desika prabandam
(in Tamil Script, Unicode/UTF-8 format)

வேதாந்த தேசிகர் அருளிய தேசிக பிரபந்தம்





desika prabandam

வேதாந்த தேசிகர் அருளிய தேசிக பிரபந்தம்

Text Input: Original source in transliterated tamil format of Mani Varadarajan
was converted to TSCII format by Dr.K. Kalyanasundaram.
Proof-reading: Mr. M.S. Venkataramanan and Dr. N. Kannan.
This webpage presents Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com

C- Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.

பாயிரம்
------


ஸ்ரீ
ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகாய நம:

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த
தேசிக ப்ரபந்தம்

சீரொன்று தூப்புல் திருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

அமிருதரஞ்சனி

1.1:
தம்பரமென்றிரங்கித் தளராமனந்தருளால்
உம்பர்த்தொழுந்திருமால் உகந்தேற்குமுபாயமொன்றால்
நம்பிறவித்துயர் மாற்றிய ஞானப்பெருந்தகவோர்
சம்பிரதாயமொன்றிச் சதிர்க்கும்நிலை சார்ந்தனமே.

1.2
கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த
திருமாலடிகாட்டிய, நம்
தேசிகர்த்தம்நிலைபற்றிச்சேர்ந்தோமே.

1.3:
முத்திக்கருள்சூட மூன்றைத்தெளிமுன்னம்
இத்திக்காலேற்கும் இதம்.

1.4:
மூன்றிலொருமூன்றும் மூவிரண்டும்முந்நான்கும்
தோன்றத்தொலையுந்துயர்.

1.5:
உயிருமுடலும் உடலாகவோங்கித்
தயிர்வெண்ணை தாரணியோடுண்டான் பயிரிற்
களைபோல் அசுரரைக் காய்ந்தான் தன்கையில்
வளைபோலெம்மாசிரியர் வாக்கு.

1.6: அலையற்ற ஆரமுதக்கடல் அக்கடலுண்டமுகில்
விலையற்ற நன்மணிவெற்பு வெயில்நிலவோங்குபகல்
துலையுற்றனவென்பர் தூமறைசூடுந்துழாய்முடியார்க்கு
இலையொத்தன அவன்பாதம் பணிந்தவர்க்கெண்ணுதற்கே.

1.7:
உத்திதிகழும் உரைமூன்றின்மும்மூன்றுஞ்
சித்தமுணரத்தெளிவித்தார் முத்திதரு
மூலமறையின்முடிசேர் முகில்வண்ணன்
சீலமறிவார்சிலர்.

1.8:
எனக்குரிய னெனதுபரமென்றென்னாது
இவையனைத்தும் இறையில்லா இறைக்கடைத்தோம்
தனக்கிணையொன்றில்லாத திருமால்பாதஞ்
சாதனமும்பயனுமெனச் சலங்கள் தீர்ந்தோம்
உனக்கு இதமென்று ஒரு பாகனுரைத்ததுற்றோம்
உத்தமனாமவ னுதவியெல்லாங்கண்டோ ம்
இனிக்கவருமவை கவர இகந்தோம் சோகம்
இமையவரோ டென்று இனிநாமிருக்குநாளே.

1.9:
தத்துவங்களெல்லாம் தகவாலறிவித்து
முத்திவழிதந்தார் மொய்கழலே யத்திவத்தில்
ஆரமுதம் ஆறாமிருநிலத்திலென்றுரைத்தார்
தாரமுதலோதுவித்தார்தாம்.

1.10:
திருநாரணனெனுந்தெய்வமும் சித்தும் அசித்துமென்று
பெருநான்மறைமுடிபேசிய தத்துவம் மூன்றிவைகேட்டு
ஒருநாளுணர்ந்தவர் உய்யும் வகையன்றி யொன்றுகவார்
இருநாலெழுத்தின் இதயங்களோதிய வெண்குணரே.

1.11:
காரணமாயுயிராகி அனைத் துங்காக்குங்
கருணைமுகில் கமலை யுடனிலங்குமாறு
நாரணனார் வடிவான வுயிர்களெல்லா
நாமென்று நல்லடிமைக் கேற்குமாறுந்
தாரணிநீர் முதலான மாயைக்காலந்
தனிவானென்றிவை உருவாந்தன்மைதானுங்
கூரணி சீர்மதியுடைய குருக்கள் காட்டக்
குறிப்புடன் நாம்கண்டவகை கூறினோமே

1.12:
அப்படிநின்ற அமலன்படியெல்லம்
எப்படி எம்முள்ளத் தெழுதினார் - எப்படியும்
எரார் சுருதியொளியால் இருணீக்குந்
தாரபதி யனையார் தாம்.

1.13:
செம்பொற்கழலிணைச் செய்யாள மருந்திருவரங்கர்
அன்பர்க்கடியவராய் அடிசூடியநாமுரைத்தோம்
இன்பத் தொகையென எண்ணிய மூன்றிலெழுத்தடைவே
ஐம்பத்தொரு பொருள் ஆருயிர் காகுமமுதெனவே.

1.14:
யான் அறியுஞ்சுடராகி நின்றேன் மற்றும் யாதுமலேன்
வானமருந்திருமாலடியேன் மற்றொர் பற்றுமிலேன்
றானமுதா மவன்தன் சரணே சரணென்றடைந்தேன்
மானமிலா வடிமைப் பணி பூண்டமனத்தினனே.

1.15:
சீலங்கவர்ந்திடும் தேசிகர்தேசின் பெருமையினால்
தூலங்களன்ன துரிதங்கண் மாய்ந்தன, துஞ்சறருங்,
கோலங்கழிந்திடக் கூறியகாலங்குறித்துநின்றோம்
மேலிங்குநாம் பிறவோம் வேலைவண்ணனை மேவுதுமே.

1.16:
வண்மையுகந்த அருளால் வரந்தரு மாதவனார்
உண்மை யுணர்ந்தவர் ஓதுவிக்கின்ற உரைவழியே
திண்மைதருந்தெளிவொன்றாற் றிணியிருள் ணீங்கியநாந்
தண்மைகழிந்தனந் தத்துவங்காணுந்தரத்தினமே.

1.17:
நாராயணன்பரன் நாம் அவனுக்குநிலையடியோஞ்
சோராதனைத்தும் அவனுடம் பென்னுஞ்சுருதிகளாற்
சீரார் பெருந்தகைத்தேசிகர் எம்மைத் திருத்துதலாற்
தீராமயலகற்றும் திறம்பாத் தெளிவுற்றனமே.

1.18:
ஒன்றேபுகலென்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றேயடைக் கலங்கொண்ட நம்மத்திகிரித் திருமால்
என்றேஇசையின் இனையடிசேர்ப்பர் இனிப்பிறவோம்
நன்றேவருவதெல்லாம் நமக்குப் பரமொன்றிலதே

1.19:
சிறுபயனிற் படியாத தகவோரெம்மைச்
சேர்க்க அடைக்கலங்கொண்ட திருமால், றானே
மறுபிறவியறுத்து அழியாவானில் வைக்கு
மனமே நீ மகிழா தேயிருப்பதென்கொல்
உறுவதுனக்குரைக்கேன் இங்கிருக்குங்காலம்
ஒருபிழையும் புகுதாத வுணர்த்திவேண்டிப்
பெருவதெலாமிங்கே நாம் பெற்றுவாழப்
பேரடிமையாலே தென்றிகழே னீயே.

