ÿÿ


kavi kALamEkap pulavar pATalkaL
(in tamil script, unicode format)

கவி காளமேகம் பாடல்கள்




Acknowledgements:
Etext preparation,PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5, FireFox Mozilla,..) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.

In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1998 - 2005
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கவி காளமேகம் (15-ம் நூற்றாண்டு) பாடல்கள்

காப்பு
1 ஏர்ஆனைக் காவில்உறை என்ஆனைக்கு அன்று அளித்த
போர் ஆனைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத
புத்திவரும்; பத்திவரும்; புத்திரஉற்பத்திவரும்;
சக்திவரும்; சித்திவரும் தான்.

கலைமகள் வணக்கம்
(திருமலைராயன் அவையில் அரியணை இரண்டு முழம் வளர்ந்து
இடம் கொடுத்தபோது பாடியது)
2 வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில் அரசரேடு என்னைச்
சரியா சனம்வைத்த தாய். ..

நிந்தாத் துதிகள்
அ. இகழ்வது போல் புகழ்தல்
(காஞ்சி வரதர் கருட உற்சவத்தைச் சேவித்து இகழ்வது போல்
புகழ்ந்து பாடியது)
3 பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..
(தில்லைக் கூத்தரசர் திருவிழாவைப் பார்த்து
இகழ்வதுபோல் புகழ்ந்து பாடியது)
4 நச்சரவம் பூண்டதில்லை நாதரே; தேவரீர்
பிச்சையெடுத்து உண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்
காளம் ஏன்? குஞ்சரம் ஏன்? கார்க்கடல்போ லேமுழங்கும்
மேளம் ஏன்? ராசாங்கம் ஏன்? .
(நாகைப்பட்டினம் காத்தான் வருணகுலாதித்தன் சத்திரத்தில்
காளமேகப்புலவர் உண்டபோது பாடிய நிந்தையும் காத்தான்
வேண்டுகோளுக்கு இணங்கி அதையே துதியாகவும் பாடியது)
5 கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும். .
(காஞ்சிபுரம் விநாயகர் உற்சவத்தைப் பழிப்பதுபோலப்
புகழ்ந்து பாடியது)
6 மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? - மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!
எலி இழுத்துப் போகின்றது, ஏன்? .
(முருகக் கடவுளைத் தரிசித்துப் பழிப்பதுபோலப்
புகழ்ந்து பாடியது)
7 அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பரிய மாமன் உறிதிருடி; - சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு
எண்ணும் பெருமை இவை..
(திருவாரூர்த் தியாகேசரது திருநடனத்தைக் கண்டு இகழ்வது
போலப் புகழ்ந்து பாடியது)
8 ஆடாரோ பின்னைஅவர் அன்பர்எலாம் பார்த்திருக்க
நீடுஆரூர் வீதியிலே நின்றுதான்? - தோடுஆரூம்
மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர்
கைக்கே பணம்இருந்தக் கால்..
(மதுரையில் மீனாட்சியம்மன் அன்னவாகனத்தில் ஏறிவதைச்
சேவித்து இகழ்வதுபோலப் புகழ்ந்து பாடியது)
9 மாயனார் போற்றும் மதுரா புரிச்சொக்க
நாயனார் பித்திஏறி னார்என்றே - நேயமாம்
கன்னல்மொழி அம்கயல்கண் காரிகையாள், ஐயையோ!
அன்னம்இறங் காமல்அலை வாள்..
(திருச்செங்காட்டில் உத்தராபதீசுரரைத் தரிசித்துப்
பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)
10 காலனையும் காமனையும் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ? - சீலமுடன்
நாட்டிலே வீற்றிருந்த நாதரே; நீர் திருச்செங்
காட்டிலே வீற்றிருந்தக் கால்.
(மயிலாடுதுறையில் மயூரநாதரைத் தரிசித்து
இகழ்வதுபோலப் புகழ்ந்து பாடியது)
11 வள்ளல் எனும்பெரிய மாயூர் நாதருக்கு
வெள்ளிமலை பொன்மலையு மேஇருத்தத் தெள்உமையாள்
'அஞ்சல் அஞ்சல்!' என்றுதினம் அண்டையிலே தான்இருக்க
நஞ்சுதனை ஏன்அருந்தி னார்?
(மதுரை மீனாட்சியம்மையைத் தரிசித்து இகழ்வதுபோலப்
புகழ்ந்து பாடியது)
12 நல்லதொரு புதுமை நாட்டில்கண் டேன்; அதனைச்
சொல்லவா? சொல்லவா? - சொல்லவா? தொல்லை
மதுரைவிக்கி னேச்சுரனை மாதுஉமையாள் பெற்றாள்
குதிரைவிற்க வந்தவனைக் கொண்டு.
(மதுரையில் சொக்கநாத¨த் தரிசித்து இகழ்வதுபோலப்
புகழ்ந்து பாடியது)
13 கண்டீரோ? பெண்காள்; கடம்பவனத்து ஈசனார்
பெண்டீர் தமைச்சுமந்து பித்தனார் - எண்சிதைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார்
அக்காளை எறினா ராம்!
(தில்லையில் சிவகாமியம்மையைக் கண்டு வணங்கி
இகழ்வதுபோலப் புகழ்ந்து பாடியது)
14 மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!
(தில்லை நடராசரைக் கண்டு வணங்கி இகழ்வதுபோலப்
புகழ்ந்து பாடியது)
15 நாட்டுக்குள் ஆட்டுக்கு நாலுகால், ஐயா! நின்
ஆட்டுக்கு இரண்டுகால் ஆனாலும், - நாட்டம் உள்ள
சீர்மேவு தில்லைச் சிவனே;,இல் ஆட்டைவிட்டுப்
போமோ,சொல் வாய்! அப் புலி?
(தில்லையில் நடராசரது பிச்சாடனத் தோற்றத்தைக்
கண்டு வணங்கி இகழ்வதுபோலப் புகழ்ந்து பாடியது)
16 தாண்டி ஒருத்தி தலையின்மேல் ஏறாளோ?
பூண்டசெருப் பால்ஒருவன் போடானோ? - மீண்டு ஒருவன்
வையானோ? விவ்முறிய மாட்டானோ? தென்புலியூர்
ஐயா,நீ ஏழைஆ னால்.
(தில்லை அம்பலவாணரைத் தரிசித்து இகழ்வதுபோலப்
புகழ்ந்து பாடியது)
17 கொங்குஉலகும் தென்தில்லைக் கோவிந்தக் கோன்இருக்கக்
கங்குல்பகல் அண்டர்பலர் காத்திருக்கச் செங்கையிலே
ஓடு எடுத்த அம்பலவா; ஓங்குதில்லை உன்புகுந்தே
ஆடுஎடுத்தது எந்தஉபா யம்?
(திருவொற்றியூர்த் தியாகேசரது திருநடனத்தைக்
கண்டு வணங்கி இகழ்வதுபோலப் புகழ்ந்து பாடியது)
18 ஆடும் தியாகரே! ஆட்டம்ஏன் தான்உமக்கு?
வீடும் சமுசாரம் மேலிட்டுக் -கூடிச்
செருக்கிலினை யாடச் சிறுவர்இரண்டு ஆச்சே!
இருக்கும்ஊர் ஒற்றிஆச் சே!
(வைத்தீசுவரைத் தரிசித்து இகழ்வதுபோலப்
புகழ்ந்து பாடியது)
19 வாதக்கால் ஆம்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவுஆம்;
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக் கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறிவார் வேறூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?
(புள்ளிருக்கும் வேளூர்ச் சிவபெருமானை
இகழ்வதுபோலப் புகழ்ந்து பாடியது)
20 தீத்தான்உன் கண்ணிலே; தீத்தான்உன் கையிலே;
தீத்தானும் உன்தன் சிரிப்பிலே, தீத்தான்உன்
மெய்எலாம்! புள்இருக்கும் வேளூரா; உன்னை இந்தத்
தையலாள் எப்படிச் சேர்ந் தாள்?
(திருச்செங்காட்டுச் சிவபெருமானைப் பழிப்பது போலப்
புகழ்ந்து பாடியது)
21 கண்ணபுரம் கோயில் கதவுஅடைத்துத் தாழ் போட்டார்
மண்ணை உண்டார் வெண்ணெய்உண்ட மாயனார் என்னும்
சிரக்கப் புரைஏந்திச் செங்காட்டில் ஈசர்
இரக்கப் புறப்பட்டார் என்று.
(திருவாரூர்த் தியாகராசரது திருநடனம் குறித்தப்
பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)
22 திருந்துஆடு அரவுஅணியும் தென்கமலை ஈசர்
இருந்துஆடாது என்செய் திடுவார்? - பொருந்த
ஒருகாலே அல்லலே ஒண்தொடிக் காஅன்று
இருகாலும் சந்துபோ னால்.
(திருவொற்றியூர்த் தியாகேசரைக் கண்டு வணங்கியபோது
அவரைப் பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)
23 பார்ஊர் அறியப் பலிக்குஉழன் றீர்பற்றிப் பார்க்கும்இடத்து
ஓர்ஊரும் இல்லை; இருக்கஎன் றாலும்உள் ளூரும்ஒற்றி;
பேரூர் அறியத் தியாகர்என் றேபெரும் பேரும்பெற்றீர்;
ஆருரி லேஇருப் பீர்?இனிப் போய்விடும் அம்பலத்தே!
(ஓர் ஊரில் சிவன் திருவீதி புறப்பட்டு வருவதைப் பார்த்துப்
பழிப்பதுபோலப் புகழந்து பாடியது)
24 வாணியன் பாடிட கண்ணான் சுமக்க, வடுகன்செட்டி
சேணியன் போற்றக், கடல்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்தக் கருமான் துகில்தனைக் கொண்டு அணிந்த
வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே.
(தில்லை நடராசர் மீது பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)
25 வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கஇக் காசினியில்
அல்ஆர் பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா
இல்லாத தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.
(தில்லையில் வாழும் கணபதியைத் தரிசித்துப்
பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)
26 கம்பமத கடகளிற்றான் தில்லை வாழும்
கணபதிதன் பெருவயிற்றைக் கண்டு வாடி
உம்பர்எல்லாம் விழித்திருந்தார் அயில்வேல் செங்கை
உடையஅறு முகவனும்கண் ணீர்ஆறு ஆனான்
பம்புசுடர்க் கண்ணனுமோ நஞ்சுஉண் டான்மால்
பயம்அடைந்தான் உமையும்உடல் பாதி ஆனான்
அம்புலியைப் படைத்திடுவது அவம தேஎன்று
அவனும்அன்னம் இறங்காமல் அலைகின் றானே.
ஆ. புகழ்வதுபோல் இகழ்தல்
(திருக்கண்ணபுரத்து இருக்கும் திருமாலைப்
புகழ்வதுபோல் இகழ்ந்து பாடியது)
27 கன்னபுரம் மாலே; கடவுளிலும் நீஅதிகம்;
உன்னிலுமோ யான்அதிகம்; ஒன்றுகேள்! - முன்னமே
உன்பிறப்போ பத்தாம்; உயர்சிவனுக்கு ஒன்றும்இல்லை;
என்பிறப்புஎண் ணத்தொலையா தே!
புகழ்ச்சியும் இகழ்ச்சியும்
அ. புகழ்ச்சி
(ஆமூர் வேங்கட முதலியாருடைய குதிரையைப்
புகழ்ந்து பாடியது)
28 ஆறும் பதினாறும் ஆமூரில் வேங்கட்டன்
ஏறும் பரிமாவே ஏற்றமா - வேறுமா
வெந்தமா சும்மா வெறுமா களிகிளற
வந்தமா சந்தமா மா.
(திருவண்ணாமலையில அருணாசலப்பெருமானை
வணங்கும்போது புகழ்ந்து பாடியது)
29 சட்டியிலே பாதிஅந்தச் சட்டுவத்தி லேபாதி
இட்டகலத் தில்பாதி இட்டுஇருக்கத் - திட்டமுடன்
ஆடிவந்த சோணேசர் அன்று அழைத்த போது,பிள்ளை
ஓடிவந்தது எவ்வாறு உரை?
(கலைச்சியின் தாயார் வேண்டுகோளுக்கிணங்கிப்
பாடிய புகழ்மொழி)
30 நஞ்சுகுடி கொண்டகனை நாலும் தெரிந்துமதன்
இஞ்சிகுடி தன்னிலும்வந்து எய்வானோ -விஞ்சு
முலைச்சிகரத் தால்அழுத்தி முத்தம்இட்டுச் சந்தே
கலைச்சிகரத் தால்அணைத்தக் கால்?
(வைத்தீச்சுவரன் கோயிலில் மருந்தாகக் கொடுக்கப்படும்
புற்று மண்ணின் பெருமையைப் புகழ்ந்து பாடியது)
31 மண்டலத்தில் நாளும் வைத்தியராய்த் தாம்இருந்து
கண்டவினை தீர்க்கின்றார் கண்டீரோ? - தொண்டர்
விருந்தைப்பார்த்து உண்டுஅருளும் வேளூர்என் நாதர்
மருந்தைப்பார்த் தால்சுத்த மண்.
(ஆமூர் முதலியார் என்னும் வள்ளலைப்
புகழ்ந்து பாடியது)
32 உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற ஒருகோடி
வெள்ளம்கா லம்திரிந்து விட்டோமே ! - உள்ளபடி
ஆமூர் முதலி அமரர்கோன் இங்குஇருக்கப்
போம்ஊர் அறியாமல் போய்.
(மதுரைச் சொக்கநாதரைப் புகழ்ந்து பாடியது)
33 கடம்பவனச் சொக்கருக்குக் கண்ணன்தான் வேறோ?
இடம்பெரிய கண்ஒன்றை ஈந்தான்; - உடம்பதனில்
செம்பாதி ஆனான்; சுமக்க எருது ஆனான்;
அம்புஆனான்; தேவியும்ஆ னான்.
(அமராவதிக் குருக்கள் அளித்த விருந்தினை உண்டு
அவனைப் புகழ்ந்து பாடியது)
34 ஆனை குதிரைதரும் அன்னைதனைக் கொன்றகதி
சேனைமன் னரைக்காய்துன் னீஅவரை - பூநெயுடன்
கூட்டிஅமுது இட்டான் குருக்கள்அம ராபதியான்
வீட்டில்உண்டு வந்தேன் விருந்து.
(திருப்பனந்தாள் பட்டரைப் புகழ்ந்து பாடியது)
35 விண்நீரும் வற்றிப் புவிநீரும் வற்றி விரும்புமழைத்
தண்நீரும் வற்றிப் புலவோர் தலிக்கின்ற காலத்திலே
உண்ணீர்உண் ணீர்என்று உபசாரம் சொல்லி உபசரித்துத்
தண்ணீரும் சோறும் தருவான் திருப்பனந் தாள்பட்டனே !
(திருமலைராயன் புகழைப் புகழ்ந்து பாடியது)
36 வீமன்என வலிமிகுந்த திருமலைரா
யன்கீர்த்தி வெள்ளம் பொங்கத்
தாமரையில் அயன்ஓடிச் சத்தியலோ
கம்புகுந்தான் சங்க பாணி
பூமிதொட்டு வானம்மட்டும் வளர்ந்துநின்றான்
சிவன்கயிலைப் பொருப்பில் ஏறிச்
சோமனையும் தலைக்கு அணிந்து
வடவரைத்தண் டால்ஆழம் சோதித் தானே.
ஆ. இகழ்ச்சி
(விகடராமன் குதிரையைப் பழித்துப் பாடியது)
37 முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்கப்
பின்னே இருந்துஇரண்டு பேர்தள்ள - எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடரா மன்குதிரை
மாதம்போம் காத வழி.
(தாசி கலைச்சி என்பவளை இகழ்ந்து பாடியது)
38 ஏய்ந்த தனங்கள் இரண்டும்இரு பாகற்காய்
வாய்ந்தஇடை செக்குஉலக்கை மாத்திரமே - தேய்ந்தகுழல்
முக்கலம்சிக் கும்பிடிக்கும் மூதேவி யாள்கமலைக்
குக்கல்இச்சிக் கும்கலைச்சிக் கு.
(கம்பரை இகழ்ந்து பாடியது)
39 நாரா யணனை நராயணன்என் றேகம்பன்
ஓராமல் சொன்ன உறுதியால் - நேர்ஆக
வார்என்றால் வர்என்பேன்; வாள்என்றால் வள்என்பேன்;
நார்என்றால் நர்என்பேன் நான்.
(நாகைப்பட்டினம் தாசி ஒருத்தி பாடிய பாட்டைக்
கேட்டு அப்பாட்டு இனிமையாய் இல்லாதப்டியால்
அவளைப் பழித்துப் பாடியது)
40 வாழ்த்து திருநாகை வாகுஆன தேவடியாள்
பாழ்த்த குரல்எடுத்துப் பாடினாள் - நேற்றுக்
கழுதைகெட்ட வண்ணான்கண் டேன்கண்டேன் என்று
பழுதைஎடுத்து ஓடிவந்தான் பார்.
(திருவரங்கத்தில் ஒருத்தி வீட்டில் சாப்பிட்ட
சாப்பாட்டைஇகழ்ந்து பாடியது)
41 நீச்சால் பெருத்திடு காவேரி ஆற்றை நிலைநிறுத்திச்
சாய்ச்சாள் இலைக்கறிச் சாற்றைஎல் லாம்அது தானும் அன்றிக்
காய்ச்சாப் புளியும்நல் கல்லுடன் சோறும் கலந்துவைத்த
ஆய்ச்சாளை யான்மற வேன்;மறந் தால்மனம் ஆற்றிடுமே.
(தன்னை ஏளனம் செய்த பாடத் தெரியாத கிழத்
தூசியை இகழ்ந்து பாடியது)
42 இந்து முடிக்கும் சடையாளர் இருக்கும் தொண்டை வளநாட்டில்
சிந்து படிக்கக் கவிபடிக்கத் தெரியா மடவாய்; உன்தனக்குக்
கெந்தப் பொடி ஏன்? பூமுடி ஏன்? கிழமாய் நரைத்து முகம்திரைந்தும்
இந்த முறுக்குஏன்? வீறாப்பு ஏன்? எடுப்புஏன்? உன்னைக் கொடுப்பேனே.
(அதிமதுரகவி காளமேகத்தை இகழ்ந்து பாடியது)
43 மூச்சு விடும்முன்னே முந்நூறும் நானூறும்
ஆச்சுதுஎன்றால் ஆயிரம்பாட்டு ஆகாதா? - பேச்சு என்ன?
வெள்ளைக் கலிகாள மேகமே! நின்னுடைய
கள்ளக் கலிக்கடையைக் கட்டு!

