Holy Bible - New Testament - part IV
Corinthians I & II
(in tamil script, Unicode/UTF-8 format)
திருவிவிலியம் - புதிய ஏற்பாடு
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்,
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
Etext input: Rev.Fr. Adaikalarasa,sdb, St. Xavier's Church, Dindigul, Tamilnadu
Proof-reading : Mr. Mukundaraj Munisamy, Chennai, Tamilnadu
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to kalyan@geocities.com
ன Project Madurai 2000
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
Click here to access Part I of Holy
Bible- New Testament covering the Books of Mathew and Mark
Click here to access Part II of Holy
Bible- New Testament covering the Books of John and Luke
Click here to access Part III of Holy
Bible- New Testament covering the Book of Acts
Holy Bible -New Testament -Corinthian I
திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்
1. அதிகாரம்
1 கொரி. 1.1 கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது
1 கொரி. 1.2 இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும் எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும்
1 கொரி. 1.3 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக. இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல அனைவருக்கும் ஆண்டவர்.
1 கொரி. 1.4 கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன்.
1 கொரி. 1.5 ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.
1 கொரி. 1.6 மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1 கொரி. 1.7 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.
1 கொரி. 1.8 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.
1 கொரி. 1.9 கடவுள் நம்பிக்கைக்குரியவர் தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.
1 கொரி. 1.10 சகோதர சகோதரிகளே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்.
1 கொரி. 1.11 என் அன்பர்களே உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலொயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர்.
1 கொரி. 1.12 நான் இதைச் சொல்லக் காரணம் உங்களுள் ஒவ்வொருவரும் "நான் பவுலைச் சார்ந்துள்ளேன் " என்றோ "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் " என்றோ "நான் கேபாவைச் சார்ந்துள்ளேன் " என்றோ "நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன் " என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம்.
1 கொரி. 1.13 கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?
1 கொரி. 1.14 கிறிஸ்பு காயு ஆகியோரைத் தவிர உங்களுள் வேறு எவருக்கும் நான் திருமுழுக்குக் கொடுக்கவில்லை. இதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
1 கொரி. 1.15 ஆகவே என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.
1 கொரி. 1.16 ஸ்தேவனா வீட்டாருக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்துள்ளேன். மற்றபடி வேறு எவருக்கும் திருமுழுக்குக் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை.
1 கொரி. 1.17 திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.
1 கொரி. 1.18 சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.
1 கொரி. 1.19 ஏனெனில் "ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன். அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன் " என்று மறைநூலில் எழுதியுள்ளது.
1 கொரி. 1.20 இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?
1 கொரி. 1.21 கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோ ரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.
1 கொரி. 1.22 யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள் கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.
1 கொரி. 1.23 ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.
1 கொரி. 1.24 ஆனால் அழைக்கப்பட்டவர்கள் யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.
1 கொரி. 1.25 ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது,மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.
1 கொரி. 1.26 எனவே சகோதர சகோதரிகளே நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்?
1 கொரி. 1.27 ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே வலியோரை வெட்கப்படுத்த வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.
1 கொரி. 1.28 உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்.
1 கொரி. 1.29 எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.
1 கொரி. 1.30 அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்.
1 கொரி. 1.31 எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு "பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.
---------------
2. அதிகாரம்
1 கொரி. 2.1 சகோதர சகோதரிகளே கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை.
1 கொரி. 2-2 நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.
1 கொரி. 2.3 நான் உங்கள் நடுவில் வலுவற்றவனாய் மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன்.
1 கொரி. 2.4 நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
1 கொரி. 2.5 உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல,கடவுளின் வல்லமையே.
1 கொரி. 2.6 எனினும் முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள்.
1 கொரி. 2.7 வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
1 கொரி. 2.8 இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால் அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.
1 கொரி. 2.9 ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு "தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை செவிக்கு எட்டவில்லை மனித உள்ளமும் அதை அறியவில்லை. "
1 கொரி. 2.10 இதைக் கடவுள் தூய ஆவியின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார் கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.
1 கொரி. 2.11 மனிதரின் உள்ளத்திலிருப்பதை அவருள்ளிருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறியமுடியாது அன்றோ. அவ்வாறே கடவுள் உள்ளத்திலிருப்பதை அவர் தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார்.
1 கொரி. 2.12 ஆனால் நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்ளுகிறோம்.
1 கொரி. 2.13 ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்குரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை மாறாக தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம்.
1 கொரி. 2.14 மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணைகொண்டே ஆய்ந்துணர முடியும்.
1 கொரி. 2.15 ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும்
அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.
1 கொரி. 2.16 "ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்? " நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.
-----
3. அதிகாரம்
1 கொரி. 3.1 சகோதர சகோதரிகளே ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேசமுடியவில்லை. மாறாக நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும் கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன்.
1 கொரி. 3.2 நான் உங்களுக்குத் திட உணவை அல்ல பாலையே ஊட்டினேன். ஏனெனில் திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்.
1 கொரி. 3.3 நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில் பொறாமையும் சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்?
1 கொரி. 3.4 ஏனெனில் ஒருவர் "நான் பவுலைச் சார்ந்துள்ளேன் " என்றும் வேறொருவர் "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் " என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப்போக்கில்தானே நடக்கிறீர்கள்?
1 கொரி. 3.5 அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே. ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டாற்றுகிறார்கள்.
1 கொரி. 3.6 நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார், கடவுளே விளையச் செய்தார்.
1 கொரி. 3.7 நடுகிறவருக்கும் பெருமை இல்லை நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை.