1.20:
சாக்கியர்சைனர்கள் சார்வாகர் சாங்கியர்சைவர், மற்றுந்
தாக்கியர்நூல்கள் சிதையத் தனிமறையின் கருத்தை
வாகியம்முப்பதினால் வகைசெய்து வியாகரித்தோந்
தேக்கி மனத்துள் இதனைத் திணியிருள் நீங்குமினே.

1.21:
தள்ளத்துணியினும் தாய்போலிரங்குந்தனிதகவால்
உள்ளத்துறைகின்ற உத்தமன் றன்மை யுனர்ந்துரைத்தோ
முள்ளொத்தவாதியர் முன்னேவரினெங்கண் முக்கியர்பால்
வெள்ளத்திடையில் னரிபோல் விழிக்கின்றவீணர்க்களே.

1.22:
செய்யேன்மறமென்ற தேசிகன் தாதையவனுரைத்த
மெய்யேயருள் பொருள் சூடிய வெண்மதிகாதலியாம்
பொய்யேபகைப்புலன் யிரண்டொன்று பொருங்கருவி
கையேறுசக்கரக் காவலன் காவலடைந்தவர்க்கே

1.23:
அந்தமிலாதி தேவனழி செய்தடைத்த
அலைவேலை யோத மடையச்
செந்தமிழ் _ல்வகுத்த சிறுமனிச்சர்
சிறுகைச் சிறாங்கையது போற்
சந்தமெலா முரைப்ப இவையென்று தங்கள்
இதயத் தடக்கி, அடியோம்
பந்தமெலாமறுக்க அருள் தந்துகந்து
பரவும் பொருள்கள் இவையே

1.24:
முக்குணமாயையின் மூவெட்டின் கீழ்வருமூவகையும்
இக்குணமின்றியிலங்கிய காலச்சுழியினமும்
நற்குணமொன்றுடை நாகமும்நாராயணனுடம்பாய்ச்
சிற்குணமற்றவையென்று உரைத்தா ரெங்கள்தேசிகரே.

1.25:
எனதென்பதும் யானென்பதுமின்றித்
தனதென்றுதன்னையுங்காணாது உனதென்று
மாதவத்தான் மாதவற்கே வன்பரமாய் மாய்ப்பதனிற்
கைத்தான் கைவளரான்காண்.

1.26:
பல்வினைவன்கயிற்றால் பந்த முற்றுழல்கின்றனரு
நல்வினைமூட்டியநாரணனார்ப்பதம் பெற்றவருந்
தொல்வினையென்றுமில்லாச் சோதிவானவ ருஞ்சுருதி
செல்வினையோர்ந்தவர் சீவரென்றோதச் சிறந்தனமே.

1.27:
ஆரணங்களெல்லாம் அடிசூடமேனின்ற
காரணமாய் ஒன்றால் கலங்காதான் னாரணனே
நம்மேல்வினைகடியும் நல்வழியிற் றானின்று
தன்மேனி தந்தருளும் தான்.

1.28:
குடன்மிசையொன்றியும் கூடியும் நின்ற கொடுந்துயரும்
உடல்மிசைத் தோன்றுமுயிரும் உயிர்க்குயிருமிறையுங்
கடல்மிசைக் கண்டதரளத்திரள் அவைகோத்த பொன்னூன்
மடல் மிசைவார்த்தையதன் பொருளென்ன வகுத்தனமே

1.29:
தத்துவந்தன்னில் விரித்திடத்தோறுமிரண்டுதனிற்
பத்திவிலக்கிய பாசண்டர் வீசுறும் பாசமுறார்
எத்திசையுந்தொழுதேத்திய கீர்த்தியர், எண்டிசையார்
சுருத்தருரைத்த சுளகமருந்திய தூயவரே

1.30:
வினைத்திரண் மாற்றிய வேதியர்தந்த நல்வாசகத்தால்
அனைத்துமறிந்தபின் ஆறும்பயனுமெனவடைந்தோ
மனத்திலிருந்து மருத்தமுதாகியமாதவனார்
நினைத்தன் மறத்தல் அரிதாய நன்னிழனீள் கழலே

1.31:
ஓதுமறை நான்கதனி லோங்குமொரு மூன்றினுள்ளே
நீதி நெறிவழுவா நிற்கின்றோம்- போதமரும்
பேரா யிரமுந் திருவும் பிரியாத
நாரா யணனருளா னாம்.

1.32:
ஊன்றந்து நிலைநின்ற வுயிருந் தந்தோ
ருயிராகி யுள்ளொளியோ டுறைந்த நாதன்
றான்றந்த வின்னுயிரை யனதென் னாம
னல்லறிவுந் தந்தகலா நலமுந் தந்து
தான்றந்த நல்வழியாற் றாழ்ந்த வென்னைத்
தன்றனக்கே பாரமாகத் தானே யெண்ணி
வான்றந்து மலரடியுந் தந்து வானோர்
வாழ்ச்சிதர மன்னருளால் வரித்திட் டானே.

1.33:
திருமாலடையிணையே திண்சரணாக் கொண்டு
திருமாலடியிணையே சேர்வார்-- ஒருமால்
அருளால் அருளாத வானோர்கள் வாழ்ச்சி
அருளா னமக்களித் தாராய்ந்து.

1.34:
சேர்க்குந்திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப்பெரியோர்க்கு
ஏற்குங்குணங்கள் இலக்காம் வடிவி லிணையடிகள்
பார்க்குஞ்சரணதிற் பற்றுதனந்நிலைநாம்பெறும் பேறு
ஏற்கின்ற வெல்லைகள் எல்லாக்களையற வெண்ணினமே

1.35:
திருமாலடியிணை சேர்ந்து திகழ்ந்த அடிமைபெறத்
திருநாரணன் சரண் திண்சரணாகத் துணிந்தடைவோர்
ஒருநாளுரைக்க உயிர் தருமிந்திர மோதியநாம்
வருநாள் பழுதற்று வாழும் வகையதில் மன்னுவமே

1.36:
மற்றொரு பற்றின்றி வந்தடைந்தார்க் கெல்லம்
குற்ற மறியாத கோவலனார்- முற்றும்
வினை விடுத்து விண்ணவரோடொன்ற விரைகின்றார்
நினைவுடைத் தாய்நீமனமேநில்லு

1.37:
எல்லத் தருமமும் என்னையிகழ்ந்திடத் தான் இகழாது
எல்லாந்தனதென எல்லாமுகந்தரு டந்த பிரான்
மல்லார் மதக்களிறொத்த வினைத்திரண் மாய்ப்பனென்ற
சொல்லால் இனியயொருகாற் சோகியாத் துணிவுற்றனமே.

