ciRAppurANam of umaRup pulavar
Canto 1 part II (verses 597 - 1240)
(in tamil script, Unicode format)

உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)
படலங்கள் 10- 24 / பாடல்கள் (597-1240 )




Acknowledgements:
Etext preparation: Mr. Vassan Pillai, New Mexico, USA
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)
படலங்கள் 10- 24 / பாடல்கள் (597 -1240 )

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

நஹ்மதுஹூ வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்

1.10 பாதை போந்த படலம்

597 குரைகட லனைய செல்வக் குறைஷியின் குலத்து நாப்ப
ணரசிளங் குமர ரான வப்துல்லா வரத்தில் வந்த
முருகவி ழலங்கற் றிண்டோண் முகம்மது தமக்குச் சார்ந்த
திருவய திருபத் தைந்து நிறைந்தன சிறக்க வன்றே.
1.10.1
598 பேரறி வெவையுஞ் செம்மை பெருத்தொளிர் வனப்பும் வெற்றி
வீரமுந் திறலு முண்மை விளங்கும்வா சகமுங் கல்விச்
சாரமும் பொறையு மிக்க தருமநற் குணமு மியார்க்கும்
வாரமு முகம்ம தின்பால் வந்தடைந் திருந்த தன்றே.
1.10.2
599 பாரினி லடங்கா விண்ணோர் பன்முறை பெரிதிற் கூண்டு
சீருறை பாத காப்புற் றிருப்பது தெரியக் காணா
ரூரவர் போலுந் தங்கைக் குறுபொரு ளின்மை யெண்ணங்
காருறு கவிகை வள்ளற் கருத்திலங் குருத்த தன்றே.
1.10.3
600 அகலிடத் தடங்கா வெற்றி யப்துல்முத் தலிபு பெற்ற
புகழபித் தாலி பென்னும் புரவலர் தம்மை நோக்கித்
துகளணு வணுகா மேனி சொரிகதி ரெறிப்பத் திண்மை
முகம்மதி னழகு பூத்த வாய்திறந் துரைக்க லுற்றார்.
1.10. 4
601 குடித்தனப் பெருமை சேர்ந்த குலத்தினுக் குயர்ந்த மேன்மை
படித்தலம் புகழுஞ் செங்கோற் பார்த்திவ ராத றேய்ந்து
மிடித்தவர் பெரிய ராதன் மிகுபுகழ் கிடைத்தல் கையிற்
பிடித்திடும் பொருள தன்றிப் பிறிதலை யுலகத் தன்றே.
1.10.5
602 ஒருதனி பிறந்து கையி னுறுபொரு ளின்றி யிந்தப்
பெருநிலத் திருந்து வாழ்தல் பேதமை யதனால் வண்மைத்
திருநகர் ஷாமிற் சென்று செய்தொழின் முடித்து வல்லே
வருகுவன் சிறியே னுந்த மனத்தரு ளறியே னென்றார்.
1.10.6
603 மகனுரைத் தவையுந் தங்கண் மனைவறு மையையு மெண்ணி
யகநினை யறிவு நீங்கி யாகுலக் கடலின் மூழ்கி
வகையுறத் தேறிச் செவ்வி முகம்மதின் வதன நோக்கி
நகுகதிர் முறுவற் செவ்வாய் திறந்த்பின் னவில லுற்றார்.
1.10.7
604 என்னுயிர்த் துணைவ னீன்ற விளங்கதிர்ப் பருதி யேயிந்
நன்னிலத் தரிய பேறே நங்குடி குலத்துக் கெல்லாம்
பொன்னுநன் மணியு மென்னப் பொருந்துநா யகமே தேறா
வொன்னலர்க் கரியே கேளென் னுளத்தினி லுற்ற தன்றே.
1.10.8
605 மன்றலந் துடவை சூழ்ந்த மக்கமா நகரில் வாழ்வோன்
றென்றிசை வடக்கு மேற்குக் கிழக்கெனுந் திக்கு நான்கும்
வென்றிகொள் விறலோன் செம்பொன் விழைதொழி லவருக் கெல்லாங்
குன்றினி லிட்ட தீபங் குவைலிது வென்னும் வேந்தன்.
1.10.9
606 இருகரஞ் சேப்பச் செம்பொ னிரவலர்க் கீந்த தாலு
மரியமெய் வருந்த நாளு மருந்தவம் புரிந்த தாலுங்
கருதிய வரத்தி னாலுங் கதிருமிழ்ந் தொழுகும் பைம்பொன்
வரையினின் மணிக்கொம் பென்ன வருமொரு மகவை யீன்றான்.
1.10.10
607 தேன்கட லமிர்துந் திக்கிற் றிகழ்வரை யமிர்துஞ் சூழ்ந்த
மீன்கட னடுவிற் றோன்றும் வெண்மதி யமிர்துந் துய்ய
கூன்கட வளையார் வெண்பாற் குரைகட லமிர்துஞ் சோதி
வான்கட லமிர்து மொன்றாய் வடிவெடுத் தனைய பாவை.
1.10.11
608 பைங்கட லுடுத்த பாரிற் பன்மணி வரையிற் றீவிற்
செங்கதிர்க் கனக நாட்டிற் செழுமணி மனைக்கு நாளுந்
தங்கிய சுடரு மொவ்வாத் தனித்தனி யழகு வாய்ந்த
மங்கையர் தனையொப் பென்ன வகுக்கநா வகுத்தி டாதே.
1.10.12
609 குலமெனும் விருக்கந் தோன்றிக் குழூஉக்கிளைப் பணர்விட் டோங்கி
நலனுறு செல்வ மென்னு நறுந்தழை யீன்று வண்ணச்
சிலைநுதற் பவளச் செவ்வா யனையெனுஞ் செம்பொற் பூவிற்
கலனனி நறவஞ் சிந்துங் கனியினுங் கனிந்த பாவை.
1.10.13
610 இனமெனுஞ் சோலை சூழ்ந்த விகுளைய ரெனும்வா விக்குட்
புனையிழை யனைக ரான பொன்னிதழ்க் கமல் நாப்பண்
வனைதரு பதும ராக மணிமடி யிருந்ஹ செவ்வி
யனமென விளங்கித் தோன்று மணியணிப் பாவை யன்னார்.
1.10.14
611 குரிசிலென் றுயர்ந்த வெற்றிக் குவைலிதன் பரிதிற் பெற்ற
வரிவைதன் னழகு வெள்ளத் தமுதினை யிருகண் ணாரப்
பருகுதற் கிமையா நாட்டம் படைத்திலோ மெனநா டோறுந்
தெரிவைய ருள்ளத் தெண்ணந் தேற்றினுந் தேறா தன்றே.
1.10.15
612 வானகத் தமர ராலு மானில மக்க ளாலுந்
தானவ யவத்தின் செவ்வி தனையெடுத் தின்ன தின்ன
தானநன் குவமை யென்ன வளவறுத் துரைக்க வொண்ணாத்
தேன்மொழி கதிஜா வென்னுந் திருப்பெயர் தரித்த பாவை.
1.10.16
613 வருகலி வெயிலால் வாடு மானுடப் பயிர்கட் கெல்லாம்
பொருளெனு மாரி சிந்திப் பூவிடத் தினிது நோக்கி
யருமறை மலருட் காய்த்த வறிவெனுங் கனியை யுண்ட
திருநமர் குலச்சஞ் சீவிச் செழுங்கொழுந் தனைய பூவை.
1.10.17
614 வணக்கமு மறிவுஞ் சேர்ந்த மனத்துறும் பொறையு நல்லோ
ரிணக்கமும் வறியோர்க் கீயு மிரக்கமு நிறைந்த கற்புங்
குணக்கலை வல்லோ ராலுங் குறித்தெடுத் தவட்கொப் பாகப்
பணக்கடுப் பாந்தட் பாரிற் பகருதற் கரிய வன்றே.
1.10.18
615 மின்னென வொளிம றாத விளங்கிழை கதிஜா வென்ன
மன்னிய பொருளின் செல்வி மனையகத் தினினா டோறு
மின்னணி நகர மாக்க ளியாவரு மினிது கூறப்
பொன்னனி வாங்கித் தேச வாணிபம் பொருந்தச் செய்வார்.
1.10.19
616 கலைத்தடக் கடலே யெந்தங் கண்ணிரு மணியே யாமு
மலைத்தடக் கடற்கட் பாவை யணிமனை யடுத்துச் செம்போ
னிலைத்திட நினைத்து வாங்கி நெறிநெடுந் தூர மெல்லாந்
தொலைத்திவண் புகுவம் வல்ல தொழின்முடித் திடுவ மென்றே.
1.10.20
617 தீனகக் குளந்த டாகந் திசைதொறு நிறைந்து தேக்க
வானதிப் பெருக்கை யொப்ப வருமுகம் மதுவை நோக்கித்
தூநகை முறுவல் வாய்விண் டுரைத்தனர் சொன்ன மாரி
யானென வுதவுஞ் செங்கை யருளெனுங் கடலி னாரே.
1.10.21
618 தரைத்தலம் புகழும் வெற்றித் தடப்புயத் தபித்தா லீபு
முரைத்தவை யனைத்துந் தேர்ந்து முகம்மது முளத்தி னூடு
வருத்தமுஞ் சிறிது நேர மகிழ்ச்சியுந் தொடர்ந்து தோன்றக்
கருத்தினி லிருத்திக் தாதை கழறல்சம் மதித்தி ருந்தார்.
1.10. 22
619 குங்குமத் தடந்தோள் வள்ளல் குறித்திடுங் கருத்தி னூடு
செங்கயல் வரிக்கட் செவ்வாய்த் திருந்திழை கதிஜா வென்னு
மங்கைதம் பெயருஞ் சித்ர வடிவுநின் றுலவ மாறாப்
பொங்கறி வதனான் மூடிப் புந்தியின் மறைப்ப தானார்.
1.10.23
620 மம்மரை மனத்துள் ளாக்கி முகம்மது கதிஜா வென்னும்
பெய்ம்மலர்க் கொம்பே யன்ன பெண்மனைக் கடையிற் சாரு
மம்மறு கிடத்திற் போக்கும் வரத்தும தாகி வாசச்
செம்மலர்ச் சுவடு தோன்றாத் திருவடி நடத்தல் செய்தார்.
1.10.24
621 இப்படி நிகழ்கா லத்தோ ரிளவன்மா மறைக்கு வல்லான்
மைப்படி கவிகை வள்ளல் வனப்பிலக் கணமு நீண்ட
கைப்படு குறியுஞ் சேர்ந்த கதிர்மதி முகமு நோக்கிச்
செப்பிடற் கரிய வோகைத் திருக்கட லாடி னானே.
1.10.25
622 பெரியவன் றூத ராகப் பிறந்தொரு நபிபிற் காலம்
வருகுவர் சரத மென்ன மறையுண ரறிவர் கூடித்
தெரிதர வுரைத்த தெல்லா மிவரெனத் தேறும் வாளா
லிருளறுத் துண்மை யாயுள் ளிருத்தினன் பெருத்த நீரான்.
1.10.26
623 கண்டவ னுளத்தி னூடு கண்கொளா வுவகை பொங்கிக்
கொண்டுகொண் டெழுந்து சென்று குவைலிது மனையு ளாகி
வண்டுகண் படுக்குங் கூந்தன் மடமயில் கதிஜா வென்னு
மொண்டொடி திருமுன் முந்தி யொதுக்கிவாய் புதைத்துச் சொல்வான்.
624 குவைலிது தவத்தின் பேறே குரைகடன் மணியே நீண்ட
புவியிடை யமுதே பொன்னே பூவையர்க் கரசே யென்றன்
செவியினிற் பெரியோர் கூறுஞ் செய்தியாற் றேர்ந்து தேர்ந்த
கவினுறும் புதுமை யிந்நாட் கண்டுகண் களித்தே னென்றான்.
1.10.28
625 வன்மன நஸ்றா வென்ன வருபெருங் குலத்திற் றோன்றிப்
பன்முறை மறைக டேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி
நின்மனந் தேறக் கண்ட புதுமையை நினவ றாமற்
சொன்மென மயிலே யன்னார் சொற்றபி னவனுஞ் சொல்வான்.
1.10.29
626 முல்லைவெண் ணகையாய் தொன்னாண் முறைமுறை மறைக ளெல்லாம்
வல்லவர் தௌிந்த மாற்ற மக்கமா நகரிற் பின்னா
ளெல்லையில் புதுமை யாயோ ரிளவல்வந் துதித்துப் பாரிற்
பல்லருந் தீனி லாகப் பலன்பெற நடக்கு மென்றும்.
1.10.30
627 ஈறிலா னபியாய்த் தோன்று மெழின்முகம் மதுதம் மெய்யின்
மாறிலாக் கதிருண் டாகி மான்மதங் கமழு மென்றுஞ்
சேறிலாங் ககில மீதிற் றிருவடி தோயா தென்றுங்
கூறிலாப் பிடரின் கீழ்பாற் குறித்தலாஞ் சனையுண் டென்றும்.
1.10.31
628 வியனுறு புறுக்கா னென்னும் வேதமொன் றிறங்கு மென்றுங்
குயின்மொழிப் பவளச் செவ்வாய்க் கொடியிடைக் கருங்கட் பேடை
மயிலினை யிந்த வூரின் மணமுடித் திடுவ ரென்றும்
நயனுறக் கேட்டே னின்றென் னயனங்கள் குளிரக் கண்டேன்.
1.10.32
629 முன்னுணர்ந் தவரைக் கேட்டு முதலவன் மறைக டேர்ந்தும்
நின்னையொப் பவரு மில்லை யாகையா னினது பாலம்
மன்னைவிண் ணப்பஞ் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும்
பொன்னனீ ரென்னப் போற்றிப் புகழ்ந்தன னெகிழ்ந்த நெஞ்சான்.
1.10.33
630 கலைவலா னுரைத்த மாற்றங் கேட்டபின் கதிஜா வென்னுஞ்
சிலைநுத றௌியத் தேர்ந்தோர் செவ்வியோன் றன்னைக் கூவி
யலகில்வண் புகழ்சேர் வள்ள லகுமதை யினிதிற் கூட்டித்
தலைவநீ வருக வென்னத் தாழ்ச்சிசெய் தெழுந்து போந்தான்.
1.10.34
631 ஏவலென் றுரைத்த மாற்ற மிடையறா தொழுகிச் செய்யுங்
காவல னபித்தா லீபு கடைத்தலை கடந்து சென்று
பாவலம் பிய செந் நாவார் பன்முறை வழுத்தப் போதா
மேவலர்க் கரியே றென்னு முகம்மதை விரைவிற் கண்டான்.
1.10.35
632 கண்டுகண் களித்துள் ளஞ்சிக் கரகம லங்கள் கூப்பி
யொண்டொடி கதிஜா வென்னு மோவிய முரைத்த மாற்றம்
விண்டுவிண் ணப்பஞ் செய்தான் விரைகம ழலங்கற் றிண்டோட்
கொண்டறன் செவியு நெஞ்சுங் குறைவறக் குளிர வன்றே.
1.10. 36
633 கூறிய கூற்றைக் கேட்டுக் குறித்துள கரும மின்று
மாறிலா தடைந்த தென்ன முகம்மது மனத்தி லுன்னித்
தேறியங் கெழுந்து போந்தார் தேனினு மதுர மாறா
தூறிய தொண்டைச் செவ்வா யொண்ணுதன் மனையி லன்றே.
1.10.37
634 சித்திர வனப்பு வாய்ந்த செம்மறன் வரவு நோக்கிப்
பத்திரக் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பதும ராக
முத்தணி நிரைத்த பீட முன்றிலிற் காந்தட் கையால்
வைத்திவ ணிருமென் றோத முகம்மது மகிழ்ந்தி ருந்தார்.
1.10.38
635 எரிமணித் தவிசின் மேல்வந் திருந்தலக் கணமும் பொற்புந்
திருவுறை முகமு மன்பு திகழ்தரு மகமுங் கண்ணும்
விரிகதிர் பரந்த மெய்யும் விறல்குடி யிருந்த கையு
மருமலர் வேய்ந்த தோளு மணிதிரண் டனைய தாளும்.
1.10.39
636 பேரொளி பரப்பிப் பொங்கிப் பெருகிய வழகு வெள்ளச்
சார்பினிற் கதிஜா வென்னுந் தையறன் கரிய வாட்கட்
கூருடைக் கயல்க ளோடிக் குதித்தன குளித்துத் தேக்கி
வாரிச வதனஞ் சேர்ந்து மறுக்கமுற் றிருந்த வன்றே.
1.10.40
637 பார்த்தகண் பறித்து வாங்கப் படாமையா னறவஞ் சிந்தப்
பூத்தகொம் பனைய மெய்யி னாணெனும் போர்வை போர்த்துக்
கூர்த்தவா வௌிப்ப டாமற் கற்பெனும் வேலி கோலிச்
சேர்த்ததம் முளங்கா ணாது திருந்திழை வருந்தி நின்றார்.
1.10.41
638 மெய்மொழி மறைக டேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து
மொய்மலர்க் கதிஜா செவ்வி முழுமதி வதன நோக்கிச்
செய்தவப் பலனே யன்ன வள்ளலைத் திரும னைக்கே
எய்துதற் கருள்செய் வீரென் றெடுத்துரை விடுத்துச் சொன்னான்.
1.10.42
639 விரும்பிய காம நோயை வௌிவிடா தகத்துள் ளாக்கி
யரும்பிள முறுவற் செவ்வா யணிமல ரிதழை விண்டோ
யிரும்புகழ் தரித்த வெற்றி முகம்மதை யினிதி னோக்கி
வரும்பெருந் தவமே நுந்த மனையிடத் தெழுக லென்றார்.
1.10.43
640 காக்குதற் குதித்த வள்ளல் காரிகை வடிவைக் கண்ணா
னோக்கியு நோக்கா தும்போ னொடியினி லெழுந்தம் மாதின்
மாக்கட லனைய கண்ணு மனமும்பின் றொடர்ந்து செல்லக்
கோக்குல வீதி நீந்திக் கொழுமனை யிடத்திற் சார்ந்தார்.
1.10.44
641 மடங்கலே றனைய செம்மன் மனையில்வந் திருந்த போழ்தே
படங்கொள்பூ தலத்தி ராசப் பதவியும் பெரிய வாழ்வு
மிடங்கொள்வா னகத்தின் பேறு மௌிதினி னும்பாற் செல்வ
மடங்கலு மடைந்த தின்றென் றறைந்துபண் டிதன கன்றான்.
1.10.45
642 தெரிந்துணர்ந் தறிந்தோர் மாற்றஞ் சிறிதெனும் பழுது வாரா
விரிந்தநூ லுரையும் பொய்யா விளங்கொளிர் வடிவ தாக
விருந்தவர் நபியே யாமு மிவர்மனை வியரே யென்னக்
கருந்தடங் கண்ணா ருள்ளக் கருத்தினி லிருத்தல் செய்தார்.
1.10.46
643 படியினிற் சசியுஞ் செங்கேழ்ப் பரிதியு நிகரொவ் வாத
வடிவெடுத் தனைய வள்ளன் முகம்மதி னெஞ்ச மென்னுங்
கடிகமழ் வாவி யூடு கருத்தெனும் கமல நாப்பண்
பிடிநடைக் கதிஜா வென்னும் பெடையென முறைந்த தன்றே.
1.10.47
644 தம்மனத் துறைந்த காத றனைவௌிப் படுத்தி டாமற்
செம்மலு மிருந்தார் மற்றைச் சிலபகல் கழிந்த பின்னர்
மும்மதம் பொழியு நால்வாய் முரட்கரி யபித்தா லீபு
விம்மிதப் புயம்பூ ரிப்ப மைந்தனை விளித்துச் சொல்வார்.
1.10. 48
645 தெரிதரத் தௌிந்த சிந்தைத் தேமொழி கதிஜா பாலில்
விரைவினிற் சென்று செம்பொன் விளைவுறச் சிறிது கேட்போ
மருளொடு மீந்தா ரென்னி லதற்குறு தொழிலைக் காண்போம்
வரையற விலையென் றோதில் வருகுவம் வருக வென்றார்.
1.10.49
646 உரைத்திடுந் தந்தை மாற்றஞ் செவியுற வுவகை பொங்கி
விரைத்தகாக் குழற்க தீஜா மெல்லிழை நினைவு நெஞ்சும்
பொருந்திய வகத்தி னூடு புக்கிடத் திருவாய் விண்டு
கரைத்தனர் நாளைக் காண்போங் கருதிய கரும மென்றே.
1.10.50
647 வேறு
மருக்கொள் பூதரப் புயநபி முகம்மது
மனையிடை மகிழ்கூர
விருக்கு மெல்லையி லெல்லவன் புகுந்திர
விருள்பரந் திடுகாலைக்
கருக்கு மைவிழி துயிறரு பொழுதொரு
கனவுகண் டனர்நூலிற்
சுருக்கு நுண்ணிடைப் பொலன்றொடி திருந்திழை
சுடர்மணி கதிஜாவே.
1.10.51
648 நிறையும் வானக மலர்தரு முடுவின
நிரைவிடுத் தௌிதாகக்
கறையி லாக்கலை முழுமதி மடிமிசை
கவினொடு விளையாட
மறைவி லாதுகண் டணிதுகில் கொடுதனி
மகிழ்வொடு பொதிவாகக்
குறைவி லாதுரத் துடனணைக் கவுமகங்
குளிரவு மிகத்தானே.
1.10.52
649 கண்ட காரண மாதுல னெனவரு
கலைவல னொடுகூற
விண்டு கூர்த்திடப் பார்த்தனன் றௌிந்திவர்
விரைமலர் முகநோக்கி
வண்டு லாம்புய நபியுனை யிதமுற
மணமுடித் திடநாடிக்
கொண்ட தாமிதென் றோதிட வுடலங்
குளிர்ந்திருந் திடுநேரம்.
1.10.53
650 மதும மார்த்தெழு புயவபித் தாலிபு
முகம்மது நயினாரும்
விதுவுஞ் சேட்டிளம் பருதியுங் கலந்துடன்
விரைவொடு தெருவூடே
புதுமை யாய்நடந் தணிநில வெறித்திடப்
புனையிழை கதிஜாதஞ்
சுதைகொண் மண்டப மணிக்கடைப் புகுந்தனர்
துணைவழி களிகூர.
1.10.54
651 இருவ ரும்வரக் கண்டன ரெழுந்திருந்
திணைமல ரடிபோற்றிச்
சொரியு மென்கதி ராதனத் திருத்திநந்
தூய்மலர்ப் பதநோவ
வரிதில் வந்ததென் புன்மொழிச் சிறியவ
ரறிவிலர் மனைதேடித்
தெரியக் கூறுமென் றஞ்சிநின் றுரைத்தனர்
தேமொழி கதிஜாவே.
1.10.55
652 இந்த மாநிலத் தொருநிதி யேயென
திருவிழி மணியேகேள்
சுந்த ரப்புய னப்துல்லா வெனதுறு
துணையுயிர்க் குயிரான
மைந்த ரிங்கிவர் மனத்திருள் கெடவொரு
மணமுடித் திடநாடிச்
சிந்தை நேர்ந்திவ ணடைந்தன ருமதுரைத்
திருவுள மறியேனே.
1.10.56
653 சிறிது பொன்னென திடத்தினி லளித்திடிற்
றேசிக ருடன்கூடி
யுறுதி ஷாமினுக் கேகியிங் கடைகுவ
னுமதரு ளுளதாகில்
வறிய வர்க்கொரு மணநிறை வேறிடு
மடமயி லனையாரீ
தறுதி யில்லெனி லதுதுவுநன் றெனவபித்
தாலிபு முரைத்தாரே.
1.10.57
654 நிரைத்த செவ்வரி பரந்தகட் கடைமயி
னிசமென வபித்தாலி
புரைத்த வார்த்தையுந் தம்ம்னக் கருத்தையு
முடன்படுத் திடநோக்கித்
திரைத்த டத்தலர் மரையென முகமலர்
செறிதரத் துயர்கூரும்
வருத்த மின்னினை வின்படி முடிந்தென
மனத்திடைக் களித்தாரே.
1.10.58
655 பூத ரம்பொரு புயத்தபித் தாலிபு
புளகெழு முகநோக்கி
மாத வத்தினென் பொருளுள தெவையுநின்
மனைப்பொரு ளௌியேனு
மாத ரத்துறு மொழிவழி நடப்பதற்
கையுறே லெனப்போற்றிக்
காத லித்துரைத் தார்விரைத் தார்குழற்
கனிமொழி கதிஜாவே.
1.10.59
656 இனிய வாசக மிருதுளைச் செவிபுக
விதயமென் மலர்போத்த
துனிப றந்தன வுவகையும் பிறந்தன
துணைவரைப் புயமீறத்
தனிய னம்வயி னினஞ்சில பெறுபொரு
டருகுவ னெப்போற்றி
வனச மென்மலர் முகமலர்ந் திருந்தனர்
மருவல ரறியேறே.
1.10.60
657 கொடுவ ரிப்பதத் துகிர்முனை யரிந்தன
கோதில்வெண் ணறுவாசத்
தடிசி லும்மறு சுவைப்பொரிக் கறிகளு
மமுதொடு செழுந்தேனும்
வடிந றாவுடைந் தொழுகுமுக் கனியுடன்
மதுரமென் மொழிகூறி
யிடுவி ருந்தளித் தாரிரு வருக்குமோ
ரிளங்கொடி மடமானே.
1.10.61
658 அனம ருந்திய வரசர்க டமைமணி
யாசனத் தினிதேற்றி
நனைத ருந்துவர்க் காயிலை பாளித
நறும்புகை மலர்சாந்தம்
புனையு மென்றுகிற் கஞ்சுகி சிரத்தணி
போல்வன பலவீந்து
சினவு வேல்விழி பொருள்கொடு வருகென
வுரைத்தனர் திருவாயால்.
1.10. 62
659 ஆட கங்கொணர் கென்றலும் வான்றொடு
மறையினிற் சிலரோடி
மூடு பெட்டகந் திறந்தனர் கொணர்ந்தனர்
குவித்தனர் முறையாக
நீடி லக்கநூ றயிரத் தொன்பதி
னாயிர நிறைதேர்ந்த
மாடை தானெடுத் தீந்திடக் கொண்டனர்
முகம்மது நயினாரே.
1.10.3
660 கொடுத்த தங்கம லாற்பெரும் ஷாமெனக்
குறித்திடுந் திசைக்கேற்க
வெடுத்த நற்சரக் கொட்டையின் பொதியிரு
நூறொடு திரளாக
விடுத்த கப்பரி வாரத்தி லுரியவர்
விறல்கெழு வயிரவீந்
தொடுத்த நெஞ்சின ரிருபது பெயரையுந்
தொகுத்தனர் மடமானே.
1.10.64
661 வடிவு றுந்திரட் டாள்களு மிருபுறம்
வகிர்தரு மயிர்வாலு
நெடுகிக் கட்டுரத் திறுகிய கண்டமு
நிமிர்ந்தமெய் யுறுகூனு
நடையி லோர்பகற் கொருபதின் காவத
நடந்திடுந் திடத்தாலுங்
கடிய வொட்டையொன் றெழினபிக் களித்தனர்
கரியமை விழிமானார்.
1.10.65
662 மல்ல லம்பிய புயமுகம் மதுநபி
மனத்தினின் மகிழ்கூரச்
செல்ல லைந்திடப் பொழிதரு கரமிசைச்
செழுங்கதிர் வடிவேலு
மெல்ல வன்கதிர் மறைதரு குற்றுடை
வாளொடு மினிதீந்தார்
வில்லின் மேற்பிறை தோற்றிய தெனநுதல்
விளங்கிய மடமானே.
1.10.66
663 இவையெ லாநபிக் களித்த பினேவலி
னியலுறு மைசறாவை
நவைய றத்தம தருகினி லிருத்திவெண்
ணகைமலர் முகநோக்கிப்
புவியி னின்னிலு மெனக்குரி யவரிலைப்
பொருளுநின் பொருளேயா
மவய வந்தனைக் காப்பவர் போனபிக்
கடுத்தினி துறைவாயே.
1.10.67
664 ஏகும் பாதையிற் பண்டித னொருவனுண்
டியன்மறை வழிதேர்ந்த
வாக னெம்மினத் தவரிலு முரியவன்
மகிழ்ந்தவ னிடத்தேகி
நீக ருத்துட னெனதுச லாமையு
நிகழ்த்திநள் ளிருட்போது
மோக முற்றியான் கண்டிடுங் கனவினை
மொழியென மொழிவாயே.
1.10.68
665 பாதை யுற்றிடுஞ் செய்தியு மிவர்க்கிடர்
பணித்திவர் தமக்கான
வாதை யுற்றிடு வருத்தமுங் காரணத்
தொகுதியும் வனஞ்சார்ந்த
போதி னிற்பெரும் புதுமையு மிங்கிவர்
பொறுமையு நகர்சேர்ந்து
சூதர் தம்மொடு மிருப்பது மினமெனச்
சூழ்ந்தவர் வரலாறும்.
1.10.69
666 இற்றை நாட்டொடுத் தந்நகர்க் கேகியிங்
கிவண்புக வருநாளை
யற்றை நாளைக்குங் கண்டிடுங் காரண
மனைத்தையுந் தொடராக
ஒற்றர் தம்வயி னெழுதியுங் கனுப்பியென்
னுறுவிழி மணிபோலுங்
குற்ற மில்லதோர் நபியுடன் வருகென
வுரைத்தனர் குலமாதே.
1.10.70
667 இத்தி றத்துரை பகர்ந்தன ரழகொளி
ரிளமயின் முகநோக்கி
மத்த கக்கட கரிமுகம் மதினெழின்
மலரடி யிணைபோற்றி
யுத்த ரப்படிப் பணிகுவ னவரையென்
னுயிரினு மிகக்காத்து
முத்தி ரைப்படி வருகுவன் காணென
மொழிந்தடி பணிந்தானே.
1.10.71
668 முருகு லாங்குழன் மயிலபித் தாலிபு
முழுமதி முகநோக்கி
யரசர் நாயக நின்மனைக் கெழுகென
வுரைத்தலு மவர்போந்தார்
பரிச னங்களும் வணிகருஞ் சூழ்தரப்
பாதமென் மலர்பாரிற்
றெரித ராமுகம் மதுநபி யாத்திரைத்
திரளொடு மெழுந்தாரே.
1.10. 72
669 கூன்றொ றுத்தொறும் பொதியெடுத் தேற்றிய
குழுவிடை நயினாரு
மேன்ற தம்மிரு கரத்தினும் பொதியிரண்
டெடுத்தெடுத் தினிதேற்றிச்
சான்ற பேர்கட மனத்ததி சயமுறத்
தையறன் மனைநீங்கித்
தோன்ற றோன்றின ரணிமணி மறுகிடைச்
சுடர்விடு மதியேபோல்.
1.10.73
670 அருந்த வத்தபூ பக்கருஞ் சுபைறுட
னாரிது மப்பாசுந்
திருந்தி லாமனத் தபுஜகி லொடுங்கலை
தெரிதரு மசைறாவும்
பொருந்தக் கூடிய மாக்களி மிடபமும்
புரவியுந் துகளார்ப்ப
வருந்தி லாப்பெரு வாழ்வுகொண் டுறைதரும்
வளநகர்ப் புறத்தானார்.
1.10.74
671 ஊறு நீர்த்தடக் கரைகளுங் குட்டமு
மோடையு மலர்க்காடுந்
தேற றூற்றிய சோலையு மரம்பையின்
றிரளிடைப் பழக்காடுங்
கூறு கூறுகொண் டிடுகிடங் கிடைச்சிறு
கொடியிலைக் கொடிக்காலுஞ்
சாறு கொண்டெழு மாலையுங் கன்னலஞ்
சாலையுங் கடந்தாரே.
1.10.75
672 கடந்து காவத நடந்தொரு பொழிலிடை
காளைக ளனைவோரு
மிடம்பெ றத்திரண் டிறங்கியங் குறைந்தன
ரிட்பொழு தினைப்போக்கி
விடிந்த காலையின் முன்னிலை யெவரென
விளம்பின ரவரோடு
மடைந்த பேர்களின் முகம்மது முதலென
அபூபக்க ரறைந்தாரே.
1.10.76
673 முகம்ம தென்றுரை கேட்டலு மபுஜகில்
மனத்திடை தடுமாறி
மிகமு னிந்தன னிவர்தமை முன்னிலை
விலக்குவ துனக்காகா
திகழெ னப்பலர் கூறவுங் கேட்டில
னிதற்குமுன் னிலையானென்
றகம கிழ்ந்திட நடந்தனன் கெடுமதி
யடைவது மறியானே.
1.10.77
674 ஒட்டை மீதினில் வருன்பொழு தவ்வழி
யோரிடத் திடையூறாய்க்
கட்டை தட்டிட வொட்டையுஞ் சாய்ந்தொரு
கவிழொடு தலைகீழாய்
முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும்
முழுப்பெருக் கெனச்சோரி
கொட்டி னானெழுந் தானபு ஜகிலெனுங்
கொலைமனக் கொடியோனே.
1.10.78
675 உதிரங்கொப் பளித்து முகமழிந் துடைந்தான்
முகம்மதை யுறுதிகே டாக
நிதமுரைத் ததனா லபுஜகி லினமு
நிலைகுலைந் திடுவது நிசமென்
றதிர்தர வுரைத்துப் பல்லருங் கூண்டிவ்
வாற்றிடை முன்னிலை யானோன்
மதுரமென் மொழியா னுத்பா வலது
மறுத்தெவ ருளரெனத் தேர்ந்தார்.
1.10.79
676 கூறுமென் மொழியா னுத்பா வென்னுங்
குரிசில்பி னியாவரு நடந்து
தூறடை நெறியுஞ் சிறுபரற் றிடருந்
தொலத்திடுங் காலையி லாங்கோர்
யாறிடை வீழ்ந்தான் முன்னிலை யிளவ
லனைவரும் பயந்திட வன்றே.
1.10.80
677 நிலமிசை கலங்கி யுத்துபா வீழ
நெடுங்கழுத் தலைவரி வேங்கை
யலைபடப் பிடித்தங் கடவியி னடைய
வருக்கனுங் குடபுலத் தடைந்தான்
செலநெறி தெரியுந் தெரிகிலா தென்னத்
திசைதிசை நிறைந்தது திமிரம்
பலபல வருக்கச் சரக்கெலா மிறக்கிப்
படுபரற் பாதையி லுறைந்தார்.
1.10.81
678 ஆய்ந்தபே ரறிவர் பசிக்கிடர் தவிர்த்தங்
கவரவர் சார்பினிற் சார்ந்தார்
வாய்த்தபே ரெழிலார் முகம்மதுந் துயின்றார்
மாகமட் டெண்டிசை கவிய
வேய்ந்தவல் லிருளி லடிக்கடி வெருவி
விடுதியி னடுவுறைந் தவணிற்
சாய்ந்திடா திருகண் டூங்கிடா திருந்தான்
றருக்கினால் வெருக்கொளு மனத்தான்.
1.10.82
679 அலரிவெண் டிரைமே லெழுந்தனன் கீழ்பா
லனைவரு மெழுகவென் றெழுந்தார்
நிலைதளர்ந் திருந்த வுத்துபா வென்போ
னெறியின்முன் னிலைநடப் பதற்கோர்
தலைவரை வேறு நிறுத்துமென் றுரைத்த
தன்மைகேட் டனைவரும் பொருந்தி
யிலைமலி வேலா னாசெனுங் குரிசின்
முன்னிலை யெனவெடுத் திசைத்தார்.
1.10.83
பாதை போந்த படல்ம் முற்றிற்று.