1 கொரி. 3.8 நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர்.
1 கொரி. 3.9 நாங்கள் கடவுளின் உடன் உழைப்பார்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.
1 கொரி. 3.10 கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
1 கொரி. 3.11 ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.
1 கொரி. 3.12 அந்த அடித்தளத்தின்மேல் ஒருவர் பொன் வெள்ளி விலையுயர்ந்த கற்கள் மரம் புல் வைக்கோல் ஆகியவற்றுள் எதையும் வைத்துக் கட்டலாம்.
1 கொரி. 3.13 ஆனால் அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும் தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.
1 கொரி. 3.14 ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார்.
1 கொரி. 3.15 ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்.
1 கொரி. 3.16 நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?
1 கொரி. 3.17 ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது நீங்களே அக்கோவில்.
1 கொரி. 3.18 எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக் கொள்வோர் தாங்களே மடையராகட்டும்.
அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள்.
1 கொரி. 3.19 இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு "ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பர். "
1 கொரி. 3.20 மேலும் "ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார். "
1 கொரி. 3.21 எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல் அப்பொல்லோ கேபா ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே.
1 கொரி. 3.22 அவ்வாறே உலகம் வாழ்வு சாவு நிகழ்காலம் எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே.
1 கொரி. 3.23 ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள் கிறிஸ்து கடவுளுக்குரியவர்.
-----
4. அதிகாரம்
1 கொரி. 4.1 நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள் கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும்.
1 கொரி. 4.2 பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ.
1 கொரி. 4.3 என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன்.
1 கொரி. 4.4 எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விட மாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே.
1 கொரி. 4.5 எனவே குறித்த காலம் வருமுன் அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார் உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.
1 கொரி. 4.6 சகோதர சகோதரிகளே உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில் "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே " என்பதின் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள் இறுமாப்புக் கொள்ளாதீர்கள்.
1 கொரி. 4.7 நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்?
1 கொரி. 4.8 தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே
1 கொரி. 4.9 கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கம் கடையராக்கினார். நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள்போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.
1 கொரி. 4.10 நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள் நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள் நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள் நாங்களோ மதிப்பற்றவர்கள்.
1 கொரி. 4.11 இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம் நாடோ டிகளாய் இருக்கிறோம்.
1 கொரி. 4.12 எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும் போது ஆசி கூறுகிறோம் துன்புறுத்தப்படும்போது பொறுத்துக் கொள்கிறோம்.
1 கொரி. 4.13 அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போலானோம். இதுவரை அனைத்திலும் கழிவுப்பொருட்கள் எனக் கருதப்பட்டு வருகிறோம்.
1 கொரி. 4.14 உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன்.
1 கொரி. 4.15 கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம் ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.
1 கொரி. 4.16 ஆகையால் நீங்கள் என்னைப்போலாகுங்கள் என அறிவுரை கூறுகிறேன்.
1 கொரி. 4.17 இதற்காகவே திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர் என் அன்பார்ந்தபிள்ளை. ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர். நான் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலையில் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளை அவர் உங்களுக்கு நினைவூட்டுவார். அவற்றையே நான் எங்கும் எல்லாத் திருச்சபைகளிலும் கற்பித்து வருகிறேன்.
1 கொரி. 4.18 நான் உங்களிடம் வரப்போவதில்லை என உங்களுள் சிலர் எண்ணி இறுமாப்புக் கொண்டிருக்கின்றனர்.
1 கொரி. 4.19 ஆனால் ஆண்டவர் திருவுளம் கொண்டால் நான் உங்களிடம் விரைவிலேயே வருவேன். இறுமாப்புக் கொண்டுள்ள அவர்கள் என்ன பேசுகிறவர்கள் என்பதை அல்ல அவர்களால் என்ன செய்யமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் போகிறேன்.
1 கொரி. 4.20 இறையாட்சி பேச்சில் அல்ல செயல்பாட்டில்தான் இருக்கிறது.
1 கொரி. 4.21 நான் பிரம்போடு வரவேண்டுமா அல்லது அன்போடும் கனிவான உள்ளத்தோடும் வரவேண்டுமா? எதை விரும்புகிறீர்கள்?
------
5. .அதிகாரம்
1 கொரி. 5.1 உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறுமனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்திடையே கூடக் காணப்படவில்லை.
1 கொரி. 5.2 இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டாமா?
1 கொரி. 5.3 நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன்.
1 கொரி. 5.4 நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு
1 கொரி. 5.5 அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம்.
1 கொரி. 5.6 நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்புமாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
1 கொரி. 5.7 எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்து விடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
1 கொரி. 5.8 ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல மாறாக நேர்மை உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.
1 கொரி. 5.9 பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு என் கடிதத்தில் எழுதியிருந்தேன்.
1 கொரி. 5.10 ஆனாலும் இவ்வுலகில் பரத்தைமையில் ஈடுபடுவோர் போராசையுடையோர் கொள்ளையடிப்போர் சிலைகளை வழிபடுவோர் ஆகியோரைப் பற்றி நான் பொதுவாக எழுதவில்லை. அப்படியானால் நீங்கள் இவ்வுலகை விட்டே வெளியேற வேண்டியிருக்குமே.
