞ்சின் சூழ்ந்தனர் நினைத்து
வஞ்ச மற்றிது வஞ்சத் தல்லது
வேறல் அரிதெனத் தேறினர் தேறி
வளைத்துத் தொடுத்த வல்வா யம்பின்
அயின் முகங் கான்ற ஆரிருள் வெயிலோன்
இருகணும் புதையப் பாய்தலின் ஒருகணும்
நெஞ்சங் காணா நிற்ப நின்ற
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்

என்பது 'முகவரி' தெரியாத அந்தப் பாடலாகும். சேவல் கலுழன். நேரியன் = மன்னன் முசுகுந்தன். இப்பாடலில் ஈற்றில் உள்ள 'வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்' என்னும் அடி, சிலப்பதிகாரத்திலும் (11 ஆம் அடி) அப்படியே இருப்பது எண்ணத் தக்கது.

மற்றொரு கதை வருக: இந்திரன் ஏவ உருப்பசி நடம் ஆடினாள். இந்திரன் மகனும் அவளும் அப்போது ஒருவரை ஒருவர் நோக்கிக் காதல் குறிப்பு கொண்டதால், ஆடல் பாடல் எல்லாம் கெட்டு விட, உருப்பசியை அகத்திய முனிவர் கெடுமொழி (சாபம்) இட்டு மண்ணுலகில் பிறக்குமாறு செய்தாராம்.

“நாரதன் வீணை நயந்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்கா ளாகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவளெனச் சாபம் பெற்ற..." (18-23)

என்பது பாடல் பகுதி. இதில் சுட்டப்பட்டுள்ள முழுக் கதையாவது:

இந்திரனது அவைக்கு அகத்திய முனிவர் வந்தார். பாடலுடன் ஆடும்படி இந்திரன் உருப்பசியைப் பணித்தான். ஆடும் போது உருப்பசியும் இந்திரன் மகன் சயந்தனும் காதல் உணர்வுடன் நோக்கிக் கொண்டனர். அதனால் ஆடலும் பாடலும் முறை தவறின. அதனால், நாரதன் பகை நரம்பு பட வீணை மீட்டினான். இவற்றைப் பொறுக்க முடியாத அகத்தியர் சினம் கொண்டு, நாரதன் வீணை மண்ணிலே மணையாய்க் கிடக்கவும், உருப்பசி மண்ணுலகில் பிறக்கவும், சயந்தன் பூவுலகில் மூங்கிலாய்த் தோன்றவும் வைவு (சாபம்) இட்டனர். பின்னர் அவர்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் வைவு நீக்கல் (சாப விமோசனம்) செய்தார் - என்பது கதை.

அடியார்க்கு நல்லார் இந்தக் கதையைக் குறிப்பிட்டு இதற்கு மேற்கோள் சான்றாக ஒரு பாடலையும் தந்துள்ளார். அப்பாடல் வருக:-

“வயந்த மாமலை நயந்த முனிவரன்
எய்திய அவையின் இமையோர் வணங்க,
இருந்த இந்திரன் திருந்திழை உருப்பசி
ஆடல் நிகழ்க பாடலோடு ஈங்கென,
ஓவியச் சேனன் மேவினன் எழுந்து
கோலமும் கோப்பும் நூலொடு புணர்ந்த
இசையும் நடமும் இசையத் திருத்திக்
கரந்து வரல் எழினியொடு புகுந்தவன் பாடலில்
பொருமுக எழினியில் புறந்திகழ் தோற்றம்
யாவரும் விழையும் பாவனை யாகலின்
நயந்த காதல் சயந்தன் முகத்தின்
நோக்கெதிர் நோக்கிய பூக் கமழ் கோதை
நாடிய வேட்கையின் ஆடல் நெகிழப்
பாடல் முதலிய பல்வகைக் கருவிகள்
எல்லாம் நெகிழ்தலின் ஒல்லா முனிவரன்
ஒருதலை இன்றி இருவர் நெஞ்சினும்
காமக் குறிப்பு கண்டனன் வெகுண்டு
சுந்தர மணிமுடி இந்திரன் மகனை
மாணா விறலோய் வேணு ஆகென
இட்ட சாபம் பட்ட சயந்தன்
சாப விடையருள் தவத்தாய் நீயென
மேவினன் பணிந்து மேதக உரைப்ப
ஓடிய சாபத்து உருப்பசி தலைக் கட்டும்
காலைக் கழையும் நீயே யாகி
மலையமால் வரையின் வந்து கண்ணுற்றுத்
தலையரங் கேறிச் சார்தி என்றவன்
கலக நாரதன் கைக்கொள் வீணை
அலகில் அம்பண மாகெனச் சபித்துத்
தந்திரி உவப்பத் தந்திரி நாரில்
பண்ணிய வீணை மண்ணிசைப் பாடி
ஈண்டு வருகெனப் பூண்ட சாபம்
இட்டஅக் குறுமுனி ஆங்கே
விட்டனன் என்ப வேந்தவை அகத்தென்

என்பது பாடல். நேரிசை ஆசிரியப் பாவாகிய இந்தப் பாடலும், சிலப்பதிகாரக் காதைகள்போல் 'என்' என்னும் ஈற்றில் முடிந்திருப்பது எண்ணத் தக்கது.

மற்றும், சிலம்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புராணக் கதைகள் சிலவற்றின் குறிப்புகள் வருமாறு:-

தேவர் வேண்டியதால் சிவன் திரிபுரம் எரித்தது. கண்ணன் கம்சனையும் வாணாசுரனையும் வென்றது. முருகன் சூரனை வென்றது. கொற்றவை அவுணரை வென்றது. காமன் பேடிக் கூத்து ஆடியது. மாலதி மாற்றாள் மகவை இழத்தல் - பேய் பறித்தல் பாசண்டைச் சாத்தன் குழவியாய் வந்து தேவந்தியை மணத்தல். பாண்டியன் கடல் சுவற வேல்விட்டது. இந்திரன் முடிமேல் வளை எறிந்தது. பாண்டியன் முகிலைத் தடுத்துத் தளையிட்டது. நளன் மனைவியைப் பிரிந்து காடு ஏகியது. இராமன் மனைவியைப் பிரிந்து காடு போந்தது. இந்திரன் மலைச் சிறகை அரிந்தது.

கண்ணன் குருந்து ஒடித்தது; கன்று குணிலாக் கனி உகுத்தது; நப்பின்னையை மணந்தது; கடல் கடைந்தது; மண் உண்டது; வெண்ணெய் உண்டது: அடியால் உலகு அளந்தது; பாண்டவர்க்காகத் தூது போனது.

முருகன் கிரவுஞ்ச மலை பிளந்தது; கடல் பிளந்து சூரனைக் கொன்றது - முதலிய புராணக் கதைகள் பல கூறப்பட்டுள்ளன.
--------------

10. அழுகை (அவலச்) சுவை

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எட்டுவகை மெய்ப்பாடுகள் கூறியுள்ளார். அவற்றுள் அழுகையும் ஒன்று. அவலம் எனினும் அழுகை எனினும் ஒன்றே. அழுகை என்னும் மெய்ப்பாட்டுச் சுவை, இளிவு (இழிவு), இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கின் காரணமாகப் பிறக்கும் என்று கூறியுள்ளார்:

"இளிவே இழவே அசைவே வறுமை யென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (5)

என்பது நூற்பா. இழவு அதாவது இழப்பு காரணமாக வரும் அழுகைச் சுவையை மட்டும் இங்கே எடுத்துக் கொள்ளலாம். சுவை என்பது இன்பத்தைக் குறிப்பது மட்டுமன்று; பல காரணங்களால் ஏற்படும் பலவகை உணர்ச்சிகளும் சுவை என்பதில் அடங்கும். சிலப்பதிகாரத்தில் அழுகைச் சுவைக்குக் குறைவே இல்லை.

நல் வாழ்வு இழப்பு, இன்றியமையாப் பொருள் இழப்பு, உயிர் இழப்பு முதலிய பேரிழப்புகள் இழவில் அடங்கும். கண்ணகி முதலில் வாழ்விழந்தாள். இறுதியில் கணவனை இழந்தாள். பின்னர்க் கண்ணகியும் உயிர் நீத்தாள். இது தொடர்பாகப் பாண்டியன் நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் மாண்டனர். கோவலன் தந்தையும் கண்ணகியின் தந்தையும் இல்லற வாழ்வை இழந்து துறவு பூண்டனர். இருவரின் தாயர்களும் மக்கள் இழந்த துயர் பொறாது செத்தனர். கண்ணகிக்கு வழித்துணையாய் வந்த கவுந்தியடிகள் உண்ணா நோன்பு கொண்டும் அடைக்கலம் அளித்த மாதரி தீக்குளித்தும் மடிந்தனர். மாதவியும் மணிமேகலையும் சிற்றின்பம் இழந்து துறவு பூண்டனர். மதுரை எரி யுண்ணப்பட்டது பேரிழப்பாகும்.

இந்த இழப்புகளுக்குள் கண்ணகி பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கோவலன் இறந்த இழப்பு சிலம்பில் பேரிடம் பெற்றுள்ளது. ஆயர் பாடியில் தீய நிமித்தங்கள் தோன்றின. கோவலன் சாவு கண்ணகிக்கு உணர்த்தப் பட்டது.சாவினும், கள்வன் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டது அவளை மிகவும் வருத்தியது.

துன்பமாலை என்னும் காதையில், கண்ணகியின் துயரம் ஓவியப் படுத்தப்பட் டுள்ளது. அவளது அழுகை (அவல) உரைகள் உள்ளத்தை உருக்கும்.

காதலனைக் காணேன் ஊதுலையின் உள்ளம் உருகும். அன்பனைக் காண்கிலேன் - வஞ்சமோ - மயங்கும் என் நெஞ்சு. மன்னன் தவறிழைப்ப, யான் அவலம் கொண்டு அழிவதோ? காய் கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனோ? என்றெல்லாம் கூறிப் புலம்பி அரற்றினாள்.

கணவனது உயிரற்ற உடலை நோக்கிக் கதறுகிறாள். நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ? மணிமார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ என்று கூறிக் கணவன் உடலைக் கட்டித் தழுவிக் கொண்டாள். இந்த ஊரில் பெண்டிரும் உண்டுகொல் - சான்றோரும் உண்டுகொல் - தெய்வமும் உண்டுகொல் என்று வினவி விம்முகிறாள்.

பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்று, வாயில் காவலனை நோக்கி, "வாயிலோயே - அறிவறை போகிய பொறியறு, நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!" என வாயில் காவலனோடு சேர்த்துப் பாண்டியனைச் சாடுகிறாள். பாண்டியன் முன்சென்று, 'தேரா மன்னா செப்புவ துடையேன்' என்று கூறிப் பாண்டியனைத் திடுக்கிடச் செய்கிறாள். நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்று கூறிக் கொதிக்கிறாள்.நீர்வார் கண்ணை யார் நீ என்று பாண்டியன் வினவ, தன் நாடு, ஊர், குடி, பெயர் முதலியவற்றின் பெருமையைப் பேசுகிறாள்.

புகாரில் இருந்த ஏழு பத்தினிகளின் வரலாறுகளைப் புகழ்ந்து கூறி, அப்பதியில் பிறந்த யானும் ஒரு பத்தினியே யாமாகில், விடேன், அரசோடு மதுரை யையும் ஒழிப்பேன் என்று வஞ்சினம் கூறுகிறாள். தன் இடக் கொங்கையைத் திருகி எடுத்து நகர்மீது எறிந்து எரியச் செய்யலானாள்.

இறுதியில் கீழ்த்திசை வாயில் கணவனோடு வந்தேன்; மேல்திசை வாயிலில் கணவனின்றிச் செல்கிறேன் என்று கூறிச் சேரநாட்டுப் பகுதியை அடைந்து வாழ்வை முடித்துக் கொண்டு துறக்கம் புகுகிறாள்:

"கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கென
இரவும் பகலும் மயங்கினள் கையற்று'' (23:182-184)

என்னும் பகுதி மிகவும் உருக்கமானது.
------------

11. காப்பியத்தில் கலைகள்

கலைகள் அறுபத்து நான்கு என்பர். இது ஒரு வகை வரையறை. ஆனால், காலந்தோறும் புதுப் புதுக்கலைகள் பூக்கலாம். ஒவ்வொரு கலைக்கென்றும் தனித்தனி நூல்கள் உண்டு. தனி நூல்களிலே கூறப்பட்டுள்ள தன்றி, வேறு நூல்களில் இடையிடையே கலைகள் இடம் பெற்றிருப்பதும் உண்டு. இவ்வகையில், இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் சில கலைகள் பெரிய அளவில் டம்பெற்றிருப்பதில் வியப்பில்லை. இந்நூலில், இயல் கலையினும் இசைக் கலைக்கும் கூத்துக் (நாடகக்) கலைக்கும் மிக்க இடம் உண்டு.

அரங்கேற்று காதையில், பல்வேறு ஆசிரியர்களின் இலக்கணம், அரங்கின் இயல்பு முதலியவை கூறப்பட்டு உள்ளன. இனி அவற்றைக் காண்பாம்:

1.மாதவியின் ஆடல் பயிற்சி

அகத்தியரின் சாபத்தால் இந்திரன் உலகத்திலிருந்து வந்த உருப்பசியோ என எண்ணும்படி மாதவி திகழ்ந்தாள்; கூத்து, பாட்டு, அழகு ஆகிய மூன்றிலும் குறையாதவள். ஐந்தாம் அகவையில் தண்டியம் பிடித்து ஏழாண்டு பயிற்சி பெற்றபின் பன்னிரண்டாம் வயதில் சோழ மன்னனின் அவையில் அரங்கேற்றம் செய்யப் பெற்றாள்.

2. ஆடலாசிரியன் இயல்பு
1. ஆடலாசிரியன், வசைக் கூத்து - புகழ்க் கூத்து, வேத்தியல் - பொதுவியல், தமிழ்க் கூத்து - ஆரியக் கூத்து என மாறுபட்ட இரண்டிரண்டாக வரும் அகக்கூத்து இலக்கணமும் புற நாடகமும் அறிந்திருத்தல்.
2. பாட்டு உறுப்பு பதினான்குடன் ஆடலைப் பொருத்தல்.
3. அல்லியம் முதலிய பதினொரு கூத்து வகை அறிதல்.
4. அக நாடகங்கட்கு உரிய இருப்பத்தெட்டு உருக் களை அறிதல்.
5. புறநாடக உறுப்பாகிய தேவபாணி முதலியன அறிதல்.
6. கூத்து விகற்பங்கட்கு உரிய வாச்சியக் கூறுகளை அறிந்திருத்தல்.
7. பாடல், தாளம், தூக்கு ஆகியவற்றிற்கு ஏற்ப, அகக் கூத்தும் புறக்கூத்தும் நிகழ்த்து மிடத்து, ஒற்றைக் கையும் இரட்டைக் கையும் காட்டும் நுட்பம் அறிதல்.
8. அகக்கூத்தில், ஒற்றைக் கைத்தொழில் இரட்டை யில் புகாமலும், இரட்டைக் கைத்தொழில் ஒற்றையில் புகாமலும் விலக்கல்.
9. புறக்கூத்தில் ஆடல் நிகழும்போது அவிநயம் நிகழா மலும் அவிநயம் நிகழுங்கால் ஆடல் நிகழாமலும் விலக்கல்.
10. குரவைக் கூத்துக்கு உரிய கால்களும் வரிக் கூத்துக்கு உரிய கால்களும் விரவாமல் காத்தல் - முதலியவை ஆடல் ஆசிரியனுக்கு இருக்கவேண்டிய இயல்புகளாம்.

3. இசையாசிரியன் இயல்பு

1. யாழிசையும் குழலிசையும் வண்ணக் கூறுபாடுகளும் தாளக் கூறுபாடுகளும் மிடற்றுப் பாடலும் தண்ணுமை நிலையும் பதினோராடல் கூத்துகளும் அறிந்திருத்தலோடு அவற்றில் வல்லமையும் பெற்றிருத்தல் வேண்டும்.

2. இயற்றிய உருக்களை இசைகொள்ளும்படியும் சுவை (இரசம்) கொள்ளும்படியும் புணர்த்துப் பாடவேண்டும்.

3. செந்துறை, வெண்டுறை ஆகிய இருவகைப் பாடலுக்கும் உரிய இயக்கம் நான்கும் அறிந்து, இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் ஆகியவற்றிற்கு ஏற்ப இசை கடைப்பிடித்து, இசை வேறுபாடுகளைக் குற்றமற அறிந்திருத்தல் வேண்டும்.

4. இயல் புலவன் (பாடல் எழுதிய ஆசிரியன்) நினைத்த கருத்து, ஆடல் ஆசிரியன் அறிவிக்கும் அவிநயம், இவற்றிற்கு ஏற்ற பாட்டு ஆகியவற்றை உணர்ந்து பாடல் வேண்டும் - முதலியன இசையாசிரியனுக்கு இருக்கவேண்டிய இயல்புகளாம்.

4. இயல் கவிஞன் இயல்பு

1. நான்கு எல்லைக்கு உட்பட்ட தமிழ்நாடு அறியும்படி முத்தமிழிலும் வல்லமை பெற்றிருத்தல் வேண்டும்.
2. வேத்தியல், பொதுவியல் என்னும் இருநாடக நூல் அறிவு பெற்றிருத்தல்.
3. பதினொரு பண் நீர்மை அறிந்து தாளம் பொருந்தப் பாடல் இயற்றுதல்.
4. வசையற்ற மொழிகளால் பாடல் இயற்றுதல் முதலியன பாட்டு இயற்றுவோனுக்கு உரிய இயல்புகளாம்.

