ponniyin celvan
of kalki, part 4E
(in tamil script, unicode format)

அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்


நான்காம் பாகம் - மணிமகுடம்



நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை
Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai,India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram,Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan,Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. VinothJagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devotedto preparation of electronic texts of tamil literary works and to distributethem free on the Internet. Details of Project Madurai are available atthe website

http://www.projectmadurai.org/

You are welcome to freely distribute this file, provided this headerpage is kept intact.

நான்காம் பாகம் - மணிமகுடம்


நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - கரிகாலன் கொலை வெறி
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - "அவள் பெண் அல்ல!"
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - "புலி எங்கே?"
நாற்பத்து நான்காம் அத்தியாயம் - காதலும் பழியும்
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - "நீ என் சகோதரி!"
நாற்பத்தாறாம் அத்தியாயம் - படகு நகர்ந்தது!

நாற்பத்தொன்றாம் அத்தியாயம்
கரிகாலன் கொலை வெறி




ஆதித்த கரிகாலன் தான் வேட்டையாடச் சென்று வெகு காலமாயிற்று என்றும், வில்வித்தையையேமறந்து போயிருக்கக் கூடும் என்று சொன்னான் அல்லவா? அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில்வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பியஅம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும்,சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள்மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன.கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்குஅதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில்காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்தஉதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும்வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீதுபாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து,"கந்தமாறா! நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா? என்னைக் கொல்ல முயன்றாயா?" என்று கேட்டான்.கந்தமாறன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன; பிறகு அவன் வில்லை வளைக்கவே இல்லை. ஏறக்குறையசூரியன் உச்சி வானத்தை அடைந்த சமயத்தில் எல்லாரும் களைத்துப் போனார்கள். சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு வீடு திரும்பலாமே என்ற யோசனை எல்லாருடைய மனத்திலும் தோன்றியது. ஆனால் கரிகாலனோகளைத்துப் போன குதிரையை மேலும் காட்டு வழிகளில் செலுத்திக் கொண்டு போனான்.

காலை நேரத்திலெல்லாம் கந்தமாறன் கரிகாலனையொட்டிப் போய்க்கொண்டிருந்தான்."என்னைக் கொல்லப் பார்த்தாயா?" என்று கரிகாலன் அவனைக் கேட்ட பிறகு கந்தமாறன் பின்னால்தங்கிப் பார்த்திபேந்திரனுடன் சேர்ந்து கொண்டான். அவனிடம் இளவரசரின் முரட்டுத்தனமான நடத்தையும்பேச்சையும் பற்றிக் குறை கூறத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அதற்குச் சமாதானம் கூற முயன்றான்.இந்தச் சமயம் பார்த்து வந்தியத்தேவன் கரிகாலனை அணுகினான். பிறகு அவர்கள் இருவருமே சேர்ந்துமுன்னால் சென்று கொண்டிருந்தார்கள். வந்தியத்தேவன் வில்லும் அம்பும் எடுத்து வரவில்லை. அவனுக்குவில்வித்தை அவ்வளவாகப் பழக்கமும் இல்லை. கையில் வேல் மட்டும்தான் கொண்டு வந்திருந்தான்.ஆகையால் கரிகாலனுடைய வேட்டையில் குறுக்கிடாமல் அவன் ஜாக்கிரதையாகச் சென்று வந்தான்.ஏதாவது அபாயம் நேருவதாக இருந்தால் வேலை உபயோகிப்பதற்கு மட்டும் எச்சமயமும் ஆயத்தமாகப்போய்க் கொண்டிருந்தான். அதற்கு அவசியம் உச்சி நேரம் வரை ஏற்படவில்லை.

கந்தமாறன் பார்த்திபேந்திரனிடம், "இன்றைக்கு இவ்வளவு வேட்டை ஆடியது போதாதா? இன்றுஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே.இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக்குத்தான் போக வேண்டும். இன்றைக்குப் போதும்;வீடு திரும்பலாம்" என்று சொல்லுங்கள்!" என்று கூறினான்.

அதற்குப் பார்த்திபேந்திர பல்லவன், "தம்பி! இளவரசரின் உள்ளத்தில் ஏதோகொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துவிடுவது என்றால்இலேசான காரியமா? அந்த ஆத்திரத்தையெல்லாம் வேட்டையில் காட்டுகிறார்; அது வரையில் நல்லதுதான்.இல்லாவிடில் உன் மீதும் என் மீதும் காட்டுவார். அவராகச் சலிப்புற்றுப் 'போதும்' என்று சொல்லட்டும்;நாம் தலையிட வேண்டாம்" என்றான்.

இந்தச் சமயத்தில் அந்த வனம் வனாந்தரமெல்லாம் நடுங்கும்படியான உறுமல் சத்தம் ஒன்று கேட்டது.கந்தமாறன் முகத்தில் பீதியின் அறிகுறி காணப்பட்டது. "ஐயோ! காட்டுப்பன்றி! இளவரசரை நிற்கச்சொல்லுங்கள்!" என்றான்.

"காட்டுப்பன்றிக்கு என்ன அவ்வளவு பயம்? புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட பாட்டில்பன்றி எந்த மூலை?"என்றான் பார்த்திபேந்திரன்.

"நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள் இந்தக் காடுகளில் உள்ள பன்றிகள் புலி கரடிகளைசின்னாபின்னமாக்கிவிடும்! யானையை முட்டிக் கீழே தள்ளிவிடும்! குதிரைகள் இலட்சியமே இல்லை, அம்பும்வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது!...ஐயா! ஐயா! நில்லுங்கள்" என்று கந்தமாறன் கூச்சலிட்டான்.

அதே சமயத்தில் காட்டுப் புதர்களிலே ஒரு சிறிய சுழற்காற்று அடிப்பது போன்றஅல்லோலகல்லோலம் ஏற்பட்டது. மறு நிமிடம் குட்டி யானைகளைப் போன்ற கரிய பெரிய உருவம் வாய்ந்தஇரண்டு காட்டுப்பன்றிகள் வௌிப்பட்டன. அவை ஒரு கண நேரம் நின்று குதிரைகளையும் அவற்றின் மீதுவந்தவர்களையும் உற்றுப் பார்த்தன. கந்தமாறன், "ஜாக்கிரதை ஐயா! ஜாக்கிரதை"! என்று கூச்சலிட்டான்.பின் தொடர்ந்து வந்த வேட்டைக்காரர்களில் சிலர் இதற்குள் அங்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.அவர்கள் தாரை தப்பட்டைகளைப் பிராணன் போகிற அவசரத்துடன் முழக்கிக் கொண்டு "கா கூ"என்று கூச்சலிட்டார்கள்.

அந்தப் பன்றிகள் என்ன நினைத்துக் கொண்டனவோ என்னமோ தெரியவில்லை. ஒருவேளைஅவற்றின் குட்டிகளை நினைத்துக் கொண்டிருக்கலாம். குட்டிகளுக்கு ஆபத்து வராமல் தடுக்க வேண்டுமென்றஉணர்ச்சியினால் தூண்டப்பட்டிருக்கலாம். அல்லது தாரை தப்பட்டைகளின் சப்தத்தைக் கேட்டு மிரண்டிருக்கலாம்.பன்றிகள் இரண்டும் வெவ்வேறு திசையை நோக்கி பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கின.

கந்தமாறன் அதைப் பார்த்துவிட்டு, "கோமகனே! அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டைநாய்கள் இல்லாமல் ஒரு காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது!" என்றான். கரிகாலன் அதைக்காதில் வாங்கிக் கொள்ளாமல் வில்லை வளைத்து அம்பை விட்டான். அது ஒரு பன்றியின் முதுகில் போய்த்தைத்ததைப் பார்த்து விட்டு இளவரசன், "ஆஹா!" என்று உற்சாக கோஷம் செய்தான். அடுத்த கணத்தில்அந்தப் பன்றி உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது. அம்பு தெறித்துக் கீழே விழுந்தது; பன்றி மேலே ஓடியது.

கந்தமாறன் அப்போது சிரித்த சிரிப்பில் ஏளனத்தின் தொனி தெரிந்தது. கரிகாலன்அவனைப் பார்த்து, "கந்தமாறா! எங்கே ஒரு பந்தயம்! நானும் வந்தியத்தேவனும் அந்தப் பன்றியைத்தொடர்ந்து போய் அதைக் கொன்று எடுத்துக் கொண்டு வருகிறோம். நீயும் பார்த்திபேந்திரனும்இன்னொரு பன்றியைத் துரத்திப் போய்க் கொன்று எடுத்து வாருங்கள்! இந்தப் பன்றிகள் இரண்டையும்கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது!" என்று சொல்லிக் கொண்டே குதிரையைத் தட்டி விட்டான்;வந்தியத்தேவனும் அவனுடன் சென்றான்.

அவர்கள் தொடர்ந்து சென்ற காட்டுப்பன்றி எந்தத் திசையில் எந்த வழியாகப் போய்க்கொண்டிருக்கிறதென்பது கொஞ்ச நேரம் வரையில் தெரிந்து கொண்டிருந்தது. ஏனெனில் பன்றி சென்றவழியிலிருந்த செடி கொடிகளும் புதர்களும் அந்தப் பாடுபட்டிருந்தன. பின்னர் ஒரு சிறிய கால்வாய்குறுக்கிட்டது. அது காட்டில் பெய்யும் மழைத் தண்ணீரை ஏரியில் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்.அவ்விடத்துக்கு வந்த பிறகு பன்றி எந்தப் பக்கம் போயிற்று என்று கண்டுபிடிக்க முடியவில்லை.கால்வாயைக் கடந்து அப்பாலுள்ள காட்டுக்குச் சென்றதா? கால்வாய் ஓரமாக இந்தப் பக்கமாகவோ,அந்தப் பக்கமாகவோ சென்றதா என்பதை அறிய முடியவில்லை.

அச்சமயம் கால்வாயின் வழியாகத் தெரிந்த ஏரியின் விசாலமான நீர்ப்பரப்பில்தெரிந்த ஒரு காட்சி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது. படகு ஒன்று வந்து கொண்டிருந்தது.அதிலிருந்தவர்கள் பெண்மணிகள் என்றும் அறியக் கூடியதாயிருந்தது. ஆனால் அவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. வந்தியத்தேவனும் கரிகாலனும் அச்சமயம் இருந்த இடத்தை நோக்கியே படகுவருவதாக முதலில் காணப்பட்டது. பிறகு திசை சற்றுத் திரும்பி, ஏரிக் கரையோரமாக இருந்தஇன்னொரு தீவை நோக்கிச் சென்று படகு மறைந்து விட்டது.

"வல்லவரையா! படகில் வந்தவர்கள் யாராயிருக்கும்? பெண்மணிகள் போலத் தோன்றினார்கள்அல்லவா?" என்றான் கரிகாலன்.

"பெண்கள் போலத்தான் தோன்றியது; அதற்குமேல் எனக்கும் தெரியவில்லை" என்றான்வந்தியத்தேவன்.

"ஒருவேளை சம்புவரையர் வீட்டுப் பெண்களாயிருக்குமோ?"

"இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் அவர்கள் ஏன் இவ்வளவு தூரம் வரவேண்டும்?"

"ஆமாம்; அவர்களாயிருக்க முடியாதுதான்... காலையில் பழுவேட்டரையர் புறப்பட்டுப்போய்விட்டார் அல்லவா? நிச்சயந்தானே?"

"நிச்சயந்தான், ஐயா! அரண்மனை வாசல் திறப்பதையும் அவர் யானை மீது வௌியேபோவதையும் நானே பார்த்தேன்."

"அவர் மட்டுந்தான் போனாரா?"

"ஆமாம்; கிழவர் மட்டுந்தான் போனார்; இளைய ராணி போகவில்லை."

"அந்தக் கிழவரைப் போன்ற வீராதிவீரனை எங்கே பார்க்கப் போகிறோம்? என் பாட்டனார்மலையமானைக் கூடப் பழுவேட்டரையருக்கு அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்..."

"ஐயா! அந்தக் கிழவர்களைப் பற்றியெல்லாம் பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்.தங்களுடைய வீரத்தைப் போர்க்களத்தில் நேரில் பார்த்திருக்கிறேன்; கடம்பூர் அரண்மனையிலும் பார்த்தேன்.கிழவர்கள், குமாரர்கள் எல்லாரையும் எப்படி நடு நடுங்க அடித்துக் கொண்டிருந்தீர்கள்!" என்றான்வந்தியத்தேவன்.

"அது உண்மைதான். ஆனால் எதற்காக அவ்வளவு தடபுடல் செய்தேனோ, அந்தச் சந்தர்ப்பம் நெருங்கிவந்திருக்கும்போது எனக்கு உள்ளமும் உடலும் நடுங்குகின்றன. என்னைப் போன்ற பயங்கொள்ளிக் கோழையைஇந்தச் சோழ நாட்டிலேயே காணமுடியாது..."

"இளவரசே! இன்று காட்டில் வேட்டையாடியபோது அப்படித் தாங்கள் பயந்து நடுங்கியதாகத்தெரியவில்லையே? வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள் எல்லோரையும் அல்லவா நடுநடுங்கச் செய்தீர்கள்?"

"இவையெல்லாம் ஒரு தைரியத்தில் சேர்ந்ததா? கேவலம் ஒரு வேட்டை நாய் வேங்கைப் புலிமீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும்தைரியம் ஒரு தைரியமா? வல்லவரையா, கேள்! நான் செய்த சூழ்ச்சி பலித்துவிட்டது. பழுவேட்டரையர்நந்தினியைத் தனியாக விட்டு விட்டுச் சென்று விட்டார். ஆயினும் அவளைத் தனிமையில் பார்த்துப்பேசுவதைப் பற்றி எண்ணினால் எனக்குப் பீதி உண்டாகிறது!" என்றான் ஆதித்த கரிகாலன்.

"ஐயா! அதற்கு காரணம் உண்டு; இத்தனை காலமும் பழுவூர் இளைய ராணியைப் பற்றி ஒருவிதமாகஎண்ணி இருந்தீர்கள். இப்போது அவர் தங்கள் சகோதரி என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவரோதங்கள் குலத்தையே அழித்துவிட விரும்பும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறார்.இதையெல்லாம் அவரிடம் சொல்வது கஷ்டமான காரியந்தான். எனக்கு அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும்என்னால் சொல்ல முடியவில்லையே?....

நண்பா! நீ அறிந்து வந்து கூறிய செய்தி ஒவ்வொன்றும் திடுக்கிடச் செய்வதாகவே இருக்கிறது.இன்னமும் என்னால் நமப முடியவில்லை. ஆனால் சிற்சில பழைய விஷயங்களை யோசித்துப் பார்த்தால்உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கும் அவளுக்குமிடையில் எப்பொழுதும் ஒரு மாயத்திரைஇருந்து வந்தது. பழையாறை பெரிய பிராட்டியார் - செம்பியன் மாதேவியார் - நந்தினியுடன் நான் சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த நாளில் வற்புறுத்திச் சொன்னார். ஆனால் உண்மை முழுவதையும் சொல்லவில்லை; சொல்லியிருந்தால் இவ்வளவெல்லாம் நேர்ந்திராது..."

"செம்பியன் மாதேவிக்கு முழு உண்மையும் தெரிந்திராமலிருக்கலாம். யாரோ அநாதை ஊமைஸ்திரீ பெற்று போட்டுப் போன பெண் என்று மட்டும் அறிந்திருக்கலாம். சுந்தர சோழரின் மகள் பழுவூர்இளைய ராணி என்பது ஒருவேளை தெரியாமலிருக்கலாம்."

பக்க தலைப்பு



நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
"அவள் பெண் அல்ல!"




இளவரசன் கரிகாலன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். இளம் பிராயத்துநினைவுகள் அவன் உள்ளத்தில் அலை அலையாக மோதிக் கொண்டு தோன்றி, குமுறிக் கொந்தளித்து விட்டுப்பிறகு வேறு நினைவுகளுக்கு இடங்கொடுத்து விட்டு மறைந்தன. அந்த நினைவு அலைகளைப் பலவந்தமாகத்தடுத்து நிறுத்தி ஒரு தீர்க்கமான மூச்சு விட்டு விட்டுக் கரிகாலன்:

"போனதைப் பற்றி இப்போது பேசவேண்டாம்; நடக்க வேண்டியதைப் பற்றி பேசலாம்.அதற்காகவே உன்னைத் தனியாக அழைத்து வந்தேன். பந்தயத்தில் நாம் தோற்று விட்டோம்;பன்றி போய்விட்டது. இனி என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று யோசித்து முடிவு செய்யலாம்.வல்லவரையா! நந்தினியிடம் அவளுக்கும் எனக்கும் உள்ள உறவை எப்படிச் சொல்வது என்று நினைத்தாலேஎனக்குப் பீதி உண்டாகிறது. அவள் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்க்கக் கூட என்னால் முடியவில்லை.தப்பித் தவறிப் பார்க்கும் போதெல்லாம், வீர பாண்டியனுடைய உயிருக்காக அவள் மன்றாடிய போதுஎப்படி முகத்தை வைத்துக் கொண்டாளோ, அப்படியே வைத்துக் கொள்கிறாள். அவளுடைய பார்வை நெஞ்சைவாள் கொண்டு அறுப்பது போலிருக்கிறது. என் சகோதரி வீர பாண்டியன் மீது காதல் கொண்டு அவன்உயிருக்காக என்னிடம் மன்றாடினாள் என்பதை நினைத்தாலே என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது.வல்லவரையா! உன் கருத்து என்ன? இன்னமும் அவளுக்கு உண்மை தெரியாது என்றா நினைக்கிறாய்? அவள்சுந்தர சோழரின் மகள் என்றும், எங்களுக்கெல்லாம் சகோதரி என்றும் அறியமாட்டாள் என்றா கருதுகிறாய்?"

"கோமகனே! இவையெல்லாம் தெரிந்திருந்தால், இன்னமும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களுடன்சேர்ந்திருப்பாரா? சோழ குலத்துக்கு விரோதமாக ஒரு சிறுபிள்ளையைச் சிம்மாசனத்தில் அமர்த்திப்பாண்டிய நாட்டு மன்னனாகவும் சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகவும் மணிமகுடம் சூட்டியிருப்பாரா? அந்தமணிமகுடத்தைத் தாங்கி நிற்பதாகக் கையில் கத்தி ஏந்திப் சபதம் செய்திருப்பாரா? இவையெல்லாம்திருப்புறம்பியம் பள்ளிப்படையருகில் நள்ளிரவில் நடந்ததை நானே பார்த்தேன்.."

"இவ்வளவையும் பார்த்த உன்னை நந்தினி உயிரோடு விட்டு விட்டதை நினைத்தால்வியப்பாயிருக்கிறது."

