pm logo

திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்த
மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா.


maturai mInATciyammai kaliveNpA
by tiruppOrUr citampara cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்த
மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா.

Source:
வேதகிரீஸ்வரர் பதிகம், மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா
வீரசைவசிரோமணியாகிய திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால்
அருளிச் செய்யப்பட்டன.
செங்கல்பட்டு இந்தியன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது
சௌமிய ௵ (1909), சித்திரை ௴
-----------
மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா வரலாறு.

இந்நிலவுலகத்தில் நூலாசிரியர் உரையாசிரியர் போதகாசிரியரென்னுபவரிற் சிறந்த உரையாசிரியரென்னும் காரணச்சிறப்புப் பெயரினையுடைய சிதம்பரசுவாமிகள் விருத்தசைலம் ஸ்ரீ குமரதேவர் உபதேசித்தபடி சகசானு சமாதியினிற்கும்போது மயிலானது மறைக்கக்கண்டு, அவர், தமது ஞானாசாரியருக்குத் தெரிவிக்க ஆசாரியார், “அப்பா உனக்குபாசனா மூர்த்தி யாவரென, சுவாமி அடியேன் மதுரையிலிருக்கும்போது அங்கற்கண்ணம்மை யுபாசனையுடவனாயிருந்தேனென, ஆதலாலதனை யவ்விடஞ் சென்று தெரிந்து கொள்ளென்று கட்டளையிட்டருள, இவரும் அப்படியே சென்று அம்மையை நாடி, அருந்தவம் புரிய அம்மை யெளிதிலிரங்காமை நோக்கி அவள் கடாக்ஷம் பெறும் பொருட்டிக்கலி வெண்பாவைப் பாடியருளி அவள் கடாக்ஷத்தினால் திருப்போருருக் கெழுந்தருளினர். இதனை யாங்கர்ணபரம்பரை யாச்சில சான்றோராற் கேள்விப்பட்டவாறே யொருவாறெழுதி முடிந்தது.
~~~~~~~~~~~~

"மீனாட்சியம்மை கலிவெண்பா”
‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’

“காப்பு”
அங்கையற்கும் மாற்கும் அரியபெரு மான்இடஞ்சேர்
அங்கையற்கண் ணம்மைக் கணியவே - அங்கயத்தின்
மாமுகங்கொள் கோமானை வாழ்த்திக் கலிவெண்பா
நாமுகந்து பாடுவோம் நன்கு.

”கலிவெண்பா”

சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே சேயிழையே
காராரும் மேனிக் கருங்குயிலே - ஆராயும்
வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே மின்னொளியே
ஆதி பராபரையே அம்பிகையே - சோதியே
அண்டரெல்லாம் போற்றும் அரும்பொருளே யாரணங்கே
எண்திசைக்குந் தாயான ஈஸ்வரியே - தெண்திரையில்
வந்தஅமு தேயென்று மாறாம லேநினைப்பார்
சிந்தைதனி லேயுறையுஞ் செல்வியே - அந்தமிலா
மாயோன் தனக்கிளைய வல்லியே மாமயிலோன்
தாயே பராபரையே சங்கரியே - தூயவொளி

மன்னுங் கயிலாச மாமயிலே மேருவெனும்
பொன்னங் கிரியுடைய பூங்கொடியே - அன்னமே
அட்டகுல வெற்பாய் அமர்ந்தவளே ஆதிஅந்தம்
எட்டெட்டுந் தானாய் இருந்தவளே - முட்டஎங்கும்
