Kalevala - A Finland Epic -part I (verses 3-10)
(in tamil script, unicode-utf-8 format)

கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 3-10



தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத்
தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்)
Compiled by: Elias Lonnrot
Translated into Tamil by R.Sivalingam
Edited with an introduction by Asko Parpola


குறிப்புகள்
பாடல்களின் பொருளடக்கம்
கதாநாயகர்களின் பெயர்கள்
Introduction: Dr. Asko Parpola
அறிமுகம் (தமிழாக்கம்) டாக்டர் அஸ்கோ பார்பொலா
என்னுரை: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
கலேவலா - சொற்றொகுதி
கலேவலா - விளக்கக் குறிப்புகள்
கலேவலா - ஆதார நூல்கள்

Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu

ன Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.



பாடல் 3 - பாடற்போட்டி  *



அடிகள் 1 - 20: வைனாமொயினன் அறிவில் விருத்தி பெற்றுப் பிரபலமாகிறான்.

அடிகள் 21 -330: அவனுடன் போட்டிக்கு வந்த யொவுகாஹைனன், அவனை அறிவில் வெல்ல முடியாமல் போருக்கு அழைக்கிறான். சினங் கொண்ட வைனாமொயினன் மந்திரப் பாடல்களைப் பாடி அவனைச் சேற்றில் அமிழ வைக்கிறான்.

அடிகள் 331 - 476: மிகவும் துயருற்ற யொவுகாஹைனன், தனது சகோதரி ஐனோவை வைனாமொயினனுக்கு விவாகம்ம்செய்து தருவதாக வாக்களிக்கிறான். அதை ஏற்றுக்கொண்டு வைனாமொயினன் அவனை விடுவிக்கிறான்.

அடிகள் 477 - 524: மன வருத்தத்துடன் வீட்டுக்குச் சென்ற யொவுகாஹைனன், தனக்கு ஏற்பட்ட துரதிர்ஷடங்களைப் பற்றித் தாயாருக்குக் கூறுகிறான்.

அடிகள் 525 - 580: வைனாமொயினன் தனது மருமகனாக வரப் போவதை அறிந்து தாயார் மகிழ்ச்சியடைகிறாள். ஆனால் மகள் ஐனோ கவலைப்பட்டு அழுகிறாள்.



நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வாழ்நாள் முழுதும் வாழ்ந்தே வந்தான்
*வைனோ நிலத்து வனவெளி களிலே
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளியில்.
தன்கதை பலப்பல தாழ்விலா திசைத்தான்
மந்திரப் பாடல்கள் மாண்புறப் பயின்றான்.
நாளும் பொழுதும் பாடியே வந்தான்
இரவோ டிரவாய் இசைத்தே வந்தான்
நீண்ட தொன்மையின் நினைவுக் கதைகளை
தொடக்க காலத் தூயநற் கதைகளை    10
எல்லாச் சிறாரும் இவைகற் றிலராம்
வீரர்கள் மாத்திரம் விளங்கிக் கொண்டனர்
தீமை நிறைந்து தெரியுமிந் நாட்களில்
வாழ்வே முடிவுறும் வறுங்கடை நாட்களில்.

பாடற் செய்திகள் பரந்து கேட்டன
வெளியே செய்திகள் விரைந்து கேட்டன
வைனா மொயினனின் வனப்புறு பாடல்
நாயகன் தந்த ஞானச் செல்வம்
செய்திகள் சென்று தெற்கிலே பரவி
வடநிலம் புகுந்தும் விளக்கம் தந்தன.   20

இருந்தா னிளைஞன் யொவுகா ஹைனன்
லாப்பு லாந்தின் இளைத்ததோர் பையன்
ஒருமுறை கிராமம் ஒன்றிடைச் சென்றான்
அற்புதப் பாடலை அங்கே கேட்டான்
பாடல்கள் பாடும் பாங்கினைக் கேட்டான்
எழில்மிகும் பாடல்கள் இசைப்பதைக் கேட்டான்
வைனோ என்னும் வளமுறு நாட்டில்
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளியில்
அவைஅவன் அறிந்த அரும்பா டலிலும்
தந்தையின் பாட்டிலும் சாலச் சிறந்தவை.   30

அதனால் அகத்தே அல்லல் எழுந்து
நெஞ்சில் பொறாமை நிறைந்து வழிந்தது
வைனா மொயினன் எனும்வான் பாடகன்
தன்னிலும் சிறந்த தகையோன் என்பதால்;
அன்னையை நோக்கி அவன் புறப்பட்டான்
ஈன்ற குரவரை எதிர்கொள வந்தான்
புறப்படும் போதே புகன்றான் ஒருமொழி
மீண்டும் வருவது வெகுநிசம் என்றே
*வைனொலா நாட்டின் வதிவிடங் களிலே
எதிர்த்துவை னோவை எழிற்பாட் டிசைக்க.   40

தந்தை அவனைத் தடுத்துச் சொன்னார்
தந்தையும் தடுத்தார் தாயும் தடுத்தாள்
அவன்வை னோநிலம் அடைவது பற்றி
வைனோவை எதிர்த்து வாதிடல் பற்றி;
"எதிர்ப்புப் **பாடல்கள் எழுந்தாங் கேமிகும்
பாடல்கள் தோன்றிப் படுவாய் மயக்கில்
வாயும் தலையும் வளர்பனிப் புதையும்
இரண்டுகை முட்டியும் இதனால் மரக்கும்
கைகளை அசைத்தல் கடினம தாகும்
கால்களை நகர்த்தலும் கைகூ டாது."    50

இளைஞன் யொவுகா ஹைனன் சொன்னான்:
"எந்தையின் அறிவு ஏற்றமிக் குயர்ந்தது
தாயின் அறிவுமத் தகைசால் சிறந்தது
எனதறி வதைவிட இயல்பாற் சிறந்தது;
போட்டிநான் விரும்பிப் போட்டேன் என்றால்
மனிதர்கள் மத்தியில் வந்தெதிர்த் தேனெனில்
போட்டிப் பாணன்மேற் பொங்கிநான் பாடுவேன்
சொல்பவன் மீது சொற்களை வீசுவேன்
தேர்ந்த பாடகன் செருக்கறப் பாடுவேன்
தோற்ற பாடகனாக் குவேன் அவனை    60
பாதம் கல்லின் படுவணிப் புதையும்
மரத்தின் ஆடைகள் அரைத்தல மிருக்கும்
உள்ளம் பெரிய கல்லாய்க் கனக்கும்
தோள்களின் மீது தோன்றும் பாறைகள்
கல்லின் உறைகள் கைகளை முடும்
கடுங்கல் தொப்பி கொடுந்தலை யிருக்கும்."

புறப்பட் டேகினன் புகல்மொழி கேளான்,
வீரிய மழிந்த விலங்கினை எடுத்தான்
விலங்கதன் வாயினில் வெங்கனல் வந்தது
கால்களி லிருந்து கனற்பொறி யெழுந்தது   70
ஆங்கார விலங்கில் அணிகல மேற்றினன்
வன்னப் பொன்னிலாம் வண்டியின் முன்னே;
தானே வண்டியில் தருக்கோ டேறினன்
ஆசனத் தேறி அமர்ந்து கொண்டனன்
தாவும் பரிமேற் சாட்டை வீசினன்
மணிமனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்
புரவியும் பயணம் புறப்பட் டதுவே
பாய்பரி விரைந்து பறந்துசென் றதுவே.
தொடங்கிய பயணம் தொடர்ந்து நடந்தது
ஒருநாள் சென்றான் இருநாள் சென்றான்    80
முன்றாம் நாளும் முழுதும் விரைந்தான்
முன்றாம் நாளின் முடிவிலே பயணம்
வந்து சேர்ந்தான் வைனோ நாட்டில்
கலேவலா என்னும் கடும்புதர்ச் சமவெளி.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
பாதை வழியே படர்ந்துகொண் டிருந்தான்
அமைதியாய்த் தன்வழி அவன்வர லானான்
வைனோ என்னும் வளமுறு நாட்டில்
கலேவலா என்னும் கடும்புதர்ச் சமவெளி.   90

வந்தான் இளைஞன் யொவுகா ஹைனன்
நேருக்கு நேராய் நெடுவழி வந்தான்
ஏர்க்கால் ஏர்க்காலை இடித்துமுட் டியது
வளர்பரிக் கழுத்து வட்டப் பட்டியும்
இழுவைப் பட்டியும் பட்டியில் மோதின
இழுவை வளையம் வளையத் திடித்தது.

இங்ஙனம் ஆங்கே இரண்டும் நின்றன
நிலைத்து நின்றனர் நினைத்துப் பார்த்தனர்
வியர்வை ஏர்க்கால் மீமிசை வழிந்தது
ஏர்க்கால் களிலே எரிப்பொறி பறந்தது.    100
முதிய வைனா மொயினன் கேட்டான்:
"எந்த இனத்தை இயைந்தவன் நீதான்?
முட்டாள் தனமாய் முன்னே வந்தாய்
இவ்வழி விவேகம் இன்றியே வந்தாய்
வளைமரக் கண்ட **வளையம் முறித்து
இளமரத் தமைந்த ஏர்க்கால் உடைத்து
எனது வண்டியை இடித்து நொருக்கி
நான்படர் வண்டியை நாடிச் சிதைத்தது?"

அப்போ திளைய யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:   110
"நான்தான் இளைஞன் யொவுகா ஹைனன்
எதுஉன் சொந்த இனம்அதை இயம்பாய்
எந்த இனத்தை இயைந்தவன் நீதான்
இழிந்தவன், இழிந்த பாங்கினில் இயைந்தோன்?"

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தனது பெயரைத் தானே புகன்று
தொடர்ந்து மேலும் சொல்லுரை பகர்ந்தான்:
"இளைஞன் யொவுகா ஹைனன் நீயெனில்,
விலகிநில் வழியை விட்டுச் சற்றே,
என்னிலும் பார்க்க இளையவன் வயதில்".   120

அப்போ திளைய யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இளமை ஒருபொருட் டில்லைமா னுடரில்
இளமையும் முதுமையும் ஏதெனல் இல்லை
அறிவிற் சிறந்தோர் ஆரிங் கறியலாம்
ஆற்றலும் திறனும் ஆர்க்குள தறியலாம்
நிற்கலாம் பாதையில் நிகரில் அறிவினன்
மற்றவன் விலகி வழியினை விடலாம்;
முதிய வைனா மொயினன் நீயெனில்
நிலைபெறும் பாடகன் நீயே யென்றால்     130
பாடல் நாமே பாடத் தொடங்குவோம்
படித்த சொற்களைப் பகரத் தொடங்குவோம்
ஒருவரை ஒருவர் சோதனை செய்து
ஒருவரை ஒருவர் தோற்கச் செய்வோம்."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"என்னைப் பற்றியான் எதுசொல வப்பா?
மாயம் தெரிந்ததோர் வளர்பா டகனாய்
என்றும் வாழ்ந்தேன் எனதுவாழ் நாளில்
இவ்விளை நிலத்தில் இந்நிலப் பரப்பில்    140
இல்லத்து வயலின் எல்லைப் புறத்தில்
வீட்டுக் குயிலினைக் கேட்டுக் கொண்டே;
ஆயினும் அவைகள் அங்ஙனம் இருக்க,
செப்புவாய் எனக்குச் செவிகள்தாம் கேட்க
உனக்கு தெரிந்தவை எனைத்து என்பதை
மற்றையோர் தமைவிடக் கற்றுக் கொண்டதை?"

இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"சிலசங் கதிகள் தெரியும் எனக்கு
தெரியும் அவைகள் தெளிவாய் எனக்கு
அவற்றின் விளக்கமும் அறிவேன் நன்றாய்;   150
புகைத்துளை ஒன்று முகட்டில் இருந்தது
அடுப்பின் அருகே அனலும் இருந்தது.
நன்றாய் ஒருகடல் நாயும் வாழ்ந்தது
அங்கே சுற்றித் திரிந்ததப் புனல்நாய்
மருங்கே யிருந்த வஞ்சிர மீனையும்
வெண்ணிற மீனையும் விருப்போ டுண்டது.

வெண்ணிற மீனின் விரிவயல் மென்மை
வஞ்சிர மீனின் வளர்ப்பரப் பகன்றது
**கோலாச்சி மீன்பனிக் கொழும்புகார் மீதும்
சேற்றுமீன் குளிரிலும் சிந்தின முட்டை.   160
கூனிய கழுத்துறும் **மீனினம் ஒன்று
ஆழத்தில் இலையுதிர் காலத்து நீந்தும்
கோடையில் உலர்ந்தநன் மேடையில் சினைக்கும்
ஓரத்துக் கரையெலாம் உலாவியே திரியும்.

இதுவும் போதா தின்னமு மென்றால்
நுட்பச் செய்திவே றுளநன் கறிவேன்
இன்னொரு சங்கதி எனக்குத் தெரியும்:
**மானிடம் கொண்டே வடக்கில் உழுதனர்
பெண்பரி தெற்குப் பெரும்பகு தியிலும்
லாப்பில் **காட்டெரு தும்பயன் பட்டன;   170
*பிஸாமலை மரங்களைப் பெரிதும் அறிவேன்
அறிவேன் *அசுர மலைத்தேவ தாருவை
பிஸாமலை மரங்கள் பெரிதுயர்ந் துறுபவை
வளர்தோங் கசுர மலைத்தேவ தாருவாம்.
மூன்றுநீர் வீழ்ச்சிகள் முழுவலி யுடைத்தாங் (கு)
ஊன்று மூவேரிகள் உயர்சிறப் புடனுள
மூன்று உயர்ந்த முதுமலை தாமும்
வானக் கூரை வளைவின் கீழே:
*ஹமேஎனு மிடத்தில் *ஹல்லா நீர்ச்சுழி
*கரேலி யாவில் *காத்ரா வீழ்ச்சி    180
*வுவோக்ஸியை யாரும் வென்றது மில்லை
*இமாத்திரா யாரும் கடந்தது மில்லை."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"பிள்ளையின் அறிவு, பெண்ணின் புத்தி,
தாடி யுளோர்க்குத் தகுந்ததே யில்லை,
பொருத்தமே யில்லைப் புணர்மனை யுளார்க்கு
ஆழ்ந்த முலத்தின் அர்த்தம் சொல்வாய்,
நித்தியப் பொருட்களின் தத்துவம் சொல்வாய்!"

பின்னர் இளைய யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:   190
"ஒருசிறு **குருவியின் பிறப்புத் தெரியும்
அதுஒரு பறவை இனமெனல் புரிவேன்
**விரியன் பாம்பு விடப்பாம் புணர்வேன்
**நன்னீர் மீனை மீனென் றுணர்வேன்
இரும்பு கடினம் என்பதை யறிவேன்
கருமைச் சேறு கடும்உவர்ப் புணர்வேன்
கொதிக்கும் நீரோ கொடுந்துய ரிழைக்கும்
நெருப்பின் சூடு பெருங்கே டமைக்கும்.

புனல்தான் தொன்னாள் பூச்சு மருந்து
நீர்ச்சுழி நுரையே நேர்ப் பரிகாரம்    200
படைத்தவன் தான்பெரும் மந்திர வாதி
இறைவன் தான்பழம் மருத்துவ னாவான்.

நீரின் பிறப்பு நீண்மலை முடியில்
தீயின் பிறப்புத் திகழ்சொர்க் கத்தே
இரும்பின் முலம் துருவின் துகள்கள்
தாமிரம் கிடைப்பது மாமலை முடிவில்.

ஈரமேல் நிலமே வீறுகொள் பழம்பதி
அலரி மரமே முதல்வளர் தருவாம்
தேவதா ரடியே திகழ்முத லில்லம்
கல்லால் ஆனதே கலயமா தியிலே."    210

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இன்னமும் நினைவில் இருப்பன வுளவோ
குதர்க்கம் யாவும் கூறி முடிந்ததோ?"

இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"இன்னமும் நினைவில் இருப்பன கொஞ்சம்
அந்நே ரத்தை அகத்திடை மீட்கிறேன்
ஆழியை நான்உழும் அப்போ தினிலே
ஆழியில் ஆழம் அமைந்தஅந் நேரம்
மீனின் வளைகள் மிகத்தோண் டுகையில்   220
ஆழத்தின் ஆழம் அகழ்ந்தவே ளையிலே
ஏரிகள் யாவும் இயற்றிடும் நேரம்
பருவதம் யாவையும் பாங்குறப் பிரித்து
குன்றுகள் யாவையும் குவித்தவே ளையிலே.

வேறென்ன நானே ஆறாம் மனிதன்,
ஏழாம் விறல்சேர் ஏந்தலும் நானே
இந்த வையகம் தோன்றிய பொழுது
பைங்கால் பிறந்து பரவிய பொழுது
நீள்வான் இடைத்தூண் நிறுவிய பொழுது
சுவர்க்க வளைவுகள் தோன்றிய வேளை    230
நன்னிலா வானில் நகர்ந்தநே ரத்தே
செங்கதிர்க் குதவிகள் செய்தநே ரத்தே
தாரகைக் குலத்தைச் சமைத்தஅவ் வேளை
நீலவான் மீன்கள் நிறைத்தவந் நேரம்."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"உண்மையில் நீதான் உரைத்தவை பொய்யே
அந்நே ரம்நீ அவனியில் இல்லை
ஆழப் பெருங்கடல் அன்றுழு கையிலே
கடலிற் குழிகள் குடைந்தவே ளையிலே
மீனின் வளைகள் மிகத்தோண் டுகையில்   240
ஆழத்தின் ஆழம் அகழ்ந்தபோ தினிலே
ஏரிகள் அனைத்தும் இயைந்தபோ தினிலே
பருவதம் யாவையும் பாங்குறப் பிரித்து
குன்றுகள் யாவையும் குவித்தவே ளையிலே.

உன்னைக் கண்டவர் ஒருவரு மில்லை
கண்டது மில்லைக் கேட்டது மில்லை
இந்த வையகம் தோன்றிய பொழுது
பைங்கால் பிறந்து பரவிய பொழுது
நீள்வான் இடைத்தூண் நிறுவிய பொழுது
சுவர்க்க வளைவுகள் தோன்றிய வேளை.   250
நன்னிலா வானில் நகர்ந்தநே ரத்தே
செங்கதிர்க் குதவிகள் செய்தநே ரத்தே
தாரகைக் குலத்தைச் சமைத்தஅவ் வேளை
நீலவான் மீன்கள் நிறைத்தவந் நேரம்."

அப்பொழு திளைய யொவுகள் ஹைனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"கூர்மைஎன் அறிவில் கூடிடா வேளை
கிளர்வாட் கூர்மையைக் கேட்பது உண்டு;
ஓ,நீ முதிய வைனா மொயின!
பாரியவா யுடைப் பாடகன் நீயே    260
எங்கள்வாள் முனைகளே இனித்தீர்ப் பளிக்கும்
வாள்களின் வீச்சே வருவிறல் காட்டும்."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அச்சம் என்பதென் ஆண்மையில் இல்லை
உனதுவா ளினிலோ உன்னறி வினிலோ
கத்தி முனையிலோ கள்ளத் தனத்திலோ.
அதுவது இப்போ தப்படி யிருப்பதால்,
கடுவாள் வீரம் காட்டஎண் ணுகிலேன்
உன்னுடன் மோதி, ஓ,நீ இழிந்தவன்,
ஓ,இழிந் தவனே, உன்னுடன் மோதி."   270

அப்பொழு திளைய யொவுகா ஹைனன்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே;
"எதிர்வாள் வீச்சை எவன்ஏற் கானோ
வன்வாள் முனையை மதிக்கான் எவனோ
அவனைப் பன்றியே ஆகப் பாடுவேன்
படுநீள் முகத்துப் பன்றி யாக்குவேன்
அத்தகு மனிதரை அங்ஙனம் செய்வேன்
அவனையவ் வாறே இவனையிவ் வாறே    280
அடர்எருக் குவியலில் அழியப் பண்ணுவேன்
முதுப்பசுத் தொழுவ முலையிற் போடுவேன்."

வைனா மொயினன் வஞ்சினங் கொண்டான்
வெஞ்சினத் தோடு வெட்கமு மடைந்தான்
அதனால் பாடற் கவனே தொடங்கினன்
அறிவுச் சொற்களை அவன்வெளி யிட்டான்;
பாடல்கள் குழந்தைப் பாடல்க ளல்ல
பிள்ளைப்பா வல்லது பெண்கேலி யல்ல
விறல்மிகும் தாடிகொள் வீரனின் பாட்டது
எல்லாப் பிள்ளையும் இசைக்கொணாப் பாட்டது   290
பாதிப் பையன்கள் பயின்றிடாப் பாட்டது
மூன்றிலோர் காதலர் மொழிந்திடாப் பாட்டது
தீமை நிறைந்து தெரியுமிந் நாட்களில்
வாழ்வே முடிவுறும் வறுங்கடை நாட்களில்.