"ஐயா! எனக்கு அதில் வியப்பு இல்லை; பெண் உள்ளத்தில் இயற்கையாகக் குடிகொண்டுள்ளஇரக்கம் காரணமாயிருக்கலாம் அல்லவா?"

"வல்லவரையா! நீ உலகமறியாதவன்; பெண் உள்ளத்தில் குடிகொண்டுள்ள வஞ்சகமும் வஞ்சனையும்எத்தகையவை என்பது உனக்குத் தெரியாது. என்ன நோக்கத்துடன் உன்னை அவள் உயிரோடு விட்டாள் என்பதைநான் அறியேன். ஆனால் என்னை எதற்காக ஓலை அனுப்பி வரவழைத்தாள் என்பது என் அந்தரங்கத்துக்குத்தெரிந்திருக்கிறது."

"இளவரசே! அது என்ன காரணமாயிருக்கும்?"

"என்னைக் கொன்று வீர பாண்டியனுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான்வரவழைத்திருக்கிறாள்.."

"ஐயா! அப்படி ஏதாவது விபரீதம் நேர்ந்துவிடப் போகிறதென்று எண்ணித்தான் இளையபிராட்டியும் முதன்மந்திரியும் என்னை அவசரமாக அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர்கள் கடம்பூருக்குப் போகவேண்டாம் என்று சொன்னதைத் தாங்கள் கேட்கவில்லை...."

"வல்லவரையா! இளைய பிராட்டியும் முதன்மந்திரியும் மிக மிக அறிவாளிகள்தான்.ஆனால் விதியை அவர்களால் கூடத் தடுக்க முடியாது அல்லவா? அருள்மொழிவர்மனைப் பற்றிச்சோதிடர்கள் சொல்லியிருப்பதையெல்லாம் உண்மையாக்குவதற்காகவே விதி என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறதோ என்னமோ, யார் கண்டது? வல்லவரையா! கந்தமாறன் என் பின்னாலிருந்துஅம்பை விட்டானே? உண்மையில் அவன் கரடியைக் குறிப் பார்த்து விட்டானா? என்னைக் குறிப்பார்த்துவிட்டானா? நீ கவனித்தாயா?"

"நான் கவனிக்கவில்லை, ஐயா! ஆனால் கந்தமாறன் அத்தகைய துரோகம் செய்யக்கூடியவன் என்று நான் ஒரு நாளும் ஒப்புக் கொள்ளமாட்டேன். வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அதிலும்சக்கரவர்த்தியின் குமாரனைப் பின்னாலிருந்து அம்பு எய்து கொல்லக் கூடியவனா கந்தமாறன்? அவனுடையஅறிவுக் கூர்மையைப் பற்றி எனக்கு அவ்வளவு உயர்ந்த அபிப்பிராயம் இல்லைதான். முதுகில் குத்தப்பட்டுஉணர்வற்றுக் கிடந்தவனை நான் தூக்கிக் கொண்டு போய்க் காப்பாற்றினேன். கண் விழித்ததும் என்னைப்பார்த்தபடியால் நான்தான் அவனைக் குத்தியதாக எண்ணிக் கொண்டான். அப்போது அவன் என் பேரில்கொண்ட பகைமை இன்னும் மாறவில்லை. ஆனால் அவனுடைய புத்தி கொஞ்சம் கட்டையாயிருந்தாலும்,துரோக சிந்தையுள்ளவன் அல்ல!..."

"நண்பா! ஒரு அழகிய பெண்ணின் மோகனாஸ்திரத்துக்கு எவ்வளவு சக்தியுண்டு என்று உனக்குத்தெரியாது. எவ்வளவு நல்லவனையும் அது துரோகச் செயல் புரியச் செய்துவிடும்..."

"ஐயா! பெண்களின் மோகன சக்தியைப் பற்றி நானும் சிறிது அறிந்து தானிருக்கிறேன்.அதனால் நான் ஒரு நாளும் துரோகியாகி விடமாட்டேன்..."

"ஆகா! மணிமேகலை நல்ல பெண், உன்னைத் துரோகமான காரியம் செய்யும்படி ஏவமாட்டாள்..."

"நான் மணிமேகலையைச் சொல்லவில்லை; பூரண சந்திரனைப் பார்த்த கண்களுக்கு மின்மினிகவர்ச்சிகரமாகத் தோன்ற முடியுமா?"

"பூரண சந்திரன் என்று யாரைக் குறிப்பிடுகிறாய்?"

"இளவரசே! கோபிக்க வேண்டாம்; பழையாறை இளைய பிராட்டியைத்தான் சொல்லுகிறேன்..."

"அடே! அதிகப் பிரசங்கி! உலகிலுள்ள மன்னாதி மன்னர்கள் எல்லோரும் குந்தவையின்கைப்பிடிக்கத் தவம் கிடக்கிறார்கள். அத்தகைய என் சகோதரியை நீ மனத்தினாலும் நினைக்கலாமா?"

"ஐயா! பூரண சந்திரனுடைய மோகனத்தையும் தண்ணொளியையும் பூலோக சக்கரவர்த்திகளும்பார்த்து அனுபவிக்கிறார்கள்; ஏழை எளியவர்களுந்தான் நிலவில் நின்று களிக்கிறார்கள்; அவர்களை யார்தடுக்க முடியும்?"

"ஆமாம்; உன் பேரில் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. தெரிந்துதான் நான் உன்னைஎன் சகோதரியிடம் ஓலையுடன் அனுப்பினேன். நீயும் அவளுக்குத் திருப்தியாக நடந்து கொண்டாய்.ஆனால் பார்த்திபேந்திரனிடம் மட்டும் இதையெல்லாம் சொல்லிவிடாதே! அவன் சோழ குலத்துக்குமருமகனாகித் தொண்டை நாட்டுக்கு மன்னனாக விளங்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறான்..."

"ஐயா! அவ்விதம் சில காலத்துக்கு முன்பு வரையில் இருந்திருக்கலாம். இப்போது கந்தமாறன்,பார்த்திபேந்திரன் இருவரும் நந்தினி தேவி காலால் இட்ட வேலையைத் தலையினால் செய்யக்காத்திருக்கிறார்கள்....."

"அதை நான் கவனித்து வருகிறேன்; ஆகையினால்தான் அவர்கள் விஷயத்தில் எனக்குப்பயமாயிருக்கிறது."

"எல்லாவற்றையும் உத்தேசிக்கும்போது, தாங்கள் இளைய ராணியைச் சீக்கிரம் சந்தித்து எல்லாஉண்மைகளையும் சொல்லி விடுவது அவசியம் என்று தோன்றுகிறது."

"நண்பா! எனக்கு அவ்வளவு தைரியம் வரும் என்று தோன்றவில்லை. எனக்குப் பதிலாகநீயே அவளைச் சந்தித்துச் சொல்லி விட்டால் என்ன?"

"இளவரசே! நான் சொன்னால் இளைய ராணிக்கு நம்பிக்கை ஏற்படாது. ஒருமுறை நான்அவரை ஏமாற்றிவிட்டு தப்பித்துக் கொண்டு சென்றிருக்கிறேன். ஆகையால் இதுவும் ஏதோ ஒரு சூழ்ச்சிஎன்று கருதக் கூடும்."

"ஆனால் நான் நந்தினியைத் தனியாகச் சந்திப்பது எப்படி? அவளோ அந்தப்புரத்தில்இருக்கிறாள்!"

"ஐயா! மணிமேகலையின் மூலம் அது சாத்தியமாகும்; அதற்கு வேண்டிய ஏற்பாடு நான்செய்கிறேன்...."

"மணிமேகலையை நீ கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது.நல்ல காரியந்தான்! எது எப்படியானாலும் மணிமேகலையை உனக்குத் திருமணம் செய்து விட்டேனானால்,என் உள்ளம் ஓரளவு நிம்மதி அடையும்."

"ஐயா! மணிமேகலையை நான் என் உடன் பிறந்த சகோதரியாகக் கருதுகிறேன்.அவளுக்கு இன்னும் பன்மடங்கு மேலான அதிர்ஷ்டம் கிட்டக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன்..."

"எதைப் பற்றிச் சொல்லுகிறாய்?"

"தெரியவில்லையா, இளவரசே! சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்து இளவரசரின் உள்ளத்தில்கன்னி மணிமேகலை இடம் பெற்றிருப்பதாக ஊகிக்கிறேன். சற்று முன் சம்புவரையர் குமாரியைப் பற்றிஒரு மாதிரி பேசினேன். என் மனத்தைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்காக அவ்விதம் சொன்னேன்.இளைய பிராட்டி ஒருவரைத் தவிர இந்த உலகில் பிறந்த வேறு எந்தப் பெண்ணும் மணிமேகலைக்கு அறிவிலும்குணத்திலும் இணையாக மாட்டார்கள். தாங்கள் மட்டும் மணிமேகலையை மணந்து கொண்டால் நம்முடையதொல்லைகள் எல்லாம் தீர்ந்து விடும். சம்புவரையரும் கந்தமாறனும் நம்முடன் சேர்ந்து விடுவார்கள்.பழுவேட்டரையர்கள் தனித்துப் போய் விடுவார்கள். இளைய ராணியின் சக்தியும் குன்றி விடும்.மதுராந்தகத் தேவர் பின்னர் இராஜ்யம் என்ற பேச்சையே எடுக்க மாட்டார். சிற்றரசர்களின் சூழ்ச்சியையும்பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் சதியையும் ஒரேயடியாய் முறியடித்து வெற்றி காணலாம்..."

"எல்லாம் சரிதான், தம்பி! ஆனால் கடம்பூருக்கு நான் திருமணம் செய்து கொள்வதற்காகவரவில்லை. ஏதோ ஒரு பெரிய ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் சொல்கிறேன், கேள்!பழுவேட்டரையர் மதுராந்தகனோடு திரும்பி வரும்போது ஒரு பெரிய படையுடன் வரப்போகிறார்..."

"ஐயா! அப்படியானால் நாமும் திருக்கோவலூர் அரசருக்குச் சொல்லி அனுப்பிப் படை திரட்டிக்கொண்டு வரச் செய்தால் என்ன? எதற்கும் முன் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லதல்லவா?"

"நானும் அதைப் பற்றி யோசித்து வருகிறேன். ஒவ்வொரு சமயம் எனக்கு என்ன தோன்றுகிறதுதெரியுமா? இந்தக் கடம்பூர் அரண்மனையைத் தரை மட்டமாக்கி, இங்கே சதியாலோசனை செய்தவர்கள்அத்தனை பேரையும் அரண்மனை வாசலில் கழுவிலேற்ற வேண்டுமென்று தோன்றுகிறது. என் தந்தையைமுன்னிட்டுத்தான் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன். அவரை மட்டும் நீ காஞ்சிக்கு அழைத்துவந்திருந்தால்...?"

"இளவரசே! அவரிடம் தங்கள் ஓலையைச் சேர்ப்பிப்பதே பிரம்மப் பிரயத்தனமாகி விட்டதே!"

"ஆமாம்; சக்கரவர்த்தி இந்தப் பழுவேட்டரையர்களிடம் நன்றாய் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்.என் பெற்றோர்களுக்கென்று காஞ்சிமா நகரில் நான் கட்டிய பொன் மாளிகையில் வௌவால்கள்சஞ்சரிக்கின்றன. நான் உயிரோடிருக்கும்போது அவர்களை அம்மாளிகையில் வரவேற்கும் பாக்கியம்எனக்குக் கிடைக்குமோ, என்னமோ தெரியாது. இந்தக் கடம்பூரைவிட்டு உயிரோடு போவேனோஎன்று கூடச் சந்தேகமாயிருக்கிறது..."

"இளவரசே! தாங்கள் இவ்விதம் பேசப் பேச, மலையமானைப் படைகளுடன் வரச் சொல்வது மிக்கஅவசியம் என்று தோன்றுகிறது.."

"அந்த காரியத்துக்கு உன்னையே அனுப்பலாமா என்று பார்க்கிறேன்.."

"ஐயா! மன்னிக்கவேணும்! தங்களை விட்டு ஒரு கணமும் பிரியவே கூடாது என்று தங்கள்தமக்கையார் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.."

"அதை நீ இது வரை நன்றாக நிறைவேற்றி வருகிறாய்."

"பார்த்திபேந்திர பல்லவர் இங்கே சும்மாத்தான் இருக்கிறார்; பொழுது போகாமல்கஷ்டப்படுகிறார்..."

"ஆமாம்; பழுவூர் இளைய ராணியைப் பாராத ஒவ்வொரு கணமும் அவனுக்கு ஒவ்வொரு யுகமாகஇருக்கிறது. பார்த்திபேந்திரன் பெண்ணழகுக்கு இவ்வளவு அடிமையானவன் என்று நான் கனவிலும் கருதவில்லை.அவனைத்தான் மலையமானிடம் அனுப்ப வேண்டும்."

"சரியான யோசனை, ஐயா!"

"அவன் இல்லாதபோது எனக்கு ஏதாவது அபாயம் நேரிட்டால் உதவிக்கு நீ இருக்கவேஇருக்கிறாய்..."

"இளவரசே! யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தங்களுக்குத் தீங்கு செய்யத் துணிவுள்ளவன்இந்த உலகில் இருப்பதாக நான் கருதவில்லை. தாங்கள் இல்லாதபோது தங்களைப் பற்றி ஏதேதோபேசிய வீரக் கிழவர்கள் தங்களை நேரில் பார்த்ததும் கைகால் நடுங்கி வாய் குழறித் தடுமாறுவதைநேரில் பார்த்தேனே?"

"தம்பி! கையில் கத்தி எடுத்துப் போராடக் கூடிய எந்த ஆண் மகனுக்கும் நான் பயப்படவில்லை.பின்னாலிருந்து முதுகில் அம்பு விடக்கூடிய கந்தமாறன் போன்றவர்களுக்கும் நான் பயப்படவில்லை..."

"மறுபடி கந்தமாறனைப் பற்றி அப்படிச் சொல்கிறீர்களே.."

"கேள், தம்பி! ஒரு பெண்ணின் நெஞ்சின் ஆழத்தில் உள்ள வஞ்சகத்துக்குத்தான் அஞ்சுகிறேன்.அவள் மனத்தில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறாளோ என்று எண்ணும்போதெல்லாம் என் உள்ளம் பதைபதைக்கிறது. அவள் என்னை மர்மமாகப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் என் நெஞ்சில் ஈட்டியைச் செலுத்துவது போலிருக்கிறது. அதைப் பற்றி எண்ணிய உடனே என் கை கால்கள் வெடவெடத்துப் போகின்றன."

"ஐயா! நந்தினிதேவியின் வஞ்சகத்துக்குப் பயப்பட வேண்டியதுதான் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். அவருடைய உள்ளத்தில் எவ்வளவு பயங்கரமான துவேஷம் குடிகொண்டிருக்கிறது என்பதைநான் உணர்ந்திருக்கிறேன். என்னை அவர் உயிரோடு போகவிட்டதை நினைக்கும்போது சில சமயம்அதில் என்ன சூழ்ச்சி இருக்குமோ என்று பீதி கொள்கிறேன். ஆனால் இதெல்லாம் அவருக்கு உண்மைதெரியாமலிருக்கும் காரணத்தினால்தான் அல்லவா? அவருடைய சகோதரர் தாங்கள் என்பதைத் தெரிவித்துவிட்டால் அதற்குப் பிறகு எந்தக் கவலையும் வேண்டியதில்லையல்லவா?"

"அப்படியா எண்ணுகிறாய்? வல்லவரையா! நீ கெட்டிக்காரன்தான். ஆனால் பெண்களின் இயல்புஅறியாத அப்பாவிப் பிள்ளை. நந்தினிக்குத் தான் சுந்தர சோழரின் குமாரி என்பது தெரிந்தால்,எங்கள் எல்லோரிடமும் அவளுடைய குரோதம் ஒன்றுக்கு நூறு மடங்கு ஆகும். தஞ்சை சாம்ராஜ்யத்தின்சக்கரவர்த்தினியாக அவளுக்குப் பட்டம் சூட்டுவதாகச் சொன்ன போதிலும் அவளுடைய கோபம் தீராது..."

"இளவரசே! அப்படித் தாங்கள் கருதினால் அந்தப் பொறுப்பை என்னிடமே ஒப்புவியுங்கள்.நானே நந்தினியிடம் உண்மை வரலாற்றைச் சொல்வேன். அவருடைய கோபத்தையும் தணிக்க முயல்வேன்...."

"உன்னாலும் அது முடியாது, நண்பா! நந்தினியின் கோபத்தை யாராலும் தடுக்க முடியாது.நான் சொல்வதை கேள்! எங்கள் சோழ குலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், ஒன்று நான் சாக வேண்டும்;அல்லது அவள் சாக வேண்டும்; அல்லது இரண்டு பேரும் சாக வேண்டும். வீர பாண்டியனைக் கொன்ற வாளினால்அவளையும் கொன்று விடுகிறேன்...."

"இளவரசே! இது என்ன பயங்கரமான பேச்சு?"

"வல்லவரையா! ஒரு சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதற்காக ஓர் உயிரைக் கொல்லுவது குற்றமா? அவள்பெண்ணாயிருந்தால் என்ன? என் உடன் பிறந்த சகோதரியாக இருந்தால்தான் என்ன? உண்மையில் அவள் பெண்அல்ல; பெண் உருக்கொண்ட மாய மோகினிப் பேய்! அவளை உயிரோடு விட்டுவைத்தால் விஜயாலய சோழர்காலத்திலிருந்து பல்கிப் பெருகி வந்திருக்கும் இந்தச் சோழ சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகிவிடும்...ஆகா! அது என்ன?" என்று ஆதித்த கரிகாலன் திகிலுடன் கேட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தான்.

அச்சமயம் அவர்கள் இருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் காட்டுப் புதர்களுக்கு மத்தியில்ஏதோ அல்லோலகல்லோலம் நடந்து கொண்டிருந்தது. இருவரும் குதிரைகளைத் தட்டிவிட்டு அருகில் சென்றுபார்த்தார்கள். மிக அபூர்வமான காட்சி ஒன்று தென்பட்டது; காட்டுப்பன்றி ஒன்றும், சிறுத்தைப்புலி ஒன்றும் கொடூரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

"ஆகா! நாம் தேடி வந்தவன் இங்கே இருக்கிறான்!" என்றான் கரிகாலன்.

"சிறுத்தை நமக்கு வேலை இல்லாமல் செய்து விடும் போலிருக்கிறது!" என்றான் வந்தியத்தேவன்.

"அப்படியா நினைக்கிறாய்? பார்த்துக் கொண்டே இரு!" என்றான் கரிகாலன்.