வியப்பும் சிறப்பும்
அ. வியப்பு
(கீரை விற்கும் பெண் ஒருத்தியின் இடைச் சிறுமையையும்
தனப்பெருமையையும் நோக்கி இரங்கி வியந்து பாடியது)
44 வெள்ளைஆன் ஏறும் விமலர் அடிபணியும்
பிள்ளையான் வாழும் பெரும்தெருவில் - வள்ளை
இலைக்கறிவிற் பாள்மருங்குல் இற்றுவிடம் என்று
முலைக்குஅறிவிப் பார்இலையே முன்.
(கொண்டத்தூர் தண்டைக்காலம்மை சமைத்த
பூசணிக்காய்க் கறியை வியந்து பாடியது)
45 கண்டக்கால் கிட்டும் கயிலாயம் கைக்கொண்டுஉள்
கொண்டக்கால் மோட்சம் கொடுக்குமே - கொண்டத்தூர்
தண்டைக்கால் அம்மை சமைத்துவைத்த பூசுணிக்காய்
அண்டர்க்குஆம் ஈசருக்கும் ஆம்.
(ஆற்றூரில் வாழ்ந்த சோமி என்னும் தாசியின்
அழகைக்கண்டு வியந்து பாடியது)
46 ஆராயும் முத்தமிழ் ஆற்றூரில் சோமி அழகுகண்டு
நாரா யணன்நெடு மால்ஆகி னான்அந்த நான்முகனும்
ஓர்ஆ யிரம்மடல் ஊர்ந்தான்வில் மாரன்உருஅழிந்தான்
பேர்ஆன வானவர் கோனும்கண் ஆயிரம் பெற்றனனே.
ஆ. சிறப்பு
(காஞ்சி வரதரது யானை வாகன உற்சவத்தைச்
சிறப்பித்துப் பாடியது)
47 எட்டுஒருமா எண்காணி மீதே இருந்தகலைப்
பட்டுஒருமா நால்மாவில் பாய்நததே - சிட்டர்தொழும்
தேவாதி தேவன் திருஅத்தி யூர்வரதன்
மாஏறி வீதிவரக் கண்டு.
(மதுரையில் உள்ள கூத்தாள் என்னும் தாசி, அவள்
தமக்கை, தாயார், பாட்டி இவர்களைச் சிறப்பித்தப் பாடியது)
48 கூத்தாள் விழிகள்நெடும் கூர்வேலாம்; கூத்தாள்தன்
முத்தாள் விழிகள் முழுநீலம்; - மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன்
ஆத்தாள்விழிகள் இரண்டு அம்பு.
(திருவாரூர்த் தியாகேசர் சுந்தரருக்காகப் பரவையாரிடம்
தூது சென்றதை சிறப்பித்துப் பாடியது)
49 ஆனர் இலையே அயனும் திருமாலும்
கான்ஆர் அடிமுடிமுன் காண்பதற்கு - மேல்நாள்
இரவுதிரு ஆருரில் எந்தைபிரான் சென்ற
பரவைதிரு வாயிற் படி.
(திருவாலங்குடிச் சிவனைச் சிறப்பித்துப் பாடியது)
50 ஆலங் குடியானை ஆலாலம் உண்டானை
ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார்? - ஆலம்
குடியானே ஆயின் குவலயத்தோர் எல்லாம்
மடியாரோ மண்மீதிலே.
(சிவபெருமான் நஞ்சு உண்டதைச் சிறப்பித்தப் பாடியது)
51 கடுக்கை முடியானே காலைமுடித் தான்போல்
சுடுக்கைகுடி யான்ஆகில் காணார் - கடுக்கை
உரல்அடிமீது உற்றானும், உம்பர்களும், மற்றும்
உரல்அடிமீது உற்றானும் ஊர்.
(கங்கைகொண்ட சோளேச்சுரத்தானைச்
சிறப்பித்துப் பாடியது)
52 காவலன் எங்கள் கனவைப்புஆம் சோளேசன்
மாவலி கங்கை மணிவாரி - ஆஅனல்என்று
அப்புள் அங்கை தோய்க்க அதில்வா ரியமுத்தைக்
கொப்புளம்என்று ஊதும் குரங்கு.
(அரசன் ஒருவனுடைய குதிரையைச் சிறப்பித்தப் பாடியது)
53 கோக்குதிரை நின்குதிரை! கோவல்மது ரா! ஒன்னார்
மாக்கு திரைஎல்லாம் மண்குதிரை; - தூக்குதிரைத்
துங்கக் கரைக்குதிரை; சொக்கன் குதிரை;சது
ரங்கக் குதிரைகளே ஆம்!