முதிய வைனா மொயினன் பாடினன்
இப்புவி குலுங்கிற்(று) ஏரிகள் கலங்கின
தாமிர வெற்புகள் தலைநடுக் குண்டன
பெரும் பாறைகளோ பிளக்கத் தொடங்கின
குன்றுகள் இரண்டு கூறாய்ப் பறந்தன
சிகரம் சிதறித் தெரிகரை வீழ்ந்தன.    300

இளைய யொவுகா ஹைனனைப் பாடினான்:
உடைகளை நாற்றுச் செடிகளா யாக்கினான்
புரவியின் பட்டியை அலரியா யாக்கினான்
இழுவை**வார் அதைவளர் **சிறுமர மாக்கினான்;
பொன்னொளிர் வண்டிமேற் போந்தவன் பாடினான்
வாவியில் மரத்தினைப் போல்விழப் பாடினான்,
தளர்மணி தொங்கிய சாட்டையைப் பாடியே
நீரதன் கரையிலே நின்றபுல் லாக்கினான்,
வெண்சுட்டி முகத்தொடு விறற்பரி பார்த்தவன்
படிசுனை யருகுறும் பாறையா யாக்கினான்.   310
கனகமார் அவனது கைப்பிடி வாளினை
விண்ணகத் தொளிர்தரு மின்னலா யாக்கினான்,
வளமுறுங் கோலத்து வச்சிர தனுவதை
புனலின்மேற் பொலிவுறும் வானவில் லாக்கினான்,
அலர்சிறை பொருந்திய அம்புகள் அனைத்தையும்
விரைந்துவிண் பறந்திடும் பருந்துக ளாக்கினான்
கோணிய அலகுடை நாயினைப் பார்த்தவன்
நிலத்திலே கல்லென நிற்கவே சபித்தனன்.

பாடலால் தலைமிசைப் பதித்தநல் தொப்பி
மேலே எழுந்துவிண் மேகமாய் நின்றது,   320
மற்றொரு பாடலால் மலர்கரக் கையுறை
**குவளை மலரெனக் குளிர்புனல் நின்றது,
அவனணிந் திருந்த நீலமே லாடை
மேகக் கூட்டமாய் விண்மிசை யூர்ந்தது,
எழிலாய் இணைந்த இடுப்பின் பட்டி
விண்மிசை சிதறி விண்மீ னானது.

யொவுகா ஹைனனைத் தொடர்ந்தும் பாடினான்
சென்றான் அரைவரை சேற்றுச் சகதியில்
புதைந்தது இடுப்புப் பூட்டுச் சகதியில்
சென்றது **கக்கம் செறிமண் வரைக்கும்.   330

இப்போ திளைய யொவுகா ஹைனன்
தெரிந்து கொண்டனன் சீராய் உணர்ந்தனன்
தான்வந்த வழியைச் சரியாய் அறிந்தனன்
பயண மொன்றினைப் படுமனம் கொண்டதும்
பாப்போட் டியிலே பாடிட வந்ததும்
முதிய வைனா மொயினனை எதிர்த்ததும்.

நிலத்தில் காலைப் பெயர்த்துப் பார்த்தான்
முன்கால் தூக்க முடியவே யில்லை
அடுத்த காலையும் அசைத்துப் பார்த்தான்
அதுகற் காலணி இறுகிக் கிடந்தது.    340

பின்னர் இளைய யொவுகா ஹைனன்
வளர்நோ வறிந்தான் வருத்தப் பட்டான்
தொல்லைகள் கூடத் துயரம் உணர்ந்தான்.
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,உயர் ஞான வைனா மொயின!
நிலைபெறும் மாய நெறியறி முதல்வ!
மாயச் சொற்களை மீளப் பெறுவாய்
மந்திரப் பாடலை வாங்குவாய் திரும்ப
இந்தச் சிக்கலில் இருந்தெனை விடுப்பாய்
துன்பத் திருந்து தூக்கிநிம் மதிதா    350
அதிக பெறுமதி அளிப்பேன் உனக்கு
அரிதாம் பரிசுகள் அளிப்பேன் பற்பல."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சரிதான் எனக்குத் தருவாய் எவ்வெவை
மாயச் சொற்களை மீளப் பெற்றால்
மந்திரப் பாடலை வாங்கிக் கொண்டால்
இந்தச் சிக்கலில் இருந்துனை மீட்டால்
துன்பத் திருந்துகை தூக்கியே விட்டால்?"

இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"என்னிடம் தனுக்கள் இரண்டு உள்ளன    360
எழிலார் குறுக்கு இருஞ்சிலை இரண்டு
அவற்றிலே ஒன்று அடுகதித் தாக்கும்
மற்றொன் றோகுறி வைத்தே பாயும்
இரண்டு வில்லில்நீ ஒன்றைப் பெறுவாய்."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"ஆ,உன் தனுக்களில் ஆசையே இல்லை
அவ்இழி சிலைகளில் அக்கறை இல்லை
என்னிட முண்டு எண்ணிலாச் சிலைகள்
சுவர்களொவ் வொன்றிலும் சொருகியுள் ளனவே
ஆப்புகள் அனைத்திலும் அனேகம்உள் ளனவே   370
மனித ரின்றியே வானெலாம் திரியும்
வேட்பவ ரின்றியே வெளித் தொழில் புரியும்."
இளைய யொவுகா ஹெனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.

இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"என்னிடம் தோணிகள் இரண்டு உள்ளன
மங்கல மான மரக்கல மிரண்டு
கனமிலாத் தோணி கடுகதி செல்லும்
பெரும் பாரமேற்றும் பிறிதொரு தோணி
இரண்டி லொன்றை எடுத்துச் செல்வாய்."   380

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அத்தோ ணிகளில் ஆசையே இல்லை
இரண்டில் ஒன்றையும் இல்லைநான் பெறுதல்
அவற்றில் என்னிடம் அநேகமுள் ளனவே
உருளையொவ் வொன்றிலும் உறும்தடைப் பட்டே
ஒவ்வொரு குடாவிலும் உறும்அடை பட்டு
சீறுகாற் றெதிர்த்தும் சிலதோணி செல்லும்
சீரறு நிலையிலும் சிலபட கேகும்."
இளைய யொவுகா ஹெனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.   390

இளைய யொவுகா ஹைனன் இயம்பினன் :
"என்னிடம் உள்ளன இருபொலிக் குதிரை
எழிலார் புரவிகள் இரண்டென் னிடமுள
ஒன்றன் கடுகதிக் கொப்பிணை யில்லை
இழுவையின் இலட்சணம் எனலாம் மற்றது
இரண்டி லொன்றைநீ யீங்குபெற் றகல்வாய்."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அட,உன் புரவியில் ஆசையு மில்லை
வெண்காற் குதிரைகள் வேண்டிய தில்லை
அவற்றில் என்னிடம் அனேகமுள் ளனவால்   400
தொட்டிகள் அனைத்திலும் கட்டிக் கிடக்கும்
நிறைந்தே தொழுவம் அனைத்திலும் நிற்கும்
தெளிபுனல் போலத் திரண்ட முதுகுடன்
பின்புறங் கொழுத்த பெருந்தசை யுடனே."
இளைய யொவுகா ஹெனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.

இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
மாயச் சொற்களை மீளப் பெறுவாய்
மந்திரப் பாடலை வாங்குவாய் திரும்ப   410
பொன்தொப்பி நிறைகொள் பொற்கா சளிப்பேன்
அள்ளுமோர் தொப்பிகொள் வெள்ளிக ளளிப்பேன்
எந்தைபோ ரினிலே இவைகளைப் பெற்றார்
வெற்றிப் போரிலே பெற்றதிப் பொருள்கள்."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"வெள்ளிகள் எதுவும் வேண்டவே வேண்டாம்
இழிந்தோய், உனதுபொற் காசுகள் ஏற்கேன்
அவைகள் என்னிடம் அனேகம் உள்ளன
களஞ்சியம் அனைத்தும் கனத்தே கிடப்பன
பெட்டிகள் அனைத்தும் பெருகவே உள்ளன    420
நிலாவொளி நிகர்ப்ப நிலைபெறும் பொன்னாம்
தொல்பக லோன்போல் தோன்றிடும் வெள்ளிகள்."
இளைய யொவுகா ஹைனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.

இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
இந்தச் சிக்கல் இருந்தெனை விடுவிப்பாய்
துன்பத் திருந்து தூக்கிநிம் மதிதா
வீட்டு வைக்கோல் மிகுபோர் தருவேன்
அகல்மண் வயலெலாம் அடைக்கலம் தருவேன்   430
என்னுடை வாழ்வைமீட் டெடுப்பதற் காக
என்னைமீட் டெடுத்துக் கொள்வதற் காக."

முதிய வைனா மொயினன் மொழிந்தான் :
"வைக்கோற் போரிலே இச்சையும் இல்லை
இழிந்தமா னிடனே செழித்தமண் வயலிலும்;
மண்வயல் அனேகம் உண்டே எனக்கும்
எல்லாத் திசையிலும் இருப்பன அவைகள்
எல்லா வெளியிலும் இகல்போர் உளவாம்
எனது வயல்கள்தாம் எனக்குகந் தனவாம்
தானியக் குவியல்கள் சாலச் சிறந்தவை."   440
இளைய யொவுகா ஹைனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.

பின்னர் இளைய யொவுகா ஹைனன்
ஆற்றல் அனைத்தும் அழிந்த நிலையில்
தாடை வரைக்கும் தாழ்ந்தே நின்றான்
தாடியோ தீதுறும் தலத்திலே யிருக்க
வாயினை நிறைத்து வன்சே(று) ஆர்ந்திட
படுமரத் துண்டிலே பற்கள்போய் இறுக.

இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"ஓ,உயர் ஞான வைனா மொயின!    450
நிலைபெறும் மாய நெறியறி முதல்வ!
மீண்டும் பாடுநின் மேனிலைப் பாடலை
இளைத்த எனக்கிவ் விகவாழ் வருள்வாய்
எனக்கு விடுதலை இதிலிருந் தருள்வாய்
நீரோடை வந்ததென் நிலக்காற் கீழே
மண்ணும் எரிச்சலைக் கண்களில் தந்தது.

புனிதநற் சொற்களை இனிதுமீட் டழைத்தால்
மந்திர சக்தியை வரமீட் டெடுத்தால்
தருவேன் உனக்குச் சகோதரி *ஐனோ
தருவேன் உனக்குத் தாயீன் தனையை    460
தூய்மையா க்குவள்நின் தொல்வாழ் விடத்தை
நிலத்தைப் பெருக்கி நலத்தைச் செய்வாள்
மரத்தின் தட்டை உலர்த்தி எடுப்பாள் ;
கழுவித் தருவாள் முழுமே லாடைகள்
நேர்த்தியாய் பொன்னுடை நினக்கவள் நெய்வாள்
தேன்பல காரம் செய்வாள் இனிப்பாய்."