சிறுத்தைக்கும் பன்றிக்கும் நடந்த அகோரமான யுத்தத்தை இருவரும் சிறிது நேரம் கண்கொட்டாமல்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறுத்தை பன்றியின் மீது பாய்ந்து அதை நகங்களினாலும் பற்களினாலும்தாக்க முயன்றது. ஆனால் காட்டுப்பன்றியின் கடினமான தோல், புலி நகத்திற்கும் பற்களுக்கும்சிறிது அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் பன்றி வேகமாக ஓடி வந்து சிறுத்தையை முட்டித் தள்ளித்தரையிலும் மரங்களின் வேர்களிலும் வைத்துத் தேய்த்த போதெல்லாம் சிறுத்தை படாதபாடு பட்டது.பன்றியின் கோரைப் பற்கள் சிறுத்தையின் தோலைச் சின்னாபின்னமாகக் கிழித்தன. கடைசியாகஒரு முறை சிறுத்தையைப் பன்றி கீழே முட்டித் தள்ளியபோது அது செத்தது போலக் கிடந்தது.

"தம்பி! சிறுத்தை செத்து விட்டது! பன்றி இனி நம் பேரில் திரும்பும்! அதற்கு நாம் ஆயத்தமாகவேண்டும்!" என்று கூறிக் கரிகாலன் வில்லில் அம்பைப் பூட்டி, விட்டான்.

அம்பு பன்றியின் கழுத்தில் போய்த் தைத்தது. பன்றி கழுத்தை உதறிக் கொண்டேதிரும்பிப் பார்த்தது. இரு குதிரைகளையும் அவற்றின் மீதிருந்தவர்களையும் ஒரு கணம் கவனித்தது.பிறகு ஒரு தடவை சிறுத்தையைப் பார்த்தது. அதனால் இனி ஒன்றும் ஆகாது என்று தெரிந்து கொண்டதுபோலும்! மூர்க்க ஆவேசத்துடன் குதிரைகளை நோக்கிப் பாய்ந்து வந்தது. கரிகாலன் இன்னொரு அம்பைவில்லில் பூட்டுவதற்கு முன்னால் அவன் ஏறியிருந்த குதிரையைத் தாக்கியது. தாக்குதலின் வேகத்தினால்சிறிது நகர்ந்த குதிரையின் பின்னங்கால் ஒரு மரத்தின் வேரில் அகப்பட்டுக் கொள்ளவே குதிரைதடுமாறிக் கீழே விழுந்தது. குதிரையின் அடியில் கரிகாலன் அகப்பட்டுக் கொண்டான். பன்றிசிறிது பின்னால் நகர்ந்து வந்து மறுபடியும் தரையில் கிடந்த குதிரையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

பக்க தலைப்பு



நாற்பத்து மூன்றாம் அத்தியாயம்
"புலி எங்கே?"




ஆதித்த கரிகாலர் எப்பேர்ப்பட்ட ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டார் என்பதை வந்தியத்தேவன்கவனித்தான். கண்மூடித் திறக்கும் நேரத்தில் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்து பன்றியின் மீது தன்கையிலிருந்த வேலைச் செலுத்தினான். வேல் பன்றியின் முதுகுத் தோலின் மீது மேலாகக் குத்தியது .பன்றி உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு திரும்பியது. அந்த வேகத்தில் வந்தியத்தேவன்கையில் பிடித்திருந்த வேலின் பிடி நழுவிவிட்டது. பன்றியின் முதுகில் இலேசாகச் சென்றிருந்தவேல் நழுவிக் கீழே விழுந்தது.

பன்றி இப்போது வந்தியத்தேவன் பக்கம் திரும்பி ஓடி வந்தது. அவன் தன் அபாயகரமானநிலையை உணர்ந்தான். பன்றியின் தாக்குதலுக்கு அவனுடைய குதிரையினால் ஈடு கொடுக்க முடியாது; கையில்வேலும் இல்லை. இளவரசரோ இன்னமும் குதிரையின் கீழிருந்து வௌிப்படுவதற்கு முயன்று கொண்டிருக்கிறார்.தான் குதிரை மேலிருந்தபடி ஏதாவது ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக் கொண்டால்தான் தப்பிப்பிழைக்கலாம். சீச்சீ! எத்தனையோ அபாயங்களுக்குத் தப்பி வந்து கடைசியில் கேவலம் ஒருகாட்டுப்பன்றியினாலேயா கொல்லப்பட வேண்டும்?...

நல்ல வேளையாக அருகாமையிலேயே தாழ்ந்து படர்ந்த மரம் ஒன்று இருந்தது. வந்தியத்தேவன்குதிரை மீதிருந்து பாய்ந்து மரத்தின் கிளை ஒன்றைத் தாவிப் பிடித்துக் கொண்டான். கால் முதல்தோள் வரையில் அவனுடைய பலத்தை முழுவதும் பிரயோகித்து எழும்பி கிளை மீது ஏறிக் கொண்டான்.அதே சமயத்தில் பன்றி அவனுடைய குதிரையை முட்டியது. குதிரை தட்டுத்தடுமாறி விழப் பார்த்துச்சமாளித்துக் கொண்டு அப்பால் ஓடியது. கரிகாலர் இன்னமும் குதிரையின் அடியில் கிடந்தார்.வந்தியத்தேவன் மரக்கிளை மீது இருந்தான். காட்டுப்பன்றி இருவருக்கும் நடுவில் நின்று இப்படியும்அப்படியும் திரும்பிப் பார்த்தது.

இரண்டு எதிரிகளில் யாரைத் தாக்கலாம் என்று அந்தக் காட்டுப்பன்றி யோசனை செய்கிறதுஎன்பதை வந்தியத்தேவன் அறிந்தான். இளவரசர் இன்னும் குதிரைக்கு அடியிலிருந்து விடுவித்துக் கொண்டுவௌி வந்தபாடில்லை. வௌி வந்துவிட்ட போதிலும் பன்றியின் தாக்குதலை அவரால் அச்சமயம்சமாளிக்க முடியுமா என்பது சந்தேகந்தான். அவர் கையில் உடனே பிரயோகிக்கக் கூடிய ஆயுதம் இல்லை.வில்லை வளைத்து அம்பு விட வேண்டும். குதிரைக்கு அடியில் விழுந்து அகப்பட்டுக் கொண்டதில் அவருக்குப்பலமான காயம் பட்டிருந்தாலும் பட்டிருக்கலாம். எப்படியும் இளவரசருக்குச் சிறிது சாவகாசம் ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம். இவ்வளவையும் மின்னல் மின்னும் நேரத்தில் வந்தியத்தேவன் யோசனை செய்து ஒருமுடிவுக்கு வந்தான். தான் ஏறியிருந்த மரக்கிளையைப் பலமாக உலுக்கி ஆட்டிக் கொண்டே "ஆகா ஊ கூ"என்று பெரியதாகச் சத்தமிட்டான்.

அவனுடைய யுக்தி பலித்தது; பன்றி மூர்க்காவேசத்துடன் அவன் ஏறியிருந்த மரத்தைநோக்கிப் பாய்ந்து வந்தது. "வரட்டும்; வரட்டும் வந்து மரத்தின் பேரில் முட்டிக் கொள்ளட்டும்"என்று வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அவன் ஏறி உட்கார்ந்து உலுக்கிய மரக்கிளைமடமடவென்று முறிந்தது. கடவுளே! இது என்ன ஆபத்து?... கிளையுடன் தரையில் விழுந்தால்? அடுத்தநிமிடமே பன்றியின் கோரப் பற்கள் அவனைச் சின்னாபின்னமாகக் கிழித்துவிடும். வேறு கிளைஒன்றைத் தாவிப் பிடித்துக் கொண்டால்தான் பிழைக்கலாம்; அப்படித் தாவிப் பிடிக்க முயன்றான்.பிடிக்க முயன்ற கிளை சற்றுத் தூரத்தில் இருந்தபடியால் ஒரு கை மட்டுந்தான் பிடித்தது. பிடித்தகிளை மெல்லியதாயிருந்தபடியால் வளைந்து கொடுத்தது. கைப்பிடி நழுவத் தொடங்கியது, கால்கள்ஊசலாடின! சரி! கீழே விழ வேண்டியதுதான், உடனே மரணந்தான்! சந்தேகமில்லை. ஏதோ, கடைசியாகஆதித்த கரிகாலரைக் காப்பாற்ற முடிந்தது அல்லவா? இளைய பிராட்டி இதை அறியும்போது மகிழ்ச்சிஅடைவாள் அல்லவா? தன்னுடைய மரணத்துக்காக ஒரு துளி கண்ணீர் விடுவாள் அல்லவா?... ஏதோ ஒருபயங்கரமான சத்தம் கேட்டது! அதே சமயத்தில் கைப்பிடியும் நழுவி விட்டது! வந்தியத்தேவன் கண்களைஇறுக மூடிக்கொண்டான். தடால் என்று கீழே விழுந்தான்; விழும்போதே நினைவை இழந்தான்.

வந்தியத்தேவன் நினைவு வந்து கண் விழித்துப் பார்த்த போது ஆதித்தகரிகாலர் அவன்முகத்தில் தண்ணீர் தௌித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். சட்டென்று நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்து,"இளவரசே! பிழைத்திருக்கிறீர்களா?" என்றான்.

"ஆமாம்; உன்னுடைய தயவினால் இன்னும் பிழைத்திருக்கிறேன்" என்றார் ஆதித்தகரிகாலர்.

"காட்டுப்பன்றி என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.

"அதோ!" என்று இளவரசர் சுட்டிக் காட்டிய இடத்தில் காட்டுப்பன்றி செத்துக் கிடந்தது.

வந்தியத்தேவன் அதைச் சற்று உற்றுப் பார்த்துவிட்டு, "அரசே! இவ்வளவு சின்ன உருவமுள்ளபிராணி என்ன பாடுபடுத்தி விட்டது? கந்தமாறன் காட்டுப்பன்றியைக் குறித்துச் சொன்னது அவ்வளவும்உண்மைதான். கடைசியில் அதை எப்படித்தான் கொன்றீர்கள்?" என்று கேட்டான்.

"நான் கொல்லவில்லை உன்னுடைய வேலும் நீயுமாகச் சேர்ந்துதான் கொன்றீர்கள்!" என்றார்இளவரசர்.

வந்தியத்தேவன் அதன் பொருள் விளங்காதவனைப் போல் இளவரசரின் முகத்தைப் பார்த்தான்.

"என்னுடைய வேலைத் தாங்கள் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள்! ஆனால் நான் ஒன்றும்செய்யவில்லையே? ஆபத்தான சமயத்தில் தங்களுக்கு உதவி செய்ய முடியாதவனாகி விட்டேனே?" என்றான்.

"நீ மரக் கிளையைப் பிடித்து உலுக்கிச் சத்தமிட்டாய் அல்லவா? அப்போது நான் குதிரைஅடியிலிருந்து வௌிவந்து உன் வேலை எடுத்துக் கொண்டேன். என் மனத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தகோபத்தையெல்லாம் பாவம், இந்தப் பன்றியின் பேரில் பிரயோகித்தேன். வேலினால் குத்தப்பட்டதும்அது பயங்கரமாகச் சத்தமிட்டது.என் காதே செவிடாகி விடும் போலிருந்தது. ஆனால் வேலினால்மட்டும் அது சாகவில்லை. நீ மரக் கிளையிலிருந்து நழுவி அதன் பேரில் விழுந்தாய்; அந்தஅதிர்ச்சியினால் தான் செத்தது!" என்று கரிகாலர் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

வந்தியத்தேவனும் அதை நினைத்து நினைத்துச் சிரித்தான். உடம்பைத் தடவிப் பார்த்துக்கொண்டு "பன்றியின் மேல் விழுந்ததினாலேயேதான், காயம் படாமல் தப்பினேன் போலிருக்கிறது.மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரணியாட்சனைக் கொன்றார் என்பதை இனி என்னால் நம்ப முடியும்.அப்பா! எவ்வளவு மூர்க்கமான பிராணி" என்றான்.

"இந்தச் சிறு காட்டுப்பன்றிப் பார்த்துவிட்டு வராகவதாரத்தை மதிப்பிடாதே, தம்பி! வடக்கேவிந்திய மலையைச் சேர்ந்த காடுகளிலே தலையிலே ஒற்றைக் கொம்பு உள்ள பன்றி ஒன்று இருக்கிறதாம்.ஏறக்குறைய யானை அவ்வளவு பெரியதாயிருக்குமாம். அந்த மாதிரி பன்றியாயிருந்து, நீ ஏறியிருக்கும்மரத்தை முட்டியிருந்தால், மரம் என்னபாடு பட்டிருக்கும் என்று யோசித்துப் பார்!" என்றார் இளவரசர்.

"மரம் அடியோடு முறிந்து விழுந்திருக்கும், தாங்கள் எறிந்த வேலும் முறிந்திருக்கும். நம் கதி அதோ கதியாகியிருக்கும். சோழ குலத்தின் எதிரிகளுக்கு வேலை மிச்சமாகப் போயிருக்கும்"என்றான் வந்தியத்தேவன்.

"தம்பி! உண்மையைச் சொல்லு! என் குதிரை தடுமாறி விழுந்தவுடனே நீ வேலைஎறிந்தாயே? அந்தக் காட்டுப்பன்றியின் மேல் எறிந்தாயா? என் பேரில் எறிந்தாயா?" என்றுஆதித்தகரிகாலர் கேட்டார்.

வந்தியத்தேவன் ஆத்திரத்துடன், "ஐயா! உண்மையாகவே தாங்கள் இந்த கேள்வி கேட்கிறீர்களா?அப்படித் தாங்கள் சந்தேகப்படுவதாயிருந்தால் பன்றியைக் கொன்று என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டியஅவசியம் இல்லையே?" என்றான்.

"ஆமாம்; ஆமாம்! உன் பேரில் சந்தேகப்படக் கூடாதுதான். நீ மரக் கிளையை ஆட்டிக்கொண்டு கூச்சல் போட்டிராவிட்டால் எனக்கே அந்தப் பன்றி யமனாக இருந்திருக்கும். ஆனாலும் நீவேலை எறிந்த போது ஒரு கணம் எனக்கு அத்தகைய சந்தேகம் உண்டாயிற்று. இப்போதெல்லாம் எனக்குஎதைப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் வீண் சந்தேகம் தோன்றுகிறது. யமன் என்னைத் தொடர்ந்துவந்து கொண்டேயிருக்கிறான் என்ற பிரமையைப் போக்கிக் கொள்ளவே முடியவில்லை. யமன் இந்தப்பன்றியின் உருவத்தில் என்னைக் கொல்ல வந்ததாகவும் எண்ணினேன்..."

"அப்படியானால் மிக நல்லதாய்ப் போயிற்று. அரசே! தங்களைத் தொடர்ந்து வந்த யமன் செத்துஒழிந்தான்; இனி என்ன கவலை? கந்தமாறனோடு நாம் போட்டியிட்ட பந்தயத்திலும் ஜெயித்து விட்டோம்.பன்றியை இழுத்துக் கொண்டு போக வேண்டியது தானே? புறப்படலாம் அல்லவா?" என்றான் வல்லவரையன்.

"புறப்பட வேண்டியதுதான்! ஆனால் அவசரம் என்ன? சற்று இங்கே தங்கிக் களைப்பு ஆறிவிட்டுப்போகலாம்" என்றார் இளவரசர்.

"தாங்கள் களைப்படைந்ததாகச் சொல்லுவதை இப்போதுதான் முதன் முதலாகக் கேட்கிறேன்.ஆம், குதிரையின் அடியில் சிக்கி ரொம்பக் கஷ்டப்பட்டுப் போயிருப்பீர்கள்.

"அது ஒன்றுமில்லை; உடலின் களைப்பைக் காட்டிலும் உள்ளத்தின் களைப்புதான்அதிகமாயிருக்கிறது. வந்த வழியாகவே அவ்வளவு தூரமும் காட்டு வழியில் திரும்பிப் போகவேண்டுமா? மறுபடியும் அந்த மூடர்களுடன் சேர்ந்தல்லவா பிரயாணம் செய்ய வேண்டி வரும்? அதைக் காட்டிலும்இந்த ஏரியைக் கடந்து போய்விட்டால் என்ன?"

"கடவுளே! இந்தச் சமுத்திரம் போன்ற ஏரியை நீந்திக் கடக்க வேண்டும் என்றாசொல்கிறீர்கள்? பன்றியிடமிருந்து என்னைத் தப்பவைத்து ஏரியில் மூழ்கடித்துக் கொல்ல வேண்டும் என்றுஉத்தேசமா?" என்றான் வந்தியத்தேவன்.

"உனக்கு நீந்தத் தெரியாது என்பது நினைவிருக்கிறது. என்னால் கூட இவ்வளவு பெரியஏரியை நீந்திக் கடக்க முடியாது. ஒரு படகு கிடைத்தால் காரியம் சுலபமாகிவிடும். சற்று முன்ஒரு படகு பார்த்தோமே, அது எங்கேயாவது சமீபத்தில் கரையோரமாகத் தானே தங்கியிருக்கும்? அதைத்தேடிப் பிடித்தால் என்ன?"

"குதிரைகளின் கதி என்ன ஆவது? காட்டு மிருகங்களுக்கு உணவாகட்டும் என்று விட்டு விட்டுப்போய்விடலாமா?" என்றான் வந்தியத்தேவன்.

உடனே ஏதோ ஞாபகம் வந்து திடுக்கிட்டவன் போல் துள்ளிக் குதித்து எழுந்து, "ஐயா! புலிஎங்கே?" என்று கேட்டான்.

"நானும் அதை மறந்துவிட்டேன்; பக்கத்தில் எங்கேயாவது மறைந்திருக்கப் போகிறது.யமன் பன்றி ரூபத்தில் வராமல் ஒரு வேளை புலி ரூபத்திலும் என்னைத் தொடரலாம் அல்லவா?" என்றார்இளவரசர். இருவரும் சுற்றும் முற்றும் உற்றுப் பார்க்கலானார்கள்.

சிறிது நேரம் பார்த்த பிறகு வந்தியத்தேவன் "அதோ!" என்று சுட்டிக் காட்டினான்.

ஏரியில் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்த அந்த வாய்க்கால் வடக்கே போகப் போக குறுகலாகிக்கொண்டு சென்றது. அவ்விதம் குறுகலாகியிருந்த இடத்தில் வாய்க்காலின் மீது ஒரு பெரிய மரம் விழுந்துஇரு கரைகளையும் தொட்டுக் கொண்டிருந்தது. புலி அந்த மரப்பாலத்தின் மீது மெல்ல ஊர்ந்து சென்றுஅக்கரையை நெருங்கிக் கொண்டிருந்ததை இரண்டு பேரும் கவனித்தார்கள். இரண்டு பேருடைய மனத்திலும்ஒரே எண்ணம் உதித்தது.