ஆகப் படலம் 10-க்குத் திருவிருத்தம்...679
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.11 சுரத்திற் புனலழைத்த படலம்

680 முன்னிலை யாசு நடந்திட நடந்து
முதிரட விகள்கடந் ததற்பின்
றன்னிக ரில்லான் றிருவுளப் படியாற்
றரையினிற் ஜிபுறயீ லிறங்கி
யிந்நிலத் தெவர்க்குந் தெரிகிலா வண்ண
மிளம்பிடி யொட்டையொன் றௌிதாய்ப்
பன்னரும் பாதைத் தலைதடு மாறப்
பண்பொடு கொடுநடத் தினரே.
1.11.1
681 மட்டவிழ் புயத்தா னாசுமுன் னடத்தி
வந்தவொட் டகம்புது மையதாம்
பெட்டையொட் டகத்தைக் கண்டுபின் றொடரப்
பிசகின தருநெறி கானிற்
செட்டரு மெருதும் புரவியு மிடைந்து
சிறுநெறி வயின்வெகு தூர
மெட்டிமுன் னடப்பச் சிறுநெறி குறுகி
யிருந்ததுந் தேய்ந்தபோ யதுவே.
1.11.2
682 ஆசெனு மரச னொட்டகக் கயிற்றை
யசைத்திடுந் திசையெலா நடப்ப
வாசியு மெருதுங் கூன்றொறுத் தொகையும்
வழிகெடத் தனித்தனி மறுகத்
தேசிகர் கலங்கி யாமிதற் கென்கொல்
செய்குவ தெனமன மிடைந்து
வீசிய கானற் சுடச்சுடக் கருகி
விடர்விடும் பாலையி லடைந்தார்.
1.11.3
683 பின்னிய திரைவா ருதியினைச் சுவற்றிப்
பெரும்புறக் கடலினைத் தேக்கித்
தன்னகங் களித்து வடவையின் கொழுந்து
தனிவிளை யாடிய தலமோ
பன்னருந் தென்கீழ்த் திசையினன் றிரண்ட
படையொடு மிருந்தபா சறையோ
வுன்னதக் ககன முகடற வுருக்கு
முலைகொலொ வெனவறி கிலமால்.
1.11.4
684 பருத்திருந் தெழுந்து பறந்தசின் னிழலும்
பற்றறாக் கானலிற் றேய்ந்த
கரிந்திலை தோன்றா தொவ்வொரு விருக்கங்
கணங்களின் குலமெனத் தோன்று
மெரிந்தெரி மேய்ந்து கரிந்துவிண் ணிடங்காந்
திடுந்தரை யொருதுளி நீரு
மருந்திடக் கிடையா தலகைக டிரிந்தங்
காள்வழக் கற்றவெங் கானம்.
1.11.5
685 பாலையென் றுலர்ந்த செந்நிலக் கானற்
பரப்பினைப் புனலென வோடிச்
சாலவு மிளைத்துத் தவித்துழை யினங்க
டனித்தனி மறுகிய மறுக்க
மாலுளர்ந் திருண்ட புன்மனச் சிறியோர்
மருங்கினி லிரந்திரந் திடைந்து
காலறத் தேய்ந்த பலகலை மேலோர்
கருத்தினில் வருத்தமொத் தனவே.
1.11.6
686 கள்ளியின் குலங்கள் வெந்தொடுங் கினவேர்க்
கட்டையி னுட்டுளை கிடந்து
புள்ளிபூத் திருந்த பைத்தலைப் பாந்தள்
புறந்திரிந் துறைந்திடா திறந்து
முள்ளெயி றொதுங்கிச் செம்மணி பிதுங்கி
முளைதொறுங் கிடப்பதைச் செறிந்த
கொள்ளியிந் தனங்க ளென்றுழைக் குலங்கள்
குறுகிடப் பயந்துகான் மறுகும்.
1.11.7
687 மூவிலை நெடுவேற் காளிவீற் றிருப்ப
முறைமுறை நெட்டுடற் கரும்பே
யேவல்செய் துறைவ தலதுமா னிடர்கா
லிடுவதற் கரிதுசெந் நெருப்புத்
தாவியெப் பொருப்புங் கரிந்தன சிவந்து
தரைபிளந் ததுவதிற் பிறந்த
வாவியோ வெழுந்த புகைபரந் ததுவோ
வறக்கொடுங் கானலென் பதுவே.
1.11.8
688 சேந்தெரி பரந்த பாலையிற் புகுந்து
சென்னெறி சிறிதுந்தோன் றாமற்
காந்தெரி கதிரோ னெழுதிசை தெற்கு
வடக்குமேற் கெல்லைகா ணாமன்
மாந்தரு மாவுந் திசைதடு மாறி
வாயீனி ரறவுலர்ந் தொடுங்கி
யேந்தெழில் கருகி மனமுடைந் துருகி
யெரிபடு தளிரையொத் திடுவார்.
1.11. 9
689 மன்னவ னாக முன்னடந் ததற்கோர்
வல்வினை பின்றொடர்ந் ததுவோ
வின்னைநா ளகில மடங்கலுந் தழலா
லெரிபடு காரணந் தானொ
முன்னைநாள் விதியோ நகரைவிட் டெழுந்த
முகுர்த்தமோ பவங்கண்முற் றியதோ
பன்னுதற் கெவையென் றறிகுவோங் கொடியேம்
பாலையிற் படும்வர லாறே.
1.11.10
690 பாடுறு புனலறத் றொவ்வொரு காதம்
படுபரற் பரப்புநாற் றிசைக்கு
மோடுவர் திரும்பி மீள்குவ ரடிசுட்
டுச்சியும் வெதுப்புற வுலர்ந்து
வாடுவர் துகில்கீழ்ப் படுத்தியொட் டகத்தின்
வயிற்றிடை தலைநுழத் திடுவார்
தேடிடும் பொருட்கோ வுயிரிழப் பதற்கோ
செறிந்திவ ணடைந்தன மென்பார்.
1.11.11
691 ஓங்கிய வுதய கிரிமிசை யெழுந்த
மதியென வொட்டகை யதன்மேல்
வீங்கிய புயமுங் கரத்தினி லயிலும்
வெண்முறு வலுமலர் முகமும்
பாங்கினிற் குளிர்ந்த வெண்கதிர் பரப்பப்
பரிமள மான்மதங் கமழத்
தூங்கிசை மறைதேர் முகம்மதும் பாலைத்
துன்புறா தின்பமுற் றனரே.
1.11.12
692 பாலையி லடைந்து பசியினா லிடைந்து
பலபல வருத்தமுற் றதுவும்
வேலைவா ருதிபோல் வழிபிழைத் ததுவும்
விழுந்தியான் முகமுடைந் ததுவுங்
கோலமார் புலிவந் ததுமுகம் மதையாங்
கூட்டிவந் துறுபவ மென்னச்
சாலவு முரைத்தா னீதியை வெறுத்த
தறுகணா னெனுமபூ ஜகிலே.
1.11.13
693 மூரிவெற் பனைய புயமுகம் மதுவை
முன்னிலைத் தலைவராய் நிறுத்தித்
தாரையிற் செலுநம் மிடர்களுந் தவிருந்
தழலெழும் பாலையுங் குளிர்ந்து
வேரியங் கமல வாவியங் கரையாம்
விரைவினிற் சாமடை குவமென்
றாரிதுக் குரைத்தார் தாதவிழ் மலர்த்தா
ரணிதிகழ் புயத்தபூ பக்கர்.
1.11.14
694 ஈதுநன் றெனவொத் தனைவரு மிசைத்தா
ரெழின்முகம் மதுவுமுன் னிலையாய்ப்
பாதையி னடப்பப் பெரியவ னருளின்
பணிகொடு ஜிபுறயீ லிறங்கிப்
பேதமற் றணுகி யொட்டகக் கயிற்றைப்
பிடித்தன ரரைநொடிப் பொழுதிற்
றீதற நெறியுங் தெரிந்தன நான்கு
திசைகளுந் தௌிதரத் தெரிந்த.
1.11.15
695 தலமைமுன் னிலையாய் முஅக்ம்மது நடப்பச்
சாருநன் னெறியினைச் சார்ந்தோம்
நிலமிசைக் கரிய மேகமொன் றெழுந்து
நிழலிவர்க் கிடுவதுங் கண்டோம்
மலைகடற் றிரைபோற் கானலில் வெதும்பி
யலைந்திடு வருத்தமுஞ் தவிரப்
புலனுறப் புனலும் பருகுவஞ் சிறிது
போழ்திலென் றனைவரும் புகன்றார்.
1.11.16
696 மந்தரம் பொருவா தெழுந்தபொற் புயத்து
முகம்மது மேறுவா கனத்தின்
கந்தரக் கயிற்றை யசைத்திட வுளத்தின்
கருத்தறிந் தொட்டகங் களித்துச்
சுந்தரப் புவியில் வலதுகா லோங்கித்
தொட்டிடத் தொட்டவப் போதிற்
சிந்துநேர் கடுப்ப நுரைதிரை பிறஙகச்
செழித்தெழுந் ததுநதிப் பெருக்கே.
1.11.17
697 ஆறெழுந் தோடிப் பாலையைப் புரட்டி
யழகுறு மருதம தாக்கத்
தேறல்கொப் பளித்து வனசமுங் குவளைத்
திரள்களும் குமுதமும் விரிய
வேறுபட் டுலர்ந்த மரமெலாந் தழைத்து
மென்றழை குளிர்தரப் பூத்துத்
தூறுதேன் றுளித்துக் கனிகளுங் காயுஞ்
சொரிதரச் சோலைசூழ்ந் தனவே.
1.11.18
698 வற்றுறாச் செல்வப் பெருக்கினி தோங்கும்
வகுதையம் பதியுசை னயினார்
பெற்றபே றிதுகொ லெனமுழு மணியாய்ப்
பிறந்தமெய்த் துரையபுல் காசீஞ்
சுற்றமுங் கிளையுஞ் சிறப்பொடு தழைத்துச்
சூழ்ந்திருந் தணிதிகழ் வதுபோற்
குற்றமி னதியி னிருகரை மருங்குங்
குறைவறத் தளிர்த்தன தருக்கள்.
1.11.19
699 நானமும் புழுகும் பாளிதக் குலமு
நறைகெட மிகுந்தவா சமதாய்த்
தேனினுங் கருப்பஞ் சாற்றினுந் திரண்ட
தெங்கிள நீரினு மினிதா
யூனமி னதிய னொருகைநீ ரருந்தி
யுடல்குளிர்ந் தரும்பசி யொடுங்கி
யானன மலர்ந்து முகம்மதைப் புகழ்ந்தங்
கனைவரு மதகளி றானார்.
1.11.20

சுரத்திற் புனலழைத்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 11க்கு திருவிருத்தம்..699
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.12. பாந்தள் வதைப் படலம்

700 கனலுண்ட கடுஞ்சுர மீதுநறும்
புனலுண்டு பொருந்தின ரவ்வுழையின்
சினமுண்டெழு செங்கதிர் பொங்குமிரு
ளினமுண்டு குணக்கி லெழுந்ததுவே.
1.12.1
701 மருதங்கள் கலந்த வனத்திலிருந்
தெருதும்பரி யும்மெழி லொட்டகமும்
பெருகுந்திர ளும்படி பின்செலவே
வரதுங்க முகம்ம தெழுந்தனரே.
1.12.2
702 வடிவாலொளி வீசிய வானவர்கோன்
படிமீதுறு பாதையின் முன்செலவே
நெடியோனபி பின்செல நீணெறியிற்
கடிமார்பர் கலந்து நடந்தனரே.
1.12.3
703 கானந்தனி லேகிய காலையினிற்
றானந்தரு தாரை தனைத்தெரியா
தீனந்தரு வல்லிரு ளெய்திநெடு
வானுந்தெரி யாது மறைத்ததுவே.
1.12.4
704 இருள்கொண்டு பரந்திட யாவருமோர்
மருள்கொண்டவர் போல மயங்கினரா
லருள்கொண்ட முகம்மது மன்புறவே
தெருள்கொண்டு நடந்தனர் செல்வழியே.
1.12.5
705 கொடுவல்லிரு ளுண்டு கொழுங்கதிர்பைங்
கடலந்தரை மீதெழு காரணமுற்
றிடருந்தவி ரும்மிவ ராலெனவே
மடனெஞ்சமி லாது மகிழ்ந்தனரே.
1.12.6
706 மருமிக்க புயத்தெழில் வள்ளலுடன்
கருமத்தொழில் காரரு மற்றவரு
மொருமித்து நடந்துறு வாவெனுமோ
ரருவிக்கரை மேவி யடுத்தனரே.
1.12.7
707 வண்டார்பொழி லார்வரை யூடருவி
யுண்டார்சில ருண்கிலர் காணெனவே
கண்டார்நபி வல்லவ னைக்கருதிக்
கொண்டார்புன லுங்குதி கொண்டதுவே.
1.12.8
708 அளித்தானுண நீர்கிடை யாதகரை
யுளித்தானிலை யாதிட வோடுபுனற்
குளித்தார்குடித் தார்மகிழ் கொண்டுடலங்
களித்தாடி நடந்தனர் காளையரே.
1.12.9
709 மகிழ்கொண்டு நடந்த வனந்தனிலே
துகடுன்றி விசும்பு துடைத்திடவே
நிகழ்கின்ற நெடுந்தொலை சென்றதின்மே
லுகழ்கின்றொரு வன்வர வுற்றனனே.
1.12.10
710 கையோடிரு காலு நடுங்கிடவே
வையோடிய வேர்வைகள் சிந்திவிழ
வையோவிதி யோவென வாயலறி
யுய்வாறினி யேதென வோதினனே.
1.12.11
711 மயமாறிட வாய்குழ றிக்குழறித்
துயரோடுற வந்து சுழன்றவனை
வயவீரர்கள் கண்டுன் மனத்திலுறும்
பயமேதுகொ லென்று பகர்ந்தனரே.
1.12.12
712 சினமுண்ட செழுங்கதிர் வேலுடையீர்
வனமுண்டரை நாழிகை யுள்வழியிற்
கனமுண்டொரு காரண மாமலையி
னினமுண்டு பருத்தெழு கின்றதுபோல்.
1.12.13
713 அரவொன்றுள தத்திரி யும்பரியுங்
கரமொன்று கரித்திர ளும்மெதிரே
வரவுண்டிடும் வாறலை நீளமதை
யுரமொன்றி யுரைத்திட நாவரிதே.
1.12.14
714 கண்ணின்கன லுங்கடை வாய்புரளப்
பண்ணுங்கவை நாவொடு பற்களுறும்
வண்ணந்தனை யோதிட வானவருந்
துண்ணென்றுட லங்க டுணுக்குறுவார்.
1.12.15
715 திருகுஞ்சின மாயது சீறிவெகுண்
டிருகுன்று கடந்தென தின்னுயிரைப்
பருகும்படி வந்தது பாருமதோ
வருமின்றது காணென மாழ்கினனால்.
1.12.16
716 அலைவுற்றவ னம்மொழி கூறிடலு
நிலையற்றவர் நின்று நினைந்துநினைந்
துலைவுற்றுட லங்க ளொடுங்கிமன
மலைவுற்று மயங்கி வருந்தினரே.
1.12.17
717 வந்தானுரை செய்தது மற்றவர்க
ணொந்தாவி பதைத்திட நோக்கினரா
லுந்தாதுறு பாதையி லொட்டகம்விட்
டிந்தாரெழில் வள்ள லிறங்கினரே.
1.12.18
718 அதிர்கொண்டது நாசியி லங்கியெழக்
கொதிகொண் டுறுகோ பமதாயரவஞ்
சதிகொண்டு நடந்தது தாரையிலென்
றெதிர்கொண்டன ரெங்கண் முகம்மதுவே.
1.12.19
719 அரிகண்டு வெகுண்டடல் வாயினைவிண்
டெரிகொண்ட விழிக்கன லிற்றுவிழ
விரிகின்ற படத்தை விரித்துவிடஞ்
சொரிகின்ற தெனத்திசை தூவியதே.
1.12.20
720 கழிகின்ற துரும்பொரு கைமுழமுண்
டெழில்கொண்ட முகம்ம தெடுத்தெதிரெ
வழிகொண்டதை வீசிட வல்லுடல
மிழிகொண்டு திரங்க ளெழுந்தனவே.
1.12.21
721 அடிபட்ட வித்திர ளத்தனையும்
பொடிபட்ட துருண்டு புரண்டுவயின்
மடிபட்டொரு கற்குவை வாயினிடைக்
கடிபட்டது பட்டது கட்செவியே.
1.12.22
722 வரைபோலுர கத்தை வதைத்ததுகண்
டிரைவோடுபு கழ்ந்திவர் செங்கனிவா
யுரையூடொழு கிச்செலு மென்றுவகைத்
திரையூடு குளித்தனர் தேசிகரே.
1.12.23

பாந்தள் வதைப் படலம் முற்றிற்று

ஆகப் படலம் 12-க்குத் திருவிருத்தம்....722
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.13. நதி கடந்த படலம்

723 கட்செவி பகையறுத் தரிய கானகத்
துட்படு மிடர்தவிர்த் தொளிரும் வள்ளலை
வட்படும் வேலுடை மாக்க ளியாவரு
நட்பொடு கலந்துட னடந்து போந்தனர்.
1.13.1
724 குறுபொறை கடந்துபோய்க் குவடு சுற்றிய
சிறுநதி யாறுகள் கடந்து சென்றபின்
மறுவுறு மதிதொடு மலையு மம்மலைப்
பெறுமுறை யருவியும் பிறங்கத் தோன்றின.
1.13.2
725 அம்மலை நதிக்கரை யடுத்துச் சீரிய
செம்மலுந் சூழ்ந்தே சிகரு நீங்கிலாச்
சும்மைகொண் டிறங்கிநீ ராடித் தூநறைப்
பொம்மலுண் டரும்பகற் பொழுது போக்கினார்.
1.13.3
726 மதுப்பிலிற் றியமரை மலரின் கொள்ளையும்
விதுக்கதிர் படத்தனி விரியுங் காவியு
மெதிர்ப்பொடு களிப்புமா குலமு மெய்திடக்
கதிர்க்கதி ரவன்குட கடற்கு ளாயினான்.
1.13.4
727 நீருறை பறவையின் குலமு நீடரு
பாரினில் விலங்கின மியாவும் பண்ணறாக்
காருறு சோலைவாய்ச் சுரும்புங் கண்படைத்
தூர்வன வெவையுநல் லுறக்க முற்றதே.
1.13.5
728 போதடைந் திருளெனும் படலம் போர்த்திட
மாதவ ரெனுமுகம் மதுவு மன்னருந்
தாதவிழ் நதிக்கரைத் தருவி னீழலிற்
சோதிமா முகமலர் விழிக டூங்கினார்.
1.13.6
729 வனநதிப் பெருக்கெடுத் தெறிந்து மால்வரை
தனையமிழ்த் திடவரு வதுகொல் சார்ந்தநும்
மினமுட னெழுகவென் றிலங்கும் வள்ளறங்
கனவினிற் ஜிபுறயீல் கழறிப் போயினார்.
1.13.7
730 மருப்பொலி புயமுகம் மதுதங் கண்விழித்
தொருப்பட வெழுந்துழை யுற்ற பேர்க்கெலாம்
விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்துநம்
மிருப்பிடம் புரட்டுமீங் கெழுக வென்னவே.
1.13.8
731 தெரிதர வுரைத்தசொற் றேர்ந்தி யாவரும்
விரைவினிற் சோலைவாய் விடுதி நீங்கியே
புரவியொட் டகம்பொதி பொருளுங் கொண்டணி
வரையினுச் சியினிடை மலிய வைகினார்.
1.13. 9
732 படர்தரு திரைவயி றலைத்த பைம்புனற்
கடலிடை குளித்துச் செங்கதிர்க் கரங்களா
லடைபடு மிருட்குல மறுத்துப் போக்கியே
சுடரவ னுதயமா கிரியிற் றோன்றினான்.
1.13.10
733 அரிசினக் கொடுவரி யமிழ்ந்து போதரப்
பொரியரைத் தருக்களைப் புரட்டிப் பொங்கிய
நுரையிரு கரைகளு நுங்க மானதிப்
பிரளய மிடனறப் பெருகி வந்ததே.
1.13.11
734 குறவரைக் குறிஞ்சிவிட் டீழ்த்துப் பாலையின்
மறவரை முல்லையி லாக்கி மாசுடைத்
தொறுவரை நிரையொடுஞ் சுருட்டி வாரியே
யறைபுனற் பெருக்கெடுத் தடர்ந்த தெங்குமே.
1.13.12
735 கரைசுழித் தெறிந்துநீள் கயங்க ளாக்கின
திரையெறி கயத்தினைத் திடர தாக்கின
விரைகமழ் சோலைவே ரறுத்து வீழ்த்தின
வரைகளைப் பிடுங்கின மலிந்த நீத்தமே.
1.13.13
736 கரைபுரண் டுள்ளகங் கலித்துக் கானிடைத்
திரவியந் திரைக்கரத் தெடுத்த்ச் சிந்தியே
குரைகட லெனுநதி குரிசி னந்நபி
மரைமல ரடிதொழ வந்த போலுமே.
1.13.14
737 மானதி பெருகியெவ் வரையுஞ் சுற்றிய
நானிலத் திசைநெறி நடப்ப தின்மையாற்
றானவன் றூதொடு சார்ந்த மன்னரு
மீனமின் மூன்றுநா ளிருந்து நோக்கினார்.
1.13.15
738 மலைமிசை மூன்றுநா ளிருந்து மானதி
யலைதெடுத் தெறிந்துயர்ந் தடர்ந்த தல்லது
நிலைதரக் காண்கிலோ மென்ன நீண்டசஞ்
சலமெனுங் கடற்குளாய்த் தவித்து வாடினார்.
1.13.16
739 மனத்தினிற் றுன்புற வருந்தி மாழ்கிய
வினத்தவ ரியாரையு மினிதி னோக்கியே
கனத்தமைக் குடைநிழல் கவின்பெற் றோங்கிய
நனைத்துணர்ப் புயத்தவர் நவில லுற்றனர்.
1.13.17
740 இற்றைநா ளிரவிவ ணிருந்து கண்டுநா
மற்றைநாட் போகுவம் வருந்த லென்றனர்
வெற்றியும் வீரமுந் தவத்தின் மேன்மையு
முற்றிய மாட்சியா ரலங்கன் மொய்ம்பினார்.
1.13.18
741 இருகரை களுந்தெரிந் திலவிம் மானதி
பெருகுவ தடிக்கடி பேது றாதுபி
னொருமொழி யுரைத்தவ ருளத்தின் பெற்றியைத்
தெரிகிலோ மெனமனந் தேம்பி னாரரோ.
1.13.19
742 அவ்வுழி ஜிபுறயீ லடைந்து கண்டுயில்
செவ்விநேர் முகம்மது கனவிற் செப்பினா
ரிவ்விருள் விடிந்தபி னெழுந்து முன்னரோர்
நவ்விதோன் றிடும்வழி நடத்தி ரென்னவே.
1.13.20
743 மனமுற ஜிபுறயீல் வந்து சொல்லிய
கனவினைச் கண்டகங் களித்துக் கண்ணிணை
யினைவிழித் தெழுந்தன ரெழுந்த காலையிற்
றினகர னெழுந்தனன் பரந்த செங்கதிர்.
1.13. 21
744 வரைபுரை புயமுகம் மதுமன் மாவொடு
நிரைநிரைத் தொறுவையு நடத்திர் நீவிரென்
றுரைசெய்தி பெருக்கெடுத் தோங்கு மானதிக்
கரையினின் மரைமலர்க் காலி னேகினார்.
1.13.22
745 ஒட்டகம் புரவிமற் றுள்ள பேர்களு
மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிடத்
தொட்டவெண் டிரைக்கட லகடு தூர்த்திட
முட்டிய புன்னதிக் கரையின் முன்னினார்.
1.13.23
746 அள்ளிய பொன்னெடுத் தமைத்து வெள்ளியாற்
புள்ளிக ளணியணி பொறித்து வைத்தன
வொள்ளிய மெய்யழ கொழுக வொல்லையிற்
றுள்ளிய வுழையுழை யிடத்திற் றோன்றிற்றே.
1.13.24
747 நதியிடை வந்துமா னடப்பக் கண்டுமா
மதிநிகர் முகம்மது மனத்தி லின்பமுற்
றிதமுற நடந்துபி னேக யாவரும்
புதுமைகொ லிதுவெனத் தொடர்ந்து போயினார்.
1.13.25
748 உடற்பொறிப் புள்ளிக ளொளிர முன்செலு
மடப்பிணை பின்செலு மக்க ளியாவர்க்குங்
கடற்பெருக் கெனக்கரை கடந்து வீங்கிய
தடப்பெரு நதிமுழந் தாட்கு ளானதே.
1.13.26
749 பெருகிய பிரளயப் பெருக்கைப் போக்குதற்
கொருவனே யலதுவே றிலையென் றுன்னியே
தெருளுறச் செல்குநர் செல்க வென்றனர்
வரையிரண் டெனுமணிப் புயமு கம்மதே.
1.13.27
750 இம்மொழி நன்கென விசைந்தி யாவருஞ்
செம்மலோ டினிதுறச் செல்லுங் காலையில்
விம்மிதப் புயநபி விரித்த வாசகஞ்
சம்மதித் திலனொரு தறுக ணாளனே.
1.13.28
751 புந்தியிற் புத்தினைப் புகழ்ந்து போற்றித்தன்
சிந்தைவைத் தவ்வுழைச் செல்லும் போழ்தினி
லுந்தியின் றிரைசுழித் துருட்டி யீழ்த்திட
நந்தினா னபியுரை மறுத்த நாவினான்.
1.13.29
752 விதியவன் றூதர்சொன் மேவி லாதவ
னதியினி லிறந்தன னடுக்க மின்றியே
யிதமுற வுண்மைகொண் டிசைந்த பேர்முழுக்
கதிபெறு பவரெனக் கரையி லேறினார்.
1.13.30
753 சிந்துவின் றிரைப்பெருக் கெறியத் தீதிலா
நந்தியத் திரிபரி யாவு நன்குற
வந்தவை முகம்மதின் பறக்கத் தாலெனத்
தந்தம ரொடுபுகழ்ந் தெடுத்துச் சாற்றினார்.
1.13.31

நதி கடந்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 13க்குத் திருவிருத்தம்...753
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.14. புலி வசனித்த படலம்