முதிய வைனா மொயினன் முடிவில்
இவ்வுரை கேட்டு இன்பமே கொண்டான்
யொவுகா ஹைனனின் யுவதியைப் பெற்றால்
கடுமுது காலம் கவனிப் பாளென.   470

களிப்பெனும் கல்லில் கருத்தோ டமர்ந்து
உயர்கவிக் கல்லில் ஓய்தலைப் பெற்று
ஒருகணம் பாடினான் மறுகணம் பாடினான்
படர்மும் முறையும் பாடலை யிசைத்தான்
புனிதச் சொற்களை இனிதுமீட் டழைத்தான்
மாயச் சொற்றொடர் மீளவும் பெற்றான்.

இளைய யொவுகா ஹைனன் மீண்டான்
தாடையோ சேற்றைத் தவிர்வெளி வந்தது
தாடியோ தீதுறும் தலம்வெளி வந்தது
பாறையில் இருந்துமீள் பரியதும் வந்தது   480
வண்டியோ புனற்கரை மரத்தினால் வந்தது
சலக்கரைப் புதர்நீள் சாட்டையும் வந்தது.
சறுக்குவண் டியிலே சாடியே ஏறினான்
வண்டியில் ஏறி வளமாய் அமர்ந்தான்
முறிந்த மனத்துடன் விரைந்தே சென்றான்
இதயம் நிறைந்திடும் துயருடன் சென்றான்
அன்புறும் அன்னையின் அருகினை நோக்கியே
உயர்வுறும் ஈன்றவர் உறைவிடம் நோக்கியே.
பெரும்ஒலி யார்ப்பக் கடுகதி சென்றான்
அகல்இல் நோக்கி ஆவலாய்ப் போனான்   490
வருகளஞ் சியத்தே வண்டியை நொருக்கி
வாயிற் படியிலேர்க் காலினை யுடைத்தான்.

அன்னையென் பவள்ஆழ் சிந்தனை செய்தாள்
தந்தையார் இங்ஙனம் வந்தெதிர் சொன்னார் :
"வன்கா ரணத்தொடே வண்டியை உடைத்தாய்
ஏர்க்கால் உடைத்ததில் இயல்கருத் துண்டு
ஏனப்பா நூதனம் இவ்வண்டி ஓட்டம்
வெகுமுட் டாள்போல் வீடேன் வந்தாய்?"
இளைய யொவுகா ஹைனன் அப்போது
கண்ணீர் பெருக்கிக் கவலைப் பட்டான்    500
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொப்பியைத் தூக்கி அப்புறம் வைத்தான்
உதடுகள் உலர்ந்து உரத்துப் போயின
வாய்வரை நாசி வளைந்து வந்தது.
தயங்கி தயங்கித் தாயவள் கேட்டாள்
வருத்தத் தாலொரு வாய்வினாக் கேட்டாள்:
"எதற்கு அழுதனை? என்மகன் இயம்பு!
இரங்கிய தெதற்கென் இளமையின் பயனே!
உதடுகள் உலர்ந்து உரத்தது எதற்கு
வாய்வரை நாசி வளைந்தது மெதற்கு?"   510

இளைய யொவுகா ஹைனன் இயம்பினன் :
"அன்னையே, தாயே, எனைச்சுமந் தவளே!
நிகழ்வின் காரண நிலையொன் றுண்டு
மந்திர வேலைகள் வலிதில் நடந்தமை
கண்ணீர் சிந்தக் காரண மாயின
மாயவித் தைகளால் வாய்புலம் பிட்டது;
நானும் இதற்காய் நாளெலாம் அழுவேன்
வாழ்நாள் முழுவதும் வேதனைப் படுவேன்
சமர்ப்பணம் செய்தேன் சகோதரி ஐனோ
அன்னையின் மகளை அளிக்கவாக் களித்தேன்   520
வைனா மொயினனைப் பேணுதற் காக
பாடகன் வாழ்க்கைப் படுதுணை யாக
உறுநொய் துற்றோன் ஒருதுணை யாக
முலையில் கிடப்போன் பாதுகாப் பிற்காய்."

செங்கரம் இரண்டையும் தேய்த்தனள் அன்னை
அங்கை இரண்டையும் அன்னாள் தேய்த்தபின்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அரியஎன் மகனே, அழுவதை நிறுத்து!
எதுவுமே காரணம் இல்லை அழற்கு
அதிகம் துன்புறற் கவசியம் இல்லை;   530
நான்நாட் களெலாம் நண்ணிய தொன்று
நாளெலாம் வாழ்வில் நச்சிய தொன்று
உயர்ந்தோன் எமது உறவினன் ஒருவன்
விறலோன் ஒருவன் வருவான் என்றே
வைனா மொயினன் மருமக னாக
உயர்பா டகனே உறவின னாக."
இளைய யொவுகா ஹைனன் சோதரி
செய்தியைக் கேட்டுச் சிந்தினள் கண்ணீர்
ஒருநாள் அழுதாள் இருநாள் அழுதாள்
வாயிற் படிகளின் வலமிருந் தழுதாள்    540
பெருந்துயர் கொண்டு பின்னரும் அழுதாள்
இதயத் துயரினால் ஏங்கியே அழுதாள்.
அவளது அன்னை அவளிடம் சொன்னாள்:
"என்னுயிர் ஐனோ, எதற்காய் அழுதாய்?
மாவலோன் ஒருவன் மாப்பிள்ளை யாவான்
உயர்ந்தோன் ஒருவனின் உயர்மனை யிருந்து
பல்கணி வழியே பார்வையைச் செலுத்தி
பேச்செலாம் பேசலாம் பீடத் தமர்ந்து."

இவ்விதம் அந்த எழில்மகள் இசைத்தாள்:
"அன்னையே, தாயே, எனைச்சுமந் தவளே!   550
அழுவதற் கெனக்கோர் அருங்கா ரணமுள
அழுதேன் எனது அழகுறும் குழற்கே
சடையாய் **வளர்ந்தஎன் தாழ்குழற் கழுதேன்
மென்மையாய் வந்தஎன் பொன்முடிக் கழுதேன்,
இளமையில் எல்லாம் ஒளித்தே யிருந்து
மறைவாகிப் போயின் வளர்ந்ததன் பின்னே.

எனதுவாழ் நாளெலாம் இதற்காய் அழுவேன்:
எல்லவன் ஒளியின் இனிமையைப் பார்த்து
விண்மதி ஒளியின் மென்மையைப் பார்த்து
வானத் தொளிரும் வண்ணம் பார்த்து.    560
இளமையில் இவற்றை இழத்தலும் வேண்டும்
வளர்சிறு வயதில் மறத்தலும் வேண்டும்
என்னுடைச் சகோதரன் இருந்தொழில் தளத்தில்
பரியுமென் தந்தையின் பலகணிப் பீடம்."

அன்னை யென்பவள் அவள்மகட் குரைத்தாள்
பிள்ளைக் கிவ்விதம் பிரியமாய்ப் பகர்ந்தாள்:
"தோய்மதி யீனத் துன்பம் தவிர்ப்பாய்
கண்ணீர் சொரியக் காரண மில்லை
எதுவித ஏதுவும் எழுதுயர்க் கில்லை
அல்லற் படுவதில் அர்த்தமும் இல்லை    570
கடவுளின் செங்கதிர் கதிர்களை ஒளிரும்
இகதலத் தெத்தகு இடத்திலு மிருந்து
மகிழ்பிதாச் சாளரம் மட்டிலு மல்ல
சோதரன் தொழிற்களத் தொன்றிலு மல்ல.
வளர்சிறு பழவகை மலையிலே யுண்டு
தனியொரு **பழவகை தரையிலும் உண்டு
அவற்றைநீ நன்குபோய் ஆய்ந்தெடுத் திடலாம்
புகுமிட மெங்கணும் போய்ப்பறித் திடலாம்
தந்தையின் வயல்வெளி தன்னிலென் றென்றும்
சகோதரன் **தீய்ந்நிலம் தங்குதற் கில்லை."    580



பாடல் 4 - ஐனோவின் முடிவு  *



அடிகள் 1 - 30: வைனாமொயினன் யொவுகாஹைனனின் சகோதரி ஐனோவைக் காட்டில் சந்தித்து உரையாடுகிறான்.

அடிகள் 31 - 116: ஐனோ அழுதபடியே வீட்டுக்கு ஓடிப் போய்த் தாயாருக்குச் சொல்லுகிறாள்.

அடிகள் 117 - 188: தாயார் அழுகையை நிறுத்திவிட்டு, அலங்காரம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கச் சொல்லுகிறாள்.

அடிகள் 189 - 254: ஐனோ மென்மேலும் அழுது ஒரு வயோதிப மனிதனை விவாகம் செய்ய முடியாது என்கிறாள்.

அடிகள் 255 - 370: ஐனோ கவலையில் காடுகளில் திரிந்து, ஒரு அபூர்வமான கடற்கரையை அடைந்து அதில் குளிக்கும் பொழுது அமிழ்ந்து போகிறாள்.

அடிகள் 371 - 434: அவளுடைய மரணச் செய்தியை ஒரு முயல் போய் வீட்டில் சொல்லுகிறது.
அடிகள் 435 - 518: அவளுடைய தாய் இரவு பகலாக அழுகிறாள்.


அதன்பின் இளமைப் பருவத்து ஐனோ
யொவுகா ஹைனனின் யெளவனச் சோதரி
துடைப்பம் பெறற்காய்த் தொடர்கா டடைந்தாள்
சென்றாள் **தூரிகை தேடிப் புதரிடை
ஒன்றைத் தந்தைக் கொடித்துச் சேர்த்தாள்
இரண்டாவ தொன்றை எடுத்தாள் தாய்க்காய்
மூன்றாவ தொன்றை முனைந்தாங் கெடுத்தாள்
தாழ்வில் செழுமைச் சகோதர னுக்காய்.

