ciRAppurANam of umaRup pulavar
Canto 1 part I (verses 1-596)
(in tamil script, unicode format)

உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)
படலங்கள் 1-9 / பாடல்கள் (1- 596)




Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Mr. Vassan Pillai, New Mexico, USA
Proof-reading: Mr. Sriram Venkataraman, Indianapolis, USA
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)
படலங்கள் 1-9/ பாடல்கள் (1- 596)


கவியேறு உமறுப் புலவரவர்களின் வரலாற்றுச் சுருக்கம்


அண்ணல் பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார்.பெருமானாாின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார் , அண்ணலாாின் அாிய வாழ்த்தினைப் பெற்றவர்.அவாின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர். அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து,திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்துகொண்டு,அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார்.

உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.என்வே, சேகு முதலியாரும் மன்னாின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு,நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார்.அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது.

இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பாாிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார்.பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு,தம் ஆசானின் பெருமதிப்பிற்குாிய மாணவரானார்.இவ்வாறிருக்கையில்,ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆாியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி'என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார்.தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார்.அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார்.மன்னரும் ஆவன செய்ய இசைந்தார்.

புலமைத் திறத்தாலன்றி,மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால்,வித்தைகள் புாியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.

ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு,அவரை அணுகி,கவலைக்கான காரணத்தை விளங்கிக்கொண்டார்.என்வே,வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும்,தம் ஆசிாியாிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று,எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார்.உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும்,அவருக்குப் பகரமாக அவாின் மாணவர் வந்திருக்கிறார் என்றும்,வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.

அதைச் செவியேற்ற வாலைவாருதி,தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார்.வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ'என்ற சொற்கள்,அன்றைக்கு மட்டும்,'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!'என்று உண்டாயின.அப்போது உமறுப் புலவர்,தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி,"என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!"என்று கட்டளையிட்டார்.ஒன்றும் நிகழவில்லை!பின்னும் உத்தரவிட்டார்.

அப்போதும் ஏதும் நிகழவில்லை!மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க,முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து,'பேசு!'என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார்.அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து,அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது:

இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி,உளம் பதறி,மெய் நடுக்குற்று,தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவாிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோாி,அரசவையை விட்டு அகன்றார்.

இந்நிகழ்ச்சி,மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால்,மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார்.வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர்,தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால்,அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்.அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்காித்து வந்தார்.

* * * * * * * *

சீறாப்புராணம் இயற்றப்பெற்ற வரலாறு


தமிழகத்தில் ஆங்காங்கிருந்த முஸ்லிம் மக்கள் இலக்கிய ஆர்வத்துடன் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்டு வருவது அன்றைய வழக்கமாக இருந்தது.அக்காலத்தில்,இராமநாதபுரச் சேதுபதி மன்னாின் அமைச்சராய் இலங்கி வந்த செய்கப்துல் காதிர் என்ற 'சீதக்காதி மரைக்காயர்'அவர்கள் இதனை உணர்ந்து,முஸ்லிம்கள் அவர்களின் மார்க்க அடிப்படையில் அமைந்த போிலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்கவேண்டும் என்ற பெருவிருப்பை உடையவராயிருந்தனர். தமது இவ்வேட்கையைத் தணிப்பதற்கான நல்வாய்ப்பை எதிர்நோக்கியும் காத்திருந்தார்.

இவ்வாறிருக்கையில்,ஒருநாள் அரசாங்க வேலையின் நிமித்தம் சீதக்காதி மரைக்காயர் அவர்கள் எட்டயபுர அரசவைக்குச் செல்ல நேர்ந்தது.ஆங்கு உமறு என்ற பெயாில் ஒரு புலவர் இருக்கக் கண்டு,'இவரே பெருமானாாின் வாழ்க்கையைக் காப்பியமாகப் பாட வல்லவர்'என்று ஓர்ந்தார். சின்னாட்கள் கழிந்த பின்னர் தமதில்லத்தில் நிகழ்ந்த விருந்தில் கலந்துகொள்ள உமறுப் புலவர் வந்த போது தமது உள்ளக் கிடக்கையை அன்னாாிடம் வௌியிட்டார் சீதக்காதி வள்ளல்.புலவரும் இத்னை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். எனினும்,வள்ளல் பெருமானாாின் வரலாற்றுச் செய்திகளை உரையாகத் தருவது யார் என்ற கேள்வி எழுந்தது.சீதக்காதி வள்ளல் தம் ஆன்மீக வழிகாட்டியான 'இறைநேசர் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா'அவர்களை அணுகி,பெருமானாாின் வாழ்க்கைச் சாிதையினைக் காவியமாகப் பாட உமறுப் புலவருக்கு உரை வழங்குமாறு கோாி நின்றார்கள்.

உமறுப் புலவாின் அலங்கோலத் தோற்றத்தைக் கண்டு,உரை கொடுக்க அப்பா அவர்கள் இசையவில்லை.உளம் வாடிய உமறுப் புலவர்,பெருமானாாின் வாழ்வைக் காவியமாக்கி, அதன் நிமித்தமாக அன்னாரைத் தாம் காணும் நாள் எந்நாளோ என்று ஏங்கி,பள்ளிவாயி லுக்குள் சென்றமர்ந்து தம் உள்ளத்து உணர்ச்சிகளைப் பாக்களாகப் பாடிக்கொண்டிருந்தார். இவ்வாறு எண்பத்தெட்டு பாடல்கள்* பாடி முடித்தபோது புலவரைத் துயில் ஆட்கொண்டது. பெருமானார்(ஸல்) அவர்கள், புலவாின் கனவில் தோன்றி,மறுபடியும் அப்பா அவர்களிடம் சென்று உரை கேட்குமாறு பணித்தனர்.கண் விழித்த உமறுப் புலவர் கருணை நபியவர்களின் கட்டளையைச் சிரமேற்கொண்டு,அப்பா அவர்கலிடம் சென்று உரை கோாினர்.முன்போலன்றி, புலவரை எதிகொண்டழைத்து உபசாித்த அப்பா அவர்கள்,சீறா உரை கொடுக்கச் சம்மதித்தனர்.அப்பா அவர்கள் தாங்களாகவும்,தம் மாணாக்கராகிய மஹ்மூது பந்தர் என்று வழங்க பெற்ற 'பறங்கிப் பேட்டையைச் சார்ந்த 'மாமூ நைனார் லெப்பை' என்பார் மூலமும் உமற்ப் புலவருக்கு உரை வழங்கினர்.அச்செய்திகளைக் கொண்டு சீறாக் காப்பியம் படைக்கத் தொடங்கினார் நம் புலவர்.

இதற்கிடையில்,சீறாவைப் பாடப் பேருதவியாக இருந்த சீதக்காதி மரைக்காயர் அவர்கள் இறையடி சேர்ந்தனர்.காப்பியம் படைத்து வந்த உமறுப் புலவாின் உள்ளத்தில் போிடி விழுந்தது.அந்நிலையில்,புலவாின் இரங்க தக்க நிலையை உணர்ந்த 'அபுல்காசிம் மரைக்காயர்'என்ற வள்ளல் பெருமான்,புலவரை அன்புடன் ஆதாித்து,சீறாவை இயற்றத் தாம் உறுதுணையாயிருப்பதாக வாக்களித்துப் பல உதவிகளும்செது ஊக்கினார். 'சீறாப்புராணம்"என்ற ஒரு பெருங்காவியம் உருவெடுத்தது. ஈடிணையில்லா இப்பேருதவி- களுக்கு நன்றி சொலும் முகத்தான், உமறுப் புலவர், அபுல் காசிம் மரைக்காயரைத் தம் சீறாப்புராணத்தில் பல இடங்களில் மறவாமல் நினைவு கூர்ந்து போற்றி புகழ்ந்துள்ளார்.

உமறுப் புலவாின் 'சீறாப்புராணம்'அண்ணல் பெருமானாாின் வாழ்க்கை முழுவதையும் கூறவில்லை என்பது,வியப்பிற்குாியதும்,வருந்தத் தக்கதுமாகும்!யாது காரணத்தாலோ சீறாவில் நபியவர்களின் வரலாறு முழுமையாகக் கூறப்பெறவில்லை.இருப்பினும், இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் சீறாப் புராணத்திற்க்கு தனியோர் இடமுண்டு.

பெருமானாாின் தூய திருவாழ்க்கையின் எஞ்சிய பகுதிகளை பனூ அகமது மரைக்காயர் யாத்து முடித்தார்கள்.இதுவும் 'சின்ன சீறா'என்ற பெயாில் பிரபலமாகியுள்ளது.

பண்டிதர்களிடையே ஓரளவு பழக்கத்தில் இருக்கும் சீறா,சாதாரண வாசகர்களிடையே நிலையான ஓர் இடத்தைப் பெறாமல் போனது வியப்பிற்குாியதாகும்.சீறாவின் பிரதிகள் எளிதில் கிடைக்காமல் இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். பாடல்களில் விரவிக் கிடக்கும் அரபி,பார்சிச் சொற்கள்,படிப்போருக்கு மலைப்பைக் கொடுத்திருக்கலாம். இக்குறைகளை ஓரளவுக்குச் சாிசெய்வதற்கு நாங்கள் முயன்றுள்ளோம்.இப்பணியில் எங்களை ஈடுபடுத்திய வல்ல நாயனுக்கு மீண்டும் மனம்,மெய் மொழி ஆகியவற்றால் நன்றி கூறி அமைகிறோம்.வஸ்ஸலாம்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

சீறாப்புராணம்
முதலாவது காண்டம் - விலாதத்துக் காண்டம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

நஹ்மதுஹூ வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்

1.01 கடவுள் வாழ்த்துப் படலம்

காப்பு

திருவுருவா யுணருருவா யறிவினொடு
தௌிவிடத்துஞ் சிந்தி யாத
அருவுருவா யுருவுருவா யகம்புறமுந்
தன்னியிலா வடங்கா வின்பத்
தொருவுருவா யின்மையினி லுண்மையினைத்
தோற்றுவிக்கு மொளியா யாவு
மருவுருவாய் வளர்காவன் முதலவனைப்
பணிந்துள்ளி வாழ்த்து வாமே.

கடவுள் வாழ்த்துப் படலம்
1 திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தௌிவினுந் தௌிவதாய்ச் சிறந்த
மருவினு மருவா யணுவினுக் கணுவாய்
மதித்திடாப் பேரொளி யனைத்தும்
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்
பூதலத் துறைந்த பல் லுயிரின்
கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே.
1.1.1
2 சிறந்தமெய்ப் பொருளை யழிவிலா மணியைத்
தெரிந்துமுக் காலமு முணர்ந்து
துறந்தவ ரிதயா சனத்திருந் தவனைத்
துடரின்ப துன்பமற் றவனைப்
பிறந்தபல் லியிரின் மனத்தள வுறைந்து
பிறப்பிறப் பென்றிலா தவனை
மறந்தவர் சுவர்க்கப் பதியையு மறந்து
மண்ணினின் மதிமறந் தவரே.
1.1.2
3 இருவிழி சிவந்து கனற்பொறி தெறிப்ப
வெடுத்தகைக் கதையினா லுறுக்கி
வருமவ ரெதிர்நின் றொருமொழி கேட்ப
மறுமொழி கொடுத்திட வறியேன்
தருமமும் பொறையு மறிவுமற் றறிந்துன்
றன்னையு மென்னையு மறியப்
பெருவரந் தருவா யாதிநா யகனே
பேதியாச் சோதிமா முதலே.
1.1.3
4 கடலினை மலையைக் கதிர்மதி யுடுவைக்
ககனமற் றறுஷொடு குறுசைப்
புடவியைச் சுவனப் பதியினை யமரர்
பொருந்திட மடுக்கடுக் கவையை
வடிவுறத் தனது பேரொளி யதனால்
வகுத்துவெவ் வேறென வமைத்தே
யுடலினுக் குயிரா யுயிரினுக் குடலா
யுறைந்தமெய்ப் பொருளினைப் புகல்வாம்.
1.1.4
5 வேறு

அருமறை தெரிந்துநீதி நெறிமுறை நடந்துதீனிவ்
வகிலதல மெங்கு மீறவே
யொருகவிகை கொண்டுமாறு படுமவரை வென்றுநாளு
முறுபுகழ் சிறந்த வாழ்வுளோர்
திருவொளி வெனும்ஹபீபு நபிமுகம்ம தன்றுவானர்
சிரமிசை நடந்து சோர்வுறா
விருசரண நம்பினோர்கள் வரிசைக ணிறைந்தபேர்க
ளெவரினு முயர்ந்த பேர்களே.
1.1.5
6 வேறு
கவியா லுரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவி
யடைவார் கலக்க மறவே
செவியார மெய்ப்பொருளை யறிவார் மனத்தினுறு
செயல்கே டகற்றி விடுவார்
புவியார மொய்த்தநெறி மறைநாலினுக்குமொரு
பொறியா யுதித்த வடிவார்
நவியார் சுவர்க்கபதி நயினார் பதத்துணையை
நடுநாவில் வைத்த வர்களே.
1.1.6
7 வேறு
ஆதிதன் கிருபை தாங்கி யகிலமீ தரசு வைகித்
தீதிலாச் சோதி போலத் தீன்பயிர் விளக்கஞ் செய்தே
மூதறி வுடைய ரான முறுசலீன் களையெந் நாளும்
போதர வுடனே போற்றிப் புந்தியின் மகிழ்ச்சி செய்வாம்.
1.1.7
8 வேறு
தாரா தரத்தையே மேலே கவிக்கவே
தாடாண்மை பெற்ற நயினார்
பேரா யுதிக்கவே வானோ ருரைக்கவே
பேறாய் விளக்கு முரவோ
ராராய்வின் மிக்கபேர் நூறாயிரத்துநா
லாறாயிரத்து நபிமார்
மாராய மிக்கபேர் வாயார வைத்தபேர்
வாழ்வார் சுவர்க்க பதியே.
1.1.8
9 வேறு
புரசைக் கடக்கரிக ணிரைதட் டற்க்குபிரர்
புவியைப் படக்க டவியே
சரகுற்ற நற்பதவி வழியிற் புகுத்தியுயர்
தலைமைக்கு வைத்த பெரியோர்
பிரசத் துளித்திவலை சிதறிக் கிடக்குமிரு
பிணையற் புயத்து நயினா
ரரசுக்கு வைத்தநெறி வரிசைக்கு மிக்கதுரை
யபுபக் கரைப்புகலுவாம்.
1.1.9
10 வேறு
அமரிலெதிர்த் தோர்களாவி யெமதிசையைத் தேடியோட
வடருமடற் சூர வீரவேள்
மமதைகெடச் சாதிநீதி முறைமைதனக் காகவோது
மகனைவதைத் தோரொ றாமலே
திமிரபகைப் பானுமேனி கருகிவிடப் பார்வையேவு
தெரிமறையிற் கார ணீகனா
ருமறுதிருத் தாளைநாளு மனதினினைத் தோதுவோர்தம்
முரியதவப் பேறு மீறுமே.
1.1.10
11 வேறு
விதுமாற வொளிவான வதனாதி நபிநாவில்
விளைவான திரு வேதமே
பதிவாக வொருசேக ரமதாக நிலமீது
பயிராக வுரை தூவினோர்
சதுமாம றையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்க
டமதாவி யென வாழ்வோ
ருதுமானை யொருகாலு மறவாம லிருகாலு
முளமீது நினை வாமரோ.
1.1.11
12 வேறு
படிகிடு கிடெனநாக முடிநெறு நெறெனவாரி
படுதிரை யளற தாகவே
வடவரை யசையாவான முகடுடை படவறாத
மழைமுகில் சிதறி யோடவே
யடையலர் கெடிகள்கோடி யிடிபடு படலதூளி
யலரியி னுடலின் மூழ்கவே
நடமிடு கடினவாசி மிசைவரு சமரசூர
நரர்புலி யலியை யோதுவாம்.
1.1.12
13 நலிவற வுலகநீதி நெறிமுறை பெருகநாளு
நமருயி ரரிய காவலா
யொலிகட லுலகமீது தெரிதர வரியதீனு
முறுகதி ருதைய மாகவே
மலிபுக ழரசர்சீய மிர்கமத நறைகுலாவு
மறைநபி மருக ராகிவா
ழலிதிரு மதலையான வசனுசை னுபயபாத
மனுதின மனதி லோதுவாம்.
1.1.13
14 வேறு
ஆலகால வாரிபோலு மாகொடூர மாகிய
காலகேள்வி தானடாத காரணீக ராளவே
தாலமீதி லாதிதூதர் சாரமேவு வாழ்வினோர்
நாலொடாறு பேர்கள்பாத நாவினாளு மோதுவாம்.
1.1.14
15 வேறு
ஆத மீன்றமனு நீதி யாண்டமுறை
யாலு மோங்குபுக ழாகினோர்
தூத ராங்கடவு ணாவி லாய்ந்தமறை
தூவி நான்கு மத்க பாகினோர்
நீத வான்களுறு போத வான்கள்குரு
நேர்மை யாந்தகைமை யாகினோர்
வேத வான்களெனு நாலிமாம்கள்பத
மேலு மியாம்புகல வேணுமே.
1.1.15
16 வேறு
உரமுறு தீன்பா ரெல்லா மொளிரவே விளக்கஞ் செய்யுந்
துரமுறு மவுலி யாவாய்த் தோன்றின பேர்க்கு மேலாம்
வரமுறு முகியித் தீன்செம் மலரடி யிரண்டு மென்றன்
சிரமிசை யிருத்தி வாழ்த்திச் செந்தமிழ்ப் பனுவல் செய்வேன்.
1.1.16
17 நம்மையா ளுடையான் வேத நபிதிரு வசனந் தீனோர்
சம்மதித் திடப்பா ரெல்லாந் தழைக்கவே விளக்கஞ் செய்தோ
ரிம்மையு மறுமை யும்பே றிலங்கிய சதக்கத் துல்லா
செம்மல ரடியி ரண்டுஞ் சிந்தையி லிருத்தி னேனே.
1.1.17
18 அவையடக்கம்
வேறு
திக்க னைத்தினும் பாரினுந் தீவினுஞ் செங்கோற்
புக்க நன்னெறித் திகிரிமன் னவர்கண்முன் பொருந்தக்
தக்க கூலியுஞ் செய்துண வறிகிலான் சரிபோன்
மிக்க செந்தமிழப் புலவர்மு னியான்விளம் புவதே.
1.1.18
19 படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற
வெடுத்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரே
மிடித்து நொந்தசிற் றெறும்பொரு மூச்சுவிட் டதுபோல்
வடித்த செந்தமிழ்ப் புலவர்மு னியான்சொலு மாறே.
1.1.19
20 அடிய டித்தொறும் வழுவலால் விதிவிலக் கறியேன்
படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்த
லிடியி டித்திடு மாரவா ரத்தினுக் கெதிரோர்
நொடிநொ டிப்பது போலுமொத் திருந்தென் நூலே.
1.1.20

கடவுள் வாழ்த்துப் படலம் முற்றிற்று.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.2. நாட்டுப்படலம்

21 தருங்கொடை நயினார் கீர்த்தி சகமெலாம் பரந்து மிஞ்சி
நெருங்கியே விசும்பி லண்ட முகடுற நிறைந்த வேபோ
லிருங்கண வெள்ளை மேக மிரைபசுங் கடல்வீழ்ந் துண்டோர்
கருங்கட லெழுந்த தென்னக் ககனிடைல் செறிந்து மீண்ட.
1.2.1
22 வேறு
அகில மெங்கணுந் திடுக்கிட வாய்திறந் ததிர்ந்து
மிகும ழைக்குல மடிக்கடி விழிப்பபோன் மின்னிக்
ககன மெண்டிசை யடங்கலும் பரந்துகா லூன்றிச்
சிகர பூதர மறைதரச் சொரிந்தன செருமி.
1.2.2
23 அதிரு மாமழைத் துளியிடை யிடையணி யணியாய்
முதிரு மிந்திர கோபமு மாலியு முதிர்ந்த
கதிர்செய் முத்தமு மாணிக்க ராசியுங் கலந்தே
யுதிரும் வண்ணமொத் திருந்தன கிரியொருங் கொருங்கே.
1.2.3
24 பம்மி யெங்கணும் பொழிதரு சாரல்வாய்ப் பட்டுக்
கம்மி னத்தக டுறக்கொடு கியகுளிர் கலக்க
மும்ம தக்கரி களுமரி களுமுர ணறவே
சம்ம தித்தொரு புடைகிடப் பனவெனச் சாரும்.
1.2.4
25 தந்தி மான்மரை யணில்கொடு வரிதக ருடும்பு
மந்தி சிங்களங் கவரிமா வழுங்குதே வாங்கு
முந்து மான்மத மெண்குசெந் நாய்பணி முண்மா
நந்தி மிஞ்சிய விலங்கினங் கொடுகிமெய்ந் நடுங்கும்.
1.2.5
26 வேங்கை சந்தனஞ் சண்பகம் நெல்லிவெய் தான்றி
கோங்க சோகுதேக் காசினி பாடலங் குறிஞ்சி
நாங்கு காரகில் குங்கும மிலவு நாரத்தை
தாங்கும் வேரற வரையொடு வரையிடை சாய்க்கும்.
1.2.6
27 விலங்கி னங்கடங் குலத்தொடுங் குழுவொடும் வெருட்டிக்
கலங்கு மஞ்சிறைப் பறவைக ளைனைத்தையுங் கலைத்தே
யிலங்கு பைங்கனி சிதறிடத் தருக்களை யிடறி
நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன நாரம்.
1.2.7
28 வேறு
வரிவிழிச் செவ்வாய்க் குறத்திய ரிதணு
மனையையுந் தினையையும் வாரிப்
புரிநரம் பிசையாழ் தொண்டகப் பறையும்
பொடிபடத் துறுகலின் மோதி
விரிதலைக் குறவர் குழாத்தொடும் வெருட்டி
விளைந்தமுக் கனிசத கோடி
சரிதர வீழ்த்தி மரகதக் கிரணத்
தடவரை யருவிகொண் டிறங்கும்.
1.2.8
29 மலையெனு மரசன் புயங்களைத் தழுவி
மகிழ்ச்சிசெய் தவனுழைச் சிறந்த
நிலைகெழு பொன்னு முரகசெம் மணியு
நித்தில ராசியுங் கவர்ந்து
தொலைவிலாப் பண்ட மனைத்தையும் வாரிச்
சுருட்டியே யெல்லைவிட் டகலும்
விலைமகள் போன்று பலபல முகமாய்
வெள்ளரு வித்திரள் சாயும்.
1.2.9
30 வேறு
தாது குத்துவண் டார்த்தெழத் தருத்தலை தடவி
வீதி வாய்நுரை தரவரு பாகெழ வீசிக்
காது மாகளி றெனநதி கழைக்கடங் காது
மோதிக் காலினா லெற்றியே யணையிட முறிக்கும்.
1.2.10
31 பரந்த வெண்ணுரைத் துகிலுடுத் தறற்குழற் பரப்பி
விரைந்து பாய்கயல் விழியெனத் திரைக்கரம் வீசிச்
சுரந்த புற்புதத் தனத்துடன் சுழியுந்தி தோற்றப்
பொருந்து மானதி விளங்கிழை மகளிரைப் போலும்.
1.2.11
32 கிடந்த சந்தனங் காரகில் கிளைமணி கரிக்கோ
டுடைந்த முத்தம்வெண் டந்தமுச் சுடரொளி யொதுங்கக்
கடந்த செம்மணிப் பையுடன் கொடுகட லேற
நடந்த வாணிக னொத்தது செழுங்கழை நதியே.
1.2.12
33 வேறு
இத்தகைக் குறிஞ்சி நிலத்தினைக் கடந்தே
யெரிதழற் பாலையிற் புகுந்து
மைத்தடங் கூந்தற் கருவிழிச் செவ்வா
யெயிற்றியர் வயிறலைத் தேங்கக்
கைத்தலத் தேந்து குழந்தையுஞ் சிறாரும்
வேடர்தங் கணத்தொடும் வெருட்டி
முத்தணி சிறப்ப விருகரை கொழித்து
முல்லையிற் புகுந்தது சலிலம்.
1.2.13
34 பாறயிர் நறுநெய்க் கலத்தொடுங் கலக்கிப்
பட்டியுங் குட்டியுஞ் சிதறிச்
சூறையிட் டுதறி நெய்முடை கமழுஞ்
சுரிகுழற் றொறுவிய ருடுத்த
கூறையுங் குழலுங் குடுக்கையுந் தடுக்குங்
கொண்டெடுத் தவர்நிரை சாய்த்து
வேறரை யரைப்போற் பெருவளங் கவர்ந்து
மருதத்திற் பரந்தன வெள்ளம்.
1.2.14
35 வேறு
கன்னன் மானதி வெண்டிரை நுரைகரை புரளத்
தென்னி லைப்பகுப் பாகிய காலெலாஞ் செருமி
யன்ன மென்சிறைப் பெடையொடுங் குடம்பைவிட் டகலத்
துன்னு மேரியுந் தடங்களு நிறைந்தன தோயம்.
1.2.15
36 அலையெறி ந்திரை கடலென வருநதி யதனைத்
தொலைவின் மள்ளர்கள் குளந்தொறும் புகுத்திய தோற்றங்
கொலைம தக்கரிக் குழுவினை வயவராய்க் கொடுபோய்
நிலைத ரித்திடும் படுகுழிப் படுத்தவை நிகர்க்கும்.
1.2.16
37 தடமு மேரியும் வாவியுங் கழனியுஞ் சலசக்
கிடங்கு மெங்கணு நிறைதரப் பெருகுகீலாலங்
குடம்பை யின்பல பேதமா கியசத கோடி
யுடம்பு தோறினு முயிர்நின்ற நிலையினை யொக்கும்.
1.2.17
38 வேறு
ஏரியை யுடைத்துக் குளங்கரை தகர்த்தே
யிடிபட வணையினை முறித்துச்
சேரியுட் பரந்து கொல்லையுட் புகுந்து
செழுங்கருப் பாலையைச் சாய்த்து
வேரியஞ் சலசக் கழனியைச் யுழக்கி
விரிதலை யரம்பையைத் தள்ளி
வாரியிற் செறித்து பணையெலா நிரப்பி
மட்டிலா மலிந்தன வனமே.
1.2.18
39 வேறு
அலையெ றிந்திரு கரைவழி யொழுகுகம் பலையுங்
கலையும் வெள்ளனஞ் சிறைவிரித் தசைத்த கம்பலையு
மலைதி றந்தன மதகின்வாய் வழிந்தகம் பலையுஞ்
சிலைத ரித்தபே ரொலிபெரும் படையொலி சிறக்கும்.
1.2.19
40 முறைமு றைக்கிணைப் பறையொலி கடலென முழங்க
நிறையுஞ் சேரிவிட் டெழுந்தன ருழவர்க ணெருங்கிச்
செறிக டக்களி றினமென வயின்வயின் றிரண்டு
மறிபு னற்கரை யிடந்தொறுஞ் செறிந்தனர் மலிந்தே.
1.2.20
41 மட்டு வாய்வயி றாரவுண் டெண்ணிலா மள்ளர்
கொட்டு வாங்கியே யிருபுயங் குலுங்கிடக் கரண்கள்
வெட்டு வார்சிலர் மென்கரத் தேந்தியே வரம்பு
கட்டு வாரடைப் பார்திசை தொறுங்கணக் கிலையே.
1.2.21
42 வேறு
தெரிபொறி முகட்டுக் கவட்டடி யலவன்
சிதைந்திடக் கமடமுள் ளழுந்த
வரிவளை நெரிய வலம்புரிக் குலத்தின்
வயிற்றிடை கொழுமுகந் தாக்கி
விரிகதிர்த் தரள மணிபல வுகுப்ப
வெருண்மதக் கவையடிப் பேழ்வாய்
நிரைநெறி மருப்புக் கரும்பக டிணக்கி
நீள்வய லெங்கணு முழுதார்.
1.2.22
43 முள்ளரைப் பசுந்தாள் வட்டிலைக் கமல
முகையுடைந் தொழுகுதேன் றெறிப்பக்
கள்ளவிழ் குவளை யொருபுறஞ் சரியக்
கடிமலர்க் குமுதமு மடிய
மள்ளர்கார் சேற்றி லிடறிய பதும
மணியின மலரளி யெழுப்ப
வெள்ளநீர் பரப்பு கழனிக டோறு
மென்கருஞ் சேறுசெய் தனரே.
1.2.23
44 சுந்தரப் பொறியஞ் சிறையறு காலே
ழிசையளி தொகுதியிற் கூடி
மந்தர மனைய தருவின்மேல் வீழ்ந்து
வாய்விட முழங்கிய வோதை
கொந்தெறி கமலங் குமுதஞ்செங் கழுநீர்
குடியொடு மடிந்தன வினிமே
லந்தர மலது வேறிட மிலையென்
றழுகுரன் மயங்குவ போலும்.
1.2.24
45 சுரும்பின மிருந்து தேனுண்டு தெவுட்டிச்
சுருதிசெய் பன்மலர் சிறந்த
விரும்படி கிடங்கிற் கிடந்துமூச் செறிந்த
வெருமையின் கவையடிப் பரூஉத்தா
ணிரம்பிடப் பதிந்த சலஞ்சலத் தரள
நீணிலா வெறிப்பது நிறைந்த
கரும்பொறிக் கவைநாத் துளையெயிற் றரவு
கவ்விய கதிர்மதி போலும்.
1.2.25
46 கலன்பல வணிந்து தொண்டியுண் டெழுந்து
கதிரவன் றனைக்கையாற் றொழுது
குலந்தரு தெய்வ வணக்கமுஞ் செய்து
குழுவுட னுழுநர்கள் கூண்டு
நிலந்தனை வாழ்த்தி வலக்கரங் குலுக்கி
நென்முளை சிதறிய தோற்றம்
பொலன்பல சிறப்ப விடனற நெருங்கிப்
பொன்மழை பொழிவது போலும்.
1.2.26
47 படர்மருப் பெருமைக் குடம்புரை செருத்தற்
பருமுலைக் கண்டிறந் தொழுகி
நடைவழி சொரியு மமுதமும் வாழை
நறுங்கனி யுகுத்தசெந் தேனு
முடைபடு பனசப் பசுங்கனிச் சுளையி
லூற்றிருந் தோடிய தேனுங்
கடிமலர் போர்த்த வரம்பினைத் தகர்த்துக்
கழனியிற் பரந்துபாய்ந் துடைக்கும்.
1.2.27
48 அருமறை நெறியும் வணக்கமுங் கொடையு
மன்புமா தரவுநல் லறிவுந்
தருமமும் பொறையு மிரக்கமுங் குணமுந்
தயவுஞ்சீ ரொழுக்கமு முடையோர்
பெருகிய செல்வக் குடியொடு கிளையும்
பெருத்தினி திருந்துவாழ் வனபோன்
மருமலர்ப் பழனக் காடெலா நெருங்கி
வளர்ந்தது நெல்லிலை நாற்றே.
1.2.28
49 கோதற வெழுந்த நாற்றினைப் பறித்துக்
குவித்திடு முடியிட மடுத்துக்
தீதுறுங் கருங்கட் செய்யவாய் வெண்பற்
சிற்றிடைக் கடைசியர் வாரிப்
பூதர மனைய சுணங்கணி முலையிற்
புள்ளியிற் சேதகம் போர்ப்ப
வாதரம் பெருகி நிரைநிரை வடிவா
யணியணி நாற்றினை நடுவார்.
1.2.29
50 கையினிற் செறிந்த முடியினைச் சிதறிக்
கடைசியர் கரங்கடொட் டொழுங்காய்ச்
செய்யினிற் பதிப்பத் துளிகருஞ் சேறு
தெறித்திடுஞ் செழுமுகச் செவ்வி
துய்யவெண் டிரைப்பாய் சுருட்டிமே லெறியுந்
தொடுகடன் முகட்டிடை யெழுந்து
வையகஞ் சிறப்ப வருமுழு மதியு
மறுவுமொத் திருந்தன மாதோ.
1.2.30
51 பனைமதுத் தேக்கி யிருவிழி சேப்பப்
பைங்கழை நிகர்த்ததோ ளசைய
வனநடை சிதையச் சேவடி பெயர்த்திட்
டள்ளலஞ் சேற்றிடை நடுவோர்
சினமத கரிக்கோ டெனுமுலைத் தடத்திற்
சேதகந் தெறிப்பது திரண்ட
வனசமென் முகையிற் பொறிவரி யறுகால்
வண்டுமொய்த் திருப்பது போலும்.
1.2.31
52 முற்றிழை கிடந்த முலைக்குவ டசைய
முகிறவழ் கருங்குழ னெகிழச்
சிற்றிடை யொசிய மதிமுகம் வெயர்ப்பச்
சேற்றிடை நாற்றினை நடுவோர்
பற்றுமென் கரத்திற் கரும்பொனின் கடகம்
பசியநெற் பயிரொளி பாய
மற்றெனை யுரைப்ப விரிகதிர் பரப்பு
மரகதக் கடகமொத் திருந்த.
1.2.32
53 வெறிமது வருந்தி மரகதக் கோவை
மென்பிடர் கிடந்துருண் டசையக்
கறுவிய மனத்தோ டினத்தொடு மிகலிக்
கடைசியர் களிப்பொடு தவளச்
சிறுநகை தரளப் பவளமெல் லிதழிற்
செழுமலர்க் கைவிரற் குவித்துக்
குறிகுரற் குரவை கூன்பிடர்ப் பேழ்வாய்க்
குடவளைக் குரவையோ டிகலும்.
1.2.33
54 கூந்தலம் பிடிமா மென்னடை பயிலுங்
குடமுலைக் கடைசியர் செழுங்கைக்
காந்தண்மெல் விறர்குங் கடுவரி விழிக்குங்
கடைந்திணைக் கியகணைக் காற்குஞ்
சேந்திணை பொருவா தினமென வெருவிச்
செங்கயல் வரிவராற் கௌிறு
பாய்ந்தயல் போய வனத்திடை யொளித்துப்
பங்கமெய் படப்பயப் படுமே.
1.2.34
55 குருகின மிரியப் புள்ளினம் பதறக்
கொக்கினம் வெருவிட வெகினம்
விரிமலர்க் கமலப் பாயல்விட் டகல
மென்சிறைப் பேட்டனந் துடிப்பச்
சொரிமதுத் துளித்துக் குவளையாய் சிதறச்
சுருட்டிவால் விசைத்திடத் துள்ளி
வரிவராற் பகடு வளைநில வெறிக்கு
மடைத்தலைக் கிடந்துமூச் செறியும்.
1.2.35
56 வரிசையிற் செறிந்த நிரைபசுஞ் சாலி
வளர்கிளைக் கிளையெனக் கிளைத்துப்
பெருகுசூன் முதிர்ந்தீன் றாரமு துறைந்து
பிடர்குனி தரக்குலை சேந்து
சொரிகதிர்ப் பவள நிறம்பல படைத்துச்
சுடர்மணி முத்தினந் தெறிப்பத்
தரையினிற் படிந்தே யருட்கை சுரந்த
தருவினம் வெருவிடக் கிடக்கும்.
1.2.36
57 கொத்தலர் சூடி யரைத்துகி லிறுக்கிக்
குடமதுக் கைமடுத் தருந்தி
மைத்தவழ் கனகக் கிரிப்புயந் திரண்ட
மள்ளர்கள் வனப்பினுக் குடைந்த
சித்தசன் கரவாட் பறித்ததை வளைத்த
செயலெனப் பிள்ளைவெண் பிறைவாட்
கைத்தலத் தேந்திக் கழனியிற் புகுந்து
கதிரரிந் தரிநிரை யிடுவார்.
1.2.37
58 திருந்திய வரியைக் கொடுங்கையிற் கிடத்தித்
திரைசெய்து சும்மையிற் சேர்த்துக்
கருந்தடங் கூந்தற் செவ்வரி வேற்கட்
கடைசியர் குழாத்தொடுந் திரண்டு
விரிந்தசெங் கமலக் கரம்பல வருந்த
விசித்திறுக் கியசுமை யேந்திப்
பொருந்திய வரப்பி நெறிகடைக் கதலிப்
புலியடிக் குலைத்தலை சாய்க்கும்.
1.2.38
59 அசைந்தசிற் றிடைமென் கொடிவருந் திடநீ
ளணிவட மார்பிடைப் புரளப்
பசுங்கிளிப் பரிவேள் படையெனத் திரண்ட
கடைசியர் சுமையெலாம் பரப்பி
யிசைந்திட நிறைத்துக் குவித்தநெற் போர்க
ளெங்கணு மிலங்கிய தோற்றம்
விசும்பினைத் தடவ வரைசத கோடி
வீற்றிருந் தனவெனச் சிறக்கும்.
1.2.39
60 கார்த்தடக் களிற்றின் வனப்பினை யழித்த
கருங்கடா வினம்பல விணைத்துப்
போர்த்த்லை திறந்து திரித்துவை நீத்துப்
பொன்னிறச் செந்நெல்லைக் குவித்துச்
சேர்த்திடுஞ் சகடந் தொறுந்தொறு மியற்றித்
திரண்மனை வயின்வயின் செறிப்பா
ரார்த்தபே ரோதை யினமணி கொழிக்கு
மறைதிரைக் கடலினைப் பொருவும்.
1.2.40
61 செந்நெலிற் பெருக்கின் கனைகுரற் சகடந்
திசைதொறு மலிந்தன செருக்குங்
கன்னலங் கழனி புகுந்தறுத் தடைந்த
களமர்க ளொலிகுரற் செருக்குந்
துன்னுபூங் கமுக சிதறுசெம் பழுக்காய்
சுமப்பவர் கம்பலைச் செருக்கு
மன்னவன் வகுதைத் துரையபுல் காசீம்
வளமனைச் செருக்குமொத் திருக்கும்.
1.2.41
62 வேறு
கால வட்டவாய் முளரியி லூறுகள் ளருந்திக்
கோல வட்டவஞ் சிறையளி குழுவுடன் பாடுஞ்
சோலை வட்டவாய் மயிலினஞ் சூழ்ந்துகார் நீல
வால வட்டமொத் திருந்தமென் சிறைவிரித் தாடும்.
1.2.42
63 அரக்கெ றிந்தசெவ் வாம்பல்வா யணியிழை மடவார்
நெருக்கி யிட்டகாற் சிலம்பொலி விசும்புற நிமிர
விருக்கும் வாவியுட் பெடையன மிடர்கொலென் றிரங்கித்
தருக்கி ழந்துதன் சேவல்வாய்த் தொனியெனத் தயங்கும்.
1.2.43
64 நலங்கொ டாமரை முகமலர் தரநறுங் குவளை
விலங்கி வள்ளையில் விழியெனக் கிடப்பமெல் லரும்பு
துலங்கு மென்முலை தோன்றிடப் பச்சிலைத் துகில்போர்த்
திலங்கு வாவிக ளணியிழை மகளிரொத் திருந்த.
1.2.44
65 நிரைந்த சண்பகம் பாடலந் தடக்கரை நிரம்பச்
சொரிந்த பன்மலர் மீதினில் வரியளித் தோற்ற
மெரிந்தி லங்குபொற் கரையினை யிரும்பினா லிறுகப்
பரிந்த றைந்தசுள் ளாணியின் புறமெனப் பரந்த.
1.2.45
66 தோட விழ்ந்துபூந் தாதுகக் குடைந்தினைச் சுரும்பு
பாட வாவியு ளிளநிலாத் தோற்றிய பான்மை
சாடும் வார்புன லலைதரத் திரைகளிற் றத்தி
யோட மோடுவ தொத்திருந் தனவென வொளிரும்.
1.2.46
67 வாய்ந்த மெல்லிழை மடந்தையர் தடத்தின்மெய் வருந்தத்
தோய்ந்து நீர்குடைந் தாடுவோர் மதிமுகத் தோற்றஞ்
சேந்த கஞ்சமுங் குவளையு மெனவெழில் சிறந்த
கூந்தல் வெண்டிரைக் கடலிடை முகிலெனக் குலவும்.
1.2.47
68 திருந்து மெல்லிழை மடந்தையர் புனலிடை திளைப்பச்
சரிந்த கூந்தலி லிருந்தவண் டெழுந்துபூந் தடத்தில்
விரிந்த காவியில் வீழ்வது மின்னனார் விழிக்குப்
பொருந்து மோவெனச் சினத்துட னுதைப்பது போலும்.
1.2.48
69 மறிந்து தூங்கிய நாவலின் கனியையோர் மங்கை
யெறிந்து பார்மது கரத்தினைக் கரத்தினா லெடுப்பப்
பறிந்து போதலிற் றுணிக்கின்கை யுதறிமெய் பதறிச்
செறிந்து சூழ்தரச் சொரிந்தமைக் கனியையுந் தீண்டாள்.
1.2.49
70 கரிய மைவிழி மங்கையர் பூங்குழற் காட்டிற்
சொரியு மென்மலர்த் தாதுக்க ளுதிர்ந்தன சுடர்மின்
விரியு மெல்லிழைப் பூணொடு பூண்பல மிடைந்து
பொருது ரிஞ்சதிற் பொற்பொடி யுதிர்வன போலும்.
1.2.50
71 பிடித்த கொம்பிருந் தோடிமுட் குடக்கனி பிடித்துக்
கடித்த போதினிற் காம்பறக் கனியுடன் கவியும்
படித்த லத்தினில் வீழ்ந்திடப் பதறிமெய் பதைத்துத்
துடித்துத் தன்னுயிர்க் கடுவனை யணைத்துட றுணுக்கும்.
1.2.51
72 தாறு கொண்டபைங் கதலிதே மாப்பலாத் தருத்தே
னூறு கொண்டசெங் கனிசிறு கிடங்கிடை யுகுப்பச்
சேறு கொண்டதிற் கிடந்திருள் செறிகரு மேதி
வேறு கொண்டுபொன் மேதியின் குலமென விளங்கும்.
1.2.52
73 கள்ள விழ்ந்தபூம் பொய்கையிற் புள்ளினங் கலையத்
துள்ளு மேல்வரிக் கயலுண்டு நாரைகண் டூங்கு
முள்ள மன்புறச் சேவலின் சிறைநிழ லொதுங்கி
வெள்ள னப்பெடை தாமரைத் தவிசில்வீற் றிருக்கும்.
1.2.53
74 ஏல வார்குழற் கிடுபுகை மஞ்சினோ டிகலுஞ்
சோலை வாய்தொறு முக்கனித் தேன்மழை சொரியு
மாலை வாய்தொறுங் கரும்புடைத் தாறெடுத் தோடு
நீல வாய்மலர் வாவிகள் பெருங்கட னிகர்க்கும்.
1.2.54
75 தெருளு றும்படி தேன்றுளி தெறித்திடச் சிதறிப்
பொருத லைத்திடு மாங்கனி தேங்கனிப் பொழிலே
மரும ணம்பெறுஞ் சந்தகில் சண்பக வனத்திற்
றருவே னும்பெயர் பெறச்சிறந் தீந்திருந் தனவே.
1.2.55
76 வேறு
நினக்கும்பொற் பொருளே நிந்தனை மற்றோர்
நிந்தனை சிந்தனை யிலையே
யினக்கருஞ் சுரும்பு மதுத்துளி யருந்து
மிவையலான் மதுப்பிறி திலையே
சினக்கரி முனைக்கோட் டிளமுலைப் புலவி
திருத்தும்பொய் யலதுபொய் யிலையே
வனக்கனி கறுத்த குலைக்கள வலது
மறுத்தொரு கொலைக்கள விலையே.
1.2.56