754 படர்ந்த தெண்டிரைப் பெருக்கெடுத் தெறிநதிப் பரப்பைக்
கடந்து கான்பல கடந்தரு நெறிசெலுங் காலை
கொடுந்த டக்கரித் திரெளுனுங் குழுவினு ளொருவ
நடைந்து சீரகு மதினடி தொழுதறை குவனால்.
1.14.1
755 நிகழுந் தாரையிற் காவதத் துள்ளுறை நெடுநீ
ரகழி போன்றவோ ரோடையுண் டதனினுக் கணித்தாய்ப்
புகலு தற்கரி தடவியுண் டவ்வுழிப் பொருந்தி
யுகளு மாங்கொரு பாதகக் கொடுவரி யுழுவை.
1.14.2
756 நீண்ட வானிலம் புடைத்திடக் கிடந்துட னிமிர்ந்து
கூண்ட கான்மடித் திருவிழி கனல்கள் கொப்பளிப்பப்
பூண்ட வெள்ளெயி றிலங்கிட வாய்புலால் கமழ
வீண்டு முட்செறி வனத்திடை சினத்தொடு மிருக்கும்.
1.14.3
757 நிரம்பும் வள்ளுகிர் மடங்கலி னினங்களி னிணமுண்
டிரும்ப னைக்கைமும் மதகரிக் கோட்டினை யீழ்த்திட்
டுரம்பி ளந்துதி ரங்களை மாந்திநின் றுறங்கா
தரும்பெ ருங்கிரி பிதிர்ந்திட வுருமினு மலறும்.
1.14.4
758 அதிர்ந்தி டுந்தொனி செவியுற வடவியி லடைந்த
முதிர்ந்த மேதியுங் கவையடிக் கேழலு முழுதும்
பொதிந்த மெய்மயி ரெண்கினங் களுமரைப் போத்தும்
பதிந்த காறடு மாறிட வீழ்ந்துடல் பதைக்கும்.
1.14.5
759 புறந்த யங்குமஞ் சிறையறு பதப்பொறிச் சுரும்பு
திறந்து தேனையுண் டணிதிகழ் தொடையணி திறலோய்
மறந்த யங்குவேன் மாந்தரவ் வேங்கையின் வாய்ப்பட்
டிறந்த தன்றியொட் டகம்பரி யெண்ணிலக் கிலையே.
1.14.6
760 என்ற வாசகஞ் செவிபுக வெழிலிரு புயமுங்
குன்று போலுற வீங்கின முறுவல்கொண் டிடராய்
நின்ற வேங்கையெவ் வுழியென நிகழ்த்தின ரவனும்
வென்றி வாளர சேயணித் தெனவிலம் பினனே.
1.14.7
761 இலங்கு செங்கதிர் வேலொரு கரத்தினி லேந்தி
நிலங்கொ ளப்பரந் தரியமெய் யொளிபுடை நிலவ
நலங்கொள் குங்குமத் தொடைபுரண் டசைந்திட நடந்தா
ருலங்கொ டோண்முகம் மதுபுலி யுறைநெறி யுழையில்.
1.14.8
762 மாதி ரத்துறை கேசரி நிகர்முகம் மதுதம்
பூத ரப்புய மசைதரப் புளகிதத் தோடுங்
காது செங்கதிர் வேல்வலக் கரத்திடை கவின
வீதி வாய்வரக் கண்டது பெருவரி வேங்கை.
1.14.9
763 கண்ட போதினில் வால்குழைத் தரியமெய் கலங்கிக்
கொண்டு மென்மெல நட்ந்துதன் பெருஞ்சிரங் குனிந்துத்
தண்ட ளிர்ப்பதத் தெரிசனைக் கெனச்சலா முரைத்துத்
தெண்ட னிட்டது வள்ளுகிர் திண்டிறற் புலியே.
1.14.10
764 நலன்பெ றுங்குறை ஷிகளினில் வந்த நாயகமே
நிலம்ப ரந்துதீன் பெருகிட வெழுந்தநீ ணிலவே
புலன்க ணின்புறக் கண்டனன் களித்தனன் பொருவில்
பலன்பெ றும்படி யாயின னெனப்பகர்ந்து ததுவே.
1.14.11
765 வந்து தெண்டனிட் டெழுந்துவாய் புதைத்துற வணங்கிப்
புந்தி கூர்தரப் போற்றிய வள்ளுகிர்ப் புலியை
மந்த ராசல் முகம்மது நனிமன மகிழ்ந்து
சந்த மென்மணிக் கரத்தினாற் சிரமுகந் தடவி.
1.14.12
766 இன்று தொட்டிவ ணெறியினி லுயிர்செகுத் திடுவ
தன்று வெறொரு காட்டினிற் புகுகவென் றறைந்த
மன்ற றுன்றிய முகம்மதின் மலரடி வணங்கி
நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை.
1.14.13
767 படுகொ லைப்புலி மெய்யுறப் பணிந்திவர் பாதத்
தடிவ ணங்கிய காரண வதிசய மதனா
லுடைய வன்றிருத் தூதரே யுண்மையென் றுன்னித்
திடமு டைத்தநெஞ் சாயின ரறிவினிற் றௌிந்தோர்.
1.14.14

புலி வசனித்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 14-க்குத் திருவிருத்தம்...767
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.15. பாந்தள் வசனித்த படலம்

768 வேங்கை போயபின் வள்ளலு மனைவரும் விரைவிற்
றாங்க ருஞ்சுமை யொட்டகம் புரவியுஞ் சாய்த்து
நீங்க ரும்பரற் கானையா றுகளையு நீந்தி
யோங்க லுஞ்சிறு திடர்களுங் கடந்துட னடந்தார்.
1.15.1
769 துன்று மென்மதி முகந்துலங் கிடவெகு தூரஞ்
சென்ற பிற்றையிங் கிவர்களி லொருவர்செப் பினராற்
குன்று தோன்றுவ ததன்கிழக் கொருகுவ டடுப்ப
வன்றி றற்கொடும் பாந்தளுண் டவண்வழிக் கெனவே.
1.15.2
770 பாந்த ளொன்றுள தெனுமொழி செவிபுகப் பசுந்தேன்
மாந்தி வண்டிசை பயிலுமொண் டார்ப்புய வள்ளல்
கூந்தன் மாவுடன் பின்னிட வருகெனக் குழுவை
நீந்தி முன்னிட நடந்தனர் கானிடை நெறியின்.
1.15.3
771 சீத வொண்புனற் குட்டமுந் துடவையுஞ் செறிந்த
பாதை நீந்தியங் கொருகுவ டடியினிற் படரக்
கோது கோடைமா ருதமுயிர்த் துணங்குகுன் றனைய
தீது றுங்கொலைப் பாந்தளைக் கண்டனர் திறலோர்.
1.15.4
772 கண்க ளக்கினிக் குவையெனப் பொருதிசை கதுவ
மண்க ளெங்கணு மிருளுற நச்சுமா சுமிழ்ந்து
விண்கொ ளும்பிறைக் கீற்றென வெள்ளெயி றிலங்கப்
புண்கொ ளுங்கடை வாய்கவை நாவிடை புரள.
1.15.5
773 புள்ளி வட்டவெண் பரிசைக ளெனவுடல் போர்ப்பத்
தள்ளி வாலசைத் திடுதலிற் றரையிடம் பிதிர்த்திட்
டள்ளி விட்டெறிந் தெனத்திசை திசைதுக ளடைய
விள்ள ருஞ்சிரச் சூட்டொரு கதிரினும் விளங்க.
1.15.6
774 கண்டு தம்மனத் திடையினி லொருபயங் கரஞ்சற்
றுண்ட தில்லைகொ லென்னவந் துதித்தவந் நொடிக்கு
ளண்டர் போற்றிய முதலிறை யவன்றிரு வருளாற்
கொண்டு சத்தமொன் றெழுந்தது குவலயங் குலுங்க.
1.15.7
775 முகம்ம தேயும தடியிணை காணவிவ் வழியி
னிகரில் வாளர வடைந்தது பயங்கர நினையா
தகம கிழ்ந்திடச் செலுமென வரசர்கோன் களித்துப்
புகர றத்தினி நடந்தடுத் தனர்புயங் கனையே.
1.15.8
776 இரந்து மூச்சொடுங் கிடந்தகட் செவிதலை யெடுத்து
விரிந்தெ ரிந்தகட் கடையினான் முகம்மதை விழித்துத்
தெரிந்து நோக்கிநம் மிறையவன் றூதெனத் தௌிந்து
வருந்து துன்பமின் றொழிந்தன மெனமகிழ்ந் ததுவே.
1.15.9
777 மலைகி டந்துயர்ந் ததையென விரிந்தவாய் பிளந்து
தலையெ டுத்துநா விரண்டினா லொருசலாஞ் சாற்றி
நிலைய சைந்தொளி நெட்டுடல் குழைந்திட நௌிந்து
பலபொ றிப்படந் தரைபடப் பணிந்துபின் பகரும்.
1.15.10
778 கோல வார்கழற் குரிசில்நும் மடிக்கொழுங் கமலத்
தால னேகமென் போலஃறி ணைக்கொடுஞ் சாதி
சீல மேவிய பதமுறு மென்பதைக் தௌிந்தெக்
காலங் காண்குவ னெனக்கிடந் தனனெடுங் காலம்.
1.15.11
779 பிறந்த நாட்டொடுத் திற்றைநாள் வரைக்குநும் பெயரை
மறந்தி ருந்தநா ளறிகில னினைக்கிலென் மனத்தி
லிறந்தி டாமுன மின்றுகண் டிடும்பல னெனைப்போ
லறந்த வம்புரிந் தவர்களும் பெறுவதற் கரிதால்.
1.15.12
780 ஆதி நாயகன் றிருவொளி வினிலவ தரித்த
வேத நாயக மேயுமைக் கண்டதால் விளைத்த
பாத கம்பல தவிர்த்துமுற் பவங்களை யறுத்துத்
தீதி லாதநற் பதவியும் படைத்தனன் சிறியேன்.
1.15.13
781 என்று கூறியிம் மலரடி யிணையினை யௌியே
மென்று காண்குவ மோவென வயர்ந்துடைந் தெண்ணி
யென்று மின்றுபோற் காண்குவ மெனமனத் திருத்தி
யென்றுந் தீன்பயிர் விளங்குற வாழியென் றிசைத்தே.
1.15.14
782 பணிப ணிந்தெனக் கெவைபணி விடையெனப் பகர
வணிய ணிந்தெனச் செவியுறக் கேட்டதி சயித்து
மணிகி டந்தொளிர் புயவரை விம்முற மகிழ்ந்தார்
திணிசு டர்க்கதிர் வேல்வல னேந்திய திறலோர்.
1.15.15
783 பொருப்பி டத்தினு மடவிக ளிடத்தினும் புகுந்து
விருப்பு றும்படி வாழ்வதல் லதுநெறி மேவி
யிருப்பி னின்வயி னிடர்வரு மெனவெடுத் திசைத்தார்
சுருப்பி ருந்துதே னிடைதவழ் தொடையணி தோன்றல்.
1.15.16
784 ஒடுங்கித் தெண்டனிட் டுறைந்திட மிகழ்ந்தொரு மருங்கி
னெடுங்கி ரிப்புறந் தவழ்ந்தென வுடறனை நௌித்து
மடங்கல் வெங்கரி கொடுவரி யடவியின் மறைந்து
நடுங்கி டத்தனி போயது பெருந்தலை நாகம்.
1.15.17
785 நாக முற்றதுங் கிடந்ததும் பாதையி னயினார்
பாக முற்றுமெய் வணங்கிநன் மொழிசில பகர்ந்து
போகை யென்றதிற் போயதும் புதுமைகொ லெனவே
யாக முற்றதி சயித்தன ரனைவரு மன்றே.
1.15.18

பாந்தள் வசனித்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 15-க்குத் திருவிருத்தம் - 785
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.16. இசுறா காண் படலம்

786 எரிந்த கட்பொறி யரவுவந் துறையிட மிவணே
யருந்த வப்பொருண் முகாது மடையிட மிவணே
தெரிந்து காண்பதற் கிவையிவை குறியெனச் சேர்த்தி
விரிந்த தம்பெருங் குழுவுட னடந்தனர் விறலோர்.
1.16.1
787 பரல்ப ரந்திடந் துகளெழப் படுமுனைத் திரிகோட்
டிரலை மென்பிணை கன்றுடன் றிரிந்தகா னேகி
விரித லைச்சிச்று முள்ளிலைச் செங்குலை விளைந்த
கரிய மென்கனி சொரிதரும் பொழிலையுங் கடந்தார்.
1.16.2
788 ஈத்தம் பேரட விகள்பல கடந்தய லேகப்
பூத்த மென்மலர் செறிதரு பொழில்புடை சூழ
வாய்த்த நற்குடிப் பெயருடன் வழியிடை நெடுநாட்
காத்தி ருந்தபண் டிதன்மனை தெரிதரக் கண்டார்.
1.16.3
789 வேறு
இரைதரு வாரி யேழு மெடுத்துவாய் மடுத்துண் டோடிச்
சொரிதரு மேகம் போலச் சொல்லுமெய்ம் மறைக ளென்னுங்
கரையில்வா ருதியை யுண்டு கருத்தினி லிருத்தி யார்க்குந்
தெரிதர வறிவு மாரி பொழிந்திடத் திறகும் வாயான்.
1.16.4
790 ஆதமே முதலீ றாக வருநபி யவர்கட் கெல்லாம்
பேதமொன் றின்றி வந்த பெருவர மறையின் றீஞ்சொ
லோதிய முறைமை யந்தா ளொழுகிய வொழுக்க மிந்நாண்
மாதவர் குறிப்புந் தேர்ந்து வகுத்தெடுத் துரைக்கும் வாயான்.
1.16.5
791 பல்வித நூலிற் றேர்ந்து பலசம யங்க ளாகச்
செல்வழி யனைத்து நோக்கிச் சென்றுமட் டறுத்துத் தேறிக்
கல்பினி லிருத்தி மாறாக் கதிப்பதி சேர்க்குந் தூய
நல்வழி தெரிந்து காண நடுவெடுத் துரைக்கு நாவான்.
1.16.6
792 அறிவுநல் லொழுக்கம் வாய்மை யன்புறு மிரக்க மிக்கப்
பொறைதவங் குணம்வ ணக்கம் பொருவிலா சார மேன்மைத்
திறநிறை யருணன் மானந் தேர்ச்சியிற் றௌிந்த கல்வி
குறைவறப் பெருகி நாளுங் குடிபுகுந் திருந்த நெஞ்சான்.
1.16.7
793 தருந்தரு வனைய செங்கைத் தனபதி யிசுறா வென்னும்
பெருந்தவ முடைய வள்ளல் பிறங்கொளி தவழு மாடத்
திருந்தன னிருந்த போதி லெழுகதிர் துகளான் மூடிப்
பரந்திடும் வரவு நோக்கிப் பார்த்ததி சயித்து நின்றான்.
1.16.8
794 மெய்த்தவம் பொருந்து மக்கா புரத்துறு வேந்தர் கொல்லோ
பத்திவிட் டொளிர்ஷா மென்னும் பதியுடைத் தலைவர் கொல்லொ
முத்தவெண் மணியிற் றோன்று முகம்மதின் வரவு கொல்லோ
வெத்தலத் தவரோ விங்ங னெதிர்ந்தவ ரென்று நின்றான்.
1.16.9
795 ஒட்டகம் புரவி தூர்த்திட் டுறுதுக ளுதயன் மாய
மட்டறப் பொலிந்து தோன்றி வருமவர் தமக்கு மேலா
யிட்டதோர் கவிகை மேக மெழிலுறத் துலங்கக் கண்டு
கட்டிய மாலைத் திண்டோள் கதித்தெழப் புளகம் பூத்தான்.
1.16.10
796 வேதவா சகத்தி லீசா விளம்பிய வசனந் தேர்வான்
கோதறு கரிய மேகக் குடைநிழ றொடர்ந்து வந்த
பாதையோர் தம்மை நீங்காப் பரிவினை நோக்கி நோக்கித்
தீதறு முகம்ம தென்னத் தௌிந்தனன் செவ்வி யோனே.
1.16. 11
797 கருந்தடங் கவிகை வள்ளல் வரவுகண் களித்து நோக்கி
யருந்தவம் பெற்றே னின்றென் றருகிருந் தவனைக் கூவி
விருந்திவ ணருந்தி நந்தந் துடவையில் விடுதி யாக
விருந்தவ தரித்துப் போமி னெனவெடுத் தியம்பு கென்றான்.
1.16.12
798 என்றவ னுரைப்பக் கேட்டங் கெழுந்தனன் பாதை யோர்முன்
சென்றனன் விரைவின் வந்த தேசிகர் தம்மை நோக்கி
மின்றவ ழலங்கல் வேலிர் சோலைவாய் விடுதி யாகிச்
சொன்றியுண் டெழுக வென்னச் சொல்லினன் முதியேர னென்றான்.
1.16.13
799 விருந்தெனு மாற்றங் கேட்டு மெய்மகிழ்ந் தராகம் பூரித்
திருந்தனர் விரிந்த காவி லிடபமத் திரிமா வெல்லா
மருந்தின குளகு நீருண் டவ்வயி னுறைந்த பின்னர்
திருந்திய பண்ட மியாவுஞ் செறித்தொரு புறத்திற் சேர்ந்தார்.
1.16.14
800 மறந்தலை மயங்குஞ் செவ்வேற் கரமுகம் மதுதாம் வந்தங்
குறைந்திடத் தருக்க ளியாவுந் தளிர்த்தன வொண்பூக் கோட்டி
னிறைந்தன வீன்ற பைங்காய் நெருங்கின கனிக ளெங்குஞ்
சிறந்தன தேம்பெய் மாரி சிந்தின திசைக ளெல்லாம்.
1.16.15
801 மறைதெரி இசுறா வென்போன் முகம்மது தமக்கன் பாக
முறைவிருந் தளிக்கு முன்ன முகிழ்நனி தருக்க ளெல்லா
நிறைமலர்த் தலைகள் சாய்த்து நீண்டமென் றளிர்க்கை தன்னால்
வெறிநறாக் கனிகள் சிந்தி விருந்தளித் திட்ட வன்றே.
1.16.16
802 விரிபசுந் டோடு விண்டு மென்முகை யவிழ்க்கும் பூவி
னரியளி குடைந்து தேனுண் டகுமதின் புகழைப் பாட
மரகதக் கதிர்விட் டோங்கு மணிச்சிறை விரித்து நீண்ட
கரைகளிற் றருவி னீழற் களிமயி லாடு மன்றே.
1.16. 17
803 மடலவிழ் வனச வாவி வைகையம் பதிக்கு வேந்த
னடலுறை யபுல்கா சீம்தம் மருங்குடிச்செல்வம் போலப்
புடைபரந் தலர்கள் சிந்திப் பொங்குதேன் கனிக டூவிச்
சுடரவன் கதிர்க டோன்றாச் சோலைவாய் விளங்கிற் றன்றே.
1.16.18
804 மருப்புகுஞ் சோலை வேலி நீழலில் வரவு மொட்டார்
நெருப்புநீ ருப்பென் றாலு நினைத்தெடுத் தளிக்கி லாதார்
பொருப்பென வுயர்ந்த செந்தேம் பொழிலிடைப் புகுந்து நந்தம்
விருப்பொடு மிருப்பச் செய்தார் முகம்மதின் வியப்பீ தென்பார்.
1.16.19
805 சீதநீர் குடைவா ராடிச் செழும்பொழின் மலர்கள் கொய்வார்
கோதறு கனிக டுய்ப்பார் கொழுந்தழை விலங்குக் கீய்வார்
போதினி லமளி செய்வார் பூத்தொடுத் தணிந்து கொள்வார்
மாதவர் முகம்ம திங்ஙன் வரப்பெறும் பலனீ தென்பார்.
1.16.20
806 கனிபல வருந்தித் துண்டக் கரும்படு சாறு தேக்கிக்
குனிதலை யிளநீ ருண்டு கொழுமடற் றேனை மாந்தி
நனிவயி றார்ந்தோம் பொய்யா நாவினன் மனையிற் புக்கி
யினியெவர் விருந்துண் பாரென் றெழின்முக மலர்ந்து சொல்வார்.
1.16.21
807 இன்னண மியம்பிக் காவி லினிதுறைந் திருக்குங் காலைச்
சென்னெறி வேத நன்னூ றௌிந்தறி யிசுறா வென்போன்
றன்மனை விருந்துண் டேக வருகவென் றிருவர் சார்ந்திம்
மன்னவர் தம்மைப் போற்றி மனங்களி குளிர்ப்பச் சொன்னார்.
1.16.22
808 மடிவுறு மனத்த னாகி வருமபூ ஜகுலென் றோதுங்
கொடியவன் கவட மாயோர் சூழ்ச்சியைக் குறித்து நீண்ட
கடிகமழ் சோலை வாயின் முகம்மதைச் சரக்குக் காக்கும்
படியிருத் திடுக யாரும் பரிவுட னெழுக வென்றான்.
1.16.23
809 வஞ்சக னுரைத்த மாற்றங் கேட்டபூ பக்கர் மாழ்கி
நெஞ்சகம் புழுங்கிச் சென்றார் நிரைமலர்த் தேனை மாந்திச்
சஞ்சரி கங்கள் பாடுந் தண்டலை நீங்கி யாரும்
விஞ்சையு மறையுந் தேர்ந்த வேதியன் மனையிற் புக்கார்.
1.16.24
810 மூதுரை வழிவ ழாதோன் முன்றில்வந் தவர்க ளோடுஞ்
சீதவொண் கவிகை நீழற் காண்கிலன் றெருமந் தேங்கிப்
பாதக ரிவரியா ரென்றன் பவக்கட றொலைய வந்த
மாதவ ரிலையென் றெண்ணி வாடிய மனத்த னானான்.
1.16.25
811 மறந்திகழ் வேலீ ரிங்கு வந்தவ ரன்றிக் காவி
லுறைந்தவ ருளரோ வென்ன வுறுவினைத் துடரை நீக்கித்
துறந்தவ னுரைப்பப் பாவம் பகையொரு தொகையாய்க் கூடிப்
பிறந்தபூ ஜகுலென் றோதும் பெயரினன் பெயர்ந்துஞ் சொல்வான்.
1.16.26
812 வடுக்கதிர் வேற்க ணங்கை மனைப்பொருட் பண்ட மற்று
மடுக்கிய துணர்ப்பைங் காவி லகுமதென் றிருவ னல்லா
லெடுக்கருந் த்வத்தின் மேலோ ரியாவரு மடைந்தோ மென்ன
நடுக்கமொன் றின்றிச் சொன்னா னஞ்சுறும் வெஞ்சோ லானே.
1.16.27
813 தீயினுங் கொடிய மாற்றஞ் செவிமடற் றுளையி லோடிப்
போயது சிந்தை யூடு புகைந்திடப் புழுங்கிப் பொங்கி
வாயினீர் வறந்து கண்ணில் வளர்தழற் கொழுந்து காட்டிக்
காய்சின வேறு போன்றான் கவலுநூற் புலமை யோனே.
1.16.28
814 சினத்தினை யடக்கித் தேறாச் சிந்தையைத் தேற்றி நந்த
வனத்தினி லிருந்த செவ்வி முகம்மதைக் கொணர்க வென்ன
நினைத்தவ னுரைப்பக் கேட்டங் காரிது நெடிதிற் புக்கிக்
கனைத்துவண் டிருந்த தண்டார் ஹபீபுதம் மிடத்திற் சார்ந்தான்.
1.16.29
815 மங்குலங் கவிகை யீர்நம் வரவினைக் காணான் சீற்றச்
செங்கதிர் தெறிக்கக் கண்கள் சிவந்தனன் சினந்த வேகம்
பொங்குமா தவத்தோன் கோபப் புரையற வேண்டு மல்லா
லெங்களைக் காக்க வேண்டும் படியெழுந் தருள்க வென்றான்.
1.16.30
816 சிலைவய வரியா ரீது செப்பிய மாற்றங் கேட்டு
மலையெனும் புயங்க ளோங்க மகிழ்ந்துபுன் முறுவல் கொண்டு
கலைவல னிசுறா வென்னுங் காவலன் களிப்பச் சேந்த
விலைமலி கதிர்வே லேந்தி முகம்மது மெழுந்தா ரன்றே.
1.16.31
817 சலதரந் திரண்டு நீங்காத் தனிக்குடை நிழற்றப் சோதிக்
கலைமதி பொருவா மெய்யிற் கதிர்புடை விலகி மின்ன
நிலமிசை வழிக்குக் காத மான்மத நிறைந்து வீச
மலரடி படிதீண் டாது மாதவன் மனையிற் புக்கார்.
1.16.32
818 தொட்டபாழ்ங் கிணறுண் டாங்கு துவலைநீ ரசும்புந் தோன்றா
திட்டமுள் ளிலையீந் தங்ங னிருந்திறந் தனேக காலக்
கட்டையொன் றுளது தன்பால் ஹபீபுமெய் கவின்க னிந்து
விட்டொளி பரப்பத் தோன்றி விரைவின்வீற் றிருந்தா ரன்றே.
1.16.33
819 குறைபடுங் கூவல் கீழ்பாற் குமிழிவிட் டெழுந்து மேல்பா
னிறைபட் பொங்கி யோங்கி நிலம்வலஞ் சுழித்திட் டேறி
யிறையவன் றூதர் செவ்வி யிணைமலர்ப் பதத்திற் றாழ்ந்து
துறைதொறும் பெருகும் வெள்ள நதியெனத் தோற்றிற் றன்றே.
1.16.34
820 இருந்தது தொல்லை நாளி லிறந்தபே ரீந்தின் குற்றி
கரிந்திடம் பசந்து செவ்வெ கதித்தெழக் குருத்து விட்டுச்
சொரிந்தநெட் டிலைவிட் டோங்கித் துடர்துணர் தோறும் பாளை
விரிந்துபூச் சிந்திக் காய்த்து மென்கனி சிதறிற் றன்றே.
1.16.35
821 கோதறப் புனலுண் டாகிக் குற்றியுந் தளிர்ப்பக் கண்ட
மாத வன்மனமுங் கண்ணு மகிழ்வொடு களிப்புப் பொங்கிச்
சீதரக் கவிகை வள்ளன் முகம்மதின் சேந்த செவ்வி
பாததா மரையிற் றாழ்ந்து பைந்துணர் மௌலி சேர்த்தான்.
1.16.36
822 மறைதெரி யறிவ னீதி முகம்மதி னடியைப் போற்றி
யிறையவன் றூத ரேயிவ் விருநிலத் தரசர் கோவே
குறைபடா திருந்த வெற்றிக் கொழுமணிக் குன்ற மேயா
னறைவகேட் டருள்க வென்ன வடுத்துவிண் ணப்பஞ் செய்தான்.
1.16.37
823 இந்நிலக் திருந்தேன் பன்னா ளிறையவன் றூத ரான
மன்னவ ரீசா விங்ஙன் வந்தன ரவரைப் போற்றிப்
பொன்னடி விளக்கி யின்னம் புவியிடை நபிமா ருண்டோ
வென்னலு மென்னை நோக்கி யெடுத்தினி துரைக்க லுற்றார்.
1.16.38
824 அருந்தவத் தவனே யாதி யருளொளி யவனி னீங்கா
திருந்துள தாத மெய்யி னிடத்தவ தரித்துத் தொல்லை
வருந்தலை முறைக ளெல்லாம் வந்தினி மேலும் பின்னாட்
பெருந்தலம் புரக்க வல்லே நபியெனப் பிறக்கு மன்றே.
1.16.39
825 மக்கமா நகரில் வாழும் அப்துல்லா மதலை யாகித்
திக்கெலாம் விளக்குஞ் செங்கொல் தீனிலை நிறுத்தி வேறு
பக்கமுன் மதங்க ளென்னும் பகையறுத் தரிய காட்சி
மிக்கவ ராகு மற்ற நபிகளின் மேன்மை யாமால்.
1.16.40
826 புவியின் முகம்ம தென்னப் பொருந்திய பெயருண் டாகு
மவரலா னபிபின் னில்லை யவரும்மத் தானோர்க் கெல்லாம்
பவமறுங் கதியுண்டாகும் படைப்புணும் வானோ ரெல்லாஞ்
சுவைபெறுங் கலிமாச் சொல்வ ரென்னவே சொல்லி னாரால்.
1.16.41
827 ஆரணக் குரிசி லீசா வுரைத்தபி னவரைப் போற்றி
பூரண மதியம் போலும் புகழ்முகம் மதுவென் றோதும்
பேரறி வாள ரெந்நாட் பிறப்பரென் றிசைப்பக் கேட்டுச்
சீர்பெற வறுநூ றாண்டு செல்லுமென் றிசைத்தா ரன்றே.
1.16.42
828 அம்மொழி கேட்டுக் காண்ப தரிதென வௌியேன் சிந்தைச்
செம்மலர் கருகத் துன்பத் தீயினிற் குளித்தோன் றன்னை
வம்மெனத் திருத்திச் செவ்வி முகம்மதைக் காணு மட்டு
மிம்மரச் சோலை வாயி னிருமிறை யருளா மாதோ.
1.16.43
829 பலன்பெறு முகம்ம திங்ஙன் ஷாமெனும் பதியை நாடி
நலம்பெற வருவர் நீரு நன்குறக் காண்பி ரென்னத்
தலம்புக ழீசா கூறத் தாழ்ச்சிசெய் தடியே னெந்த
நிலந்தனிற் காண்பே னென்ன நிகழ்த்தின னிகழ்த்தும் போதில்.
1.16.44
830 இந்நெறி வந்து முன்னா ளிறந்தவீந் தடியிற் றோன்றப்
பன்மலர் சொரிந்து காய்த்துப் பழமுதிர்த் திடும்பா ழூற்று
முன்னிடப் பெருகி யோடு முறைமைகண் டறிந்து நீரந்
நன்னெறிக் குரிசிற் கென்றன் சலாமையு நவிலு மென்றார்.
1.16.45
831 இன்னண மியம்பி யாதி யிடத்திரந் தரிதா யென்றன்
றன்னுயிர் நிற்கச் டெய்து சார்ந்தன ரவணி லீசா
மன்னவ கேட்டேன் கண்டேன் மணத்தெனை யெடுத்த டக்கிப்
பின்னெழுந் தருள்க வென்ன வுரைத்தனன் பிறங்கு தாரான்.
1.16.46
832 வேறு
மாலை தாழ்புய முகம்மது கேட்டுள மகிழ்ந்த
காலை யவ்வயி னுறைந்தவேற் காளையர்க் கெல்லாம்
வேலை வாருதி யமுதென விருந்தெடுத் தளித்தான்
சோலை முக்கனி தேனொடும் பாகையுஞ் சொரிந்தே.
1.16.47
833 ஆகங் கூர்தர விருந்தளித் தவரவர் கரத்திற்
பாகு பாளிதம் வெள்ளிலைச் சுருளொடும் பகிர்ந்து
தேக மெங்கணுஞ் சந்த்னக் குழம்பினாற் றீற்றி
யோகை கூர்தர நன்மொழி யெடுத்தெடுத் துரைத்தான்.
1.16.48
834 தெரியு மெய்மறைக் குரியவ விச்செக தலத்தில்
வரிசை நந்நபி முகம்மதை யொருநொடிப் பொழுதும்
பிரியல் வாய்மொழி மறுத்திட லிப்பெரும் பேறுக்
குரியர் நீரல தெவரென அபூபக்கர்க் குரைத்தான்.
1.16.49
835 கரிக ருங்குழல் வெண்ணகைப் பசியமென் றோகை
வரிவி ழிக்கதி ஜாமனை மைசறா தன்னை
யருகி ருத்திநன் மொழிபல வெடுத்தெடுத் தறைந்தான்
விரியு நூற்கடற் செவிமடுத் துண்டமெய்த் தவத்தோன்.
1.16.50
836 வரிசை வள்ளற னிணையடிச் செழுமல ரதனைச்
சிரசு றப்பணிந் திருவிழி மனிகளாற் றேய்த்து
மரும லர்க்குழன் மனையவர்க் குறுமொழி வகுத்துத்
தரையி னிற்புகழ் பெறும்படி யணைமிசைச் சாய்ந்தான்.
1.16.51
837 துணைவ ரும்முயிர்த் துணைவியும் புதல்வருஞ் சூழப்
பணர்வி ரிந்தன கேளிரும் பாங்கினி லிருப்ப
மணமெ ழும்புய வள்ளலை யடிக்கடி வாழ்த்தி
யணையின் மீதினிற் சாய்தலும் விண்ணில கடைந்தான்.
1.16.52
838 பொருத்து மெய்மொழி மாதவ னிறந்தவப் போதிற்
கருத்த ழிந்திரு கண்கள்முத் துகுத்திடக் கலங்கி
வருத்த முற்றவர் சிலரணி வயிறலைத் தலறிச்
சிரத்தி னிற்கதுப் பறப்பறித் தெறிந்தனர் சிலரே.
1.16. 53
839 சிந்தை தேங்கிட வழுதவர் தங்களைத் தேற்றி
மைந்த ரியாவருந் திரண்டெழு மணத்துட னெடுத்துக்
கந்த மென்மலர் கமழ்ந்திட வடக்கினர் ஹபீபு
மந்த மில்லவன் றனைப்புகழ்ந் தேத்தின ரன்றே.
1.16. 54
840 முதிய கேள்வியன் சடங்குள தெவ்வையு முடிப்பக்
கதிர வன்கதி ரொடுக்கிமேற் கடலினிற் சார்ந்தான்
மதிவிண் ணெய்திட வசிகரு முகம்மது மகிழ்வா
யுதிரு மென்மலர்ச் சோலைபுக் குறங்கின ரன்றே.
1.16.55