அவ்வெழுத்தாய் நின்ற அரும்பொருளே ஆரணங்கே
உவ்வெழுத்தாய் நின்றதொரு உண்மையே - எவ்வெழுத்துந்
தானாகி நின்றதொரு தற்பரையே யெவ்வுயிர்க்கும்
ஊனாகி நின்றதோர் உத்தமியே - கோனாய்ப்
படியளக்க மால்பார் பதினான்கும் ஒக்க
அடியவரை யீடேற்றும் அன்னாய் - முடிவிலா [10]

ஓங்காரத் துட்பொருளே உற்றநவ கோணத்தில்
ரீங்காரந் தன்னில் இருப்பவளே - பாங்கான
முக்கோணத் துள்ளிருக்கும் மூர்த்தியே மூவிரண்டாஞ்
சட்கோணத் துள்ளிருக்குஞ் சக்தியே - மிக்கபுகழ்
எண்ணிரண்டாங் கோட்டில் இருப்பவளே எவ்வுயிர்க்கும்
பண்ணிசைந்த பாட்டின் பழம்பொருளே - விண்ணுலகின்
மேற்பட்டங் கூடுருவி மேலாகி நின்றதொரு
நாற்பத்து முக்கோண நாயகியே - சீர்ப்பெற்ற
பஞ்ச கோணத்திருந்த பைங்கிளியே பார்முழுதுந்
தஞ்சமது வாகிநின்ற தையலே - செஞ்சொல்மறைச்

சொல்லே பொருளே சுவையே அறுசுவையே
எல்லாப் புவிக்கும் இறைவியே - தொல்லை
எறும்புகடை யானைதலை எண்ணில் உயிர்க்கும்
உறும் பொருளாய் அங்கங் குணர்வாய்ப் - பெறும்பயனாய்
ஆறாறு தத்துவமாய் ஐயிரண்டு வாயுவாய்க்
கூறாய்த் திசைபத்தின் கூட்டமாய்ப் - பேறான
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ ரட்சரமாய்ப்
பஞ்ச வர்ணமாய்ப் பஞ்ச தேவதையாய் - வஞ்சமற்ற
ஆறாதா ரப்பொருளாய் ஐயைந்தாய் ஐம்மூன்றாய்
வீறான சக்கரத்தின் மின்னொளியாய்க் - கூறாய் [20]

கருவிகர ணாதிகளாய்க் கைகலந்து நின்ற
பெரியதொரு மாயைப் பிரிவாய் - உரியதொரு
சோத்திரத்திற் சத்தமாய்த் தொக்கிற் பரிசமாய்
நேத்திரத்திற் பேருருவாய் நீக்கமிலா - நாத்தலனின்
மெத்திரத மாய்மூக்கின் மேவுகந்த மாய்ப்பிறவாய்
மத்தபிர மத்த வயிரவியாய்ச் - சுத்த
துரியமதாய்ப் பின்னுந் துரியாதீ தத்தின்
அரிய சிலம் பொலியும் ஆர்ப்பத் - தெரிவரிதாய்
நாடுதனிற் சென்றிரந்து நற்பவுரி கொண்டுதொந்தம்
ஆடுகின்ற பார்ப்பதியே அம்பிகையே - நாடிக்

களங்கமற வேதான் கரும்புருவந் தன்னிற்
பளிங் கொளியாய் நின்ற பரமே - வளம்பெறவே
கண்ணிரண்டி னுள்ளே கருணைத் திருவடிவாய்ப்
புண்ணியமாய் நின்றருளும் பூவையே - பண்ணமைந்த
நாசி நுனிமேல் நடுவெழுந்த தீபமாய்
ஓசைவிந்து நாதாந்தத் துட்பொருளாய் - நேசமுடன்
அஞ்சு முகமாய் அகண்டபரி பூரணமாய்ப்
பஞ்சபூ தம்மான பைங்கிளியே - கஞ்சமலர்ப்
பாத மிரண்டாகிப் பச்சைநிறந் தானாகி
ஆதிமுத லாகிநின்ற அம்பரமே - தீதிலா [30]

நெற்றிதனிற் கண்ணாகி நிட்களரூபப் பொருளாய்
உற்றவெளி யாகிநின்ற வுத்தமியே - பத்திநிரை
ஆகாயத் தின்னொளியாய் அந்தரத்தின் ரூபமாய்
மேகாதிக் குள்ளே விளைபொருளாய் - வாகாம்
இடைபிங் கலையாய் இரண்டுக்கும் எட்டாக்
கடையுஞ் சுழிமுனையாய்க் காலாய் - மடலவிழ்ந்த
மூலாதா ரத்தொளியாய் மும்மண் டலங்கடந்து
மேலாதா ரத்திருந்த வெண்மதியாய்ப் - பாலூறல்
உண்ணுஞ் சிவயோக வுத்தமியே மெய்த்தவமே