நாட்டுப் படலம் முற்றிற்று.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.3. நகரப்படலம்

77 நிலங்க ளேழுக்கு நாவலந் தீவுகண் ணிகர்க்கு
நலங்கொ டீவுக்குக் கண்மணி யறபுநன் னாடே
புலன்கொள் கண்மணிக் குள்ளுறை யுயிரெனப் பொருந்தி
யிலங்கு மக்கமா நகர்வளஞ் சிறிதெடுத் திசைப்பாம்.
13.1
78 வேறு
விரிகதி ரெறித்த மணிவளை யுகுப்ப
விரிதிரை யகழெனுந் தடத்தி
லெரிசைகைக் கிரணப் பதுமமா மணியி
னினம்பல சூழ்ந்திருந் திலங்கப்
புரிமுறுக் கவிழ்ந்த பொன்னிதழ்க் கமலம்
பூத்திருந் ததுவெனப் புரிசை
தெரிதரச் சிறந்து செல்வமுஞ் செருக்குந்
திகழ்தர வீற்றிருந் ததுவே.
13.2
79 வடவரைப் புடைசூழ் நிலத்தெழு தீவும்
வரவழைத் தொருதலத் திருத்தித்
தடமுடிக் கிரணத் திகிரிமால் வரையைச்
சதுர்தரப் புரிசையாய் நிறுத்தி
யிடனற நெருங்கும் பெரும்புபுறக் கடலை
யிதற்கக ழெனப்பெய ரிட்டுப்
படவர வரசன் றிருமுடி மணியைப்
பதித்தது மக்கமா நகரம்.
13.3
80 கானகத் துறையும் வயிரவொண் கதிரோ
கடல்படு நித்திலக் கதிரோ
தேனவிழ் பதும மணிக்கதி ரதுவோ
சிறந்திடு மக்கமா நகரில்
வானவர்க் கிறைவன் ஜபுறயீல் பலகால்
வந்தவர் மெய்யொளி பாய்ந்தே
யீனமி னகரஞ் செழுங்கதிர் பரப்பி
யிருப்பது பிறிதுவே றிலையே.
13.4
81 சரிகதி வேக மாருதஞ் சிதையத்
தாவிய புரவியி னொலியு
நிரைமணி யுருட்டுப் பசுங்கதி ரிரத
நெருங்கிட நடத்துபே ரொலியு
முரலடிச் சிறுகட் பெருமதப் பிறைக்கோட்
டொருத்தலி னிடிமுழக் கொலியும்
விரிதிரைக் கரங்கொண் டறையுவாப் பெருக்கும்
வெருக்கொளத் தெருக்கிடந் தொலிக்கும்.
13.5
82 மின்னிடை நுடங்கச் சிலம்பொலி சிலம்ப
மேகலைத் திரண்மணிக் கதிர்செம்
பொன்னொடு மிலங்க மறுகிடைப் புகுந்த
புனையிழைப் பிடிநடை மடவார்
மன்னிய பதத்தி னலத்தக நிலத்தில்
வரிபடக் கிடப்பன சிறந்த
துன்னிதழ்க் கமலப் பதத்தினை நிகர்ப்பச்
சுவட்டடி தொடர்வன போலும்.
13.6
83 கண்ணகன் ஞாலம் விலைசொலற் கரிய
கலைபல நிரைத்தலாற் பணியாற்
றண்ணெனக் குளிர்ந்து பிறவுரு வமைத்துத்
தரும்படி மக்கலப் பெருக்கான்
மண்ணினிற் சிறந்த நகர்த்திர வியத்தான்
மரக்கலத் திறக்கிய சரக்கா
லெண்ணிறந் தெழுநல் வளம்பல படைத்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே.
13.7
84 மான்மதக் குவையுஞ் சந்தனத் தொகையு
மணிக்கருங் காழகிற் றுணியும்
பான்மதிக் குழவிக் குருத்தெனக் கதிர்கள்
பரப்பிய மதகரி மருப்புந்
தேனமர்ந் தொழுகுங் குங்குமத் தொகையுஞ்
செறிதலா லுயர்ச்சியால் வளத்தா
லீனமி லிமயப் பொருப்பெனப் பணைத்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே.
13.8
85 தந்தியின் குழுவுங் குரகதத் திரளுந்
தடவரை பொருவுதேர்க் கணமுஞ்
சிந்துரப் பிறைநன் னுதற்கருங் கூந்தற்
செவ்வரித் தடங்கண்ணார் நெருக்கும்
வந்தவர் நினைத்த பொருளுமா ரமிர்தும்
வகைவகை தருதலான் மணியு
மிந்திர தருவும் வறிதென மதர்த்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே.
13.9
86 நிரைத்தபைங் கதிரார் மரகத மணியா
னீணிலாக் கருப்புரத் தகட்டாற்
பருத்தசங் கினத்தால் வலம்புரிக் குலத்தாற்
படர்கொடித் திரட்பவ ளத்தால்
விரித்தவெண் ணுரைபோல் வெண்டுகி லடுக்கால்
விரைசெறி யம்பரின் றிடரா
லிரைத்தபே ரொலியாற் பெருங்கட னிகரா
யிருந்தது கடைத்தெருத் தலையே.
13.10
87 பைங்கடற் பிறந்து வணிகர்கை புகுந்த
பருமணி நித்திலக் குவையுந்
தங்கிய கிரண வனசமா மணியுந்
தயங்கொளி வயிரரா சிகளுஞ்
செங்கதி ரெறிக்கு மிரவியு மமுதச்
செழுங்கதிர் மதியமு முடுவு
மிங்கிவண் குடிபுக் கிருந்தது போன்று
மிருந்தது கடைத்தெருத் தலையே.
13.11
88 அணிபெற வொழுங்காய் வயின்வயின் றிரண்ட
வகிற்புகை முகிலின மெனவுங்
குணில்பொரு முரசப் பெருங்குரல் கிடந்து
குழுமிவிண் ணேறொலி யெனவு
மணிவளைத் தடக்கைத் துவரிதழ் கனத்த
வனமுலை மின்கண்மின் னெனவுந்
தணிவில நிவந்த செழுங்கதிர் மாடந்
தமனியக் கிரியினோ டிகலும்.
13.12
89 வெண்ணில வெறிக்கு மிரசதத் தகடு
வேய்ந்தமே னிலைவயின் செறிந்து
பண்ணிருந் தொழுகு மென்மொழிக் குதலைப்
பாவையர் செழுங்குழல் விரித்து
நண்ணிய துகிலுங் கமழ்தர வூட்டு
நறும்புகை சுருண்டெழுந் தொழுங்காய்
விண்ணினிற் படர்வ தேணியொன் றமைத்து
விசும்பினுக் கிடுவது போலும்.
13.13
90 அடுசெழும் பாகுந் தேனுமா ரமிர்து
மனத்தொடு மனத்தொடுந் திருந்தி
யிடனற விருந்து விருந்தொடு நுகர்வோர்
மனையிட மெண்ணினை மறைக்குங்
கடுவினை யடர்ந்த கொடுவினை விழியார்
கறைதவிர் மதிமுகங் கண்டோ
படர்தரு மாடக் குடுமியின் விசித்த
பசுங்கொடி மதிமறுத் துடைக்கும்.
13.14
91 தேங்கமழ் சுருதி வரிமுறை படர்ந்து
திகழ்தரு நித்திலக் கொடிக
ளோங்கிட மாடக் குடுமியி னடுநின்
றுலவிய திரவினும் பகலும்
வீங்குசெங் கதிரி னிரவியுந் தவள
வெண்கதிர் மதியமும் விலகிப்
பாங்கினிற் புகுமி னெனக்கர மசைத்த
பான்மையொத் திருந்தன மாதோ.
13.15
92 வேறு
மானை யன்னகண் மடந்தையர் வதுவையின் முழக்குஞ்
சேனை மன்னவர் படைமுர சதிர்தெரு முழக்குந்
தான மிந்நகர் முதலெனச் சாற்றிய முழக்குஞ்
சோனை மாமழை முழக்கென வைகலுந் தொனிக்கும்.
13.16
93 வீதி வாய்தொறு மிடனற நெருங்கிய மேடைச்
சோதி வெண்கதி ரந்தரத் துலவிய தோற்ற
நீதி மானபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கிக்
கோதில் பொன்னகர் திறந்தவாய்க் கதிரெனக் குலவும்.
13.17
94 மன்ற லங்கம ழகழ்புனை சுதைதிகழ் மதிளா
னின்றி லங்கிய கணமணிக் கொடுமுடி நிரையான்
முன்றி லெங்கணு மசைதரு கொடிநிறை முறையா
லென்று மிந்நகர் பொன்னக ரென்பதொத் திடுமே.
13.18
95 பட்ட முற்றிடு நபிகளால் விண்ணவர் பரிவாற்
கட்டு பேரொளிக் ககுபத்துல் லாவிருக் கையினான்
மட்டு வார்குளிர் சோலையான் மலிந்தபொன் னுலக
மெட்டு மொன்றெனத் திரண்டுவந் திருந்ததொத் திருக்கும்.
13.19
96 தெரிந்த செவ்வியர் முறைவழி தௌிந்தவர் செந்நூற்
சொரிந்த நாவினர் முதியவர் திரண்டசொல் லோதை
யெரிந்த செங்கதி ரிலங்கிய பள்ளிக ளெவையும்
விரிந்த வாய்திறந் தோதுவ போன்றன வேதம்.
13.20
97 சந்திர காந்திசெய் பலகையை மடிமிசை தரித்தே
யிந்திர நீலமொத் திருந்தமை தோய்த்ததி லெழுதி
மந்திர மாமொழி மறைபயி லிளையவர் நெருங்கி
யெந்த வீதியு முழங்குவ திவையலா லிலையே.
13.21
98 மறையின் மிக்கவ ரோதிய வோசையும் வரிசைத்
துறவின் மிக்கவர் திக்கிறி னோசையுஞ் சூழ்ந்தே
யிறைவ னைத்தொழு திருகையு மேந்திய வாமீன்
முறைமு றைப்படிக் கூறிய வோசையு முழங்கும்.
13.22

நகரப்படலம் முற்றிற்று.

ஆகப் படலம்3-க்குத் திருவிருத்தம் 98.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.4. தலைமுறைப் படலம்