இசுறா காண் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 16-க்குத் திருவிருத்தம்...840
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.17. கள்வரை நதி மறித்த படலம்

841 பருதி வானவன் செங்கதிர் பரந்திடத் துயின்றோ
ரெருது வாம்பரி யொட்டகம் பரந்திட வெழுந்து
முருகு லாவிய பொழிகடந் தருநெறி முன்னித்
திருகு வெஞ்சினக் களிறென நடந்தனர் செறிந்தே.
1.17.1
842 சிறுபொ ருப்படர்ந் தடவிக ளுறைநெறி சேர்ந்து
வறுப ரற்படர் பாலைக ணீந்திமுள் வகிர்ந்திட்
டறல்கொ ழித்திடுங் கானையா றுகள்கடந் தகன்று
குறைவில் சந்தகில் செறிநெடு வரைகுறு கினரே.
1.17.2
843 பள்ள மும்பசுஞ் சோலையும் வெண்மணற் பரப்பு
முள்ள தோரிட மவ்வையி னுறைந்தன ருரவோர்
வள்ள றம்மிடத் தொருவன்வந் திவ்வரை வனத்திற்
கள்ள ருண்டெனு மசுகையுங் கண்டன னென்றான்.
1.17.3
844 இருந்த வவ்வையிற் கள்ளருண் டெனுமொழி யிசைப்பத்
தெரிந்து கண்டன மென்றனர் சிலர்சிலர் திகைத்தார்
விரிந்த செங்கதி ரோனுமேற் றிசையினிற் புகுந்தான்
வருந்த லென்றவர்க் குரைத்தனர் புகழ்முகம் மதுவே.
1.17.4
845 சோர ருண்டென மனந்துணுக் குறல்சுடர் வரையி
னேர தாயொரு நதியுள நிலங்சுழித் தெழுந்து
கோர மாய்வருங் கள்ளருங் குறுகிடா ரெனவே
காரெ ழுங்குடை முகம்மது கனவுகண் டனரே.
1.17. 5
846 கனவின் செய்தியை யவரவர்க் குரைத்திடுங் காலைத்
தினக ரன்குணக் கெழுந்தன னதிசுழி கிளறி
வனம டங்கலும் வகிர்ந்தெடுத் திருகரை வழிந்திட்
டினம ணிக்கருங் கடல்வயி றிடைமடுத் ததுவே.
1.17.6
847 இருந்த பேரனை வருமெழுந் திருநதிக் கரையிற்
பொருந்தி நன்னெறி யீதென நடக்குமப் போதில்
வருந்திக் கள்வரு மறுகரை யிடத்தினின் மறுகித்
திருந்த நோக்கினுங் காண்கிலா தெழுந்தன திரைகள்.
1.17.7
848 ஆறு வந்தது புதுமைகொ லெனவதி சயித்து
மாறு கொண்டவர் திரண்டொரு பெருவரை முகட்டி
லேறி நின்றுதே சிகர்தமை நோக்கலு மெழுந்து
மீறி வெண்டிரை புரட்டிமீக் கொண்டலு வெள்ளம்.
1.17.8
849 கள்ளர் வந்தவ ணிருந்தன ரெனக்கெடி கலங்கி
யுள்ள நொந்தனம் முகம்மதிங் குறுபொருட் டதனால்
வெள்ளம் வந்தது மறித்தது காணென வியந்து
வள்ள லைப்புகழ்ந் தார்வழி நடந்தனர் வசிகர்.
1.17.9
850 தஞ்ச மீங்கிவ ரெனப்புகழ்ந் தவர்தமை நோக்கி
யஞ்ச லாதுநின் றபுஜகில் மனத்தினி லழன்று
விஞ்சை யான்முகம் மதுபடித் திவணிடை விளைத்த
வஞ்ச னைத்தொழி லலதுவே றிலையென மறுத்தான்.
1.17.10
851 படிறு ளக்கசட் டபுஜகில் பகர்ந்திடு மொழிகேட்
டடல பூபக்கர் மனத்தடக் கினுமடங் காதாற்
கொடிய தீவினைக் குரியவர் சொல்லினைக் குறித்தோர்
கெடுவ ரென்பதற் கையமி லெனக்கிளத் தினரே.
1.17.11
852 கரிந்த புன்மனச் சிறியவர் கழறிய கொடுஞ்சொற்
றெரிந்த மேலவர் செவிக்கிடா ரென்னுமத் திறம்போல்
விரிந்த கார்க்குடை நிழலிடை வரைப்புயம் விளங்க
வருந்த வப்பொருண் முகம்மது நடந்தன ரன்றே.
1.17.12
853 சிந்து நன்மணிக் கதிரெழத் திரைக்கரத் தெறிந்து
வந்த மாநதிக் கணியெனு மொருகரை மருங்கிற்
கந்த மென்மலர் செறிதருங் காவகங் கடந்து
புந்தி கூர்தர மக்கிக ளனைவரும் போனார்.
1.17.13
854 சீத வொண்புனற் செழுமல ரோடையிற் செறிந்த
கோதில் வெண்சிறைப் பெடையொடுங் குருகின மிரியப்
பாதை போந்தனர் ஷாமெனுந் திருப்பெயர்ப் பதிக்கோர்
காத மாமென விறங்கினர் கடிமலர்க் காவில்.
1.17.14
855 ஒட்ட கத்திர ளனைத்தையு மொழுங்குறா நிரைத்துக்
கட்டி வாம்பரித் திரளையுஞ் சேர்த்தனர் கடிதின்
விட்ட பாசறை யிடங்களி னிவைவியப் பெனவே
செட்டர் சூழ்தர விருந்தனர் செழுமலர்க் காவில்.
1.17.15
856 சோலை வாயொரு வாகன மெனச்சுடர் திகழக்
கோல வார்கழற் குறைஷிகள் குழுக்கண நாப்பண்
வேலை வெண்டிரை முகட்டெழு மதியினும் வியப்ப
மாலை தாழ்புய முகம்மது வந்துவீற் றிருந்தார்.
1.17.16
கள்வரை நதி மறித்த படலம் முற்றிற்று
ஆகப் படலம் 17க்குத் திருவிருத்தம்...856

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.18. ஷாம் நகர் புக்க படலம்

857 காவ கத்திலன் றிருந்திருள் கடிந்துவெங் கதிரோன்
மேவு வெண்டிரைக் கடன்முகட் டெழுதலு மேலோர்
தாவு வெம்பரி யொட்டகைத் திரளொடுஞ் சாய்த்தே
யேவி லங்கையி லேந்திய வேந்தலோ டெழுந்தார்.
1.18.1
858 கடிகொண் மென்மலர்த் துடவையுங் கருஞ்சுரும் புதைப்ப
வடியுந் தேன்மலர் வாவியும் வளர்கழைக் குலம்போ
னெடியக் பச்சிலைக் கரும்புடைக் கழனியு நிறைந்த
கொடியி லைச்சிறு கேணியுங் குறுகிட நடந்தார்.
1.18.2
859 கூய்த்தி ரண்டளி யினங்குடைந் துழிநறாக் குளித்துத்
தோய்த்த பொற்குவ டெனவிரு வரைப்புயந் துலங்க
வாய்த்த பேரொளி முகம்மது வருவது நோக்கிக்
காய்த்தி ரட்குலை சாய்த்துநின் றிறைஞ்சின கதலி.
1.18.3
860 வேந்தர் வேந்தவ ணருகுற வடைதலும் விரிந்த
மாந்த ருச்சினை யிடைபழத் தொடுந்துயல் வருதற்
றேந்த ருங்கனி யுண்டெழுந் தருளெனச் செறிந்து
சாய்ந்த மென்றளிர்க் கரத்தினா லழைப்பதொத் தனவால்.
1.18.4
861 தேக்கும் வெண்டிரைப் புவிக்கொரு தனிச்செங்கோல் செலுத்திக்
காக்கு நாயக முகம்மது வரும்வழி கவின
வாக்கும் பொற்குட நனிநிரை நிரையணி யணியாய்த்
தூக்கி வைத்தபோன் முட்புற நறைக்கனி தூங்கும்.
1.18. 5
862 வெள்ளி வெண்மலர் சொரிந்தன பாளைவாய் விரித்துத்
தெள்ளு செம்பொனாற் சமைத்தபோற் செழுங்குலை தாங்கி
வள்ள லார்வரு னெறியலங் கரிப்பென வயங்கும்
புள்ளி வண்டொடு பசுமடல் விரிதலைப் பூகம்.
1.18. 6
863 விரிந்த மென்மலர்க் கொம்பினி லளியினம் வீழச்
சரிந்து மென்றுக ளுதிர்வது வானவர் தலத்தி
லிருந்த பொன்னெடுத் தருநபி யிணைமல ரடியிற்
சொரிந்து விட்டது போல்வயின் வயின்றொறுந் தோன்றும்.
1.18.7
864 தெறித்த முத்தொளிர் கழனிவா னகமெனச் சிறப்பத்
தறித்த பூங்கரும் பாட்டுசா றடுபுகை தயங்கிக்
குறித்த சோலைமேற் றவழ்வது குரைகட லேழும்
பறித்த ருந்திய கருமுகிற் படல்மொத் துளதால்.
1.18.8
865 பாட லத்தரு நிழன்மர கதக்கதிர் படர
வாடி நிற்பன முகம்மதைக் கண்டகங் களித்து
வீடின் மெண்சிறை பட்டகண் ணனைத்தையும் விழித்துக்
கூடி நோக்குவ தொத்தன களிமயிற் கூட்டம்.
1.18.9
866 கோட்டு மென்மலர் வாசமுங் கொடிமலர் விரையுஞ்
சூட்டு நீர்மலர் நிலமலர் வாசமுந் தூர்த்துப்
பூட்டும் விற்கர முகம்மது மெய்யினிற் பொங்கிக்
காட்டு மான்மதங் காவதங் காவகங் கமழும்.
1.18..10
867 ஒரும னைப்பிறந் தொருமனை யிடத்தினி லுறைந்து
கருவ ரத்தரித் தீன்றுதன் கணவனை யிகழாப்
பெருவ ரம்புறும் பெண்கொடி யெனத்தலை சாய்த்துத்
திருவுஞ் செல்வமுந் திகழ்தரக் காண்பன செந்நெல்.
1.18.11
868 துன்னு மெல்லிதழ் வனசமும் பானலுஞ் சுரும்புண்
டின்னி சைப்பட வூட்டுதேங் குவளையு மிடையிற்
செந்நெ ருப்புநா விரித்தசே தாம்பலுஞ் செறிந்து
வன்ன மென்படம் போர்த்தபோன் றிருந்தன வாவி.
1.18.12
869 துய்ய சைவலச் சுரிகுழ றுயல்வரச் சுனைமென்
றைய லுள்ளகங் குளித்துடற் களிப்பொடுந் தனது
கையின் வெண்மலர்ப் பந்தெடுத் தெறிவது கடுப்பச்
செய்ய தாமரை மீதனஞ் சிறந்தெழுந் ததுவே.
1.18.13
870 பண்ணை வாய்ச்செழுங் கமலங்கள் செவ்விதழ் பரப்பி
யுண்ணி றைந்தமா மணியொடு மொளிர்வன வவைகள்
வண்ண வார்கழன் முகம்மது வருநெறிக் கெதிரா
யெண்ணி றந்தகை விளக்கெடுத் தேந்தின ரியையும்.
1.18.14
871 வண்டி னத்தொனி மறுத்தில மலர்சொரி வனங்கண்
முண்ட கத்தட மலர்ந்தில புள்ளொலி முழக்கந்
தொண்டை வாய்ச்சியர் குரவையே கழனிக டோறும்
பண்டி யின்றொகைக் கம்பலை மறுத்தில பாதை.
1.18.15
872 வடந்த யங்கிவம் மிதத்தெழுங் குவிமுலை மடவார்
குடைந்து நீர்விளை யாடிய வாவியுங் குறுகிப்
படர்ந்த மல்லிகை மாதுளைப் பந்தரு நோக்கிக்
கடந்தி லங்கிய ஷாமெனுந் திருநகர் கண்டார்.
1.18. 16
873 முதிர்ந்த பேரொளி முகம்மது வருநெறி முன்னி
யெதிர்ந்தி றைஞ்சுதற் கிந்நக ருறைந்திடு மரசீர்
பொதிந்த பூணொடு மேகுமி னெனக்களி பொங்கி
யதிர்ந்தி டக்கர மசைத் தல்போ லசைந்தன கொடிகள்.
1.18.17
874 மதுக்கொண் மாலிகை நாற்றிநன் மணிபல குயிற்றிச்
செதுக்கி மின்னுமிழ் தமனியத் தசும்புகள் செறித்து
விதுக்கொண் மேனிலை மென்றுகண் மாசறத் துடைத்துப்
புதுக்கு வான்றொழில் புரிந்தபோ லசைந்தபொற் கொடிகள்.
1.18.18
875 சிவந்த பாதபங் கயநபி திருநகர்ப் புறத்துக்
கவிந்த கார்க்குடை நிழலிட வருவது கண்டு
நிவந்த வெண்சுதைப் பளிக்குமே னிலைவயி னின்று
குவிந்த கைவிரித் தழைத்தபோ லசைந்தன கொடிகள்.
1.18.19
876 வேறு
இச்செக மதிற்றபதி யற்றொழிலி யற்றி
விச்சையி னமைத்துகொ லோவமரர் விண்ணி
லச்சொடுபி றந்திவ ணடைந்ததுகொ றானோ
வச்சிர மணிக்கதிர் பரப்புமணி மாடம்.
1.18.20
877 சுந்தரந பிக்குரிசின் மெய்ப்புகழ் துலங்கி
யந்தரமு மண்டபகி ரண்டமு நிறைந்து
மந்தரமி தென்றுதற வளைந்தர வழிந்து
சிந்துவ தெனச்சுதை தௌித்தமணி மாடம்.
1.18.21
878 எங்கணபி யிங்ஙன மெதிர்ந்தனர்கொ லென்னத்
திங்கடவாழ் சாளர விழிக்கடை திறந்து
பொங்கழகு நோக்குவன போலுற நிவந்த
பைங்கதிர் விரித்தொளி பரப்புமணி மாடம்.
1.18.22
879 கந்தநறும் வெண்சுதை கலந்தணி யிலங்கி
வந்துநக ரந்தனை வளைந்தமதி லாடை
யிந்தநில மெங்குமெதி ரின்றென வியந்தே
யந்தர மடங்கலு மளந்தது வளர்ந்தே.
1.18. 23
880 சீதவக ழாடையை யுடுத்தணி சிறந்தது
மோதியிட றுங்கரு முகிற்குழன் முடித்தே
யாதிமணி வாயின்முக மாகவழி யாத
மாதர்தமை யொத்தது வளைந்தமதி ளம்ம.
1.18.24
881 பந்திபெற நின்றபட லந்தனி யெழுந்தே
யந்தர நடந்துதிர ளாரமணி வாரிச்
சிந்துதிரை வாரியற வுண்டது திரண்டு
வந்துநனி மஞ்சடை கிடக்குமதி ளன்றே.
1.18.25
882 கந்துகமொ டுந்துமிர தங்களு மிடைந்து
தந்தியின மும்பிடிக ளுந்தலை மயங்கிச்
சுந்தரம டந்தையரு மைந்தரொடு துன்றி
வந்தவ ரெதிர்ந்தவர் நெருங்குமணி வாயில்.
1.18.26
883 ஈறுதெரி யாதென வுயர்ந்தெழி றவழ்ந்து
மாறுபகர் கின்றரிய மாமதிண் மதிக்கோர்
வீறுபெற நின்றபரி வேடமென லாகி
யூறுபுனல் கொண்டுகட லொத்தவக ழம்மா.
1.18. 27
884 தும்பிகள் குடைந்துபுன றுய்ப்பமக ரங்க
ளும்பரி னெழுந்துமுத லைக்குல மொதுங்க
வெம்பியுக ளுந்தொறு மிடைக்கயல் வெருண்ட
கம்பலை யறாதலை கலிக்குமக ழன்றே.
1.18.28
885 இந்துதவழ் கின்றமதி ளும்மக ழிருந்த
கொந்தல ருறைந்துவரி வண்டுகள் குடைந்து
சிந்தமு தருந்துகய லங்கரை தியங்க
வந்துநனி கண்டக மகிழ்ந்தனர்க ளன்றே.
1.18.29
886 கண்டுநக ரந்தனை மனத்திடை களித்து
வண்டுதுதை கின்றபுய மைந்தர்களி யாருங்
கொண்டல் கவி யுந்திற லுடைக்குரிசி றானு
மெண்டல மதிக்குமதி ளின்புற மிறுத்தார்.
1.18.30
887 பந்தியி னிரைத்தனர் பரித்திர ளனைத்து
முந்துமிட பத்திரளொ டொட்டக நிரைத்தா
ரிந்துகதிர் கொண்டென விலங்கறை யிடத்தில்
வந்தபல பண்டமு மணித்தொகையும் வைத்தார்.
1.18.31
888 வித்தக ரனைத்தும்விடு தித்தலைகள் புக்கார்
மைத்தவழ் முகிற்குடை மறைக்குரிசி லோடு
மத்தல மிலங்கவபூ பக்கரு மிருந்தா
ருத்தம குணத்தினொடு மக்கிகளு றைந்தார்.
1.18.32
889 புவிவளர நன்கனி பொழிந்ததரு வூடோர்
சுவையுமற நஞ்சுகள் சொரிந்தசெடி யென்னப்
பவடமிறு வஞ்சனை படுங்கொலை படைத்த
அபுஜகிலெ நுங்கொடிய பாவியு மடைந்தான்.
1.18.33
890 எவ்வுழி யிருந்திவ ணடைந்தவர்க ணீவிர்
செவ்விய திறர்குரிசி லியார்தொழிலி யாதென்
றவ்வுலகி லந்நக ரடைந்தவர்கள் வந்தே
யொவ்வொரு வரைத்தனி யுசாவினர்க ளன்றே.
1.18.34
891 மக்கநக ரத்துபுதுல் முத்தலிபு மன்ன
ருக்குரிய பேரருயிர் போன்முகம்ம தென்போர்
தக்கபுக ழுக்குமதி மிக்கவர் சரக்கோ
டொக்கலொடு வந்தன மெனத்தனி யுரைத்தார்.
1.18.35
892 ஷாமுநக ரத்துநசு றானிக டமக்குண்
மாமறையின் மிக்கனவன் வந்துமைச றாவைத்
தேமலர் புயத்திலணி செம்மலொ டிருப்பக்
காமருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான்.
1.18.36
893 அன்னிய ரெனாதுமைச றாதனை யடுத்து
வன்னமலர் மாலைதிகழ் மார்புற வணைத்து
முன்னைநெடு நாளுறவ தானமுதி யோனு
மென்னக மடைந்தினி தெழுந்தருளு மென்றான்.
1.18.37
894 கோதைகதி ஜாவுரை மனத்திடை குறித்து
மாதிர மெதிர்ந்துபொரு வாதபுய வள்ளல்
பாதகம லத்துறு பணித்தொழி லிகழ்ந்தோர்
போதினு மகன்றதிலை யென்றுரை புகன்றான்.
1.18.38
895 கோலமொடு கூறுமொழி கொண்டுடல் களித்துச்
சீலநபி பாதமிசை செங்கணிணை வைத்துப்
பாலரிசி காய்கறி பழத்தொடு சுமந்தே
சாலவு மளித்தவனு மேதரக னானான்.
1.1839
896 வந்தவர்கொ ணர்ந்தபணி மாமணி சரக்கோ
டிந்துகலை யென்றகலை யாவையு மெடுத்துச்
சிந்தைகளி கொண்டவர் செழுங்கர மறைந்தே
யந்தநக ரத்துவணி கர்க்கினி தளித்தார்.
1.18. 40
897 வேறு
மிக்கசெம் மணிபணி விற்று மாற்றிய
மக்கிகண் மறுசரக் கெவையும் வாங்கித்தம்
மொக்கலோ டின்புற வுவக்கும் போதினி
லக்கண மொருவன்ற னமைதி கூறுவான்.
1.18. 41
898 உற்றதென் வயினுறை சரக்கொன் றாயினும்
விற்றில முகம்மதென் விடுதி புக்கிடி
லற்றையின் மாறியூ தியமுண் டாக்குவேன்
மற்றடப் புயர்த்திர்க ளென்று வாழ்த்தினான்.
1.18.42
899 என்றவ னுரைத்தலு மெழுந்து வள்ளலுஞ்
சென்றவ னுறைந்திடும் விடுதி சேர்ந்தபின்
மின்றவழ் மணிகலை விலையென் றோதிய
தொன்றிரண் டெனத்தொழி லுறுதி யானதே.
1.18. 43
900 தன்னிடத் துறைந்தபொற் சரக்குங் கோவையு
முன்னிய விலைக்குவிற் றொடுக்கி யந்நகர்
மன்னிய பண்டமும் வாங்கி வள்ளறன்
பொன்னடி தன்முடி பொலியச் சூட்டினான்.
1.18. 44

ஷாம் நகர் புக்க படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 18க்குத் திருவிருத்தம்...900

