சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் /இரண்டாம் காண்டம்
சருக்கம் 7 -13 (3636-4281)

periya purANam of cEkkizAr - Canto 2
carukkam 7 -13 (pAcurams 3636-4281)
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:

Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5, FireFox Mozilla,..) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.



Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற
பெரிய புராணம் -முதற் காண்டம் /
சருக்கம் 7 (வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்)

7.1 சாக்கிய நாயனார் புராணம் (3636 - 3653)
7.2 சிறப்புலி நாயனார் புராணம் (3654 .- 3659 )
7.3 சிறுத்தொண்ட நாயனார் புராணம் (3660 - 3747)
7.4 கழற்றி அறிவார் நாயனார் புராணம் (3748 - 3922 )
7.5 கணநாத நாயனார் புராணம் (3923 - 3938 )

7.1 சாக்கிய நாயனார் புராணம் (3636 - 3653)

திருச்சிற்றம்பலம்

3636 அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய்
மறு சமயச் சாக்கியர்தம் வடிவினால் வரும் தொண்டர்
உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து
மறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம்
7.1.1
3637 தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவுடைய
வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து
கேளாகிப் பல் உயிர்க்கும் அருள் உடையார் ஆய்க் கெழுமி
நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார்
7.1.2
3638 அந் நாளில் எயில் காஞ்சி அணிநகரம் சென்று அடைந்து
நல்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடுவார்
முன்னாகச் சாக்கியர் தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து
மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார்
7.1.3
3639 அந் நிலைமைச் சாக்கியர்தம் அரும் கலை நூல் ஓதி அது
தன்னிலையும் புறச் சமயச் சார்வுகளும் பொருள் அல்ல
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறில் சிவ
நன்னெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார்
7.1.4
3640 செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்
மெய் வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே
இவ்வியல்பு சைவநெறி அல்ல வற்றுக்கு இல்லை என
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்
7.1.5
3641 எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே
துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம்
தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்
7.1.6
3642 எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார்
பொல்லா வேடச் சாக்கியரே ஆகிப் புல்லர் ஆகுவார்
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன
வல்லார் இவர் அவ் வேடத்தை மாற்றாது அன்பின் வழிநிற்பார்
7.1.7
3643 காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடியமால் நான் முகனும் காண நடுச்
சேணாரும் தழல் பிழம்பாய்த் தோன்றிது தெளிந்தாராய்
7.1.8
3644 நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து
மாடோ ர் வெள் இடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம்
நீடோ டு களியுவகை நிலைமை வரச் செயல் அறியார்
பாடோ ர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார்
7.1.9
3645 அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால்
மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரிசெயலினால்
இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே
நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார்
7.1.10
3646 அன்றுபோய் பிற்றைநாள் அந்நியதிக்கு அனையுங்கால்
கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்புஅதனை
நின்றுணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார்
7.1.11
3647 தொடங்கிய நாள் அருளிய அத்தொழில் ஒழியா வழிதொடரும்
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவராடைப்
படம் புனை வேடம் தவிரார் பசுபதியார் தம் செயலே
அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மாதவர்தாம்
7.1.12
3648 இந் நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய
முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில்
துன்னிய மெய் அன்புடனே எழுந்தவினை தூயவர்க்கு
மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால்
7.1.13
3649 கல்லாலே எறிந்த அதுவும் அன்பான படி காணில்
வில்வேடர் செருப்பு அடியும் திருமுடியில் மேவிற்றால்
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலராமால்
7.1.14
3650 அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார்
எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து
பொங்கியது ஓர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு
வெங்கர்஢யின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார்
7.1.15
3651 கொண்டதொரு கல்எடுத்துக் குறிகூடும் வகை எறிய
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கை ஓடும்
கண்டருளும் கண்நுதலார் கருணை பொழிதிருநோக்கால்
தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவி ஓடும் தோன்றினார்
7.1.16
3652 மழ விடைமேல் எழுந்து அருளி வந்த ஒரு செயலாலே
கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி
விழ அருள் நோக்கு அளித்து அருளிமிக்க சிவலோகத்தில்
பழ அடிமைப் பாங்கு அருளிப் பரமர் எழுந்து அருளினார்
7.1.17
3653 ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்ற
கோதில் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும்
சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தான் சூடித்
தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி
7.1.18


7.2 சிறப்புலி நாயனார் புராணம் (3654 - 3659)

திருச்சிற்றம்பலம்

3654 பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளேர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச்செய்த மறைத் திரு ஆக்கூர் அவ்வூர்
7.2.1
3655 தூ மலர்ச் சோலை தோறும் சுடர் தொடுமாடம் தோறும்
மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும்
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ
ஓம நல் வேள்விச் சாலை ஆகுதித் தூபம் ஓங்கும்
7.2.2
3656 ஆலை சூழ் பூக வேலி அத்திரு ஆக்கூர் தன்னில்
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான் மறைக் குலத்தில் உள்ளார்
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார்
7.2.3
3657 ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி
நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார்
7.2.4
3658 அஞ்சு எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம்
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து
எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடை அறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே
7.2.5
3659 அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப் பெரு வள்ளலார் வண் சிறப்புலி யார் தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச் செங்காட்டங் குடியினில் செம்மை வாய்ந்த
வீரர் சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன்
7.2.6


7.3 சிறுத்தொண்ட நாயனார் புராணம் (3660 - 3747)

திருச்சிற்றம்பலம்

3660 உரு நாட்டுஞ் செயல் காமன் ஒழிய விழிபொழி செந்தீ
வரும் நாட்டத் திருநுதலார் மகிழ்து அருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர் தம் களி நாட்டும் காவேரித்
திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக் குடி ஆகும்
7.3.1
3661 நிலவிய அத் திருப்பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால்
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார்
பலர் புகழும் திருநாமம் பரஞ்சோதியார் என்பார்
7.3.2
3662 ஆயுள் வேதக் கலையும் அலகில் வடநூல் கலையும்
தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்று அவற்றால்
பாயும் மதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார்
7.3.3
3663 உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றி பயின்று அவற்றால்
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு
பள்ளமடையாய் என்றும் பயின்று வரும் பண்புடையார்
7.3.4
3664 ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே
ஆசில் புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்கு ஆகப்
பூசல் முனைக் களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர்
தேசங்கள் பல கொண்டு தேர்வேந்தன் பால் சிறந்தார்
7.3.5
3665 மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
தொன் நகரம் துகள் ஆகத் துனைகெடும் கை வரை உகைத்துப்
பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்
இன்னை எண்ணிலகவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்
7.3.6
3666 கதிர் முடி மன்னனும் இவர் தம் களிற்று உரிமை ஆண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார்
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்தலி உடைமையினால்
எதிரி இவருக்கு இவ்வுலகில் இல்லை என எடுத்து உரைத்தார்
7.3.7
3667 தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன்
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் எனவெருவுற்று
எம் பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான்
7.3.8
3668 இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமைத் தொழிற்கு அடுத்த
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு
நிறைந்த நிதிக்குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான்
7.3.9
3669 உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்
எம்முடைய மனக் கருத்துக்கு இனிதாக இசைந்து உமது
மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச்
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடை கொடுத்தான்
7.3.10
3670 மன்னவனை விடை கொண்டு தம்பதியில் வந்து அடைந்து
பன்னு புகழ் பரஞ் சோதியார் தாமும் பனி மதி வாழ்
சென்னியரைக் கணபதி ஈச்சரத்து இறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார்
7.3.11
3671 வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத்
தீதில் குடிப் பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும்
காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார்
7.3.12
3672 நறை இதழித் திரு முடியார் அடியாரை நாள் தோறும்
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டிப் பின் உண்ணும்
நிறையுடைய பெருவிருப்பில் நியதி ஆகக் கொள்ளும்
துறைவழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார்
7.3.13
3673 தூய திரு அமுது கனி கன்னல் அறுசுவைக் கறிநெய்
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம்
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார்
மாயிரு ஞாலம் போற்ற வரும் இவர் பால் மனம் மகிழ்ந்தார்
7.3.14
3674 சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்த
நாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழி பாட்டால்
மே தகையார் அவர் முன்புமிகச் சிறியராய் அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல்
7.3.15
3675 கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர
உண்ணிறை அன்பினில் பணி செய்து ஒழுவார் வழுவு இன்றி
எண்ணில் பெரும் சீர் அடியார் இடை விடாது அமுதுசெய
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின் கண்
7.3.16
3676 நீராரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்துப்
பேராளர் அவர் தமக்குப் பெருகுதிரு மனை அறத்தின்
வேராகி விளங்கும் திரு வெண்காட்டு நங்கைபால்
சீராளத் தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார்
7.3.17
3677 அருமையினில் தனிப் புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த
பெருமையினில் கிளை களிப்பப் பெறற்கு அரிய மணிபெற்று
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்காவகை வளரத்
திருமலி நெய் ஆடல் விழாச் செங்காட்டங்குடி எடுப்ப
7.3.18
3678 மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப
அங்கணர் தம் சீர் அடியார்க்கு அளவு இறந்த நிதி அளித்துத்
தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும்
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணிபுணைந்தார்
7.3.19
3679 ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகமலர அளித்தவர் தாம்
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறைப் பாராட்டுச்
சீர் பெருகச் செய்ய வளர் திருமனார் சீறடியில்
தார் வளர் கிண்கிணி அசையத் தளர் நடையின் பதம் சார்ந்தார்
7.3.20
3680 சுருளும் மயிர் நுதல் சுட்டி துணைக் காதின் மணிக் குதம்பை
மருவு திருக்கண்ட நாண் மார்பினில் ஐம்படைக் கையில்
பொருவில் வயிரச் சரிகள் பொன் அரைஞாண் புனை சதங்கை
தெருவில் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார்
7.3.21
3681 வந்து வளர் மூவாண்டில் மயிர் வினை மங்கலம் செய்து
தந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர்
சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்து அவரைப் பள்ளியினில் இருத்தினார்
7.3.22
3682 அந் நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்து அருள
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர்
பொன் மார்பில் சிறுத் தொண்டர் புகலிகாவனார்தம்
நன்னமச் சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார்
7.3.23
3683 சண்பையர் தம் பெருமானும் தாங்க அரிய பெரும் காதல்
பண்புடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்து அருளத் தாம் இனிது நயப்பு உற்றார்
7.3.24
3684 இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை
அத்தர் திருவடி இணைக் கீழ்ச் சென்று அணைய அவர் உடைய
மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர் தாம்
சித்தம் மகிழ் வயிரவராய்த் திருமலையின் நின்று அணைகின்றார்
7.3.25
3685 மடல் கொண்ட மலர் இதழி நெடும்சடையை வனப்பு எய்தக்
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேகச் சுருள் போல்
தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி
படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆகப் பரப்பி
7.3.26
3686 அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை
மஞ்சின் இடைஎழுந்த வான மீன் பரப்பு என்னப்
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்பத்
துஞ்சின் உனித்து தனிப் பரப்பும் தும்பை நறுமலர் தோன்ற
7.3.27
3687 அருகு திருமுடிச் செருகும் அந்தி இளம் பிறை தன்னைப்
பெருகு சிறுமதியாக்கிப் பெயர்த்து சாத்தியது என்ன
விரிசுடர் செம்பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர்த்
திருநுதல் மேல் திருநீற்றுத் தனிப் பொட்டும் திகழ்ந்து இலங்க
7.3.28
3688 வெவ்வருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும்
அவ்வனல் செம்மண்டலமும் உடன் அணைந்தது என அழகை
வவ்வும் திருக்காதின் மணிக் குழைச் சங்கு வளைத்து அதனுள்
செவ்வரத்த மலர் செறித்த திருத்தோடு புடை சிறக்க
7.3.29
3689 களம் கொள் விடம் மறைத்து அருளக் கடல் அமுத குமிழிநிரைத்
துளங்கொளி வெண் திரட் கோவைத் தூய வடம் அணிந்தது என
உளங்கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருகப் பெருக
விளங்கும் திருக் கழுத்தின் இடைவெண் பளிங்கின் வடம் திகழ
7.3.30
3690 செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்திப்
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என
தம்பழைய கரியுரிவை கொண்டுசமைத்தது சாத்தும்
அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க
7.3.31
3691 மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திருமேனி விளைந்தது என
அக்குமணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும்
கைக்கு அணி கொள்வளைச்சரியும் அரைக் கடி சூத்திரச் சரியும்
தக்க திருக்கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க
7.3.32
3692 பொருவில் திருத் தொண்டர்க்குப் புவிமேல் வந்து அருள் புரியும்
பெருகருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர்
வரும் அன்பின் வழிநிற்பீர் என மறைபூண்டு அறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப
7.3.33
3693 அயன் கபாலம் தரித்த இடத்திருக்கையால் அணைத்த
வயங்கு ஒலி மூவிலைச்சூலம் மணித்திருத் தோள்மிசைப் பொலியத்
தயங்கு சுடர் வலத்திருக்கை தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட
7.3.34
3694 அருள்பொழியும் திருமுகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடிச்சூலம் வெயில் எறிப்பப்
பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கிப்புவி ஏத்தத்
தெருள் பொழிவண் தமிழ்நாட்டுச் செங்காட்டம் குடிசேர்ந்தார்
7.3.35
3695 தண்டாத ஒரு வேட்கைப் பசி உடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத் தொண்டர்மனை வினவிக் கடிது அணைந்து
தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர்
வண்டார் பூந்தாரார் இம்மனைக்கு உள்ளாரோ என்ன
7.3.36
3696 வந்து அணைந்து வினவுவார் மாதவரேயாம் என்று
சந்தனம்மாம் தையலார் முன்வந்து தாள் வணங்கி
அந்தமில் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்து அணைந்தார்
எந்தமை ஆள் உடையீரே அகத்து எழுந்து அருளும் என
7.3.37
3697 மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த
இடவகையில் தனிபுகுதோம் என்று அருள அதுகேட்டு
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனைக்
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடைத்தலை எய்தி
7.3.38
3698 அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு
எம் பெருமான் யாவரையும் கண்டிலர் தேடிப் போனார்
வம்பென நீர் எழுந்து அருளி வரும் திருவேடம் கண்டால்
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனித்தாழார்
7.3.39
3699 இப்பொழுதே வந்து அணைவர் எழுந்து அருளி இரும் என்ன
ஒப்பில் மனை அறம் புரப்பீர் உத்தரா பதி உள்ளோம்
செப்பரும் சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம்
எப்பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி
7.3.40
3700 கண்ணுதலில் காட்டாதார் கணபதீச் சரத்தின் கண்
வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்தாம்
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி
அண்ணலார் திருவாத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார்
7.3.41
3701 நீரார் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டும் செல்வமனை எய்தி
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும்
பாரா தரிக்கும் திருவேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார்
7.3.42
3702 அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார்
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண்
துடிசேர் கரத்துப் பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய்க்
கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் இருந்தார் கணபதீச் சரத்து
7.3.43
3703 என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்திச்
சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்து அருள இறைவர் தம்மைத் தொழுது உரைப்பார்
7.3.44
3704 பூதி அணி சாதனத்தவர் முன் போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வார் நான் என்று
கோதில் அன்பர் தமை அமுது செய்விப்பதற்குக் குலப்பதியில்
காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமைக் கண்டேன்
7.3.45
3705 அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும் என
நெடியோன் அறியா அடியார்தாம் நிகழும் தவத்தீர் உமைக் காணும்
படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மைப் பரிந்து ஊட்ட
முடியா துமக்குச் செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள
7.3.46
3706 எண்ணா அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு அதனைக்
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளிச் செய்யும் கடிது அமைக்க
தண்ணார் இதழி முடியார் தம் அடியார் தலைப்பட்டால் தேட
ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார்
7.3.47
3707 அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார் யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார்
7.3.48
3708 சால நன்று முந் நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசுத்தான் இன்னது என
ஏல அருளிச் செயப் பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்துக்
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கை தொழுதார்
7.3.49
3709 பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்பதஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறுவின்றேல் இன்னம்
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார்
7.3.50
3710 யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும் என
நாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்
தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார்
7.3.51
3711 அதுவும் முனைவர் மொழிந்து அருளக் கேட்ட தொண்டர் அடியேனுக்கு
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்யப் பெறில் என்று
கதுமென் விரைவில் அவர் அவர் இசையப் பெற்றுக் களிப்பால் காதலொடு
மதுமென் கமல மலர்ப் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார்
7.3.52
3712 அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திரு வெண் காட்டு அம்மை
முன்பு வந்து சிறுத் தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாதமிசை இறைஞ்சிப்
பின்பு கணவர் முகம் நோக்கிப் பெருகும் தவத்தோர் செயல் வினவ
7.3.53
3713 வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர் தாம்
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்
கொள்ளும் பிராயம் ஐந்துளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய்
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப் பெறின் என்றார்
7.3.54
3714 அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார்
பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு
வரும் அச்சிறுவன் தனைப் பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும்
7.3.55
3715 மனைவியார் தம் முகம் நோக்கி மற்று இத் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே? நேர் நின்று
தனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லைத் தாழாதே
எனை இங்கு உய்ய நீ பயந்தான் தன்னை அழப்போம் யாம் என்றார்
7.3.56
3716 என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர்
இன்று தாழாது அமுது செய்யப் பெற்று இங்கு அவர் தம் மலர்ந்த முகம்
நன்று காண்பது என நயந்து நம்மைக் காக்க வரும் மணியை
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார்
7.3.57
3717 காதல் மனையார் தாம் கூறக் கணவனாரும் காதலனை
ஏதம் அகலப் பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழிப் புதல்வன்
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்தக் கடிது அகன்றார்
7.3.58
3718 பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை மணி ஒலிப்ப
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல்
கொள்ள அணைத்துக் கொண்டு மீண்டு இல்லம் புகுதக் குலமாதர்
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன் தன்னை எதிர் வாங்கி
7.3.59
3719 குஞ்சி திருத்தி முகம் துடைத்துக் கொட்டை அரை ஞாண் துகன் நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கிப்
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திருமஞ்சனம் ஆட்டி
எஞ்சல் இல்லாக் கோலம் செய்து எடுத்துக் கணவர் கைக் கொடுத்தார்
7.3.60
3720 அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன்
உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாமுண்ணார்
பொச்சம் இல்லாத் திருத் தொண்டர் புனிதர் தமக்குக் கறி அமைக்க
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார்
7.3.61
3721 ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை
வென்ற தாதையார் தலையைப் பிடிக்க விரைந்து மெய்த்தாயார்
7.3.62
3722 இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக்
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்கக் காதலனும்
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்யத்
தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார்
7.3.63
3723 பொருவில் பெருமைப் புத்திரன் மெய்த் தன்மை அளித்தான் எனப் பொலிந்து
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார்
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார்
7.3.64
3724 அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்துக் கூட்டிக் கடிது அமைப்பார்
7.3.65
3725 மட்டு விரிபூங்குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறோர் அரும்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றும் கறி சமைத்துச்
சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்கு உரைத்தார்
7.3.66
3726 உடைய நாதர் அமுது செய உரைத்த படியே அமைவதற்கு
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களி கூர
விடையில் வருவார் தொண்டர் தாம் விரைந்து சென்று மெல் மலரின்
புடைவண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார்
7.3.67
3727 அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு
பண்ணினேனாய்ப் பசித்து அருளத் தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்து அருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார்
7.3.68
3728 இறையும் தாழாது எழுந்து அருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச
கறையும் கண்டத்தினில் மறைத்துக் கண்ணும் நுதலில் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும்
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போலக் கொண்டு மனை புகுந்தார்
7.3.69
3729 வந்து புகுந்து திருமனையில் மனைவியார் தாம் மாதவரை
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனைச்
சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றித் தவிசு அடுத்த
கந்த மலர் ஆசனம் காட்டிக் கமழ் நீர்க் கரகம் எடுத்து ஏந்த
7.3.70
3730 தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம் கழல் விளக்கி
ஆய புனிதப் புனல் தங்கள் தலைமேல் ஆரத் தெளித்து இன்பம்
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென்மலர்ச் சாந்தம்
ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார்
7.3.71
3731 பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூங்குஞ்சி பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின்
வனிதை யாரும் கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம்
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்கப் படைக்க என
7.3.72
3732 ரிசு விளங்கப் பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றித்
தெரியும் வண்ணம் செஞ்சாலிச் செழும் போனகமும் கறி அமுதும்
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக் கான் மேல்
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள் செய்வார்
7.3.73
3733 சொன்ன முறையில் படுத்த பசுத் தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு
மன்னு சுவையில் கறி ஆக்கிமாண அமைத்தீரே? என்ன
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்காகாது எனக் கழித்தோம் என்ன
அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார்
7.3.74
3734 சிந்தை கலங்கிச் சிறுத் தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயரச்
சந்தனத்தார் எனும் தாதியார்தாம் அந்தத் தலை இறைச்சி
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்துக் கொடுக்க முகம் மலர்ந்தார்
7.3.75
3735 வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத் தொண்டரை நோக்கி
ஈங்கு நமக்குத் தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இப்
பாங்கு நின்றார் தமைக் கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள
ஏங்கிக் கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார்
7.3.76
3736 அகத்தின் புறத்துப் போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து
முகத்தில் வாட்டம் மிகப் பெருகப் பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார்
இகத்தும் பரத்தும் இனி யாரைக் காணேன் யானும் திருநீறு
சகத்தில் இடுவார் தமைக் கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச
7.3.77
3737 உம்மைப் போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று
செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை தம்மைக் கலம் திருத்தி
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டுப் படையும் எனப் படைத்தார்
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ணப் புகலும் தடுத்து அருளி
7.3.78
3738 ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை அழையும் என
ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார்
7.3.79
3739 நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர்
தாம் அங்கு அருளிச் செய்யத் தரியார் தலைவர் அமுது செய்து அருள
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவு உற்று எழுந்து அருளால்
பூ மென் குழலார் தம் மோடும் புறம் போய் அழைக்கப் புகும் போது
7.3.80
3740 வையம் நிகழும் சிறுத் தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார்
தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார்
செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம்
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட
7.3.81
3741 பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான் போல் வந்த
தரமில் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்து தழுவித் தம்
கரம் முன் அணைத்துக் கணவனார் கையில் கெடுப்பக் களி கூர்ந்தார்
புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம் எனும் பொலிவால்
7.3.82
3742 வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார்
முந்தவே அப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்து அருளச்
சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார்
7.3.83
3743 செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழும் அஞ்சுகத்துப் பயிரவர் யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே எனத் தேடி
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த
தைய லோடும் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார்
7.3.84
3744 தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர்
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்து அருளிப்
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார்
7.3.85
3745 அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும் கண்டு பரவசமாய்
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள் புரிவார்
7.3.86
3746 கொன்றை வேணியார் தாமும் பாகம் கொண்ட குலக் கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக் கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார்
7.3.87
3747 ஆறு முடிமேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா
ஊறு இலாத தனிப் புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்டப்
பேறு பெற்றார் சே அடிகள் தலைமேல் கொண்டு பிற உயிர்கள்
வேறு கழறிற்று அறிவார் தம் பெருமையும் தொழுது விளம்புவார்
7.3.88
திருச்சிற்றம்பலம்