"ஆகா! படகிலே வந்த பெண்கள்!" என்று இருவரும் ஏக காலத்தில் வாய்விட்டுக் கூறினார்கள்.

பின்னர், "இந்த வாய்க்காலை அடுத்துள்ள தீவின் கரையிலேதான் அந்தப் பெண்கள் இறங்கியிருக்க வேண்டும்" என்றான் வல்லவரையன்.

"காயம்பட்ட சிறுத்தை மிக அபாயகரமானது" என்றார் இளவரசர்.

"பன்றியுடன் புலியையும் கொன்று எடுத்துப் போகத்தான் வேண்டும்."

"இந்த வாய்க்காலை எப்படித் தாண்டுவது? குதிரைகள் மரப்பாலத்தின் மேல் போக முடியாதே?"

"தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருக்கும்; இறங்கிப் போகலாம்."

கரிகாலரின் குதிரையும் அதற்குள் எழுந்து வந்தியத்தேவன் குதிரைக்கு அருகே போய்நின்று கொண்டிருந்தது. எஜமானர்கள் அந்தரங்கம் பேசியதுபோல் அவையும் தங்களுக்குச் சற்று முன் நேர்ந்தஅபாயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டன போலும். இருவரும் தத்தம் குதிரைமீது தாவி ஏறினார்கள்;வாய்க்காலில் குதிரைகளை இறக்கினார்கள். வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக இல்லைதான்.ஆனால் சேறும் உளையும் அதிகமாயிருந்தன. குதிரைகள் தட்டுத் தடுமாறித் தத்தளித்துச் சென்றன.

கோடிக்கரைப் புதை சேற்றுக் குழிகளை நினைத்துக் கொண்டு வந்தியத்தேவன் "இந்தச் சேறு ஒன்றும்பிரமாதமில்லை" என்று தைரியமடைந்தான். அதைப் பற்றி கரிகாலருக்குச் சொல்லவும் தொடங்கினான்.

"நண்பா! வௌியிலுள்ள சேற்றைப் பற்றிச் சொல்லப் போய்விட்டாயே? மனிதர்களுடையஉள்ளத்தில் உள்ள சேற்றைக் குறித்து என்ன கருதுகிறாய்? ஒரு தடவை தீய எண்ணமாகிற சேற்றில்இறங்குகிறவர்கள் மீண்டும் கரை ஏறுவது எவ்வளவு கடினம் தெரியுமா?" என்று கரிகாலர் கேட்டார்.இளவரசரின் உள்ளம் உண்மையில் சேறு போலக் குழம்பியிருக்கிறது என்று வந்தியத்தேவன் எண்ணிக்கொண்டான்.

குதிரைகள் மிகப் பிரயாசையுடன் அக்கரையை அடைந்தன. காட்டுக்குள்ளே மிக ஜாக்கிரதையுடன்நாலா புறமும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருவரும் சென்றார்கள். கரிகாலரின் கையில் வில்லும்அம்பும் தயாராயிருந்தன. வந்தியத்தேவன் தன் வேலையும் புலியின் பேரில் எறிவதற்கு ஆயத்தமாகவைத்துக் கொண்டிருந்தான். திடீரென்று, காட்டில் சாதாரணமாகக் கேட்கும் சத்தங்களை அடக்கிக் கொண்டுஒரு பெண்ணின் 'கிறீச்' என்ற குரல், "அம்மா! அம்மா! புலி!" என்று கதறுவது கேட்டது.

மணிமேகலை மரக் கிளையின் மீது சிறுத்தையைப் பார்த்த அதே சமயத்தில் வசந்த மண்டபத்தில்சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த தோழிப் பெண் ஒருத்தியும் அந்தப் புலியைப் பார்த்து விட்டு அவ்விதம்அலறினாள். அந்தக் குரல் இரு நண்பர்களின் செவிகளிலும் விழுந்து ரோமாஞ்சனத்தை உண்டு பண்ணியது.குதிரைகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு குரல் வந்த திசையை நோக்கி அவர்கள் சென்றார்கள்.ஏரிக் கரையின் ஒரு திருப்பம் திரும்பியதும் அவர்கள் கண்ட காட்சி இருவரையும் திடுக்கிட்டுத் திகில்கொள்ளும்படிச் செய்து விட்டது.

நந்தினியும், மணிமேகலையும் படித்துறையில் குளிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தசமயத்தில், அருகில் சாய்ந்திருந்த மரக்கிளை ஒன்றின் மீது சிறுத்தை சிறிது சிறிதாக ஊர்ந்துமேலேறிக் கொண்டிருந்தது. பன்றியோடு போட்ட சண்டையில் நன்றாக அடிபட்டுக் காயமுற்றிருந்தஅந்தச் சிறுத்தை அப்போது தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நிலையில் இருந்தது.ஆனால் இது அந்தப் புலியைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அடுத்த கணம் சிறுத்தைதண்ணீரில் நின்ற பெண்களின் மீது பாயப் போகிறதென்று கரிகாலரும், வந்தியத்தேவனும் எண்ணினார்கள்.

வந்தியத்தேவன் வேலை உபயோகிக்கத் தயங்கினான். வேல் தவறிப் பெண்களின் மீதுவிழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தான். கரிகாலருக்கு அத்தகைய தயக்கம் ஒன்றும் ஏற்படவில்லை,வளைத்திருந்த வில்லில் அம்பைக் கோர்த்து நன்றாகக் குறிப்பார்த்து இழுத்து விட்டார். அம்பு விர்ரென்றுசென்று சிறுத்தையின் அடி வயிற்றில் பாய்ந்தது. சிறுத்தை பயங்கரமாக உறுமிக் கொண்டு அப்பாலிருந்தபெண்களின் மீது பாய்ந்தது. அடுத்த கணத்தில் என்ன நேர்ந்தது என்பதைத் தௌிவாகப் பார்க்கமுடியாதபடி ஒரே குழப்பமாகி விட்டது. சிறுத்தையும் பெண்கள் இருவரும் திடீரென்று மறைந்து விட்டார்கள்.சில கணநேரம் கழித்து மூவரும் வெவ்வேறு இடத்தில் தண்ணீருக்குள்ளிருந்து வௌியே தலையை நீட்டினார்கள்.ஏரியின் நீரோடு இரத்தம் கலந்து செக்கச் செவேலென்று ஆயிற்று.

பக்க தலைப்பு



நாற்பத்து நான்காம் அத்தியாயம்
காதலும் பழியும்




இரு நண்பர்களும் மேற்கூறியவற்றையெல்லாம் திகிலுடன் பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள்.குதிரைகள் மீதிருந்து குதித்தார்கள்; தண்ணீர் கரையோரம் பாய்ந்து வந்தார்கள். இதற்குள்சிறுத்தை தண்ணீரிலே சிறிது தூரம் சென்று விட்டது! அது மிதந்த விதத்தைப் பார்த்தால் அது ஒருவழியாகப் பிராணனை விட்டுவிட்டது என்று தோன்றியது. பெண்மணிகள் இருவரும் புலியினால் எவ்வளவுகாயப்படுத்தப்பட்டார்கள் என்பது ஒன்றும் தெரியவில்லை. இருவரும் தண்ணீரில் குதித்துப் பெண்மணிகளைநோக்கிச் சென்றார்கள்.

முதலில் வந்தியத்தேவன் மணிமேகலையை அணுகிச் சென்றான். ஏனெனில் நந்தினியைநெருங்குவதற்கு அவனுக்கு அச்சமாக இருந்தது. மணிமேகலைக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. புலி விழுந்தவேகத்தில் அவளும் தண்ணீரில் விழுந்து முழுகியதில் சிறிது மூச்சுத் திணறியதைத் தவிர வேறொன்றும்அவளுக்கு நேரவில்லை! வந்தியத்தேவன் தன் அருகில் வருவதைப் பார்த்ததும் அவள் எல்லையில்லாத உள்ளக்கிளர்ச்சி அடைந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

கரிகாலர் வந்தியத்தேவனுடைய கையைப் பிடித்து நிறுத்தி நந்தினியின் பக்கம் அனுப்பிவிட்டுத்தன்னை நோக்கி வருவதை அவள் அறியவில்லை. இரண்டு கைகளினாலும் கரிகாலர் அவளைத் தூக்கிஅணைத்துக் கொண்டு படித்துறைப் படிகளில் ஏறி மேலே போய்ச் சேர்ந்து தரையில் மெதுவாக அவளை வைக்கும்வரையில் கண்ணை விழித்துப் பார்க்கவில்லை. மூக்கில் சுவாசம் வருகிறதா என்று கரிகாலர் விரலைவைத்துப் பார்த்தபோதுதான் கண்களை மெல்ல மெல்லத் திறந்தாள். திறக்கும்போதே வந்தியத்தேவனிடம்தன் கரை காணாக் காதலைத் தெரிவிக்கும் பொருட்டு அன்பும் ஆர்வமும் ததும்பிய நோக்குடன் பார்த்தாள்.அவளுடைய கண்ணின் முன் தெரிந்தவர் இளவரசர் கரிகாலர் என்று தெரிந்ததும் துள்ளி எழுந்து நகர்ந்துஉட்கார்ந்து கொண்டாள்.

அவளுடைய முகத்தில் அச்சமயம் தோன்றிய ஏமாற்றத்தைக் கவனித்த கரிகாலர் கலீர்என்று சிரித்தார்.

"மணிமேகலை! இது என்ன துள்ளல்? என்னைக் கண்டு இவ்வளவு அருவருப்பு ஏன்?" என்றார்.

"ஐயா! வேற்று மனிதர் கை பட்டால் பெண்களுக்குக் கூச்சமாயிராதா?" என்றாள் மணிமேகலை.

"பெண்ணே! என்னை வேற்று மனிதனாக்கி விட்டாயா? எனக்கும் உனக்கும் கலியாணம் செய்து வைக்கஏகப் பிரயத்தனம் நடக்கிறதே?" என்றார் கரிகாலர்.

"சுவாமி! அந்தப் பிரயத்தனம் பலித்த பிறகுதானே சொந்தமாக முடியும்? அதுவரையில்தாங்கள் வேற்று மனிதர்தானே?" என்றாள் மணிமேகலை.

"ஆனால் அது உனக்கு இஷ்டமா என்பதை நீ சொல்லலாம் அல்லவா?"

கடம்பூர் இளவரசி சற்று யோசித்துவிட்டு, "ஐயா! தாங்கள் சோழ குலத்தோன்றல்; எல்லாம்அறிந்த புத்திமான்.சிறு பெண்ணாகிய என்னிடம் இவ்விதம் பேசலாமா? என் தந்தையிடமல்லவா கேட்கவேண்டும்?" என்றாள்.

"பெண்ணே! உன் தந்தை சம்மதித்தால் நீ சம்மதிப்பாயா?"

"என் தந்தை சம்மதித்த பிறகு அவர் கேட்டால் சொல்லுவேன். தங்களிடம் இதைப் பற்றிப்பேசவே எனக்குக் கூச்சமாயிருக்கிறது. புலி என்னைக் கொல்லாமலும், நான் தண்ணீரில் முழுகிப்போகாமலும் என்னைக் காப்பாற்றினீர்கள். அதனால் தங்களிடம் ஏற்பட்டுள்ள நன்றி காரணமாக இத்தனைநேரமும் பொறுமையாக இருக்கிறேன்..."

கரிகாலன் சிரித்துவிட்டு, "மணிமேகலை! நீ வெகு கெட்டிக்காரி; மிக அழுத்தமானவள்.ஆனாலும் ஏமாந்து போனாய். அதற்காக என்னை ஏமாற்றப் பார்க்க வேண்டாம்!" என்றார்.

"ஐயா! இது என்ன வார்த்தை! தங்களை இந்த அறியாப் பெண் ஏமாற்றுவதா? எதற்காக? எந்தமுறையில்?"

"வீணாக ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறாய்? எனக்குப் பதிலாக வந்தியத்தேவன் உன்னைத்தூக்கிக் கொண்டு வந்து கரை சேர்ந்திருந்தால் இவ்வளவு கடூரமாகப் பேசுவாயா? வந்தியத்தேவன்என்று நினைத்துத்தானே நீ கண்ணை மூடிக் கொண்டாய்? அதே எண்ணத்துடன்தானே கண்ணைத் திறந்தும்பார்த்தாய்! பாவம்! ஏமாந்து போனாய்!" என்றான் கரிகாலன்.

மணிமேகலை வெட்கத்துடனே சிறிது பீதியும் அடைந்தாள். பின்னர் தைரியப்படுத்திக்கொண்டு, "அரசே, தங்களுக்குத் தான் என் மனது தெரிந்திருக்கிறதே! அப்படியிருக்கும்போது, இந்தப்பேதைப் பெண்ணை எதற்காகச் சோதிக்கிறீர்கள்?" என்றாள்.

"மணிமேகலை! உன் மனது எனக்குத் தெரிந்திருக்கிறது. அது போலவே வல்லவரையனுடையமனமும் எனக்குத் தெரிந்திருக்கிறது. உன்னுடைய பரிசுத்தமான அன்புக்கு அவன் பாத்திரன் அல்லவேஎன்றுதான் யோசிக்கிறேன். அதோ பார், இளைய ராணி நந்தினியும் வந்தியத்தேவனும் சல்லாபம்செய்வதை! நந்தினியின் முகத்தில் குடிகொண்டிருக்கும் குதூகலத்தைப் பார்!" என்றார்.

மணிமேகலை அவர் காட்டிய திசையைப் பார்த்தாள். அந்தக் கணத்தில் அசூயை என்னும் விஷம்அவளுடைய பால் போன்ற நெஞ்சில் ஏறிவிட்டது.

அதே சமயத்தில் வந்தியத்தேவனும் நந்தினியும் பேசிக் கொண்டிருந்தார்கள். நந்தினியின்தோள் ஒன்றில் புலி நகம் பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மணிமேகலையைப் போல் நந்தினிகண்ணை மூடிக்கொள்ளவும் இல்லை; வந்தியத்தேவன் கைகளிலிருந்து விடுவித்துக் கொள்ள அவசரப்படவும் இல்லை.வந்தியத்தேவனோ, தன் கையைச் சுட்டுக் கொண்டிருந்த நெருப்புத் தணலைக் கீழே போடுவதுபோல் அவசரமாகஇளைய ராணியைக் கரையில் இறக்கிவிட்டான். தண்ணீரில் முழுகி இருந்த போதிலும் நந்தினியின்உடம்பு உண்மையிலேயே சுட்டுக் கொண்டிருந்தது.

வந்தியத்தேவன் உள்ளத்தில் இனந்தெரியாத பீதி குடிகொண்டது; அவன் உடம்பு பதறியது.நந்தினி புன்னகையுடன் "ஐயா! ஏன் இவ்வளவு பதட்டம்? என்னைப் புலி என்று நினைத்துக் கொண்டீரா? அல்லதுபுலியைக் காக்க நினைத்துத் தவறாக என்னைக் கரை சேர்த்து விட்டதற்காக வருத்தப்படுகிறீரா?" என்றாள்.

"அம்மணி! இவ்வளவு கொடூரமான வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம். தங்களைத் தொட்டுஎடுத்து வரும்படி நேர்ந்து விட்டதை நினைத்து நெஞ்சு சிறிது கலக்கம் அடைந்தது..."

"குற்றம் உள்ள நெஞ்சு அல்லவா? அதனால் கலங்குகிறது!"

"தேவி! நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே!"

"குற்றம் செய்யவில்லை? தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசிப்பதற்கு என் உதவியை நாடினீர்.முத்திரை மோதிரத்தைக் கொடுத்து உதவினேன். பிறகு என் அந்தப்புரத்தில் திருட்டுத்தனமாகப்பிரவேசித்தீர். அப்போதும் உமக்குத் தீங்கு நேராமல் காப்பாற்றினேன். அதற்குக் கைம்மாறுஎன்ன செய்தீர்? எனக்குத் தெரியாமல், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் திருடனைப் போல தப்பிஓடிப்போனீர். பழையாறை இளைய பிராட்டியைச் சந்தித்த பிறகு என்னிடம் திரும்பி வருவதாகச்சொன்னீர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; இவையெல்லாம் குற்றமல்லவா?"

"அந்தக் குற்றங்களை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் காரணம் இருக்கிறது.நான் பிறரிடம் சேவகம் செய்பவன். ஆதித்த கரிகாலருடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டவன். இதைத் தாங்கள் எண்ணிப்பார்த்தால் என் பேரில் குற்றம் சாட்டமாட்டீர்கள்..."

"ஆமாம்; புலியின் வாயிலிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கூடக் கரிகாலன்கட்டளை உமக்கு வேண்டும். தண்ணீரில் மூழ்கும் பெண்ணைக் கரை சேர்ப்பதற்கும் அவருடைய அனுமதி வேண்டும். நான் கவனித்துக் கொண்டுதானிருந்தேன். அடடா! மணிமேகலையைக் காப்பாற்றுவதில் இளவரசர்எத்தனை பரபரப்புக் காட்டினார்? நான் நீரில் மூழ்கி செத்துப் போயிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.அவருடைய மனதை அறியாமல் நீர் என்னைக் கரை சேர்த்து விட்டீர்..."

"அம்மணி! அவ்வாறு சொல்ல வேண்டாம்! தாங்கள் ஓலை அனுப்பியபடியால்தான் கரிகாலர்காஞ்சியிலிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்..."

"ஆனால் அவர் இங்கு வராமல் தடை செய்வதற்காக நீர் அவசர அவசரமாக ஓடி வந்தீர்.இளைய பிராட்டியின் செய்தியுடன் வந்தீர்.ஆனால் உம்முடைய முயற்சி பலிக்கவில்லை. என்னுடையகாரியத்தில் நீர் தலையிடுவதற்குச் செய்யும் முயற்சியெல்லாம் இவ்வாறுதான் தோற்றுப் போகும்!"

நந்தினியின் இந்த வார்த்தைகள் வந்தியத்தேவனின் மனக் குழப்பத்தை அதிகமாக்கின.அந்த வார்த்தைகளின் உட்கருத்தை நந்தினியின் முகபாவத்திலிருந்து தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன்அவளை உற்றுப் பார்த்தான். ஆனால் நந்தினியின் முகம் எவ்வித மாறுதலும் இன்றி வழக்கம் போலப்புன்னகை பூத்து விளங்கியது.