5. தண்ணுமைக்காரன் இயல்பு

1. எல்லா ஆடல்களும் பண்ணல் முதலிய பாடல் வகை களும் அறிதல்.
2.16991 ஆதி சைகளை அறிந்திருத்தல்.
3. வடவெழுத்து நீங்கி வந்த எழுத்துக்களாலே இசைத்துச் சேர்க்கப்பட்ட வாக்கியக் கூறுகளும் மூவகைத் தமிழும் அறிதல்.
4. பண்,தாளம், தூக்கு இவற்றின் விகற்பம் அறிதல்- இவற்றின் குற்ற நற்றங்களும் அறிதல்.
5. இயற் சொல் முதலிய நான்கு சொல்லாட்சிகளை அறிதல்.
6. உரு நெகிழாதபடி நிறுத்தல்.
7. நிற்குமானம் நிறுத்திக் கழியுமானம் கழிக்க வல்லவனாதல்.
8. யாழ், குழல், மிடறு ஆகியவற்றின் இசைக்கு இயைய வாசித்தல்.
9. மற்ற கருவிகளின் குறையை நிரப்புதல் - மிகையை அடக்குதல்.
10. கைத் தொழில் அழகு பெறச் செய்து காட்டல்- முதலியன தண்ணுமை (மத்தளம் - மிருதங்கம்) வாசிப் பவனுக்கு இருக்க வேண்டிய இயல்புகளாகும்.

6. குழல் ஆசிரியன் இயல்பு

1. சித்திரப்புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் அறிதல்.
2. பாடலாசிரியனைப் போல் ஒத்த அறிவுடைமை.
3. ஊதும் துளைகளில் சுட்டு விரல் முதலாக விட்டுப் பிடிப்பது ஆரோகணம் - சிறு விரல் முதலாக விட்டுப் பிடிப்பது அவரோகணம் - இவற்றை அறிந்து ஒழுகல்.
4. 103 பண்ணீர்மையும்-14 கோவையும் அறிதல்.
5. முழவு, தண்ணுமை, யாழ், மிடறு (வாய்ப்பாட்டு)- இவற்றின் இசைக்கு ஏற்ப ஒத்திசைத்தல்.
6. முதல் நடை, வாரம், கூடை, திரள் என்னும் இயக்கம் நான்கனுள் முதல் நடை தாழ்ந்த நடையாதலாலும் திரள் முருக்கு நடை யாதலாலும் அவற்றை விட்டு, சொல் ஒழுங்கும் இசை ஒழுங்கும் உடைய வாரப் பாடலை அளவறிந்து நிறுத்த வல்லவனாதல்.
7. எழுத்துகள் சிதையாமல், எழுத்தை எழுத்தாக இலக்கணப்படிக் குற்றமின்றி இசைத்துக் காட்டல்-முதலியன குழலாசிரியன் இயல்புகளாம்.

7. யாழ் ஆசிரியன் இயல்பு

1. பதினான்கு கோவை பொலிந்து பாடல் இயல்புக்கு ஒத்திருத்தல்.
2. ஏழு பாலையினையும் இணை நரம்பாகத் தொடுத்து நிறுத்தல்.
3. பன்னிரு முறை திரித்துப் பன்னிரு பாலை பிறப் பித்தல்.
4 பெண்டிர்க்கு உரிய தானமாகிய பதினாறு கோவை யிலே பொருந்தக் கூட்டல்.
5. எல்லாப் பாலைகளையும் ஒழுங்குறப் பிறப்பித்தல்.
6.வலிவு - மெலிவு - சமன் எனப்படும் தான நிலை அறிதல்.
கெடாமல் பண் நீர்மை குன்றாமல்
7. நரம்படைவு கெடாமல் புணர்க்க வல்லவனாதல்.
8. புணர்ப்பிற்கு அமைந்த எழுத்துகளால் இசை செய்தல் - முதலியன யாழ் ஆசிரியன் இயல்புகளாம்.

8. அரங்கின் இயல்பு

I நிலம்:
1. நிலக் குற்றம் நீங்கிய இடத்தில் அரங்கு அமைத்தல்.
2. தெய்வத் தானம், பள்ளி, அந்தணர் இருக்கை, கூவம்,குளம்,கா ஆகியவற்றை அண்மையில் உடைத்தாதல்.
3. குழி - பள்ளம் படுகுழியின்மை - திண்ணியதாதல்.
4. மண் இனிய மணமும் சுவையும் உடையதாதல்.
5. எலும்பு, உமி, பரல், உவர்ப்பு, ஈளை, பொடி- இவைகள் இல்லாதிருத்தல்.
6. ஊர் நடுவே - தேரோடும் தெருவிலே இருத்தல்- முதலியன, அரங்கம் அமைக்க வேண்டிய இடத்திற்கு இருக்க வேண்டிய இயல்புகளாம்.

II அரங்க மேடை:
அரங்க மேடை பின் வருமாறு இருத்தல் வேண்டும். நல்லிலக்கண ஆடவனது பெரு விரலால் 24 தொண்ட அளவுக் கோலால் அளந்த ஏழு கோல் அகலம் - எட்டுக்கோல்
- நீளம் - ஒரு கோல் உயரம் உடையதாய் அரங்க மேடை இருத்தல் வேண்டும். போக வர இரண்டு வாயில்கள் இருத்தல் வேண்டும். அளவுக் கோல், பொதிய மலை போன்ற தெய்வ மலையிலிருந்து வெட்டி வந்த மூங்கிலா யிருக்க வேண்டும். கணுவுக்குக் கணு ஒரு சாண் இடைவெளி உள்ளதாயும் இருக்கவேண்டும். அத்தகைய கோலால் அளந்தமைக்க வேண்டும்.

III அரங்க அமைப்பு:
1. மக்கள் வழிபட நால்வகைக் குலப் பூதங்களின் ஓவியங்கள் தீட்டி வைத்திருத்தல்.
2. தூணின் நிழல் விழாவாறு விளக்குகள் அமைத்தல்.
3. இடத் தூணிலையிலே உருவு திரையாக ஒருமுக எழினி அமைத்தல்.
4. இரு வலத் தூணிலை யிடத்து உருவு திரைய பொருமுக எழினி அமைத்தல்.
5 மேலே கூட்டுத் திரையாகக் கரந்துவரல் எழினி அமைத்தல்.
6. வேலைப்பாடு மிக்க ஓவியம் எழுதிய மேற்கட்டி அமைத்தல்.
7. திங்கள் - வியாழன் - செவ்வாய் ஆகிய நாட்களில் முறையே வெண்மை - பொன்மை - செம்மை நிற முத்து மாலைகள் சரியும் தூக்கும் தாமமுமாகத் தொங்கி அசைய விடுதல் - ஆகியவை அரங்கத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டிய அமைப்புகளாகும்.

9. தலைக்கோல் இயல்பு

1. பகையை வென்று கொண்டு வந்த குடைக் காம்பு தலைக்கோலாதல் வேண்டும்.
2. கோலின் கணுக்களில் ஒன்பான் மணிகளும், இடை யிலே சாம்பூநதப் பொன் தகடும் பதித்து வைத்திருத்தல்.
3. மன்னனின் அரண்மனையில் தலைக்கோல் வைப்ப தற்கென்று தனி இருப்பிடம் அமைத்தல்.
4. தலைக்கோலைச் சயந்தனாக எண்ணி மறைவழி வழிபடல்.
5. நல்ல நாளிலே, தெய்வ ஆற்று நீரைப் பொற் குடத்தில் கொணர்ந்து தலைக்கோலை நீராட்டல்.
6. மாலை அணிதல் முதலிய அணிகள் செய்தல்.
7. யானை வர,முரசு முழங்க, அரசனும் ஐம்பெருங் குழுவும் உடன் இயங்க, தேரும் யானையும் கொண்டு வந்து, தேரில் நிற்கும் பாடகன் கையில் தலைக்கோலைத் தந்து, தேரினை நகர்வலம் வரச் செய்தல்.
8. அரங்கம் அடைந்ததும் தலைக்கோலை எதிர் முகமாக வைக்க வேண்டும்.
9. பின்னரே நடம் ஆடல் தொடங்க வேண்டும். இவையெல்லாம் தலைக்கோல் தொடர்பான நிகழ்ச்சி களாகும்.

10. ஆடும் இயல்பு

1. ஆடல் நிகழ்வதற்கு முன் அரசர், அமைச்சர் முதலியோர் அவரவர் இடத்தில் அமர வேண்டும்.
2. ஆடும் இடம் மூன்று கோல் - ஆட்டுவார்க்கு ஒரு கோல்- பாடுநர்க்கு ஒரு கோல் - அந்தரம் ஒரு கோல்- குயிலுவர் நிலையிடம் ஒரு கோல்ஆக, ஒவ்வொன்றுக்கும் இந்த அளவு இடம் இருக்கவேண்டும்.
3. மாதவி வலக்காலை முதலில் வைத்து அரங்கம் ஏறினாள்; வலப்பக்கத் தூணிடத்தே பொருமுக எழினிப் பக்கம் சேர்ந்தாள்.
4. தோரிய மடந்தையர் இடத்தூண் அயலே ஒருமுக எழினிப்பக்கம் சேர்ந்தனர்.
5. இவர்கள் தீமை நீங்கி நன்மை உண்டாகுக எனத் தெய்வத்தை வேண்டிப் பாடல் வேண்டும் - ஓரொற்று வாரம், ஈரொற்று வாரம் ஆகிய இரண்டும் பாடலாம்.
6. பாடல் இறுதியில் எல்லா இசைக்கருவிகளும் இசைக்கப்படல் வேண்டும்.
7. குழல்வழி யாழும், யாழ்வழி மிடறும் (வாய்ப் பாட்டும்) தண்ணுமையும், தண்ணுமைவழி குட முழாவும் செயல்பட வேண்டும். இடக்கை என்னும் கருவி முழவோடு ஒன்ற வேண்டும்.
8. பருந்தும் நிழலும்போல் இசைக் கருவிகள் ஒன்றுக்கு ஒன்று ஒத்து இசைக்கவேண்டும். மற்றும் கருவிகளும் பாடலும் ஆடலும் ஒத்து இருக்கவேண்டும்.
9. இந்த அமைப்புகளுடன், மாதவி, பதினொரு பற்றாலே நாடக நூல் வழுவாது ஆடினாள்.
10. பாலைப் பண் அளவு கோடாதவாறு, உருவுக்கு ஏற்பச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் பாட்டும் கொட்டும் கூத்தும் ஒன்ற மாதவி ஆடல் செய்தாள்:
11. முதல் நடையிலும் வாரத்திலும் தேசிக் கூத்தெல்லாம் ஆடினாள்;
12. மேற்கொண்டு வைசாக நிலையும் ஆடி முடித்தாள்;
13. பொற்கொடி போன்ற தோற்றத்துடன் நூல் முறை வழுவாமல், அவிநயம் - பாவம் தோன்ற, விலக் குறுப்பு பதினாலின் வழுவாமல் ஆடினாள்;
14. இவ்வாறு வெற்றிபெற ஆடியபின் தலைக்கோல் பட்டம் பெற்றாள்; அரங்கேற்றம் செய்யப்பட்டவளானாள். ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் பெறுமானமுள்ள பச்சைமாலையை மன்னனிட மிருந்து பரிசாகப் பெற்றாள்.

மேற்கூறியவற்றால், ஆடும் இயல்பு அறியப் பெற்றது.

இதுகாறும் மேலே அரங்கேற்று காதையில் அறிவிக்கப் பட்டுள்ள ஆடல் பாடல் கலைகள். தொடர்பான நிகழ்ச்சிகளுள் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்த்தோம். இவற்றை விரிப்பின் மிகவும் பெருகும். இனி மற்ற காதை களில் இடம்பெற்றுள்ள செய்திகள் சிலவற்றையும் மிகவும் சுருங்கக் காண்பாம்:

கானல் வரி: மாதவி யாழை ஆய்வு செய்தாள்; செவி யால் ஓர்ந்து பார்த்தாள்; இசை மீட்டிப் பார்த்தாள்; பின்னர்க் கோவலனிடம் தந்தாள். கோவலன் யாழ் வாசித்த பின் மாதவி வாசித்தாள்.

வேனில் காதை: கோவலன் பிரிந்த பின், மாதவி நிலா முற்றத்தில் வாயால் மேற்செம்பாலைப் பண் பாடினாள் - அது மயங்கிற்று. பின் சகோட யாழ் கொண்டு அக நிலை மருதம், புற நிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் ஆகிய பண்களைப் பாடினாள் - இசை மயங்கிற்று.

புறஞ்சேரி இறுத்த காதை: கோவலன் பாணர்களுடன் யாழ் வாசித்தான். கோவலன் செங்கோட்டு யாழ் வாசித்தல் மிகவும் சிறப்பானது. அதாவது - நாற் பெரும் பண்ணிற்கும் முதலாகிய நால் வகை யாழினுள்ளும் செங்கோட்டு யாழிலே அறுவகை உறுப்பினுள் தந்திரிகரம், திவு என்னும் இரண்டையும் உறுதி பெறக் கட்டி வாசித்தான்.

ஊர் காண் காதை: 'எண்ணெண் கலையோர் இரு பெரு வீதி (323 ஆம் அடி) -அதாவது (8×8=64) அறுபத்து நான்கு கலைகளில் வல்லவர்களின் தெருக்கள் மதுரையில் இருந்ததாம். ஒன்பான் மணிகள் தொடர்பான கலை வல்லுநர் இருந்தனராம்.

கட்டுரை காதை: வான நூல் கலையறிவு அன்றிருந்தது. மதுரையை எரி யுண்ணுதற்கு முன்பே, ஆடித் திங்கள் - தேய் பிறைப் பருவத்தில் காத்திகை மீனும் அட்டமி திதியும் கூடிய ஒரு வெள்ளிக் கிழமையில் மதுரை எரியுண்ணப்படும்- அரசும் கேடுறும் -என்பது அறிவிக்கப்பட் டிருந்ததாம்.

'ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண (23:133-135)

என்பது பாடல் பகுதி. இப்பகுதி வான நூல் கலை.

நீர்ப் படைக் காதை: கணிக் (சோதிடக்) கலை யறிவு:- சேரன் செங்குட்டுவன் ஒரு நாள் கங்கைக் கரையில் மாலை வேளையில் விண்ணில் பிறை தோன்றியதைக் கண்டான். உடனே கணியன் (சோதிடன்), வஞ்சி நீங்கி முப்பத்திரண்டு திங்கள் ஆகிறது எனக் கூறினானாம். வான நூல் கலை யோடு கணி நூல் கலை ஒற்றுமை உடையது.

நடுகல் காதை : சேரன் செங்குட்டுவன், போரில் வெற்றி வாகை சூடி வந்த மறவர்கட்கு, அகவல் மகளிரால் யாழிசை விருந்து அளித்தானாம். அதாவது:- வளைந்த தண்டினையும் இசை பொருந்தும் நரம்பினையும் பத்தரையும் உடைய சீறியாழை எடுத்தணைத்து, குரல் குரலாக வரும் செம் பாலைப் பண்ணுடன், துத்தம் குரலாய படுமலைப் பாலை யும் அவ்வழியே செவ்வழிப் பாலை முதலியனவும் அழகிய இனிய குறிஞ்சிப் பண்ணும் ஆகியவற்றை அகவல் (பாடும்) மகளிர் பாடியது விருந்தாக இனித்ததாம். இது செவி விருந்து.

சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளுடன் அரண்மனை நிலா முற்றத்தில் வீற்றிருந்த பொழுது, ஆடலில் வல்ல கூத்தச் சாக்கையன் என்பவன், கொட்டிச் சேதம் (கொடு கொட்டி) என்னும் கூத்தை ஆடி மகிழ்வித் தானாம். இந்தக் கூத்து சிவனால் ஆடப் பட்டதாம். சிவன் ஆடியதில் உள்ள சிறப்பாவது: சிவன் தன் இடப் பாகத்தே உமாதேவியை வைத்துக் கொண்டே ஆடினானாம். அங்ஙனம் ஆடியபோது, உமாதேவியின் காலணியும், தோளணியும் நடுங்க (அசைய) வில்லை மேகலை ஒலி செய்யவில்லை-முலைகள் அசையவில்லை - காதணி குலுங்க வில்லை - கூந்தல் அவிழவில்லை -இத்தகைய திறமையுடன் சிவன் ஆடிய கூத்தை இங்கே சாக்கையன் ஆடினான்.

இதுகாறும் கூறப்பட்டுள்ள கலைகளைப் பற்றி ஆழ்ந்து எண்ணுங்கால் தலை சுற்றுகிறது. எந்தக் கலையிலும் திறமையில்லாத நிலையை நினைக்குங்கால் அச்சமும் நாணமும் போட்டி போடுகின்றன. இந்தக் கலை நுட்பங் களைப் புரிந்து கொள்வதே அரிதாயிருக்கையில் இவற்றில் திறமைக்கு இடமேது? இத்தகு கலை வல்லுநர்கள் சிலர் இன்றும் உள்ளனர். அவர்கள் போதிய அளவு சிறப்படையச் செய்ய வேண்டும். வயிற்றுப் பிழைப்பை மட்டும் கவனிப்பவர்கட்கும் பொருளீட்டும் பொறிகட்கும் (எந்திர மனிதர்கட்கும்) கலையாவது கத்தரிக்காயாவது? மேலும் புதிய கலைகளை ஆக்கி வளர்ப்பதோடு, பழைய கலை களையும் அழிய விடாமல் போற்றிப் பேண வேண்டுவது மக்களின் கடமையாகும்.
----------

12. சிலம்பில் போர்கள்

சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள போர்கள் சில, பல தலைப்புகளில் அங்கும் இங்குமாகக் குறிப்பிடப் பட்டிருப்பினும், அவற்றையெல்லாம் தொகுத்து இந்தத் தலைப்பின் கீழ்க் காணலாம்.