7.4 கழற்றி அறிவார் நாயனார் புராணம் (3748 - 3922)

திருச்சிற்றம்பலம்

3748 மாவீற்று இருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டுப்
பா வீற்றிருந்த பல்புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி தான்
சேவீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர் குலக்
கோவீற்று இருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்
7.4.1
3749 காலை எழும் பல் கலையின் ஒலி களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரகச் செருக்கால் சுலவும் ஒலி
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினதால்
7.4.2
3750 மிக்க செல்வம் மனைகள் தொறும் விளையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கும் சாலை தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன
தக்க அணி கொள் மாடங்கள் தொறும் சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கள் இடங்கள் தொறும் அடங்க நிதியம் துவன்றுவன
7.4.3
3751 வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற
சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ்
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான்
கோதை அரசர் மகோதை எனக் குலவும் பெயரும் உடைத்துலகில்.
7.4.4
3752 முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர் அதன் கண் முறை மரபின்
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவத் திறம் தழைப்பத்
திருகு சின வெம் களியானைச் சேரர் குலமும் உலகும் செய்
பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக் கோதையர்
7.4.5
3753 திருமா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர் மாரி
தருமா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்
7.4.6
3754 மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால்
கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணூம் கருத்தினராய்
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார்
தெள் நீர் முடியார் திரு வஞ்சைக் களத்தில் திருத்தொண்டே புரிவார்
7.4.7
3755 உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார்
புலரி எழுந்து புனல் மூழ்கிப் புனித வெண் நீற்றினும் மூழ்கி
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து
மலரும் முகையும் கொணர்ந்து மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து
7.4.8
3756 திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு
வரும் அன்புடன் இன்பு உறச் சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்து அமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப் பணிந்தே ஒழுகும் நாள்
7.4.9
3757 நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால் வரையின் கொடிமதில் சூழ்
சீரின் மலிந்த திரு நகரம் அதனில் செங்கோல் பொறையன் எனும்
காரின் மலிந்த கெடை நிழல் மேல் கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த்
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்துத் தவம் சார்ந்தான்
7.4.10
3758 வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின்
சிந்தை மதி நூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி
முந்தை மரபில் முதல்வர் திருத் தொண்டு முயல்வார் முதற்று ஆக
இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர் பால் எய்தினார்
7.4.11
3759 எய்தி அவர் தம் எதிரில் இறைஞ்சி இருந்தண் சாரல் மலை நாட்டுச்
செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது எனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண்
7.4.12
3760 இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் எனப் புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால்
7.4.13
3761 மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும்
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு இல்லாத்
தாவில் விறலும் தண்டாத கொடையும் படை வாகனமும் முதல் ஆம்
காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார்
7.4.14
3762 ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சிப் புறம் போந்து அரசு அளித்தல்
ஊனம் ஆகும் திருத் தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும்
மான அமைச்சர் தாள் பணிந்து அவ் விணைமேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார்
7.4.15
3762 உரிமை நாளில் ஒரை நலன் எய்த மிக்க உபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ்
தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற் அறிவார் தாம்
7.4.16
3764 தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன் தாழ்ந்து எழுந்து
கும்ப யானை மேல் கொண்டு கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம் கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வரக் கண்டார்
7.4.17
3765 மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால்
உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே
இழையிற் சிறந்த ஓடை நுதல் யானைக் கழுத்தின் நின்று இழிந்து
விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கை தொழுதார்
7.4.18
3766 சேரர் பெருமான் தொழக் கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி
யார் என்று அடியேனைக் கொண்டது அடி வண்ணான் எனச்
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார்
7.4.19
3767 மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம்
சென்னி மிசை அஞ்சலி செய்து போற்றச் சினமால் களிறு ஏறி
மின்னு மணிப் பூண் கொடி மாட வீதி மூதூர் வலம் கொண்டு
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய
7.4.20
3768 யானை மிசை நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின் கண்
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக் குடை நிழற்றப்
பானல் விழியார் சாமரை முன் பணி மாறப்பன் மலர் தூவி
மான அரசர் போற்றிட வீற்று இருந்தார் மன்னர் பெருமானார்
7.4.21
3769 உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியர் உடன் கூட
நிலவு பெரு முக் கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி
அலகில் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து
மலரும் திரு நீற்று ஒளிவளர மறைகள் வளர மண் அளிப்பார்
7.4.22
3770 நீடும் உரிமைப் பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும்
தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லைச் திருச்சிற்றம் பலத்துள்
ஆடும் கழலே எனத் தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குலப் பெருமாள்
7.4.23
3771 வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமம் சாந்தம் மணித் தூபம்
தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும்
ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும்
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொன் பார் சிலம்பின் ஒலி அளித்தார்
7.4.24
3772 நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால்
செம் பொன் மழையாம் எனப் பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி
உம்பர் போற்றத் தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார்
7.4.25
3773 இன்ன வண்ணம் இவர் ஓழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு
மன்னும் மதுரைத் திரு வால வாயில் இறைவர் வரும் அன்பால்
பன்னும் இசைப் பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள் புரிவார்
7.4.26
3774 இரவு கனவில் எழுந்து அருளி என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவும் சேரன் தனக்கு உனக்குப் பைம் பொன் பட்டு ஆடை
விரவு கதிர் செய் நவ மணிப் பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றித்
தர நம் ஓலைத் தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று
7.4.27
3775 அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள் செய்த பெருமை யாலே
எதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று
மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக்
கதிர் ஒளி விரிந்த தோட்டு திருமுகம் கொடுத்தார் காண
7.4.28
3776 சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேல் கொண்டு பத்திரனார்
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தித்
துங்கப் பரிசை கொடுங் கோளூர் தன்னில் புகுந்து துன்னு கொடி
மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார்
7.4.29
3777 கேட்ட பொழுதே கை தலைமேல் கொண்டு கிளர்ந்த பேரன்பால்
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி
ஓட்டத் தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன்
பாட்டின் தலைமைப் பணனார் பாதம் பலகால் பணிகின்றார்
7.4.30
3778 அடியேன் பொருளாத் திருமுகம் கொண்டு அணைந்தது என்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகம் கைக்கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறிப் பொழி கண்ணீர்
பொடியார் மார்பில் பரந்து விழப் புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார்
7.4.31
3779 பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது படி எடுக்க
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி
விரிபொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமைச் சுற்றம் எலாம்
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள் செய்வார்
7.4.32
3780 தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம்
அம்கண் ஒன்றும் ஒழியாமை அடையக் கண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய் தாளின்மேல் சமைய ஏற்றிக் கெணரும் என
7.4.33
3781 சேரர் பெருமான் அருள் செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும்
சீர் கொள் நிதியும் எண்ணிறந்த எல்லாம் பொதி செய்தாளின் மேல்
பாரில் நெருங்க மிசை ஏற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள்
7.4.34
3782 பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு
நிரந்த தனங்கள் வேறு வேறு நிரைத்துக் கட்டி மற்று இவையும்
உரம் தங்கிய வெம் கரிபரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும்
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார்
7.4.35
3783 பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் ஆணை
அரசும் அரசு உறுப்பும் கைக் கொண்டு அருளும் என இறைஞ்ச
7.4.36
3784 இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர்
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே
உறை மும்மதத்துக் களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோ ர்
பிறை வெண் கோட்டுக் களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர்
7.4.37
3785 பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின்
கண்கள் பொழிந்த காதல் நீர் வழியக் கையால் தொழுது அணைய
நண்பு சிறக்கும் அவர் தம்மை நகரின் புறத்து விடை கொண்டு
திண் பொன் புரிசைத் திரு மதுரை புக்கார் திருந்தும் இசைப் பாணர்
7.4.38
3786 வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகிக்
கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும்
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்று இருந்தார்
7.4.39
3787 அளவில் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின்
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக்
களவு கொலைகள் முதலான கடிந்து கழற்றிற்று அறிவார் தாம்
வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள்
7.4.40
3788 வானக் கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டுத்
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள்
தேன் அக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல்
மானப் பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி
7.4.41
3789 பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது எனப் பொரும்
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று
தேகின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார்
7.4.42
3790 ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கைமலர்
கூடத் தலைமேல் குவித்து அருளிக் கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து
நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறை முன்
தேடற்கு அரியாய் திருஅருள் திரு அருள் முன் செய்யது ஒழிந்தது என் என்றார்
7.4.43
3791 என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர் நின்று அருளாது எழும் ஒலியால்
மன்றின் இடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத் தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார்
7.4.44
3792 என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று
பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி
தன் நேர் இல்லா வன் தொண்டர் தமையும் காண்பான் என விரும்பி
நல் நீர் நாட்டுக் செல நயந்தார் நாமச் சேரர் கோமானார்
7.4.45
3793 பொன்னார் மௌலிச் சேரலன் ஆர் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற
மின்னார் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர்
அந் நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய்
7.4.46
3794 இட்ட நல்நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக் களத்து
மட்டுவிரிபூம் கொன்றையினார் தம்மை வலம் கொண்டு இறைஞ்சிப் போய்
பட்டநுதல் வெம் களியாணை பிடர்மேல் கொண்டு பனி மதியம்
தொட்ட கொடிமாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார்
7.4.47
3795 யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன
மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற
சேனைவீரர் புடைபரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த
கானம் அடைய உடன் படர்வன போலும் காட்சி மேவினதால்
7.4.48
3796 புரவித் திரள்கள் ஆ யோகப் பொலிவின் அசைவில் போதுவன
அரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேல் மேல் அடர்வன போல்
விரவிப் பரந்து சென்றனவால் மிசையும் அவலும் ஒன்றாக
நிரவிப் பரந்த நெடும் சேனை நேமி நெளியச் சென்றனவால்
7.4.49
3797 அந் நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி
மினார் மணிப்பூண் மன்னவன் ஆர் வேண்டுவாரை உடன்கொண்டு
கொனார் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி
பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டு இடைப் போவார்
7.4.50
3798 சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறை அறுப்பத்
துன்று முரம்பும் கான் ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து
வென்றி விடையார் இடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார்
7.4.51
3799 பொருவில் பொன்னித் திருநதியின் கரை வந்து எய்திப் புனித நீர்
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வடபால் கரை ஏறித்
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற
உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார்
7.4.52
3800 வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர் வணங்கிச்
சந்த விரைப் பூந்திருவீதி இறைஞ்சித் தலைமேல் கரம் முகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார்
7.4.53
3801 நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி
மலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து மாளிகை வலம் கொண்டு
உலகு விளக்கும் திருப் பேர் அம்பலத்தை வணங்கி உள் அணைந்தார்
அலகில் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன்
7.4.54
3802 அளவில் இன்பப் பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட
உளமும் புலனும் ஒருவழிச் சென்று உருகப் போற்றி உய்கின்றார்
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார்
7.4.55
3803 ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால்
சீரார் வண்ணப் பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப்
பாரா தரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார் பருவ மழை பொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழற்றிவார் தாம்
7.4.56
3804 தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ் சொல் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச்
செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்த ஒலிதாமும் எதிரே கேட்பித்தார்
7.4.57
3805 ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவில் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்
நீடப் பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து
மாடத் திரு மாளிகை வீதி வணங்கிப் புறத்து வைகினார்
7.4.58
3806 பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம் பொன் அம்பலத்துள்
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அந் நாளில்
7.4.59
3807 ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளித் தாழ்ந்த படி தமக்குக்
கூடும் பரிசால் முன்பு அருளிச் செய்த நாவலூர்க் கோவை
நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல்
தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார்
7.4.60
3808 அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சிப்
பிறவி இலாத திருவடியைப் பெருகும் உள்ளத்தினில் பெற்று
செறியும் ஞானப் போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்
7.4.61
3809 வழியில் குழியில் செழுவயலின் மதகின் மலர் வாவிகளின் மடுச்
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறி
வழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உகக்
கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ளக் கழனி ஆரூர் கண் உற்றார்
7.4.62
3810 நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடி
அம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா
பைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில்
தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார்
7.4.63
3811 வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவரூர் எய்த
அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர் கொண்டு சென்று கிடந்தார் சேரலனார்
சந்தம் விரைத்தார் வன்தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார்
7.4.64
3812 முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தே
அன்பு பெருகத் தழுவ விரைந்து ஆர்வத்தொடு தழுவ
இன்ப வெள்ளத்து இடை நீந்தி ஏற மாட்டாதவர் போல்
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்
7.4.65
3813 ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவில் மகிழ்வு எய்த
மானச் சேரர் பெருமானார் தாமும் வன்தொண்டரும் கலந்த
பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியதால்
7.4.66
3814 ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து
மருவ இனியார் பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால்
பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு பரமர் தாள் பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுள் புகுந்தார் சேரமான் தோழர்
7.4.67
3815 சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சித் திருமாளிகை வலம் கொண்டு
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக
நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார்
7.4.68
3816 தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வப் பெருமாள் கழல் வணங்கி
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரைத் திருமும் மணிக் கோவை
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரல் அனார் தம்பிரானார் தாம் கொண்டார்
7.4.69
3817 அங்கண் அருள் பெற்று எழுவாரைக் கொண்டு புறம் போந்து ஆரூரர்
நங்கை பரவையார் திருமாளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும்
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர் கொண்டார்
7.4.70
3818 சோதி மணி மாளிகையின் கண் சுடரும் பசும் பொன் கால் அமளி
மீது பெருமாள் தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்பக்
கோதில் குணத்துப் பரவையார் கொழுநர்க்கும் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார்
7.4.71
3819 தாண்டும் புரவிச் சேரர் குலப் பெருமாள் தமக்குத் திரு அமுது
தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார்
7.4.72
3820 அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன்பின்
புரசைக் களிற்றுச் சேரலன் ஆர் புடை சூழ்ந்து அவரோடு அமுது செயப்
பரவைப் பிறந்த திருவனைய பரவையார் வந்து அறிவித்தார்
7.4.73
3821 சேரர் பெருமான் எழுந்து அருளி அமுத செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி எனப்
பாரின் மலிசீர் வன்தொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருத்திக்கால் இரண்டில் படியாய் ஏற்றுதலும்
7.4.74
3822 ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெரு உறலும்
நீண்ட தடக்கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார்
7.4.75
3823 ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்துப் பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறுசுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்தத்
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்பத் தூய விருந்தின் கடன் முடித்தார்
7.4.76
3824 பனிநீர் விரவு சந்தனத்தின் பசுங்கர்ப்பூர விரைக் கலவை
வனிதை அவர்கள் சமைத்து எடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும்
புனித நறும் பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொன்கொடியார்
இனிய பஞ்ச வாசம் உடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார்
7.4.77
3825 ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளித்
தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுது அணிந்து
மேய விருப்பின் உடன் இருப்பக் கழறிற்றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை அடைந்தார் ஆய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார்
7.4.78
3826 மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவிக்
கலை நாள் பெருகு மதி முகத்துப் பரவையார் தம் கணவனார்
சிலை நாட்டிய வெல் கொடியாரைச் சேரத் தந்தார் எனக் கங்கை
அலை நாள் கொன்றை முடிச் சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார்
7.4.79
3827 செல்வத் திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த
வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதி விடங்கப் பெருமானை
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து
சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார்
7.4.80
3828 இவ்வாறு ஒழுகும் நாளின் கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்
மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத் திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார்
7.4.81
3829 சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்குச்
சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செலத் துணிந்தார்
7.4.82
3830 இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பில் பணிகள் வாகனங்கள்
பொருவில் பண்டாரங் கொண்டு போதுவார்கள் உடன் போத
7.4.83
3831 சேவித்து அணையும் பரிசனங்கள் சூழத் திருவாரூர் இறைஞ்சிக்
காவில் பயிலும் புறம்பு அணையைக் கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல் வணங்கிப் போந்து வேலைக் கழிக் கானல்
பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார்
7.4.84
3832 திருக்காரோணச் சிவக் கொழுந்தைச் சென்று பணிந்து சிந்தையினை
உருக்கார்வச் செம்தமிழ் மாலை சாத்திச் சில நாள் உறைந்து போய்
பெருக்கார் உலவு சடைமுடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி
அருள் காரணர் தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர்
7.4.85
3833 முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி
செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும் புகலிச் சிவக் கன்றும்
