"tamiziyakkam" by pAvEntar pAratitAcan
in Tamil script, unicode/utf-8 format

தமிழியக்கம் - பாவேந்தர் பாரதிதாசன்




Etext Preparation, Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com

© Project Madurai 1999-2000
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


tamiziyakkam" by pAvEntar pAratitAcan

தமிழியக்கம் - பாவேந்தர் பாரதிதாசன்

1. நெஞ்சு பதைக்கும் நிலை

கரும்புதந்த தீஞ்சாறே, கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை
அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி
இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து
வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல வாய்ப தைக்கும். 1

எடுத்துமகிழ் இளங்குழந்தாய், இசைத்துமகிழ் நல்யாழே, இங்குள் ளோர்வாய்
மடுத்துமகிழ் நறுந்தேனே, வரைந்துமகிழ் ஓவியமே, அன்பே, வன்பு
தொடுத்துமகிழ் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தோன்றா வண்ணம்
தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சாற்ற வாய்ப தைக்கும். 2

பண்டுவந்த செழும்பொருளே, பார்அடர்ந்த இருட்கடலில் படிந்த மக்கள்
கண்டுவந்த திருவிளக்கே, களிப்பருளும் செந்தமிழே, அன்பே, வாழ்வில்
தொண்டுவந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் துளிர்க்கா வண்ணம்
உண்டுவரல் நினைக்கையிலே உளம்பதைக்கும் சொல்வதெனில் வாய்ப தைக்கும். 3

உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே, மக்கள் வாழ்வாம்
கடலியக்கும் சுவைப்பாட்டே, கண்ணான செந்தமிழே, அன்பே, நாட்டில்
கெடலியக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைக் கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்பகர வாய்ப தைக்கும். 4

வையத்தின் பழநிலவே, வாழ்வுக்கோர் புத்துணர்வே, மயிலே, மேலோர்
ஐயத்திற் கறிவொளியே, ஆடல்தரும் செந்தமிழே, அன்பே, தீமை
செய்யத்தான் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தீர்க்க எண்ணும்
மெய்யைத்தான் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்விளக்க வாய்ப தைக்கும். 5

2. இருப்பதைவிட இறப்பது நன்று

வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர்
ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப்
பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர்
ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6

மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர்,
தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர்,
நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர்
புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7

மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை மாய்ப்பதுண்டோ? வாய்ப்பாட் டாளர்,
இகழ்ச்சியுற நடப்பதுண்டோ? இசைப்பாடல் ஆக்குபவர் இழிவேன் ஏற்றார்?
நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்றுப் போயினரோ? வாழ்வுக் கான
புகழ்ச்சியினைப் போக்கடித்தும் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 8

கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்? தீமை
மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ? சொல்லாக் கத்தார்
தூற்றுமொழி ஏன்சுமந்தார்? துண்டறிக்கை யாளருமோ தீயர்? வாழ்வில்
ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 9

நல்லஅரும் பொருளுடையார் நந்தமிழ்க்கோ பகையாவார்? நாட்டில் ஆணை
சொல்லவரும் அரசியலார் செந்தமிழ்நா டிதுவென்றும் தெரியார் போலும்!
வல்லவரும் பெரியநிலை வாய்த்தவரும் என்செய்தார்? இன்ப வாழ்வின்
எல்லையறிந் தும்திருந்தாத் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 10

3. வரிப்புலியே, தமிழ்காக்க எழுந்திரு!

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்!
கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த
பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள்
தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே! 11

உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெலாம் உன்றன் வெற்றி!
அயராதே! எழுந்திரு நீ! இளந்தமிழா, அறஞ்செய்வாய்! நாம டைந்த
துயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைப்பாய். இந்நாள்
செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. 12

வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன்பெருமை! வயிற்றுக் கூற்றக்
கூழின்றி வாடுகின்றார்; எழுந்திருநீ இளந்தமிழா! குறைத விர்க்க
ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை ஆக்கு விப்பாய்!
ஊழியம்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே. 13

உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வரும்தீமை உனக்குவரும் தீமை அன்றோ!
பிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா, வரிப்புலியே, பிற்றை நாளுக்
கணிசெய்யும் இலக்கியம்செய்! அறத்தைச்செய்! விடுதலைகொள் அழகு நாட்டில்!
பணிசெய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் பழநாட் டானே. 14

எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே! இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்!
இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. 15

4.மங்கையர் முதியோர் எழுக!

ஒருவானில் பன்னிலவாய் உயர்தமிழப்பெண்களெலாம் எழுக! உங்கள்
திருவான செந்தமிழின் சிறுமையினைத் தீர்ப்பதென எழுக! நீவிர்,
பெருமானம் காப்பதற்கு வாரீரேல் உங்கள்நுதற் பிறையே நாணும்!
மறுமலர்வாய்த் தாமரையும் கனியுதடும், நன்னெஞ்சும் வாட்டம் எய்தும்! 16

நகர்நோக்கிப் பசுந்தோகை நாடகத்து மாமயில்கள் நண்ணி யாங்குப்
பகர்கின்ற செந்தமிழின் பழிநீக்கப் பெண்களெலாம் பறந்து வாரீர்!
மிகுமானம் காப்பதற்கு வாரீரேல் வெண்ணிலவு முகஞ் சுருங்கும்
மகிழ்வான மலர்க்கண்ணம் வாய்மையுளம் வாட்டமுறும் மலர்க்கண் நாணும். 17

தண்டூன்றும் முதியோரே! தமிழ்த்தொண்டென் றால்இளமை தனை எய் தீரோ?
வண்டூன்றும் சிற்றடியால் மண்டுநறும் பொடிசிதறும் பொதிகை தன்னில்
பண்டூன்றும் திருவடியால் பச்சைமயில் போல்வந்து தமிழர்க் காவி
கொண்டூன்றி வருந்தமிழ்த்தாய் கொண்டகுறை தவிர்ப்பதற்குக் குதித்து வாரீர்! 18

பிரம்புவளை மெய்யுடையீர் ஆருயிரில் வாரியிட்டுப் பிசைந்த தான
உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி நண்ணி டீரோ!
இரங்குநிலை கொண்டதமிழ் ஏற்றகுறை தவிர்த்திடநீர் எழுச்சி கொள்வீர். 19

அன்னையினை எதிர்த்தார்க்கும் அவள்மேன்மை மறந்தார்க்கும் அயர்ந்த வர்க்கும்
மின்னைவிழி உயர்ந்ததுபோல் மெய்யுயிரைப் பெற்றதுபோல் தமிழ்ச்சாப் பாடு
தன்னையுணர் விப்பதற்குச் சாரைச்சிற் றெறும்பென்னத் தமிழ் நாட்டீரே,
முன்னைவைத்த காலைப்பின் வையாமே வரிசையுற முடுகு வீரே! 20

5. வாணிகர்

வாணிகர்,தம் முகவரியை வரைகின்ற பலகையில்,ஆங் கிலமா வேண்டும்?
'மாணுயர்ந்த செந்தமிழால் வரைக' என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈராக அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலம்காக்கும் செய்கையாமோ? 21