முசுகுந்தச்சோழன் அரக்கரோடு போர்செய்தான். தொடித்தோள் செம்பியன் வானில் தூங்கு எயில் எறிந்தான்.

கரிகால் சோழன் வடக்கே படையெடுத்துச் சென்று வடவரை வென்று இமயத்தைச் செண்டால் அடித்துப் புலிக்கொடி நாட்டி வந்தான்.

பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன் இளம் பருவத்திலேயே பகைவர் எழுவரை வென்றான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இமயமும் கங்கையும் வென்றான்.

ஒரு சேரன் கடலிலே பகைவரின் கடம்பு எறிந்து வென்றான்.

பொற்கைப் பாண்டியன் இந்திரன் முடிமீது வளை என்னும் படைக்கலத்தை எறிந்து தகர்த்தான்.

இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கே இமயம் வரை படையெடுத்துச் சென்று வென்று 'இமயவரம்பன்' என்னும் சிறப்புப்பெயர் பெற்று ஒரு மொழி வைத்து நாவலந் தீவு (இந்தியா) முழுமையும் ஆண்டான்.

சேரன் செங்குட்டுவன் கொங்கர் செங்களத்திலே களவேள்வி செய்தான்; தாயைக் சென்று எதிர்த்த படைகளை வென்று பகைவரை கங்கையில் நீராட்டச் வென்றான்; தன் மைத்துனச் சோழனாகிய கிள்ளியைப் பங்காளிச் சோழர்கள் ஒன்பதின்மர் நேரி வாயில் என்னும் இடத்தில் எதிர்த்தபோது அவர்களை வென்று மைத்துனனுக்கு அரசு நிலைக்கச் செய்தான்; மோகூரில் பழையன் என்பவனின் காவல் மரமாகிய வேம்பை வெட்டி வெற்றி வாகை சூடினான் வியலூரை வென்றான்; இடும்பில் என்னும் இடத்தில் கொடும்போர் புரிந்து பகைவரை வென்றான்.

மற்றும் செங்குட்டுவன், கனக விசயருடன் உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன்,சிங்கன், தனுத்திரன், சிவேதன் என்னும் வடபுல வேந்தர்கள் சேர்ந்து கொண்டு பொர எழுந்தபோது, அவர்கள் அனைவரையும் வென்று வீழ்த்தினான்; கனக விசயரின் முடிமேல் கண்ணகிக்குச் சிலை செய்யும் கருங்கல்லை ஏற்றிச் சுமக்கச் செய்து கொண்டு வந்தான்.

இவ்வாறு மன்னர்கள் புரிந்த போர்களேயன்றி,சிவன், திருமால், முருகன், கொற்றவை ஆகியோர் புரிந்த போர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.
ஒவ்வொரு போரையும் விரிப்பின் பெருகிப் பெருநூலாக விரியும்.
--------------

13. வாணிகம்

உள்ளூருக்குள்ளேயோ வெளியூருக்குள்ளேயோ உள் நாட்டுடனேயோ – வெளி-நாட்டுடனேயோ வாணிகம் இன்றி மக்களினம் வாழ முடியாது. எல்லாராலும்
எல்லாப் பொருள்களும் உண்டாக்க வியலாது. ஒவ்வொருவரும் உண்டாக்கிய பொருள்களை ஒருவர்க் கொருவர் 'பண்ட மாற்று' செய்து கொண்டனர் பழங்காலத்தில்.
பின்னர்ப் பண்ட மாற்று படிப்படியாகப் பல உருவம் பெற்றுவர, இறுதியில் இன்றுள்ள வணிக முறை தோன்ற லாயிற்று. சங்க காலத்திலும் அதைச் சார்ந்த காலத்திலும், உள் நாட்டில் காலால் நடந்து எடுத்து வந்தும் வண்டிகளில் ஏற்றி வந்தும் பொருள்கள் பண்டமாற்று செய்யப்பட்ட தல்லாமல், பிறநாடுகளிலிருந்து நீர் வழியாகக் கப்பல்கள் வாயிலாகவும் பொருள்கள் கொண்டு வந்து தரப்பெற்று மாற்றாக வேறு பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.

மனையறம் படுத்த காதை

பண்டைக் காலத்தில் சோழர்களின் தலை நகராகிய புகார் ஒரு பெரிய வாணிகக் களமாக (சந்தையாக) விளங்கிற்று. புதிய புதிய நாடுகளி லிருந்து பல்வேறு பண்டங்கள் கால் வழியாகவும் கப்பல் கொண்டுவரப் பெற்றுப் புகாரில் ஒருங்கு குவிக்கப் பட்டிருந்தனவாம். இது சிலம்பு - மனையறம் படுத்த காதையில்,

''அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்
ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவன ரீட்ட …. … (5-7)

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விருந்தின் தேஎம் = புதிய நாடுகள். ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு பொருள் மிகுதியாக உண்டாக்கப் படலாம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பொருளுக்குப் பெயர் பெற்றதா யிருக்கலாம். இத்தகைய பன்னாட்டுப் பண்டங்களும் புகாரில் ஒருங்கு குவிந்திருப்பதால், பல நாடுகளும் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து காணப்படுவது போன்ற தோற்றம் புகாரில் காணப் பட்டதாம்.

அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை

நால் திசைப் பொருள்கள்:

அந்தி மாலையில் நிலா முற்றத்தில் கோவலனும் மாதவியும், மற்ற மக்களும் இன்பப் பொழுது போக்கினர். அது காலை, மேற்குத் திசையிலிருந்து வந்த கண்டு சருக்கரையையும் கிழக்குத் திசையிலிருந்து வந்த கரிய அகிலையும் புகைக்காமல், வடதிசையிலிருந்து வந்த வட்டக் கல்லில் தென்திசையிலிருந்து வந்த சந்தனக் கட்டைகளை அரைத்துக் குழம்பாக்கிப் பூசிக்கொண்டனராம்:

"குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு
குணதிசை மருங்கின் காரகில் துறந்து,
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக.... (35-38)

என்பது பாடல் பகுதி.

குளிர் காலத்தில் அயிரும் (கண்டு சருக்கரையும்) அகிலும் புகைக்கப் படும். இந்தப் புகை திட்டமான வெப்பத்தோடு மணமும் தரும். வேனில் (வெயில்) காலத்தில் வட்டக் கல்லில்
சந்தனம் அரைத்துப் பூசிக்கொள்ளப் பெறும். வீடுகளில் சந்தனக் கட்டையைத் தேய்த்து அரைக்கும் வட்டக் கல் இருக்கும் என்பதை, எங்கள் வீட்டில் உள்ள கல்லைக் கொண்டே யானறிவேன். குளித்து விட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து, நடுவில் சந்தனச் சாந்துப் பொட்டு இட்டு, அதன் நடுவில் சிறிய அளவில் குங்குமப் பொட்டு வைப்பது இளமைக்காலச் செயல். இப்போது வீடுகளில் வட்டக்கல் அருகியுள்ளது.

ஈண்டு நெடுநல் வாடை என்னும் நூலில் உள்ள
"இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப" (56)

"வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கின் சாந்தொடு துறப்ப" (51,52)

என்னும் பகுதிகள் ஒப்பு நோக்கற் பாலன. சொல்லிச் செய்தாற்போல, இரு நூல்களிலும் இவை ஒத்துள்ளமை வியப்பு அளிக்கிறது.

மேலுள்ள பாடல் பகுதியால், மேற்கே யிருந்து அயிரும், கிழக்கேயிருந்து அகிலும், வடக்கிலிருந்து வட்டக் கல்லும், தெற்கிலிருந்து சந்தனக் கட்டைகளும் வரவும் விற்கவுமான வாணிகம் நடைபெற்றது என்பதை அறியலாம்.

புகார், கடற்கரையில்தானே இருந்தது. அதன் கிழக்கே கடலாயிற்றே
கிழக்கிலிருந்து அகில் எப்படி வரும்? என்னும் ஐயம் எழலாம். உள்நாட்டில் அகில் விளையும் இடத்திலிருந்து கிழக்கேயுள்ள கடல் வழியாகக் கப்பல்கள் கொண்டு வரலாம் அல்லவா? மற்றும் கடல் தாண்டிக் கிழக்கேயுள்ள வங்கக் கடலின் கீழ்பாலுள்ள
கீழ்பாலுள்ள நாடுகளி லிருந்தும் வரலாம் அன்றோ? மற்ற மூன்று திக்குகளி லிருந்து கடல் வழியாகக் கப்பல் வாயிலாக வரவேண்டும் என்பதில்லை - தரை வழியாகவே வரலாம்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

மருவூர்ப் பாக்கம்:

புகார் நகரில் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் என்னும் இரு பகுதிகள் இருந்தன.
புதுச்சேரியிலும், பிரெஞ்சுக்காரரின் ஆட்சியின்போது, வெள்ளைக்காரர் பகுதி, தமிழர் பகுதி என இரண்டு உண்டு. கடற்கரை ஓரமாக வெள்ளையர் பகுதியும் அதன் மேற்கே தமிழர் பகுதியும் இருக்கும். இப்போதும் அதற்குரிய அடையாளங்கள் உண்டு. இரண்டு பகுதிகளையும் இடையே ஒரு வாய்க்கால் பிரிக்கின்றது. வெள்ளைக்காரர் போன பிறகும், அவர் இருந்த பகுதி தூய்மையாக இருக்கிறது. தமிழர் பகுதி அவ்வளவு தூய்மையுடன் இருப்பதாகச் சொல்ல முடியாது. "அண்மையிலிருந்து சேய்மைக்குச் செல்லுதல்", நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குச் செல்லுதல், எளிமையிலிருந்து அருமைக்குச் செல்லுதல், "தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல்" என்னும் உளவியல் (Psychology) முறைப்படி புதுச்சேரியிலிருந்து புகாருக்குச் செல்லலாம்.

புதுச்சேரியின் கடற்கரையில் வெள்ளையர் பகுதி இருப்பது போலவே, புகாரில் பன்னாட்டார் தங்கியிருந்த மருவூர்ப்பாக்கம் என்னும் பகுதி இருந்தது. அதன் மேற்கே பட்டினப்பாக்கம் இருந்தது. பாக்கம் என்பது ஊரைக் குறிக்கும் சொற்களில் ஒன்று. பட்டினம் என்பது நகரைக் குறிக்கும். பட்டினப்பாக்கம் என்பது, பட்டணமாக உள்ள பெரிய ஊர் என்பதைக் குறிக்கும்.

இனி மருவூர்ப் பாக்கம் என்பது பற்றிக் காணலாம். மருவு + ஊர் = மருவூர். மருவுதல்
மருவூர். மருவுதல் = சேர்தல் கலத்தல். "மருவுக மாசற்றார் கேண்மை" என்னும் திருக்குறளிலும் (800) இந்தச் சொல் இந்தப் பொருளில் ஆளப்பட்டிருப்பதை அறியலாம். வெளிநாட்டினர் பலரும் வந்து மருவிய சேர்ந்த கலந்த ஊர்ப் பகுதி மருவூர்ப் பாக்கம் எனப் பட்டது. திருமணம் நிகழ்ந்ததும் மணமகன் மணமகள் வீட்டிற்கோ மணமகள் மணமகன் வீட்டிற்கோ முதல் முதலாகச் சென்று கலந்து உண்ணுதற்கு 'மருவுண்ணுதல்' என்னும் வழக்கு தென்னார்க்காடு மாவட்டப் பகுதியில் உண்டு. இரு வீட்டாரையும் 'சம்பந்திகள்' எனக் கூறுவது உண்டு. 'சம்பந்திகள்' என்னும் வடமொழிப் பெயருக்குப் பதிலாக, 'மருவினோர் -மருவினவர்' என்னும் தமிழ்ச் சொல்லால் குறிப்பிடுவது சால அழகுடைத்து.

மருவூர்ப்பாக்கத்தில் இருந்தவை

காண்போரைப் போக விடாமல் தடுக்கும் அழகிய பயன் நிறைந்த யவனர் இருக்கை - பல நாடுகளிலிருந்து கப்பலில் பல்வேறு பண்டங்களை ஏற்றி வந்தவர்கள் தங்கும் இருப்பிடம் - வண்ணக் குழம்பும் சுண்ணமும் சாந்தமும் (சந்தனமும்) பூவும் புகைக்கும் பொருள்களும் நறுமணப் பொருள்களும் ஆகியவற்றைப் பலர் கூவித் திரிந்து விற்கும் தெருக்கள் - அளவிட முடியாத உடை வகைகள், மணி வகைகள்,கூல (தானிய) வகைகள், உண்ணும் பொருள்கள் மீன், இறைச்சி, உப்பு, வெற்றிலை, இன்னும் பல்வேறு பொருள்கள் விற்கப்படும் பகுதிகள், பல்வேறு தொழில் வல்லுநர்கள் இருக்கும் இடங்கள் முதலியன மருவூர்ப் பாக்கத்தில் இருந்தன. பாடல்:

"கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்,
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்ணருஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வளை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண வினைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்......' (9-27)

(காழியர் = பிட்டு வாணிகர். கூவியர் = அப்பம் சுடுவோர். பாசவர் = வெற்றிலை விற்பவர். ஓசுநர் = எண்ணெய் விற்பவர்.) என இன்னும் நீளமாக இளங்கோ பாடிச் சென்றுள்ளார். சீனம், அரபு நாடுகள், கிரேக்கம், எகிப்து, உரோம் முதலிய வெளி நாட்டார்கள் யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடப்படுவர்.

மேற் காட்டியுள்ள பாடல் பகுதியைக் கொண்டு, புகார் நகரில் நடைபெற்ற வணிக வளத்தைத் தெளியலாம்.

விற்பனைக் கொடி

பல்வேறு நாடுகளிலிருந்து கப்பல்களின் வாயிலாகப் பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்த வணிகர்கள், கடல் கரையில் உள்ள வெண் மணல் பகுதியில் பொருள்களைப் பரப்பி விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு பொருளையும் அறிவிக்கும் - அறிவிப்புக் கொடிகளை அவ்வப் பொருள்கள் குவிக்கப்பட்டிருக்கும் பகுதியில் நட்டு விற்பனை செய்யப்படுகிறதாம்.

"கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
கூல மறுகில் கெடியெடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்கு......" (130-133)

என்பது பாடல் பகுதி. இந்தக் காலத்தில் வணிகர்கள் சிலர், அகல - நீள வாட்டமுள்ள துணியில் எழுதி விளம்பரப் படுத்தி விற்பனை செய்கின்றனர். துணியின் வாயிலாக விளம்பரப்படுத்தும் வழக்கு அந்த நாளிலும் இருந்ததாகத் தெரிகிறது. இப்பகுதியில் உள்ள 'மாலைச் சேரி' என்பது நோக்கற்பாலது. மாலை = ஒழுங்கு. சேரி என்பது, ஒவ்வொரு பொருளும் விற்கும் ஒவ்வொரு பகுதியையும் குறிக்கும்.

இவ்வளவு சிறப்புடன் திகழ்ந்த காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டது வேதனைக்கு உரியது. இதுகாறும் சோழரின் புகார் நகர வணிக வளம் இடம் பெற்றது. அடுத்து, பாண்டியரின் மதுரை நகரின் வணிக வளம் காணலாம்.

ஊர் காண் காதை

மதுரை மாநகரின் புறஞ்சேரியிலே (புறநகர்ப் பகுதியில்) கண்ணகியைக் காக்குமாறு கவுந்தியிடம் ஒப்படைத்துவிட்டுக் கோவலன் மதுரையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். அவன் கண்ட வணிகப் பகுதிகள் இவண் வருமாறு:- ஒன்பான் மணிகள் (நவரத்தினங்கள்) விற்கும் கடைத்தெரு- கொடி கட்டி விளம்பரம் செய்து பொன் விற்கப்படும் பகுதி-பருத்தி நூலாலும் பட்டு நூலாலும் பல் வகை மயிர்களாலும் நெய்யப்பட்ட பல்வேறு வகை ஆடைகள் விற்கும் பகுதி-மிளகுப் பொதியுடனும் நிறுக்கும் துலாக் கோலுடனும் ஓரிடத்தில் நில்லாது நேரம் பாராது கூலங்களைச் (தானிய வகைகளைச்) சுமந்து திரிந்து விற்கும் பகுதிகள் - இன்ன பிற வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகள் ஆகியவற்றையும் மற்றுமுள்ள நகர்ப் பகுதிகளை யும் கோவலன் சுற்றிப் பார்த்தான்:

“வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப்
பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும்,
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஒங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்குஅஞர் ஒழித்தாங்கு
இலங்குகொடி எடுக்கும் நலங்கிளர் வீதியும்
நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூறு அடுக்கத்துக்
நறுமடி செறிந்த அறுவை வீதியும்,
நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர்
அம்பண அளவையர் எங்கணும் திரிதரக்
காலம் அன்றியும் கருங்கறி மூடையொடு
கூலம் குவித்த கூல வீதியும்...." (199-211)

என்பது பாடல் பகுதி. ஒன்பது மணிகளின் இயல்பை ஆராய்ந்து அறிபவர் இருக்கும் கடைத் தெருவில் பகைவர் வருவார் என்ற அச்சமே இல்லையாம். அவ்வளவு காவல் உள்ள பகுதி அது.