அந்நேர் திறக்க அடைக்க எனப்பாடும் திருவாயிலை அணைந்து
நன்னீர் பொழியும் விழியினர் ஆய் நாயன் மாரை நினைந்து இறைஞ்சி
7.4.86
3834 நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழைப் பழித்து என்னும்
அறைந்த பதிகத் தமிழ் மாலை நம்பி சாத்த அருள் சேரர்
சிறந்த அந்தாதியில் சிறப்பித்து அனவே ஓதித் திளைத்து எழுந்தார்
7.4.87
3835 எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெரும் தொண்டரும் சில நாள்
செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து தென்பால் திரைக் கடல் நஞ்சு
அழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி இறைஞ்சி அவிர் மதியக்
கொழுந்து வளர் செம் கடைக் குழகர் கோடிக் கோயில் குறுகினார்
7.4.88
3836 கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்
வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப்
பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார்
7.4.89
3837 அங்கு வைகிப் பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார்
தங்கும் இடங்கள் வணங்கிப் போய் பாண்டி நாடுதனைச் சார்ந்து
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும்
மங்குல் தவழும் மணிமாட மதுரை மூதூர் வந்து அணைந்தார்
7.4.90
3838 சேரமான் தோழரும் அச் சேரர் பிரானும் பணிப்பூண்
ஆரமார் மார்பரை ஆலவாயினில் வணங்க
வாரமா வந்து அணைய வழுதியார் மனக்காதல்
கூர மாநகர் கோடித்து எதிர் கொண்டு கொடு புக்கார்
7.4.91
3839 தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார்
அன்னவர்கள் உடன் கூட அனைய அவரும் கூடி
மன்னு திரு ஆலவாய் மணிக் கோயில் வந்து அணைந்தார்
7.4.92
3840 திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சடையார் கோயில் வலம்
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன்தொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றி இசைத்துத் தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ்
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார்
7.4.93
3841 படியேறு புகழ்ச் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து
அடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை
முடிவேது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார் முன் பரவிக் களி கூர்ந்தார்
7.4.94
3842 செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரர் உடன்
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால்
உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும்
பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார்
7.4.95
3843 உளம் மகிழக் கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன்
கிளர் ஒளிப் பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி
வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார்
7.4.96
3844 அந் நாளில் மதுரை நகர் மருங்கரனார் அமர் பதிகள்
பொன்னாரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போதச்
செந்நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்று இறைஞ்சிச்
சொன்மாலைகளும் சாத்தித் தொழத் திருப்பூவணத்தை அணைந்தார்
7.4.97
3845 நீடு திருப் பூவணத்துக் அணித்தாக நேர் செல்ல
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அப் பதிகாட்டத்
தேடு மறைக்கு அரியாரைத் திருவுடையார் என்று எடுத்துப்
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார்
7.4.98
3846 சென்று திருப் பூவணத்துத் தேவர் பிரான் மகிழ் கோயில்
முன்றில் வலம் கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து
நின்று பரவிப்பாடி நேர் நீக்கி உடன் பணிந்த
வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார்
7.4.99
3847 அப்பதியில் அமர்ந்து இறைஞ்சிச் சில நாளில் ஆரூரர்
முப்பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி
மெய்ப் பரிவில் திருவால வாயுடையார் விரை மலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார்
7.4.100
3848 செஞ்சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம்
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து
மஞ்சணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார்
7.4.101
3849 பரமர் திருப்பரம் குன்றில் சென்று பார்த்திபர் ஓடும்
புரம் எரித்தார் கோயில் வலம் கொண்டு புகுந்து உள் இறைஞ்சிச்
சிரமலிமாலைச் சடையார் திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார்
7.4.102
3850 கோத்திட்டை என்று எடுத்துக் கோதில் திருப்பதிக இசை
மூர்த்தியார் தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே
ஏத்திய வண் தமிழ் மாலை இன் இசைப் பாடிப் பரவி
சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில்
7.4.103
3851 இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி
மறை முந் நூல் மணி மார்பின் வன்தொண்டர் தமைப் பணிந்தார்
நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார்
7.4.104
3852 அந் நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சமலை
நன்னாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்து அருள
மின்னாட்டும் பல் மணிப்பூண் வேந்தர் இருவரும் மீள்வார்
தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார் தமை விடுத்தார்
7.4.105
3853 இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதற் பின் எழுந்து அருளும்
பொருவருஞ் சீர் வன்தொண்டர் புகழ்ச் சேரர் உடன் புனிதர்
மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலைச்சாரல்
குருமணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார்
7.4.106
3854 குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கிச்
சொல்தாம மலர் புனைந்து குறும் பலாத் தொழுது இப்பால்
முற்றா வெண்மதி முடியார் பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார் மன்னிய செல்வத் திருநெல் வேலியை அணைந்தார்
7.4.107
3855 நெல்வேலி நீற்று அழகர் தமைப் பணிந்து பாடி நிகழ்
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார்
வில்வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றிப் பின்
செல் வேத முதல்வரமர் திரு இராமேச்சரத்து
7.4.108
3856 மன்னும் இராமேச்சரத்து மாமணியை முன் வணங்கிப்
பன்னும் தமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பு அணிந்த
சென்னியர் மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம் சார்ந்த
சொல்மலர் மாலைகள் சாத்தித் தூரத்தே தொழுது அமர்ந்தார்
7.4.109
3857 திரு இராமேச்சரத்துச் செழும் பவளச் சுடர்க் கொழுந்தைப்
பரிவினால் தொழுது அகன்று பரமர் பிற பணிந்து
பெருவிமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல்
மருவினார் வன்தொண்டர் மலை வேந்தருடன் கூட
7.4.110
3858 திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலைச் சிலையாரைக்
கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல் விடத்தின்
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்ப்
பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார்
7.4.111
3859 அங்கணரைப் பணிந்து உறையும் ஆரூரர்க்கு அவ்வூரில்
கங்குல் இடைக் கனவின் கண் காளையாந் திருவடிவால்
செங்கையினில் பொன் செண்டும் திருமுடியில் சுழியம் உடன்
எங்கும் இலாத் திருவேடம் என்புருக முன்காட்டி
7.4.112
3860 கானப் பேர் யாம் இருப்பது எனக் கழறி கங்கை எனும் 3860-1
வானப் பேராறும் உலவும் மா முடியார் தாம் அகல
ஞானப் பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன்
ஏனப் பேரெயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார்
7.4.113
3861 கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப்
புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய்
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர்
தொண்டர் அடித் தொழலும் எனும் சொல் பதிகத் தொடை புனைவார்
7.4.114
3862 காளையார் தமைக் கண்டு தொழப் பெறுவது என் என்று
தாளை நாளும் பரவத் தருவார் பால் சார்கின்றார்
ஆளை நீள் இடைக் காண அஞ்சிய நீர் நாய் அயலே
வாளைபாய் நுழைப் பழன முனைப்பாடி வள நாடார்
7.4.115
3863 மன்னு திருக்கானப் பேர் வளம் பதியில் வந்து எய்தி
சென்னி வளர்மதி அணிந்தார் செழுங் கோயில் வலம் கொண்டு
முன்னிறைஞ்சி உள்ளணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து
பன்னு செழுந்தமிழ் மாலை பாடினார் பரவினார்
7.4.116
3864 ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச்
சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளிக்
காராரும் மலர்ச்சோலைக் கானப் பேர் கடந்து அணைந்தார்
போரானேற்றார் கயிலைப் பொருப்பர் திருப்புனவாயில்
7.4.117
3865 புனல் வாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு
மனம் ஆர்வம் உறச் சித்த நீ நினை என்னொடு என்றே
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில்
சினயானை உரித்து அணிந்தார் திருப்பாதம் தொழுது இருந்தார்
7.4.118
3866 திருப்புன வாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும்
விருப்புடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார்
பொருப்பினொடு கானகன்று புனல் பொன்னி நாடு அணைந்து
பருப்பத வார் சிலையார் தம் பாம்பு அணிமா நகர் தன்னில்
7.4.119
3867 பாதாள ஈச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும் 3867-1
வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன்
சூதாரும் துணை முலையார் மணிவாய்க்குத் தோற்று இரவு
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார்
7.4.120
3868 திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தர் உடன்
வருவாரைத் திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ளத்
தரும் காதலுடன் வணங்கித் தம் பெருமான் கோயிலினுள்
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெறப் புகுந்தார்
7.4.121
3869 வாச மலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலம் கொண்டு
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால்
பாச வினைத் தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார்
7.4.122
3870 பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த
விரவு பேர் அலங்கார விழுச் செல்வம் மிகப் பெருக
வரவு எதிர் கொண்டு அடிவணங்க வன் தொண்டர் மலைநாட்டுப்
புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார்
7.4.123
3871 பரவியே பரவையார் பரிவு உடனே பணிந்து ஏத்தி
விரவிய போனகங்கறிகள் விதம் பலவாகச் சமைத்துப்
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்துத்
திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார்
7.4.124
3872 மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து
தங்கி இனிது அமர் கின்றார் தம்பிரான் கோயிலினுள்
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார்
7.4.125
3873 நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி
விலக்கரும் போர்த் தகர்ப் பாய்ச் சல் கண்டு அருளி வென்றி பெற
மலைக்கு நெடு முள் கணைக்கால் வாரணப் போர் மகிழ்ந்து அருளி
அலைக்கும் அறப் பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார்
7.4.126
3874 விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்லக்
கரவில் ஈகைக் கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டுப்
பரவையார் தம் கொழுநனார் தம்மைப் பணிந்து கொண்டு அணை
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்து அருள
7.4.127
3875 நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்து அருளத்
திங்கள் முடியார் திரு அருளைப் பரவிச் சேரமான் பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளிப்
பொங்கும் முயற்சி இருவரும் போய்ப் புக்கார் புனிதர் பூங்கோயில்
7.4.128
3876 தம்பிரானைத் தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய
நம்பி ஆருரரும் சேரர் நன்னாட்டு அரசனார் ஆய
பைம் பொன் மணி நீள் முடிக் கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன்
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல் பால் செல்கின்றார்
7.4.129
3877 பொன் பரப்பி மணிவரன்றி புனல் பரக்கும் காவேரித்
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர்
அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள்
7.4.130
3878 வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள்
உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக்
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித்
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார்
7.4.131
3879 ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூர் தமை நோக்கி
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன
7.4.132
3880 ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் 3880-1
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப
நீறு விளங்கும் திருமேனி நிறுத்தர் பாதம் பணிந்தன்பின்
ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார்
7.4.133
3881 பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும்
7.4.134
3882 மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட
7.4.135
3883 விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப்
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார்
7.4.136
3884 நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார்
7.4.137
3885 செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான்
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில்
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்
7.4.138
3886 அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றித் திளைத்து இறைஞ்சித்
தங்கள் பெருமான் திரு அருளால் தாழ்ந்து மீண்டும் தடம்பொன்னித்
பொங்கு நதியின் முன் வந்த படியே நடுவு போந்து ஏறத்
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடரப் பெருகியதால்
7.4.139
3887 ஆய செயலின் அதிசயத்தைக் கண்ட கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்பால் போய்த்
தூய மதிவாழ் சடையார் தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்திச்
சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரர் உடன்
7.4.140
3888 கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட்டு எல்லையுற
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர்
அங்கண் உடனே அணை எழுந்து அருளா நின்றார் எனும் விருப்பால்
எங்கும் அந் நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர்
7.4.141
3889 பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன
வீதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ
7.4.142
3890 திசைகள் தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம்
மிசை கொள் பண்ணும் பிடிவெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு
அசைவில் இன்பப் பெருவெள்ளத்து அமர்ந்து கொடுங் கோளூர் அணைந்தார்
7.4.143
3891 கொடுங்கோ ளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து
தொடுங்கோபுரங்கள் மாளிகைகள் குளிர் குளிர் சாலைகள் தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணித் தாமம் கமுக
விடுங்கோதைப் பூந் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து
7.4.144
3892 நகர மாந்தர் எதிர் கொள்ள நண்ணி எண்ணில் அரங்கு தொறும்
மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார்
சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக் களத்து
நிகரில் தொண்டர் தமைக் கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார்
7.4.145
3893 இறைவர் கோயில் மணி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு
நிறையும் காதல் உடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர்
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்துப்
பிறை கொள் முடியார் தமைப்பாடி பரவிப் பெருமாளுடன் தொழுதார்
7.4.146
3894 தொழுது தினைத்துப் புறம் போந்து தோன்றப் பண்ணும் பிடிமேற்பார்
முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றிப் பின்பு தாம் ஏறிப்
பழுதில் மணிச் சாமரை வீசிப் பைம்பொன் மணி மாளிகையில் வரும்
பொழுது மறுகில் இருபுடையும் மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்
7.4.147
3895 நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார்
எல்லை இல்லாத் தவம் முன்பு என் செய்தோம் இவரைத் தொழ என்பார்
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார்
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலைப் பாரீர் எனத் தொழுவார்
7.4.148
3896 பூவும் பொரியும் பொன் துகளும் பணிவார் பொருவில் இவர்
மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் என வியப்பார்
பாவும் துதிகள் எம் மருங்கும் பயில வந்து மாளிகையின்
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார்
7.4.149
3897 கழறிற்றறியுந் திருவடியும் கலை நாவலர் தம் பெருமானாம்
முழவில் பொலியும் திரு நெடுந்தோள் முனைவர் தம்மை உடன் கொண்டு
விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தித் தாமும் நேர் நின்று
7.4.150
3898 செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த
அம்பொன் பாதம் தாம் விளக்கி அருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருளத் தரணியில் வீழ்ந்து
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என
7.4.151
3899 பெருமாள் வேண்ட எதிர் மறுக்க மாட்டார் அன்பில் பெரும் தகையார்
திருமா நெடுந்தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார்
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன்பின்
ஒருமா மதிவெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார்
7.4.152
3900 சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி
ஆரம் நறுமென் கலவை மான் மதச் சாந்து ஆடை அணிமணிப் பூண்
ஈர விரை மென்மலர்ப் பணிகள் இனைய முதலாயின வருக்கம்
சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிகத் தமக்கு ஆக்கி
7.4.153
3901 பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம் தொறும் நிகழ
மாடு விரைப்பூந்தருமணஞ்செய் ஆராமங்கள் வைகுவித்துக்
கூட முனைப் பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார்
7.4.154
3902 செண்டாடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்றுப் பெரும் சிறப்பும்
வண்டாடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும்
தண்டாமும் மத கும்பத் தட மலைப்போர் சல மற்போர்
கண்டாரா விருப்பு எய்தக் காவலனார் காதல் செய்நாள்
7.4.155
3903 நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும்
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய்
ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும்
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்
7.4.156
3904 திருவாரூர் தனை நினைந்து சென்று தொழுவேன் என்று
மரு ஆர்வத் தொண்டர் உடன் வழி கொண்டு செல்பொழுதில்
ஒருவா நண் புள்ளுருக உடன் எழுந்து கை தொழுது
பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார்
7.4.157
3905 வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய்
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன
ஒன்றுநீர் வருந்தாதே உமது பதியின் கண் இருந்து
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார்
7.4.158
3906 ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர்
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலர்
தேரூரும் நெடும் வீதித் திருவாரூர்க்கு எழுந்து அருள
நேரூரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார்
7.4.159
3907 மன்னவனார் அது மொழிய வன்தொண்டர் எதிர் மொழிவார்
என்னுயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார்
இன்னருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச
7.4.160
3908 மற்றவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள் தமை அழைத்து
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன்புகுந்த
நற்பெரும் பண்டார நானா வருக்கம் ஆன வெலாம்
பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவரப் பண்ணும் என
7.4.161
3909 ஆங்கவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள்
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணிப்பூண் துகில் வருக்கம்
ஞாங்கர் நிறை விரையுறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்பத்
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலியக் கொண்டு அணைந்தார்
7.4.162
3910 மற்றவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவு இட்டு முனைப்பாடித் திருநாடார்
பொற் பதங்கள் பணிந்து அவரைத் தொழுது எடுத்துப் புணை அலங்கல்
வெற்புயர் தோள் உறத் தழுவி விடை அளித்தார் வன்தொண்டர்
7.4.163
3911 ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று
காரூரும் மலைநாடு கடந்து அருளிக் கல் சுரமும்
நீரூரும் கான் யாரும் நெடும் கானும் பலகழிய
சீரூரும் திருமுருன் பூண்டி வழிச்செல்கின்றார்
7.4.164
3912 திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின் கண்
பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பதலால்
ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்
பெருகருளால் தாம் கொடுக்கப் பெறுவதற்கோ அது அறியோம்
7.4.165
3913 வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய் சென்று
வன்தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள
அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவப் படையாய்ச்
சென்று அவர் தாம் வரும் வழியில் இருபாலும் செயிர்த்து எழுந்து
7.4.166
3914 வில் வாங்கி அலகம்பு விசை நாணில் சந்தித்துக்
கொல்வோம் இங்கு இட்டுப்போம் எனக் கோபத்தால் குத்தி
எல்லையில் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார்
7.4.167
3915 ஆரூரர் தம்பால் அவ்வேடுவர் சென்று அணையாதே
நீரூருஞ் செஞ்சடையார் அருளினால் நீங்க அவர்
சேரூராம் திருமுருகன் பூண்டியினில் சென்று எய்திப்
போரூரு மழவிடையார் கோயிலை நாடிப் புக்கார்
7.4.168
3916 அங்கணர் தம் கோயிலினை அஞ்சலி கூப்பித் தொழுது
மங்குலுற நீண்ட திருவாயிலினை வந்து இறைஞ்சிப்
பொங்கு விருப்புடன் புக்கு வலம் கொண்டு புனித நதி
திங்கள் முடிக்கு அணிந்தவர் தம் திருமுன்பு சென்று அணைந்தார்
7.4.169
3917 உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம்
மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார்
வெருவுறவேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்கு
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம்
7.4.170
3918 பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால்
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண்ணெருங்க
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி
ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக் கொண்டார்
7.4.171
3919 கைக்கொண்டு கொடுபோம் அக் கைவினைஞர் தமை ஏவி
மைக் கொண்ட மிடற்றாரை வணங்கிப்போய்க் கொங்கு அன்று
மெய்க் கொண்ட காலினால் விரைந்து ஏகி மென் கரும்பும்
செய்க் கொண்ட சாலியுஞ்சூழ் திருவாரூர் சென்று அணைந்தார்
7.4.172
3920 நாவலர் மன்னவர் அருளால் விடை கொண்ட நரபதியார்
ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர் தமை நினைந்து
மாவலரும் சோலை மா கோதையினில் மன்னிமலைப்
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார்
7.4.173
3921 இந் நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன்தொண்டர்
பொன்னி வளநாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து
மன்னு திருக் கயிலை யினில் மத வரைமேல் எழுந்து அருள
முன்னர் வயப்பரி உகைக்கும் திருத்தொழில் பின்மொழிகின்றாம்
7.4.174
3922 மலை மலிந்த திருநாட்டு மன்னவனார் மா கடல் போல்
சிலை மலிந்த கொடித் தானைச் சேரலனார் கழல் போற்றி
நிலை மலிந்த மணிமாடம் நீள் மறுகு நான் மறை சூழ்
கலை மலிந்த புகழ்க் காழிக் கணநாதர் திறம் உரைப்பாம்
7.4.175
திருச்சிற்றம்பலம்


