 
 
கோயமுத்தூர் சுப்பிரமணிய முதலியார் இயற்றிய
திருப்புக்கொளியூர் அவிநாசிப்   
பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ்  
 
tiruppukkoLiyUr avinAcip perungkaruNaiyammai piLLaittamiz
of kOvai cuppiramaNiya mutaliyAr 
In Tamil script, unicode/utf-8 format
 
 
 Acknowledgements: 
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
Our thanks also go to Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance 
in the preparation of this etext file
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
 © Project Madurai, 1998-2025.   
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 
கோயமுத்தூர் சுப்பிரமணிய முதலியார் இயற்றிய
திருப்புக்கொளியூர் அவிநாசிப்   
பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ் 
 Source:  
	
திருப்புக்கொளியூர் அவிநாசிப் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ் 
கோயமுத்தூர் C. K. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் இயற்றியது 
சென்னை :  சிவகாமி விலாச அச்சுக்கூடம் 
1926 
கோவைத் தமிழ்ச்சங்க வெளியீடு - 4. 
------------------------
 உள்ளுறை  
1. முன்னுரை 
2. சாத்துக்கவிகள் 
3. ஆக்கியோன் முன்னுரை 
4.  தலப்பதிகம், தலசம்பந்தமான திருமுறைத்திரட்டு முதலியன. 
5.  நூல் 
-----------
திருச்சிற்றம்பலம் 
  சிவமயம் 
1. சிவரகசியப் பதிப்பாசிரியரும் அகத்தியர் தேவாரத்திரட்டு முதலிய நூல்களின் 
  உரையாசிரியருமான திருவாளர் க.சதாசிவ செட்டியார் அவர்கள் எழுதிய முன்னுரை 
	எற்றான் மறக்கே னெழுமைக்கு மெம்பெருமானையே 
	உற்றாயென் றுன்னையே யுள்குகின் றேனுணர்ந் துள்ளத்தால் 
	புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே 
	பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே' 
	          (சுந்திரமூர்த்தி நாயனார்.) 
	திருப்புக்கொளியூர் அவிநாசிப் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ் என்பது திருப்புக்கொளியூர் அவிநாசியில் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய பெருங்கருணையம்மையைப் பாட்டுடைத் தலைவியாக வைத்துப்பாடிய பிள்ளைத்தமிழ். திருப்புக்கொளியூர் அவிநாசி புதுமணந்தங்கும் கொங்கு நாட்டினுள்ள தேவாரம் பெற்றருளிய திருத்தலங்களின் ஒன்றாயது; சுந்தரமூர்த்தி நாயனாரது தேவாரம் பெற்றருளிய சிறப்பினையுடையது; முதலையுண்ட பாலனையழைத்த முதன்மை வாய்ந்தது; காசிநகர்க்குச் சமானமாவது; காசிக் கங்கையைத் தன்னிடங்கொண்டு விளங்கும் கவினுடையது; இன்னோரன்ன பல வேற்றமுற்றியைவது; தென்னிந்திய இருப்புப்பாதையில் ஈரோடு போத்தனூர்ச் சேர்க்கைத் தொடரில் மங்கலம் என்னும் வஞ்சிப்பாளையத்தினின்றும் ஆறுமைல் தூரத்தில் அமைந்தது. 
	புக்கொளியூர் அவிநாசி புக்கொளியூரிலேயுள்ள அவிநாசியென்று பொருள்படும். கருவூரானிலை, சாத்தமங்கையவந்தி முதலியவை போல. புக்கொளியூரென்று வழக்காறுண்டாயினும் அது மிக அருகி வழங்குவதாய் அவிநாசியென்றே கற்றோரும் மற்றோரும் சிறப்புற வழங்குவதாயிற்று. திருப்பதிகத்திலே பல பாட்டுக்களிலே இறைவனே அவிநாசியென்று அழைப்பது காண்பதால் அவனாமமாகிய அவிநாசி அவனுறையு மூர்க்குமாயது என்று கொள்ளக்கிடக்கின்றது. அவிநாசி - விநாசமில்லாதது, விநாசம் - கேடு. எனவே அவிநாசி 'மூத்தலும் பிறத்தலு மில்லாத முழுமுதல்வன்’ என்பதாயிற்று. 
	இத்தலத்து எழுந்தருளியுள்ள இறைவியினது திருநாமம் பெருங்கருணை யம்மையாம். உலகெலாமுடைய ஒரு தனி முதல்வி கருணைத் திருவுருவமாக முகிழ்த்தவளாதலானும் அக்கருணையும் அளவிடப்பெறாப் பெருங்கருணை யாதலானும் அப்பெயர் அம்மையாருக்குச் சொல்லுதல் அதிசயமன்றே. 
	இனிப் பிள்ளைத்தமிழ் என்பது தமிழ்மொழியினுள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகவுள்ளது. அப்பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். 
	அவற்றுள் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பத்துப் பருவங்கள் வைத்துக் கூறப்பெறும். இனியிப் பருவங்களைக் கூறுமிடத்துக் காப்புப் பருவம் பாட்டுடைத் தலைவனைத் திருமான் முதலிய தெய்வங்கள் காக்குமாறு வேண்டிக் கோடலையும், செங்கீரைப்பருவம் அக்குழவி செவ்விய மழலைச் சொல்லைப் பேசுதலையும், தாலப்பருவம் அச்சேய் தாலாட்டைக் கேட்டு மகிழ்ந்தயர்தலையும், சப்பாணிப்பருவம் அக்குழந்தை தனது இருகைகளையும் ஒன்று சேர்த்துக்கொட்டி மகிழ்தலையும், முத்தப்பருவம் அம்மகவு முத்தமிடப் பெறுஞ் செய்கையையும், வருகைப்பருவம் அப்பொருள் வருதலை விரும்பிய தன்மையையும், அம்புலிப்பருவம் அப்பிள்ளை சந்திரனைத் தன்னோடாட அழைத்தலையும், சிற்றிற் பருவம் சிறுமியர் கட்டிய சிறு வீடுகளை யச்சிறுவன் அழிக்கும் ஆடலையும், சிறுபறைப் பருவம் அம்மதலை சிறுபறை முழக்கி விளையாடுதலையும், சிறுதேர்ப்பருவம் அம்மகன் நடைவண்டி யுருட்டி விளையாடுதலையும் முறையே கூறுவனவாகும். 
	பெண்பாற் பிள்ளைக்கவி ஆண்பாற்குக் கூறிய பருவங்களுள் சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பன வொழித் தொழிந்தனவற்றோடு அம்மானையாடுதலைக் கூறும் அம்மானை, புனல்விளையாட்டயர்தலைக் கூறும் நீராடல், ஊசலாட்டயர்தல் கூறும் ஊசல் என்னும் மூன்றினையும் சேர்த்துக்கூறப்பெறுந் தன்மையதாம். இதனான் நமக்கு விஷயமாகிய பிள்ளைக்கவி பெண்பாற் பிள்ளைக்கவி என்பதறியப்படும். 
	இப்பிரபந்தம் தாம் வழிபடும் தெய்வங்கள், பெரியோர்கள் என்றும் இருகூட்டத்துப்படும் ஒரு தெய்வத்தை, அன்றி, யொரு பெரியோரைப் பிள்ளையாகப் பாவித்துத் தம் அன்புடைமை தோன்றப் பாராட்டிப் பாடுவதாகும். இதனிலக்கண விரிவை யெல்லாம் பன்னிருபாட்டியல் முதலிய செய்யுளியல் நூலுட் கண்டுகொள்ளக் கூடுமாம். 
	இவ்வகைத்தாய பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழை இயற்றிய ஆசிரியர் சைவத்திருவாளர் கோயமுத்தூர் C. K. சுப்பிரமணிய முதலியார்  அவர்கள் ஆவர். இவர் தொண்டைமண்டலச் சைவவேளாளகுல திலகர். கொங்கு நாட்டு வைப்புத்தலமும் மேலைச்சிதம்பரமுமாம் பேரூர் சிவாலயத் திருப்பணி பல புரிந்து பன்னாள் தருமபரிபாலனம் செய்தவரும் வழக்கறிஞரும் வித்வானும், பெரும்புகழாளருமான கந்தசுவாமி முதலியாரவர்களின் அரும்புதல்வர். 'மகனறிவு தந்தையறிவு' என்பதற்கேற்பத் தம் பிதாப்போல வவ்வாலயத் திருப்பணி பலபுரிந்து பரிபாலனம் செய்பவர்; கோவைநகர்த் தேவஸ்தானக் கழகத்தலைவர்; பன்னூல் பயின்று பேரறிவு வாய்ந்தவர், தமிழன்னைக் கணிகலமாகப் பல நூல் பாடும் வன்மைவாய்ந்தவர், தேவார முதலிய திருமுறை பன்னிரண்டையும் நியமமான பாராயணமுடையார். சைவசித்தாந்த சாத்திரங்க ளும் மாபாடியமும் பாடம் போற்றுவோர், பல பெருஞ் சபைகளிற் தலைமைவகித்து நடத்தும் நாவன்மையுடையார், விழுப்பந்தரும் மேன்மையுணர்ந்து ஒழுக்க முயிரினோம்பு முண்மைச் சைவர், நாட்கூறு கழியாது நற்பூசை புரிபவர், நிருவாணாந்தமான தீக்கை யடைந்த திருவுடையார், அகங்கனிந்துருகும் அன்புருவாய் அருளாளர், இனி வேறு பிறிதென்? எனது அன்பு நிறைந்த மூதறிவாளரின் முதல்வர். 
	இந்நூலில் இவ்வாசிரியர் ஏனைய பிள்ளைத்தமிழ் ஆசிரியர்கள் அந்நூன் முறைபற்றிக்கூறிய உறுப்புக்களோடு அமையாது மூத்த பிள்ளையார்முதல் தமிழ்த்தெய்வம் இறுதியாக முறையினியற்றிய பலதுதிகளையும், பொதுவகையானும் சிறப்புவகையானும் குருமரபுகளையும் கொண்ட பாயிர உறுப்பினைச் சேர்த்துத் தம் பனுவலைப் பனுவலாக்கிய சிறப்புப் பாராட்டப் பாலதாகும். 
	அத்துதிகளுள்ளும் ஸ்ரீ பட்டீசரது பாட்டில் பட்டீசன் தன்னடைந்தோர்க்குப் பாசவிடுதியும் சிவப்பேறும் அருளுமாற்றைப் பிரமதீர்த்தத்தன்மையின் வைத்துக்காட்டுதலும் பிறப்பிறப்பு நீக்குதலை அந்நகர்த் தெய்வதருக்களின் வைத்துக்காட்டுதலும், ஸ்ரீ மரகதாம்பிகையின் பாட்டில் சத்திசிவங்களுக்குள்ள இயைபுகளை முன்னோர் நூலின் முடித்துக் காட்டுதலும், ஆளுடைய நம்பிகளது துதிப் பாட்டில் ஆகாமிய பிரார்த்த இலக்கணங்களை ஐயந்திரிபின்றி விளக்கிக் காட்டுதலும், வித்யாகுரு தீக்ஷரகுரு மரபுத் துதியிலே திருக்கைலாய பரம்பரைத் திருவாவாடுதுறை யாதீனத்துத் திராவிட மாபாடிய கருத்தராகிய மாதவச் சிவஞானயோகிகளது பரம்பரையிற் றமக்குள்ளதாய இயைபுகாட்டித் தன்னுடையாற்றல் உணராரிடையில்... தன்னைப் புகழ்தலும் தகும்புலவோர்க்கே' என்னு மோத்தினுக்கியையத் தம்மையறிவியாது அறிவித்துக்கொள்ளலும் பிறவும் இவரது சித்தாந்த சாத்திர ஞானத்தையும் திருமுறைப் பயிற்சியையும் வேண்டுமாறு பாடும் பாடல் வன்மையும் காட்டுகின்ற வென்பதைப் பாராட்டாதிருக்க முடியாது. 
	இனி நூலில் இறைவி சப்பாணி கொட்டுதல் சத்தி சிவன் பால் நின்று நாத தத்துவத்தை எழுப்பும் கருத்தினையும்,மாயையின் மயங்கிக்கிடக்கும் ஆன்மாக்களைக்கை தட்டி எழுப்புங் கருத்தினையும் உடையதெனவும், அம்மனையாடுதல் இறைவி யான்மாக்களை மேல் எடுத்துவிடவும் அவை அறிவின்மையாற் கீழ்கீழ்ச் சென்றாலும் கருணையோடு மீட்டும் மீட்டும் அவைகளை யெடுத்து விடுதலைக் கருது மெனவும் பிறவுமாகவரும் சாத்திரக் குறிப்புகள் வியக்கத் தக்கனவாகும். 
	காப்புப்பருவத்து முருகக்கடவுளது பாட்டில் கந்தபுராணக் கதையின் உள்ளுறைப் பொருளை இறைவன் மும்மலங்களையும் மோசித்து ஆன்மாக்களைப் பேரின்பத் திருத்தும் உண்மைப்பொருளாக வெடுத்துக் காட்டுதல் ஆசிரியரது புராண ஆராய்ச்சிப்புலனை விளக்குவதாகின்றது. 
	சப்பாணிப்பருவத்து ஐந்தாம்பாட்டில் 'பெறுமவற்றுள்' என்னுங் குறட்கருத்தும், முத்தப்பருவத்து எட்டாம்பாட்டில் 'குழலினிது' என்னுங் குறட்கருத்தும், நீராடற்பருவத்து ஏழாம்பாட்டில் 'பயன்றூக்கார்' என்னுங் குறட்கருத்தும்,பிறவிடத்துப் பிறவும் வருதல் இவ்வாசிரியர்க்குத் திருக்குறணூற் பயிற்சியும் அதன்பாலுள்ள அன்பும் இனைத்தெனவறிய ஏதுவாகின்றது. 
	வந்தவந்த விடங்களிலெல்லாம் தலபுராண சரித்திரங்களை அமைத்துப் பாடியுள்ளது, இப்பிரபந்தத்தைப் படிக்கின்றவர்கள் தலமகிமையை எளிதிலறிந்து கொள்ளுமாறு உபகாரஞ் செய்வதாயும் பயன்படுவதாயும் உள்ளது. 
	தம் கருத்து இன்னதென்று உணரும் பொருட்டு அவசியமான விடங்களிலெல்லாம் குறிப்புரை எழுதி உபகரித்திருப்பதும் தாஞ்செய்யும் வேலையைத் திருந்தச் செய்யும் வழக்கத்தைக் காட்டுகின்றது. 
	இம்முன்னுரையை இன்னும் விரிவாகவும் நன்றாகவும் எழுத எண்ணியிருந்த யான் புத்தகம் முடிந்து என் பொருட்டுக் காத்திருந்ததாலும், எனக்குப் பல வேலைகளினால் அவகாசமில்லாதிருந்ததாலும், விரிந்து வருதலாலும் இம்மட்டில் நிறுத்திக்கொள்ளுகிறேன். 
	இன்னோரன்ன பல சிறப்புக்களுடன் தமது பிள்ளைத்தமிழை நமது முதலியாரவர்கள் தமது எண்ணிறந்த வேலைகளினிடையில் எழுதிமுடித்து அச்சிட்டுத் தமிழுலகத்திற்கும் சைவ உலகத்திற்கும் உதவிய உதவி என்றும் பாராட்டும் வகையில் நின்று நிலவுமாறு இறைவன் இன்னருளை வேண்டுகின்றேன். பின்னுரையாய என்னுரை முன்னுரையாக அமைவதும் அவர்க்கு என் பாலுள்ள நண்புரிமையைக் காட்டும் அறிகுறியாகுமென்பேன். 
        					இங்ஙனம், 
        					க.சதாசிவ செட்டியார். 
------------------------------
 சாத்துக்கவிகள் 
1. 
 
சேலம் ஜில்லா, ஓமலூர் தாலூகா, தோரமங்கலம் வித்துவான் 
 
அ. வரத நஞ்சையபிள்ளை அவர்கள் சொல்லியன. 
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் 
	பூமலி கொங்காற் சிறப்புறு மதுபோற் 
    பூமியுங் கொங்கினாற் சிறப்ப 
	தாமினி யலகி லேழ்தல முத்தி 
    தருதல்போ லிந்தநாட் டினிலுந் 
	தோமறு தலங்க ளேழுள பரமற் 
    றுதித்தினி தேத்து தேவாரப் 
	பாமணம்பொலிய வீடுயிர்க் கருளிப் 
    பரிபவந் துடைத்திடு மாலோ. 	    	1
	ஒருபெரு முதலை யுண்டிடு மதலை 
    யுய்த்தியென் றொருதனி முதலைப் 
	பெருமையி னேவி நம்பியா ரூரர் 
    பெற்றதே வாரமுற் படைத்த 
	பொருவறு மேன்மைப் புக்கொளி யூரும் 
    புரிந்தவ ணுறையவி நாசிப் 
	பரமனு முவமை கடத்தலா னிதரே 
    தாமெனப் பகர்வர் பாவலரே. 		    2 
	அத்தலத்தினிலு மெம்மவி நாசி 
    யப்பனா ருளத்தினு மகலாச் 
	சித்திர மனையா ளுலகெலா மீன்ற 
    திருவுடைக் கன்னிவிண் ணவர்தாழ் 
	உத்தமி பெரிய கருணைநா யகிதாட் 
    குயர்ந்தபிள் ளைத்தமிழ்மாலை 
	வித்தகம் பெறவே சூட்டியுட் குறித்த 
    விருப்புறு பேறுபெற் றனனால். 		    3
	அன்னவன் சீர்த்தி நாவொரா யிரமில் 
    லாதவர் புகன்றிடுந் தரமோ 
	பொன்னின்மன் றாடும் நாதனா ருலகெ 
    லாமெனப் புகலடி யேற்றுப் 
	பன்னரும் பெருமைத் திருத்தொண்டர் புராணம் 
    பாடிய சேக்கிழார் மரபு 
	தன்னதாக் கொண்ட மேன்மையான் கோவைத் 
    தலத்தமர் நாற்கவிச் சதுரன். 		    4
	பரம்பொருள் சிவமென் றுள்ளநெக் குருகப் 
    பராவுவோன் மீகொங்கிற் பேரூர் 
	இருந்தபட் டீசர் பச்சைநா யகியார்க் 
    கின்றமிழ் மாலை பற்பலவும் 
	புரிந்தநா வலவர் கந்தசா மிப்பேர்ப் 
    புண்ணியன் புரிதவ முருவாய் 
	வருந்திருப் புதல்வன் சுப்பிர மணிய 
    வள்ளலாம் ஞானவாரிதியே. 	    	5
நேரிசைவெண்பர். 
	நற்சுப் பிரமணிய நாவலரே கேட்டீரோ! 
	சொற்சுவைக்கோ! சைவத் துறைப்பொருட்கோ! - முற்படவென் 
	னுள்ளத்தை யோகோ! வுவகை கொள்ளை கொண்டதுங்கள் 
	பிள்ளைத் தமிழ்படித்த பின். 		    (6)
-------------
 