1.38:
வினைத்திரண் மாற்றிய வேதியர் தந்தருள் வாசகத்தால்
அனைத்துமறிந்த பின் ஆறும் பயனுமென வடைந்தோ
மனத்திலிருந்து மருத்த முதாகிய மாதவனார்
நினைத்தன் மனத்தில் அரிதாகினின்றனநீள்கழலே.

1.39:
எட்டிலாறிரண்டிலொன்றில் எங்கும் ஆறியும்புவார்
விட்ட ஆறுபற்றும் ஆறு வீடுகண்டுமேவுவார்
சிட்டாரானதே சுயர்ந்த தேசிகர்க்குயர்ந்து மேல்
எட்டுமூறும் ஊடறுத்தது எந்தைமால் இரக்கமே

****அடிவரவு : தம்பரம், கடலமுத, முத்திக்கு
மூன்றில், உயிரும், அலையற்ற, உத்தி, எனக்கு,
தத்துவங்கள், திருநாரணன், காரணமாயுயிர்,
அப்படி, செம்பொன், யானறி, சீலம், வண்மை,
நாராயணன், ஒன்றே, சிறுபயன், சாக்கியர்,
தள்ள, செய்யேன், அந்தமிலாதி, முக்குணமாயை,
எனது, பல்வினை, ஆரணங்களெல்லாம், குடல்,
தத்துவந்தன்னில், வினைத்திரள், ஓதுமறை,
ஊன்றந்து, திருமாலடியிணையே, சேர்க்குந்திருமகள்,
திருமாலடையிணைசேர்ந்து, மற்றொரு, எல்லாத்தரும,
வினைத்திறள், எட்டிலாறு
---------

2. அதிகாரசங்கிரகம்

2.1:
பொய்கைமுனிபூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல்வருங்குருகேசன் விட்டுசித்தன்
றுய்யகுலசேகரனம் பாணநாதன்
தொண்டரடிப்பொடிமழிசைவந்த சோதி
வையமெல்லாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
மங்கையர்க்கோனென்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகணாந் தெளிய வோதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே.

2.2:
இன்பத்திலிறைஞ்சுதலிலிசையும்பேற்றில்
இகழாத பல்லுறவிலிராக மாற்றில்தன்பற்றில் வினைவிலக்கில்தகவோக்கத்திற்
றத்துவத்தையுணர்த்துதலிற் றன்மையாகில்
அன்பர்க்கேயவதரிக்குமாயன்னிற்க
அருமறைகள் தமிழ் செய்தான் தாளேகொண்டு
துன்பற்ற மதுரகவிதோன்றக்காட்டுந்
தொல்வழியேநல்வழி கடுணிவார் கட்கே.

2.3:
என்னுயிர்தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர்குருக்கள்ணிரைவணங்கிப்
பின்னரளாற்பெரும்பூதூர்வந்த வள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கா னம்பி
நன்னெறியை யவர்க்குரைத்த வுய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன்சேனைநாத
னின்னமுதத்திருமகளென்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகளடைகின்றேனே.

2.4:
ஆரணநூல்வழிச் செவ்வை யழித்திடுமைதுகர்க்கு, ஓர்
வாரணமாய் அவர்வாதக்கதலிகள் மாய்த்தபிரான்
ஏரணிகீர்த்தி இராமானுசமுனி இன்னுரைசேர்
சீரணிசிந்தையினோம் சிந்தியோமினித்தீவினையே.

2.5:
நீளவந்து இன்றுவிதிவகையால்நினைவொன்றியநா
மீள வந்து இன்னும்வினையுடம் பொன்றிவிழுந்துழலாது
ஆளவந்தாரென வென்றருள் தந்து விளங்கிய சீர்
ஆளவந்தாரடியோம் படியோமினி யல்வழக்கே.

2.6:
காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளன்
மூளுந்தவநெறி மூடிய நாதமுனிகழலே
நாளுந்தொழுதொழுவோம் நமக்கார்நிகர்நானிலத்தே.

2.7:
ஆளுமடைக் கலமென்றெமை அம்புயத்தாள்கணவன்
றாளினிசேர்ந்து எமக்குமவைதந்த தகவுடையார்
மூளுமிருட்கள்விளமுயன்று ஓதியமூன்றினுள்ள
நாளுமுகக்கவிங்கே நமக்கோர் விதிவாய்க்கின்றதே.

2.8:
திருவுடன் வந்த செழுமனிபோல் திருமாலிதய
மருவிடமென்ன மலரடிசூடும்வகைபெருநாங்
கருவுடன் வந்தகடுவினையாற்றில் விழுந்தொழுகா
தருவுடன் ஐந்தறிவார் அருள்செய்ய அமைந்தனரே.

2.9:
அமை யாவிவையெனுமாசையினால் அறுமூன்று உலகிற்
சுமையான கல்விகள் சூழவந்தாலும் தொகை இவை என்று
இமையா விமையவரேத்திய எட்டிரண்டெண்ணிய நஞ்
சமயாசிரியர் சதிர்க்குந்தனினிலை தந்தனரே.

2.10:
நிலைதந்த தாரகனாய் நியமிக்குமிறைவனுமாய்
இலதொன்றனாவகை எல்லாந்தனதெனுமெந்தையுமாய்த்
துலையொன்றிலையெனநின்ற துழாய்முடியானுடம்பாய்
விலையின்றிநாமடியோமெனும் வேதியர்மெய்ப்பொருளே.

2.11:
பொருளொன்றென நின்ற பூமகள் ணாதன், அவனடி சேர்ந்து
அருளொன்றுமன்பன் அவங்கொளுபாயமைந்தபயன்
மருளொன்றியவினை வல்விலங்கென்று இவையைந்தறிவார்
இருளொன்றிலாவகை எம்மனந்தேற வியம்பினரே.

2.12:
தேறவியம்பினர் சித்துமசித்துமிறையுமென
வேறுபடும் வியன் றத்துவ மூன்றும், வினையுடம்பிற்
கூறுபடுங்கொடுமோகமுந்f தானிறையாங்குறிப்பு
மாறநினைந்தருளால் மறைநூறந்தவாதியரே.

2.13:
வாதியர்மன்னுந்தருக்கச் செருக்கின் மறைகுலையச்
சாதுசனங்களடங்க நடுங்கத் தனித்தனியே
யாதியெனாவகை யாரணதேசிகர்சாற்றினர், நம்
போதமருந்திருமாதுடன் நின்றபுராணனையே.

2.14:
நின்றபுராணனடியிணையேந்தும் நெடும்பயனும்
பொன்றுதலேநிலையென்றிடப் பொங்கும்பவக்கடலும்
நன்றிதுதீயதிதென்று நவின்றவர்நல்லருளால்
வென்றுபுலங்களை வீடினைவேண்டும் பெரும்பயனே.

