Holy Bible - New Testament - part II
Gospel according to Luke
(in tamil script, unicode format)

திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - IIb
லூக்கா நற்செய்திகள்




Etext input: Rev.Fr. Adaikalarasa,sdb, St. Xavier's Church, Dindigul, Tamilnadu
Proof-reading : Mr. Mukundaraj Munisamy, Chennai, Tamilnadu

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com

C: Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.

Click here to access Part I of Holy Bible- New Testament covering the Books of Mathew and Mark


Holy Bible - New Testament - Book of Luke

திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - லூக்கா நற்செய்தி


1 அதிகாரம்
1.1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்

1.2 தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.

1.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,

1.4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

1.5 யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர். அவர் பெயர் எலிசபெத்து.

1.6 அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.

1.7 அவர்களுக்குப் பிள்ளை இல்லை. ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

1.8 தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார்.

1.9 குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.

1.10 அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.

1.11 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார்.

1.12 அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.

1.13 வானதூதர் அவரை நோக்கி , "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார் அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.

1.14 நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.

1.15 அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார். திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார். தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.

1.16 அவர், இஸரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.

1.17 எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார். தந்தையாரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார். நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார். இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார்.

1.18 செக்கரியா வானதூதரிடம், "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அது போல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார்.

1.19 அதற்கு வானதூதர் அவரிடம் , "நான் கபியேல். கடவுளின் திருமுன் நிற்பவன் உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்.

1.20 இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர். உம்மால் பேசவே இயலாது" என்றார்.

1.21 மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள்.

1.22 அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேச முடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதொ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார் பேச்சற்றே இருந்தார்.

1.23 அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.

1.24 அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.

1.25 "மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

1.26 ஆறாம் மாதத்தில் கபியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.

1.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

1.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி , "அருள்மிகப் பெற்றவரே வாழ்க. ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்றார்.

1.29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

1.30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.

1.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர் அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

1.32 அவர் பெரியவராயிருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.

1.33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.

1.34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே." என்றார்.

1.35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.

1.36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.

1.37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.

1.38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை. உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

1.39 அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.

1.40 அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

1.41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

1.42 அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே.

1.43 ஆண்டவின் தாய் என்னிடம் வர நான் யார்?

1.44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.

1.45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.

1.46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்

1.47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

1.48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

1.49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.

1.50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

1.51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.

1.52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

1.53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுவார்.

1.54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்.

1.55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்".

1.56 மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

1.57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

1.58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.

1.59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள். செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.

1.60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.

1.61 அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி,

1.62 "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.

1.63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.

1.64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது. நா கட்டவிழ்ந்தது. அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

1.65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.

1.66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

1.67 பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு

1.68 "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

1.69 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே,

1.70 அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்

1.71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.

1.72 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும்,

1.73 நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.

1.74 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும்,

1.75 வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

1.76 குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்

1.77 ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.

1.78 இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,

1.79 நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது."

1.80 குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

2 அதிகாரம்

2.1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.

2.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.

2.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.

2.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,

2.5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.

2.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.

2.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

2.8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.

2.9 திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது. மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.

2.10 வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

2.11 இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.

2.12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள் இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.

2.13 உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக.

2.14 உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக." என்று கடவுளைப் புகழ்ந்தது.

2.15 வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, "வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டு,

2.16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.

2.17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

2.18 அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தஹர்.

2.19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

2.20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

2.21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

2.22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.

2.23 ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.

2.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

2.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர் இறைப்பற்றுக் கொண்டவர். இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர். தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.

2.26 ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

2.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.

2.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,

2.29 "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

2.30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,

2.31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

2.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.

2.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.

2.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.

2.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.

2.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர் மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்

2.37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.

2.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

2.39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.

2.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

2.41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்

2.42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.

2.43 விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.

2.44 பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்

2.45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

2.46 முன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.

2.47 அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.
.
2.48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார்.

2.49 அவர் அவர்களிடம்"நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தியாதா?" என்றார்.

2.50 அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

2.51 பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.

2.52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.


3 அதிகாரம்

3.1 திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொத்தியு பிலாத்து யூதேயாவின் ஆளநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும், லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.

3.2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.

3.3 "பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.

3.4 இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது"பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது"ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்

3.5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும். கோணலானவை நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.

3.6 மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்."

3.7 தம்மிடம் திருமுழுக்குப் பெறப் புறப்பட்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு யோவான், "விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?