2. 
திருச்சி, பிஷப் ஹீபர் கலாசாலைத் தலைமைத் தமிழாசிரியர் 
ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் இயற்றியது 
 செங்கோலின் வழுவாத மூவேந்தரரசுபுரி திருநாட்டுள்ளே 
    எங்கோமா னாளுடைய மூவர்முத லிகடிருப்பாட் டியைந்த வான 
கொங்கேழு திருப்பதியு ளொன்றாகு மவிநாசி குலவு நம்பி 
    வெங்கோடை யினிலேரிப் பனன்முதலை மதலைதரு  மேன்மைத் தாமால். 	(1)
அப்பதியின் மறைமுதலா மப்பருடனமர் கருணாம் பிகையம் மைக்கே 
    ஒப்பருபிள் னைக்கவிதை நற்றமழி னுரைத்தனனன் போங்குஞ் சீரான் 
மெய்ப்பெருமை சிவனடிப்பூ சனையாற்ற லெனத்தெளிந்த  மேன்மை யாளன் 
    சுப்பிரமண் ணியன்கோவைப் பேரூரன் ஏராளர்  தோன்றன் மாதோ. 				(2)
------------------
 3. 
 மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவரும் கோவை அரசினர் கலாசாலைத் 
தமிழ்ப்பண்டிதரும் ஆகிய அ. கந்தசாமி பிள்ளை அவர்கள் பாடியவை.  
கட்டளைக்கலித்துறை 
ஒருங்கரு ணாம்பெற மாயா மலவிரு ளோடமுற்றும் 
உருங்கரு ணா!மக வேணிய! புக்கொளி யூர்த்தலத்தின் 
மருங்கரு ணாம்புயத் தாளுடையாய்! என மாதவஞ்செய் 
பெருங்கரு ணாம்பிகை பிள்ளைத் தமிழினைப் பேசினனே. 	(1) 
சைவ சிகாமணி யாந்தமிழ் தேர்கந்த சாமிமன்னன் 
செய்தவ மாகிவந்தோன்; சிவ பூசை தினம்புரிவோன்; 
தெய்வத மாகிய நால்வர் மறைமுதற் சீர்முறைகள் 
மெய்வரு பன்னிரண் டும்பன் முறைபயில் வித்தகனே. 		(2) 
தென்மொழிக் கோரெல்லை; சித்தாந்த சாகரத் தெள்ளமுதம்; 
இன்மொழி மாமழை; மெய்ச்சைவ நாட்டும் இறைக்குரிசில்; 
முன்மொழி பேரைப்பட் டீசர்க் குருகும் முழுமனத்தோன்; 
பன்மொழி யென்? தந்தையென்னோற் றனன்எனும் பண்பினனே 	(3)
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் 
ஆறன்ன பயனுடையான்; அனையன்ன அளியுடையான்; 
    அரன்றாள் போற்றும் 
ஏறன்ன மிடுக்குடையான்; எய்ப்பிடத்து வைப்பாக 
    வெம்போல் வார்க்கோர் 
பேறென்ன வருந்தெய்வச் சேக்கிழார் திருமரபு 
    பிறங்க வந்தோன்; 
வீறின்ன தமிழுலகின் பாக்கியமாஞ் சுப்ரமண்ய 
    மேதக் கோனே. 						(4)
வெண்பா 
	ஆர்புக் கொளியூர் அவநாசி யப்பர்வலஞ் 
	சேர்சீர்ப் பெருங்கருணைச் செல்வியார்க் - கேர்சேரும் 
	பிள்ளைத் தமிழ்சுப் பிரமணிய வேள்புகன்றான் 
	கொள்ளைத் தமிழ்ச்சுவையுட் கொண்டு. 				(5) 
-------------
4. 
கோவை, லண்டன் மிஷின் பாடசாலைத் தமிழாசிரியர் 
	பண்டிதர் C.S. சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் இயற்றியது  
 நேரிசை ஆசிரியப்பா 
	மழைவள முதலா மொழிவளம் பலமிகு 
	நாட்டினிற் கொங்குநன் னாட்டினி லியாண்டுங் 
	குலவிய வுயிர்கள் நலமுற வேண்டிக் 
	கண்ணுதற் பெருமான் நண்ணிவீற் றிருக்கும் 
	ஏழுயர் தலத்து ளூழியு மழியாப் 
	புக்கொளி யூரில் நக்கனின் வலமமர் 
	பெருங்கரு ணாம்பிகை திருந்துசெஞ் சீரடிச் 
	சூட்டின னொருநூல் நாட்டிய தமிழில், 
	ஒள்ளியற் புலகோர் பிள்ளைத் தமிழிது 
	நன்றுநன் றென்ன நவின்றுள நலவன் 
	நலமிகு கொங்கிற் குலவிய கோவையில் 
	வதிவோ ன்றாதறல் குதிபாய் சுரநதிப் 
	பெருமர பினன்,தமிழ் வரன்முறை பயின்ற 
	கந்த சுவாமியின் மைந்தன், பைந்தமிழ் 
	எழுத்து முதலா வழுத்திலக் கணமும் 
	அறம்பொரு ளாதித் திறந்தரு நூல்களும்
	என்னுடன் பிறந்தா டன்னகட் டுதித்த 
	திருச்சிற் றம்பலச் செம்மல்சே வடியுளம் 
	தரிச்சுக் கொண்டுயர் தமிழறி யறிஞன் 
	ஆங்கில மதனைப் பாங்குறக் கற்று 
	பட்டமும் பெற்றோன், சட்டமும் பயின்றோன், 
	தக்கோர் புகழும் வக்கீற் றொழிலினன், 
	தெய்வச் சிவமென மெய்வகை கொண்டோன், 
	சிவனடி யவரே யவனெனப் பணிவோன், 
	பன்னிரு திருமுறைப் பாரா யணத்தான், 
	இன்னிசை யோடவை யிசைத்திட வல்லோன், 
	கேட்டார் தம்மொடு கேளா தாருங் 
	கேட்பே மன்னெனக் கிளத்துநா வல்லோன் 
	என்பால் நண்புகொ ளன்பன் 
	சுப்பிர மணியனா மொப்பில்சீ மானே. 
	---------
 உபசுப்ரமணிய மரபினரும் வடவழி வித்வானுமாகிய மு. அருணாசலக் கவிராயர் 
அவர்களால்  இயற்றப் பெற்ற  சிறப்புப்பாயிரம்  
	ஆசிரியப்பா 
	மண்டலம் புகழ்திருத் தொண்டர்தந் தொகையினை 
	முதனூ லாக விதியொடு தழுவி 
	நம்பி யாண்டார் நம்பியந் தாதியை 
	வழிநூ லாயும் மொழிபெற நிறீஇ 
	அடியார் புராணம் படிமேல் வகுத்த 
	வாக்கரசாய சேக்கிழா ருதித்த 
	கங்கா மரபி னிங்கவ தரித்தோன் 
	கண்ணுத லன்றி யெண்ணுதல் புரியான் 
	நிலைபெறுஞ் சைவந் தலையெடுத் தோங்க 
	ஏய்ந்த நான்மறையு ளாய்ந்தவா கமமும் 
	பழுதற வுணர்ந்த வழுவில் வாய்மையான் 
	உதித்தவிவ் வுலகம் மதித்திடும் புகழான் 
	மணிவா சகர்க்குள வணிபல நிரையாய் 
	வள்ளுவர் குறட்பா விள்ளரும் பொருளின் 
	கருத்தினை யெடுத்து விரித்துரை யாக்கி 
	நீத்தார் பெருமையை நிலையுற நிறுவினன் 
	குலாவிய சென்னைக் கலாசங் கத்தின் 
	அங்கத் தினருட் சிங்கவே றன்னான் 
	மாவயம் பெற்ற கோவையம் பதியின் 
	நேமவான் கந்த சாமிவிற் பனரின் 
	ஊன்று தவப்பயன் றோன்றிய தென்ன 
	சைவம் விளங்கி மெய்வந் தெய்தப் 
	போந்தவ னாற்கவி யாய்ந்திடு கவிஞன் 
	பன்னூற்பொருளெனும் முந்நீர் கடக்குங் 
	கலமென லாக னலனுற வமைந்தான் 
	பல்லவை யிடத்தும் வல்லோ னிவனென 
	ஆன்றோர் புகலச் சான்றுரு வாயினான் 
	கற்பாந் தரத்தின் முற்போந் திடுசுரர் 
	புக்கொளித் துய்தலிற் புக்கொளி யூரெனும் 
	தலத்துறை யமலன் வலப்புறம் வேண்டி 
	அருந்தவஞ் செய்த பெருங்கரு ணாம்பிகை 
	பிள்ளைத் தமிழிதைத் தெள்ளிதி னியற்றி 
	வருபுல வோர்க ளிருசெவிக் கமுதெனப் 
	பொருந்திய சுவைப்பா விருந்தெனத் தந்து 
	வரம்பெறுஞ் சீர்த்தி நிரம்பவெய் துறூஉங் 
	கண்ணியன் சுப்ர மண்ய நாவலனே. 
---------------
 ஆக்கியோன் முன்னுரை   
	எனது சிற்றுரையாகிய இதுதான் உண்மையாகப் பிள்ளைத்தமிழாகும். ஏனைப் பிள்ளைத்தமிழ்கள் எல்லாம் பெரியோர் தமிழாம். எனக்குப் பாட்டுப்பாடும் பழக்க மில்லை. அதிலும் கல்வித்துறை போகிய பெரியோராலேயே செய்யப்பெறும் தமிழ்ப் பிரபந்தவகையில் ஒன்றாகிய "பிள்ளைத்தமிழ்" என்றால் என்றால் எனக்கும் அது பாடுதற்கும் வெகு தூரம். ஆனால் என்னையோ இதில் முயன்றது? என்றால், அதற்குப் பிள்ளை விளையாட்டே காரணம் என்பேன். திருப்புக்கொளியூர் அவிநாசி என்பது கொங்குநாட்டுத் திருத்தலங்களில் ஏழனுள் ஒன்றாகும். அது கோவை மாநகருக்குச் சுமார் 20 மைல் தூரத்தில் உள்ளதாகும். எளியேன் அத்திருப்பதிக்குத் தரிசனார்த்தம் பலசமயங்களில் போய் வருவது உண்டு. எனது பிதா காலஞ்சென்ற வித்வான் ஸ்ரீ கந்த சாமி முதலியார் அவர்கள் இத்தலபுராணத்தை அச்சியற்றியதுடன் வசனரூபமாக அதன் சரிதங்கள் எழுதிப் புராணத்தில் சேர்த்ததோடு பெருங்கருணையம்மை பதிகம் என ஒன்றும் சேர்த்து அச்சியற்றி வெளிப்படுத்தினார்கள். அதனைப் பார்த்ததாகிய புண்ணியமும் சேர்ந்து அடிக்கடி இத்தலத்திற்கு யாத்திரை செய்யத் தூண்டியது. இந்நியதியானது ஒவ்வொரு ஆண்டுகள் தோறும் ஆடிமீ ஒரு வெள்ளிக்கிழமை தரிசனம்செய்யும் வழக்கத்திலே என்னைச் செலுத்தியது. அவ்வாறு சுமார் 6 ஆண்டுகளின் முன் ஒருமுறை இத்தலத்திற்கு யாத்திரை செல்லுங்கால் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களிலே ஒவ்வோர் பருவங்களுக்கும் ஒவ்வோர் கவியாகக் காப்புடன் 11 கவிகள் எழுதி அம்மையார் பாதமலர்களிலே சூட்டி வணங்கலாமென்னும் ஒரு ஆலோசனை தோற்ற அவ்வாறே செய்து அம்மையாரிடம் விண்ணப்பித்து மகிழ்ந்தேன். அதன்பின் முறையாக அதனையே ஆதரவாக வைத்துப் பிரபந்த முழுவதும் செய்து முடிக்கலாம் என்னும் ஆசை தூண்டிவிட உலகச் சூழலிலே அலையுங் காலத்து அவ்வப்போது கிடைத்த சிற்சில அவகாசங்களினி டையில் தோற்றிய அற்ப அறிவாற்றல் கொண்டு திருவருட்டுணையாலே இதனை இயற்றி இத்தனை யாண்டுகளின் பின் வெளியிட்டேன். இத்தமிழானது எனது மந்த மதியையும், இதிற் காணும் சில் பொருட்கள் எனது வெள்ளறிவினையும் வெளிப்படுத்துவனவாம். ஆயினும் உயர்திணையிற் போலவே அஃறிணையிலும் செறிந்து அருள் கொடுக்கும் அன்னையார் என் மொழியையிகழ்ந்து தள்ளார். என்னையுணர்ந்து எனையுடைமையாகக் கொண்ட பெருமக்களும் இகழார். ஏனையோர் இகழின் அது பொருளல்ல. 
"கோழைமிட றாககவி கோளுமில் வாகவிசை கூடும்வகையால் 
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசன்' 
என்று எமது ஆசாரியமூர்த்திகள் ஆணையிட்டபடி எனது புன்சொற்களை இகழாது ஏற்றுக்கொள்ளுதல் மாத்திரமல்ல; எம்பிராட்டியார் "இவன் ஏழையடியான்" என மகிழ்ந்து என் மனத்தே நினைத்தவை கொடுத்து இன்னருள் சுரப்பார் என்பது துணிபு. பிரமன் தெய்வரம்பையர் முதலிய தேவர்களும், நாககன்னியாதி பில உலகத்தாரும், தாடகையாதி 
அசுரரும், தருமசேனன் முதலிய அரசரும், சங்ககன்னன் வியாதன் ஆதிய கொடிய வேடர் முதலிய இழிதொழிலாரும், எஞ்ஞகுத்தன் போன்ற உலுத்தமாக்களும், காகம், ஐராவதம் ஆகிய விலங்குகளும் தமது பெருங்கருணைக்கு இலக்காயினர் என்பதை வெளியுறத் தேற்றியருளிய அம்மையார் ஆன்மாக்களிற் கடையேனாயினும், அவர் திருவாயிலை யடைந்தேனாதலின் என்னைப் புறக்கணித்து ஒதுக்கி விடுவரோ? அருள் செய்தேற்றுக் கொள்ளாதொழிவரோ? இத் துணிபு பற்றியே புன்சொல்லனாயினும் இத்துதி செய்யத் துணிந்தேன். பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தின் அமைப்பையும், இலக்கணத்தையும், உட்கிடையையும், மனவாசகங்கடந்த சிற்சத்தியைப் பிள்ளையாகத் துதிக்கும் கவியின் கருத்தையும், மாதவச் சிவஞான யோகிகள் வரையறை செய்துகாட்டி அருளியிருக்கின்றார்கள். 
மனம்வாக்கி லெட்டாக சிற்சத்தி யாயிடினும் 
    மன்பதைக ளுய்யவேண்டி 
	மலையரையன் முதலோ ரிடத்தவ தரித்தொரு 
    மடப்பிள்ளை யாய்வருதலால் 
	இனநாட்டி வாழ்த்திடுவர் பெரியோர்கள்; வாழ்த்தற் 
    கெடுத்தவித் தாரகவிதாம் 
	எண்ணிடிற் பலவாம்; அவற்றிற்கு முதலாக 
    வேன்றபெண் பிள்ளைக்கவி 
	முனிவோட்டு காப்புநற் கீரைதால் சப்பாணி 
    முத்தம்வா ரானைமற்று 
	மொழியுமம் புலிப்பருவ மம்மானை நீரூசன் 
    முறையினை யிருபருவமும் 
	நனிவாய்த்த வகவலின் விருத்தத்தி னாற்பாடி 
    நவிலுமுத் திங்கண்முதலா 
	நயந்தமூ வெழுதிங்கள் அளவினிற் கேட்பிக்கு 
    நன்மைய தெனப்புகல்வரே. 
               		-அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ். 	
	பெரியோரைப் பார்த்துச் சிறார்கள் சிற்றிலிழைத்து மணற் சோறுண்டு விளையாடி மகிழ்தல் போல நானும் இக்கவிபாடி மகிழ்வேனாயினேன். இதிலே துதிகள் எனப் பத்துப்பாட்டுகள் ஏனைப் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களிலே சாதாரணமாகக் காணப்பெறாமலிருந்தும் ஆசையினாற் செய்து சேர்த்துள்ளேன். இதிற் பலவகைப்பட்ட குற்றங்களும் மலிந்து கிடக்கும் என்பதையும், மாணாக்கர்களுக்கு வழுவாசகங்களை உதகரித்துக் காட்ட வேண்டுமாயின் ஆசிரியர்கள் இதனைத் தேடுவர் என்பதனையும் நான் அறிவேன். பெரியோர்கள் பொறுத்தருளி என்னைத் தேற்றித் திருத்துவார்களாக. 
கோவை, சேக்கிழார் நிலயம், 		        	க.சுப்பிரமணியன்
குரோதன ஆண்டு மார்கழித் திங்கள் 
	--------------------------------------
 ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த 
திருப்புக்கொளியூர் அவிநாசித் திருப்பதிகம்  
உ :  திருச்சிற்றம்பலம் 
	பண்: குறிஞ்சி 
எத்தான் மறக்கே னெழுமைக்கு மெம்பெரு மானையே 
உற்றாயென் றுன்னையே யுள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற் 
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே 
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே. 	         		1
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாமணியே 
யொழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே 
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை 
இழியாக் குளித்த மாணியென் னைக்கிறி செய்ததே.          		2
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்காற் 
கொங்கே புகினும் கூறைகொண் டாறலைப் பாரில்லைப் 
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே 
யெங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.	          3
 
உரைப்பா ருரைப்பவை யுள்கவல் லார் தங்க ளுச்சியாய் 
அரைக்கா டரவா வாதியு மந்தமு மாயினாய் 
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே 
கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.	         	4
 
அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ் 
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப் 
புரங்கெட வெய்தாய் புக்கொளி யூரவி நாசியே 
குரங்காடு சோலைக் கோயில் கொண்ட குழகனே.	         		5
நாத்தானு முன்னைப் பாட லின்றிநவி லாதென்னாச் 
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய் 
பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே 
கூத்தா வுனக்குநா னாட்பட்ட குற்றமுங் குற்றமே. 	         		6
மந்தி கடுவனுக் குண்பழ நாடி மலைப்புறள் 
சந்திக டோறுஞ் சலபுட்ப மிட்டு வழிபடப் 
புந்தி யுறவாய் புக்கொளி யூரவி நாசியே 
நந்தி யுனைவேண்டிக் கொள்வே னரகம் புகாமையே. 	         		7
பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக் 
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னர் காண்பனான் 
பூணா ணரவா புக்கொளி யூரவி நாசியே 
காணாத கண்கள் காட்ட வல்லகறைக் கண்டனே. 	         		8
நள்ளாறு தெள்ளா றரத்துறைவா யெங்க ணம்பனே 
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் றோலை விரும்பினாய் 
புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை 
யுள்ளாடப் புக்க மாணி யென்னைக்கிறி செய்ததே. 		         	9
நீரேற வேறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப் 
போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக் 
காரேறு கண்டனைத் தொண்டனாரூரன் கருதிய 
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.          			10
---------------------
 	இது முதலையுண்ட பிள்ளையை யழைப்பித்தருளிய  திருப்பதிகம்.  
குறிப்பு :- இத்திருப்பதிகத்திலே 2 -வது 9-வது திருப்பாசுரங்களிலே குளத்திலே அந்தணப் பிரமசாரி குளிக்க இறங்கியபோது முதலை விழுங்கிய செய்தி குறிப்பிக்கப் பெற்றிருக்கிறது காணலாம். 
அவிநாசி என்பது சுவாமி பெயர்; என்றும் அழியாதவர் என்பது பொருள். இப்பதிகத்திலே அவிநாசியே! என்று விளித்திருத்தல் காண்க. 
நள்ளாறு :(9-வது திருப்பாசுரம்) இத்தலத்தின் திருநதி. 
	"உரைப்பார் உரைப்பலை” என்ற 4-வது திருப்பாசுரம் முடியும் முன் முதலை வாயினின்றும் பிள்ளையை இயமன் தந்தனன் என்பது பெரிய புராணம். 
நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லா நிகழ்வித்துப் 
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே யவிநாசி யப்பா பாண்டி வெள்ளமே 
தெரிய வரிய பரஞ்சோஞ்சோதி செய்வ தொன்று மறியேனே. 
      		(திருவாசகம் ஆனந்தமாலை.) 
தலைவி தடமுலை மேனின்ற தையல் 
தொலைவிற் றவஞ்செய்யும் தூய்நெறித் தோகை 
கலைபல வென்றிடுங் கன்னி யென்னுள்ள 
நிலைபெற விங்கே நிறைந்துநின் றாளே. 
       			(திருமூலர் திருமந்திரம்) 
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிரன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவியவி நாசியை; வேடர் சுற்றம் 
படுத்தான் றிருமுருகன் பூண்டியினிற் பராபரத் தேன் 
மடுத்தா னவனென்பர் வன்றொண்ட னாகின்ற மாதவனே. 
      	(பதினோராம் திருமுறை. திருத்தொண்டர் திருவந்தாதி.) 
	மைந்தன் றன்னை யிழந்ததுயர் 
    மறந்து நாள்வந் தணைந்ததற்கே 
	சிந்தை மகிழ்ந்தார் மறையோனு 
    மனைவி தானுஞ் சிறுவனையான் 
	அந்த முதலை வாய்நின்று 
    மழைத்துக் கொடுத்தே யவிநாசி 
	யெந்தை பெருமான் கழல்பணிவே 
    னென்றார் சென்றா ரிடர்களைவார். 	      	9
	இவ்வா றருளிச் செய்தருளி 
    யிவர்கள் புதல்வன் றனைக்கொடிய 
	வெவ்வாய் முதலை விழுங்குமடு 
    வெங்கே யென்று வினைவிக்கேட் 
	டவ்வாழ் பொய்கைக் கரையிலெழுந் 
    தருளி யவனை யன்றுகவர் 
	வைவ்வா ளெயிற்று முதலைகொடு 
    வருதற் கெடுத்தார் திருப்பதிகம் 		      	10
	உரைப்பா ருரையென் றெடுத்ததிருப் 
    பாட்டு முடியா முன்னுயர்ந்த 
	வரைப்பான் மையினீ டடம்புயத்து 
    மறலி மைந்தனுயிர் கொணர்ந்து 
	திரைப்பாய் புனலின் முதலைவயிற் 
    றுடலிற் சென்ற வாண்டுகளுந் 
	தரைப்பால் வளர்ந்த தெனநிரம்ப 
    முதலை வாயிற் றருவித்தான். 		      	11
	பெருவாய் முதலை கரையின்கட் 
    கொடுவந் துமிழ்ந்த பிள்ளைதனை 
	யுருகா நின்ற தாயோடி 
    யெடுத்துக் கொடுவந் துயிரளித்த 
	திருவா என்றன் சேவடிக்கீழ்ச் 
    சீல மறையோ னொடுவீழ்த்தாண் 
	மருவார் தருவின் மலர்மாரி 
    மொழிந்தார் விசும்பில் வானோர்கள். 	      	12
	(பெரிய புராணம் வெள்ளானைச் சருக்கம்) 
	நாட்டா ரறிய முன்னாளி 
    னந்நா ளிறந்த வைம்படையின் 
	பூட்டார் மார்பிற் சிறியமறைப் 
    புதல்வன் றன்னைப் புக்கொளியூர்த் 
	தாட்டா மரைநீர் மடுவின்கட் 
    டனிமா முதலை வாய்நின்று 
	மீட்டார் கழலே நினைவாரை 
    மீளா வழியின் மீட்பனவே. 
        (பெரிய புரா. நமிநந்தியடிகள் நாயனார் புரா. 33) 
--------------------------------------
உ : திருச்சிற்றம்பலம் 
 பெருங்கருணாம்பிகை பதிகம்  
	காப்பு 
        	        வெண்பா 
மங்களஞ்சேர் புக்கொளியூர் வாழ்கருணை நாயகிமேற் 
பொங்குதமி ழாற்பதிகம் போற்றவே - யிங்கென் 
கைத்திருந்து செஞ்சொல் லருளுமைந்து கைக்கற் 
பகத்தினிரு செம்பொற் பதம். 
       		------------
	திங்க டங்குசெஞ் சடைமுடி யமலர் 
    தென்மு கத்தரா யோகமர் தலினா 
	லிங்கு வாழ்நர ருன்னையல் லான்மற் 
    றியாவ ரைச்சர ண்டைகுவ ரியம்பாய் 
	சங்க கன்னனென் றுரைசெயும் பாவி 
    தன்னின் மிக்கநா னென்னினு மென்மேற் 
	கங்கை தங்குதென் காசியின் வாழ்வே 
    கருணை செய்பெருங் கருணைநா யகியே.       	1
	தருணை யாகுநீ வேறலை சிவத்தின் 
    சத்தி யாந்திரு வருளுரு வென்று 
	பொருணை யாயிகர் புகலுவ ரிந்தப் 
    புவியின் மானுடர் பொய்யிரு டுமிக்கும் 
	அருணை யாதிபஃ றலந்தொறு மப்பே 
    ரணிக லாதவி நாசியாந் தலத்திற் 
	கருணை யாமியற் பெயர்புனைந் திருந்தாய் 
    கருணை செய்பெருங் கருணை நாயகியே. 	      2
	மாப்பல் சைவகேத் திரத்துமோ ருறுப்பு 
    வடிவுபண் பெனும் பெயர்கொ டேவியர்கை
	 கூப்பு வார்க்கவி நாசமென் றுயர்த்த 
    கொடியுங் காரணப் பெயருங் கொண்டுளரோ 
	தீப்பெ ரும்பவ முடையருந் துயரந் 
    தீரெனப் பணிந் தேத்துவ ராயிற் 
	காப்ப துன்கட னாதலா லென்மேற் 
    கருணை செய்பெருங் கருணை நாயகியே.       	3
	வள்ளல் யாமெனப் பெயர்புனைந் திருந்தோர் 
    வறிஞர் தங்கடை வாயில்வந் துற்றாற் 
	றள்ள னீதியோ வாங்ககே போலச் 
    சர்வ சீவத யாபரி யெனப்பே 
	ருள்ள நீயெனக் கேட்டுனை யடைந்தேற் 
    கொன்றும் பேசிடா துறுவது மழகோ 
	கள்ள லம்பவண் டரற்றுபூங் கோதாய் 
    கருணைசெய் பெருங் கருணை நாயகியே.       	4
	நல்ல தாகிய தவத்தினின் முயன்று 
    நணுகு றாவகை தடுத்தமர் விளைத்திங் 
	கல்ல லாக்குறு மடவர லியர்கட் 
    கழலிடைப்படு மிழுதென வுருக 
	வல்ல தாகுமென் மனமுனை யேத்தி 
    வாழ மாத்திர மொருசிறி துருகாக் 
	கல்ல தாயினுங் கசிந்தினி துருகக் 
    கருணைசெய் பெருங் கருணை நாயகியே. 	      5
	மண்ணும் விண்ணுமுள் பொருளெலாம் பொதிந்து 
    வைப்பினும் மிடந் தருமென துள்ளம் 
	பண் ணு லாவுநின் புகழெனும் பனுவற் 
    பரவை தன்னிடை யோரணு வளவு 
	மெண்ணு தற்கிடந் தந்தில திதனுக் 
    கேது செய்குவன் ஏழையே னந்தோ 
	கண்ணு தற்பிரா னுண்மகி ழமுகே 
    கருணைசெய் பெருங் கருணை நாயகியே.       	6
	படைத்த லாதிமுத் தொழிறரும் பார்வை 
    படைத்த நீபல கோடி யண்டத்தி 
	னிடைக்க ணுள்ளவிப் புவியினி லளவுக் 
    கெல்லை யில்லதா முயிர்த்தொகை யதனுண் 
	முடைத்த லைச்சிறு நாயினே னுய்ய 
    முழுத்த நோக்கமும் வழங்க லெற்றிற்குக் 
	கடைக்க ணோக்கமோர் சிறிதளித் தென்மேற் 
    கருணைசெய் பெருங்கருணை நாயகியே.       	7
	அந்த ரத்தவ ரயனரி முதலோ 
    ரரிவை மார்கள மமங்கல முறாது 
	முந்த டர்த்தெழு மால காலத்தை 
    முதலை யுண்டதோர் மதலையை யழைத்த 
	சுந்த ரப்பெயர்த் தொண்டனார் கொடுப்பத் 
    துய்த்த நாயகா கழுத்தின மட்டடங்கக் 
	கந்த ரத்தினின் மங்கலம் புனைந்தோய் 
    கருணைசெய் பெருங் கருணை நாயகியே. 	      8
	மாசி லாச்சிவ புண்ணிய மியற்ற 
    வலியி லாததோர் வாயசந் தனது 
	நாசி யாலொரு சோற்றினைச் சிதற 
    நல்ல புண்ணியந் தந்தரு மறையும் 
	பேசி டாப்பெரும் பதவியும் தந்த 
    பெருமை கேட்டுநின் னிருசர ணடைந்தேன் 
	காசி யாமவி நாசியின் வாழ்வே 
    கருணைசெய் பெருங் கருணை நாயகியே. 	      9
	செல்வ மேவெஞ்ஞ குத்தனா முலுத்தச் 
    செட்டி பெற்றது நாக கன்னிகைமுன் 
	வல்வி ரைந்துநோற் றடைந்தநல் வரமு 
    மத்த மேவும்வெள் வாரண முதலாம்
 	பல்விலங்குக ளருள் பெறும் பரிசும் 
    பகரக் கேட்டுநின் பதமல ரடைந்தேன் 
	கல்வி மேவுபுக் கொளிவள ரரசே 
    கருணைசெய் பெருங் கருணை நாயகியே. 	      10
 இஃது இந்நூலாசிரியனுடைய பிதாவும்கோயமுத்தூர் வித்துவானுமாகிய கந்தசாமி முதலியாரவர்களால் ‘
துதி செய்யப்பெற்றது. 
------------------------------
	உ 
	திருச்சிற்றம்பலம் 
 திருப்புக்கொளியூர் அவிநாசிப் 
பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ் 
 காப்பு  
    விநாயகர் துதி 
	சீர்கொண்ட வானகத் திமையவர் குழாத்தினைச் 
        செயிர்கய முகத்தசுரனாம் 
    செறுபகை தவிர்க்கநற் கோடொரா யுதமாய்ச் 
        செயங்கொண்டு வான்றழையவும் 
	பார்கொண்ட பல்லுலக மீதினில் நினைப்பவர்கள் 
        பான்மைபெற் றுயர்ந்துவரவும் 
    பண்பின்வரு பிரணவன் வரமுதவு கரிமுகன் 
        பாதபங் கயம்பணிகுவேன் 
	ஏர்கொண்ட பங்கயந் தங்குமிரு செல்விமார் 
        இருமருங் கும்பரவுநல் 
    இனியபுக் கொளிநகர மதிலென்னை யடிமைகொண் 
        டெந்நாளு மருளுமம்மை 
	தார்கொண்ட தண்புயக் கருணையம் பிகைதமிழ் 
        தமியனுங் கருவியாகத் 
    தான்படைத் திடர்காத் தளித்தருளி யென்றுந் 
        தழைத்திடச் செய்யுமென்றே. 
ஸ்ரீ பட்டீசர் 
	பாசமார் மலமொருவி யாருயிர்கள் தவிரும்வகை 
        பார்க்கவுறு பரிசுகாட்டும் 
    பண்பின்[1]வட கயிலைவளர் பிரமதீர்த் தமுமுறப் 
        பகர்பிறப் பிறப்பிலாமை 
	மாசற வுயிர்க்கருள் வகைகாட்ட வவ்வகை 
        வழங்கு[2]மிரு தருக்கள்காட்டி 
    மன்3பசுக் கூட்டங்கள் காக்குநா யகனென்ன 
        வருபெயர் காட்டிநின்றே 
	பேசுதற் கினிமையுறு பேரைவாழ் பட்டியெம் 
        பெம்மானை [3]யேத்தெடுப்பாம் 
    பிறங்கு முயிரவைக்கெலாம் இங்ஙன நோற்றுநீர் 
        பெருமானை யடைகவென்றே 
	மாசிலா மெய்த்[4] தவஞ் செய்து காட்டும்மலை 
        வல்லிநற் கருணைவல்லி 
    மன்னுபுகழ் சொல்பசுந் தமிழுமிவ் வேழையேன் 
        வாக்கினிற் றழைகவென்றே. 	      	(1) 
---
	[1]. வடகயிலை - பேரூரிற் சுற்றாலயங்களில் ஒன்று. பிரம தீர்த்தம் அதில் உள்ளது. இதில் இட்ட செம்பிற் களிம்பு போக்கிப் பொன்னிறங்காட்டும். 
	[2]. இருதருக்கள் - பிறவாப்புளி ; இறவாப்பனை. 
	[3]. பசுக்காக்கும் நாயகன் - பட்டீசர் 
	[4]. தவஞ்செய்து காட்டும் - கருணாம்பிகையின் தவக்கோலம்; இதற்குத் தனியாலயம் உள்ளது. 
---------
	துதி 
        ஸ்ரீ பச்சைநாயகி யம்மையார் 
	[1]புதுமணந் தங்குமொரு நாடு தனி லேபெரும்[2] 
        பொருள் தங்குநக [3]ரரசுவாழ் 
    போதகன் றன்னொடுங் கூடியே தினமுமிப் 
        புன்மையேன் பூசைதனிலும் 
	இதுவுமோர் பொருளென்ன வருண்மிகும் பரிவினொடு 
        [4]மிங்கெழுந் தருளுமம்மை 
    எழில்மருவு பச்சைநாயகி பாத தாமரை 
        யிணைமலர்களைப் போற்றுவேன் 
	மதுமலர்த் தொடையிதழி நதியுமதி யும்மரவும் 
        மன்னுசடை முடியவற்கு 
    5வளர்தாயு மகளுமாய் வல்லதா ரமுமா 
        மகிழ்வொடும் புவிவளர்ப்பாள் 
	முதுதவஞ் செய்கின்ற முன்னவள் பின்னையென் 
        மூள்பிழையெலாம் பொறுத்தே
    முழுநலஞ் செய்பெருங் கருணையம் பிகைதமிழ் 
        மொழிநலந் தருகவென்றே 	      		(2)
------------------------------------------
	[1]. புதுமணந்தங்கு நாடு - கொங்குநாடு 
	[2]. பெரும்பொருள் தங்குநகர் - பேரூர் 
	[3]. அரசு - அரசமரம் தலவிருட்சம்: அதின்கீழ் அரசனாக - (இரட்டுறமொழிதல்.) 
	[4]. இங்கெழுந்தருளுமம்மை - இதன் ஆசிரியர் ஆன்மார்த்த பூசைக்குரிய மூர்த்தி. 
	[5]. வளர்தாயுமகளுமாய் தாரமுமாகி -திருமூலர்:- "தாயுமகளும் நற்றாரமு மாவளே" 
	திருவாசகம் :- "இமவான்மகட்குத், தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்''
-----------
குருமரபு 
	பனிவளரு நீள்குடுமி மலையின் மேவும் 
        பண்ணவனார் தெருட்டிடமுற் பொருளு ணர்ந்து 
    பகர்பெருமைக் குருமரபு தன்னி லாங்கே 
        பணிமுதலாய்ப் புரி நந்தி பெருமானாதி
	தனிமொழிசேர் பரஞ்சோதி யாரு மிந்தத் 
        தாரணியில் [2]மெய்கண்டா ராதி யாகச் 
    சங்கையற வுலகுய்யச் சைவ மார்க்கந் 
        தழைத்திடவே சொற்றிடுமாக் குருமா ரெண்மர் 
	முனிமுதல்வர் பதமலர்கள் மனத்துள் வைப்பாம் 
        முன்னவனார் பூசைதனில் முன்னு மேழு 
    மொழிகுருமார் தமிலமர்ந்தே யுயிர்கட் கீங்கு 
        மோனமுறு ஞானநிலை தேற்றி யாங்கே 
	தனிமுதல்வன் றுணையாகி யுயிர்கட் கெல்லாம் 
        சார்வளிக்கப் [4]பரமனுக்கு முறுதி செய்யும் 
    தலைவியெங் கருணையுமை தன்மேற் சொல்லும் 
        தமிழுமெளி யேமுய்யத் தழைக வென்றே.        (3)
 