உணவுதரு விடுதிதனைக் 'கிளப்'பெனவேண் டும்போலும்! உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு 'சில்குஷாப்' எனும்பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை? தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை! 22

'பவன்' 'மண்டல்' முதலியன இனியேனும் தமிழகத்தில் பயிலா வண்ணம்
அவண்சென்று முழங்கிடுவீர்! ஆங்கிலச்சொல் இந்திமொழி வடசொல் யாவும்
இவண்தமிழிற் கலப்பதுண்டோ 'பிராம்மணர் கள்உண்ணும் இடம்' இப் பேச்சில்
உவப்புண்டோ தமிழ்மானம் ஒழிந்திடுதே ஐயகோ உணர்வீர் நன்றே . 23

அறிவிப்புப் பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே அன்றி, அச்சொல்
குறைவற்ற தொடராகக் குற்றமற்ற சொல்லாக அமையு மாயின்
மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த்தாய்? தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ?
குறியுற்ற மறவர்களே! இப்பணியை முடிப்பதற்கோர் கூட்டம் வேண்டும். 24

பேச்சாலும் எழுத்தாலும் பாட்டாலும் கூத்தாலும் பிறர் உவக்க
ஓச்சுகவே மணிமுரசு! வீதியெல்லாம் வரிசையுற உலவா நிற்பீர்!
ஏச்சாலும் எதிர்ப்பாலும் வருகின்ற இன்னலுக்குள் இன்ப வெள்ளம்
பாய்ச்சாதோ பொதுத்தொண்டு? பைந்தமிழ்க்குச் செயும்தொண்டு பருக வாரீர். 25

6.. அரசியல்சீர் வாய்ந்தார் ( 1 )

கல்லூரித்தலைவரை நான் கேட்கின்றேன் கனிதமிழின் பேரைச் சொன்னால்
சொல்லூறிப் போகாதோ! வாயூறிப் போகாதோ! தூய் தமிழ்க்கு
வல்லூறாய் வாய்த்தீரோ? வளம்செய்யும் எண்ணமெனில், நீர் பிறந்த
நல்லூரின் நன்மொழியால் அல்லாது நடந்திடுமோ நவில்வீர் இன்றே. 26

வரிப்பணத்தை வழங்கிடுவோர் வாய்ப்பளிக்க முந்திடுவோர் தமிழர் அன்றோ?
இருப்புறுநும் அலுவலுக்கும் யாரையா வேர்? தமிழை மறப்ப துண்டோ?
நரிப்பிணத்தை நரியுந்தின் னாதென்ப தறியீரோ? நம்மா னத்தை
எரிப்பதற்குத் திருவுளமோ? எழிற்பள்ளிக் கணக்காயர் தலைமையோரே. 27

தமிழ்நாட்டின் உப்பைத்தின் றீரன்றோ கணக்காயர் தந்தை மாரே!
தமிழ்நாட்டில் தமிழர்களின் தன்னுணர்வு நாட்டுவதைத் தவிர்ப்பீ ராயின்
உமிழாதோ, வருத்தாதோ உம்மையே உம்மருமை உள்ளச் சான்றே?
அமுதூட்ட நஞ்சூட்டி அகமகிழும் தாயுண்டோ அருமைச் சேய்க்கே? 28

படிப்பாரின் தமிழ்ச்சுவடி பரிந்தாயும் அரசியலார் குழுவி னோரே,
தடிப்பாகிப் போவதுண்டோ உம்முள்ளம்? தமிழென்றும் வடசொல் என்றும்
வடிப்பாக்கி நோக்கிடவும் மாட்டீரோ? செந்தமிழின் பகைவரின் வால்
பிடிப்பாரின் துணையில்இனும் பிழைப்பீரோ, மறவர்தமிழ்ப் பெரிய நாட்டில்? 29

தமிழ்நடையில் நயம்வேண்டின் தமிழ்நாட்டின் நடைமுறையைத் தமிழ்நாட் டாரை
அமையவரை தல்வேண்டும்! அவ்வாற்றால் அமைவுற்ற சுவடி தன்னை
உமைமறந்து மறுக்காதீர் உமியைப்போய் ஒப்பாதீர் இன்னும் கேளீர்
தமிழ்தழுவாச் சுவடிதனை தணல்தழுவா திராதினிமேல் தமிழ்நா டெங்கும். 30

7. அரசியல்சீர் வாய்ந்தார் ( 2 )

தெலுங்குதமிழ் நாட்டினிலேன்? செத்தவட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்?
இலங்கும் இசைப் பாட்டுக்கள் பிறமொழியில் ஏற்படுத்த இசைய லாமோ?
நலங்கண்டீர் தமிழ்மொழியால் நற்றமிழை ஈடழித்தல் நன்றோ? சின்ன
விலங்கதுதான் சோறிட்டான் மேற்காட்டும் நன்றியைநீர் மேற்கொள் ளீரோ? 31

பொதுமையிலே கிடைத்திட்ட செல்வாக்கை இனநலத்துக் காக்கு வோரை
இதுவரைக்கும் மன்னித்த எழில்தமிழர் இனிப்பொறுப்பார் என்ப தில்லை!
குதிகாலும் மேற்செல்லும் அடுத்தபடி கீழேதான் வந்து சேரும்.
அதுவியற்கை! மலைக்காதீர்! அறிவுநாள் இது! கொடுமை அழிந்தே தீரும் 32

அரசியலார் அறிக்கையிலும் சுவடியிலும் தமிழ்ப்பெருமை அழித்தி டக்கை
வரிசையெல்லாம் காட்டுவதோ? வடமொழியும் பிழைத்தமிழும் பெருகி விட்டால்
வருநாளில் தமிழழியும் வடமொழிமே லோங்குமெனும் கருத்தோ? நாட்டில்
திருடர்களை வளரவிடும் ஏற்பாடோ?செல்லுபடி ஆகா திங்கே. 33

திருடர்கள் ஜாக்கிரதைஇதைத் திருடருண்டு விழிப்போடி ருங்கள் என்றால்
வருந்தீமை என்ன?நியா யஸ்தலத்தை அறமன்றம் எனில்வாய்க் காதோ?
அருவருக்கும் நெஞ்சுடையார் அருவருக்கும் செயலுடையார் அன்றோ இந்தக்
கருவறுக்கும் வினைசெய்வார். கலப்பாலில் துளிநஞ்சும் கலத்தல் வேண்டாம். 34

அரசியலார் அலுவலகம் அறமன்றம் இங்கெல்லாம் அலுவல் பெற்றீர்
உரையனைத்தும் ஆங்கிலமோ? உணர்விலையோ? ஒழுக்கந்தான் இதுவென் பீரோ?
வரும்நாட்டுப் புறத்தவரின் தமிழ்ப்பேச்சும் பிடிப்பதில்லை வண்ட மிழ்சேர்
திருநாட்டிற் பிறந்தோமென் றெண்ணுவதும் இல்லைஇனித் திருந்து வீரே. 35

8. அரசியல்சீர் வாய்ந்தார் ( 3 )

தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்.
தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும்.
நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம்
அமையாது. சிறிதும்இதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம். 36