7.5 கணநாத நாயனார் புராணம் (3923 - 3929)

திருச்சிற்றம்பலம்

3923 ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திருமுலை அமுதுண்ட
வாழி ஞான சம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு இல்லா
ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய்
காழி மா நகர் திரு மறையவர் குலக் காவலர் கணநாதர்
7.5.1
3924 ஆய அன்பர் தாம் அணிமதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி
நாயனார்க்கு நல் திருப்பணியாயின நாளும் அன்பொடு செய்து
மேய அத் திருத் தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்குத்
தூய கைத் திருத் தொண்டினில் அவர் தமைத் துறை தொறும் பயில்விப்பார்
7.5.2
3925 நல்ல நந்தவனப் பணி செய்பவர் நறுந்துணர் மலர் கொய்வோர்
பல் பணித் தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்
அல்லும் நன் பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர்
எல்லையில் விளக்கு எரிப்பவர் திரு முறை எழுதுவோர் வாசிப்போர்
7.5.3
3926 இனைய பஃதிருப் பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அத் திருத்தொண்டின்
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிடச் செய்தே
அனைய அத்திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்பு உற வழிபடும் தொழில் மிக்கார்
7.5.4
3927 இப் பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி
மெய்ப் பெரும் திரு ஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே
முப் பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும்
ஒப்பில் காதல் கூர் உளங்களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல்
7.5.5
3928 ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும்
ஞானம் உண்டவர் புண்டரீகக் கழல் அருச்சனை நலம் பெற்றுத்
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால்வரை எய்தி
மான நற்பெரும் கணங்களுக்கு நாதராம் வழித் தொண்டின் நிலை பெற்றார்
7.5.6
3929 உலகம் உய்ய நஞ்சுண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி
அலகில் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும்
மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும் கண நாதனார் கழல் வாழ்த்தி
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம்
7.5.7
திருச்சிற்றம்பலம்


7.6 கூற்றுவ நாயனார் புராணம் (3930 - 3938)

திருச்சிற்றம்பலம்

3930 துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூலப் படையார் தம்
நன்னாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார்
பன்னா஡ள் ஈசர் அடியார்தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி
முன்னாகிய நல் திருத் தொண்டின் முயன்றார் கனந்தை முதல்வனார்
7.6.1
3931 அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடிப் படுப்பார்
பொருளின் முடிவும் காண்பரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க
மருளும் களிறு பாய் புரவி மணித்தேர் படைஞர் முதல் மாற்றார்
வெருளும் கருவி நான்கு நிறை வீரச் செருக்கின் மேலார்
7.6.2
3932 வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கிச்
சென்று தும்பைத் துறை முடித்தும் செருவில் வாகைத் திறம் கெழுமி
மன்றல் மாலை மிலைந்தவர் தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆனார்
7.6.3
3933 மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழ் அந்தணர் தம்மை வேண்ட அவரும் செம்பியர் தம்
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோ ம் முடி என்று
நல்காராகிச் சேரலன் தன் மலை நாடு அணைய நண்ணுவார்
7.6.4
3934 ஒருமை உரிமைத் தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியைப்
பெருமை முடியை அருமை புரி காவல் பேணும் படி இருத்தி
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்தியபின்
வரும் ஐ உறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார்
7.6.5
3935 அற்றை நாளில் இரவின் கண் அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் எனப் பரவும்
பற்று விடாது துயில் வோர்க்குக் கனவில் பாத மலர் அளிக்க
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனிப் புரந்தார்
7.6.6
3936 அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுதத் திரு நடம் செய்
தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித் தனியே
இம்பர் ஞாலம் களி கூர எய்தும் பெரும் பூசனை இயற்றி
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடிசேர்ந்தார்
7.6.7
3937 காதல் பெருமைத் தொண்டின் நிலைக் கடல் சூழ் வையம் காத்து அளித்துக்
கோதங்ககல முயல் களந்தைக் கூற்றனார் தம் கழல் வணங்கி
நாத மறை தந்து அளித்தாரை நடைநூல் பாவில் நவின்று ஏத்தும்
போதம் மருவிப் பொய் அடிமை இல்லாப் புலவர் செயல் புகல்வாம்
7.6.8
3938 சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திருநாள்
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர்ப் பாதம்
யானும் பரவித் தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்குகூன்
7.6.9

திருச்சிற்றம்பலம்

சருக்கம் 7 / வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் முற்றிற்று.