	[1]. நந்தி பெருமானாதி - மகாகைலாயத்திலே நந்திதேவர் முதல் பரஞ்சோதியார் வரை நால்வர் குருமார். 
	[2]. மெய்கண்டரராதி - பூவுலகிலே மெய்கண்டாராதி நால்வர் சந்தானாசாரியர்கள். 
	[3]. ஏழுகுருமார் - ஆன்மார்த்த சிவபூசையிலே குறிக்கும் சதாசிவர், அனந்தர், சீகண்டர், அம்பிகை, கந்தர், விட்டுணு, பிரமர், என எழுவர் குருமார். 
	[4]. சிவபெருமானினின்றும் நீங்காத அருட்சத்தி 
--------------
திருஞான சம்பந்த மூர்த்திகள் 
	பனியிமய மால்வரையி னுச்சியிற் பரந்தபாற் 
        கருணையங் கடலெழுந்தே 
    பாரகப் பொய்கையின் கரைவந்து பொற்கிணப் 
        பால்மட்டி லூட்டவுண்டு 
	தனியுலக மெங்கும் பரந்துசென் றாங்குயிர்ப் 
        பைங்கூழ் தழைக்குமாறு 
    தண்ணருள் மாரிகொடு வன்பசியு நோய்முதல் 
        தவிர்த்துநற் போகமுய்க்கும் 
	கனியருட் சிறுபெரும் புயலினிரு கான்மலர் 
        கருத்தினொரு கான்மலருமால் 
    காசினியி லோர்தடக் கரையினன் றொருகரா 
        முண்டதொரு மதலைமேவ 
	நனியருள் நாவலர்க் குதவுறுங் கருணைமுகில் 
        நளினநற் பாதமலர்மேல் 
    நன்மையொரு சிறிதிலா நாயினேன் சொல்லுமிது 
        நற்றமிழெனத் தழையவே. 	      		(4)
------------
திருநாவுக்கரசு சுவாமிகள் 
	போற்றும் பெருமைத் தமக்கையர்பாற் 
        புனித நீற்றாற் புறச்சமயப் 
    புன்மை தவிர்த்துப் புண்ணியராய்ப் 
        போந்தே எங்கு மிடர்நீக்கி 
	ஏற்றுக் கொடியா ருண்மைநெறி 
        இனிதி னுலகின் விளக்கியே 
    இறைவி தன்னோ டிறைவனுறும் 
        எழிலார் கயிலைக் கோலமதை 
	யாற்றிற் கண்டே உலகளித்த 
        அரசின் செய்ய பாதமலர் 
    அகத்துள் வைத்துத் துதித்திடுவாம் 
        அவிநைப் பதிவாழ் உமையவளைச் 
	சாற்றிப் புகழுந் தமிழ்மாலை 
        தமியே னகத்து முதித்துமிகத் 
    தழைத்துப் பரம னாரருளாற் 
        றகவின் வளர்க வெனநினைந்தே.       	(5)
---
சுந்தரமூர்த்தி சுவாமிகள் 
	கயிலைமலை மேலிருந்த பரிசி னீங்கே 
        கண்ணுதலார் பணியியற்றும் கருணை யாளன் 
    1காணாத ஊழ்வினையும் 2செய்வி னையும் 
        காண்பரிசிங் கிதுவென்னக் காட்டு மாறு 
	பயில்கயிலை தனிற்கேட்ட வரத்தி னாலும் 
        பரமனார் தடுத்தாட்கொள் பான்மை யாலும் 
    பாருய்யத் தெருட்டுமொரு பான்மை யாளன் 
        பகர்கொங்கின் மும்முறைசேர் திருவா ளன்முன் 
	அயில்வாயக் கராமுண்ட பிள்ளை தன்னை 
        அழைப்பித்துத் தந்தருளு மருளி னாலே 
    3ஆணவத்தி னான்மவகை மீளச் செய்தே 
        ஐயனொடு மடைவிக்கு மாறு தந்தோன் 
	பயில்தொண்டத் தொகையருளிச் சிவமாம் போதப் 
         4பன்னிரண்டா முண்மைக்கோ ரியல்பு தந்தோன் 
    பதமலர்க ளேத்தெடுப்பாம் அவிநை வாழும் 
        பரைதமிழின் பண்புதழைத் தோங்க வென்றே.      	(6)
--
	[1].ஊழ்வினை - முன் செய்ததன் பயனாய் வருவது. இது அனுபவித்தன்றிக் கழியாதது. இங்கே பரவையார் சங்கிலியார் திருமணம். 
	[2]. செய்வினை - இப் பிறப்பிற் செய்யப்படுவது. இது தடுக்கக் கூடியது. இங்கே சடங்கவி சிவாசாரியார் புத்திரியின் மணம். பிராரத்தமட்டில் அனுபவித்து வருதலன்றிப் புதிய வினை தேடிக்கொள்ளாதபடி அருள்செய்யச் சிவபிரானைச் சுந்தரமூர்த்திகள் வரங்கேட்டுப் பெற்றமை - (ஆன்மாக்கள் அவ்வாறே அறிந்தனுட்டித்தற் பொருட்டு.) 
 	[3]. முதலையுண்ட பாலனை அழைத்துத் தந்தையுடன் சேர்த்தது; ஆணவத்தால் விழுங்கிய உயிர்களை ஆசாரியன் மீள்வித்துச் சிவத்துடன் சேர்த்தல் போல். சிவப்பிரகாசர்:- நால்வர் நான்மணி மாலை 
	[4]. பன்னிரண்டாவது சூத்திரம் அடியார்கூட்டத்தி னிலக்கணம். அதற்கு இலக்கியம் திருத்தொண்டத் தொகை.
---------------
மாணிக்கவாசக சுவாமிகள் 
	பெருந்துறையிற் கயிலைமா மலைமேவுங் கடற்படிந்து 
        பேணு மன்பு 
    பெருகியிட வாய்மடுத்துத் தழைத்தெழுந்தே உலகுயிர்கள் 
 			பிறழா வண்ணம் 
	தருந்தொழிலால் வெந்துயரின் கோடைமாத் தலைகரப்பத் 
        தண்மை செய்து 
    தழைவித்துத் தண்ணருள்செய் மாரியினாற் பேசாத 
        தகைமை யோரும் 
	விருந்துகொடு சிவமொழிகள் பயிலும்வகை யியற்றியருள் 
        மேகத் தின்சீர் 
    மென்கழல்கள் அகத்துறவைத் தேத்தெடுப்பா மிகுந்தபுகழ்க் 
        கொங்கு தன்னிற் 
	றிருந்துமவி நாசியில்வாழ் பெருங்கருணை யம்மையின்மேற் 
        செப்பும் பாட்டுச் 
    சிறியேன்புன் மனத்தகத்து நாவிடத்தும் செம்மைபெறச் 
        செய்க வென்றே. 			      	(7)
--------
திருத்தொண்டர்கள் - சேக்கிழார் சுவாமிகள் 
	உலகெ லாந்தனி புரந்திடு கின்ற 
        வுண்மை யங்கது நிற்கமற் றாங்கே 
    உம்பர் நாட்டினை ஒருதனி புரந்திவ் 
        வுலகங் காவல்செய் தருளிடு மண்ணல் 
	நலஞ்செய் தன்றிரு வாக்கினால் நவின்று 
        நானி லத்தினோ ரின்பொடு முய்ய 
    நல்கு மாத்தொண்டத் தொகையினர் பாத 
        நளினம் வாழ்த்திநல் வாழ்வுறு மதனோடு 
	அலகிலா அவர் திறமது விரித்திங் 
        கருள்செய் சேக்கிழார் பதமலர் பணிவாம் 
    அன்னை யாயுல கியாவையு மருளி 
        அப்ப னுக்கடி மைத்திறஞ் சாரப் 
	புலமை தந்தருள் சத்தியா யெங்கும் 
        பூர ணக்கரு ணையினொடு மமரும் 
    புக்கொ ளிப்பெருங் கருணைநா யகியைப் 
        புகலு மித்தமி ழினிதினோங் கிடவே. 	      	(8)
--------
வித்தியாகுரு மரபு - தீட்சாகுரு மரபு 
	சீராருந் துறைசைவளர் [1]சிவஞான குரவன்முதற் 
        றேசின் மன்னிச் 
    சிறந்ததனித் திருச்சிற்றம் பலவன்வரை வருவித்தை 
        செப்பு மேன்மை 
	ஏராருங் குரவன்மார் பதமலர்கள் போற்றிநல 
        மெய்த வாங்கே 
    எழிலாரும் பொழிலார்கச் சியின் [2]ஞானப் பிரகாச 
        னிணைத்தாள் போற்றிப் 
	பாராருந் திருத்தில்லை வாழ் [3]முத்துக் கற்பகனார் 
        பதங்கள் போற்றிப் 
    பன்னுபுக ழவிநாசி யப்பனொரு பங்குடையாள் 
        பகருஞ் சீர்த்தி 
	ஏராரும் வித்தைக்கு முத்திக்கு முதல்வியா 
        மிறைவி பாதத் 
    தியம்புமெளி யேனவிலும் புன்சொல்லு மினிதுதழைத் 
        திடுக வென்றே.		      	(9)
-------
	[1]. திருவாவடுதுறை மாதவச் சிவஞானமுனிவர் முதல் கோவைத் திருச்சிற்றம்பலம் பிள்ளை வரை வித்யாகுரு பரம்பரை சிவஞானமுனிவர், கச்சியப்பமுனிவர், கந்தப்பையர், சரவணப் பெருமாளையர், சந்திரசேகரம் பிள்ளை, கந்தசாமி முதலியார், திருச்சிற்றம்பலம் பிள்ளை. 
	[2]. காஞ்சீபுரம் - தொண்டைமண்டலாதீனம் ஸ்ரீ ஞானப்பிரகாசதேசிகர், இதன் ஆசிரியர்க்குச் சமய விசேட தீக்கைகள் அருளிய குரு. 
	[3]. சிதம்பரம் உலகமூர்த்தி தேசிகர் மடம் ஸ்ரீ முத்துக்கற்பகக் குருக்களையா ; இதன் ஆசிரியர்க்கு நிர்வாண தீக்கை அருளியவர். 
 ------------
	தமிழ்த்தெய்வம் 
 