தமிழெங்கே! தமிழன்நிலை என்னஎனத் தாமறியாத் தமிழர் என்பார்
தமிழர்நலம் காப்பவராய் அரசியலின் சார்பாக வரமு யன்றால்
இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும் கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில்
அமைவாக ஆயிரம்பேர் அறிஞர்உள்ளார் எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம். 37

நகராட்சி சிற்றூரின் நல்லாட்சி மாவட்ட ஆட்சி என்று
புகல்கின்ற பலஆட்சிக் கழகங்கள் எவற்றினுமே புகநி னைப்பார்
தகுபுலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமெனச் சட்டம் செய்தால்
அகலுமன்றோ தமிழ்நாட்டின் அல்லலெலாம்? அல்லாக்கால் அமைதி யுண்டோ? 38

தமிழறியான் தமிழர்நிலை தமிழர்நெறி தமிழர்களின் தேவை, வாழ்வு
தமையறிதல் உண்டோ?எந் நாளுமில்லை! தமிழறியான் சுவையே காணான்!
சுமைசுமையாய் அரசியல்சீர் சுமந்தவர்கள் இதுவரைக்கும் சொன்ன துண்டோ
தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய? 39

ஆங்கிலநூல் அறிவுக்குச் சான்றிருந்தால் அதுபோதும் அலுவல் பார்க்க!
ஈங்குள்ள தமிழர்நெறி அவர்க்கென்ன தெரிந்திருக்கும்? இதுவு மன்றி,
மாங்காட்டுச் செவிடனெதிர் வடிகட்டி ஊமையரை வைத்த தைப்போல்
தீங்கற்ற தமிழறியான் செந்தமிழ்நாட் டலுவலின்மேற் செல்ல லாமோ? 40

9. புலவர் ( 1 )

தமிழ்ப்புலவர் ஒன்றுபடும் நன்னாளே தமிழர்க்குப் பொன்னா ளாகும்!
தமிழ்ப்பெருநூல் ஒன்றேனும் ஒற்றுமையைத் தடைசெய்யக் கண்ட துண்டோ?
தமிழ்ப்புலவர் தமக்குள்ளே மாறுபட்ட தன்மையினால் இந்நாள் மட்டும்
தமிழ்ப்பெருநா டடைந்துள்ள தீமையினைத் தமிழறிஞர் அறிகி லாரோ? 41

ஒல்காதபெரும் புகழ்த்தொல் காப்பியமும், நன்னூலும் தமிழர்க் கெல்லாம்
நல்கரிய நன்மையெலாம் நல்கினஎன் றால்நாமும் நன்றி சொல்வோம்.
செல்பலநூற் றாண்டுசெல அவ்விருநூல் திருவடியில் புதிய நூற்கள்
பல்காவேல் இருநூற்கும் பழியே!நம் புலவர்க்கும் பழியே யன்றோ? 42

தனித்தியங்கத் தக்கதெனத் தமிழ்பற்றித் தமிழ்ப்புலவர் சாற்று கின்றார்.
இனித்திடும்அவ் விருநூலில் வடமொழிஏன்? வடஎழுத்துக் கொழுங்கு தான்ஏன்?
தனித்தமிழில் இந்நாட்டுத் தக்கபுதுக் காப்பியம்,நன் னூல்இ யற்ற
நினைப்பாரேல் நம்புலவர் நிலவாவோ ஆயிரம்நூல் தமிழ கத்தே. 43

முதுமைபெறு சமயமெனும் களர்நிலத்தில் நட்டதமிழ்ப் பெருநூல் எல்லாம்
இதுவரைக்கும் என்னபயன் தந்ததென எண்ணுகையில் நான்கு கோடிப்
பொதுவான தமிழரிலே பொன்னான தமிழ்வெறுத்தார் பெரும்பா லோராம்!
புதுநூற்கள் புதுக்கருத்தால் பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம். 44

சோற்றுக்கென் றொறுபுலவர் தமிழ்எதிர்ப்பார் அடிவீழ்வார்! தொகையாம் செல்வப்
பேற்றுக்கென் றொருபுலவர் சாஸ்திரமும் தமிழ்என்றே பேசி நிற்பார்!
நேற்றுச்சென் றார்நெறியே நாம்செல்வோம் எனஒருவர் நிகழ்த்தா நிற்பார்!
காற்றிற்போம் பதராகக் காட்சியளிக் கின்றார்கள் புலவர் சில்லோர்! 45

10. புலவர் ( 2 )

சீவல்லபர் திருவள் ளுவரானார் என்றொருவர் செப்ப லுற்றார்!
நாவன்மை என்பதுவும் செந்தமிழை நலிப்பதற்கோ? நாணி லாரோ?
பாவளிக்கும் சுவைமுழுதும் பருகிவிட்ட தாயுரைக்கும் ஒருவர் சொல்வார்,
கோவையிட்ட கம்பனது செய்யுலிலே முக்காலும் கோணல் என்றே! 46

கம்பனார் பதினோரா யிரம்பாட்டில் முக்காலும் கழித்துப் போட்டு
நம்பினால் நம்புங்கள் இவைதாம்கம் பன்செய்யுள் எனஅச் சிட்டு
வெம்புமா றளிக்கையிலும் மேவாத செயல்இதனைச் செய்ய இந்தக்
கொம்பன்யார் எனக்கேட்க ஆளில்லையா புலவர் கூட்டந் தன்னில்? 47

'வாட்டடங்கண்' 'கற்றரை'யை வாள்த்தடங்கண் கல்த்தரைஎன் றெழுதி முன்னைப்
பாட்டினிலே பெரும்பிழையைப் பல்குவிப்பா னுக்குமணிப் பண்டி தர்கள்
சாட்டைகொடுத் தறிக்கைவிடத் தாள்ஒன்றும் அற்றதுவோ! தமக்குச் சோறு
போட்டிடுவார் ஒப்புகிலார் எனுங்கருத்தோ மானமற்ற போக்குத் தானோ! 48

வடமொழியும் தெரியும்எனப் பொய்கூறி வடமொழிக்கு வாய்ப்பும் நல்க
வடமொழியா னைக்கொண்டு மொழிபெயர்த்து வருவார்க்கு வண்ட மிழ்ச்சீர்
கெடுவதிலே கவலையில்லை. ஆரியரை ஆதரித்துக் கிடப்ப தொன்றே
நடைமுறையில் நலன்விளைக்கும் என்னுமொரு மடமையினை நசுக்க வேண்டும். 49

அரசினரின் மொழியாக, அரசியலார் மொழியாக, அரசியல் சார்
வரிசையுறு சட்டமன்றின் மொழியாக, வையம்அறி மொழிய தாகத்
திருமலிந்த தமிழ்மொழிதான் ஆகும்வகை நம்புலவர் சேர்ந்து தொண்டு
புரிகஎன வேண்டுகின்றோம் பொழிகஎன வேண்டுகின்றோம் பொன்ம ழைதான்! 50

11. குடும்பத்தார்

அன்னைதந்த பால் ஒழுகும் குழந்தைவாய் தேன் ஒழுக அம்மா என்று
சொன்னதுவும் தமிழன்றோ! அக்குழந்தை செவியினிலே தோய்ந்த தான
பொன்மொழியும் தமிழன்றோ! புதிதுபுதி தாய்க்கண்ட பொருளி னோடு
மின்னியதும் தமிழன்றோ! விளையாட்டுக் கிளிப்பேச்சும் தமிழே யன்றோ! 51