பண்ணுமறை வேதப் பழம்பொருளே - எண்ணரிய

மெய்ஞ்ஞான வித்தே விளக்கொளியே மெய்ச்சுடரே
அஞ்ஞான மேயகற்றும் அம்மையே - பைந்நாகம்
பூண்டசிவ னாரிடத்துப் பூங்கொடியே பாங்குடனே
தாண்டவமா டப்பவுரி தாளமொத்தி - ஆண்டியுடன்
ஆடுங்கூத் தாடிச்சி யம்மனைபந் தாடிச்சி
தேடியும்மால் காணாச் சிவசக்தி - நாடியுனைப்
போற்றும்அடி யார்கள் வினைபோக்கியே அஞ்சலென்று
தேற்றுகின்ற அம்மை துடியிடைச்சி - சாற்றறிய
பச்சை நிறத்தி பவளக் கொடியிடைச்சி
கச்சைப் பொருமுலைச்சி கைவளைச்சி - கொச்சை [40]

மலையரையன் பெற்ற மலைச்சி கலைச்சி
நிலையறிவே தாந்த நிலைச்சி - அலையாத
அன்ன நடைச்சி யருமறைச்சி யாண்டிச்சி
கன்னல் மொழிச்சி கருணைச்சி - பன்னுதமிழ்
வாய்ச்சி சடைச்சி வடிவுடைய மங்கைச்சி
பேய்ச்சி இளமுலைச்சி பேதைச்சி - காய்ச்சியபால்
வெண்ணெய் மொழிச்சி வெளிச்சி வெளியிடைச்சி
அண்ணுபுரந் தீயிட்ட அம்படைச்சி - நண்ணிலரும்
கொப்புக் குழைச்சி குவளைப் பொருவிழிச்சி
அப்புச் சடைச்சி சிவகாமச்சி - மெய்ப்பாங்

கருப்புச் சிலைச்சி கலைச்சி வலைச்சி
மருப்புத் தனத்திமவு நத்தி - பொருப்பிடத்தி
தாமப் புயத்தி சமர்த்தி தருமத்தி
நாமச் சிவபுரத்தி நாரணத்தி - தேமருவுங்
காரணத்தி பூத கணத்தி தனபார
வாரணத்தி அட்டதிக்கு மாரணத்தி - பூரணத்தி
பாத பரிபுரத்தி பங்கயத்தி செங்கரத்தி
சோதி மணிநிறத்தி சொப்பனத்தி - பாதிமதி
சூடுகின்ற சொக்கருடன் துய்யபுலித் தோலுடுத்திக்
காடுதனில் வீற்றிருக்கும் காரணியே - நாடறியுஞ் [50]

சேணிச்சி நல்ல சிறுத்தொண்டன் பிள்ளையறுத்
தூணிச்சி நஞ்சமுதாம் ஊணிச்சி - பாணிச்சி
பாசாங்கு சக்தி பரத்தி பருப்பதத்தி
காசாம்பூ மேனிக் கனதனத்தி - மாசிலா
அம்பரத்தி ஐம்புலத்தி யானதொரு வேதாந்த
உம்பருக்கும் எட்டாத வுத்தமத்தி - செம்பொன்வளைச்
செட்டிச்சி வைகைதனிற் சென்றுவெட்டி மண்சுமந்த
ஒட்டச்சி பூதியணி யுத்தளத்தி - அட்டதிக்கு
மின்னே விளக்கே விலையில்லாச் சீவரத்னப்
பொன்னே நவமணியே பூங்கிளியே - இன்னமுதே

மாணிக்க வல்லியே மாமரக தப்பணியே
ஆணிக் கனகத் தரும் பொருளே - மாணுற்ற
சிங்கார வல்லியே செம்பொற் சிலைவளைத்த
கங்காளற் கன்பான கண்மணியே - மங்காத
தெய்வக் குலக்கொழுந்தே செம்பட் டுடைத்திருவே
ஐவருக்குந் தாயாய் அமர்ந்தவளே மெய்யருக்குச்
சித்தி கொடுக்குஞ் சிவானந்தி அன்பருக்கு
முத்திகொடுக் குஞ்ஞான மூர்த்தியே - எத்திசைக்கும்
தாயகமாய்ச் சூழ்தா வரசங்க மம்விளக்குந்
தூயசுடர் மூன்றான சூக்குமமே - வேயீன்ற [60]

நித்திலமே கற்பகமே நின்மலமே நன்மணியே
சுத்தபரி பூரணியே சுந்தரியே - அத்தருடன்
வாதாடு மங்கையே மாமந்த்ர ரூபியே
வேதாந்தி யேகமல மெல்லியலே - நாதாந்த
மாயேச் சுவரியே மங்கையே மாமறைக்குந்
தாயாகி நின்ற சரஸ்வதியே - காயாய்ப்