நந்தினி தொடர்ந்து, "உம்முடைய குற்றத்தை உம்முடைய முகத்தோற்றமே ஒப்புக் கொள்கிறது. அமாவாசை இராத்திரி, பள்ளிப்படைக்கு அருகில் நீர் என் வசம் அகப்பட்டீர். என் ஆட்களிடம் ஒரு சமிக்ஞை செய்திருந்தால் போதும்; உம்மைக் கொன்றிருப்பார்கள். அப்போதும் உம்உயிரைக் காப்பாற்றி அனுப்பினேன், அதற்குக்கூட உமக்கு நன்றி இல்லை. உம்மைப் போல் நன்றி கெட்ட மனிதரை இந்த உலகத்தில் நான் பார்த்ததே இல்லை...."

"தேவி! என் மனத்தில் தங்களிடம் பரிபூரண நன்றி குடிகொண்டிருக்கிறது; சத்தியமாகச்சொல்கிறேன்."

"ஆனால் இந்த ஊருக்கு நாம் வந்து இத்தனை நாளாகியும் உமது நன்றியைத் தெரிவிப்பதற்கு நீர்ஒரு முயற்சியும் செய்யவில்லையே? உமது வார்த்தையை நான் எப்படி நம்புவது?"

"தங்களைத் தனியாகச் சந்திக்கும்போது தெரிவித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன் அதற்குரியசந்தர்ப்பம் கிடைக்கவில்லை..."

"சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொள்ள நீர் ஒருவித முயற்சியும் செய்யவில்லை. முகத்தோற்றத்தினால், கண் பார்வையினால் ஒரு குறிப்பு வௌியிடக் கூடவில்லை. ஏன்? இத்தனை நாளாகஎன் பக்கம் நீர் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கக் கூடவில்லை.."

"தேவி! தாங்கள் சோழ நாட்டுத் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையாரின் தர்மபத்தினி..."

"அதாவது கிழவனைக் கலியாணம் செய்து கொண்டவள் என்று என்னைப் பரிகசிக்கிறீர்;இல்லையா?"

"ஐயோ! தங்களை நான் பரிகசித்தால் கொடிய நரகத்துக்குப் போவேன்..."

"வேண்டாம், வேண்டாம்! எது எப்படியிருந்தாலும் சரி; பழுவேட்டரையரின் 'தர்ம பத்தினி'என்று என்னைக் குறிப்பிட வேண்டாம், நான் அவருடைய மனைவியே அல்ல..."

"ஐயோ! இது என்ன சொல்கிறீர்கள்?"

"உண்மையைத்தான் சொல்கிறேன்; பலவந்தமாக ஒரு பெண்ணைப் பிடித்துக் கொண்டு வந்துவைத்திருந்தால், அவள் மனைவி ஆகிவிடுவாளா?"

"தேவி! தாங்கள் தமிழ் நாட்டுப் பெண் குலத்தில் வந்தவர். பெண் குலத்தின் தர்மத்துக்குமாறாகத் தாங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள்!"

"பெண் குலத்தில் தர்மத்தை நான் அறிந்துதானிருக்கிறேன். பழந்தமிழ் நாட்டுப் பெண்கள்மனத்தினால் யாரைக் காதலித்தார்களோ, அவரையே கணவனாகக் கொண்டார்கள். பலவந்த மணத்துக்குஅவர்கள் உடன்படுவதில்லை!"

"ஆனால் தாங்கள்..."

"நீர் சொல்லப் போவது எனக்குத் தெரியும். பழுவேட்டரையருடைய பலவந்த மணத்துக்குநான் எப்படி உடன் பட்டேன் என்று கேட்கிறீர். ஒரு முக்கிய நோக்கத்துக்காகவே உடன்பட்டேன்.பழந்தமிழ் நாட்டுப் பெண்களுக்கு மற்றொரு சிறப்பியல்பும் உண்டு. அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டஅநீதிக்குப் பழி வாங்கியே தீருவார்கள். ஐயா! நீர் எனது காதல் நிறைவேறுவதற்குத்தான் உதவிசெய்யவில்லை; என் விரோதிகள் மீது பழி வாங்குவதற்காவது உதவி செய்வீரா?"

கடைசியாக நந்தினி கூறிய மொழிகள் ஏககாலத்தில் வந்தியத்தேவனுடைய நெஞ்சைவஜ்ராயுதத்தினால் பிளப்பது போலவும், அவன் தலையில் திடீரென்று பேரிடி விழுவது போலவும் அவனைத்திணறித் திண்டாடச் செய்தன.

"தேவி! தேவி! இது என்ன?... காதலாவது? பழியாவது? எனக்கும் தங்கள் காதலுக்கும் என்ன சம்பந்தம்? காதலுக்கும் பழி வாங்குவதற்கும் என்ன சம்பந்தம்?...

"சம்பந்தம் உண்டு; ஆனால் அதைப் பற்றி சொல்வதற்கு இப்போது நேரம் இல்லை.அதோ,இளவரசரும் மணிமேகலையும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். நாளை நள்ளிரவு நேரத்தில் நான்இருக்கும் அறைக்குத் தனியாக வந்தால் சொல்லுகிறேன்..."

"அது எப்படிச் சாத்தியம், தேவி! தாங்கள் அந்தப்புரத்தில் இருக்கிறீர்கள். நான் எப்படிஅங்கே நள்ளிரவில் தனியாக வர முடியும்?"

"அதே அந்தப்புர அறையிலிருந்தும் ஒரு நாள் நீர் யாரும் அறியாமல் தப்பித்துக் கொண்டுசெல்லவில்லையா? போன வழியாகவே அங்கே திரும்பி வரலாம் அல்லவா? உமக்கு மனம் மட்டும்இருந்தால்..."

வந்தியத்தேவனுடைய திகைப்பு இப்போது பரிபூரணமாகிவிட்டது. ஆனால் நந்தினியின்முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. எப்போதும் போலப் புன்னகை தவழ்ந்தது.

பக்க தலைப்பு



நாற்பத்தைந்தாம் அத்தியாயம்
"நீ என் சகோதரி!"




நந்தினியும் வந்தியத்தேவனும் நின்ற இடத்தை அணுகி இளவரசரும் மணிமேகலையும் வந்துசேர்ந்தார்கள். அருகில் வரும் வரையில் இளவரசர் வந்தியத்தேவனை நோக்கிய வண்ணம் வந்தார். கிட்டவந்ததும் நந்தினியை ஏறிட்டுப் பார்த்தார்.அவளுடைய ஒரு கன்னத்திலும் ஒரு தோளிலும் சிவந்த கோடுகள்போன்ற காயங்களிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்டார்.

"ஐயோ! உங்களை அந்தப் பாழாய்ப்போன புலி காயப்படுத்திவிட்டதா, என்ன?" என்றார்.

"ஆம், ஐயா! ஆனால் அந்தப் புலி என் உடம்பைத்தான் காயப்படுத்தியது; நெஞ்சிலே காயம்உண்டாக்கவில்லை!"

இந்த வார்த்தைகள் கரிகாலருடைய நெஞ்சிலே பாய்ந்தன. அவர் மேலே எதுவும்சொல்லுவதற்குள் மணிமேகலை நந்தினியின் அருகில் பதட்டத்துடன் சென்று, "ஆம், அக்கா! நன்றாய்க்கீறி விட்டிருக்கிறதே! நல்ல வேளையாக அஞ்சனம் கொண்டு வந்திருக்கிறேன். வாருங்கள், போட்டுவிடுகிறேன்! உடனே போட்டால் காயம் சீக்கிரம் குணமாகிவிடும்!" என்றாள்.

"தங்காய்! இந்த மாதிரி காயங்கள் எனக்குச் சர்வசாதாரணம் எத்தனையோ காயங்கள் பட்டுஆறியிருக்கின்றன. நெஞ்சில் படும் காயத்தை ஆற்ற ஏதாவது அஞ்சனம் இருக்கிறதா, சொல்! என்றாள்.

"ஓ! இருக்கிறது, அக்கா! அதுவும் இருக்கிறது!" என்று மணிமேகலை சொல்லிவிட்டுநந்தினியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு பளிங்கு மண்டபத்துக்குச் சென்றாள்.

இளவரசரும் வந்தியத்தேவனும் சிறிது பின்னால் சென்று மண்டபத்துக்கு அருகில் ஒரு விசாலமானமாமரத்தின் அடியில் அமைந்திருந்த சலவைக் கல் மேடையில் அமர்ந்தார்கள்.

"ஐயா! எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து போகிறோமோ அவ்வளவுக்கு நல்லது! அதிக நேரம் தங்கினால் கந்தமாறனும் அவன் தந்தையும் ஏதாவது தவறாக எண்ணிக் கொள்ளலாம்" என்றான் வந்தியத்தேவன்.

"யார் வேணுமானாலும் தவறாக எண்ணிக் கொள்ளட்டும். நம் தலையை வாங்கிவிடுவார்களா,என்ன? இந்தப் பெண்கள் நம்மைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளாமலிருந்தால் போதும். அவர்கள் வந்ததும்சொல்லிக் கொண்டு புறப்படலாம்" என்றார் இளவரசர்.

சற்று நேரத்துக்கெல்லாம் நந்தினியும் மணிமேகலையும் புதிய ஆடைகள் அணிந்து அலங்கரித்துக்கொண்டு வந்தார்கள். நந்தினியின் கன்னத்திலும் தோளிலும் இரத்தக் காயம் தெரியாதபடி அஞ்சனம்தடவியிருந்தது.

"உங்களிடம் விடை பெற்றுக் கொண்டு போவதற்காகக் காத்திருந்தோம்" என்றார் கரிகாலர்.

"நன்றாயிருக்கிறது; உச்சி வேளைக்கு மேலாகிவிட்டது எங்களுடன் இருந்து உணவருந்திவிட்டுத்தான்போக வேண்டும். இந்த நேரத்தில் உங்களைப் போக விட்டுவிட்டால், சம்புவரையர் மகள் என்னைமன்னிக்கவே மாட்டாள்" என்றாள் பழுவூர் ராணி.

"ஒரு நிபந்தனையின் பேரில் இருக்கிறோம்; உங்களுடைய காயத்துக்கு அஞ்சனம்தடவியிருக்கிறாள் மணிமேகலை. நெஞ்சத்தின் காயத்துக்கும் ஏதோ அஞ்சனம் இருக்கிறது என்று சொன்னால்அல்லவா? அது என்ன அஞ்சனம் என்பதைத் தெரிவித்தால் இருக்கிறோம்" என்றார் கரிகாலர்.

"அவளைக் கேட்காமல் நாமே அதை ஊகித்துச் சொல்லப் பார்க்கலாமே?" என்றாள் நந்தினி.

"ஒருவேளை காலப்போக்கினால் ஏற்படும் மறதியைச் சொல்லியிருக்கலாம்" என்றார் கரிகாலர்.

"அதுவாக இருக்க முடியாது; காலப்போக்கினால் மாறாத நெஞ்சுப் புண்ணும் உண்டு அல்லவா?" என்றாள் நந்தினி.

"பெண்களின் விஷயத்தில் நெஞ்சுப் புண்ணுக்கு ஒரு நல்ல அஞ்சனம் இருக்கிறது! அதுதான் கண்ணீர்!" என்றான் வந்தியத்தேவன்.

"பெண்களைக் கேவலப்படுத்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்று வல்லத்து இளவரசர்காத்திருந்தார்; ஆனால் அவர் சொல்வது சரியல்ல. சில விதமான நெஞ்சுக் காயங்கள் ஏற்பட்டு விட்டால்கண்ணீர் விடும் சக்தியே போய்விடுகிறது.பிறகு அது அஞ்சனமாக எவ்விதம் பயன்படக்கூடும்?" என்றாள்நந்தினி.

"நாங்கள் இருவரும் சொன்னது சரியில்லையென்றால், நீங்கள் உங்கள் ஊகத்தைச் சொல்லுங்கள்?"என்றான் வந்தியத்தேவன்.

"அதற்கென்ன, சொல்கிறேன்; தங்காய்! நீ குறிப்பிடும் அஞ்சனம் செவியின் மூலமாகநெஞ்சுக்குப் போவதல்லவா? யாழிலும், குழலிலும், இனிய குரலிலும் எழும் இன்னிசையைத் தானே நெஞ்சின்காயத்துக்கு அஞ்சனம் என்று சொல்கிறாய்?" என்றாள் நந்தினி.

"ஆம், அக்கா! உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று மணிமேகலை கேட்டாள்.

"நான்தான் மந்திரக்காரி என்று சொல்லியிருக்கிறேனே? பிறர் மனத்தில் உள்ளதைஅறியும் சக்தி எனக்கு உண்டு. ஐயா! நீங்கள் இருவரும் இன்னிசையின் அந்த அபூர்வ சக்தியை ஒப்புக்கொள்கிறீர்களா?" என்று நந்தினி கேட்டாள்.

"ஆம், ஆம்! அதை ஊகிக்க முடியாமற் போனது எங்கள் தவறு என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.மணிமேகலை இசைக் கலையில் தேர்ந்தவள் என்றும் நன்றாக யாழ் வாசிப்பாள் என்றும் கந்தமாறன் கூறியதும்நினைவு வருகிறது" என்றார் கரிகாலர்.

"தமையன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? தங்கையின் புகழை யாரிடமாவது சொல்லாதநாளெல்லாம் கடம்பூர் இளவரசருக்குப் பிறவாத நாள் போலிருக்கிறது. மணிமேகலையின் இசைத்திறனைப்பற்றி அவர் கூறியது உண்மைதான். மணிமேகலை யாழ் கூட எடுத்து வந்திருக்கிறாள். கானவித்தையின்மகிமை அறியாத என்னை மட்டும் வைத்துக் கொண்டு பாட வேண்டிய நிர்பந்தம் நல்ல வேளையாக அவளுக்குஇன்று இல்லை. ஐயா! பேதைப் பெண்களாகிய எங்களை இன்று புலிக்கு உணவாகாமல் காப்பாற்றினீர்கள்.அதற்கு நன்றி நாங்கள் செலுத்த வேண்டாமா? எங்களுடன் உணவருந்திவிட்டு, மணிமேகலையின் இசை அமுதையும்அருந்திவிட்டுத்தான் போக வேண்டும்" என்று வற்புறுத்தினாள் நந்தினி. வந்தியத்தேவன் அதற்கு இணங்கவேண்டாம் என்று இளவரசருக்குச் சமிக்ஞை செய்தான்; அதை அவர் கவனிக்கவே இல்லை.

"இளவரசிகளின் சித்தம் எங்கள் பாக்கியம்" என்றார் கரிகாலர்.

"மணிமேகலை! உன் மனோரதம் நிறைவேறிவிட்டது. சமையல் ஆகிவிட்டதா என்று போய்ப்பார்! இல்லாவிடில், சற்று துரிதப்படுத்து" என்று ஏவினாள் நந்தினி.

மணிமேகலை உடனே எழுந்து சமையல் நடந்த இடத்தை நோக்கிச் சென்றாள். அதே சமயத்தில்வந்தியத்தேவனும் எழுந்து நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அதை நந்தினி கவனித்துவிட்டு,"சற்று முன் பிறருடைய மனத்தில் உள்ளதை அறியும் மந்திர சக்தி எனக்கு உண்டு என்று சொன்னேன்அல்லவா! அதை இப்போது பரீட்சை பார்க்க விரும்புகிறேன். வல்லத்து இளவரசரின் மனத்தில்இப்போதுதுள்ள எண்ணத்தைச் சொல்லட்டுமா?" என்று கேட்டாள்.

கரிகாலர் சிரித்துக் கொண்டே "சொல்லுங்கள் பார்க்கலாம்!" என்றார்.

"அந்தப் புலியைக் கொன்று இந்தப் பெண்களைக் காப்பாற்றியது பெருந்தவறு என்று பச்சாதாபப்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் அந்தப் புலியின் வயிற்றுக்குள் போயிருந்தால் மிக்க நன்றாயிருக்கும் என்று எண்ணமிடுகிறார்!"

கரிகாலர் மேலும் சிரித்துக் கொண்டே, "நண்பா! நீ இப்படி எண்ணமிடுகிறாயா?" என்றுகேட்டார்.

"இல்லை, ஐயா! அப்படி நான் எண்ணவில்லை. ஆனால் புலியைப் பற்றியும் இவர்களைப் பற்றியும்எண்ணியது உண்மைதான். இவர்களிடம் அகப்பட்டுக் கொண்ட புலி எப்படி உயிரோடு தப்பிப் பிழைத்ததுஎன்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்!" என்றான்.

"என்ன, தம்பி! உளறுகிறாய்? புலி தப்பிப் பிழைத்ததா? மறுபடியுமா? செத்த புலியின்உடல் தண்ணீரில் மிதந்ததே! அது எங்கே?" என்று இளவரசரும் எழுந்து நின்று கேட்டார்.

"அதோ பாருங்கள்!" என்று வந்தியத்தேவன் சுட்டிக் காட்டினான்.

அவர்கள் இருந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் மரக்கிளைகளின் இடையில் தண்ணீர்க்கரை தெரிந்தது. அங்கே இளவரசிகள் வந்த படகு கட்டிப் போட்டிருந்தது. அந்தப் படகின் முனையைமுன்னங்கால்களினால் பற்றிக் கொண்டு சிறுத்தை படகில் ஏற முயன்று கொண்டிருந்தது.

"ஆகா! இந்தப் புலியின் உயிர் வெகு கெட்டி!" என்றார் கரிகாலர்.

"ஐயா! வாருங்கள், போய் அதைக் கொன்றுவிட்டு வரலாம். காயம் பட்ட புலியை உயிரோடுவிடுவது தவறு!" என்றான் வல்லவரையன்.

"வாணர் குலத்து வீரரே! நீங்கள் இரண்டு வீரர்கள் ஒரு காயம் பட்ட புலிக்காக ஏன் சிரமப்படவேண்டும்? மணிமேகலையைக் கூப்பிடுகிறேன்; அவள் தன் கையில் உள்ள சிறிய கத்தியினால் புலியைக்கொன்றுவிட்டு வருவாள்!" என்றாள் நந்தினி.

"பார்த்தாயா, நண்பா! பழுவூர் ராணி நமது வீர தீரத்தைக் குறித்து அவ்வளவு பெருமதிப்புவைத்திருக்கிறார். நானும் வரவேண்டுமா? நீ மட்டும் போய் வருகிறாயா?" என்றார் கரிகாலர்.

"அல்லது மணிமேகலையை அனுப்பலாமா?" என்றாள் நந்தினி.

"மணிமேகலையை அனுப்பலாம். ஆனால் அந்தப் பெண் ஒருவேளை காயம்பட்ட புலிக்கும் அஞ்சனம்தடவிப் பிழைக்க வைத்துக் கொண்டு வந்து விட்டால் என்ன செய்கிறது?" என்று வந்தியத்தேவன் முணுமுணுத்தான்.

"என்ன யோசிக்கிறாய்?" என்றார் இளவரசர்.