வானத்து வெண்ணிலவும் வையத்தின் ஓவியமும் தரும் வியப்பைத்
தேனொக்கப் பொழிந்ததுவும் தமிழன்றோ! தெருவிலுறு மக்கள் தந்த
ஊனுக்குள் உணர்வேயும் தமிழன்றோ! வெளியேயும் உள்ளத் துள்ளும்
தான்நத்தும் அனைத்துமே காட்சிதரும் வாயிலெலாம் தமிழேயன்றோ! 52

திருமிக்க தமிழகத்தின் குடும்பத்தீர்! இல்லறத்தீர்! செந்த மிழ்க்கே
வருமிக்க தீமையினை எதிர்த்திடுவீர் நெஞ்சாலும் வாய்மெய் யாலும்!
பொருள்மிக்க தமிழ்மொழிக்குப் புரிந்திடுவீர் நற்றொண்டு; புரியீ ராயின்,
இருள்மிக்க தாகிவிடும் தமிழ்நாடும் தமிழர்களின் இனிய வாழ்வும்! 53

காக்கை 'கா' என்றுதனைக் காப்பாற்றச் சொல்லும்!ஒரு கருமு கில்தான்,
நோக்கியே 'கடமடா' என்றேதன் கடனுரைக்கும்! நுண்கண் கிள்ளை
வாய்க்கும்வகை 'அக்கா' என் றழைத்ததனால் வஞ்சத்துப் பூனை 'ஞாம் ஞாம்'
காக்கின்றோம் எனச்சொல்லக் கழுதைஅதை 'ஏ' என்று கடிந்து கூறும். 54

'கூ' எனவே வையத்தின் பேருரைத்துக் குயில் கூவும். 'வாழ் வாழ்' என்று
நாவினிக்க நாய்வாழ்த்தும். நற்சேவல் 'கோ' என்று வேந்தன் பேரைப்
பாவிசைத்தாற் போலிசைக்க, வரும்காற்றோ 'ஆம்' என்று பழிச்சும்! இங்கு
யாவினுமே தமிழல்லால் இயற்கைதரும் மொழிவேறொன் றில்லை யன்றோ? 55

12. கோயிலார்

உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்!
உயிர்போன்ற உங்கள்தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்!
பயிரழிக்கும் விட்டிலெனத் தமிழ்மொழியைப் படுத்தவந்த வடம றைதான்
செயிர்தீர வாழ்த்துதற்கும் தேவையினைச் சொல்லுதற்கும் உதவும் போலும்! 56

மடிகட்டிக் கோயிலிலே மேலுடையை இடுப்பினிலே வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது பூசியிரு கைகட்டிப் பார்ப்பா னுக்குப்
படிகட்டித் தமிழரெனப் படிக்கட்டின் கீழ்நின்று தமிழ்மா னத்தை
வடிகட்டி அவன்வடசொல் மண்ணாங்கட் டிக்குவப்பீர் 'மந்த்ரம்' என்றே. 57

காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பொறாத உள்ளம்,
மேற்படுத்தும் எவற்றினுக்கும் மேற்பட்ட தன்மொழியைத் தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு பொதுவினின்று நீக்கிவைத்தால் பொறுப்ப துண்டோ?
வேற்றுவரின் வடமொழியை வேரறுப்பீர் கோயிலிலே மேவி டாமே. 58

சொற்கோவின் நற்போற்றித் திருஅகவல் செந்தமிழில் இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த தெவ்வாறு சகத்ர நாமம்!
தெற்கோதும் தேவாரம் திருவாய்நன் மொழியான தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன் திருக்கோ யில்பால்? 59

திருப்படியில் நின்றபடி செந்தமிழில் பெரும்படியார் அருளிச் செய்த
உருப்படியை அப்படியே ஊரறியும் படியுரைத்தால் படியும் நெஞ்சில்!
தெருப்படியிற் கழுதையெனச் செல்லுபடி யாகாத வடசொற் கூச்சல்
நெருப்படியை எப்படியோ பொறுத்திடினும் நேர்ந்தபடி பொருள் கண்டீரோ! 60

13. அறத்தலைவர்

அறத்தலைவர் செயத்தக்க அறமிந்நாள் தமிழ்காத்தல் அன்றோ? தங்கள்
நிறத்தியலை நிலைநிறுத்தித் தமிழ்அழிக்க நினைப்பாரின் செயலை, நீவிர்
மறத்தலினும் கேடுண்டோ? மடத்திலுறு பெரும்பொருளைச் செந்தமிழ், சீர்
பெறச்செலவு செய்தலினும் பெறத்தக்க பெரும்பேறு பிறிது முண்டோ! 61

கல்லாரின் நெஞ்சத்தே கடவுள்நிலான் என்னுமொழி கண்டு ளீரே
நில்லாத கடவுளைநீர் நிலைத்திருக்கும் படிச்செய்யத் தமிழர் நாட்டில்
எல்லாரும் தமிழ்கற்க என்செய்தீர்? செயநினைத்தால் இயலா தேயோ?
தொல்லையெலாம் போமாறு தூய்மையெலாம் ஆமாறு தொண்டு செய்வீர்! 62

செந்தமிழிற் புதுப்புதுநூல் விளைப்பதற்குச் செல்வத்தைச் செலவு செய்தால்
நந்தமிழ்நா டுயராதோ! நலிவெல்லாம் தீராவோ! பொருளை அள்ளித்
தந்தாரே முன்னாளில் தமிழ்நாட்டார் உம்மிடத்தில். தலைமை யேற்று
வந்தீரே அரசியல்சீர் வாய்ந்தாரை வசப்படுத்தி வாழ்வ தற்கோ? 63

அறநிலையக் காப்புக்கே அரசினர்கள் அயலாரை அமைப்பர்! அன்னோர்
பிறமொழிக்குத் துணைநின்றும் தமிழ்மொழியின் பீடழிக்கும் செயல் புரிந்தும்,
சிறுமையுறு வடமொழிக்குக் கழகங்கள் இங்கமைத்தும் தீமை செய்வார்!
உறுதியுடன் தமிழரெலாம் ஒன்றுபட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும்! 64

நாட்டிலுறும் அறநிலையம் ஒவ்வொன்றும் நற்றமிழ்க்கல் லூரி ஒன்றும்,
வீட்டிலுறு கழகங்கள் நாலைந்தும், மேன்மையுறும் புலவர் கூடித்
தீட்டுநூல் வெளியீடு செய்நிலையம் ஒன்றுமாய்த் தருமேல் நம்மை
வாட்டிவரும் வறுமைநிலை மாய்க்கவரும் தாழ்மைநிலை மாய்ந்து போமே. 65

14. விழா நடத்துவோர்

தேர்வரும்.பின் பார்ப்பனர்கள் வரிசையுறச் செங்கைகள் கோத்த வண்ணம்,
நீர்வருங்கால் கத்துகின்ற நெடுந்தவளைக் கூட்டமெனக் கூச்ச லிட்டு
நேர்வருவார் அன்னவர்கள் நிகழ்த்துவதன் பொருளென்ன? இனிமை உண்டா?
ஊர்வருந்தும் படிஇதைஏன் விழாத்தலைவர் உடன்சேர்த்தார்? ஒழிக்க வேண்டும்! 66