	இறைநூலும் தரை நூலும் தன்னுள்ளே இலகிடவோர் 
	குறைவில்லா வளம்பெருகக் குலவுறுமாத் தமிழணங்கே 
	நிறைவாகி யருள்ஞான சத்தியா மம்மையின்பால் 
	முறையாகத் தமிழென்னால் மொழிவிப்ப துன்னருளே. (10) 
	-----------------------------------------
  காப்புப் பருவம் 
    திருமால் 
	கருங்கடல் முகந்தெழிலி கார்பெறவு நின்றுலகு 
        காப்பினைப் பெறுமென்பரால் 
    கண்ணகன் ஞாலம் தன்றிவிண் பாதலம் 
        கண்டபிற வண்டமெல்லாம் 
	ஒருங்குகா வல்புரியு மழையொன்று கார்கோள் 
        [1]கவர்ந்துவெண் புனல்விட்டபோல் 
    ஒண்மைபெறு வெண்கடற் றுயில்கொண்ட கருமுகில் 
        உவந்தினிது நின்று காக்க 
	மருங்கெலாந் தொன்மையுடை யார்தொடர்பு நட்டென்ன 
        [2]வளர்பெண்ணை யொருபாலினும் 
    3வான்கங்கை நன்னதித் தீரமொரு பாலினும் 
        வைத்துநின் றிலகுமதனாற் 
	பருங்கைமத யானையின் னுரிபோர்த் தளித்தவெம் 
        பரமனைநிகர்த்த பதியாம் 
    பண்புபெறு மவிநாசி வாழ்கருணை வல்லிசிற் 
        பரவல்லியம் மைதனையே.		      	(1)
------
[1]. கருங்கடலிலே நீர்பருகிக் கார் எனவரும் மேகம் ஒவ்வோர் புடை ஒவ்வோர் உலகம் காக்கும். 
எல்லாவுலகிற்கும் காவல்புரிய வேண்டுதலின் திருமாலாகிய மேகம் கடலின் கருமை முழுதும் கவர்ந்து வெண்புனல் மட்டுமாய் எஞ்சவிட்டது போலும் பாற்கடலிற் கருமால் பள்ளிகொண்டிருத்தல். 
[2]. பெண்ணை - பனை - அவிநாசித்தலத்தின் ஒருபக்கம் பனைகள் மிகுந்திருத்தல். குறிப்பு - பெண்ணை என்பது சொற்சிலேடை. 
[3]. கங்கை - ஆலயத்துள் இருக்கும் காசிக்கங்கைத்தீர்த்தம். தலபுராணம் பார்க்க. 
-----------------
		[*]சிவபெருமான் 
	அருவு முந்துருவு அருவு ரும்மெனுமுந் நிலையி 
        னின்றிலகு மெய்யனற் றீத்திரள் 
    அவிழு மென்றிரவி அலரும் அங்கதிரின் அழகு 
        கொண்டசடை செய்பெருங் காட்டிடை 
	    அமுத மென்மதியொ டரவு கங்கைநதி யவைகள் 
   			தங்கும்வகை யொய்யெனக் கூட்டினன் 
    அலர்செய் மன்மதனை அவிய வெங்கனலை அருள்செய் 
        கண்ணுதலன் அம்மிடற் றீட்டிய 
	கருவி டங்கொள்கள முடையன் அங்கையினில் அனலன் 
        அந்துடியன் அவ்வுயிர்ச் சாட்சியன் 
    கருவில் முந்துயிர்கள் அபயம் என்றுவர அழகின் 
        நின்றகர மொன்றினைக் காட்டினன் 
	    கனலின் வெந்துயர்கொள் உயிர்கள் நன்னிழலை அடையும் 
        நன்மைசெய வண்மையிற் றூக்கிய 
    கழல்கள் எம்தலையு முறந யந்தவொரு பரம 
        முன்னவனை யுள்ளுறப் போற்றுதும். 
	திருவும் வெண்மலரின் உறையும் ஒண்டொடியும் தினமும் 
        வந்தனைகள் செய்யுநற் றாட்டுணை 
    திகழ்ப சும்பொன்ஒளிர் பரிபு ரங்களவை தினமு 
        மன்பரக முய்வுறக் காட்டுவள் 
	சிறிய ஒண்டுடியின் இடைகொள் பைந்துகிலின் அரைகொள் 
        செம்பொனணி ஒல்லெனச் சேர்த்தினள் 
    திறமு றும்புகலி மறையின் கன்றுபரு கமுத 
        கும்பமவை ஒவ்வுகச் சேற்பவள் 
	மருவி யிங்குயிர்கள் எவையு முய்ந்துகதி யடைய 
        வந்துகரை யில்லெடுத் தேற்றுவள் 
    [1]மகிழ என்றுமுறு திருநன் மங்கலம் துறுமொர் 
        கந்தரநல் மொய்குழற் காட்டின்முன் 
	மதியம் வந்ததெனும் வதன பங்கயமெவ் வுயிரு 
        முய்ந்திடமுன் செய்யருட் காட்சியள் 
    வாமி குந்தபுகழ் அவிநை யம்பதியை மகிழ்பெருங் 
        கருணை வல்லியைக் காக்கவே.      	(2)
*இச் செய்யுளில் முற்பகுதியில் சிவபெருமான் சிரத்தினின்றும் திருப்பாதம்வரையும் பிற்பகுதியில் அம்பிகையின் திருப்பாதத்திலிருந்து சிரம் வரையும் காட்டித் துதித்திருத்தல் காண்க. 
	[1]. என்றுமுறு திருநன்மங்கலம். நித்திய சுமங்கலம். கணவனார் எக்காலத்தும் அழியாத நித்தியராகலான்.
---------------------
தலத்துக் கோபுரவாயில் விநாயகர் 
	புவனமுழு துந்தோற்றி நின்றொடுங் கும்முதற் 
        போதமொ ரெழுத்துண்மைதன் 
    பூரணத் தனிமுதல் உருவமாம் பெற்றியிப் 
        பூதலமெலா முணரவைத் 
	தவனிநா தன்பெருங் கருணைசெய் கோயிலுக் 
        காதியந் தமுமாகியே 
    யருள்வதுந் தானேஎனத் தேற்று வான்போல 
        அவிநாசி யப்பர்கோயிற் 
	கவனமாக் கோபுரத் திருவாயில் முன்மேவு 
        பதியை ஏத்தெடுப்பாம் 
    கல்லா னிழல்ஞானி யோகத்தில் நின்றுமேற் 
        காதலிற் கிழவனாக 
	அவனியிற் கிரியைசெய் தொழிலனாய் மேவிநின்று 
        அங்கண்மா சரியைசெய்ய 
    ஆட்டுவிக் கும்பெருங் கருணை யென்றோதுமெம் 
        அம்மையைப் புரக்கவென்றே. 	      	(3)
----------------
	முருகக்கடவுள் 
	வலிய இருண் மாயைகன் மங்களெனு மும்மலம் 
        வன்சிறையி லிட்டஉயிரை 
    வாள்கொள்சிற் சத்திகொடு சிறைதவிர்த் தீடேற்றி 
        வாழ்க்கையின் வைத்துவெற்றிப் 
	பலனருள் [1]தந்தையார் போலவே அமரரைப் 
        பரமளித் தருளும்வேற்கைப் 
    பன்னிரு பயத்தெங்க ளாறுமா முகவள்ளல் 
        பாதபங் கயம்பணிகுவாம் 
	பலவாகி யாருயிர்த் தொகைகளை யலைத்திடும் 
        பஞ்சேந் தியக்குஞ்சரம் 
    பாற்றிடப் பாசாங் குசங்கையிற் கொண்டருள் 
        பாலிப் பதற்காகவே 
	உலகினிடை யாங்கா ணுருக்கொண்டு புக்கொளியின் 
        உலவுமாக் கோயிலின்வாழ் 
    உமைபெருங் கருணையம் பிகைஎங்க ளம்மையை 
        உவந்தினிது காக்கவென்றே. 	      	(4)
-------
	[1]. ஆணவம் - மாயை - கன்மம் என்ற மும்மலம் போன்றவர்கள் சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் எனவும், அவர்களாற் சிறையிடப்பெற்ற தேவர்கள் மலச்சிறையிற்பட்ட ஆன்மாக்கள் போன்றனர் எனவும் ஞானசித்தியினால் இறைவன் ஆன்மாக்கள் மலச்சிறைநீக்கிச் சிவசாயுச்சிய வீட்டிலே வைக்குமாறு முருகக்கடவுள் சத்திவேலாயுதத்தாற் தேவர் சிறைமீட்டு அவர்தம் வீடாகிய தேவவுலகத்திலே வாழவைத்தார் எனவும் வரும் ஒப்புக்குறிக்க. 
------------
	பிரமதேவர் 
	அணியார் மணிவா யலர்நாவின் 
        அலர்மே லவளை யினிதிருத்தி 
    அகில மறையு மறைந்துமலர் 
        அத்தந் தன்னிற் குண்டிகையும் 
	பணியார் வடமும் தாங்கியொரு 
        [1]பூவி னிருந்து பூவெல்லாம் 
    படைக்கு மாணை யுடையவன்றன் 
        பாத மலர்கள் பணிகுவமால் 
	திணியார் தோளிற் கொருபுடையி 
        னொப்பாந் திண்மைச் சிறப்பினாற் 
    சிவனாந் தன்சீர் முதல்வனையோர் 
        செய்ய வேய்க்கண் வருமாறு 
	பிணியா அன்பிற் பிணிப்பித்துப் 
        பிணைத்துப் பணைத்த பெருந்தோளிற் 
    பேரார் திறற்சீர்ப் பெருங்கருணைப் 
        பிராட்டி தன்னைப் புரக்கவே. 	        (5)
----- 
	[1]. பூவினிருந்து - தாமரைப்பூவில், வீற்றிருந்து, பூவெல்லாம் - உலகமெல்லாம். 
------------
	தேவேந்திரன் 
	ஒளிவளரு மேனியின் னும்பர்வளர் நன்னாட் 
        டுறுபெரும் புலவர்போற்ற 
    உத்தமக் கற்பகப் புதுநீழன் மேவியே 
        உயர்வான் புரந்துமிக்க 
	வளிவளரு மிக்ககதி வெள்ளானை மீமிசை 
        மன்னுமிந் திரைதனோடும் 
    மாப்பெரு மகிழ்ச்சிகொடு வீற்றிருந் தரசுசெய் 
        மகபதி மகிழ்ந்துகாக்க 
	அளிவளரு முள்ளத் தவர்க்கருள் விரைந்துசெயு 
        மையன்யா முய்யும் வண்ணம் 
    அம்பலத் தாடலான் றன்னையா மிம்பர்மிசை 
        அண்மையிற் காணும்வண்ணம் 
	களிவளரு மவிநாசி தனில்வந்து முற்படக் 
        காண்டகு தவம்புரிந்து 
    காசினியி லெல்லா வுயிர்க்குமருள் செய்திடுங் 
        கருணையம் பிகை தன்னையே.       	(6)
----------------------	
	இலக்குமி 
	வெண்மைக் கடற்பாற் றுயில்கொண்ட 
        கருமைக் கடலின் உளமாகி 
    மேவும் செம்மைப் பங்கயமாம் 
        விளங்கு மணியா சனத்திருக்கும் 
	பெண்மைக் குணங்க ளெட்டுருவாய்ப் 
        பேணு மொருமூ வுலகினுக்கும் 
    பிறங்கு மணிசெய் துலவுபெரும் 
        பீடார் திருவிற் பெருந்தேவி 
	பண்ணி னிசையாய்ப் பாற்சுவையாய்ப் 
        பாவு கண்ணி னொளியுமாய்ப் 
    பரவு மெழுத்தா மைந்துநினை 
        பண்பால் விண்பால் மழைமாறா 
	மண்ணின் பயனாய் வைதிகஞ்சேர் 
        வரம்பிற் சைவம் தழைத்தோங்க 
    வளர்புக் கொளியூர்ப் பெருங்கருணை 
        வல்லி தன்னைப் புரக்கவே. 	      	(7)
--------------------
	சரசுவதி 
	வேதங்க ளென்கின்ற செய்த்தலை முளைத்திடும் 
        மிகுசைவ நற்கொடியினின் 
    மிளிர்கின்ற தமிழ்மலர் மணங்கொடு தழைக்கவளர் 
        மெய்க்காழி வருகன்றினை 
	ஏதங்க ளில்லாதிவ் வுலகங்க ளுய்ந்திட 
        இனியபா லமுதமூட்டும் 
    எழில்கொ ளவிநாசிவாழ் கருணையம் பிகைஎனும் 
        இளம்பிடி தனைக்காக்கநற் 
	போதங்க ளுறுவேத போதன்ற னாவினிற் 
        பொருளார் தமிழ்க்கலைகள் சேர் 
    புண்ணிய மலர்ந்தெனப் பொலிகின்ற வெண்மலர்ப்  
        பொகுட்டினி லிருந்துலகெலாம் 
	நாதன்ற னடிமைத் திறங்கள்கண் டுய்யும் வகை 
        நாட்டி எல்லா வுயிரினும் 
    நாத்தலை மிளிர்ந்தருள் புரிகலையின் மகளென்னு 
        நாமமிக் குபரணங்கே. 	      	(8) 
---
[1].	பெரியபுராணம் சண்டீசநாயனார் புராணம் க9-ம் திருப்பாசுரத்தைத் தழுவி எழுந்த கருத்துக்கள். 
---------------
		காளி 
	உலகி லுயிரைச் சிமிழ்க்குமோர் 
        இயம னவனைப் பரிக்குமா 
    [1]எருமை யுருக்கொ ளரக்கனார் 
        அமரர் தமக்கிங் கிடர்ச்செயும் 
	புலவு வினைகள் அகற்றவே 
        புரிவெஞ் சமரில் அழித்துநற் 
    புகழ்கொண் டிருக்கும் சயத்திதாள் 
        பொருள்கொண் டினிது பழிச்சுதும் 
	நிலவு பொழியு [2]நகைக்குமந் 
        நிகரி லமுத விழிக்குமோர் 
    நெளியு மினிய இடைக்குமே 
        உடையு மதியை முடிக்கவும் 
	கலையைத் துடியைப் பிடிக்கவும் 
        கணவன் அவனைப் பயிற்றுமெம் 
    கவின்செய் அவிநைப் பதிக்குள்வாழ் 
        கருணை யுமையைப் புரக்கவே.       	(9) 
----
[1]. மகிடாசுரன். 
[2]. நகை - விழி - இடை இவைகட்கு முறையே இளமதி - மான் - துடி இவை இணைபெறாதனவற்றை முறையே முடிக்கவும் இருகரங்களிலும் பிடிக்கவும் எனக் கூட்டுக. 
----------------------
சத்த மாதர்கள் 
	மறைமுறை யொடு1மன ஊர்தியைச் சேர்த்துநள் 
        மகிழ்தர 2விடபம தார்தரப் பாய்ச்சுநள் 
    வல3அயில் மயில்மிசைக் கூர்தரப் பார்ப்பவள் 
        வளர்4கரு டனில்வரு மாழிகைச் சார்த்துநள் 
	முறை5யரி யிவருழு மாயுதச் சாத்திநள் 
        முழு6வயி ரமதொடுமி யானையைப் பாய்ச்சுநள் 
    முன்7மல கையினிவர் சூலிகைப் பூட்டுநள் 
        மொழியுமிவ் வெழுவர்கள் தாண்முடிச் சேர்த்துதும் 
	குறையறு பிரமனு மோரரிப் பேர்த்தனும் 
        கொடுவினை களையும யேசுரத் தீர்த்தனும் 
    குமரனு முறுமக வோர்முதற் சேர்த்திய 
        கொழிபுல வனுமுதல் வீரரிற் கூட்டமும் 
	கறையறு தவமொடு சேர்தரப் போற்றிய 
        கழலவன் வலமுறு காதனற் பேற்றினள் 
    கலைமிகு மவிநையில் ஆர்தரக் காட்டுறு 
        கருணைநல் அமுதினை யேர்பெறக் காக்கவே.	      (10) 
-----
[1]. மறையாயுதமும் அன்னவாகனமுமுடைய அபிராமி. 
[2]. பினாகமும் இடபவாகனமுமுடைய மகேசுவரி. 
[3]. மயில்வாகனமும் வேற்படையுமுடைய கௌமாரி. 
[4]. கருடவாகனமும் சக்கரப்படையுமுடைய நாரணி. 
[5]. சங்கவாகனமும் கலப்பைப்படையுமுடைய வராகி. 
[6]. யானைவாகனமும் வயிரப்படையுமுடைய இந்திராணி. 
[7]. பேய்வாகனமும் சூலப்படையுமுடைய காளி. 
---------------
முப்பத்து முக்கோடி தேவர்கள் 
	நிலவுறு வெளிக்கிரி மிசைஒரு சிவப்புறு பவளநன் 
        வெற்புக்கொ ரொப்பாகு மாமதில் 
    நிலைபடர் கலைப்பெரு மரகத வளக்கொடி நிலவிய 
        திற்பெற்ற முற்பேணு தாண்மலர் 
	நெகிழிருள் துரத்திடும் ஒளிபெறு1 மிரட்டுறு மலர்க
        ளெனப்பெற்று நற்கோல நீடிய 
    நிலைமையி னினிப்புற உயிரவை கதிக்குற ஒருமை 
        நினைப்புற்று முற்காணல் போலவே 
	கலைமலி கரத்தினன் கொலைபுரி புரத்தினர் எரிகொள் 
        சிரிப்புற்ற விற்கான சேவகன் 
    கயிலைநன் மலைச்சிர முறஒரு பகுப்பினில் உமையுறை 
        யப்பெற்றி நிற்பானம் மேனியிற் 
	கருதிய வுமைக்கொரொர் மடிதனில் ஒருத்தர்கள் எனவமை 
        யப்பெற்று முட்கார வேயுறு 
    கரிமுக ஒருத்தனு முருகனு மெனப்பெறு மிருவரு 
        மிக்குச்சி வப்பாள ராமதில் 
	வலமிகு வாத்தினர் இமையவர் தமைச்சிறை புரிகொடு 
        மைத்துக்க முய்த்தாடு சூரரை 
    வதைசெயு முரத்தொடு நிலையயில் தனிற்பொரு தழிவுசெய்
        தட்டுற்ற வித்தாரன் வானவர் 
	மகிழ்வொடு துரக்கநன் னகர்குடி பெறப்புரி சயமொரு 
        திக்கெட்டு மிக்கேறு வேலனை 
    2எளியனும் உருப்பெற உயிரிறை எனக்கொள் அருள்கொட 
        ளித்திட்ட மெய்த்தாயர் கோமளம் 
	பலவகை நிகழ்ச்சியி னுலகினர் தமக்குள் வினையவை 
        யெப்பெற்றி யிற்பேண வேகிடு 
    பலனருள் பொருட்டுந லவிநையி னிலைப்பெறு கருணையு 
        மைக்குற்ற முற்பேணு காவலர் 
	3பனிருவர் இரட்டையர் அவரொடும் ஒரெட்டினர் பதினொரு 
        வர்க்குற்ற மெய்க்கான தேசினர் 
    பரிதிகள் மருத்துவர் எழில்வசு உருத்திரர் பகரிவர்
        முப்பத்து முக்கோடி தேவரே. 	      	(11) 
----
[1]. பவள மலையிற் படர்ந்த மரகதக்கொடிபோன்ற பார்வதியம்மையாரின் திருமடிகளின் மீது கணபதியும் முருகக்கடவுளும் சிவந்த திருமேனியுடன் வீற்றிருப்பது அந்தக் கொடியிற் பூத்த இரண்டு மலர்கள் போன்றிருக்க அவ்விருவரில் முருகக்கடவுளை அடியேனுக்கு உபாசனாமூர்த்தியாய் இருக்க அருளிய தாயார் என்பது கருத்து. 
[2]. இதன் ஆசிரியருடைய உபாசனாமூர்த்தி முருகக்கடவுள். 
[3]. பன்னிருவர் - பரிதிகள்; இரட்டையர் - மருத்துவர்; ஓர் எட்டினர் - வசுக்கள், பதினொருவர் - உருத்திரர் என முறையே கூட்ட இவர்கள் வகைக்கு ஒவ்வோர் கோடியாக முப்பத்து முக்கோடி தேவர் ஆவர். 
-------------------------
	2. செங்கீரைப்பருவம் 
	ஏராரு மண்டபகி ரண்டங்க ளெங்கணு 
        மிருப்பவன் றானொருருவம் 
    ஏற்கின்ற போதுநின் றிருவுருவ மன்றியே 
        யில்லையென் பதுதோன்றநின் 
	சீரா ரியற்பெயர் கருணையம் பிகையெனச் 
        செப்புகின் றதுமன்றியே 
    சிற்சபை பொலிந்தவன் பகுதிநீ என்னவும் 
        சிவனார்கொள் திருமேனிதான் 
	காராரு நற்கருணை யென்னவும் போற்றுவர்; 
        காசினியி லெளியமுய்யக் 
    கரமலர்க ளூன்றிநற் றாண்மடித் துத்திரு 
        முடியசைத் துவகைபூப்பத் 
	தேராரும் வீதிபொலி புக்கொளியி னம்பிகை 
        செங்கீரை யடியருளே 
    சிற்பரன் [1]வலத்தாரு நற்கருணை யம்பிகை 
        செங்கீரை யாடியருளே.       	(1)
----
[1]. இத்தலத்தே அம்மையார் தவஞ்செய்து வலப்பாகம் பெற் றார் என்பது தலபுராண வரலாறு. திருக்கோவில் அமைப்பும் இவ்வாறே காணப் பெறும். 
------------------
	யாதவர் குலத்துவரு மாதவன் முடிமீதின் 
        எழிலாரு மடிசூட்டியே 
    இணையில்உப மன்யுவெனு நின்குழவி செய்தால் 
        இயலருட் டீக்கைபோலம் 
	மாதவன் மனைவியாம் பூமிமுற் றுய்யநின் 
        மலரடிகள் தம்மிலொன்று 
    மகிதலத் துறவைத்து மொருதாள் மடித்திட்டும் 
        வண்கரம் புவிபதித்தும் 
	காதலி னருட்கடைக் கண்ணோக் களித்துநின் 
        கனிவாயி னமுதமூறிக் 
    கால்வழிந் தோடமெய்த் திருமுக மசைத்துநீ 
        காணுமிப் பண்புடேச் 
	சீதள மலர்ச்சோலை யவிநாசி நகரம்மை 
        செங்கீரை யாடியருளே 
    சிற்பரன் வலத்தமரு நற்கருணை யம்பிகை 
        செங்கீரை யாடியருளே. 	      	(2)
--------------
	ஊன்பரவு மும்மல முழன்றதொல் உயிர்த்தொகைக் 
        குறுதியா மைந்தொழிற்கும் 
    உற்றநற் றுணைவியு மாதரவு நீயென்னு 
        முண்மையினை யுதகரிக்கக் 
	கான்பரவு தோற்றமென் முதற்றொழில் நிறுவுறத் 
        தோன்றுதல் தோற்றுதல்போற் 
    கருணைகொடு தென்னன்மக ளாகியே தோன்றிக் 
        கவின்பெற வளர்ந்துநின்றும் 
	வான்பரவு தெய்வவலி நிலைகொண்ட உக்கிர 
        குமாரனைத் தோற்றுவித்தும் 
    வாழ்வித்து நின்றுலகு காத்திடும் பெருமாட்டி 
        வண்மையிது கொண்டுபெருமான் 
	தேன்பரவு கொன்றைமலி யாகம் பகிர்ந்தகொடி 
        செங்கீரை யாடியருளே 
    சிற்பரன் வலத்தமரு நற்கருணை யம்பிகை 
        செங்கீரை யாடியருளே. 	      	(3)
------------
	துன்பமார் வன்பிறவி தோறும் சுழன்றவெயில் 
        சுட்டிடத் தரியாமலே 
    தொல்லுலக மீதில்வரு பல்லுயிரு மங்ஙனே 
        தோன்றுபுண் ணியவசத்தினால் 
	இன்பமார் நின்றனிரு சரணபங் கயமலர் 
        இறைஞ்சிவரு போழ்தினவைகட் 
    கின்னருள் சுரக்குமிரு திருவிழியி னோக்கினை 
        ஈந்துவர வேற்றல்போல 
	முன்புநின் செங்கமல மலர்திரு முகத்தினை 
        முகஞ்செய்தோர் முறையழைத்து 
    முறுவலில் நகைபுரிந் திளமூரல் தோன்றவாய் 
        மொழியமுத மூறிவழியச் 
	சென்னியை யசைத்துநீ [1]தென்காசி நகரம்மை 
        செங்கீரை யாடியருளே 
    சிற்பரன் வலத்தமரு நற்கருணை யம்பிகை 
        செங்கீரை யாடியருளே. 	      	(4) 
---
[1]. தென்காசிநகர் : அவிநாசிக்குத் தென்காசி என்றும் வாரணாசி என்றும் பெயர் உள்ளனவாய்த் தலபுராணம் கூறும். காசிக்கங்கையின் ஒரு கூறு ஆலயத்தீர்த்தமாய்வரும் வரலாறும் குறிக்க. மூலலிங்கப்பெருமான் காசி விசுவநாத மூர்த்தியின் ஒரு வேரிற் கிளைத்த மூர்த்தி எனவும் புராணம் கூறும். 
---------------
	தொல்லுலக முயர்திணை யஃறிணைய தாமவை 
        தொழில்பெற நிறைந்து நின்ற 
    துணைநீ யெனுஞ்சுருதி யுண்மையைக் காட்டிடத் 
        தொல்பரா சத்தியாயும் 
	வல்லவொரு முத்தொழில் வளர்க்குமவ ளாகியும் 
        மலைமகள் வலைமகளுமாய் 
    வண்மையி னுழத்தியாய் வேடன் கிழத்தியாய் 
        மற்றும்எம் வாகீசனார் 
	நல்லவை யாற்றினிற் கயிலைகாண் கோலத்தில் 
        நண்ணுசர அசரமெல்லாம் 
    நாதனும் சத்தியு மாகிக் கலந்துநீ 
        நாட்டியுறு முண்மையருளாற் 
	செல்கதியின் வழிகாட்டு மவிநாசி நகரம்மை 
        செங்கீரை யாடியருளே 
    சிற்பரன் வலத்தமரு நற்கருணை யம்பிகை 
        செங்கீரை யாடியருளே. 	      	(5)
-----------------
	வேறு 
	கலைகள் நிறைந்து விளங்கு மிளம்பிறை 
        கண்ணிய நன்கோலக் 
    கங்கையி னோடு பொருந்த மிலைச்சிய 
        கண்ணுத லெம்மானை 
	நிலைபெறு மாகம நன்னெறி யோடும் 
        நினைந்தெழு மன்போடும் 
    நின்றுயர் பூசை நிலைத்து நிலைக்க 
        நிகழ்ந்திட இங்கேவந் 
	திலகிய தொல்லுயிர் யாவையு மின்பம் 
        இயற்றிடு மம்மே!நின் 
    இசைபெறு பொன்முக மழகி னசைந்திட 
        எய்திய இன்பாலே 
	அலைந்தி சூழவி நாசியி னம்பிகை 
        ஆடுக செங்கீரை 
    அற்புத மொன்றிடு புக்கொளி நின்றவள் 
        ஆடுக செங்கீரை. 	      		(6) 
------------------
வேறு 
	சென்னியின் மீதொரு சிறுமதி வைத்த 
        சிவன்வல மீதுறைவாய் 
    செங்கையி லங்குச பாச முயர்த்திய 
        செய்கைய லாதுமற்றும் 
	முன்னுறு மபயம் வரதமும் வைத்திடு 
        முத்திரை யங்கதனால் 
    முன்னிய அன்பர் பவங்கள் எறிந்தே 
        முழுமையு மின்பமுற 
	இன்னல் தவிர்த்தருள் செய்கை யியம்பும் 
        இயல்வளர் நின்னியல்பை 
    என்று மிறைஞ்சிட இன்ப நிறைந்துற 
        எம்மிட மென்றுமிருந் 
	தன்னிய மின்றி யமர்ந்தரு ளம்பிகை 
        யாடுக செங்கீரை 
    அற்புத மொன்றிடு புக்கொளி நின்றவள் 
        ஆடுக செங்கீரை. 	      	(7)
---------------
	கருமைகொள் மாக்கட லிற்பல பைம்புயல் 
        காட்டிய கோலமுமுன் 
    காண்பரு மப்புயல் பெய்துல கூட்டு 
        கவின்பிர வாகமதும் 
	உரிமையி னந்நதி சேர் கடலும்போ 
        லுயர்ந்து கொங்குநிலாய் 
    [1]ஒண்கரை பரவைக் கொண்கர் நிலாவிய 
        உயர்தடமும் பனைசூழ் 
	பெருமைகொள் பசுமைக் கார்புனை காவும் 
        பெருநள் ளாறதுமுன் 
    பிறங்கு பெருந்தட மும்முல கருளிற் 
        பெயர்ந்துறு [2]தீம்பயஞ்செல் 
	அருமை விளம்பு நகர்க்கரு ணாகரி 
        ஆடுக செங்கீரை 
    அற்புத மொன்றிடு புக்கொளி நின்றவள் 
        ஆடுக செங்கீரை.  		      	(8)
---- 
[1]. பரவைக்கொண்கர் - சுந்தரமூர்த்திகள். இக்குளக்கரையிலே நின்று முதலைவாய்ப் பிள்ளை அழைப்பித்தருளினர். அத்திருக் கோயில் அங்குக் காணப்பெறும். 
[2]. தீம்பயம் செல் அருமைவிளம்பு - நீரானது திருவருள் வழியே கருங்கடலிலிருந்து பசுமேகமாகப் பெய்து நதியாய்ப் பெருகி ஓடி மீளக் கடல் சேர்தலைக் காட்டுவன போல இத்தலத்தே சுந்திரமூர்த்திகள் முதலைவாய்ப் பிள்ளையை அழைத்த குளம் கடல் போலவும் அதனைச் சூழ்ந்து வளர்ந்த பனைச்சோலை அதிற்படியும் பசுமேகக்கூட்டம் போலவும் நள்ளாற்றுப்பெருக்கு மேகம் பெய்த பெருக்குப்போலவும் ஆலயத்தின் முன்னிருக்கும் பெருந்தடாகம் அவ்யாறு மீளப்புகும் கடல் போலவும் உள்ளதென்ற குறிப்பு. 
------------------
	[1]மலையை வளைத்தவன் வலியை யுடைப்பெரு 
        மற்புய மானதுற 
    மாவின் கீழோர் மாதவ மாயுடல் 
        வாட்டிய மாண்பினிலே 
	தலைமைகொள் கம்பைக் கரையினின் கொங்கைத் 
        தண்குவ டுற்றவனைத் 
    தான்குழை வித்திடு [2]தன்மையி னிங்குத் 
        தழைமா வின்னிழலின் 
	நிலைமைகொள் கொங்கை யடைவுறு கங்கையி 
        னீள்கரை நினதுதவம் 
    நீர்மையி னின்மல னைக்குழை வித்து 
        நிறைந்திடு மன்புசெய்தே 
	[3]அலையை வளைத்திடு தலைவன் வலத்தவள் 
        ஆடுக செங்கீரை 
    அற்புத மொன்றிடு புக்கொளி நின்றவன் 
        ஆடுக செங்கீரை 	      	(9)
---- 
[1]. மலையை வளைத்தவன் - மேருவை வில்லாக வளைத்த சிவபெருமான். 
[2]. தன்மையின்: கம்பையாற்றின் கரையிலே மாவின் கீழே தவம் செய்து தழுவியது போல இத்தலத்தேயும் காசிக்கங்கையின் கரையிலே மாவின் கீழே தவஞ் செய்து சிவபெருமானை வெளிவரப் பண்ணி வலப்பாகம் பெற்றது. தலபுராணவரலாறு. 
[3]. அலையை வளைத்திடு தலைவன் - கங்கையைச் சூடிய சிரத்தையுடையவர். 
-----------------
	வேறு 
	[1]முன்னோர் கால முழுத்தழல் நாடக 
        முன்னோன் நின்றாட 
    மொழிமூ லத்தின் மறைந்து பிரிந்துறை 
        யுந்தா பந்தீர 
	இன்பார் உலகர்க் கிறையை யடைந்திடு 
        மன்பா றிங்கீய 
    எழிலவி நாசி யிறைஞ்சி வலம்பெறு 
        மின்பே யங்கீதின்  
	மன்பேர் நாதத் தின்கண் மறைந்தும 
        கிழ்ந்தே வந்தேறும் 
    மன்னுயிர் செல்வுறு நிலையை விளம்பிடு 
        மன்னே கொங்கேழிற் 
	[2]றென்பிர யாகையின் மன்கரு ணாகரி 
        செங்கோ செங்கீரை 
    திருவியல் புக்கொளி மருவிய பொற்கொடி. 
        செங்கோ செங்கீரை. 	      	(10)
----
[1]. முன் ஓர் காலத்திலே பரமசிவம் அக்கினி தாண்டவம்செய்யுங்கால், உமாதேவியாரைப் பிரணவத்திலே மறைந்து நிற்குமாறு பணித்தபடி அவர் இருந்தமையால் அவ்வாறு பிரிந்தமைக்காக வருந்தித் திருவவிநாசியிலே தவஞ்செய்து வலப்பாகம்பெற்ற தல புராணத்துத் தலவுற்பத்திச் சருக்க வரலாறு இப்பாட்டிற் கருதப் பெற்றது. 
[2]. தென்பிரயாகை - தென்காசி எனும் அவிநாசி. 
---------------
	