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.19. கரம் பொருத்து படலம்

901 மறங்கிளர் வேற்கர வள்ளன் மக்கிக
ளிறங்கிய விடுதிபுக் கிருக்குங் காலையிற்
கறங்கிய ஷாமினிற் காபி ரிற்சில
ரறங்கிளர் நபியைவந் தடுத்து நோக்கினார்.
1.19.1
902 மேனியிற் கதிர்விரி வியப்பு மெய்யினின்
மான்மதங் கமழ்தலும் வடிந்த கைகளுந்
தூநிறை மதியென முகமுந் தோள்களுந்
கானிலந் தோய்தராக் கார ணீகமும்.
1.19.2
903 பன்னருஞ் சிறப்புடை யருட்கட் பார்வையு
மன்னிய வவயவத் தழகு மாசிலா
நன்னிலை மொழிபல நவிற்றுஞ் செய்கையு
மின்னன பலவுங்கண் டேகி னாரரோ.
1.19. 3
904 கண்டவர் காண்கிலாக் கார ணீகமொன்
றுண்டென நகரவர்க் குரைப்பக் கேட்டவர்
விண்டவர் விளங்கிட வேதம் பேசிய
கொண்டலங் கவிகையா ரென்னக் கூறினார்.
1.19.4
905 மறைதெரி சமயமு நமரு மாய்ந்திட
வுறைகுவ னொருவனுண் டணித்தென் றோதுநூற்
றுறைவலார் நாடொறுஞ் சொற்ற சொற்படி
பிறவியா னிவனெனப் பின்னும் பேசினார்.
1.19. 5
906 தருபெரும் பதவிச் சமயம் பாழ்பட
வருபவன் றன்னுயிர் வானி லேறிடக்
குருதிநீர் சிந்திடக் குவல யத்திடைச்
செருவிளைத் திடுதலே திறமென் றோதினார்.
1.19.6
907 அறைதிரைக் கடலென வதிர்தன் மாறியிங்
குறையுமின் வேறொரு பாய சூழ்ச்சியான்
மறைபட வரவழைத் தவன்றன் வல்லுயிர்
குறைபட ரகசியக் கொலைசெய் வோமென்றார்.
1.19.7
908 சூதர்கள் கூண்டினி துரைத்த சொல்லையோர்
பாதகன் கருத்தினுட் படுத்தி மாமறை
வாதியென் றவனுயிர் மாய்க்க வேண்டுதற்
கீதலா லுறுமொழி யொன்று மில்லென்றான்.
1.19. 8
909 உரைவழி யவைசெய் துபாய மாகிய
கரைமதிக் காபிரி னால்வர் கள்ளமாய்
நிரைமணிப் புரிசையின் வாயி னீங்கியே
விரைசெறி முகம்மதின் விடுதி நண்ணினார்.
1.19.9
910 வஞ்சனை கொலைகப டனைத்து மாட்டிய
நெஞ்சினர் மக்கிக ணிறைந்த நாப்பணிற்
கஞ்சமென் மலர்ப்பதக் கார ணீகரை
யஞ்சலித் தன்புட னடுத்து நின்றனர்.
1.19.10
911 ஆங்கவர் தமையழைத் தருகி ருத்திநீ
ரீங்குறை கருமமே தெடுத்தி யம்புமென்
றோங்கிய முகம்மது முரைப்பச் சாமிக
டீங்குறு மனத்தினை யடக்கிச் செப்புவார்.
1.19. 11
912 மருக்கமழ் சோலைசூழ் மக்க மாநகர்ச்
சரக்குள தெனிலது தருக சேரலார்
செருக்குறுத் தவருடற் சிதைத்துத் திக்கெலாம்
பெருக்கிய கீர்த்தியீ ரென்னப் பேசினார்.
1.19. 12
913 உறுதிகொள் சரக்குவிற் றொடுக்கி யிப்பதி
மறுசரக் கெவையையும் வாங்கி னோமினிச்
சிறிதுள சரக்கெனச் செப்பச் சாமிக
ளறுதியின் விலைக்கெடுத் தருள்க வென்றனர்.
1.19.13
914 அனையவர் கூறவக்கேட் டடுத்த மக்கிகண்
மனையினுற் புகுந்தெடுத் தியாவும் வைத்தனர்
வினையமற் றுறுவிலை விள்ளச் சம்மதித்
தினையன சரக்கெலா மிசைந்து வாங்கினார்.
1.19. 14
915 சொல்லிய விலைப்பொருட் டொகையை நும்வயி
னொல்லையி னுதவுதற் குறுதி யாகவே
மல்லுடைப் புயத்திறன் முகம்ம தேயெம
தில்லிடை வருகவென் றிசைத்திட் டாரரோ.
1.19.15
916 ஷாமுநாட் டவருரை யனைத்துஞ் சம்மதித்
தாமினா திருமக னகம கிழ்ச்சியாய்
நேமிவா னவர்திரை நிறைந்து சுற்றிய
பூமிநா யகர்தொழப் புறப்பட் டாரரோ.
1.19. 16
917 மக்கிகள் சிலருடன் மைச றாவுந்தன்
பக்கலில் வரக்கதிர் பரப்பி மெய்யொளி
திக்கினில் விரித்திடச் செறிந்த செங்கதிர்
மிக்கபொற் புரிசையின் வயின் மேயினார்.
1.19.17
918 வேறு
விரைநறை கமலச் செல்வி மேவுசை னயினார் பாலன்
றரைபுக ழபுல்கா சீஞ்சீர் தருங்கொடைப் புகழே போல
நிரைசுதை வெள்ளைதீற்றி நிலாமணி குயிற்றி வெள்ளி
வரையென நிமிர்ந்து தோற்றி மறுவிலா தொளிரும் வாயில்.
1.19.18
919 இரசித நிலையிற் செம்பொ னிணைமணிக் கபாடஞ் சேர்த்தி
விரிகதிர் மணிக டூக்கி விரிந்தவா யிலினிற் புக்கிக்
கரிமத மாரி சிந்திக் களிவழி வழுக்கல் பாயுந்
துரகதக் குரத்தூண் மாய்க்குந் தோரண மறுகு சார்ந்தார்.
1.19.19
920 அகிற்புகை வயங்கு மாட மணிபணி யிமயம் போன்றுந்
துகிற்கொடி நுடங்கும் வெள்ளி வரையெனச் கதைகொண் மாட
மிகச்செறி சாந்த மாட மேருவைப் போன்றும் வீதி
தொகுத்தவத் திசைக டோறு மெண்ணில தோன்றக் கண்டார்.
1.19.20
921 துகிர்சிறு வேர்விட் டோடிச் சுடரொடுந் திகழ்வ தேபோற்
பகிர்விரற் சிறுகான் மென்மை படர்சிறைப் புறவின் கூட்டந்
திகழ்தரக் கூவு மோதை தெரிவையர் கூந்தற் கூட்டும்
புகையினைப் பொறாது மாடம் புலம்புவ போன்ற தன்றே.
1.19.21
922 நித்தில நிரைத்த மாட நிரைதிரை போன்ற நாவா
யொத்தன கரடக் கைமா வொண்கொடிப் பவளம் போன்ற
கைத்தொடி மகளிர் செல்வக் கடிமுர சறைத லோதை
நித்தமு மறாத வாரி நிகர்த்தது நகர மன்றே.
1.19. 22
923 தாறுபாய் தந்தி மாதேர் தானைமும் முரசு வேத
மீறுபண் ணினைய வெல்லா மெங்கணும் விளங்கு மோதை
மாறிலா தெழில்கொண் டோங்கும் வளமைமா நகரம் வாய்விண்
டீறிலான் றூதர் வந்தா ரெனவெடுத் தியம்பல் போலும்.
1.19. 23
924 மாலைவாய்ப் பலபூண் டாங்கி மான்மதங் கமழ்ந்து வீங்குங்
கோலமார் பொருப்புத் திண்டோட் குரிசிறன் கதிர்க டாக்கி
நீலமா மணியிற் செய்து நிரைகதி ரெறித்த வீதி
வேலைவாய்த் தரளச் சோதி விளங்குவ போன்ற தன்றே.
1.19.24
925 பந்தரிட் டலர்கள் சிந்திப் பரிமள மரவ நாற்றிக்
சந்தகில் கலவைச் சேறு தடவிய மகுட வீதி
யிந்தெழின் மழுங்குஞ் சோதி யிறையவன் றூதர் மெய்யின்
கந்தமூ டுலவி யெங்கு மறுவியே கமழ்ந்த தன்றே.
1.19.25
926 முத்தணி பவளத் திண்கான் முறைமுறை நிறுவித் தேர்ந்த
சித்திரமெழுதி வாய்த்த செறிமயிர்க் கற்றை தூக்கிப்
பத்திவிட் டெறிக்குங் காந்திப் பன்மணி பரப்பி யோதை
நித்தமு மறாது செல்வ நிகழ்ந்தவா வணமுங் கண்டார்.
1.19.26
927 அடையல ரொடுங்க மோதும் படைமுர சதிரு மோதை
யிடைபடு வறுமை யோட விடுகொடை முரசி னோதை
கடைபடு வடிவேற் கண்ணார் கடிமண முரசி னோதை
முடியுடை யரசர் வீதி யெங்கணு முழங்கக் கண்டார்.
1.19.27
928 வாரியின் மதங்கள் சிந்தி வாரண மிடைந்து செல்லத்
தேரினந் திரண்டு கூடிச் செழுங்கொடி நுடங்கி நிற்பப்
பாரிடை துகள்விண் டூர்க்கும் பரித்திரண் மலிந்து தோன்ற
வாரவார் முரச றாத வரசர்வீ திகளுங் கண்டார்.
1.19.28
929 புகர்முகச் சிறுகண் வேழப் பொருப்பொடு பொருப்புத் தாக்கி
யிகல்பொர மூட்டுஞ் செல்வி யிளையவர் குழாத்தி னோசை
முகிலொடு மசனி பொங்கி முழங்குவ போன்றும் விண்ணு
மகிலமு மதிரத் தோன்று மணிமறு கிடமுங் கண்டார்.
1.19.29
930 வன்னியின் கொழுந்து போற்செம் மணிக்கதி ரூச லேறி
மின்னனார் பாடி யாடும் வீதிவாய் மலிந்த தோற்றந்
துன்னிதழ்க் கமலப் போது துயல்வர நாப்பண் வைகு
மன்னமொத் திருப்ப நோக்கு மகமகிழ்ந் தினிது கண்டார்.
1.19.30
931 கந்துக மெடுத்துக் காந்தட் கரத்தினி லேந்தி யாடு
மந்தர மனைய கொங்கை மயிலனார் முகத்தின் வேர்வை
சிந்தக டுளைந்து தத்துந் திரைமிகட் டெழுந்து தோன்று
மிந்துமுத் துகுப்ப தென்ன விடந்தொறு மலியக் கண்டார்.
1.19.31
932 கருமணிக் கழங்கு கஞ்சக் கரத்தினி லெற்றி யாடச்
சுரிகுழன் மலர்வண் டென்னச் சுரும்பினந் தாவ நோக்கி
யரிவைபுன் முறுவ றோன்ற வணிநகைக் கதிரின் முத்தாய்த்
தெரிதரப் புதுமை காட்டுந் தெருத்தலைச் சிறப்புங் கண்டார்.
1.19.32
933 மாசறு வாயி றோறும் வயங்கிய கதலி நெற்றிப்
பாசடை துயல்வ திந்தப் பாரினிற் குபிரென் றோங்கு
மாசற வுதித்த வள்ள லகுமதி னழகு மெய்யின்
வீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவுங் கண்டார்.
1.19.33
934 முருக்கிதழ் கரிய கூந்தன் முத்தவெண் ணகையி னார்தம்
பெருக்கொடு திரண்டு நன்னீர் குடைதலிற் பிறங்கு மெய்யின்
றிருக்கிளர் கலவைச் சேறு நானமும் புழுகுஞ் சேர்ந்து
மருப்பொலி வாவி யாவு மணங்கமழ்ந் திருப்பக் கண்டார்.
1.19.34
935 பரதமா டிடமுங் கீதப் பண்ணொலி யரங்குஞ் சீர்மை
விரதமா மறையோ ரோதும் வேதமண் டபமுஞ் செவ்விக்
கரதலஞ் சேப்ப வள்வார்க் கருவியா ரிடமுஞ் செல்வர்
நிரைதரு சிரம சாலை நிறைந்தன பலவுங் கண்டார்.
1.19.35
936 இன்னன பலவு நோக்கி யெழில்கனிந் தொழுகிக் காந்தி
மின்னொளி மழுக்குஞ் சோதி மெய்முகம் மதுமன் பாகத்
தன்னுயிர்த் தோழ ரோடுந் தரகனு மைச றாவும்
பின்னுற வரவக் காபிர் பெருந்தலைக் கடையிற் சார்ந்தார்.
1.19.36
937 அருளினி லறத்திற் றேர்ந்த வடிவினி லெவரு மொவ்வாக்
குரிசினான் மறைக்கும் வாய்த்த கொண்டலங் கவிகை வள்ளல்
விரிகதிர்க் கலைக ளோடும் வெண்மதி காலி னேகி
யிருளிடம் புகுவ போல விவர்களில் லிடத்திற் புக்கார்.
1.19.37
938 கள்ளவிழ் மரவத் திண்டோட் காரணக் கடலே யன்ன
வள்ளலை யவர்கள் போற்றி மாளிகை வயின்கொண் டேகித்
தெள்ளிய மணியிற் செய்த செவ்வியா சனத்தி லேற்றி
வெள்ளிலை யடைகாய் சந்தம் விரைவின்வைத் திருந்தா ரன்றே.
1.19.38
939 மைதவழ் குடையீ ரிந்த மனையிடை புகுத யாங்கள்
செய்தவப் பலனோ முனோர் திளைத்தபுண் ணியத்தின் பேறோ
வெய்திய பெற்றி யென்ன விசைந்தநன் முகம னாகப்
பொய்திகழ் நாவால் வஞ்சம் பொருந்திய மனத்தர் சொன்னார்.
1.19.39
940 நன்னய மொழிக ளாக நவிற்றியங் கிருந்த காலை
வன்மனக் கொடிய காபிர் மனத்துறு சூழ்ச்சி யாக
மின்னொளி கரக்கு மாட மேனிலை செறித்த கற்பாற்
சென்மெனக் கடைக்கண் ணாரச் செப்பின னொருவன் சென்றான்.
1.19.40
941 தீங்குறு மனத்த னேகிச் செறித்தமேற் பலகை மெல்ல
வாங்கியங் கிருந்த கல்லை வரைப்புயம் பிதுங்க வுன்னித்
தாங்கலி லுருட்டி மெல்லத் தள்ளினன் றள்ள லோடு
நீங்கருங் கரத்தைக் கவ்வி நெரிபட விறுக்கின் றன்றே.
1.19.41
942 கரத்தினிற் பதிந்த கல்லைக் கழற்றினன் கழற்ற லாகா
துரத்தொடுங் காலை யூன்றி யுதைத்திழுத் தசைத்து வெள்வாய்
நிரைத்தபல் லதரங் கவ்வி நெற்றிமேற் புருவ மோட்டி
வரைத்தடப் புயங்கள் வேர்ப்ப வலித்தறச் சலித்து ழன்றான்.
1.19.42
943 உரம்புவன் கையைக் கல்லோ டுதறுவ னுதற டாம
னிரம்பநெட் டுயிர்ப்புச் செய்வ னிலைதளர்ந் திடுவன் வாசிக்
குரம்படை துகள்போ லாவி குலைகுலைந் திடுவ னிந்தத்
தரம்பட விதியோ வென்னத் தயங்குவன் மயங்கு வானே.
1.19.43
944 மாதிரங் கையைப் பற்றி வரவர நெருக்க மேன்மேல்
வேதனை பெருக வாடி வேர்த்துட லயர்ந்து சோர்ந்து
பாதகம் பலித்த வாற்றாற் பதைபதைத் துருகி யேங்கி
யேதினிச் செய்வோ மென்ன விடைந்துநெஞ் சுடைந்து நின்றான்.
1.19. 44
945 இணையன துன்ப மெய்தி யிவனிவ ணிருப்ப வன்னோர்
மனையிடை பொருள்கொண் டீங்கு வந்திலன் காணு மென்னச்
சினமுடன் சொல்வார் போலச் செப்பிமே னிலையிற் போந்தார்
புனைமணிக் கரங்கல் லோடும் புரண்டவன் கிடப்பக் கண்டார்.
1.19.45
946 மாட்டுவந் திருந்து நின்பால் வந்தவை யெவைகொ லென்னப்
பூட்டிய கல்லுந் தானும் புரண்டவன் றெருண்டு சொல்வான்
வீட்டினிற் புகுமின் பாரம் வீழ்த்துமி னென்னு நுஞ்சொற்
கேட்டனன் கேட்ட போதே கெட்டனன் கெட்டே னென்றான்.
1.19.46
947 வேறு
வருந்திக் கல்லிரு கையினும் பிடிமட மயங்கி
யிருந்த வன்னிடத் தெய்திய பேரதி சயித்துச்
சரிந்து வீழ்ந்திட வீழ்த்தன ரீழ்த்தவர் தவித்தார்
விரிந்தி டாதுமேன் மேலற விறுகிய விலங்கல்.
1.19.47
948 இல்லி னுட்புகுந் தவரொரு முகம்பட விருந்து
பல்லி னாலித ழதுக்கிமெய் யுரத்தொடும் பறிப்பச்
சொல்லொ ணாதுயிர் பதைத்திட வுடறுடி துடிப்பக்
கவ்வி னுட்புக வற்றன வவன்மணிக் கரங்கள்.
1.19. 48
949 கரங்கள் போயின கல்லொடு மெனநிலை கலங்கி
யிரங்கு வாரிடை வாரிது விதிகொலென் றேங்கி
மரங்கி டந்தெனக் கிடந்தவர் மாட்டினின் றொருவ
னரங்கு நின்றிழிந் தியல்புறுந் தரகனை யடைந்தான்.
1.19. 49
950 தரக னுக்குரைத் தழைத்துயர் மேனிலை சார்ந்து
விரகர் செய்தொழி லனைத்தையு மொன்றற விரித்தான்
கரைக ணீருகக் கேட்டவன் மனங்கடு கடுத்து
நரக வாதிக ளாயினீ ரெனநவின் றனனே.
1.19. 50
951 பாரி டைப்பெரி யவர்களுக் கிடர்படுத் திடவென்
றோரு வன்மனத் தவர்களுக் குறுபொரு ளுலகிற்
சாரு மக்கலு மனைவியுந் தாமுந்தம் பொருளும்
வேரொ டுங்கெடு மென்பது நிசமென விரித்தான்.
1.19.51
952 ஓங்கு மாநில மாக்களி லொருவருக் கொருவர்
தீங்கி யற்றிட நினைத்திடுங் கொடியவத் தீமை
நீங்கி டாதவ ருயிரினைப் பருகநே ரலர்கை
தாங்கும் வாளென வொல்லையி லுறச்சமைந் திடுமே.
1.19.52
953 ஈர மற்றபுன் மனச்சிறி யவர்திரண் டிகலிக்
கோர மாகிய பழியையெண் ணாக்கொடுங் கொலையாய்த்
தேரு நல்லறி வாளருக் கிழைத்திடுந் தீங்கு
நீரி டைக்கன னெருப்புகுத் திடுவொத் திடுமே.
1.19.53
954 மக்க மாநகர் முகம்மது தமக்கல மறுவிற்
றக்க பேர்க்கிடர் நினைப்பதுந் தகுவதன் றேயான்
மிக்க வார்ததையில் விளம்புவ தென்கொலுநும் வினையால்
கைக்கு மேற்பலன் பலித்தது காண்டினி ரென்றான்.
1.19.54
955 ஆதி தூதுவ ரொருவர்வந் தடைகுவ ரெனவே
வேத வல்லவ ருறுமொழி நமக்குமுன் விரித்தா
ரேத மற்றவ ரவரிவ ரலதுவே றிலையாற்
போதி ணைச்சரண் பணிந்திவை புகலுவ மென்றான்.
1.19. 55
956 பொருத்து நன்மொழி யிதுகொலென் றேமிகப் புகழ்ந்து
கருத்த ழிந்தவக் கருத்தினி னன்கெனக் கருதித்
தரித்த பேரனை வருமெழுந் தனரதிற் றரக
னொருத்தன் முன்னெழுந் தணிமுகம் மதினிடத் துற்றான்.
1.19.56
957 ஏத முற்றவன் மனைகொடி யவர்களில் லிடத்தோர்
பாத கத்தினை விளைத்தனர் பலித்ததங் கவர்பால்
வேத னைப்படர் விள்ளுதற் கரிதுவெள் வேலோ
யீது வந்தவை யெனப்பணிந் துரைத்தவ ணிருந்தான்.
1.19. 57
958 இருந்த காலையி லனைவரும் வந்தெழி லிலங்கிச்
சொரிந்த மாமுக முகம்மதி னிணையடி தொழுது
புரிந்த தீங்கினால் வந்தவை யனைத்தையும் புகன்றார்
விரிந்த வாய்புலர்ந் தேங்கிய மனத்தொடு மெலிவார்.
1.19. 58
959 வெறுத்த புன்மனக் கொடியம்யாம் விளைத்திடும் வினையைப்
பொறுத்து நல்லரு ளெம்வயின் புரிகெனப் போற்றி
மறுத்து நன்மொழி புகன்றனர் வளருநல் லறத்தை
யறுத்துத் தீவினைப் பயிர்விளைத் திடநினைத் தவரே.
1.19.59
960 வருந்தி நன்மொழி தரகனங் குரைத்தது மருவார்
பொருந்தி நின்றவை புகன்றது மனத்தினிற் பொருந்தித்
திருந்து வெண்புகழ் முகம்மது செழுங்கரம் போக்கி
யிருந்த வன்றனைக் கொணர்கென வாய்மலர்ந் திசைத்தார்.
1.19.60
961 சொன்ன போதினி லோடினர் சோரிநீர் சொரியத்
தன்னி ருங்கர மிழந்தவன் றனைச்சடு தியினின்
மன்னர் மன்னவர் முன்கொணர்ந் தனர்மணிக் கரத்தைப்
பின்ன மாக்கிய சிலையையுஞ் சிறுமையிற் பெரியோர்.
1.19. 61
962 கல்லி னுட்புதைந் துறைந்திடுங் கரங்களுங் கரம்போ
யல்ல லுற்றிடைந் தழுங்கிடு மவனையு நோக்கிச்
செல்ல லம்பிய கரதல முகம்மது தௌியாப்
புல்லர் வஞ்சக நெஞ்சகந் தெரிதரப் புகல்வார்.
1.19.62
963 கரிய கல்லினிற் பதிந்திடுங் கரத்தினின் கரத்தைத்
தெரிய வைத்திடென் றோதிய மொழியினைத் தேறிச்
சொரித ருங்குரு திகளொடுந் துடுப்பெனுங் கரங்க
ளரிதி னீட்டியே தொட்டிட வொட்டின வன்றே.
1.19.63
964 உறையுங் கல்லினிற் கரங்களை நெகிழென வுரைப்பக்
குறைவி லாதுற வாங்கின னீரினிற் குளித்து
மறையு மென்கரம் வாங்கின தெனமறுத் தழும்பு
கறையு மில்லென விலங்கின தவனிரு கரங்கள்.
1.19.64
965 முன்னை நாளினும் பெலனுறு முழுமலர்க் கரத்தால்
வன்ன மாமலர் முகம்மதி னிணையடி வருடி
யின்ன னீக்கினை யிருகரம் பொருத்தினை யினியென்
றன்னை யாளுதி கடனென வடிக்கடித் தாழ்ந்தான்.
1.19.65
966 கொடிய சூதர்கள் வன்னசு றானியின் குலத்தோர்
நெடிய காரண மெனமுகம் மதுதமை நெகிழா
தடியி னிற்பணிந் தாசரித் தாசனத் திருத்திக்
கடிதி னும்பொரு ளிவையெனக் கணக்குடன் கொடுத்தார்.
1.19.66
கரம் பொருத்து படலம் முற்றிற்று
ஆகப் படலம் 19க்குத் திருவிருத்தம்...966

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.20. ஊசாவைக் கண்ட படலம்

967 மிக்க செம்போனீந் தவர்க்குநன் மொழிபல விளம்பிப்
புக்கி ருந்தவ டுடனெழுந் தகன்றுபொன் றிகழத்
தக்க மாமணிக் கதிர்விடு மறுகினிற் சார்ந்தோ
ரக்க சாலையி னிடத்துவந் திருந்தன ரன்றே.
1.20. 1
968 நெருப்பு குத்திடுந் தெறித்திடுஞ் சுடுஞ்சுடு நெறியீ
ரிருப்பி டந்தவிர்ந் தெழுமெனத் தபதிய னிசைப்ப
வொருப்ப டத்துணுக் கெனப்புறத் தொதுங்கின ருழையோர்
விருப்ப முற்றிருந் தெதிரகு மதுவிளக் கினரால்.
1.20. 2
969 தோற்ற நும்மிடத் தலதுவே டிலைச்சுடுங் கனலை
யாற்றும் பேற்றியா லுமதிடத் தடைகுவ தலது
வேற்றி டம்புகா புக்கினு மெய்யினில் வெதுப்ப
வூற்ற மின்றதற் குறுகுணந் தானுமின் றெனவே.
1.20. 3
970 மெலிவி லாதசொற் கேட்டலுங் கம்மியன் வெகுண்டவ்
வுலையி னிற்கரும் பொன்புகுத் துமியொடு கரியும்
பொலிய வைத்தெரி மூட்டினன் புகையிருட் படல
மலித ரக்கனல் கொழுந்துவிட் டெழுந்தது வளர்ந்தே.
1.20. 4
971 உருகி வெந்தவல் லிரும்பினை யுலைமுகத் தெடுத்துக்
கருகு மேனியன் கட்கடைக் கனற்பொறி கதுவ
வருகி ருந்தெழுந் தங்கைகள் சிவப்புற வடித்தான்
பெருகு மக்கினிக் கொழுந்துக டெறித்தன பிதிர்ந்தே.
1.20. 5
972 சரிந்து வீழ்ந்திடச் சிதறிய செங்கதிர்த் தழல்கள்
விரிந்து நன்கதிர் குலவிய முகம்மது மெய்யி
னெரிந்த சந்தனச் சேறுபன் னீரொடுங் குழைத்துச்
சொரிந்த தாமெனக் குளிர்ந்தது சோர்வற வன்றே.
1.20. 6
973 இத்தி றத்தெழில் கண்டுகம் மியனெதிர் நோக்கி
யுத்த மக்குலப் பெயர்தலை முறைப்பெய ரூர்ப்பேர்
பத்தி யின்னுமக் கிடுபெய ரிவைபடிப் படியாய்
வித்த காதெரி தரவுரை யெனவிளம் பின்னே.
1.20. 7
974 மக்க மூர்கிலா பருள்குசை யப்துல்மு னாபுக்
கக்க மானஹா ஷீமுத லப்துல்முத் தலிபு
தக்க மன்னவர் மைந்தரி லப்துல்லா தவத்தான்
மிக்க னென்பெயர் முகம்மது வெனவிளம் பினரே.
1.20. 8
975 அறபின் மக்கமா நகரின் முகம்மதென் றணித்தா
யுறவு தித்துநஞ் சமயங்க ளுலைப்பனென் றுரவோர்
மறையி லோதிய வரன்முறைப் படியQ துணர்கிற்
குறைவி லாதவ னிவனெனக் குறித்துளங் கொதித்தான்.
1.20.9
976 வருந்தி லாமறை யவர்களே ஷாமின்மன் னவரே
திருந்து நல்லறி வாளரே தேவத மனைத்தும்
பொருந்து றாதற வழித்திட நகரிடைப் புகுந்திங்
கிருந்த வனிவன் காணெனக் கூக்குர லிட்டான்.
1.20. 10
977 வேறு
கனைவாருதி நிகர்ஷாமுறை கதிர்மாமுடி வீரர்
தனுவாளயி லெறிவேல்கணை தண்டம்பல வேந்தி
முனையாரெவ ரெதிர்வார்முறை யிடுவாரெவ ரென்றே
சினமாயெழு புலிபோல்பவர் சிலர்வந்துவ ளைந்தார்.
1.20. 11
978 கருதார்வரு திறலாலிடு கலகந்தர மன்றென்
றிரைவாகிய சினத்தான்ய குணத்தாற்றிர ளினத்தாற்
பொருவோமெனு மனத்தாலதி புகழார்முகம் மதுவை
மருவார்மன மலையக்கொடு மதிளின்புறம் வந்தார்.
1.20. 12
979 நறைதுன்றிய சுதைவெண்கதி ரெயிலின்புற நண்ணி
யுறையும்விடு தியில்வந்தன ரொளிமாமுகம் மதுவுந்
துறையின்றொழில் வகையுந்தொகை நிதியும்முறை முறையாய்
நிறைகின்றன குறையின்றென நெறியேகிட நினைவார்.
1.20.13
980 எருதொட்டக மடல்வெம்பரி யிருபக்கமு நிறைய
மரவத்தொடை புயமுங்கிட வருமக்கிக டாமுந்
தருமத்துரை நயினாரொடு சதுரன்மைச றாவும்
புரிசைப்புற நகர்விட்டணி பொழில்புக்கி நடந்தார்.
1.20. 14
981 குருகார்கழ னிகள்வாவிகள் குளிர்சோலை கடந்தே
யிருகாதமு மொருகாதமு வெழிலாக நடந்து
கருமாமுகி னிழறாவிய ஹபிபாமுகம் மதுவும்
வருபாதையி னடுவேயொரு வளமாமனை கண்டார்.
1.20. 15
982 கனமாமதி யுடையோனெதிர் களைகால முணர்ந்தோன்
மனமூடுறை யறிவான்முகம் மதுவார்வழி யறிவோன்
குனிவார்சிலை நசுறானிகள் குருவாகிய வூசா
வெனுமாமறை முதியோனுறை யெழின்மாமனை யேகார். 16
983 மேகக்குடை நிழலுங்கதிர் விரிவாகிய மெய்யும்
பாகத்திடை கமழும்பரி மளமும்மதி முகமு
நாகத்தொடு தனிபேசிய நயினார்முகம் மதுவென்
றாகத்திடை கண்டானவ ணடைந்தானரு கிருந்தான்.
1.20. 17
984 இருந்தான்முகம் மதுதண்கதி ரெழின்மாமுக நோக்கித்
திருந்தாரட லரியேதரு செழுமாமழை முகிலே
பெருந்தாரணி தனினும்பதி குலம்பேரவை யனைத்தும்
வருந்தாதுரை யீரென்றனன் மறையோதிய மதியோன்.
1.20.18
985 அதுனான்கிளை ஹாஷிம்குல மமரும்பதி மக்கம்
பிதிராநிலை யபுத்தாலிபு பின்னோரபு துல்லா
சுதனாமுகம் மதுநானெனச் சொன்னார்மறை வல்லோ
னிதமாகிய நபியாமென விசைந்தான்மன மகிழ்ந்தான். 19
986 வடிவாரிடை யகலாதுறை மைசறாதனை நோக்கிக்
கொடியார்கழ லடலோய்நுமர் குலமேதென நவிலக்
கடுவார்விழிக் கொடியாரிடை கதிஜாவெனு மயிலா
ரடியாரினி லௌியேன்மிக வுரியேனென வறைந்தான்.
1.20.20
987 மடமாயில் கதிஜாவென வளர்கோதையை யுதவு
மடலாரரி குவைலீதெனு மறிவோன்மறை மொழியைக்
கடவாதநன் மதியோனுயர் கனபேரரு ளானென்
னுடலாருயி ரெனவேமுத லுறவானவ னென்றான்.
1.20. 21
988 முன்னாளுற வெனவோதிய முதியோன்முக நோக்கி
யென்னாருயி ரனையீரும திடுபேர்சொலு மெனவே
மன்னாகிய மைசறாசொல் மறையோனு மகிழ்ந்தே
யொன்னாரரி யேயென்பெய ரூசாவென வுரைத்தான்.
1.20.22
989 வேறு
உரையினி லுறவு குவைலிதென் றூசா
வுரைத்தவை யுளத்தினிற் குறித்துக்
கரைவழிந் தொழுகு மகிழ்ச்சியாய் மைசறா
கருங்குழற் செவ்விதழ்க் கனிவாய்த்
திருமொழி யுரைத்த திவனெனக் கருதிச்
செவ்வியோன் முகமரை நோக்கிப்
புரையற நுமக்குச் சொல்வதொன் றுளது
கேண்மினென் றன்பொடு புகல்வான்.
1.20. 23
990 குறைஷியங் குலத்துக் கொருமணி யெனவுங்
குவைலிதுக் கிருவிழி யெனவு
மறைதிரைக் கடலி லமுதெனப் பிறந்த
வரிவையர்க் கணியெனுங் கதீஜா
நிறைமதி மடியிற் றவழவுந் துகிலிற்
பொதியவு நெறிபடுங் கனவி
னுறைபடும் பொருளை யுணர்கெனச் சலாமு
மோதின ருமக்கென வுரைத்தான்.
1.20. 24
991 அம்புய வதனன் குவைலிது வருந்து
மருந்தவந் திரண்டொரு வடிவாய்க்
கொம்பென வொசிந்த நுண்ணிடைக் கதீஜா
குறித்திடுக் கனவினைத் தேர்ந்து
கம்பிதஞ் செய்து கருத்தினுண் மகிழ்ந்து
காரணப் புதுமைக ளனைத்து
மிம்பரின் விளங்க மைசறா மகிழ
வினிதுற வெடுத்திசைத் திடுவான்.
1.20.25
992 அகிலமுந் திசையுஞ் சுவனமும் விளங்க
வணிதிகழ் மக்கமா நகரின்
முகம்மதென் றுதித்து தீன்பயி ரேற்றி
மறைவழி தவறிடா நடத்திப்
பகரரு நபியாய் வேதமு முடைத்தாய்
வருவரென் றறிவுளோர் பகர்ந்த
நிகரருங் குரிசி லிவரல்லா லிந்த
நீணிலத் தினிலிலை யெனவும்.
1.20. 26
993 கலைநிறை மதியாய் மடிமிசை யிருப்பக்
கனவுகண் டகமகிழ் கதீஜா
நிலைமிசை யிவர்க்கே மனைவியா யிருந்திந்
நீணிலம் புரப்பது தவறில்
குலமிகப் பெருகுஞ் செல்வமும் வளருங்
குறைவிலாப் பதவியும் பேறு
மலகிலா தடைந்த தென்னவு முரைத்தே
னெனவரி வையர்க்குரை யென்றான்.
1.20. 27
994 மறைதெரி யறிவ னுரைத்தசொற் கேட்டு
மைசறா மனமிக மகிழ்ந்து
நிறைபதி தனைவிட் டிற்றைநாள் வரைக்கு
நிகழ்ந்தகா ரணமுள வனைத்துங்
குறைவிலா தெழுதி முத்திரை பொருத்திக்
குறித்தவ ரிடத்தினிற் கொடுத்துக்
கறையிலா மதிய மெனுமயில் கதீஜா
கரத்தினி லளித்திடு மென்றான்.
1.20. 28
995 விண்ணபத் திரத்தை மக்கமா நகரில்
விளங்கிழைக் கனுப்பிய பின்னர்
பண்ணினிற் சிறந்த மறைமுறை தேர்ந்த
பண்டிதன் பதமலர் போற்றி
வண்ணவார் தடக்கை முகம்மதைப் புகழ்ந்து
வாகனங் கொணர்ந்தனன் மைசறா
வெண்ணிறந் தனைய மக்கிக ளெவரு
மெழுந்தனர் குரிசிலு மெழுந்தார் .
1.20. 29
996 பாதையிற் புகுத மூதறி வுணர்ந்த
பண்டித னெனவரு மூசா
தீதற வெழுந்து முகம்மதின் வனசச்
செம்மல ரடியிணை பணிந்து
கோதறப் பழுத்த செழுங்கனி கொடுத்துக்
கொண்டலங் கவிகையை நோக்கி
மாதவர் தமையு மடிக்கடி போற்றி
மகிழ்ந்துதன் மனைவயிற் சார்ந்தான்.
1.20.30
ஊசாவைக் கண்ட படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 20க்குத் திருவிருத்தம்...996.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.21. கதீஜா கனவு கண்ட படலம்