பழுத்த பழமாய்ப் பழத்திரதத் தானாய்
முழுத்தபரா னந்த முதலாய் - எழுத்துமுதல்
ஆறுசம யங்களுக்குள் அவ்வவர்க்கும் வெவ்வேறாய்
வேறுபல ரூப விகற்பமதாய்க் - கூறரிதாய்

அங்கங்குந் தானாய் அமர்ந்தவளே ஆதியந்தம்
எங்கெங்குந் தானாய் இருந்தவளே - திங்கள்நுதல்
அஞ்சுகமே தேனே யணங்கே யமுதமொழிக்
கிஞ்சுகமே பிஞ்சுமதிக் கிள்ளையே - கொஞ்சுகுயில்
கன்னி திரிசூலி கபாலி சிவகாமி
மன்னு கவுரி மகமாயி - பொன்னின் மலர்த்
தாளி சதுரி சவுந்தரிமுக் கண்ணுடைய
காளி பகவதி கங்காளி - தூளியாத்
தக்கன் தலையறுத்த தத்துவத்தி தற்பரத்தி
அக்கினிகை யீர்ந்த அமர்க்களத்தி - மிக்கபுகழ் [70]

வீரசக்தி மேருவினை வில்லா வளைத்தவொரு
பராசக்தி வேதப் பராசக்தி - தாரணிகள்
கொண்டகா ரிச்சிக்குங் குந்தளத்தி மாமதனன்
சண்டைக்கா ரிச்சி சகலத்தி - துண்டமதிச்
செஞ்சடைச்சி கஞ்சுளிச்சி செம்படத்தி கங்கணத்தி
பஞ்சசக்தி கொந்தளத்தி பைம்பணத்தி - அஞ்சனத்தி
முத்துவடக் கொங்கைச்சி முல்லை முகிழ் நகைச்சி
பத்தரவர் நெஞ்சகத்தி பாரிடத்தி - சுத்தவெள்ளை
அக்கு வடத்தி அறம்வளர்த்தி அன்புடைச்சி
செக்க ரிளம்பிறைச்சி செண்பகத்தி - தக்கமணி

ஓலைக் குழைச்சி உபதேசக் குண்டலச்சி
மாலைக் கழுத்தி மவுனத்தி - ஞாலமெல்லாம்
அக்கரத்தி பொக்கணத்தி அண்டபகி ரண்டத்தி
முக்கணத்தி நிட்களத்தி மோட்சத்தி - மிக்கபுகழ்
ஏகாக் கரத்தி இமயப் பருப்பதத்தி
நாகாதி பூண்டசிங்க நாதத்தி - வாகான
பத்மா சனத்தி பரிமளத்தி பாம்பணைத்தி
கற்பாந் தரத்தி கருநிறத்தி - விற்காம
வேடிச்சி நல்லதொரு மீனவனுக் கன்றுமுடி
சூடிச்சி கொக்கிறகு சூடிச்சி - நாடிச்சீர் [80]

பாதந் தனைத்தேடும் பங்கயத்தில் வீற்றிருக்கும்
வேதன் தலையறுத்த வித்தகத்தி - நீதிபுனை
பாடகத்தி கீதப்ர பந்தத்தி வெள்ளிமன்றுள்
ஆடகத்தி கூடலுக்குள் ஆதியே ஏடெதிரே
ஏற்றுவித்து முன்சமணர் எண்ணா யிரர்கழுவில்
வீற்றிருக்க வைத்தமறை வித்தகியே - நாற்றிசையும்
கொண்டாடப் பெற்றதொரு கோமளமே சாமளையே
தண்டா மரைத்திருவே தையலே - மண்டலங்கள்
எங்குமொத்து நின்றருளும் ஈஸ்வரியே மாமதுரை
அங்கயற்கண் நாயகியே அம்மையே - துங்க

ஒளியே பெருந்திருவே ஓதிமமே உண்மை
வெளியே பரப்பிரம வித்தையே - அளிசேரும்
கொந்தளக பந்திக் குயிலே சிவயோகத்
தைந்தருவே மூவருக்கும் அன்னையே - எந்தன் இடர்
அல்லல்வினை யெல்லாம் அகற்றியே அஞ்சலென்று
நல்லசவு பாக்கியத்தை நல்கியே - வல்லபத்தின்
ஆசுமது ரஞ்சித்ர வித்தார மென்றறிஞர்
பேசுகின்ற வுண்மைப் பெருவாக்கு - நேசமுடன்
தந்தென்னை யாட்கொண்டு சற்குருவாய் என் அகத்தில்
வந்திருந்து புத்தி மதிகொடுத்துச் - சந்ததமும்

நீயே துணையாகி நின்றிரட்சி அங்கயற்கண்
தாயே சரணம் சரண். [91]

This file was last updated on 19 Nov. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)