3.8 மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.

3.9 ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தார மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்" என்றார்.

3.10 அப்போது, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.

3.11 அதற்கு அவர் மறுமொழியாக, "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும். உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" என்றார்.

3.12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, "போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று அவரிடம் கேட்டனர்.

3.13 அவர்"உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்" என்றார்.

3.14 படைவீரரும் அவரை நோக்கி, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர். அவர், "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள். யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள். உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்" என்றார்.

3.15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

3.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன். ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

3.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்" என்றார்.

3.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

3.19 குறுநில மன்னன் ஏரோது தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாவை வைத்திருந்ததன் பொருட்டும் அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும் யோவான் அவனைக் கண்டித்தார்.

3.20 எனவே அவன் தான் செய்த தீச்செயல்கள் எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலும் அடைத்தான்.

3.21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.

3.22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

3.23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது. அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்.

3.24 ஏலி மாத்தாத்தின் மகன். மாத்தாத்து லேவியின் மகன். லேவி மெல்கியின் மகன். மெல்கி யன்னாயின் மகன். யன்னாய் யோசேப்பின் மகன்.

3.25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன். மத்தத்தியா ஆமோசின் மகன். ஆமோசு நாகூமின் மகன். நாகூம் எஸலியின் மகன். எஸலி நாகாயின் மகன்.

3.26 நாகாய் மாத்தின் மகன். மாத்து மத்தத்தியாவின் மகன். மத்தத்தியா செமேயின் மகன். செமேய் யோசேக்கின் மகன். யோசேக்கு யோதாவின் மகன்.

3.27 யோதா யோவனானின் மகன். யோவனான் இரேசாவின் மகன். இரேசா செருபாபேலின். மகன் செருபாபேல் செயல்தியேலின் மகன்.

3.28 செயல்தியேல் நேரியின் மகன். நேரி மெல்கியின் மகன். மெல்கி அத்தியின் மகன். அத்தி கோசாமின் மகன். கோசாம் எல்மதாமின் மகன். எல்மதாம் ஏரின் மகன். ஏர் ஏசவின் மகன்.

3.29 ஏசு எலியேசரின் மகன். எலியேசர் யோரிமின் மகன். யோரிம் மாத்தாத்தின் மகன். மாத்தாத்து லேவியின் மகன்.

3.30 லேவி சிமியோனின் மகன். சிமியோன் யூதாவின் மகன். யூதா யோசேப்பின் மகன். யோசேப்பு யோனாமின் மகன். யோனாம் எலியாக்கிமின் மகன். எலியாக்கிம் மெலேயாவின் மகன்.

3.31 மெலேயா மென்னாவின் மகன். மென்னா மத்தத்தாவின் மகன். மத்தத்தா நாத்தானின் மகன். நாத்தான் தாவீதின் மகன்.

3.32 தாவீது ஈசாயின் மகன். ஈசாய் ஓபேதின் மகன். ஓபேது போவாசின் மகன். போவாசு சாலாவின் மகன். சாலா நகசோனின் மகன். நகசோன் அம்மினதாபின் மகன்.

3.33 அம்மினதாபு அத்மினின் மகன். அத்மின் ஆர்னியின் மகன். ஆர்னி எட்சரோனின் மகன். எட்சரோன் பெரேட்சின் மகன். பெரேட்சு யூதாவின் மகன். யூதா யாக்கோபின் மகன்.

3.34 யாக்கோபு ஈசாக்கின் மகன். ஈசாக்கு ஆபிரகாமின் மகன். ஆபிரகாம் தெராகின் மகன். தெராகு நாகோரின் மகன்.

3.35 நாகோர் செரூகின் மகன். செரூகு இரகுவின் மகன். இரகு பெலேகின் மகன். பெலேகு ஏபேரின் மகன். ஏபேர் சேலாவின் மகன்.

3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா இலாமேக்கின் மகன்.

3.37 இலாமேக்கு மெத்துசேலாவின் மகன். மெத்துசேலா ஏனொக்கின் மகன். ஏனோக்கு ஏரேதின் மகன். ஏரேது மகலலேலின் மகன். மகலலேல் கேனானின் மகன். கேனான் ஏனோசின் மகன்.

3.38 ஏனோசு சேத்தின் மகன். சேத்து ஆதாமின் மகன். ஆதாம் கடவுளால் உண்டானவர்.

4 அதிகாரம்

4.1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.

4.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.

4.3 சோதிக்கிறவன் அவரை அணுகி, " நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் என்றான்.