 3. தாலப்பருவம் 
	கண்க ளொருநாட் பிரான்றனையுன் 
        கையின் மறைத்த ஞான்றுலகம் 
    கனக்க இருண்டும் அவற்பிரிந்த 
        காலத் தெவையும் பிரிந்திருந்தும் 
	விண்பார் இவைநின் செயலளவாய் 
        விளம்பு முண்மை விளக்குதல்போல் 
    மெய்யார் தவத்தின் நீயமைய 
        விண்ணு மவ்வாறுற்ற தென 
	நண்பார் பகலு மிரவுமலர் 
        நளின மாம்பல் லிருக்கையுமீன் 
    நண்ணும் கருநீர்த் தடப்பணைவா 
        னகத்தின் சுடருந் தெய்வதமாப் 
	பண்பும் பகரும் அவிநாசிப் 
        பரையே தாலோ தாலேலோ 
    பரவற் கினிய பெருங்கருணைப் 
        பண்பே தாலோ தாலேலோ. 	      	(1) 
-------------------
	கொங்கேழ் தலத்து மற்புதமாய்க் 
        குலவு மவிநா சிப்பதியாய்க் 
    கொண்ட முதலை தரமதலை 
        கொடுத்த [1]முதலை யுடையதெனும் 
	மங்காப் புகழின் றிருத்தலத்தை 
        மன்னி நாளும் மனமொழிமெய் 
    மல்க நினைத்துத் துதித்துவலம் 
        வருவோர் பிறவி தனையழித்துச் 
	சிங்கா ரப்பேர் வாழ்வளிக்கும் 
        சிறப்பால் அவர்க்கிங் கினித்தாயார் 
    செய்தா லாட்டின் றொழிலொழியச் 
        செம்மை யளிக்குஞ் சீரார்ந்த 
	பங்கே ருகப்பொற் சரணமலர்ப் 
        பாவாய் தாலோ தாலேலோ 
    பரவுங் கடலாம் பெருங்கருணைப் 
        பரையே தாலோ தாலேலோ. 	      	(2)
-----
[1].  முதலை – முதல்வனை
------------------
	மேலந் நாளின் விண்ணாட்டின் 
        மிகவே தவஞ்செய் மகவான்சேய் 
    விரிஞ்சன் மாலு மிரிந்தோட 
        விண்ணோர் நெஞ்சம் புண்ணாக 
	கோல மலையக் கொடுந்துயரம் 
        கொடுத்தும் நிலத்தைக் கோளலைத்தும் 
    கொண்ட அண்ட மெலாம்சுவட்டக் 
        கொடிய மாயை சொல்வரங்கள் 
	சூல பாணி தரக்கொண்ட 
        சூர்மா முதலும் என்வினையின் 
    தொல்லை வேர்மா முதலுமறச் 
        சுடரும் வெற்றி வேற்றடக்கைப் 
	பாலன் றனைத்தா லாட்டுபெண் 
        பாவாய் தாலோ தாலேலோ 
    பரவுங் கருணைப் பெருங்கடலாம் 
        பண்பே தாலோ தாலேலோ. 	      	(3)
----------------
	கையிற் றொடுசா கரமுமுனி 
        கரத்தி லடங்கும் அவன்கையிற்  
  		கரகந் தனிலோர் கையளவிற் 
        கவின்கா விரியு மடங்கிடுமாற் 
	பையிற் பொலிந்த துத்தியாப் 
        படர்ந்த சடிலத் தண்ணல்சடைப் 
    படர்ந்தா லன்றி யடங்கிலதாய்ப் 
        பரந்து சுரந்த கங்கையினைக் 
	குய்யந் தவிர்க்கு மொருசிறிய 
        கூபத் தடக்கிக் கொடுத்திடுநற் 
    கொங்கு மிகுந்த புகழின்மிகு 
        கொங்கு நாட்டிற் புக்கொளியூர்ப் 
	பொய்விட் டவர்க்குப் பழுக்குமருட் 
        பொருளே தாலோ தாலேலோ 
    புகழ்தற் குரிய பெருங்கருணைப் 
        பொன்னே தாலோ தாலேலோ. 	      	(4) 
---------------
[1]ஐந்து கரத்தா னெழுதினான் 
        [2]ஆகம் பகிர்ந்தோ னெழுத்தறிந்தே 
    ஆல வாயிற் றமிழாராய்ந் 
        தருமா முனிவற் கருள்செய்தான் 
	[3]மைந்தன் இளையான் சொல்லாய்ந்து 
        வகையாச் சங்கத் தொகையார்சொல் 
    மாண்பு தெரிந்தே தமிழறியும் 
        பெருமா ளாகி மன்னினான்; 
	பந்தன் காழிமறைக் குழவி 
        பரிந்துன் முலைப்பா லருந்துதலால் 
    பாரிற் றமிழே நிறுவியுமுத் 
        தமிழா கரமாம் பண்பிதனாற் 
	பைந்தீந் தமிழின் உருவமெனும் 
        பாவாய் தாலோ தாலேலோ 
    பரவுங் கடலாம் பெருங்கருணைப் 
        பண்பே தாலோ தாலேலோ.       	(5)
-----
[1]. விநாயகக் கடவுள் பாரதத்தை எழுதிய வரலாறு.
[2]. சிவபெருமான் சங்கத்தலைவராய் வீற்றிருந்தமையும் அகத்திய முனிவர்க்குத் தமிழ் உபதேசித்தமையும் ஆகிய வாலாறுகள். 
[3]. முருகக்கடவுள் உருத்திரசன்மராய் வந்து சங்கத்தார் கலகந் தீர்த்த வரலாறு. 
-------------------
	உலகு தனிலே பலவுழன்றும் 
        குறைகள் தீரா துழலுறுவீர் 
    உய்ய நாவ லூர்நம்பி 
        மூவாண் டிறந்த பிள்ளைதனை 
	இலக வளித்தோர்க் களித்திடஎம் 
        இறைவி யளித்த இடம்காணீர் 
    எழிலார் கருணை எழுந்தருள்சீர்த் 
        கோயில் காணீர் என்பனபோல் 
	நிலவி வானி னுயர்ந்து செழித் தோங்கி நிமிர்ந்து தஞ்சிறுகை 
    நீட்டி நெறிகாட்டுவபோன்று 
        நீண்ட பனையின் நிறைசோலை 
	பலசூழ்ந் தொளிரும் அவிநாசிப் 
        பரையே தாலோ தாலேலோ 
    பரவுங் கடலாம் பெருங்கருணைப் 
        பண்பே தாலோ தாலேலோ. 	      	(6)
-------------------
வேறு 
	மீனுண் கண்ணிற் காண வுதித்ததோர் 
        வெல்கரி மாமுகவன் 
    வியன்கை யணைத்திட ஆறுரு வொன்றென 
        மேவு மருட்கந்தன் 
	கானுண் டாக வெடுத்தருள் நோக்கித் 
        தடவியு மோந்துச்சி 
    கவினார் கொன்றை புனைந்து மகன்மைகொள் 
        கான்முளை யுண்டதுமற் 
	றானந் தித்தருள் பாலுண் டுற்றிடும் 
        அருண்மா மதலையுமுண் 
    டாங்குன் னிருபத மலர்க ளளித்திடு 
        மளிபெறு சுதன்மைமுறை 
	தானுண் டெனவெமை யாள்கொண் டருள்பவள் 
        தாலோ தாலேலோ 
    தண்ணிய புக்கொளி மன்கரு ணைக்கொடி 
        தாலோ தாலேலோ. 		      	(7)
-------------
	பொன்னுக் கொருசார் புடவைக் கொருசார் 
        போற்று பசிக்கொருசார் 
    புதிய நறுஞ்சுவை யடிசில் பெறும்படி 
        போதர வென்றோர்சார் 
	மன்னுக் கொருசார் மனைவிக் கொருசார் 
        மனைக்கென் றோரோர்சார் 
    வாழ்வின் பின்னாட் கொருசா ரென்றே 
        வாணாள் வீணாளாய் 
	என்னைப் பலவு மடிமை யிறுத்திங் 
        கேவல் கொண்டனவால் 
    எளியே னுய்வகை யின்னருள் செய்தே 
        யொருசார் தனைநினையத் 
	தன்னடி மைக்கணு மென்னை யளித்தவள் 
        தாலோ தாலேலோ 
    தண்ணிய புக்கொளி மன்கரு ணைக்கொடி 
        தாலோ தாலேலோ. 		      	(8)
------------------
	வேறு 
	தழைந்த பொற்கமல மேலோன் 
        மேலே சார்நாளிற் 
    1றவிர்ந்த சொற்கழிவு சேர்வான் 
        நேர்வான் ஓர்மேடத் 
	திழைந்த நல்விழவி னானே 
        மேனாள் வாழ்வானவ் 
    விசைந்த நின்பவனி காணா 
        மாணா வாழ்வார்கள் 
	குழைந்த நன்றருள்செய் கோவே 
        பாவாய் காவாய்எம் 
    குலந்த ழைந்துயரும் வாழ்வே 
        பாராய் தாராயென் 
	றெழுந்த அன்பர்பணி வாழ்வே 
        தாலோ தாலேலோ 
    இருந்த புக்கொளிசெய் தாளாய் 
        தாலோ தாலேலோ.	      	(9)
----
[1]. சிவபெருமானது திருமுடியைக் காண்பேன் என்று பிரம தேவர் அன்னத்தின் உருவாய்ப் பறந்து சென்றும் காணவில்லை. கண்டேன் என்று பொய்யுரைத்தமைக்காகச் சிவபிரானாற் சபிக்கப் பெற்றார். அச்சாப விமோசனமாகும் பொருட்டு அவிநாசியை யடைந்து கபிலை தீர்த்தம் உண்டுபண்ணித் தவஞ் செய்யவே பெருமான் வெளிப்பட்டு அருள்செய்தனர். பிரமதேவர் மகிழ்ந்து திருவாலயம் வகுத்துத் திருப்பணி செய்து சித்திரை மாதச் சத்தமி நாளிலே கொடியேற்றி அவிநாசியப்பருக்கும் பெருங்கருணை யம்மையாருக்கும் திருவிழாச் செய்தனர். அத்திருவிழாத் தரிசித்தவர்கள் எல்லா நன்மைகளையும் அடைவர் என்பது தலபுராணம்- பிரமார்ச்சனைச் சருக்கம்.  
------------------
	[1]அகங்க ளைந்தவரின் பாலாய் 
        தாலோ தாலேலோ 
    [2]அகங்க ளைந்தவரின் பாலாய் 
        தாலோ தாலேலோ 
	[3]உகந்த மன்றொருசொன் மேலாய் 
        தாலோ தாலேலோ 
    [4]உகந்த மன்றொருசொன் மேலாய் 
        தாலோ தாலேலோ 
	[5]முகந்த மிழ்தொடருள் பாவாய் 
        தாலோ தாலேலோ 
    [6]முகந்த மிழ்தொடருள் பாவாய் 
        தாலோ தாலேலோ 
	[7]மிகுந்த புக்கொளிசெய் தாளாய் 
        தாலோ தாலேலோ 
    [8]மிகுந்த புக்கொளிசெய் தாளாய் 
        தாலோ தாலேலோ 	      	(10) 
-------
[1]. அகங்கள் - ஐந்து - அவரின் : பூதங்கள் ஐந்தின் அகத்தின் விளங்கும் உலக காரணராகிய பரமசிவத்தின் ஒரு பாகத்து விளங்குபவரே. 
[2].  அகம் - களைந்தவர் -இன்பால் - ஆய்: ஆணவம் களைந்த பெரியோர்களால் இன்பமுடன் ஆய்ந்துணரப் பெற்றவரே. 
[3]. உகந்த -மன்று - ஒருசொல்: இன்பமாகிய திருவம்பலத்திலே ஒன்றாகச் சொல்லப்பெற்ற பரமசிவத்தின் ஒருபாகம்கொண்டவரே. 
[4]. உகந்தம் - அன்று - ஒருசொல் - மேல் ஆய்: உகாந்தமாகிய அக்கினிப் பிரளய காலத்திலே சிவபிரான் அக்கினி தாண்டவம் செய்தருளியபோது பிரணவத்திலே ஒளித்தவராய் நின்றவரே. இது தலபுராண வரலாறு. செங்கீரைப் பருவம் 10-வது பாட்டின் குறிப்பைப் பார்க்க. 
[5]. முகந்து - அமிழ்தொடு - அருள் - பா-வாய்: மரணத் துக்கத்தை நீக்கி அருளும் தெய்வப் பாவின் பொருளானவரே. 
[6]. முகம் - தமிழ் - தொடர்- உள்-பாவாய் : தமிழ் முகத்தாலே தொடர்ந்து அறியப்பெற்ற தெய்வமாகிய பாவை போன்றவரே. 
[7]. மிகும் - தபுக்கு - ஒளிசெய்-தாள்- ஆய்: பெரும்பிழையாகிய ஆணவ இருளை நீக்க அருட்பிரகாசத்தினைத் தரும் பாதமலர்களை யுடையவரே. 
[8]. மிகுந்த - புக்கொளி -செய்-தாள் - ஆய்: புகழ் மிகுந்த புக்கொளியூரிலே எழுந்தருளிய தவமுயற்சியை யுடையவரே. 
-----------------------------------------
 4. சப்பாணிப் பருவம் 
	பைவந்த துத்திப் பணாமுடியின் மீதுலவு 
        பாரெலாந் துயரினீங்கிப் 
    பரமனை யடைந்தவ ரடியிணையி னுற்றிடும் 
        பண்பினைக் காட்டவென்றே 
	கைவந்த வொருகையி லபயம்வைத் தொன்றுகீழ்க் 
        கான்மலர்கள் காட்டும்வரதம் 
    [1]காட்டுநின் னிருகைமலர் போலவிவ் வுலகெலாங் 
        கட்டினை யகன்றுசிவமாம் 
	மெய்வந்த செம்மைநெறி யடையும்வழி காட்டிடும் 
        மெய்கண்ட சந்தானமும் 
    மெய்மையச் சன்மார்க்க நெறிவாழு பேரன்பின் 
        மெய்யடிய ருந்தழையவே 
	சைவந் தழைக்கவிரு கைம்மலர்கொ டருளம்மை 
        சப்பாணி கொட்டியருளே 
    தண்பாவு தென்காசி நண்பான பெண்பாவை 
        சப்பாணி கொட்டியருளே. 	      	(1) 
---
[1]. நின் இரு கைமலர்போல - வழிகாட்டிடும் மெய்கண்ட சந்தானம். உயிர்களுக்குப் பயத்தினைப் போக்குவது அம்மையார் அபயத்திருக்கரம். அவ்வாறு பயம் நீங்கின உயிர்கள் அடையும் இடம் இது எனப் பரமசிவத்தின் திருவடிகளைக் காட்டுவது வரதமாகிய திருக்கரம். இவைபோல, மெய்கண்ட சைவ சந்தான குரவர்களும், உயிர்களுக்குப் பாசநீக்கத்தையும் சிவப்பேற்றினையும் உணர்த்துவர். 
---------------------
	[1]நாதமே உலகெலாம் வருமுறையி னாதரவு 
        நண்ணுமொரு பொருள்என்னவும் 
    நல்லவதி னின்றுலகு செய்துணையு நினதுகை 
        நளினங்க ளவைகளென்றும் 
	போதமுற விம்முறையி னுலகருள் புரிந்திடும் 
        புராதனியு நீஎன்னவே 
    பொற்புற விளக்குவா னுற்றதோர் பரிசினைப் 
        போன்றுநின் னிருகைமலரும் 
	பேதமற வொன்றையொன் றுறவைத்தொ ரொலிசெய்து 
        பெட்புறுங் கரமலர்களாற் 
    பெண்ணமுத மானகொடி நண்ணுமடி யாரைப் 
        பெருங்கருணை செய்தாட்கொளும் 
	தாதலர்த் தெரியல்புனை மாதுநற் கருணையிறை 
        சப்பாணி கொட்டியருளே 
    தண்பாவு தென்காசி நண்பான பெண்பாவை 
        சப்பாணி கொட்டியருளே. 	      	(2)
-----
[1]. உலகத் தோற்றத்திற்குக் காரணம் நாததத்துவம். அதற்குத் துணை சத்தி. சப்பாணி கொட்டுவதால் உளதாம் ஒலி நாதத்தினையும் அதனை உண்டாக்கும் திருக்கைகள் சக்தி துணைசெய்தலையும் குறிப்பன என்ற கருத்து. 
----------------
	பூதல மெனுங் கொடிய வெம்மாயை சூழப் 
        புதைப்பவுட் கிடந்துவிழையும் 
    பொன்பூவை பாரென்று மன்னபிற வென்றுமே 
        புதிதுபுதி தாகிமிளிருங் 
	காதலின் மயங்கிநற் கருணையி னிலக்கியங் 
        கனவிலுந் நினைவுறாமற் 
    கான்பெறு விலங்கிற் றிரிந்துவீழ் மாக்களைக் 
        கவனமுற் றுய்யுமாறு 
	மாதவப் பேறுபெறு நிலைமையிது வம்மென 
        1மயக்கொழித் தாற்றல்போல 
    மலர்த்திருக் கைகொண்டோர் முறைகட்டி யுய்யும்வகை  
        மன்னுமுயர் புவிவிளங்கத் 
	தாதலர்த் தொடையல்புனை போதநல் லருளம்மை 
        சப்பாணி கொட்டியருளே 
    தண்பாவு தென்காசி நண்பான பெண்பாவை 
        சப்பாணி கொட்டியருளே. 	      	(3)
-----
	1. மயங்கி நிற்பவர்களைக் கைதட்டி அழைத்தல் போல உலக மாயையிலே மயங்கிக் கிடக்கும் ஆன்மாக்களை அம்மையார் சப்பாணி கொட்டி அழைத்துத் தெருட்டுகின்றார் என்ற கருத்து.
-----------------
	ஊன்கொண்ட வுலகினுக் குறுமுதவி செய்கின்ற 
        உத்தமர்கள் தத்தமெதிர்கொண் 
    டுறுகாலை யங்கவர் முயங்கித் தழீஇக்கொண் 
        டுவக்கின்ற தன்மைபோலத் 
	தேன்கொண்ட கொன்றையந் தார்முடித் தேவனற் 
        செம்மிடறு மட்டடங்கத் 
    தீவிட மடக்கிவைத் துலகினைக் காத்தருள் 
        திருத்திகழ் மலர்க்கையிணையும் 
	வான்கொண்ட பொய்கைவளர் அறுமுகத் தேவினை 
        வாழ்கந்த னாப்பணித்து 
    மன்றிறை கரத்தளித் துலகினைக் காத்தருள் 
        மலர்க்கரங் களுமொன்றவே 
	தான்கொண்ட நட்பின்வைத் தொற்றியெம் மன்னைநீ 
        சப்பாணி கொட்டியருளே 
    தண்பாவு மவிநாசி நண்பான பெண்பாவை 
        சப்பாணி கொட்டியருளே. 	      	(4)
--------------------
	குவிகின்ற வஞ்சப் புலன்கொன்ற செம்மனப் 
        [1]பெருநிலைக் குறியாளர்தம் 
    கொற்றமுறு மறிவினிற் றிகழறிவு நீயெனுங் 
        கொள்கையாற் [2]பெறுமவற்றிற் 
	புவியின்யா மறிவதிலை யறிவறி மகப்பேற்றி 
        னல்லபிற வாய்ப்போற்றியே 
    பொன்மைதரு நின்னையோர் மகவெனப் பெற்றிடப் 
        போற்றிசெய் மலையனுக்கும் 
	அவன்மனைவி யமிழ்தென்னு மேனைக்கு மருமைபெறும் 
        அன்பினோ டுருவளர்ந்தே 
    அழகுவளர் குழவியென் றவரிடையி னளவளாய் 
        ஆய்ந்தவின் பெலாமளித்தே 
	தவழுமிரு கைகொண்டு தலைவிநீ யெம்மிடைச் 
        சப்பாணி கொட்டியருளே 
    தண்பாவு மவிநாசி நண்பான பெண்பாவை 
        சப்பாணி கொட்டியருளே.	      	(5)
----
[1]. "உண்மைநின்ற, பெருகு நிலைக்குறியாளர் அறிவு தன்னை" தேவா: திருநாவு - திருச்செங்காட்டங்குடி. தாண்டகம். 
[2]. 'பெறுமவற்றில் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற" குறள். இவ்வுண்மையை அறிந்த மலயத்துவச பாண்டியன், உண்மையே இலட்சியமாகக் கொண்ட அறிவிற் சிறந்த பெரியாரின் அறிவின் அறிவாகியிருந்த நின்னை மகளாகப் பெற்றான் என்ற கருத்து. 
----------------------
	அருள்பெருகு பதியுமதை யடைபசுக் கூட்டங்கள் 
        பாசமகல் வகைகள்தனை 
    அன்றரன் பூசனையி னாற்றரணி காண்வகைக் 
        காஞ்சியி னளிக்குமாபோற் 
	பொருளுறுஞ் சரியைமுத னாற்பெருஞ் சாதனப் 
        பொற்பின்வரு பத்திவழியும் 
    பூதலந் தன்னில்நேர் வைத்தொரு தவஞ்செய்து 
        பூசனை முறையினாற்றிக் 
	கருணையுரு வாகியிந் நளினையந் துறையிற் 
        கவின்பெருகு மாவின்மேவுங் 
    கற்பகப் பூங்கொடியின் மாதவஞ் செய்துநற் 
        கண்ணுதல் பாதமலர்மேற் 
	றருமலர்கள் வருமலர்க ளென்னுமிரு கைகொண்டு 
        சப்பாணி கொட்டியருளே 
    தண்பாவு மவிநாசி நண்பான பெண்பாவை 
        சப்பாணி கொட்டியருளே. 	      	(6)
-------------
 வேறு 
	நின்னடி நேயமி லாதன வைம்பொறி 
        நீள்பஞ் சேந்திரியம் 
    நினைவில வாமென வுறுகர ணங்களு 
        நால்வகை நிற்பனவோர் 
	மன்னியல் பில்லன திரிகர ணம்மென 
        மனிதர் வழங்குமிவை 
    வாயு முடம்பு பிறப்பது வேதொழி 
        லாகி யிறந்திடவும் 
	துன்னிய அன்பர் திறத்திவை வேறாத் 
        தோன்றுறு நிலையதுவும் 
    தொல்லுல கர்க்கு விளக்கு மிலக்கணி 
        தோன்று திருக்கைகொடு 
	கொன்னுனை வேலின் விளங்கு கயற்கணி 
        கொட்டுக சப்பாணி 
    குளிர்தரு புக்கொளி மிளிர்கரு ணைக்குயில் 
        கொட்டுக சப்பாணி.       	(7)
-----------------
	நெடியதொர் சூர்முதல் வெல்சிறு வன்றனை 
        நின்றக யந்தனிலே 
    நிலவ வெடுத்துப் பால்தரு பைம்பூண் 
        நிமிர்தரு கைம்மலரும் 
	கடிய மனச்சமண் வீட்டு மனச்சிறு 
        கான்முளை யைக்காழிக் 
    கயமதி லழுகை தவிர்த்துறு பால்தரு 
        கைம்மலரும் முறையே 
	படியினி னிதுபெரி திதுபெரி தென்றிடு 
        பான்மையி னொற்றுவபோற் 
    பங்கய முற்றமர் செங்கையு றத்தரு 
        பண்புடை யம்பிகையெம் 
	குடிமுழு தாண்டு கொடுக்கு மடப்பிடி 
        கொட்டுக சப்பாணி 
    குளிர்தரு புக்கொளி மிளிர்கரு ணைக்குயில் 
        கொட்டுக சப்பாணி. 	      	(8)
----------------
	[1]அன்றொரு பகலிடை மன்றவன் விழியை 
        யடக்கிய செய்கையினால் 
    ஆரிரு ளுலகினி லேயடர் வுற்றிடும் 
        அற்றம் நினைந்ததனை 
	ஒன்றிய தண்டம் விதித்து நிவர்த்திசெய் 
        உண்மைய தாமெனவே 
    ஒண்கர மலரினை யொன்றினொ டொன்றுற 
        ஒட்டிய டித்திட்டும் 
	நன்றி கொடீசனை யர்ச்சனை செய்து 
        நலம்பெறு மாறதென 
    நண்புறு பூசனை யுஞ்செயு நாயகி 
        நாடிய பொன்மலருங் 
	கொன்றை புனைந்த பரன்வல நின்றவள் 
        கொட்டுக சப்பாணி 
    குளிர்தரு புக்கொளி மிளிர்கரு ணைக்குயில் 
        கொட்டுக சப்பாணி.		      	(9)
----- 
[1]. ஒரு காலத்தே விளையாட்டாக உமாதேவியார் சிவபெருமானது இரண்டு திருக்கண்களையும் தமது திருக்கரங்களினாலே மூட உலகமுழுதும் பெரிய இருள் மூடியது. அதற்காக அத்திருக் காங்களுக்குத் தாமே தண்டம் விதித்துக் கழுவாய் செய்ததுபோல கரத்தோடு கரம் அடித்துப் பின் சிவபூசையும் புரிந்ததுபோல என்ற கருத்து. 
	"மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தால் 
	மகிழ்ந்தவன்கண் புதைத்தலுமே வல்லிருளா யெல்லா 
	உலகுடன்றான் மூடவிருள் ஓடும் வகை நெற்றி 
	ஒற்றைக்கண் படைத்துவந்த உத்தமனூர் வினவில்'' 
தேவா - சுந்தார் - கலையநல்லூர் - (4) திருப்பாசுரமும் குறிக்க. 
----------------
	பாதக முற்றுழல் பதடிக ளேனும் 
        பணிந்து நினைந்திட்டாற் 
    பழியினை வீட்டிப் பரிசுசெய் பண்பு 
        பரித்தல் கருத்தாகச் 
	[1]சாதிவெள் ளானைவிண் ணாதனை நீங்கித் 
        திரிந்தது சார்ந்துதுதி 
    சாற்ற வதற்குறு சாப மொழித்துச் 
        சால்புற அருளுமவன் 
	பாதியின் மேவி வலத்துறை யுங்கரு 
        ணாகரி பாகுமொழிப் 
    பண்புறு செல்விநின் செங்கைக ளொன்றிய 
        பரிசு பெறச்செய்து 
	கோதின் மறைத்தமிழ் ஓது பதத்தினள் 
        கொட்டுக சப்பாணி 
    குளிர்தரு புக்கொளி மிளிர்கரு ணைக்குயில் 
        கொட்டுக சப்பாணி. 	      	(10)
----- 
[1]. இந்திரனாற் சபிக்கப்பெற்றுக் காட்டானையாய்த் திரிந்த அயிராவதம், நாரதமுனிவரால் அவிநாசித் தலமேன்மை தெரிந்தடைந்து துதித்துச் சாபநீங்கப்பெற்று மீளவும் இந்திரனோடு பொன்னுலகடைந்த வரலாறு தலபுராணம் அயிராவதச் சருக்கம் காண்க. 
--------------------
 5. முத்தப்பருவம் 
	அழிந்து சமண விருளோட 
        வவனி யெல்லாஞ் சிவம்பெருக 
    வருண்மாத் தவஞ்செய் சிவபாத 
        விதயர் தவநன் கெய்திடவும் 
	சுழிந்த பிறவி தொறுமுயிர்கள் 
        தோன்று மழுகை தவிர்ந்திடவுந் 
    தோன்று காழி மறைச்சிறுவர் 
        அழுகை தவிர நின்கலசம் 
	வழிந்த வமுதஞ் சிவஞானங் 
        குழைத்துப் பசும்பொன் வள்ளமுற 
    மகிழ்ந்து கொடுத்துச் சீரமுதே 
        வாங்கி யடிசி லுண்கவென 
	மொழிந்த பவளச் செங்கனிவாய் 
        முத்தந் தருக முத்தமே 
    முழுது மளிக்கும் பெருங்கருணை 
        முதலே முத்தந் தருகவே. 	      	(1) 
------------------
	சிறிய நீலம் செங்குமுதம் 
        சிறந்த ஆம்பல் நாண்மலர்கள் 
    செம்மை மலர்ந்த மலர்வாவி 
        செல்வி நினது திருமுகம்போல் 
	நறுந்தே னமுதம் தரமிளிரும் 
        நல்ல வவிநா சியின்வாழ்வே 
    நண்ணு முயிர்கள் நின்கடைக்கண் 
        ணதனால் மலமோ சனம்பெற்றுக் 
	குறுகிச் சிவமாய்ப் புகழ்விளங்கும் 
        கொள்கை நிறுவிக் காட்டுவபோற் 
    குவளை மலர்ந்த நோக்கமுறக் 
        கோதில் பவள இதழ் விளங்க 
	முறுவல் பூத்த செங்கனிவாய் 
        முத்தந் தருக முத்தமே
    முழுது மளிக்கும் பெருங்கருணை 
        முதலே முத்தந் தருகவே. 	      (2)
---
[1]. மலர்ந்த- வாவி - நினது திருமுகம்போல் மிளிரும்: நீல உற்பலங்கள் - குமுதங்கள் - ஆம்பல் முதலிய பூக்கள் அம்மையாரு டைய கண் முதலிய அவயவங்கள்போல மலர்தலால் தடாகமானது அம்மையாரது திருமுகம் போன்று விளங்குவதாம். 
----------------
	கத்து புறப்புன் சமயிகண்முன் 
        விழுங்கு சைவக் கனியினைமெய் 
    [2]காட்டி யுமிழ்வித் திடுகாழிக் 
        குரவன் போலு மவ்வணமே 
	சுத்தர் தம்மை ஆறையினில் 
        விளக்கி யமணர் தூரறுத்த 
    [3]தூயோன் போலும் மதலைதனைக் 
        கரவின் வாயி னுமிழ்வித்து 
	நித்தன் நெறியின் உண்மையினை 
        [4]நிறுவ நம்பிக் கருள்புரிந்த 
    நிமலன் வலப்பாற் செல்விநின் 
        நீல மலர்ந்த நறும்பவளம் 
	முத்த மீனும் செங்கனிவாய் 
        முத்தந் தருக முத்தமே 
    முழுது மளிக்கும் பெருங்கருணை 
        முதலே முத்தந் தருகவே. 	      	(3)
-----
[1]. திருக்கண்கள் மலர்ந்து பவள இதழ் விளங்குவது அம்மையார்  திருநோக்கத்தினாலே உயிர்கள் சிவபெருமானது ஒளியைப் பெறுகிறார்கள் என்று காட்டுதல்போல இருந்தது. 
[2]. காழிக்குரவன் - திருஞான சம்பந்தர். சமண சமயத்தாலே விழுங்கப்பட்ட சைவக்கனியை, வாது செய்து மீட்டுக் கொடுத்தருளினார். 
[3]. தூயோன் - திருநாவுக்கரசர். திருப்பழயாறை வடதளியிலே சமணரால் மறைக்கப்பட்ட சிவாலயத்தை, அரசனைக் கொண்டு சமண் தூரறுத்து வெளிப்படுத்திக் கொடுத்தருளினார். 
[4]. நம்பி - சுந்தரமூர்த்திகள். சைவமறைச் சிறுவனை விழுங்கிய முதலை வாயிலிருந்து மீட்டுக்கொடுத்தமை. 
--------------
	உறுமோர் செயலற் றிடுவெளியா 
        முவனிற் கலந்தே அளியாகி 
    ஒளியா யுலகுக் களித்திடுவான் 
        உவந்தே யினிதி னீன்றபெருந் 
	தறுகண் வேழ முகப்பிள்ளை 
        தனையும் மிகுசூர் தனைவென்று 
    தழைக்க விண்ணங் குடியேற்றித் 
        தைய லிருவர் தமைமணக்கும் 
	அறுமா முகத்துப் பிள்ளையையும் 
        அமுத மொழிகள் மொழிந்தெடுத்தே 
    அணைத்து வளர்த்திங் குலகுயிர்கள் 
        அனைத்தும் வளர அருள்புரிபுன் 
	முறுவல் முகிழ்க்குஞ் செங்கனிவாய் 
        முத்தந் தருக முத்தமே 
    முழுது மளிக்கும் பெருங்கருணை 
        முதலே முத்தந் தருகவே. 	      	(4)
-----------------
	வளைத்த பிறவிக் கடலிடையே 
        வருந்தி யுழலு முயிர்க்கெல்லாம் 
    வாட்டந் தவிர்த்துக் கருணைசெயும் 
        வண்மை யிதுபோல் அமரர்களைக் 
	களைத்தல் செயாமற் கடல் விடமுண் 
        கண்ட ரவர்க்கு மவ்விடத்தைக் 
    கழுத்தின் மட்டில் நிறுவியருள் 
        கருணைச் செயலால் உலகெல்லாம் 
	விளைத்த செயல்கள் அறிவின்பம் 
        பசுக்கள் முதலாப் பரமன்வரை 
    மேலா நின்றன் இயலளவாம் 
        மெய்மை விளங்கும் சுவையமுதம் 
	முளைத்த பவளச் செங்கனிவாய் 
        முத்தந் தருக முத்தமே 
    முழுது மளிக்கும் பெருங்கருணை 
        முதலே முத்தந் தருகவே. 	      	(5)
---------------
	மெல்ல அளித்தல் முறையன்று 
        விரைவி னளிப்போ மென்பதுபோல் 
    விழைந்து நின்னை யடைந்தடிசேர் 
        மெய்மை யன்பர் தமக்கருள 
	[1]நல்ல அரும்பு மலர்ந்ததற்பின் 
        காய்த்துப் பின்னர் நறுங்கனியாய் 
    நல்கல் தாழ்க்கு மதனாலே 
        நவிலுங் கனியை முதற்றந்து 
	வல்ல அரும்பு முறையதன்பின் 
        வைத்த வாறிங் குலகுய்ய 
    வளர்க்கு மமுத இரதமுறும் 
        வாயின் கோவைக் கனிகனிந்து 
	முல்லை யரும்புஞ் செங்கனிவாய் 
        முத்தந் தருக முத்தமே 
    முழுது மளிக்கும் பெருங்கருணை 
        முதலே முத்தந் தருகவே. 	      	(6)
-----
 [1]. தாவரங்களிலே அரும்பு முன்னும் கனி பின்னும் உண்டாவன; ஆனால் அதுபோல அரும்பிப் பூத்துக் காய்த்துக் கனியத் தாமதம் ஆகும், அதுவரை உயிர்கள் வருந்தும், என்று பரிந்து கருணையினாலே (கோவைக்) கனிபோன்ற திருவிதழ்களின் முத்தம் முதற்கண் தந்து பின் (முல்லை) அரும்பும் இளநகைத் திருமுறுவல் அரும்புகின்றன.
----------------------
	கடிய மனத்தாள் [1]தாடகையா 
        மரக்கி கனன்ற சினக்கொடியாள் 
    கன்ம பலத்தால் மகப்பேறு 
        வேண்டி யயனைக் கைதொழவும் 
	படியில் சீர்த்தி யவிநாசி 
        பரவு கென்ன அவன்கூறப் 
    பரிசிற் பரவி வழிபடநின் 
        பரந்த கருணைத் திருமொழியால் 
	அடியார்க் கெளிசேர் அப்பன்வரம் 
        அருள் மகப்பே றமைந்துற்ற 
    அருமை யிதனாற் கடையோர்க்கும் 
        எளிவந் தளித்து நினைத்தவரம் 
	முடிக்கக் கொடுத்தல் மொழிந்திடுவாய் 
        முத்தந் தருக முத்தமே 
    முழுது மளிக்கும் பெருங்கருணை 
        முதலே முத்தந் தருகவே. 	      	(7)
----
[1]. தாடகை என்ற கொடிய அரக்கி மகப்பேறு குறித்துப் பிரமனை வேண்ட அவர் சொல்லியபடி அவிநாசியை அடைந்து பேறு பெற்றனள் என்பது வரலாறு; தலபுராணம், தாடகைச் சருக்கம் 
----------------
வேறு 
	[1]மழவிளஞ் சிறாரின்மொழி கேளான்கொல் நின்கொழுநன் 
        வாழ்த்துபா ணர்யாழையும் 
    மழநாட்டி னானாயர் குழலையும் பாராட்டி 
        நல்கினா னன்றியுந்தான் 
	குழவியா யவ்வின்ப முலகினர் கொளும் 
        கொடுக்குமா வல்லனலனாம் 
    கோதற்ற நின்சிறார் குதலையை யுவந்திடுங் 
        கொள்கையால் யாழ்பழித்த 
	மொழியெனும் பேர்பெற்ற தன்றியும் மன்பதைகள் 
        மொய்த்த அவ்வின்பமுறவே 
    முதல்விநீ குழவிஎன வலைவரைப் பிடங்களில் 
        வந்துபெற் றவர்மகிழவே 
	கழறிடுங் கருணையொடு மழலையங் கருள்தருங் 
        கனிவாயின் முத்தமருளே 
    கங்கைநற சடையவன் பங்கினுக் குடையவள் 
        கனிவாயின் முத்தமருளே. 	      	(8)
-----
[1].  குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் 
மழலைச் சொற் கேளாதவர். (குறள்) 
என்றபடி மக்கள் மழலைச் சொற் கேளாதவராகையால் சிவபிரான் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் யாழினையும், ஆனாய நாயனார் குழலினையும் இனிதென மகிழ்ந்து வழங்கினார். அம்மையாரோ அவ்வாறன்றி மக்கள் மழலை யுவந்து யாழ்பழித்தமொழி என்று பேர் பெற்றனர்; மேலும் தாமே குழவியாய் வந்து வலைச்சேரி மலைச் சேரிகளிலே மழலை பேசி மகிழ்வூட்டினர் என்ற கருத்து. 
---------------
	