வசையும் வசைமீட்சியும்
அ. வசை
(தண்டாங்கூரில் உள்ளவர்கள் பண்ட நிறை குறைய
விற்றதைக் கண்ட அவர்கள் மீது பாடிய வசை)
54 தண்டாங்கூர் மாசனங்காள்! சற்குணர்நீர் என்றுஇருந்தேன் !
பண்டம் குறையவிற்ற பாவிகாள்! - பெண்டுகளைத்
தேடி உண்ண விட்டீர் தெருக்கள் தெருக்கள்தோறும்
ஆடிமுதல் ஆனிவரைக் கும்.
(மாவலிவாணனைப் பாடிய வசை)
55 சொக்கன் மதுரையினில் தொண்டர்க்குன் அவிழ்ந்த
பொய்க்குதிரை சந்தைக்குப் போகுமதோ? - மிக்க
கரசரணா! அந்தக் கரும்புறத்தார்க்கு எல்லாம்
அரசுஅரணா? மாவலியா ணா !
(திருக்கண்ணமங்கை நம்பியார் மீது பாடிய வசை)
56 தருக்குலவு கண்ணமங்கைத் தானத்தார் எல்லாம்
திருக்குளத்து மீன்ஒழியத் தின்று - குருக்கொடுக்கும்
தம்பிமார் என்று இருந்தோம்; நாட்டில் அழிகூத்தி
தம்பிமா ராய்இருந்தார் தாம் !
(புலிக்குட்டி சிங்கன் மீது பாடிய வசை)
57 போனபோன இடம்தொறும்தலைப்பொட்டுஎழப்பிறர் குட்டவே
புண்படைத்த மனத்தன்ஆகிய பொட்டிபுத்திரன் அத்திரன்
மானஈசன் இலச்சைகேடன் ஒழுக்கம்அற்ற புழுக்கையன்
மாசனாம்புலிக் குட்டிசிங்கன் வரைக்குள்ஏறி இறங்குவீர்;
பேனும்ஈரும் எடுக்கவோசடை பின்னிவேப்பநெய் வார்க்கவோ
பீவிழிக்கிரி எழுதவோஒரு பீறுதுண்டம் உடுத்தவோ
கானகம்தனில் வைக்கவோஇரு கால்விலங்கிடுவிக்கவோ
காதகம்கொடு சாடவோஒரு காரியம்தனை ஏவுமே !
(குடவாசல் விண்ணாள் மீது பாடிய வசை)
58 செக்கோ மருங்குல் சிறுபய றோதனம் சிக்குஅளகம்
வைக்கோல் கழிகற்றை யோகுழி யோவிழி வாவிதொறும்
கொக்குஏறி மேய்குட வாசல்விண் ணாள்வரைக் கோம்பியனீர்!
எக்கோ படைத்தது? நீரே நெருப்பில் எரிந்தவரே !
(ஒரு குழந்தை காளமேகத்தைக் கண்டு பயந்து அழுதுகொண்டு சென்று,
தன் தாயிரிடம் சொல்லிற்று. உடனே தாயார் புலவரைப் பார்த்து
@உன்னைக் கொடுப்பேனே@ என்று ஏசினார். அது கேட்ட புலவர் சினம்
கொண்டு அக்குழந்தை இறந்துபோகும்படி முதலில் வசை பாடினார்.
அது கண்ட அக்குழந்தையின் தந்தை தன் குழந்தையை உயிர்
பிழைக்க வைக்கும்படி வேண்டினார். அதற்கு இரங்கிய புலவர்
அக்குழந்தை பிழைக்கும்படி வசைமீட்சி பாடினார். வசையும் வசைமீட்சியும்
அமைந்த பாடல் இது)
59 என்னைக் கொடுத்தால் இரக்கம்உனக்கு உண்டாகுமோ?
அன்னக் கமலமுக வல்லியே! - துன்னுமதக்
காட்டானைக் கோட்டுமுலைக் காரிகையே! நீபயந்த
கோட்டானைத் தானே கொடு.
(திருவாரூர்த் தியாகர் கழுத்தில இருந்த வைரமாலை அறவும்
மறுபடி பொருந்திப்பெறவும் பாடிய வசையும் வசைமீட்சியும்)
60 அன்னவயல் சூழ்ந்திருக்கும் ஆரூரான் நெஞ்சத்தில்
இன்னம் வயிரம் இருப்பதா? - முன்னம்ஒரு
தொண்டன்மக னைக்கொன்றும் சோழன்மகனைக் கொன்றும்
சண்டன்மக னைக்கொன்றும் தான்.
எடுப்பும் முடிப்பும்
அ. எடுப்பும் முடிப்பும்
(எழுத்தாணி என்று எடுத்துச் சூரிக்கத்தி இன்று முடித்தது)
61 எழுத்தா ணிதுபெண் இதனைமுனி காதில்
வழுத்துஆ ரணக்குகனை வாதுக்கு - அழைத்ததுவும்
மாரன்கை வில்மால்முன் காத்ததவும் நன்றாகும்
தீரம்உள்ள சூரிக்கத் தி.
(கொட்டைப்பாக்கு என்று எடுத்துக் களிப்பாக்கு
என்று முடித்துப் பாடிய து)
62 கொட்டைப்பாக் கும்ஓருகண் கூடையைப் பாக் கும்மடியில்
பிட்டைப்பாக் கும்பாகம் பெண்பாக்கும் - முட்டநெஞ்சே!
ஆரணனும் நாரணனும் ஆதிமறை யும்தேடும்
காரணனைக் கண்டுகளிப் பாக்கு.
(செருப்பு என்று எடுத்து விளக்குமாறு என்று முடித்துப் பாடியது)
63 செருப்புக்கு வீரர்களைச் சென்றுஉழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்குத் தண்தேன்
பொழிந்ததிருந் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்கு மாறே!
(கரி என்று எடுத்து உமி என்று முடித்துப் பாடியது)
64 கரிஅதனை யேஉரித்த கையா! வளைஏந்து
அரிஅயற்கும் எட்டாத ஐயா! - பரிவுஆக
அண்டர்எல்லாம் கூடி அமுதம் கடைந்தபொழுது
உண்டநஞ்சை இங்கே உமி.
(கரி என்று எடுத்து உமி என்று முடித்துப் பாடியது)
65 கரிக்காய பொரித்தாள்கன் னிக்காயைத் தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாப் பண்ணாள் - உருக்கம்உள்ள
அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்
உப்புக்காண் சீச்சி உமி.
(ஒருவர் குரங்கு என்று தொடங்கி இடம் என்று முடிக்க
வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதற்கிணங்கிப் பாடியது)
66 குரங்குஅனலில் வீழ்ந்துவெறி கொண்டுதேள் கொட்டக்
கரம்செறியப் பாம்புஅலவன் கவ்வ - விரைந்துபோய்
பற்றவே கள்உண்டு பச்சைமிள கைக்கடித்தால்
எத்தனைபார் சேட்டைக்கு இடம்.

முடிப்பு
(சிவனை நஞ்சுணி என்று முடித்துப் பாடியது)
67 சிரித்துப் புரம்எரித்தான் சிந்துரத்தைப் பற்றி
உரித்துஉதிரம் பாய உடுத்தான் - வருத்தமுடன்
வாடும்அடி யாருடனே வானவரும் தானவரும்
ஓடுபயம் தீர்த்தநஞ்சு ணி.

வினா விடை
(மன் என்று எடுத்து மலுக்கு என்று முடித்து
வினா-விடை அமையப் பாடியது)
68 மன்னுதிரு வண்ணா மலைச்சம்பந் தாண்டாற்குப்
பன்னும் தலைச்சவரம் பண்ணுவதேன் - மின்னின்
இளைத்தஇடை மாதர் இவன்குடுமி பற்றி
வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு
(திருவரங்கத்து வைணவர் திருமால் உலகத்தை உண்டபோது
சிவன் எங்கே இருந்தார்? என்று கேட்டார். அதற்கு விடையாகப்
பாடியது)
69 அருந்தினான் அண்டம்எலாம் அன்றுமால் ஈசன்
இருந்தபடி ஏதுஎன்று இயம்பப் - பொருந்திப்
பருங்கவளம் யானைகொளப் பாகன்அதன் மீதே
இருந்தபடி ஈசன்இருந் தான்.
(தில்லை நடராசர் கையில் ஏந்திய மான் அவர் திருமுகத்திற்கு
நேராகத்தன் முகத்தையும் முன்னம் கால்களையும் உயரத் தூக்கி
இருப்பதற்குக் காரணம் யாது? என வினவிய தில்லை மூவாயிரவர்க்கு
விடையாகப் பாடியது)
70 பொன்னம் சடைஅறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும்
தன்நெஞ்சு உவகையுறத் தாவுமே! - அன்னங்கள்
செய்க்கமலத்து உற்றுலவும் தில்லை நடராசன்
கைக்கமலத்து உற்றமான் கன்று.

சொல் நயம்
(பூநக்கி ஆறுகால் முதலியாவகச் சொல்நயம் அமையப் பாடியது)
71 பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்குக் கால்பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!
(சிவன் முருகன், பிள்ளையார், திருமால், சிவனடியார்
ஆகியவர்க்த் தனித்தனியே ஆறதலை உண்டு என்று சொல்நயம்
அமையப் பாடியது)
72 சங்கரற்கும் ஆறுதலை; சண்முகற்கும் ஆறுதலை;
ஐங்கரற்கும் மாறுதலை ஆனதே; - சங்கைப்
பிடித்தோர்க்கும் மாறுதலை; பித்தா! நின் பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலை பார்!
வெண்பாவில் அடக்கிப் பாடியவை
(ஒரு வெண்பாவில் சிதம்பரதேவ என்னும் தொடர் நான்கு
முறை அமையப் பாடியது)
73 அரகர! திருச்சிற் றம்பலவா ணாஅந்
தரரூ ப!மகே ச!சிதம் - பரதே
வ!சிதம் பரதே வ!சிதம் பரதே
வ!சிதம் பரதே வனே!
(ஒன்று முதல் பதினெட்டு வரை அடைமொழி இன்றி ஒரு
வெண்பாவில் அமையப் பாடியது)
74 ஒன்றுஇரண்டு, மூன்றுநான்கு, ஐந்துஆறு, ஏழ்எட்டு
ஒன்பதுபத் துப்பதி னொன்று - பன்னிரண்டு பதின்
மூன்றுபதி னான்குபதி னைந்து
பதி னாறுபதி னேழ்பதி னெட்டு.
(ஒரு வெண்பாவில் ஐந்து டு வரப்பாடியது)
75 ஓ,கா,மா வீ,தோ உரைப்பன் டு,டு,டு,டு,டு
நாகுஆர் குடந்தை நகர்க்குஇறைவர் - வாகுஆய்
எடுப்பர் நடம்இடுவர் ஏறுவர் அன்பர்க்குக்
கொடுப்பர் அணிவர் குழைக்கு.
(மும்மூர்த்திகளின் பெயர், கறி, உணவு, கருவி, அணிகலம், ஊர்தி,
வாழிடம் ஆகியவற்றை ஒரு வெண்பாவில் அடக்கியப் பாடியது)
76 சிறுவன் அளைபறு நெந்நெல் கடுகு
மறிதிகிரி தண்டு மணிநூல் பொறிஅரவம்
வெற்றேறு புள்அன்னம் வேதன்அரன் மாலுக்குக்
கல்தாழம் பூவே கறி.
(பன்னிரண்டு இராசிகளின் பெயரும் முறையும் தொகையும்
அடைமொழி இல்லாமல் ஒர வெண்பாவில் அமைத்துப் பாடியது)
77 பகருங்கால் மேடம்இட பம்துனம், காக்க
டகம்சிங்கம், கன்னி, துலாம்,விர்ச் - சிகம்,த
நுசுமகரம், கும்பம்மீ னம்பன்னி ரண்டும்
வசையறும்இ ராசி வளம்.
(ஆறு அற்புதங்களைக் கூறி, அவற்றை ஒரு வெண்பாவில்
அமைத்துத் தரவேண்டும் என்றவர்க்கு, முதல்¢ல் அப்பா என்பதையும்
முடிவில் யார்க்கும் என்பதையும் சேர்த்து அவர்கள் சொன்ன
வரிசைப்படியே அமைத்துப் பாடியது)
78 அப்பா! குமரகோட் டக்கீரை செவ்விலிமேட்
டுப்பாகற் காய் பருத் திக்குளநீர், - செப்புவா
சல்காற்றுக், கம்பத்து அடியில் தவம்கருமா
றிப்பாய்ச்சல் யார்க்கும் இனிது.
(திருமால் அவதாரம் பத்தையும் பாதி வெண்பாவில்
அடக்கிப் பாடியது)
79 மெச்சுபுகழ் வேங்கடவா, வெண்பாவில் பாதியில்என்
இச்சையில்உன் சன்மம் எடுக்கவா? - மச்சா, கூர்
மாகோலா, சிங்காவா மாராமா, ராமாராமா
கோபா லாமாஆ வாய்.
(ஓரு வெண்பாவில் ஆறு சாதிப் பெயர்கள் அமைத்துப் பாடியது)
80 கம்மாளன் அங்கிக் கணக்கன்என வேதுதித்தார்
செம்மான் சதுரைத் திருஅரசை - அம்மா!கேள்!
வாணியனும் பொன்ஏரி வாழும்வெள் ளாழனுமே
சேணியனும் அன்றே தெரிந்து.
காரணம் காண்பித்துப் பாடியவை
(பாற்கடலில் செந்தூள் எழுந்ததற்குக் காரணம் கற்பித்துப் பாடியது)
81 சுத்தபாற் கடலின் நடுவினில் தூளி
தோன்றிய அதிசயம் அதுகேள்;
மத்தகக் கரியை உரித்தவன் மீது
மதன்பொருது அழிந்திடு மாற்றம்
வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள்
விழுந்துநொந்து அயர்ந்துஅழுது ஓங்கிக்
கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள்
எழுந்தது கலவையின் செந்தூள்!
(தில்லைக் கூத்துப்பிரான் மழு ஏந்தியதற்குக் காரணம்
கற்பித்துப் பாடியது)
82 தில்லைக் காவுக்குள் சிதம்பரனார் ஆட்டைஎடுத்து
இல்லைக்காண் என்றுமழு ஏந்தினார் - சொல்லக்கேள்
மெய்யிலே கண்டேன்யான் மீண்டும்கேள்! ஆயனுமே
நெய்யிலே கையிட்டா னே.
(சிரித்துப்புரம் எரித்ததற்குக் காரணம் கூறிப் பாடியது)
83 தில்லைக்குள் வாழும் சிதம்பர ரே! உமைச் செப்புஎன்றால்
அல்லல் பிழைப்பே பிழைத்துவிட் டீர்!முப்பு ராதியர்மேல்
வில்லைத் தொடுத்தெய்ய மாட்டாமல் நீர்ஆந்த வேளைதண்ணில்
பல்லைத் திறந்துவிட் டீர்இது வோநும் படைத்தொழிலே?
(திருமால் எருதாகச் சுமந்ததற்குக் காரணம் கூறிப் பாடியது)
84 எருதாய்ச் சுமந்துபோய் ஏத்திக்கண் சாத்திப்
பொருதுஆழி வாங்கினதும் பொய்யோ? - பெருமான்
திருநாமம் என்நெற்றி தீட்டியதும் கச்சி
ஒருமா இலக்கம்அல்ல வோ?