பல்லிசைகள் நேர்முழங்கப் பகல்போலும் விளக்கெடுப்பக் குதிரை, யானை
நல்லசிறப் பளித்துவர நடுவிலொரு தேவடியாள் ஆட, மக்கள்
எல்லோரும் கயிறிழுக்க இயங்குமொரு தேர்மீதில் ஆரி யத்தைச்
சொல்லிடுமோர் சொறிபிடித்த பார்ப்பானைக் குந்தவைத்தல் தூய்மை தானோ! 67

விவாகசுப முகூர்த்தமென வெளிப்படுத்தும் மணஅழைப்பில் மேன்மை என்ன?
அவாள்இவாள் என்றுரைக்கும் பார்ப்பனரின் அடிதொடர்தல் மடமை யன்றோ?
உவகைபெறத் தமிழர்மணம் உயிர்பெறுங்கால் உயிரற்ற வடசொற் கூச்சல்
கவலையினை ஆக்காதோ! மணவிழவு காண்பவரே கழறு வீரே! 68

மானந்தான் மறைந்ததுவோ? விழாத்தலைவீர், மணமெல்லாம் வடசொல் லாலே
ஆனவையா சொல்லிடுவீர்! அந்நாளில் தமிழர்மணம் தமிழ்ச்சொல் லாலே
ஆனதென அறியீரோ? பார்ப்பான்போய் அடிவைத்த வீட்டி லெல்லாம்
ஊனந்தான் அல்லாமல் உயர்வென்ன கண்டுவிட்டீர் இந்நாள் மட்டும்? 69

மணமக்கள் தமைத்தமிழர் வாழ்கஎன வாழ்த்துமொரு வண்ட மிழ்க்கே
இணையாகப் பார்ப்பான்சொல் வடமொழியா, தமிழர்செவிக் கின்பம் ஊட்டும்?
பணமிக்க தலைவர்களே, பழியேற்க வேண்டாம்நீர்! திரும ணத்தில்
மணமக்கள், இல்லறத்தை மாத்தமிழில் தொடங்கிடுக, மல்கும் இன்பம்! 70

15. கணக்காயர்

கழகத்தின் கணக்காயர், தனிமுறையிற் கல்விதரும் கணக்கா யர்கள்,
எழுதவல்ல பேசவல்ல கல்லூரிக் கணக்காயர், எவரும், நாட்டின்
முழுநலத்தில் பொறுப்புடனும் முன்னேற்றக் கருத்துடனும் உழைப்பா ராயின்
அழுதிருக்கும் தமிழன்னை சிரித்தெழுவாள்; அவள்மக்கள் அடிமை தீர்வார்! 71

நற்றமிழில் தமிழகத்தில் நல்லெண்ணம் இல்லாத நரிக்கூட் டத்தைக்
கற்றுவைக்க அமைப்பதினும் கடிநாயை அமைத்திடலாம்! அருமை யாகப்
பெற்றெடுத்த மக்கள்தமைப் பெரும்பகைவர் பார்ப்பனர்பால் அனுப்போம் என்று
கொற்றவர்க்குக் கூறிடவும் அவர்ஒப்புக் கொண்டிடவும் செய்தல் வேண்டும். 72

இகழ்ச்சியுரும் பார்ப்பனனாம் கணக்காயன், நந்தமிழர் இனத்துச் சேயை
இகழ்கின்றான்! நம்மவர்முன் னேறுவரோ! தமிழ்மொழியை வடசொல் லுக்கு
மிகத்தாழ்ந்த தென்கின்றான்! வடசொற்கு மகிழ்கின்றான்! கொடியவன், தன்
வகுப்பானை வியக்கின்றான்! விட்டுவைத்தல் மாக்கொடிதே! எழுச்சி வேண்டும்! 73

வடசொல்இது தமிழ்ச்சொல்இது எனப்பிரித்துக் காட்டிடவும் மாட்டான்! நம்சேய்
கெடஎதுசெய் திடவேண்டும் அதைச்செய்வான் கீழ்க்கண்ணான்! கொடிய பார்ப்பான்!
நொடிதோறும் வள்ர்ந்திடும்இந் நோய்தன்னை நீக்காது தமிழர் வாளா
விடுவதுதான் மிகக்கொடிது! கிளர்ந்தெழுதல் வேண்டுமின்றே மேன்மை நாட்டார்! 74

தமிழ்ப்புதுநூல் ஆதரிப்பீர்! தமிழ்ப்பாட்டை ஆதரிப்பீர், தமிழர்க் கென்றே
அமைந்துள்ள கருத்தினையே ஆதரிப்பீர்! 'தமிழ்தான்எம் ஆவி' என்று
நமைப்பகைப்பார் நடுங்கும்வகை நன்றுரைப்பீர் வென்றிமுர செங்கும் நீவிர்
உமக்குரியார் பிறர்க்கடிமை இல்லையென உரைத்திடுவீர் மாணவர்க்கே. 75

16. மாணவர்

கற்கின்ற இருபாலீர் ! தமிழ்நாட்டின் கண்ணொப்பீர் கனியி ருக்க
நிற்கின்ற நெடுமரத்தில் காய்கவர நினையாதீர். மூது ணர்வால்
முற்கண்ட எவற்றினுக்கும் முதலான நந்தமிழை இகழ்த லின்றிக்
கற்கண்டாய் நினைத்தின்பம் கைக்கொண்டு வாழ்ந்திடுவீர் நன்றே என்றும். 76

ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும்
தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்.
ஏங்கவைக்கும் வடமொழியை, இந்தியினை எதிர்த்திடுவீர் அஞ்ச வேண்டாம்.
தீங்குடைய பார்ப்பனரின் ஆயுதங்கள் 'இந்தி' 'வட சொல்' இரண்டும். 77

பார்ப்பான்பால் படியாதீர்; சொற்குக்கீழ்ப் படியாதீர்; உம்மை ஏய்க்கப்
பார்ப்பான்;தீ துறப்பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் எப் போதும் பார்ப்பான்.
ஆர்ப்பான் நம் நன்மையிலே ஆர்வமிக உள்ளவன்போல்! நம்ப வேண்டாம்.
பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானை யேபார்ப்பான் தின்னப் பார்ப்பான். 78

தமிழின்பேர் சொல்லி மிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட் டாலும்
தமிழழித்துத் தமிழர்தமைத் தலைதூக்கா தழித்துவிட நினைப்பான் பார்ப்பான்.
அமுதாகப் பேசிடுவான் அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம்
தமிழர்கடன் பார்ப்பானைத் தரைமட்டம் ஆக்குவதே என்று ணர்வீர். 79

தமிழரின்சீர் தனைக்குறைத்துத் தனியருசொல் சொன்னாலும் பார்ப்பான் தன்னை
உமிழ்ந்திடுக! மானத்தை ஒருசிறிதும் இழக்காதீர். தமிழைக் காக்க
இமையளவும் சோம்பின்றி எவனுக்கும் அஞ்சாது தொண்டு செய்வீர்.
சுமைஉங்கள் தலைமீதில் துயர்போக்கல் உங்கள்கடன். தூய்தின் வாழ்க! 80