"காயம்பட்ட புலியின் தலையை வெட்டிக் கொண்டு வந்து பழுவூர் அரசியின் காலடியில்சமர்ப்பிக்கலாமா என யோசிக்கிறேன். அப்போதாவது அவர் திருப்தியடைகிறாரா, பார்க்கலாம்"என்று சொல்லிவிட்டு வந்தியத்தேவன் விடுவிடு என்று நடந்தான்.

"அந்த மூடன் சொன்னதைக் கேட்டீர்களா? காயம்பட்ட புலியின் தலையை வெட்ட ரொம்ப வீரம்வேண்டுமா?" என்று கரிகாலர் கேட்டுக் கொண்டே சிரிக்கத் தொடங்கியவர், நந்தினியின் முகத்தைப்பார்த்து விட்டுப் பாதியில் சிரிப்பை நிறுத்தினார்.

"அதைப் பற்றித் தாங்கள் அல்லவோ அபிப்ராயம் சொல்ல வேண்டும்?" என்றாள் நந்தினி.

கரிகாலர் தேகமெல்லாம் சிலிர்த்தது.

தழதழத்த குரலில், "நந்தினி! கந்தமாறனிடம் நீ ஓலை கொடுத்து அனுப்பினாய். அதனாலேதான் நான் இவ்விடம் வந்தேன்; இல்லாவிட்டால் வந்திருக்க மாட்டேன்" என்றார்.

"என் வேண்டுகோளுக்கு இத்தனை காலங்கழித்தாவது மதிப்புக் கொடுத்தீர்களே! மிக்க வந்தனம்!"என்றாள் நந்தினி.

"சென்று போனதையெல்லாம் நீ மறந்துவிட்டாய் என்று நினைத்தேன். அதனாலேதான் ஓலைஅனுப்பினாய் என்று கருதினேன்..."

"சென்றதையெல்லாம் மறக்க முடியுமா, ஐயா! நீங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டீர்களா?..."

"மறக்க முடியாதுதான் என்னாலும் மறக்கமுடியவில்லை! நீ கண்ணும் கண்ணீருமாக நின்று என்னிடம்ஒரு வரம் கேட்டாய்.அதை நான் கொடுக்கவில்லை; அந்தச் சமயம் ஏதோ வெறி கொண்டிருந்தேன்.அதையெல்லாம் நான் இன்னமும் மறக்கவில்லைதான். ஆனால் எதற்காக ஓலை கொடுத்து அனுப்பினாய்? எதற்காக என்னை இவ்விடம் வரச் சொன்னாய்?" என்று கேட்டார் இளவரசர்.

"ஐயா! தஞ்சாவூருக்குத் தாங்கள் மூன்று ஆண்டுகளாக வரவில்லை. நோய்ப்பட்டிருக்கும் தங்கள்தந்தையைப் பார்க்கவும் வரவில்லை...."

"அவர் எனக்கு மட்டும் தந்தை அல்ல, நந்தினி!..."

"ஆம், இளைய பிராட்டிக்கும் தந்தைதான்! பொன்னியின் செல்வருக்கும் தந்தைதான்! ஆயினும்தங்களைப் பார்க்காதது தான் தங்கள் தந்தைக்குப் பெருங்குறையாக இருக்கிறது. தாங்கள் வராமைக்குக்காரணம் நான் என்று சக்கரவர்த்தியிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதனால் அவர் என்னைப்பார்ப்பதே கிடையாது. ஐயா! எனக்கு ஏற்கெனவே தாங்கள் செய்த தீங்கெல்லாம் போதாதா? இந்தப்பழி வேறு எனக்கு ஏற்பட வேண்டுமா?..."

"ஆனால் அது உண்மைதானே? உன் காரணமாகத் தான் தஞ்சைக்கு நான் வரவில்லை.."

"அப்படியானால், நான் தஞ்சையை விட்டுப் போய் விடுகிறேன். தாங்கள் தஞ்சைக்கு வந்து,தங்கள் தந்தையின் சிம்மாசனத்தில் அமர்ந்து மணிமகுடம் சூட்டிக்கொண்டு..."

"நந்தினி! அது ஒரு நாளும் நடவாத காரியம். எனக்குச் சிம்மாசனத்தில் இப்போதுஆசை இல்லை. மதுராந்தகத்தேவன் சிம்மாசனத்தில் அமர்ந்து சாம்ராஜ்யத்தின் மணிமகுடத்தைச் சூட்டிக்கொண்டு இராஜ்யம் ஆளட்டும்..."

"ஐயா! மதுராந்தகரைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும். அவரால் இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை ஒரு நாளேனும் ஆளமுடியுமா?"

"அவனால் ஆள முடியாவிட்டால், அவனுக்கு உதவி செய்யப் பழுவேட்டரையர்கள் இருக்கிறார்கள்;நீயும் இருக்கிறாய்..."

"ஐயா! தங்கள் விருப்பம் இப்போது நன்றாய் எனக்குத் தெரிகிறது. நான் தஞ்சையிலிருந்து,பழுவூர் அரண்மனையிலிருந்து, போய்விடுகிறேன்... தாங்கள் தஞ்சைக்கு வந்து..."

"இல்லை, இல்லை! நீ தவறாக எண்ணுகிறாய்! எனக்கு அந்த எண்ணமே கிடையாது. உனக்கு நான்முன்னம் செய்த குற்றமெல்லாம் போதும். பழுவூர் அரண்மனையிலிருந்து உன்னைத் துரத்திய பாதகத்தையும்நான் சேர்த்துக் கட்டிக் கொள்ள வேண்டாம்..."

"ஐயா! நாம் இருவரும் தஞ்சையில் இருக்க முடியாதா? அந்தப் பெரிய நகரில் நாம் இரண்டுபேரும் இருக்க இடம் இல்லையா? ஒருவரையொருவர் பார்க்க வேண்டிய அவசியம் கூட இல்லையே?"

"பார்க்க வேண்டிய அவசியமில்லாமலிருக்கலாம். ஆனால் மனத்தில் நினைக்காமல் இருக்கமுடியுமா? சற்று முன் நீதான் சொன்னாய்! சென்று போனதையெல்லாம் மறக்க முடியாது என்று, உன்நெஞ்சத்திலுள்ள காயத்தைப் பற்றியும் சொன்னாய். என் நெஞ்சத்திலும் காயம் பட்டிருக்கிறது என்னாலும்மறக்க முடியவில்லை."

"மறக்க முடியாமல் இருக்கலாம்; ஆனால் மன்னிக்க முடியாதா? நான் செய்த குற்றங்களை இத்தனைகாலம் கழித்த பிறகும் மன்னிக்க முடியாதா?"

"நந்தினி! நான் மன்னிக்கும்படியாக நீ ஒரு குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்தவன்நான்; உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவன் நான். காஞ்சியிலிருந்து புறப்பட்ட போதுகூட உன்னிடம்மன்னிப்புக் கேட்டுப் பெறலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினேன். ஆனால் வழியில் நான் அறிந்தஒரு செய்தி உன்னிடம் மன்னிப்புக் கேட்கவே என்னைத் தகுதியற்றவன் ஆகிவிட்டது."

"கோமகனே! தாங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்பது எந்த வகையிலும் தகுதியற்றதுதான்.தாங்கள் புவி ஆளும் சக்கரவர்த்தியின் திருக்குமாரர், நான் பெற்ற தாய் தந்தையரால் கைவிடப்பட்டஅநாதைப் பெண்..."

"இல்லை, நந்தினி! நீ அநாதைப் பெண் அல்ல...."

"தனாதிகாரி பழுவேட்டரையர் என்னை மனமுவந்து தம் இளைய ராணியாக அங்கீகரித்தார்ஆனாலும்..."

"அதுமட்டுமல்ல, நந்தினி! எப்படி உன்னிடம் உண்மையைச் சொல்லுவது என்று தயங்குகிறேன்..."

"இந்தப் பேதைப் பெண்ணிடம் தாங்கள் எதை வேண்டுமானாலும் தயங்காமல் சொல்லலாம்.வழியோடு போகிறவர்கள் எல்லாரும் என்னிடம் ஏதேதோ சொல்லத் துணிகிறார்கள். என்னை வம்புக்குஇழுத்து அவமதிக்கிறார்கள்...."

"நந்தினி! இனி அவ்விதம் யாரேனும் நடந்து கொண்டால் என்னால் ஒரு கணமும் பொறுக்கமுடியாது.நீ சொல்ல வேண்டியதுதான். அவனை உடனே யமனுலகுக்கு அனுப்பி விட்டு மறு காரியம்பார்ப்பேன்...."

"எப்போதும் என்னிடம் தாங்கள் அத்தகைய கருணைகாட்டி வந்திருக்கிறீர்கள். பழையாறைஇளைய பிராட்டியோடு கூட எனக்காகச் சிறு பிராயத்தில் சண்டை பிடித்திருக்கிறீர்கள் அவர்தங்கள் சகோதரி..."

"நந்தினி! நீயும் என் சகோதரி தான்! இளைய பிராட்டியைப் போல நீயும் என் சகோதரி;நான் உன் சகோதரன்!"

"கோமகனே! நான் இன்னொருவரை மணந்ததிலிருந்து என்னைத் தங்கள் சகோதரியாகப்பாவிக்கிறீர்கள். அது தங்கள் குலத்தின் பெருமைக்கு உகந்ததுதான். ஆனால் சக்கரவர்த்தியின்திருக்குமாரரை, மூவுலகும் ஆளப் பிறந்தவரை, நான் எவ்வாறு என் சகோதரராகக் கருத முடியும்...?"

"நான் சொல்வதை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை நந்தினி! உண்மையாகவே நீஎன் சகோதரி; மூவுலகும் ஆளும் சக்கரவர்த்தியின் திருக்குமாரி...!"

இதைக் கேட்ட நந்தினி கலகலவென்று சிரித்தாள்.

"தங்களுடைய சித்தம் குழம்பியிருக்கிறதா, எனக்குத்தான் பைத்தியம் பிடித்திருக்கிறதா,தெரியவில்லை!" என்று கூறினாள்.

"சித்தப்பிரமையும் இல்லை! பைத்தியமும் இல்லை."

"அப்படியானால், இந்தப் பேதையைப் பரிகாசம் செய்கிறீர்களா?"

"என்னைப் பார்த்துச் சொல், நந்தினி! உண்மையாகவே உன்னைப் பரிகசிப்பவனாகத்தோன்றுகிறதா?"

"ஐயா! தாங்கள் என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்! என்னைப் பார்த்தால், சக்கரவர்த்தியின்திருக்குமாரி என்று தோன்றுகிறதா? இராஜ குலத்தின் இலட்சணம் என் முகத்திலே விளங்குகிறதா?"

"நந்தினி! நீ ஐந்து வயதுப் பெண்ணாக இருந்தது முதலாவது உன் முகத்தை பார்த்திருக்கிறேன்.உன் முகத்தில் ஜொலித்த இணையில்லாத சௌந்தரியத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். அதற்குக் காரணம்மட்டும் இப்போதுதான் தெரிந்தது. காஞ்சியிலிருந்து புறப்பட்ட பிறகு நடுவழியிலேதான் தெரிந்தது.சோழ குலத்தில் வாழ்க்கைப்பட்டவர்களிலே வைதும்பராஜன் மகள் கலியாணிக்கு இணையான அழகுடையவர்யாரும் இல்லை என்பது உலகப் பிரசித்தம். அவர் என் பாட்டி; இன்னமும் பழையாறையில் உயிரோடுஇருந்து வருகிறார். எழுபது வயது ஆன பிறகும் அவர் முகத்தில் விளங்கும் தெய்வீகமான அழகுகண்களைக் கூசச் செய்யும். அவருடைய அழகெல்லாம் இப்போது உன்னிடந்தான் தஞ்சம் புகுந்திருக்கிறது.அது என்னிடம் இல்லை; இளைய பிராட்டியிடம் இல்லை, அருள்மொழியிடமும் இல்லை; என் தந்தையின் மூலமாகஉன்னிடத்தேதான் வந்திருக்கிறது..."

"ஐயா! இது என்ன சொல்கிறீர்கள்? உண்மையிலேயே எனக்குச் சித்தக் கோளாறுதான்போலிருக்கிறது. அல்லது என் காதுகளில் ஏதேனும் கோளாறு இருக்க வேண்டும்..."

"இல்லை, நந்தினி இல்லை! சித்தக் கோளாறும் இல்லை; உன் காதிலே கோளாறும் இல்லை; நீஎன் தந்தையின் மகள்; ஆகையால் என் சகோதரி! சக்கரவர்த்தி என் அன்னையை மணப்பதற்கு முன்னால் ஈழநாட்டைச் சேர்ந்த ஒரு தீவிலே ஒரு மாதரசியைக் காதலித்துக் காந்தர்வ மணம் புரிந்து கொண்டார்.அவளுடைய புதல்வி நீ, ஆகையால் என் சகோதரி!" என்று கரிகாலர் ஆதுரம் ததும்பிய குரலிலே கூறினார்.

நந்தினி பெருந் திகைப்பு அடைந்தவள் போலச் சிறிது நேரம் ஆதித்த கரிகாலரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு அவளுடைய முகத்தில் தௌிவு தோன்றியது. "ஐயா! இந்தச் செய்தியைத்தானாதாங்கள் காஞ்சியிலிருந்து புறப்பட்ட பிறகு அறிந்தீர்கள்?" என்று கேட்டாள்.

"ஆம் நந்தினி! அதை அறிந்ததும் ஏற்கெனவே விளங்காமலிருந்த பல விஷயங்கள் எனக்குவிளங்கின."

"கோமகனே! தங்களுக்கு இந்தச் செய்தியை வழியிலே சொன்னவர் யார்? வல்லத்து இளவரசரா?"

"அவன்தான்! ஆனால் அவனாகச் சொல்லவில்லை. இளைய பிராட்டி குந்தவை அவனிடம் சொல்லிஅனுப்பினாள்!"

"ஆகா! தங்களையும் என்னையும் பிரித்து வைப்பதற்கு ஆதிநாளிலிருந்து எத்தனையோ சூழ்ச்சிசெய்து வந்திருக்கிறார்கள். இன்னமும் அவர்களுடைய சூழ்ச்சிகள் முடிந்தபாடில்லை."

"நீ நினைப்பது தவறு நந்தினி! இதில் சூழ்ச்சி ஒன்றுமில்லை. சிறு பிராயத்தில்உன்னையும் என்னையும் பிரித்து வைப்பதற்குப் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி செய்த முயற்சிகள்எனக்குப் புரியாமலிருந்தன. அதற்காக அளவில்லாத கோபம் அடைந்தேன். அவர் எவ்வளவு பயங்கரமானவிபத்திலிருந்து நம்மைத் தடுத்துக் காப்பாற்றினார் என்று இப்போதுதான் தெரிகிறது. ஆனால் உண்மையைஅவர்கள் அப்போதே சொல்லியிருக்கலாம். சொல்லாத காரணத்தினால் உனக்குப் பெரும் அநீதிசெய்தார்கள்; எனக்கும் தீங்கு செய்துவிட்டார்கள்; போனது போகட்டும். சென்றதையெல்லாம் நாம்இருவரும் மறந்து விடுவோம்; மறக்க முடியாவிட்டாலும் மன்னித்து விடுவோம்..."

"ஐயா! வல்லத்து இளவரசர் வழியில் தங்களைச் சந்தித்து இந்தக் கதையை மட்டுந்தான்சொன்னாரா? இன்னும் ஏதாவது சொன்னாரா?" என்று நந்தினி கேட்டாள்.

"கதை என்று ஏன் கூறுகிறாய், நந்தினி! உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்றார்ஆதித்தகரிகாலர்.

"தாங்கள் கூறிய செய்தி அவ்வளவு எளிதாக நம்பக் கூடியதா? சக்கரவர்த்தியின் குமாரியாகப்பிறந்து நான் இந்தக் கதியை அடைந்திருக்கமுடியுமா? இவ்வளவு கொடுமையான துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கமுடியுமா? வந்தியத்தேவன் கூறியது உண்மையாகவே இருக்கட்டும். இது மட்டுந்தான் அவர் சொன்னாரா? வேறுஒன்றும் சொல்லவில்லையா?" என்றாள் நந்தினி.

கரிகாலர் சிறிது தயங்கிவிட்டு, "ஆம்; இன்னொரு செய்தியும் சொன்னான். நீ பாண்டியநாட்டுச் சதிகாரர்களோடு சேர்ந்திருப்பதாகச் சொன்னான். சோழர் குலத்தையே கருவறுத்து விடக்கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அதற்காக, பிடியில் மீன் சின்னம் உள்ள கொலைவாள்ஒன்றை நீ வைத்துப் பூஜித்து வருவதாகவும் சொன்னான். கொள்ளிடக்கரைக் காட்டில் பள்ளிப்படையின்அருகில் யாரோ ஒரு சிறுவனை வைத்து மணிமகுடம் சூட்டியதாகவும் கூறினான். நந்தினி! அதையெல்லாம்நீ இனி மறந்துவிடு! சோழர் குலத்தின் பெருமைக்கெல்லாம் என்னைப் போல் உரிமையுள்ளவள் நீ.சுந்தர சோழ சக்கரவர்த்தியின் புதல்வி; எங்கள் அருமைச் சகோதரி. உனக்கு இதுவரை செய்தஅநீதிகளுக்கெல்லாம் பரிகாரம் செய்வதே எனது முதற் கடமையாக இனி வைத்துக் கொள்வேன்..."

"ஐயா! இவ்வளவையும் தாங்கள் நம்புகிறீர்கள் அல்லவா? அப்படியிருக்கும்போது, கடம்பூருக்குவந்து இத்தனை நாள் வரையில் காத்திருந்ததேன்? முன்னாடியே என்னைச் சந்தித்துப் பேச ஒரு முயற்சியும்செய்யாதது ஏன்?"

"என் மனத்தில் ஏற்பட்டிருந்த குழப்பந்தான் காரணம். நம்முடைய புதிய உறவை என் மனதில்நிலைப்படுத்திக் கொள்ள அவகாசமும் வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லத் தக்கசந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பலர் முன்னிலையில் சொல்லக்கூடிய செய்தியா இது?அதிர்ஷ்டவசமாக, ஒரு காட்டுப்பன்றியும் ஒரு சிறுத்தைப் புலியும் இன்றைக்கு அத்தகைய சந்தர்ப்பத்தைஎனக்கு ஏற்படுத்திக் கொடுத்தன..."

நந்தினி குறுக்கிட்டு, "ஐயா! காட்டு மிருகங்கள் பொல்லாதவைதான்! ஆனால் மனிதர்களைப்போல் அவ்வளவு கொடுமை செய்யக் கூடியவை அல்ல. இது இன்றைக்குத்தான் எனக்கு நன்கு தெரிந்தது" என்றாள்.