[1]தனிவிழியி னாட்டத் தருட்க ணோக்கம் வைத்த 
        தனித்தீக் கையுங்கர முகின் 
    சரணமும் எமதுதலை மீதுவைத் திடுபெயர்த் 
        தனித்தனித் தீக்கையவையும் 
	பனுவன்முறை யடியேங்க ளுய்வகை யளிக்குநீ 
        பரிணமித் தந்தவகையே 
    பார்கொள் அளிப்பவள் பரிசமுத் திரையெனப் 
        பனிவாயின் முத்தமருளல் 
	நினதுபே ரருண்முறை முற்றும்வகை யாகுமால் 
        நீள்விசும் புயர்பனைகள்நேர் 
    நின்றசோ பானமுறை நன்றமரர் வந்துசெல் 
        நெறிபோல நின்றுநிலவிக் 
	கனமாக முற்றிவளர் அவிநாசி நற்றலைவி 
        கனிவாயின் முத்தமருளே 
    கங்கைநற் சடையவன் பங்கினுக் குடையவள்        	(9)
-----
[1].உயிர்கள் உய்யும்பொருட்டு அருட் சத்தி துணையாகச் செய்யப்பெறும் தீக்கை வகைகளிலே பார்த்தல், சிரத்தின்மேல் கை வைத்தல், திருவடி சூட்டலாகியவை போலப் பரிச முத்திரையினால் செய்யப்பெறும் தீக்கையைப் போன்று திருவாய் முத்தந் தந்தருள்க என்ற கருத்து.
-----------------
        		வேறு 
	பிறைகொண்ட சடையினான் சொன்னதொரு பழமறை 
        பேசாத தெழுதாததும் 
    பெம்மானை ஈதல்ல அதுவல்ல என்னமறை 
        பேசிப் பிறங்குமென்பர் 
	நிறைதந்த பாலில் துண்ணடிசி லெனவூட்டி 
        நின்றசம் பந்தர்வாயின் 
    நின்பாலி னுற்றமறை நிலமுழுவ துங்குலவி 
        நிமலனை நேர்காட்டியே 
	அறைகின்ற மறையாகு மருமையித னாலுயர் 
        அருமைநின் வாக்கிலாகும் 
    1ஆதலால் நீயரன் வாக்கினிற் பகுதிகொண்டு 
        அருமையா மறைகடந்த 
	கறைகொள்கண் டன்வாயி னிறைகொண்ட நின்செழுங் 
        கனிவாயின் முத்தமருளே 
    கான்விரவு புக்கொளிக் கருணையம் பிகையம்மை 
        கனிவாயின் முத்தமருளே. 		      	(10)
------
[1]. பரமேசுவரன் திருவாக்கில் எழுந்த மறை பிரமப் பொருளை இதுவல்ல இதுவல்ல என்று அன்மை மொழியினால் நேதி களைந்து சொல்லும். ஆனால் அம்மையார் பாலின் திருஞானசம்பந்த சுவாமிகள் திருவாக்கிலிருந்து எழுந்த மறை பிரமப் பொருளை இதுதான் என்று நேரே காட்டியது. ஆதலின் அம்மையின் வாக்கு அரன் வாக்கினை வென்று பகுதி கொண்டதோ என்னும்படி என்ற கருத்து. 
----------------
6. வருகைப் பருவம் 
	[1]எல்லையின் விலகியொவ் வொன்றாக வோர்பகல் 
        இன்கலை நிரம்புமதிபின் 
    இறைவனைக் குறுகுமள வொவ்வொன் றெனக்குறைந் 
        தெல்லியை யடைந்துவாவின் 
	தொல்கதிர் முழுதுமவ் விரவியிற் கலந்தனன் 
        றோன்றிடா னுலகி[2]லதுபோற் 
    றொழும்பனே னினைவிலகு மளவிலே யுலகினிற் 
        றோன்றிநின் னான்மிளிர்குவன் 
	பல்வகை யுழந்திடுவன் பார்வாழு நின்முனர்ப் 
        பரிவோடு மணுகுமளவிற் 
    பண்பிலே நானறவு முறைகின்ற [3]இருளிலே 
        பரைநின்னை யடையவருளும் 
	கல்லினற் பாவையெம் மல்லகத்தே யொளிர் 
        கருணையம்பிகை வருகவே 
    கயற்கண் ணினிற்புவி யுயக்கொண்ட புக்கொளிக் 
        கருணைநா பகிவருகவே.	      	(1)
----
[1]. சூரியனை விட்டு விலகுந்தோறும் ஒவ்வொரு கலையாக நிறைந்து அதன்பின் அவனை அடையுந்தோறும் ஒவ்வொரு கலையாகக் குறைந்து, அவனை அடைந்த நாளில் சந்திரன் உலகிலே தோன்றாமல் மறைந்து விடுகிறான். இது பௌர்ணமை அமா வாசைகளின் விவரமாகும். 
[2]. அதுபோல ஆன்மாக்களும் இறையை விட்டு விலகுந் தோறும் உலகிலே விளங்கி இறையை அடையுந்தோறும் உலகிலே மறைந்து, அடைந்த பின் உலகில் தோன்றாமல் மறையும். 
[3]. "இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்ற திருவாசகத் திருவாக்கின் கருத்தைத் தழுவியது. 
---------------
	எண்ணியோர் தேவிமற் றொருதேவி யைத்தன 
        தின்னிறைவ னேற்குமாசெய் 
    தெழினல மளித்தவன் றனையணைந் தேகளிக் 
        திடுமாறு செய்வதுளதோ 
	நண்ணுமுயிர் வர்க்கங்கள் பந்தத்தின் மீளவே 
        நன்றவற் றினையெடுத்து 
    நாடுறு முருச்செய்து நல்லணி புனைந்துநின் 
        நாயகனை யணையுமாறு 
	மண்ணும் விண் ணும்போற்ற வளர்கின்ற சாயுச்சிய 
        வாழ்வீடு தன்னின் மேனி 
    1மகிழ்விக்க வல்லநின் னருளிந்த வேழையேம் 
        மனுவினுக் கெளிதாகுமே 
	கண்களொரு மூன்றுடைத் தனிக்கரும் பின்சுவைக் 
        கருணையம் பிகைவருகவே 
    கயற்கண் ணினிறபுவி யுயக்கொண்ட புக்கொளிக் 
        கருணைநா யகிவருகவே. 	      		 (2)
--- 
[1]. ஒரு தேவி தனது நாயகனை மற்றொரு தேவி அணையும்படி செய்வது அரிதாகும். ஆனால் அம்மையாரோ உலகிலே சர்வ ஆன்மாக்களும் தனது நாயகனை அணையும்படியான முயற்சிகள் எல்லாம் செய்து அவைகளைத் தனது மாயை கொண்டு உடம்பும் கரணம் முதலான கருவிகளும் அணிபெறத் தந்து தனது மேலான வீட்டிலே தன் நாயகனுடன் இன்பமனுபவிக்குமாறு செய்தருளுகின்றார். இந்த அருள் நமது சொல்லளவிலடங்குமோ. 
------------------
	தொல்பெரும் புலவோர்கள் கடைநட் பினுக்குவமை 
        சொல்கமுகி னீட்டமவைதாம் 
    தோற்றுபல மருள்வகை தாமுயர்ந் துலகினச் 
        சொல்லன்மை காட்டுவன போல் 
	சில்பசுங் காய்தூங்கு தெங்கினும் பூஞையின் 
        சிறியகண் காய்த்து நீலம் 
    தேர்ந்துகனி பெண்ணையினும் முத்தீன்று பச்சை 
        சிறந்துநற் பவளமாக்கிப் 
	பல்வகையின் விரைவினுயர் புக்கொளியின் மேயநற் 
        பரமஅருள் வாரிநிறைவே 
    பார்வாழ நீமுனம் [2]ஓர்கல்லி லேவந்து 
        பண்பி[3]லோர் கற்புகுந்தாய் 
	4கல்வகையி னெம்மகங் களிகொள்ள வெம்மிடைக் 
        கருணையம் பிகைவருகவே 
    காண்டகைய புக்கொளியின் வேண்டினர்க் கருள்செயுங் 
        கருணைநா யகிவருகவே. 	      	(3)
------------------------------------- 
[1]. உலகிலே முதல் இடை கடை நட்புக்களுக்கு முறையே பனை, தெங்கு, கமுகுகளை உவமை சொல்வர். ஆனால் பலன் கொடுக்கின்ற வகையிலே பச்சைக்காய் ஒன்றுமே தருவது தெங்கு: பூனைக்கண் (சோதகம்) போலக் காய்த்து நீலமாம் பழம் தருவது பனை: முத்துப் பூத்துப் பச்சை காய்த்துப் பவளம் பழுப்பது கமுகு. ஆதலின் பலன் மிகுதியினாலே அவ்வுவமையை அன்றெனக் காட்டுவன இக்கமுகுகள் என்ற கருத்து. 
[2]. இமயமலை. மலைமகளாய் வந்தது. 
[3]. கைலாயமலை. சிவபெருமானை மணந்தது. 
[4]. இனம்பற்றி அந்தக்கல்லே போன்ற எமது மனம். 
-----------
	அடியவர்கள் தமையரன் வெளிப்படக் காண்வகையின் 
        அல்லனோய் முதலாயவும் 
    அளித்துவரு போதெலாம் நின்னுடன் வரலின்றி 
        அவனே தனித்துவருவன்; 
	குடியாக அடியவர்கள் கொள்ளநற் பேறுடன் 
        குலவுமின் பதனையீயக் 
    கொண்டெழுந் தருள்செய்யும் போதெலாம் நின்னொடக் 
        கொழுநனு மொன்றிவருவன்; 
	படிமீதி லிதனுண்மை பார்க்கிலடி யர்க்குநின் 
        பரிவிருக் கும்பரிசுகாண் 
    பண்பிலா வேழையே முய்வகை யழைத்திடப் 
        பரிவொடும் வருதலழகே 
	கடியவிழ் கொன்றையந் தாரினன் பங்கினிற் 
        கருணையம் பிகைவருகவே 
    கயற்கண் ணினிற்புவி யுயக்கொண்ட புக்கொளிக் 
        கருணைநா யகிவருகவே. 	      		(4)
----------------
 	வேறு 
	திருமா முடியுந் திருக்களனுந் 
        திருமார் பும்பூண் கலனொலிப்பச் 
    செல்வக் குமரன் றனையுமெழில் 
        திகழும் யானைக் கன்றினையும் 
	பெருக வேந்தி வருமிருகைப் 
        பீடார் வளைகள் கலந்தொலிப்பப் 
    பெருநூ லோர்கள் உண்டிலையாய்ப் 
        பேசு மதனாற் பரனைநிகர்த் 
	துருகு மன்பர் உளத்திலொளிர் 
        மின்போல் நுடங்கும் இடையணிகள்
     ஓசை யொலிப்ப உயிர்த்தொகைகட் 
        குற்ற நோய்தீர்த் திடவிரைந்து 
	வருபொற் பாத வணியொலிப்ப 
        மாதே வருக வருகவே 
    வளர்புக் கொளியூர்ப் பெருங்கருணை 
        வாழ்வே வருக வருகவே. 	      	(5)
------------
	நிகழுங் கருணை தரவிலையேல் 
        நிலத்தி லெந்தத் தேவினையும் 
    நினைப்பா ரிலராம் ஆயினுமந் 
        நின்ற நின்ற தெய்வமெலாம் 
	புகழுங் கருணை பெற்றதுநின் 
        புகலா லாமென் றியம்புமறைப் 
    போத மிதன்பே ருண்மையினைப் 
        புகட்டப் பெரிய கருணையெனத் 
	திகழும் பொதுவிற் சிறப்புப்பேர் 
        திகழ நிகழ்வாய் முதல்விநீ 
    சிறியே மழைப்ப வெழுந்தருளல் 
        சிறக்கு நின்பேர்க் குரிமையன்றோ 
	மகிழும் வரங்கள் அளித்தருள்செய் 
        மயிலே வருக வருகவே 
    வளர்புக் கொளியூர்ப் பெருங்கருணை 
        வாழ்வே வருக வருகவே.       	(6) 
-------------
	மறைகள் தொடர நீர்தொடரும் 
        சடையி லரவு தொடரவரு 
    மகிழ்நன் றொடர மாறுசெயுங் 
        கரவு தொடரா மனத்தொண்டர் 
	நிறைய நினைத்துப் பிரிவறியா 
        நேசந் தொடர வானவர்பின் 
    நின்று தொடர யாங்களுனை 
        நிமலை யணைந்தான் எமையளிக்கும் 
	இறைவி யணைந்தாள் உயிர்த்துணையாந் 
        தலைவி யணைந்தாள் இம்பரினும் 
    இன்ப மனைய அணைந்தாளிங் 
        கணைந்தா ளெனப்போற் றிடவின்னே 
	மறைசேர் பொருளுக் கிறைமகிழு 
        மானே வருக வருகவே 
    வளர்புக் கொளியூர்ப் பெருங்கருணை 
        வாழ்வே வருக வருகவே. 	      	(7)
---------------
	[1]பீடு சிறக்கும் பிலவுலகிற் 
        பிறங்கு நாக கன்னிக்கும் 
    பேறு கொடுக்கும் பெரும்பேறே 
        [2]பெட்பார் வியாத வேட்டரசன் 
	கூடும் வகையின் மகப்பேறும் 
        கொடுத்துன் விழவிற் கும்பிட்டே 
    கொற்றக் கயிலை யவன்மேவக் 
        கூட்டி யளித்த குணக்குன்றே! 
	தேடக் கிடையாத் திருமணியே! 
        தெவிட்டா வின்பப் பெருங்கடலே! 
    தெய்வத் திருவார் கற்பகமே! 
        சிறியே முய்ய வருந்திருவே! 
	மாட முயர உயரவிநை 
        மணமே! வருக வருகவே 
    வளர்புக் கொளியூர்ப் பெருங்கருணை 
        வாழ்வே வருக வருகவே.       (8)
---- 
[1]. நாககன்னிக்குப் பேறு கொடுத்த வரலாறு: தலபுராணம்- நாககன்னிச் சருக்கம். 
[2]. வியாதன் என்னும் வேட்டுவ அரசனுக்கு மகப்பேறும் திருவிழாச் சேவையும் கைலையில் இருக்கும் பதமும் தந்த வரலாறு: தலபுராணம் வியாதச் சருக்கம். 
---------------
	என்னன் பினிய அருட்கோலத் 
        தெழிலே வருக; வியல்வருக; 
    வெளியேங் குறைதீர்த் தருள்செய்யு 
        மிறையே வருக; வுறையேறாப் 
	பொன்னே மணியே எனச்சிறியேம் 
        போற்ற வருக; புகன்றிடுவோர் 
    புன்மை நினையா தளித்தருளும் 
        புயலே வருக; புகலியிலே
	அன்னே எனமுன் னழுமழவுக் 
        கமுத மளித்த அனைவருக; 
    அம்மை வருக; செம்மைவளர் 
        அளியே வருக; நாவலூர் 
	மன்னன் பரவ வரங்கொடுத்த 
        வளமே வருக வருகவே 
    வளர்புக் கொளியூர்ப் பெருங்கருணை 
        வாழ்வே வருக வருகவே. 	      	(9)
 -----------
        		வேறு 
	அழலி னிறைவன் இருவர் அறிய 
        அரிய உருவின் அமைபவள்! 
    அருளி னிறைவி எழுத அரிய 
        அழகு மிகுநல் உருவினள்! 
	பழய புகலி நகரி லிறையுண் 
        பழகு மமுத முதவுவள்! 
    பரவு குளமுன் முதலை மதலை 
        பரிவி னுமிழ அருள்பவள்! 
	மிழலை யதனின் வறுமை தவிர 
        மிகுமொர் பரிசு தருபவள்! 
    விழையு மெளிய முகமு மகமு 
        மிளிர வொளிசெய் அளியினள்! 
	மழலை மொழியு மறையின் முதல்வி! 
        வருக வருக வருகவே 
    வளரு மவினை யருளி னரசி 
        வருக வருக வருகவே. 	      	(10)
---------
7. அம்புலிப் பருவம் 
	மீதான வானிலத் தகத்திருள் தவிர்த்துயிர் 
        விளக்கமுற மேவிநின்றே 
    வெண்மைபுனை தண்ணொளி கதிர்த்தருள் சிறக்கவளர் 
        மேன்மையினை; மேலுமம்பொற் 
	போதார்ந்த கொன்றையன் கங்கையொடு மொப்பவே 
        புகலிடந் தாங்கவளர்வை; 
    புண்ணியன் றிருவுரு விடத்தினின் கண்ணுறப் 
        பொலிகுவை; நின்னியல்புதான் 
	ஈதாக மதியமே சொல்வழியி னொப்பென்ன 
        எம்மன்னை யுன்னிநின்னை 
    எழிலார் கரங்கொண்டு வரவழைத் தனளாக 
        இன்னே விரைந்துவருவாய் 
	ஆதார மாயுலகு நிறுவுமெம் மம்மையுட 
        னம்புலீ யாடவாவே 
    அற்புவளர் புக்கொளியி னற்கருணை வல்லியுட 
        னம்புலீ யாடவாவே. 	      (1)
--------------
	வளிகொண்ட பூதத்தின் மேலாமோர் வானகம் 
        வந்துமிளிர் தருவை யிவடான் 
    வன்மையொடு தொன்மைபெறு மாப்பெரும் பூதங்கள் 
        வாழ்த்துநற் றலைவியாவள்; 
	ஒளியுலகி [1]லுற்றவர்கள் பக்கலிற் [2]றண்ணளிசெய் 
        தோடுவாய் மற்றிவ்வனைதன் 
    ஒருபெருந் [3]தண்ணளியி னுலகெலா நிலவநின் 
        றூட்டியே உவகைசெய்வாள்; 
	மிளிர்கலை நிரம்புமதி நீ;யிவள் நிரம்பிவளர் 
        மேம்படுங் கலைமதியினாள்; 
	மேன்மையிவை யோர்புடையி னொப்புநீ என்றே 
        விளித்துனை யழைத்தவிதனால் 
    அளிபெறுங் காரணப் பெயர்கொளெம் மம்மையுட 
        னம்புலீ யாடவாவே 
	[4]அற்புவளர் புக்கொளியி னற்கருணை வல்லியுட 
        னம்புலீ யாடவாவே. 	      	(2)
-------
வளிகொண்ட பூதங்கள் : வாயுவை ஒன்றாகவுடைய ஐம்பூதங்கள். மாப்பெரும் பூதங்களும்: சிவபூத கணங்களும். 
[1]. உற்றவர்கள்: தலைவன் தலைவியாகச் சேர்ந்துள்ளவர்கள். 
[2]. தண்ணளிசெய்து - குளிர்ச்சிசெய்து. 
[3]. தண்ணளி - பிறவிவெப்பம் போக்கும்படி குளிர்ந்த கருணை. 
[4]. அற்பு - அன்பு. 
---------------
            சீர்கொண்ட [1]குணகடலின் மீதெழுவை: நீயிவள் 
        [2]சிற்குணக் கடலின் முதல்வி; 
    சில்பகற் றேய்மதிய மாவை:இவள் என்றுமே 
        தேய்விலா நிறைமதியினாள்; 
	கார்கொண்ட [3]நிசிசரரின் [4]இரவிலே யுறுவைநீ. 
        காண்பகல்  [5]இரவிலாத 
    காலத்து வண்மைசெய் வாளிவள்; நீயுருக் 
        காண்கிலா மதனனுக்காய் 
	ஊர்கொண்ட [6]ஏவல்செய் துழலுவாய்: அனையிவள் 
        உவனைப் பொடித்த இறைவன் 
    உவக்கின்ற பாகமுறு மிறைவி;யென் றிப்பரிசி 
        னுன்னின்மேம் பாடுபலவால் 
	ஆர்கொண்ட முடியினிறை தார்கொண்ட அம்மையுட 
        னம்புலீ யாடவாவே 
    அற்புவளர் புக்கொளியி னற்கருணை வல்லியுட 
        னம்புலீ யாடவாவே. 	       (3)
--------
[1]. குணகடல்- கீழ்க்கடல். 
[2]. சிற்குணக்கடல் - அறிவு உருவமாகிய குணத்தின் கடல்
[3]. நிசிசரரின்: இரவிலே திரியும் நிசாசரரைப்போல. 
[4]. இரவிலே: இராத்திரி காலங்களிலே. 
[5]. பகல் இரவிலாத காலம்: இரவும் பகலுமென்ற காலதத்துவங் கடந்தநிலை. 
[6]. ஏவல் செய்து; மன்மதன் படையில் அங்கமாக வருதல்.
--------------------
	[1]முகனெரி தரத்தக்கன் வேள்வியில் முயற்சியால் 
        மூள்கின்ற பழவினைகளும் 
    மொழியுநின் பன்னியர்ப் பிழைத்துமூண் டிட்டதோர் 
        முடியாத முனிசாபமும் 
	மிகவுநின் றன்னைநீ யுள்ளளவு மொழியாது 
        மென்மைசெய் தொறுக்குமன்றே 
    மேன்மைபெறு சொன்முகத் தின்முகத் தன்மைகொள் 
        வெற்றிப் பிராட்டியிவள்தான் 
	இகபர சுகந்தந்து வீடாத இன்பவீ 
        டெய்தக் கொடுப்பள்கண்டாய் 
    எவ்வெவக் குறையொடுன் கறையையும் மறைவிப்பள் 
        இன்பநிறை வாக்குவாள்காண் 
	அகமலர்ந் தடைபவர்க் கருணிறையெ மன்னையுட 
        னம்புலீ யாடவாவே 
    அற்புவளர் புக்கொளியி னற்கருணை வல்லியுட 
        னம்புலீ யாடவாவே.	      	(4)
-----
[1].	முகனெரிதர : வீரபத்திரரால் தனது முகம் அழிந்து சிதை 
---------------
	[1]பானுவாங் கதிர்வீசு பல்லொளி மிளிர்ந்துசில் 
        பாவையர் முகத் [2]துவமைசொல் 
    பாட்டினை மகிழ்ந்துவெளி யூர்திரிந் துறுவையப் 
        பாட்டினின் பொருளுணர்கிலாய் 
	கானுலா [3]மிரவியும் பற்பல விழந்தினும் 
        காட்டுமா வருந்தவரவுன் 
    காண்மூகத் தின்னுவமை சொல்கின்ற பாட்டுநின் 
        கவினிழந் தூறடைந்த 
	[4]ஊனுலா நின்வெளிப் பாட்டென் றுணர்கிலாய் 
        உறவிங்கு நினையிவ்வன்னை 
    ஓர்முறை முகஞ்செயவு நின்முகத் துவமைசொல் 
        ஒருவரா லியலாதுகாண் 
	ஆனுலா மப்பன்வல மிடமமரு மம்மையுட 
        னம்புலீ யாடவாவே 
    அற்புவளர் புக்கொளியி னற்கருணை வல்லியுட 
        னம்புலீ யாடவாவே.	      	(5)
-----
[1]. சூரிய கிரணங்களின் உதவியினாலேதான் சந்திரன் ஒளி வீசுகிறதென்றும் சந்திரனுக்குத் தனக்காகவே ஒளியில்லையென் றும் வான நூலுடையார் கூறுப. 
[2]. சந்திரனைப் பெண்களின் முகத்திற்கு உவமையாகச் சொல்வது புலவர் வழக்கு. 
[3].இரவியும் பற்பல விழந்தினும் காட்டுமா வருந்தவர: தக்கன் யாகத்திலே சூரியன் பற்கள் போகும்படி வீரபத்திரராற் றண்டிக்கப் பெற்றான். அது வயனம் மாறா வடுவாகி இன்னும் இருந்து வருவதால் சூரியனுக்குப் பல்லில்லாமையால் மாவு முதலிய மெல் லிய நிவேதனங்களே தரப்பட்டு வரவும் என்ற கருத்து. 
[4]. அந்த உவமைப்பாட்டுகள் எல்லாம் நீ கதிர்களைக் கடன் வாங்கிய இடமாகிய சூரியனுடைய பழியைப் பரப்பி அதன் மூலம் உனது இழிவையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
-----------------
	தெள்ளத் தெளிந்த மதியோர்பரவு பரமனின் 
        செவ்வுருக் குறைந்தஞான்று 
    தீர்த்தளித் தேநினைத் தன்சடையின் மீமிசைத் 
        தேசுபெற வைத்திடுதலால் 
	ஒள்ளொளியி னற்கலை வளர்வதுங் குறைவது 
        முற்றுநீ றிரிவையன்றே 
    ஒருநான்கு நாழிநெற் கொண்டுமெண் ணான்கறம் 
        உறவளர்க் கும்மிறைவியை 
	உள்ளித் துதித்துநீ நாணாள் மடைதியேல் 
        ஓர்குறைவு மின்றிவளர்வாய் 
    உற்றவடி யார்பவ மொருங்கோட ஓடுமோர் 
        ஒளிபெருகு 1கங்கைவெள்ளம் 
	அள்ளித் துளிக்குமவி நாசிவள ரம்மையுட
        னம்புலீ யாடவாவே 
    அற்புவளர் புக்கொளியி னற்கருணை வல்லியுட 
        னம்புலீ யாடவாவே. 	      	(6)
----
[1]. கங்கை: அவிநாசியில் உள்ள, காசிக் கங்கைத் தீர்த்தம். 
---------------
	வானேறு மீனினத் தியலுணர் வோர்கள்நீ 
        [1]வாய்க்குமுயி ரற்றுமற்றோர்  
    வண்சுடரி [2]னொளிகொண்டு மிளிர்தருவை என்றென்றும் 
        வைக்குமுல [3]கப்பற்றிலே 
	தானே சுழன்றுறுவை என்றும் பழிச்சொலைச் 
        சாற்றுமது நீங்கவேண்டில் 
    [4]தண்குளக் கரையினிற் பாலன்ற னுயிரினைத் 
        தந்தவள் முழுதுமொளியாய்க் 
	கானேர் சுடர்க்கெலா முள்ளூறு நற்சுடர்க் 
        கதிர்கொடுக் குங்கதிரினாள் 
    காணுமெப் பற்றையும் பற்றறப் பற்றியே 
        கருணைபுரி தலைவியிவள் காண் 
	ஆனேறு மண்ணல்பங் குண்ணிற்கு மம்மையுட 
        னம்புலீ யாடவாவே 
    அற்புவளர் புக்கொளியி னற்கருணை வல்லியுட 
        னம்புலீ யாடவாவே.	      	(7)
------
[1]. உயிரற்று: வானநூலோர் சந்திரமண்டலம் உயிர் அற்றதெனக் கூறுப. 
[2]. சூரியகிரணங்களி னுதவியாலே மதி ஒளிதருவதாம் தனக்கென்று ஒளியில்லாதது. 
[3]. உலகப்பற்றிலே சுழன்று: இப்பூமி மண்டலத்தின் இழுப்பாகிய சத்தியாலே இழுக்கப்பெற்றுச் சந்திர மண்டலம் உலகத்தைச் சுற்றிச் சுழன்று வருவதென்பது வானநூலார் கொள்கை. 
[4]. மேலே சொன்ன மூன்று பழிகளும் நீங்கும்படி இந்த அம்மையார் செய்வர். பாலனுக்கு உயிர்கொடுத்தார்; சோதியிற் சோதியாவள்; பற்றறச்செய்வாள் என்ற கருத்து. 
--------------
	