இலக்கணம் அமையப் பாடியவை<
(அ வருக்கம் / ககர வருக்கம் அமையப் பாடியது)
85 காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
நோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்குக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
(தகர வருக்கம் அமையப் பாடியது)
86 தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி து¨த்ததா தூதிதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
¦த்ததாதோ? தித்தித்த தோது!
(ஆ இனம் / வல்லினம் அமையப் பாடியது)
87 துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடல்
தொடுத்த தொடைகடுக்கை பொன்போல் - பொடித்துத்
தொடைபடித்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிபடைத்துக் காட்டிற்குக் காடு.
(மெல்லினம் அமையப் பாடியது)
88 மானமே நண்ணா மணமென் மனமென்னும்
மானமான் மன்னா நனிநாணு - மீனமா
மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினும்
மானா மணிமேனி மான்.
(இடையினம் அமையப் பாடியது)
89 விரவலராய் வாழ்வாரை வெல்லல் ஒழிவாய்
இரவுஉலவா வேலை ஒலியே - வரவு ஒழிவாய்
ஆயர்வா யேஅரிவை ஆர்உயிரை ஈராவோ?
ஆயர்வாய் வேயோ அழல்.
(இ மொழிமாற்று / கடைமொழி மாற்று)
90 மாடுதின்பான், பார்ப்பான் மறைஓது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான், கொல்லனே - தேடி
இரும்புஅடிப்பான்; செக்கான் எண்ணெய்விற்பான்; வண்ணான்
பரும்புடைவை தப்பும்;பறை.
(இதுவும் அது)
91 இந்திரையை மார்பில்வைத்தான், ஈசன் உமையைஇடத்து
அந்திபகல்அமைத்தான், அம்புயத்தோன் - கந்தம்மிகு
வெண்தா மரைமயிலே வேண்டிவைத்தான் நாவில் உலகு
உண்டுஉமிழ்ந்த தாமரைக்கண் ணோன்.
(இதுவும் அது)
92 அன்னம் திருமாலுக் காம்கருடன், சங்கரற்காம்
பண்இடபம்; இந்திரற்காம் பார்க்குங்கால் - துன்னு
மதவா ரணம்;அளகை மன்னனுக்காம் பஞ்சு
கதிசேர் புரவி; விதிக் காம்.
(இதுவும் அது)
93 கடம்பற்கு; எண் தோற்அயற்குக்; கண்பதினைந்து ஆமால்
கடம்பற்கே; நால்வாய்கை ஐந்தே - கடம்பல்கோடு
ஆனைமுகற்கு; ஆயிரம்கண் ஆகண்ட லற்கு; இலம்பாடு
ஆன்ஐமுகற்கு; ஆறுஇரண்டு கை.
(இதுவும் அது)
94 ஆயனுக்கு கண்மூன்றுஆம் ஆதிசிவனு க்குஇருகண்
மாயனுக்குச் செங்கையிலே மான்மழுஆம் - நேயமுடன்
சங்கரற்குச் சங்குஆழி தான்மாலுக்கு ஆலம்ஆம்
மங்கைஇடத் தாற்குஆகும் மண்.
(இதுவும் அது)
95 கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோல்எடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் - பொன்திகழும்
அக்குஅணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்.
(இதுவும் அது)
96 வெண்ணெய் திருடிஉண்ட வேணிஅர னார் இருக்கக்
கண்ணன்மேல் வைத்த களவுஏது? - பெண்ணைத்
தலையில் சுமந்தான்மால் சர்ப்பத்தில் ஏறி
அவையில் துயின்றான் அரன்.
(ஈ நிரல்நிறைப் பொருள்கோள்)
97 பொன்னனைவாள் அரக்கனைநூற் றுவரைக் காவைப்
பொருசிலையைக் கனைகடலைப் பொன்னன் ஈன்ற
நல்மகற்குஆய்ச் சுரர்க்குஆய்ஐ வருக்குஆய்க் காதல்
நப்பினைக்குஆய்ச் சானகிக்குஆய் நடவைக்குஆக
மன்உகிரால் வடிக்கணையால் வளையால் புள்ளால்
வயங்குதோள் வலியால்வா னரங்க ளாலும்
முன்உடல்கீ றிச்சிச்சிரம்கொண்டு அமரில் வீழ்த்தி
முதலொடும்கொண்டு இறுத்துஅடைத்தான் மோகூ ரானே.
(இதுவும் அது)
98 கூற்றுவனை வில்மதனை அரக்கர் கோவைக்
கூன்நிலவைக் குஞ்சரத்தை இஞ்சி மூன்றை
ஏற்றுஉலகுஇன் புறஉருவம் மாளத் தோள்கள்
இறஎறிப்ப இமையப்பெண் வெருவ வேவக்
கால்தொழிலால் நயனத்தால் விரலால் கற்றைக்
கதிர்முடியால் கரதலத்தால் கணையால் பின்னும்
ஊற்றுஅழிய உ¨த்துஎரித்து நெரித்துச் சூடி
உரித்துஎரித்தான் அவன்என்னை உடைய கோவே.
(உ/ நடு எழுத்து அலங்காரம்)
99 திருமால்வா கனம்நாவாய் இராசி ஒன்று
சினைதெவிட்டார் மாதுலன்கோ கிலம்இவ் எழின்
உருஆம்ஏழ் எழுத்தின்நடு எனக்குச் செய்தான்
உகந்துபதி னான்கிணையும் தானே கொண்டான்,
ஒருபாகத்து இருத்தினான் கையில் ஏற்றான்
ஒருமதலை தனக்கு அளித்தான் உண்டான் பூண்டான்
பரிவாய்ஒண் கரத்து அமைத்தான் உகந்தான் இந்தப்
பைம்பொழில்தில் லையுள்ஆடும் பரமன் தானே. .

முடங்கல் பாட்டு
(ஞானவரோதயர் என்னும் பெரியவர் மதுரைக்குச் சென்றிருப்பதை
அறிந்து அவருக்கு எழுதி அனுப்பிய கடிதக் கவிதை)
100 முதுரத் தமிழ்தெரி நின்பாடல் தன்னை முறையறிந்தே
எதிர்ஒக்கக் கேட்பதற்கு ஏழ்ஏழு பேர்இல்லை;இன்தமிழின்
பதரைத் தெரிதரக் கோஇல்லை, ஏறப் பலகை இல்லை
மதுரைக்கு நீசென்றது எவ்வாறு? ஞான வரோதயனே.
பதிகளில் பாடியவை
(கும்பகோணத்தில் பாடியது)
101 அம்புஆகி னான்பாதம் அன்றுபிடித் தாய்அவற்குஉன்
செம்பாதம் காட்டாத் திறம்என்னோ? உம்பர்தொழும்
நம்பகோ ணத்தானே! நாகச் சிலைவளைத்த
கும்பகோ ணத்தானே! கூறு.
(திருவிருஞ்சையில் பாடியது)
102 வேண்டிய சைவனார் விட்டதூ துக்கோ?முன்
பாண்டியனார் கையில்அடி பட்டதற்கோ? - ஆண்டவரே!
வானோர் புகழ்விரிஞ்சை மார்க்க சகாயரே!
ஏனோ தலை இறைஞ்சி னீர்?
(திருவீரட்டானத்தில் பாடியது)
103 இவரோவீ ரட்டர் எனும் நாமம் உள்ளோர்?
இவரோ வழுவூரில் ஈசர்? - இவரோ
கடத்தடக்க தக்கரிப்பி டித்துஇழுத்து அழுத்திமெத்த
அடித்துஅறுத்து உரித்துஉடுத்த வர்?
(திருவானைக்காவில் பாடியது)
104 கல்லால் அடித்ததற்கோ, காலால் உதைத்ததற்கோ,
வில்லால் அடித்ததற்கோ, வெட்கினீர்? - சொல்லீரால்
மஞ்சுதனைச் சூழும் மதில்ஆனைக் காவாரே!
நஞ்சுதனைத் தின்றது என்முன் நாள்?
(திருமழபாடியில் பாடியது)
105 வலியமழ பாடி வயித்தநா தற்குத்
தலைவலியாம்; நீர்ஏற்றம் தானாம்; - குலைவலியாம்;
கையோடு சூவையாம்; கால்வாத மாம்; கண்மேல்
ஐயோ! ஏழுஞாயி றாம்.
(அழகர்மலையில் பாடியது)
106 மீனமுகம் ஆமைமுகம் மேதினிஎ லாம்இடந்த
ஏனமுகம் சிங்கமுகம் என்னாமல் - ஞானப்
பழகர்என்றும் சோலைமலைப் பண்பர்என்றும், உம்மை
அழகர்என்றும் பேரிட்டார் யார்?
(திருமங்கையில பாடியது)
107 ஓர்ஒரு மாஒன்றும் ஒன்பதுமா வின்கலையை
ஈர்ஒருமா மும்மாவுக்கு ஈந்ததே! - பார்அறியப்
பொன்மானின் பின்போன பூமங்கை ஆள்வாரைக்
கன்மாவின் வீதிவரக் கண்டு.
(திருவாரூரில் பாடியது)
108 சேலை யுடைஅழகா! தேவரகண் டா!கழுநீர்
மாலை அழகா! மணிமார்பா! - வேலை
அடங்கார் புரம்எரித்த ஆரூரா! வீதி
விடங்கா! பிரியா விடை!
அகத் துறை அமையப் பாடியது
(அ/. பாலனைப் பழித்தல்)
109 கஞ்ச முகையும் களிற்றுஆனை யின்கொம்பும்
அஞ்சுமுலை நாலுமுலை ஆனதுவும் - மிஞ்சுபுகழ்
பெற்றான்தன் மாலை பிறர்க்குஅளித்த தும்சூதலை
கற்றான் பிறந்தபின்பு காண்