சருக்கம் 8 (பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் )

8.1 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் (3939 - 3941)
8.2 புகழ்ச் சோழ நாயனார் புராணம் (3942 .- 3982 )
8.3 நரசிங்க முனையரைய நாயனார் புராணம் (3983 - 3991)
8.4 அதிபத்த நாயனார் புராணம் (3992 - 4011 )
8.5 கலிக்கம்ப நாயனார் புராணம் (4012 - 4021 )
8.6 கலிய நாயனார் புராணம் (4022 - 4038 )
8.6 சத்தி நாயனார் புராணம் (4039 - 4044)
8.7 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் (4045- 4054)

8. 1 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் (3939 - 3941)

திருச்சிற்றம்பலம்

3939 செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்
மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்
பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்
8.1.1
3940 பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால்
சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற
பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்
மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள்
8.1.2
3941 ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம்
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார்
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த
பூம் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்
8.1.3
திருச்சிற்றம்பலம்


8.2 புகழ்ச் சோழ நாயனார் புராணம் (3942 .- 3982 )

திருச்சிற்றம்பலம்

3942 குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி
நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்
மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர்
உலகில் வளர் அணிக்கெல்லாம் உள்ளும் உறையூராம் உறையூர்
8.2.1
3943 அளவில் பெரும் புகழ் நகரம் அதனில் அணிமணி விளக்கும்
இள வெயிலின் சுடர்படலை இரவு ஒழிய எறிப்பனவாய்க்
கிளர் ஒளி சேர் நெடு வானப் பேர் ஆற்றுக் கொடு கெழுவும்
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம்
8.2.2
3944 நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த
போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய்
மாக நிறைந்திட மலிந்த வரம்பில் பல பொருள் பிறங்கும்
ஆகரம் ஒத்து அளவில் ஆவண வீதிகள் எல்லாம்
8.2.3
3945 பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும்
போர் முக வெம் கறை அடியும் புடையினம் என்று அடையவரும்
சோர் மழையின் விடு மதத்துச் சுடரு நெடுமின் ஓடைக்
கார் முகிலும் பல தெரியா களிற்று நிரைகள் எல்லாம்
8.2.4
3946 படுமணியும் பரிச் செருக்கும் ஒலி கிளரப் பயில் புரவி
நெடு நிரை முன் புல்லுண் வாய் நீர்த் தரங்க நுரை நிவப்ப
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால்
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம்
8.2.5
3947 துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும் திருவும்
விளைத்த அமுதும் தருவும் விழுமணியும் கொடுபோத
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பரூர்
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலரக் கிடங்கு
8.2.6
3948 கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர்ச் சோலை
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர்க்கணை ஒண்
பார் ஏறும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர் அரிதால்
8.2.7
3949 அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார்
மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும்
சென்னி நீடு அனபாயன் திருக்குலத்து வழி முதல்வோர்
பொன்னி நதிப் புரவலனார் புகழ் சோழர் எனப் பொலிவார்
8.2.8
3950 ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்து
பருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப
திருமலர்த்தும் பேருலகும் செங்கோலின் முறை நிற்ப
அருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில்
8.2.9
3951 பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம்
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக்
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார்
8.2.10
3952 அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்று இருந்து
கொங்கரொடு குட புலத்துக் கோ மன்னர் திறை கொணரத்
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில்
மங்கல நாள் அரசு உரிமைச் சுற்றம் உடன் வந்து அணைந்தார்
8.2.11
3953 வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ்
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி
சிந்தை களி கூர்ந்து அரனார் மகிழ் திரு ஆன்நிலைக் கோயில்
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார்
8.2.12
3954 மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின் மணிபுனை பொன்
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த
ஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் பரி துலைக் கனகம்
நீளிடைவில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார்
8.2.13
3955 திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத் தொழில் அருளி
முறை புரியும் தனித் திகரி முறைநில்லா முரண் அரசர்
உறை அரணம் உளவாகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள்
8.2.14
3956 சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம்
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும்
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என
வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார்
8.2.15
3957 விளங்கு திரு மதிக் குடைக்கீழ் வீற்று இருந்து பார் அளிக்கும்
துளங்கொளி நீள் முடியார்க்குத் தொன் முறைமை நெறி அமைச்சர்
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறுவியப் பால் முறுவலிப்பார்
8.2.16
3958 ஆங்கவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்தாக
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப
ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ படை எழுந்த
பாங்கரணம் துகளாகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார்
8.2.17
3959 அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து
கடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல் செல்வார்
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக
மிடல் உடை நால் கருவியுற வெஞ்சமரம் மிக விளைத்தார்
8.2.18
3960 வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற
அளவில் அரண் அக்குறும்பில் அதிகர் கோன் அடல் படையும்
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக்
கிளர் கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தனவால் <
8.2.19
3961 கயமொடு கயம் எதிர் குத்தின
அயமுடன் அயமுனை முட்டின
வயவரும் வயவரும் உற்றனர்
வியனமர் வியல் இடம் மிக்கதே
8.2.20
3962 மலையொடு மலைகள் மலைந்தென
அலை மத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத் தெரு
கொலை மதக் கரிகொலை உற்றவே
8.2.21
3963 சூறை மாருதம் ஒத்து எதிர்
ஏறு பாய் பரி வித்தகர்
வேறு வேறு தலைப் பெய்து
சீறி ஆவி செகுத்தனர்
8.2.22
3964 மண்டு போரின் மலைப்பவர்
துண்டம் ஆயிட உற்று எதிர்
கண்டர் ஆவி கழித்தனர்
உண்ட சோறு கழிக்கவே
8.2.23
3965 வீடினார் உடலில் பொழி
நீடுவார் குருதிப் புனல்
ஓடும் யாறென ஒத்தது
கோடு போல்வ பிணக் குவை
8.2.24
3966 வானிலாவு கருங்கொடி
மேனிலாவு பருந்து இனம்
ஏனை நீள் கழுகின் குலம்
ஆன ஊணொடு எழுந்தவே
8.2.25
3967 வரிவில் கதை சக்கரம் உற்கரம் வாள்
சுரிகைப் படை சத்திகழுக் கடைவேல்
எரி முத்தலை கப்பணமெற் பயில் கோல்
முரி உற்றன உற்றன மொய்க் களமே
8.2.26
3968 வடிவேல் அதிகன் படைமாள வரைக்
கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக்
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர்
முடி நேரியனார் படை முற்றியதே
8.2.27
3969 முற்றும் பொரு சேனை முனை தலையில்
கற்றிண் புரிசைப் பதி கட்டு அழியப்
பற்றும் துறை நொச்சிப் பரிந்து உடையச்
சுற்றும் படை வீரர் துணித்தனரே
8.2.28
3970 மாறுற்ற விறல் படை வாள் அதிகன்
நூறுற்ற பெரும்படை நூழில் படப்
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு
ஏறுற்றனன் ஓடி இருஞ் சுரமே
8.2.29
3971 அதிகன் படை போர் பொருதற்றதலை
பொதியின் குவை எண்ணில போயின பின்
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா
எதிரும் கரி பற்றினர் எண்ணிலரே
8.2.30
3972 அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம்
இரணத் தொழில் விட்டு எயில் சூழ் கருவூர்
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள்
தரணித் தலைவன் கழல் சார் உறவே
8.2.31
3973 மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய்
முன் வந்த கரும் தலை மொய் குவைதான்
மின்னும் சுடர் மா முடிவேல் வளவன்
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர்
8.2.32
3974 மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார்
எண்ணில் பெருகும் தலை யாவையினும்
நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் அடுக்
கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே
8.2.33
3975 கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த
திண்டிறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளி
புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார்
8.2.34
3976 முரசுடைத்திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி
உரை சிறக்கும் புகழ்வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல்
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்துயான்
அரசு அளித்தபடி சால அழகி! தென அழிந்து அயர்வார்
8.2.35
3977 தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் சடை முடையார்
நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவரானார்
சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும்
பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார்
8.2.36
3978 என்று அருளிச் செய்து அருளி இதற்கு இசையும் படி துணிவார்
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து
மன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழி நிற்ப
வென்றி முடி என் குமரன்தனைப் புனைவீர் என விதித்தார்
8.2.37
3979 அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அதற்றிக்
கை மாற்றும் செயல்தாமே கடனாற்றும் கருத்து உடையார்
செம்மார்க்கம் தலை நின்று செந்தீ முன் வளர்ப்பித்துப்
பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை கோலத்தினில் பொலிந்தார்
8.2.38
3980 கண்ட சடைச் சிரத்தினையோர் கனகமணி கலத்து ஏந்தி
கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார்
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி
மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார்
8.2.39
3981 புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழிய
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின்
அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார்
8.2.40
3982 முரசங் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்
பிரசம் கொள் நறுந்தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப்
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி
நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம்
8.2.41
திருச்சிற்றம்பலம்


8.3 நரசிங்க முனையரைய நாயனார் புராணம் (3983 .- 3991 )

திருச்சிற்றம்பலம்

3983 கோடாத நெறி விளக்கும் குலமரபின் அரசு அளித்து
மாடாக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார்
தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி
நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர்
8.3.1
3984 இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த்
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகல
மும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டுபுரி
அம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேரு என அடைவார்
8.3.2
3985 சின விடையார் கோயில் தொறுந் திருச் செல்வம் பெருக்குநெறி
யனஇடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து
மனவிடை ஆமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு
கனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார்
8.3.3
3986 ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும்
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன்
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார்
8.3.4
3987 ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில்
மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில்
மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்த
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார்
8.3.5
3988 மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்குள்ளார்
உற்ற இகழ்ச்சியராகி ஒதுங்குவார் தமைக் கண்டு
கொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்தப்
பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார்
8.3.6
3989 சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை
ஞாலம் இகழ்ந்த அருநரகம் நண்ணாமல் எண்ணுவார்
பாலணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்து
மேலவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார்
8.3.7
3990 இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும்
செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப்
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சோர்ந்து
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார்
8.3.8
3991 விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலை
உடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித்
தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும்
கடனாகை அதிபத்தர் கடனாகைக் கவின் உரைப்பாம்
8.3.9
திருச்சிற்றம்பலம்


8.4 அதிபத்த நாயனார் புராணம் (3992.- 4011 )

திருச்சிற்றம்பலம்

3992 மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின்
தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப்
பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல்
நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம்
8.4.1
3993 தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த
தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ்
காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த
மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு
8.4.2
3994 பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து
திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும்
தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல்
கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால்
8.4.3
3995 நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த
பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக்
கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும்
ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர்
8.4.4
3996 அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில்
பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர்
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த
தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி
8.4.5
3997 புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை
அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல்
வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள்
8.4.6
3998 உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த
கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து
மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும்
8.4.7
3999 வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும்
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும்
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும்
அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய
8.4.8
4000 அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து
மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார்
புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும்
வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர்
8.4.9
4001 ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள்
ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப்
பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும்
ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார்
8.4.10
4002 முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும்
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால்
8.4.11
4003 வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால்
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார்
8.4.12
4004 மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம்
தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று
மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார்
8.4.13
4005 சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச்
சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார்
8.4.14
4006 ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத்
தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால்
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்
பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார்
8.4.15
4007 வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற
ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத்
தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப்
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார்
8.4.16
4008 என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர்
பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால்
ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும்
சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார்
8.4.17
4009 அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில்
புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த
இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல்
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ
8.4.18
4010 பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை
நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து
அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார்
8.4.19
4011 தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி
மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும்
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்
8.4.20
திருச்சிற்றம்பலம்


8.5 கலிக்கம்ப நாயனார் புராணம் (4012 - 4021 )

திருச்சிற்றம்பலம்

4012 உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனைத்
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வனரும் தன்மையதாய்
வரும் மஞ்சு உறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில்
பெருமை உலகு பெற விளங்கும் மேல் பால் பெண்ணாகட மூதூர்
8.5.1
4013 மற்றப் பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்
கற்றைச் சடையார் கழற்காதலுடனே வளர்ந்த கருத்து உடையார்
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்று இல்லார்
8.5.2
4014 ஆன அன்பர் தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால்
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார்
8.5.3
4015 அன்ன வகையால் திருத்தொண்டு புரியுநாளில் அங்கு ஒரு நாள்
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர் தமை எல்லாம்
தொன்மை முறையே அமுது செயத் தொடங்கு விப்பார் அவர் தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார்
8.5.4
4016 திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறி அமுதும் புனிதத் தண்ணீர் உடன் மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீர் அளிக்க 4016-3
விரும்பு கணவர் பெருந்தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின் கண்
8.5.5
4017 முன்பு தமக்குப் பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய்
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும்
அன்பர் உடனே திருவேடம் தாங்கி அணைந்தார் ஒருவர் தாம்
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெரும் தகையார்
8.5.6
4018 கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல்
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர்
மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துள் கருதுவார்
8.5.7
4019 வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலை
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை
தறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார்
8.5.8
4020 விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து
துளக்கில் சிந்தை உடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள்நிழல் கீழ் அடியாருடன் கலந்தார்
8.5.9
4021 ஓத மலிநீர் விடம் உண்டார் அடியார் என்றுணரா
மாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கி
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த
காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம்
8.5.10
திருச்சிற்றம்பலம்


8.6 கலிய நாயனார் புராணம் (4022 - 4038 )

திருச்சிற்றம்பலம்

4022 பேருலகில் ஓங்கு புகழ்ப் பெரும் தொண்டை நன்னாட்டு
நீருலவும் சடைக் கற்றை நிருத்தர் திருப்பதியாகும்
காருலவும் மலர்ச் சோலைக் கன்னிமதில் புடை சூழ்ந்து
தேருலவு நெடு வீதி சிறந்த திருஒற்றியூர்
8.6.1
4023 பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண்
வேடம் உடையவர் பொருள் போல் ஆகாசவெளி மறைக்கும்
ஆடு கொடி மணி நெடுமாளிகை நிரைகள் அலை கமுகின்
காடனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும்
8.6.2
4024 பன்னு திருப்பதிக இசைப் பாட்டு ஓவா மண்டபங்கள்
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி
செம் நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திருமடங்கள்
8.6.3
4025 கெழு மலர் மாதவி புன்னை கிளைஞாழல் தளை அவிழும்
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை
முழு மணமே முந் நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும்
செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு
8.6.4
4026 எயிலணையும் முகில் முழக்கும் எறிதிரை வேலையின் முழக்கும்
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியாப் பதி அதனுள்
வெயில் அணி பல் மணி முதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும்
தயில வினைத் தொழில் மரபில் சக்கரப் பாடி தெருவு
8.6.5
4027 அக்குலத்தின் செய்தவத்தால் அவனி மிசை அவதரித்தார்
மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார்
தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலை நின்றார்
முக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத் தொண்டின் நெறி முயல்வார்
8.6.6
4028 எல்லையில் பல் கோடி தனத்து இறைவராய் இப்படித்தாம்
செல்வ நெறிப் பயன் அறிந்து திருஒற்றியூர் அமர்ந்த
கொல்லை மழவிடையார் தம் கோயிலின் உள்ளும் புறம்பும்
அல்லும் நெடும் பகலும் இடும் திருவிளக்கின் அணி விளைத்தார்
8.6.7
4029 எண்ணில் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வரப்
புண்ணிய மெய்த் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினைச் செயல் ஓவி
மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்தாக
8.6.8
4030 திருமலி செல்வத்துழனி தேய்ந்து அழிந்த பின்னையுந்தம்
பெருமை நிலைத் திருப் பணியில் பேராத பேராளர்
வருமரபில் உள்ளோர் பால் எண்ணெய் மாறிக் கொணர்ந்து
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார்
8.6.9
4031 வளம் உடையார் பால் எண்ணெய் கொடுபோய் மாறிக் கூலி
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாறத்
தளருமனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும்
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார்
8.6.10
4032 செக்கு நிறை எள் ஆட்டிப் பதம் அறிந்து தில தயிலம்
பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும்
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை
மிக்க திரு விளக்கு இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்
8.6.11
4033 அப் பணியால் வரும் பேறு அவ் வினைஞர் பலர் உளராய்
எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே
ஒப்பில் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்ட அதன் பின்
செப்பருஞ் சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார்
8.6.12
4034 மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக் கொண்டு வள நகரில்
தனம் அளிப்பார் தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி
சின விடையார் திருக் கோயில் திரு விளக்குப் பணிமுட்டக்
கன வினும் முன்பு அறியாதார் கை அறவால் எய்தினார்
8.6.13
4035 பணி கொள்ளும் படம் பக்க நாயகர்தம் கோயிலினுள்
அணி கொள்ளும் திருவிளக்குப் பணிமாறும் அமையத்தில்
மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் எனத்
துணிவுள்ளங் கொள நினைந்து அவ் வினை முடிக்கத் தொடங்குவார்
8.6.14
4036 திரு விளக்குத் திரி இட்டு அங்கு அகல் பரப்பிச் செயல் நிரம்ப
ஒருவிய எண் ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார்
பெருகு திருக் கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி
8.6.15
4037 மற்றவர் தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்து அருள
உற்றவூறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல்
பற்றிய அஞ்சலியினர் ஆய் நின்றவரைப் பரமர் தாம்
பொற்புடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள் புரிந்தார்
8.6.16
4038 தேவர் பிரான் திருவிளக்குச் செயல் முட்ட மிடறு அரிந்து
மே வரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில்
யாவர் எனாது அரன் அடியார் தமை இகழ்ந்து பேசினரை
நாவரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம்
8.6.17
திருச்சிற்றம்பலம்


8.7 சத்தி நாயனார் புராணம் (4039- 4045 )

திருச்சிற்றம்பலம்

4039 களமர் கட்ட கமலம் பொழிந்த தேன்
குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை
அளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்
8.7.1
4040 வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம்
பெரும் சிறப்புப் பெறப் பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
அரும் சிலம்பு அணி சேவடிக்காள் செய்வார்
8.7.2
4041 அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை
இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை
வைத்த நாவை வலித்து அரி சத்தியால்
சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார்
8.7.3
4042 தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்கும் தண்டு ஆயத்தினால் வலித்து
தாங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்
ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர்
8.7.4
4043 அன்னதாகிய ஆண்மைத் திருப்பணி
மன்னு பேருலகத்தில் வலி உடன்
பண்னெடும் பெருநாள் பரிவால் செய்து
சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர்
8.7.5
4044 ஐயம் இன்றி அரிய திருப்பணி
மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர்
வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்
8.7.6
4045 நாயனார் தொண்டரை நலம் கூறலார்
சாய நாவரி சத்தியார் தாள் பணிந்து
ஆய மா தவத்து ஐயடிகள் எனும்
தூய காடவர் தம் திறம் சொல்லுவாம்
8.7.7
திருச்சிற்றம்பலம்


8.8 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் (4046- 4054 )

திருச்சிற்றம்பலம்

4046 வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச்
செய்ய சடையார் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார்
ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார்
8.8.1
4047 திருமலியும் புகழ் விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும்
பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துப்
தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில்
8.8.2
4048 மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம்
பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் அரசாட்சி
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழச்சி
நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார்
8.8.3
4049 தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண்
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்களான எலாம்
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த
வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார்
8.8.4
4050 பெருத்தெழு காதலினால் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த்
திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை
நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார்
8.8.5
4051 அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி
இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச்
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார்
8.8.6
4052 இந்நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி
பன்னெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ்
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார்
கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார்
8.8.7
4053 பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த
ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக்
கையணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய
செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம்
8.8.8
4054 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
உளத்தில் ஒரு துளக்கம் இலேம் உலகு உய்ய இருண்ட திருக்
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு
வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெரும் திருவாரூர்க்
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார்
8.8.9
திருச்சிற்றம்பலம்

பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் முற்றிற்று.