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நால்வகையான பொன் கட்டிகளை விற்பவர், கொடி கட்டி விளம்பரம் செய்து விற்பராம்.

இந்தக் காதையில், ஒன்பது மணிகளின் இயல்புகளும் அவற்றை ஆராய்ந்து காணுவோரின் பொருளறிவும் விளக்கப்பட்டுள்ளன. மதுரை பற்றிய தலைப்பில் வாணிகம் பற்றி இன்னும் விரிவாகக் காணலாம்.
பண்டைக் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற வாணிக வளத்தை நோக்கின் பெரு வியப்பு தோன்றுகிறது.
------------

14. பழக்க வழக்க மரபுகள்

சிலப்பதிகாரக் காலத்தில் மக்களிடையே நிலவி வந்த பழக்க வழக்கங்கள் அதாவது மரபுகள் சிலவற்றை அந்நூலில் கூறியுள்ளாங்குக் காணலாம்.

தலைக்கோல் நகர்வலம் வந்து வழிபாடு ஆற்றிய பின்னரே கணிகையரின் முதல்
நடன அரங்கேற்றம் தொடங்கப்பெறும். (அரங்கேற்று காதை):

"வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் (3:120)
....
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்து" (3:128)

ஒரு மாளிகையில் புகும்போதோ திருமண வீட்டில் முதலில் செல்லும்போதோ பெண்கள் வலக்காலை முதலில் எடுத்து வைப்பர். மாதவி அரங்கத்தில் வலக்காலை முதலில் வைத்து ஏறினாள்.

"வலக்கால் முன்வைத்து ஏறி அரங்கத்து' (3:131)

கனா - நிமித்தங்களில் நம்பிக்கை உண்டு. கனாத் திறம் உரைத்த காதை என ஒரு காதையே உள்ளது.

"கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன" (5:27)

இதனால் நிமித்த நம்பிக்கை உண்டென அறியலாம். மாதவி புணர்ச்சியில் இருந்ததால் அவள் கண்கள் செங்கண்களாகக் கூறப்பட்டன.

படை மறவர்கள் தம் வேந்தன் வெற்றி பெறுவதற்காகத் தம் உயிரைப் பலி கொடுப்பது உண்டு:

"வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து'' (5:85-87)

குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் பிறப்புத் தீட்டு கழித்துப் பின் பெயர் சூட்டு விழா நடத்துவர். மாதவிக்கு மணிமேகலை பிறந்தபின், இவ்வாறு நடைபெற்றது. பாடல்:

"மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து
வாலாம் ஐந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுதும் என்று... (15:22-26)

என்பது பாடல் பகுதி.

யானைக்கு முன்னே, யானை வருகிறது என்று மக்களை விழிப்பாயிருக்கச் செய்யப் பறை அறைந்து அறிவிப்பது உண்டு:

"அரசுஉவா தடக்கையின் பரசினர் கொண்டு
முரசு எழுந்து இயம்ப" (3:124, 125)

"பாகுகழித்து யாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையின் கைக்கொள" (15:46, 47)

ஒரு சிலர்க்கு ‘எட்டி' என்னும் பட்டம் அளிப்பது உண்டு: சாயலன் என்பவன் எட்டிப் பட்டம் பெற்றவன்.

சிலர் உள்ளத்தில் பெருந்துயருற்றுச் சோர்ந்திருக்கும் போது, யாராவது அவர்களைப் பார்த்து 'ஏன் என்னவோ போல் இருக்கிறீர்கள்?' என்று கேட்கின், "ஒன்றுமில்லை, இலேசா தலையை வலிக்கிறது" என்று பொய் சொல்லி வைப்பர். பாண்டியன் நெடுஞ்செழியன், நாடக மகளிரின் ஆடல் பாடல்களில் ஈடுபட்டு அவர்களால் உள்ளங் கவரப் பட்டுள்ளான் எனக் கோப்பெருந்தேவி அவன்மேல் ஊடல் கொண்டாள். ஆனால், அந்த ஊடலை வெளிக்காட்டாமல், தனக்குத் தலையை நோவதால் என்னவோபோல் இருக்கிறேன் என்று சொன்னாளாம். மக்களிடையே இது போன்ற பழக்கம் உண்டு தானே! அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்கும் காரணப் பட்டியலில் தலை நோவும் ஒன்றல்லவா? இதை அரசியும் பின்பற்றியுள்ளாள். பாடல்:

"கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடல் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவலன் உள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்
குலமுதல் தேவி கூடாது ஏக்" (16:131-136)

தெய்வத்திற்குப் பலியிடல் அன்றே இருந்தது. பத்தினிப் பெண்டிரை வணங்குதல் முதலாகப் பல்வேறு தெய்வ வணக்கம் அன்றே இருந்தது. சமணமும் புத்தமும் பெருவாரியாகப் பின்பற்றப் பட்டன.

ஊழ்வினை நம்பிக்கையும் பழம் பிறவி நம்பிக்கையும் நிரம்ப இருந்தன என்பது வேறு தலைப்பில் விரிவாக விளக்கப் பட்டுள்ளன. பூதம் பேய் பிசாசு நம்பிக்கையும் உண்டு. தீயன செய்பவரைப் பூதம் அறைந்து உண்ணும் நம்பிக்கையும் இருந்தது. "பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும்" (5:134) என்பது பாடல் பகுதி.

பரத்தமைத் தொழில் அன்றே இருந்தது. விழாக் காலங்களில் ஆடவரும் மகளிரும் இன்பத்துடன் திரிந்து பொழுது போக்குவராம்.

பல சமயங்கள் இருந்தும், பலர் சமய வேறுபாடு இன்றி நடந்துகொண்டனர். கோவலன் கண்ணகியுடன் புகாரை விட்டுப் பிரிந்த வேளையில், திருமால், புத்தர், அருகர் ஆகியோரின் கோயில்களை வணங்கிச் சென்றானாம்.

"அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து'' (10:9, 10)

'பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி (10:11)
இந்திர விகாரம் ஏழுடன் போகி" (10:14)
"ஐவகை நின்ற அருகத் தானத்து (10:18)
இலகொளிச் சிலாதலம் தொழு துவலங்கொண்டு" (10:25)

என்பன பாடல் பகுதிகள். முன்னது வைணவம். நடுவனது புத்தம். மூன்றாவது சமணம். கோவலனுக்குச் சமய வேறுபாடு இல்லை என்பது தெரிகிறது.

மற்றும் ஒன்று: சேரன் செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் போருக்குப் புறப்பட்டபோது, வஞ்சியில் உள்ள சிவன் கோவிலை வணங்கி, அங்கே தந்த பூமாலையைத் தலையில் சூடிக் கொண்டானாம். பின்னர் திருமால் கோயிலுக்கு வந்தபோது, அங்கே தந்த பூமாலையைச் (சேடம்) தோளில் சூடிக்கொண்டானாம். இச்செய்தியைக் கால்கோள் காதையில் காணலாம்.

கோவலன் கண்ணகி ஆகியோர்க்குத் திருமணம் நடைபெற்ற முறை ஒருவிதமானது. கண்ணகிக்குப் பன்னிரண்டாண்டு (ஈராறு ஆண்டு அகவையாள்) அகவை யிலும், கோவலனுக்குப் பதினாறாவது (ஈரெட்டு ஆண்டு அகவையாள்) அகவையிலும் திருமணம் நடைபெற்றதாம். தொல்காப்பிய உரையாசிரியர்களும் இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர்:

தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியலில் உள்ள "பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு" (25) என்று தொடங்கும் நூற்பாவின் உரையில், பேராசிரியர், "யாண்டு என்பது ஒத்தவாறு என்னையெனின், பன்னீர் யாண்டும் பதினாறு யாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் (முதிரும்) பருவம் என்பது என எழுதியுள்ளார்.

இளம்பூரணர், (களவியல் - 2) "ஆண்டு என்பது ஒத்த பருவத்தராதல். அது குழவிப் பருவம் கழித்து பதினாறு பிராயத்தானும் பன்னிரண்டு பிராயத்தாளும் ஆதல்' என்று உரை எழுதியுள்ளார்.

இந்தக் காலத்தில் திருமண அகவை பெண்ணுக்குப் பதினெட்டின் கீழும் ஆணுக்கு இருபத்தொன்றின் கீழும் இருத்தலாகாது எனச் சட்டம் வகுத்துள்ளனர். அந்தக் காலத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்றது. அண்ணல் காந்தியடிகள் தமது குழந்தைத் திருமணத்தைப் பற்றிக் கூறுகையில், எனக்கு விளையாடுவதற்கு ஒரு சிறுமியைச் சேர்த்து வைத்தனர் என எண்ணினேன் என்று கூறியதாக எதிலோ படித்த நினைவு உள்ளது. குழந்தைத் திருமணம் பார்ப்பனரிடையே கட்டாயமாக அன்று இருந்தது. அது மற்ற இனத்தாரையும் நாளடைவில் தொற்றிக் கொண்டது இப்போதோ, முப்பத்தைந்து அகவை நிறைந்த இளங் கிழவிகள் சிலர்க்கு மாப்பிள்ளை கிடைப்பது அரிதாயுள்ளது. அந்தோ, கொடியது மக்கள் குழு!

சிலப்பதிகார மணமக்களின் பெற்றோர்கள் மா பெருஞ் செல்வராதலின், யானையின்மேல் பெண்களை ஏற்றி நகரைச் சுற்றி வந்து திருமணச் செய்தியை அறிவிக்கும்படி ஏற்பாடு செய்தார்களாம்.

"யானை எருத்தத்து அணியிழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்" (1:43, 44)

என்பது பாடல் பகுதி. அந்தக் காலத்து மேட்டுக் குடி மக்களிடையே இந்த மரபு இருந்தது. இப்போது நடக்குமா?

திங்கள் உரோகிணி விண்மீனுடன் சேர்ந்திருக்கும் நாள் நல்லநாளாம். அந்த நாளில் திருமணம் நடைபெற்றதாம். அசுவனி முதலிய இருபத்தேழு விண்மீன்களுள் உரோகிணியும் ஒன்று. இவை தக்கன் பெண்மக்களாம். இந்தப் பெண்களைத் திங்கள் மணந்து கொண்டானாம். இப்பெண் களுள் உரோகிணி என்னும் மனைவிமேல்தான் திங்களுக்குக் காதல் மிகுதியாம். இதனால் தக்கன் திங்கள்மேல் சினம் கொண்டானாம். இது புராணக்கதை. இதை வானநூல் புலமையுடன் நோக்கின் நிலைமை புரியும்.

கோவலனும் கண்ணகியும், மா முது பார்ப்பான் மறை வழி காட்டிடத் தீ வலம் செய்து திருமணம் செய்து கொண்டனராம். சாந்து, புகை, சுண்ணம், விளக்கு, பாலிகை முளை முதலியன பெண்கள் எடுத்தனராம். மற்றும் மடந்தையர் வாழ்த்தி அருந்ததி அனைய கண்ணகியை அமளி ஏற்றினராம்.

'தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார்" (1:62-64)

என்பது பாடல் பகுதி. அமளி ஏற்றினார் என்பதற்கு அமளியில் ஏற்றினார் என்று மட்டுமே உரையாசிரியர்கள் எழுதியுள்ளனர். நான் (சு.ச.) அச்சத்தோடு ஒரு கருத்து சொல்கிறேன்: திருமண நாள் அன்றிரவே அமளியில் படுக்கையில் ஏற்றி 'முதலிரவு' நடத்தச் செய்தனர் என்று சொன்னால் என்ன? அங்ஙனம் இல்லையெனில், இருக்கையில் அமரச் செய்தனர் என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அமளி என்பது படுக்கை யாயாயிற்றே. முதலிரவில் பெண் கூச்சப்பட்டுக் கொண்டு தயங்குவாள் ஆதலின், 'ஏற்றினர்' என்றார்.

திருமண நாளன்றே முதலிரவு நடத்தும் பழக்கம் சில குடும்பங்களில் உண்டு சில குடும்பங்களில் இல்லை. மணமானதும், மணமக்களைப் பலநாள் காக்க வைத்துப் 'பத்தியம்' பிடிக்கச் செய்யாமல் முதல்நாளே ஒன்று சேர்ப்பது நல்லது என்பர் சிலர். சிலநாள் பழக வைத்துக் கூச்சம் தெளிந்தபின் இணைப்பது நல்லது என்பர் சிலர். சில மணமக்கள், பெரியோர்கள் நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செய்வதற்கு முன்பே, அவர்கள் அறியாதபடி நேரடி நடவடிக்கையில் இறங்கிவிடுவதும் உண்டு. சில குடும்பங்களில் முதலிரவுக்கு நல்ல நாள் பார்த்து விருந்து ஓம்பி ஒரு விழாவே நடத்துவது உண்டு.

கோவலன் கண்ணகி திருமணம் நடைபெற்றது தொடர்பாக ஒரு சிக்கல் உண்டு. ஐயரை வைத்து நெருப்பு மூட்டிச் சடங்குகள் செய்து திருமணம் நடத்தியதாகச் சிலம்பு சொல்கிறது. இது ஆரிய முறை தமிழ் முறை இன்னதன்று ஆரிய முறையை ஒழிக்க வேண்டும் என்கின்றனர் சிலர். சிலப்பதிகாரத்திலேயே சொல்லப் பட்டிருப்பதால் அந்த (ஆரிய) முறையில் செய்யலாம் என்கின்றனர் சிலர்.

ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொரு பழக்கம் இருக்கலாம். சிலப்பதிகாரத்தில் சொல்லியிருப்பதனால், தமிழர்கள் அனைவரும் அந்தக் காலத்தில் ஆரிய முறையைப் பின் பற்றினர் என்று கூறமுடியாது. 1960-ஆம் ஆண்டு,பெரியார் மாவட்டத்திலுள்ள எலுகான்வலசு என்னும் ஊரில் ப. சாமியப்பன் என்பவருக்கு யான் (சு.ச.) தலைமை தாங்கித் திருமணம் செய்து வைத்தேன். பழைய பழக்கம் எப்படி என்று அங்கு வினவியபோது, எங்கள் பக்கத்தில் மரபு வழி மரபு வழியாகப் பரம்பரையாகப்) பார்ப்பனரை வைத்துத் திருமணம் நடத்துவதில்லை - தமிழ்ப் பெரியவர் ஒருவரைக் கொண்டே நடத்துவது வழக்கம் என்றனர். 1969-ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குருந்தம்பட்டு என்னும் ஊரில் குமர. ஞானபூரணம் என்பவருக்கு யான் தலைமை தாங்கித் திருமணம் நடத்தி வைத்தேன். அங்கே விசாரித்தபோதும், வழி வழியாகத் தமிழ்ப் பெரியாரைக் கொண்டே திருமணம் நடத்துவது வழக்கம் என்றனர்.

எனவே, சிலப்பதிகாரம் சொல்வது ஒரு சாராரின் வழக்கமாயிருக்கலாம். அனைவரையும் அது கட்டுப் படுத்தாது.

அடுத்து - மேலும் சில: கடைகளில், இன்ன பொருள் இங்கே விற்கும் என்பதை அறிய அறிவிப்புக் கொடிகள் கட்டிவைப்பது உண்டு,

"பொலந்தெரி மாக்கள் கலங்கஞர் ஒழித்தாங்கு
இலங்கு கொடிஎடுக்கும் நலங்கிளர் வீதி" (14:203, 204)

வணிகம் செய்யும் யவனர் முதலிய அயல்நாட்டினர் தமிழகத்தில் நிரம்ப இருந்தனர்.

ஒன்றை வலம் வருபவர்கள் மூன்று முறை வலம் வருவது அக்காலத்தும் உண்டு, செங்குட்டுவன் கண்ணகிக் கோட்டத்தை மும்முறை வலம் வந்தானாம்.

''வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி
உலக மன்னவன் நின்றோன் முன்னர்" (30:155, 156)

ஆடவர் கோவேறு கழுதைமேல் ஊர்ந்து செல்லும் பழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. கோவலன் இதன்மேல் ஊர்ந்து கடற்கரைக்குச் சென்றதாகக் கடலாடு காதையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"வான வண்கையள் அத்திரி ஏற" (6:119)

அத்திரி = கோவேறு கழுதை. இதைக் குதிரை வகை களுள் ஒன்று என்றும் கூறுவர். சில ஊர்க் குதிரைகள் கழுதைகள் போலவே இருக்கும். அத்தகையதோ இது!

கோவலன் தான் கண்ட கனவை மாடலனிடம் கூறி, இரவின் பிற்பகுதியில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுகிறார்களே அவ்வாறு தனக்கு ஏதேனும் தீங்கு வருமோ என அஞ்சுகிறான்.

"நனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதுஈங்கு உறும்என” (15:105, 106)

நள்ளிருள் யாமம் என்பதற்குக் கடையாமம் எனச் சிலர் பொருள் எழுதியுள்ளனர். கடிது உறும் என்றால், விரைவில் பலித்து விடும் என்பதாம். நள்ளிருள் யாமம் என்பதற்கு நேர்ப் பொருள் கடையாமம் என்பதாகாது. கடிது உறும் என்பதைக் கொண்டு கடை யாமம் எனப் பொருள் கொண் டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அகச்சான்று கனா நூலில் உள்ளது. முதல் சாமத்தில் கண்ட கனவு ஓராண்டில் பலிக்குமாம். இரண்டாம் சாமத்தில் கண்டது எட்டுத் திங்களில் (எட்டு மாதத்தில்) பலிக்குமாம். மூன்றாம் சாமத்தில் கண்டது மூன்று திங்களில் பலிக்குமாம். கடை யாமமாகிய நான்காம் சாமத்தில் கண்ட கனவோ பத்தே நாளில் பலித்து விடுமாம்.

'படைத்த முற்சாமம் ஓராண்டில் பலிக்கும், பகர் இரண்டே
கிடைத்த பிற்சாமம் மிகுதிங்கள் எட்டில் கிடைக்கும் என்றும்,
இடைப்பட்ட சாமமோர் மூன்றினில் திங்களோர் மூன்றென் பவால்;
கடைப் படுஞ்சாமமும் நாள் பத்துளே பலம் கைபெறுமே" (3)

என்பது கனா நூல் பாடல். கடையாமமாகிய நான்காம் யாமம் என்பது வைகறை மூன்று மணியிலிருந்து ஆறு மணி வரையிலுமாம். கடிது உறும் என்று இருப்பதைக் கொண்டு, அது கடையாமமாயிருக்கலாம் என்று எண்ணி நள்ளிருள் யாமம் என்பதற்குக் கடையாமம் எனப் பொருள் வரைந்து உள்ளனர் என்று தோன்றுகிறது.

மகிழ்ச்சியான சூழ்நிலையில் மன்னர்கள் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதும் வரி நீக்கம் செய்வதும் உண்டு. வெற்றி வாகை சூடிய செங்குட்டுவன் இவ்வாறு செய்தானாம்.

''சிறையோர் கோட்டம் சீமின் யாங்கணும்
கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்மென
அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை
முழங்கு நீர்வேலி மூதூர் ஏவி" (28:203-206)

அழும்பில் வேளையும் ஆயக்கணக்கரையும் ஏவி இவ் வாறு செய்வித்தானாம். இது நடுகல் காதையில் அறிவிக்கப் பட்டுள்ளது. பாண்டியனும் இவ்வாறு செய்ததாகக் கட்டுரை காதையில் சொல்லப்பட்டுள்ளது.

'சிறைப்படு கோட்டம் சீமின் யாவதும்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்”(23: 126,127)

மற்றும் ஒருவகை மரபு:- கணவர்க்கு உணவு இடும் போது அவன் கால்களைத் தூய்மை செய்தலும், இலை போடுமுன் தரையில் தண்ணீர் தெளித்தலும் உண்டு. கோவலனுக்கு உணவு இடும் போது கண்ணகி இவ்வாறு செய்தாளாம். வணிக மரபினர் உண்ணுமுன் சில சடங்குகள் செய்வராம்.

"கடிமலர் அங்கையின் காதலன் அடிநீர்
சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி" (16:38, 39)

தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி (16:41)

அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்
உரிய மருங்கின் ஒருமுறை கழித்து..." (16:44,45)

பெண்கள் மேல் தெய்வம் ஏறி (சாமியாடி) ஏதேதோ கூறுவது உண்டு. வேட்டுவர் குடியில் இறை பூசனை செய்யும் சாலினி என்பவள் மீது தெய்வம் ஏறிய செய்தி வேட்டுவ வரியில் கூறப்பட்டுள்ளது.

"பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மலர் நிறுத்து...(12:7,8)
நடுவூர் மன்றத்து அடிபெயர்த்து ஆடி" (12:11)

மற்றும் தேவந்தி மீது பாசண்டச் சாத்தன் என்னும் தெய்வம் ஏறிப் பேசியதாக வரந்தரு காதையில் சொல்லப் பட்டுள்ளது.

'தெய்வம் உற்றெழுந்த தேவந்திகைதான்
கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன் (30:45, 46)

பாசண்டன் யான் பார்ப்பனி தன்மேல்
வந்தேன் என்றலும்' (30:69,70)

இது பாசண்டச் சாத்தன் தேவந்தி மீது ஏறிச் செங்குட்டுவனிடம் சில சொல்லிய பகுதி. மற்றும், தேவந்தி மேல் கண்ணகி ஏறி இளங்கோ அடிகட்குச் சில கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி" (30:172)

கண்ணகி தேவந்தியின் வாயால் பல கூறியதாக இந்தப் பகுதியில் ஒரு செய்தி உள்ளது.

இவ்வாறு தெய்வம் ஏறிச் சாமியாடிக் குறி சொல்லும் செயல் இக்காலத்திலும் தொடர்கின்றது. சாமியாடுவளிடம் பலர் குறி கேட்பார்கள்; சாமியாடுபவள் தன் மனம்போன போக்கில் ஏதேதோ கூறுவாள். அன்பர்கள் கேட்கும் குறிக்குப் பதில் சொல்ல முடியாவிட்டால், "அடேய், என்னைச் சோதிக்கிறாயா -ஆமாம் அடேய் என்னைச் சோதிக்கிறாயா? - நான் மலை ஏறப் போறேன்டா-நான் மலை ஏறப் போறேன்டா என்று கூறி மலையேறி விடுவதும் உண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப உணர்ச்சி வயப்பட்டுச் சிலர் சாமியாடுவது ஒருவகை (இசுதீரியா என்னும்) நோய் என்று அறிவியலார் கூறுவதாகத் தெரிகிறது. இது குறித்து மேலும் ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வரமுடியும்.

மற்றொரு மரபையும் இவண் சொல்லாமல் விடுவதற்கு இல்லை. பெரியோர்களிடமோ -மன்னரிடமோ ஒருவர் ஏதேனும் சொல்லத் தொடங்கின் முதலில் வாழ்த்து கூறுவது வழக்கம். சொல்லி முடித்தபின் இறுதியிலும் வாழ்த்து கூறுவதும் உண்டு. சிலப்பதிகாரத்தில் இந்த மரபு சில இடங்களில் பின்பற்றப்பட்டுள்ளது.

வழக்கு உரைக்கக் கண்ணகி வந்திருப்பதைப் பாண்டிய மன்னனிடம் அறிவிக்க வந்த வாயில் காப்பாளன் முதலில் "வாழிஎம் கொற்கை வேந்தே வாழி" (20:30) என்று வாழ்த்து சொல்லியே பேச்சைத் தொடர்ந்தான்.

தேவந்தி செங்குட்டுவனிடம் மணிமேகலையைப் பற்றிச் சொல்லத் தொடங்குமுன்,

''கோமகன் கொற்றம் குறைவின் றோங்கி
நாடு பெருவளம் சுரக்க” (30:6,7)

என வாழ்த்தினாள்.

மலைவாழ் மக்கள் செங்குட்டுவனிடம் கண்ணகியைப் பற்றிக் கூறத் தொடங்கியபோது,

"ஏழ்பிறப்பு அடியேம் வாழ்க நின்கொற்றம்" (25:56)

என்று வாழ்த்திச் செய்தியைக் கூறி, முடிக்கும் போதும்

"பன்னூ றாயிரத் தாண்டு வாழியர் (25:63)

என்று வாழ்த்தி முடித்தனர். பன்னூறாயிரத்து ஆண்டு = பல இலட்சம் ஆண்டு. இலட்சம் என்னும் வடமொழி எண்ணுப் பெயருக்கு நேரான தமிழ்ப் பெயர் 'நூறாயிரம்' என்பது.

மாடலன் செங்குட்டுவனிடம் முன் நடந்ததைக் கூறத் தொடங்குமுன்

"மன்னவர் கோவே வாழ்க என்று ஏத்தி" (30:118)

என்று வாழ்த்தி, முடிக்கும் போதும்

''ஊழிதோ றூழி உலகம் காத்து
நீடு வாழியரோ நெடுந்தகை" (30:145,146)

என்று வாழ்த்தி முடித்தானாம்.

மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் செங்குட்டுவனிடம் மதுரையில் நடந்ததைக் கூறி முடிக்கும் போது

"ஒழிவின்று உரைத்து ஈண்டு ஊழி ஊழி
வழிவழி சிறக்கநின் வலம்படு கொற்றம்" (25:91,92)

என்று வாழ்த்தி முடித்தாராம். வில்லவன் கோதை செங்குட்டுவனிடம் செய்தி கூறத் தொடங்குமுன் சேரனை வாழ்த்தித் தொடங்கினானாம்:

"பல் யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென
வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும்” (25:150, 151)

என்பது பாடல் பகுதி. அரசனிடம் பேசும்போது மட்டுமன்று; அரசனது கட்டளையைப் பறையறைந்து சொல்லும் போதும் அரசனை வாழ்த்துவது மரபு:

வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோ றூழி உலகம் காக்க" (25:181,182)

என்று பறையறைந்தோர் வாழ்த்திப் பின்னரே செய்தியை அறிவித்தனராம். இவ்வாறு அரசர்களை வாழ்த்துவது ஒரு மரபு.

இந்த இடத்தில், யான் (சு. ச.) சிறுவனாய்ப் பள்ளியில் படித்தபோது வகுப்பு தொடங்குவதற்கு முன் பாடிய

"வாழ்க வாழ்கவே ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்
வாழ்க வாழ்கவே'
என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது. எல்லாம் காலத்தின் கோலம்!

மற்றும் ஓர் அரிய மரபு சிலம்பிலிருந்து தெரியவருகிறது. ஆடல் பாடலில் வல்ல கணிகையர் குலத்து மங்கை ஒருத்தி, முறைப்படி அரசன் முன்னே தனது கலையை அரங்கேற்றம் செய்த பின்பே, அவள் யாரையாவது வரித்துக் கொள்ளவோ
கலையுலக வாழ்வில் ஈடுபடவோ உரிமை உடையவள் ஆவாள் - என்பது போன்ற ஒரு வகை மரபு இருந்ததாகத் தெரிகிறது. மாதவி அரங்கேற்றம் செய்த பின்பு, அரசன் கொடுத்த மரகத மாலையை விலைக்கு வாங்குபவர் தன்னை அடையலாம் என்று கூறி மாலையைத் தன்தோழி ஒருத்தியின் வாயிலாகக் கடைத்தெருவுக்கு அனுப்பினாள். அங்கே திரிந்து கொண்டிருந்த கோவலன் மாலையை விலைக்கு வாங்கி மாதவியை அடைந்தான் என்பது முன்னரே அறிந்த செய்தி. 'மானம் கப்பல் ஏறிற்று' என்று சொல்வர், அந்த அளவுக்குப் போகாமல், மாதவி கோவலன் : ஆகியோர் மானம் கடைத்தெரு ஏறியுள்ளது இது ஒரு பண்பாடு அற்ற நாகரிகம் அற்ற முறையாகும்.

மணிமேகலைக் காப்பியத்திலும் இந்த ஆடல் மரபு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. புகாரில் நடைபெற்ற இந்திர விழாவிற்கு மாதவியும் மணிமேகலையும் ஏன் வரவில்லை என ஊரில் மக்களிடையே அலர் எழுந்தது.

''மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர” (2:4, 5)

என்பது மணிமேகலைப் பாடல் பகுதி. மாதவியின் தாய் சித்திராபதி, வயந்த மாலையை நோக்கி, நீ மாதவிபால் சென்று ஊரில் ஒரே அலராயிருக்கிறது என்று கூறி அழைத்து வா என்றாளாம்;

"வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப்
பயங்கெழு மாநகர் அலர்எடுத்து உரையென' (2:8,9)

என்பது பாடல் பகுதி. இரட்டைக் காப்பியங்களாகிய சிலப்பதிகாரத்தாலும் மணிமேகலையாலும் இப்படியொரு மரபு இருந்தது புலனாகிறது. இந்தக் காலத்திலும், இதை விடக் குறைந்த அளவில் இம்மரபு எங்கெங்கோ பின்பற்றப் படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் அரசெதிரே அரங்கேற்ற வேண்டுமெனில், இந்தக் காலத்தே பெருந்தலைவர் யாராவது ஒருவர் முன் நடைபெறுகிறதாம். போகப்போக இதுவும் குறைந்து - பின் அறவே நீங்கிவிடும். காலம் மாறும் தன்மையது.

முடங்கல்

இந்தக் காலத்தில் முடங்கல் (கடிதம்) அஞ்சல்துறை வாயிலாகத் தொலைவையும் நேரத்தையும் வென்று விடுகிறது. பிறகு தொலைபேசி - பின்பு தொலைக் காட்சி இப்படியாகக் கருத்துப் பரிமாற்றம், ஒரே நேரத்தில் இடையீடு இன்றி உடனுக்குடன் நடைபெறுகிறது. அறிவியலின் திருவிளையாடல் இது. தமிழ் இலக்கியங்களுள் சிலப்பதிகாரத்தில் தான் முடங்கல் எழுதும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மாதவி, வயந்த மாலை வாயிலாகவும் கோசிகன் வாயிலாகவும் இருமுறை கோவலனுக்கு முடங்கல் அனுப்பினாள். இந்த மரபு அந்தக் காலத்திலேயே தொடங்கப்பட்டது.

பத்தினி வழிபாடு

தமிழ் நூல்களுள் சிலப்பதிகாரத்தில் தான் பத்தினி வழிபாடு முதல் முதல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது எனக் கூறலாம்போல் தோன்றுகிறது. நடுகல் வழிபாட்டை இங்கே கொள்ளலாகாது, செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோட்டம் எடுத்துப் பத்தினி வழிப்பாட்டைத் தொடங்கிவைத்தான். மற்றும், சிறைவீடு பெற்ற கனக விசயர் முதலிய ஆரிய மன்னர்களும், சிறைவீடு பெற்ற வேறு மன்னர்களும், குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும், இலங்கைக் கயவாகு மன்னனும், கண்ணகித் தெய்வத்தை விளித்து, எங்கள் நாடுகளிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என வேண்டினராம்.

"உலக மன்னவன் நின்றோன் முன்னர்
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எம்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாள் செய்த நாளணி வேள்வியில்
வந்து ஈகஎன்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென்று எழுந்தது ஒருகுரல்" (30:156-164)

என்பது பாடல் பகுதி. இதனால், வடபுல மன்னர்களும் பத்தினிக்குக் கோயில் எடுத்தனர் என்பது தெளிவு. இவ்வாறு நாவலந் தீவு (இந்தியா) முழுவதும் பரவியிருந்த கண்ணகி வழிபாடு, பாரதக்கதை தென்புலத்தில் பரப்பப்பட்ட பின்னர் மறையலாயிற்று. இப்போது தமிழ் நாட்டில் உள்ள துரோபதையம்மன் கோயில்கள் முன்னர்க் கண்ணகி கோயில் களாக இருந்தவை என்றும் அதாவது கண்ணகியின் இடத்தைத் துரோபதை பிடித்துக் கொண்டாள் ஆராய்ச்சியாளர்கள் என்றும் கூறுகின்றனர்.

தமிழகத்தில் அம்மன் கோயில் கொண்டுள்ள பெண் தெய்வங்கள் அனைவரும் மக்கள் பெண்டிரே. மாரி (மழை) பெய்ய வைப்பதால் மாரியம்மன் என்ற பெயருள்ள அம்மன்களின் வரலாறுகளைக் கிளறிப் பார்க்கின் உண்மை விளங்கும். திருவள்ளுவரின் மனைவிதான் மாரியம்மன் ஆனாள் என்பது ஒரு கதை. பிருகு முனிவரின் மனைவி நாகவல்லி என்பவளே மாரியம்மன் ஆனாள் சமதக்கினி முனிவரின் மனைவி இரேணுகாதேவியே மாரியம்மன் ஆனாள் என்பன கதைகள். இரேணுகாவின் மகன் பரசுராமன், தாய் செய்த ஒரு பெருங்குற்றம் பற்றி, அவளைத் தலை வேறாகவும் உடல் வேறாகவும் வெட்டி விட்டானாம். எனவேதான், சில இடங்களில் கழுத்தை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். கழுத்து மாரியம்மன் தோன்றிய வரலாறுகளுள் இஃதும் ஒன்று. ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினியாகிய துரோபதையின் வரலாற்றைச் சொல்ல வேண்டியதில்லை.

இதுகாறும் கூறியவற்றால், பத்தினி தெய்வமாகிய கண்ணகி கோயில் எடுத்து வழிபடப்பட்டாள் என்னும் உண்மையை ஐயமின்றி ஒத்துக் கொள்ளலாம். சிலப்பதிகாரக் காலத்தில் இந்த மரபு தொடங்கப்பட்டது.

இப்போது, மதுரை மாவட்ட எல்லையின் அண்மையில் உள்ள மங்களதேவி கோயில் என்னும் கோயில் கேரள அரசின் எல்லைக்குள் உள்ளது. அந்தப் பகுதியைத் தமிழ் நாட்டுக்கு அளிக்குமாறு தமிழ்நாடு அரசு கேரள அரசைக் கேட்டுக் கொண்டிருப்பதைச் செய்தித்தாள் படிப்பவர்கள் அறிவர். மங்களதேவி கோயில் எனப்படுவதுதான் கண்ணகி கோயில் எனப்படுகிறது. 'மங்கல மடந்தை கோட்டம் (30:88) என்று சிலம்பில் கூறப்பட்டுள்ளது.