2.15:
வேண்டும்பெரும்பயன் வீடென்றறிந்து வீதிவகையா
னீண்டூங் குறிகியு நிற்கும் நிலைகளுக்கேற்குமன்பர்
மூண்டொன்றில் மூலவினைமாற்றுதலில் முகுந்தனடி
பூண்டன்றி மற்றோர்புகலொன்றிலையெனநின்றனரே.

2.16:
நின்றநிலைக்குற நிற்குங்கருமமும் நேர்மதியா
னன்றெனநாடியஞானமும் நல்குமுட்கண்ணுடையர்
ஒன்றியபத்தியும் ஒன்றுமிலாவிரைவார்க்கு, அருளால்
அன்றுபயந்தருமாறும் அறிந்தவரந்தணரே.

2.17:
அந்தணரந்தியரெல்லையில்நின்ற அனைத்துலகு
நொந்தவரேமுதலாக நுடங்கியனன்னியராய்
வந்தடையும்வகை வன்தகவேந்திவருந்தியநம்
மந்தமிலாதியை அன்பரறிந்தறிவித்தனரே.

2.18:
அறிவித்தனரன்பர் ஐயம்பறையுமுபாயமில்லாத்
துறவித்துனியிற் துணையாம்பரனைவரிக்கும்வகை
யுறவித்தனையின்றி யொத்தாரெனநின்றவும்பரைநாம்
பிறவித்துயர்செகுப்பீரென்று இரக்கும்பிழையறவே.

2.19:
அறவேபரமென்று அடைக்கலம்வைத்தனர், அன்றுநம்மைப்
பெறவேகருதிப் பெருந்தகவுற்றபிரானடிக் கீழ்
உறவேயிவனுயிர்காக்கின்ற ஓருயிருண்மையை, நீ
மறவேலென நம்மறைமுடிசூடியமன்னவரே.

2.20:
மன்னவர்விண்ணவர் வானோரிறையொன்றும் வான்கருத்தோர்
அன்னவர்வேள்வியனைத்துமுடித்தனர், அன்புடையார்க்கு
அன்னவரந்தரவென்ற நாமத்திகிரித்திருமான்
முன்னம்வருந்தி அடைக்கலங்கொண்டநம்முக்கியரே.

2.21:

முக்கியமந்திரங்காட்டிய மூன்றில்நிலையுடையார்
தக்கவையன்றித் தகாதவையொன்றுந்தமக்கிசையார்
இக்கருமங்கள் எமக்குளவென்னுமிலக்கணத்தான்
மிக்கவுணர்த்தியர் மேதினிமேவியவிண்ணவரே.

2.22:
விண்ணவர்வேண்டிவிலக்கின்றிமேவும் அடிமையெலா
மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர், வண்துவரைக்
கண்ணனடைக்கலங்கொள்ளக் கடன்கள் கழற்றியநம்
பண்ணமருந்தமிழ் வேதமறிந்தபகவர்களே

2.23:
வேதமறிந்த பகவர்வியக்க விளங்கியசீர்
நாதன் வகுத்தவகைபெறுநாம் அவன் நல்லடியார்க்கு
ஆதாரமிக்க அடிமையிசைந்து அழியாமறைநூல்
நீதிநிறுத்த நிலைகுலையாவகைநின்றனமே.

2.24:
நின்றன மன்புடைவானோர்நிலையில் நிலமளந்தா
னன்றிதுதீயதிதென்று நடத்தியநான்மறையா
லின்றுநமக்கிரவாதலின் இம்மதியின் நிலவே
யன்றி, அடிக்கடி ஆரிருள் தீர்க்க அடியுளதே.

2.25:
உளதானவல்வினைக்கு உள்ளம்வெருவி, உலகளந்த
வளர்தாமரியிணை வஞ்சரணாகவரித்தவர்தாங்
களைதானெனவெழுங் கன்மந்துறப்பர், துறந்திடிலு
மிளைதாநிலைசெக எங்கள்பிரானருள்தேனெழுமே.

2.26:
தேனார் கமலத்திருமகள்நாதன் திகழ்ந்துறையும்
வானாடுகந்தவர் வையத்திருப்பிடம், வன்றருமக்
கானாரிமயமுங்கங்கையும் காவிரியுங்கடலு
நானாநகரமு நகரமுங் கூடிய நன்னிலமே.

2.27:
நன்னிலமாமது நற்பகலாமது, நன்னிமித்த
மென்னலுமாமது யாதானுமாமங்கடியவர்க்கு
மின்னிலைமேனி விடும்பயணத்து, விலக்கிலதோர்
நன்னிலையாநடுநாடிவழிக்கு நடைபெறவே.

2.28:
நடைபெற அங்கிபகலொளிநாள் உத்தராயணமாண்டு
இடைவருகாற்றிரவை இரவின்பதிமின்வருணன்
குடையுடைவானவர்கோன் பிரசாபதியென்றிவரால்
இடையிடைபோகங்களெய்தி எழிற்பதமேறுவரே.

2.29:
ஏறியெழிற்பதம் எல்லாவுயிர்க்குமிதமுகக்கும்
நாறுதுழாய் முடிநாதனை நண்ணி, யடிமையினங்
கூறுகவர்ந்த குருக்கள்குழாங்கள்குரைகழற்கீழ்
மாறுதலின்றி மகிழ்ந்தெழும்போகத்துமன்னுவமே.

2.30:
மன்னும் மனைத்துறவாய் மருண் மாற்றருளாழியுமாய்த்
தனனினைவாலனைத்தும் தரித்தோங்குந்தனியிறையாய்
இன்னமுதத்தமுதால் இரங்குந்திருநாரணனே
மன்னியவன் சரண் மற்றொர்பற்றின்றிவரிப்பவர்க்கே.

2.31
வரிக்கின்றனன் பரன்யாவரையென்று மறையதனில்
விரிக்கின்றதுங் குறியொன்றால் வினையரையாதலின் நாம்
உரைக்கின்றநன்னெறி ஓரும்படிகளிலோர்ந்து, உலகந்
தரிக்கின்றதாரகனார் தகவாற் றரிக்கின்றனமே.

2.32:
தகவால்தரிக்கின்ற தன்னடியார்களைத் தன்திறத்தின்
மிகவாதரஞ்செயும் மெய்யருள்வித்தகன் மெய்யுரையின்
அகவாயறிந்தவர் ஆரணநீதிநெறிகுலைதல்
உகவாரென, எங்கள்தேசிகருண்மையுரைத்தனரே.

2.33:
உண்மையுரைக்குமறைகளில் ஓங்கியவுத்தமனார்
வண்மையளப்பரிதாதலின் வந்துகழல்பணிவார்
தண்மைகிடக்கத் தரமளவென்றவியப்பிலதாம்
உண்மையுரைத்தனர் ஓரந்தவிரவுயர்ந்தனரே.

2.34:
உயர்ந்தனன் காவலனல்லார்க்கு, உரிமைதுறந்துயிராய்
மயர்ந்தமைதீர்ந்து மற்றோர்வழியின்றியடைக்கலமாய்ப்
பயந்தவன் நாரணன் பாதங்கள்சேர்ந்து, பழவடியார்
நயந்தகுற்றேவலெல்லாம் நாடும் நன்மனுவோதினமே.