17. பாடகர்

நாயும்வயிற் றைவளர்க்கும்; வாய்ச்சோற்றைப் பெரிதென்று நாட லாமோ?
போய்உங்கள் செந்தமிழின் பெருமையினைப் புதைப்பீரோ பாட கர்காள்!
தோயுந்தேன் நிகர்தமிழாற் பாடாமே தெலுங்கிசையைச் சொல்லிப் பிச்சை
ஈயுங்கள் என்பீரோ? மனிதரைப்போல் இருக்கின்றீர் என்ன வாழ்வு! 81

செந்தமிழில் இசைப்பாடல் இல்லையெனச் செப்புகின்றீர் மான மின்றி;
பைந்தமிழில் இசையின்றேல் பாழ்ங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த லன்றி
எந்தமிழில் இசையில்லை, எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோ?
உந்தமிழை அறிவீரோ தமிழறிவும் உள்ளதுவோ உங்கட் கெல்லாம்? 82

வெளியினிலே சொல்வதெனில் உம்நிலைமை வெட்கக்கே டன்றோ? நீவிர்
கிளிபோலச் சொல்வதன்றித் தமிழ்நூற்கள் ஆராய்ந்து கிழித்திட் டீரோ?
புளிஎன்றால் புலிஎன்றே உச்சரிக்கும் புலியீரே புளுக வேண்டாம்
துளியறிவும் தமிழ்மொழியில் உள்ளதுவோ பாடகர்க்குச் சொல்வீர் மெய்யாய்! 83

தமிழ்மகளாய்ப் பிறந்தவளும் தமிழ்ப்பகைவன் தனைப்புணர்ந்து தமிழ்பா டாமல்
சுமக்கரிய தூற்றுதலைச் சுமப்பதுவும் நன்றேயோ? பார்ப்ப னத்தி,
நமக்குரிய தமிழ்காக்க ஒப்பாமை நன்றறியும் இந்த நாடு!
தமிழ்நாட்டுப் பாடகரே! தமிழ்பாடித் தமிழ்மானம் காப்பீர் நன்றே. 84

தமிழ்மொழியில் தமிழ்ப்பாடல் மிகவுண்டு, தமிழ்க்கவிஞர் பல்லோர் உள்ளார்.
உமைத்தாழ்வு படுத்தாதீர் பார்ப்பான்சொல் கேட்டபடி உயிர்வா ழாதீர்!
உமைவிலக்கிப் பணக்காரன் உடன்சேர்ந்து நலம்கொள்ளும் உளவன் பார்ப்பான்!
சிமிழ்க்காமல் விழித்திடுங்கள் பார்ப்பானை நம்பாதீர் திறமை கொள்வீர்! 85

18. கூத்தர்

வாய்ப்பாட்டுப் பாடிடுவோர் பெரும்பாலோர் வண்டமிழ்க்குத் தீமை செய்தார்!
போய்ப்பாரீர் படக்காட்சி! போய்ப்பாரீர் நாடகங்கள்! பொன்போல் மிக்க
வாய்ப்பாகத் தமிழ்ஒன்றே பேசுகின்றார் பாடுகின்றார் வாழ்க அன்னார்!
தாய்ப்பாலில் நஞ்செனவே தமிழில்வட மொழிசேர்த்தார்! தவிர்தல் வேண்டும்! 86

தமிழ்ப்புலவர் தனித்தமிழில் நாடகங்கள் படக்கதைகள் எழுத வேண்டும்.
தமிழ்ப்பகைவர் பார்ப்பனர்கள் நாடகத்தில் படக்கதையைத் தமிழர் எல்லாம்
இமைப்போதும் பார்த்திடுதல் இனியேனும் நீக்கிடுதல் வேண்டும். யாவும்
அமைப்பானும் செந்தமிழன் அதைக்காண்பா னுந்தமிழன் ஆதல் வேண்டும். 87

ஆடுகின்ற மெல்லியலாள் அங்கையினைக் காட்டுவது பொருள் குறித்தே
நாடிடும்அப் பொருள்குறிக்கும் சொல்தமிழாய் இருப்பதுதான் நன்றா? அன்றித்
தேடிடினும் பொருள்தோன்றாத் தெலுங்குவட சொல்லாதல் நன்றா? பின்னால்
பாடுகின்றார் நட்டுவனார் பைந்தமிழா? பிறமொழியா? எதுநன் றாகும்? 88

கூத்தர்பலர் தமக்குள்ள தமிழ்ப்பேரை நீக்கிவிட்டுக் கொள்கை விட்டுச்
சாத்திக்கொள் கின்றார்கள் வடமொழிப்பேர்! இந்திப்பேர்! அவற்றி லெல்லாம்
வாய்த்திருக்கும் தாழ்வறியார் புதிதென்றால் நஞ்சினையும் மகிழ்ந்துண் பாரோ?
தாய்த்திருநா டுயர்வெய்தும் நாள்எந்நாள்? தமிழுயரும் நாள்எந் நாளோ? 89

என்னருமைத் தமிழ்நாட்டை எழிற்றமிழால் நுகரேனோ? செவியில் யாண்டும்
கன்னல்நிகர் தமிழிசையே கேளேனோ? கண்ணெதிரில் காண்ப வெல்லாம்
தன்னேரில் லாததமிழ்த் தனிமொழியாய்க் காணேனோ? இவ்வை யத்தில்
முன்னேறும் மொழிகளிலே தமிழ்மொழியும் ஒன்றெனவே மொழியே னோநான்! 90

19. பாட்டியற்றுவோர்

தமிழிசைப்பாட் டியற்றுபவர் தமிழர்களாய் இருந்தால்தான் தமிழ்த்தென் பாங்கில்
அமைவுபெறும். பார்ப்பனனும் தமிழறிவுக் கயலானும் அமைக்கும் பாடல்,
அமுதொத்த தமிழின்மேல் எட்டியையும் வேம்பினையும் அரைத்துப் பூசித்
தமிழர்க்கே தமிழ்என்றால் தனிக்கசப்பென் றாக்கிவிடும் தானும் சாகும்! 91

மனமேஈ சனின்நாமம் வாழ்த்துவாய் எனும்வேத நாயகன் தன்
இனிதான பாடலைப்போல் திருடுவதற் கில்லையெனில் இங்கோர் பார்ப்பான்
தனதாய்ஒன் றுரைப்பான்.அத் தமிழ்ப்பாட்டில் தமிழுண்டோ? எள்ளின் மூக்கத்
தனையிருப்பின் இரவுதனை 'ரா' என்றே சாற்றியிருப் பான்அப் பாட்டில்! 92

செந்தமிழில் அன்புடையார் சிலபார்ப்பார் இருந்தாலும் அவரை, மற்றச்
செந்தழற்பார்ப் பார்கெடுக்கப் பார்ப்பார் இத்தமிழ்வாழப் பாரார் அன்றோ!
அந்தமிழால் உடல்வளர்ப்பார் ஆரியந்தான் தமதென்பார், ஆரி யத்தில்
இந்தவரி என்னஎனில் யாம்அறியோம் எம்பாட்டன் அறிந்தான் என்பார்! 93