வீடு நோக்கிக் காலடி பெயர்த்தனள்
**பூர்ச்சம் புதர்கள் புணர்வழி யூடே    10
முதிய வைனா மொயினன் வந்தனன்
காரிகை யவளைக் காட்டிலே கண்டனன்
இலைதளை அடர்ந்த இருள்சோ லையிலே;
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"பிறருக் கல்ல பருவப் பெண்ணே,
எனக்குமட் டும்தான் இளங்கா ரிகையே
நித்தில ஆரம் நீகழுத் தணிவாய்
திகழ்மார் பதிலே சிலுவையை அணிவாய்
எழிலார் குழலை இணைத்துப் பின்னி
பட்டுத் துணியைப் பாங்குறக் கட்டு."    20

இனிவரும் சொற்களில் இளமகள் இசைத்தாள்:
"உனக்காக அல்ல ஒருவர்க்கு மல்ல
மார்பிற் சிலுவை மாண்போ டணிதல்
பட்டுத் துணியினால் பைங்குழல் பிணைத்தல்
**கப்பல் துணியில் அக்கறை இல்லை
கோதுமை ரொட்டிக் குறுதுய ரில்லை
கைத்தறித் துணிகளில் காலங் கழிக்கிறேன்
ரொட்டித் துகள்களில் திட்பமாய் வளர்கிறேன்
அன்புடை நெஞ்சத்(து) அப்பா அருகில்
மங்காப் பாசத்து மாதா துணையில்."    30

திருகிப் பிடுங்கினள் மார்பின் சிலுவையை
விரலணி விலக்கினள் விரல்களி லிருந்து
கழுத்தி லிருந்து கழற்றினள் மணிகள்
சிரசி லிருந்து செந்துணி விலக்கினள்
நிலத்தினி லிட்டனள் நிலத்துக் காக
சோலையில் எறிந்தனள் சோலைக் காக
விழிநீர் சிந்தி வீட்டை அடைந்தனள்
துன்புற் றழுதவள் தோட்டம் நடந்தனள்.

தந்தை பலகணி தன்மருங் கிருந்தார்
கோடரிப் பிடியைச் சீர்செய் தவராய்:    40
"எதற்காக அழுகிறாய், எளியஎன் மகளே?
எளியஎன் மகளே, இளமைப் பெண்ணே!"

"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
அதனா லேதான் அழுகிறேன் அப்பா
மிகவழு(து) அதனால் விண்ணப் பிக்கிறேன்
மார்பின் சிலுவை வறிதே கழன்றது
பட்டியி லிருந்தொரு படர்பூட் டவிழ்ந்தது
வியன்மார் பிருந்த வெள்ளிச் சிலுவையும்
இடுப்புப் பட்டியின் இயல்செப் பணியும்."   50

இருந்தான் சோதரன் எழில்வா யிற்கடை
வண்டிஏர் செதுக்கிய வண்ணம தாக:
"எதற்காக அழுகிறாய், எளியஎன் சோதரி?
எளியஎன் சோதரி, இளமைப் பெண்ணே!"

"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
அதனா லேதான் அழுகிறேன் சோதரா
மிகவழு(து) அதனால் விண்ணப் பிக்கிறேன்
விரலி லிருந்து விரலணி கழன்றது
கழுத்தி லிருந்து கதிர்மணி உதிர்ந்தது    60
விரலி லிருந்தஎன் வியன்பொன் மோதிரம்
கழுத்து மாலையின் கவின்வெண் மணிகள்."

இல்லின் கூடத்(து) இருந்தாள் சோதரி
பொன்னிலே கச்சணி பின்னிய வண்ணம்:
"எதற்காக அழுகிறாய், எளியஎன் சோதரி?
எளியஎன் சோதரி, இளமைப் பெண்ணே!"

"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
அதனால் அழுகிறேன் அருமைச் சோதரி
மிகவழு(து) அதனால் விண்ணப் பிக்கிறேன்   70
புருவத் திருந்து பொன்னணி கழன்றது
கூந்தலின் வெள்ளணி குலைந்து வீழ்ந்தது
நீலப் பட்டு நீள்விழி யிருந்து
சென்னிறப் பட்டும் சென்னியி லிருந்து."

முன்மணி மண்டபத்(து) அன்னை இருந்தாள்
பாலிருந் தாடை பகுத்த வண்ணமே:
"எதற்காக அழுகிறாய், எளியஎன் மகளே?
எளியஎன் மகளே, இளமைப் பெண்ணே!"

"தாயே, என்னைத் தனிசுமந் தவளே!
எனைவளர்த் தவளே, என்னுயி ரன்னாய்!   80
"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
எளியஎன் தாயே, இதனால் அழுகிறேன்,
மிகஅழு(து) இதனால் விண்ணப் பிக்கிறேன்
துடைப்பம் பெறற்காய்த் தொடர்கா டடைந்தேன்
சென்றேன் தூரிகை தேடிப் புதரிடை
ஒன்றைத் தந்தைக் கொடித்துச் சேர்த்தேன்
இரண்டாவ தொன்றை எடுத்தேன் தாய்க்காய்
மூன்றாவ தொன்றை முனைந்தாங் கெடுத்தேன்
தாழ்வில் செழுமைச் சகோதர னுக்காய்.   90
வீடு நோக்கிக் காலடி பெயர்த்தேன்
நற்புதர் வழியாய் நடந்தே வந்தேன்
குகைவழி வந்தகுரிசில் *ஒஸ் மொயினன்
தீய்ந்த நிலத்தில் *கலேவைனன் கூறினன்:
"எனக்காய் அணிவாய் எளிமைப் பெண்ணே
எனக்காய் மட்டும் எளிமைப் பெண்ணே
கழுத்தில் அணிவாய் கவின்மணி மாலை
திகழ்மார் பதிலே சிலுவையை அணிவாய்
எழிலார் குழலை இணைத்துப் பின்னி
பட்டுத் துணியினால் பாங்குறக் கட்டு."   100

சிறந்தஎன் மார்புச் சிலுவையைப் பெயர்த்தேன்
கழுத்தி லிருந்து கழற்றினேன் மாலை
நீல நூலினை நீள்விழி யிருந்து
சிவப்பு நூலினைச் சிரசினி லிருந்து
நிலத்திற் போட்டேன் நிலத்திற் காக
சோலையில் எறிந்தேன் சோலைக் காக
இங்ஙனம் நானே இயம்பினேன் பின்னர்:
"உனக்கா யல்ல ஒருவர்க்கு மல்ல
மார்பிற் சிலுவை மாண்போ டணிதல்
பட்டுத் துணியினால் பைங்குழல் பிணைத்தல்   110
கப்பல் துணியில் அக்கறை இல்லை
கோதுமை ரொட்டிக் குறுதுய ரில்லை
கைத்தறித் துணிகளில் காலங் கழிக்கிறேன்
ரொட்டித் துகள்களில் திட்பமாய் வளர்கிறேன்
அன்புடை நெஞ்சத்(து) அப்பா அருகில்
மங்காப் பாசத்து மாதா துணையில்."

பின்னர் இவ்விதம் அன்னையும் சொன்னாள்
பெற்றவள் மகளைப் பார்த்துப் பேசினாள்:
"அழுகையை நிறுத்துஎன் அன்புடைப் புதல்வி!
ஏக்கம் எதற்கென் இளமையின் பயனே!    120
உருகிய வெண்ணையை ஓராண் டுண்பாய்
பாங்குளோர் தமைவிடப் பசுமையாய் வருவாய்,
ஆண்டிரண் டினிலே அயில்வாய் **பன்றியை
வேறெவர் யாரிலும் மென்மையாய் வருவாய்,
உண்பாய் மூன்றில் ஒளிர்பா லேட்டை
ஏனைய யாரிலும் எழிலாய் வருவாய்.
மலையதி லுள்ள மண்டபம் சென்று
சீருடன் இருக்கும் சிறுஅறை திறப்பாய்
பெட்டக மீமிசை பெட்டக மாங்குள
பெட்டிக ளருகில் பெட்டிக ளிருக்கும்    130
திறப்பாய் மிகமிகச் சிறந்த பெட்டியை
மின்னும் முடியை மெதுவாய்த் திறப்பாய்
கனகத் தியற்றிய கச்சுகள் ஆறும்
நீலப்பா வாடை ஏழும் இருக்கும்
நிலவின் மகளால் நெய்தவை தாமவை
செங்கதி ரோன்மகள் செய்தவை தாமவை.
நற்சிறு பெண்ணாய் நானிருக் கையிலே
நளிர்இளம் பெண்ணாய் நானிருக் கையிலே
சிறுபழம் நாடிச் சென்றேன் வனத்துள்
பனிமலைச் சரிவிலே பழம்சில தேடினேன்   140
நிலாமகள் அப்போ(து) நெய்ததைக் கேட்டேன்
பெருங்கதி ரோன்மகள் பின்னிடக் கேட்டேன்
நீல நிறப்பொழில் நேர்பின் புறத்தில்
செழித்த பசும்பொழில் திகழ்பக் கத்தே.

மாதரின் பக்கம் வந்தேன் மெதுவாய்
அரிவையர் தமது அருகே நெருங்கி
நாரியர் தம்மிடம் நான்கேட் டேனால்
இனிவரும் சொற்களில் இயம்பினன் நானே:
'திங்களின் மகளே, நின்பொன் தருவாய்,
வெங்கதிர் மகளே, வெள்ளியைத் தருவாய்,   150
எதுவுமே யற்ற இச்சிறு மிக்கு
கனிவாய்க் கேட்கும் காரிகை எனக்கு.'

திங்களின் மகளும் செம்பொன் தந்தாள்
வெங்கதிர் மகளும் வெள்ளிதந் திட்டாள்
பொன்னை எனது புருவம் வைத்தேன்
வெள்ளியைச் சென்னி விளங்கவைத் திட்டேன்
மலரைப் போல மனையை நாடினேன்
தேடிவந் தேன்என் தாதையி னிடமே.

அணிந்துநான் பார்த்தேன் அந்நாள் மறுநாள்
தனிமுன் றாம்நாள் தரித்துப் பார்த்தேன்   160
புருவத் துப்பொன் பிரித்தே எடுத்து
சென்னிவெள் ளியையும் சேர்த்தே யெடுத்து
குன்றுயர் மாடம் கொண்டே சேர்த்து
பத்திர மாகப் பெட்டகத் திட்டேன்,
அன்று முதல்அவை அங்கே இருந்தன
இன்று வரைநான் எடுத்துப் பார்த்திலன்.
நயனத் தணிவாய் நல்லதோர் பட்டணி
பூணுவாய் புருவம் பொலிவுறு பொன்னணி
நித்தில ஆரம் நேர்கழுத் தணிந்து
பூணுக மார்பிற் பொன்மணிச் சிலுவை    170
மென்மையாய் செய்த மேலுடை அணிக
நுட்பமாய் நெய்த நூலா டையது
கம்பளி யதிலியை கனத்தபா வாடையும்
பாவாடை மேலொரு பட்டுப் பட்டியும்
பாங்குறப் பட்டிலே பண்ணுகா லுறையும்
எழிற்கா லணியும் இருகால் பூணுக;
கார்குழல் பின்னிக் கட்டிய பின்நீ
பட்டுப் பட்டி பாங்குறச் சூடுக
கனகநல் மோதிரம் கைவிரற் புனைந்து
பொன்னிலாம் வளையல்கள் பூணுக கைகளில்.   180

அவ்விட மிருந்து அகத்திடை வருக
களஞ்சியப் பக்கல் காலடி வைக்க!
உவகையில் திளைப்பர் உறவினர் எல்லாம்
திளைப்பர் இனத்தவர் செழுமென் னினைவில்;
பாதையில் பூப்போல் பவனிநீ வந்து
**சிறுபழம் போலே செம்மையுற் றுலவுவை
முன்னரை விடவும் முழுமெரு கொளிர்வாய்
அன்றிலும் பார்க்க அழகுடன் பொலிவாய்."