1 கொரி. 5.11 உங்கள் நடுவில் "சகோதரர் " அல்லது "சகோதரி " என்னும் பெயரை வைத்துக்கொண்டு பரத்தைமையில் ஈடுபடுவராகவோ பேராசையுடையவராகவோ சிலைகளை வழிபடுகிறவராகவோ பழிதூற்றுகிறவராகவோ குடிவெறியராகவோ கொள்ளையடிப்பவராகவோ இருப்பவர்களோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் உங்களுக்கு எழுதியிருந்தேன் அவர்களோடு உணவருந்தவும் வேண்டாம்.
1 கொரி. 5.12 திருச்சபைக்கு வெளியே இருப்பவர்கள் குற்றவாளிகள் என நான் ஏன் தீர்ப்பளிக்க வேண்டும்? கடவுளே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.
1 கொரி. 5.13 உள்ளே இருப்பவர்களுக்கு நீங்கள்தானே தீர்ப்பளிக்க வேண்டும்? ஆகையால் அத்தீயவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வையுங்கள்.
-----
6. அதிகாரம்
1 கொரி. 6.1 உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின் தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல் நம்பிக்கை கொள்ளாதவரிடம் செல்லத் துணிவதேன்?
1 கொரி. 6.2 இறைமக்கள்தான் உலகுக்குத் தீர்ப்பு அளிப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கே தீர்ப்பளிக்கப்போகும் நீங்கள் உங்களிடையே உள்ள சின்னஞ்சிறிய வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளத் தகுதியற்றவர்களாகி விட்டீர்களா?
1 கொரி. 6.3 வான தூதர்களுக்கும் தீர்ப்பு அளிப்பது நாம்தான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வழக்குகளை நீங்களே தீர்த்துக் கொள்ள முடியாதா?
1 கொரி. 6.4 அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச் சபையினரால் புறக்கணிக்கப்பட்டோ ரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி?
1 கொரி. 6.5 நீங்கள் வெட்கமடையவே இதைச் சொல்கிறேன். சகோதரர் சகோதரிகளிடையே உள்ள வழக்குகளைத் தீர்க்க உங்களுள் ஞானமுள்ளவர் ஒருவர்கூட இல்லையா?
1 கொரி. 6.6 சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா?
1 கொரி. 6.7 நீங்கள் ஒருவர்மீது மற்றவர் வழக்குத் தொடருவதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும். உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக் கொள்ளக்கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா?
1 கொரி. 6.8 ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள் வஞ்சித்துப் பறிக்கிறீர்கள் அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.
1 கொரி. 6.9 தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள் பரத்தைமையில் ஈடுபடுவோர் சிலைகளை வழிபடுவோர் விபசாரம் செய்வோர் தகாத பாலுறவு கொள்வோர் ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர்
1 கொரி. 6.10 திருடர் பேராசையுடையோர் குடிவெறியர் பழிதூற்றுவோர் கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை.
1 கொரி. 6.11 உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள் கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்.
1 கொரி. 6.12 "எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு " ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல. "எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு " ஆனால் எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன்.
1 கொரி. 6.13 "வயிற்றுக்கென்றே உணவு உணவுக்கென்றே வயிறு. " இவை இரண்டையுமே கடவுள் அழித்து விடுவார். உடல் பரத்தைமைக்கு அல்ல ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர்.
1 கொரி. 6.14 ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார்.
1 கொரி. 6.15 உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விலை மகளின் உறுப்புகளாகும்படி நான் செய்யலாமா? கூடவே கூடாது.
1 கொரி. 6.16 விலை மகளுடன் சேர்கிறவன் அவளோடு ஓருடலாகிறான் என்று தெரியாதா? "இருவரும் ஒரே உடலாயிருப்பர் " என்று மறைநூலில் சொல்லப்பட்டுள்ளதே.
1 கொரி. 6.17 ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்.
1 கொரி. 6.18 எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர்.
1 கொரி. 6.19 உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல.
1 கொரி. 6.20 கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.
------
7. அதிகாரம்
1 கொரி. 7.1 இப்போது நீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம். ஆம் பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது.
1 கொரி. 7.2 எனினும் எங்கும் பரத்தைமை காணப்படுவதால் ஆண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த மனைவியோடேயே வாழ வேண்டும் பெண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்தக் கணவரோடேயே வாழ வேண்டும்.
1 கொரி. 7.3 கணவர் தம் மனைவிக்கு மண வாழ்க்கைக்குரிய இமைகளைக் கொடுக்க வேண்டும் அதுபோல மனைவியும் தம் கணவருக்குக் கொடுக்க வேண்டும்.
1 கொரி. 7.4 மனைவிக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை கணவனுக்கே அந்த அதிகாரம் உண்டு. அப்படியே கணவருக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை மனைவிக்கே அந்த அதிகாரம் உண்டு.
1 கொரி. 7.5 மணவாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கொருவர் மறுக்காதீர்கள். இருவரும் ஒத்துக் கொண்டால் இறைவேண்டலில் ஈடுபடுவதற்காகச் சிறிது காலம் பிரிந்து வாழலாம். ஆனால் உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையில் சாத்தான் உங்களைச் சோதிக்காதபடி பிரிந்த நீங்கள் மீண்டும் கூடி வாழுங்கள்.
1 கொரி. 7.6 இதை நான் கட்டளையாகச் சொல்லவில்லை ஆனால் உங்கள் நிலைமையைக் கருதியே இப்படிச் சொல்கிறேன்.
1 கொரி. 7.7 எல்லாரும் என்னைப்போலவே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். எனினும் ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு. இது ஒருவருக்கு ஒருவகையாகவும் வேறொருவருக்கு வேறு வகையாகவும் இருக்கிறது.
1 கொரி. 7.8 இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவே. அவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது.