மறைஅறியார் எனினும்அவர் மறையவராம் என்றுரைப்பார்! இலக்க ணத்தின்
துறையறியார் எனினும்அவர் தூயதமிழ் எழுத்தாளர் என்று சொல்வார்!
குறையுடையார் எனினும்அவர் குதித்திடுவார் யாம்மேலோர் கூட்டம் என்றே!
அறையுமிவை பெருந்தமிழர் ஆழ்ந்தநெடுந் தூக்கத்தின் பயனே அன்றோ! 94

இயற்கைஎழில் என்னென்ன? இனியதமிழ் நாட்டின்சீர் என்ன? மற்றும்
செயற்கரிய நந்தமிழர் என்னென்ன செய்தார்கள்? செந்தமிழ்க் காம்
முயற்சிஎவை? நாட்டிற்கு முடிப்பதென்ன? இவையனைத்தும் தனித்த மைந்த
வியத்தகுசெந் தமிழாலே வெல்லத்துத் தென் பாங்கில் பாடல் வேண்டும். 95

20. சொற்பொழிவாளர்

மற்போர்க்கே அஞ்சிடுவோம் ஆயினும்யாம் வன்மைமிகு தமிழர் நாட்டில்
சொற்போருக் கஞ்சுகிலோம் என்றாராம் ஒருமுதியார் அவர்க்குச் சொல்வேன்
கற்போரின் பகுத்தறிவைக் கவிழ்க்கின்ற ஒழுக்கமிலாக் கதையைத் தாங்கி
நிற்பாரும் நிற்பாரோ நின்றாலும் வீழாரோ நெடுங் காலின்றி? 96

சமயமெனும் சூளையிலே தமிழ்நட்டால் முளையாதென் றறிந்தி ருந்தும்
சமயநூல் அல்லாது வழியறியாத் தமிழ்ப்புலவர் சமயம் பேசித்
தமிழ்அழிப்பார் எனினும்அவர் தமிழ்வளர்ப்போம் என்றுரைத்துத் தமை வியப்பார்.
தமிழ்வளர்ச்சி தடைப்பட்டால் தம்வளர்ச்சி உண்டென்றும் நினைப்பார் சில்லோர்! 97

பணமனுப்பி வாரீர்எனில் பயணமுறும் தமிழ்ப்புலவர் ஊரில் வந்து
மொணமொணெனக் கடவுளரின் முச்செயலில், பொய்ப்பேச்சில் முழுக வைப்பார்
கணகணெனத் தமிழ்க்கல்வி கட்டாயம் செயத்தக்க கருத்தும் சொல்லார்
தணியாத சமயமொடு சாதியெனும் தீயில்நெய்யைச் சாய்த்துச் செல்வார். 98

மொழியழிப்பான் தனைப்பற்றி ஒருமொழியும் மொழிவதில்லை மொழிந்தால் பார்ப்பான்
விழிநோகும் எனநடுங்கி வெண்ணீற்றுப் பதிகத்தை விரித்துச் சொல்லிப்
பழியாகத் தன்தாயைப் புணர்ந்தானைச் சிவன்உவந்த பாங்கும் கூறி
ஒழிவார்கள். தமிழ்மொழியை ஒழிப்பாரை ஒழிப்பதன்முன் ஒழியா தின்னல்! 99

உலகுக்குத் தமிழ்மொழியின் உயர்வுதனைக் காட்டுவது சொற் பெருக்காம்!
கலகத்தைச் சமயத்தைக் கழறுவதைக் காதாலும் கேட்க வேண்டாம்.
சிலகற்றார் பலகற்க விரும்பும்வகை செயல்வேண்டும்! கல்லார் ஓடித்
தலையுடைத்துக் கொளவேண்டும்! தன்னலம் இல்லார் சொல்லால் எல்லாம் எய்தும்! 100

21. ஏடெழுதுவோர் ( 1 )

பார்ப்பனர்கள் ஏடெழுதும் பாழ்நிலைமை போகுமட்டும் பைந்த மிழ்க்கோ
சீர்ப்பெரிய நாட்டினுக்கோ சிறிதேனும் நன்மையில்லை திருட ரின்பால்
ஊர்ப்பணத்தை ஒப்படைத்தல் சரியாமோ? செய்தித்தாள் உடையா ரன்றோ
ஊர்ப்பெருமை காப்பவர்கள் அ·தில்லார் ஏதிருந்தும் ஒன்று மில்லார்! 101

ஆங்கிலத்தில் புலவரெனில் அரசினரின் அலுவலிலே அமர்ந்தி ருப்பார்!
பாங்குருசெந் தமிழ்ப்புலமை படைத்தாரேல் பள்ளியிலே அமர்ந்தி ருப்பார்!
தீங்குற்ற இசைப்புலமை சிறிதிருந்தால் படத்தொழிலில் சேர்ந்தி ருப்பார்!
ஈங்கிவற்றில் ஏதுமிலார் தமிழினிலே ஏடெழுதிப் பிழைக்க வந்தார். 102

ஓவியத்தின் மதிப்புரையும் உயர்கவியின் மதிப்புரையும் இசையின் வல்லார்
நாவிலுறு பாடல்களின் நயம்ப்ற்றி மதிப்புரையும் உரை நடைக்கு
மேவுகின்ற மதிப்புரையும் கூத்தர்களின் மதிப்புரையும் விள்வார். நாங்கள்
யாவும்அறிந் தோம்என்பார். பெரும்பாலோர் பிழையின்றி எழுதல் இல்லார். 103

ஊர்திருடும் பார்ப்பானும் உயர்வுடையான் எனக்குறிப்பார். திரவிடர் கொள்
சீர்குறித்துச் சீறிடுவார் சிறுமையுற வரைந்திடுவார் செய்யுந் தொண்டு
பார்திருத்த என்றிடுவார் பழமைக்கு மெருகிடுவார். நாட்டுக் கான
சீர்திருத்தம் என்றாலோ சிறுநரிபோல் சூழ்ச்சியினைச் செய்வார் நாளும்! 104

நடுநிலைமை இருப்பதில்லை நல்லொழுக்கம் சிறிதுமிலை தமிழை மாய்க்கும்
கெடுநினைப்பே மிகவுடையார் கீழ்மையிலே உடல்வளர்ப்பார் பொருள் படைத்தோன்
அடிநத்த நாணுகிலார் அறமொன்றும் கூறுகிலார் ஏழை யோரின்
மடிபறிக்கும் திறமுடையார் மறந்தேனும் திரவிடரை மதித்தல் இல்லார்! 105

22. ஏடெழுதுவோர் ( 2 )

இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடெழுதல் கேடு நல்கும்.
தலைக்கணையில் நெருப்பிட்டுத் தலைவைத்துத் துயில்வதுபோல் பகைவ னைப்போய்
நிலைப்புற்ற தமிழ்ஏட்டின் ஆசிரிய னாக்குவது நீங்க வேண்டும்.
கலைப்பண்பும் உயர்நினைப்பும் உடையவரே ஏடெழுதும் கணக்காயர்கள்! 106