"சகோதரி! சென்று போனதையெல்லாம் மறக்க முடியுமா என்று சற்று முன்னால் நீ சொன்னாய்.அதை நானும் ஒப்புக் கொண்டேன். மறக்க முடியாவிட்டாலும் மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.அதற்கு நீ மறுமொழி சொல்லவில்லை."

"கோமகனே! தாங்கள் இதற்கு முன்னால் எனக்குச் செய்த துரோகங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும்மன்னித்து விடுவேன்; ஒருவேளை மறந்தும் விடுவேன். ஆனால் இன்றைக்குச் செய்த துரோகத்தை என்றைக்கும்மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது..."

"ஐயோ! இன்றைக்கு நான் என்ன செய்தேன்? நான் அறிந்து ஒரு துரோகமும் உனக்குச்செய்யவில்லையே?"

"சொல்லுகிறேன் அதோ வருகிறானே, அந்த தூர்த்தனைப் பாருங்கள்!"

"வல்லவரையனையா சொல்கிறாய்?"

"ஆமாம்; புலியின் தலையைக் கொண்டு வராமல் வெறுங்கையுடனே வருகிறானே, அவன்தான்.ஒருநாள் அவன் தஞ்சையில் என்னைப் பார்த்தான். என்னுடைய பாதம் அவன் பேரில் பட்டால் அதைஒரு 'பாக்கியமாகக் கருதுவேன்' என்று சொன்னான். அவனை என் காலால் தொட்டு உதைக்கவும்நான் இஷ்டப்படவில்லை. வேலைக்காரர்களை அழைப்பதாகச் சொன்ன பிறகு ஓடி விட்டான்.அவனுடைய நீசத்தனமான எண்ணத்துக்கு நான் இணங்காததற்காகத் தங்களிடம் இத்தகைய பயங்கரமானகற்பனைகளைப் புனைந்து சொல்லியிருக்கிறான். நான் விரும்பினால் தங்களுடைய தலையையே கொண்டுவந்து விடுவதாக உறுதி கூறினான். இதையெல்லாம் தங்களிடம் நான் சொல்லி விடப் போகிறேனோஎன்று அவனுக்குப் பயம். அதற்காகவே தாங்கள் கடம்பூர் மாளிகைக்கு வராமல் வழியிலே தடுத்து விடப்பார்த்தான். அதனாலேயே தங்களுடன் இணைபிரியாமல் சுற்றி வந்து கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டநீசன், என் காலினால் தொடுவதற்குக்கூட நான் விரும்பாதவன், - அவன் என் உடம்பு முழுவதையும் அணைத்துத்தூக்கிக் கரையேற்றும்படிச் செய்தீர்கள். அதைப் பார்த்துக் கொண்டுமிருந்தீர்கள்; இதை நான் மறக்கமுடியுமா? அல்லது மன்னிக்கத் தான் முடியுமா?"

இவ்விதம் நந்தினி கண்களில் கோபக்கனல் பொங்கக் கூறி வந்த பயங்கரமான மொழிகளைக்கேட்டுக் கரிகாலருடைய தலை உண்மையிலேயே சுழலத் தொடங்கியது. பளிங்கு மண்டபம், ஏரியின்நீர், காட்டு மரங்கள் எல்லாம் சுழன்றன. சற்று நிதானித்துக் கொண்டு, "சகோதரி! நந்தினி! நீசொல்வது உண்மையாக இருக்க முடியுமா? எதை நம்புவதென்று எனக்கு மெய்யாகவே தெரியவில்லை.வந்தியத்தேவன் அவ்வளவு நீசனாக இருக்கக் கூடுமா? அவனுக்கு இந்தப் பேதைப் பெண் மணிமேகலையைத்திருமணம் செய்விப்பது என்று சற்று நேரத்துக்கு முன்னால் கூட எண்ணினேனே?" என்றார்.

"ஐயா! நான் சொல்வதை மட்டும் நீங்கள் நம்பிவிட வேண்டாம். எப்போதுமேஅவசரப்பட்டுத் தாங்கள் காரியம் செய்து விடுவீர்கள். இந்தத் தடவை அப்படிச் செய்ய வேண்டாம்.இரண்டு நாள் பொறுத்திருந்து இவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்து வாருங்கள். தாங்களே தெரிந்துகொள்வீர்கள்!" என்றாள் நந்தினி.

பக்க தலைப்பு



நாற்பத்தாறாம் அத்தியாயம்
படகு நகர்ந்தது!




வந்தியத்தேவன் ஒரு பக்கத்தில் விரைந்து வந்து கொண்டிருந்தான். மற்றொரு புறத்தில்மணிமேகலை, "அக்கா! உணவு சித்தமாயிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டு நெருங்கி வந்து கொண்டிருந்தாள்.

கரிகாலர் இருபுறமும் பார்த்துவிட்டு, "நந்தினி, என்னைக் கடம்பூர் மாளிகைக்கு வரவேண்டாம்என்று தடுக்க வந்தியத்தேவன் மட்டும் முயலவில்லை. ஆழ்வார்க்கடியான் என்னும் வைஷ்ணவனும் அதே மாதிரிசெய்தியைக் கொண்டு வந்தானே! என் தந்தையின் உயிர் நண்பரும் என் பக்திக்கு உரியவருமான முதன்மந்திரிஅநிருத்தரும் சொல்லி அனுப்பினாரே?" என்றார்.

"முதன்மந்திரி அநிருத்தர்! தங்கள் தந்தையின் பிராண சிநேகிதர்! ஆகையினால் தங்கள்தந்தையின் பிராணனைத் தாமே அபகரிக்கப் பார்க்கிறார். தங்களுடைய பக்திக்கு உரியவர்! ஆகையால்தங்களுக்கு அடுத்த பட்டம் இல்லாமற் செய்யப் பார்க்கிறார்..."

"ஏன்? ஏன்?"

"தாங்கள் வெறிபிடித்தவர் என்றும், தெய்வ பக்தி இல்லாதவர் என்றும் அவருக்கு எண்ணம்.தங்கள் தம்பிக்குப் பட்டம் கட்டி வைத்து அவனை வீர வைஷ்ணவனாக்கி இந்தச் சோழ நாட்டையே வைஷ்ணவநாடாக்கிவிட வேண்டுமென்பது அவருடைய விருப்பம். தங்களுடைய தம்பி நடுக்கடலில் காணாமற்போனபோதுஅவருடைய எண்ணத்திலே மண் விழுந்தது!"

"அதற்காக என்னைக் கடம்பூர் வராமல் தடுக்க வேண்டிய அவசியம் என்ன?"

"அவர்களுடைய அந்தரங்கத்தையெல்லாம் தங்களிடம் நான் சொல்லிவிடலாம் அல்லவா?"

"உனக்கு எப்படி அவர்களின் அந்தரங்கம் தெரியும்?"

"ஐயா! அந்த வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியான் சகோதரி நான் என்பதை மறந்து விட்டீர்கள்...."

"உண்மையாக நீ அவனுக்கு உடன் பிறந்த சகோதரியா? அந்தக் கதையை என்னை நம்பச்சொல்கிறாயா?"

"நானும் அந்தக் கதையை நம்பவில்லை. தங்களை நம்புமாறு சொல்லவும் இல்லை.அவனுடையதந்தையின் வீட்டில் நான் வளர்ந்து வந்தேன். ஆகையால் என்னைச் சகோதரி என்று அழைத்து வந்தான்.என்னை ஆண்டாளின் அவதாரம் என்று அந்த வைஷ்ணவன் சொல்வது வழக்கம். ஊர் ஊராக அவனுடன் நான் சென்றுஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பரப்ப வேண்டும் என்று அவனுடைய ஆசை!"

"புத்த சந்நியாசினிகளைப்போல் உன்னையும் வைஷ்ணவ சந்நியாசினியாக்க அவன் விரும்பினானா?" என்று ஆதித்தகரிகாலர் கேட்டார்.

"அப்படி ஒன்றுமில்லை; நான் அவனைக் கலியாணம் செய்து கொண்டு தம்பதிகளாகப் பாசுரம்பாடிக் கொண்டு ஊர் ஊராகப் போகவேண்டும் என்பது அவன் ஆசை. வைஷ்ணவத்தைப் பிரசாரம் செய்ய நான்பல குழந்தைகளைப் பெற்று அளிக்க வேண்டும் என்பதும் அவன் விருப்பம்..."

"சீச்சீ! அந்தக் குரங்கு மூஞ்சித் திருமலை எங்கே? நீ எங்கே? உன்னை அவன் தனக்குமனைவியாக்கிக் கொள்ள விரும்பினானா?"

"ஐயா! என் துரதிர்ஷ்டம் அது! நான் பிறந்த வேளை அப்படி! என்னை நெருங்கி வரும் ஆண்பிள்ளைகள் எல்லாரும் துர் எண்ணத்துடனேயே என்னை நெருங்குகிறார்கள்..."

"கிழவன் பழுவேட்டரையனுடைய புத்தி போன பாட்டில் மற்றவர்களைப் பற்றிச் சொல்வானேன்?"

"கோமகனே! பழுவேட்டரையரைப் பற்றி என் காதில் படத் தூஷணையாக எதுவும் சொல்லவேண்டாம். அவர் என்னிடம் ஆசை கொண்டார்; என்னை உலகமறிய மணந்து கொண்டார். அநாதைப்பெண்ணாயிருந்த என்னை அவருடைய திருமாளிகையில் பட்டது ராணியாக்கிப் பெருமைப்படுத்தினார்...."

"ஆனால் உன்னுடைய விருப்பம் என்ன, நந்தினி? நீ அவரை உண்மையிலேயே உன் பதியாகக்கொண்டு பூஜிக்கிறாயா? அப்படியானால்..."

"இல்லை; இல்லை அவரிடம் நான் அளவில்லாத நன்றியுடையவள். ஆனால் அவருடன் நான் மனைவாழ்க்கை நடத்தவில்லை. ஐயா! நான் ஏழைக் குடியில் பிறந்தவள்; பிறந்தவுடனே கைவிடப்பட்டவள்.ஆயினும் என்னுடைய நெஞ்சை ஒரே ஒருவருக்குத்தான் அர்ப்பணம் செய்தேன். அதை ஒரு நாளும் மாற்றிக்கொண்டதில்லை...."

"நந்தினி! அந்தப் பாக்கியசாலி யார்? வேண்டாம்; அதைச் சொல்ல வேண்டாம். நீ யார்? உண்மையைச் சொல்! நீ என் தந்தையின் மகள் இல்லாவிடில், என் சகோதரி இல்லாவிடில், ஆழ்வார்க்கடியானுடன் கூடப் பிறந்தவளும் இல்லை என்றால், பிறகு நீ யார்? அதை மட்டும் சொல்லிவிடு, நந்தினி! அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்குப் பைத்தியம் உண்மையிலேயே பிடித்துவிடும்!" என்றார் கரிகாலர்.

"அதை தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றுதான் நானும் விரும்புகிறேன். ஆனால் தங்களுடையதோழரும் என்னுடைய தோழியும், இதோ நெருங்கி வந்துவிட்டார்கள். மறுபடியும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதுஅவசியம் சொல்லுகிறேன்" என்றாள் நந்தினி.

மிகச் சமீபத்தில் வந்துவிட்ட வல்லவரையனைப் பார்த்துப் பழுவூர் ராணி, "ஐயா! இது என்னவெறுங்கையுடனே திரும்பி வந்திருக்கிறீர்கள்? புலியின் தலை எங்கே?" என்று கேட்டாள்.

"தேவி! புலியின் தலையைக் கொண்டு வந்து தங்கள் காலடியில் சமர்ப்பிக்கும் பாக்கியம்எனக்குக் கிட்டவில்லை!" என்றான் வந்தியத்தேவன்.

"ஆகா! இவ்வளவுதானா உமது வீரம்? உமது முன்னோர்களின் வீரத்தைப் பற்றிப் பாட்டுகள்எல்லாம் சொன்னீரே? மூன்று குலத்து வேந்தர்களின் தலைகளைப் பறித்துக் கழனியில் நடவு நட்டார்கள்என்று சொன்னீரே?"

"அது என்ன அப்படிப்பட்ட பாடல்?" என்று கரிகாலர் கேட்டார்.

"ஐயா! நீர் சொல்கிறீரா? நான் சொல்லட்டுமா?" என்று நந்தினி வந்தியத்தேவனைப்பார்த்து வினவினாள்.

"ராணி! அப்படி ஒரு பாடல் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே?" என்றான் வந்தியத்தேவன்.

"உமக்கு ஞாபகம் இல்லை; ஆனால் எனக்கு நன்றாய் நினைவு இருக்கிறது நான் சொல்லுகிறேன்கேளுங்கள், ஐயா!
	சேனை தழையாக்கிச் செங்குருதி நீர் 	தேக்கி ஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன்	பாவேந்தர் தம் வேந்தன் வாணன் பறித்து நட்டான் 	மூவேந்தர் தங்கள் முடி!
எப்படியிருக்கிறது பாட்டு! கோமகனே! தாங்கள் பாண்டியன் ஒருவனுடைய தலையை மட்டுமே கொண்டீர்கள்.இந்த வீரருடைய முன்னோர்கள், சேர சோழ பாண்டியர்களுடைய தலைகளைப் பறித்துக் கொண்டு வந்து கழனியில் நடவு நட்டார்களாம்...!"

கரிகாலருடைய முகத்தில் அருவருப்பும் குரோதமும் தாண்டவம் ஆடின.

"நல்ல உழவு! நல்ல நடவு!" என்று சொல்லிவிட்டு அவர் இடி இடி என்று வாய்விட்டுச் சிரித்தார்.

வந்தியத்தேவன் கரிகாலருடைய முகத்தையே ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அவன் தட்டுதடுமாறி, "தேவி! இத்தகைய பாடல் ஒன்றை தங்களிடம் நான் சொல்லவே இல்லையே?" என்றான்.

"அதனால் என்ன? ஏற்கெனவே தெரிந்து கொண்டிராவிட்டால் உமது குலத்தின் பெருமையைஇப்போதாவது தெரிந்து கொள்ளும்! அவ்வாறு முக்குலத்து வேந்தர்களின் முடிகளைப் பறித்து நட்ட வம்சத்தில்கேவலம் காயம்பட்ட புலி ஒன்றின் தலையைக் கொண்டு வர முடியவில்லையே?" என்றாள்.

"தேவி! காயம்பட்ட அந்தப் புலி செத்துத் தொலைந்து போய் விட்டது. செத்த புலியின்தலையை வெட்ட நான் விரும்பவில்லை."

"அது எப்படி? புலி தத்தித் தத்திப் படகில் ஏறியதை நான் பார்த்தேனே?" என்றார் கரிகாலர்.

"நான்தான் அந்தக் காட்சியைத் தங்களுக்குக் காட்டினேன். படகில் ஏறிப் படுத்துக் கொண்டபிறகு அது செத்துப் போயிருக்கிறது. பழுவூர் இளைய ராணியின் திருமேனியைக் காயப்படுத்திவிட்டோமே என்ற பச்சாத்தாபத்தினால் அது பிராணனை விட்டு விட்டதோ, என்னமோ?" என்றான்வந்தியத்தேவன்.

கரிகாலன் முகத்தில் கடுகடுப்புச் சிறிது தணிந்து புன்னகை அரும்பியது. "ஆனால் அதுதண்ணீரிலேயே செத்துப் போயிருக்கலாமே? படகில் ஏறிச் சாக வேண்டியதில்லையே?" என்றார்கரிகாலர்.

"என்னைப்போல் அதற்கும் தண்ணீரைக் கண்டால் பிடிப்பதில்லை போலிருக்கிறது.எல்லாச் சாவுகளிலும் தண்ணீரிலே சாவது தான் எனக்குப் பயமளிக்கிறது!" என்றான் வந்தியத்தேவன்.

"ஆயினும் சற்று முன்னால் தைரியமாகத் தண்ணீரில் குதித்து விட்டீரே? இந்தப் பேதைப்பெண்களின் பேரில் அவ்வளவு கருணை போலிருக்கிறது?"

"தேவி! தண்ணீரைக் காட்டிலும் எனக்குப் பெண்களைக் கண்டால் அதிக பயம் உண்டாகிறது.இளவரசருடைய வற்புறுத்தலுக்காகத்தான் குதித்தேன். உண்மையில் அப்படிக் குதித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று இப்போது தெரிகிறது" என்றான் வல்லவரையன்.

"ஆம், ஆம்! நீர் தண்ணீரில் விழுந்து சாவது பற்றித் தான் உமக்குப் பயம். பிறரை மூழ்கஅடித்துச் சாகச் செய்வது பற்றி உமக்குப் பயமே இல்லை!" என்றாள் நந்தினி.

இந்தப் பேச்சுக்கள் ஒன்றும் மணிமேகலைக்குப் பிடிக்கவில்லை என்பது அவளுடைய முகபாவத்திலிருந்துநன்கு வௌியாயிற்று.

"அக்கா, சமைத்த உணவு ஆறிப் போய்விடும்; வாருங்கள் போகலாம்!" என்றாள்.

நால்வரும் பளிங்கு மண்டபத்தை நோக்கி நடந்தார்கள். அப்போது இடையிடையே மணிமேகலைவந்தியத்தேவனை நோக்கினாள். அவனுடைய மனதில் ஏதோ சங்கடம் ஏற்பட்டிருக்கிறதென்றும், இளவரசரும்நந்தினியும் அவனுக்கு ஏதோ தொல்லை கொடுக்கிறார்கள் என்றும் அவள் தன் உள்ளுணர்ச்சியால் அறிந்தாள்,

"யார் தங்களுக்கு எதிரியானாலும் நான் தங்களுடைய கட்சியில் இருப்பேன்; கவலைப்பட வேண்டாம்!" என்று நயன பாஷையின் மூலம் வந்தியத்தேவனுக்கு ஆறுதல் கூற முயன்றாள்.

ஆனால் வந்தியத்தேவனோ அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவன் கவலைக் கடலில் அடியோடு மூழ்கிப் போனவனாகக் காணப்பட்டான்.