2.35:
ஓதுமிரண்டையிசைத்து அருளாலுதவுந்திருமால்
பாதமிரண்டும் சரணெனப்பற்றி, நம்பங்கயத்தா
ணாதனைநண்ணி நலந்திகழ்நாட்டிலடைமையெல்லாங்
கோதிலுணர்த்தியுடன் கொள்ளுமாறுகுறித்தனமே.

2.36:
குறிப்புடன்மேவந் தருமங்களின்றி, அக்கோவலனார்
வெறித்துளவக்கழல் மெய்யரணென்றுவிரைந்தடைந்து
பிரித்தவினைத்திரள் பின்தொடராவகை அப்பெரியோர்
மறிப்புடைமன்னருள்வாசகத்தால் மருளற்றனமே.

2.37:
மருளற்றதேசிகர் வானுகப்பாலிந்தவையமெலாம்
இருளற்று இறைவனிணையடிபூண்டுயவெண்ணுதலாற்
றெருளுற்றசெந்தொழிற்செல்வம்பெருகிச் சிறந்தவர்பால்
அருளுற்றசிந்தையினால் அழியாவிளக்கேற்றினரே.

2.38:
ஏற்றிமனத்தெழில்ஞானவிளக்கை இருளனைத்து
மாற்றினவர்க்கு ஒருகைம்மாறு மாயனுங்காணகில்லான்
போற்றியுகப்பதும் புந்தியிற்கொள்வதும் பொங்குபுகழ்
சாற்றிவளர்ப்பதுஞ் சற்றல்லவோமுன்னம் பெற்றதற்கே.

2.39:
முன்பெற்றஞானமும் மோகந்துறக்கலும் மூன்றுரையிற்
றன்பற்றதன்மையந் தாழ்ந்தவர்க்கீயுந்தனிதகவு
மன்பற்றிநின்றவகை உரைக்கின்றமறையவர்பாற்
சின்பற்றியென்பயன் சீரறிவோர்க்கிவைசெப்பினரே.

2.40:
செப்பச்செவிக்கமுதென்னத்திகழும் செழுங்குணத்துத்
தப்பற்றவருக்குத் தாமேயுகந்துதருந்தகவால்
ஓப்பற்றநான்மறையுள்ளக்கருத்தில் உறைத்துரைத்த
முப்பத்திரண்டிவை முத்தமிழ்சேர்ந்த மொழித்திருவே.

2.41:
புருடன்மணிவரமாகப் பொன்றாமூலப்
பிரகிருதிமறுவாக மான்றண்டாகத்
தெருள்மருள்வாளுறையாக ஆங்காரங்கள்
சார்ங்கஞ்சங்காக மனந்திகிரியாக
விருடிகங்களீரைந்துஞ்சரங்களாக
விருபூத மாலை வன மாலையாகக்
கருடனுறுவா மறையின் பொருளாங்கண்ணன்
கரிகிரிமேல் நின்று அனைத்துங்காக்கின்றானே.

2.42:
ஆராதவருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோனயோத்தி மன்னற்களித்த கோயி
றோலாததனிவீரன் தொழுத கோயி
றுணையான வீடணற்க்குத்துணையாங்கோயில்
சேராதபயனெல்லாஞ்சேர்க்குங்கோயில்
செழுமறையின் முதலெழுத்துச்சேர்ந்தகோயி
றீராதவினையனைத்துந்தீர்க்குங்கோயி
றிருவரங்க மெனத் திகழுங்கோயில் றானே

2.43:
கண்ணனடியிணையெமக்குக்காட்டும்வெற்பு
கடுவினையரிருவினையுங்கடியும்வெற்பு
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்பு
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
ண்ணியத்தின் புகலிதெனப் பகழும் வெற்பு
பொன்னுலகிற் போக மெலாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரு மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கடவெற்பென விளங்கும் வேதவெற்பே.

2.44:
உத்தமவ மர்த்தல மமைத்த தொரெ
ழிற்ற _தவினுய்த்த தகணையால்
அத்திவரக் கன்முடி பத்துமொரு
கொத்தென வுதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்தவெண்ணைய்
வைத்த துணுமத்தனிடமாம்
அத்திகிரி பத்தர்வினை தொத்தறவ
றுக்குமணி யத்தகிரியே.

2.45:
எட்டுமாமூர்த்தியெண் கணன் எண்டிக
கெட்டிறையெண்பிரகிருதி
எட்டுமாவரைகளீன்ற வெண்குணத்தோன்
எட்டெணுமெண்குணமதியோர்க்கு
எட்டுமாமலரெண் சித்தியெண்பத்தி
எட்டியோகாங்கமெண்செல்வம்
எட்டுமாகுணமெட்டெட்டெணுங்கலை
எட்டிரதமேலதுவுமெட்டினவே.

2.46:
ஓண்டொடியாள் திருமகளுந்தானுமாகி
ஒருநினைவாலீன்ற வுயிரெல்லாமுய்ய
வண்டுவரைநகர் வாழவசுதேவற்க்காய்
மன்னவற்குத் தேர்ப்பாகனாய்நின்ற
தண்டுளவமலர்மார்பன் தானேசொன்ன
தனித்தருமந்தானெமக்காய்த் தன்னையென்றுங்
கண்டுகளித்தடி சூடவிலக்காய்நின்ற
கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே.

2.47:
மூண்டாலுமரியதலின் முயலவேண்டா
முன்னமதிலாசை தனைவிடுகைதிண்மை
வேண்டாது சரணநெறி வேறோர்கூட்டு
வேண்டிலயனத்திரம் போல்வெள்கிநிற்கும்
நீண்டாகுநிறைமதியோர்நெறியிற்கூடா
நின்றனிமைதுணையாக வென்றன்பாதம்
பூண்டால் உன்பிழைகளெலாம் பொறுப்பனென்று
புண்ணியனார் புகழனைத்தும் புகழுவோமே.

2.48:
சாதனமுநற்பயனுநானேயாவன்
சாதகனுமென்வயமாயென்னைப்பற்றுஞ்
சாதனமுஞ்சரண நெறியன்றுனக்குச்
சாதனங்களிந்நிலைக்கோரிடையினில்லா
வேதனைசேர்வேறங்கமிதனில் வேண்டா
வெறெல்லாநிற்குநிலைநானேநிற்பன்
றூதனுமாநாதனுமாமென்னைப்பற்றிச்
சோகந்தீரென வுரைத்தான் சூழ்கின்றானே.

2.49:
தன்னினைவில் விலக்கின்றித் தன்னைநண்ணார்
நினைவனைத்துந்தான் விளைத்தும் விலக்குநாதன்
என்னினைவையிப்பவத்திலின்று மாற்றி
இணையடிக் கீழடைக்கலமென்றெம்மைவைத்து
முன்னினைவால் முயன்ற வினையால்வந்த
முனிவயர்ந்து முத்திதர முன்னேதோன்றி
நன்னினை வால் நாமிசையுங்காலம் இன்றோ
நாளையோ ஓ வென்றுநகைசெய்கின்றானே

2.50:
பாட்டுக்குரிய பழையவர் மூவரைப் பண்டொருகான்
மாட்டுக்கருள் தருமாயன் மலிந்துவருத்துதலா
னாட்டுகிருள்செக நான்மறையந்திநடைவிளங்க
வீட்டுக்கிடைகழிக்கே வெளிக்காட்டுமம் மெய்விளக்கே.