4.4 அவர் மறுமொழியாக, " மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.

4.5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,

4.6 "நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்" கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்" என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று அலகை அவரிடம் சொன்னது.

4.7 இயேசு அதனிடம், " உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்" எனவும் எழுதியுள்ளதே" என்று சொன்னார்.

4.8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,

4.9 அவரிடம், " நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்றது.

4.10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, "அகன்று போ. சாத்தானே, " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்" என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றார்.

4.11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

4.12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

4.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.

4.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது

4.15 " செபுலோன் நாடே. நப்தலி நாடே. டிபருங்கடல் வழிப் பகுதியே. யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே. பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே.

4.16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது."

4.17 அதுமுதல் இயேசு, " மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

4.18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.

4.19 இயேசு அவர்களைப் பார்த்து, " என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார்.

4.20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

4.21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.

4.22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

4.23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார். விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

4.24 அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார்.

4.25 ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா. யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.

5 அதிகாரம்

5.1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.

5.2 அப்போது இக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.

5.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

5.4 அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார்.

5.5 சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார்.

5.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,

5.7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.

5.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார்.

5.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.

5.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே. இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார்.

5.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

5.12 இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என மன்றாடினார்.

5.13 இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன்" உமது நோய் நீங்குக." என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.

5.14 இயேசு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று கட்டளையிட்டார்.

5.15 ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும், தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும், பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்து கொண்டிருந்தார்கள்.

5.16 அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.

5.17 ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.

5.18 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர்.

5.19 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டுபோக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.

5.20 அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

5.21 இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும், பிசேயரும், "கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என்று எண்ணிக்கொண்டனர்.

5.22 அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, "உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன?

5.23 "உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன" என்பதா, அல்லது"எழுந்து நடக்கவும்" என்பதா, எது எளிது?

5.24 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உமக்குச் சொல்கிறேன் நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்." என்றார்.

5.25 உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.

5.26 இதைக் கண்ட யாவரும் மெய்ம் மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், "இன்று புதுமையானவற்றைக் கண்டோ ம்." என்று பேசிக் கொண்டார்கள்.

5.27 அதன்பின் இயேசு வெளியே சென்று சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரி தண்டுபவர் ஒருவரைக் கண்டார் அவரிடம், "என்னைப் பின்பற்றி வா." என்றார்.

5.28 அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

5.29 இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார். வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.

5.30 பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், "வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டனர்.

5.31 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.

5.32 நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார்.

5.33 பின்பு அவர்கள் இயேசுவை நோக்கி, "யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள் பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே." என்றார்கள்.

5.34 இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா?

5.35 ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும் அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்றார்.

5.36 அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்"எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும் புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.

5.37 "அதுபோலபப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும் தோற்பைகளும் பாழாகும்.

5.38 புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும்.

5.39 பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில்"பழையதே நல்லது" என்பது அவர் கருத்து.

6 அதிகாரம்

6.1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்

6.2 பரிசேயருள் சிலர், "ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?"
என்று கேட்டனர்.

6.3 அதற்கு இயேசு மறுமொழியாக, "தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?

6.4 அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடும் இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?" என்று கூறினார்.

6.5 மேலும் அவர்களிடம், "ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.

6.6 மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார்.
அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.

6.7 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்.

6.8 இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, "எழுந்து நடுவே நில்லும்." என்றார். அவர் எழுந்து நின்றார்.

6.9 இயேசு அவர்களை நோக்கி, "உங்களிடம் ஒன்று கேட்கிறேன் ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று கேட்டார்.

6.10 பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, "உமது கையை நீட்டும்." என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது.

6.11 அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

6.12 அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.

6.13 விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

6.14 அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான் பிலிப்பு, பர்த்தலமேயு,

6.15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன்,

6.16 யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

6.17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான இடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.

6.18 அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.

6.19 அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

6.20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர். ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.

6.21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர் ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர் ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

6.22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.

6.23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.

6.24 ஆனால் செல்வர்களே ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.

6.25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.

6.26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.

6.27 "நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன் உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள். உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.

6.28 உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

6.29 உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்.

6.30 உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.

6.31 "பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

6.32 உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.

6.33 உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே.

6.34 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

6.35 நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள் திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றி கெட்டோ ருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.

6.36 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

6.37 " பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள் அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள் அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள் மன்னிப்புப் பெறுவீர்கள்.