தாலி கட்டுதல்

மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டியது சிலப்பதிகாரக் காலத்தில் உண்டா- இல்லையா - என்பது ஒரு கேள்விக் குறி.

சிலம்பு - முதல் காதையாகிய மங்கல வாழ்த்துப் பாடல் என்னும் பகுதியில் உள்ள "அகலுள் மங்கல அணி எழுந்தது” (46) என்னும் தொடருக்கு, 'ஊரிலே மங்கல நாண் வலம் செய்தது" என்று பெரியோரால் உரை எழுதப்பட்டுள்ளது. மங்கல நாண் என்பது தாலி. எனவே, தாலி கட்டும் வழக்கம் அன்று இருந்தது எனலாம்.

சிலப்பதிகாரக் காலத்தில் இருந்த மற்றொரு கடுமையான மரபைச் சொல்லாமல் விடுவதற்கு இல்லை. அதுதான் திருடனுக்கு இறப்பு ஒறுப்பு (மரண தண்டனை) கொடுப்பது. இந்தக் காலத்தில் கொலை செய்தவனுக்கே இறப்பு ஒறுப்பு தரப்படுகிறது. கொலை செய்த சிலர் வாணாள் ஒறுப்பு (ஆயுள் தண்டனை) பெறுவதோடு தப்பித்துக் கொள்கின் றனர். ஆனால் அந்தக் காலத்தில் கொலை செய்தவனுக்கு மட்டுமன்று; கள்வனுக்கும் இந்த ஒறுப்பு தரப்பட்டது. கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வந்து தன் கணவனைக் கொன்றது தகாது என்று வழக்கு உரைத்த போது, கள்வனைக் கொன்றது கடுங்கோல் அன்று செங்கோலே என்றான் பாண்டியன்.

"கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேல் கொற்றம் காண்என" (20:64, 65)

என்பது பாடல் பகுதி. கள்வன் மனைவியும் காவலன் மனைவியும் கைம்பெண்டாட்டிகள்' என்பது ஒரு பழமொழி. காவலன் = அரசன். கைம்பெண்டாட்டி = கைம்பெண் விதவை. அந்தக் காலத்தில் அரசர்கள் அடிக்கடிப் போரிட்டுக் கொண்டு இறந்து போவதால் அவர்களின் மனைவியர் கைம்பெண் ஆகின்றனர். அதேபோல், கள்வனுக்கு இறப்பு ஒறுப்பு தருவதால் அவன் மனைவியும் கைம்பெண் ஆகிறாள். இந்தப் பழமொழியின் விளக்கம் இது.

அரபு நாடுகள் சிலவற்றில், திருடினால் உறுப்பைக் குறைத்தல் போன்ற ஒறுப்புகள் தரப்படுவதாகச் சொல்லப் படுகிறது. சில அரபு நாடுகளிலும் சோவியத் நாட்டிலும், பிறர் வைத்தபொருள் வைத்த இடத்திலேயே இருக்குமாம்- யாரும் தொடமாட்டார்களாம். போய் வந்தவர்கள் புகல்கின்றனர். உறுப்பைக் குறைத்தல் நம் நாட்டிலும் அன்று இருந்திருக்கிறது. நாலடியாரில் இது கூறப்பட் டுள்ளது. பிறர் மனைவியை விரும்புபவன் அகப்பட்டுக் கொண்டால் அவன் கால்களை வெட்டி விடுவார்களாம். மேலும் பழியும் துன்பமும் விளையும்:

“காணின் குடிப்பழியாம், கையுறின் கால்குறையும்,
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம் -நீள்நிரயத்
துன்பம் பயக்குமால், துச்சாரி! நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு" (14)

ஆண்மையின்றித் தீய புணர்ச்சி செய்யின் அச்சமும் நெடுங்கால நரகத்துன்பமும் உண்டாகும். எனவே, ஏ காமுகனே! நீ பெற்ற இன்பம் என்னதான் என்று எனக்குக் கூறு - என்பது கருத்து. 'கையுறின் கால் குறையும் என்பது எண்ணத்தக்கது.

கையூட்டு (இலஞ்சம்) பெற்ற அரசு அலுவலர் இருவர்க்கு இரழ்சியாவில் (சோவியத்) இறப்பு ஒறுப்பு கொடுக்கப்பட்டதாகச் சில ஆண்டுகட்கு முன் செய்தித் தாளில் படித்த நினைவிருக்கிறது. திருவள்ளுவரும் இதை ஒத்துக்கொண்டுள்ளார். கொடியவரைக் கொலை செய்வது, பயிரைக் கெடுக்கும் களைகளைக் களைவது போன்றதாம்!

"கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்" (550)

என்பது திருக்குறள். இறப்பு ஒறுப்பு தருவதை நிறுத்தி விடவேண்டும் என்றும் சிலர் கூறும் காலம் இது எல்லாவற்றிற்கும் உரிய காலத்தில் தக்க பதில் கிடைக்கும்:

பகல் முடிந்து இரவை நோக்கிப் பொழுது போகும் வேளையில், பெண்கள், நெல்லோடு முல்லை மலரைக் கலந்து வீடெல்லாம் தூவி, விளக்கு ஏற்றி இறை வணக்கம் செய்வர். பின்னர் இரவுக்கு ஏற்ற உடை (Night Dress) உடுப்பர். பாடல்:

“அகல் நகரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்கோர்
கோலம் கொடி யிடையார் தாம்கொள்ள' (9:1-4)

என்பது பாடல் பகுதி. நகர் = வீடு, நிகர் = ஒளி. நக்கீரர் நெடுநல்வாடையிலும் இந்த மரபைக் கூறியுள்ளார்:

"நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவண மாலை அயர" (43,44)

என்பது பாடல் பகுதி. இந்தக் காலத்திலும் ஏழைகள் தவிர்த்த மற்ற பெண்டிருள் சிலர் இரவு ஆடை உடுத்து கின்றனர். பெண்டிர் சிலர் பகலிலும், கத்தோலிக்கக் கிறித்துவத் துறவியரின் உடைபோன்ற 'நெடு அங்கி' உடுத்திப் பெண்மையின் பொலிவைக் குறைத்துக் கொள்கின்றனர்.

கணவனால் கைவிடப் பட்டவர்கள், அறுகம்புல், சிறுபூளைப் பூ, நெல் ஆகியவற்றைக் கலந்து தூவி இறை வழிபாடு செய்யின், கணவனை மீண்டும் பெறலாம் என்று தேவந்தி கண்ணகிக்காகச் செய்து கணவனைப் பெறுக என்று வாழ்த்தினாளாம்.

'கண்ணகி நல்லாளுக்கு உற்றகுறை உண்டென்று
எண்ணிய நெஞ்சத்து இளையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச்சென்று
பெறுக கணவ னோடு என்றாள்" (9:41-44)

இது பாடல் பகுதி. இந்த மரபு இப்போது எல்லா இடங்க ளிலும் பின்பற்றப் படுவதாகத் தெரியவில்லை.

கோவலனும் கண்ணகியும் இறந்த செய்தி யறிந்ததும் கவுந்தி உண்ணா நோன்பு பூண்டும், மாதரி தீக்குளித்தும் இறந்தனராம். உறவினரோ - நெருங்கிப் பழகியவரோ இறப்பின், சிலர் இவ்வாறு இறப்பது இந்தக் காலம் போல அந்தக் காலத்திலேயே உண்டு எனத் தெரிகிறது.

இவ்வாறு அன்று பல்வகைப் பழக்க வழக்க மரபுகள் இருந்தன.
-------------------

15. இயற்கைக் காட்சிப் புனைவு

இலக்கியங்களில் இயற்கைக் காட்சிகளைப் புனைவு (வருணனை) செய்வது இயற்கை. இயற்கைக் காட்சிகளைப் புனைவு செய்தல் மட்டுமுள்ள சிறுசிறு நூல்களும் உண்டு. இந்நிலையில், சிலப்பதிகாரப் பெருங் காப்பியத்தில் இயற்கைப் புனைவு இடம் பெற்றிருப்பதற்குக் கேட்கவா வேண்டும்!

மங்கல வாழ்த்துப் பாடல்: திங்கள் உலகளிக்கிறது. ஞாயிறு மேரு வலம் வருகிறது. மாமழை நீர் சுரக்கிறது.

மலை, கடல், ஆறு, முகில், பறவைகள், விலங்குகள், மர இனம், சோலை, நாடு நகரம் முதலியவை சிலம்பில் அங்கும் இங்குமாகப் புனையப்பட்டுள்ளன.

நாடு காண் காதை: கவுந்தியடிகள் வழிநிலைமை கூறல், வேனிலின் வெம்மை, பாலையின் கொடுமை, மராம் ஓமை, உழிஞ்சில் மூங்கில் முதலிய மரங்கள் கருகல், நீர் பெறாது மான்கள் கதறல் - முதலியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

வேனில் காதை: வேனில் வந்தது என்பதைப் பொதிய மலையிலிருந்து வந்த தென்றலாகிய தூதன் அறிவித்தானாம். காமனது படையைச் சேர்ந்த குயிலோன் கூவினானாம். பலவகைப் பூக்களும் பூத்துக் குலுங்கின.

கானல் வரிப் பாடல்களில் இயற்கைக் காட்சிகள் மிகுதி. குன்றக் குரவையில் மலைவளம் இடம் பெற்றுள்ளது.

இந்திர விழவூர் எடுத்த காதையில், புகாரில் இருந்த பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் புனையப் படுவதில் மிக்க சிறப்பிடம் பெற்றுள்ளன.

கடலாடு காதையில், கடற்கரைப் புனைவு உள்ளத்தைத் தொட்டு மகிழ்விப்பதாகும்.

ஊர் காண் காதையில், மதுரை மாநகர் சொல்லோவிய மாகத் தீட்டப்பட்டுச் சிறந்துள்ளது.

புகார்ப் புனைவும், மதுரைப் புனைவும் இயற்கைக் காட்சிகள் அல்லவாயினும், அப்பெரு நகரங்களில் இன்னின்னவை இருக்கலாம் என ளங்கோ அடிகள் கற்பனைக் கண்ணால் கண்டே புனைவு செய்திருக்க வேண்டும்.

அந்தி மாலைப் புனைவு:

சிலம்பில் அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் அந்தி மாலை நன்கு புனையப் பட்டுள்ளது.

அந்தியில் ஞாயிறு மறைந்தது. நிலமகள் ஞாயிறாகிய கணவனைக் காணாது வருந்தினாள். அடுத்து, கடலை ஆடையாக உடைய அந்த நிலமகள் திங்களாகிய செல்வனையும் காணாமல், நான்கு திசைகளிலும் முகம் பசந்து நெஞ்சம் பனித்துச் சுழன்றாள். அந்தி மாலையில் ஞாயிற்றின் ஒளி மறைந்து திங்கள் ஒளி வீசத்தொடங்கும் வரையும் சிறிது இடை வெளி இருக்கும். அந்தநேரமே இவ்வாறு புனையப்பட்டுள்ளது.
'முகம் பசந்து நெஞ்சம் பனித்து' என்பது இருபொருள் அமையப்பாடப்பட்டுள்ளது.

"திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்
முழுநீர் வார முழுமெயும் பனித்து" (4:5, 6)

என்பது பாடல் பகுதி. ஞாயிறு மறைந்ததால் திசையாகிய முகம் பசந்தது; மலராகிய கண்கள் நீர் சொரிந்தன - அதாவது, மலர்கள் தேனைச் சொரியலாயின. நிலம் பனி நீரால் நனையத் தொடங்கியது - என்பது கருத்து.

இந்த நேரம் வந்ததும் காதலரைப் பிரிந்தோர் துன்புற்றனர்: காதலரைப் பிரியாதார் இன்புற்றனர்.

கோவலர் குழலில் முல்லைப் பண் இசைத்தனர். வண்டுகள் முல்லை மலரில் வாய் வைத்து ஊதின.

மலர் மணத்தைத் தென்றலானவன் எங்கும் தூற்றினான் அதாவது மணமுடன் தென்றல் வீசியது மகளிர் மணி விளக்கு ஏற்றினர்.

இளைய ராயினும் பாண்டியர் பகைவர்களை வென்றது போல், வெண் பிறை நிலா அந்திமாலை என்னும் குறும்பை வென்று விண்மீன்களை ஆண்டது. குறும்பு = குறும்பர்கள். அந்திமாலை குறும்பராக உருவகிக்கப் பட்டுள்ளது அதாவது அந்திமாலை கழியத் தொடங்கியது என்பது கருத்து.

காதலரைப் புணர்ந்த மாதவி போன்றோர் களியாட் டயர்ந்தனர் - காதலர் பிரிந்த கண்ணகி போன்றோர் துயரம் பெருகினர். காமவேள் வெற்றிக் களிப்புடன் திரியலானான். அந்திமாலை நிகழ்ச்சிச் சுருக்கம் இது.

இளங்கோ இதற்கென்று ஒரு தனிக்காதை செலவிட் டடுள்ளார். முப்பது காதைகள் வேண்டுமே என்பதற்காக இவ்வாறு செய்திருப்பாரோ!
---------------

16. உவமை - உருவகங்கள்

சிலப்பதிகாரத்தில் எத்தனையோ உவமைகளும் உருவகங்களும் வந்துள்ளன. தாமரை போன்றமுகம் என்னும் பொருளில் தாமரை முகம் என்று சொல்லின் அது உவமை. முகமாகிய - அதாவது முகம் என்னும் தாமரை என்னும் பொருளில் முகத்தாமரை என்று
சொல்லின் அது உருவகம். சில காண்பாம்:

உவமைகள்

மனையறம் படுத்த காதை: அமளிமிசை கோவலனும் கண்ணகியும் ஞாயிறும் திங்களும் ஒன்றாயிருந்தது போன்ற காட்சியினராய் அமர்ந்திருந்தனராம்:

"முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கிருந்த காட்சி போல" (2:30,31)

'கதிர் ஒருங்கிருந்த' என்பதைக் கொண்டு இரண்டு கதிர்கள் என்பது பெறப்படும். இப்போது பெண்கள் பெரிய உரிமை எடுத்துக் கொள்ளினும், தொடக்கத்தில் கோவலன் செய்த திருவிளையாடல்களையும் கண்ணகி அடக்கமாயிருந்ததையும் நோக்குங்கால், கோவலனை ஞாயிறாகவும் கண்ணகியைத் திங்களாகவும் கூறலாம். கதிர்கள் இரண்டும் ஒன்றாயிருத்தல் இல்லை யாதலின், இது இல்பொருள் உவமை எனப்படும். வடமொழியில் அபூத உவமை என்பர்.

இந்தக் காதையின் இறுதி வெண்பாவில் இரண்டு உவமைகள் உரைக்கப்பட்டுள்ளன. இருவரும் காமனும் அவன் மனைவி இரதியும் போல் தோற்றத்தில் காணப் பட்டனராம். ஆண் பாம்பும் பெண் பாம்பும் ஒன்றோடு ஒன்று முறுக்கிக் கொண்டு இன்பம் துய்ப்பதுபோல், இருவரும் தம் உடல்களைப் பின்னிப் பிணைத்துக் கொண்டு பிரிக்க முடியாதபடி இன்பத்தில் மிதந்தனராம்.

"தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவி யெனக் கைகலந்து..."

என்பது பாடல் பகுதி. பாம்புகளின் உவமை மிக்க பொருள் பெறுமானம் உடையது.

அந்திமாலைச் சிறப்புச் செய்காதை: தங்கள் பேரரசன் போய் விட்டபோது, குடிகளை வருத்தி வரிவாங்கும் கொடிய குறுநிலமன்னரைப் போல், ஞாயிறு மறைந்ததும் அந்தி மாலை வந்ததாம்:

'அரைசுகொடுத்து அலம்வரும் அல்லல் காலைக்
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளோடு ஒருதிறம் பற்றி
வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் (4:8-12)
மல்லல் மூதூர் மாலைவந் திறுத்தென" (4:20)

ஞாயிறு பேரரசன் போன்றது. அந்திமாலை குறு நில மன்னர் போன்றது. ஞாயிறு போனதும் மாலை வந்தது.

கதையின் இறுதி வெண்பா: வேந்தனின் குடை தன் குடி மக்கட்குக் குளிர்ச்சியும் பகைவர்க்கு வெப்பமும் தருவது போல, இரவில் திங்கள் தோன்றி மாதவிக்கு இன்பமும் கண்ணகிக்குத் துன்பமும் தந்தது.

"கூடினார்பால் நிழலாய்க் கூடார்பால் வெய்யதாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வானூர் மதிவிரிந்து
போதவிழ்க்கும் கங்குல் பொழுது"

மன்னன் குடிமக்களை நன்முறையில் காப்பதை, மன்னனின் குடை நிழலிலே மக்கள் மகிழ்ச்சியா யிருக்கிறார் கள் என்று கூறுதல் மரபு. ஒரு குடைக் கீழ் நாடு முழுதும் இருப்பதாகப் பொருள் கொள்ளலாகாது. உலக வழக்கில், 'ஏதோ உங்கள் நிழலில் தான் இருக்கிறோம் - நீங்கள் தான் காப்பாற்றவேண்டும்' என்று மக்கள் கூறுவது உண்டு.