சருக்கம் 9 ( கறைக் கண்டன் சருக்கம் )

9.1 கணம்புல்ல நாயனார் புராணம் (4055-4062)
9.2 காரிநாயனார் புராணம் (4063 - 4068 )
9.3 நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்(4069- 4078)
9.4 வாயிலார் நாயனார் புராணம் (4079 - 4088 )
9.5 முனையடுவார் நாயனார் புராணம் (4089 - 4095 )

9. 1 கணம்புல்ல நாயனார் புராணம் (4055-4062)

திருச்சிற்றம்பலம்

4055 திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கி
பெருக்கு வட வெள் ஆற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில்
வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும்
இருக்கு வேளூர் என்பது இவ் உலகில் விளங்கும் பதி
9.1.1
4056 அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்த
எப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார்
ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார்
மெய் பொருளாவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார்
9.1.2
4057 தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று
ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயிலலுள் எரித்து
நா ஆரப் பரவுவார் நல்குரவு வந்து எய்தத்
தேவதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார்
9.1.3
4058 தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள்
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த
வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க
இல்லிடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில்
9.1.4
4059 ஆய செயல் மாண்டதற்பின் அயல் அவர் பால் இரப்பஞ்சி
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து
மேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கு எரித்தார் துளக்கறு மெய்த் தொண்டனார்
9.1.5
4060 இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள்
மெய் வருந்தி அரிந்து எடுத்துக் கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இப்பணி ஒழியார்
அவ்வரிபுல் வினைமாட்டி அணி விளக்காயிட எரிப்பார்
9.1.6
4061 முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல்
மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை மெய்யான
அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை
என்புருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார்
9.1.7
4062 தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப்
பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து
எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார்
9.1.8
4063 மூரியார் கலி உலகின் முடி இட்ட திருவிளக்குப்
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி
வேரியார் மலர்ச் சோலை விளங்கு திருக்கடவூரில்
காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம்
9.1.9
திருச்சிற்றம்பலம்


9.2 காரிநாயனார் புராணம் (4064 - 4068 )

திருச்சிற்றம்பலம்

4064 மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்
குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார்
9.2.1
4065 அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கி
கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற நிதிக் குவை கொண்டு
வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச்
சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார்
9.2.2
4066 யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பத்
தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினர் ஆய்
9.2.3
4067 ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி
ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினராய் அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போலும் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்
9.2.4
4068 வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும்
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால்
வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்
9.2.5
திருச்சிற்றம்பலம்


9.3 நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம் (4069 - )

திருச்சிற்றம்பலம்

4064 தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலை
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு அடைந்த
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால்
9.3.1
4070 அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்து
சொன்னாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட
பொன்னாரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார்
9.3.2
4071 ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்ற
சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப்
பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம்
காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் நடக்கின்றார்
9.3.3
4072 எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர்
படுத்த நெடுங் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும்
அடுத்து அமர் செய் வய்வர் கரும் தலையும் மலையும் அலை செந்நீர்
மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக
9.3.4
4073 வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும்
கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும்
வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச்
சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க
9.3.5
4074 தீயுமிழும் படை வழங்கும் செருக்களத்து முருக்கும் உடல்
தோயும் நெடும் குறுதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடி
போய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப்
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க
9.3.6
4075 இனைய கடுஞ் சமர் விளைய இகலுழந்த பறந்தலையில்
பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக் குடைந்து
முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப்
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து
9.3.7
4076 வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கு அரசியார்
களப மணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார்
இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம்
அளவில் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார்
9.3.8
4077 திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்க
உரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார்
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே
பரசு பெரும் சிவலோகத்தில் இன் புற்று பணிந்து இருந்தார்
9.3.9
4078 பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராந்
தென்மதுரை மாறனார் செம் கமலக் கழல் வணங்கிப்
பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத்
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலைதொழுவாம்
9.3.10
திருச்சிற்றம்பலம்


9.4 வாயிலார் நாயனார் புராணம் (4079 - )

திருச்சிற்றம்பலம்

4079 சொல் விளங்கு சீர்த் தொண்டைநல் நாட்டின் இடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெரும் குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயிலா புரி
9.4.1
4080 நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத்
தேடும் அப்பெரும் சேம வைப்பாம் என
ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி
மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால்
9.4.2
4081 காலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்து
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும்
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா
சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம்
9.4.3
4082 தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத்
துவள் பதாகை நுழைந்து அணை தூமதி
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி
உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால்
9.4.4
4083 வீதி எங்கும் விழா அணிக் காளையர்
தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர்
ஓதி எங்கும் ஒழியா அணிநிதி
பூதி எங்கும் புனை மணிமாடங்கள்
9.4.5
4084 மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல
நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்
9.4.6
4085 வாயிலார் என நீடிய மாக்குடித்
தூய மா மரபின் முதல் தோன்றியே
நயனார் திருத்தொண்டின் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார்
9.4.7
4086 மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி
உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்
9.4.8
4087 அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும்
நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே
திகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப்
புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார்
9.4.9
4088 நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால்
பேராத நெறி பெற்ற பெருந் தகையார் தமைப்போற்றிச்
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம்
9.4.10
திருச்சிற்றம்பலம்


9.5 முனையடுவார் நாயனார் புராணம் (4089- 4095)

திருச்சிற்றம்பலம்

4089 மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழுந்தேன்
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும்
சேறு நறுவாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர்
9.5.1
4090 விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர்
களம் கொள் மிடற்றுக் கண் நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும்
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார்
9.5.2
4091 மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர் வந்து தம்பால் மா நிதியம்
ஆற்றும் பரிசு பேசினால் அதன் நடுவு நிலை வைத்து
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்றுச் சென்று எறிந்து
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார்
9.5.3
4092 இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள்
சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனியுள்ளுறுத்த கலந்து அளித்து
மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார்
9.5.4
4093 மற்றிந் நிலை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி
உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால்
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார்
முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன்னுடையார்
9.5.5
4094 யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார் தமக்கு இன்பம்
மேவ அளிக்கும் முனை அடுவார் விரைப் பூம் கமலக் கழல் வணங்கி
தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செம்கோல் முறை புரியும்
காவல் பூண்ட கழற் சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்
9.5.6
4095 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
செறிவுண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும்
குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால்
வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்க
பறியுண்டவர் எம்பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே
9.5.7
திருச்சிற்றம்பலம்

கறைக் கண்டன் சருக்கம் முற்றிற்று.


சருக்கம் 10 ( கடல் சூழ்ந்த சருக்கம் )

10.1 கழற்சிங்க நாயனார் புராணம் (4096- 4107)
10.2 இடங்கழி நாயனார் புராணம் (4108 - 4119 )
10.3 செருத்துணை நாயனார் புராணம் (4120-4126)
10.4 புகழ்த்துணை நாயனார் புராணம் (4127 -4133 )
10.5 கோட்புலி நாயனார் புராணம் (4134 -4146 )

10. 1 கழற்சிங்க நாயனார் புராணம் (4096- 4108)

திருச்சிற்றம்பலம்

4096 படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மைக்
கொடி நெடுந் தானை மன்னர் கோக் கழற்சிங்கர் என்பார்
10.1.1
4097 கடவார் குரிச்஢லாராங் கழல் பெருஞ் சிங்கனார் தாம்
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று
கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு
நாடற நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில்
10.1.2
4098 குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று
தவலரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய்த் தொண்டு செய்வார்
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்திப்
பவம் அறுத்தாட் கொள் வார்தம் கோயில் உள் பணிய புக்கார்
10.1.3
4099 அரசியல் ஆயத் தோடும் அங்கணர் கோயில் உள்ளால்
முரசுடைத்தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்
விரை செறிமலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார் தம் உள்
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனித் தேவி மேவி
10.1.4
4100 கோயிலை வலம் கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம்
சாயல் மா மயிலே போல் வாள் தனித் தனி கண்டு வந்து
தூய மென் பள்ளித் தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள்
10.1.5
4101 புதுமலர் மோந்த போதில் செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று
கதும் என ஓடிச்சென்று கருவி கைக் கொண்டு பற்றி
மதுமலர் திருவொப்பாள் தன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார்
10.1.6
4102 வார்ந்து இழி குருதி சோர மலர்க் கருங்குழலும் சோரச்
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் எனத் துளங்கி மண்ணில்
சேர்ந்து அயர்ந்து உரிமைத் தேவி புலம்பிடச் செம்பொன் புற்றுள்
ஆர்ந்த பேர் ஒளியைக் கும்பிட்டு அரசரும் அணைய வந்தார்
10.1.7
4103 வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம்பு ஒன்று பார்மிசை வீழ்ந்தது என்ன
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இவ்வண்டத்து உள்ளோர்
இந்த வெவ்வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை
10.1.8
4104 அந்நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர்
முன் உறு நிலைமை அங்குப் புகுந்தது மொழிந்தபோது
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்குத் தண்டம்
தன்னை அவ்வடைவே அன்றோ தடிந்திடத் தகுவது என்று
10.1.9
4105 கட்டிய உடைவாள் தன்னை உருவி அக்கமழ் வாசப்பூத்
தொட்டு முன் எடுத்த கையாம் முன்படத் துணிப்பது என்று
பட்டமும் அணிந்து காதல் பயில் பெரும் தேவியான
மட்டவிழ் குழலாள் செம்கை வளை ஒடும் துணித்தார் அன்றே
10.1.10
4106 ஒரு தனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்குஒலி புலி மேல் பொங்க
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச மலர் மழை பொழிந்தது அன்றே
10.1.11
4107 அரிய அத் திருத் தொண்டு ஆற்றும் அரசனார் அளவில் காலம்
மருவிய உரிமை தாங்கி மால் அயன் அரியார் மன்னும்
திரு அருள் சிறப்பினாலே செய்ய சே அடியின் நீழல்
பெருகிய உரிமை ஆகும் பேரருள் எய்தினாரே
10.1.12
4108 வையகம் நிகழ்க் காதல் மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும்
மெய்யருள் உடைய தொண்டர் செய்வினை விளம்பல் உற்றாம்
10.1.13
திருச்சிற்றம்பலம்


10.2 இடங்கழி நாயனார் புராணம் (4109 - 4119)

திருச்சிற்றம்பலம்

4109 எழுந்திரை மா கடல் ஆடை இரு நிலமா மகள் மார்பில்
அழுந்து பட எழுதும் இலைத் தொழில் தொய்யில் அணியினவாம்
செழுந்தளிரின் புடை மறைந்த பெடை களிப்பத் தேமாவின்
கொழுந் துணர் கோதிக் கொண்டு குயில் நாடு கோனாநாடு
10.2.1
4110 முருகுறு செங்கமல மதுமலர் துதைந்த மொய் அளிகள்
பருகுறு தெண் திரை வாவிப் பயில் பெடையோடு இரை அருந்தி
வருகுறு தண் துளி வாடை மறைய மாதவிச் சூழல்
குருகுறங்கும் கோனாட்டுக் கொடி நகரம் கொடும்பாளூர்
10.2.2
4111 அந் நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து
மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பாக்கொங்கின்
பன்னு துலைப் பசும் பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த
பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபில் குடி முதலோர்
10.2.3
4112 இடங்கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார்
அடங்கலர் முப்புரம் எரித்தார் அடித்தொண்டின் நெறி அன்றி
முடங்கு நெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார்
10.2.4
4113 சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப
மை வளரும் திருமிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும்
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதிவழிமேல் மேல் விளங்க
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில்
10.2.5
4114 சங்கரன் தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார்
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன்
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய்தொழில் முட்டப்
பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது
10.2.6
4115 அரசர் அவர் பண்டாரத்து அந்நாட்டின் நெல் கூட்டின்
நிரை செறிந்த புரிபலவா நிலைக் கொட்ட காரத்தில்
புரை செறி நள்ளிருளின் கண் புக்கு முகந்து எடுப்பவரை
முரசு எறி காவலர் கண்டு பிடித்து அரசன் முன் கொணர்ந்தார்
10.2.7
4116 மெய்த்தவரைக் கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும்
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட
இத் தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கிப்
பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார்
10.2.8
4117 நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றிக்
குறைவு இல் நிதிப் பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும்
பறையறைப் பண்ணுவித்தார் படைத்த நிதிப்பயன் கொள்வார்
10.2.9
4118 எண்ணில் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள
உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டித்
தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப
மண்ணில் அருள் புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார்
10.2.10
4119 மை தழையும் மணி மிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில்
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியாச்
செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம்
10.2.11
திருச்சிற்றம்பலம்


10.3 செருத்துணை நாயனார் புராணம் (4120 - 4126)

திருச்சிற்றம்பலம்

4120 உள்ளும் புறம்பும் குலமரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வக் குலபதியாம்
தெள்ளும் திரைகள் மதகு தொறும் சேலும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருக நாட்டுத் தஞ்சாவூர்
10.3.1
4121 சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த
வேரி மலர்ந்த பூங்கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் எனப்
பாரில் நிகழ்ந்த செருத் துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார்
10.3.2
4122 ஆன அன்பர் திருவாரூர் ஆழித் தேர்வித்தகர் கோயில்
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலினுள்
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கிக்
கூனல் இளவெண் பிறைமுடியார் தொண்டு பொலியக் குலவு நாள்
10.3.3
4123 உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்தது ஒரு
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித் தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி
10.3.4
4124 கடிது முற்றி மற்றவள் தன் கருமென் கூந்தல் பிடித்து ஈர்த்து
படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றி பரமர் செய்ய சடை
முடியில் ஏறும் திருப்பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கைத்
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்
10.3.5
4125 அடுத்த திருத் தொண்டு உலகறியச் செய்த அடல் ஏறு அனையவர்தாம்
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமைத் தொண்டு கடல்
உடுத்த உலகில் நிகழச் செய்து உய்ய செய்ய பொன் மன்றுள்
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார்
10.3.6
4126 செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித் தாமம்
அங்கண் எடுத்து மோந்த அதற்கு அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணி மூக்கு அரிந்த செருத் துணையார் தூய கழல் இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம்
10.3.7
திருச்சிற்றம்பலம்


10.4 புகழ்த்துணை நாயனார் புராணம் (4127 - 4133 )

திருச்சிற்றம்பலம்

4127 செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்
அருவரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு
ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்துப் பரந்து ஓங்கிப்
பொருவரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார்
10.4.1
4128 தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள்
பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும்
எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் என்று இராப் பகலும்
கொங்கார் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார்
10.4.2
4129 மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக்
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார்
10.4.3
4130 சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய
அங்கணனும் களவின்கண் அருள் புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார்
10.4.4
4131 பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து
முற்றுஉணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களி கூர்ந்தார்
10.4.5
4132 அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே
இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்
மின்னார் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத்தொழில் செய்து
பொன்னாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார்
10.4.6
4133 பந்தணையும் மெல் விரலாள் பாகத்தார் திருப் பாதம்
வந்தணையும் மனத் துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி
சந்தணியும் மணிப் புயத்துத் தனவீரராம் தலைவர்
கொந்தணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம்
10.4.7
திருச்சிற்றம்பலம்