(ஆ/ தூது)
110 தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூதாதே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித் திதி.
(இ/ வரும் புனம் கண்டு தலைவன் இரங்கல்)
111 கம்பத்தா னைக்கடையில் கட்டினான் கால்சாய
அம்பைத்தா வித்தான்கால் ஆனதே! - வம்புசெறி
பூவைகாள்! கிள்ளைகாள்! பூங்குயில்காள்! அன்றில்காள்!
பாவையாள் ஆண்ட பதி.
(ஈ/ வெறி விலக்கம்)
112 முந்நான்கில் ஒன்று உடையான் முந்நான்கில் ஒன்றுஎடுத்து
முந்நான்கில் ஒன்றின்மேல் மோதினான் - முந்நான்கில்
ஒன்றுஅரிந்தால் ஆகுமோ, ஒஓ மடமயிலே
அன்று அணைந்தான் வாராவிட் டால்?
(இதுவும் அது)
113 போலநிறம் ஆவார்க்குப் பூண்ஆரம் ஆவாரை
ஏலவதை செய்தால் இயல்புஆமோ? - சாலப்
பழிக்கு அஞ்சும் தென்மதுரைப் பாவை!இருநான்கு
விழக்கஞ்சன் சோமன்அலை வேந்து.
சின்னங்கள்
(சிதம்பரத்தில் உள்ளவை)
114 ஞானசபைக னகசபைசிற் றம்பலம்பே
ரானந்தக் கூடம் திருமூலட் - டானம்பே
ரம்பலம்பஞ் சாவரணம், நாற்கோபு ரம்பொன்செய்
கம்பமண்ட பம்சிவகங் கை.
(திருவாரூரில் உள்ளவை)
115 சங்குதீர்த் தம்திருச் சாளரவா யில்வீர
சிங்காச னம்,திருவந் திக்காப்புப்,- பங்குனிமா
தத்திருநாள், தீர்த்தம் திருவின்நா தன்கோயில்
உத்தரபா கம்திருவா ரூர்.
(கும்பகோணத்தில் உள்ளவை)
116 திருக்குடந் தைஆதி கும்பேசர் செந்தா
மரைக்குளம் கங்கை மகம், கா- விரிக்கரையின்
ஓரம்கீழ்க் கோட்டம்கா ரோணம்மங்கை நாயகியார்
சாரங்க பாணி தலம்.
(சிவத்தலங்கள் / பாண்டிய நாட்டில் உள்ளவை)
117 கூடல், புனவாயில், குற்றாலம், ஆப்பனூர்
ஏடகம்நெல் வேலி, இராமேசம், - ஆடானை
தென்பரங்குன்றமி, சுழியல், தென்திருப்புத் தூர், காசி
வன்கொடுங்குன் றம்,பூ வணம்.
.(உடமைகள் / தில்லை நடராசப் பெருமானுடைய உடைமைகள்)
118 ஏறு கட்டிய கொட்டில் அரங்கமே!
ஈர்இ ரண்டு முகன்வாய் இலாயமே!
மாறு கண்ணப்பன் வாய்மடைப் பள்ளியே!
வாய்த்த ஓடை திருமால் வதனமே!
வீறு சேர்சிறுத் தொண்டன்இல் லாள்உந்தி
வேட்ட நல்கறி காய்க்கின்ற தோட்டமே!
நாறு பூம்பொழில் சூழ்தில்லை அம்பலம்
நாரி பாகற்கு நாடக சாலையே!
(பதினாறு பெருதல்)
119 துதி, வானி, வீரம் விசயம்,சந் தானம், துணிவு, தனம்
அதிதா னியம்,சவு பாக்கியம், போகம், அறிவு, அழகு,
புதிதாம் பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே.
தரிசித்தபோது பாடியவை
(காஞ்சி காமாட்சியம்மனைக் கண்டு வணங்கியபோது பாடியது)
120 மாக்கைக்கு இரங்கும் குருகும் வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒருகொக்கின் கீழே இருக்கும் கரும்குயிலே!
(திருவலஞ்சுழியில் உள்ள பிள்ளையாரைத் தரிசித்தபோது பாடியது)
122 பறவாத தும்பி கருகாத வெம்கரி பண்புரண்டே
இறுகாத தந்தி உருகாத மாதங்கம் இந்துநுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும்சுனையில்
பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனனே!
(திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்தபோது பாடியது)
122 காலையிலும் வேலை கடையக் கயிறுஆகும்
மாலையிலும் பூமுடித்து வாழுமே - சோலைசெறி
செய்யில்ஆ ரம்பயிலும் செந்துருத்தி மாநகர்வாழ்
பொய்இலா மெய்யர்இடும் பூண்.
(மதுரை இறைவனைப் பாடியது)
123 காண்டரிய மேனியும் கந்தரமும் சுந்தரனாய்
ஆண்டதுவும் மேனிக்கு அமைந்ததுவும் - நீண்டமுகில்
மைக்கலிங்கம் ஆகமணி மாடம்அணி மாமதுரைச்
சொக்கலிங்கம் என்னும் சுகம்.
(காஞ்சி ஏகாம்பரநாதரைப் பாடியது)
124 ஆறாது ஒருக்காலும் ஐயோ!ஏ கம்பருக்கு
மாறா வடுவாய் மறையாதே - பேறுஆகச்
செங்கையினா லேஅழுத்திச் செய்யகச்சிக்
காமாட்சி கொங்கையினால் இட்ட குறி.
(சிவபெருமானைப் பாடியது)
125 கப்பணம்தந் தான்குடந்தைக் கார்வேளான்காசிதனில்
உப்பணம்தந் தான்கிரந்தம் ஓதுவான் - முப்பணமும்
வப்பணமாய் மாற்றிமணிக்குழையில் தூக்கினேன்
அப்பணம்போல் ஆவார் அவர்
(ஓர் ஊரில் சிவன் காளை ஊர்தியில் வருவதைக் கண்டு பாடியது)
16 கரிஒன்று பொன்மிகும் பைஏறக் கற்றவர்சூழ்ந்துதொழ
எரிஒன்று செல்வன் துலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு
சொரிகின்ற நாகம்மின் சோற்றினால் ஏறித் தொடர்ந்துவர
நரிஒன்று சொந்தக் கனல்ஏறி வந்தது நம்களத்தே!
(இடப வாகனக் காட்சியைக் கண்டு பாடியது)
127 ஆடுஎடுத்த தில்லை அனவரதத் தாண்டவனனை
மாடுஎடுத்துப் போவதுஎன்ன மாயமோ? நீடும்உயர்
வானத்தார் போற்றுகின்ற வண்மைச் சிதம்பரத்துத்
தானத்தார் பார்த்திருக்கத் தான்.
(அண்ணாமலையார் ஏறி ஊரும் எருது குறித்துப் பாடியது)
128 நடக்கஅறி யாது;கால் நாலும் முடக்கிக்
கிடக்கஅறி யும்;புல்நீர் கேளாது! - இடக்கை
அரைப்பணியார் சோணகிரி அத்தனார் ஓட்டில்
இரப்புணியார் ஏறும் எருது.
(திருவாரூர்த் தியாகேசரைத் தரிசிக்கும்போது பாடியது)
129 தென்ஒக்கும் சோலைக் கமலைப் பிரான்செஞ் சடாஅடவிதான்
என்ஒக்கும் என்னில் எரிஒக்கும் அந்த எரியில்இட்ட
பொன்ஒக்கும் கொன்றை கரிஒக்கும் வண்டுநல் பொன்பணிசெய்
மின்ஒக்கும் கங்கை கிழக்கொல்லன் ஒக்கும்அவ் வெண்பிறையே.
இரட்டுற மொழிதல் - சிலேடை
(ஆமணக்கும் யானைக்கும்)
130 முத்துஇருக்கும் கொம்புஅசைக்கும் மூரித்தண்டு ஏந்திவரும்
கொத்துஇருக்கும் நேரே குலைசாய்க்கும் - எத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு மால்யானை ஆம்.
(வைக்கோலுக்கும் யானைக்கும்)
131 வாரிக் களத்துஅடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவுஆகும் - சீர்உற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை ஆம்.
(பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும்)
132 நஞ்சுஇருக்கும் தோல்உரிக்கும் நாதர்முடி மேல்இருக்கும்
வெம்சினத்தில பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்புஆகும் வாழைப் பழம்.
(பாம்புக்கும் எள்ளுக்கும்)
133 ஆடிக் குடத்துஅடையும் ஆடும்போ தேஇரையும்
முடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டை
பற்றில் பரபரஎனும் பாரில்பிண் ணாக்கும்உண்டாம்
உற்றிடும்பாம்பு என்எனவே ஓது.
(பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும்)
134 பெரியவிட மேசேரும் பித்தர்முடி ஏறும்
அரிஉண்ணும் உப்பும்மேல் ஆடும் - எரிகுணம்ஆம்
தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்.
(முகுந்தனுக்கும் முறத்துக்கும்)
135 வல்அரிஆய் உற்றிடவால் மாதர்கையில் பற்றிடவால்
சொல்அரிய மாப்புடைக்கத் தோன்றுதலால் - வல்லோர்
அகம்தனிலே வாழ்தலால் அன்றுஉலகுஅளந்த
முகுந்தனுமே ஆகும் முறம்.
(மலைக்கும் மதிக்கும்)
136 நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்து
சிலைபோது உலாவுதலால் சென்று - தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதிக்கு நிகர்ஆ வழுத்து.
(மதிக்குநிக ராக வழுத்து என்னும் பாடம் நாய்க்கும் தேங்காய்க்கும்)
137 ஓடும் இருக்கும்அதன் உள்வாய் வெளுத்துஇருக்கும்
நாடும் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்கானது இல்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும்எனச் செப்பு
(மீனுக்கும் பேனுக்கும்)
138 மன்னீரி லேபிறக்கும் மற்றவையி லேமேயும்
பின்னீச்சில் குத்தும் பெருமையால் - சொன்னேன் கேள்!
தேன்உந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னும்சரிஆ மே.
(பனைமரத்துக்கும் வேசைக்கும்)
139 கட்டித் தழுவுதலால் கால்சேர ஏறுதலால்
எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்
வேசைஎனல் ஆமே விரைந்து.
(தென்னைமரத்துக்கும் வேசைக்கும்)
140 பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேல்சுற்றும்
சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்
ஏறி இறங்கவே இன்பமாம் தென்னைமரம்
கூறும் கணிகைஎன்றே கொள்.
(வெற்றிலைக்கும் வேசைக்கும்)
141 கொள்ளுகையால் நீரில் குளிக்கையால் மேல்ஏறிக்
கிள்ளுகையால் கட்டிக் கிடக்கையால் - தெள்ளுபுகழ்ச்
செற்றவரை வென்ற திருமலைரா யன்வரையில்
வெற்றிலையும் வேசை ஆமே.
(கண்ணாடிக்கும் அரசனுக்கும்)
142 யாவருக்கும் ரஞ்சனைசெய்து யாவருக்கும் அவ்வவராய்ப்
பாவனையாய்த் தீதுஅகலப் பார்த்தலால் - மேவும்
எதிரியைத்தன் னுள்ஆக்கி ஏற்ற ரசத்தால்
சதிர்உறவால் ஆடிஅரசு ஆம்.
(கூத்தியருக்கும் குரங்குக்கும்)
143 ஓட்டம் கடியதால் உள்ளவரை மேவுதலால்
சேட்டை எவரிடத்தும் செய்தலால் - நாட்டமுடன்
காத்திரத்தில் குட்டியுறக் கட்டுதலால் தெட்டுதலால்
கூத்தியர்க்கு நேர்ஆம் குரங்கு.
(ஆட்டுக்குதிரைக்கும் காவிரி ஆற்றுக்கும்)
144 ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னவரைச்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - நாடுஅறியத்
தேடு புகழான் திருமலைரா யன்வரையில்
ஆடுபரி காவிரிஆ மே.
(கீரைப்பாத்திக்கும் குதிரைக்கும்)
145 சுட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரிஆகு மே.
(ஆட்டுக்கும் கதவுக்கும்)
146 செய்யுள் கிடைமறிக்கும் சேர்பலகை இட்டுமுட்டும்
ஐயம்அற மேற்றாள் அடர்க்குமே - துய்யநிலை
தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில்
ஆடும் கதவும்நிகர் ஆம்.
(ஆட்டுக்கும் குதிரைக்கும்)
147 கொம்புஇலையே தீனிதின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால்
அம்புவியில் நல்நடையது ஆதலால் - உம்பர்களும்
தேடுநல் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆடும் குதிரையும்நேர் ஆம்.
(துப்பாக்கிக்கும் ஓலைச்சுருளுக்கும்)
148 ஆணி வரைஉறலால் ஆனகுறிப் பேதரலால்
தோணக் கருமருந்தைத் தோய்த்திடலால் - நீள்நிலத்தில்
செப்பார்க்கு உதவாத் திருமலைரா யன்வரையில்
துப்பாக்கி ஓலைச் சுருள்.
(பூசணிக்காய்க்கும் பரமசிவனுக்கும்)
149 அடிநந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியும்ஒரு பக்கத்தில் கொண்டு - வடிவுஉடைய
மாகணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசணிக்காய் ஈசன்எனப் போற்று.
(நிதம்பத்துக்கும் ஒடத்துக்கும்)
150 பலகைஇடும் உள்ளே பருமாணி தைக்கும்
சலம்இறைக்கும் ஆள்ஏறித் தள்ளும் - உலகுஅறிய
ஓடமும் ஒன்றே உலகநாதன் பெண்டீர்
மாடமும் ஒன்றே மதி.
(கரண்டகத்துக்கும் பெண்குறிக்கும்)
151 இட்டுஇட்டு வாங்குதலால் இன்பவெள்ளை தோன்றுதலால்
மட்டுஇட்டு மூடி மறைத்தலால் - முட்டத்
தெருண்டோர்கள் போற்றும் திருமலைரா யன்சீர்க்
கரண்டமும் பெண்குறிஆம் காண்.
(வானவில்லுக்கும் திருமாலுக்கும் வெற்றிவைக்கும்)
152 நீரில் உளவால் நிறம்பச்சை யால்திருவால்
பாரில் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப்
பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை.
(பிள்ளையாருக்கும் முருகருக்கும் சிவனுக்கும்)
153 சென்னிமுக மாறுளதால் சேர்கரம்முன் நாலுகையால்
இந்நிலத்தில் கோடுஒன்று இருக்கையால் - மன்னுகுளக்
கண்உறுத வானும் கணபதியும் செவ்வேளும்
எண் அரனும் நேர்ஆவ ரே.
(கிராமலங்காரமாக முக்கால் முதல் கீழரை வரையும் உள்ள
எண்கள் வரும்படி கச்சித் திருப்பதியில் பாடிய சிலேடைவெண்பா)
154 முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒருமாலின் கீழரைஇன்று ஓது.
(காஞ்சி ஏகாம்பரநாதரைக் கனவில் கண்டு அசதி ஆடிய ஒரு
பெண்ணின் கூற்றாகப் பாடிய சிலேடை வெண்பா)
155 நேற்றுஇரா வந்துஒருவன் நித்திரையில் கைப்பிடித்தால்
வேற்றுஊரான் என்று விடாய்என்றேன் - ஆற்றியே
கஞ்சிகுடி என்றான் களித்தின்று போஎன்றேன்
வஞ்சியரே! சென்றான் மறைந்து.
(மதுரை மீனாட்சியம்மனைக் கண்டு வணங்கிப்
பாடிய சிலேடைப் பாடல்)
156 விள்ளப் புதுமைஒன்று உண்டுஆல வாயினில் மேவுதென்னன்
பிள்ளைக்கு ஒருகுலை மூன்றே குரும்பை பிடித்துஅதிலே
கொள்ளிக் கணன்திட்டி யால்ஓர் குரும்பை குறைந்துஅமிர்தம்
உள்ளில் பொதிந்த இரண்டுஇள நீர்கச்சு உறைந்ததுவே.
157 பாங்கு பெறும்திரு ஐந்நூற்று இரட்டிப் பணவிடையில்
தூங்கும் அதில் ஒரு மாஏற்றம் உண்டு சுரர்முனிவர்
ஆங்குஅவர் செப்பிற்கு அடங்காது உலகம் அனைத்துபெறும்
ஓங்கும் அரங்கத் திருப்பெட் டகத்துள் ஒருமணியே.
(திருமணம் ஒன்றில் மணமக்களுக்குச் சேடை இட்டனர்.
அப்போது அவர்களைச் சிவனும் திருமாலும் காக்க வேண்டும்
என்று வாழ்த்தினார். அச்சமயம் பாடிய சிலேடை வெண்பா)
158 சாரங்க பாணியர் அஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓர்அங்கம் கொய்த உகிர்வாளர் - பார்எங்கும்
ஏத்திடுமை ஆகர் இனிதால் இவர்உம்மைக்
காத்திடுவர் எப்போதும் காண்.
(சிதம்பரத்தில் பாடிச சிவபரமாக அரங்கேற்றிய
சிற்றிலக்கியத்தைத் திருவரங்கத்தில் திருமால்பரமாக
அரங்கேற்றியதோடு, சந்திரோபாலம்பனம் என்னும் அகத்துறை
அமையவும் பாடிய சிலேடைப் பாடல்)
159 இரும்தாரை கேள்வனை ஓங்கும் அராவை எழுபுனலைத்
திருந்தாரை வன்னியை முன்முடித்தோன் செய்யவே ளைப்பண்டு
தரும்தாதை நாயகன் சுந்தரன் தூதன் சமரில்அன்று
பொருந்தார் புரத்துஇட்ட தீப்போல் மதியம் புறப்பட்டதே.
பல்வகைப் / பல்சுவைப் பாடல்கள்
(கின்னரி வாசிக்கும் கிளி எனப் பாடியது)
160 ஆடல்புரிந் தான்என்றும் அந்நாளி லேமூவர்
பாடல்உகந் தான்என்றும் பான்மையினால் கூடலிலே
நல்நரிவா சிக்கு நடைபயிற்றி னான்என்றும்
கின்னரிவா சிக்கும் கிளி.
(பொன் ஆ வரை இவை காய் பூ என அமையப் பாடியது)
161 உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால்
எடுத்ததுவும் பள்ளிக்கு இயையப் - படுத்ததுவும்
அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்
பொன்,ஆ வரை,இலை, காய், பூ.
(இதுவும் அது)
162 தோய்ந்தான் மேய்த் தான்குடையாத் தூக்கினான்
மேன்மேலாச் சாய்ந்தான் எறிந்தான்பின் சாப்பிட்டான் - ஆய்ந்துசொலும்
மன்னா! வரத்தில்வரு மால்சாமி நாதாகேள்!
பொன்,ஆ. வரை,இலை,காய், பூ.
(புங்கம் கொம்பு அங்கு இங்கு என்று பாடியது)
163 எங்கள் மடத்துக்கு எரிகரும்பு வெட்டுதற்குப்
புங்கங்கொம் பங்கிங்கொன் பதுபுளி - யங்கொம்பங்
கிங்கொன் பதுவெட்டி நறுக்கிய வென்வேலங்
கொம்பங் கிங்கொன் பது.
(ராமராமா, கோவிந்தா, வேங்கடவா, நாராயணா என்று பாடியது)
164 இந்தோ திலகம்நுதல்? ராமரா மா!வனசக்
கொந்தோ களபம்முலை? கோவிந்தா! - சந்தம்உறும்
வேலோ இணைவிழிகள்? வேங்கடவா! - நல்லவயிறு
ஆலோ?காண் நாரா யணா!
(குடத்திலே கங்கை அடங்கும் எனப் பாடியது)
165 விண்ணுக்கு அடங்காமல் வெற்புக்கு அடங்காமல்
மண்ணுக்கு அடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கைஅடங் கும்.
(பச்சைவடம் பாகுசேலை சோமன் என்று பாடியது)
166 மாயன் துயின்றதுவும் மாமலராள் சொல்லதுவும்
ஏய குருந்தில்கொண்டு ஏறியதும் - தூயை
இடப்பாகன் சென்னியின்மேல் ஏறியதும் பச்சை
வடம்பாகு சேலைசோ மன்.
(செங்கழுநீர்க் கிழங்கு என்று பாடியது)
167 வாதுஅமணர் ஏறியதும் மாயன் துயின்றதுவும்
ஆதிதடுத்து ஆட்கொண்ட அவ்உருவுழ் - சீதரனார்
தாள்கொண்டு அளந்ததுவும் தண்கச்சிக் காவலா!
கேள்!செங் கழு,நீர்க், கிழங்கு.
(நாநீ நூ தே என்று பாடியது)
168 அரையில் முடியில் அணிமார்பில் நெஞ்சில்
தெரிவை இடத்தமர்ந்தான் சேவை - புறைஅறவே
மான்ஆர் விழியீர்! ம,ல,ர,ணஒற்று ஈறுஆகும்
ஆனாலா நா,நீ,நூ நே.
(ஈ ஏற மலை குலுங்கப் பாடியது)
169 வாரணங்கள் எட்டும் மகமேரு வும்கடலும்
தாரணியும் எல்லாம் சலித்தனவால் - நாரணனைப்
பண்வாய் இடைச்சி பருமத்தி னால்அடித்த
புண்வாயில் ஈமொய்த்த போது.
(தை மாசி பங்குனி மாதம் என்று பாடியது)
170 பாணர்க்குச் சொல்லுவதும் பைம்புனலை மூடுவதும்
தாணு உரித்ததுவும் சக்கரத்தோன் - ஊண்அதுவும்
எம்மானை ஏத்துவும் ஈசன்இடத் தும்சிரத்தும்
தைம்மாசி பங்குனிமா தம்.
(சோகாமா ஏவாதூ என்று பாடியது).
171 சோ,கா,மா, ஏ,வா,தா சொல்லிமன் கூட்டிஉமை
பாகுஆர்ந்த தில்லைப் பரமேசர் - வாகாய்த்
தரித்தார் எரித்தார் தறித்தார் உதைத்தார்
உரித்தார் கணைபடைத்தார் ஊர்க்கு.
(சீத்துப்பூத்து என்று அமையப் பாடியது)
172 அப்புஊரும் செஞ்சடைமேல் அம்புலியைப் பார்த்துப்பார்த்து
எப்போதும் சீத்துப்பூத்து என்னவே - முப்போதும்
வால்அங்குஆட் டாநிற்கும் வாய்அங்கா வாநிற்கும்
ஆலங்காட் டான்பூண் அரா.
(மாம்பிஞ்சுசுவை நோக்கிப் பாடியது)
173 திங்கள் நுதலார் திருமணம்போ லேகீறிப்
பொங்குகடல் உப்பைப் புகட்டியே - எங்களிட
ஆச்சாளுக்கு ஊறுகாய் ஆகாமல் ஆருக்காக
காய்ச்சாய் வடுவாமாங் காய்?
(பெண்களால் மாண்டவர்களைப் பற்றிப் பாடியது)
174 வாலி மடிந்ததுவும் வல்அரக்கர் பட்டதுவும்
கோலமுடி மன்னர் குறைந்ததுவும் - சால
மதியுடைய நூற்றுஒருவர் மாண்டதுவும், ஐயோ
சதஇகரத் தால்வந்த தாழ்வு.
(நல்லோருக்கு உதவி செய் எனப் பாடியது)
175 பண்புளருக்கு ஓர்பறவை பாவத்திற்கு ஓர்இலக்கம்
நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி - திண்புலியை
ஆள்வார் மதுரை அழகியசொக் கர்க்குஅரவம்
நீள்வா கனம்நல் நிலம்.
(தென்றல் காற்று வீசாத போது பாடியது)
176 அம்புஏந்து கையான் அவன்பதியில் ஐம்மாவைக்
கொம்புஏந்தி தந்தைபணி கொண்டதோ? - அன்பாய்
அரிந்த மகவை அமுதுக்கு அழைஎன்று
இருந்தவன்தன் செங்காட்டி லே.
(இடைச்சி நீர் கலந்த மோரைக் கொடுத்தபோது பாடியது)
177 கார்என்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது
நீர்என்று பேர்படைத்தாய் நெடும்தரையில் வந்ததன்பின்
வார்ஒன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததன்பின்
மோர்என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!
இறைவனது ஏழ்மையை எடுத்துப் பாடியது)
178 மாடுகிடப் பாடி மனையாள் உடல்பாதி
தேடுதற்குப் பிள்ளை தினைக்கடம்பன் - நாடில்
அரவுஆ பரணம்பூண் அம்பலவா! பிச்சை
இரவாமல் நீர்என்செய் வீர்.
(சிவனுக்கு குரு முருகன் என்று பாடியது)
179 எவர்தமக்கும் ஞானகுரு ஏகாம்ப ரேசர்
அவர்தமக்கு ஞானகுரு ஆரோ? - உவரிஅணை
கட்டினான் பார்த்திருக்கக் காதலன் தன்தலையில்
குட்டினான் தானே குரு.
(குப்பாச்சியாயி என்பவளுடைய இயல்பைக் கூறியது)
180 சோற்றை அரசிலைமேல் தூவி வழுதுணங்காய்க்
கீற்றை அதன்மேல் கிடத்தியே -ஆற்றுமிக
அப்பச்சி! கண்ணே! அரசே! அருந்துஎன்பள்
குப்பச்சி ஆயி குணம்.