"தெண்கடல் வளாகம் பொதுமையின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்" (189:1,2)

என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதியில் உள்ள 'நிழற்றிய' என்னும் சொல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

தன் குடிமக்கட்குக் குடை குளிர்ச்சி தருகிறது எனில், தன் பகைவர்க்கு எதிர்மாறாக வெப்பம் தருவதாகக் கூறுதல் தானே முறை.

இந்தக் குடைபோல், திங்கள், கோவலனோடு கூடியிருக்கும் மாதவிக்கு இன்பமும், கோவலனைப் பிரிந்திருக்கும் கண்ணகிக்குத் துன்பமும் கொடுக்கிறதாம்.

காதலரைப் பிரிந்தவர்களைத் திங்கள் வருத்தும் செய்தி எண்ணிறந்த இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.

கனாத்திறம் உரைத்த காதை: மாலதி என்பவள் தன் மாற்றாள் குழந்தைக்குப் பால் புகட்டியபோது பால் விக்கிக் குழந்தை இறந்து விட்டது. மாலதி அஞ்சி, குழந்தையைப் பிழைக்கச் செய்யுமாறு தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தபோது இடாகினி என்றும் பேய் அக் குழந்தையை விழுங்கிவிட்டது. உடனே மாலதி இடியோசை கேட்ட மயில் போல் ஏங்கி அழுதாளாம்:

"இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாள்" (23)

இந்த உவமை சிக்கலாய்த் தோன்றுகின்றது. மழைவரப் போகிறது எனில் மயில் தோகை விரித்தாடும் என்பதாக ஒரு கருத்து சொல்லப் படுவதுண்டு. ஆனால், இடியுண்ட மயில்போல் ஏங்கி அழுதாள் என்பதை நோக்குங்கால் இடி இடித்தால் மயில் அஞ்சித் துன்புறும் என்பது போன்ற கருத்தே கிடைக்கிறது. இது சரியா?

இங்கே ஞானசம்பந்தரின் திருவையாற்றுப் பதிகத்தில் உள்ள தேவாரப் பாடல் ஒன்று நினைவைத் தூண்டுகிறது. மயில்கள் நடனம் ஆடுகின்றனவாம் - முகில் இடி இடிக் கிறதாம் - நடனத்தைக் கண்டதும் இடியொலியைக் கேட்டதும் மழை வருமோ என அஞ்சி மந்திகள் (குரங்குகள்) மரத்தின் உச்சியில் ஏறி மழைவரும் நிலைமை யைத் தெரிந்துகொள்ள முகிலைப் பார்த்தனவாம்.

"வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவுஅதிர மழைஎன்று அஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே" (3:1)

என்பது பாடல் பகுதி. நடனம் ஆடும் மயில்கள் கோயிலைச் சுற்றிவரும் மடவாரே. அவர்கள் நடப்பது மயில்கள் நடப்பது போல் தெரிகின்றதாம். இடியொலி என்பது கோயிலில் அடிக்கும் முழவின் ஒலியே. மடவாரின் நடையை மயில் நடையாகவும் முழவொலியை இடியொலியாகவும் மந்திகள் மாறி எண்ணிவிட்டனவாம். ஞானசம்பந்தரின் இந்தப் பாடலில் உள்ள இலக்கிய நயம் மிகவும் சுவைக்கத் தக்கது.

மயில் தொடர்பாக இந்தப் பாடலிலிருந்து கிடைப்பது இடியொலியுடன் மழைவரும் அறிகுறி தோன்றின் மயில்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடும் என்னும் செய்தியாகும். இளங்கோவின் பாடலுக்கும் ஞானசம்பந்தரின் பாடலுக்கும் இடையே முரண்பாடு தெரிகிறதே. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன? ஒருவேளை, மிகவும் கடுமையாகத் தொடர்ந்து இடி இடிப்பின் மயில் அஞ்சுமோ! விலங்கு பறவை நூல் வல்லுநரிடம் கேட்டால் தெரியலாம்.

உலக இடை கழி

நாடு காண் காதை: புகாரின் வெளிக் கோபுர வாயிலைக் கடந்து கோவலனும் கண்ணகியும் சென்றார் களாம். அவ்வழியாக உலகத்து வாணிக மக்களும், சுற்றுலா வரும் மக்களும் போய் வருவதால், அந்த இடம் 'உலக இடைகழி என இளங்கோவால் இயம்பப்பட்டுள்ளது. பம்பாய் 'இந்தியாவின் வாயில்' (Gate of India) என்று சொல்லப் படுகிறது. புகாரின் கோபுர வாயிலோ உலக இடைகழி (Gate of World) எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. வெளியில் செல்லும் தெரு கோபுர வாயிலிலிருந்து தொடங்கு கிறது. இது, மலையிலிருந்து தொடங்கும் பெரிய ஆறு போன்று இருக்கின்றதாம்! கோபுரவாயில் மலை தெரு ஆறு. பாடல்:

"மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி'' (10:26, 27)

என்பது பாடல் பகுதி. பெரும்பாலும் ஆறுகள் மலைகளி லிருந்து தோன்றுவன. 'மலை தலைக் கொண்ட' என்றால், 'மலையைத் தொடக்க இடமாகக் கொண்ட' என்பது பொருளாம். "மலைத் தலைய கடல் காவிரி" (6) என்னும் பட்டினப்பாலைப் பகுதி ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. மற்றும், நீண்ட தெரு ஆறு கிடந்தாற்போல் இருப்பதாகக் கழக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது:

"ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு (நெடுநல்வாடை-30)

"யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு" (மதுரைக்காஞ்சி -359)
என்பன பாடல் பகுதிகள். 'உலக இடைகழி' என்பது புகாருக்குப் புதுப்பெருமை அளிக்கின்ற தன்றோ?

பல வகையான பறவைகளின் ஒலி, வெற்றிவேந்தரின் போர்முனை ஒலிபோல் கேட்டதாம்:

"உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக் குரல்பரந்த ஓசையும்" (117-119)

வெற்றி பெற்றவர்கள் எழுப்பும் ஆரவார ஒலி எத்தகையது என்பதை, இந்தக் காலத்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர் களும் அவரைச் சார்ந்தவர்களும் எழுப்பும் ஒலியைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

யாக்கை நிலையாமை

சாரணர்கள் கவுந்திக்கு அருளுரை கூறுகின்றனர்: தீ யூழ் தீமை தருவதை யாராலும் தடுக்கமுடியாது. விதை விதைத்தால் அது பயிராகிப் பயனைக் கட்டாயம் தருதல் போல், நல்லூழ் இருப்பின் நல்ல பயன் கிடைத்தே தீரும். காற்று வீசும் வெளி இடத்தில் விளக்கு அணைந்து விடுதல் போல, உரிய காலத்தில் உயிர் உடம்பினின்றும் பிரிந்து விடும். பாடல்:

"ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்து வந்துஎய்தி
ஓட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இருஞ்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்" (10:171-174)

இது பாடல் பகுதி. விரும்பினும் விரும்பாவிடினும் நடப்பது நடந்தே தீரும். ஈண்டு நாலடியாரில் உள்ள,

"உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பா லனையவும் அன்னவாம்" (பழவினை-4)

என்னும் பாடல் ஒப்புநோக்கத் தக்கது.

வேங்கடவன் கோலம்

வேங்கட மலையின் உச்சியில், ஒரு பக்கம் தெரியும் ஞாயிற்றுக்கும் மற்றொரு பக்கம் தெரியும் திங்களுக்கும் டைப்பட்ட பகுதியில், நீலநிற முகில், மின்னலாகிய புதுப் பொன்னாடை உடுத்து, இந்திரவில்லாகிய அணிகலனைப் பூண்டு நின்றாற் போல், திருமால் ஒருகையில் ஆழியும் (சக்கரமும்) மற்றொரு கையில் வெண் சங்கும் ஏந்தி, மார்பிலே ஆரம் அணிந்து, பூவாடை போர்த்துப் பொலிவுடன் நின்றகோலத்தில் உள்ளாராம் என்று மாங்காட்டு மறையவன் கோவலனிடம் கூறினான்.

"வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக் கோடிஉடுத்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்" (11:41-51)

இது பாடல் பகுதி. பரிபாடலிலும் இது கூறப்பட்டுள்ளது.

"பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல
நேமியும் வளையும் ஏந்திய கையால்' (13:7-9)

இருவேறு மண்டிலம் = ஞாயிறும் திங்களுமாகும்.

இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையிலும் ஞாயிறு திங்கள் தோற்றம் இவ்வாறு கூறப் பட்டுள்ளது. புகார் என்னும் பெண், மாலையில் ஒரு பக்கம் வெண்தோடும் மற்றொரு பக்கம் பொன்தோடும் அணிந்திருந்தாற் போன்று, கீழ்பால் திங்களும் மேல் பால் ஞாயிறும் விளங்கின எனக்கூறப்பட்டுள்ளது.

"புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி (5:109)
குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்
வெள்ளி வெண் தோட்டோடு பொன்தோடாக" (5:119-121)

இது பாடல் பகுதி. மாலையில் ஒரே நேரத்தில் கிழக்கே திங்களும் மேற்கே ஞாயிறும் காணப்படுவது ஆங்கிலப் பாடல் ஒன்றிலும் அறிவிக்கப் பட்டுள்ளது. லார்டு டென்னிசன் (Lord Tennyson) இயற்றிய "The Lotos Eaters" என்னும் பாடல் அது. யூலிசெஸ் (Ulysses) என்னும் கிரேக்க மன்னனின் போர் மறவர்கள், ஆசியாமைனரில் உள்ள எதிரியின் 'ட்ராய்' (Troy) என்னும் பகுதியை வென்று, தமது 'இதாகா' (Ithaca) என்னும் பகுதிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த வழியில் ஒரு தீவில் தங்கினார்களாம். அவர்கள் அத்தீவில் மாலையில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் இடையே அமர்ந்திருந்தார்களாம். பாடல்:

"They sat them down upon the yellow sand
Between the sun and moon upon the shore" (5:1,2)

என்பது பாடல் பகுதி. இளங்கோவின் சிலம்புக்கு நயம் கூட்டுவதற்காக, இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் வேறு மூன்று நூற்பாடல்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டன.

நிலம் திரிதல்

வேனில் (வெயில்) காலத்தோடு ஞாயிற்றின் கொடிய வெப்பமும் சேர்ந்து கொண்டதால், முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தம் நிலை மாறிப் பாலைவனமாக மாறினவாம். இதற்குப் பொருத்தமான உவமை தரப் பட்டுள்ளது. அமைச்சர் முதலான துணைவர்களோடு அரசனும் முறைமாறி நடக்க, நல்ல அரசியல் இன்மையால் வருந்தும் நாட்டைப்போல நிலம் திரிந்ததாம்.

"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேளலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலம் திருகத் தன்மையில் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பழிந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்" (11:60:66)

கோத்தொழிலாளர் = அமைச்சர் முதலான அரச வினைஞர்கள். வேனலம் கிழவன் = வேனில் காலம் கிழவன் என உருவகிக்கப் பட்டுள்ளது. கோத் தொழிலாளர் போன்றது வேனில். வெங்கதிர் வேந்தனாகிய ஞாயிறு அரசனுக்கு ஒப்புமை.

புறஞ்சேரி இறுத்த காதை

கோசிகன் வெயிலால் வாடிய மாதவிக் கொடியைப் பார்த்து, கோவலன். பிரிந்ததால் கொடுந்துன்பம் அடைந்த மடந்தையாகிய மாதவி போல நீயும் வருந்தினையோ என்றான்.

"கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்று இவ்
அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே
வருந்தினை போலும் நீ மாதவி" (13:48-51)

கொடி மாதவிக்கு மடந்தை மாதவி ஒப்புமையாக்கப் பட்டுள்ளாள். பொருத்தமான உவமை. சொல் விளையாட்டு இது.

கோசிகன் கோவலனை நோக்கி, நின் பிரிவால் உன் தந்தையும் தாயும் சுற்றமும் மணி இழந்த நாகப்பாம்பு போலவும் உயிர் பிரிந்த உடம்புபோலவும் நிலைமாறிக் கிடக்கின்றனர் என்றான்.

"இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை என்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்" (13:57-60)

கோவலனுக்கு மாணிக்கமும் உயிரும் உவமையாக்கப் பட்டுள்ளன. மற்றும், பெரும்பெயர் மூதூர் இராமன் பிரிந்த அயோத்திபோல் பேதுற்றதாம். இங்கே கோவலனுக்கு இராமன் ஒப்புமை (அருந்திறல் = இராமன்).

"அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்றதும்" (13:65,66)

காட்சிக்காதை:- சேரன் செங்குட்டுவன் பேராற்றங் கரையிலே மணல் குன்றிலே வந்து தங்கியிருந்தபோது, மலைவாழ் மக்கள் பலவகையான காணிக்கைப் பொருள்களைச் சுமந்து கொண்டு வந்து செங்குட்டுவனுக்குக் கொடுக்க இருந்தனர். இதற்குச் சேரனின் சிறப்பை அறிவிக்கும் உவமை ஒன்று கூறப்பட்டுள்ளது. சேரனிடம் தோற்ற பகை மன்னர்கள் அவனுக்குப் பணிந்து திறைப் (கப்பப்) பொருளைச் சுமந்து கொண்டு வந்து சேரனைக் காணும் வாய்ப்புக்காக நின்றபடிக் காத்திருந்தார்களாம். அதுபோல், மலைவாழ் மக்கள் காத்திருந்தார்களாம்.

“இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது
திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல' (25:35,36)

என்பது உவமைப் பகுதி. இறைமகன் சேரமன்னன். செவ்வி = நேரில் காணும் நேரம். யாங்கணும் பெறாது = எவ்விடத்தும் பெறாமல். அதாவது, கப்பம் கட்டத் தலைநகர் வஞ்சி சென்றும் காணமுடியவில்லை. மலைவளங் காண மன்னன் சேரன் சென்றுள்ளான் என்று அறிந்து அங்கே சென்றும், விரைவில் - எளிதில் காணமுடிய வில்லையாம். இது சேரன் பெருமைக்குச் சான்று. இந்தக் சான்று.இந்தக் காலத்திலும், பெரிய மனிதர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் மேதைகள் சிலரைக் காண நெடு நேரம் வரிசையில் காத்திருப்பது உண்டல்லவா?

கால்கோள் காதை:- சேரன் செங்குட்டுவன் பகைவ ரோடு போர் புரிய வஞ்சியினின்றும் புறப்பட்டு எழுந்தது, அரக்கரோடு போர்புரிய இந்திரன் புறப்பட்டதுபோல் இருந்ததாம்.

"தானவர் தம்மேல் தம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கி” (26:78,79)

தானவர் = அரக்கர், தம்பதி = இந்திரன் நகரம். வானவன் = இந்திரன்.

இரைவேட்டு எழுந்த அரிமா (சிங்கம்) யானைக் கூட்டத்தின்மேல் பாய்ந்தாற்போல் சேரன் பகைவர்கள்மேல் சீறிப் பாய்ந்தானாம்:

"இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமாக்
கரிமாப் பெருநிரை கண்டுஉளம் சிறந்து
பாய்ந்த பண்பின்" (26:188-190)

என்பது உவமைப்பகுதி.

முகமதியம்

செங்குட்டுவன் கால்களில் அணிந்துள்ள கழல்கள், அவன் வென்று அடிமையாக்கிய மன்னர்களின் முடியைத் தேய்க்கின்றனவாம். பகைவர்க்கு அவ்வாறு இருக்கும் சேரன் தன் குடிமக்கட்கு அருள் புரியும்போது அவனது மலர்ந்த குளிர்ந்த முகத்தைப்போல் மூதூரில் திங்கள் தோன்றியதாம்

''முடிபுறம் உறிஞ்சும் கழல்கால் குட்டுவன்
குடிபுறந் தருங்கால் திருமுகம் போல
உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்
பலர்புகழ் மூதூர்க்குத் காட்டி நீங்க'' (28:37-40)

பெண்களின் முகத்திற்குத் திங்களை உவமையாகச் சொல்வது பெருவாரியான வழக்கு. இங்கே திங்களுக்குச் சேரன் முகம் ஒப்பாக்கப் பட்டிருப்பது ஒரு புதிய ஆட்சி. இது குளிர்ச்சி கருதிக் கூறப்பட்டுள்ளது. (பிறைமதி உலகு தொழத் தோன்றுகிறது.)

பகைவரிடம் கடுமையாகப் போரிடும் பெரிய யானை, சிறார்களிடம் மென்மையாக நடந்து கொண்டு, நீர்த்துறை யில் தன் கொம்புகளைக் கழுவும் அவர்களுடன் விளையாடுவது போல, அதியமான் பகைவர்களிடம் கடுமையாய் நடந்து கொள்ளினும் ஒளவையார் போன்ற புலவர் பெருமக்களிடம் இனிமையாய் நடந்து கொள்வான் என்னும் கருத்தில் ஒளவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. பாடல்;

''ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எனக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே" (94)

இதுபாடல். எவ்வளவு நயமான கருத்து!