தன்னினத்தான் வேறினத்தான் தன்பகைவன் தன்நண்பன் எவனா னாலும்
அன்னவனின் அறுஞ்செயலைப் பாராட்டு வோன்செய்தி அறிவிப் போனாம்!
சின்னப்பிழை ஏடெழுதும் கணக்காயன் செய்திடினும் திருநாட் டார்பால்
மன்னிவிடும். ஆதலினால் ஏடெழுதும் வாழ்க்கையிலே விழிப்பு வேண்டும்! 107

ஏற்றமுறச் செய்வதுவும் மாற்றமுற வைப்பதுவும் ஏடே யாகும்!
தோற்றுபுது நிலையுணர்ந்து தோன்றாத வழிகூறித் துணை புரிந்து
சேற்றிலுயர் தாமரைபோல் திருநாட்டின் உளங்கவர்ந்து தீந்த மிழ்த்தொண்
டாற்றுந்தாள் அங்கங்கே அழகழகாய் அறிஞர்களால் அமைத்தல் வேண்டும்! 108

தொண்டர்படை ஒன்றமைத்துத் தமிழ்எதிர்ப்போர் தொடர்ந்தெழுதும் ஏட்டை யெல்லாம்
கண்டறிந்தபடி அவற்றை மக்களெலாம் மறுக்கும்வணம் கழற வேண்டும்.
வண்டுதொடர் மலர்போலே மக்கள்தொடர் ஏடுபல தோன்றும் வண்ணம்
மண்டுதொகை திரட்டி,அதை ஏடெழுத வல்லார்பால் நல்க வேண்டும்! 109

ஆங்கிலத்துச் செய்தித்தாள் அந்தமிழின் சீர்காக்க எழுதல் வேண்டும்.
தீங்கற்ற திரவிடநன் மொழிகளிலே பலதாள்கள் எழுதல் வேண்டும்.
ஓங்கிடநாம் உயர்முறையில் நாடோறும் கிழமைதொறும் திங்கள் தோறும்
மாங்காட்டுக் குயிலினம்போல் பறந்திடவேண் டும்தமிழ்த்தாள் வண்ணம் பாடி! 110

23. பெருஞ்செல்வர்

கோயில்பல கட்டுகின்றீர் குளங்கள்பல வெட்டுகின்றீர் கோடை நாளில்
வாயிலுற நீர்ப்பந்தல் மாடுரிஞ்ச நெடுந்தறிகள் வாய்ப்பச் செய்தீர்.
தாயினும்பன் மடங்கான அன்போடு மக்கள்நலம் தாவுகின்றீர்.
ஆயினும்நம் தமிழ்நாட்டில் செயத்தக்க தின்னதென அறிகி லீரே. 111

தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும், அறிவுயரும் அறமும் ஓங்கும்.
இமயமலை போலுயர்ந்த ஒருநாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்.
தமிழுக்குப் பொருள்கொடுங்கள் தமிழறிஞர் கழகங்கள் நிறுவி டுங்கள்.
தமிழ்ப்பள்ளி கல்லூரி தமிழ்ஏடு பலப்பலவும் நிலைப்பச் செய்வீர்! 112

நேர்மையின்றிப் பிறர்பொருளில் தம்பெயரால் கல்லூரி நிறுவிப் பெண்ணைச்
சீர்கெடுத்தும் மறைவழியாய்ச் செல்வத்தை மிகவளைத்தும் குடி கெடுத்தும்
பார்அறியத் தாம்அடைந்த பழியனைத்தும் மறைவதற்குப் பார்ப்பான் காலில்
வேர்அறுந்த நெடுமரம்போல் வீழ்ந்தும்அவன் விட்டதுவே வழியாம் என்றும் 113

அறத்துக்கு நிறுவியதை வருவாய்க்கென் றாக்குவதில் அறிவு பெற்ற
மறப்பார்ப்பான் செந்தமிழ் மாணவரைக் கெடுத்தாலும் எதற்குமே வாய்
திறக்காமல் தாமிருந்தும் செந்தமிழ்க்குப் பாடுபடல் போல் நடித்தும்
சிறப்பார்போல் இல்லாது செந்தமிழ்க்கு மெய்யுளத்தால் செல்வம் ஈக. 114

சிங்கங்கள் வாழ்காட்டில் சிறுநரிநாய் குரங்கெண்கு சிறுத்தை யாவும்
தங்கிநெடுங் கூச்சலிடும் தன்மைபோல் தமிழ்நாட்டில் தமிழே யன்றி
அங்கங்கே அவரவர்கள் தம்மொழிக்கும் பிறமொழிக்கும் ஆக்கம் தேடி
மங்காத செந்தமிழை மங்கும்வகை செய்வதற்கு வழக்கும் சொல்வார். 115

24. மற்றும் பலர்

அச்சகத்துத் தமிழர்க்கோ அருந்தமிழில் அன்பிருந்தால் அச்சி யற்றும்
எச்சிறிய அறிக்கையிலும் நூற்களிலும், எதிர்மொழியை உடையவர் நீக்
கச்சொல்ல லாமன்றோ? எண்எல்லாம் தமிழினிலே உண்டோ என்றால்
மெச்சுகின்ற ஆங்கிலஎண் அல்லாது வேறில்லை என்கின் றாரே! 116

கலைச்சொல்லாக் கத்தாரே கல்வியினால் நீர்பெற்ற அறிவை யெல்லாம்
தலைச்சரக்காம் தமிழ்ச்சரக்கைத் தலைகவிழ வைப்பதற்கோ விற்கின் றீர்கள்?
மலைச்சறுக்கில் இருக்கின்றீர் மாத்தமிழர் கண்திறந்து வாழ்வுக் கெல்லாம்
நிலைச்சரக்கைக் கண்டுகொண்டார் நெடுநாளின் விளையாட்டை நிறுத்த வேண்டும். 117

அரசினரும் பெரியநிலை அடைந்தவரும் அறிந்திடுக! மக்கள் நெஞ்சில்
முரசிருந்து முழங்கிற்றுத் தமிழ்வாழ்க! தமிழ்வெல்க! என்றே முன்னாள்
அரசிருந்த தமிழன்னை ஆட்சியிலே சூழ்ச்சிசெயும் ஆட்கள் யாரும்
எரிசருகு!தமிழரிடை எழுச்சியுறும் தமிழார்வம் கொழுத்த தீ!தீ!! 118

கடவுள்வெறி சமயவெறி கன்னல்நிகர் தமிழுக்கு நோய் நோய் நோயே!
இடைவந்த சாதியெனும் இடர்ஒழிந்தால் ஆள்பவள்நம் தாய் தாய் தாயே!
கடல்போலும் எழுக!கடல் முழக்கம்போல் கழறிடுக தமிழ்வாழ் கென்று!
கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! 119

விழிப்போரே நிலைகாண்பார் விதைப்போரே அறுத்திடுவார் களைகாண் டோறும்
அழிப்போரே அறஞ்செய்வார் அறிந்தோரே உயர்ந்திடுவார்! ஆதல் ஆர்வம்
செழிப்போரே,இளைஞர்களே, தென்னாட்டுச் சிங்கங்காள்! எழுக! நம்தாய்
மொழிப்போரே வேண்டுவது தொடக்கஞ்செய் வீர்வெல்வீர் மொழிப்போர் வெல்க! 120

---------------


This page was first put up on August 29, 2000
Please send your comments and corrections to the Webmaster(s) of this site