1 கொரி. 7.9 எனினும் அவர்கள் தன்னடக்கமில்லாதவர்கள் என்றால் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் காமத்தீயில் உருகுவதைவிடத் திருமணம் செய்து கொள்வதே நல்லது.
1 கொரி. 7.10 திருமணமானவர்களுக்கு நான் கட்டளையாகச் சொல்வது இதுவே. "மனைவி கணவிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது. " இது என்னுடைய கட்டளையல்ல .
1 கொரி. 7.11 மாறாக ஆண்டவருடையது. அப்படிப் பிரிந்து வாழ்ந்தால் மறுமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது கணவருடன் ஒப்புரவாக வேண்டும். கணவரும் மனைவியை விலக்கிவிடக் கூடாது.
1 கொரி. 7.12 மற்றவர்களுக்கு நான் சொல்வது இதுவே இதை ஆண்டவரல்ல நானே சொல்கிறேன் சகோதரர் ஒருவரின் மனைவி நம்பிக்கை கொள்ளாதவரானாலும் தொடர்ந்து அச்சகோதரரோடு வாழ உடன்பட்டால் அவர் அவரை விலக்கிவிடக் கூடாது.
1 கொரி. 7.13 அப்படியே சகோதரி ஒருவரின் கணவர் நம்பிக்கை கொள்ளாதவரானாலும் தொடர்ந்து அச்சகோதரியோடு வாழ உடன்பட்டால் தம் கணவரை அவர் விலக்கிவிடக் கூடாது.
1 கொரி. 7.14 நம்பிக்கை கொள்ளாத கணவர் நம்பிக்கை கொண்ட தம் மனைவியால் தூயவராகிறார். அப்படியே நம்பிக்கை கொள்ளாத மனைவி நம்பிக்கை கொண்ட கணவரால் தூயவராகிறார். அப்படி இல்லையெனில் உங்கள் பிள்ளைகள் தூய்மையற்றவர்களாய் இருப்பார்களே. ஆனால் அவர்கள் தூயவர்களாய் இருக்கிறார்கள்.
1 கொரி. 7.15 கணவன் மனைவி ஆகிய இருவருள் நம்பிக்கை கொள்ளாத ஒருவர் பிரிந்து வாழ விரும்பினால் பிரிந்து வாழட்டும். இத்தகைய சூழ்நிலையில் நம்பிக்கை கொண்ட கணவனுக்கோ மனைவிக்கோ எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் கடவுள் உங்களை அமைதியுடன் வாழவே அழைத்துள்ளார்.
1 கொரி. 7.16 மணமான சகோதரியே ஒருவேளை உம்மால் உம் கணவர் மீட்படையலாம். மணமான சகோதரரே ஒருவேளை உம்மால் உம் மனைவி மீட்படையலாம். இது உங்களுக்குத் தெரியாதா?
1 கொரி. 7.17 எது எப்படியிருந்தாலும் ஒவ்வொருவரும் ஆண்டவர் அவரவருக்குப் பகிர்ந்தளித்த கொடையின்படியும் அவர் விடுத்த அழைப்பின்படியும் வாழட்டும். இதுவே நான் எல்லாத் திருச்சபைகளிலும் கொடுத்துவரும் கட்டளை.
1 கொரி. 7.18 விருத்தசேதனம் செய்யப்பட்ட நிலையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால் அவர் அந்நிலையிலேயே இருக்கட்டும். ஒருவேளை விருத்தசேதனம் செய்யப்படாத நிலையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால் அவர் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டாம்.
1 கொரி. 7.19 விருத்த சேதனம் செய்வதிலும் பயனில்லை செய்யாமல் இருப்பதிலும் பயனில்லை கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தலே பயன்தரும்.
1 கொரி. 7.20 ஒவ்வொருவரும் எந்நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அந்நிலையிலேயே நிலைத்திருக்கட்டும்.
1 கொரி. 7.21 அடிமை நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறீர்களா? அதுபற்றிக் கவலைப் பட வேண்டாம். எனினும் அந்நிலையிலிருந்து விடுதலை பெற முடியுமானால் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1 கொரி. 7.22 அடிமை நிலையில் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் ஆண்டவர் வழியாய் விடுதலை பெற்றவர் ஆகிறார். அப்படியே விடுதலை நிலையில் அழைக்கப்பபட்டவர் கிறிஸ்துவின் அடிமையாய் இருக்கிறார்.
1 கொரி. 7.23 நீங்கள் ஆண்டவரால் விலைகொடுத்து மீட்கப்பட்டீர்கள். எனவே மனிதருக்கு அடிமையாக வேண்டாம்.
1 கொரி. 7.24 சகோதர சகோதரிகளே நீங்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிற நிலையிலேயே கடவுள்முன் நிலைத்திருங்கள்.
1 கொரி. 7.25 இனி மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றி ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடமில்லை. எனினும் ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாயிருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன்.
1 கொரி. 7.26 மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.
1 கொரி. 7.27 மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.
1 கொரி. 7.28 நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
1 கொரி. 7.29 அன்பர்களே நான் சொல்வது இதுவே இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும்.
1 கொரி. 7.30 அழுபவர் அழாதவர் போலவும் மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும் பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும்.
1 கொரி. 7.31 உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.
1 கொரி. 7.32 நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன் மணமாகாதவர் ஆண்டவருக்கியவற்றில் அக்கறை கொள்கிறார் எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.
1 கொரி. 7.33 ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார் எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.
1 கொரி. 7.34 இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண் உலகுக்குயவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.
1 கொரி. 7.35 உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.