997 முகைமுறுக் கவிழ்ந்து முருகுகொப் பளிக்கு
முளரியு முழுமணி நீல
நகைவிரித் தனைய குவளையுந் துகிரி
னறுமலர் விரிந்தென விரிந்து
திகழ்தருஞ் சேதாம் பலுங்குடி யிருந்து
திருவளர் வாவியின் வாளை
யுகடொறும் வெருவி யொதுங்கிய சிறைப்புள்
ளொலித்திடு மிடங்களுங் கடந்தார்.
1.21. 1
998 புனன்முகி லசனி யதிர்தொறுங் கிடந்து
புடைத்துவால் விசைத்தரி யேறு
சினமுடன் சிலம்பப் புகர்முகச் சிறுகட்
சிந்துரம் பிடியொடு மிரிந்து
நனைமல ருதறுங் காவகத் தொதுங்கு
நனிதிரள் குயினென மயில்க
ளினமணிச் சிறைவிட் டருநடம் புரியு
மிருவரை யிடங்களுங் கடந்தார்.
1.21. 2
999 படுகொலைப் பார்வை காருடற் கழற்காற்
பறிதலைப் பங்கிவேட் டுவர்தங்
கொடுமரங் குனித்துத் தூணியுந் தாங்கிக்
கொழுஞ்சரம் வலக்கரந் தூண்டிப்
புடைபுடை பரந்த மானினம் வீழ்த்திப்
பொருந்தவுண் டிருந்தசீ றூரும்
விடர்படர் கானற் பாலையுங் கடந்தார்
விறல்பெறு மறபினின் வேந்தர்.
1.21.3
1000 தொண்டையங் கனிக டோன்றியிற் சிறப்பத்
தோன்றிய தரியமா ணிக்கம்
விண்டலர் விரித்துக் காய்த்தன போலும்
விளங்கிடக் குருந்தொடு காயா
வண்டுறை பிடவுங் கொன்றையுஞ் செறிய
வளைதருங் குடியிடை பொதுவர்
வெண்டயி ருடைக்கு மொலிமறா முல்லை
வேலியுங் கடந்தயல் போனார்.
1.21.4
1001 பரித்திர ளனைத்து மொருபுற நெருங்கப்
பாதையிற் பல்லிய மெனவே
யெருத்தின மணிக ளொலித்திட வொருபா
லிலங்கிள வெயில்பிறந் துமிழக்
கரத்தினி நெடுவே லேந்திய மாக்கள்
கவுண்மதக் களிறென நடந்து
விரித்தவெண் குடையுந் துவசமு மலிய
விரைந்தொரு காவகம் புகுந்தார்.
1.215
1002 சந்தகில் திலகங் குரவுதேக் காரந்
தான்றிகோங் கேழிலைம் பாலைச்
சிந்துர மசோகு மாதவி நெல்லி
செண்பகம் பாடலந் தேமா
மந்தரை கமுகு புன்னைநா ரத்தை
மகிழ்விளா மருதெலு மிச்சை
குந்தமா சினிமா கடம்பில விதழி
குங்குமஞ் செறிதிரட் சோலை.
1.21. 6
1003 நித்திலத் திரளி னரும்பிளம் புன்னை
நிரைமலர் சொரிவன வொருபால்
கொத்தரும் பலர்த்திச் சண்பகத் தொகுதி
குவைதரச் சொரிவன வொருபால்
பத்தியிற் செறிந்த பாடலம் விரித்த
பாயலிற் சொரிவன வொருபால்
புத்தரி சொழுக்கு நிரைமகிழ் செறிந்த
புழைமலர் சொரிவன வொருபால்.
1.217
1004 முள்ளிலை பொதிந்த வெண்மடல் விரிந்து
முருகுமிழ் கைதக ளொருபால்
கொள்ளைமென் கனிகள் சிதறுமுள் ளீந்து
குறுங்கழுத் தசைவன வொருபால்
வெள்ளிவெண் கவரி விரிந்தபோற் பாளை
மிடறொசி வனகமு கொருபாற்
றெள்ளுநீர்க் குரும்பைக் குலம்பல சுமந்த
செறிதிரட் டாழைக ளொருபால்.
1.21.8
1005 தூய்திரட் பளிக்குக் கனியையா மலகஞ்
சொரிதரச் சிதறுவ வொருபாற்
காய்கதிர் நீல மணியென நாவற்
கருங்கனி சிதறுவ வொருபாற்
சேயுயர் தேமாச் செழுந்தலை குழைத்துத்
தீங்கனி யுகுவென வொருபாற்
சாய்பணர்க் கொழுவிஞ் சியின்கனி சிவந்த
தனமெனச் சொரிவன வொருபால்.
1.21.9
1006 தேங்குட மனைய முட்புறக் கனிக
டிகழ்தரச் செறிந்தன வொருபால்
மாங்கனி யமுதத் திவலைக டெறிப்ப
மலிதரச் சொரிவன வொருபாற்
பூங்குலைக் கூன்காய் பொன்பழுத் தொளிர்வ
போன்றன கதலிக ளொருபாற்
றீங்கில்பொற் கலசம் விண்டுசெம் மணிகள்
சிந்துமா துளைத்திர ளொருபால்.
1.21.10
1007 உலகமுந் திசையும் புகழுசை னயினா
ருதவுசந் ததியபுல் காசீஞ்
சலதர மனைய கரத்தினி லேற்றோர்
தம்மனங் குளிர்வபோற் குளிர்ந்து
நிலமிசை கிடையாப் பெருவளஞ் சுரந்து
நீடிரை வாவிக டிகழ
வலகிலாச் செல்வங் குறைவறா திருந்த
வணிதிகழ் வனதளிர்ச் சோலை.
1.21.11
1008 அறிவினுக் கறிவா யரசினுக் யரசா
யணியினுக் கணியதாய்ச் சிறந்த
மறுவிமெய் கமழ்ந்த முகம்மதுங் கூண்ட
மக்கிக ளனைவருஞ் செறிந்து
நிறைவளம் பலகண் டகங்களி கூர்ந்து
நிரைமணிப் புரவிவிட் டிறங்கித்
துறையின்முத் திறைக்குந் திரைத்தடஞ் சூழ்ந்த
சோலையி லிருந்தன ரிப்பால்.
1.21.12
1009 வானிழிந் தமர ரெண்ணிலக் கிலபேர்
முகம்மதி னிடத்தில்வந் துறைந்து
தேனிமர் மரவத் தொடையலுந் தரித்துத்
திகழ்மணிக் கலன்பல வணிந்து
பானுவின் கதிர்கள் பொருவுறா தியன்ற
பன்மணித் தவிசின்மே லிருத்திக்
கான்மலர் தூயொட் டகத்தின்மே லேற்றிக்
கண்கொளா தழகிருந் திலங்க.
1.21.13
1010 பல்லியங் கறங்கக் கொடித்திர ணுடங்கப்
பானிறக் கவரிகள் சுழற்ற
வெல்லவன் கதிரிற் படைக்கலஞ் செறிய
விந்துவெண் குடைதனி நிழற்றச்
செல்லுறழ் கரட மதகரி நெடுங்கச்
சிவிகையின் கணந்திசை மலிய
வல்லியின் கொடிபோ லமரர்தம் மகளிர்
மருங்கிரு பாலினு மிடைய.
1.21.14
1011 பரித்திர டொடர வானவ ரீண்டிப்
பரிமளப் பொன்னலர் தூற்றத்
தெருத்தலை புகுந்து பவனியி னுலவிச்
செழும்புகழ் முகம்மது வரவுங்
கருத்துடன் கண்ணுங் களிப்புற நோக்கிக்
கவின்மலர்ப் பதம்பணிந் திறைஞ்சத்
திருத்திழை மணியிற் குருத்தெனுங் கதீஜா
தெரிதரக் கனவுகண் டெழுந்தார்.
1.21.15
1012 கனவினை நனவென் றகமகிழ்ந் தெழுந்து
கதிர்மணி வாயிலை நோக்க
வினமத கரியும் பரியொடி ரதமு
மிருங்கடற் சேனையும் விருது
மனமல ருறைந்த முகம்மது தமையும்
வானவர் மகளிர் கடமையும்
புனைமணிக் கொடொயுங் கவிகையுங் காணார்
பொருந்திய துயரமே கண்டார்.
1.21.16
1013 இருடுணித் தெழுந்த மின்னெனப் பிறழு
மிழைபல திருத்தில ரிருண்ட
சுரிகுழன் முடியார் தோளணி தரியார்
சுண்ணமுஞ் சாந்தமும் பூசார்
சரிகரத் தணியார் மேகலை யிறுக்கார்
தளிர்மலர்ப் பதத்தணி தாங்கார்
மருமலர் சொருகார் வடுவெனச் சிறந்த
வரிவிழிக் கஞ்சன மெழுதார்.
1.21.17
1014 கந்துகங் கழங்கம் மனைகரத் தேந்தார்
கதிர்மணி யூசறொட் டாடார்
சிந்துரப் பிறைநன் னுதலியர் திளைத்த
சிற்றிலும் பேரிலுந் தேடார்
மந்தர மதிண்மண் டபத்திடைப் புகுந்து
மலர்க்குழற் ககிற்புகை மாட்டார்
சுந்தரக் கமலச் சீறடிக் கிசைந்த
சுடரலத் தகமெடுத் தெழுதார்.
1.21.18
1015 பஞ்சணை பொருந்தா ரிருவிழி துயிலார்
பழத்தொடு பாலமு தருந்தார்
கொஞ்சுமென் குதலைக் கிளியொடு மொழியார்
கொழுமடற் செவிக்கிசை கொள்ளார்
கஞ்சமென் மலர்த்தாள் பெயர்ந்திட வுலவார்
கடிமலர் வாசநீ ராடார்
வஞ்சிநுண் ணிடையார் தம்மிடத் துறையார்
முகம்மது மனத்திடத் துறைந்தார்.
1.21.19
1016 வேறு
மருமலர்ப் புயமுகம் மதுபொன் மாமதிற்
றிருநகர்த் தெருவரு பவனி சேர்தரு
முருகலர் குழலிதங் கனவின் முற்படக்
கருதிய துயரெனும் கடற்கு ளாயினார்.
1.21.20
1017 மலைநிகர் புயமுகம் மதுநன் மாமணத்
துலவிய பவனியின் கனவொன் றுற்றிடக்
கலைமதி நிகர்கதீ ஜாதங் காதலா
லலைதுயர்ப் பெருக்கினி லாழ்ந்திட் டாரரோ.
1.21.21
1018 துதிபெறுங் குவைலிது கருத்துத் துன்புறப்
பதியர்பே தகப்படப் பகர்வ ரோவெனு
மதிநிகர் முகம்மதிம் மனைவி யாகவென்
விதிவசம் பொருத்துமோ விலக்கு மோவெனும்.
1.21.22
1019 மடிமிசை மதிவரும் வரவு மாமறை
நெடியவன் மணமென நிகழ்த்தும் வார்த்தையுங்
கடிமணப் பவனியின் கனவு மாதுலன்
றிடமுறும் வசனமுந் சிதையு மோவெனும்.
1.21. 23
1020 கருத்தினுள் ளுறைமுதற் கனவை மைசறா
விரித்தெடுத் துரைத்தலும் விளங்கத் தேர்ந்துபொன்
வரைத்தடப் புயத்தனூ சாதன் வாக்கினா
லுரைத்ததென் னோவென வுளத்தி லெண்ணுமால்.
1.21.24
1021 நிலமிசை நபிப்பெயர் நிறுத்தும் பேர்களுக்
கலைவுறப் பெரும்புகை யவதி யுண்டெனக்
கலைவல ருறைத்தசொற் கருத்தி லெண்ணமுற்
றுலைதர வுடன்மெலிந் துருகி வாடுமால்.
1.21.25
1022 உரிமையி னுடனெழுந் தொழுகு மைசறா
வரைதரு பத்திரம் வரவுங் காண்கிலே
மெரிசுரப் பாலையிற் செய்தி யாவையுந்
தெரிதர விலையெனத் திகைத்துத் தேம்புமால்.
1.21.26
1023 விம்முறு மேங்குமெய் வருந்தும் வெய்துயிர்த்
தம்மவோ வெனுமுளத் தடக்கி யாழ்கடன்
மம்மரைக் கடப்பதெவ் வகைகொ லோவெனச்
செம்மலர் முகங்கரிந் திருந்து தேம்புமே.
1.21.27
1024 மன்னவன் குவைலிது வரத்திற் றோன்றிய
பொன்னிளங் கொடிவிழி பொருந்தி லாதிருந்
தின்னன துயரமுற் றெண்ணி யேங்கியே
தன்னுளத் தடக்கிமெய் தளருங் காலையில்.
1.21.28
1025 வழுவற நன்மொழி யெடுத்து மைசறா
வெழுதிய பத்திர மடைந்த தின்றெனச்
செழுமலர்க் குழலிய ருரைப்பத் தேமொழி
விழைவொடுங் கரத்தினில் விரைந்து வாங்கினார்.
1.21.29
1026 முத்திரை தனைவிடுத் தெடுத்து மூரிவெண்
பத்திரந் தனைவிரித் துவந்து பார்த்ததி
னுத்தரந் தனையுணர்ந் தறிய வுள்ளமும்
புத்தியுங் களித்துடல் புளகம் பூத்ததே.
1.21.30
1027 விரிதருங் காரணம் விளக்கி நற்புகழ்
தெரிதர முகம்மதென் றெழுதுஞ் சித்திர
வரிதொறு மிருவிழி வைத்து முத்தமிட்
டுரியதம் முயிர்பெறு முவகை யாயினார்.
1.21.31
1028 உரைப்பருங் காரணத் துறுதி யாவையும்
வரைப்புயன் மைசறா வரைந்த பத்திரந்
திரைப்படுங் கடலிடை தியங்கு வார்க்கொரு
கரைப்படுத் திடுமரக் கலத்தை யொத்ததே.
1.21.32
1029 தூயவர் காரணந் தொகுத்த பத்திரம்
பாய்திரை யமுதெனப் பிறந்த பைந்தொடி
காய்கனன் மெழுகெனக் கருத்துச் சிந்திட
மாய்வுறுந் துயர்க்கொரு மருந்து போன்றதே.
1.21.33
1030 விரைமல ருடுத்திகழ் மேக வார்குழற்
கரியமை விழிக்கதீ ஜாதகங் கையினிற்
பிரிவுறா துறைந்தபத் திரத்தைப் பெட்புட
னரசபித் தாலிபுக் கனுப்பி னாரரோ.
1.21.34
1031 வந்தபத் திரந்தனை வாங்கித் தம்முயிர்ச்
சந்ததி விளைத்தகா ரணத்தின் றன்மைநேர்ந்
திந்தநற் பதவிக ளியன்ற தோவெனச்
சுந்தரப் புயவரை துலங்க வீங்கினார்.
1.21.35
1032 வியனுறு பத்திரம் விளம்புஞ் செய்திகண்
டுயரபுத் தாலிபென் றோது மன்னவர்
செயிரறு முகம்மது வெனுஞ்சஞ் சீவியா
லுயிர்பரந் திடுவதோ ருடல தாயினார்.
1.21.36
1033 தருநிகர் கரத்தபீத் தாலி பாகிய
குரிசி லுங்கதீ ஜாவெனுங் கோதையும்
வருமதிக் கின்புறு மலர்க ளொப்பென
விருவரு முவகையிற் களித்தி ருந்தனர்.
1.21.37

கதீஜா கனவு கண்ட படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 21க்குத் திருவிருத்தம்...1033
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.22. மணம் பொருத்து படலம்

1034 உடல்குழைத் தெழுந்து செந்தே னொழுக்கிய மலர்ப்பைங் காவில்
வடவரை யனைய திண்டோள் வள்ளலு மறுவி லாத
கடகரி யனைய வெற்றிக் காளையர் பலருஞ் சேர்ந்த
விடபமும் பரியுந் துன்ன வெழுந்தனர் விரவி னன்றே.
1.22. 1
1035 சோலைவாய் விடுத்து நீந்தித் துவசமுங் குடையு மல்க
நீலமா மங்கு லங்கேழ் நெடுங்குடை நிழற்ற வெற்றிக்
காலவேல் கரத்தி லேந்திக் காளையர் மருங்கு சூழ
மாலையொண் புயத்தி லோங்க முகம்மது மினிதின் வந்தார்.
1.22. 2
1036 அகிலமுஞ் சுவன நாடு மமரரும் போற்றி வாழ்த்த
மிகுபுகழ் குவைலி தீன்ற மெல்லியல் களிப்புப் பொங்க
நகிலணி துகிர்க்கொம் பென்ன நாரியர் புளகம் பூப்ப
முகம்மது வென்னும் வள்ளன் மக்கமா நகரின் வந்தார்.
1.22. 3
1037 காரணக் கடலை யொண்கேழ்க் கதிருமிழ் மலையை யாதி
யாரணக் குரிசி லென்னு மகுமதை யெதிரிற் புக்கித்
தாரணிந் திலகு தோட்பூ தரத்தபூத் தாலிப் வெற்றி
வீரமுந் திறலும் வாய்த்த மென்கரத் தணைத்து மோந்தார்.
1.22. 4
1038 அணியிழை சுமந்த செவ்வி யனையெனும் பாத்தி மாவந்
திணைவிழி பெற்றே னென்ன விருகையாற் றழுவிப் பைம்பொன்
மணமலி பீடத் தேற்றி முகம்மதை யினிது போற்றிக்
கணநிரை யயினி நீராற் கண்ணெச்சிற் கழுவி னாரால்.
1.22. 5
1039 மறமுதிர்ந் திலங்கும் வெள்வாண் முகம்மது மினிது புக்கார்
திறலபூ பக்க ரென்னுஞ் செம்மலு மனையிற் சேர்ந்தார்
தொறுவினத் தொடுமப் பாசு மாரிதுஞ் சுபைறு தாமு
மறபிக ளெவருந் தத்த மணிமனை யிடத்திற் சார்ந்தார்.
1.22.6
1040 கட்கொலை படிறு நிந்தை களவுடன் கொடிய பாவ
முட்பட வளர்த்த மெய்யா னுறுமொழி யறுதி யில்லா
னட்பினைப் பகைத்துச் செய்த நன்றியைக் கொன்று நஞ்சார்
மட்படு கலமே யன்ன மனத்தபூ ஜகிலும் போனான்.
1.22.7
1041 பாங்கினிற் கணக்கர் சூழப் பரிசனக் குழுவந் தீண்ட
வாங்குவிற் றடக்கை வெற்றி மலிபுகழ் மைச றாவு
மோங்குமா நகரம்புக்கி யொளிர்மணித் தவிசி னாய
தேங்குழற் கதீஜா பைம்பொற் சீரடி வணக்கஞ் செய்தான்.
1.22.8
1042 தெரிமலர்க் கரங்கள் கூப்பிச் சேவடி வணங்கி நின்ற
வுரிமைதன் முகத்தை நோக்கி யொண்டொடி கதீஜா வென்னு
மரிவையாங் குற்ற செய்தி யறைகென வறைய மாரி
மருமலி புயங்கள் விம்ம வாய்புதைத் துருந்து சொல்வான்.
1.22.9
1043 கரும்பெனத் தோன்றிச் செம்பொற் கதிருமிழ்ந் திருந்த கொம்பே
சுரும்பிருந் திசைகொ டிண்டோட் டோன்றல் காரணங்க ளியாவுந்
தரம்பெற விவைகொ லென்னத் தானள வறுத்து மட்டிட்
டிரும்பெரும் புடவி தன்னு ளியாவரே யியம்ப வல்லார்.
1.22.10
1044 சேயுய ரமரர் போற்றுஞ் செவ்விய முகம்ம தென்ன
மாயிரும் புவியுட் டோன்றி மானுட வடிவு கொண்ட
நாயகர் புதுமை யெல்லா நானெடுத் துரைக்க நானூ
றாயிர நாவுண் டாகி லதிற்சிறி துரைப்ப னென்றான்.
1.22.11
1045 மரப்பதம் வழுத்தி யன்னோர் வாய்மொழி மறாது நின்றோர்
திரைப்பெரும் புவியின் மேலோர் செல்வமே பெறுவர் கேளார்
நிரைப்பெரு நரக மாழக் கெடுவர்நீ ணிலத்தி லென்னா
லுரைப்பதென் சிறியேன் றீட்டு மோலையே யுரைக்கு மென்றான்.
1.22.12
1046 மரவமுங் கியபொற் றிண்டோன் முகம்மது வரவு கண்டேன்
கரையிலாக் காட்சி கண்டேன் காசினி தோயாப் பாதம்
பிரிவுறாப் பதவி கண்டேன் பெண்களுக் கரசே யின்றுந்
திருவடி கண்டேன் காணாச் செலவமொன் றில்லை யென்றான்.
1.22.13
1047 தெண்டிரைப் புவன மேழுஞ் சேந்தபொன் னுலக மெட்டுங்
கொண்டுதன் னேமி யொன்றாற் கொற்றவெண் குடையு ளாக்கி
வண்டணி துதையுந் தண்டார் முகம்மதே புரப்பர் தேனுங்
கண்டுமொத் த்னைய சொல்லாய் காண்பது திண்ண மென்றான்.
1.22.14
1048 கடிகமழ் மரவத் திண்டோட் காளைதம் புதுமை யாவும்
வடிவுறத் தௌிந்து தேர்ந்த மைசறா வுரைத்த மாற்றம்
படிபுகழ் கதீஜா மெய்யிற் பசலைபூத் தெழுந்த காமக்
கொடிபடர்ந் தேற நாட்டுங் கொழுங்கொம்பு போன்ற தன்றே.
1.22.15
1049 மனையினுக் குயிராய் வந்த மைசறா வுரைத்த மாற்றஞ்
சினவுவேற் கருங்கட் பாவை செவிநுழைத் தகத்திற் புக்கி
நனிதுய ரூறு தொட்டு நதிப்பெருக் காக்கிப் பின்னுங்
கனைகடல் விரிவ தாக்கிக் கதித்தெழப் பெருக்கிற் றன்றே.
1.22.16
1050 செயிரறு கனவு மிங்கு செப்பிய மொழியு மோலைப்
பயனுமுன் னணித்துக் கணட பார்வையுங் கலந்தொன் றாகி
நயனுறு கதீஜா வுள்ள நடுக்கநெட் டுயிர்ப்பு மீறுந்
துயர்நெருப் பெழுக மூட்டுந் துருத்தியின் வியத்த தன்றே.
1.22.17
1051 வையகம் விளங்க வந்த முகம்மதின் செவ்வி காண
வையமி லமரர் மாத ரருந்தவம் புரிவ ரென்றாற்
செய்யகண் குளிரக் கணட செழுமுகிற் கரிய கூந்தற்
றையற முளத்தின் காதற் பகுதியார் சாற்றற் பாலார்.
1.22.18
1052 பெருகிய துயர மென்னும் பெருங்கட னீந்தி நீந்திக்
கரைபெறற் கரிதாய்ச் சோர்ந்து கண்படை பெறாது வாடிப்
பருவரல் படர்ந்து புந்திப் பயிரெனுங் கருத்தை மூடத்
திருமயி லின்பு றாது சிலபகல் கழிந்த பிற்றை.
1.22. 19
1053 மண்ணினுக் கரசாய் வந்த முகம்மதின் வடிவு கூர்ந்து
கண்ணினுங் கருத்து மாறா தடிக்கடி தோற்ற நாணிப்
பண்ணெனச் சிவந்த வாயார் பஞ்சணை பாயல் புக்கி
யெண்ணிலா தெண்ண முற்றாங் கிருந்தவர் துயிலுங் காலை.
1.22.20
1054 வயிரவே ரூன்றிச் சேந்த மாணிக்கப் பணர்விட் டோடி
யியன்மர கதத்தின் சோதி இளந்தளிர் குழைப்ப வீன்று
நயனுறு நகரை மூடி நற்கனி யுகுத்து வாசச்
செயமல ரிடைவி டாது சிரமிசைச் சொரிய மாதோ.
1.22.21
1055 வானமட் டோங்கி நீண்ட மாணிக்கத் தருவின் பொற்பூ
நானில முழுதும் விண்ணு நறைகமழ்ந் திடுவ நோக்கித்
தேனமர் குழலி னாருஞ் செல்வரும் பெரிது போற்றப்
பானலங் கடந்த கண்ணார் பயனுறுங் கனவு கண்டார்.
1.22.22
1056 மெல்லியல் கனவு கண்டு விழித்தெழுந் திருந்து நெஞ்சைக்
கல்லிய துயரி னோடுங் கருத்தொடுந் தௌிந்து பார்த்து
வல்லவ னுறக்கத் தென்னு மறைவலான் றன்னைக் கூவி
யல்லினிற் றெரியக் கண்ட காட்சியை யடுத்து ரைத்தார்.
1.22.23
1057 மடந்தைதங் கனவைக் கேட்டு மனத்தினுட் படுத்தித் தேர்ந்து
கடந்தநூன் முறையி னாலுங் கல்வியோர் கேள்வி யாலும்
படர்ந்ததன் னறிவி னாலும் பகுத்துச்சீர் தூக்கிப் பார்த்துத்
தொடர்ந்தபுன் முறுவ றோன்றத் தோகையர்க் குரைப்ப தானான்.
1.22.24
1058 இருநிலத் துறைந்த வேரீ மானிலை யெழுந்து நின்ற
தருமுகம் மதுநல் வாசந் தழைத்தல்தீன் விளக்க மின்பம்
வருகனி கலிமா வாழ்த்து வானவர் செயல்பூ மாரி
தெரிதரச் சொரித லும்மைத் திருமண முடித்த லென்றான்.
1.22.25
1059 புதியதோர் கனவி னுட்பப் பொருளினைத் தேர்ந்து சோதி
மதிநுதற் குரைத்துப் போற்றி மனமகிழ்ந் தெழுந்து வீரங்
குதிகொளும் வெள்வேற் செங்கைக் குவைலிது மருங்கிற் புக்குத்
துதிசெய்தங் குற்ற செய்தி யனைத்தையுந் தொகுத்துச் சொன்னான்.
1.22.26
1060 அவிரொளி விரிக்கு மேனி யகுமதின் மனைவி யாகப்
புவியெனும் வானும் போற்றப் பொருந்தனும் பொன்னே யென்னக்
குவைலிது கேட்டா நந்தக் கொழுங்கடற் குளித்துக் கூர்ந்து
தவமுய ரறிவ னோடுஞ் சம்மதித் திருந்தா னன்றே.
1.22.27
1061 சுரும்பிமிர் கரிய கூந்தற் சுடர்த்தொடி கதீஜா தம்பா
லரும்புகழ் மைச றாவை யழைத்தரு கிருத்தி நெஞ்சின்
விரும்பிய வுவகை கூரக் காரண வேந்தர்க் கன்பாய்ப்
பெரும்புவி மணத்தின் கோலம் பெற்றிலா தென்கொ லென்றார்.
1.22.28
1062 கூறிய மொழியை வேய்க்குங் குயிலுக்குங் கொடுத்துச் செந்தேன்
மீறிய மதுரச் சொல்லாய் விரும்பிய பயன்க ளியாவுந்
தேறிய கரணம் போகஞ் செழும்புவி யாக்கை போல
வூறிய வூழி னன்றி முடியுமோ வுலகத் தென்றான்.
1.22. 29
1063 சினப்படைச் செழுங்கட் கொவ்வைச் செவ்விதழ் சிறுவெண் மூர
லனப்பெடை கதீஜா பால்விட் டடலரி மைச றாமன்
கனப்பெருங் கவிகை யோங்கக் கடுவிடப் பாந்தண் மாய்த்த
வனப்பிருந் தொழுகுஞ் சோதி முகம்மதி னிடத்திற் சார்ந்தான்.
1.22.30
1064 வந்துதாள் வழுத்திச் செவ்வி மலர்க்கொடி கனவுங் காதற்
சிந்தையு ணினைவும் வேதந் தௌிந்தவ னுரையுந் தேனார்
கொந்தலர் மரவ மாலைக் குவைலிது மகிழ்வுங் கூறிட்
டந்தரங் கத்திற் சொன்னா னாண்மையு மறிவு மிக்கான்.
1.22.31
1065 மானவேற் றடக்கை வீரன் மைசறா வசனங் கேட்டுக்
கானம ருடலு முள்ளக் கருத்தும்பூ ரித்துச் சிந்தித்
தானவ னருளை யுன்னி யகத்தினி லடக்கி யுண்மைத்
தூநெறி வழுவா வள்ளற் றோற்றிடா வுவகை கொண்டார்.
1.22.32
1066 பொற்றொடிக் கதீஜா பாதம் போற்றிய மைச றாசொல்
வெற்றியுங் குவைலி தென்னும் வேந்தனுக் குறக்கத் தோதும்
பெற்றியின் மகிழ்ந்த வாறும் பெட்புறு கனவி னாலங்
குற்றவை யனைத்துந் தந்தைக் குரைப்பதற் குன்னி னாரால்.
1.22.33
1067 அணிநிரைத் தெதிர்ந்த வொன்னா ராருயிர் சிதைத்துச் சேந்து
திணிசுடர் விரிக்கும் வெற்கைத் திறலபித் தாலிப் தம்பாற்
பணிமறா தொழுகிச் செய்யும் பாலகன் மைச றாவை
மணிவகுத் தனைய திண்டோண் முகம்மது கூட்டிச் சென்றார்.
1.22.34
1068 தந்தைமாட் டேகி யங்ஙன் சார்பிட மறிந்து சார்ந்து
நந்தமர் தனிலு மிக்க நண்பின னிவனெவன் றோதி
மந்திர மொழியா யேதா வாசக முளதென் றான்றன்
சிந்தையை விளக்க மாகக் கேளுதி தெரிய வென்றார்.
1.22.35
1069 மன்னர்மன் சொற்கேட் டந்த மைசறா தன்னைக் கூவித்
தன்னக மடைந்தன் பாகத் தனித்துவைத் துள்ளத் துற்ற
நன்னய மொழிக ளியாவு மறையினி னவிற்று கென்னப்
பொன்னெடுத் துரைத்த தென்னப் புகன்றெடுத் துரைக்க லுற்றான்.
1.22.36
1070 நேரிழை கதீஜா பாலி னிகழ்ந்தது முறக்கத் தென்னும்
பேரறி வாளன் றேர்ந்து குவைலிதுக் குரைத்த பேச்சு
மூர்மனத் துயராற் றன்பான் மணமென வுரைத்த வாறுஞ்
சோர்விலா துரைத்தான் மிக்க சூழ்ச்சியிற் றௌிந்த நீரான்.
1.22.37
1071 நிரைத்தெடுத் துரைத்த சொற்கேட் டருளுறை யபித்தா லீபு
புயவரை பூரித் தோங்கிப் பொருவிலப் பாசா ரீது
வயவரி ஹமுசா வீறாய் மன்னுசோ தரரை யெல்லா
நயனுற வழைத்தி ருத்தி நடந்தசொல் லனைத்துஞ் சொன்னார்.
1.22.38
1072 பாட்டளி மிழற்றுந் தேறற் படலைவீற் றிருந்த வீரத்
தோட்டுணை யபித்தா லீபு சுடர்நகை முறுவல் வாயாற்
கேட்டசொல் லமிர்தந் தன்னாற் கேகய முகில்கண் டென்னப்
பூட்டிய சிலைக்கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார்.
1.22.39
1073 உடைமையிற் பணத்திற் சாதி யுயர்ச்சியில் வணக்கந் தன்னின்
மடமயி லழகி லொவ்வா மாட்சியிற் கதீஜா தம்மைக்
கடிமண முடிக்க நாடிக் கருதின பேர்க ளெல்லா
மடிகளென் றுரைநா நீட்ட வச்சமுற் றிருந்தா ரன்றே.
1.22.40
1074 அந்நெறி யதனா லியாமுங் கேட்பதற் கைய மானோம்
நன்னெறி மொழிக்க தீஜா மனையினி னடந்த செய்தி
யின்னணங் கேட்டோஞ் செல்வ மணத்தினுக் கிசைந்த தூது
முன்னுதல் பொருளே யென்ன யாவரு மொழிந்தா ரன்றே.
1.22.41
1075 அந்நெறி யதனா லியாமுங் கேட்பதற் கைய மானோம்
நன்னெறி மொழிக்க தீஜா மனையினி னடந்த செய்தி
யின்னணங் கேட்டோஞ் செல்வ மணத்தினுக் கிசைந்த தூது
முன்னுதல் பொருளே யென்ன யாவரு மொழிந்தா ரன்றே.
1.22.42
1076 வல்லமை யறிவிற் றேர்ந்த வார்த்தையுத் தரத்திற் சூழ்ச்சிச்
சொல்லினுட் பொருளி னுட்பத் துடரறிந் துரைக்க வேண்டி
னல்லெழில் ஹமுசா வல்லா னகரின்மற் றுண்டோ வென்னப்
பல்லரும் போற்று மாற்றம் பகர்ந்தன ரபுத்தா லீபே.
1.22.43
1077 வேறு
திறலறிவ ரபித்தாலி புரைத்தமொழி யனைவருந்தஞ்
சிந்தை கூர்ந்து
துறுமலர்ப்பொற் புயத்தமுசா தமையழைத்து மணமொழியைத்
தொகுத்துப் பேசி
நிறைநிலைமை தவறாத குவைலிதுபா லினிதேகி
நிகழ்த்து வீரென்
றறைதருமுன் னவர்மாற்றம் பின்னவருந் தலைமேற்கொண்
டன்பு கூர்ந்தார்.
1.22.44
1078 மனமகிழ்வு மனக்களிப்பு மருங்குவர வெழுந்தமுசா
வாயி னீங்கி
யினமணியொண் கதிர்மாடத் திடுமணிவில் லெறிப்பவட
லேறு போலத்
தினகரன்மெய் மறுகுமணி மறுகூடு மறுகாது
சென்று நீங்காக்
கனகமழை பொழிமேகக் குவைலிதுவாழ்ந் திருந்ததலைக்
கடையிற் சார்ந்தார்.
1.22.45
1079 அபுத்தாலிப் திருத்துணைவ ரறத்தாறு வழுக்காத
வண்ண னீங்காக்
கவுட்டான மொழுகுமுரட் கரித்தானை நெருங்குமணிக்
கடையி லாகிப்
புவித்தாரை நடத்திமறு புறத்தேசப் பொருளனைத்தும்
பொருப்புப் போலக்
குவித்தானை சொலற்கரிய குலத்தானைக் குவைலிதைக்கண்
குளிரக் கண்டார்.
1.22.46
1080 இருந்தவனு மெதிராகி ஹமுசாதம் மெழிற்கரந்தங்
கரத்தி லேந்திப்
பெருந்தவிசி னினிதிருத்தி யருகிருந்து பிரியமொழி
பேசிப் பேசி
விரிந்தபிள வரிந்தவிலைக் கருப்பூர முடனளித்து
வெற்றி வேந்தே
யருந்தவமே யெனப்போற்றி யிவணடைந்த வரவாறே
தறியே னென்றான்.
1.22.47
1081 தெரிந்தமறை முறையாலுந் தேர்ந்தவர்சொற் டௌிவாலுந்
தெருண்ட மேலோ
யருந்தவமா யெம்மினத்தோ ராருயிரா யருமருந்தா
யப்துல் லாபா
லிருந்தமணி யாயுதித்த முகம்மதெனும் விடலைகருத்
தினிது கூரப்
பொருந்தமண முடிப்பதற்கு வந்தேனென் றினையமொழி
புகல்வ தானார்.
1.22.48
1082 இந்நகரிற் குறைஷிகணம் மினத்தவரின் மதித்தவர்தம்
மிடத்தில் வாய்ந்த
பொன்னனைய மடவாரைத் தருதுமென வவரவரே
புகல்கின் றாராற்
றன்னவரிற் பெரியாரின் மதியாரிற் றவத்தோரிற்
றலைமை யோரி
னின்னையல திலையெனவே வவருரைத்த மொழியனைத்து
நிகழ்த்தி யன்றே.
1.22.49
1083 மாற்றுரைநுங் கருத்திலுறும் படிகேட்டு வருதியென
மறுவி லாது
போற்றியுரைத் தனரெனது முன்னோரி னுரைப்படியே
புகன்றேன் மிக்க
தேற்றமுறு மனத்தாய்ந்து நிகழ்காலம் வருங்காலச்
செய்கை நோக்கி
யூற்றமுட னுரைத்திடுக வவ்வுரையின் படிநடப்ப
துறுதி யென்றார்.
1.22.50
1084 தீட்டிதிறற் புகழ்ஹமுசா வுரைத்தமொழி யமுதமழை
செவியிற் பாய்ந்து
நாட்டமுறு மனத்தடத்தை நிரப்பிடச்செம் முகமலர்ந்து
நவில்கி லாது
கூட்டுமுத லவன்விதிப்பு மகள்கனவு மிவைநிகழ்ந்த
குறிப்பு நோக்கிப்
பூட்டுமணிக் கதிர்வலய நெகிழவடிக் கடிபுயங்கள்
பூரித் தானே.
1.22.51
1085 வடிவாலுங் குணத்தாலுங் குலத்தாலும் முகம்மதுநேர்
மற்றோ ரில்லைப்
படியாளு முதியாரி லியாவரவர் மணம்பொருந்தப்
பகர்ந்தி டாதார்
பிடியாரு மென்னடைக்கொம் பினைக்கதீஜா வெனத்தமியேன்
பெற்ற பேறைக்
கடியாரு மலர்சூட்டி நும்மிடத்திற் றருகமனங்
கருதியிற் றென்றே.
1.22.52
1086 எம்மனத்தி னுறுங்களிப்பு நுந்துணைவர்க் கியம்பியநும
தினத்து ளானோர்
தம்மனத்துக் கிசைந்தபடி நன்மொழிகள் சிலதெரிந்து
சாற்றி வீறார்
செம்மலிளங் களிறனைய முகம்மதையென் மருகரெனச்
செவ்வி தாக்கி
வம்மெனமற் புயத்தமுசா தமையனுப்பி யினிதிருந்தான்
மதிவல் லோனே.
1.22.53
1087 நினைத்தபடி முடிந்ததென மனத்தடக்கி யெழுந்தமுசா
நெறியி னேகிச்
சினத்தடக்கை மலையெனவுட் களிப்புமத மொழுகமணித்
தெருவு நீந்திக்
கனைத்தகடன் முகட்டெழுந்த கதிர்கடுப்ப வருவதுகண்
கவர நோக்கி
யினத்தவர்முன் னவரிதய முககமல நகையினொடு
மிலங்கிற் றன்றே.
1.22.54
1088 முன்னவர்தம் முன்னேகிப் பின்ன்வரு மிருகரங்கண்
முகிழ்த்துத் தாழ்த்துத்
தன்னிதய மலர்மொழித்தே னாவழியே யொழுகியவர்
செவியிற் சார
மன்னவர்மன் குவைலிதுதன் மருங்கிருந்து மணமொழியின்
வரலா றெல்லாஞ்
சொன்னதுவு மவன்மறுத்துச் சொன்னதுவும் விரித்தெடுத்துச்
சொல்லி னாரால்.
1.22.55
1089 திருத்துணைவ ருரைத்தமொழி யபித்தாலிப் கருத்தூடு
திளைப்ப ஹாஷிம்
பெருத்தகுலத் தவர்க்கோதிக் குறைஷிகளின் முதியாரைப்
பெரிது கூட்டிப்
பொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவெனப்
பொருவி லாத
குருத்தவள மணிமாலைக் குவைலிதுபாற் குறித்தெழுந்தார்
கொற்ற வேந்தர்.
1.22.56
1090 ஆரிதுகு தம்சுபைறு அப்துல்ககு பாஅபூல
கபுகை தாக்குக்
காரேயும் லிறாறப்பா சுடன்ஹமுசா வுடனேமு
கைறா தானுஞ்
சீரேறு மபித்தாலிப் அப்துல்லா மதலையெனுஞ்
செவ்வி யோர்க்குத்
தாரேறு வதுவைமொழி பகரவரும் வரவாறு
தன்னைக் கேட்டான்.
1.22.57
1091 அருமறைதேர் குவைலிதுகேட் டகத்திலடங் காவுவகைப்
பெருக்கா நந்த
மிருகரையும் வழிந்தகடற் குளித்துநடு வெழுந்துமிதந்
தெதிரே புக்குத்
தருவனைய அபுத்தாலிப் தம்முடனே மன்னவர்க
டமையும் போற்றித்
தெரிகதிரா சனத்திருத்தி யனைவருக்கு முறைமுறையே
சிறப்புச் செய்தான்.
1.22.58
1092 சொல்லரிய காரணத்துக் குறுபொருளாய் நமர்க்குயிராய்த்
தோன்றித் தோன்றுஞ்
செல்லுலவு கவிகைநிழல் வள்ளலுக்கு மணமுடிக்குஞ்
செய்தி யாக
வல்லமைஹா ஷீம்குலத்துக் கனைவோருங் குறைஷிகளு
மகிழ்ச்சி யாயென்
னில்லிடத்தில் வரமுதனாட் கிடையாத பெருந்தவஞ்செய்
திருந்தே னென்றான்.
1.22.59
1093 அவ்வுரைகேட் டபுத்தாலி பகக்களிப்புத் தலைமீறி
யரசே கேளீர்
மௌவல்கமழ் குழன்மயிலை யென்மகற்கு மணமுடிக்க
வரப்பெற் றேனாற்
பௌவநதி சூழ்பாரைக் புரந்தளிக்கும் பெரும்பதவி
படைத்தேன் செல்வ
மெவ்வெவையும் படைத்தேனிங் கினிக்கிடையாப் பொருளுமெனக்
கெய்து மென்றார்.
1.22.60
1094 இருவருஞ்சம் மதித்துரைத்தா ரெனக்குறைஷிக் குலத்தரச
ரிதயங் கூர்ந்து
மருமருபூங் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை
வகுத்துக் கூறித்
தெரிதருசீ தனப்பொருளு மின்னதென வகைவகையாய்த்
தௌியச் சாற்றிப்
பொருவரிய பொற்பிளவும் வெள்ளிலையுந் தருகவெனப்
புகழ்ந்திட் டாரால்.
1.22.61
1095 வெள்ளிலைபா கேலமில வங்கமுடன் றக்கோலம்
விரைகற் பூர
மள்ளியசந் தனச்சேறும் பொற்கலத்தில் குவைலிதெடுத்
தருள வாங்கி
வள்ளியோர்க் கினிதீந்து மறையோர்க்கு மெடுத்தருளி
வலக்கை சேர்த்தித்
தெள்ளியநன் முகூர்த்தமுதற் றிங்களென வகுத்தரைத்தார்
செவ்வி யோரே.
1.22.62
1096 இலங்கிலைவேற் குவைலிதுபா லிருந்தபசா ரத்தினுட
னெழுந்து நீங்கா
வலங்கலென புயத்துணைவ ரனைவரொடு மபூத்தாலி
பன்பு கூர
விலங்கலணி வளர்மாட நகர்வீதி தனைக்கடந்து
விரவி னேகிக்
குலங்கெழும மனைபுகுந்து மனைவியர்க்கு மணமொழியைக்
கூறி னாரால்.
1.22. 63
மணம் பொருத்து படலம் முற்றிற்று. 766 ஆகப் படலம் 22க்குத் திருவிருத்தம்...1096.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.23. மணம்புரி படலம்