இவ்வித மொழிகளில் இயம்பினாள் அன்னை
மகளுக் கன்புடன் மாதா புகன்றாள் ;    190
ஆயினும் புதல்வி அதைமனம் கொண்டிலள்
மாதா மொழிகளை மகளோ கேட்டிலள்
அப்புறத் தோட்டத்து அழுது திரிந்தனள்
துன்பம் தோய்ந்து தோட்டம் நடந்தனள்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள் :
"நலமுறு நெஞ்சம் நயக்கும் உணர்வெது?
பாக்கியம் பெற்றோர் பயனுறு நினைவெது?
உறுநல நெஞ்சம் உணர்ந்திடு மிவ்விதம்
பாக்கியம் பெற்றவர் பாங்குறும் பேறிது   200
தொன்னீர் தோன்றிடும் துள்ளலைப் போலவும்
அல்லது மென்னீர் அலையது போலவும் ;
பாக்கியம் அற்றோர் பாங்குறும் உணர்வெது?
தனிநீள் வாலுடைத் தாரா நினைவெது?
பாக்கியம் அற்றோர் பாங்குறும் உணர்விது
தனிநீள் வாலுடைத் தாரா நினைவிது
பருவத முடியின் பனிக்கட் டியைப்போல்
கிணற்றிடைப் பட்ட கிளர்நீ ரதைப்போல்.

அடிக்கடி நானோர் அல்லலில் வீழ்கிறேன்
அல்லலின் பிள்ளையாய் அடிக்கடி தாழ்கிறேன்   210
எண்ணம் மிதிபடும் எளியபுல் லாயினன்
பேதையாய் தவழ்கிறேன் பெரும்புதர் நடுவில்
புற்றரை மத்தியில் போய்நான் திரிகிறேன்
தோப்பிலும் தூற்றிலும் தொடர்ந்தலைந் துழல்கிறேன்
கிளர்ந்தெழும் மனநிலை **கீலிலும் சிறப்பி(ல்)லை
என்னுளம் கரியிலும் இ(ல்)லையொரு வெளுப்பே.

அமையும்என் நிலையோ அருமையாய் இருந்திடும்
மென்மேல் என்நிலை மேன்மையுற் றிருந்திடும்
பிறப்பெடா திருந்தால் வளர்ந்திடா திருந்தால்   
பெரிதாய் நானுருப் பெறாதிருந் திருந்தால்   220
இன்னல்கள் நிறைந்த இவைபோல் நாட்களில்
இன்பங்க ளற்ற இத்தகு பூமியில்;
ஆறாம் நிசிவய ததில்இறந் திருந்தால்
அன்றெட் டாம்நிசி வயதழிந் திருந்தால்
எனக்கெனத் தேவைகள் ஏற்பட் டிருக்கா(து):
தூயசாண் நீளத் துணியது ஒன்றும்
அகத்தினில் வாழ அருநிலப் பரப்பும்
அன்னை யவளின் அழுகைசிற் றளவும்
எந்தையின் கண்ணீர் இன்னும் சிறிதும்
சகோதரன் விழிநீர் சற்றும் இருக்கா(து)."    230

அங்ஙனம் ஒருநாள் மறுநாள் அழுதாள்
அன்னையும் பின்னர் அகங்கனிந் துசாவினள் :
"பேதாய், பொருமுவ தெதற்குப் பெண்ணே?
வியாகுலப் பெண்ணே, வீண்முறை யீடேன்? "

"நான்பே தைப்பெண் நான்அழல் இதற்கே
முழுப்பொழு தும்நான் முறையீ டிட்டேன்
பேறிலா எனைநீ பெறுமா றுரைத்தாய்
உன்னுயிர் மகளுக் குரைத்தாய் இதனை
முதியஆ டவற்கு வதுவைக் கிசைத்தாய்
வயதாம் மனிதர்(க்கு) வழிகாட் டென்றாய்   240
தொய்து தளர்ந்தோன் துணையென எண்ணி
முலையிற் கிடப்போன் மனைவியா கென்றாய்
ஆணையிட் டாயேல் அதுநன் றிதைவிட
ஆழக் கடலின் அலைகள் அடியில்
தொல்வெண் மச்சச் சோதரி யாகென
தவழ்மீன் குழுநடுச் சகோதர னாகென ;
நடுக்கடல் இதைவிட நன்றா யிருக்கும்
அலைக்கீழ் வாழ்வது அருமையா யிருக்கும்
வெண்மீ னதனின் அண்முசோ தரியாய்
மீனின் மத்தியில் மிகுசகோ தரனாய்    250
வயதே றியவன் மனைவியா காமல்
தொய்ந்து தளர்ந்தோன் துணையா காமல்
தளர்கா லுறையொடு தள்ளா டுபவர்க்(கு)
தடிமேல் வீழ்ந்து தடுமா றுபவர்க்(கு). "

மலைமிசை யுள்ள மண்டபம் சென்றாள்
மண்டபத் துள்ளே மங்கையும் போனாள்
பேர்மிகும் சிறந்த பெட்டியைத் திறந்து
மூடியைப் பின்னால் வேகமாய்த் தள்ளி
அம்பொன் கச்சுகள் ஆறையும் தேடி
நீலப்பா வாடைகள் ஏழையும் கண்டாள்    260
அவைகளை எடுத்து அணிந்தாள் அவளே
அலங்கார மெல்லாம் அருமையாய்ச் செய்தாள் ;
பொன்னணி யதனைப் பூண்டாள் நுதலில்
வெள்ளியால் ஆனதை மிலைந்தாள் குழலில்
நீலப் பட்டதை நீள்விழிக் கணிந்து
சிவப்பிலாம் இழைகளை சிரசிற்சூ டினளே.

களஞ்சியம் அகன்று கடிதினிற் போந்து
கழனிப் பரப்பெலாம் கடந்தப் பாலும்
சதுப்பிலும் மேட்டுத் தரையிலும் திரிந்து
கலங்கிமங் கொளியிற் காடெலாம் அலைந்தாள்   270
னோ போக்கிலே புதுப்பாட் டிசைத்தாள்
அலைந்து திரிகையில் அவள்இவை புகன்றாள் :
"இதயம் நிறைய இன்னல் இருக்குமால்
தலைவலி ஒன்றும் தனியாய் வந்தது
ஆனாலும் இன்னல் இன்னலா காது
வலியென வந்தது வலியா யிராது
அதிட்டம் அற்றநான் அழிந்திட நேர்ந்தால்
மிகுதுயர் பேதைநான் விலகவும் நேர்ந்தால்
இப்பெருந் துன்பங்க ளிடையிலே யிருந்து
இவற்றிலே யிருந்தகன் றெழுந்திட முடிந்தால்.   280

இதுதான் உவப்பாய் எனக்குறும் நேரம்
வியனுல கிருந்துநான் விடைபெற் றேக
*மரண உலகின் மடிமேல் நடக்க
*துவோனி உலகைத் தொடர்ந்திடும் நேரம்;
என்னுயிர்த் தந்தை இனியழ மாட்டார்
தூயதாய் எனக்காய்த் துயர்ப்பட மாட்டாள்
சோதரி முகத்தில் துளிநீர் இராது
சகோதரன் விழிநீர் தான்சிந் தாது
அகல்நீர் புரண்டுநான் அழிந்து போனாலும்
மீன்நிறை கடலில் வீழ்ந்துவிட் டாலும்    290
ஆழத் தலைகளில் அமிழ்ந்துபோ னாலும்
கருநிறச் சேற்றில்நான் கடிதமிழ்ந் தாலும்."

ஒருநாள் நடந்தாள் இருநாள் நடந்தாள்
முன்றா வதுநாள் முற்றும் நடந்தாள்
கடைசியில் வந்தவள் கண்டாள் அலைகடல்
முதுபுதர்க் கடற்கரை முகம்கொடுத் திட்டாள்
இராவெனும் பொழுதும் எதிர்கொள வந்தது
மயங்கிருள் வந்துமுன் மறித்துநின் றதுவே.

அழுதனள் கன்னி அந்திப் பொழுதெலாம்
இருளாம் இரவெலாம் ஏங்கித் தவித்தனள்   300
நீர்நனைந் திட்ட நெடுங்கரைப் பாறையில்
வான்விரி பரந்த வளைகுடா எல்லையில்;
புலர்மறு காலைப் பொழுதும் விடிந்தது
கடல்முனை நோக்கி கயல்விழி செலுத்தி
வன்கடல் முனைமும் மாதரைக் கண்டனள்
மூவரும் கடலில் மூழ்கிக் குளித்தனர்
ஐனோ நான்காம் அரிவையா யிணைந்தாள்
ஆங்கொரு மெல்லியள் ஐந்தாவ தாகினள்.

அணிமேற் சட்டையை **அலரிமேற் போட்டாள்
**அரசில்பா வாடை யதனை யிட்டனள்   310
காலுறை கழற்றிக் கழித்தாள் வெறும்தரை
பாதணி எடுத்தீர்ம் பாறையில் வைத்தனள்
மணிகளை விலக்கி மணற்றரை சிந்தினள்
மிகுபரற் கற்றரை விரலணி வைத்தனள்.

பாறை தெரிந்தது படுகடல் நடுவண்
பொன்போல் மின்னிப் பொலிவாய் ஒளிர்ந்தது
நினைத்தனள் பாறையை நீந்தியே யடைய
நச்சினள் பாறைப் பக்கம் சாரவே.