(தாசி கமலாட்சியின் கண்களைப் பாடியது)
181 முற்றாத காஞ்சியினும் முல்லையினும் பாலையினும்
கற்றான்பின் சென்ற கருணைமால் - பெற்றான்தன்
ஆலைப் பதித்தார்அளகத்தி யாட்குஅயனார்
வேலைப் பதித்தார் விழி.
(எல்லாவற்றிக்கும் மதுரை சொக்கநாதரே
தலைவர் என்று பாடியது)
182 நூலாம்நா லாயிரநா னூற்றுநாற் பத்துஒன்பான்
பாலாம்நா னூற்றுநாற் பத்துஒன்பான் - மேலாம்நாற்
பத்துஒன்பான் சங்கம்அறு பத்துநால் ஆடலுக்கும்
கர்த்தன் மதுரையில்சொக் கன்.
(வேசை ஒருத்தி கதை சொல்லும்படி கேட்டபோது
பாடியது)
183 சோமன் புறப்படத் தென்றலும் வீசத் துளில்ஒழிய
யாமங்கள் தோறும் குயில்வந்து கூவிடும்அந் நேரத்திலே
நாமும் பிழைத்து மனிதர்முன் பேசிட நாமும்உண்டாய்
காமக் கலகம் தெளிந்தபின் நானும் கதைசொல்வனே!
(பன்றிக்கு மார்பிலே கொம்பு முளைத்தது
என்று பாடியது)
184 தெருமுட்டப் பாளை சிதறிவளர் பூகத்
தருமுட்டச் செவ்வாளை தாவும் - திருமுட்டத்து
ஊரிலே கண்டேன் ஒருபுதுமை! பன்றிக்கு
மாரிலே கொம்புஆன ஆறு.
(கடுங்காற்றும் மழைகாற்றும் எனப் பாடியது)
185 நீரோ பிறவா நெறிகாட்டி யார்எமக்கு
நீரோ சமிசை நிலையிட்டீர் - நீரேஇவ்
விங்களம்ஏன் செய்தீர் விடும்கடும்காற் றும்மழைகாட்
டும்!சுடுநட் புப்பகைகாட் டும்!
(ஒருவர் யசோதை கண்ணனை மத்தினால் அடித்ததைப்
பற்றி இரங்கிப் பாடவேண்டும் என்று கேட்டபோது பாடியது)
186 வண்ணம் கரியன் என்றும் வாய்வேதம் நாறிஎன்றும்
கண்ணன்இவன் என்றும் கருதாமல் - மண்ணை
அடிப்பது மத்தாலே அளந்தானை ஆய்ச்சி
அடிப்பது மத்தாலே அழ.
(மருதீசர் மன்மதனை எரித்ததைக் குறித்துப் பாடியது)
187 கண்ணன் இடும்கறியும் காட்டுசிறுத் தொண்டர்அன்பில்
பண்ணுசிறு வன்கறியும் பற்றாதோ? -தண்ணோடு
மட்டுஇயையும் சோலை மருதுஈச ரேயன்றிக்
குட்டியைஏன் தீய்த்தீர் குறித்து?
(கூத்துப்பிரான் முப்புரத்தையும் காமனையும் எரித்ததைக்
குறித்துப் பாடியது)
188 சித்தசனை முப்புரத்தைச் செந்தழலால் வீழஒரு
பத்தினியைக் கொண்டுஎரியப் பண்ணினான் - நித்தம்
மறைஓத வீற்றிருக்கும் மண்டலமென் தில்லைப்
பிறைசூடும் வேணிப் பிரான்.
(திருக்கண்ணபுரம் சவுரி நாராயணப் பெருமாள்
பிறந்த நாள் இதுவாம் எனப் பாடியது)
189 உத்திரத்துக்கு ஓர்நாள் உரோகணிக்குப் பத்தாம்நாள்
சித்திரைக்கு நேரே சிறந்தநாள் - எத்திசையும்
கார்ஆரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ்சவுரி
நார யணன்பிறந்த நாள்.
(கண்ணன் சங்கை முழங்காவிட்டால் பாண்டவர்
தோற்பர் எனப் பாடியது)
190 சதுர்அரங்கர் சங்கத்து அழகர்செங் கைச்சங்கை
அதரம்மிசை வைத்திலரே ஆயின் - முதல்ஐ
வரும்குளத்தில் முண்டகம்கை வைப்பர்அன்றே அன்று
பொரும்களத்தில் நூற்றுவர்முன் போய்.
(திருவீழியப்பருக்குத் திருமால் காளை
ஆனார் எனப் பாடியது)
191 காலால் படிஅளக்கும் கண்இடத்து பூசிக்கும்
சேலாம் கமடமாம் சிங்கமாம் - பால்ஆகும்
ஆழிஅப்பி லேதுயிலும் ஐவர்க்குத் தூதாகும்
வீழியப்பர் ஏறும் விடை.
(திருவாரூர்த் தியாகருக்குத் தீருமால் விடையானான்
எனப் பாடியது)
192 பார்அளக்கும் தூதுசெல்லும் பைஅரவின் மேல்நடிக்கும்
சீர்அகலி சாபத்தைத் தீர்க்குமே - ஊர்அருகில்
சண்டச் சகடுஉதைக்கும் தையலாய்! கார்நீல
கண்டத்தார் ஊர்ஆன் கழல்.
(திருமலைராயன் பட்டினத்தில் மண்மாரி
பெய்யப் பாடியது)
193 செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்
அய்யா! அரனே! அரைநொடியில் - வெய்யதழல்
கண்மாரி யான்மதனைக் கட்டுஅழித்தால் போல்தீயோர்
மண்மாரி யால்அழிய வாட்டு.
(இதுவும் அது)
194 கோளர் இருக்கும்ஊர் கோள்கரவு கற்றஊர்
காளைகளாய் நின்று கதறும்ஊர் - நாளையே
விண்மாரி அற்று வெளுத்து மிகக்கறுத்து
மண்மாரி பெய்கஇந்த வான்.
(நரசிங்கத்தைச் சிவன் சிம்புள் ஆகி அடக்காவிட்டால்
திக்கும் உலகும் அழிந்து போய்விடும் எனப் பாடியது)
195 கூதிககுஎட்டு ஏழும் குலைந்து நடுநடுங்கிப்
பூதிக்குஒப்பு ஆகஅன்றே போய்விடுமே - ஆதி
நரக்காண் தகவரியை நல்சரபம் ஆகிச்
சுருக்கா விடின்நஞ்சு உணி.
(என்னை இடுக்கடிபாயைச் சுருட்டடி என்பதை
நிரையசைக் கட்டளைக் கலித்துறையாகப் பாடியது)
196 தடக்கட லில்பள்ளி கொள்வோம் அதனைநல் சங்கரனார்
அடல்புலிக் குட்டிக்கு அளித்தன ராம்அது கேட்டுநெஞ்சில்
நடுக்கம்வந்து உற்றது கைகால் எழு¡நளி னத்திஎன்னை
இடுக்கடி பாயைச் சுருட்டடி எகடி அம்பலத்தே.
(ஒருவர் போவாள், வருவாள், புருவாள், புறப்படுவாள்,
ஆவாள், இவாள் அவாளாம் என்று பாடுக என்றபோது பாடியது)
197 செற்றவரை வென்ற திருமலைர யன்கரத்தில்
வெற்றிபுரி யும்வாளே வீரவாள் - மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவாள் இவார் அவா ளாம்!
(குடந்தையில் சோழியப் பார்ப்பனன் ஒருவன் தான்
உண்டுகொண்டிருந்த இலையில் அவிழ்ந்து விழும் தன் குடுமியை
எடுத்து உதறியபோத அதனின்றும் எச்சில் சோறானது
காளமேகப் புலவரது இலையில் வந்து விழக்கண்டு அது
குறித்துச் சினமுற்று பாடியது)
198 சுருக்குஅவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்
பொருக்குஉலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்
கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்!
(திருவரங்கத் து வைணவப் பார்ப்பனர்கள் விநாயகருக்கு
நாமம் இட்டு இவர் விஷ்ணுவே பரம் என்று நாமம் போட்டுக்கொண்டு
இருக்கிறார் பாரும் என்று இகழ்ந்து சொன்னதற்குப் பாடியது)
199 தந்தை பிறந்துஇறவாத் தன்மையினால், தன்மாமன்
வந்து பிறந்து இறக்கும் வன்மையினால் - முந்துஒருநாள்
வீண்இக்கு வேளை எரித்தான் மகன்,மாமன்
காணிக்கு வந்துஇருந்தான் காண்.
(திருவரங்கத்து வைணவரும் திருவானைக்காச்
சைவரும் சண்டையிட்டுக் கொண்டபோது அவர்களைச்
சமாதானப்படுத்திப் பாடியது)
200 சீரங்கத் தாரும் திருஆனைக் காவாரும்
போர்அங்கம் ஆகப் பொருவதுஏன்? - ஓரங்கள்
வேண்டாம்இது என்ன விவரம் தெரியாதோ
ஆண்டானும் தாதனும்ஆ னால்?
(எட்டிகுளத்துச் குட்டிசெட்டி தன் மகளை மணம்செய்து
கொடுத்தபோது அளித்த சீர்வரிசைகளைப் பற்றிப் பாடியது)
201 எட்டி குளத்தில் இருந்து சரக்குவிற்கும்
குட்டிசெட்டி தன்மகளைக் கொண்டுபோய் -நொட்டுதற்கே
ஆயிரம் யானை எழுநூறு கூன்பகடு
பாயும் பகடுஎண்பத்து ஐந்து.
(ஓர் ஊரார்மேல் சினம்கொண்டு அந்த ஊரில் உள்ள
ஏரி உடைந்து ஓட்டை ஏரி ஆகும்படி பாடியது)
202 கலங்கல் துறைஅதனில் காராளர் போதத்
தெலுங்கப்ப நாரணன்தெண் டிக்கச் - சலம்பெருகி
நட்டாறு கொண்டுகரை நன்றாய் உடைந்துநீர்
கட்டாது ஒழிதல் கடன்.
(ஒருநாள் இரவு மதுரையில் பசியால் வாடிக்
கொசுக்கடியால் தொல்லைபட்டபோது பாடியது)
203 மசகம் இசைகாட்ட மாடுமணி காட்ட
நிசியும் ஒருக்காலை நீட்டப் - பசியால்