1 கொரி. 7.36 ஒருவர் காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணுடன் தவறாக நடக்க எண்ணங்கொண்டால் வேறு வழி இல்லையென்றால் அவர் திருமணம் செய்து கொண்டு தம் விருப்பத்தை நிறைவேற்றட்டும். அது பாவமல்ல.
1 கொரி. 7.37 ஆனால் தம் உள்ளத்தில் உறுதியாயிருந்து எந்தக் கட்டாயத்திற்கும் உட்படாமல் தம் சொந்த விருப்பப்படி செயல்படும் ஆற்றல் கொண்ட ஒருவர் தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணை அந்நிலையிலேயே வைத்திருக்கத் தம் உள்ளத்தில் தீர்மானம் செய்திருந்தால் அவர் செய்வதில் தவறில்லை.
1 கொரி. 7.38 ஆகவே தாம் ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணைத் திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார். எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார்.
1 கொரி. 7.39 கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்து கொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்பவர் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய் இருத்தல் வேண்டும்.
1 கொரி. 7.40 அவர் கைம்பெண்ணாகவே இருந்துவிட்டால் அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். இதுவெ என் கருத்து. நானும் கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப் பெற்றிருக்கிறேன் எனக் கருதுகிறேன்.
-----
8. அதிகாரம்
1 கொரி. 8.1 இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைக் குறித்துப் பார்ப்போம். நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும். ஆனால் அன்பு உறவை வளர்க்கும்.
1 கொரி. 8.2 தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறிய வேண்டிய முறையில் எதையும் அறிந்து கொள்ளவில்லை.
1 கொரி. 8.3 கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார்.
1 கொரி. 8.4 இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம். "இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை. கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை " என்று நமக்குத் தியும்.
1 கொரி. 8.5 விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம் தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உளர்.
1 கொரி. 8.6 ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே, அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே நமக்கு ஆண்டவரும் ஒருவரே அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.
1 கொரி. 8.7 ஆனால் இவ்வறிவு எல்லாரிடமும் இல்லை. இதுவரை சிலைகளை வழிபட்டுப் பழக்கப்பட்ட சிலர் அவற்றிற்குப் படைக்கப்பட்டவற்றைப் படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள். அவர்களின் மனச் சான்று வலுவற்றதாயிருப்பதால் அது கறைபடுகிறது.
1 கொரி. 8.8 நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்காது. உண்ணாதிருப்பின் அதனால் ஒரு குறையுமில்லை. உண்போமாயின் அதனால் ஒரு நிறைவுமில்லை.
1 கொரி. 8.9 ஆனால் உங்களுக்கிருக்கும் உரிமை மனவலிமையற்றவர்களுக்குத் தடைக்கல்லாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
1 கொரி. 8.10 "அறிவு " கொண்டுள்ள நீங்கள் சிலைவழிபாட்டுக் கோவிலில் பந்தியமர்ந்திருப்பதை வலுவற்ற மனச்சான்று உடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் காண்பாரானால் அவரும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணத் தூண்டப் பெறுவாரல்லவா?
1 கொரி. 8.11 இவ்வாறு இந்த அறிவு வலுவற்றவின் அழிவுக்குக் காரணமாகிறது. அவர் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் அல்லவா? அவருக்காகவும் கிறிஸ்து இறந்தார் அல்லவா?
1 கொரி. 8.12 இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால் அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.
1 கொரி. 8.13 ஆகையால் என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக்கல்லாக இருக்குமானால் இறைச்சியை ஒரு நாளும் உண்ணமாட்டேன். அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்கமாட்டேன்.
----
9. அதிகாரம்
1 கொரி. 9.1 எனக்குத் தன்னிமை இல்லையா? நானும் ஒரு திருத்தூதன் அல்லவா? நம் ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா? நான் ஆண்டவருக்காகச் செய்த வேலையின் விளைவாகத்தானே நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள்?
1 கொரி. 9.2 நான் திருத்தூதன் என மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும் உங்களுக்கு நான் திருத்தூதன் தானே. நீங்கள் ஆண்டவரோடு கொண்டுள்ள உறவே என் திருத்தூதுப்பணிக்கு அடையாளச் சின்னமாய் அமைகிறது.
1 கொரி. 9.3 இது குறித்து என்னிடம் கேள்வி கேட்போருக்கு எனது விளக்கம் இதுவெ
1 கொரி. 9.4 உண்பதற்கும் குடிப்பதற்கும் உரியவற்றைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா?
1 கொரி. 9.5 மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?
1 கொரி. 9.6 பிழைப்புக்காக உழைக்காமலிருக்க எனக்கும் பர்னபாவுக்கும் மட்டுந்தான் உரிமை இல்லையா?
1 கொரி. 9.7 யாராவது எப்போதாவது ஊதியமின்றிப் படைவீரராகப் பணியாற்றுவாரா? திராட்சைத் தோட்டம் போட்ட யாராவது அதன் பழங்களை உண்ணாதிருப்பாரா? மந்தையை மேய்க்கும் ஆயர் அதன் பாலை அருந்தாதிருப்பாரா?
1 கொரி. 9.8 மனித வழக்கத்தை மட்டும் வைத்து நான் இதைச் சொல்லவில்லை. திருச்சட்டமும் இதையே சொல்லவில்லையா?
1 கொரி. 9.9 மோசேயின் சட்டத்தில் "போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே " என்று எழுதியுள்ளதே. மாடுகளைப் பற்றிய கவலையினால் கடவுள் இதைச் சொல்கிறாரா?