2.51:
உறுசகட முடையவொரு காலுற்றுணர்ந்தன
உடன் மருத மொடியவொரு போதிற்றவழ்ந்தன
உறிதடவுமளவிலுரலோடுற்றுநின்றன
உறுநெறியோர் தருமன் விடுதூதுக்குகுகந்தன
மறநெறியர் முறிய பிருதானத்து வந்தன
மலர்மகள் கைவருட மலற்போதிற் சிவந்தன
மறுபிறவி யறுமுனிவர் மாலுக்கிசைந்தன
மனுமுறையில் வருவதோர் விமானத்துறைந்தன
வறமுடைய விசயனமர் தேரிற்றிகழ்ந்தன
வடலுரக படமடிய வாடிக்கடிந்தன
வறுசமய மறிவரியதானத்தமர்ந்தன
வணிகுருகை நகர் முனிவர்நாவுக்கமைந்தன
வெறியுடையதுள வமலர் வீறுக்கணிந்தன
விழுகறியோர் குமரனென மேவிச் சிறந்தன
விறலசுரர் படையடைய வீயத்துரந்தன
விடலரிய பெரிய பெருமாள் மென்பதங்களே

2.52:
மறையுரைக்கும் பொருளெல்லா மெய்யன்றோர் வார்
மன்னியகூர் மதியுடையார் வண்குணத்திற்
குரையுறைக்க நினைவில்லார் குருக்க டம்பாற்
கோதற்ற மனம் பெற்றார் கொள்வார் நன்மை
சிறைவளர்க் குஞ்சிலமாந்தர் சங்கேதத்தாற்
சிதையாத திண் மதியோர் தெரிந்த தோரார்
பொறை நிலத்தின் மிகும்புனிதர் காட்டும் எங்கள்
பொன்றாத நன்னெறியிற் புகுதுவாரே.

2.53:
இது வழியின்ன முதென்றவர் இன்புலன்வேறிடுவார்
இதுவழியாமல் வென்றறிவார் எங்கள் டேசிகரே
இதுவழி எய்துக வென்று உகப்பாலெம் பிழை பொறுப்பார்
இது வழியா மறையோரருளால் யாமிசைந்தனமே .

2.54:
எட்டுமிரண்டுமறியாத வெம்மை இவையறிவித்து
எட்டவொண்ணா தவிடந்தரும் எங்களம்மாதவனார்
முட்டவினைத்திரண்மாள முயன்றிடுமஞ்சலென்றார்
கட்டெழில் வாசகத்தால் கலங்காநிலை பெற்றனமே.

2.55:
வானுளமர்ந்தவருக்கும் வருந்தவருநிலைக
டானுளனாயுகக்குந்தரம் இங்குநமக்குளதே
கூனுளநெஞ்சுகளாற் குற்றமெண்ணி யிகழ்ந்திடினுந்
தேனுள பாதமலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே.

2.56:
வெள்ளைப் பரிமுகர்தேசிகராய் விரகாலடியோ
முள்ளத்தெழுதியது ஓலையிலிட்டனம் யாமிதற்கென்
கொள்ளத்துனியினும் கோதென்றிகழினுங்கூர்மதியீர்
எள்ளத்தனையுகவாது இகழாதெம்மெழின் மதியே.

அடிவரவு : பொய்கை, இன்பத்தில், என்னுயிர், ஆரணனூல்
நீளவந்து, காளம்வலம், ஆளுமடை, திருவுடன்திருவுடன்,
புருடன், ஆராதவருள், கண்ணனடி, உத்தம
எட்டுமா, ஓண்டொடி, மூண்டாலும், சாதனமும், தன்னிலைவில்
தன்னிலைவில், பாட்டுக்கு, உறுசகடம், மறையுரை, இதுவழி
எட்டுமிரண்டு, வானுள், வெள்ளை,
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
----

3. அமிருதசுவாதினி

3.1:
மூலங்கிளையென ஒன்றிரண்டானமொழியிரண்டு
மேலொன்றிலையென நின்ற அவ்வித்தகன்றன்னுரையும்
காலங்கழிவதன் முன்னம் கருத்துறக் கண்டிடவே
ஞாலம் புகழுநந்தேசிகர் தாம் நமைவைத்தனரே.

3.2:
காரணமுங்காவலனுமாகி என்றுங்
கமலையுடன் பிரியாத நாதனான
நாரணனுக்கடியேனா னடிமை பூண்ட
நல்லடியார்க் கல்லான் மற்றொருவர்க் கல்லேன்
ஆரணங்கள் கொண்டகமும் புறமுங்கண்டால்
அறிவாகியறிவது மாயறு நான் கன்றிச்
சீரணிந்த சுடர் போலத் திகழ்ந்து நின்றேன்
சிலைவி சயன்றேரனைய சிருவேதத்தே.

3.3:
யானெனதென்பதொன்றில்லை என்செய்வதவனையல்லால்
ஆனதறிந்திடுந்தன் னடியார்க்கு எனையாட்படுத்தித்
தானெனை நல்கி நடத்துகின்றான் தன்னருள் வழியே
நானுனை வீடு செய்வேனென்ற நந்திரு நாரணனே.

3.4:
யாதாமிவை யனைத்தும் படைத்தேந்துமிறைவனுமாய்க்
கோதாங்குணங்களுடன் குறுகாத குணத்தனுமாய்
மாதா பிதாவென மன்னுறவாய்க் கதியென்ன நின்றான்
போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியனே

3.5:
இருவிலங்கு கழித்திடரா முடலந்தன்னில்
இலங்கு நடு நாடியினாலெம்மை வாங்கி
ஒருவிலங்குநெறியல்லா வழியால் மன்னு
முயர் வானிலேற்றியுயிர் நிலையுந்தந்து
பெருவிலங்காமருடன்னால் தன்னடிக்கீழ்ப்
பிரியாத வமரருடன் பிணைத்துத், தன்னா
ருருவிலங்குமிசைவிக்கு மும்பர்போகம்
உகந்து தருந்திரு மாலையுகந்தோநாமே.

3.6:
உறவை யிசைந்திறை யில்லா வொருவற்கென்றும்
ஒண்சுடராயோரெழுத்திலோங்கி நின்றேந்
துறவறமுந்தூ மதியுந்துயரன் தீர்வுந்
தூயவர்கட் கானமையு மிரண்டிலுற்றோம்
அறமுயலுமனைத் துறவாயனைத்து மேந்தும்
அம்புயத்தாள் கணவனை நாமணுகப் பெற்றோம்
பிறவியறுத் தடிசூடி யடிமையெல்லாம்
பிரியாதவமரருடன் பெற்றோ நாமே.