வாடினேன் வாடி மனம்தளர்ந்து நான்உன்னைத்
தேடினேன் தென்னவரா யா!
(நெல்லிக்காய் ஊறுகாய்களைக் களவு செய்த
பெண்களைப் பாடியது)
204 பாடுபட்டுத் தேடிப் பலகாரம் உப்புஅமைத்தே
ஓடுவட்ட மாக உடைத்துஅடைத்து - வேடுகட்டும்
நெல்லிக்கா யைத்திருடும் நீலிகாள்! உங்கள்இடை
இல்லிக்குஆர் ஆப்புஏற்று வார்?
(திம்மி என்னும் தெலுங்குத் தேவடியாள் மரியாதை
இன்றிப் பேசியதைக் குறித் துப் பாடியது)
205 ஏமிரா ஓரி என்பாள் எந்துண்டி வஸ்தி என்பாள்
தாம்இராச் சொன்ன எல்லாம் தலைகடை தெரிந்தது இல்லை
போம்இராச் சூழும் சோலை பொருகொண்டைத் திம்மி கையில்
நாம்இராப் பட்ட பாடு நமன்கையில் பாடு தானே!
(செட்டிகள் இவரைக்கண்டு தங்கள் மொழியில்
பேசிக்கொண்டதைக் குறித்துப் பாடியது)
206 கருந்தலை செந்தலை தங்கான்
திரிகால் கடையில்சுற்றி
வருந்திக் குடவற்கும் தாட்டிக்கும்
கொத்துஇட்டு மாய்வதுஅல்லால்
கரந்தைகள் ஆண்டில் ஒருகால்
வருவது கண்டுஇருந்தும்
அரும்புக்கும் கொத்துக்கும் வந்தார்
பிழைப்பது அரிதுஎன்பரே!
(ஒருவர் சிவனைக் குறித்து நீறாவாய், நெருப்பாவாய், கூறாவாய்,
கொழுந்தாவாய், நட்டமாவாய், நஞ்சாவாய் என ஒரு வெண்பாப் பாட
வேண்டும் என்று கேடடுக் கொண்டபோது பாடியது)
207 நீறுஆவாய் நெற்றி நெருப்பு ஆவாய் அங்கம்இரு
கூறுஆவாய் மேனி கொளுத்துவாய் - மாறாத
நட்டம்ஆ வாய்சோறு நஞ்சுஆவாய் நாயேனை
இட்டமாய்க் காப்பாய் இனி.
(முருகன் குறத்தியை மணந்தான் என்று சிவன் முதலானோர்
வருந்தியதற்கு வேடிக்கையாகப் பாடியது)
208 மருகுஇருக்கும் வேளூரின் வலித்தமகன்
குறமகளை மணந்தான் என்று
உருகிஅரன் நஞ்சுஉண்டான்; உமையவளும்
தவம்புரிந்தாள் உயர்மால் மேனி
கருகிமிக மண்தின்றான்; கமலன்முகம்
நால்ஆனான்;கடவு ளோர்கள்
இருவிழியும் இமையாமல் இரவுபகல்
உறங்காமல் இருக்கின் றாரே!
(கயிற்றாற்றில் உள்ள பெருமானைத் தூக்கும்படி காளமேகப்
புலவரை வருத்திச்சுமத்தியபோது பாடியது)
209 பாவைமணம் கமழுகின்ற கயிற்றாற்றுப்
பெருமாளே! பழிகா ரா! கேள்
வேளைஎன்றால் இவ்வேளை பதினாறு
நாழிகைக்கு மேல்ஆ யிற்று! என்
தோளைமுறித் ததும்அன்றி நம்பியா
னையும்கூடச் சுமக்கச் செய் தாய்!
நாளைஇனி யார்சுமப்பார்? எந்நாளும்
உன்கோயில் நாசம் தானே!
(வீரசென்னன் என்னும் வடுகப் பார்ப்பனன் வீட்டில் அளித்த
கூழைக் குடித்துப் பாடியது)
210 ஏழ்ஆனை அடித்தபுலி தனைஅடித்தான்
வீரசென்னன் என்றே காட்டில்
வாழாமல் சிறுபுலிகள் ஈப்புலியோடு
எலிப்புலியாய் வடிவம் கொண்டு
பாழ்ஆகிக் காடுஎல்லாம் பரிதவிக்க
வடுகர்அடுப்பு அடியில் வந்து
கூழ்ஆகி வயிற்றினில்போம் பொழுதுகுணம்
போகாமல் குமுறும் தானே.
(தில்லைக் கோவிந்தராசர் கால்மாட்டிலிருந்து சபாநாதர் நடனம்
செய்கின்றதைப் பாரும் என்று வைணவர் அவமதித்துச் சொன்னபோது
பாடியது)
211 ஆட்டுக்கு இசைந்தவர் அம்பல வாணர் அவர்க்குஎதிரே
நீட்டிற்று மால்வட பாலினில் கால்என நீதினையேல்
சூட்டுஉற்ற முப்புரம் செற்றவர் தம்மைச் சுமந்து அலுத்த
மாட்டுக்குஎன் னோஇடம் கால்நீட்டல் சொல்ல வழக்கு இல்லையே!
(தில்லை கோவிந்தராசர் கோயிலில் இருக்கும் நம்பியார்
விஷ்ணுவே பரம் என்றதற்குப் பாடியது)
212 சத்துஆகி ஐந்தையும் தாங்காத தெய்வம் தனிமறையும்
சுத்தா எனும்தெய்வம் அம்பலத் தேகண்டும் கண்கள்இரு
பத்துஆன வன்மைந்தன் பொய்த்தேவி யைக்கொல்லப் பார்த்துஅழுத
பித்துஆன வன்தனை யோதெய்வம் ஆகப் பிதற்றுவதே!
(திருவரங்கர்முன் முருகர் வர, அவரது மயில் ஊர்தியைக் கண்டு,
அத்திருவரங்கரது படுக்கையான பாம்பு அஞ்சியதாகப் பாடியது)
213 திரண்டுஇமை யோர்தொழும் தென்அரங்
சேகர்முன் செங்கைகள் ஆறு
இரண்டுஉடை யோனும் எதிர்சென்ற தால்எரித்
தார்தமைக்கண்டு
அருண்டுஎழும் ஐவர்க்குத் தேர்ஊர் பவன்கொள்
அணைவெருண்டு
புரண்டு ஒரு புற்றைக் கடந்துஒரு புற்றில்
புகுந்ததுவே!
(அதிமதுரகவிராயர் உன் பெயர் என்ன? பாடத் தெரியுமா?
என்று கேட்டபோது பாடியது)
214 இம்என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம்என்றால் ஆயிரம்பாட்டு ஆகாதோ? - சும்மா
இருந்தால் இருந்தேன்; எழுந்தேனே ஆயின்
பெரும்காள மேகம் பிளாய்!
(திருமலைராயனுடைய அரசரவைப் புலவர்களை நீங்கள் யார்
என்று காளமேகப் புலவர் கேட்டபோது அதற்கு அவர்கள் தங்களைக்
கவிராயர் என்று சொன்னார்கள். அப்போது பாடிய பாடல்(
215 வால்எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன்இரண்டு
கால்எங்கே? உள்குழிந்த கண்எங்கே? - சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள்! நீவிர்
கவிராயர் என்றுஇருந்தக் கால்.
(அதிமதுர கவிராயரின் கட்டியக்காரர் கட்டியம் கூறியதற்குப் பாடியது)
216 அதிமதுரம் என்றே அதிலம் அறியத்
துதிமதுரம் ஆய்எடுத்துச் சொல்லும் புதுமைஎன்ன?
காட்டுச் சரக்குஉலகில் காரம்இல் லாச்சரக்குக்
கூட்டுச் சரக்குஎனவே கூறு.
(அதிமதுரத்தின் கட்டியக்காரர் காளமேகத்திடம் நீர்யார் என்று
கேட்டதற்குப் பாடியது)
217 கழியும் பிழைபொருள் தள்ளிநல்
நூல்அம் கடலின்உண்டு
வழியும் பொதியை வரையினில்
கால்கொண்டு வண்கவிதை
பொழியும் புலவர் மனத்தே இடித்து
முழங்கிமின்னிப்
பொழியும் படிக்குக் கவிகாள
மேகம் புறப்பட்டதே.
(அதிமதுரகவி முதலியோர், காளமேகப் புலவரைப் பார்த்து, நீ யார்?
உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டபோது பாடியது)
218 தூதுஅஞ்சு நாழிகையில் ஆறுநா ழிகைதனில் சொற்சந்த மாலை சொல்லத்
துகள்இலா அந்தாதி எழுநா ழிகைதனில் தொகைபட விரித்துஉ ரைக்கப்
பாதம்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனில் பரணிஒரு நாள்மு ழுதுமே
பாரகா வியம்எலாம் ஓர்இரு தினத்திலே பகரக் கொடிகட்டி னேன்
சீதம்செ யும்திங்கள் மரபினில் நீடுபுகழ் செய்யதிரு மலைரா யன்முன்
சீறுமாறு என்றுமிகு தாறுமா றுகள்சொல் திருட்டுக் கலிப்புல வரைக்
காதுஅங்கு அறுத்துச் சவுக்கிட்டு அடித்துக் கதுப்பில் புடைத்து வெற்றிக்
கல்லணையி னொடுகொடிய கடிவாளம் இட்டுஏறும் கவிகாள மேகம் நானே.
(இயல்பான பொருளோடு இடக்கர் அடக்கல்பொருளும் அமையப் பாடியது)
219 ஆண்டி குயவா! அடா!உன்பெண் டாட்டிதனைத்
தோண்டிஒன்று கேட்டேன் துரத்தினாள் - வேண்டிஇரு
கைக்கரகம் கேட்டேன்நான் கால்அதனைத் தூக்கியே
சக்கரத்தைக் காட்டினாள் தான்!
(சிவனுக்கு அரைக்கண் என்று பாடியது)
220 முக்கண்ணன் என்றுஅரனை முன்னோர் மொழிந்திடுவார்
அக்குஅண்ணற்கு உள்ளதுஅரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ஒன்றரைமற்று ஊன்வேடன் கண்ஒன்று
அமையும் இதனால்என்று அறி.

காளமேகப் புலவர் பாடல்கள் முற்றிற்று


This webpage was last updated on 14 January 2005
Please send your comments to the webmasters of this website.