99 மருவிரி வாவி செந்தா மரைமலர்க் கைக ளேந்தச்
சொரிமது சிந்துஞ் சந்தத் துடவைசூழ் மதினா தன்னிற்
றெரிதர வரசு செய்து தீனிலை நிறுத்திச் செல்வந்
தருநபி யிறசூ லுல்லா தலைமுறை தோற்றஞ் சொல்வாம்.
1.4. 1
100 தெரிபொரு ளரிய வேதத் துட்பொருட் டௌிவ தாக
வருபொரு ளாதி பாரின் முகம்மதை விளக்கஞ் செய்யப்
பரிவுறு மனுவா தத்தைப் படைக்கமண் ணெடுத்து வாவென்
றுரைதர இசுறா யீலு முவந்துமண் ணெடுத்துப் போந்தார்.
1.4. 2
101 கதிர்வடி வொழுகி நின்ற ஹபீபுமெய் வகுக்க வேண்டி
விதியவன் ஜிபுற யீலை விரைந்துமண் கொடுவா வென்றான்
துதிபெறு மதினா தன்னிற் றூயவோ ரிடத்திற் றோன்றி
யிதமுற வெடுத்துப் போந்தா ரிமையவர் தலைவ ரன்றே.
1.4. 3
102 திறலுறு ஜிபுற யீல்தந் திருக்கையி லேந்திப் போந்த
பிருதிவி தனையே மிக்கோர் பெறும்பதி சுவனந் தன்னில்
நறைவிரி யமுத மெந்த நாளினு மதுர மாறாத்
துறைவிரி நதிக டோறுங் கழுவினர் துலங்க வன்றே.
1.4. 4
103 வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றந்
தெரிதர வானோர்க் கெல்லாஞ் சோபனஞ் சிறக்கச் சொல்லி
யரியமெய் பூரித் தோங்கி யகத்தினின் மகிழ்ச்சி பொங்கிப்
பெரியவன் றிருமன் வைத்தார் பேரொளி யிலங்கிற் றன்றே.
1.4. 5
104 மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனுவா தத்தின்
வெந்நிடத் திருத்தி யங்கம் வியனுறும் வடிவ தாகத்
தென்னுறு ஜலால் ஜமாலென் றேத்திய திருக்கை யாரத்
தன்னிக ரில்லாத் துய்யோன் வகுத்தனன் தழைக்க வன்றே.
1.4. 6
105 மெய்யெழில் வாய்ப்பச் சீவன் விடுத்தனன் விடுத்த போதில்
ஐயமற் றெழுந்து சென்னி மூளையி னவத ரித்து
வையகஞ் சிறப்ப வானோர் மனங்களிப் பேறி விம்மத்
துய்யநற் கலிமா தன்னைச் சொல்லியங் கிருந்த தன்றே.
1.4. 7
106 உரைதெரி கலிமா வோதி யோதியங் கிருந்த சீவன்
இருவிழி தனிலி றங்கி யிருந்தகண் விழித்துச் சொர்க்கச்
சொரிகதிர் வாயின் மேலாய் நோக்கின சுடர்க டூங்கும்
வரியுறு கலிமாத் தன்னை வளம்பெறக் கண்ட தன்றே.
1.4. 8
107 துண்டத்தி னாவி தோன்றத் தும்மலுந் தோன்றிப் பின்பு
விண்டுரை பகரு நாவின் மேவியல் ஹம்தை யோதிக்
கொண்டபின் பிரத்தி சொன்ன குதாதிரு வசன நோக்கி
யண்டர்நா யகனைப் போற்றி யாதமொன் றுரைப்ப தானார்.
1.4. 9
108 கணித்தள வறுக்க வொண்ணாக் கடவுளே குதாயே நீங்கா
மணிக்கதி ரெறிக்குஞ் சொர்க்க வாயிலி னிலைக்கு மேல்பாற்
பணித்தநின் றிருநா மத்தி னுடனொரு பெயரைப் பண்பா
யணித்துவைத் திருப்பக் கண்டே னவரெவ ரறியே னென்றார்.
1.4. 10
109 மாதர்சூ லகட்டுட் டோன்றா மனுநெறி ஆத மேநின்
காதலி லுதவு கின்ற கான்முளை யதிலோர் பிள்ளை
வேதநா யகமா யெங்கும் விளங்குதீன் விளக்காய்ப் பின்னாட்
பூதல நபியாய்க் காணப் படைத்தனன் புகலக் கேண்மோ.
1.4. 11
110 கலைமறை முகம்ம தென்னுங் காரண மில்லை யாகில்
உலகுவிண் ணிரவி திங்க ளொளிருடுக் கணஞ்சு வர்க்கம்
மலைகட னதிபா தாளம் வானவர் முதலா யும்மை
நிலையுறப் படைப்ப தில்லை யெனவிறை நிகழ்த்தி னானே.
1.4. 12
111 பரத்தினை யிறைஞ்சி வாழ்த்திப் பரிவுபெற் றிருந்த வாதஞ்
சிரத்தினி லிருந்த வாவி தேகத்தி னிறைந்த பின்னர்
வரத்தினி லுயர்ந்த வண்மை முகம்மது புவியிற் றோன்றத்
தரித்தபே ரொளிவுக் கந்தச் சசிகதிர் மழுங்கு மன்றே.
1.4. 13
112 உடலுறைந் துயிருண் டென்னு மொருவடி வில்லான் செவ்வி
மடலவிழ் வனச பாத முகம்மதி னொளிவுக் காக
வடலுறு மக்கட் கெல்லா மதிபதி யாதத் துக்கே
யிடமுறு மமரர் யாரும் சுஜுதுசெய் திடுக வென்றான்.
1.4. 14
113 தூயவ னுரைப்பக் கேட்ட சொன்மறா தெழுந்து தங்கள்
காயமு மனமும் வாக்குங் கலந்தொன்றாய் மகிழ்வு பொங்கி
நேயமுற் றிடப் பணிந்த நிரைநிரைக் கைக ளேந்தி
வாயினிற் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கஞ் செய்தார்.
1.4. 15
114 வானவர் செய்யு மந்த வணக்கத்தின் முறைசெய் யாமற்
போனத னால ஜாசீல் பொறைநிறை யறிவு போக்கி
யீனவன் குணத்த னாயி லகுனத்து முனிவும் பெற்றே
யானவம் பிபுலீ சென்னும் பெயரும்பெற் றலைந்து போனான்.
1.4. 16
115 பொருப்புருக் கொண்ட தன்னப் புயத்தெழி லாதந் தன்னுள்
விருப்பெனும் போக முற்றி விழைவுபெற் றிடுத லாலே
கருப்பமுற் பவிக்க வேண்டுங் காரண காட்சி யாக
மருப்புகுங் குழல்ஹவ் வாவை வல்லவன் பிறப்பித் தானே.
1.4. 17
116 தேங்கமழ் குழலுஞ் சோதித் சிறுபிறை நுதலும் வாய்ப்பப்
பாங்கிருந் தமுதஞ் சிந்தும் பனிமொழி மாதை நோக்கி
யோங்குநின் பெயரைக் கூறென் றுரைத்திட ஹவ்வா வென்றா
ரீங்கிவ ணுறைந்த வண்ண மேதென வாதங் கேட்டார்.
1.4. 18
117 செவ்விமன் னெறியா தத்தின் றிருமதி முகத்தை நோக்கி
மவ்வலங் குழலா ரிந்த வானகம் புவிமற் றுள்ள
வெவ்வையும் படைத்தோ னென்னை வகுத்துநும் வயின்செல் கென்றா
னவ்வழி யடைந்தே னென்றா ரழகொளிர் பவள வாயால்.
1.4. 19
118 செப்பிய மாற்றங் கேட்டு ரோமங்கள் சிலிர்த்துப் பூரித்
தப்பொழு திறையைப் போற்றி யாதம்ஹவ் வாவை நோக்கி
மைப்படுங் கரிய கூந்தன் மடமயில் வடிவுட் கொண்டு
துப்புறை யமுதந் துய்ப்பத் தொடுவதற் கொருமித் தாரே.
1.4. 20
119 பகரருங் குணமுந் திவ்ய பரிமள மணமு மாறாச்
சிகரமு மயங்க வெற்றி திகழ்தரு புயமு நோக்கி
நிகரருங் குரிசி லேநன் னிலைபெறு வாழ்வே யென்றன்
மகரினைத் தருக பின்னர் வருகவென் றுரைத்திட் டாரே.
1.4. 21
120 கேட்டனர் மகரென் றாதங் கிலேசமுற் றிறைபாற் கெஞ்சி
வாட்டமில் லவனே யெந்த வகைமகர் கொடுப்ப தென்றார்
நாட்டிய புகழ்சேர் மக்க முகம்மது நபிதம் பேரிற்
சூட்டிய சலவாத் தீரைந் துரைமென விறைவன் சொன்னான்.
1.4. 22
121 மதிக்கதிர் விலக்குஞ் சோதி முகம்மதின் சலவாத் தோத
விதித்தன னிறையென் றாதம் விளங்கொளிச் சலவாத் தோதித்
துதித்தனர் ஹவ்வா கேட்டுச் சோபன மகர்பெற் றேனென்
றிதத்தித மித்து நெஞ்ச மிருங்களிப் பேறி னாரே.
1.4. 23
122 கடிமலர்க் கொடியுஞ் செவ்விக் கற்பகத் தருவும் போலப்
பிடிநடை மயிலும் வெற்றி பெறுந்திற லரசுங் காம
மிடையறா தமிர்த போக மினிதுண்டு களித்துப் பொங்கி
வடிவுறு மின்ப வெள்ள வாரிக்கு ளழுந்தி னாரே.
1.4. 24
123 துறக்கநன் னகரிற் சேர்ந்து சுகமனு பவிக்கு மாத
மறக்கரும் பொருளே வேதம் வருமுறைக் குரிய கோவே
பெறற்கருஞ் சுவன வானோ ரனைவரும் பெருது கூண்டென்
புறக்கணி னிருப்ப தென்னோ புகலெனப் புகல லுற்றான்.
1.4. 25
124 நிதமழ கொழுகி வாச நிறைந்தமெய் முகம்ம தென்னு
முதிர்கதிர் விளங்கி நுந்த முதுகிடத் திருக்கை யாலே
பதவியி னரிய விண்ணோ ரெண்ணிலாப் பகுப்புக் கூடி
யிதமுறத் தெரிசிக் கின்றா ரென்றன னென்று முள்ளோன்.
1.4. 26
125 மருள்கடிந் தறிவு பொங்கு முகம்மதி னொளியை யென்மு
னருள்கவென் றிருகை யேந்தி யாதநன் னபியுங் கேட்கப்
பெரியவன் கருணை கூர்ந்து பெறுமுறை யிதுகொ லென்ன
நெரிநடுப் புருவக் கான்மே னெற்றியி லொளிர செய்தான்.
1.4. 27
126 வேறு
தாதவிழ் மலர்த்தா ராதநன் னுதலிற்
றண்ணெனுங் கதிர்கள்விட் டொழுகுஞ்
சோதியைத் தெரிசித் தமரர்க ளணுவுந்
தோன்றுதற் கிடமற நெருங்கிக்
கோதறப் பெருகி முன்னிலை திரண்ட
குழுவினைக் கண்டுகண் குளிர்ந்து
மாதவம் பெற்றே னெனமன மகிழ்ச்சி
வாரியிற் குளித்தன ரன்றே.
1.4. 28
127 அறவரி தான காட்சியும் பேறு
மமரர்க ளியாவரும் பெற்றா
ரிறைவனே யானும் பெறுவதற் கென்க
ணிடத்தினிற் றெரிகிலே னென்றார்
நிறைநடு வாகி யுலகெலா நிறைந்த
நெடியவ னினிதருள் புரிந்து
விறல்புரி யாதம் வலதுகைக் கலிமா
விரனகத் திடத்தில்வைத் தனனே.
1.4. 29
128 வரிச்சுரும் பலர்த்தி நறைவிரி துருக்க
மருவுபொற் புயத்தெழி லாதம்
விரித்தக மகிழ்ச்சி பெருக்கியென் முதுகில்
விளங்கொளி யின்னமு முளவோ
தெரித்தருள் புரியென் றிறையுடன் மொழியச்
செவ்விய முகம்மது நபிதம்
முரித்துணைத் தோழர் நால்வருண் டவர்த
மொளியுள வெனவுரைத் தனனே.
1.4. 30
129 அப்பெரும் பெயர்க ணான்குபே ரொளியு
மகுமதி னொளியடுத் திருப்ப
வைப்பையென் விரல்க னான்கினு மென்ன
வல்லவ னவ்வழி யமைத்தான்
மெய்ப்பொருள் கலிமா விரனடு விரன்மென்
விரற்சிறு விரற்பெரு விரல்க
ளிப்படி விரல்க ளைந்தினு மைவர்
விளங்கொளி யுகிரிலங் கினவே.
1.4. 31
130 பகுத்தொளி விரிக்கு நகத்தொளி விருக்கும்
பண்புகண் டதிசயித் தாத
மகத்தினின் மகிழ்ந்து கண்ணிணை மலரி
னடிக்கடி வைத்துவாய் முத்தி
மிகுத்திடும் வரிசை நபிசல வாத்தை
விளக்கிவாய் மறாதெடுத் தோதி
வகுத்தவல் லவனைப் பணிந்துவா னகத்தில்
வாழ்ந்தினி திருக்குமந் நாளில்.
1.4. 32
131 மிக்கெழி லாத மேலவன் விதித்த
விலகலைப் பொருந்தின படியா
லக்கையின் விரல்க ளொளிவுமுன் னிருந்த
வணியணி முதுகிடத் தாகித்
துக்கமு மிகுந்து சுவர்க்கமு மிழந்து
தொல்லுல கடைந்துவெவ் வேறு
திக்கினின் மயங்கி யிருவரு மலைத்துத்
தீவினைக் குரியவ ரானார்.
1.4. 33
132 ஆதியே ஹக்கா றப்பனா விறையே
யழிவிலாப் பேரின்ப வாழ்வே
நீதியே யெனவும் பலதரந் தவுபா
நிகழ்த்தியுந் துன்பம்விட் டொழியாப்
போதிலே யெனது முதுகிடத் துறைந்த
பொருளொளிச் சிறப்பெனும் பொருட்டாற்
சோதியே தவுபாத் தனைக்கபூ லாக்கென்
றுரைத்தனர் சுடர்முடி யாதம்.
1.4. 34
133 நறைதரு மறுவி கமழ்முகம் மதுநந்
நபிதிருப் பெயர்சொலும் பொருட்டா
யிறைவனு மாதஞ் செயுந்தவு பாவுக்
கிசைந்தினி துறக்கபூ லாக்க
வுறைதரு துன்ப மனைத்தையும் போக்கி
யூழ்வினை பின்புமொன் றாக்க
மறுமதி யகடு தொடுமுடி யறபா
மலையினி லிருவருஞ் சேர்ந்தார்.
1.4. 35
134 கூடிய விருவர் தாமுஞ்சுத் தாவிற்
குடியிருந் திருபது சூலில்
நாடிய பொருட்போ னாற்பது பெயரை
நன்குறப் பெற்றதின் பின்னர்
சூடிய கிரீட பதிநபி யமரர்
துரைகனா யகமெனு மிறசூல்
நீடிய வொளியு சிறந்தொரு சூலி
னிலமிசை சீதுதித் தனரே.
1.4. 36
135 மருமலர்த் திணிதோ ணிறைமதி வதன
முகம்மதின் பேரொளி யிலங்கித்
தெரிமறை ஆத மக்களிற் சிறந்த
சீதுவி னிடத்திருந் ததனாற்
பரிவுறு நபிப்பட் டமும்வரப் பெற்றுப்
பல்கலைக் குரிசிலென் றேத்த
வரியவன் கொடுத்த வரிசைக ணிறைந்த
வைம்பது சுகுபிறங் கியதே.
1.4. 37
136 சீதுவி னிடத்தி னிருந்தவர் மதலை
சிறந்தமா மணிமுடிக் குரிசின்
மாதவர் கமல வதனயா னுசுதம்
வயினுறைந் திருந்தணி சிறந்து
தாதவிழ் மலர்த்தார்க் குங்குமக் கலவைத்
தடப்புயர் யானுசு தருகார்
நீதிசேர் ஹயினா னிடத்தினி லிருந்து
நிலைபெற விளங்கிய தன்றே.
1.4. 38
137 தண்மணிக் கதிர்விட் டெறிக்கும்வெண் கவிகைக்
தடவரை மணிப்புய ஹயினான்
கண்மணி மகுலீ லிடத்தினி லிருந்து
கவின்குடி கொண்டெழுந் தோங்கி
வெண்மணித் தரளத் தொடைப்புய மகுலீல்
வேந்தருக் குற்றசே யெனவாழ்
உண்மைநன் னெறிசே ரெறுதுவி னிடத்தி
னுறைந்தினி திலங்கிய தன்றே.
1.4. 39
138 வடவரை குலுங்க நடமிடு துரங்க
மன்னவ ரெறுதுதம் மதலை
கடகரிக் குவட்டி னிணையெனப் பணைத்த
கதிர்முலைத் துடியிடை மடவார்
விடமெனக் கரிய கொலைவிழிக் கணங்கள்
வீற்றிருந் திடுமலர்ப் புயத்தார்
இடிமுர சதிரு முன்றிலா ருகுநூ
கிடத்தினி லிருந்திலங் கியதே.
1.4. 40
139 கடலெனத் தானை யரசர்வந் தீண்டிக்
கைகுவித் திருபுற நெருங்கச்
சுடர்மணித் தவிசி னுயர்ந்தர சியற்றிச்
சுருதிநே ருறையுகு நூகு
புடையிருந் தவர்செய் யறமெலாந் திரண்டோர்
புத்திர வடிவெடுத் தென்ன
விடுகொடை கவிப்பப் புரந்தசே யிதுரீ
சிடத்தினி னிறைந்திருந் ததுவே.
1.4. 41
140 நன்னெறி நயினா ரொளியிருந் ததனா
னபியெனும் பட்டமும் பெறலாய்
உன்னுதற் கரிய முப்பது சுகுபு
முடையவ னருளினா லிறங்கிப்
பன்னிய வுலகத் தொழிலெவை யவைக்கும்
பரிவுறு முதன்மையே யிவரென்
றெந்நிலங் களுக்கும் பெயர்பெற வரசா
யிருந்திட வியற்றிய தன்றே
1.4. 42
141 மெய்த்தவக் குரிசி னபியிது ரீசு
விருப்புற வுதித்தநன் மதலை
யுத்தமர் மத்தூ சல்குதம் மிடத்தவ்
வொளியுறைந் துலகெலா மிறைஞ்ச
வைத்தபின் மத்தூ சல்குதம் மைந்தர்
மடந்தையர் மடலெடுத் தேந்தச்
சித்திரக் கவின்பெற் றிருந்தலா மக்கு
வயின்சிறந் திலங்குமவ் வொளியே.
1.4. 43
142 தருமநன் னெறியா லுலகெலாம் புரக்கத்
தகும்புக ழானலா மக்குத்
திருமக நூகு வயினுறைந் திருந்து
சிறந்தபே ரொளியினா லவர்க்கும்
பெருகிய நபிப்பட் டமுமிகப் பெறலாய்ப்
பிரளயப் பெருக்கெடுத் தெறியுங்
கருநிறக் கடல்வங் கமுங்கவி ழாது
காட்சியாய்க் கலாசுபெற் றதுவே.
1.4. 44
143 வரிசையு மிமையோர் துதிசெயும் பரிசும்
வரப்பெறு நூகுதம் மதலை
தரைபுகழ்ந் தேத்தச் சாமிடத் திருந்து
தனபதி கனபதி யாக்கிக்
கருவிளை விழியார் கவரிகா லசைப்பக்
கனகசிங் காதனத் திருத்தி
விரிகட லுலகம் பொதுவறப் புரக்கும்
வேந்திவ ரெனவியற் றியதே.
1.4. 45
144 சாமுதன் மதலை யறுபகு சதுமன்
றம்மிடத் தவதரித் திருந்து
தூமமும் புழுகுந் தகரமுஞ் சாந்துந்
தோய்ந்திருண் டடர்ந்தபூங் குழலார்
காமுக ரெனச்செய் தணிமணிப் புயங்கள்
கண்கொளா தழகிருந் தொழுகு
மாமதக் களிற்ற ரறுவகு சதுமா
மதலைசா லகுவயி னடைந்த
1.4. 46
145 சாலகு தம்பா லடைந்துவாய் மைக்குந்
தவத்திற்கும் பவுத்துக்கு மிவரே
மேலவ ரெனச்செய் திருந்தவர் மதலை
வேந்தர்ஐ பறுவயின் புரந்து
காலடி மறைக்கக் கவிழ்மத மிறைக்குங்
கடகரி யரசர்ஐ பறுசேய்
பாலகு வயின்வீற் றிருந்துல கெல்லாம்
பரித்திடப் பண்புபெற் றதுவே.
1.4. 47
146 தேன்கிடந் தொழுகுங் குங்குமத் தொடையற்
செழும்புயன் பாலகு மதலை
வான்கிடந் தனைய மின்னொளிர் வடிவார்
மன்னன்றா குவாவிடத் திருந்து
கூன்கிடந் தனைய பிறைகறைக் கோட்டுக்
குஞ்சரத் தரசர்கை கூப்ப
மீன்கிடந் தலர்வான் மதியெனுங் கவிகை
வேந்தர்வேந் தெனவிளைத் ததுவே.
1.4. 48
147 வாரணி முரச மிடியெனக் கறங்கும்
வாயிலான் றாகுவா மதலை
தாரணி தருவா யுதித்தசா றூகு
தம்மிடத் திருந்தெழில் சிறந்து
காரணக் குரிசி லானசா றூகு
கண்ணிணை மணியென விளங்கும்
ஏரணிப் புயனா கூறிடத் துறைந்தங்
கிலங்கிய தருமறை யொளியே.
1.4. 49
148 வெண்டிரை புரட்டுங் கருங்கட லுடுத்த
மேதினிக் கரசென விளங்குந்
திண்டிற னாகூ றுதவிய மதலை
செழும்புக ழாசறு வயின்வந்
தெண்டிசை முழுது மொருதனிச் செங்கோ
லியற்றுவ திவரென வியற்றி
வண்டணி மலர்த்தா ராசறு தவத்தால்
வருமொரு வடிவுறு மதலை.
1.4. 50
149 முருகவிழ் புயத்தார் நபியிபு றாகீம்
செய்தவப் பலனொரு வடிவாய்
ஈனமி லிசுமா யீல்நபி யிடத்தி
னிருந்திலங் கியவொளிப் பொருட்டால்
வானகத் தமரர் சுடர்விரி சுவன
மடந்தைய ரினிதுவாழ்த் தெடுப்பக்
கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற்
கருவிவாய் தடவில வன்றே.
1.4. 51
150 தீனிலைக் குரிய நபியிபு றாகீம்
செய்தவப் பலனொரு வடிவாய்
ஈனமி லிசுமா யீல்நபி யிடத்தி
னிருந்திலங் கியவொளிப் பொருட்டால்
வானகத் தமரர் சுடர்விரி சுவன
மடந்தைய ரினிதுவாழ்த் தெடுப்பக்
கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற்
கருவிவாய் தடவில வன்றே.
1.4. 52
151 மன்னவ ரிசுமா யீல்தரு மதலை
மணிவிளக் கனையதா பித்து
தன்னிடத் திருந்து தரணியேழ் புரக்குந்
தலைபதி நிலைபெற வியற்றி
மின்னவிர் மௌலி விளங்குதா பித்து
வேந்தர்பெற் றெடுத்தமா மதலை
யிந்நிலம் புகழு மெசுஹபு வெனும்பே
ரெடுத்தவ ரிடத்திலங் கியதே.
1.4. 53
152 உடல்பிளந் துயிருண் டுதிரங்கொப் பளித்தூ
னுணங்குவேற் கரரெசு ஹபுதம்
பிடிநடை மடவாள் பெற்றெடுத் துவந்த
பிள்ளையஃ றுபுவயி னிருந்து
கடல்கிளர்ந் தனைய தானையஃ றுபுதங்
கண்மணி தயிறகு என்போர்
இடமுற விருந்து நெடும்புகழ் விளக்கி
யெழில்கனிந் திலங்கிய தன்றே
1.4. 54
153 சந்தனந் திமிர்ந்து திரண்டமற் புயத்தார்
தயிறகு தருதிரு மதலை
கந்தெறி தறுகட் கரடமா லியானைக்
காவலர்க் கசனிநா கூறு
சுந்தர வதனத் திலங்கிட விருந்து
சொரிமழைச் செழுங்கைநா கூறு
மைந்தர்மிக் குவந்தம் மிடத்துறைந் திருந்து
மாட்சிபெற் றிலங்கிய தன்றே.
1.4. 55
154 மிக்குவ மெனும்பே ரரசுதம் மதலை
வெயில்விடு மணிமுடி யுதது
பக்கலி லிருந்து செல்வமுஞ் செருக்கும்
பண்புறப் பெருக்கிட நிறைத்துத்
திக்கனைத் தினும்பேர் விளங்கிட விளங்கித்
திறல்பெறு முத்துநன் மதலை
தக்கமெய்ப் புகழ்சே ரிருநிதி யதுனான்
தம்மிடத் திருந்தெழி றழைத்த
1.4. 56
155 வெண்ணிலா விரிக்கு மொருதனிக் குடைக்கீழ்
வேந்துசெய் தருள்புரி யதுனான்
கண்ணின்மா மணியா யுதித்திடு முஅத்து
கவின்பெற விருந்தவ ரிடத்தில்
எண்ணிலா வரச ரடிபணிந் திறைஞ்ச
வியற்றிய பேரொளி முஅத்து
புண்ணியப் பொருளா யுருவெடுத் துலகம்
புரந்தநி சாறிடத் துறைந்த
1.4. 57
156 ஒருகுடை நிழற்கீ ழிருநிலம் புரந்திட்
டுருமென மும்முர சதிரத்
திருநிறை நான்கு திக்கினுஞ் செங்கோல்
செலுத்திய நிசாறெனு மரசர்
பெருகிய நிலைமைக் குலக்கட னாப்பண்
பிறந்தெழுங் கதிரவ னொப்ப
வருமுகின் முலறு நபியிடத் துறைந்து
மகிதலம் புகழ்ந்திட விருந்த.
1.4. 58
157 அறிவெனுங் கடலாய் வரம்புபெற் றிருந்த
வருமறை முலறுநன் னபிக்குப்
பெறுபல னெனவந் துதித்தஇல் யாசு
நபியெனப் பேரொளி தங்கித்
துறவலர்க் கரசா யிருந்தஇல் யாசு
புத்திரர் பவுத்தெலா நிறைந்த
மறுமனர் குலக்கோ ளரியெனப் பிறந்த
மாமணி முதுறக்கத் தெனுமால்.
1.4. 59
158 முகம்மது நயினா ரொளிவிருந் திலங்கு
மன்னவர் முதுறக்கா மதலை
செகமகிழ் குசைமா வயினுறைந் தரசர்
செழுமுடி நடுமணி யெனலாய்
நகுகதிர் விரிவெண் குடைநிழ லிருந்த
நரபதி யெனுங்குசை மாமன்
புகழெனத் தோன்றி வருதுறை கனானாப்
பூபதி யிடத்தின்வந் திருந்த.
1.4. 60
159 மடங்கலே றனைய தன்பதி கனானா
மகிபதி தவத்துறு மதலை
நுடங்கிடை மடவார் கருத்தினைக் கவரு
நுலறெனு மழகுறு மரசர்
தடம்புயங் களின்மா நிலங்குடி யிருப்பத்
தங்கியங் கவர்பெறு மரசர்
முடங்குளைப் பகுவாய் மடங்கலங் கொடியார்
மோலிமா லிக்குசார் பிருந்த.
1.4. 61
160 திண்டிற லரசர் சிரம்பொடி படுத்திச்
செவந்தவாட் கரத்தர்மா லிக்கு
மண்டலம் விளக்கு முழுமணி விளக்காய்
வந்தமன் பிஃறிடத் திலங்கி
எண்டிசை யிடத்து மெழுகடற் புறத்து
மறுவகைத் தானைகொண் டெதிர்ந்து
கொண்டமர் கடந்த வரசெனப் பெயருங்
கொடுத்தது திருநபி யொளியே.
1.4. 62
161 குரிசிலென் றுயர்ந்த பிஃறெனு மரசர்
குறைஷியங் குலத்துறு மதலை
விரிதிரை யுவரி நடுநிலம் புரந்த
வேந்தர்கா லிபுவயி னிலங்கிக்
கரிபரி பதாதி ரதம்புடை நெருங்குங்
கடைத்தலை காலிபு தருசேய்
முருகவிழ் மரவத் தொடைப்புயர் லுவையு
முகமலர் தரவிருந் தொளிரும்.
1.4. 63
162 வான்மதி பகுந்த முகம்மது நயினார்
வடிவுறும் பேரொளி லுவையாங்
கோன்மகன் ககுபு தம்மிடத் திலங்கிக்
குன்றினி லிடும்விளக் காகிச்
சூன்முதிர் மழைக்கை ககுபுகண் மணியாய்த்
தோன்றிய முறத்திடத் துறைந்த
சேனமுங் கொடியுந் தொடர்கதிர் வடிவேற்
செம்மலென் றுயர்ச்சிபெற் றிருந்தார்.
1.4. 64
163 கொந்தலர்ந் திருண்ட கருங்குழன் மடவார்
கொங்கையிற் றடம்புய மழுந்துஞ்
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்திற்
றோன்றிய மதிமுகக் கிலாபு
மந்தர மனைய தடம்புய ரிடத்தில்
வந்திருந் தவர்தரு மதலை
கந்தடர் தறுகட் கரடமா லியானைக்
காவலர் குசையிடத் துறைந்த
1.4. 65
164 வில்லுமிழ் வயிரத் தொடைபுரண் டசைந்த
விறற்புயர் குசைதரு மதலை
செல்லென விரங்குஞ் சினந்துவே றாங்கும்
செழுங்கர ரப்துல் முனாபு
மல்லலைத் திணிதோ ளரசர்நா யகர்தம்
வயினுறைந் தவர்பெறு மதலை
யெல்லவ னெனவே கலியிரு டுரத்தி
யிருந்தஹா ஷீமிடத் துறைந்த.
1.4. 66
165 கிம்புரிக் கோட்டுக் கடமலை துளைத்துக்
கிளைத்திடும் வேற்கரர் ஹாஷீம்
அம்புவிக் கரசாய்ப் பெற்றெடுத் துவந்த
வருமணி யப்துல்முத் தலிபு
நம்பிய தவப்பே றெனவிருந் திலங்கி
நறைகமழ் அப்துல்முத் தலிபு
தம்பெயர் விளக்கக் குவலயத் துதித்த
சந்ததி யப்துல்லா வென்போர்.
1.4. 67

தலைமுறைப் படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 4-க்குத் திருவிருத்தம் - 165
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.5. நபியவதாரப் படலம்