1097 குறைஷி மன்னவ ருடனபுத் தாலிபுங் குழுமி
நிறைசெய் மாமதி முகம்மதின் மணவினை நிலவ
விறைவ ரியாவரு மறியவிந் நகர்க்கெழின் முரச
மறைக வென்றலு மெழுந்தனன் கடிமுர சறைவான்.
1.23.1
1098 ஒட்டை மீதினின் மணமுர சினையெடுத் துயர்த்தி
விட்டு வெண்கதி ருமிழ்மணி மறுகிடை மேவி
வட்ட வாருதிச் செல்வமொத் திந்நகர் மாக்க
ளிட்ட மாயினி தூழிவாழ் கெனவெடுத் திசைத்தே.
1.23.2
1099 ஹாஷி மாகுலத் தப்துல்லா மகரணி மருவி
வாச மெய்முகம் மதுபெறும் புதுமணக் கோலம்
காசி லாவிதுக் கிழமையி னிரவெனக் காட்டிப்
பாச முற்றவர்க் குரைப்பதுண் டெனப்பகர்ந் திடுவான்.
1.23.3
1100 நறைகொள் வாயிலின் மகரதோ ரணங்களை நடுமி
னிறையு மாடங்கள் புதுக்குமின் கொடிநிரைத் திடுமி
னுறையும் வெண்சுதை மதிடொறுங் கரைத்தொழுக் கிடுமின்
குறைவி லாதபொற் பூரண குடங்கள்வைத் திடுமின்.
1.23.4
1101 பூணு நல்லிழை பூணுமின் குழற்ககிற் புகைமின்
காணொ ணாவிடைக் கம்பொன்மே கலைகவின் புனைமின்
பாணி யிற்சரி தோளணி பலபரித் திடுமின்
வாணு தற்கணி கடுவரி விழிக்குமை வரைமின்.
1.23. 5
1102 இரவ லர்க்கினி தருளொடு மின்னமு திடுமின்
வரைவி லாதெடுத் தேற்பவர்க் கணிவழங் கிடுமி
னிருமை யும்பலன் பெறுமினென் றினையன வியம்பி
யரவ மீக்கொளக் குணிலெடுத் தணிமுர சறைந்தான்.
1.23. 6
1103 இந்த மாமொழி பகர்ந்தெழு தினமுர சியம்ப
மந்த ராசல மாளிகை மறுகுக டோறுங்
கந்த மென்மலர்த் துகடுடைத் திருநிலங் கவினச்
சுந்த ரக்கதிர் மடந்தையர் கதைமெழுக் கிடுவார்.
1.23.7
1104 இடன றத்திருக் காவண நிரைநிரைத் திடுவார்
நடலை யுள்ளற மகரதோ ரணம்பல நடுவார்
விடுசுடர்ப்பட மெடுத்துயர் வௌியடைந் திடுவார்
குடுமி மாடத்தி னணியணிக் கொடித்திர ணடுவார்.
1.23. 8
1105 இடைப ழக்குலை யொடுகத லிகணிரைத் திடுவார்
மடல்வி ரிந்தபூங் கமுகினை நிறுவிவைத் திடுவார்
கடிந றாவொழு கிடக்கொடிக் கரும்புக ணடுவார்
துடர ணிக்குலைத் தெங்கிள நீர்கடூக் கிடுவார்.
1.23. 9
1106 நறவு சிந்திடக் கனியொடு சூதங்க ணடுவார்
நிறையும் பொற்சுளை முட்புறக் கனிநிரைத் திடுவார்
மறுவின் மாதுளைக் கனியொடும் பூவொடும் வனைவார்
செறிதி ரட்கொழு விஞ்சியுங் கனியொடு சேர்ப்பார்.
1.23. 10
1107 வன்ன பேதபட் டாடைகொய் தணிநிரை வனைவார்
பொன்னி னன்மலர் மாலைக டுயரறப் புனைவார்
நன்ன யம்பெற நறுக்கிய நறுக்குநாற் றிடுவார்
துன்னு வெண்கதிர்க் கற்றைபோற் கவரிதூக் குவரால்.
1.23.11
1108 முல்லை சண்பகம் படலஞ் செவ்விதழ் முளரி
மல்லி கைமடற் கைதைமா மகிழ்மருக் கொழுந்து
பல்ல வத்தொடு நிரைநிரை பன்மலர் தொடுத்தாங்
கெல்லை யில்லெனத் தூக்குவ ரெழில்விளங் கிழையார்.
1.23.12
1109 சால வெண்முகைப் புன்னையின் றண்மலர் தொடுத்து
நால விட்டதிற் றும்பிக ணடுநடு வதிந்த
கோல மாக்கட லீன்றமுத் திலங்கிடக் கோத்து
நீல மாமணி யிடையிடை தொடுத்தன நிகர்த்த.
1.23.13
1110 குவளை மைவிழிச் சுரிகுழ லியர்கொழுங் கரத்தாற்
றுவளு மாதுளை மலரினை நிரைநிரை தொடுத்துத்
தவள மாமணிப் பந்தரிற் றூக்கிய தன்மை
பவள மாலிகை நான்றன போன்றன பாங்கர்.
1.23.14
1111 சலதி வெண்டிரைத் தரளவெண் மணியொடு தயங்கக்
குலவு நீலமா மணியிடை கோத்தவை தூக்கி
யிலகு பூந்துகிற் பந்தரின் வயினிடு கதிர்க
ணிலவு வெண்கதி ரொடுமிருள் பரந்தென நிகர்த்த.
1.23.15
1112 மாச டர்த்தெறி மரகத மணிநிறை வடங்க
ளூச லாயணி நான்றிட வுமிழ்பசுங் கதிர்கள்
பூசு சந்தனச் சுவர்தொறும் வாயிலின் புறத்தும்
பாச டைத்திரள் விரிந்தன பாரினும் பரப்பும்.
1.23. 16
1113 மிக்க செம்மணித் தொடையலில் விளங்கிய கதிர்கள்
பக்க மீக்கொளப் பந்தரின் வயிர பந்திகளி
னொக்க வெங்கணும் பரந்தது நிறைந்திட வுயர்ந்த
செக்கர் வானக மீனொடு திகழ்வன சிவணும்.
1.23.17
1114 அறைப்பு றத்தினு மாலயத் திடத்தினு மணியாற்
சிறப்பு மிக்கன செய்தவத் தெருத்தலை தோறு
முறப்ப சந்தசெங் குமிழ்க்கிளி யினத்தொடு மொழுங்காய்ப்
பறப்ப தொத்தன பாசிலைத் தோரண பந்தி.
1.23. 18
1115 கனக மாமழை பொழிதர வருமபுல் காசீ
மனதி னன்னெறி யொழுங்குறு மாட்சிஒயின் மான
வினம ணிக்கதிர் தவழ்நிலை மேனிலை யெவையும்
புனைமு கிற்குல மொத்தென வகில்புகைத் திடுவார்.
1.23. 19
1116 காக துண்டமுஞ் சந்தனக் கடிகையுங் கலந்து
தோகை மாரிடு புகைத்திர ளிடையிடை தோன்று
மாக மூடெழு மண்டபக் கொடுமுடி வயிர
மேக மூடுறை மின்னெனப் பிறழ்ந்தொளி மிளிரும்.
1.23. 20
1117 குங்கு மஞ்செறி தனத்தியர் செழுங்குழல் விரித்துப்
பொங்கு பன்னறை யூட்டிய காழகில் புகைப்ப
தெங்க ணும்பரப் பிடவொளி திகழெழின் முகங்கண்
மங்கு லூடுவெண் மதியமொத் திருந்தன மாதோ.
1.23.21
1118 நிலைகொண் மாடத்து மண்டப மருங்கினு நிமிர்ந்த
சிலைநி கர்த்தமே னிலையினுஞ் செவ்வரி விழியார்
குலிக மார்ப்பற வரைத்தெடுத் தெழுதிய கோல
மலைகண் மீதினும் பவளங்கள் படர்ந்தென வயங்கும்.
1.23.22
1119 புகைத்த காரிருட் குழன்முடித் தருமலர் புனைவார்
பகுத்த நன்னுத றுலங்கிடச் சுடிகைகள் பதிப்பார்
தொகுத்த காதினிற் பலவணித் தொகைசுமத் திடுவார்
மிகைத்த வேல்விழிக் கஞ்சனம் விரித்தெழு துவரால்.
1.23.23
1120 பூக மென்கழுத் திடனறக் கதிர்மணி புனைவார்
பாகு றச்செழுந் தோள்வளை பலபரித் திடுவார்
நாக மென்முலைக் குவட்டினன் மனிவடந் தரிப்பார்
மேக லைத்திரண் மணியொடு மருங்கில்வீக் கிடுவார்.
1.23.24
1121 உவரி மென்னுரை போலும்வெண் டுகில்விரித் துடுப்பார்
குவித னத்திடை சந்தனக் குழம்புகள் செறிப்பார்
திவளு நல்லொளி நுதலிடை திலத்ங்க ளணிவா
ரவிருங் கேழலத் தகமிரு பதத்தினு மணிவார்.
1.23.25
1122 சந்த மான்மதஞ் செழும்பணி நீரொடு சாந்தங்
கந்த மென்னறும் பொடியொடு விரையெழக் கலக்கி
யிந்து வெண்கதிர் பரப்பிய மதிணடு விடுவார்
சிந்து வார்தெருத் தலைதொறு மிடனறத் தௌிப்பார்.
1.23.26
1123 வட்ட வான்மதி முகத்திய ரிடத்தும்வாள் விரித்து
விட்ட வேற்கர வீரர்க ளிடத்தினு மெதிர்ந்து
தொட்டி தோறும்பன் னீர்சொரிந் தருநறை மறுவி
யிட்ட சந்தனக் குழம்புகள் கரைத்திறைத் திடுவார்.
1.23.27
1124 கொந்து றைந்தபூம் பாளைவாய் வெள்ளிவெண் குடங்கள்
சந்த மென்னறை மெழுக்கிடுந் தலத்திடை தயங்கப்
பந்தி யாகவைத் திருப்பது பானிலாக் கதிரோ
டிந்து வாயில்க டோறும்வந் திருந்தன வியையும்.
1.23.28
1125 பால னத்தொடும் பழத்தொடும் பசித்தவர்க் கிடுவார்
கோல மென்றுகி னாடகர் கரத்தினிற் கொடுப்பார்
சோலை வாய்க்குயி லெனுமிசை யவர்க்கணி சொரிவா
ரேலு நன்மறை யவர்க்கிரு நிதியெடுத் திறைப்பார்.
1.23.29
1126 வான மாமுகி லெனச்சொரி தரவரு மாந்தர்
தூந றுங்கதிர் மணியொடு நிதியினைச் சுமந்து
தீன ரியாசக ரியாரெனத் தெருத்தொறுந் திரிந்து
தான மேற்பவ ரில்லென மனத்திடைச் சலிப்பார்.
1.23.30
1127 மதியின் மிக்கவ ரொருவரால் வருங்கிளை யனைத்துங்
கதியும் வெற்றியும் வீரமும் பெறுவரக் கதைபோற்
புதிய பேரொளி முகம்மதின் மணவினைப் பொருட்டாற்
பதியும் வீதியு மாடமு மணம்படைத் தனவே.
1.23.31
1128 வேறு
சிறுபிறை நுதற்க தீஜா திருமனை யிடத்தும் வெற்றி
விறலபித் தாலி பென்னு மெய்மையோர் மனையின் முன்னு
மறபிகண் மனையுஞ் செம்போ னாவணத் திடத்தும் வேந்தர்
மறுகுக டோறுஞ் செல்வ மணச்சிறப் பியன்ற பின்னர்.
1.23.32
1129 வேறு
அற்புதமாய் விண்ணவரும் புகலரிய ஆபுஸம்சத்
தரிய நீரைப்
பொற்குடத்தி லெடுத்தமுதக் கதிர்க்கிரண மலைமிசையே
பொழிவ போலச்
சிற்பரியற் றியபலகை நடுவிருத்தி முகம்மதுதஞ்
சிரசின் மீதே
சொற்பழுத்த மறைமுதியோர் மங்கலவாக் கியங்கறங்கச்
சொரிந்தா ரன்றே.
1.23. 33
1130 மஞ்சனத்தீ ரம்புலர்த்தி விரைவாசப் புகைக்கொழுந்து
வயங்கச் சேர்த்திப்
பஞ்சினின்மென் றுகிலரையி னெடுத்தணிந்து செழுங்சுவன
பதிக்கு மேலா
ரெஞ்சலில்வெண் கதிர்திரண்டு வந்திருந்த தெனச்சருவந்
திலங்கச் சூட்டிக்
கஞ்சமல ரெனச்சேந்த கண்னிணையிற் சுறுமாவுங்
கவினச் செய்தார்.
1.23.34
1131 பொன்காலுந் திரண்முலையார் கண்ணேறு படராது
பொதிதல் போலுஞ்
சின்காத வழிக்ககலும் வேதமொழி யனைத்தும்வந்து
செறிந்த போலும்
வன்காபிர் விழிக்கணங்க டிருமேனி தீண்டாது
மறைத்தல் போலு
மின்கால வெண்கிரணக் குப்பாய மெடுத்தணிந்த
வியப்புத் தானே.
1.23.35
1132 மருந்தமுத மெனுங்கலிமாத் தனையிணங்கா ருயிரனைத்தும்
வானி லேற்ற
விருந்ததென வயிரமணிப் பிடியுடைவா ளெடுத்துமருங்
கிடத்துச் சேர்த்து
விரிந்தசெழுங் கரகமல விரலிதழின் மணியாழி
விளங்கித் தோன்றப்
பரிந்தணிந்தா ரழகுவெள்ளம் வழியாது மருங்கணைக்கும்
பான்மை போன்றே.
1.23.36
1133 மண்முழுது மாறரியச் சிவந்தகதிர் மணிக்கோவை
மறுவி லாத
வெண்மணிநித் திலவடமு மேருவெனும் புயவரையில்
விரித்த காந்தி
கண்முழுது மடங்காத வெழினோக்கி யவரவர்கண்
ணேற டாது
தண்மதியும் வெஞ்சுடரும் கரநீட்டி யிருபுறத்துந்
தடவல் போலும்.
1.23.37
1134 பொன்னிதழ்க்குங் குமத்தொடையன் முகம்மதுதம் வயிரவரைப்
புயத்திற் சாத்தி
மின்னிடவெண் மணித்தொடையுஞ் செம்மணியும் போற்காந்தி
விரிந்த தோற்றந்
தன்னிலைமை தவறாத முதியோரை யெவரேனுஞ்
சாரில் வாய்ந்த
நன்னிலநற் குணமறிவு பெறுவரெனும் பழமொழியை
நவிற்றிற் றன்றே.
1.23.38
1135 அவனிதனிற் றனியரசை நயினாரை முகம்மதையா
ரணத்தின் வாழ்வைக்
கவினொழுக வலங்கரித்துப் பவனிவர வெனவெழுகச்
கருதுங் காலைச்
சுவனபதி தனைத்திறமி னிரயமடைத் திடுமினெனத்
தூயோன் சத்தம்
பவனமுமண் ணுலகுகடன் மலையுந்திசை திசையனைத்தும்
பரந்த தன்றே.
1.23.39
1136 வானவர்பொற் பூமாரி சொரிந்திடமண் ணவர்வாழ்த்த
மறையோ ரேத்தத்
தானமென வேற்பவர்க்குப் பொன்பணிதூ செடுத்தருளிச்
சடங்கு தீர்த்துக்
கானமர்பூங் குழன்மடவா ரயினிநீர் கொணர்ந்தெடுத்துக்
களித்துப் போத
வீனமில்பல் லியமகரக் கடலெனவார்த் தெடுப்பவினி
தெழுந்தா ரன்றே.
1.23.40
1137 வேறு
கானறு மல்லிகை கமல மெல்லிதழ்ப்
பூநறும் பாயலி நடந்து பொங்கொளி
தேனறுந் தெரியலார் செம்பொ னாட்டுறை
வானவர் வாழ்த்திட வாசிமேற் கொண்டார்.
1.23.41
1138 முறைமுறை தண்ணுமை முருடு துந்துமி
சிறுபறை சல்லரி பதலை திண்டிம
மறுவறு பேரிகை முரசு மத்தளி
யறைதிரைக் கடலொலி யடங்க வார்த்தவே.
1.23.42
1139 பெருகிய கடன்முகட் டெழுந்த பேரொளிப்
பரிதியொத் திருந்தன குரிசில் பான்மைமேல்
விரிதரு மதியெனக் கவிகை வெண்ணிலாச்
சொரிவன கற்றையங் கவரி தூங்கின.
1.23.43
1140 அவிரொளிக் கொடிமிடைந் தடர வண்ணலார்
பவுரியு னடுமுறைப் பணில மார்த்தெழக்
குவிகைகொம் புகள்குமு குமெனப் பல்லியஞ்
செவியடைத் தனதெருத் தலைக ளெங்குமே.
1.23.44
1141 மதித்தென மறுகிடை விண்ணின் மண்ணெழப்
பதித்தன குளம்புவிட் டெறிந்து பாரிடை
மிதித்தென வில்லென வேக மீக்கொளக்
குதித்தன நெருங்கின குதிரை யீட்டமே.
1.23. 45
1142 மதங்களைச் சிந்தின மறுகின் மாந்தர்தம்
பதங்களை வழுக்கிடப் படர்செ விச்சுள
கிதங்கொள்வண் வினம்புடைத் தெழுப்ப வெங்கணுங்
கதங்கொடு நெருங்கின கரியின் கூட்டமே.
1.23.46
1143 கடுவிடப் பணத்தலை நௌியக் கண்ணகன்
படிகுழித் தெழுதுகள் பரப்பிப் பாங்கினிற்
கொடிநிறைத் தசைந்தகோ லாரி வண்டில்க
ளிடைவௌி யின்றென வெங்கு மீண்டின.
1.23.47
1144 இசையொடு பல்லிய மியம்பி யார்த்தெழ
வசையறு காளையர் மருங்கு சுற்றிடத்
சசியெனக் கதிரொளி தவழும் வீதியிற்
றிசைதிசை மலிந்தன சிவிகை வெள்ளமே.
1.23.48
1145 பிடிபடு குசைப்பரி மீதும் பெய்மழை
கடகரி மீதினுங் கதிர்கொண் மாமணிப்
படமிடு சிவிகையின் மீதும் பாங்கெலாஞ்
சுடரணி திகழ்ந்தெனக் கிளைஞர் சுற்றினார்.
1.23.49
1146 வெள்ளணி யுடையினர் விரிந்த கஞ்சுகர்
கள்ளவிழ் மாலையர் கலன்கொண் மேனிய
ரள்ளிய வழகின ரரச வீதியி
னெள்ளிட மிலையென வெங்கு மீண்டினார்.
1.23.50
1147 செழுமுகிற் கவிகையஞ் செம்மல் வீதிவாய்
வழுவறு பவனியின் வருகுன் றாரென
வெழுவகைப் பேதைபே ரிளம்பெ ணீறதாய்க்
குழுவுடன் றிசைதிசை நிறைந்து கூடினார்.
1.23.51
1148 மணிப்பளிக் கறைநிலை மாட மீதினுங்
குணிப்பருங் கூடகோ புரத்து மீதினும்
பணிப்பரு மேனிலைப் பரப்பு மீதினுந்
தணிப்பிலா துயர்ந்தமண் டபத்தின் சார்பினும்.
1.23.52
1149 சச்சையின் முகப்பினுஞ் சாள ரத்தினும்
வச்சிர மழுத்திய வாயின் மீதினுங்
கச்சணி முலைச்சியர் கதிர்கொண் மால்வரைப்
பச்சையங் கிளியெனப் பரந்து தோன்றினார்.
1.23.53
1150 வெண்முகிற் கவிகையிற் பிறந்த மின்னென
வண்ணமென் பசுங்கதிர்த் தோகை மஞ்ஞைகள்
கண்ணினக் கவிகையைக் கண்டு வந்தென
வெண்ணிறந் தனையமா மாத ரீண்டினார்.
1.23.54
1151 வழிகதிர் முகம்மதின் வனப்பு வெள்ளமீக்
கெழுதிரைக் குவந்தன மெழுந்த கூட்டம்போற்
பொழிகதிர்க் கலன்பல புரள வெங்கணுந்
தொழுதிகொண் டுற்றனர் தோகை மாதரே.
1.23.55
1152 தேனென வமிர்தெனத் திரண்ட பாகெனத்
தூ நறுங் கனியெனச் சுடருங் கொம்பெனப்
பூநறுங் கரும்பெனப் பொருவின் மாதரார்
வானவ ரமிர்தென வளைந்து சுற்றினார்.
1.23. 56
1153 வேறு
வண்ணவார் முலைக்கொம் பன்னார் மருங்கொசிந் தசைய நோக்கிக்
கண்ணகன் ஞால மெல்லாங் களிப்புறு மரிய காட்சி
யண்ணறன் மணத்தின் கோல மாமினா வென்னு மந்தப்
பெண்ணிருந் தினிது காணப் பெற்றிலள் காணு மென்பார்.
1.23.57
1154 கடுநடைப் புரவி மேலாய்க் கவிகைமா னிழற்ற வந்த
வடிவுறை முகம்ம தின்றன் வனப்பலால் வனப்பு மில்லைக்
கொடியிடைக் கதீஜா வென்னுங் கொம்புசெய் தவப்பே றாகப்
பிடிநடை யவரிற் பேறு பெற்றவ ரில்லை யென்பார்.
1.23.58
1155 பொன்னெனப் பூங்கொம் பென்ன மணியெனப் பொருந்து மாதர்
மின்னொளி கரக்குஞ் சோதி மெய்யெழின் முகம்ம தென்னு
மன்னினைக் கதீஜா செலவ மனைமண முடித்த போதே
யெந்நிலப் பொருளும் வாழ்வு மிவர்க்கினி யெய்து மென்பார்.
1.23.59
1156 வனைந்தபூ மரவத் திண்டோண் முகம்மதின் வடிவை நோக்கித்
தனந்தொறும் பசலை பூத்த தையலார் திரண்டு கூடிக்
கனந்துதைந் தொதுங்கு மாடக் கதிர்நிலா வீதி வாயிற்
றினந்தொறும் பவனி காணச் செய்தவஞ் செய்வோ மென்பார்.
1.23.60
1157 வரிசைக்கு மிகுந்த செவ்வி முகம்மதின் வடிவை நோக்கி
யுருசிக்க மலர்த்தே னுண்ட வொண்சிறைப் பறவை போலப்
பரிசிப்ப தொத்து நீங்காப் பவனியி லிருகண் ணாரத்
தெரிசிக்க நம்போன் மிக்க செனனமார் பெறுவ ரென்பார்.
1.23.61
1158 ஆரவா ருதியிற் றோன்று மமுதனார் பரியை நோக்கிப்
பாரிடை பையப் பையச் செல்லெனப் பரிவிற் சொல்வார்
வாரமா மறுகிற் போத மனமற மறுகி நின்னைக்
கோரமென் றிதற்கோ பேரிட் டுலகெலாங் கூறிற் றென்பார்.
1.23.62
1159 பொருத்துதற் கரிய செவ்விப் புரவல ரழகைக் கண்ணா
லருத்திய துயரக் காற்றா லவதியுற் றலைந்து காந்தட்
கரத்தணி பணிக ளியாவுங் கருத்துட னிழந்து வாசம்
விரித்தபூ வுதிர்த்த கொம்பாய் விளங்கிழை யொருத்தி நின்றாள்.
1.23.63
1160 கோதறு கருணை வள்ளல் குவவுத்தோள் வனப்பைக் கண்ணாற்
றீதற வாரி யுண்ட செழுங்கொடி யொருத்தி செம்பொற்
பூதரக் கொங்கைச் சாந்து முத்தமும் பொரிவ தென்கொல்
காதினி லுரைமி னென்றோர் காரிகை தன்னைக் கேட்டாள்.
1.23.64
1161 திருத்தகு பவனி நோக்குஞ் சேயிழை யொருத்தி காதல்
வருத்தமுற் றிருந்து பஞ்ச வனக்கிளி கையி லேந்திக்
கரத்தினைப் பொருத்தச் செய்த காளைபா லேகி யென்ற
னுரத்தினைப் பொருத்தச் சொல்லென் றோதும்வா யொழிகி லாளே.
1.23.65
1162 கதியுறு பரியின் மேலோர் காளையை நோக்கி நோக்கிப்
புதியதோர் செவ்வி வாய்ந்த பொலன்கொடி யொருத்தி யிந்தப்
பதியினிற் பிறந்து செய்த பலத்தினுக் குற்ற பேறாய்
மதியினைக் கொடுத்துக் கொள்ளா மாலையே வாங்கிக் கொண்டாள்.
1.23.66
1163 இனமணிச் செழுங்கொம் பன்னா ருடனெழுந் தெதிரிற் புக்குச்
சினமதக் கரியுந் தேருஞ் சிவிகையும் பரியுஞ் சூழப்
புனன்முகிற் கவிகை வள்ளல் வருவதும் பொருந்த நோக்கிக்
கனவெனத் தௌிவு றாமற் கலங்கிநின் றொருத்தி போனாள்.
1.23.67
1164 கனமுகி லனைய கூந்தற் காரிகை யொருத்து யுள்ள
நினைவெலாங் குரிசி றோன்று நெறியிடை யெதிரிற் போக்கி
யினமெங்கே யாய மெங்கே யெவ்விடத் தேகின் றேனென்
மனமெங்கே யான்றா னெங்கே யெனநின்று மறுகு கின்றாள்.
1.23.68
1165 மயற்கடற் படிந்து கூந்தன் மலர்மணிக் கலையும் போக்கிச்
செயற்கையிற் பணிக ளியாவுந் தெருத்தலை தோறுஞ் சிந்திப்
புயற்குடைக் குரிசி றந்த பொன்னெலா முடலம் பூத்த
வியற்கையே போது மென்ன விளங்கிழை யொருத்தி போனாள்.
1.23.69
1166 பருமித்த முலையி னார்ந்த பன்மணிக் கலன்க ளீய்ந்து
மருமொய்த்த குழலா ளாசை மதிப்பிலா வயிரந் தான்கொண்
டொருமுத்தி லுதித்த வள்ள லுறுகதி ரழகுக் காகப்
பெருமுத்த வாரி கோடி யிறைத்தனள் பெரிய கண்ணால்.
1.23.70
1167 காயிள நீரும் வேயுங் கதலியுங் கமுகுங் காந்தி
பாயொளி யாம்ப லுஞ்செம் பதுமமுங் குவளை மானுஞ்
சேயரி கருங்க ணல்லார் செறிந்துகொண் டெழுந்த தோற்றந்
தூயமே னிலைக ளெல்லாந் துடவைபோன் றிருந்த மாதோ.
1.23.71
1168 குரும்பைமென் முலைக டாங்கிக் கொடிநிலை மாட மீதிற்
கரும்பெனு மமுதத் தீஞ்சொற் கன்னியர் செறிந்த தோற்றந்
தரும்பெரும் புவியும் வானுந் தழைக்கவந் துதித்த வள்ளல்
வரும்பெரும் பவனிக் கேற்ற மாணிக்க விளக்கம் போன்றார்.
1.23.72
1169 தாவிய பரிமேற் சேனைத் தளத்தொடும் வீதி வாயின்
மேவிய வள்ள லார்த மெய்யெழி னோக்கி நோக்கி
யாவியு ளடங்கி நெஞ்சத் தறிவுதிர்த் திமைப்பில் லாது
பாவையர் நின்றார் செய்த பாவைகள் போலு மன்றே.
1.23.73
1170 கண்களி லடங்காக் காட்சிக் காளைதம் வனப்பு நோக்கும்
பெண்களி லமுத மன்னார் பேரெழின் முகத்தின் றோற்றம்
விண்கதி ரடருஞ் சோதி மேனிலை வாயி றோறுந்
தண்கதிர் கிளைத்த செவ்விச் சசியின முளைத்தல் போலும்.
1.23.74
1171 வடிசுதை மெழுக்கிட் டோங்கி வளர்ந்தமண் டபத்தின் சார்பிற்
படர்கதி ரரத்தந் தோய்ந்த பல்கணி வாயி றோறுங்
கடிமணப் பவனி நோக்குங் கன்னியர் கதிர்வேற் கண்கள்
கொடிதுடர்ப் பவளத் தூடு குவளைகள் பூத்த போன்ற.
1.23.75
1172 தண்ணில வுமிழுஞ் சோதி தவழ்நிலை வீதி வாயின்
மண்ணகத் தெவரு மொவ்வா முகம்மதின் பவனி நோக்கி
யெண்ணகத் தடங்கா மாத ரிவ்வண்ண நிகழும் வேலை
விண்ணவ ரிடத்தில் வாய்ந்த வியப்பினை விரித்துச் சொல்வாம்.
1.23. 76
1173 வேறு
உம்ப ருள்ளங் களித்தெழுந் தோடிநீள்
செம்பொ னாட்டுயர் ஜென்னத்தின் மாமணிக்
கம்பை சேர்த்துங் கபாடந் திறந்தன
ரிம்பர் நாட்டு மெழுந்தன சோதியே.
1.23.77
1174 விரைவி னாதி யுரைப்படி விண்ணவர்
நிரயந் தன்னை யடைத்து நெருப்பையும்
பரவி லாதவித் துள்ளுறைப் பாழ்ங்குழி
யிரையு மூச்சு மடக்கின ரென்பவே.
1.23..78
1175 அவனி மீதி லகுமது மாமணப்
பவனி வந்தனர் பாருமின் பாரெனக்
கவன வேகத் தமரர் களிப்பொடுஞ்
சுவன நாட்டுறை தோகையர்க் கோதினார்.
1.23.79
1176 மன்னர் மன்னர் முகம்மது தம்பெயர்
சொன்ன போதிற் சுவன மடந்தையர்
முன்னி ருந்த வடிவினு மும்மடங்
கென்ன லாகி யிருங்களிப் பேறினார்.
1.23..80
1177 விதிக்கு மேலவ னேவலின் விண்ணினிற்
குதிக்குஞ் சோதிக் கொடியிடைக் கொம்பனார்
பதிக்கும் பூரண மாய்ப்பல கோடிமா
மதிக்கு லம்வந்தெ ழுந்தது மானுமே.
1.23.81
1178 மாக நன்னதி யாடி மணங்கம
ழாக மீதி லணியணிந் தந்நலா
ரேக மாயெழுந் தெங்கணு மெண்ணிலா
மேக மண்டல மின்னெனத் தோன்றினார்.
1.23.82
1179 தீனெ னும்முதற் செம்மறன் வீதிவாய்
வான நாடுறை மங்கைய ரங்கையா
னான மம்பர் நறுங்கறுப் பூரம்பொற்
பூநி றைத்திறைத் துப்பொழிந் தார்களே.
1.23.83
1180 விண்ணி னுற்றவர் வீசியி றைத்தலாற்
கண்ண கன்ற கடன்மலை கானகம்
பண்ணை சூழ்நக ரும்பல சோலையு
மண்ணும் விண்ணு மலிந்தன வாசமே.
1.23.84
1181 வள்ள லார்திரு மேனியின் வாசமுந்
தெள்ளி மேலவர் சிந்திய வாசமுங்
கள்ளு லாவிய காவினி னால்வகை
யுள்ள பூவினு முள்ளுறைந் தோங்கிற்றே.
1.23..85
1182 திருத்து கூந்தலுந் தேங்கமழ் மாலையும்
விருத்த பூந்துகி லும்மணி மெய்யினும்
பருத்த கொங்கையி னும்புவிப் பாவையர்
கருத்தி னூடுங் கலந்ததவ் வாசமே.
1.23.86
1183 விரைகொ ணானமும் வெண்கருப் பூரமும்
வரிசை வள்ளன்மு கம்மதின் வீதியி
லரிதி னிற்சொரிந் தம்பர மங்கையர்
பெருகுந் தம்மனத் தாசையிற் பேசுவார்.
1.23.87
1184 குற்ற மற்ற கொழுங்கதிர் மெய்யெழில்
வெற்றி வள்ளலை வீதியிற் கண்டன
முற்று றாத முகத்திமை யாவிழி
பெற்ற பேறின்று பெற்றமென் பார்சிலர்.
1.23.88
1185 தண்ணந் தாமரைப் பாதந் தழீஇத்தொழு
மண்ணின் மாதர்க ளேவலி யாரென்பார்
பெண்ண னார்கதி ஜாவொடும் பெட்புற
விண்ணி னூடும் விளங்குவர் காணென்பார்.
1.23. 89
1186 வழுத்து வீரிவ ராரென மற்றவர்
பழுத்த பொன்னிலைப் பன்மணி மின்னவே
யழுத்து வாயிலின் மேலிரண் டாம்வரி
யெழுத்தெ லாமிவர் பேரென் றியம்புவார்.
1.23.90
1187 தடந்த யங்குபொன் னாட்டினிற் றானென
நடந்து கொண்டவ னன்னெறி நற்பத
மிடைந்து கெட்டிபு லீசென் றெரிநர
கடைந்த தும்மிவர் தம்பொருட் டாலென்பார்.
1.23.91
1188 எந்நி லத்தினு மிக்குய ரேந்தெழின்
மன்னர் மன்னர் முகம்மது தம்பத
நன்னி லத்தொடு நாம்புகழ்ந் தேத்திடப்
பொன்னி னாட்டைப் புரந்தில ரென்னென்பார்.
1.23.92
1189 பூவி னன்கலி மாவைப் பொருந்துற
நாவி லோதிய நம்மண வாளர்க
டாவி லெண்ணிறந் தோரொடுந் தாநமர்
சேவை செய்திடச் சேர்குவர் காணென்பார்.
1.23.93
1190 கால மேகக் கவிகையி னீழலோ
நீல மோநறை நானநி றைத்ததோ
கோல வார்குவ வுப்புயக் குங்கும
மாலை யூடுறை வண்டின மோவென்பார்.
1.23.94
1191 மண்ணி டந்தெரி வின்றென வந்தடர்
பெண்ணி னங்கள் பெருத்திடு மாசையாற்
சுண்ண மும்மல ருந்திகழ் தோண்மிசைக்
கண்ணின் பேரொளி கான்றது காணென்பார்.
1.23.95
1192 தௌிய வந்துறுஞ் சிந்தையர் சிந்தையி
னளியெ லாமிகழ்ந் தாசையி னாவலா
லொளியெ லாமிவ ருள்ளுறை யாலிந்த
வௌியே லாமந்த மெய்யுருக் காணென்பார்.
1.23.96
1193 வார்த்த டக்கரி வண்முலை விம்முற
வேர்த்து நின்று வெதும்பிவெ தும்பியே
கூர்த்த தங்கருத் துள்ளுறை கொண்டலைப்
பார்த்த கண்கள் பறிப்பரி தென்பரே.
1.23.97
1194 மன்னைப் பார்த்து மதிமுகம் பார்த்துநின்
றென்னைப் பார்க்கிலர் காணென வேங்குவார்
மின்னைப் பார்த்த விளங்கிழை யார்களென்
றன்னைப் பார்த்தனர் காணவர் தாமென்பார்.
1.23.98
1195 வண்ண வார்புய மன்னவர் மெய்யெழிற்
கண்ணி னூடுங் கரந்ததென் பார்சில
ரெண்ணி னூடு மிருந்ததென் பார்சில
ருண்ணி னைவொடு முற்றதென் பார்சிலர்.
1.23.99
1196 ஏந்து கொங்கை யணியிழப் பார்சிலர்
கூந்தல் சோரக் குழைந்துநிற் பார்சிலர்
காந்தி மேனி கரிந்திடு வார்சிலர்
மாந்தி யாசை மயக்குறு வார்சிலர்.
1.23.100
1197 வேறு
வானவர் மகளி ரின்னண மியம்பி
மனத்துறு துயருழன் றுலைப்பத்
தேனிமி ரலங்கற் செழும்புயக் குரிசிற்
செம்முகம் பருதிய தென்னக்
கானமர் குழலார் செவ்வரி வேற்கட்
கணமெலா நெருஞ்சியை நிகர்ப்பத்
தானவா ரணமும் பரிசுளு மிடையச்
சுற்றமுந் தழீஇவரப் போந்தார்.
1.23.101
1198 சலதரக் கவிகை நெடுநிழல் பரப்பச்
சலதியிற் பல்லியங் கறங்கக்
குலவிய கொடியுங் கவரியும் விரியக்
கொலைமதக் களிறுக ணெருங்கப்
பலகதிப் பரியு மரசரு மிடையப்
பாவல ரினிதுவாழ்த் தெடுப்பக்
கலைவலன் குவைலி தினிதலங் கரித்த
கடைத்தலைக் காவணம் புகுந்தார்.
1.23.102
1199 வரைதிரள் வயிரப் புயமுகம் மதுநன்
மணமலர்க் காவணம் புகுதத்
திரையினிற் பிறந்த வமுதெனு மொழியார்
செழுமணித் தீபங்க ளேந்த
விருபுற நெருங்கி யயினிநீர் சுழற்ற
வெண்ணில ராலத்தி யெடுப்பப்
பரவையின் மறையுங் குரவையுஞ் சிலம்பப்
பரியைவிட் டிறங்கின ரன்றே.
1.23.103
1200 பணித்தொகை சுமத்தி யிளைத்தநுண் ணிடையார்
பங்கயக் கரப்பனி நீரான்
மணிப்பதம் விளக்கித் துகிலினாற் றுடைத்து
வரிசையின் முறைபல பணித்தார்
துணர்ப்பசுங் கொழுந்து மலர்கலுளுஞ் சொரிந்த
தூநறைப் பாயலி னடந்து
கணிப்பருங் கதிர்கள் பாய்மணித் தவிசின்
முகம்மது கவின்பெற விருந்தார்.
1.23.104
1201 அமரர்விண் ணுலகும் புவனமும் விளக்கு
மணிவிளக் கெனுங்கதி ஜாவைத்
தமனியத் தசும்பு நனிவிரை கமழ்ந்த
தண்ணறும் புதுப்புன லாட்டி
யுமிழ்கதிர்க் கொடியை வெண்ணிலாக் கலைவந்
துடுத்தபோற் கலையெடுத் துடுத்திச்
சுமையிருட் காவின் முகிறவழ்ந் தென்னச்
சுரிகுழற் ககிற்புகை கமழ்த்தி.
1.23.105
1202 இருட்குல மனைத்தும் பிடித்தொரு தலத்தி
லிருத்தவ தெனக்குழ லிறுக்கி
யருட்டமுண் டறுகாற் சுரும்பின மலம்பு
மலங்கலை யிலங்குற வணிந்து
திருத்திய முகிலிற் சசிக்கிடை கதிருஞ்
சேர்ந்தெனத் திருப்பிறை தரித்துப்
பொருத்திளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள்
புரண்டென நுதற்கணி புனைந்தார்.
1.23.106
1203 வள்ளையைக் கிழித்துக் குமிழினைத் துரந்த
மதர்விழிக் கஞ்சன மெழுதிக்
கொள்ளைவெண் கதிர்விட் டுமிழ்மணிப் பணியைக்
கொழுமடற் குழைமிசை சுமத்தித்
தெள்ளிய பணிலச் செழுமணிக் கழுத்திற்
றிரள்பணித் தொகைபல திருத்தி
விள்ளரும் பசிய கழைக்குலம் பொருவா
விளங்குதோ ளணிபல தரித்தார்.
1.23.107
1204 கரவளை தரித்து விரலணி பொருத்திக்
கதிர்கொண்மே கலைபல புனைந்து
சரணினைச் சிலம்புஞ் சில்லரிச் சதங்கை
தருசிறு சிலம்பொடு தரித்து
விரிகதிர்ப் பவளக் கொடியெனும் விரல்கள்
விளைந்தபோன் மணிப்பணி செறித்துப்
பருதியின் கரங்கண் டுவக்குறும் வனசப்
பதத்தலத் தகமெழு தினரே.
1.23.108
1205 மறுவியும் புழுகுஞ் சுண்ணமுஞ் சாந்தும்
வடித்தபன் னீரொடுங் குழைத்துப்
பொறிநிகர் பொருவாச் செழுங்குழை யமிர்தப்
பொலன்றொடி மெய்யினிற் பூசிச்
சிறுநுதற் பெருங்கட் குவிமுலைச் செவ்வாய்ச்
சேடிய ரிருமருங் கீண்டிக்
கறைதவிர் மதியந் தொழுமுழு மதிக்குக்
கலந்தகண் ணெச்சிலுங் கழித்தார்.
1.23.109
1206 செறிந்தசந் தனமுங் கலவையும் புழுகுஞ்
சிலதியர் தட்டினி லேந்த
வெறிந்தசா மரையின் கதிர்கள்கொப் பிளிப்ப
விலங்கிழை யிகுளைய ரேந்த
வுறைந்தபா ளிதம்பா கிலையெடுத் தேந்தி
யொருங்கினிற் சிலதிய ருதவ
நிறைந்தபூண் சொரிந்த கோடிகஞ் சுமந்து
நின்றனர் மடவிய ரொருங்கே.
1.23..110
1207 பேரழ கொழுகும் பெண்ணலங் கனியைப்
பிரசமூ றியமொழிக் கரும்பை
யாரணக் கடலுக் கமுதநா யகியை
யரிவையர் முறைமுறை வாழ்த்திப்
பாரினிற் செறித்த மலர்மிசை நடத்திப்
பல்லிய முரசொடு கறங்க
வார்பொரு முலையார் முகம்மது மருங்கின்
மணித்தவி சிடத்திருத் தினரே.
1.23.111
1208 பொருவருங் கதிர்விட் டெழும்பொருப் பிடத்திற்
பூத்தகொம் பிருந்தது போன்றுந்
தெரிதரு மறிவின் றருநிழ லுறைந்த
செழும்பொறைப் பசுங்கிளி யெனவு
முருகவிழ் மலரிற் றேன்றுளித் தெனவு
முகம்மதி னிடத்தினிற் கதீஜா
பரிவுட னிருப்ப வமரருங் களிப்பச்
செல்வமும் படர்ந்தெழுந் தனவே.
1.23.112
1209 இருகிளை யவருஞ் சம்மதித் தைந்நூ
றிரசித மகரெனப் பொருந்திக்
கருமுகிற் கவிகை முகம்மது தமக்குங்
காரிகை கனங்குழை தமக்கு
மருமலர் தொடையல் புனையுநிக் காகை
மணத்துடன் முடித்திடு மென்னப்
பெருகிய ஹாஷிம் குலத்தவ ரனைத்தும்
பிரியமுற் றுரைத்தன ரன்றே.
1.23.113
1210 முதியவ ருவந்து நீதிமுன் மார்க்க
முறைப்படி சடங்குகண் முடிப்ப
மதிவலன் குவைலி தகமகிழ்ந் தெழுந்து
முகம்மதின் செழுமணிக் கரத்திற்
புதுமதி வதனச் செழுங்கொடிக் கதீஜா
பொன்மலர்க் கரத்தினைச் சேர்த்திக்
கதிர்மதி யுளநாள் வாழ்கவென் றிசைத்துக்
கண்களித் தினிதுவாழ்த் தினரே.
1.23.114
1211 செறிதரு மடவார் குரவைக ளியம்பத்
திரளொடு பல்லிய மார்ப்ப
வறிவினர் வாழ்த்த வாணர்க ளேத்த
வந்தரத் தமரர்கள் களிப்பக்
குறைவிலா துயர்ந்து த்ழைத்தினி தோங்குங்
குலக்கதீ ஜாவெனுங் கொடியு
மறைபடா தெழுந்த மதிமு கம்மதுவு
மணவறை புகுந்தன ரன்றே.
1.23.115
1212 மணிகொழித் ததிருந் திரைக்கட லனைய
மனமகிழ் வொடுமுகம் மதுவும்
பணிபட ரவனித் திலதநா யகியும்
பன்மலர் பளிக்கறை புகுந்து
கணிபடா வழகு கண்களிற் பருகிக்
கருத்தென வுயிருமொன் றாகி
யணிகிள ரின்பப் பெருக்கெடுத் தெறியு
மாநந்தக் கடற்குளித் தனரே.
1.23.116
1213 திண்டிறற் புவியின் முகம்மது தமக்குத்
திருவய திருப்பதைந் தினின்மேற்
கண்டதிங் களுமோ ரிரண்டுநா ளிரண்டிற்
கனகநாட் டவர்கள்கண் களிப்ப
வெண்டிசை முழுதுந் திருப்பெயர் விளங்க
விருநில மணிக்கதீ ஜாவை
வண்டுறை மரவச் செழுந்தொடை புனைந்து
வரிசைமா மணம்பொருந் தினரே.
1.23. 117
1214 அரவினை வதைத்த கரதல நயினா
ரருங்கரம் பொருத்திய நயினார்
பரல்செறி சுரத்திற் புனறரு நயினார்
பணிபணிந் திடவரு நயினார்
வரியளி யலம்பும் புயனபுல் காசீ
மனத்துறை வரிசைநந் நயினார்
தெரிமலர் கதீஜா நாயகி நயினார்
செல்வமுற் றினிதுவாழ்ந் திருந்தார்.
1.23.118
1215 மக்கமா நகருஞ் செலவமும் வாழ
மறைவலோ ரறனெறி வாழ்த்
தக்கமெய்ப் புகழுங் கிளைஞரும் வாழத்
தரணிநாற் றிசையினும் வாழ
மிக்கநன் னெறிநேர் முகம்மதுஞ் சிறந்த
விரைகமழ் மதுரமூற் றிருந்த
விக்குமென் மொழியா ரெனுங்கதீ ஜாவு
மினிதுறப் பெரிதுவாழ்ந் திருந்தார்.
1.23.119
மணம்புரி படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 23க்குத் திருவிருத்தம்...1215