[1]வானாட ரறிவரிய மாமுடியின் மேலான் 
        வைத்துச் சிறப்பருள்கையால் 
    வையகந் தெரியுமா வளர்தலுந் தேய்தலும் 
        வானிற் பிறப்பிறப்பும் 
	ஊனாய வாழ்விற் கியற்கையிஃ தென்னவே 
        உணர்த்திநீ திரிவதல்லால் 
    உறுபயன் நீபெற்ற தொன்றில்லை வெண்மதி 
        உறுதியொன் றுரைப்பன்கேணீ 
	தேனார் மலர்க்கூந்த லம்மைபத மணைதியேற் 
        செப்புமப் பயனுண்மையைத் 
    தேறித் தெளிந்துநீ நற்பதத் தின்புறத் 
        தினமுநல முறுவையதனால் 
	ஆனாத செல்வமிகு மவிநாசி யம்மையுட 
        னம்புலீ யாடவாவே 
    அற்புவளர் புக்கொளியி னற்கருணை வல்லியுட 
        னம்புலீ யாடவாவே.        	(8) 
------
[1]. சிவபெருமான் செய்த திருவருளினாலே நீ உலகிலே தெரியும்படி தேய்ந்தும் வளர்ந்தும் உலக வாழ்வு இத்தன்மையுடையது என்று காட்டித் திரிகின்றதல்லது அதனால் நீ அடைந்த பயன் வேறில்லை. அம்மையார் பதம் அடைந்தால் அந்தப் பயன் அறிந்து தெளிந்து இன்பமனுபவிப்பாய் என்ற கருத்து. 
------------
	[1]புறவிருட் குழாமிரிந் தோடல்போல் நின்னுட் 
        பொருந்துமக விருளுமோடப் 
    [2]புல்லெனக் ககனவெளி தன்னிலே திரியாது 
        பொற்பார்ந்த வீட்டினுள்ளே 
	குறைவிலா துரையுணர் விறந்தபேரின்பிலே 
        கூடிநீ மேவியென்று 
    கோதற்ற நல்லடியர் கூட்டங்க லந்துநற் 
        கொற்றமொடு வாழலாகும் 
	திறனுடைய விண்ணவர்கள் மண்ணவர்கள் எண்ணிலார் 
        திண்மைநிலை யினர்கணிற்பத் 
    தேவியுனை வாவென் றழைத்தன ளாகந் 
        செவ்விவே றில்லையிதுகாண் 
	அறம்வளர் தருங்கொடி பெருங்கருணை யம்மையுட 
        னம்புலீ யாடவாவே 
    அற்புவளர் புக்கொளியி னற்கருணை வல்லியுட 
        னம்புலீ யாடவாவே. 	      	(9) 
----
[1]. உன் கதிர்களால் வெளியிருள் ஓடுவதுபோல உனது கறையாகிய அக இருள் ஓடும்படியாக. 
[2]. (ஆகாய) வெளியிலே திரியாமல் வீட்டினுள் (முத்தி) இன்பத்துடன் வாழலாம். 
-----------
	குயிலார்ந்த தென்றல்வளர் பூம்பொழிற் றனிமையிற் 
        குலவுமொவ் வொருவரவரைக் 
    குலைகுலை குலைந்திடச் செய்கின்ற பரிசிதுன் 
        கொற்றமென வேயிருந்தாய் 
	அயிலார்ந்த கண்ணிணையெம் மன்னையின தருள்கொண் 
        டானழைத் திடலுமந்நாள் 
    அனலினுக் கிரையான மதனெழுந் தானங் 
        கவன்படைக் கலமாகுநீர் 
	துயிலார்ந்து கண்விழித் தெழுந்தவா தோன்றினீர் 
        தொன்மையிங் கிதுமறந்தாய் 
    துணையிவ ளழைப்பவும் வாராது தாழ்த்தியற் 
        றுரிதநின் சரிதமிறுமால் 
	அயிலார்ந்த வேலற்கு மூலற்கு மம்மையுட 
        னம்புலீ யாடவாவே 
    அற்புவளர் புக்கொளியி னற்கருணை வல்லியும் 
        னம்புலீ யாடவாவே. 	      	(10)
-------
[1]. வேலன் - முருகக்கடவுள். 
[2]. மூலன் - பிரணவ சொரூபியாகிய விநாயகக் கடவுள். 
---------
 8. அம்மானைப் பருவம் 
	[1]செம்மைபெறு நற்பதியும் வெண்பளிங் கின்றிறம் 
        சேர்பசுத் தொகுதியதுவும் 
    செருக்குறு கருக்குமல மும்மிதிற் பின்னவை 
        செப்புமுன் சத்திநிறுவத் 
	தம்முருவ நீத்துநின் செம்மையுரு வாகியே 
        தான்விளங்கும் முண்மைபோற் 
    உறளிர்த்தசெம் மணியினுந் தரளத்து நீலத் 
        தனிமணி யினும்மியன்ற 
	மும்மைபெறு மம்மனைப் பின்னவைக ணின்றன் 
        முகம்பெறத் தம்முனொளியை 
    மோசனம் பெற்றுநின் செங்கையின் வயமாக 
        முற்றுஞ் சிவந்தொளிரவே 
	அம்மானை வலமேவு தவமேவு மெம்மன்னை 
        அம்மானை யாடியருளே 
    ஆசுகள் தவிர்க்குமவி நாசிநகரத் தலைவி 
        யம்மானை யாடியருளே.       	(1) 
-----
[1]. பதி செம்மையும் பசுக்கள் வெண்பளிங்கின் நிறமும் பாசம் கருமையுமாக்கூறுப. அருட்சத்தி பதியவே பசுவும் பாசமும் தம்முருவம் நீங்கப்பெற்றுச் செம்மையாம். 
[2]. அதுபோல, செம்மணி முத்து நீலம் என்ற மணிகளால் முறையே வாய்ந்து அவ்வந்நிறங் கொண்ட அம்மனைகள் நினது செங்கை வசமாகவே முத்தும் நீலமும் தமது நிறம் நீங்கச் சிவந்து காணும்.
--------------
	புவனமெங்குந் தங்கி நிலவு1மூ வுயிர்களைப் 
        போந்தபந் தத்தினின்றுன் 
    பொற்கமல நற்கரத் தான்மீ துயர்த்திடும் 
        போதுமவை புக்கவுலகின் 
	2கவனவெம் மாயையிற் கட்டுண்டு வீழ்ந்திடுங் 
        காலமெல் லாமவற்றைக் 
    கையினிற் றாங்கிநீ மீளவு முயர்த்துங் 
        கருணையின் செய்கைபோலாம் 
	நவமணி குயிற்றியொளி ரம்மனை யெடுத்து நீ 
        நன்குபெற மேல்விடுதலும் 
    நானிலந் தனில்மீள மீளவும் மீண்டுமுன் 
        நற்கரந் தனிலேந்தியே 
	அவனியின் மிகுந்தவரு ளம்மையிரு கைம்மலர்கொ 
        டம்மானை யாடியருளே 
    ஆசுகள் தவிர்க்குமவி நாசிநக ரத்தலைவி 
        யம்மானை யாடியருளே. 	      	(2)
----
[1]. பிரளயாகலர் - விஞ்ஞானகலர் - சகலர் என்னும் மூவகை ஆன்மாக்களையும் பந்தம் நீங்க எடுத்து அருட்சத்தியார் மேலே விடவும் அவை தத்தம் உலகக்கட்டினாலே கீழே வரவரப் பின்னும் அவற்றை மேலே எடுத்து அருள் செய்வது போலாம். 
[2]. அம்மனைகளை மேலே விடவும் அவை உலகத்தாலிழுபட்டுக் கீழே வருகின்றன. ஆயினும் விடாது அவற்றை மீண்டும் மீண்டும் கையிலேந்தி நீர்மேல் விடுகின்றீர்
-----------------
	[1]காலமிட மென்கின்ற கற்பனை கடந்ததோர் 
        கடவுணீ என்பரந்தக் 
    காலவகை யிடவகை கணிபெற வகுத்திட்ட 
        காரணியு நீயென்பரால் 
	கோலமாய் மேல்நடுக் கீழென்ன மூதண்ட 
        கோள்கையி னிடமமைத்தும் 
    குவலயக் காலவகை சந்திநற் பகலிராக் 
        கொள்கையிற் பெறவமைத்தும் 
	மூலமார் செய்கையிது [2]போலநின் னிருகை 
        முழங்குசெம் மணியுமுத்தும் 
    முற்றுநன் னீலமு மியன்றவம் மனையை 
        முறைமையி னமைத்தேந்தி 
	ஆலமார் கந்தரத் தப்பன்மகி ழம்மைநீ 
        யம்மானை யாடியருளே 
    ஆசுகள் தவிர்க்குமவி நாசிநக ரத்தலைவி 
        யம்மானை யாடியருளே. 	      	(3)
-----
 [1]. காலம் இடம் - என்பவற்றைக் கடந்த கடவுள் நீர்; அன்றியும் காலத்தைப் பகல் - இரவு - சந்தி என்றும், இடத்தை மேல்- நடு - கீழ் என்றும் வகுத்து அங்கங்கே அண்ட கோளங்களை நிறுவினீர். 
[2]. இதனைக் காட்டல்போல செம்மணி - முத்து - நீலமியன்ற அம்மனைகள் சந்தி - பகல் - இரவுகளைப் போலாகின்றன. ஆடும் முறையிலே இவை மேலுங் கீழுமாக உலவி நிற்பது மேல் நடுக்கீழ் அண்ட கோளங்களைப் போல்கின்றன. 
-------------------
 	சிவபரஞ் சுடருமச் சுடரின்வழி நின்றுலகு 
        செய்கின் றவம்போதனுந் 
    திருமார்ப னும்மிவர்கள் மூவரும் முத்தொழில்கள் 
        செய்கைநின் செய்கையென்றே 
	எவர்களு மெடுத்தோது முதுமொழியி னுண்மையா 
        மியல்பினைக் காட்டல்போல 
    இம்மூவர் தம்முருவ மெய்துவன போலுநல் 
        லெழிலாரு மும்மணிகள்சேர் 
	கவின்கொண்ட வம்மனைகண் மூன்றினையு நின்கரங் 
        காண்டக வெடுத்தேந்தியே 
    ககனவெளி யூடுலவ நிறுவியவை மீளவுன் 
        கைம்மலர் களினமைத்தே 
	அவனிவளர் செம்மையொடு மெய்மையரு ளம்மைநீ 
        யம்மானை யாடியருளே 
    ஆசுகள் தவிர்க்குமவி நாசிநக ரத்தலைவி 
        யம்மானை யாடியருளே.       	(4)
---------------
	மதிகொண்ட செஞ்சடை வள்ளற் 1பிரான்மேனி 
        வாங்கினா லொத்தசெம்மை 
    வைக்கின்ற அரதனத் தம்மனையும் அங்ஙனம் 
        வளர்கின்ற திருமேனிமேல் 
	விதிகொண்ட செஞ்சாந்த மென்னத் திகழ்கின்ற 
        2வெண்ணீற்றின் வண்ணமொத்து 
    விளங்குமொர் நித்திலத் தம்மனையும் மேலவன் 
        மெய்மையடி யார்க்கருள்செயும் 
	பதிகொண்ட தன்மையிப் பார்காண வைத்துப் 
        பகர்கரு மிடற்றினொளிசேர் 
    பண்பான மரகதத் தம்மனையு மாகிப் 
        பரவியிப் பரிசுகாட்ட 
	அதிகமாஞ் சைவநெறி கைகாட்டு மம்மைநீ 
        யம்மானை யாடியருளே 
    ஆசுகள் தவிர்க்குமவி நாசிநகரத் தலைவி 
        யம்மானை யாடியருளே.	      	(5)
-----
[1].  சிவபெருமான் திருமேனியைப் போல்வன இரத்தின அம்மனைகள். 
[2]. அவர் பூசும் வெண்ணீற்றினைப் போல்வன முத்தாலியன்ற அம்மனைகள். 
[3]. அடியார்க்கு அவர் அருளும் பரிசுகாட்ட வைத்ததுபோல் விளங்கும் திருநீலகண்டத்தைப் போல்வது நீலமணி யம்மனைகள். 
-----------------
	கார்கொண்ட நீலமுத லாகவோர் செவ்வொளி 
        கடைபெறக் [1]கலந்த இந்த்ர 
    கார்முகத் தெழுநிறமு மொன்றவே வெண்மையொளி 
        காட்டுமிய லுண்மையதனாற் 
	சீர்கொண்ட நின்கரத் தேந்துநவ[2] மணிகளிற் 
        செய்தவம் மனைகளவைமேற் 
    சென்றுறு தொடர்ச்சியோர் வெண்வட்ட மாகித் 
        திரிந்துவரு சுழற்சியாதல் 
	[3]நீர்கொண்ட குணபேத மெல்லாஞ் சுழன்றுபின் 
        நிலமீதின் முடிவிலோர்வெண் 
    நீற்றினின் வண்ணமாய் நிறைகின்ற உண்மையினை 
        நிறுவியே நின்றுகாட்ட 
	ஆர்கொண்ட சடையவன் வலம்வளரு மம்மைநீ 
        யம்மானை யாடியருளே 
    ஆசுகள் தவிர்க்குமவி நாசிநக ரத்தலைவி 
        யம்மானை யாடியருளே. 	      	(6)
-----
[1]. நீலமுதல் சிவப்பு இறுதியாக ஏழு நிறங்கள் காட்டுவது இந்திரவில். இவ்வேழு நிறமும் கலந்தால் வெள்ளை நிறமாகும். 
[2]. அதுபோலப் பல நிறமுள்ள அம்மனைகள் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒரே வெண்வட்டமாகச் சுழன்றுவருகின்றன என்ற கருத்து. 
[3].  பல குணங்களின் பேதங்களாக உலகம் சுழன்று இறுதியில் எல்லாம் வெண்ணீறேயாக முடிகின்றதை இது காட்டுகிறதோ என்ற கருத்து. 
 -------------
வேறு 
	மனதை யலைக்கும் பெருங்காமம் 
        மயக்கம் வெகுளி என்றிவற்றில் 
    மனிதர் மயங்கி யலைந்திடுமம் 
        மையற் சுழற்சி யதுநீக்கி 
	உனது மலர்க்கை யிணையெடுத்தே 
        உயர விடுத்திங் கிளைப்பாற்றி 
    உவந்தே யவற்றிற் குலவாத 
        உறுதி யளிக்கு மாறிவ்வா 
	றெனவே காட்டி யம்மனைகள் 
        எறிந்து பிடித்து னிணையடிக்கீழ் 
    இருத்த வைக்கு மதுநிகழ்த்தி 
        இவ்வா றருள்சேர் விளையாட்டின் 
	இனிய அருட்புக் கொளியரசே! 
        எடுத்தா டுகபொன் அம்மனையே 
    எங்கள் குடியை வளர்க்குமயில்! 
        இனிதா டுகபொன் அம்மனையே.       	(7)
-------------
	பணியார்ந் தமைந்த மணிக்கழங்கு 
        பரந்து தோன்றி நின்றுலவிப் 
    பாய விழும்போ துன்கையிற் 
        பற்றி யிருத்திப் பதத்தின்கீழ் 
	அணியா யிறுதி யினில்வைத்தல்[*] 
        ஐயன் செய்யும் ஐந்தொழிலின் 
    அளவு காட்டும் பரிசதுபோன் 
        றமைய அமையாப் பெருங்காட்சிக் 
	குணமார் தருவே! மலர்த்திருவே! 
        கோலம் பொலியுங் கோமளமே! 
    குன்றத் தரசற் கருள் அரசே! 
        குன்றாக் கருணை தருநிதியே 
	மணமார் குழற்கா டேந்திய பெண்! 
        மகிழ்ந்தா டுகபொன் னம்மனையே 
    வளர்புக் கொளிசேர் கருணையுமை 
        மகிழ்ந்தா டுகபொன் னம்மனையே.          (8)
----
[*]அம்மையார் அம்மனைகளை ஆடும்போது அவை தோன்றியும், நின்றும், விழுந்தும், கையிற்பற்ற இருந்தும், முடிவில் அவரது பாதத்தின் கீழ் வைக்கப்பெற்றும் வரும். இத்தொழில்கள் சிவபெருமான் ஆன்மாக்களுய்யும்படி செய்யும் சிருட்டி - திதி - சம்மா ரம் - திரோபவம் - அனுக்கிரகம் என்ற ஐந்தொழில்களைப் போன்றுள்ளன.
---------------
        	வேறு 
	வெம்மைகொள் செங்கதிர் வெண்மதி யோடு 
        மிராவும் விராயிடையே 
    விரைந்து புகுந்து சுழன்று மெழுந்துற 
        மேவிய நாளவைபோய் 
	மும்மைகொள் சூழல் கடுப்ப வெடுத்திடு 
        மூளுமொர் செம்மணியும்1 
    முத்தமு நீலமு மென்றிவை யிற்செய் 
        முழுமணி யம்மனைகள் 
	எம்முறு நாள்செல் கதிநினை வுற்றிட 
        எந்திய தென்பதுபோல் 
    இன்ப மளிக்க வுறுங்கரு ணைக்கொடி! 
        எரமர் புக்கொளிசேர் 
	அம்மனை யில்லவர் அம்மனை யானவள்! 
        ஆடுக அம்மனையே 
    அறிந்த அகங்கள் நிறைந்த பெருங்கொடி! 
        ஆடுக அம்மனையே. 	      	(9)
	1. செம்மணியும் முத்தும் நீலமும் இயன்ற அம்மனைகள் விழுகின்ற தோற்றம் செஞ்சுடராகிய சூரியனும் வெண்சுடராகிய சந்திரனும் இருளாகிய இரவுமாக விரவி எமது நாள்கள் ஒவ்வொன்றாகக் கழிந்துகொண்டு போகின்றதை நினைப்பூட்டுகின்றன
	