166 பெருகிய கோடிசந் திரப்பிர காசமாய்
வருமொரு பெருங்கதிர் மதியம் போலவே
கருணைவீற் றிருந்தசெங் கமலக் கண்ணிணைத்
திருநபி வருமவ தாரஞ் செப்புவாம்.
1.5.1
167 வேறு
கடியி ருந்தெழு கற்பக முஞ்சுடர்
வடிவி ருந்த மணியும் வனசமும்
படியுங் கார்முகி லேழும் பழித்துவிண்
குடியி ருத்துங் கொழுந்தடக் கையினார்.
1.5.2
168 வேறு
விண்டொடு கொடுமுடி மேரு வீறழித்
தெண்டிசைக் கிரியொடு மிகலுங் கொங்கையர்
கொண்டமா மயலொடு மனமுங் கூர்விழி
வண்டொடும் வண்டுறை மாலை மார்பினார்.
1.5.3
169 கொன்னுனை வெண்ணிறக் கோட்டு வாரணச்
செந்நிறக் குருதியிற் றிமிர்ந்து வாய்கழீஇ
மின்னவிர் கணமணி விளங்கு மாமுடி
யொன்னல ருயிரைமேய்ந் துறங்கும் வேலினார்.
1.5.4
170 முடங்கலங் கைதைமுள் ளெயிற்று வெண்பணிப்
படங்களா யிரத்தினும் பரித்த பாரெலா
மிடங்கொள்பூ தரப்புயத் திருத்தி யேதிலார்
மடங்கலே றெனுமன வலியின் மாட்சியார்.
1.5.5
171 மாக்கட னெடும்புவி வளைந்த வன்கலி
நீக்கிய வெண்குடை நீழ லோம்புவோர்
வீக்கிய கழலடி வேந்தர் பொன்முடி
தாக்கிய மருச்செழுங் கமலத் தாளினார்.
1.5.6
172 வரபதி யுலகெலாம் வாழ்த்து மக்கமா
புரபதிக் கதிபதி யென்னும் பூபதி
பரபதி யரசர்கள் பணிந் திறைஞ்சிய
நரபதி யப்துல்லா வென்னு நாமத்தார்.
1.5.7
173 செழுமழை முகிலென வமுதஞ் சிந்திட
வழிகதிர் நபியென வகுத்த பேரொளி
பொழிகரத் தப்துல்லா விடத்திற் பொங்கியே
யெழிறரு திருநுத லிடத்தி லங்குமே.
1.5.8
174 அயிலுறை செழுங்கரத் தப்துல் லாவெனும்
பெயரிய களிறுக்கோர் பிடியும் போலவ
ருயிரென விருந்தசைந் தொசிந்த பூங்கொடி
மயிலெனு மாமினா வென்னு மங்கையே.
1.5.9
175 இற்புகுந் தெழுமதி யிலங்கு மாமணி
விற்புரு வக்கடை மின்க ணாயகம்
பொற்பெலாம் பொதிந்தபொற் கொடிநற் பூவையர்
கற்பெலாந் திரண்டுருக் கொண்ட கன்னியே.
1.5.10
176 அறத்தினுக் கில்லிட மருட்கோர் தாயகம்
பொறுத்திடும் பொறுமையிற் பூமிக் கெண்மடங்
குறைப்பெருங் குலத்தினுக் கொப்பி லாமணிச்
சிறப்பினுக் குவமையில் லாத செல்வியே.
1.5.11
177 குணிப்பருங் குறைசியங் குலமென் றோங்கிய
மணிப்பெருங் கடலிடை வளருஞ் செல்வமே
தணிப்பிலா தெடுத்தெறி தரங்க மேனடுப்
பணிப்படா தெழுந்தசெம் பவளக் கொம்பனார்.
1.5.12
178 இத்தகைக் குலமயி லாமி னாவெனு
முத்தவெண் ணகைக்கனி மொழியு மோகனச்
சித்திர அப்துல்லா வென்னுஞ் செம்மலு
மொத்தினி தமுதமுண் டுறையு நாளினில்.
1.5.13
179 வேறு
வீசு தெண்டிரைக் கடன்மலை யடங்கவெண் குடைக்கீ
ழாசி லாதசிங் காசனத் திருந்தசிக் கந்தர்
காசி னிக்கர சியற்றுதுல் கருனையின் கால
மாசி லாக்கணக் கெட்டுநூற் றெண்பத்தோர் வருடம்.
1.5.14
180 கரைத்த மின்றௌித் தெழுத்தெனச் சிறக்குமக் காவி
னிரைத்த கார்க்குலந் திரண்டெனக் களிறுக ணெருங்கி
யிரைத்த டர்ந்துமும் மதங்களை வாரிநின் றிறைத்து
வரைக்கு லங்கள்போல் வந்ததற் கொருமுதல் வருடம்.
1.5.15
181 திங்க ளாமிற சபுமுதற் றேதிவெள் ளியிராத்
துங்க வார்கழன் முகம்மது பேரொளி துலங்கி
யெங்க ணாயக ரப்துல்லா நுதலிடத் திருந்து
மங்கை யாமினா வயிற்றினிற் றரித்தன வன்றே.
1.5.16
182 திருத்தும் பொன்னக ரமரரே திரண்டவா னவரே
கருத்தி னுண்மகிழ்ந் தெவ்வையு மலங்கரித் திடுமின்
வருத்த மென்றிலா முஹம்மதை யாமினா வயிற்றி
லிருத்தி னேனென வுரைத்தன னியாவர்க்கு மிறையோன்.
1.5.17
183 பரந்த வாய்க்கொடும் பாந்தளும் விடங்கொள் பஞ்சரமுங்
கரிந்து பொங்கிய குழிகளுங் கனற்பொறி கதுவ
வெரிந்து செந்நெருப் பொழுகிய நரகங்க ளேழும்
விரைந்த வித்தடைத் திடுகவென் றனன்முதல் வேந்தன்.
1.5.18
184 விற்கெ ழுமறு சொடுகுறு சந்தரம் விளங்கச்
சொர்க்க வாயிலுந் திறந்தலங் கரித்தனர் துன்ப
மிக்க வாரிபாழ் நரகங்க ளடைத்தனர் வானோர்
கற்கு மாமறை முதலவன் விதித்தகட் டளைக்கே.
1.5.19
185 அந்தண் பொன்னக ரடங்கலு மலங்கரித் ததுவும்
வெந்த பாழ்நர கங்களை யடைத்தபல் விதமுஞ்
சந்த திண்புய முகம்மது நபிதரித் ததுவு
மிந்த வாறுக ளனைத்தையு மறிந்திபு லீசு.
1.5.20
186 நடுங்கி வாயினீர் வறந்திட நாவுலர்ந் துடல
மொடுங்கி யைம்பொறி மயக்குற நெஞ்செலா முடைந்து
புடங்கொள் வங்கம தாய்நினை வுருகினன் புலம்பத்
துடங்கி னானடிக் கடிபெரு மூச்சொடு சுழன்றே.
1.5.21
187 கரைவ னேங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி
யிரைவன் கன்னத்திற் கையைவைத் திருந்தெழுந் திருப்பன்
றரையின் மேல்விழுந் தெனக்கிலை யினிச்சிங்கா சனமென்
றுரைம றந்திடக் கிடந்தன னிருகணீ ரொழுக.
1.5.22
188 அறிவ ழிந்தமன் னவன்றனை மக்கள்வந் தடைந்து
குறியுந் துன்பமும் வந்தவா றேதெனக் கூறி
நிறையு மக்களோ டுறும்வர லாறெலா நிகழ்த்தி
யுறையு மில்லிட மிவணிலை நமக்கென வுரைத்தான்.
1.5.23
189 இந்த வாசகங் கேட்டலு மக்களெல் லோருந்
தந்தை யேயிதற் கென்செய்வோ மெனத்தடு மாறிப்
புந்திநொந்து நொந் தவரவர் திசைதிசை புகுந்தார்
சிந்தை நொந்திபு லீசுவுந் திகைத்திருந் திடைந்தான்.
1.5.24
190 தரித்தி டுமுதற் றிங்களிற் றரைபுக ழாத
முரைப்ப ராமினா கனவினி லுன்றிரு வுதரத்
திருக்குஞ் சந்ததி வலிமையை யுடையதிவ் வுலகத்
தருக்க னொப்பல நாமமு கம்மதென் றகன்றார்.
1.5.25
191 கருப்பந் திங்களி ரண்டினி லாமினா கனவின்
மருப்பு குங்குழல் வல்லிநின் வயிற்றினின் மதலை
யருப்பும் வீறுடை யவர்பெயர் முகம்மதென் றதிக
விருப்ப மாயிது றீசுநன் னபிவிளம் பினரே.
1.5.26
192 இக்கெ னும்மொழி யாமினாக் கினிதுறத் திங்கள்
புக்கு மூன்றினி னூகுநன் னபிமனப் பொலிவாய்
மிக்க வுண்மையும் விளங்கிய வெற்றியு முடையோர்
தக்க பேர்முகம் மதுவெனச் சாற்றிவிட் டகன்றார்.
1.5.27
193 திங்க ணான்கினி லாமினா கனவினிற் றௌிவா
யிங்கி தத்திபு றாகிநன் னபியியம் பினராற்
சங்கை யாய்மிகு வரிசையும் பெருங்கொலுத் தனையும்
பொங்கு வாழ்வினர் பெயர்முகம் மதுவெனப் போந்தே.
1.5.28
194 அம்பொற் கும்பத்தி னருவநீர் மஞ்சன மாடிச்
செம்பொற் பட்டுடுத் தெறிகதி ரணியிழை திருத்திப்
பம்பு மேகலை தரித்துமென் கரவளை பரித்துக்
கம்ப லைச்சிலம் பணிந்தனர் பதங்கவின் பெறவே.
1.5.29
195 நெறித்த வார்குழ லிறுக்கிமென் மலர்பல நிறைத்துக்
குறித்த வேலிணைக் கண்களி லஞ்சனங் கோட்டிச்
செறித்த மான்மதஞ் சந்தனக் கலவையுந் திமிர்ந்தே
யெறித்த நன்கதிர் விளக்கென வாமினா வெழுந்தார்.
1.5.30
196 இனத்து ளாரெனுஞ் செழுமலர்க் கொடிநடு விடையே
கனத்த மாமணிக் கொம்பென நடந்துகஃ பாவின்
மனத்தி ருக்கற வலஞ்செய்து வாயிலில் வந்து
நினைத்தி டும்பொரு டருகெனப் போற்றினர் நிறைந்தே.
1.5.31
197 வண்டு வாழ்குழன் மடந்தையர் திரண்டுவாழ்த் தெடுப்பக்
கண்டு மென்கொடி யாமினா தாமரைக் காலின்
முண்ட கச்செழு மலர்சொரி தலைமுகங் கவிழத்
தெண்ட னிட்டது புத்தென வுறைந்ததே வதையே.
1.5.32
198 அஞ்ச லித்தது புத்தென மனத்ததி சயித்து
மஞ்சு வார்குழ லாமினா பயந்துமெய் வருந்திக்
கஞ்ச மின்னனார் கணத்துடன் வாயிலைக் கடந்தே
யின்சொ னன்குலக் கிளியென மனையில்வந் திருந்தார்.
1.5.23
199 தெரியுந் திங்களைந் தினிலிசு மாயில்செப் பினரா
லுரிய மென்மயி லேநின துதரத்தி லுறைந்தோர்
தரிய லர்க்கிடி யாயடுத் தவர்க்கொரு தருவாய்
வரிசை யுற்றவர் பெயர்முகம் மதுவென வகுத்தே.
1.5.34
200 ஆறு திங்களில் வந்தமூ சாநபி யழகாய்க்
கூறு மென்கரும் பேநின்றன் வயிற்றுறு குழந்தை
வீறு பெற்றிடுந் தலைமையும் பெரும்பத வியையு
மாறி லாதவர் பெயரிடு முகம்மதென் றுரைத்தார்.
1.5.35
201 சினவு வேற்கரத் தப்துல்லா வெனுமொரு சிங்க
மனைவி யாகிய ஆமினா வெனுங்குல மடமா
னினமு மாயமும் வாழ்த்திடக் கருப்பமு மிலங்கக்
கனவு கண்டக மகிழ்ந்தினி திருக்குமக் காலம்.
1.5.36
202 மக்க நன்னக ரப்துல்முத் தலிபெனு மன்ன
ரக்க மன்னமன் னப்துல்லா தமையழைத் திருத்தித்
தக்க புத்தியு முறைமையுந் தொழிலையுஞ் சாற்றி
யொக்கல் கூட்டுறப் புறநகர்க் கெழுகவென் றுரைத்தார்.
1.5.37
203 தந்தை கூறிட அப்துல்லா மனந்தறு காமன்
மந்திர வாளெடுத் தினிதுற விசித்தனர் மருங்கி
லிந்திர வில்லென வில்லெடுத் தொருகையி லேந்திக்
கந்து கங்கொணர் கென்றுகட் டுரைத்தனர் கடிதின்.
1.5.38
204 பாட லத்தின்மேற் கொண்டுறு தனிற்பரி வாரங்
கூடு கோளரித் திரளென வரநெறி குறுகிக்
காடுங் கானமுங் கடந்துசெந் தேம்பொழிற் கனிசூழ்
நாட டைந்துபோய்ப் புகுந்தனர் மதீனமா நகரில்
1.5.39
205 மதினத் தின்னுறை ரசவருக் கங்களு மதினப்
பதிய டுத்தவூர்ச் சரக்கையுங் கொண்டுபந் தனமாக்
கதிர்கொண் மாடத்திற் கட்டிவைத் தவரவர் கரத்திற்
புதிய வாணிபத் தலைவிலைக் கீந்தனர் பொருளை.
1.5.40
206 வாணி பத்தொழி லனைத்தையு முடித்துமன் னவருங்
காணு நாட்சில விருந்துதன் பதிவரக் கருதிப்
பூண ணிந்தழ குறுமிளை யவர்புடை சூழச்
சேண டைந்தபு வாவெனுந் தலத்தினைச் சேர்ந்தார்.
1.5.41
207 ஆதி கற்பனை யூழ்விதிப் பயனும்வந் தடைந்து
போது நாட்களு நாழிகைக் கணக்கையும் போக்கி
நீதி மன்னவ னப்துல்லா தனையறி நினைவாய்ச்
சோதி மென்முக மிலங்கிடத் துயில்வபோன் றிறந்தார்.
1.5.42
208 கூடிச் சூழ்ந்தவர் விதிப்பய னெனக்குலை குலைந்து
வாடி மன்னனை யெழில்பெற மணத்துட னடக்கிப்
பாடி யூரபு வாவைவிட் டகன்றுபோய்ப் பதியை
நாடி வந்தவ ராமினாக் கிவையெலா நவின்றார்.
1.5.43
209 மாற்றங் கேட்டலு மடமயின் மனமுடைந் தலறித்
தோற்று மாமழை சொரிந்தெனக் கண்ணினீர் சொரியப்
போற்றுங் காழகிற் புகைக்குழ னிலம்புரண் டசையக்
கோற்றொ டிக்கரக் காந்தடா மரைமுகங் குழைக்க.
1.5.44
210 வருந்தி நொந்தழு தாமினா விடைதலும் வளைந்து
திருந்தி ழைக்கொடி மடவிய ரிரங்குத றிரண்முத்
திருந்த சூல்வலம் புரியினைச் சூழ்ந்தசங் கினங்க
ளிரைந்தி ரங்குவ போன்றன வெங்கணு நிறைந்தே.
1.5.45
211 சலித்து விம்மிய மயிலினைக் கண்டுமெய் தளர
வலித்த தோபகை விதிகொலோ மகப்பெறும் பலனோ
பலித்த தேதென வறிகிலோ மெனப்பதை பதைத்தே
யொலித்தய் யோவென விரங்கின ரூரினி லுளரே.
1.5.46
212 உடுத்த பூழியிற் புதைமணி யெனவுட லொடுங்கி
வடித்த கண்ணினீ ரொழுகிட விருந்தபொன் மயிலை
யடுத்து வந்திருந் தன்புட னப்துல்முத் தலிபு
தொடுத்த துன்பங்க ளாற்றிநல் வழிபல சொன்னார்.
1.5.47
213 இனத்து ளார்சொலு நல்வழிக் குருகிநெஞ் சிடைந்து
நினைத்த பற்பல துன்பமு மகற்றிநீ ணிலத்தி
லனைத்தை யும்விதித் தவன்செய லினையுமுற் றறிந்து
மனத்தி னிற்றௌி வாகினர் குலக்கொடி மயிலே.
1.5.48
214 தவிசி ருந்துநன் னெறிமுறை நடத்துதா வூது
நபியுந் திங்களோ ரேழினிற் கனவினி னவின்றா
ரவியுங் காலமன் றாட்டத்துக் குரியவ ரானோர்
புவியி னிற்பெயர் முகம்மதென் றிடுமெனப் போந்தே.
1.5.49
215 நலங்கொ டிங்களோ ரெட்டினில் சுலையுமா னபிவந்
திலங்கு பூணணி மயிலனீர் நின்வயிற் றிருந்தோர்
பெலன்கெ ழுமது னான்கிளைப் பேரொளி நபியாய்த்
துலங்க வந்தவர் பெயர்முகம் மதுவெனச் சொன்னார்.
1.5.50
216 மாத மொன்பதி லாமினா கனவினின் மதித்தே
வேத நான்மறை நேர்வழிக் குரியவர் விளங்கக்
கோதை யேபெறின் முகம்மது வெனப்பெயர் கூறென்
றாதி நாய்கன் வரிசையீ சாநபி யறைந்தார்.
1.5.51
217 ஈத லாலிமை யவர்தின மிடைவிடுத் திலராய்ப்
போது சேர்குழ லாமினா கனவினிற் போந்தே
யாதி தூதுவர் முகம்மது பெயரென வ திக
நீதி யானமா ராயமே பெறநிகழ்த் தினரால்.
1.5.52
218 என்றும் வானவ ரிசைத்திடுங் கனவெலா மெடுத்தும்
வென்றி நன்னபி மார்சொலுங் கனவெலாம் விரித்து
மன்ற லங்குழ லாமினா படிப்படி வகையா
நன்றி தேர்ந்தசொற் றாயர்க்குத் தினந்தொறு நவின்றார்.
1.5.53
219 பெற்ற தாயருங் கனவினின் பெற்றியைப் பிரித்தே
யுற்ற பேரொடு மனத்தொடுந் தௌிந்தறிந் தோர்ந்து
சொற்ற தன்மகட் குறிப்பெலாங் காண்குறத் துணிந்து
குற்ற மின்றிய முகம்மதே பெயரெனக் குறித்தாள்.
1.5.54
220 செறிந்த வார்குழ லாமினா வுரைத்தசெய் தியைக்கேட்
டறிந்து தாயதற் கெதிர்மொழி கொடுத்தலு மாராய்ந்
துறைந்த வல்லிருட் சீத்தெறி மதியென வோங்கி
நிறைந்த பேரொளி முகமலர் தரசபா நிகழ்த்தும்.
1.5.55
221 திரிந்த பாலெனச் செறுத்துப்பண் ணேழையுஞ் சினந்து
விரிந்த தெண்டிரைக் கடலிடை யமுதென விளங்கிச்
சொரிந்த தேன்மொழி யாமினா வயிற்றினிற் சூலா
யிருந்த நாளெலாங் கனவலா லொழிந்தநா ளிலையே
1.5.56
222 உள்ள கங்குளிர்ந் தருமறை மூன்றையு முணர்ந்தோர்
வள்ள லாகிய அப்துல்லா வயிற்றினில் வடிவாய்ப்
பிள்ளை யொன்றுதோன் றிடுமுகம் மதுவெனும் பெயரி
னெள்ள லின்றிய வுண்மைநன் னபியென விசைத்தார்.
1.5.57
223 சொரியும் பூந்துகட் டுடவைசூழ் சாமினிற் றோன்ற
லரிவை தன்னகத் தறிவினுந் தேர்ந்துணர்ந் தறிந்து
தெரியக் கூறிய பெரியவர் சொல்லினுந் தௌிந்து
வரிசை நேருமக் காவினில் விரைவினில் வந்தாள்.
1.5.58
224 வந்து நல்வழிக் குரியவ ரிருக்குமக் காவிற்
சந்த னப்புய னப்துல்லா தனைமணம் புரியச்
சிந்தை நேர்ந்தன ளவ்வுரை கேட்டுளந் திடுக்கிட்
டிந்த வூருளர் மிகுதிபேர் மணத்தினுக் கிசைந்தார்.
1.5.59
225 எனக்கு னக்கென மடந்தையர் மணத்தினுக் கிகலத்
தனக்கு நேரிலா னெழுதிய படிதனி முடிந்து
வனக்க ருங்குழ லாமினா வெனுமட மானைச்
சினக்கும் வேற்கரத் தப்துல்லா மணத்தொடுஞ் சேர்ந்தார்.
1.5.60
226 அந்த வாறறிந் தரிவைய ரிந்நக ரனைத்து
மிந்து வாணுத லாமினா மனைவெறுத் திருந்தார்
கந்த மென்குழல் கருப்புமு முதிர்ந்தன காலம்
வெந்து வானவர் பிறரிலை யென்கொலோ விளைவே.
1.5.61
227 மண்ண ருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயினோ
யுண்ணி ரந்தில மெய்பல வருந்தில வுதரக்
கண்ணி ருந்தபூப் பொன்றுமே கண்டில கனிமென்
பண்ணி ருந்தவாய் வெளுத்தில பலன்பெறும் படியே.
1.5.62
228 சிறுத்த மெல்லிடை பருத்திருந் திலதிரு வுதரம்
பொறுத்து வீங்கில வுந்திமேற் புடைத்தில பொருப்புங்
கறுத்திருந்தில பசுநரம் பெழுந்தில கவின்கள்
வெறுத்தி ருந்தில கருப்பமென் றழகுறும் விதமே.
1.5.63
229 என்றும் பற்பல மொழிந்துச பாசலித் திருப்ப
மன்ற லங்குழ லாமினா கருப்பமும் வலியு
மின்று தோன்றுவ தெனவெடுத் தியம்பின ரிலங்கும்
வென்றி வேல்விழி மடந்தையர்க் கிவைசொலி விடுத்தார்.
1.5.64
230 உரைத்த வாசகங் கேட்டலு மந்நக ருறைவோ
ரிரைத்த டங்கலு மொருமொழிப் படவெடுத் திசையா
வரைத்த னிக்கொடி யாமினா மனையினின் மறந்துங்
கரைத்த லாயினும் வருவதில் லெனக்கழ றினரே.
1.5.65
231 உற்ற வாய்மையைக் கேட்டலு மாமினா வுலைந்து
குற்ற மேதுநம் மிடத்தென மனத்தினிற் குறித்துப்
பெற்ற சூல்வலி யடிக்கடி பெரிதெனப் பதறி
வெற்றி வாட்கரத் தப்துல்முத் தலிபுக்காள் விடுத்தார்.
1.5.66
232 சருவு வேல்விழி மடந்தையர் விடுத்தவர் சாற்றக்
குரிசில் கேட்டவ ரவர்கெல்லாம் வகைவகை கூறி
வருக வென்றலுங் கொடியிடைப் பிடிநடை மடவா
ரொருவ ரும்மவண் புகுவதில் லெனமறுத் துரைத்தார்.
1.5.67
233 மஞ்சு வாழ்குழ லாமினா வுரைத்தது மறுத்தா
ரின்சொற் கூறிநா மழைக்கவு மனமிரங் கிலரென்
றஞ்சி யுள்ளகம் புழுங்கிநின் றப்துல்முத் தலிபு
தஞ்ச மீதெனக் கஃபத்துல் லாதனைச் சார்ந்தார்.
1.5.68
234 வடிவி ருந்தொளிர் கஃபத்துல் லாதனை வலமாய்க்
கடிதிற் றுன்புற வருங்கரு மாரியின் களையாற்
கொடியி டைப்பர தாபமும் வருத்தமுங் கூறி
நெடிது யிர்த்தயர்ந் திரந்துகொண் டிருக்குமந் நேரம்.
1.5.69
235 வேறு
அரியமெய்ப் பொருளா யளவிடற் கரியோ
னருளின னமரர்கள் சுவர்க்கத்
தெரிவையர் பறவைக் குலங்கண்மற் றெவையுஞ்
செழும்பொழிற் செகதலத் திறங்கி
வரிஞிமி றுதறிக் கருங்குழன் முடித்த
மடக்கொடி ஆமினா மனையி
னிரைநிரை செறிந்தங் கவருரை மறாது
நின்றிடும் பணிவிடைக் கெனவே.
1.5.70
236 கருவினிற் றோன்றா தொளிவி லுருவாய்க்
கண்ணிமைத் துண்டுறங் காத
பெருவடி வழகாய்க் குழுவுடன் றிரண்டு
பெரியவ னுரைமறா தெழுந்து
விரிகதிர்க் ககனம் புடவிமட் டொழுங்காய்
விண்ணவ ரெண்ணிறந் தனையோ
ரருவரை யனையா ருருவமுஞ் சிறிதா
யாமினா திருமனை சூழ்ந்தார்.
1.5.71
237 தேன்பெருக் கொழுகி வழிதருங் கனிகள்
சிதறிடுஞ் சோலைவாய்த் தௌிந்த
வானதி மூழ்கித் துகிலெடுத் துடுத்து
வளைபணித் தொகையெலா மணிந்து
கான்மலர் முடித்துக் கடுவரி வடிவேற்
கண்களி லஞ்சனங் குலவச்
சூன்முதி ராமி னாமனை யிடத்திற்
சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர்.
1.5.72
238 மறுவறுத் திருந்த நிறைந்தபூ ரணமா
மதிக்குலந் திரண்டுவந் ததுவோ
வுறைதரு மமுதத் திரளைக ளுருவா
யொழுங்குட னெழுந்திடுந் திரளோ
கறைபடாச் சுவனக் காட்சிவாழ் வனைத்துங்
கலந்துட னிலங்கிவந் ததுவோ
குறைபடாச் சுவனத் தருவினி லுதித்த
கொழுங்கதிர்ச் செழுங்கனிக் குலமோ.