1 கொரி. 9.10 அல்லது எங்கள் பொருட்டு இதைச் சொல்கிறாரா? ஆம் இது எங்கள் பொருட்டே எழுதப்பட்டுள்ளது. ஏனெனில் தமக்குப் பங்கு கிடைக்கும் என்னும் எதிர்நோக்குடன் உழுகிறவர் உழவேண்டும் போரடிக்கிறவரும் அதே எதிர்நோக்குடன் போரடிக்க வேண்டும்.
1 கொரி. 9.11 நாங்கள் ஆவிக்குரியவற்றை உங்களிடையே விதைத்திருப்பதால் எங்கள் உடலுக்குரிய தேவைகளை உங்களிடமிருந்து அறுவடையாகப் பெற்றுக் கொள்வது மிகையாகாது அல்லவா?
1 கொரி. 9.12 உங்களிடம் பங்கு பெற மற்றவர்களுக்கு உரிமை இருந்தால் எங்களுக்கு அதைவிட அதிக உரிமையில்லையா? அப்படியிருந்தும்கூட நாங்கள் இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்திக்கு எத்தடையும் வராதவாறு எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறோம்.
1 கொரி. 9.13 கோவிலில் வேலைசெய்வோர் கோவில் வருமானத்திலிருந்தே உணவுபெறுவர் பீடத்தில் பணிபுரிவோர் பலிப்பொருட்களில் பங்கு பெறுவர். இது உங்களுக்குத் தெரியாதா?
1 கொரி. 9.14 அவ்வாறே நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார்.
1 கொரி. 9.15 ஆனால் இவ்வுரிமைகளில் எதையும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதவுமில்லை. அவ்வாறு பெற்றுக்கொள்வதைவிட நான் சாவதே நல்லது. எனக்குரிய பெருமையை எவரும் அழித்துவிட முடியாது.
1 கொரி. 9.16 நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு.
1 கொரி. 9.17 இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது.
1 கொரி. 9.18 அப்படியானால் எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
1 கொரி. 9.19 நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.
1 கொரி. 9.20 யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு யூதரைப் போலானேன். நான் திருச்சட்டத்திற்கு உட்படாதவனாயிருந்தும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர அச்சட்டத்திற்கு உட்பட்டவர் போலானேன்.
1 கொரி. 9.21 திருச்சட்டத்திற்கு உட்படாதவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர திருச்சட்டத்திற்கு உட்படாதவர் போலவும் ஆனேன். ஆனால் நானோ கடவுளின் சட்டத்திற்கு உட்படாதவனல்ல ஏனெனில் நான் கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவன்.
1 கொரி. 9.22 வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
1 கொரி. 9.23 நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
1 கொரி. 9.24 பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள்.
1 கொரி. 9.25 பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம்.
1 கொரி. 9.26 நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன்.
1 கொரி. 9.27 பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.
-----
10. அதிகாரம்
1 கொரி. 10.1 சகோதர சகோதரிகளே நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர்.
1 கொரி. 10.2 அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
1 கொரி. 10.3 அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர்.
1 கொரி. 10.4 அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை.
1 கொரி. 10.5 அப்படியிருந்தும் அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
1 கொரி. 10.6 அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன.
1 கொரி. 10.7 அவர்களுள் சிலரைப்போல நீங்களும் சிலைகளை வழிபடாதீர்கள். அவர்களைக் குறித்தே "மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர் எழுந்து மகிழ்ந்து ஆடினர் " என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது.
1 கொரி. 10.8 அவர்களுள் சிலர் பரத்தைமையில் ஈடுபட்டனர். அதனால் ஒரே நாளில் இருபத்து முவாயிரம் பேர் மடிந்தனர். அவர்களைப்போல் நாமும் பரத்தைமையில் ஈடுபடக்கூடாது.
1 கொரி. 10.9 அவர்களுள் சிலர் ஆண்டவரைச் சோதித்தனர். அதனால் பாம்பினால் கடிபட்டு அழிந்து போயினர். அவர்களைப்போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது.
1 கொரி. 10.10 அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.
1 கொரி. 10.11 அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.
1 கொரி. 10.12 எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.
1 கொரி. 10.13 உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார் சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார் அதிலிருந்து விடுபட வழி செய்வார்.
1 கொரி. 10.14 எனவே என் அன்புக்குரியவர்களே சிலைவழிபாட்டை விட்டு விலகுங்கள்.
1 கொரி. 10.15 உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
1 கொரி. 10.16 கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா. அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா.
1 கொரி. 10.17 அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.
1 கொரி. 10.18 இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப்பொருட்களை உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா?
1 கொரி. 10.19 எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்?
1 கொரி. 10.20 மாறாக சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள் பேய்களோடு உறவுகொள்வதை நான் விரும்பவில்லை.
1 கொரி. 10.21 நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது.
1 கொரி. 10.22 நாம் ஆண்டவருக்கு இச்சலூட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?
1 கொரி. 10.23 "எல்லாவற்றையும் செய்ய இமையுண்டு ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவை அல்ல. "எல்லாவற்றையும் செய்ய இமையுண்டு " ஆனால் எல்லாம் வளர்ச்சிதரக் கூடியவை அல்ல.
1 கொரி. 10.24 எவரும் தன்னலம் நாடக்கூடாது மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்.