பாவையும் முடிவிலே பாறையைச் சார்ந்து
பாங்குற விருந்தனள் பாறையுச் சியிலே   320
பொலிவுற மிளிரும் பொற்பா றையிலே
எண்ணிலா வர்ணம் இயைந்தொளிர் பாறையில்;
பாறையும் மெதுவதாய்ப் பைம்புனல் தாழ்ந்தது
அலைகளின் அடியிலே ஆழ்ந்துபோ னதுவால்
பாவையும் பாறையும் படுபுனல் அடியில்
ஐனோவும் பாறையின் அடிமிசைச் சென்றனள்.

அந்த இடம்தான் **கோழியின் அழிவிடம்
அங்குதான் பேதை அப்பெண் ணிறந்தாள்
மரணித்த நேர மங்கையின் கூற்றிது
ஆழத் தமிழ்கையில் அவள்புகல் மொழிகள்:  330
"குரைகடல் நானும் குளித்திடச் சென்றேன்
நீரின் பரப்பிலே நீந்தமுற் பட்டேன்
அங்கே நானோரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன்
என்னுடைத் தாதை என்அன் பப்பா
என்றுமே இந்த இகமுள வரையில்
பிடிக்கவே மாட்டார் பிறழ்மீ னாங்கே
படர்ந்து செறிந்தஅப் படர்புனற் பரப்பில்.

கரையிலே நானும் கழுவிடப் போனேன்
குரைகடல் இறங்கிக் குளித்திடச் சென்றேன்   340
அங்கே நானொரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன்
என்னுடை அன்னை என்அன் பம்மா
என்றுமே இந்த இகமுள வரையில்
குளிர்புனல் அள்ளிக் கொள்ளாள் கலயம்
மனையின் அயலுள வளைகுடா வதனில்.

கரையிலே நானும் கழுவிடப் போனேன்
குரைகடல் இறங்கிக் குளித்திடச் சென்றேன் 
அங்கே நானொரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன்   350
என்னுடைச் சோதரன் அன்புச் சோதரன்
என்றுமே இந்த இகமுள வரையில்
அடுப்போர்ப் புரவிக் காங்குநீர் வழங்கார்
கடலின் அயல்சார் கரைகளிற் சென்றேன்.

கரையிலே நானும் கழுவிடப் போனேன்
குரைகடல் இறங்கிக் குளித்திடச் சென்றேன் 
அங்கே நானொரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன்
என்னுடைச் சோதரி அன்புச் சோதரி
என்றுமே இந்த இகமுள வரையில்    360
நனிநீ ரள்ளி நயனம் கழுவாள்
மனையின் அருகுள வளைகுடா வதனில்.
கடல்நீ ராகக் காணும் அனைத்தும்
என்னுடல் ஓடும் இரத்தமே யாகும்
கடல்மீ னாகக் காணும் அனைத்தும்
என்னுடல் எடுத்த இறைச்சியே யாகும்
கரையிலே காணும் தாவர மனைத்தும்
வாய்ப்பிலாப் பேதையின் வளர்விலா வெலும்பே
பூமியில் தோன்றும் புல்லின மனைத்தும்
சிதைந்த பேதையின் சிகையதே யாகும்."  370

*** *** ***

மடமகள் முடிவிலே மரித்தனள் இவ்விதம்
எழிலுறும் கோழியொன் றிறந்ததிவ் விதமே.
இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்?
கரடிவந் திச்செய்தி கடிதேற்றுச் செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
ஆனாலும் செய்திசொலக் கரடிவர வில்லை
அதுதொலைந் தாயிற்றாம் ஆன்கூட்ட மொன்றில்.   380

இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்?

ஓநாய்வந் திச்செய்தி உடன்கொண்டு செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
ஆனாலும் செய்திசொல ஓநாய்வர வில்லை
அதுதொலைந் தாயிற்றாம் மறிக்கூட்ட மொன்றில்.

இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்   390
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்?

நரியொன்று இச்செய்தி நனிகொண்டு செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
ஆனாலும் செய்திசொல நரிவந்த தில்லை
அதுதொலைந் தாயிற்றாம் வாத்துக்கள் நடுவில்.

இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்?   400

முயலொன்று பெறும்செய்தி மொழிகொண்டு செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
செய்தியது முயல்கொண்டு சென்றங்கு சொல்லும்:
"மனிதரிடை இச்செய்தி மறைந்திட மாட்டாதே. "

முயல்வந்து செய்திகொடு முனைந்தோடிச் சென்று
**'முழுநீளச் செவி' யாங்கு கதைகொண்டு போந்து
வளைவான கால்கொண்டு வலுவிரைவி லோடி
**'சிலுவைவாய்' யதுவாங்கு சென்றுகடி தடையும்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்.   410

வந்தமுயல் *சவுனாவின் மண்டபத்து ளோடி
மண்டபத்து வளைவினிலே பருங்கியது வாடி.
குளியலறை மண்டபத்தில் கோதையர்கள் கூடி
தூரிகையும் கையுமாய் வரவேற்றார் நாடி:
"சமையலாய் மாறவா சடிதியிலே வந்தாய்
பூத்தபெரு விழிகளினைப் பொரித்திடவா வந்தாய்
இல்லத்து எசமானர் இரவுணவுக் காக
இல்லையேல் எசமாட்டி நல்லுணவுக் காக
அல்லையேல் அருமைமகள் சிற்றுணவுக் காக
அதுவுமிலை யேல்மகனின் பகலுணவுக் காக?"   420

பின்னர் மெதுவாகப் பேசிற்று முயலும்
கூர்**'வட்ட விழி' விரிவாய்க் கூறிற்றே யாங்கு:
"பெரும்பாலும் இவண்வந்து பிசாசுதான் கூடும்
பெய்யுகல மதிற்சேர்ந்து கறிகளாய் மாறும்;
இப்போது நானிந்தச் செய்திகொடு வந்தேன்
என்வாயால் நானிந்த மொழியியம்பு கின்றேன்.
அழிந்ததுவே இங்கோயோர் அழகினிலும் அழகு
ஆ, அழிந்து போனதொரு **தகரமார் பணியே

வீழ்ந்ததுவே வெள்ளியினால் ஆனதொரு பட்டம்
**வெறிதாழ்ந்து போனதொரு செப்பினரும் பட்டி   430
அலைகடலின் ஆழத்தில் அதுதாழ்ந்து போச்சே
அலைதிரையின் அடிநீரில் அதுமாண்டு போச்சே
வெண்மீனின் நல்லதொரு சோதரியே யாக
மீனினத்தின் நடுவணொரு சோதரனே யாக."

*** *** ***

அன்னை அறிந்து அல்லலுற் றழுதாள்
புனற்றடம் போலப் புரண்டது விழிநீர்
இதன்பின் அன்னை இயம்பத் தொடங்கினள்
திரமிகு மொழிகளில் செப்பிட லானாள்:
"தவப்பே றில்லாத் தாயீர் வேண்டாம்
என்றும் ஆயுளில் இச்செயல் வேண்டாம்    440
தங்கள் மகளிரைத் தாலாட் டாதீர்
அவரவர் பிள்ளையை ஆராட் டாதீர்
மனம்மா றானால் வதுவைசெய் யாதீர்
என்போல் அதிட்டம் இல்லா அன்னையாய்,
பெண்களைச் சீராய்ப் பெரிதுதா லாட்டி
சிறியகோ ழிகளை விருப்புற வளர்த்தேன்."

அன்னை அழுதாள் கண்ணீர் உருண்டது
வருபுன லாகப் பெருகி வழிந்தது
நீல நிறத்து நெடுவிழி யிருந்து
காணாப் **பாக்கியக் கன்னங் களின்மேல்.   450

ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
காணாப் பாக்கியக் கன்னத் தின்வழி
மிதந்து பரந்த வியன்மார் பகத்தே.

ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
மிதந்து பரந்த வியன்மார் பூடே
மேதகு நெசவார் மேலுடை மீதே.

ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது   460
மேதகு நெசவார் மேலுடை வழியாய்
சிவப்பினில் இயைந்த செழுங்கா லுறைமேல்.

ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது  
சிவப்பினில் இயைந்த செழுங்கா லுறைவழி
பொன்னிறம் மின்னும் புதுக்கா லுறைமேல்.

ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
பொன்னிறம் மின்னும் புதுக்கா லுறைவழி
படிமிசை நிலத்தில் பாதத் தின்கீழ்    470
தரையில்ஓ டும்நீர் தரைக்காய்ச் சேர்ந்தது
நீரா யோடுநீர் நீர்க்காய்ச் சேர்ந்தது.

ஓடி நிலத்தில் ஒன்றாய்ச் சேர்ந்தநீர்
**ஓடு மாறாக உருக்கொளத் தொடங்கி
நதிகள் முன்றாய் நன்றாய் வளர்ந்தது
அவள்அழும் செயலால் ஆங்குகும் விழிநீர்
தலையினி லிருந்து தவழ்ந்திடு கண்ணீர்
கண்மட லிருந்து கழிந்திடு கண்ணீர்.

தோன்றிற் றப்பா ஒவ்வொரு நதியிலும்
முன்று பயங்கர முழுநீர் வீழ்ச்சிகள்,   480
ஒவ்வொரு வீழ்ச்சியில் உயரும் நுரையிலும்
முன்று பாறைகள் முறையாய் எழுந்தன,
ஒவ்வொரு பாறை யுளமுனை தோறும்
பைம்பொன் இயைந்த பருவதம் வந்தது,
ஒவ்வொரு பருவத உச்சியின் மேலும்
முன்று மிலாறு மரங்கள் முளைத்தன,
ஒவ்வொரு மிலாறு மரமுடி யினிலும்
அம்பொன் குயில்கள் அமர்ந்தன முன்று.

குயில்கள் இனிதே கூவத் தொடங்கின:
ஒருகுயில் இசைத்தது :'காதல்,காதல்!'   490
மறுகுயில் விளித்தது :'அன்னே,அன்பே!'
முன்றாம் குயிற்குரல் :'இன்பம்,இன்பம்!'

'காரல், காத' லென் றிசைத்த கருங்குயில்
முன்றுமா தங்கள் முழுதும் இசைத்தது
காதலை யறியாக் காரிகைக் காக
ஆழியில் உறங்கும் அரிவைக் காக.

'அன்பே, அன்பே'யென் றழைத்த குயிலது
ஆறுமா தங்கள் ஆங்கிருந் திசைத்தது
அமைதியை இழந்த அன்பருக் காக
துன்பத்து முழ்கிய துணைவருக் காக.    500

'இன்பம், இன்ப'மென் றிசைத்த குயிலது
வாழ்நாள் எல்லாம் மணிக்குரல் தந்தது
இன்பம் இழந்த இணையிலாத் தாய்க்காய்
விழிநீர் நாளெலாம் விடுமன் னைக்காய்.