வாழ்த்துக் காதை - உரைப்பாட்டு மடை: வடபுலம் சென்று இமயமலையிலிருந்து சிலை செய்தற்கு வேண்டிய கல்லைக் கொணரவேண்டும் என்றிருந்த சேரன் செங்குட்டு வனிடம், வடமன்னர்கள் தென்புல மன்னர்களை இகழ்ந்தனர் என்ற செய்தி கூறினதும் அவன் கொதித்து எழுந்ததற்கு உவமையாக, இயல்பாகவே உருண்டு கொண்டிருக்கும் மணிவட்டை (சக்கரத்தை) ஒரு குறுந்தடி கொண்டு தள்ளி மேலும் விரைந்து ஓடச் செய்யும் செயல் உவமையாக்கப்பட்டுள்ளது. "உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு துரந்தது போல்' என்பது உவமைப் பகுதி- (29; உரைப்பாட்டு மடை)

நூலின் இறுதியில் 'நூற் கட்டுரை' என்னும் தலைப்பில் ஒரு நயமான - திறமையான உவமை கூறப்பட்டுள்ளது. ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியிலே நீண்ட பெரிய மலையைக் காட்டிக் காணச் செய்யும் அற்புதம் போல, ஒரு பெரிய வரலாறு சிலப்பதிகாரம் என்னும் நூலில் அடக்கிச் சொல்லப்பட்டுள்ளது பாடல்:

"ஆடி நிழலின் நீடிருங் குன்றம்
காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து
மணி மேகலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்" (15-18)

இது பாடல் பகுதி.

உருவகம்

மீளர்சு

அந்தி வானத்திலே திங்களாகிய அரசன் தோன்றி மாலையாகிய பகையை ஓட்டிப் பால்கதிர் பரப்பி விண் மீன்களாகிய குடிகளை ஆளுவதாக உருவகம் செய்யப் பட்டுள்ளது.

"அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்பு எறிந்து
ஓட்டிப் பான்மையின் திரியாது பால்கதிர் பரப்பி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து'' (4:23-26)

இது பாடல் பகுதி. மாலையைப் பகைக் குறும்பு என்றதால் வெண்பிறையை வெற்றி வேந்தனாகக் கொள்ளல் வேண்டும். மன்னர்கள் மண்ணிலேயிருந்து மக்களை ஆளுவது போல், பிறைத் திங்கள் விண்ணிலேயிருந்து விண்மீன்களை ஆள்கின்றது. மாலையைக் குறும்பாக உருவகித்துள்ளார். மாலைக் குறும்பு = ஓரிட உருவகம்.

பொய்கைப் பெண்

பொய்கையாகிய பெண் அன்னமாகிய நடையையும், ஆம்பலின் மணமாகிய நறுமணப் பொருளையும், தாமரை ஆகிய வாயையும் அறல் மணலாகிய கூந்தலையும் வண்டுகளாகிய பாணர்களின் பண்ணையும் குவளையாகிய கண்ணையும் உடைத்தாயிருக்கிறாள். பொய்கையைச் சுற்றிப் பறவைகளின் ஒலியாகிய முரசம் முழங்குகிறது.

"அன்ன மென்னடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நேர்திறம் பாடக்
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப
புள்வாய் முரசமொடு …. ….. ….. (4:72-77)

என்பது பாடல் பகுதி.

உழவு

மாடல மறையோன் தன் நாக்காகிய ஏராலே உழுது செங்குட்டுவனின் செவியாகிய வயலிலே உயர்ந்த அறவுரையாகிய விதையை விதைத்தானாம்.

“மறையோன் மறைநா உழுது வான்பொருள்
இறையோன் செவி செறுவாக வித்தலின்" (28:187,188.)

மண்ணக மடந்தை

கடலாகிய ஆடையும் மலையாகிய முலையும் பெரிய ஆறாகிய மார்பு மாலையும் முகிலாகிய கூந்தலும் கொண்ட நிலம் (மண்ணகம்) என்னும் பெண்ணின் இருளாகிய போர்வையை நீக்கிக் கதிர் பரப்பி ஞாயிறு தோன்றிற்றாம்.

"அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்ணகள் பரப்பின் மண்ணக மடந்தை
புதையிருள் படாஅம் போக நீக்கி
உதய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங்கு அவிரொளி மலர்கதிர் பரப்பி' (5:1-6)

அலை நீர் = கடல். ஆகம் = மார்பு. ஆரம் = மார்புமாலை. மாரி = முகில் (மேகம்). படாஅம் * படாம் = போர்வை.

பொய்யாக் குலக்கொடி

பல்வேறு மரங்களிலிருந்து அடித்துக்கொண்டு வரும் மலர்களாகிய மாலையும் மேகலையும், கரையாகிய அல்குலும், மணல் குன்றுகளாகிய முலைகளும், முருக்க இதழாகிய சிவந்த வாயும், முல்லையாகிய பற்களும், கயலாகிய கண்களும், அறலாகிய கூந்தலும் கொண்டுள்ளாள் வையை என்னும் பொய்யாக் குலக் கொடி பாடல்:

''குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்றேந்து அல்குல்
வாலுகம் குவைஇய மலர்ப்பூந் துருத்திப்
பால்புடைக் கொண்டு பன்மலர் ஓங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
வரைநின் றுதிர்த்த கவிர்இதழ்ச் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி
விலங்குநிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கள்
விரைமலர் நீங்கா அவிர்அறல் கூந்தல்
உலகு புரந்தூட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி" (13:157-170)

இது பாடல் பகுதி. குடசம் முதலிய மர இனங்கள். வாலுகம் = மணல் குன்று. கவிர் இதழ் = முருக்க மலரின் இதழ். பூங்கொடி வையை வையை ஆறு என்னும் பெண். இது புலவர்களால் புகழ்ந்து போற்றப்பட்டது. நீர் பொய்க்காமல் ஒழுகுவதாம். ஈண்டு கம்பர் கோதாவரி யைத் 'தண்ணென் ஒழுக்கமும் தழுவிய' தாகக் கூறியிருப்பது ஒப்புநோக்கத்தக்கது. வையை பாண்டியர் குலத்துக்கு உரியதாம்.

நோயும் மருந்தும்

போர் மறவர்கள் போர்க்களப் பாசறையிலே தங்கி இருந்த போது, அவர்களின் மனைவிமார்களின் கவர்ச்சியான கடைக்கண் பார்வையை மனக்கண் முன் நோக்கி நோக்கி வருந்தினார்களாம். அந்தக் கடைக்கண் எங்கே இருக்கிறது? கூந்தலாகிய முகிலுக்குள் இருக்கும் முகமாகிய திங்களிடம் உள்ள புருவமாகிய வில்லின் கீழ்க் கண்கள் உள்ளன. அந்தக் கண்கள் மன்மதனின் மலராகிய அம்புகளை வென்று செவ்வரி படர்ந்துள்ளனவாம். இப்போது போர் மறவர்கள் போர்க் களப் பாசறையினின்றும் வெற்றியுடன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். மறவர்களின் மனைவிமார்கள் தங்கள் கடைக் கண் பார்வையை அவர்களிடம் தூதாக அனுப்புகிறார் களாம். அதாவது, கடைக் கண்ணால் காதல் உணர்வு தோன்ற நோக்குகிறார்களாம். பிரிந்து பாசறையிலேயே இருந்த போது நினைக்கச் செய்து நோய் (மனநோய்) உண்டாக்கிய கண்கள், இப்போது அந்த நோய்க்கு மருந் தாகிக் கணவரை இன்புறுத்துகின்றனவாம். யாடல்:

'மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக்
கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ
அகிலுண விரிந்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதர்அரி படர்ந்த செழுங்கடைத் தூதும்
மருந்தும் ஆயது (28:15-21)

இது பாடல் பகுதி. முகில் கூந்தல், மதியம் முகம், சிலை (வில்) புருவம், கடைக் கண் தூது.
பிரிந்திருந்தபோது நோய் உண்டாக்கிய கண்கள் சேர்ந்திருக்கும் இப்போது அந்நோய்க்கு மருந்தாயுள்ளது என்னும் கருத்தோடு ஒத்த திருக்குறள் ஒன்று நினைவைத் தூண்டுகிறது:

"இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து" (1091)

என்பது பாடல். இவளுடைய மையுண்ட கண்களில் இரட்டைப் பார்வை உண்டு; அவற்றுள் ஒரு பார்வை காம நோய் தரும் பார்வை; மற்றொன்று அந்நோய் நீக்கும்
மருந்து.

மாலை நான்கு மணியானால் சிலருக்குத் தலைவலி வந்து விடும். தேநீர் அருந்தியதும் அது நீங்கி விடும். அந்தத் தலைவலிக்கு மருந்து 'எது? தேநீர். அந்தத் தலைவலிக்குக் காரணம் எது? அதுவும் அந்தத் தேநீர்தான். கிடைக்காத போது நோய் - கிடைத்த போது மருந்து. மதுவும் அப்படியே - மங்கையும் அப்படியே போலும்! இந்தக் கருத்து, குண நாற்பது என்னும் நூலில் உள்ள.

"மருந்தின் தீராது மணியின் ஆகாது
அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே
றான்செய் நோய்க்குத் தான்மருந்தாகிய
தேனிமிர் நறவின் தேறல் போல
நீதர வந்த நிறையழி துயரம்நின்
அருளின் அல்லது பிறிதின் தீராது"

என்னும் பாடல் பகுதியோடு ஒத்து நோக்கற்பாலது. நறவின் தேறல் = மது. நீ என்றது தலைமகளை. தலை மகன் தலைமகளை நோக்கிச் சொல்வதாக அமைந்துள்ளது இப்பாடல்: தலைமகளது நோக்கம் பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற கதையாயுள்ளது. அவளது பார்வையிலே உள்ள கவர்ச்சி அவனது காம நோயைத் தூண்டுகிறது; அவளது பார்வையிலே உள்ள காதல் குறிப்பு அவனுக்கு அமிழ்த மருந்தாகி ஆறுதல் அளிக்கின்றது - அவ்வளவுதான்.

குண நாற்பது நூல் பாடலின் கருத்து, மேற்காட்டிய குறள் கொடுத்த கொடையா யிருக்குமோ! கண் பார்வை நோயாகவும் மருந்தாகவும் இருப்பதாக இளங்கோ கூறி இருப்பதும், அவரது சொந்தக் கற்பனையாக இருக்குமோ?- அல்லது குறள் கொடுத்த கொடையாக இருக்குமோ! சிலம்பு - கானல் வரியிலும் இதனை ஒத்த ஒரு கற்பனை உள்ளது. அதாவது:-

பெண்ணின் கண்கள் செய்த நோயை அவள் முலைகளே தீர்க்க முடியும் என்பதாக ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது:

"நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும்'' (7:8:3,4)

என்பது பாடல் பகுதி. முலை தீர்க்கும் என்பது தழுவுதலைக் குறிக்கும்.

இவ்வாறு, இளங்கோ, உவமைகளையும் உருவகங்களை யும் தம் நூலில் கையாண்டு நூலை மெருகூட்டி நயப்படுத்தி உள்ளார்.

படிக்காத மக்களும் தமது பேச்சினிடையே கையாளும் மக்கள் கலையாகிய உவமை உருவகங்கள், இலக்கியங்கட்கு இன்றியமையாத அணிகலன்களாகும். சில இலக்கியங்கள், அவற்றில் உள்ள உவமை உருவகங்களால் பெருமதிப்பு பெறுவதும் உண்டு. உவமைகளை மிகுதியாகக் கையாண்டு இருப்பதால் 'உவமைக் கவிஞர்' என்ற பட்டம் பெறுபவரும் உளர்.
இத்தனை உவமைகளைப் புகுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு வலிந்து புகுத்துபவர்கள் உயர்வுபெற இயலாது. கருத்தோட்டத்தின் ஊடே உவமைகள் இயற்கையாக இழையோடிச் சுவையளிக்க வேண்டும். இளங்கோ இயற்கையாகத் தேவையான இடங்களில் தேவையான அளவு கையாண்டு காப்பியத்தை அணி செய்துள்ளார்.
--------------------

17. காப்பியத்தில் கானல் வரியின் இடம்

திருப்பு முனை
சிலப்பதிகாரக் காப்பியத்தில் கானல் வரி என்னும் காதை ஒரு திருப்பு முனையாகும். கண்ணகிக்குச் சிலை செய்வதற்கு உரிய கருங்கல்லைச் சுமக்கச் செய்து வட புலத்துக் கனக விசய மன்னர்களின் முடித்தலையை நெரித்தது இந்தக் கானல் வரிப்பாட்டு தான் என மாடல் மறையோன் சேரன் செங்குட்டுவனிடமே கூறினான். இந்த வரிப் பாட்டு இல்லையெனில், மதுரைக் காண்டத்திற்கும் வஞ்சிக் காண்டத்திற்கும் இடம் இருந்திருக்காது.

கானல் = கடற்கரைச் சோலை வரி = ஒருவகைப் பாடல் கோவலனும் கண்ணகியும் கானலில் அமர்ந்து பாடிய பாட்டுகள் கானல் வரியாகும்.

புகாரிலே இந்திர விழா நடைபெற்றது. அவ்விழாவில் வழக்கம்போல் மாதவி ஆரவாரமாக ஆடல் பாடல் நிகழ்த்தினாள். பலரும் கண்டு களித்தனர். கோவலனால் இதைப் பொறுக்க முடியவில்லை. தனக்கென்று மாதவி உரிமையாய் விட்டபிறகு, பலரும் களிக்க ஆடலாமா என எண்ணி வெறுப்புற்றான். இது சில ஆடவர்க்கு உரிய ஓர் இயல்பு. தான் எவளை வேண்டுமானாலும் விரும்பலாம் - ஆனால், தன் மனைவி மட்டும் வேறு எவனையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்கலாகாது. ஒரு மாப்பிள்ளைக்குப் பெற்றோர்கள் பெண் பார்த்துவிட்டு வந்தார்கள். இந்த மாப்பிள்ளை, இதற்கு முன் வேறு மாப்பிள்ளை எவனாவது வந்து அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டுப் போனானா?-
அப்படியிருந்தால் அந்தப் பெண் எனக்கு வேண்டாம் என்று சொன்னானாம். இந்த மாப்பிள்ளைக்கு அண்ணனாய் இருப்பான் போல் தெரிகிறான் கோவலன். மாதவியோ கணிகை குலத்தவளாயினும் கற்புடையவள்.

தன்மேல் கோவலன் வெறுப்புற்றிருக்கிறான் என்பதை அறிந்த மாதவி திறமையாக அவனைக் குளிரச் செய்தாள். பெண்களுக்கா சொல்லித் தரவேண்டும்! முழு நிலாப் பருவம் (Full Moon) வந்தது. ஊரார் கடலாடச் சென்றனர். அப்போது மாதவியும் கோவலனும் கூடக் கடற்கரை ஏகினர். இவர்கள் சென்றதிலேயே பிரிவு இயற்கையாக ஏற்பட்டு விட்டது. குதிரை போன்ற கோவேறு கழுதையின் மேல் கோவலன் சென்றான்; ஒரு வண்டியில் மாதவி சென்றாள்.

கடற்கரைக் கானல் சோலையில் ஒரு புன்னை மர நிழலில் புதுமணல் பரப்பில் ஓர் அறைபோல் சுற்றித் திரைகட்டி மறைவிடமாக்கி உள்ளே கட்டில் ட்டு அதன் மேல் மாதவியும் கோவலனும் அமர்ந்தனர்.

மாதவி வயந்த மாலை கையில் இருந்த யாழை வாங்கினாள். பத்தர், கோடு, ஆணி, நரம்பு இவற்றில் குற்றம் இல்லாத யாழை, பண்ணல், பரிவட்டணை முதலிய எண் வகையாலும் இசையெழுப்பி ஆய்வு செய்தாள் (சோதித்தாள்). விரல்கள் நரம்புகளின் மேல் படர, வளர்தல், வடித்தல் முதலிய இசைக்கரணங்கள் எட்டும் சரிவரப் பொருந்தியுள்ளனவா எனச் செவியால் கேட்டுணர்ந்தாள். கோவலனை வாசிக்கும்படி ஏவவில்லை வாசிக்க வேண்டிய தாளத்தைத் தொடங்கித் தருவீர் என்று கேட்பவள்போல் கோவலன் கையில் யாழைத் தந்தாள்.

கோவலன் இயற்கையாகக் கானல்வரி வாசித்தான். ஆனால், அதில், ஒரு பெண்மேல் குறிப்புவைத்து வாசித்தாற் போன்ற அறிகுறியுடன் பாடல்கள் அமைந்திருந்தன. குறும்புக்காகக்கூட - விளையாட்டிற்காகக்கூட இவ்வாறு ஒரு குறிப்பு வைத்திருக்கலாம்: பாடல்களின் கருத்துக்கள் சுருக்கமாக வருமாறு:-

1. ஆற்று வரி - வாழி காவேரி

காவிரியே! சோழன் கங்கையைப் புணர்ந்தாலும் நீ புலவாய் - அதுகற்பு -வாழி. சோழன் குமரியொடு கூடினும் நீ புலவாய் அது கற்பு -வாழி. புதுப்புனலுடனும் பேரொலியுடனும் நீ செல்வது சோழனுக்கு வளமேயாகும்- வாழி காவேரி என்று முதலில் பாடினான். இந்த மூன்று கருத்துக்கட்கும் உரிய மூன்றுபாடல்களை மட்டும் இங்கே காண்பாம்.!

"திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயல் கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பு
என்றறிந்தேன் வாழி காவேரி" (2)

"மன்னு மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயல் கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பு
என்றறிந்தேன் வாழி காவேரி" (3)
--------------------

continued in part 2

This file was last updated on 10 June 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)