1 கொரி. 10.25 இறைச்சிக் கடையில் விற்கப்படும் எதையும் நீங்கள் உண்ணலாம் கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
1 கொரி. 10.26 ஏனெனில் "மண்ணுலகமும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை. "
1 கொரி. 10.27 நம்பிக்கை கொள்ளாதவருள் ஒருவர் உங்களை உணவருந்த அழைக்கும்போது நீங்கள் அவரோடு செல்ல விரும்பினால் அவர் உங்களுக்குப் பிமாறும் எதையும் உண்ணுங்கள் கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
1 கொரி. 10.28 எவராவது உங்களிடம் "இது படையல் உணவு " என்று சொன்னால் அவ்வாறு திவித்தவரை முன்னிட்டும் மனச்சான்றை முன்னிட்டும் அதை உண்ண வேண்டாம்.
1 கொரி. 10.29 உங்கள் மனச்சான்றை முன்னிட்டல்ல மற்றவருடைய மனச்சான்றை முன்னிட்டே இதைச் சொல்கிறேன். "ஏன் எனது தன்னிமை மற்றவருடைய மனச்சான்றின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்? "
1 கொரி. 10.30 "நான் நன்றியுடன் உணவருந்தினால் நன்றி கூறி அருந்திய உணவைக் குறித்து ஏன் பழிப்புரைக்கு ஆளாக வேண்டும்? " என்று ஒருவர் கேட்கலாம்.
1 கொரி. 10.31 அதற்கு நான் சொல்வது நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்.
1 கொரி. 10.32 யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்.
1 கொரி. 10.33 நானும் அனைத்திலும் அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல் பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.
-------
11. அதிகாரம்
1 கொரி. 11.1 நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.
1 கொரி. 11.2 நீங்கள் எப்போதும் என்னை நினைவு கூர்கிறீர்கள். நான் உங்களிடம் ஒப்படைத்த மரபுகளை நான் ஒப்படைத்தவாறே கடைப்பிடிக்கிறீர்கள் எனவே உங்களைப் பாராட்டுகிறேன்.
1 கொரி. 11.3 ஆனால் நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண். ஆணுக்குத் தலைவர் கிறிஸ்து. கிறிஸ்துவுக்கோ தலைவர் கடவுள்.
1 கொரி. 11.4 இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தலைவரை இகழ்ச்சிக்குள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும்.
1 கொரி. 11.5 இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளாத ஒவ்வொரு பெண்ணும் தம் தலைவரை இகழ்ச்சிகுள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும்.
1 கொரி. 11.6 தம் தலையை மூடிக்கொள்ளாக எந்தப் பெண்ணும் தம் கூந்தலை வெட்டிக் கொள்ளட்டும். கூந்தலை வெட்டிக்கொள்வதையும் தலையை மழித்து விடுவதையும் இகழ்ச்சியாகக் கருதினால் அவர் தம் தலையை மூடிக்கொள்ளட்டும்.
1 கொரி. 11.7 ஆண் தம் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் அவரே கடவுளின் சாயலும் பெருமையும் ஆவார். ஆனால் பெண் ஆணின் பெருமையாய் இருக்கிறார்.
1 கொரி. 11.8 பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை மாறாக ஆணிலிருந்தே பெண் தோன்றினார்.
1 கொரி. 11.9 மேலும் பெண்ணுக்காக ஆண் படைக்கப்படவில்லை மாறாக ஆணுக்காகவே பெண் படைக்கப்பட்டார்.
1 கொரி. 11.10 வான தூதர்களை முன்னிட்டுப் பெண் அதிகாரத்தின் அடையாளமாக தம் தலையை மூடிக்கொள்ள வேண்டும்.
1 கொரி. 11.11 எது எப்படி இருந்தாலும் ஆண்டவரோடு இணைக்கப்பட்ட நிலையில் ஆணின்றிப் பெண்ணில்லை, பெண்ணின்றி ஆணில்லை.
1 கொரி. 11.12 ஏனெனில் ஆணிலிருந்து பெண் தோன்றியதுபோலவே பெண் வழியாகவே ஆண் தோன்றுகிறார். ஆனால் அனைத்தும் கடவுளிடமிருந்தே தோன்றுகின்றன.
1 கொரி. 11.13 பெண்கள் தலையை மூடிக்கொள்ளாமல் கடவுளிடம் வேண்டுவது முறையா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
1 கொரி. 11.14 நீண்ட முடி வளர்ப்பது ஆண்களுக்கு மதிப்பு ஆகாது. ஆனால் அது பெண்களுக்குப் பெருமை தருவதாகும்.
1 கொரி. 11.15 இதை இயற்கையே உங்களுக்குக் கற்பிக்கிறது அன்றோ. ஏனெனில் பெண்களின் கூந்தலே அவர்களுக்குப் போர்வையாக அமைகிறது.
1 கொரி. 11.16 இதைப்பற்றி விவாதிக்க நினைப்போருக்கு நான் கூறுவது "இதைப் பொறுத்தவரை வேறு எந்த வழக்கமும் எங்களிடையே இல்லை கடவுளின் திருச்சபைகளிலும் இல்லை. "
1 கொரி. 11.17 இவ்வறிவுரைகளைக் கொடுக்கும் நான் உங்களைப் பாராட்ட மாட்டேன். ஏனெனில் நீங்கள் ஒன்றுகூடி வரும் போது நன்மையைவிடத் தீமையே மிகுதியாக விளைகிறது.
1 கொரி. 11.18 முதலாவது நீங்கள் சபையாகக் கூடி வரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஓரளவு அதை நம்புகிறேன்.
1 கொரி. 11.19 உங்களிடையே கட்சிகள் இருக்கத்தான் செய்யும். அப்போதுதான் உங்களுள் தகுதியுள்ளவர்கள் யாரென வெளிப்படும்.
1 கொரி. 11.20 இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல.
1 கொரி. 11.21 ஏனெனில் நீங்கள் உண்ணும் நேரத்தில் ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முந்தியே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள்.