10.5 கோட்புலி நாயனார் புராணம் (4134- 4146)

திருச்சிற்றம்பலம்

4134 நலம் பெருகும் சோணாட்டு நாட்டி யத்தான் குடி வேளாண்
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார்
தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்றுப்
புலம் பெருகத் துயர் விளைவிப்பப் போர் விளைத்துப் புகழ் விளைவிப்பார்
10.5.1
4135 மன்னவன்பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும்
பிஞ்ஞகர் தம் கோயில் தொறும் திரு அமுதின் படிபெருகச்
செந்நெல் மலைக் குவடு ஆகச் செய்து வரும் திருப்பணியே
பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள்
10.5.2
4136 வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனைமேல் செல்கின்றார்
பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல்
வாய்ந்த கூடவை கட்டி வழிக் கொள்வார் மொழிகின்றார்
10.5.3
4137 தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே
எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க
சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையாக் கலி என்று
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனைமேல்
10.5.4
4138 மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம்
உற்றலும் அச் சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில்
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்துக்
குற்றம் அறப் பின் கொடுப்போம் எனக் கூடு குலைத்து அழித்தார்
10.5.5
4139 மன்னவன் தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்பால்
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர்
அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே
துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய்
10.5.6
4140 எதிர் கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து
மதி தங்கு சுடர் மணி மாளிகையின் கண் வந்து அணைந்து
பதி கொண்ட சுற்றத் தார்க்கு எல்லாம் பைந் துகில் நிதியம்
அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழைமின்கள் என்று உரைத்து
10.5.7
4141 எல்லாரும் புகுந்த அதன்பின் இருநியம் அளிப்பார் போல்
நல்லார்தம் பேரோன் முன் கடை காக்க நாதன் தன்
வல்லாணை மறுத்து அமுதுபடி அழைத்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ எனக் கனன்று கொலைபுரிவார்
10.5.8
4142 தந்தையார் தாயார் மற்றுடன் பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும்
எந்தையார் திருப்படி மற்று உண்ண இசைந்தார் களையும்
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினைப் பவம் துணிப்பார்
10.5.9
4143 பின் அங்குப் பிழைத்த ஒரு பிள்ளையைத் தம் பெயரோன் அவ்
வன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என
இந்நெல் உண்டாள் முலைப்பால் உண்டது என எடுத்து எறிந்து
மின்னல்ல வடிவாளால் இரு துணியாய் விழ ஏற்றார்
10.5.10
4144 அந் நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று
உன்னுடைய கை வாளால் உறுபாசம் அறுத்த கிளை
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணையப் புகழோய் நீ
இந்நிலை நம்முடன் அணைக என்றே எழுந்து அருளினார்
10.5.11
4145 அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த
கொத்து அலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய் பணிவார் தம் பரிசினையாம் பகருவாம்
10.5.12
4146 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
மேவரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ
ஆவதும் ஓர்பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே
நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த
சேவடிப் போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தனவால்
10.5.13
திருச்சிற்றம்பலம்

கடல் சூழ்ந்த சருக்கம் முற்றிற்று.


சருக்கம் 11: பத்தராய்ப் பணிவார் சருக்கம் (4147- 4170)

11.1 பத்தாராய்ப் பணிவார் புராணம் (4147-4154)
11.2 பரமனையே பாடுவார் புராணம் (4155 - 4156 )
11.3 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் (4157 )
11.4 திருவாரூர் பிறந்தார் புராணம் (4158 - 4159 )
11.5 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் (4160 - 4162 )
11.6 முழுநீறு பூசிய முனிவர் புராணம் (4163 - 4168)
11.7 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் (4169 - 4170 )


11. 1 பத்தாராய்ப் பணிவார் புராணம் (4147-4154)

திருச்சிற்றம்பலம்

4147 ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால்
கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று
ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார்
11.1.1
4148 தாவரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து
பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார்
மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார்
11.1.2
4149 அங்கணனை அடியாரை ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார்
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள்
தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார்
11.1.3
4150 யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால்
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால்
11.1.4
4151 சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய்
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால்
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார்
செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள்
11.1.5
4152 ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரை
மாசிலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக்
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார்
11.1.6
4153 நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை
குன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார்
11.1.7
4154 சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால்
பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார்
10.1.8
திருச்சிற்றம்பலம்


11.2 பரமனையே பாடுவார் புராணம் (4155 - 4156 )

திருச்சிற்றம்பலம்

4155 புரம் மூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை
பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்
11.2.1
4156 தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன
மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக
ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்
11.2.2
திருச்சிற்றம்பலம்


11.3 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் (4157 )

திருச்சிற்றம்பலம்

4157 காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து
பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து
ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள்
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்
11.3.1
திருச்சிற்றம்பலம்


11.4 திருவாரூர் பிறந்தார் புராணம் (4158 - 4159 )

திருச்சிற்றம்பலம்

4158 அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்
மருவாருங் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ
11.4.1
4159 திருக் கயிலை வீற்று இருந்த சிவபெருமான் திருக் கணத்தார்
பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம் பொறி அடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே
11.4.2
திருச்சிற்றம்பலம்


11.5 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் (4160 - 4162 )

திருச்சிற்றம்பலம்

4160 எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து
மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே
அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர்
11.5.1
4161 தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம்
வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப்
பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ
11.5.2
4162 நாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா
நாதனை எம் பெருமானை ஞானம் ஆன
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும்
அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள்
கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல்
அறிந்தவாறு புகலல் உற்றேன்
11.5.3
திருச்சிற்றம்பலம்


11.6 முழுநீறு பூசிய முனிவர் புராணம் (4163 - 4168)

திருச்சிற்றம்பலம்

4163 ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன்
எம் பெருமான் நீர் அணிந்த வேணிக்
காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த
கற்பம் அநு கற்பம் உப கற்பம் தான் ஆம்
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி
ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம்
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது
நம் இரு வினைகள் கழிவதாக
11.6.1
4164 அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல் உவந்து
ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில் ஈன்று
அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த
சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா
எம்பெருமான் கழல் நினைந்து அங்கிட்ட தூ நீறு
இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும்
11.6.2
4165 ஆறணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு
அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த
நீரணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம்
உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச்
சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம்
அநு கற்பம் தில்லை மன்றுள்
வாரணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்கக்
கூத்தர் மொழி வாய்மை யாலே
11.6.3
4166 அடவி படும் அங்கியினில் வெந்த நீறும்
ஆனிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும்
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி
கைகள் சுட்ட எரி பட்ட நீறும்
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை
திகழும் மந்திரம் கொண்டு உண்டையாக்கி
மடம் அதனில் பொலிந்து இருந்த சிவ அங்கி
தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும்
11.6.4
4167 இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே
இரு திறமும் சுத்தி வரத் தெறித்த பின்னர்
அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை
அறிவித்த குரு நன்மை அல்லாப் பூமி
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும்
மெய்ப் புண்டரம் சந்திரனில் பாதி
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர்
அடியார் அணிவர் நன்மையாலே
11.6.5
4168 சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின்
நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
நித்த நியமத்து நிகழ் அங்கி தன்னில்
பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலி
அதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர்
முழுவதும் மெய் அணிவர் அன்றே
11.6.6
திருச்சிற்றம்பலம்


11.7 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் (4169 - 4170 )

திருச்சிற்றம்பலம்

4169 மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை
புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும்
செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே
11.7.1
4170 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத்
திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு
நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல்
கணமே உடன் செல்ல முடியாப் பேறு
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப்
பிறவியினில் செய்த தவம் பெரியவாமே
11.7.2
திருச்சிற்றம்பலம்

பத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றிற்று.


சருக்கம் 12 / மன்னிய சீர்ச் சருக்கம் (4171 - 4228 )

12.1 பூசலார் நாயனார் புராணம் (4171- 4188)
12.2 மங்கையர்க்கரசியார் புராணம் (4189- 4191 )
12.3 நேச நாயனார் புராணம் (4192- 4196)
12.4 கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் (4197 -4214 )
12.5 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் (4215 - 4226 )
12.6 சடைய நாயனார் புராணம் (4227)
12.7 இசை ஞானியார் புராணம் (4228 )

12.1 பூசலார் நாயனார் புராணம் (4171- 4188 )

திருச்சிற்றம்பலம்

4171 அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்று என மனத்தினாலே நல்ல ஆயம் தான் செய்த
நின்ற ஊர்ப் பூசலார்தம் நினைவினை உரைக்கல் உற்றார்
12.1.1
4172 உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க நான் மறை விளங்கும் மூதூர்
குல முதல் சீலம் என்றும் குறைவுஇலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊராம்
12.1.2
4173 அருமறை மரபு வாழ அப்பதி வந்து சிந்தை
தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல்மேல் சார
வருநெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மைப்
பொருள் பெறு வேதநீதிக் கலை உணர் பொலிவின் மிக்கார்
12.1.3
4174 அடுப்பது சிவன்பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொளக் கொடுத்தும் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார் இரு நிதி இன்மை எண்ணார்
12.1.4
4175 மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி
எனைத்தும் ஓர் பொருட் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்
12.1.5
4176 சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே
ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால்
காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்
12.1.6
4177 அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்
வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டு
நெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்
12.1.7
4178 தூபியும் நட்டு மிக்க சுதையும் நல்வினையும் செய்து
கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி
வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்
தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரு நாளில்
12.1.8
4179 காடவர் கோமான் கச்சிக் கல்தளி எடுத்து முற்ற
மாடெலாம் சிவனுக்கு ஆகப் பெரும் செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன்னாள்
ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி
12.1.9
4180 நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப் போந்தார்
12.1.10
4181 தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத் துயிலை நீங்கித்
திண்திறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மை
கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும்
தண் தலைச் சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான்
12.1.11
4182 அப்பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில்
எப்புடையது என்று அங்கண் எய்தினார் தம்மைக் கேட்கச்
செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார்
மெய்ப் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன்
12.1.12
4183 பூசுரர் எல்லாம் வந்து புரவலன் தன்னைக் காண
மாசிலாப் புசலார் தாம் யார் என மறையோர் எல்லாம்
ஆசில் வேதியன் இவ்வூரான் என்று அவர் அழைக்க ஓட்டான்
ஈசனார் அன்பர் தம்பால் எய்தினான் வெய்ய வேலான்
12.1.13
4184 தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு
எண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு
அண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக்
கண்டடி பணிய வந்தேன் கண் நுதல் அருள் பெற்று என்றான்
12.1.14
4185 மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்
முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
இன்னதாம் என்று சிந்தித்து எடுத்தா வாறு எடுத்துச் சொன்னார்
12.1.15
4186 அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே
புரையறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரைப் போற்றி
விரை செறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு மீண்டு தன் மூதூர்ப் புக்கான்
12.1.16
4187 அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மை
நன் பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தினோடும்
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப்
பொன் புனை மன்றுளாடும் பொன் கழல் நீழல் புக்கார்
12.1.17
4188 நீண்ட செஞ் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கி
பூண்ட அன்பிடையறாத பூசலார் பொன்தாள் போற்றி
ஆண்டகை வளவர் கோமான் உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவல் உற்றேன்
12.1.18
திருச்சிற்றம்பலம்


12.2 மங்கையர்க்கரசியார் புராணம் (4189 - 4191 )

திருச்சிற்றம்பலம்

4189 மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம்
வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே
இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார்
கழல் எம்மால் போற்றலாமே
12.2.1
4190 பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர்
போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது
யாம் என் அறிந்து தென்னர் கோமான்
மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய்
நெடும் காலம் மன்னிப் பின்னை
ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல்
அமர்ந்திருக்க அருளும் பெற்றார்
12.2.2
4191 வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி
வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும்தங்கள்
திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர்
விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி
ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு
உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார்
நேசர் திறம் பேசல் உற்றாம்
12.2.3
திருச்சிற்றம்பலம்


12.3 நேச நாயனார் புராணம் (4192 - 4196)

திருச்சிற்றம்பலம்

4192 சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்
பார் வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்பதாகும்
12.3.1
4193 அந்நகர் அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்
பல்நாக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம்
சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார்
12.3.2
4194 ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கி
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப்
பாங்குடை உடையும் கீளும் பழுதில் கோவணமும் நெய்வார்
12.3.3
4195 உடையொடு நல்ல கீளும் ஒப்பில் கோவணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால்
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி
அடைவுறு நலத்தர் ஆகி அரனடி நீழல் சேர்ந்தார்
12.3.4
4196 கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினை
செற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம்
12.3.5
திருச்சிற்றம்பலம்


12.4 கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் (4197- 4214 )

திருச்சிற்றம்பலம்

4197 துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமைச் சோணாட்டில்
அலையில் தரளம் அகில் ஒடுசந்து அணி நீர்ப் பொன்னி மணி கொழிக்கும்
குலையில் பெருகும் சந்திரத் தீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை
நிலையில் பெருகும் தருமிடைந்த நெடுந் தண் கானம் ஒன்று உளதால்
12.4.1
4198 அப் பூங்கானில் வெண்ணாவல் அதன் கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப் பூங்கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டிக் கமழ் பூங்கொத்தும் அணிந்து இறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகுமால்
12.4.2
4199 ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்குப் பெயர் ஆக
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம் பொன் திருமுடிமேல்
கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால்
மேல் நல்திரு மேற்கட்டி என விரிந்து செறியப் புரிந்து உளதால்
12.4.3
4200 நன்றும் இழைத்த சிலம்பி வலைப் பரப்பை நாதன் அடி வணங்க
சென்ற யானை அநுசிதம் என்று அதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை
அன்று கழித்த பிற்றைநாள் அடல் வெள் யானை அழித்ததால்
12.4.4
4201 எம்பிரான் தன் மேனியின் மேல் சருகு விழாமையான் வருந்தி
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில் புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கை நிலத்தில் மோதிக் குலைந்து வீழ்ந்தது ஆல்
12.4.5
4202 தறையில் புடைப்பக் கைப்புக்க சிலம்பி தானும் உயிர் நீங்க
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத யானைக்கும் வரம் கொடுத்து
முறையில் சிலபி தனைச் சோழர் குலத்து வந்து முன் உதித்து
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள் செய்து அருள நிலத்தின் கண்
12.4.6
4203 தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன்
தன்னுடைய பெரும் தேவி கமலவதி உடன் சார்ந்து
மன்னு புகழத் திருத்தில்லை மன்றாடும் மலர்ப் பாதம்
சென்னியுறப் பணிந்து ஏத்தித் திருப்படிக் கீழ் வழிபடு நாள்
12.4.7
4204 மக்கள் பேறு இன்மையினால் மாதேவி வரம் வேண்டச்
செக்கர் நெடுஞ் சடைக் கூத்தர் திரு உள்ளம் செய்தலினால்
மிக்க திருப்பணி செய்த சிலம்பிகுல வேந்து மகிழ்
அக் கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய
12.4.8
4205 கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்ப நாள் நிரம்பி
விழைவார் மகவு பெற அடுத்த வேலை அதனில் காலம் உணர்
பழையார் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கு மேல் இப் பசும் குழவி
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என் ஒள்ளிழையார்
12.4.9
4206 பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால்
உற ஆர்த்து எடுத்துத் தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி
அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அருமணியை
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள்
12.4.10
4207 தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும் புதல்வன் தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம்
மேவும் உரிமை முடி கவித்துத் தானும் விரும்பு பெரும் தவத்தின்
தாவில் நெறியைச் சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான்
12.4.11
4208 கோதை வேலர் கோச்செம் கண் சோழர் தாம் இக் குவலயத்தில்
ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார்
பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள்
காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார்
12.4.12
4209 ஆனைக் காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்நாவல் உடனே கூட நலம் சிறக்க
பால் நல் களத்துத் தம்பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார்
12.4.13
4210 மந்திரிகள் தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன்
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார்
அந்தமில் சீர்ச் சோனாட்டில் அகனாடு தொறும் அணியார்
சந்திர சேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார்
12.4.14
4211 அக் கோயில் தொறும் சிவனுக்கு அமுதுபடி முதலான
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்துத்
திக்கு அனைத்தும் தனிச் செங்கோல் முறை நிறுத்தித் தேர் வேந்தர்
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார்
12.4.15
4212 திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும்
பெருமானை அடிவணங்கி பேர் அன்பு தலை சிறப்ப
உருகா நின்று உளம் களிப்பத் தொழுது ஏத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார்
12.4.16
4213 தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கட் செம்பியர் கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளிப் புவனியின் மேல்
ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழல் கீழ்
12.4.17
4214 கருநீல மிடற்றார் செய்ய கழலடி நீழல் சேர
வருநீர்மை உடைய செங்கட் சோழர் தம் மலர்த்தாள் வாழ்த்தித்
தருநீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும்
திருநீல கண்டப் பாணர் திறம் இனிச் செப்பல் உற்றேன்
12.4.18
திருச்சிற்றம்பலம்