இனிவரும் சொற்களில் இயம்பினள் அன்னை
கிளர்குயிற் கூவல் கேட்டபின் மொழிந்தாள் :
"அரும்பே றிழந்த அன்னையெக் காலும்
நெடுநாள் கூவல் நின்றுகேட் டிடற்க
காதிலே குயிலின் கானம் வீழ்கையில்
என்னுளம் அடித்து எழுந்து மாய்கிறது    510
கண்ணீர் விழிகளில் கழிந்துபாய் கிறது
கன்னம் வழியாய்ப் புனல்கழி கிறது
**பயற்றம் விதையிலும் பருத்தநீர்த் துளிகள்
**அவரையைக் காட்டிலும் கொழுத்த நீர்த்துளிகள்;
குறுகுமென் வாழ்நாள் கொடுமுழத் தளவு
குன்றுமென் உயரம் குறுஞ்சாண் அளவு
மேனி முழுவதும் மிகுபல மிழந்தேன்
வசந்தக் குயிலிசை வந்துவீழ் கையிலே. "
  

பாடல் 5 - கடற்கன்னி  *



அடிகள் 1-72 : வைனாமொயினன் மீன் பிடிக்கச் சென்று யொவுகாஹைனனின் சகோதரி ஐனோவை மீன் வடிவில் பிடித்துத் தோணியில் ஏற்றுகிறான்.

அடிகள் 73-133 : அவன் அந்த மீனை வெட்டப்போகும் சமயத்தில், அவள் நழுவி நீரில் குதித்துத் தான் யார் என்று சொல்கிறாள்.

அடிகள் 134-163 : வைனாமொயினன் அந்த மீனை மீண்டும் பிடிக்க முயன்று தோல்வியடைகிறான்.
அடிகள் 164-241 : மனமுடைந்து வீடு திரும்பிய அவனை, வடநாட்டு மங்கையை நேசிக்கும்படி அவனுடைய காலம் சென்ற தாய் ஆலோசனை கூறுகிறாள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


செய்தி எங்கணும் செறிந்து சென்றது
பாரெலாம் புதினம் பரவிச் சென்றது
நீருக் கடியில் நித்திரை செய்த
அழகிய நங்கை அழிந்த செய்தியே.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
பரவும் செய்தியாற் பெரிதும் வருந்தினன்;
மாலையில் அழுதான் காலையில் அழுதான்
இரவுகள் எல்லாம் இரங்கி அழுதான்
வியனெழில் நங்கை வீழ்ந்தது கேட்டு
தூயவள் நீரில் துயில்வதைக் கேட்டு   10
சேற்றுக் கடலுள் சென்றதை யறிந்து
அலையின் அடியில் அமிழ்ந்ததை அறிந்து.

சுடுநெடு மூச்சும் துயருமாய்ச் சென்றான்
இதயம் நிறைய இன்னலைச் சுமந்து
நீலக் கடலின் நீண்ட கரைகளில்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
**"கனவின் சக்திநின் கனவினைப் புகல்க
காசினி நிறைந்தநின் காட்சியைப் புகல்க
*அஹ்தோ வாழும் அகமெங் குளது
*வெல்லமோ மகளிர்தம் நல்லுலா வெவ்விடம்?"  20

கனவின் சக்திதன் கனவினைச் சொன்னது
காசினி நிறைந்த காட்சியைச் சொன்னது:
"அஹ்தோ வாழும் அகமாங் குளது
வெல்லமோ மகளிர்தம் நல்லுலா வவ்விடம்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்

ஆழத் தடியினில் அலைகளின் கீழே
மிகுகருஞ் சகதி மேடையின் மேலே.
அதுவே அஹ்தோ அமைவசிப் பிடமாம்
வெல்லமோ மகளிர் நல்லுலா விடமாம்   30
அகலம் குறைந்ததோர் ஒடுங்கிய மாடம்
அளவில் சிறியதோர் குறுகிய கூடம்
பளிங்குக் கற்களின் படர்சுவர்ப் பக்கம்
கனத்துத் தடித்தகற் கட்டிகள் நடுவண்."

முதிய வைனா மொயினனப் போது
**தோணித் துறைக்குத் துரிதமாய்ச் சென்று
மீன்பிடிக் கயிற்றை விழியுறல் செய்து
மீன்பிடி முளையை மீளவும் நோக்கி
பருமுளை ஒன்றைப் பையிலே போட்டு
கரும்பொன் முளையைச் கைச்சாக் கிட்டான்.  40
படகின் துடுப்பைப் பதமாய்ச் செலுத்தி
திண்ணமா யடைந்தான் தீவின் கரையை
புகார்படி கடலதன் புணர்முனை நுனியை
செறிபனிப் புகாருள தீவதன் கரையை.

மீன்பிடி முளையுடன் விழித்தாங் கிருந்தனன்
மீன்பிடி கயிற்றுடன் விழித்தாங் கிருந்தனன்
அசைத்தனன் கைவலை அதனைமுன் பின்னாய்
தூண்டில் இரையினைத் தூரத்து வீசினன்
அசைத்து முன்பின் அதனை நகர்த்தினன்;
செப்பின் பிடிகோல் செறிநடுக் குற்றது   50
வெண்பொற் கயிற்றினில் கிண்கிணி யோசை
பொன்னணிக் கோலினில் இன்னிசை யெழுந்தது.

பலநாள் கழிந்து ஒருநாள் நடந்தது
பலவிடி வகன்று ஒருவிடி வியன்றது
மீன்பிடி முள்ளை மீனொன் றெடுத்தது
தொங்கிய தம்மீன் தொடுமுள் முனையில்;
தோணியின் உள்ளே மீனை இழுத்தனன்
தோணித் தட்டிலே தூக்கிப் போட்டனன்.

தீரமாய்ப் பார்த்தனன் திருப்பிப் புரட்டினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 60
"உயர்மீ னினத்தில் ஒருவகை மீனிது
இதுபோல் மீனை என்றுமே பார்த்திலேன்!
**வெண்மீ னதைவிட மென்மையில் மிகுதி
**நன்னீர் மீனிலும் நன்கமை வெண்மை
**கோலாச்சி மீனிலும் குறைந்தது கருமை
மிகுசினை மீனெனின் மென்மையாய்க் காணேன்
ஆணென நோக்கிலும் அவ்வியை பில்லை
இதன்தலை மொட்டை இளம்பெண் ணல்ல
**அப்புவாழ் மகளெனின் அரைப்பட்டி எங்கோ!
இல்லப் பறவையா இல்லையே காதுகள்!   70
**ஆழிமீன் போல அதிகஒற் றுமைகள்
அலைகளின் அடியிலே உலாவரும் **மீனிது."

வைனா மொயினனின் வாள்இடுப் பினிலே
வெள்ளியின் நிறத்து மிகுகூர் மையது
பக்கத் திருந்து கத்தியை இழுத்தான்
விரியுறை யிருந்து வெண்முனைக் கத்தியை
கொழுமீன் கிழித்துக் கூறுகள் போட
தொடுமீன் வெட்டித் துண்டுதுண் டாக்க
உதய காலை உணவுடன் சேர்த்து
காலை யுணவாய்க் களிப்புடன் அமைக்க   80
நண்பகல் உணவாய் நன்றாய்ச் சமைக்க
இரவின் உணவாய் இனிதே யாக்க.

விரும்பினன் வஞ்சிர மீனினை வெட்ட
கத்தியால் கிழிக்கக் கருதி யிருந்தனன்;
விரைந்தது வஞ்சிர மீனும் கடலில்
எழில்மிகு மீனும் எகிறிப் பாய்ந்தது
செந்நிறத் தோணியின் திகழ்தட் டிருந்து
வைனா மொயினனின் வன்பட கிருந்து.
அப்போ ததுதன் அருஞ்சிர முயர்த்தி
துலங்கும் வலப்புறத் தோளையும் உயர்த்தி   90
ஐந்தாவ தாய்வரும் அலையதன் மேலே
ஆறாவ தாயுயர் அலையதன் மேலே
வியன்வலக் கரத்தை வெளியிலே காட்டி
இடதுகா லதையும் எடுத்துயர்த் தியது
ஏழாவ தாயுயர் எழிற்றிரை யதன்மேல்
உயர்ந்துபின் வந்த ஒன்பதாம் அலையில்.

அவ்வா றிருந்து இவ்வித மொழிகளில்
உரைத்தே அதுதான் உரைசெய லானது:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
இங்குநான் வந்தது இதற்கா யல்ல  100
மிளிர்வஞ் சிரமீன் வெட்டுதற் கல்ல
கொழுமீன் போலெனைக் கூறிடற் கல்ல
உனது காலை உணவுக் கல்ல
உதயகா லத்து உணவுக் கல்ல
பருவஞ் சிரமீன் பகலுண வல்ல
அரும்இர வுணவாய் ஆவதற் கல்ல."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அவ்வா றாயின் எதற்காய் வந்தாய்?"

"இதற்கா யேதான் இங்குனை யடைந்தேன்
நேர்கை யணைப்பில் நின்கோ ழியதாய்   110
என்றுமுன் அருகில் இருப்பதற் காக
இல்லத் துணையென முழங்கா லிருக்க
படுக்கையை விரித்துப் பக்குவம் செய்ய
தலையணை யெடுத்துத் தனியாய் வைக்க
தோன்றுநின் சிறுகுடில் சுத்தம தாக்க
நிலத்தைப் பெருக்கி நலத்தைப் பேண
வீட்டுள் ளடுப்பை மூட்டிவைத் திருக்க
விளக்கினை ஏற்றி விளங்கவைத் திருக்க
தொடுபரும் ரொட்டிகள் சுட்டுவைத் திருக்க
அடர்தே னடைகளை ஆக்கிவைத் திருக்க   120
**பானக் கலயம் படிசுமந் தேக
உனக்காம் உணவினை ஒழுங்குசெய் தமைக்க.
வருநான் கடல்வாழ் வஞ்சிர மல்ல
விரிதிரை யடிவாழ் மீனின மல்ல
நானோர் இளம்பெண் நல்லிள அணங்கு
இளமை யொவுகா ஹைனன் சோதரி
வாழ்நாள் எலாம்நீ தேடிய மங்கை
வாழ்க்கை முழுதும்(நீ) மனங்கொளும் வனிதை.

ஏறும் வயோதிபத் திழிந்த மனிதனே,
மடத்தனம் மிகுந்த வைனா மொயினனே,   130
ஆதரிப் பதற்கு அறியாய் நீயே
வெல்ல மோவின் வியன்னீர் நங்கையை
அஹ்தோ பெற்ற அழகி