3.7
கருமமென ஞானமென வதனாற் கண்ட
உயிர்கவருங்காதலெனக் கானிலோங்கும்
அருமறையாற்றரு நிலையிலிந்நாளெல்லாம்
அடியேனையலையாத வண்ணமெண்ணித்
தருமமுடையாருரைக் கயானறிந்து
தனெக்கென்னா வடிமைக்காம் வாழ்ச்சி வேண்டித்
திருமகளோ டொருகாலும் பிரியா நாதன்
றிண்கழலே சேதுவெனச் சேர்க்கின்றேனே.

3.8:
வினைவிடுத்து வியன் குணத்தா லெம்மையாக்கி
வெருவுரைகேட்டு அவைகேட்க விளம்பி, நாளுந்
தனையனைத்து மடைந்திடத் தானடைந்து நின்ற
தன்றிரு மாதுடனிறையுன் தனியா நாதன்
நினைவழிக்கும் வினைவழிக்கு விலக்காய் நிற்கு
நிகரில்லா நெடுங்குணங்கள் நிலைபெறத், தன
கனை கழற் கீழடைக்கல மாக்காட்சிதந்து
காரணனாந்தன் காவல் கவர்கின்றானே.

3.9:
என்னதியான் செய்கின்றேனென்னா தாருக்கு
இன்னடிமை தந்தளிப்பான், இமையோர் வாழும்
பொன்னுலகிற்f றிருவுடனேயமர்ந்த நாதன்
புனலாரும் பொழிலரங்கந் திகழ மன்னித்
தன்னகல மகலாத தகவாலோங்குந்
தகவுடனே தங்கருமந்தானேயெண்ணி
அன்னையென வடைக்கலங்கொண் டஞ்ச றந்து என்
னழலாற நிழலார வளிக்கின்றானே.

3.10:
ஒண்டொடியாள் திருமகளுந் தானுமாகி
ஒருநினைவா லீன்ற வுயிரெல்லா முய்ய
வண்டுவரை நகர்வாழ வாசுதேவற்காய்
மன்னவற்குத் தேர்ப்பாகனாகி நின்ற
தண்டுள வமலர் மார்பன் தானே சொன்ன
தனித்தருமன் தானெமக்காய்த், தன்னையென்றுங்
கண்டுகளித் தடிசூட விலக்காய் நின்ற
கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே.

3.11:
துய்யமனத்தர் துறையணுகாத துணையிலியேன்
ஐயமறுத்து உனதாணை கடத்தலகற்றினை நீ
கையமர் சக்கரக் காவல் காக்குந் திருவருளால்
வையமளந்த வடிக்கீழ் அடைக்கலம் வைத்தருளே.

3.12:
அறியாத விடைச்சி யருமறியும் வண்ணம்
அம்புயத்தாளுட னந்நா ளவதரித்த
குறையாதுமில்லாத கோவிந்தா நின்
குரைகழற் கீழடைக் கலமாங்குறிப்புத் தந்தாய்
வெறியாரு மலர்மகளு நீயும் விண்ணில்
விண்ணவர் களடி சூடவிருக்கு மேன்மை
குறையாத வினையகற்றி யடிமை கொள்ளக்
குறுகவொரு நன்னாணீ குறித்திடாயே.

3.13:
தத்துவமுஞ் சாதனமும் பயனுங்காட்டுந்
தாராமுதலிரு நான்கும், தன்கருத்தான்
முத்திவழி நாமுயலும் வகையேகாண
முகுந்தனிசைத் தருள் செய்தவைந் நாலைந்தும்
பத்தி தனிற்படிவில்லார் பரஞ்சுமத்தப்
பார்த்தன்றேர் முன்னே தாந்தாழ நின்ற
உத்தமனார்த் தமநல்லுரை நாலெட்டும்
உணர்ந்தவர் தாமுகந்தெம்மை யுணர்வித்தாரே.

3.14:
பரக்கும் புகழ்வரும் பைம்பொருள் வாய்த்திடும், பத்தர்களாய்
இரக்கின்றவர்க்கிவையீந்தால் அறமுளதென்றியம்பார்
கரக்குங்கருதுடை தேசிகர் கன்றென நமையெண்ணிச்
சுரக்குஞ்சுரவிகள்போல் சொரிகின்றனர் சொல்லமுதே.

3.15:
சோகந்தவிர்க்கும் சுருதிப் பொருளொன்று சொல்லுகின்றோம்
நாகந்தனக் குமிராக்கதற்கும் நமக்குஞ்சரணாம்
ஆகண்டலன் மகனாகிய ஆவலிப்பேறிய, ஓர்
காகம்பிழைத்திடக் கண்ணழிவே செய்த காகுத்தனே.

3.16:
ஒருக்காலே சரணாக வடைகின்றாற்கும்
உனக்கடிமை யாகின்றேனென் கின்றாற்கும்
அருக்காதே யனைவர்க்கு மனைவராலும்
அஞ்சேலென்றருள் கொடுப்பன், இதுதானோதும்
இருக்காலு மெழின் முனிவர் நினைவினாலும்
இவையறிவார் செயலுட நென்னிசை வினாலும்
நெருக்காத நீள்விரதமெனக் கொன்றென்னும்
நெறியுரைத்தார் நிலையுணர்ந்து நிலை பெற்றோமே.

3.17:
பொன்னை யிகழ்ந்து விருகங்கள் புல்லிய புல்லுகந்தான்
மன்னரெடுப்பது அப்பொன்னலதே, மன்னுலகனைத்துந்
தன்னையடைந்திடத் தானருள் செய்யுந்தனிச்சிலையோன்
பொன்னடி நாமடைந்தோம் புறமாரென்கொல்செய்திடினே.

3.18:
வேதத்திரளின் விதியுணர்ந்தோர்கள் விரித்துரைத்த
காதற்கதியையும் ஞானத்தையுங் கருமங்களையஞ்
சாதிக்கவல்ல சரணாகதி தனிநின்ற நிலை
யோதத்தொடங்கும் எழுத்தின் றிறத்திலுணர்மின்களே.

3.19:
மூவுலகுந்தன் பிழையைத் தானே சாற்ற
முனிவர்களுந்தேவர்களு முனிந்தவந்நாட்
டாவரி தாயெங்கும் போய்த்தளர்ந்து வீழ்ந்த
தனிக்காகன் தானிரந்த வுயிர்வழங்கிக்
காவலினியெமக் கெங்குங்கடனென்றெண்ணிக்
காணநிலையிலச் சினையன்றிட்ட வள்ளல்
ஏவல் பயனிரக்கமிதற் காறென்றோதும்
எழிலுடையாரிணையடிக் கீழிருப்போ நாமே.

3.20:
திருத்தம் பெரியவர் சேருந்த்துறையில் செறிவிலர்க்கு
வருத்தங்கழிந்த வழியருளென்ற நம்மண்மகளார்
கருத்தொன்ற வாதிவராக முரைத்த கதியறிவார்
பொருத்தந தெளிந்துரைக்கப் பொய்யிலா மதிபெற்றனமே.