	மழையம ருந்திரு மிடறுடை நாயகன் 
        வாழ்வுசெய் 1யாருயிர்கள் 
    மன்னுறும் அன்னவன் ஆணையின் சூழல் 
        வழாதுற வேயியலும் 
	பழையதொர் உண்மையை உலகுற நாட்டிய 
        பண்பினி லின்பமுறப் 
    2பார்த்திடு மும்மணி முழுதொரு சூழல் 
        பதித்து விதித்ததுபோல் 
	விழவுய ருந்திரு மணியொளி ரம்மனை 
        வேண்டு திருக்கையிணை 
    மேவவ மைத்துயர் விசும்பின் விடுத்து 
        வியந்திட வேந்திமிக 
	அழகு பொருந்தவி நாசி புரந்தவள் 
        ஆடுக அம்மனையே 
    அண்ணல் வலம்பெறு பெண்ணென நின்றவள் 
        ஆடுக அம்மனையே.	      	(10)
---
[1]. உயிர்கள் உலகத்திலே பரமசிவனது ஆணையின்படி உலவுகின்ற உண்மையை அம்மையார் திருக்கரங்களின் ஆணையின் படியே உலவும் அம்மனைகள் காட்டுகின்றன. 
[2]. ஐயன் ஆணைப்படி பிரளயாகலர், விஞ்ஞானகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்கள் நிகழ்கின்றனபோல அம்மையார் ஆணையின்படி மூவகை அம்மனைகள் உலவுகின்றன என்ற கருத்து. 
-------------
 9. நீராடற் பருவம் 
	உண்ணின்ற விச்சையாற் றேவர்முத லானோர் 
        உவந்தாட்ட எண்ணமுற்றே 
    உறுதிசெய் தீர்த்தங்க ளவைசெய்து நிற்பவும் 
        [1]உண்மைகொள் நேயஅன்பின் 
	கண்ணிற்கு மருவிதனின் மருவியே விரைவாய்க் 
        கருதிமஞ் சனமாடுறூஉம் 
    கண்ணுதல் பங்குற்ற நீயுமப் பான்மைநீர் 
        கவினோடு மாடலியல்பாம் 
	எண்ணின்ற எவ்விடத் துற்றநற் றீர்த்தங்க 
        ளெல்லாம் விரும்பியுறவே 
    [2]ஈசன்றன் முடியதி னேசங்கொ டுயர்வுமிக 
        எய்தியிவ் வுலகின்வந்த 
	விண்ணின்ற நல்லாறு முறவாடு நள்ளாற்று 
        வெள்ளநீ ராடியருளே 
    வெளியிலுயர் புக்கொளியி னளினையந் துறையில்வரு 
        வெள்ளநீ ராடியருளே. 	      	(1)
----- 
[1].நேசமாகிய மெய்யன்புடையார்க்கு உண்டாகும் ஆனந்தக் கண்ணீராகும் அருவி. 
[2]. பாமசிவன் திருமுடியிலே நின்ற கங்கையும் இங்கே வந்து இதனோடு நேசம் பாராட்டப்பெற்றதாகிய நள்ளாறு நேசம் நிறைந்த அருவியாம். 
---------------
	தேசுமலி யுஞ்சடைத் தேவதே வன்போற் 
        றிருமலையி னின்றுவந்தே 
    *செம்மைபெறு வெண்ணிறத் தாகிமேல் வெண்பொருள் 
        சிறந்துவர மானேந்தியே 
	வீசும் புழைக்கைக் கரியினை நூறியும் 
        வெய்யமா சுணமருவியே 
    விரிசுடலை என்பணிகள் மீக்கொடு வினைஞர் 
        விதியமைத் திடவீசியே 
	பேசுமொவ் வோர்காலி னாடிமேற் செல்லப் 
        பெரும்பயன் விளைத்திடுதலாற் 
    பெம்மானை யொத்தவிவ் வாறுநீ யாடுறும் 
        பெருமைக் குரித்தாகுமால் 
	வீசுபொற் கொங்கினவி நாசியிற் றங்குமயில் 
        வெள்ளநீ ராடியருளே 
    வெளியிலுயர் புக்கொளியி னளினையந் துறையில்வரு 
        வெள்ளநீ ராடியருளே. 			(2)
	[*]நள்ளாற்றுப் புதுநீர் சிவபெருமானை ஒத்துள்ளது; செம்மை நிறமுள்ளது - மேலே வெண்பொருளாகிய நுரை கொண்டது - வெள்ளத்தில் அகப்பட்ட மான்களை மான்களை ஏந்திவரும் - யானைகளை நூறி வரும் - மாசுணமாகிய பாம்புகளை உருட்டிப் பூண்டுவரும் - அல்லது மா (நல்ல) சுண்ணம் மருவியது - கரைமருங்கு உள்ள சுடலை களின் என்புகளைக்கொண்டது - உழவர் முறைப்படி கையமைக்க வீசிச்சென்று ஒவ்வொரு கால்வாய்களில் ஆடிச்சென்று மேலே பெரும்பயனாகிய போகம் தரும். (பெருமான் தமது தொழில் (வினை) செய்வராய் ஒருகையமைத்து ஒருகை வீசிநின்று கால் கள் மாறியாடுவர்.)
-------------
	வாழ்ந்துபிற நீத்தங்கள் எல்லாம் மகிழ்ந்தேறி 
        வானாறு பொங்கிமேல் போய் 
    வழிச்செலவு கண்டுநட் புக்கொளுங் கங்கையும் 
        வையமேற் றாழ்ந்துவந்து 
	வீழ்ந்துநின் றிதனோடு நட்புறும் பெருமையும் 
        விரும்புநட் பெல்லவற்றும் 
    *விடையவ னற்பதஞ் சாருநட்பே மிகவும் 
        மேன்மைபெறு நட்பென்பதும் 
	சூழ்ந்துவரு காரணப் பெயர்பெற்று நிறுவுறூஉம் 
        தொல்பெருமை நள்ளாற்றிலே 
    தோகையர் குழாத்தொடு மிளவன்ன மென்னவும் 
        சொன்மடப் பிடிஎன்னவும் 
	வீழ்ந்துவந் தெம்மன்னை மிக்குவரு மானந்த 
        வெள்ளநீ ராடியருளே 
    வெளியிலுயர் புக்கொளியி னளினையந் துறையில்வரு 
        வெள்ளநீ ராடியருளே. 	      	(3)
	*பரமசிவத்தின்பால் வைக்கும் நட்பு ஏனைய எல்லா நட்புக்களையும் விட விசேடமானது என்பது காட்ட நள்ளாறு (தலநதி) இத்தலத்தை அடுத்ததனால் உலகிலே எல்லா நதிகளும் உயர்த்த காலத்திலே நட்புக்கொள்ள விரும்பும் தன்மைவாய்ந்த கங்கையும் தன்னிடம் வந்து நட்புக்கொள்ள இருக்கின்றது என்ற கருத்து. காசிக்கங்கை இத்தலத்து வந்த புராண வரலாறு.
----------------
	சந்தனமு மகிலோடு தக்ககற் பூரமுந் 
        தரளமு மணியுமேவித் 
    தண்ணறுகு மெல்லிதழ்த் தழைகளும் மலர்களுந் 
        தண்டுலத் தொடும்விரவியே 
	வந்துநின் னடிபரவி யோமென்னு மோசையுடன் 
        வருபுகழ்ச் செம்மைநீத்தம் 
    [*]வைகலு நின்பூசை யடியவர் விதிப்படி 
        வைக்குமர்க் கியமாகவே 
	செந்துவர் வாயுமை யம்மைதிரு மஞ்சனம் 
        செய்திடத் தகுதியாமால் 
    திவ்யாக மங்களருள் பெம்மான் றிருத்துணைவி! 
        தேசுதரு மிக்கதிருவே! 
	விந்தைபெறு விண்ணாறு நட்புறு நள்ளாற்று 
        வெள்ளநீ ராடியருளே 
	வெளியிலுயர் புக்கொளியி னளினையந் துறையில்வரு 
        வெள்ளநீ ராடியருளே.	      	(4).  
	[*]அடியவர்கள் சிவபூசையிலே அர்க்கியம் அமைத்துச் சந்தனம், அகில், கற்பூரம், முத்து முதலிய மணிகள், அறுகு, தழைகள், பூக்கள் இவற்றை இடுவர். அதுபோலவே இப்புது நீரும் அப்பொருள்களைத் தாங்கிவருதலாலே அத்தகைய அர்க்கிய நீராகக் கொண்டு நீராடுக என்ற கருத்து.
-----------------
	எக்காலமும் மெமது மெய்ம்மன மிவற்றுளே 
        யியன்றபுன் மாசுகளெலாம் 
    எத்துணைப் பிறவிதொறு மெத்துணைக் காலமு 
        மெய்துமெந் நீராடினும் 
	மிக்கான தூய்மையினை யெய்தாத யாமுன் 
        விழிக்கடைக் கருணைநன்னீர் 
    மேம்பா டடைந்திதிற் குடைந்தாடி யுய்யவும் 
        விண்ணுலகு மற்றுலகெலாம் 
	தொக்காய் விளங்குமுயர் தூய்மைமிகு மின்பமொடு 
        தோன்றவும் தூயநின்றன் 
    தொல்லுரு வதிற்பகுதி சேர்பரன் றானுநின் 
        றொழிலோடு மருவியாட 
	மிக்கான உண்மையறி வானந்த மானமயில் 
        வெள்ளநீ ராடியருளே 
    வெளியிலுயர் புக்கொளியி னளினையந் துறையில்வரு 
        வெள்ளநீ ராடியருளே.			(5) 
வேறு 
	மேகந் தவழும் வரைக்குடுமி 
        நின்றும் போந்து புக்கொளியூர் 
    விரைவிற் பணிந்து புகழ்க்கொங்கிற் 
        குரக்குத் தளியும் பணிந்தாங்கே 
	பாக முயர்ந்த வெள்ளிவெற்பிற் 
        பச்சைக் கொடிசேர் பவளவெற்பிற் 
    பரவிச் சேர்ந்தே திருப்பேரூர் 
        பணிந்த காஞ்சி யணிநதியோ 
	டியோக மாகிக் காவிரியோ 
        டுலவி அன்ப ரோடுமரீ 
    உலகி லரனார் பலதளியும் 
        பணிந்தே அணைந்தோர் தமைநிகர்த்துப் 
	போகம் பெருக்கு நளினைவரு 
        புதுநீ ராடி யருளுகவே 
    பொழிற்புக் கொளிசேர் கருணையுமை 
        புதுநீ ராடி யருளுகவே.			(6)
	------------------------------------
	*நள்ளாறு மேற்கு மலைகளினின்று வந்து அவிநாசியும் குரக்குத்தளி (திருப்பூரையடுத்த 3 மைலில் உள்ள பெரியபாளையம்)யும் பணிந்து தன்னைப்போன்றே வெள்ளிமலையின் உதித்துத் திருப்பேரூர் இறைஞ்சிவரும் காஞ்சிமா நதியோடு உறவாய்க் கூடிக் கலந்து பின்னர்க் காவிரியுடன் கூடிச் சிவதலம் பல பணிந்து செல்லு மதனால் அன்பரோடு மருவும் அணைந்தார் தன்மையைப் பெற்றாற் போன்றது. 
	[*]மன்னும் இரவி மாக்கடலை 
        மாசு நீக்கி வானுய்க்க 
    வரையின் மணியும் சந்தனமும் 
        மகிழ்மாத் தழையுந் தண்டுலமும் 
	பொன்னுங் கொண்டு புவிக்கெல்லாம் 
        போகந் தருவான் புகுமுனுனைப் 
    போற்ற நின்ற நீத்தமிது 
        புவனி யளிக்கும் பான்மையினால் 
	உன்னும் உயிர்க்கும் உன்னாத 
        எல்லா வுயிர்க்கும் ஒருங்களித்தே 
    உறுமோர் பயன்பா ராதுதவிக் 
        கடலிற் பெரிதா யுறும்பண்பாற் 
	புன்மை தீர்க்கும் புக்கொளியாய் 
        புதுநீ ராடி யருளுகவே 
    பொருளார் நளினைத் துறையிறைவி 
        புதுநீ ராடி யருளுகவே.			(7)
	-----------------------------------------
	[*]சூரியனாற் குற்ற நீங்கிய கடல் வான்போய் மலையினின்று மணி - சந்தனம் - தழை - அரிசி பொன் இவற்றைக்கொண்டு உலகிற்குப் போகம் கொடுக்க இந்நீத்தமாகிப் புறப்படுகின்றது. உலகுபுகு முன் உம்மைப்பணிந்து நின்றது. இது எல்லா உயிர்க்கும் பயனைப் பாராது உதவுதலால் இதன் நன்மை கடலிற் பெரிதாகும். ஆதலின் இதிலே நீராடியருள்க. "பயன்றூக்கார் செய்த வுதவி நயன் றூக்கின், நன்மை கடலிற் பெரிது' குறள். 
	[1]சங்க கன்ன மாபாவி 
        தனக்கு முய்யும் வகையளிக்கும்; 
    [2]தலத்தே யுறலா லெஞ்ஞகுத்த 
        உலுத்தன் றனையு முய்விக்கும்; 
	[3]மங்கை தேவ அரம்பைக்கும் 
        வலிய சாப நீக்கியுருக்கும்; 
    [4]வளமார் புதல்வர்ப் பேறளித்து 
        வியாதன் றனையு மகிழ்விக்கும்; 
	[5]இங்கோ ரன்ன மிகலின்விடு 
        காக மதற்குங் கதியளிக்கும்; 
    இன்ன தலமாம் புக்கொளியின் 
        மூர்த்தி நின்ற னருட்டீர்த்தம் 
	பொங்கு வளஞ்சேர் நளினையிதின் 
        புதுநீ ராடி யருளுகவே 
    புவனம் விளங்க வருளம்மை 
        புதுநீ ராடி யருளுகவே. 			(8)
----
[1]. தலபுராணம்: சங்கன்னச் சருக்கம்;  [2]. எஞ்ஞகுத்தச் சருக்கம் 
[3]. தெய்வாம்பைச் சருக்கம்;  [4]. வியாதச் சருக்கம்
[5]. காகச் சருக்கம் 
 ------------------
        		வேறு 
	[1]களிவண் டறைபுது மலர்வந் துறைவொடு 
        கரிதா நேர்மணலின் 
    கவினார் வரிசையொ டொளிர்பல் லினமணி 
        கலனே நேர்வதொர்பால் 
	[2]குளிர்பொன் சொரிவன கொன்றை மலரொடு 
        கொலையா னையின்கோடும் 
    கோணற் பிறையென வென்பின் னிரையொடு 
        கோலப் பொலிவோர்பால் 
	தளிர்மா மரகத மயிலோர் பாலொடு 
        தழையும் மெம்பெருமான் 
    தன்றிரு மேனி வனப்பு நிகர்த்தடி 
        யாரைத் தகவுசெயும் 
	புளினக் கரைமகழ் நளினைத் துறையவள் 
        புதுநீ ராடுகவே 
    பொருணற் கலைபுகழ் கருணைப் பெருமகள் 
        புதுநீ ராடுகவே. 	      	(9)
---
[1]. இந்நதியிலே புதுமலர்களும் கருமணல் ஒழுங்கும் பலமணிகளும் அம்மையாரது திருமேனி வனப்புக்காட்டும். 
[2]. கொன்றைமலர், யானைக்கொம்பு, பிறைபோன்ற எலும்புகள் இவை சிவபெருமானது திருமேனிப் பொலிவைக் குறிக்கும்.
----------
        		வேறு 
	திக்கு நிலாவிச் சொற்றிடு புகழார் 
        நளினைத் திருநதிநீ 
    தேசொடு புதுநீர் புக்கு முகேரென் 
        றாடி யெழுந்திடவும் 
	அக்கவின் வெள்ளத் திற்கம லங்களு 
        மாம்பல் நீலமொடும் 
    அற்புத மலர்கோங் கத்தொடு காந்த 
        ளலர்ந்தன போன்றொளிர 
	நக்கன் றிருவருள் புக்குயர் உயிர்கள் 
        நல்லவவ் வண்ணமுறும் 
    நன்மை தெரிக்கப் பசுமை மறைத்துச் 
        சிவந்து நலம்பொலியப் 
	புக்கொளி நற்கரு ணாலய மெய்த்திரு 
        புதுநீ ராடுகவே 
    பொலிவார் நளினைத் துறையர சாள்பவள் 
        புதுநீ ராடுகவே. 		      	(10)
 --------------
 10. பொன்னூசற்பருவம் 
	வல்லார்ந்த கண்டத்தி னையனவ னிறைகின்ற 
        வண்டபகி ரண்டம்யாவும் 
    அம்மைநீ நிறைதலா னீயாட வாங்கவைக 
        ளாடுமெனு முண்மைநிற்க 
	எல்லாஞ் செயவல்ல விறைவிநீ யென்மறை 
        யிசைக்கின்ற துண்மையாயின் 
    ஏழையேம் பிறவிதொறும் வருவதும் போவதும் 
        எனுமூச லாடாமனீ 
	சொல்லார் தமிழ்ச்சுருதி பாடியே பூவினிற் 
        றோகைமார் பரவியாட்டத் 
    தோன்றுதன் மெய்யொளியெ மையனிற் சேந்தநற் 
        றொல்பவள வூசன்மீது 
	பொல்லாத மணிவல்லி மலைவல்லி யருள்வல்லி 
        பொன்னூச லாடியருளே 
    பொற்புமிகு புக்கொளியி னற்கருணை வல்லிநீ 
        பொன்னூச லாடியருளே. 		      	(1) 
------
	[1]. நீர் ஆட உலகம் எல்லாம் ஆடுகின்றன : என்பதுண்மை தான். ஆனால் நீர் எல்லாம் வல்லவர் என்பதுண்மையாயினால் யாங் கள் இவ்வுலகிலே வருதல் போதலாகிய ஊசல் ஆடாதபடி நீர் ஊசலாடுக என்ற கருத்து. 
	"மாசறு பிறவி போல வருவது போவ தாகி "கம்பராமாயணம். 
-----------------
	எங்குஞ் செறிந்துநின் றியாதோ ரியக்கமு 
        மின்றியே யிருந்தபரமன் 
    [1]இவ்வுலகி லான்மகோ டிக்கருள் புரிகின்ற 
        எண்ணமிங் குறுவனாயின் 
	தங்கிய தனாதுநிலை விட்டுனை யடைந்துநீ 
        தருகின்ற போக்குவரவு 
    தன்னையே புரியநின் னாணையின் நீங்காது 
        தானிற்க உறுவனென்பர்; 
	இங்கிதன் உண்மையைக் காட்டிநீ யுறுதல்போ 
        விலகுமணி யூசலேறி 
    இன்பமுறு போக்கு வரவுப்புரிந் தெவ்வுலகு 
        மின்னருள் தன்னையுறவே 
	பொங்கிவளர் புவனங்க ளெல்லா மளிப்பவள் 
        பொன்னூச லாடியருளே 
    பொற்புமிகு புக்கொளியி னற்கருணை வல்லிநீ 
        பொன்னூச லாடியருளே. 	      	(2) 
----
	[1]. எங்கும் நிறைந்தவனாகிய பரமசிவம் உலகிற்குபகாரமாகிய ஐந்தொழில் நடத்த எண்ணினால், 
	"அவையே தானே யாயிருவகையிற் 
	போக்குவரவு புரிய ஆணையின் 
	நீக்கமின்றி நிற்கு மன்றே'' சிவஞான போதம் (2) 
	என்றபடி அருளாகிய அம்மையார் ஆணையின் நீங்காது அதன் வழியே நிற்பன். இதனுண்மையை விளக்கும்படி நீர் ஊசல் ஆடி உலகுக்கு எல்லா நலனுமளிப்பீர். 
-----------------
	நிகழ்கின்ற தொல்லுலகி னிலவுமு வுயிரெலாம் 
        நின்மலன் றனையடையநன் 
    னெறியான தவநெறியை மேற்கொளும் வகைகாட்டி 
        நின்றபின் னதற்குமேலாய்த் 
	திகழ்கின்ற இறைவனொடு முறைகின்ற பேரின்ப 
        திப்பியத் தின்பமேவல் 
    செய்யும்வகை யுங்காட்டி யவ்வியலி னுயிர்களைச் 
        சேர்த்துமா செய்கைகாட்டி 
	நிகரில்சீர் நற்றவமு மங்கதன் பயனுமிவை 
        நேர்கண்டு கொள்கென்னவே 
    *நின்றகா ரணகாரிய முறையிவை நிற்கு 
        நிலையுலகு கண்டுய்ந்திடப் 
	புகுதவக் கோலமே மணக்கோல மானபெண் 
        பொன்னூச லாடியருளே 
    பொற்புமிகு புக்கொளியி னற்கருணை வல்லிநீ 
        பொன்னூச லாடியருளே		      	(3) 
	--------------------------------
	*தவமும் அதன்பயனும் ஒன்றன்பின் ஒன்றாய்க் காரண காரிய முறையிலே நிற்கின்றன.தவஞ்செய்வோர் சிவத்தையடைவர் என்பதை உலகம் நேரிலே கண்டு பயனடையும்படி முன் பூண்ட தவக்கோலமே பின்விளங்கும் மணக்கோலமாகக் கொண்டு அவிநாசியிலே எழுந்தருளியிருப்பீர். இது தலபுராணவரலாறு. 
	எண்ணரிய வுலகெங்கு மின்னருட் சத்தியாய் 
        இருக்கின்ற அம்மையருளால் 
    இனியதோர் கருணைப் பசுங்கொடிசெய் நல்லுருவி 
        னிங்கெழுந் தருளிகலமார் 
	திண்ணிய விசும்புசெம் பைந்துகில் விதானித்த 
        தேமாவி னின்றுதூங்கும் 
    தேசுநிரை செம்பவள நற்கொடியின் முத்துநிறை 
        செய்யமாப் பலகைமீதின் 
	கண்ணினிய பூவினிற் பூவைமா ரெனுமிரு 
        கவின்கொடிக ணின்றாட்டவே 
    *காண்டகைய வன்னத்தின் மீதேறி யாடுமயி 
        லென்றிங்ஙன் யாமுய்யவே 
	புண்ணிய மலர்ந்தனைய தவவல்லி யானபெண் 
        பொன்னூச லாடியருளே 
    பொற்புமிகு புக்கொளியி னற்கருணை வல்லிநீ 
        பொன்னூச லாடியருளே. 	      	(4)
	----------------------------
	அம்மையார் தவக்கோல ஆலயம் முன்னும் மணக்கோல ஆலயம் அதன்பின்னர், கோவிலின் உள்ளும் விளங்குகிறது காணலாம். 
	*அன்னத்தின் மீதேறி யாடு மணிமயில் போல். திருவாசகம்.
	மின்னினேர் பிறவியெனும் வேதனை யணிந்தாடி 
        மேதினியின் வெளிதன்னிலே 
    மிக்கமும் மலவூசல் தனிலுயிர்த் தொல்குழவி 
        விளையாடி விளையாடவும் 
	முன்னிவரு மழுகையைத் தவிரவும் துயிலுற்று 
        மொழியுநற் களிபயிலவும் 
    மூதண்ட மெங்குநல் லறிவின்ப மூட்டியே 
        முன்னிலகு மானந்தமாம் 
	தன்னிகரி லமுதூட்டு தாயாய் வளர்த்திடத் 
        தான்தூய பரவெளியிலே 
    தனியுறூஉ மானந்த மானமெய்ம் மணிவரைத் 
        தண்ணளியி னூசன்மீது 
	பொன்னினறி வாதனத் தேறிவிளை யாடுமயில் 
        பொன்னூச லாடியருளே 
    பொற்புமிகு புக்கொளியி னற்கருணை வல்லிநீ 
        பொன்னூச லாடியருளே. 	      	(5)
---------------
	இதழா யிரங்கொண்ட பதுமா சனத்தமர்ந் 
        தின்குரற் கிண்கிணிகளோ 
    டெழில்சேர் சிலம்பணிசெ யிருபாத மலர்களும் 
        எழுதரிய செம்பட்டுடை 
	யதுபுனையு மேகலையு மின்னிடைப் பொன்னொட்டி 
        யாணமு மங்கைகளிலே 
    அபயவர தமுமுடன் பாசாங் குசங்களும் 
        அழகினமர் பைங்கிள்ளையும் 
	முதுதமிழ்க் கன்றினுக் கமுதுதவு தனபார 
        மீதுவளர் முத்தணிகளும் 
    மூவாத மங்கலத் திருநாணு மதிமுகமு 
        முகத்திலகு புன்முறுவலும் 
	புதியவருள் புரிகண்ணி னிணையுமாய் மிளிர்பவள் 
        பொன்னூச லாடியருளே 
    பொற்புமிகு புக்கொளியி னற்கருணை வல்லிநீ 
        பொன்னூச லாடியருளே. 	      	(6) 
	*அம்மையாரது பாதாதி கேசவர்ணனை. 
	பரமேசுவரன் - அம்மையார் இருவரின் கேசாதிபாத வர்ணனைக் குறிப்பு. 
----------
	செஞ்சடை நதிமதியு முக்கணொடு மைம்முகந் 
        திகழ்நீல கண்டமதுவும் 
    செய்யநாற் றோளுமென் பரவணிக ளும்புலியி 
        னுரியுடையு மெந்நெஞ்சுசேர் 
	கஞ்சமெனு மிருபதமு மாகுமெம் மிறைவனார் 
        காட்டுமுரு வதுபகிர்ந்தே 
    கருணைதரு விழிமலரு முகமதியு மழகிதாய்க் 
        கட்டியகுழற் சடையதும் 
	தஞ்சமெனு மங்கலமு நவமணியி னாரங்கொள் 
        தனபார மும்மினிடையும் 
    தழைசெய்ய பட்டொடுந் தமியேமை யாட்கொண்ட 
        தாளிணையு மாயமர்ந்தே 
	புஞ்சமா ருலகெலா மையனொடு மாடுமயில் 
        பொன்னூச லாடியருளே 
    பொற்புமிகு புக்கொளியி னற்கருணை வல்லிநீ 
        பொன்னூச லாடியருளே. 	      	(7)
-------------
	காரணத் தனிமுதல்வ னார்சத்தி யாயெலாங் 
        கலந்திடுந் தனிமுதல்வியே! 
    கயமுகன் றனையளித் தனையமுக வசுரனைக் 
        கடிந்துல களித்தபிடியே! 
	ஆரணன் முதலினோர்க் கரந்தைசெய் சூர்முதல் 
        அறுத்தவடி வேற்குமரனை  
    அளித்துவிண் குடியேற்று மம்மையே! வெம்மைசேர் 
        தக்கனது பெருவேள்வியை 
	வீரனைக் கொடுதடிந் தனலூட்டு மமுதமே*. 
        மிக்கவடு கப்பிரானை 
    மேலைநாள் மாலினை மாலறும் படியருளு 
        மெல்லியலி னல்லணங்கே 
	பூரணக் கருணையொடு மெங்குடி வளர்க்குமயில் 
        பொன்னூச லாடியருளே 
    பொற்புமிகு புக்கொளியி னற்கருணை வல்லிநீ 
        பொன்னூச லாடியருளே. 	      	(8)
	-----------------------------
	*அம்மையார் தமது திருக்குமாரர்கள் ஒவ்வொருவரை அருளி உலகியில் ஒவ்வொரு பெரிய இடர்களைப்போக்கி யருளினர் என்ற கருத்து. கயமுகாசுரனைச் சங்கரித்தவர் விநாயகக்கடவுள்: சூரபத்மாவை அறுத்து விண்குடி யேற்றியவர் முருகக்கடவுள்: தக்கயாகத்தைத் தண்டித்துத் தூய்மை செய்தவர் வீரபத்திரர்: மகாவிஷ்ணுவின் அகந்தையை அறுத்தவர் பைரவமூர்த்தி.
---------
	[1]தொன்மைநாட் காழியின் மறைக்கன்றி னுக்கமுத 
        மூட்டியுல காற்றுமதனால் 
    தொல்குடியின் மழவனும் மயிலைவளர் நேசரு 
        மகப்பெறப் புதிதளித்தவள் 
	[2]மன்னுமப் பூதியின் மகவுயி ரளிக்கவெம் 
        வாகீசருக் கருள்பவள் 
    [3]வாய்ந்தவன் றொண்டர்திரு வாக்கினால் முதலையை 
        மதலையைத் தரச்செய்பவள் 
	[4]துன்னுசண் முகப்பெயர்த் தொண்டனெஞ் ஞான்றுமே 
        துதிசெயத் தருபிராட்டி 
    [5]தொல்பட்டி யீசர்பணி செய்துவழி வழிவரச் 
        சுப்பிரமணி யன்னவற்கும் 
	பொன்மைவளர் நன்மைகள் யாவையுந் தருபவள் 
        பொன்னூச லாடியருளே 
    பொற்புமிகு புக்கொளியி னற்கருணை வல்லிநீ 
        பொன்னூச லாடியருளே.	      	(9)
	[1]. திருஞானசம்பந்த சுவாமியாகிய குழந்தைக்கு அம்மையார் திருமுலைப் பாலூட்டியருளிய காரணத்தினால் திருப்பாச்சிலாச்சிராமத்திலே கொல்லிமழவனும் திருமயிலாப்பூரிலே சிவநேசரும் தங்கள் தங்கள் மக்களைப் புதிது பெற்றனர். 
	[2]. அம்மையார் திருவருள் காரணமாக வாகீசப் பெருமானால் அப்பூதியடிகள் தமது மகனுயிர் பெற்றார். 
	[3]. சுந்தரமூர்த்திகள் வாக்கிலே நின்றருளி முதலைவாய்ப் பிள்ளை கொடுத்தனர். 
	[4]. அம்மையாரை எப்போதும் துதிக்கும் தன்மைவாய்ந்த சண்முக முதலியார் என்ற பேருடையவர் இந்நூலாசிரியனது உற்ற நண்பர். 
	[5]. சுப்ரமண்ணிய முதலியார்- இந்நூலாசிரியன்.
------------
	உலகெலா நின்றிட்ட உண்மையறி வானந்த 
        ஓர்பெருந் திரள்வாழவே 
    உற்ற நால் வகையிலே சரியை முதலானசிவ 
        தருமங் களோங்கிவாழத் 
	தலம்வாழு மவிநாசி யப்பர்தாம் வாழநற் 
        கருணைநின் கருணைவாழத் 
    தாழ்வின்றி நல்லகுரு லிங்கசங் கமபத்தி 
        தாரணி தழைத்துவாழக் 
	குலமணியும் நீறுநற் றிருவைந் தெழுத்துமே 
        குவலயத் தினிதுவாழக் 
    கோதற்ற சைவநெறி வாழநற் றொண்டரொடு 
        கூடிநின் றிருவடிகளைப் 
	புலமதின் மறவாதிவ் வேழையேம் வாழ்ந்திடப் 
        பொன்னூச லாடியருளே 
    பொற்புமிகு புக்கொளியி னற்கருணை வல்லிநீ 
        பொன்னூச லாடியருளே. 	      	(10)
 பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ் முற்றிற்று   
------------------
This file was last edited on 06 Jan 2025 
Feel free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com)