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.24. ககுபத்துல்லா வரலாற்றுப் படலம்

1216 தருமமனு நெறியறிவு பொறையொழுக்க
மினையனவுந் தழைத்து வாழக்
கருமுகிலின் செழுங்கவிகை யினிதோங்கக்
குரிசிலகங் களிக்கு நாளில்
வரிவிழிச்செங் கனித்துவர்வாய்க் கொடியிடையார்
புடைசூழ வளருஞ் செல்வம்
பெருகுமிள மயில்கதீஜா ஸயினபெனும்
பசுங்கிளியைப் பெற்றா ரன்றே.
1.24.1
1217 ஸயினபெனு மணியீன்ற வலம்புரிநே ரனை
யகுலத் தரும மாது
குயின்மொழிறுக் கையாவை யீன்றும்முக்
குல்தூமை யீன்று பின்னர்
செயிரறநா லாவதிலாண் பிள்ளைகா
சீமெனவோர் செம்ம லீன்று
நயமுறப்பின் தையிபெனுஞ் சேயீன்று
தாகிறையு நல்கி னாரே.
1.24.2
1218 மன்றல்கமழ் முகம்மதற்கை யேழாண்டு நிறைந்த
தற்பின் மறுவி லாத
மின்றவழ்வ தெனவொளிருங் கதீஜாநா
யகியுதரம் விளங்கச் சோதி
துன்றுமணி யெனப்பூவின் மடந்தையர்க்குஞ்
சுவனபதித் தோகை மார்க்கு
மென்றுமர செனவிருப்பப் பாத்திமா வெனுமயிலை
யீன்றா ரன்றே.
1.24.3
1219 வேறு
ஆதி நாயகன் றிருவுளத் தகமரர்க ளிறங்கிப்
பூத லத்தினி லறமெனுந் தலநடுப் புகுந்து
சோதி யெங்கணும் பரந்திடக் ககுபத்துல் லாவைத்
தீதி லாதுறச் சுவனமா மணத்தொடுஞ் செய்தார்.
1.24.4
1220 அந்த நாட்டொடுத் தளவிடற் கருநெடுங் காலஞ்
சுந்த ரத்தொடு மமரர்கள் புகுந்தவண் டொழுது
பந்தி கூர்ந்துடற் புளகுற விறைவனைப் புகழ்ந்து
சந்த தம்மிவை தொழிலெனத் திரிந்தவண் சார்வார்.
1.24.5
1221 ஆத நன்னபி யமருல கிழிந்தவ ணடைந்து
மாதவ் வாவுட னின்புற வாழுமந் நாளிற்
காதல் கூர்தரக் ககுபத்துல் லாவினைக் கடிதி
னேத முற்றிடா திடம்பெறப் பின்னியற் றனரால்.
1.24.6
1222 முதிருங் கேள்விய ராதத்தின் மக்களின் முதியோர்
கதிரு மிழ்ந்துகா ரணம்பல விளங்குகஃ பாவைப்
பிதிர்த ரும்படி கண்டதைப் பெலத்தொடு நிறுவி
யதிக மாய்ச்செய் துயர்த்தின ரழகொடு மிலங்க.
1.24.7
1223 உரந்த ரும்படி நின்றெழில் பிறங்கிட வொளிகள்
பிரிந்தி டாதகஃ பாவெனும் பேரின்பத் துறையை
விரிந்த காரண நூகுதங் காலத்தில் விண்மட்
டிரைந்தெ றிந்திடும் பிரளயத் திடிந்தை யன்றே.
1.24.8
1224 நிறைந்தி லங்கிய திடிந்தது கிடந்தது நெடுநாட்
பிறந்தது நூகுதம் பதினொரு தலைமுறைப் பின்னர்
துறந்த பேரிபு றாகிம்நன் னபியெனுந் தூயோர்
சிறந்தி லங்கிடக் ககுபத்துல் லாவினைச் செய்தார்.
1.24.9
1225 கன்னல் வேலிமக் காபுரக் ககுபதுல் லாவை
நன்ன யம்பெறு நெறியிபு றாகிம்தன் னபிக்குப்
பின்ன மாலிக்கத் தென்பதோர் கூட்டத்திற் பெரியோ
ருன்ன தம்பெற விடம்பெறச் செய்துயர்த் தினரே.
1.24.10
1226 அறப மாலிக்கத் தென்பதோர் கூட்டத்துக் கணித்தாய்ச்
சுறுகு மென்னுமக் கூட்டத்தி னரசர்கள் சூழ்ந்தே
யிறைவ னேர்வழிக் ககுபத்துல் லாதனை யியல்பாய்
மறைப டாதொளி பெருக்கிடச் செய்துவைத் தனரே.
1.24.11
1227 விசய மிக்குயர் சுறுகுமாங் கூட்டத்தின் வீரர்
திசைவி ளங்கிடச் செய்தன ரிருந்தது சிலநா
ளிசைய நல்லெழிற் ககுபத்துல் லாதனை யிறக்கிச்
குசையு வென்பவ ரதிகமா யியற்றினர் குறித்தே.
1.24.12
1228 பெருகு நற்குலக் குசையெனும் வேந்தற்க்குப் பின்னர்
முருகு பூம்பொழின் மக்கமா நகரியின் முதிர்ந்து
செருகு மாமழைத் தாரையிற் பிரளயஞ் சிதைப்பத்
தருகை மன்னவர் குறைஷிகள் செய்துவைத் தனரால்.
1.24.13
1229 கணம மணித்திரள் கதிருமிழ் ககுபத்துல் லாவைப்
பிணைய றாங்கிய புயவரைக் குறைஷிகள் பெரிதா
யிணைபி றப்பதற் கிலையென வெழிலொடு மிலங்க
மணமு றும்படிச் செய்துவைத் திருக்குமந் நாளில்.
1.24.14
1230 அருளி லாமனக் கொடுங்கொலைக் கரவிட ரடுத்துப்
பொருளங் குண்டெனக் ககுபத்துல் லாநடுப் புறத்திற்
றிருடுங் கன்னம்வைத் தறப்பறித் தடிமதிள் சிதைப்ப
விருள றுங்கதிர் மேனிலை யொடுமிந் ததுவே.
1.24.15
1231 புடைப்ப றித்ததி லுட்படச் சோதனை போக்கி
யுடைப்பெ ரும்பொரு ளில்லெனக் கரவிட ரொதுங்கி
யிடைப்ப டாததற் கிசைந்தன மெனமன மிடைந்து
துடைப்ப ரும்பெரும் பழிசுமந் தயலினிற் போனார்.
1.24.16
1232 கறையி லாமுழு மதியெனுங் ககுபத்துல் லாவைக்
குறைஷி மன்னவ ரனைவரு மொருங்குறக் கூண்டு
நறையு றுஞ்சுதை மதிடனை நாலுபங் காகத்
துறைபெ றும்படி பிரித்துச்செய் தொழிறுணிந் தனரே.
1.24.17
1233 வசையி லாக்குலக் குறைஷிக ளனைவரு மதித்துத்
திசையும் வானமும் போற்றிய செவ்விய ஹஜறு
லசுவ தென்னுமக் குவட்டினை யணைத்தெடுத் தசையா
திசையுந் தானத்தில் வைத்திடு பவரெவ ரென்றார்.
1.24.18
1234 அன்ன காலையிற் செவ்விய நெறிபனீ ஹாஷீ
மென்னும் வங்கிடத் தொருவரிப் பள்ளியி னிடத்து
முன்ன தாகவந் தவர்நிறு வுவரென முதலோன்
பன்னு மாமறை தௌிந்தவர் சிலர்பகர்ந் தனரே.
1.24.19
1235 ஈது நன்றெனக் குறைஷிக ளனைவரு மிசைவுற்
றோதும் வேளையி லகமலர்க் களிப்புட னுலவித்
தூத ராகிய முகம்மது மவ்வுழித் தோன்றத்
சீத வொண்கம லானனங் குளிர்தரச் சிறந்தார்.
1.24.20
1236 நீங்கி டாக்கனற் சுரத்திடை நிறைபுன லளித்து
வேங்கை யோடுரை பகர்ந்தசெங் கதிர்வடி வேலோய்
பாங்கி னுற்கருங் குவட்டைமுன் பதித்திடுந் தலத்திற்
றாங்கி வைத்திடு மென்றனர் நிலைபெறுந் தலத்தோர்.
1.24.21
1237 உரைத்த தங்குல மன்னவ ருளங்களிப் பேற
வரைத்த டம்புய மேலுறு போர்வையை வாங்கி
விரித்து நன்குறு துகிலிடை நாப்பணின் விளங்க
விருத்தி னார்செழுங் கரத்தினிற் கருங்கலை யெடுத்தே.
1.24.22
1238 வெற்றி மன்னவர் தலைவரி னால்வரை விளித்துப்
பொற்ற டந்துகின் முந்தியி னான்கினும் பொருந்த
விற்று றாவகை யெடுமென விவரொடு மெடுப்பக்
குற்ற மின்றிமுற் ற்லத்திடை யிருத்தினர் குறித்தே.
1.24.23
1239 வலிய வீரர்க ளுரைத்திடும் படிமுகம் மதுவு
நலிவி லாதெடுத் திருத்திய நறுங்கருங் குவட்டை
யொலிகொ ளும்படித் தொட்டுற முத்தமிட் டுவந்து
நிலைத ரும்படி சதுர்தர மதிணிறு வினரே.
1.24.24
1240 பொன்ன கத்தினுந் தீவினும் பூவினும் பொருவா
மின்னி லங்கிய மக்கமா நகரினில் வியப்பா
மன்னர் மன்னவர் மதித்திடச் சிறந்தகஃ பாவை
முன்னி ருந்ததின் மும்மடங் கெனும்படி முடித்தார்.
1.24. 25
ககுபத்துல்லா வரலாற்றுப் படலம் முற்றிற்று.

விலாதத்துக் காண்டம் முற்றுப் பெற்றது.

காண்டம் 1-க்கு படலம்...24

இதிற் கூடிய திருவிருத்தம்...1240.