1.5.73
239 அணித்துலைக் கனலி லுருக்கிடா தொளிரு
மாயிரங் கோடிமாற் றெனவுங்
கணித்திடாப் பசும்பொ னெடுத்தெடுத் தமைத்த
கவின்குலங் கூண்டெழுங் கணமோ
மணிக்கதி ரிழைத்துத் திரட்டிவைத் துருவ
வடிவமைத் தெழுந்திடுங் குழுவோ
துணித்துமின் குலங்கண் மறைபடா தெழுந்த
தொகுதியோ வெனவறி கிலமால்.
1.5.74
240 இருட்டடை கிடக்குங் கருங்குழற் பின்ன
லெழுபதி னாயிரமி லங்க
விரித்தபொன் னிழைப்பூந் துகிலுமே கலையும்
விட்டொளிர் வீசிடத் துலங்கத்
தரித்தமுத் தார முடுக்குல மனைத்துந்
தான்குடி யிருந்தெனத் தயங்கக்
கரித்தகண் ணிமையா முலைக்குவ டசையாக்
கன்னியர் திரண்டிருந் தனாரால்.
1.5.75
241 பண்ணமைத் தீஞ்சொ லரம்பையர் மேனிப்
பரிமளந் தெருவெலாங் கமழ
விண்ணகத் திரவிக் கதிரொளி மணிகள்
விடுவெயில் விழுதுவிட் டொழுகத்
தண்ணகைத் தரளக் கதிரிரு டுணிப்பத்
தரையெலாம் பொன்மைபோர்த் திருப்ப
மண்ணகத் திருந்த வாமினா மனையை
வானவர் பதியென லாமால்.
1.5.76
242 பறவைக ளனைத்து மேவலின் படியே
படியினு மந்தர மனைத்து
நிறைதரப் பெருக வதிலொரு வெண்பு
ணித்திலக் கதிர்கள் கான்றொழுக
வுறைதரு மாமி னாதிரு மனையி
னுட்புகுந் தெதிர்வரு வதுகண்
டறைதர மனமும் பயந்திட வொதுங்கி
யஞ்சிநின் றதிசயித் தனரே.
1.5.77
243 வருந்திநொந் திருந்த வாமினா திருமுன்
வந்துநின் றழகுறும் வெண்பு
ளிருந்தவெண் சிறையை விரித்தொளி சிறந்தே
யிலங்கிட வீசிய காற்றாற்
பொருந்திய சரீர வேர்வையுந் தீர்ந்து
புளகெழச் சிலிர்த்தன ரோமந்
திருந்திழை மனத்துட் பயங்கர மகன்று
தேகமுங் குளிர்ந்தன வன்றே.
1.5.78
244 அண்டரி லொருவர் மரகதக் கிண்ணத்
தமுதினை யேந்திவந் தடுத்தக்
கொண்டவர் கொடுப்பக் கூறுலீன் வாங்கிக்
கொடியிடை மடமயிற் கீய
முண்டகக் கரத்தாற் றாங்கியே பருக
முதிர்பர தாபமு நீங்கிக்
கண்டெனு மொழியார் கருப்பநோ யகன்று
கலக்கமுந் தௌிந்தன ரன்றே.
1.5.79
245 பொன்னொளிர் கவினு முறக்குழைத் தெழுது
பூந்துகில் வெண்ணிறங் கவின
மின்னொளி கரப்பக் கதிர்விடுங் கலையை
விரைந்தொரு தட்டினி லேந்திப்
பன்னிய வமரர் தொகையினி லொருவர்
பரிவுடன் கொணர்ந்ததை வாங்கி
யன்னமோ மயிலோ வெனுமொரு மடமா
னாமினா திருக்கையி லீய்ந்தார்.
1.5.80
246 செவ்விவீற் றிருந்து முகமதி யிலங்குந்
திருந்திழை ஆசியா தமையு
மவ்வலங் குழலார் மறியுமென் றுரைக்கு
மயிலையு மரம்பையர் தமையுங்
கவ்வையங் கடல்சூழ் புடவியிற் சிறந்த
காட்சி சேர் மக்கமா நகரி
னவ்விவேல் விழியா ராமினா விருக்கு
நறைமனை புகவிறை யுரைத்தான்.
1.5.81
247 இறையவ னுரைப்பச் சுவனமா மடவா
ரெங்கணும் பரந்தெழு மொழுங்கு
மறியமு மழகு பழுத்தொளி ததும்பு
மானனா ராசியா தாமு
நிறைமதி யிரண்டு வானகத் திழிந்து
நிலத்திடை யுடுவொடுந் திரண்டே
யறைகழல் சிலம்ப வருவபோல் வந்தங்
காமினா திருமனை புகுந்தார்.
1.5.82
248 படித்தலம் புகலு மாமினா வலது
பாரிசத் தாசியா தாமும்
வடித்ததெள் ளமிர்த மெனுமொழிக் குதலை
மறியமு மிடதுபாரி சத்தி
லடுத்தவப் பொழுதி லரம்பையர் சிலர்வந்
தணிமுழந் தாடுடை கணைக்கால்
பிடித்தடி வருடி நின்றனர் மனையும்
பேரொளி பிறங்கின வன்றே.
1.5.83
249 மடந்தையு மகப்பே றடுத்திடுஞ் சமயம்
வானவர் குழுவினை நீந்திக்
கடந்துவந் தொருவர் நின்றன ரவர்செங்
கரத்தினிற் கிண்ணமொன் றேந்தி
யிடங்கொளா துறைந்த கூறுலீன் களிலோ
ரேந்திழை கடிதினில் வாங்கி
யடர்ந்தில்லம் புகுந்து கொடுப்பதைப் பருகி
யாமினா மகிழ்ந்தன ரகமே.
1.5.84
250 பானகம் பருக வொளிவும்வந் திறங்கிப்
பகலவன் கதிரெனப் பரப்ப
வானவர் மகளிர் மருத்துவம் புகுத
மறியமு மாசியா தாமுந்
தேனவிழ் பதுமச் செழுங்கரங் கொடுத்துச்
சேர்ந்தணைந் தருகுறச் சிறந்த
கானமர் குழலா யஞ்சலென் றுரைப்பக்
கனிந்திள கினகருப் பமுமே.
1.5.85
251 கோதறப் பழுத்து மதுரமே கனிந்த
கொவ்வைவா யரம்பையர் வாழ்த்தித்
தீதற நெருங்கி யேவல்செய் திருப்பச்
செழுங்கம லாசனத் திருந்த
மாதருக் கரசி யாமினா வுதர
மனையிடத் திருந்துமா நிலத்தி
லாதரம் பெருக நல்வழிப் பொருளா
யகுமது தோன்றின ரன்றே.
1.5.86
252 கிடந்தொளி பரப்பி வாசங்கொப் பளித்துக்
கிளர்கிபு லாவைமுன் னோக்கி
யிடங்கொளந் தரநேர் சிரசினை யுயர்த்தி
யெழில்பெறச் சுசூதுசெய் திணைத்தாட்
டிடன்பெற மடித்துக் குறியிடக் கையாற்
சேர்த்தொளிர் வலக்கைகான் மேல்வைத்
துடனணி கலிமா விரலினை யுயர்த்தி
யுதித்தனர் முகம்மது நபியே.
1.5.87
253 சிரசினி னெய்தோய்த் திருவிழிக் கருமை
சிறந்திடக் கொப்புளுங் கொயலாய்
மருவுசுன் னத்துஞ் செய்யலாய்த் துடக்கின்
வருங்குறி யொன்றுமில் லாதாய்ப்
பரவுகஸ் தூரி மனையெலா நிறைந்த
பரிமளங் கமகம கமெனப்
பெருகிய வொளிவு வானமட்டு லவப்
பிறந்தனர் முகம்மது நபியே.
1.5.88
154 செம்மையங் கோட்டுக் கடகரிக் கலகந்
தீர்ந்தபி னைம்பதா நாளி
லம்மதி மாசத் தொகையினில் றபீயு
லவ்வலிற் பனிரண்டாந் தேதி
யெம்மனைக் கும்பே றெனவரும் பொருளா
யிசைத்திடுந் திங்களி ராவின்
மும்மையென் றுரைக்கும் புவனமும் புரக்க
முகம்மது நபிபிறந் தனரே.
1.5.89
255 பூதலத் தரசு பதியென வுதித்த
புகழ்பெறு மக்கமா நகரிற்
சீதவொண் கதிர்சேர் கஃபத்துல் லாவின்
றிசையினில் வடகிழக் காக
வேதமொன் றணுகாச் செமுறத்தி லுஸ்தா
வெனுமொரு தலத்தினி னடுவே
மாதவ ரபித்தா லிபுதிரு மனையின்
முகம்மது நபிபிறந் தனரே.
1.5.90
256 நெறிநிலை திரியா மருண்மத மிகுந்து
நெடுநில மெங்கணும் பரந்து
துறவறந் தவறி யில்லற மடிந்து
சுடரிலா மனையது போலக்
குறைபடுங் கால மிருளெனுங் குபிரின்
குலமறுத் தறநெறி விளக்க
மறுவிலா தெழுந்த முழுமதி போல
முகம்மது நபிபிறந் தனரே.
1.5.91
257 பானுவின் கதிரா லிடருறுங் காலம்
படர்தரு தருநிழ லெனலா
யீனமுங் கொலையும் விளைத்திடும் பவநோ
யிடர்தவிர்த் திடுமரு மருந்தாய்த்
தீனெனும் பயிர்க்கோர் செழுமழை யெனலாய்க்
குறைசியிற் றிலதமே யெனலாய்
மானிலந் தனக்கோர் மணிவிளக் கெனலாய்
முகம்மது நபிபிறந் தனரே.
15.92
258 செங்கதிர் பரப்பி யுலகெலாம் விளக்கித்
திரிதின கரனும்வெண் ணமுதந்
தங்கிய கிரணச் சசியுமந் தரத்திற்
றவழ்தரு முடுக்குல மனைத்தும்
பொங்கொளி யெவையுஞ் சுவனநா டனைத்தும்
பூதலம் விசும்புமற் றனவு
மிங்கெழின் முகம்ம தொளிவினி லென்றா
லிவர்க்கெவை யுவமைசொல் லுவதே.
1.5.93
259 மகிதலம் புகழீ சாநபி பாரில்
வந்தநாட் டொடுத்திடை விடாது
பகுமத மிலையென் றாறு நூறாண்டு
பாரிசுக் காரர்கள் வணங்கும்
புகையுடன் கெழுமிப் பொறிபல தெரிப்பப்
புரிந்தெழு மக்கினிக் கொழுந்து
திகைதொறுந் தெரிய வெரிந்தசெந் நெருப்புத்
தேய்ந்துநூந் தழிந்தன வன்றே.
1.5.94
260 படியிடை புடைப்பப் பெருக்கெடுத் ததிரப்
பாயலைச் சுருட்டிவிட் டெறிய
விடுகடல் சாவா வெனும்பதி யிடத்தில்
வெறுந்தரை யாயின வறந்து
குடிலமட் டோங்கி மஞ்சடை கிடக்குங்
கொத்தள மொருபதி னான்கு
மிடிபட வீழ்ந்து சேருவா னகர
மெங்கணுங் கலங்கிய தன்றே.
1.5.95
261 சிலையெடுத் துருவாய் வைத்தபுத் தனைத்துஞ்
சிரசுகீட் படமுகங் கவிழ்த்த
சலமதி லிபுலீ சியற்றிய சிங்கா
சனமுமன் றிடிந்தன சயித்தான்
குலமுமன் றொதுங்கி வானகம் புகாமற்
கூண்டு நக்கேத்திர மெரிந்து
நிலமிசை வீழ்ந்த வினுஞ்சில புதுமை
நிகழ்த்துதற் கரியதன் றிரவே.
1.5.96
262 சிறந்தநன் மதலை தனைவிரைந் தெடுப்பத்
தெரிவையர் மனத்தினி னினைப்ப
மறந்திகழ் விழியார் தொடத்தகா தென்றன்
முகம்மதை விரைவினி லேந்தி
நிறந்திகழ் சுவனப் பதியினிற் கொடுவம்
மென்றன னெடியவ னதனா
லறந்திக ழாமி னாதிரு மனைபுக்
கடுத்தவர் பிள்ளையை யெடுத்தார்.
1.5.97
263 அமரருக் கிறைவன் சபுறயீல் வரிசை
யகுமதை யெடுத்தினி தேந்தித்
தமருடன் சுவனப் பதியினிற் கொடுபோய்ச்
சலநதி தொறுமுழு காட்டி
யிமைதிறந் திருகண் மையினை யெழுதி
யெண்ணெயிட் டமிர்தமு மூட்டிச்
சுமைதர வாசந் திகழ்த்தியெண் டிசையுஞ்
சுற்றியே சிலமொழி பகர்வார்.
1.5.98
264 ஆதிநா யகன்றன் றிருநபி யிறசூ
லாமிவர் தங்கலி மாவைப்
பூதலத் துறைந்த படைப்பெவை யவையும்
போற்றுதல் செய்யவும் வேண்டு
மீதலா லமர ரிவர்கலி மாவுக்
கிசைந்தன ரென்பது மிசைத்துச்
சூதர மொழியா ராமினா விடத்திற்
றோன்றலைக் கொடுத்தகன் றனரே.
1.5.99
265 அந்தர மவனி கடன்மலை யெழுதீ
வகத்தினு மெண்டிசை முழுதுஞ்
சுந்தர வதன முகம்மதைக் கொடுபோய்ச்
சுற்றியெங் கணும்பெயர் விளக்கிச்
சந்தமென் முகத்தா மரைமலர் குளிரத்
தடஞ்சிறை வானவர் திரண்டு
வந்தது மாமி னாதிரு மனையில்
வைத்தது மொருநொடிப் பொழுதே.
1.5.100
266 வள்ளலென் றுதவிப் பெயர்நிலை நிறுத்தி
வளந்தரு புகழ்புல் காசீ
முள்ளக நிறைந்த செம்மலர்ப் பதந்தொட்
டொளிர்பெறு மிணைவிழிக் கேற்றி
விள்ளரும் பவளம் விரிந்தன கனிவாய்
விளங்கிட வாழ்த்தெடுத் துவந்து
தெள்ளமு தனைய முகம்மது நபியைச்
சபாதிரு மடிமிசைக் கொண்டார்.
1.5.101
267 மலர்தரு கரத்தா லேந்தியே மடியில்
வைத்தினி திருக்குமந் நேர
மலர்தரு பவள வாயிதழ் திறந்தே
யழுதனர் முகம்மது நபியு
முலகமும் விசும்பு நிறைதரப் பொருந்து
முடையவன் சத்தமுண் டான
திலகிய கமல முகமலர் சபாவுக்
கிரகுமத்துண் டாகவென் றிசைந்தே.
1.5.102
268 சத்தமுண் டாகிக் கேட்டவப் பொழுதே
சபாவெனு மடமயி றனக்குப்
பத்திவிட் டொளிரு றூமிராச் சியத்துப்
பதியின்மா ளிகையெலாந் தெரிந்து
மித்திர னெழுந்த குணதிசை தொடுத்து
வீழ்தரு குடதிசை தொடுத்துச்
சித்திரம் பெறவே யிருவிழிக் கெதிரே
தெரிதரச் சிறந்தன வன்றே.
1.5.103
269 வரியளி குடைந்து தண்ணறா வருந்து
மலர்ப்புய னப்துல் முத்தலிபு
கருதிய வரங்கேட் டிருந்துநெஞ் சுருகுங்
காலையிற் ககுபத்துல் லாவி
னிரைநிரை செறிந்த புத்துக ளனைத்து
நெட்டுயிர்ப் பொடுகலைந் தலைந்து
விரைவினி லோடிக் காவத வழிக்கு
வேறுவே றாய்க்கிடந் ததுவே.
1.5.104
270 பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து
பரந்துசெவ் வரிக்கொடி யோடி
மான்மருள் விழியா ராமினா விருந்த
வளமனைத் திசையினை நோக்கி
நானிலம் புகலுங் ககுபத்துல் லாவி
னாலுமூ லையுமொரு நெறியாய்த்
தூநறை கமழ வொளிதிகழ் தரவே
சுசூதுசெய் தெழுந்தன வன்றே.
1.5.105
271 இறையவ னேவ விண்ணவர் கரத்தா
லியற்றிய மணிமதிட் ககுபா
மறைபடா தெவர்க்குங் கேட்பன வாக
வாய்திறந் தோதுவ போன்று
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற
கொற்றவ னென்றனை யின்றே
நிறைதரப் புனித மாக்கினா னென்ன
நிகழ்த்திய தொருமொழி யன்றே.
1.5.106
272 இரவினிற் றனித்தங் கிருந்தகா லையினி
லியற்றிய புத்துக ளனைத்தும்
பரவியே சிதறக் கண்டுமங் ககுபாப்
பண்புறச் சுசூதுசெய் தியல்பா
விரைவினின் மொழிந்த வார்த்தையுங் கேட்டு
வெருவியே யப்துல்முத் தலிபு
முருகுகொப் பிளிக்கு மாமினா மனையின்
முழுமணி வாயில்வந் தடுத்தார்.
1.5.107
273 தரையினிற் பரந்த குபிரிருட் குலமுஞ்
சாற்றிய கலியிருட் குலமும்
வரைவிலா தொடுங்க முகம்மது நபியிம்
மானிலத் துதித்தன ரென்றே
கரையிலா வுவகை யாநந்த வெள்ளக்
கடலிடை குளித்துறக் களித்து
விரைவினிற் றிமிரக் கடற்பகை துறந்து
வெய்யவன் கதிர்கள்விட் டெழுந்தான்.
1.5.108
274 விடிந்தவப் பொழுதி லப்துல்முத் தலிபு
விரைவினி லாமினா வென்னு
மடந்தையைக் கூவி வருகவென் றுரைப்ப
மடமயிற் பெடையென வெழுந்து
நடந்தெதிர் வரக்கண் டம்மநின் னுதலி
னலங்கிளர் பேரொளி யொன்றுண்
டிடந்திகழ்ந் திலங்கக் காண்கிலே னென்ன
வீன்றனன் மகவென விசைத்தார்.
1.5.109
275 வஞ்சிமென் கொடியின் முகமலர்க் கவினு
மருங்கினில் விசித்தபட் டுடையுங்
கஞ்சமென் மலர்த்தா ணிலம்புடைப் பெயர்வுங்
கமழ்தரு மெய்யினிற் குறியும்
பிஞ்சுநன் னுதலுங் கண்டுளத் தடக்கிப்
பெற்றவா றென்கொலென் றெண்ணிக்
கொஞ்சுமென் மொழியீர் மதலையைக் கொணர்கென்
றுரைத்தனர் குளிர்மழைக் கொடையார்.
1.5.110
276 கூறிய மொழிகேட் டாமினா வெனது
குமரனை மூன்றுநாள் வரைக்கும்
வேறொரு வருக்குங் காணொணா தெனவே
விண்ணவ ருரைத்தன ரென்றெ
யூறிய மதுர வாயிதழ் திறந்தே
யோதின ரப்துல்முத் தலிபு
சீறினர் புருவ முரிதர விருகண்
டீப்பொறி தெறித்திடச் சிவந்தே.
1.5.111
277 சினந்தமா துலனைக் கண்டுளம் பதறிச்
சேயிழை யாமினா திகைத்துக்
கனந்தரு கொடையா யரசர்நா யகமே
கருதலர்க் கசனியே நுந்த
மனந்தனிற் சினமென் மனையுநும் மனையே
மகவுநும் மகவினின் மகவே
யினந்தரும் பலன்போ லெழுந்தசந் ததியே
யெடுமிலம் புகுமென விசைத்தார்.
1.5.112
278 மருமலர் செறிந்து வண்டுகண் படுக்கு
மஞ்செனுங் கருங்குழன் மடந்தை
தருமுரை கேட்டு வெகுளியைப் போக்கிச்
சசிமுக மலர்ந்தகங் குளிர்ந்து
பருதியொத் திலங்கு மாளிகை புகப்போய்ப்
பார்த்தனர் வாயிலு ளொருவ
ருருவின கருவி கரத்தினி லேந்தி
யுறுக்கிட வெருக்கொடு மீண்டார்.
1.5.113
279 மீண்டனர் பதறிக் காறடு மாறி
விளைந்திடும் பயனையோ ராம
லாண்டகை யிவனார் நம்மனை தனைவந்
தடுப்பனோ தகாதென வெண்ணிப்
பூண்டநம் மினத்தா ரனைவர்க்கு முரைத்துப்
போக்குவ மிவனையா மென்னத்
தூண்டியே நடந்து வாயிலைக் கடந்தார்
துன்பமுற் றப்துல்முத் தலிபு.
1.5.114
280 காரண மனைத்தும் வௌிப்படா தமைக்குங்
காலமென் றறிந்துண ராம
லூரவ ரெவர்க்கு முரைத்திவண் புகவென்
றுளத்தினி லெண்ணிய காலை
பாரிடத் தெறும்பீ றாயிப முதலாப்
பகுத்தமைத் தவன்விதிப் படியா
லீரமுற் றுணங்கி நாவழங் காம
லெழுதின மில்லம்புக் கிருந்தார்.
1.5.115
281 சிலைநுதற் கயற்க ணாமினா வென்னுஞ்
செவ்விபூத் திருந்தபொன் மடந்தை
மலர்தலை யுலகிற் சுருதியை விளக்கு
முகம்மது நபிநயி னாரை
யிலகிய கமலக் கரத்தினி லேந்தி
யிருவிழி குளிர்தர நோக்கிப்
பலகலை யறிவுங் கொடுப்பபோ லெழுநாட்
பான்முலை கொடுத்தன ரன்றே.
1.5.116
282 மின்னவிர் சுவன வானவர் கூண்டு
விளங்கொளி யினமணித் தசும்பி
னன்னிலைச் சலிலங் கொணந்துகோ தறவே
நறைகமழ் முகம்மது நபியை
யிந்நிலம் விளங்க விளக்குவ தெனவே
யெழிற்கரத் தேந்திநீ ராட்டிப்
பன்னிய சலவாத் தோதியே வாழ்த்திப்
பரிவுடன் புகழ்ந்துபோந் திடுவார்.
1.5.117
283 இலங்கிலை வேற்கை யப்துல்முத் தலிபு
மெழுதின மனையகத் திருந்து
நலங்கிளர் நாவும் வழங்கிட மனத்தி
னால்வகைப் பயனையு முணர்ந்து
கலங்கியே தௌிந்து மதலைமேல் விருப்பாய்க்
கடுவிழிக் கனிமொழித் துவர்வாய்ப்
பொலன்கொடி யாமி னாமணி மனையிற்
புக்கினர் புயங்கள்விம் முறவே.
1.5.118
284 திண்டிறற் பொருப்பும் பொருவரா தெழுந்து
செம்மைவீற் றிருந்தபொற் புயத்தார்
வண்டணி குழலா ராமினா வெனும்பேர்
மடந்தைதன் றிருமுக நோக்கிக்
கண்டெனு மொழியா யிவ்வயி னிகழ்ந்த
காரணக் காட்சிக ளெல்லாம்
விண்டெமக் குரைரயு மென்றனர் முறுவல்
விளங்கிய குமுதவாய் திறந்தே.
1.5.119
285 பறவைக ளனைத்தும் வந்துஞ் சுவனப்
பதியைவிட் டமரர்வந் ததுவும்
மறியமு மாசி யாவும்வந் ததுவும்
வானவர் மகளிர்வந் ததுவும்
வெறிகமழ் பறவை வீசிநின் றதுவும்
விண்ணகத் தமுதந்தந் ததுவுங்
குறைவிலாப் புதுமை பலவுங்கண் டதுவுங்
குறிப்புடன் படிப்படி யுரைத்தார்.
1.5.120
286 புகன்றநன் மொழிகேட் டறப்பெரும் புதுமைப்
புதுமையீ தெனச்சிர மசைத்துன்
மகன்றனைத் தருக வென்றலு மடமான்
மகிழ்வொடுந் திருமனை புகுந்து
மிகுந்தபே ரொளிவு சொரிந்துகால் வீச
விளங்கிய முகம்மதை யெடுத்துச்
செகந்தனி புரக்கு மப்துல்முத் தலிபு
செழுமணித் தடக்கையி லீய்ந்தார்.
1.5.121
287 கறைநிணஞ் சுமந்த செங்கதிர் வடிவேற்
கரதலன் அப்துல்முத் தலிபு
முறைமுறை மோந்து முத்தமிட் டுவந்த
முழுமலர்ச் செழுமுக நோக்கி
நிறைமதி நிகரா முகம்மது நயினார்
நிலவுகொப் பிளித்திடச் சிரிப்பக்
குறைபடா வுவகைப் பெருக்கெடுத் தெறியக்
குளித்தக மிகமகிழ்ந் தெழுந்தார்.
1.5.122
288 கதம்பமான் மதம்பே ரொளிவுடன் றிகழ்ந்த
காளையைக் கரத்தெடுத் தணைத்து
மதஞ்சொரிந் தசைந்த களிறென நடந்து
வந்துகஃ பாவினை வலஞ்செய்
திதம்பெறப் போற்றி யுள்ளுறப் புகுந்தங்
கிருந்திறை தனைப்புகழ்ந் தேத்தி
விதம்பெற முகம்ம தெனப்பெயர் தரித்து
வீறுடன் றிரும்பின ரன்றே.
1.5.123
289 தேமலர்ப் பொழில்சூழ் சுவனநாட் டரசைத்
திசைதொறும் விளக்குநா யகத்தை
மாமறைக் கொழுந்தை முகம்மது நபியை
மறுப்படா தெழுந்தசெம் மணியைப்
பூமலர்க் குழலி யாமினா வென்னும்
பூங்கொடிக் கரத்தினி லருளி
நாமவை வேற்கை யப்துல்முத் தலிபு
நடந்துதன் றிருமனை சார்ந்தார்.
1.5.124
290 அன்புட னெழுநா ளணியிழை சுமந்த
வாமினா முலையருந் தியபி
னின்புற அபூல கபுதிரு மனையி
னிருந்ததோர் மடக்கொடி துவைபா
மன்பெரும் புகழார் முகம்மது நபிக்கு
மனமகிழ் வொடுமுலை கொடுத்துத்
தன்பெரும் புகழும் வரிசையும் பெருகத்
தழைத்தினி திருக்குமந் நாளில்.
1.5.125