12.5 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் (4215 - 4226 )

திருச்சிற்றம்பலம்

4215 எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன் தன் சீர்
திருத்தகும் யாழில் இட்டுப் பரவுவார் செழுஞ்சோணாட்டில்
விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல்
பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார்
12.5.1
4216 ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று
பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக்
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து
ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார்
12.5.2
4217 மற்றவர் கருவிப் பாடல் மதுரை நீடு ஆலவாயில்
கொற்றவன் திருவுள்ளத்துக் கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம்
அற்றைநாள் கனவில் ஏவ அருள் பெரும் பாணனாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார்
12.5.3
4218 அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை பாகன்
தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே
மன் பெரும் பாணனாரும் மா மறை பாட வல்லார்
முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரைப் பாடுகின்றார்
12.5.4
4219 திரிபுரம் எரித்த வாறும் தேர்மிசை நின்ற வாறும்
கரியினை உரித்த வாறும் காமனைக் காய்ந்தவாறும்
அரி அயற்கு அரிய வாரும் அடியவர்க்கு எளிய வாறும்
பரிவினால் பாடக் கேட்டுப் பரமனார் அருளினாலே
12.5.5
4220 அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும்
சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று
சுந்தரப் பலகை முன்நீர் இடும் எனத் தொண்டர் இட்டார்
செந்தமிழ் பாணனாரும் திரு அருள் பெற்றுச் சேர்ந்தார்
12.5.6
4221 தமனியப் பலகை ஏறித் தந்திரிக் கருவி வாசித்து
உமையொரு பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி
இமையவர் போற்ற ஏகி எண்ணில் தானங்கள் கும்பிட்டு
அமரர் நாடாளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்
12.5.7
4222 கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும்
தாயின் நல்ல பெருங் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும்
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டுப் பாடக் கேட்டு அங்கண்
வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார்
12.5.8
4223 மூலத் தானத்து எழுந்து அருளி இருந்த முதல்வன் தனை வணங்கிச்
சாலக் காலம் அங்கு இருந்து தம்பிரான் தன் திரு அருளால்
சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின் நின்றும் போய்
ஆலத்தார்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி
12.5.9
4224 ஆழி சூழும் திருத் தோணி அமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசைப்பாணர்
12.5.10
4225 ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ்ப் பெரும் பாணர்க்கு
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும்
மேன்மை பதிகத்து இசை யாழில் இடப் பெற்று உடனே மேயபின்
பானற் களத்தார் பெருமணித்தில் உடனே பரமர் தாள் அடைந்தார்
12.5.11
4226 வரும் பான்மையினில் பெரும் பாணர் மலர்த்தாள் வணங்கி வயல் சாலிக்
கரும்பார் கழனித் திருநாவலூரில் சைவக் கலை மறையோர்
அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற
சுரும்பார் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல் உறுகின்றோம்
12.5.12
திருச்சிற்றம்பலம்


12.6 சடைய நாயனார் புராணம் (4227)

திருச்சிற்றம்பலம்

4227 தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர்
கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும்
எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம்
நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ
12.6.1
திருச்சிற்றம்பலம்


12.7 இசை ஞானியார் புராணம் (4228)

திருச்சிற்றம்பலம்

4228 ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால்
12.7.1
திருச்சிற்றம்பலம்

மன்னிய சீர்ச் சருக்கம் முற்றிற்று.


13. வெள்ளானைச் சருக்கம் (4229 - 4281)

திருச்சிற்றம்பலம்
4229 மூலம் ஆன திருத்தொண்டத் தொகைக்கு முதல்வராய் இந்த
ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தம்பிரான் தோழர்
காலை மலர்ச் செங்கமலக்கண் கழற்று அறிவார் உடன் கூட
ஆலம் உண்டார் திருக் கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம்
13.1.1
4230 படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி
வடிவு நம்பி ஆரூரர் செம் பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி
முடிவு இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்ததால்
13.1.2
4231 ஆரம் உரகம் அணிந்தபிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர்
ஈர மதுவார் மலர்ச்சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள்
சேரர் பெருமாள் தனை நினைந்து தெய்வப் பெருமாள் கழல் வணங்கிச்
சாரல் மலைநாடு அணைவதற்குத் தவிரா விருப்பின் உடன் போந்தார்
13.1.3
4232 நன்ன்ணர்ப் பொன்னித் திரு நாட்டு நாதர் மகிழும் திருப்பதிகள்
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லைப் படப்பைக்கு ஒல்லைமான்
துன்னி உகைக்கும் குடக் கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர்
சென்னி மிசை வைத்தவர் செல்வத் திருப்புக்கு ஒளியூர் சென்று அடைந்தார்
13.1.4
4233 மறையோர் வாழும் அப்பதியின் மாட வீதி மருங்கு அணைவார்
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள்
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றினில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு
உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார்
13.1.5
4234 அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை
முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம்
இந்த மனை மற்று அந்தமனை இழந்தார் அழுகை என்று உரைத்தார்
13.1.6
4235 இத்தன்மையினைக் கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம்
மொய்த்த முகைத்தார் வன்தொண்டர் தம்மை முன்னே கண்டு இறைஞ்ச
வைத்த சிந்தை மறையோனும் மனைவிதானும் மகிழ் இழந்த
சித்த சோகம் தெரியாமே வந்து இருந்தாள் இறைஞ்சினார்
13.1.7
4236 துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார் தம்மை முகம் நோக்கி
இன்ப மைந்தன் தனை இழந்தீர் நீரோ என்ன எதிர் வணங்கி
முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல் கின்றோம்
அன்பு பழுது ஆகாமல் எழுந்து அருளப் பெற்றேம் எனத் தொழுதார்
13.1.8
4237 மைந்தன் தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி தானும் சிறுவனையான்
அந்த முதலையின் வாய் நின்றும் அழைத்துக் கொடுத்த அவிநாசி
எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார்
13.1.9
4238 இவ்வாறு அருளிச் செய்து அருளி இவர்கள் புதல்வன் தனைக் கொடிய
வெவ்வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவிக் கேட்டு
அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர்
வைவாள் எயிற்று முதலை கொடு வருதற்கு எடுத்தார் திருப்பதிகம்
13.1.10
4239 உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்த
வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவாயில் உடலில்சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான்
13.1.11
4240 பெருவாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனை
உருகா நின்ற தாய் ஓடி எடுத்துக் கொடுவந்து உயிர் அளித்த
திருவாளன் தன் சேவடிக்கீழ் மறையோன் ஒடு வீழ்ந்தாள்
மருவார் தருவின் மலர் மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள்
13.1.12
4241 மண்ணினுள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது
அண்ணலாரும் அவிநாசி அரனார் தம்மை அருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினிமேல்
13.1.13
4242 பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு
விரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி அண்ணலார்
முரசம் இயம்பக் கலியாணம் முடித்து முடிச் சேரலர் தம்பால்
குரவ மலர்ப் பூந்தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார்
13.1.14
4243 சென்ற சென்ற குட புலத்துச் சிவனார் அடியார் பதிகள் தொறும்
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும்
துன்று மணிநீர்க் கான் ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம்புகுந்தார்
13.1.15
4244 முன்னாள் முதலை வாய்புக்க மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென்னாரூரர் எழுந்து அருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு
அந்நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்பப்
பொன்னார் கிழியும் மணிப்பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார்
13.1.16
4245 செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களி கூர்ந்து
என் ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்று வித்தார்
13.1.17
4246 பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோர் எழுந்து அருளப்
பொருவில் நகரம் அலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறப்படுவித்து
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும்
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார்
13.1.18
4247 மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில்
சிலை நாட்டிய வெல் கொடித்தானைச் சேரர் பெருமான் எதிர் சென்று
தலை நாள் கமலப் போது அனைய சரணம் பணியத் தாவில் பல
கலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனர் ஆல்
13.1.19
4248 சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள்
தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய்
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர்ச் செல்வம் வினவி இன்புற்றார்
13.1.20
4249 ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல்
இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும்
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசை ஏற்றித் தாம் பின் மதிவெண் குடை கவித்தார்
13.1.21
4250 உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப
கதிர் வெண் திரு நீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளித் துகள் ஆர்ப்ப
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணிவாயிலை அணைந்தார்
13.1.22
4251 ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர்
வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின
பூரண கலசம் மலிந்தன பூ மழை மகளிர் பொழிந்திடும்
தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம்
13.1.23
4252 அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன
சுரிவனை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி
விரிதரு பவன நெடும் கடை விறல் மத கரியின் இழிந்தனர்
13.1.24
4253 தூ நறு மலர் தரளம் பொரிதூவி முன் இரு புடையின் கணும்
நான் மறை முனிவர்கள் மங்கல நாம நன்மொழிகள் விளம்பிட
மேல் நிறை நிழல் செய வெண் குடை வீசிய கவரி மருங்கு உற
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர்
13.1.25
4254 அரியணை அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை
வரிமலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின்
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவில என முன் செய்து
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர்
13.1.26
4255 இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்தாம் இடர் கெட முனைப்பாடி
மன்னர் தம் உடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடுஎங்கும்
பன்னகம் புனை பரமர் தம் திருப்பதி பல உடன் பணிந்து ஏத்திப்
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன்தொண்டர்
13.1.27
4256 ஆய செய்கையில் நாள் பல கழிந்தபின் அரசர்கள் முதல் சேரர்
தூய மஞ்சனத் தொழில் இனின் தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்
பாய கங்கை சூழ் நெடும் சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்து எய்தும்
சேய நல்நெறி குறுகிடக் குறுகினார் திருவஞ்சைக் களம் தன்னில்
13.1.28
4257 கரிய கண்டர் தம் கோயிலை வலம் கொண்டு காதலால் பெருகு அன்பு
புரியும் உள்ளத்தர் உள்ளணைந்து இறைவர் தம் பூம் கழல் இணை போற்றி
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை
சரியவே தலைக்குத் தலை மாலை என்று எடுத்தனர் தமிழ் மாலை
13.1.29
4258 எடுத்த அத்திருப் பதிகத்தின் உள் குறிப்பு இவ்வுலகினில் பாசம்
அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாடக்
கடுத்த தும்பிய கண்டர் தம் கயிலையில் கணத்தவருடன் கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத் தங்கு அழல் சார்பு தந்து அளிக்கின்றார்
13.1.30
4259 மன்றலந் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை வல்லியுடன் கூட
வென்றி வெள்விடைப் பாகர் தாம் வீற்று இருந்து அருளிய பொழுதின் கண்
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றிச்
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர் கட்கு அருள் செய்தார்
13.1.31
4260 வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடை கொண்டு
தூ நலம் திகழ் சோதி வெள்ளானையும் கொண்டு வன் தொண்டர்க்குத்
தேன் அலம்பு தண் சோலை சூழ் மாகோதையில் திருவஞ்சைக் களம் சேரக்
கானிலங் கொள வலம் கொண்டு மேவினார் கடிமதில் திருவாயில்
13.1.32
4261 தேவர் தங்குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவல் ஊரர்தம்
காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்று இருக்கின்ற
பூவலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இப் பாடு என போற்றி
ஏவல் என்றபின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிரேற்றார்
13.1.33
4262 ஏற்ற தொண்டரை அண்டர் வெள்ளானையின் எதிர் வலம் கொண்டு ஏற்ற
நாற்றடங் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்பப்
போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிர் எல்லாம்
சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார்
13.1.34
4263 சேரர் தம்பிரான் தோழர் தஞ்செயல் அறிந்து அப்போதே
சார நின்றதோர் பரியினை மிசைக் கொண்டு திருவஞ்சைக் களம்சார்வார்
வீர வெண் களிறுகைத்து விண்மேல் செலும் மெய்த்தொண்டர் தமைக் கண்டார்
பாரில் நின்றிலர் சென்றதம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார்
13.1.35
4264 விட்ட வெம்பரிச் செவியினில் புவி முதல் வேந்தர் தாம் விதியாலே
இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழப் பாய்ந்து
மட்டலர்ந்த பைந் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை
முட்ட எய்தி வலம் கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக
13.1.36
4265 உதியர் மன்னவர் தம் பெரும் சேனையின் உடன் சென்ற படைவீரர்
கதிகொள் வாசியில் செல்பவர் தம்மைத்தங்கட்புலப்படும் எல்லை
எதிர் விசும்பினில் கண்டு மின் கண்டிலர் ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறை முறை உடல் வீழ்ந்தார்
13.1.37
4266 வீரயாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானைச்
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனித் தொண்டர்மேல் கொண்ட
வாரும் மும் மதத்து அருவி வெள்ளானைக்கு வயப் பரி முன் வைத்துச்
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலைத் திசை நோக்கி
13.1.38
4267 யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும்
தானை முன் செலத் தானெனை முன் படைத்தான் எனும் தமிழ் மாலை
மானவன் தொண்டர் பாடி முன் அணைந்தனரர் மதி நதி பொதி வேணித்
தேன் அலம்பு தண் கொன்றையார் திருமலைத் தென்திசைத் திருவாயில்
13.1.39
4268 மாசில் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை
ஆசில் அன்பர் தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணிவாயில்
தேசுதங்கிய யானையும் புரவியும் இழிந்து சேண் இடைச் செல்வார்
ஈசர் வெள்ளி மா மலைத் தடம் பல கடந்து எய்தினார் மணிவாயில்
13.1.40
4269 அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர்
தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே
பொங்கு மா மதம் பொழிந்த வெள்ளானையின் உம்பர் போற்றிடப் போந்த
நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு
13.1.41
4270 சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேண் இடை விட்டு
அகன்று கோவினைக் கண்டு அணைந்தது எனக் காதலின் விரைந்து எய்தி
நின்று போற்றிய தனிப் பெரும் தொண்டரை நேர் இழை வலப் பாகத்து
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகுய்ய
13.1.42
4271 அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்ட தொடக்கினை நீக்கி
முடிவிலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர்
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த
வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர்
13.1.43
4272 நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர்க் கழல் சாரச்
சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் எனச் செப்ப
குன்ற வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி
13.1.44
4273 மங்கை பாகர் தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கைவார் சடைக் கயிலை நாயகர் திருமுறுவலின் கதிர் காட்டி
இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள் செய்தார்
13.1.45
4274 அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றிப்
புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணைத் தொண்டு
இரை செய் வெள்ளமுன் கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப் பெற்றேன்
விரைசெய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று
13.1.46
4275 பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு அரும் பெருமையாய் உனை அன்பால்
திருஉலாப் புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெற வேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார்
13.1.47
4276 சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருஉலாப் புறம் கொண்டு
நாரி பாகரும் நலம் மிகு திரு அருள் நயப்புடன் அருள் செய்வார்
ஊரன் ஆகிய ஆலால சுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும்
சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள் செய்தார்
13.1.48
4277 அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு
மன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தரர் ஆகித் தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும்
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார்
13.1.49
4278 தலத்து வந்துமுன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும்
நலத்தின் மிகக் கவர் வல்வினைத் தொடக்கற நாயகி அருளாலே
அலத்த மெல்லடிக் கமலினியாருடன் அனிந்தை யாராக்஢
மலைத் தனிப் பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழிநின்றார்
13.1.50
4279 வாழி மாதவர் ஆலால சுந்தரர் வழி இடை அருள் செய்த
ஏழிசைத் திருப்பதிகம் இவ்வுலகினில் ஏற்றிட எறி முன்நீர்
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அவ் அருள் சூடி
ஊழியில் தனி ஒருவர் தம் திருவஞ்சைக் களத்தில் உய்த்து உணர்வித்தான்
13.1.51
4280 சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் திருஉலாப் புறம் அன்று
சாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே
13.1.52
4281 என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான் புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்
13.1.53
திருச்சிற்றம்பலம்

வெள்ளானைச் சருக்கம் முற்றிற்று.
இரண்டாம் காண்டம் முற்றிற்று.
பெரிய புராணம் முற்றிற்று.


This webpage was last updated on August 10, 2005