நந்தினி தேவியின் வஞ்சக வார்த்தைகளும் வந்தியத்தேவன் மீது அவள் சுமத்திய பயங்கரமானபழியும் இந்தக் கதையைத் தொடர்ந்து படித்து வரும் நேயர்களுக்கு அருவருப்பை அளித்திருக்கக் கூடியதுஇயல்பேயாகும். எனினும், நாம் அறிந்துள்ள வரையில் அவளுடைய பிறப்பையும் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும்நினைவு கூர்ந்தால் அவ்வளவாக வியப்பு அடைய மாட்டோம். மனிதர்களின் குணாதிசயங்கள் பரம்பரை காரணமாக ரத்தத்தில் ஊறியுள்ள இயல்புகளில் அமைகின்றன. சூழ்நிலையினாலும் பழக்கவழக்கங்களினாலும் வாழ்க்கை அனுபவங்களினாலும் மாறுதலடைகின்றன.ஊமையும் செவிடுமான மந்தாகினிகாட்டிலே பெரும்பாலும் வாழ்ந்திருந்தவள். வனவிலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள அவள் எவ்வளவோஜாக்கிரதையாயிருக்க வேண்டியிருந்தது. தான் உயிர் தப்புவதற்காகச் சில சமயம் அந்த மிருகங்களைக்கொடூரமாகக் கொல்ல வேண்டியும் நேர்ந்தது.

வெகு காலம் வரையில் பால்போல் தூய்மையாக இருந்த அவள் உள்ளத்தில் ஒரு சமயம் அன்பு என்னும்அமுத ஊற்றுச் சுரந்தது. விரைவில், அந்த ஊற்று வறண்டு அவளுடைய நெஞ்சத்தை வறண்ட பாலைவனம் ஆக்கியது.விதியின் விளையாட்டு அவளை ஒரு பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிவிட்டது. அதனால் ஏற்பட்டஅதிர்ச்சி அவளுடைய புத்தியே பேதலித்துப் போகும்படி செய்துவிட்டது. எனினும், நாளடைவில் அவளுடையநெஞ்சின் காயம் ஆறியது. அன்பாகிய அமுத ஊற்று மீண்டும் சுரந்தது. சுந்தர சோழரின் மீது கொண்டகாதலையெல்லாம் அவருடைய அருமைப் புதல்வனாகிய அருள்மொழிச் செல்வனிடம் பிள்ளைப் பிரேமையாகமாற்றிக் கொண்டாள்.

மந்தாகினியின் புதல்வியாகிய நந்தினியிடம் தாயின் குணாதிசயங்கள் பல இயற்கையில்தோன்றியிருந்தன. ஆனால் தாயை உலகம் வஞ்சித்ததைக் காட்டிலும் மகளை அதிகமாக வஞ்சித்தது.பெற்ற தாயினாலும் கைவிடப்பட்டாள்; பிறர் வீட்டில் வளர்ந்தாள். காட்டு மிருகங்களினால் அன்னைக்குஏற்பட்ட தொல்லைகளைக் காட்டிலும் நாட்டு மனிதர்களால் மகள் அதிகக் கொடுமைகளுக்கு உள்ளானாள்.இளம் பிராயத்தில் அரச குலத்தினரால் அவமதிக்கப்பட்டதெல்லாம் அவளுடைய நெஞ்சில் வைரம் பாய்ந்துநிலைத்து விஷத்தினும் கொடிய துவேஷமாக மாறியது. துவேஷத்துக்கு மாற்று அளிக்கக் கூடிய அன்புஎன்னும் அமுதம் அவளுக்கு கிட்டவில்லை. அவள் யார் யாரிடம் அன்பு வைத்தாளோ அவர்கள் ஒன்று,அவளை அலட்சியம் செய்து புறக்கணித்தார்கள்; அல்லது துரதிர்ஷ்டத்துக்கு உள்ளாகி மாண்டு போனார்கள்.அவளை அவமதித்தவர்களும் அவளால் வெறுக்கப்பட்டவர்களும் மேன்மையுடன் வாழ்ந்தார்கள். ஒரு பெண்ணின்உள்ளத்தை நஞ்சினும் கொடியதாக்குவதற்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும்? தன்னை வஞ்சித்தவர்களையும்அவமதித்தவர்களையும் பழி வாங்குவதைத் தவிர அவளுடைய உள்ளத்தில் வேறு எதற்கும் இடம் இருக்கவில்லை.அதற்கு வேண்டிய சூழ்ச்சித் திறன்கள் அன்னையின் கர்ப்பத்தில் இருந்த நாளிலேயே அவளுடைய இரத்தத்தில்சேர்ந்திருந்தன. வாழ்க்கையில் அவள் பட்ட அல்லல்களும் ஏமாற்றங்களும் பயங்கர அனுபவங்களும் அவளுடையஉள்ளத்திலிருந்து இரக்கம், அன்பு முதலிய மிருதுவான பண்புகளை அடியோடு துடைத்து இரும்பினும் கல்லினும்கடினமாக்கியிருந்தன. இக்கதையில் இனி வரப்போகும் நிகழ்ச்சிகளை நன்கு அறிந்து கொள்வதற்குஇந்தக் குணாதிசய விளக்கத்தை இங்கே குறிப்பிடுவது அவசியம் என்று கருதி எழுதினோம்.

உணவருந்தும் வேளையிலும் அவர்களுக்குள் உற்சாகமான பேச்சு எதுவும் நடைபெறவில்லை.நந்தினியும், கரிகாலரும் வந்தியத்தேவனும் அவரவர்களுடைய கவலையிலே ஆழ்ந்திருந்தார்கள்.இதனால் மணிமேகலைக்குத்தான் மிக்க ஆதங்கமாயிருந்தது. பழுவூர் ராணியுடன் உல்லாசமாகப் பேசிஉற்சாகமாகப் பொழுது போக்கும் எண்ணத்துடன் அவள், அன்று நீர் விளையாடலுக்கும் வன போஜனத்துக்கும்ஏற்பாடு செய்திருந்தாள். இளவரசரும் வந்தியத்தேவனும் எதிர்பாராமல் வந்து சேர்ந்து கொண்டவுடன்அவளுடைய உற்சாகம் அதிகமாயிற்று. ஆனால் அதற்குப் பிறகு மற்ற மூவரும் பேசிய வார்த்தைகளும் நடந்துகொண்ட விதமும் அவளுக்குச் சிறிதும் திருப்தி அளிக்கவில்லை. நந்தினியையும் வந்தியத்தேவனையும்சேர்த்துப் பார்த்த போது ஏற்பட்ட வேதனையை அவளுடைய குழந்தை உள்ளம் உடனே மறந்து விட்டது.அதைப் பற்றித் தவறாக எண்ணி அசூயைக்கு இடங்கொடுத்தது தன்னுடைய தவறு என்று எண்ணித் தேறினாள்.அதற்கு பிறகு மற்ற மூன்று பேரும் கலகலப்பில்லாமல் சிடுசிடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்ததும்கபடமாகப் பேசி வந்ததும் அவளுக்கு விளங்கவும் இல்லை; பிடிக்கவும் இல்லை.

எனவே, உணவருந்திச் சிறிது நேரம் ஆனதும் மணிமேகலை "அக்கா! நாம் திரும்பிப்பிரயாணப்படலாமா? படகைக் கொண்டு வரச் சொல்லட்டுமா? இவர்கள் இருவரும் நம்முடன் வருகிறார்களாஅல்லது குதிரை மீது வந்த வழியே போகிறார்களா?" என்று கேட்டாள்.

அப்போதுதான் கரிகாலர் சிந்தனை உலகத்திலிருந்து வௌி உலகத்துக்கு வந்தார்.

"ஆ! ஆ! இந்தப் பெண்ணின் யாழிசையைக் கேட்காமல் திரும்புவதா? ஒரு நாளும் முடியாது.நந்தினி! மறந்து விட்டாயா, என்ன? மணிமேகலை! எங்களை ஏமாற்றி விடாதே!" என்றார்.

"அதை நான் மறக்கவில்லை; தங்களையும் தங்கள் சிநேகிதரையும் பார்த்தால் கானத்தைக் கேட்கக்கூடியவர்களாகத் தோன்றவில்லை. முள்ளின் மேல் நிற்பது போல் நிற்கிறீர்கள். ஆயினும் பாதகமில்லை;மணிமேகலை! எங்கே, யாழை எடுத்துக் கொண்டு வா!" என்றாள் நந்தினி.

"எதற்காக, அக்கா? விரும்பாதவர்களின் முன்னால் எதற்காக என்னை யாழ் வாசிக்கச்சொல்கிறீர்கள்?" என்று மணிமேகலை சிறிது கிராக்கி செய்தாள்.

"இல்லை, இல்லை! இளவரசர்தான் கேட்பதாகச் சொல்கிறாரே; அவருடைய நண்பருக்குப் பாட்டுப்பிடிக்காவிட்டால் காதைப் பொத்திக் கொள்ளட்டும்" என்றாள் நந்தினி!

"கடவுளே! அப்படியொன்றும் நான் இசைக்கலையின் விரோதி அல்ல! கோடிக்கரையில் பூங்குழலிஎன்னும் ஓடக்காரப் பெண்,
'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?'என்று ஒரு பாட்டுப் பாடினாள். அதை நினைத்தால் இப்போதும் எனக்கு உடம்பு சிலிர்க்கிறது!" என்றான்வந்தியத்தேவன்.

"சில பேருக்குச் சிலருடைய பாட்டுத்தான் பிடிக்கும். என்னுடைய பாட்டு உங்களுக்குப் பிடிக்குமோஎன்னமோ?" என்றாள் மணிமேகலை.

"பிடிக்காமற் போனால், யார் விடுகிறார்கள்? அதற்கு நான் ஆயிற்று. நீ யாழை எடுத்துக்கொண்டு வா!" என்றார் கரிகாலர்.

மணிமேகலை யாழை எடுத்துக்கொண்டு வந்தாள். பளிங்கு மண்டபத்தின் படிக்கட்டில் மேற்படியில்உட்கார்ந்து கொண்டாள். நரம்புகளை முறுக்கிச் சுருதி கூட்டினாள். ஏழு தந்திகள் கொண்ட யாழ் அது.ஒவ்வொரு தந்தியிலும் பாதி வரையில் ஒரு ஸ்வரமும் அதற்கு மேலே இன்னொரு ஸ்வரமும் பேசக் கூடியது.

சிறிது நேரம் யாழை மட்டும் வாசித்து இன்னிசையைப் பொழிந்தாள். கரிகாலரும்வந்தியத்தேவனும் உண்மையிலேயே மற்றக் கவலைகளையெல்லாம் மறந்துவிட்டார்கள். யாழின் இசையில்உள்ளத்தைப் பறிகொடுத்துப் பரவசமானார்கள்.

பின்னர், மணிமேகலை யாழிசையுடன் குரலிசையையும் சேர்த்துப் பாடினாள். அப்பர்,சம்பந்தர், சுந்தரரின் தெய்வீகமான பாசுரங்களைப் பாடினாள்.

சிறிது நேரமானதும் இளவரசர், "மணிமேகலை! உன்னுடைய கானம் அற்புதமாயிருக்கிறது.ஆனால் எல்லாம் பக்திமயமான பாடல்களையே பாடி வருகிறாய். அவ்வளவாக நான் பக்தியில்ஈடுபட்டவனல்ல. சிவபக்தியையெல்லாம் மதுராந்தனுக்கே உரிமையாக்கி விட்டேன். ஏதாவது காதல்பாட்டுப் பாடு!" என்று சொன்னார்.

மணிமேகலையின் அழகிய கன்னங்கள் நாணத்தினால் குழிந்தன; சிறிது தயக்கம் காட்டினாள்."பெண்ணே! ஏன் தயங்குகிறாய்? இங்கே நீ காதல் பாட்டுப் பாடினால் என்னை உத்தேசித்துப் பாடுகிறாய்என்று நான் எண்ணிக் கொள்ள மாட்டேன். என் சிநேகிதனும் எண்ணிக் கொள்ள மாட்டான், ஆகையால்தயக்கமின்றிப் பாடு!" என்றார் கரிகாலர்.

"அப்படி யாராவது எண்ணிக் கொண்டால் மணிமேகலை அதற்காகக் கவலைப்படவும் மாட்டாள்!"என்றாள் நந்தினி.

"போங்கள், அக்கா! இரண்டு புருஷர்கள் இருக்குமிடத்தில் இப்படிப் பரிகாசம் செய்யலாமா?" என்றாள் மணிமேகலை.

"இவர்கள் புருஷர்கள் என்று நீ நினைப்பதுதான் பிசகு. ஒரு செத்த புலியின் தலையைக் கொண்டுவர முடியாதவர்களை ஆண் பிள்ளைகள் என்று சொல்ல முடியுமா? முற்காலத்தில் தமிழ்நாட்டு வீர புருஷர்கள்உயிருடன் புலியைப் பிடித்து அதன் வாயைப் பிளந்து பற்களைப் பிடுங்கிக் கொண்டுவந்து தங்கள் நாயகிகளுக்குஆபரணமாகச் சூட்டுவார்களாம்! அந்தக் காலமெல்லாம் போய் விட்டது! போனால் போகட்டும்! நீ பாடு!அன்றைக்கு என்னிடம் பாடிக் காட்டினாயே? அந்த அழகான பாட்டைப் பாடு!" என்றாள் நந்தினி.

மணிமேகலை யாழ் வாசித்துக் கொண்டு பின்வரும் கீதத்தைப் பாடினாள். அது என்னமோ,இத்தனை நேரம் பாடியதைக் காட்டிலும் இந்தப் பாட்டில் அவள் குரல் இணையற்ற இனிமையுடன் அமுதவெள்ளத்தைப் பொழிந்தது:
	"இனியபுனல் அருவி தவழ் இன்பமலைச் சாரலிலே	கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம்	கனவு தானோடி - சகியே	நினைவு தானோடி!	புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே	என்னைவரச் சொல்லி அவர் கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம்	சொப்பனந் தானோடி - அந்த	அற்புதம் பொய்யோடி?	கட்டுக்காவல் தான்கடந்து கள்ளரைப்போல் மெள்ள வந்து	மட்டிலாத காதலுடன் கட்டி முத்தம் ஈந்ததெல்லாம்	நிகழ்ந்த துண்டோடி - நாங்கள்	மகிழ்ந்த துண்டோடி!"

இவ்வாறு மேலும் மேலும் பல கண்ணிகளை மணிமேகலை வெவ்வேறு பண்களில் அமைத்துப்பாடி வந்தாள். அந்தக் கான வெள்ளத்தில் மற்ற மூவரும் மூழ்கிப் போனார்கள். பல காரணங்களினால்நெஞ்சைக் கல்லினும் இரும்பினும் கடினமாக்கிக் கொண்டிருந்த நந்தினியின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.ஆதித்த கரிகாலர் இந்த உலகத்தை அடியோடு மறந்துவிட்டார். வந்தியத்தேவன் அடிக்கடி திடுக்கிட்டுவிழித்துக் கொண்டவன் போல் மணிமேகலையை நோக்கினான். அப்போதெல்லாம் அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தது கண்டு அந்த வீரனுடைய உள்ளம் மேலும் திடுக்கிட்டது.

"ஐயோ! இந்தப் பெண்ணுக்கு நாம் என்ன தீங்கு செய்துவிட்டோம்?" என்று அவன் நெஞ்சம் பதைபதைத்தது.

கான வெள்ளத்திலும், உணர்ச்சி வெள்ளத்திலும் மூழ்கியிருந்தவர்கள் வரவரக் காற்றுகடுமையாகிக் கொண்டு வருவதைக் கவனிக்கவில்லை. ஏரியில் முதலில் சிறிய சிறிய அலைகள்கிளம்பி விழுந்ததையும் வரவர அவை பெரிதாகி வந்ததையும் கவனிக்கவில்லை. காற்று கடும் புயலாகமாறிக் காட்டு மரம் ஒன்றை அடியோடு பெயர்த்துத் தள்ளியபோது தான் நால்வரும் விழித்துக் கொண்டுசுற்றுமுற்றும் பார்த்தார்கள். கடுமையான புயல் காற்று அடிப்பதையும் ஏரி கொந்தளித்துப் பேரலைகள்'ஓ' என்ற இரைச்சலுடன் எழுந்து விழுவதையும் பார்த்தார்கள்.

திடீரென்று நந்தினி, "ஐயோ! படகு எங்கே?" என்று அலறினாள்.

கட்டிப் போட்டிருந்த இடத்தில் படகைக் காணவில்லை.

உற்றுப் பார்த்தபோது வெகு தூரத்தில் படகு அலைகளால் மொத்துண்டு நகர்ந்து நகர்ந்து போய்க்கொண்டிருந்தது.

"ஐயோ! இப்போது என்ன செய்வது?" என்று நந்தினி அலறினாள்.

"உங்கள் இருவருக்கும் குதிரை ஏறத்தெரிந்தால் ஏறிப்போய் விடுங்கள். நாங்கள் சமாளித்துக்கொள்கிறோம்" என்றான் வந்தியத்தேவன்.

"இந்தப் புயல் காற்றில் காட்டு மரங்கள் பெயர்ந்து விழுந்து எங்களைச் சாக அடிப்பதற்கு வழிசெய்கிறீர்களா?" என்று நந்தினி கேட்டாள்.

"அதெல்லாம் வேண்டாம்; புயலின் வேகம் தணியும் வரையில் இங்கேயே இருந்து விடுவோம்.அங்கே போய் என்ன செய்யப் போகிறோம்? சமையலுக்குப் பண்டங்கள் இருக்கின்றன; பாடுவதற்கு மணிமேகலைஇருக்கிறாள். இவ்வளவு சந்தோஷமாகச் சமீபத்தில் நான் இருந்ததில்லை!" என்றார் கரிகாலர்.

"இளவரசே! அது சரியல்ல! சம்புவரையரும், கந்தமாறனும் என்ன நினைப்பார்கள்?" என்றான்வல்லவரையன்.

"இவரே புலியைத் தேடிச் சென்றபோது படகை அவிழ்த்துவிட்டு விட்டார் போலிருக்கிறது!" என்றாள் நந்தினி.

"அக்கா! ஏன் வீண் பழி சொல்கிறீர்கள்? இவர் வந்தபோது படகு கரையோரமாகத்தானேஇருந்தது.யாரும் கவலைப்படவேண்டாம், என் தந்தை இந்தப் புயல் காற்றைப் பார்த்ததும் நம் துணைக்குப்பெரிய படகுகளை அனுப்பி வைப்பார்!" என்றாள் மணிமேகலை.

அவள் கூறியது சற்று நேரத்துக்கெல்லாம் உண்மையாயிற்று. ஏறக்குறைய கப்பல் என்றுசொல்லத் தக்க இரு பெரும் படகுகள் அத்தீவை நோக்கி வந்தன. அவற்றில் ஒன்றில் பெரியசம்புவரையரே இருந்தார். நாலு பேரும் பத்திரமாய் இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.அவர்களை ஏற்றிக் கொண்டு அலைகடல் போல் பொங்கிக் கொந்தளித்த ஏரியில் இரண்டு படகுகளும்திரும்பிச் சென்றன.சம்புவரையரைத் தவிர, மற்ற நால்வரின் உள்ளங்களிலும் கடும் புயல் வீசிக்கொந்தளிப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

பக்க தலைப்பு


This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmastersof this website.