நபியவதாரப் படலம் முற்றிற்று

ஆகப் படலம் 5-க்குத் திருவிருத்தம்--290
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.6. அலிமா முலையூட்டுப் படலம்

291 அறிவத பறமுறை பயிற்றி யன்புட
நெறிவளர் தரவளர்த் திடுவம் நீயெமக்
குறுதியாய் முகம்மதை யருளென் றுன்னியே
யிறையுடன் மொழிந்தன ரமர ரியாருமே.
1.6.1
292 நம்பெறும் பேறென நபியைப் பொன்னுல
கம்பொனீ ராட்டிநல் லமுத மூட்டியே
யெம்பதிக் கரசென வியற்று வோமென
வும்பர்தம் மகளிர்க ளுவந்து கேட்டனர்.
1.6.2
293 நான்மறை நபியையெம் மிடத்தி னல்கினாற்
பான்முலை கொடுத்தியாம் பரிப்பந் தம்மென
மான்மரை விலங்கின மனைத்தும் வாய்திறந்
தீனமில் லவன்றனை யிரந்து கேட்டவே.
1.6.3
294 இரைத்தெழும் புள்ளெலா மேகன் றன்னிடத்
துரைத்திடு மெங்கள்பா லுதவி னந்நபி
வருத்தமொன் றின்மையா மதுரத் தேன்கனி
யருத்தியாம் வளர்ப்பதற் கையமில் லையே.
1.6.4
295 வேறு
என்று கூறிய பலமொழி கேட்டபி னிறையோன்
மன்ற லங்குழ லாளலி மாவெனு மடந்தை
வென்றி யாமுலை கொடுப்பதும் வளர்ப்பதும் விருப்ப
மன்றி யேதகு மோபிறர் தமெக்கென வறைந்தான்.
1.6.5
296 இறைவ னிம்மொழி கூறலு மமரர்க ளியாரும்
பிறமொ ழிந்திலர் மனத்திடைப் பயம்பெரி தானார்
சிறைவி ரித்திடும் பறவையும் விலங்கினத் திரளு
மறுமொ ழிக்கிட மில்லெனப் போற்றின மகிழ்ந்தே.
1.6.6
297 கனைக டற்றிரை யாடைசூழ் பாரினிற் கவின்கொண்
டனைய நாட்டினி லறபெனும் வளமைநா டதனுள்
குனையி னென்றொரு பதியலி மாகுடி யிருந்தா
ரினைய வூரினி னடந்தவா றெடுத்திசைத் திடுவாம்.
1.6.7
298 வேறு
கருங்கட னீரையுண் டெழுந்து கார்க்குலம்
பெருந்தரை யெங்கணும் பெய்த லில்லையா
லிருந்தபைங் கூழெலாங் கருகி யெங்கணும்
பரந்தது சிறுவிலைப் பஞ்ச மானதே.
1.6.8
299 மலிபசி யானையா வறுமை சேனையாப்
பலபரி பவங்களாப் பழிர தங்களாக்
கலியமைச் சாய்த்துறைக் கணக்கர் கோபமாக்
கொலையர சன்கொடுங் கோன டாத்தினான்.
1.6.9
300 குலமுறை மன்னர்போய்க் கொடிய பாதகர்
தலைநிலம் புரந்திடுந் தகைமை போலவே
நலனுறு கொடையெனு நாம வேந்துகெட்
டிலனெனு மரசுவீற் றிருந்த காலமே.
1.6.10
301 உருத்திரண் டெழுந்துபொய் யுடம்பை மெய்யெனத்
திருத்துபுண் ணியம்புகழ் தேடி நாடொறும்
வருத்தமின் றிப்பொருள் வழங்கு மேலவர்
தரித்திரம் படைத்திடுஞ் சாம காலமே.
1.6.11
302 நெடுநிலம் பாரறத் தொட்டு நீரிறைத்
திடுபயிர் செய்துகாத் திருந்து கள்வராற்
படுமுறைப் பாடெலாம் படப்ப லித்திடாக்
கொடுமையா லகவிலை குறைந்த காலமே.
1.6.12
303 காயிலை கிழங்கெலாங் கருவ றுத்துகான்
மேய்விலங் கினம்பல கொன்று மென்றுமே
தீயவப் பசிப்பிணி தீண்ட லாற்சன
மாய்வுறு சடம்பல மலிந்த காலமே.
1.6.13
304 நலந்தருங் கற்பெனு நாமங் கெட்டுட
லுலர்ந்தறப் பசியினா லொடுங்கி யீனர்த
மிலந்தொறும் புகுந்திரந் திடைந்து வாடிநற்
குலந்தலை மயக்கிடுங் கொடிய காலமே.
1.6.14
305 மதலைகள் பிறர்மனை வாயி றூங்கிநின்
றிதயநொந் திருகையேத் திரப்பக் கண்டுதாய்
விதிகொலென் றேங்கிட வேறு வேறதாய்ப்
பதிகுலைத் தெறிந்திடும் பஞ்ச காலமே.
1.6.15
306 பஞ்சமென் றொருகொடும் பாவி தோன்றிடத்
துஞ்சினர் சிலர்தனி துறந்த பேர்சிலர்
தஞ்சமற் றடிமையாய்ச் சார்ந்த பேர்சில
ரஞ்சியே புறநக ரடைந்த பேர்சிலர்.
1.6.16
307 கருப்பினிற் சனமெலாங் கலைந்து போதலா
லுரைப்பருங் குனைனெனு மூருள் ளோரெலா
நிரைப்பெறக் கூடியே நினைத்து சாவிநின்
றொருப்பட வுய்யுமா றத்துப் பேசினார்.
1.6.17
308 மகிதலத் துயர்பதி மக்க மென்னுமூர்
புகுதலே கருமநம் பூவை மாரணி
நகிலமு தூட்டிட மதலை நல்குவா
ரிகல்புரி தரித்திர மிலையென் றோதினார்.
1.6.18
309 மக்கமா நகரெனும் வரிசை யூரதிற்
புக்கியே பிழைப்பது பொருட்டென் றெண்ணியே
மிக்கபே ரனைவரும் விளம்பிக் காலமே
தக்கநற் பயணமென் றெடுத்துச் சாற்றினார்.
1.6.19
310 ஆரிது மனையலி மாகண் டுஞ்சிட
வேரிய மடிமிசை விருக்க மொன்றதிற்
றூரிலை பணரெலாங் கனிக டூங்கிடச்
சீர்பெறு நறைக்கனி யமுதஞ் சிந்தவே.
1.6.20
311 மரகத நிறமர மடியிற் றோன்றியே
சொரிகதிர்க் கனியெலாந் துய்ப்பச் செங்கயல்
வரிவிழி மயிலலி மாக னாவினைத்
தெரிதரக் கண்டெழுந் தெவர்க்குஞ் செப்பினார்.
1.6.21
312 அறிவுறு துவைபெனுந் தந்தை யாகிய
மறையவன் கேட்டுத்தன் மகவை நோக்கிநன்
னெறிதிகழ் மக்கமா நகரி னீர்செலின்
பெறுபல னுறுதியுண் டென்னப் பேசினான்.
1.6.22
313 அம்மொழி கேட்டலி மாவு மாரிது
நம்மையாள் பவனரு ணமக்குண் டென்னவே
தம்மினத் தாருடன் கூண்டு தாழ்விலாச்
செம்மைசேர் மக்கமா நகரிற் செல்கின்றார்.
1.6.23
314 இடுக்கிய குழந்தையு மேந்து பிள்ளையும்
வடுப்பிள வனையகண் மான னார்களும்
கடுப்பினிற் கணவன்மா ருடனுங் கற்குவைத்
திடர்ப்படு சிறுநெறிச் செல்கின் றாரரோ.
1.6.24
315 வரும்பரி வாகனத் துடனுந் தம்மனம்
விரும்பிய மக்கமா நகரை மேவியே
கரும்பெனு மொழியனார் காளை மாருடன்
பெருந்தெரு விடந்தொறும் பிரியத் தெய்தினார்.
1.6.25
316 பிறைநுதற் கருங்குழற் பெண்க ளியாவருங்
குறையற மென்முலை கொடுத்துக் கூலிக்கா
மறுவறப் போற்றியே வளர்ப்ப மியாமெனச்
சிறுவர்க ளுளமனை யனைத்துந் தேடினார்.
1.6.26
317 கூலியின் முலையமு தூட்டுங் கோதையர்
நாலொரு பதின்மர்வந் தவரு நன்குறப்
பாலகர் பெற்றுறு பலனும் பெற்றனர்
சாலவெம் பசிப்பிணி தவிர்ந்திட் டாரரோ.
1.6.27
318 ஆயிழை யெனுமலி மாவு மாரிதுந்
தூயநற் றெருவெலாந் திரிந்து சோர்ந்தொரு
சேய்கிடைத் திலையெனத் திகைத்து வாடியே
வாயுரை மறந்தற மதிம யங்கினார்.
1.6.28
319 உடற்பருத் திலவொரு முலையுஞ் சூகையிம்
மடக்கொடிக் கெனமறுத் தாரென் றெண்ணியே
தடப்புயத் தப்துல்முத் தலிபு தம்மனை
யிடத்தினில் வந்துநின் றிசைத்திட் டார்களே.
1.6.29
320 தரைப்பெரும் புகழெலாந் தரித்து மாமணி
நிரைத்தணி குங்கும மாலை நீங்கிலா
வரைப்புய வப்துல்முத் தலிபு வந்துநின்
றுரைத்தவ ரிருவரை யுற்று நோக்கினார்.
1.6.30
321 உடலுலர்ந் தொடுங்கியோர் முலையுஞ் சூகைகொண்
மடமயில் கூலிப்பால் வழங்கு வோமெனத்
திடமுற விசைத்தன டெரியுங் காரணம்
கடவுளின் பயனெனக் கருத்தி லெண்ணினார்.
1.6.31
322 கோதைநின் குலம்பெய ரேது கூறென
மாதவ ருரைத்தலு மடந்தை யன்புறச்
சாதெனுங் குலத்தினென் றாயுந் தந்தையு
மோதுமென் பெயரலி மாவென் றோதினார்.
1.6.32
323 குலத்துடன் பெயரையுங் கூறக் கொற்றவர்
நலத்துடன் செல்வமும் பொறையு நன்கெனப்
பெலத்தது பொருளென வெண்ணிப் பேதியாச்
சிலைத்தடம் புயர்பல தெரிந்து கூறுவார்.
1.6.33
324 பெறுமொரு தந்தையு மில்லைப் பின்னிய
வறுமையெத் தீம்தரு மதலை யுண்டுகொ
லறிவுற முலைகொடுத் தாக்கஞ் செய்வதற்
குறுவதோ நும்மன மென்ன வோதினார்.
1.6.34
325 மன்றலங் குழலியு மன்ன ராரிது
மொன்றிய மனத்தொடு முசாவிச் செல்குவ
நன்றுபார்த் தறிகுவ நாமென் றுன்னியே
வென்றிவேற் செழுங்கர வேந்துக் கோதினார்.
1.6.35
326 அவ்வயி னப்துல்முத் தலிபு மாங்கொரு
செவ்விய வறிவனைக் கூட்டிச் செல்கென
நவ்விநோக் குறும்விழி யாமி னாவெனு
மவ்வலங் குழலலிமா மனைக்க னுப்பினார்.
1.6.36
327 வேறு
அரிவை யாமினா வகத்தினி லடைந்தலி மாவுன்
னுரிய மைந்தனுக் கென்முலைப் பாலமு தூட்டத்
தெரிய வந்தன னருளுக வென்றலுஞ் சிறந்த
மரும லர்க்குழ லிவர்க்கெதிர் மொழிவ்ழங் குவரால்.
1.6.37
328 உற்ற தந்தையு மிலையுறு பொருளிலை யெத்தீம்
பெற்ற பிள்ளையோ ருதவிசெய் குவர்பிற ரிலைநிர்
பற்று நற்பொருள் குறித்துவந் தவர்பசி யுடையீ
ரிற்றைக் குண்பதற் கிடமிலை யென்னிடத் தென்றார்.
1.6.38
329 அந்த வாறலி மாதுணை யாரிதை நோக்கி
யிந்த நன்மனைக் குறுபொரு ளேதுமொன் றிலையாந்
தந்தை யும்மிலை யாம்வறு மைக்குடி தானா
மெந்த வாறியா முய்வதிக் குழந்தையா லென்றார்.
1.6.39
330 பலன்ப டைப்பதும் வறுமையைப் படைப்பதும் பாரி
னலம்ப டைப்பது முடைவன் விதிப்படி நடுக்குற்
றுலைந்து நின்மன முடைவதென் வெண்டிரை யுடுத்த
தலம்பு ரப்பதின் னாரனச் சாற்றவு மரிதே.
1.6.40
331 படியி னிற்பெறும் பலனமக் குளவெனிற் பாதிக்
கொடிம ருங்குலிக் குழந்தையா லாங்கொடி யவரேல்
வடிவு றும்பொரு ளடுக்கினு நம்வயின் வாராக்
கடிதி னிற்புகுந் தறிவமென் றாரிது கரைந்தார்.
1.6.41
332 இருவ ரும்மெழுந் தாமினா மனையிடத் தெய்தித்
தெரிவை நின்மகக் கொணர்கெனக் கேட்டலுஞ் சிறந்த
பரிம ளந்திகழ் மதலையைக் கொண் அர்ந்தார் பார்த்தார்
வரிப ரந்தசெவ் விழிதிறந் தனர்முகம் மதுவே.
1.6.42
333 கண்டி றந்தவப் போதினிற் கவினொளி கதிர்விட்
டெண்டி சையினும் பரந்திரு சுடரினு மிலங்கப்
பண்டு கண்டிலாப் புதுமைகொ லெனவுளம் பயந்து
விண்டு ரைத்திடா திருவரு மயங்கிமெய் மறந்தார்.
1.6.43
334 பார்த்த கட்கதிர் பரத்தலிற் பயந்தவர் தௌிந்து
கூர்த்த தம்மனத் ததிசயித் தகமகிழ் கொண்டு
கார்த்த டங்கடற் கீண்டெழு முழுமதிக் கதிரைச்
சேர்த்த நேமியம் புள்ளென வுவகையிற் றிளைத்தார்.
1.6.44
335 வேந்த ராரிது தம்மனை யாடமை விழித்துக்
காந்தண் மெல்லிதழ்ப் பசுந்தொடிக் கரத்தினால் விரைவி
னேந்து மென்றன ரிலங்கிழை மடமயி லலிமா
வாய்ந்த பேரொளி முகம்மதை யினிதெடுத் தணைத்தார்.
1.6.45
336 மலிந்த பேரொளி முகம்மதை யெடுத்தலும் வருந்தி
மெலிந்த மெல்லிழை சடம்பருத் தோங்கின வீங்கித்
கலந்த மான்மத வாசமுங் கமழ்ந்தன கருகி
யுலந்த சூகைமென் முலைதிரண் டழகொழு கினவே.
1.6.46
337 வடந்த யங்குபூண் செப்பெனச் பணைத்திறு மாந்து
கடந்த மும்மதக் கரியிணைக் கோட்டினுங் கதித்துக்
குடந்த யங்குற விம்மிதங் கொண்டபொற் குவட்டை
யடர்ந்த மென்முலைக் கண்டிறந் தொழுகின வமுதம்.
1.6.47
338 பாகி ருந்தமென் மொழியலி மாவலப் பாகச்
சூகை மென்முலை திரண்டதும் பாறுளும் பியதுந்
தேக மெங்கணும் பருத்ததுங் கண்டெழில் சிறந்தது
வாகு றும்வடி வாயின ராரிது மகிழ்ந்தே.
1.6.48
339 புதிய நல்வடி வாகிய பூங்கொடி யலிமா
கதிர்வி ரித்திட மடிமிசை வைத்துகால் வருடிக்
குதிகொள் பான்முலைக் குடித்திடக் கொடுத்திடக் குறையா
மதுர வாய்திறந் தமுதமுண் டனர்முகம் மதுவே.
1.6.49
340 நறைக மழ்ந்தொளி ததும்பிய முகம்மது நபியு
முறைமை யாகவுண் டனர்வலப் பாரிச முலைப்பான்
மறுவி லாததம் மதலையு மிடதுபான் மருங்கிற்
குறைவி லாதுவ தடிக்கடிக் குடித்துக்கொப் பளிக்கும்.
1.6.50
341 வற்றித் தூங்கிய லமுறத்து வெனுமந்த மதலை
நற்ற வம்பெறு முகம்மது நபிபறக் கத்தா
லுற்ற பால்குடித் துடறழைத் துறுபிடி யாகி
வெற்றி வெங்கயக் கன்றெனக் கவின்விளங் கியதே.
1.6.51
342 மாத வம்பெறு முகம்மது நபிக்குந்தம் மகற்கு
மேத மின்றிய பால்கொடுத் திருந்துசின் னாட்பின்
கோதி லாக்குனை யினிற்செலக் கருத்தினிற் குறித்துக்
காத லித்துரைத் தார்துணைத் தார்கண வருக்கே.
1.6.52
343 இருவ ரும்மனச் சம்மதக் களிப்புட னேகி
யரசர் நாயக ரப்துல்முத் தலிபைச்சென் றடுத்து
வரிசை பெற்றனம் பொருள்பல பெற்றன மகிழ்ந்தெம்
புரிசை சூழ்பதி புகுவமென் றுரைத்தனர் புகழ்ந்தே.
1.6.53
344 கேட்ட போதினி லப்துல்முத் தலிபெனுங் கிழவோர்
வேட்ட லாயிரு வருக்குநன் மொழிபல விளம்பிக்
கோட்டு மாங்குயி லாமினாக் கிவையெலாங் கூறி
வாட்ட மில்லதோர் நும்பதிச் செல்கென வகுத்தார்.
1.6.54
345 இந்த வாறுதேர்ந் தாரிது மெழிலலி மாவுங்
கொந்து லாங்குழ லாமினா மனையினைக் குறுகிச்
சுந்த ரந்தவழ்ந் திலங்கிய கொடியினைத் துதித்துச்
சிந்தை யின்னுறுஞ் செய்திக ளனைத்துஞ்செப் பினரே.
1.6.55
346 தம்ப திச்செல விருவருஞ் சாற்றிய மாற்றஞ்
செம்பொற் பூங்கொடி யாமினா கேட்டுளந் திடுக்கிட்
டம்ப ரத்தெழு முழுமதி நிகரகு மதுவைக்
கம்ப ணிந்தசெங் கரத்தெடுத் துவகையிற் கலுழ்ந்தார்.
1.6.56
347 தேன்கி டந்தசெங் கனியிதழ்ப் பவளவாய் திறந்து
வான்கி டந்தொளிர் மதியினு மொளிர்முகம் மதுவைக்
கான்கி டந்தமெய் யுறமுத்த மிட்டுடல் களிப்ப
வூன்கி டந்தவேல் விழிமல ரிணையிலொத் தினரே.
1.6.57
348 அமரர் நாயக மேபுவி யரசருக் கரசே
தமரி னுக்கொரு திலதமே யார்க்குந் தாயகமே
நமது யிர்க்குயி ராகிய முகம்மது நபியே
கமைத ருங்கட லேயெனப் போற்றினர் கனிந்தே.
1.6.58
349 போற்றி முத்தமிட் டணியணிந் தருந்துகில் புனைந்து
மாற்ற லர்க்கிரி யேயென முகம்மதை வாழ்த்தித்
தேற்று மென்மொழி பலவெடுத் தாமினா செப்பிக்
கூற்ற டர்ந்தவேல் விழியலி மாகையிற் கொடுத்தார்.
1.6.59
350 தன்னு டன்பிறந் தவளென விருகையாற் றழுவி
யென்ம கன்னல னின்மக னிவனென வியம்பி
மின்னு ணங்குவே லாரிதை வெற்றியால் வியத்திப்
பொன்னு னாருட னூரினிற் புமெனப் புகன்றார்.
1.6.60
351 வேறு
அருந்தவம் புரியும் பெருந்தலம் வணங்கி
யடைகுவம் பதிக்கென அலிமா
வருந்திடா தெழுந்து முகம்மதைக் கதிரின்
மணிவளைக் கரத்தினி லேந்தித்
திருந்திட நடப்பக் ககுபத்துல் லாவிற்
சிறந்திடுந் தென்கிழ மூலை
யிருந்திடும் ஹஜறு லசுவது வெனுங்கால்
லெதிர்கொடு நடந்தது வன்றே.
1.6.61
352 நாரியுங் கருங்கற் றொட்டுமுத் தமிட்டு
நடந்துகஃ பாவலஞ் செய்து
சீரிதி னியன்ற வாயிலி னெதிரே
சென்றுநின் றிறைஞ்சுமந் நேரந்
தாரணி திகழ்ந்த குபலெனும் புத்துத்
தலைகவிழ்ந் ததுவத னடுப்ப
நேர்பெற நிரையா யிருந்தபுத் தனைத்து
நிலமிசைச் சாய்ந்துருண் டனவே.
1.6.62
353 புதுமைக ளனைத்துங் கண்டுகண் குளிர்ந்து
பொற்கொடி ககுபத்துல் லாவிட்
டிதமுற நடந்து கணவரைக் குறுகி
யெடுத்திவை யனைத்தையு மியம்ப
மதியினிற் றௌிவுற் றாரிது மலிமா
மலர்முக நோக்கியிம் மகவாற்
கதியுறு நமக்குச் செல்வமும் பெருகுங்
கவலையுந் தீர்ந்தன மென்றார்.
1.6.63
354 நன்றெனப் புகழ்ந்து மனங்களி கூர்ந்து
நாரியு மாரிது தாமும்
வென்றிகொண் டனமென் றொட்டைமேற் கொண்டார்
மேன்யிற் சொறியுடன் வரடு
மொன்றிய கிழடுந் தூங்கிய குணமு
மொழிந்தது திடபிடி யாகிக்
குன்றென வுயர்ந்து பருத்துறக் கொழுத்துக்
குதிப்பொடு நடந்தன வன்றே.
1.6.64
355 குனையின்விட் டெழுந்த கொடியிடை மடவாக்
கூடின ரொருமுக மாக
வனைவருந் திரண்டு மக்கமா நகர்விட்
டருவரைச் சிறுநெறி யணுகித்
தனையரும் புதிய தனையரு முயிற்போற்
றலைவரு மடந்தையர் தாமுங்
கனைகுரற் களிறும் பிடிகளுங் கன்றுங்
கலந்துட னடப்பதொத் தனரே.
1.6.65
356 மல்லுயர் திணிதோ ளாடவர் பலரும்
வனமுலை மடக்கொடி யவருஞ்
செல்லுநன் னெறிபால் வயின்வயின் செறிந்த
செடிகளு மரந்தலை யெவையுங்
கல்லுங்கற் குவையும் யாவருங் கேட்பக்
கடிதினிற் றௌியவாய் விண்டு
செல்லுயர் கவிகை முகம்மது நபிக்குத்
தெரிதரச் சல்லமுரைத் தனவே.
1.6.66
357 நடந்தவர் வெயிலா லுடறடு மாறி
நலிதரத் தாகமும் பெரிதாய்
விடந்தயங் கியகண் ணிணைமட வாரு
மெலிதரச் செல்லுமக் காலைக்
கிடந்ததோர் கான மிலையில வாகிக்
கிளைத்திடும் பணரெலாங் கருகி
யிடந்தொறு நிழலற் றிருந்ததவ் விடத்தி
லிறங்கின ரனைவருஞ் செறிந்தே.
1.6.67
358 மான்மதஞ் செறிந்து கமழ்தர அலிமா
மடிமிசை முகம்மது விளங்கக்
கானகந் தழைத்துப் பணர்கள்விட் டெழுந்து
கதிரவன் கனற்கர மறைத்து
நீனிறப் பசந்த விலைமிக நெருங்கி
நிரைமலர் சொரிதரக் காய்த்துத்
தேனிருந் தொழுகுங் கனிபல சிதறித்
திசையெலா நிறைந்தன வன்றே.
1.6.68
359 கண்டவர் மனமுங் கண்களுங் குளிர்ந்து
கனிபல பறித்தெடுத் தருந்தி
வண்டணி குழலார் வருத்தமுந் தீர்ந்து
வழியினிற் பெரும்பலன் கிடைத்துக்
கொண்டதுந் தாகந் தீர்ந்தது மலிமா
குழந்தையா லாமெனச் சூழ்ந்து
முண்டக மலர்த்தா ளினில்விழி சேர்த்தி
முகம்மதைப் போற்றிவாழ்த் தினரே.
1.6.69
360 இலைபல தளிர்த்துக் குளிர்வனச் சோலை
யிருந்தவா ரனைவரு மெழுந்து
குலவுவா கனத்திற் கொண்டுகுன் றுகளுங்
குழிதருங் கானியா றுகளு
நிலைபெறுஞ் சுரமுங் கடந்தவர் நடந்து
நீள்வரை யனையமா மதிள்சூழ்
பலபல மனையுந் தெரிதர நோக்கிப்
பதியெனுங் குனையினை யடைந்தார்.
1.6.70
361 பதியினை யடுத்தா ரவர்மனை புகுந்தார்
பாவையர் பலரும்வந் தடைந்து
மதியினுந் தௌிந்த வடிவெடுத் தனைய
முகம்மதங் கிருப்பதைக் கண்டா
ரதிசய மிஃதென் றணிமலர்த் தாளி
லயில்விழி வைத்துமுத் தமிட்டு
நிதியமும் பேறும் படைத்தன ரலிமா
நிகரிலை யிவர்க்கினி யென்பார்.
1.6.710
362 கூண்டுவந் தெடுப்பார் புகழ்ந்துபோற் றிடுவார்
கொழுங்கனி முகம்மதை யிவருக்
காண்டவன் கொடுத்தா னிந்தநற் பெரும்பே
றணியிழை படைத்தன ரென்பார்
தூண்டிடா விளக்கோ முழுமணி தானோ
சுவர்க்கத்தி லிருந்துவந் ததுவோ
வேண்டிய பொருளு முறுமொரு நாளோர்
வீட்டினிற் புகிலெனப் புகல்வார்.
1.6.720
363 வறுமையுந் தீரு நோயும்விட் டகலு
மனத்தினிற் கவலையு நீங்குஞ்
சிறுமையு மகலும் புத்தியும் பெருகுந்
தீவினை வந்தட ராது
தெறுபகை சிதௌயுஞ் செல்வமும் வளருந்
தேகமுஞ் சிறந்தபூ ரிக்கு
முறுபவந் தொலையு முகம்மதை யெவர்க்கு
மொருபகற் காண்கிலென் றுரைப்பார்.
1.6.73
364 தன்கிளை யவரை விளித்தரு கிருத்திச்
சாற்றினர் செரும்புக ழலிமா
வென்குலத் தவமோ யான்செய்த பலனோ
விவர்தமைக் கிடைக்கவும் பெற்றேன்
முன்பெருஞ் சூகை வடுவையுந் தவிர்ந்தேன்
முகமலர் தரவடி வானேன்
பின்புறு கலியுங் காண்கிலேன் பலனும்
பெற்றன னெனவுரைத் தனரே.
1.6.74
365 பாரினிற் சிற்ந்த மக்கமா நகர்க்குப்
பயணமென் றிருக்குமன் றிரவி
னேருமென் மடியில் விருக்கமொன் றெழுந்து
நிலமிசை கனிகளைச் சிந்த
வாரியே யருந்தி வறுமையும் பசியு
மறந்துடல் களிப்பொடு மகிழக்
கூருமோர் கனவு கண்டன னெனவே
கோதையர்க் கெடுத்துரைத் தனரே.
1.6.75
366 அரந்துடைத் தொளிருங் கதிரிலை வேற்கண்
ணாமினா திருமக னலிமா
வரந்தரு குழந்தைக் கொருமுலைப் பாலே
வழங்கின படியறி வதற்கே
சுரந்திடுஞ் சூகை முலையமு தருந்திக்
துயிறருங் காலையி லெடுத்துங்
சுரந்துதம் மிடது பான்முலை கொடுக்கிற்
கனியிதழ் வாய்திறந் தருந்தார்.
1.6.76
367 ஆரிது மனையிற் சிலதுருச் சொம்முண்
டறக்கிழ டொடுசொறி மலடுஞ்
சோரியில் வரடும் வங்குமா யிருந்த
துருவைகண் முதுகினிற் றிறமா
வாரணிந் திலங்கு மணிமுலை யலிமா
முகம்மது திருமலர்க் கரத்தாற்
சீருறத் தடவ விக்கினஞ் சிதைந்து
செவ்விபெற் றிலங்கிய வன்றே.
1.6.77
368 வாலசைத் திடாத கிழடிள வுருவாய்
வரடுவங் கறமல டும்போய்ச்
சாலவும் பருத்திட் டுடறிரண் டழகாய்த்
தளதளத் தணிமயி ரொழுக்காய்ச்
சூலுமாய்ச் சிறிது பாலுமாய் முலைக்கண்
சுரப்பெடுத் தறச்சொரிந் திடலா
யேலவார் குழலார் மனையிடங் கொள்ளா
திருந்தது பறழ்களு நிறைந்தே.
1.6.78
369 ஓங்கிய குனையி னெனும்பதி தன்னி
லுறைபவ ரெவர்மனைக் கேனு
நீங்கரும் பிணிவந் தடுத்திடி லவர்க
ணிறைதரு முகம்மதைக் காண்கிற்
றீங்ககன் றிடுமச் செய்திகண் டறிந்து
செறிதரு பிறநக ருளரும்
பாங்கினிற் புகுந்து முகம்மது மலர்த்தாள்
பணிந்துமெய் மகிழ்ச்சிபெற் றிருப்பார்.
1.6.79
370 மறைதராச் சோதி முகம்மது நயினார்
வடிவுறு மெய்யினிற் றுகளு
முறைதரா நீரிற் கழுவிலா திருந்து
முலவுறு சிக்குமொன் றணுகாக்
குறைதரா வாசங் கமழ்வது மாறாக்
குமிழினீர்ச் சிறிதுமே யணுகாக்
கறைதரா வரிச்செங் கண்டுயின் றெழினுங்
கலந்துறு மாசுமொன் றணுகா.
1.6.80
371 சலமலா திகளீ னாற்றமுந் தோற்றாத்
தரையருந் திடுவதே யல்லா
னிலமிசை யெவர்க்குங் கண்ணினிற் றோன்றா
நீடரு நீழலுந் தோன்றா
வுலவிய வெறும்பு மொண்சிறை யீயு
மொருபொழு தாகிலுந் தீண்டாக்
கலையினின் மயிலைப் படர்தராப் பிள்ளைக்
கனியெனு முகம்மது நபிக்கே.
1.6.81
372 மாமயி லலிமா கண்டுயில் காலை
முகம்மது துயிலிட நோக்கித்
தாமதி யாது சந்திர னிறங்கித்
தன்னுரு மாறிவேற் றுருவாய்க்
காமரு மலர்த்தாண் மெல்லென வருடிக்
கதிர்மணித் தொட்டிலை யாட்டிப்
பூமண மனைக்கு ளிருந்தடி பணிந்து
போவது தினந்தொறுந் தொழிலே.
1.6.82
373 இந்துவந் துறைந்து மலரடி வருடி
யிரவெலாங் காத்தினி திருந்து
கொந்தலர் குழலார் மனையெலா நிறைந்த
கொழுங்கதிர் பரப்பிடக் கூடி
வந்துவா னவர்க ளிடமற நெருங்கி
மனைப்புறங் காப்பென விருப்பச்
சுந்தர வதன முகம்மது நபியைத்
துய்யவ னினிதுற வளர்த்தான்.
1.6.83
374 வரையெனத் திரண்ட புயநபி நயினார்
முகம்மதை வளர்த்திடு மனைக்குட்
கரையிலாச் செல்வந் தனித்தினி பெருகிக்
காட்சிகள் பலவுமுண் டாகி
நிரைநிரை மாடா டொட்டகம் பலவு
நிறைந்துபா றயிர்குறை விலதாய்த்
தரையினிற் குடிக்குட் பெருங்குடி யான
தலைவரா ரீதென விருந்தார்.
1.6.84
375 குனையினி லலிமா மக்களுந் தாமுங்
குடிக்குயர் குடியென வாழு
மனையினி லொருநாட் டீபமிட் டதுமில்
முகம்மது பேரொளி யல்லாற்
றனியவே னருளாற் றுன்பநோய் வறுமை
தனையடுத் தவர்க்குமில் லாமற்
சினவுவேற் கரத்த ராரிது மகிழ்ந்து
செல்வமுஞ் செருக்கும்பெற் றிருந்தார்.
1.6.85
376 எந்நில மனைத்துந் தீனெறி நடப்ப
வியல்பெறு மனுமுறை நடப்பத்
துன்னிய வறத்தின் றுறைவழி நடப்பத்
துன்பமற் றின்பமே நடப்பப்
பன்னருஞ் செங்கோ லுலகெலா நடப்பப்
பரினிற் குலமுறை நடப்ப
மன்னிய ரெவருஞ் சொற்படி நடப்ப
முகம்மது நபுநடந் தனரே.
1.6.86
377 நிலமிசை ஹாஷீங் குலம்பெயர் விளங்க
நிகரிலா நேர்வழி விளங்கக்
குலவிய நிறையும் பொறுமையும் விளங்கக்
கோதிலாப் பெரும்புகழ் விளங்க
வுலகுயர் புதுமைக் காரணம் விளங்க
வுயர்தரு வேதமும் விளங்க
மலர்திரு சோதி முகமதி விளங்க
முகம்மது சொல்விளங் கினவே.
1.6.87
378 விண்ணகத் தமரர் மனமகிழ் வளர
வியனுறும் வரிசைகள் வளரக்
கண்ணகத் துறைந்து கருணையும் வளரக்
கவினிறை பிறையென வளர
வெண்ணரும் புதுமைக் காரணம் வளர
விறையவன் றிருவருள் வளர
மண்ணகத் திருந்து கிலையெலாம் வளர
முகம்மது நபிவளர்ந் தனரே.
1.6.88
379 பாரினிற் பரந்த குபிர்க்குல மறுத்துப்
படர்தரு தீன்பயிர் விளக்கச்
சீருறுங் கனக மாமழை பொழியத்
திரண்டெழுஞ் செழுமுகிற் குலம்போற்
பேர்தருங் குறைஷிக் குலத்தினி லுதித்துப்
பிறங்கொளி முகம்மது நபிக்கு
வார்பொரு முலையார் மனங்களித் துவப்ப
வருடமு மிரண்டுசென் றனவே.
1.6.89
380 கதிருடன் கதியு மொருவடி வெடுத்த
காட்சிபெற் றிருந்தணி சிறந்து
மதியினு மொளிரு முகம்மது நபிக்கு
வயதிரண் டானதன் பின்னர்
குதிகொளு மமுத மடிக்கடி சுரந்து
கொடுத்திடு முலைமறப் பித்துப்
பதியினி லிருந்து பொற்பதி புரக்கும்
பலன்படைத் துவந்தன ரன்றே.
1.6.90
381 நெறித்திருண் டடர்ந்த செழுமழைக் கூந்த
னேரிழை வனமுலை யலிமாக்
குறித்தசெம் பவளம் விரிந்தெனத் தேன்பாய்
கொழுமடற் குமுதவாய் திறந்து
செறித்ததிண் மாட மக்கமா நகரிற்
செல்குவந் தருணமீ தென்னப்
பொறித்தபொற் குவட்டைப் பணைத்தெழும் புயத்துப்
புரவல ராரிதுக் குரைத்தார்.
1.6.91
382 ஆரிது மதனைக் கேட்டுறத் தௌிந்தங்
கழகுறுங் கருமமீ தென்னச்
சீர்பெறு மனையா டம்மையும் பயந்த
செல்வரி லொருசிறு வனையும்
பாரினில் விளங்கு முகம்மது தமையும்
பண்புடன் வாகனத் தேற்றி
யேர்பெறும் வரிசை மக்கமா நகருக்
கெழுந்தனர் செழும்புய மிலங்க.
1.6.92
383 வானவர் சுனப் பதிநிக ரனைய
மக்கமா நகரினிற் புகுந்து
கானமர் குழலா ராமினா வென்னுங்
கனிமொழிப் பொற்றொடிக் கரத்தி
னானமுங் கவினும் வளர்ந்துமே னிவந்த
நபிமுகம் மதுநயி னாரைத்
தேனவிழ் பதும மென்மலர்ச் செழுந்தாட்
டிருந்திழை களிப்பொடுங் கொடுத்தார்.
1.6.93
384 மடந்தையிற் சிறந்த வாமினா வென்னு
மலர்க்கொடி முகம்மதை வாங்கி
யிடம்பெறப் பிறழ்ந்து சிவந்தவே லென்னு
மிணைவிழி முகத்தொடுஞ் சேர்த்திக்
குடங்கையி லேந்தி மார்புறத் தழுவிக்
குமுதவாய் முத்தமிட் டுவந்து
கிடந்தன மனத்திற் றுயரெலா மகற்றிற்
கிளர்தரு முவகையிற் குளிர்ந்தார்.
1.6.94
385 முலைச்சுமை கிடந்த சிற்றிடை திரண்ட
முகிலெனுங் குழலலி மாவை
யிலைத்தளிர் விரல்கண் முதுகுறப் பொருந்த
வின்னுயிர் பொருந்தல்போற் றழுவி
நிலைத்தபொற் பாவை யெனவரு கிருத்தி
நெறியுடன் பலமொழி புகழ்ந்து
மலைத்தடம் புயத்தா ரீதையும் போற்றி
மகிழ்ந்தன ராமினா வன்றே.
1.6.95
386 நெய்நிணங் கமழ்ந்த செங்கதிர் வடிவே
னிருபர்கோ னப்துல்முத் தலிபு
மைநிறப் பாவைக் கயல்விழி யலிமா
வந்தது கேடுவந் தடுத்து
மெய்நிறக் கதிர்முச் சுடரையு மழுக்கும்
விறன்முகம் மதுதமை யெடுத்துக்
கைநிறை பொருட்போ லிருவிழி குளிரக்
கண்டக மகிழ்ந்துடல் களித்தார்.
1.6.96
387 வடிவுறுஞ் சுடர்வே லப்துல்முத் தலிபு
மரைமலர் மாமுக நோக்கிக்
கொடியென வயங்கு நுண்ணிடை யலிமா
கொவ்வையங் கனியிதழ் திறந்து
படியினி லெவர்க்குங் காணெணாப் புதுமைப்
பாலகர் முகம்மது தம்மான்
மிடிமையுந் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றொம்
வேண்டுவ பிறிதிலை யென்றார்.
1.6.97
388 ஆடவர் திலக ரப்துல்முத் தலிபு
மாமினா வெனுங்குலக் கொடியும்
பீடுறு மலிமா தம்மையுந் தலைமைப்
பெருமையா ரீதையும் போற்றி
நாடுறு மனத்தா லினத்தவர் மனைக்கு
ணன்குற விருந்துக ளளைத்துத்
தேடிய பொருளைக் கிடைத்தவர் போலச்
செல்வமுற் றிருந்தனர் சிலநாள்.
1.6.98
389 செவ்விய வரிசை மக்கமா நகரிற்
றிங்கணா லிரண்டுசென் றதற்பி
னெவ்வரம் பினுக்கு மிகுவரம் பெனவா
ழிலங்கிழை யாமினா தமையு
மவ்வலந் தொடையா ரப்துல்முத் தலிபு
மன்னையும் பொருந்துறப் போற்றிக்
கவ்வையங் கழனி குனையினிற் புகுதுங்
கருத்தினக் கருதியே யுரைத்தார்.
1.6.99
390 எண்ணரும் பெருமைப் புகழுசை னயினா
ரெடுத்தியற் றியபல வரிசைப்
புண்ணியப் பொருளாய் வருமபுல் காசிம்
புந்தியி னடுவுறப் பொருந்திக்
கண்ணினு மிருக்கு முகம்மது நபியைக்
கடிதினில் வாகனத் தேற்றி
நண்ணிய குனையின் வழியினைக் கடந்து
நடந்துதம் மனையினைச் சார்ந்தார்.
1.6.100

அலிமா முலையூட்டுப் படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 6-க்குத் திருவிருத்தம்--390.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.7. இலாஞ்சனை தரித்த படலம்