6.38 கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."

6.39 மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது"பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?

6.40 சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.

6.41 "நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?

6.42 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், "உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?" என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள்.

6.43 "கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.

6.44 ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை. முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.

6.45 நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

6.46 "நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, "ஆண்டவரே, ஆண்டவரே" என ஏன் கூப்பிடுகிறீர்கள்?

6.47 என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.

6.48 அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.

6.49 நான் சொல்வதைக் கேட்கும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது."

7 அதிகாரம்

7.1 இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார்..

7.2 அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.

7.3 அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.

7.4 அவர்கள் இயேசுவிடம் வந்து, "நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர் எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்" என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.

7.5 இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்"ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம் நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.

7.6 உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும் என் ஊழியர் நலமடைவார்.

7.7 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம்"செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்"வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து"இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்."

7.8 இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்

7.9 கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, " இஸ்ரயேலிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

7.10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

7.11 அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர்.

7.12 அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன். அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.

7.13 அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, "அழாதீர்" என்றார்.

7.14 அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார்.

7.15 இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.

7.16 அனைவரும் அச்சமுற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

7.17 அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

7.18 யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து,

7.19 " வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார்.

7.20 அவர்கள் அவரிடம் வந்து, "வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்று சொன்னார்கள்.

7.21 அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார் பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார்.

7.22 அதற்கு அவர் மறுமொழியாக, நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர். கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர். தொழுநோயாளர் நலமடைகின்றனர். காது கேளாதோர் கேட்கின்றனர். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.

7.23 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.

7.24 யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்"நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?

7.25 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த ஒரு மனிதரையா? பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரச மாளிகையில் அல்லவா இருக்கின்றனர்.

7.26 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

7.27 இதோ. என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்" என் இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது.

7.28 மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோ ருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்."

7.29 திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர்.

7.30 ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.

7.31 பின்னர் இயேசு, "இத் தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்?

7.32 இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு"நாங்கள் குழல் ஊதினோம் நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம் நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

7.33 "எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார் அவர் உணவு அருந்தவுமில்லை திராட்சை மது குடிக்கவுமில்லை அவரை, "பேய் பிடித்தவன்" என்றீர்கள்.

7.34 மானிட மகன் வந்துள்ளார் அவர் உண்கிறார், குடிக்கிறார் நீங்களோ, "இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களும், பாவிகளுக்கும் நண்பன்" என்கிறீர்கள்.

7.35 எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோ ரின் செயல்களே சான்று" என்றார்.

7.36 பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.

7.37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.

7.38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார் அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.

7.39 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார் இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

7.40 இயேசு அவரைப் பார்த்து, "சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்" என்றார். அதற்கு அவர், "போதகரே, சொல்லும்" என்றார்.

7.41 அப்பொழுது அவர், "கடன் கொடுப்பவர் ஒருவிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர்.

7.42 கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?" என்று கேட்டார்.

7.43 சீமோன் மறுமொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என் நினைக்கிறேன்" என்றார். இயேசு அவரிடம், "நீர் சொன்னது சரியே" என்றார்.

7.44 பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.

7.45 நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.

7.46 நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.

7.47 ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன் இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.

7.48 பின்பு அப்பெண்ணைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

7.49 "பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.

7.50 இயேசு அப்பெண்ணை நோக்கி, "உமது நம்பிக்கை உம்மை மீட்டது அமைதியுடன் செல்க" என்றார்.

8 அதிகாரம்

8.1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.

8.2. பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்

8.3 ஏரோதுவின் மாளிகை மேற் பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.

8.4 பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் அவரிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது

8.5 " விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.

8.6 வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின.

8.7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன.

8.8 இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன." இவ்வாறு சொன்னபின், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று உரக்கக் கூறினார்.

8.9 இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர்.

8.10 அதற்கு இயேசு கூறியது"இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே"அவர்கள் கண்டும் காண்பதில்லை கேட்டும் புரிந்துகொள்வதில்லை."

8.11 "இந்த உவமையின் பொருள் இதுவே விதை, இறைவார்த்தை.

8.12 வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.

8.13 பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள் சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள் சோதனைக் காலத்தில் நம்பிக்கையை
விட்டுவிடுவார்கள்.

8.14 முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

8.15 நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

8.16 "எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை, கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.

8.17 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.

8.18 ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும் இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்."