1 கொரி. 11.22 உண்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது கடவுளின் திருச்சபையை இழிவுப்படுத்தி இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? என்ன சொல்வது? உங்களைப் பாராட்டுவதா? இதில் உங்களைப் பாராட்ட மாட்டேன்.
1 கொரி. 11.23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து
1 கொரி. 11.24 கடவுளுக்கு நன்றி செலுத்தி அதைப்பிட்டு "இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் " என்றார்.
1 கொரி. 11.25 அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் " என்றார்.
1 கொரி. 11.26 ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
1 கொரி. 11.27 ஆகவே எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்.
1 கொரி. 11.28 எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்.
1 கொரி. 11.29 ஏனெனில் ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்.
1 கொரி. 11.30 இதனால்தானே உங்களில் பலர் வலுவற்றோராயும் உடல்நலமற்றோராயும் இருக்கின்றனர் மற்றும் பலர் இறந்தும் விட்டனர்.
1 கொரி. 11.31 ஆனால் நம்மை நாமே சோதித்தறிந்தோமானால் நாம் தீர்ப்புக்கு ஆளாக மாட்டோ ம்.
1 கொரி. 11.32 இப்போது ஆண்டவர் நம்மைத் தீர்ப்புக்கு ஆளாக்கினால் அது நம்மைத் தண்டித்துத் திருத்துவதற்கே. உலகத்தோடு நாமும் தண்டனைத் தீர்ப்பு அடையாதிருக்கவே இப்படிச் செய்கிறார்.
1 கொரி. 11.33 எனவே என் சகோதர சகோதரிகளே உண்பதற்காக நீங்கள் ஒன்று கூடி வரும்போது ஒருவர் மற்றவருக்காகக் காத்திருங்கள்.
1 கொரி. 1134 ஒருவருக்குப் பசித்தால் அவர் தம் வீட்டிலேயே உணவருந்தட்டும். அப்போது நீங்கள் கூடிவருவது உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பை வருவிக்காது. மற்றவை குறித்து நான் வரும்போது அறிவுரைகள் தருவேன்.
------
12. அதிகாரம்
1 கொரி. 12.1 சகோதர சகோதரிகளே தூயஆவியார் அருளும் கொடைகளைக் குறித்துப் பார்ப்போம். அவற்றைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
1 கொரி. 12.2. நீங்கள் பிற இனத்தவராயிருந்தபோது ஊமைச் சிலைகள்பால் ஈர்க்கப்பட்டுத் தவறாக வழிநடத்தப்பட்டீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
1 கொரி. 12.3 கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேசும் எவரும் "இயேசு சபிக்கப்பட்டவர் " எனச் சொல்ல மாட்டார். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டடவரன்றி வேறு எவரும் "இயேசுவே ஆண்டவர் " எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1 கொரி. 12.4 அருள்கொடைகள் பலவகையுண்டு ஆனால் தூய ஆவியார் ஒருவரே.
1 கொரி. 12.5 திருத் தொண்டுகளும் பலவகையுண்டு ஆனால் ஆண்டவர் ஒருவரே.
1 கொரி. 12.6 செயல்பாடுகள் பலவகையுண்டு ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்.
1 கொரி. 12.7 பொது நன்மைக்காகவே தூய ஆவியின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.
1 கொரி. 12.8 தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார்.
1 கொரி. 12.9 அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள்கொடையையும் அளிக்கிறார்.
1 கொரி. 12.10 தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.
1 கொரி. 12.11 அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார் அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.
1 கொரி. 12.12 உடல் ஒன்றே உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார்.
1 கொரி. 12.13 ஏனெனில் யூதரானாலும் கிரேக்கரானாலும் அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.
1 கொரி. 12.14 உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல பல உறுப்புகளால் ஆனது.
1 கொரி. 12.15 "நான் கை அல்ல ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல " எனக் கால் சொல்லுமானால் அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா?
1 கொரி. 12.16 "நான் கண் அல்ல ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல " எனக் காது சொல்லுமானால் அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா?
1 கொரி. 12.17 முழு உடலும் கணாணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி?
1 கொரி. 12.18 உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார்.
1 கொரி. 12.19 அவை யாவும் ஒரே உறுப்பாயிருந்தால் உடல் என ஒன்று இருக்குமா?
1 கொரி. 12.20 எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே.
1 கொரி. 12.21 கண் கையைப்பார்த்து "நீ எனக்குத் தேவையில்லை " என்றோ தலை கால்களைப் பார்த்து "நீங்கள் எனக்குத் தேவையில்லை " என்றோ சொல்ல முடியாது.
1 கொரி. 12.22 மாறாக உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன.
1 கொரி. 12.23 உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன.
1 கொரி. 12.24 மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார்.
1 கொரி. 12.25 உடலில் பிளவு ஏற்படாமல் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டுமென்றே இப்படிச் செய்தார்.
1 கொரி. 12.26 ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.
1 கொரி. 12.27 நீங்கள் கிறிஸ்துவின் உடல் ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
1 கொரி. 12.28 அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும் இரண்டாவது இறைவாக்கினர்களையும் மூன்றாவது போதகர்களையும் பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும் அதன்பின் பிணி தீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள் துணைநிற்பவர்கள் தலைமையேற்று நடத்துபவர்கள் பல்வகை பரவசப்பேச்சு பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார்.
1 கொரி. 12.29 எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை.
1 கொரி. 12.30 எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே.
1 கொரி. 12.31 எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆவமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
------
13. அதிகாரம்