391 புரிசைசூழ் மக்கந் தன்னிற் போந்தவ ணிருந்தும் பின்னர்த்
திருவுறை குனையி னென்னும் பதியினிற் சேர்ந்தும் பாரிற்
குரிசின்மா முகம்ம தென்னுங் குலமணி தமக்கு நாளின்
வருடமூ றென்னத் தேகம் வளர்ந்தது மிரட்டி தானே.
1.7.1
392 ஆண்டுமூன் றுறைந்து நாலா மாண்டுசென் றதற்பின் செல்வம்
பூண்டமா மயிலே யன்ன பொலன்கொடி யலிமா வென்னுந்
தூண்டிடா விளக்கின் செவ்விச் சுடர்மதி முகத்தை நோக்கிச்
காண்டகாப் புதுமை வண்மை முகம்மது கவல லுற்றார்.
1.7.2
393 சேட்டிளஞ் சிங்க மென்னுந் திறலுரை யப்துல் லாவும்
பூட்டிய தனுவால் வெற்றி பொருந்துகை லமுறத் தென்னுந்
தோட்டுணைத் தனைய ரெங்கே சொல்லுக வனையே யென்னக்
கேட்டபி னலிமா வென்னுங் கேகய மறுத்துக் கூறும்.
1.7.3
394 பிள்ளைமென் கனியே செல்வம் பெறுந்தவப் பலனே யெந்த
மூள்ளகத் துயிரே மாமை யோங்கிய முகம்ம தேயிந்
நள்ளிருட் பொழுது நீங்கி விடிந்தபி னம்பி மார்க
டுள்ளுமென் மறிகண் மேய்ப்பத் தொடர்ந்தனர் காட்டிலென்றார்.
1.7.4
395 கானகத் தொருவின் பின்னே கலந்தனர் தனையர் தாமென்
றானவ ருரைப்ப நவ்வி யகுமதுங் கருத்தி லுற்றுத்
தூநகைத் தளரச் செவ்வாய்த் துடியிடைக் கொடியை நோக்கி
யானுமவ் வழிசெல் வேனென் றடுத்தடுத் துரைப்ப தானார்.
1.7.5
396 வரமுறு முகம்ம திந்த வாசக முரைப்பத் தேன்பாய்
விரைமலர் செருகுங் கூந்தன் மென்கொடி யலிமா கேட்டுக்
கரையிலா வுவகை பொங்கிக் காளைதம் வதன நோக்கி
நிரைதரு தகர்ப்பின் னாளைச் செல்கென நிகழ்த்தி னாரே.
1.7.6
397 விரிகதிர்ப் பருதி வெய்யோ னுதித்தபின் விளங்குஞ் செவ்வித்
துரைமுகம் மதுக்கு வெள்ளைத் துகிலெடுத் தரையிற் சாத்திச்
சிரசினி னெய்யுந் தேய்த்துச் செறிமணிக் கோல்கைக் கீய்ந்து
குரிசிலைக் குறித்துச் சூழ்ந்த குமரரை விளித்துச் சொல்வார்.
1.7.7
398 கற்செறி பொதும்பிற் கூர்ந்த கண்டக வனத்திற் சேர்ந்த
புற்செறி வில்லாப் பாரிற் பொறியரா வுறையுங் கானில்
விற்செறி வேனற் காட்டில் விரிநிழ லில்லாச் சார்பின்
மற்செறி புயத்தீர் சேறன் மறுமென மறுத்துஞ் சொல்வார்.
1.7. 8
399 பணர்விரி நிழலுந் துய்ய பசும்புலி னிடமும் வாய்ந்த
மணம்விரி வனசம் பூத்த மடுவுறை யிடமு மார்க்கு
முணவுறை கனியுஞ் சேர்ந்த வொருங்கினி லாடு மேய்ப்பக்
குணவரை யனைய செவ்விக் குரிசிலைக் கொடுபோ மென்றார்.
1.7.9
400 இலங்கிழை யலிமா கூறும் வார்த்தைகேட் டிளையோ ரெல்லா
நலங்கிளர் மனம்பூ ரித்து நன்மொழி யீதென் றெண்ணித்
துலங்குசெம் மணியைச் சூழ்ந்த பலமணி போலச் சூழ்ந்து
குலங்கெழுங் கொறியின் பின்னே முகம்மதைக் கூட்டிச் சென்றார்.
1.7.10
401 பருதியின் கரங்கள் காணாப் பாசடை செறிந்த நீழற்
றருவிடை முகம்ம தென்னுஞ் சலதரக் கவிகை வேந்தை
யிருமென விருத்திச் சூழ்ந்த விளையரிற் சிலர்புற் கானிற்
றுருவைமேய்த் தருநீ ரூட்டித் தோன்றுவ ரலது நீங்கார்.
1.7.11
402 சுற்றிய துணைவ ரோடுஞ் சொரிகதிர் முகம்ம தென்னு
நற்றவ முடைய நம்பி வருவதை நோக்கி நாடிச்
சிற்றிடை யலிமா வென்னுஞ் சேயிழை யெதிரிற் சென்று
பொற்றொடிக் கரத்தி லேந்திக் கொறியுடன் மனையிற் புக்கார்.
1.7.12
403 மற்றுமிவ் வண்ணஞ் சின்னாண் முகம்மது மப்துல் லாவும்
பற்றுவிட் டகலா ராடும் பலுகின தொன்று பத்தாய்க்
குற்றமி லலிமா வென்னுங் கொடிமனை தயிர்பா னன்னெய்
வற்றுறாப் பெருகிச் செல்வம் வளர்ந்தினி தோங்கிற் றன்றே.
1.7.13
404 குறுமறி யாய ராருங் குரிசிலைச் சூழவ ரல்லாற்
பிறிதொரு நெறியுஞ் செல்லார் பெய்பரற் கானி லாங்கோர்
செறிபுனற் றடத்தி னீழற் சேர்ந்தொரு முகமாய்க் கூடி
யிறையவன் றூதர் முன்சென் றேவல்செய் திருப்ப ரன்றே.
1.7.14
405 நன்றிகொ ளிளையோ ரெல்லா நறைமுகம் மதுவை யார்க்கும்
வென்றிகொ ளரசா வைத்து வேறுவே றதிகா ரத்தா
ரென்றவ ரவர்க்கே பேரிட் டிருந்தடி பணிந்து சார்ந்த
மன்றல்சே ருவாயி னீழன் மகிழ்ந்தினி திருக்கும் போதில்.
1.7.15
406 பட்டுடை யினராய்ச் சாந்தம் பழகுதோ ளினராய் வாய்ந்த
கட்டழ கினராய் வீசுங் கதிர்மதி வதன ராய்மெய்க்
கிட்டகஞ் சுகரா யாண்மை யிலங்கும்வா லிபராய்ச் சோதி
விட்டொளிர் மின்னி னொப்ப விழைவினி லிருவர் வந்தார்.
1.7.16
407 படியகங் கெண்டி செம்பொற் பதுமமென் கரத்தி லேந்தி
வடிவுட னொருவர் நிற்ப மற்றொரு காளை கையிற்
றொடிபகுப் பென்னக் கூன்வா டோன்றிட வெதிர தாகத்
திடமுட னிற்பக் கண்டு சிறுவர்கள் கலக்க முற்றார்.
1.7.17
408 சிறுவர்க ளுள்ளந் தேம்பிக் திடுக்கிட நிற்குங் காலை
மறுவகன் மதியம் போன்ற முகம்மதை யடுத்துப் பாரி
லிறையவன் றூதே யெங்கட் கின்னுயிர்க் குயிரே யென்ன
நறைமலர்க் கரத்தைப் பற்றி நடந்துவாய் நிழலி லானார்.
1.7.18
409 தருநிழ லிடத்தில் வள்ள றம்முனும் பின்னு மாக
விருவரு மிருப்பக் கண்ட விளையவ ரனைத்து மேங்கி
வெருவுவ ருள்ளந் தேறா மெலிகுவ ரிவரியா ரென்ன
வுருகுவர் கரைவர் கண்ணீ ரொழுகிட வொருங்கு நிற்பார்.
1.7.19
410 பதறுவர் கலங்கி யேங்கிப் பதைபதைத் தலறி விம்மிக்
கதறுவ ரந்தோ வென்னக் கலங்குவர் கலன்க ளியாவுஞ்
சிதறிட வோடி யோடித் திரும்பிநெட் டுயிர்ப்பு வீங்கி
யிதயநொந் தாவி சோர விடைந்துவா டுவர்க ளன்றே.
1.7.20
411 மல்விதம் பயிலுந் திண்டோண் மன்னவ ரிவர்க ளியாரோ
தொல்விதிப் பயனால் வந்து சூழ்ந்துகைக் கருவி தன்னாற்
கொல்வதுக் கிசைந்த பேரோ குரிசிலைக் கொண்டு தம்மூர்
செல்வதுக் கிருக்கின் றாரோ தெரிகிலோ மென்ன நைவார்.
1.7.21
412 கடலிடைப் புவியி லெங்கண் முகம்மது பேரிற் கையாற்
றொடநினைத் தவரு மில்லைத் தொடர்ந்துகைப் பற்றி நுங்க
ளிடமற விருத்தல் செய்தீ ரேதுகா ரணமோ வெங்க
ளுடனுரைத் திடுவீ ரென்ன வுரைத்துவாய் புலர்ந்து நிற்பார்.
1.7.22
413 மறைபடாச் செவ்வி வாய்ந்த முகம்மது பேரிற் சற்றே
குறைபட நினைக்கின் றீராற் குடிகுடி வடு நுங்கட்
கிறையவன் மினிவும் பாரி லெண்ணிலாப் பழியுஞ் சூழு
முறையல விடுமி னென்ன மொழிந்துநெஞ் சழிந்து நிற்பார்.
1.7.23
414 முகம்மது பேரி னும்மால் வடுவரு மாகி லிந்தச்
செகமகி ழலிமா வென்னுந் திருந்திழை பழியு மீன்ற
நகைமணி முறுவ லாமி னாவுயிர்ப் பழியு மல்லாற்
பகைபெரி துடைய ராகிப் பழியெலாஞ் சுமப்பீ ரென்றார்.
1.7.24
415 இத்திறஞ் சிறுவர் கூற வியலபு துல்லா வென்னுஞ்
சித்திர வடிவன் செவ்வாய் திறந்திரு வரையு நோக்கி
வித்தகர் முகம்ம தின்னை விடுமெனை நுங்கட் கேற்ற
குத்திரங் கொலையா தேனுங் குறித்ததி முடித்தி ரென்றான்.
1.7.25
416 சிறுவர்க ளுரைக்கு மாற்றங் கேட்டபின் ஜிபுற யீலு
மறநெறி மீக்கா யீலு மதிசயித் தகத்தி னுள்ளே
மூறுவல்செய் துரையா தொன்று மொழிந்தில ராகிச் செவ்வி
நிறைமுகம் மதுவைச் சேர்ந்த நிழலிடைப் படுத்தல் செய்தார்.
1.7.26
417 படுத்தொளி பரப்புஞ் செவ்வி முகம்மதைப் பார்த்துக் கூன்வா
ளெடுத்துநாற் றிசையு நோக்கி யியல்பெற வுரத்தி னேரே
வடுப்பட வூன்றி நொய்தாய் வகிர்ந்திடும் போதி னெஞ்சந்
திடுக்கொடு பதறி நின்ற சிறுவர்கள் சிதறி னாரே.
1.7.27
418 நேயமுற் றுரத்தைக் கீண்டு நிறையொளி பொங்குங் கஞ்சக்
காய்முகை கிழித்துள் ளுற்ற கறுப்பொடு கசடு மான
மாயவன் கூற்றை மாற்ரி வழுவறக் கழுவி மாறா
தாயுநன் னினைவீ மானல் லறிவுட னிறப்பல் செய்தார்.
1.7.28
419 உண்மையு நினைவுஞ் சேர்த்தி யூறிலா துறப்பொ ருத்தி
வண்மைசேர் முகம்ம தின்றண் மணிப்பிடர்த் தணிவ தாகத்
திண்மைகொள் புயமி ரண்டிற் றெரிதர நடுவிற் றூய
வொண்ணிறப் புறவி னண்டத் தோதிய வளவ தாக.
1.7.29
420 முத்திரை யென்னு மவ்வி லாஞ்சனை டஹ்ரித்து மூவா
வுத்தமர் தெரிந்து நோக்கி யொருவருக் கொருவர் சொல்வா
ரித்தகைக் குரிசி னின்ற நிறையிடை கண்டோ ரெல்லாம்
பத்திவிட் டொளிருஞ் சொர்க்கப் பலன்பதம் பெறுவ ரென்றே.
1.7.30
421 தரம்பெறு மாயி ரம்பேர் நிறையெனச் சாற்றிப் பத்தா
யிரம்பெயர் நிறையுண் டென்ன வியம்பிநூ றாயி ரம்பேர்க்
குரம்பெறக் கனமுண் டென்ன வோதியோர் கோடி கோடி
நிரம்புமா னிடருக் குற்ற நிறையென்று நிகழ்த்தி னாரே.
1.7.31
422 வகுத்தநாட் டொடுத்துப் பின்னாள் வருவதோர் நாளீ றாகத்
தொகுத்தவ சனங்க ளெல்லா மிவரெடை தோன்றா தென்னப்
பகுத்தவர் பார்த்துப் பாரிற் படைப்புள சனங்க ளெல்லா
மிகத்திவர் ஷபாஅத் தாலீ டேறுவ ரென்ருஞ் சொன்னார்.
1.7.32
423 அதிசயித் துரைத்து நின்றங் ககுமது சிரசைத் தொட்டுத்
துதிசெய்து முத்த மிட்டுத் தூயவன் றோழ ரான
புதியதோர் ஹபீபுல் லாவென் றோதிய பேரும் போர்த்து
மதிமகிழ்ந் துவகை பொங்கி வானவர் வாழ்த்திச் சொல்வார்.
1.7.33
424 அருமறை முகம்ம தேநும் மகத்தினி லஞ்சல் வேண்டாம்
வரமுறு புதுமை நும்பால் வருவதுண் டனேக மந்தத்
தரமறிந் துவகை யெய்து முமக்கெனச் சாற்றிப் போற்றிப்
பெரியவ னருளால் வானோர் பேருல கடைந்தா ரன்றே.
1.7.34
425 ஓடிய சிறுவர் கானொந் துலைந்திளைத் துடலம் வேர்த்து
வாடிய முகத்திற் கண்ணீர் மார்பக நனைப்பச் சோர்ந்து
பாடியிற் புகுந்து தங்கண் மனப்பயங் கரத்தை வந்து
கூடிய பெயருக் கெல்லாம் வகைவகை கூறு கின்றார்.
1.7.35
426 அப்பொழு தப்துல் லாவும் லமுறத்து மழுது விம்மி
யெய்ப்பொடு மேங்கி யேங்கி யீன்றவர் முகத்தை நோக்கி
மைப்படுங் கவிகை வள்ளன் முகம்மதைக் கொன்றா ரென்று
செப்பிய மாற்றக் கூற்றஞ் செவிப்புக மயங்கி வீழ்ந்தார்.
1.7.36
427 ஆரிது தெருமந் துள்ளத் தறிவழிந் தாவி சோரக்
காரிகை யலிமா பூண்ட கலன்பல திசையுஞ் சிந்த
வேரியங் குழன்மா மேக மின்னென மேனி தேம்பிப்
பாரினிற் புரண்டே றுண்ட மயிலெனப் பதைக்க லுற்றார்.
1.7.37
428 பதைத்தெழுந் தையோ வென்னப் பாலக னப்துல் லாவை
மதித்துமுன் னடத்திக் காந்தண் மலர்க்கரஞ் சிரசி லேற்றி
யுதித்தெழுங் கமலப் பாத முதிரங்கொப் பளிப்பக் கானின்
மிதித்தலைந் திடுங்கொம் பொப்ப விரைவினி னடந்து சென்றார்.
1.7.38
429 அயிரொழித் தரம்பொற் றேய்க்கு மறக்கொடும் பரற்கா னேகிக்
குயில்புரை சொல்லார் செல்லக் கோட்டுவாய் நிழலின் கண்ணே
யியிருந்தம் மனமுங் கண்ணு மோருருக் கண்ட தன்ன
செயிரற மகன்வா னோக்கி நின்றிடுங் செய்தி கண்டார்.
1.7.39
430 கண்ணினின் மணியே யெந்தங் கருத்துறு மறிவே காமர்
விண்ணினிற் குறைப டாமல் விளங்கிய மதிய மேயிம்
மண்ணினுக் கரசே நந்த மனைக்குறு செல்வ மேயெம்
புண்ணியப் பலனே யென்னப் பூங்கொடி யெடுத்த ணைத்தார்.
1.7.40
431 வடிவுறு மேனி நோக்கி மாமதி வதன நோக்கி
யுடலுறும் வடுக்கா ணேனிங் குற்றவை யுரைப்பா யென்று
கொடியிடை யலிமா கூறக் கொடுவரை முழையிற் றோன்று
மடலுறு சீய மன்ன அகுமது புகல லுற்றார்.
1.7.41
432 இத்தரு நிழலி லியாங்க ளிருக்கையி லிருவர் வந்தேன்
கைத்தலம் பற்ற நின்ற காளையர் வெருவி யேகப்
பத்திர மாயென் றன்னைப் படிமிசைக் கிடத்திக் கூன்வாள்
வைத்துரங் கீண்டல் கண்டேன் மறுத்தொன்றுந் தெரிகிலேனே.
1.7.42
433 நினைவொடு மெழுந்தேன் பின்னென் னெஞ்சினில் வடுவுங் காணேன்
மனமகிழ்ந் திருவ ரும்மெய் மகிழ்ச்சியா லெனது சென்னி
தனையுறத் தடவி முத்திச் சஞ்சலம் வேண்டா நும்பாற்
கனபுது மைகளுண் டென்றோர் காரணப் பெயரு மிட்டார்.
1.7.43
434 ஈதலா லனேக மாற்ற மெடுத்தெடுத் தியம்பி யென்னை
மாதவ முகம்ம தேநல் வரிசையின் மணியே யென்ன
வோதின ரோதி வானத் துறைந்திடல் பார்த்து நின்றேன்
றாதையு நீரு மென்னைத் தழுவவுங் கண்டே னென்றார்.
1.7.44
435 உரைத்தவிச் செய்தி யெல்லா மூரவ ருடனு முற்ற
வரைச்சிலை சுமந்த திண்டோண் மன்னரா ரிதுவு மோசைத்
திரைக்கொடிப் பவள மன்ன சேயிழை யலிமா வுங்கேட்
டிரைத்தக மகிழ்ச்சி பொங்கி யெழுந்துதம் பதியிற் புக்கார்.
1.7.45
436 வேறு
வாடு மெல்லிழைப் பாதிநுண் ணிடைமயி லலிமா
கூடி வந்தவ ரனைவர்க்கு நன்மொழி கொடுத்து
நாடி நும்மனை புகுமெனத் தமர்களை நடத்தித்
தேடி டாப்பொருண் முகம்மதை மனைவயிற் செறித்தார்.
1.7.46
437 வனந்த னிற்செலுஞ் சிறுவரோ டிணக்கிலார் மறியி
னினந்த னிற்றொடர்ந் தேகவு மனத்தினி லியையார்
சினந்த சின்மொழி மறந்தொரு நாளினுஞ் செப்பா
ரனந்த ரத்தவர் மனையினிற் புகுத்தியு மறியார்.
1.7.47
438 சேம மாகிய பொருளினைக் காத்திடுந் திறம்போல்
வாம மாமணி முகம்மதை வளர்க்குமந் நாளிற்
றாம வொண்புயத் தினர்நசு றானிக டடஞ்சூழ்
பூம லர்ப்பொழில் குனையின்வந் தடைந்தனர் புதிதாய்.
1.7.48
439 ஹபஷி நாட்டினி லுறைநசு றானிக ளானோர்
குவித ருந்தனக் கொடியலி மாவையுங் கூண்டு
கவின்ப ழுத்தொழு கியமுகம் மதுவையுங் கண்டு
செவியி ராசிய மொருவருக் கொருவர்செப் பினரால்.
1.7. 49
440 நபியெ னும்பெரு முத்திரைக் குறியும்பொன் னகர்க்கும்
புவியி னுக்குமோ ரரசெனப் பொருந்திலக் கணமு
மவிரொ ளித்திரு மேனியு மவயவத் தழகு
மிவையெ லாமறிந் திவர்நபி யெனவுளத் திசைந்தார்.
1.7.50
441 புனைம ணிப்புய ராரிதுக் குயிரெனப் பொருந்து
மனைவி யாகிய மயிலலி மாமுனம் வந்து
கனைத ருங்கட லமுதமென வாழ்த்தியுட் களித்து
வினைய மாய்நசு றானிகள் சிலமொழி விரித்தார்.
1.7.51
442 உங்க டம்மனைக் குளதொரு குழந்தைநும் முயிர்போ
லெங்க டம்மனத் துவகையால் வளர்ப்பதற் கிசைந்தோந்
திங்கள் வாணுத லளித்தியேற் செல்வமுஞ் செருக்கும்
பொங்கு மாநிதி தருகுவ மியாமெனப் புகன்றார்.
1.7.52
443 நன்று நும்மனத் தெண்ணிய வுவகையா னடுக்க
மின்றிக் கேட்பதெக் குழந்தைநீ ரியம்புமென் றிசைத்தார்
வென்றி மற்புயன் முகம்மது வெனப்பெயர் விரித்தார்
குன்று போன்முலை செவிசுட மனங்கொதித் திடவே.
1.7.53
444 புகன்ற புன்மொழி போதுநும் பதிபுகப் போது
மிகழ்ந்தி ருந்திராற் பழிவரு மூரிலெம் மினத்தார்
திகழ்ந்தி ருப்பவ ரறிகிலர் கேட்கிலோ செகுப்ப
ரகந்த னைப்புற மிடுஞ்செலும் போமென வறைந்தார்.
1.7.54
445 காட்டி னிற்புஜ விளைந்தகா ரணத்தையும் ஹபஷா
நாட்டி லுற்றவர் கேட்டகா ரியங்களு நறவூ
ரேட்டி லங்கிதழ்ப் பதத்தலி மாமனத் தெண்ணிக்
கூட்டித் தாயிடஞ் சேர்ப்பதே கருத்தெனக் குறித்தார்.
1.7.55
446 வருட மைந்துமோர் திங்களுஞ் சென்றது மக்கா
புரம டைந்தியா முகம்மதைப் புகழொடும் பொருவில்
அரிவை யாமினா வகத்திடைப் புகுத்தலே யறிவென்
றுரைத ரத்திற லாரிது மனங்களித் துவந்தார்.
1.7.56
447 மாத வமுகம் மதும்வரி விழியலி மாவுங்
கோத றுந்துணை வரும்வழித் துணையுடன் கூடித்
தீது றுங்கொடும் பாலையுங் குறிஞ்சியுஞ் சேர்ந்த
பாதை யின்றரு நிழலிளைப் பாறினர் பரிவாய்.
1.7.57
448 இறங்கி யங்கிருந் தெழுத்நிட நினைக்குமந் நேரம்
பிறங்கு மோர்கர நீடரக் கண்டனர் பெரிதா
யறங்கி டந்தொளிர் முகம்மதை காண்கில ரலிமா
மறங்கி டந்தவேற் கட்கடன் மடைதிறந் தனவே.
1.7.58
449 என்ன மாயமிங் கென்னென நெட்டுயிர்ப் பெறிந்து
வன்ன மென்மலர்க் கரநெரித் துதரத்தில் வைத்துத்
துன்னு பூங்குழல் விரிதரச் செவ்விதழ் துடிப்பக்
கன்னி மாமயில் கலங்கினர் புலம்பி கதறி.
1.7.59
450 படியின் மீதினி லோடுவர் தேடுவர் பதறிக்
கடிதிற் கன்முழை முட்செறி பொதும்பினுங் கவிழ்ந்து
நெடிது நோக்குவர் செடியறக் கிளறுவர் நிகரில்
வடிவு றும்மக வேயெனக் கூவுவர் வருந்தி.
1.7.60
451 வெய்ய கானிடை நீங்கவுங் காண்கிலன் வேறோர்
கைய லாற்பினைப் பிறரெடுத் தேகவுங் காணே
னுய்யு மாறினி யேதென வுலைந்துட லொடுங்கி
அய்ய கோமக னேவிதி யோவென வழுதார்.
1.7.61
452 கவச வல்லுரங் கீண்டவர் வஞ்சனைக் கருத்தோ
ஹபஷி மாநசு றானிகண் மாயமோ வலது
புவியிற் பூதங்க ளலகைகள் செய்தொழிற் பொருளோ
வெவர்க ளிவ்விடர் செய்தவ ரெனமன மிடைந்தார்.
1.7.62
453 வஞ்சி மெல்லிடை வாட்டமு நடுக்கமும் வாசக்
கஞ்ச மென்முகக் கோட்டமுங் கண்ணினீர்க் கவிழ்ப்புங்
கொஞ்சு மென்மொழி குழறிடப் புலம்பிய குறிப்பு
மஞ்சி நின்றதும் பயந்தொடுங் கியவர லாறும்.
1.7.63
454 கரிய பூங்குழல் சென்னிறப் பூழ்தியிற் கரந்து
விரித ரக்கிடந் தொளிருமெய் பதைத்துவாய் வௌிறி
யெரியு நெய்யிடை யிட்டபைந் தளிரென விருந்த
வரிவை தன்வயி னெறிசெலும் பேர்கள்கண் டடைந்தார்.
1.7.64
455 ஏது வந்தவை யென்றடைந் தவர்சில ரியம்பக்
கோதை யீரென துறுகுலக் களிறொரு குழந்தை
தீதி லாப்பெயர் முகம்மது வெனுஞ்சிறு வரையிப்
பாதை யின்னிழந் தேன்கொடி யேனெனப் பகர்ந்தார்.
1.7.65
456 கேட்ட பேர்கடம் மனம்பயந் தறக்கெடி கலங்கிக்
காட்டி னிப்பெரும் புதுமையைக் கருத்தினிற் றௌிந்து
மூட்டும் வல்வினை பிரித்திட முடித்தவன் முறையாய்க்
கூட்டி விப்பதும் வலியதோ கூட்டுவன் கோதாய்.
1.7.66
457 எனவெ டுத்தநன் மொழிகளா லிவர்கருத் தியைய
நனைத ருங்குழன் மடந்தையர் தேற்றியு நடுக்கந்
தினையி னவ்வள வாயினுந் தேறிலர் தியங்கு
மனைய காலையில் விருத்தனென் றொருத்தன்வந் தடைந்தான்.
1.7.67
458 கையி லூன்றிய தடியுமோர் கயிற்கவி கையுமாய்
மெய்யெ லாநரம் பெழுந்துல ரியவிரி திரையாய்த்
துய்ய நூல்விரித் தனநரை துலங்கிடக் கூனி
நையு மென்றலை நடுக்கொடு மெலமெல நடந்தே.
1.7.68
459 வந்து தோன்றிய முதியவ னரிவைநின் மனத்தி
னொந்தி ருந்தவா றேதெனப் பூஙொடி நுவன்றார்
கந்த டர்க்கயக் களிறெனு முகம்மதைக் கானிற்
சிந்தி னேனுயிர் சிந்தவு நினைத்தன னெனவே.
1.7.69
460 திருந்து மென்மலர்க் கொடியிடை கேட்டிநின் சிந்தை
வருந்த னின்றிரு மகன்முகம் மதுவையிவ் வழியிற்
பொருந்தக் கூட்டுறுந் தெய்வமொன் றுளதியாம் புகுந்தங்
கிருந்து கேட்குவம் வம்மென நன்மொழி யிசைத்தான்.
1.7.70
461 விருத்த னம்மொழி யியம்பிட விளங்கிழை யலிமா
கருத்தி லுற்றிவை யறிகுவ மெனநடுக் கானிற்
குருத்த செங்கதி ருதித்தெனக் கொடுமுடி யியற்றி
யிருத்து மாலயத் தேகின ரவன்மொழிக் கிசைந்தே.
1.7.71
462 முருகு லாங்குழன் மடந்தையர்க் காய்நரை முதியோன்
செருகு பொன்மலர்க் கோயிலிற் காவணத் தினினின்
றுருகு தன்மனப் பயத்தொடும் வாய்புதைத் தொதுங்கிப்
பொருவி லாமணி யேமுத் லேயெனப் புகழ்ந்தான்.
1.7.72
463 போற்றித் தெண்டனிட் டெழுந்தொரு வரமெனப் புகன்று
கூற்ற டர்ந்தவேல் விழியௌி யவளிவள் குழந்தை
மாற்ற லர்க்கரி வடிவுறும் பெயர்முகம் மதுவை
யாற்றி னிலிழந் தாளருள் வாயென வறைந்தான்.
1.7.73
464 மாது தன்மகன் முகம்மது வெனும்பெயர் சிலையின்
காதி னுட்புகக் கருத்துறக் கலங்கிமெய் நடுங்கிப்
பாதை யிற்புகு முதியவன் பதமலர் கெதியா
மோதி வீழ்ந்தது முகந்தரை படமுனங் கியதே.
1.7.74
465 சிலைம ருண்டது கண்டலி மாமனந் திடுக்கிட்
டலைவி னோடற நரைமுதி யவன்முக நோக்கிக்
கொலைகொ னீசெலு நெறிகுறு கெனக்கொழுங் கமலத்
திலையின் மேனடுத் துளியென வழியினின் றிடைந்தார்.
1.7.75
466 இந்த நாளையிற் றேவத மவன்பெய ரியம்ப
வந்த போதினிற் றலைமுகங் கவிழ்ந்தது மடவா
யுந்த மைந்தனுக் குடையவன் வேறுள னொருவ
னந்த நாயக னிடத்தினி லறைகென வகன்றான்.
1.7.76
467 ஆற்றி ருந்தெழுந் திருகையுஞ் சிரசினி லாக்கித்
தூற்றும் வேல்விழி நீரிடுஞ் சுவடுகண் மறைப்ப
நாற்றி சையினுங் கண்மலர் பரப்பிட நடந்து
தேற்று நன்மறை மக்கமா நகரினைச் சேர்ந்தார்.
1.7.77
468 அபுதுல் முத்தலி பெனுமர சணிமனை யடுத்துச்
சுவன நாயகக் குரிசிலை வழியிடை தோற்றிப்
புவியிற் றோன்றிய துன்பமு முதியவன் புகலச்
சவிகெ டப்பெருந் தேவதந் தரைபடிந் ததுவும்.
1.7.78
469 மரும லர்த்தொடைத் தடம்புயர் செவிமடற் றுளையிற்
றிருக வெந்துதீ யுமிழ்ந்தவே றிணித்தன சிவணக்
கருகி யீரலுஞ் சிந்திடத் தௌிமனங் கலங்கி
யுருகக் கூறின ரூற்றெடுத் தொழுகுநீர் விழியார்.
1.7.79
470 பழுதி ருந்தசொற் கேட்டலும் படர்ந்தசெந் நெருப்பி
லொழுகு மென்மெழு காயுறு கருத்தழிந் துடைந்து
கொழும டற்செழுங் கமலமென் மலர்முகம் கூம்பி
யழுது சஞ்சலத் துறைந்தன ரப்துல்முத் தலிபு.
1.7.80
471 கலவை மான்மத மார்பகஞ் சிவந்தகட் டரளங்
குலவ வந்தவை யெவைகொலென் றினத்தவர் கூற
மலையெ னுந்திடக் கடக்கரி யுதிரம்வாய் மடுத்துண்
டுலவு வேற்கர ருற்றவை யனைத்தையு முரைத்தார்.
1.7.81
472 மலைய டங்கலுந் தடவியும் வனத்தினை வகிர்ந்துந்
தொலைவிற் றீவினுஞ் சுற்றியு முகம்மதைத் தொடர்ந்து
நிலைத ருங்கதிர் படுமுனந் தருகுவ நுமது
நலித லைத்தவிர் மெனத்திசை திசைதொறு நடந்தார்.
1.7.82
473 பரற்செ றிந்தகா னிடத்தினும் பருப்பத நெறியும்
விரற்பு குந்திடா வனத்தினும் வேறுசிற் றூரு
மிரைத்த பீடிகை மாடமா நகரிக ளெவையு
நிரைத்துத் தேடியுங் காண்கில மெனநிகழ்த் தினரே.
1.7.83
474 அகந்த யங்கிமெய் மறந்தெழி லப்துல்முத் தலிபு
வகிர்ந்து பேரொளி திருந்திட விரிந்தகஃ பாவிற்
புகுந்து சுற்றிவந் தடிபணிந் திறைஞ்சிவாய் புதைத்து
நெகிழ்ந்த நெஞ்சினோ டாகுலத் தயருமந் நேரம்.
1.7.84
475 தரையில் வானகத் திருந்திறங் கியதொரு சத்தம்
விரைக மழ்ந்திடுங் ககுபத்துல் லாவிற்றென் மேல்பா
னிரைம லர்த்தடத் தோடையின் வாழையி னிழற்கீ
ழரிய மாமறை முகம்மதங் கிருப்பதென் றதிர்ந்தே.
1.7.85
476 அந்த ரத்தினின் முழங்கிய மொழிவழி யறிந்து
சிந்தை கூரவத் திசையினிற் சிலருடன் செலும்போழ்
திந்து தண்கலை யெண்ணிரண் டுடனிறைந் திறங்கி
வந்தி ருந்ததொத் திருந்தன ரெழின்முகம் மதுவே.
1.7.86
477 கதலி நீழலி லிருந்தொளிர் குரிசிலைக் கண்டென்
மதலை தம்மிரு கண்மணி யேமுகம் மதுவே
யதிரு மைக்கடற் றரளமே யெனவட லரச
ரிதய மீதுறக் களித்துத்தம் மிருகரத் தெடுத்தார்.
1.7.87
478 அடைய லர்க்கரி யேறெனு மப்துல்முத் தலிபு
கொடிமி டைந்தசை புரிசைசூழ் நகரினைக் குறுகிக்
கடிம லர்க்குழ லாமினா செழுமலர்க் கரத்தில்
வடிவின் மிக்குயர் முகம்மதைக் கொடுத்தனர் மகிழ்ந்தே.
1.7.88
479 கண்ணி ருந்தொளிர் மணியெனக் கண்டுகண் களித்துட்
புண்ணி ருந்தென விடுந்திடுந் துன்பமும் போக்கி
வண்ண வார்குழ லாமினா முகம்மதை வாழ்த்தி
யெண்ண மொன்றுநம் மிடத்திலை யெனச்சிறந் திருந்தார்.
1.7.89
480 அடர்ந்த செவ்வரிக் கொடிபட ரரிவிழி யலிமா
தொடர்ந்த தன்மனத் திருட்களி வாளினாற் றுணித்து
மடந்தை யாமினா மனையினில் வரமலர்க் கரத்தா
லிடம்பெ றத்தழீஇ யிருவரு மொருவரா யிருந்தார்.
1.7. 90
481 போது லாங்குழ லாமினா வெனுமணிப் பூவைச்
சாதெ னுங்குலத் தாரலி மாவுறத் தழுவி
யாத ரத்தொடு முகம்மதை யெடுத்துமுத் தாடிச்
சீத வொண்பொழிற் குனைனெனும் பதியினைச் சேர்ந்தார்.
1.7.91
இலாஞ்சனை தரித்த படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 7-க்குத் திருவிருத்தம்...481
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.8. புனல் விளையாட்டுப் படலம்

482 அலத்தக மலர்ப்பதந் தாமி னாவெழிற்
சிலைத்தடப் புயமுகம் மதுமெய்ச் சீர்பெறக்
கலைத்தட மதியென வளரக் கண்டுறு
நலத்தரு கண்களித் திருக்கு நாளினில்.
1.8. 1
483 பொறிநிக ராமினா வென்னும் பூங்கொடி
யறிவக முகம்மதைக் கூட்டி யாதிநூ
னெறிதரு மக்கமா நகரை நீங்கியே
செறிவள மதினமா நகரிற் சென்றனர்.
1.8.2
484 தன்னுயி ரனையமுன் னவரிற் சார்ந்தவர்
பொன்னடி வணங்கிய பொருவி றங்கையை
யென்னுயி ரென்னுயி ரெனத்தழீ இக்குல
மன்னுயிர் முகம்மதை யெடுத்து வாழ்த்தினார்.
1.8.3
485 பிடிநடை யமினா பெரிய தந்தைதம்
வடிவுறு மைந்தரு மன்னு சின்னையர்
குடிவளர்த் திடுங்குலக் கொற்ற வேந்தரு
மடிகளென் றகுமதி னடியைப் போற்றினார்.
1.8. 4
486 அனநடைச் சின்மொழி யாமி னாதிருத்
தனையருந் தம்பிய ரியாருந் தன்குல
மனைமயி லனைவரு மனம கிழ்ச்சியாற்
கனைகட லமுதென நபியைக் காமுற்றார்.
1.8.5
487 இப்பெரு முவகையுற் றிருப்ப மன்னெறிக்
கொப்பரு மதீனமென் றோது மூரிடைத்
துப்புறழ் மதுரவாய்ச் சிறுவர் சூழ்தர
மைப்புயன் முகம்மதோர் வாவி நண்ணினார்.
1.8.6
488 பண்ணரு மறைநபி பாரிற் றோன்றிய
நண்ணிய புனல்விளை யாட நாடுநா
ளெண்ணுற வடுத்ததென் றிறங்கி வானதி
மண்ணினிற் குடியிருந் தனைய வாவியே.
1.8.7
489 வடுவிழித் தடமுலை யார்கண் மாமத
னடறரு முசைனயி னார்தம் மாருயிர்க்
கடகரி யெனுமபுல் காசிம் செல்வம்போ
லிடனறப் பெருகியங் கிருந்த வாவியே.
1.8.8
490 சேடுறு முகம்மது செவ்வி வாய்ப்பநீ
ராடுவ திஃதென வாவி யம்புயம்
பாடுறு மாசணு காது பைந்துண
ரேடலர் போர்வைபோர்த் திருந்த தொத்ததே.
1.8.9
491 கரைதவழ் தென்றலங் காலி னால்விரை
சொரிமலர் வாவிநீ ரசைந்து தோன்றுவ
தரிதிரைக் கரங்களிற் சங்க மார்த்திட
விருகரை முத்தெடுத் தெறிதல் போலுமே.
1.8.10
492 தேன்மலர்ச் சண்பகஞ் செறிந்த நீழலும்
பானிறக் கதிர்மணற் பரப்பு மன்னமுஞ்
சூன்முதிர் குடவளைத் தொனியும் வைகிய
கான்மலர் வாவிகண் களிப்ப நோக்கினார்.
1.8.11
493 மணிமுர சதிரறா மதீன மாநகர்த்
திணிபுய வரசர்கள் செல்வ ரியாவரும்
பணிமணி முகம்மது நிறைந்த பங்கயத்
தணிதிகழ் வாவிநீ ராட லுற்றனர்.
1.8.12
494 நிறைதட மசைதலா னிகரி லாமுத
லிறையவன் றூதர்தம் மிடத்தின் மூழ்குறக்
குறைபடா வரியமெய் குளிரு மோவென
நறைபுனல் கலங்கியுண் ணடுங்கல் போன்றதே.
1.8.13
495 பம்புநீர் வாவிகண் குளிர்ந்திப் பாரிடை
யெம்பெரு மானம திடத்தின் மூழ்கலாற்
செம்பொனா டவர்க்குறாச் சீர்பெற் றோமெனக்
கம்பித மம்புயக் கரங்கள் காட்டுமே.
1.8.14
496 தங்கிய புனலிடை குளிப்பத் தத்துநீ
ரெங்கணுங் கரைதவழ்ந் திழிந்து தோன்றுவ
கங்கைதன் னுள்ளகங் களிப்புற் றானந்தம்
பொங்கியே யுடற்புறம் பொசிவ போன்றதே.
1.8.15
497 வடிவுறு முகம்மது வாவித் தண்புன
லிடைகுளித் துயர்தர விலங்கும் வாண்முகம்
படிமிசை யாயிரங் கலைகொள் பான்மதி
கடலிடை முளைத்தெழுங் காட்சி போன்றதே.
1.8.16
498 வருந்திமெய் நடுக்கொடு மரைகண் மூழ்குவ
தருந்தவப் பேறெனு மகும தின்றிருக்
கருந்தடங் கண்முகந் தாள்கைக் கொப்பெனப்
பொருந்துறோ மெனவனம் புகுதல் போன்றதே.
1.8.17
499 அகுமது வாவிநீ ராடல் காண்டலுஞ்
சகமகிழ் தடக்கரைத் தருக்க டேமலர்
வகைவகை சொரிந்தன வெற்றி வானவர்
புகழொடும் பொன்மலர் பொழிவ போன்றவே.
1.8.18
500 மதுமலர்த் தேனையுண் டிருந்த வண்டினம்
புதுமணச் சுரும்பொடு மிசைத்த பொங்கிசை
சதுமறை முகம்மது தழைத்து வாழ்கவென்
றதிவிதப் புகழெடுத் தறைத லன்னதே.
1.8.19
501 பின்னிய தடத்தரு சினையிற் பேடொடு
மன்னிய குயிலினம் வாய்விட் டார்ப்பது
கன்னலஞ் சுவைக்கலி மாவை நந்நபிக்
கின்னண மியம்புமென் றிசைத்தல் போலுமே.
1.8.20
502 பொன்முடி வேந்தர்கள் புதல்வர் தம்மொடு
மன்னவர் முகம்மதும் வாவி நீர்குளித்
தன்னமென் றூவியி னரிய வெண்டுகின்
மின்னினைப் பொதிந்தென வரையில் வீக்கினார்.
1.8.21
503 கணமணிக் கலன்பல வணிந்து கள்ளறா
மணமலர் மாலிகை சூடி வான்றொடு
பணர்தரு பாசடைத் தருவின் பாலுயிருத்
துணைவரோ டரியெனத் தோன்றல் வைகினார்.
1.8.22
504 வரிவளைத் தடம்புனை மதீன மாநகர்க்
குரியவர் குபிரினி லுறையெ கூதிக
ளரிதினிற் றடக்கரை யடுத்துப் பூமழை
சொரிதல்கண் டகுமதைச் சூழ்ந்து நோக்கினார்.
1.8.23
505 பாலுறச் செழுங்கதிர் பரப்பி மென்கணைக்
காலுற வளர்ந்தசெங் கரமும் பொன்மலை
போலென வீங்கிய புயமு மாமுகக்
கோலமுங் காட்சியென் றுணர்ந்து கூறினார்.
1.8.24
506 மண்ணகத் துதித்தமா னுடன்கொ லோவலால்
விண்ணகத் தமரர்கள் வேந்த னோவென
வெண்ணிய வெண்ணகத் தடங்கி லாவெழி
லண்ணலைப் பார்த்தடுத் தைய முற்றனர்.
1.8.25
507 முத்திரை யொன்றுள முழுது மெய்யினிற்
பத்திவிட் டொளிர்வன பாதம் பாருறாச்
சித்திர நீழலுந் தெரியக் காண்குறா
வித்திற நபியெனத் துணிந்தி யற்றினார்.
1.8.26
508 பூரண மதியமே போலவ் பின்னைநாட்
டாரணி தனினபி வருவர் சான்றென
வாரணத் துணர்ந்தறிந் தறிஞர் கூறிய
காரணக் குறிப்பிவர் காணுங் காணென்றார்.
1.8.27
509 கண்டவர் கேட்டவர்க் குரைப்பக் காதினிற்
கொண்டவர் கருத்தினிற் குறித்து சாவுவ
ரண்டர்நா யகநபி யுண்டென் றாதிநூல்
விண்டது தவறுறா மெய்யென் றோதுவார்.
1.8.28
510 தேந்தரு தடத்தரு விடுத்துச் செம்மலு
மாந்தர்கண் களிப்புற மனையிற் புக்கபி
னேந்தெழி லாமினா வினமு மாயமுந்
தாந்தம துளங்களி னெண்ணஞ் சாற்றுவார்.
1.8.29
511 நபியெனு மொருவர்பின் னாளிற் றோன்றியிப்
புவியிடை வருவரென் றோதிப் போந்தவ
ரிவரெனக் குறித்தன ரினியிவ் வூரிடைக்
கவர்மனக் காபிர்கள் கொடியர் காணென்றார்.
1.8.30
512 குருத்திறன் முகம்மதைக் குடியிவ் வூரிடை
யிருத்துதல் பழுதுநம் மினத்த ரியாவர்க்கும்
பொருத்தமில் லெனமனம் புழுங்கித் தங்குலத்
திருத்திழை யாமினா வறியச் செப்பினார்.
1.8.31
513 தம்பியர் தனையர்சொற் கேட்டுத் தம்முளம்
வெம்பியே யாமினா மிகவி சாரமிட்
டம்பினை யடர்ந்தகண் ணாலி சிந்திட
நம்பியை நோக்கித்தந் நகரை நாடினார்.
1.8.32
514 இனத்துளார் தங்கடம் மிதயத் துள்ளுயிர்ப்
புனக்கொடி துன்புறப் புந்தி கூர்தர
நினைத்தநன் மொழிபல நிகழ்த்திப் பங்கய
நனைத்தட மக்கமா நகர்க்க னுப்பினார்.
1.8.33
515 விட்டொளிர் விளங்குமி னாமி னாநறுங்
கட்டழ ககுமதை நடத்திக் கள்ளறா
வட்டிலை முள்ளரை வனச வாவியு
நெட்டிலை முளிக்கழைக் காடு நீந்தினார்.
1.8.34
516 கொடியிடை யாமினா வென்னுங் கோதையோர்
பிடியென வனமெலாம் பெருக மான்மதக்
கடிகமழ் முகம்மதோர் கன்றும் போலவே
யடவிவிட் டகன்றபு வாவி லாயினார்.
1.8.35
517 கருவிளை வரிவிழிக் கன்னி யாமினா
வரியமெய் நடுக்கமுற் றவலித் தேங்கவே
சுரமென வொருபகை தோன்றித் துக்கமுற்
றிரவலர் போற்றனி யிறந்திட் டாரரோ.
1.8.36
518 அரசர்நா யகநபிக் காண்டோ ராறுட
னொருதிருத் திங்களு நிறைந்த தோதிய
வரிதினிற் கணக்கிலக் காக வாண்டுமோ
ரிருபஃ தாமினா விறந்த காலமே.
1.8.37
519 தாயிறத் தலுமனஞ் சலித்துச் சஞ்சலத்
தீயினிற் கிரிமியிற் றிடுக்கிட் டேங்கியே
மாயிரும் புவியிடை தனித்து மன்னுயிர்
போயின தெனநி னைவறப் புலம்பினார்.
1.8.38
520 சிறுகுடி யெனமபு லாவிற் சேர்ந்தவர்
மறைநபி முகம்மதின் வாட்டந் தேற்றியே
குறைவறாக் கற்பெனுங் கோதை மாதினை
யறைமறை முழக்கொ டும்மெடுத் தடக்கினார்.
1.8.39
521 ஒலிபுனற் றடத்தபு வாவி லுள்ளவர்
கலியிரு டுரந்தசெங் கவிகை வள்ளறந்
நலிதலைப் போக்கிமக் காவை நாடியே
வலிதனிற் பாசுரம் வரைந்திட் டாரரோ.
1.8.40
522 சிலைநுத லாமினா விறந்த செய்தியின்
மலைவுறு வாசகங் கண்டு வாய்புலர்ந்
தலைகுலைந் தப்துல்முத் தலிபு மன்றுதந்
நிலைதடு மாறியுள் ளறிவு நீங்கினார்.
1.8.41
523 மனத்துலை கவலையை மாற்றித் தம்முயி
ரினத்தவர் சிலர்தமக் கிசைந்த வாசக
மனைத்தையு முரைத்தபு வாவிற் போய்நபி
தனைச்சிறு பொழுதினிற் றருதி ரென்றனர்.
1.8.42
524 வில்லுற விசைத்தெறி சரத்தின் வேகமா
யொல்லையிற் சிலரபு வாவிற் லோடியே
மல்லுறு புயமுகம் மதுவைக் கண்டுநற்
சொல்லொடுந் தேற்றியுட் டுயர மாற்றினார்.
1.8.43
525 மதிமுக முகம்மதை மக்க மாநகர்ப்
பதியினிற் கொடுவரப் பார்த்துச் சிந்தைகூர்ந்
ததிசயித் தப்துல்முத் தலிபு மாமலர்
பொதிதரு தடப்புயம் பொருந்தப் புல்லினார்.
1.8.44
526 மண்ணினிற் பதமுறா வள்ள றம்மைதங்
கண்ணெதிர் விட்டக லாத காட்சியா
யெண்ணியுள் ளகத்தினி லிருத்தி யெங்குலப்
புண்ணிய மிதுகொலென் றுவந்து பூரித்தார்.
1.8.45
527 இலைமலர் கிழிந்துதே னிழிய வாய்மடுத்
தலகில்வண் டுண்டுபண் ணார்க்குந் தார்ப்புயர்
கலைதெரி ஹபீபுல்லா வென்னுங் காளைதந்
நிலைபெற வாண்டொரே ழாநி றைந்தவே.
1.8.46
528 கனைகுரன் மும்மதக் களிற்றின் மத்தகச்
தினையுறக் கீண்டுயிர் குடிக்குஞ் சீயமே
யனையவ ரப்துல்முத் தலிபு தந்திரு
மனையர செனநபி வளரு நாளினில்.
1.8.47
529 தழையறக் கருகிநீர்த் தடங்கள் வற்றிமெய்க்
குழைவொடு கானலைக் குறித்து நீரென
வுழையின மோடியுள் ளொடுங்கப் பாரிடை
மழையறச் சனமெலா மறுக்க முற்றதே.
1.8.48
530 புவியிடை மழைபொழி யாத நோவினா
லப்துல்முத் தலிபெனு மரசர் நாயகர்
நபிதமைக் கூட்டிமுன் னடத்தி யாங்கொரு
தவிசெனு முரம்புறு தலத்தி ருத்தினார்.
1.8.49
531 இருகையு நபிதமை யேந்தச் சொல்லித்தம்
மிருகர நபிதிருக் கரத்தை யேந்தியே
யிருவரு மிரங்கிநின் றிரந்து நோக்கவே
யிருவிசும் பிடைமழை யிறைத்த தெங்குமே.
1.8.50
532 பாரின்ற் பெரும்புனல் பரந்த செல்வமித்
தாருடை முகம்மதின் பறக்கத் தாலென
வூரினிற் றலைவருக் கியம்பி யுண்மகிழ்ந்
தேர்பெறு மப்துல்முத் தலிபி ருந்தனர்.
1.8.51
533 நறைபொழில் ஹபுசுநன் னாட்டின் சேனையை
அறபிகள் பொருதுவெ றோரென் றோதிய
திறனறு செய்திகேட்டிதுவுஞ் செவ்விநூ
லிறைநபி பொருட்டலா திலையென் றோதினார்.
1.8.52
534 நபிதிரு வயதிரு நான்குந் திங்களுங்
கவினுற விரண்டுசென் றதற்பின் காணுநாட்
புவியினிற் பத்துறப் பொருந்தும் போதினி
லபுதுல்முத் தலிபுமே லுலக டைந்தனர்.
1.8.53
535 விறகரத் தபுதுல்முத் தலிபு மேலுல
கிற்புகுந் தாரென வினமு மக்களுங்
கற்புடை மகளிருங் கமல வாண்முகம்
பொற்பறப் புடைத்தழு தேங்கிப் பொங்கினார்.
1.8.54
536 விதிமறை நூலவர் விருத்தர் மன்னவ
ரிதமுற வந்தடுத் திரங்கும் பேர்க்கெலா
மதிபல சொல்லியுட் புழுக்க மாற்றியே
யதிவிதத் துடனெடுத் தடக்கி னாரரோ.
1.8.55
537 சடங்குள தெவ்வையுந் துடைத்துத் தங்குல
மடங்கலே றனையவர் கூண்டு மாசிலாத்
தடம்புய முகம்மதை வளர்க்கத் தக்கதோ
ரிடம்பெறு மனத்தவ ரெவரென் றோதினார்.
1.8.56
538 அம்மொழி கேட்டபித் தாலி பாகிய
மும்மதக் கரியுயிர் முகம்ம துக்கினி
யெம்மனை யலதுவே றிடமுண் டோவெனச்
செம்மலர்க் கரத்தெடுத் தணைத்துச் சென்றனர்.
1.8.57

புனல் விளையாட்டுப் படலம் முற்றிற்று.

ஆகப்படலம் 8-க்குத் திருவிருத்தம் ..538
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1..9 புகைறா கண்ட படலம்

539 மலையெ னத்திரட் புயரபுத் தாலிபு மனையி
லலைக டற்புடை வருமுழு மணியகு மதுவு
நிலைத ரித்தவெண் கதிட்மதி நிகரென வளர
வுலைவில் செல்வமும் வளர்ந்தன வொன்றுபத் தெனவே.
1.9. 1
540 சலத ரத்தைநேர் கரத்தபித் தாலிபு தம்பாற்
குலவு வீரமுங் கல்வியும் வெற்றியுங் குடியாய்
நலமு றப்புகுந் திருந்தன நாடொறும் வனசத்
திலகு செல்வியு மிவர்மனை முன்றில்வீற் றிருந்தாள்.
1.9.2
541 சுரபி யின்றிரள் கூன்றொறுத் திரளொடுஞ் சுரந்த
கரிய மேதியின் குலமொரு பெருங்கடல் கடுப்பப்
பெருகி யோங்கின கொறிகளும் பல்கின பிறரும்
பருகப் பாறயிர் குறைவறப் பெரும்பலன் படைத்தார்.
1.9.3
542 நான மெய்கமழ் வேதநா யகர்நம திடத்தி
லான தாலிவை பெற்றன மெனவக மகிழ்ந்து
வானு லாவுவெண் புகழபித் தாலிபு மன்னர்
தேனு லாம்பொழிற் சாமினிற் செலக்கரு தினரே.
1.9. 4
543 வெள்ளி வெண்டகட் டொளிர்நிலா வெறித்தமே னிலைக
ணள்ளி ருட்களி சீத்தெறி மக்கமா நகரிற்
கொள்ளும் பற்பல சரக்கெவை யவையெலாங் கொண்டு
தெள்ளி தாகித்தம் புறச்சரக் கறையையுந் திறந்தார்.
1.9. 5
544 ஏறு வாம்பரி யொட்டையி லெடுத்தெடுத் தேற்றிக்
கூற வல்லவ ரெவரவ ரவர்க்கெலாங் கூறி
யாற டுத்தொரு பொழில்புற விடுதிய தாகி
யூறு தேன்குழன் மனைவியர்க் கிவையெலா முரைத்தார்.
1.9.6
545 சொன்ன வாசகங் கேட்டலு முகம்மது துணுக்குற்
றென்னை யுங்கொடு ஷாமினுக் கேகுமென் றிசைப்பப்
பொன்னு நன்கதிர் மணியையும் போர்த்தெடுப் பவர்போல்
வன்ன வார்கழற் குரிசிலுக் குறுமொழி வகுத்தார்.
1.9.7
546 பாதை போவதும் வருவது மௌிதல பரற்கா
டேத முற்றது சுரத்திடை படுமிடர் கொடிது
காத நான்கினுக் கொருகர நீருறாக் கடுங்கான்
வாதை மிக்குள வருமொழி மறுமென மறுத்தார்.
1.9.8
547 தந்தை சொல்லிய சொல்லினுக் கரியகட் டரளஞ்
சிந்த நோக்கிய முகம்மது திருமுக நோக்கிப்
புந்தி நேர்ந்தனை தேற்றவுந் தெலிந்திலை புகழோ
யெந்த வாற்றினு நிற்பிரிந் தேகல னென்றார்.
1.9.9
548 குலத்த டக்கிளைத் தாமரைக் குழுவினி னாப்ப
ணலத்து தித்தெழுந் செழுமணி நபிகணா யகத்தைச்
சிலைத்த டப்புயர் வருகெனப் பணிபல திருத்தி
யிலைத்த டக்கதிர் வேலெடுத் தினத்துட னெழுந்தார்.
1.9.10
549 பார்த்தி வரபூ பக்கரும் பாதையர் பலரு
மேத்து மெய்ப்புகழ் முகம்மதைச் சூழ்தர வியைந்து
மாத்த டக்கரி கூன்றொறுச் சுமைதிசை மலியப்
பூத்த தாமரைக் கழனிவிட் டருநெறி புகுந்தார்.
1.9.11
550 காறு நீங்கியே முகம்மது வருவது கண்டு
மாறி லாதசந் தோடமு மொன்பதாம் வயதிற்
றேறி லாமனச் சிறுவனென் றெண்ணிய திடுக்கு
மூறு துன்பமு மின்பமு முடன்வர நடந்தார்.
1.9. 12
551 மடங்க லேறபித் தாலிபென் றோதிய மன்னர்
கடங்கொண் மும்மதக் கரிதிரி வனத்தையுங் கடந்து
சடங்க முங்கிய சடிலமு மிடபமுஞ் சாய்த்தே
யடங்க லுங்கொடு நடந்தொரு தலத்தினி லானார்.
1.9. 13
552 தக்க தோர்புசு றாவெனுந் தலத்தினிற் சார
மிக்க பேரொளி வெய்யவன் மேற்றிசைச் சார்ந்தான்
றிக்கெ லாந்துதி செயுமபித் தாலிபுஞ் செறிந்த
வொக்கல் சூழ்தர வின்னுயிர்ப் புதல்வரோ டுறைந்தார்.
1.9.14
553 ஆங்கி ருந்தனர் விடிந்தபி னத்தலத் தொருவ
னோங்கி மும்மறை நுண்பொரு ளனைத்தையு முணர்ந்து
தீங்கி லாதமுக் காலமுந் தௌிந்தறி திறலோன்
றாங்கு மில்லறந் துறவறந் தெரிந்தமா தவத்தோன்.
1.9. 15
554 நகையு றாவுறூ மெனும்பகுத் தறிவினை நாளும்
வகையு றாநசு றானிகள் குருக்களின் மதியோன்
புகையு றாவெனும் பெயரின னெத்திசைப் புறத்தும்
பகையு றாதசெம் மலர்முக முகம்மதைப் பார்த்தான்.
1.9.16
555 கண்டு நந்நபி மெய்யெழி லிருமலர்க் கண்ணா
லுண்டு தன்னகங் குளிர்தர வுடலெலாங் களிப்புக்
கொண்டு வீங்கினன் மறையினிற் கண்டதுங் குலத்தோர்
பண்டு சொற்றதுங் கேட்டதுங் கனவினிற் பயனும்.
1.9.17
556 வாய்ந்த முத்திரைக் குறியுஞ்செங் கரங்களின் வனப்புந்
தோய்ந்து சீரடி படியுறாப் புதுமையுஞ் சுடரால்
வேய்ந்த மெய்யின் மாசணு காததும் விறலோ
னாய்ந்து நன்னபி யிவரெனத் திடமுற வறிந்தான்.
1.9.18
557 அறிந்து ணர்ந்தபண் டிதனபித் தாலிபை யழைத்துச்
சிறந்த வாதனத் திருத்தித்தன் செவ்விதழ் திறந்து
பிறந்த் வூர்குல நும்பெய ரிப்பெரும் பெயரோ
டுறைந்த பிள்ளையின் பெயர்தெரி தரவுரை மென்றான்.
1.9. 19
558 ஆதி மாகமூர் கிளையது னான்குலத் தாசீ
மோது மியானபித் தாலிபென் பின்னவ னுயிரின்
போத ரத்தின னப்துல்லா தருதிருப் புதல்வன்
மாத வனிவன் பெயர்முகம் மதுவென வகுத்தார்.
1.9.20
559 பைத்த டப்பணி நௌிதர விண்டுகள் பரப்ப
மொய்த்த வொட்டையு மிடபமு முழக்கொடு நடத்தி
யெத்த லத்தினுக் கேகுவிர் நீவிரென் றியம்ப
வித்த கர்பொழில் ஷாமினுக் கெனவிளம் பினரே.
1.9.21
560 அரும்பு மென்மலர்த் தொடைதிரட் புயவபித் தாலிபு
விரும்பிச் சாமினுக் கெழுந்தன மெனவுரை விளம்பத்
தரும்பெ ரும்பயன் முகம்மதைச் சடுதியிற் கூட்டித்
திரும்பு நும்மனைச் சென்மென வுரைத்தனன் றிறலோன்.
1.9.22
561 வெடித்த மென்மலர்த் தேனையுண் டினவெறிச் சுரும்பு
படித்த பாட்டயர் பொழிறிகழ் ஷாமெனும் பதிக்குப்
பிடித்து நோக்கிய சரக்குட னெமையொரு பேச்சி
லடித்த லம்புக வுரைத்தசொல் லென்னென வறைந்தார்.
1.9.23
562 வாடி றத்தபித் தாலிபு நடுங்கியுள் வருந்திக்
கேட்ட போதினிற் புகையுறா வெனுமறைக் கிழவோன்
பூட்டும் விற்றடக் கரமுகம் மதுமைப் புகழ்ந்திந்
நாட்டின் மேல்வருங் காரண மனைத்தையு நவில்வான்.
1.9.24
563 ஆத மக்கடந் தலைமுறை யைம்பதின் பின்னர்
சோதி மாநபி வருவரிந் நாளெனத் துணிந்து
பேத மற்றவ ருரைத்ததுங் கண்டதும் பெரியோன்
வேதஞ் சொற்றது மிவரலாற் பிறிதுவே றிலையே.
1.9.25
564 கொலையெ ஹூதிகள் வன்னசு றனியின் குலத்தோ
ரலகில் கூட்டமுண் டப்பெரும் ஷாமினி லடைந்தாற்
றொலைவி றுன்புற வறக்கொடு வினையொடுந் தொடர்வர்
கலைவ தன்றிநும் மிடர்தவிர்த் திடுவதுங் கடிதே.
1.9.26
565 நபியு மிங்கிவ ரலதுவே றிலையிவ ணபிக்குத்
தவறெ டுத்தவர் முடித்திட நினக்கினுஞ் சாரா
நபியு மோமுதி யவரலச் சிறுவரா கையினார்
றவிரு நும்பதி புகுமென வுரைத்தனன் றவத்தோன்.
1.9. 27
566 உரைத்த வாசகங் கேட்டபித் தாலிப்தம் முளத்திற்
பொருத்த மீதெனச் சம்மதித் திருக்குமப் போதிற்
றிருத்து நந்நபிக் குறுபகை விளைத்திடச் சினந்து
நிரைத்தே ஹூதிகள் வந்தடைந் தனர்சிலர் நெருங்கி.
1.9.28
567 அடர்ந்து வந்துநின் றவர்முகக் குறிப்பையு மவரைத்
தொடர்ந்து மாயவன் சூழ்ச்சியுங் கொடுமனத் துணிவுங்
கடந்த வார்த்தையுங் கண்டுபண் டிதனகங் கறுத்து
ளிடைந்து நோக்கினன் றழற்கதி ரெழவிரு விழியால்.
1.9.29
568 கடுத்து நோக்கியங் கவருளங் கலங்கக்கட் டுரைக
ளெடுத்து ரைத்துநின் னபிதமை வாழ்த்துமென் றிசைத்து
விடுத்திர் நும்மன நினைவெனக் காபிர்கள் விரைவி
னடுத்த வல்வினைத் துணிவைவிட் டப்புற மகன்றார்.
1.9.30
569 ஈத லால்நசு றானிக ளெண்ணிலொன் பதுபேர்
சீத மென்றடம் புனைபுசு றாவினைச் சேர்ந்து
மாத வத்தின னறப்புறச் சாலையில் வந்து
கோத றப்பணிந் திருகரஞ் சிரத்தினிற் குவித்தார்.
1.9.31
570 வந்து கண்டவர்க் கின்புறு மொழிபல வழங்கி
யெந்த வூருளீ ரெவ்விடத் தேகுவிர் நீரென்
றந்த மிக்குறு பண்டிதன் கேட்டபி னடைந்தோர்
சிந்தை கூர்ந்துதம் வரவினை யெடுத்துரை செய்தார்.
1.9.32
571 அந்த மில்லவன் மும்மறை யுணர்த்திய தழகாய்
நந்த மார்க்கமுஞ் சமயமுங் கெடநமர் நலிய
வந்து தோன்றுவர் நபியென முகம்மதிவ் வருட
மிந்த மாதமிற் சாமினுக் கேகுவ ரெனவே.
1.9.33
572 கோதி லாமறை யுரைத்தசொ லுலத்தினிற் குறித்துச்
சூத மென்பொழில் வளைதரு ஷாமினைச் சூழ்ந்த
பாதை நான்கினு மொற்றரை யனுப்பியிப் பாதைக்
கேத மன்றிநும் பாலடைந் தோமென விசைத்தார்.
1.9.34
573 வடிவு றும்மறை யுரைத்தது முளதுமும் மறைக்கு
நெடிய வன்னபி யுதித்தவண் வருவது நிசமே
படிய திர்ந்திட நடந்தலைக் துலைந்துமெய் பதறக்
கடிதிற் றேடியே திரிவதெக் காரண மென்றான்.
1.9.35
574 முதிய வேதிய னுரைத்தலும் பகையென முளைத்துப்
புதிய தாய்நபி யெனவரி லவரைவிண் புகுதச்
சதிசெய் வோமென வந்தனஞ் சரதமென் றுரைத்தார்
மதியி லாதறை யிருளினு மிருண்டபுன் மனத்தார்.
1.9. 36
575 நிறைம திக்கதி ரெனவொரு நபியையிந் நிலத்திற்
குறைவி லாதவன் விதித்தனே னீவிர்நுங் குலத்துக்
கிறைவர் கூடியு மிடர்செயுங் கொடுங்கொலை யிருளான்
மறையு மோமறை யாதென வுரைத்தனன் மறையோன்.
1.9.37
576 சுடிகை மன்னவர் குலத்துறு தொன்மறை நபிக்குப்
படியி டத்திடர் நினைத்திடி லிம்மையிற் பழியுங்
குடிகு டித்தொறும் வழுவும் லாற்கொடு நரக
முடிவி லெய்துவ ரென்றன னீதிநூன் முறையால்.
1.9.38
577 வானர் முன்னினும் பின்னினுஞ் சுற்றியெவ் வழிக்கு
மீன மின்றியே திரிகுவ ரெண்ணிறந் தோர்க
ளான தாலொரு தீங்கிலை நபிக்கென வறைந்தான்
ஞான மூற்றிருந் தொழுகிட மொழிந்தசெந் நாவால்.
1.9.39
578 வச்சி ரத்தினி லெழுதிய வெழுத்தினை மாற்றப்
பச்சை மென்மல ரிதழ்கொடு துடைத்திடும் படிபோற்
செச்சை முங்கிய புயநபிக் குறுகொலை செயவே
யச்ச மின்றிநீர் துணிந்ததென் றறைந்தன னறிவால்.
1.9.40
579 வேத வேதிய னுரைத்தநன் மொழியெலாம் விரைவிற்
காதி னுட்புகுந் தெண்ணிய கருத்தினைக் கலக்கப்
பாத கப்பய னியாம்நினைத் தவையெனப் பயந்து
கோத றத்தௌிந் தார்நசா றாக்கடங் குலத்தோர்.
1.9. 41
580 பொருந்து மாதவன் செம்மலர் பொருவுசே வடியில்
விரிந்த செங்கரங் கூப்பியுண் மனவினை வெறுத்துத்
தருந்த வப்பய னும்மொழி யெனவெதிர் சாற்றித்
திருந்து நல்வழி கொண்டன ரவரவர் திசைக்கே.
1.9.42
581 முன்னர் மாமறை முதியவன் சொற்றபின் முறையா
யிந்நி லத்தெஹூ திகள்சில ரடைந்து மிடராய்
வன்னி தாநசா றாக்கள்வந் ததுவுமுள் ளகத்தி
லுன்னி னாரபித் தாலிபென் றொழுங்குறு முரவோர்.
1.9.43
582 நன்ன யம்பெறு முகம்மதை மக்கமா நகரிற்
கின்ன ணம்விடுத்து துதுமென வெழிலபித் தாலிப்
சொன்ன போழ்தினிற் பண்டிதன் முகமதி துலங்கி
யன்ன தேகருத் தாமெனக் களித்தக மகிழ்ந்தான்.
1.9. 44
583 வருதி யென்றெழின் முகம்மதைத் தவிசில்வைத் துயர்த்தித்
திரிகை யின்கனி மோதகத் தொடுசில வெடுத்துப்
பரிவி னிற்கொடுத் தணிமல ரடியிடைப் பணிந்து
பொருவின் மக்கமா நகரினிற் புகுமெனப் புகன்றான்.
1.9.45
584 சிசைசு மந்தொளிர் புயத்தபித் தாலிபு செழுங்க
மலைகு டிக்குறு மனியபூ பக்கரை வாழ்த்தி
நலனு றும்படி முகம்மதை மக்கமா நகரிற்
கலைவி னல்விழி கொடுசொலு மெனவனுப் பினரே.
1.9. 46
585 அண்ண லச்செழு மக்கமா நகரினுக் கனுப்பி
வண்ண வார்கழ லடலபித் தாலிபு மறையின்
பண்ண மைந்தவாய் முத்யவற் கிவையெலாம் பகர்ந்து
கண்ண கன்பொழிற் சாமினுக் கெழுந்தனர் கடிதின்.
1.9.47
586 குன்றுங் கானமு மடவியுஞ் சுரங்களுங் குறுகிப்
பொன்றி லாப்புகழ் ஷாமெனும் பதியிடைப் புகுந்தே
யொன்று நாலென வாணீபத் தொழின்முடித் தொடுக்கி
வென்றி கொண்டெழுந் தனரது னான்கிளை வேந்தர்.
1.9.48
587 எழுந்து ஷாமெனும் பதியைவிட் டிருஞ்சுரங் கடந்து
பொழிந்த சாரலிற் பொருப்பிட மனைத்தினும் பொங்கி
வழிந்து பாய்தரு மருவியுங் கண்டுள மகிழ்ந்து
செழுந்த டம்பொழின் மக்கமா நகரினைச் சேர்ந்தார்.
1.9.49
588 அறநெ றிக்குயி ராயபித் தாலிபு மடுத்தோர்க்
குறுபொ ருட்கொடுத் திரவலர்க் கின்னமு தூட்டி
யிறையிவ னன்மறை முதியவர் வேட்டவை யீந்து
மறுவில் வண்புகழ் முகம்மதை யினிதொடும் வளர்த்தார்.
1.9. 50
589 கான றைப்பொழில் சூழ்தரச் சிறந்தமக் காவிற்
றான வன்னரு டழைத்தெழு முகம்மது தமக்கு
வானர் வந்திரு செம்மல ரடியிணை வருட
வான நல்வய தொருபதினன்குசென் றனவே.
1.9.51
590 அந்த நாளினின் மக்கம நகரினை யடுத்து
வந்த தோர்படை கயிசென வரும்பெருங் கூட்டந்
தந்த மில்விடுத் தனைவரு மோரிடஞ் சார்ந்து
சிந்தை நொந்துவன் மறமற வொடுங்கினர் திகைத்தே.
1.9.52
591 கலக்க முற்றவ ரெவரெவ ரெனச்சிலர் கடுத்து
நலக்க முற்றிடப் பொருகுவ மியாமென நவில்வார்
நிலைக்கு மோநிலை யாதுநம் படையென நிகழ்வா
ரலக்க ழிந்தொரு மொழியுரைத் தனரனை வருமே.
1.9.53
592 சந்த மான்மதங் கமழ்புய வப்துல்லா தவத்தால்
வந்த பேரொளி வெற்றிவெம் புலிமுகம் மதுவை
நந்த மூரவ ரினப்படை யுடன்கொடு நடந்தா
லிந்த வல்வினைப் பகையிடர் தவிர்ந்திடு மெனவே.
1.9.54
593 நன்று நன்றென இபுனுசுத் ஆனுநந் நபியுந்
துன்று வெம்படைத் தலைவரும் பரியுடன் சூழக்
குன்று லாவுகொ ளரிக்குலக் குறைஷிக ணடந்து
சென்று தாக்கினர் கைசெனும் படைதெறித் ததுவே.
1.9.55
594 தருவே னத்தரு முசைனயி னார்தரு மதலை
திருவு லாவிய புயனபுல் காசிஞ்செங் கரத்தாற்
பொருள்வ ரப்பெறு மவர்கலி யுடைந்தது போல
வெருவி யோடின கைசெனும் படைமிடை மிடைந்தே.
1.9.56
595 மாறு கொண்டகை செனும்படை தெறித்திட வயவர்
பேறு கொண்டனம் வெற்றியுங் கொண்டனம் பெரியோன்
வீறு கொண்டநன் முகம்மதின் பொருட்டென வியத்தி
யாறு கொண்டன ரூரடைந் தனரனை வருமே.
1.9.57
596 பண்டு நாட்டொடுத் திற்றைநாள் வரைக்குமப் படையைக்
கண்டு நாமுறிந் தனமலால் வெற்றிகண் டறியோம்
வண்டு வாழ்மலர்த் தொடைப்புய முகம்மது வரலாற்
கொண்ட வெற்றிபோல் வெற்றிவே றிலையெனக் குறித்தார்.
1.9.58

புகைறா கண்ட படலம் முற்றிற்று

ஆகப் படலம் 9-க்குத் திருவிருத்தம்...596

This file was last revised on 19 March 2003
Please send your comments to the
webmasters of this website.