3.21:
இடம்பெற்றா ரெல்லாமென் னுடலாய் நிற்ப
விடர்ப்பிறப்பென் றிவையில்லா வென்னை யன்பா
லடம்பற்றா மவனென்று நினைந்தான் யாவ
னவனாவி சரியும்போ தறிவு மாறி
யுடம்பிற்றா ரூபலம்போற் கிடக்க நானே
யுய்யும்வகை நினைந்துயர்ந்த கதியாம் லென்ற
னிடம்பெற்றேன் னுடன்வாழ வெடுப்ப னென்ற
வெம்பெருமா னருள்பெற்று மருள்செற் றோமே.

3.22:
இரண்டுரை யாதநம் மேன முரைத்த வுரையிரண்டின்
றிரண்ட பொருள்க டெளிந்தடி சூடினந் திண்ணருளாற்
சுருண்டநஞ் ஞானச் சுடரொளி சுற்றும் பரப்பதன்முன்
புரண்டது நம்வினை போமிடம் பார்த்தினிப் போமளவே.

3.23:
மலையுங்குலையு மென்றெண்ணியும் வன்பெரும்புண்டிதிரங்கித்
தலையும் வெளுத்தபின் றானேயழிய விசைகின்றிலீர்
அலையுங்கடல் கொண்ட வையமளித்தவன் மெய்யருளே
நிலையென்று நாடி நிலைநின்ற பொய்ம்மதி நீக்குமினே.

3.24:
கண்ணன் கழல் தொழக் கூப்பியகையின் பெருமைதனை
எண்ணங்கடக்க வெமுனைத் துறைவரியும் புதலாற்
றிண்ணமிது வென்று தேறிதெளிந்தபின், சின்மதியோர்
பண்ணும்பணிதிகள் பாற்றிப் பழந்தொழில் பற்றினமே.

3.25:
பொங்குபுனலாறு களிர்புவனமெல்லாம்
பொற்கழலாளந்தவன்றன் தாளால் வந்த
கங்கையெனு நதிபோலக் கடல்களேழிற்
கமலைபிறந்த வனுகந்த கடலேபோலச்
சங்குகளிலே வனேந்துஞ்சங்கேபோலத்
தாரிலவன் தண்டுளவத்தாரே போல
எங்கள்குலபதிகளிவை மேலாமென்றே
எண்ணிய நல்வார்த்தைகணா மிசைக்கின்றோமே.

3.26:
சீர்க்கடலின் திரையென்னத் தகவால்மிக்க
தேசிகராய்த் திண்ணருளாங்கடலை நீக்கிப்
பாற்கடலோன் திருவணையாய் நின்று பாரங்
காணாத பவக்கடலைக் கடத்துகின்றான்
ஈர்க்குமரக் கலமென்ன விறைவரின்பம்
எழுந்தழி யுங்குமிழியென விகந்தொழிந்தோ
மார்க்கினி நாமென் கடவோ நமக்குமாரென்
கடவாரென்று அடைந்தவர் கட்கறிவித் தோமே.

3.27:
காசினியின் மணியனைத்துங்காயா வண்ணன்
கடைந்தெடுத் தகவுத்துவத்தின் சீர்மைக்கொவ்வா
காசிமுதலாகிய நன்னகரியெல்லாங்
கார்மேனியருளாளர் கச்சிக் கொவ்வா
மாசின் மனந்தெளி முனிவர் வகுத்த வெல்லா
மாலுகந்த வாசிரியர் வார்த்தைக் கொவ்வாவா
சியறிந்திவை யுரைத்தோம் வையத்துள்ளீர்
வைப்பாக விவைகொண்டு மகிழ்மினீரே.

3.28:
அந்தமிலாப்பேரின்ப மருந்தவேற்கும்
அடியோமை யறிவுடனேயென்றுங்காத்து
முந்தை வினை நிரைவழியி லொழுகாதெம்மை
முன்னிலையாந்தேசிகர் தம்முன்னே சேர்த்து
மந்திரமுமந்திரத்தின் வழியுங்காட்டி
வழிப்படுத்தி வானேற்றியடிமை கொள்ளத்
தந்தையென நின்றதனித் திருமால் தாளிற்
றலைவைத் தோஞ்சடகோபனருளினாலே.

3.29:
தான் தனக்குத் தன்னாலே தோன்றித் தன்னோர்
ஒளியணைக்குங்கு ணதாலுந்த ன்னைக்கண்டு
தான் தனக்கென்றறியாத தன்குணத்தைத்
தன் குணத்தால் தானிறையில் தானே கூட்டி
யூன்மருத்துப் புலன் மனமானாங்காரங்கள்
ஒருமூலப் பிரகிருதி யன்றி நின்ற
நான் தனக்குத் தான் தனக்கென் றிசைவுதந்த
நாரணனை நான் மறையால் நான் கண்டேனே.

3.30:
கழியாத கருவினையிற் படிந்த நம்மைக்
காலமிது வென்றொரு காற்காவல் செய்து
பழியாத நல்வினையிற் படிந்தார் தாளிற்
பணிவித்துப் பாசங்களடைய நீக்கிச்
சுழியாத செவ்வழியில் துணைவரோடே
தொலையாத பேரின்பந்தர மேலேற்றி
யழியாத வருளாழிப் பெருமான் செய்யும்
அந்தமிலா வுதவியெலா மளப்பாராரே.

3.31:
நின்னருளாங்கதியன்றி மற்றொன்றில்லேன்
நெடுங்காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
உன்னருளுக் கினிதான நிலையுகந்தேன்
உன் சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்ற நிலையெனக்குத் தீர்த்து
வானவர்த்தம் வாழ்ச்சிதர வரித்தேனுன்னை
யின்னருளாலினியெனக் கோர்பரமேற்றாமல்
என்திரு மாலடைக் கலங்கொளென்னை நீயே.

3.32:
பரவு மறைகளெலாம் பதஞ்சேர்ந்தொன்ற நின்ற பிரான்
இரவன்றிரவியின் கலத் தழைத்த வெழிற்படையோன்
அரவுங்கருடனுமன் புடனேந்தும் அடியிரண்டுந்
தரவெந்த மக்கரு ளாற்றள ராமனந்தந்தனனே

3.33:
அலர்ந்த வம்புயத்திருந்து தேனருந்தி இன்னகல்
அல்குலாரசைந்தடைந்த நடைகொளாத தனமெனோ
நலந்தவிர்ந்ததால் அதென்கொன் னாவின் வீறிழந்ததால்
னாவணங்கு நாதர் தந்த நாவின் வீறிழந்ததென்
சலந்தவிர்ந்து வாதுசெய்து சாடிமூண்டமிண்டரைச்
சரிவிலேனெனக்கனைத்துறைத்த வேதிராசர்தம்
வலந்தருங்கை நாயனார் வளைக்கிசைந்த கீர்த்தியால்
வாரிபால தாமதமென்று மாசில்வாழிவாழியே.

3.34:
சடையன் றிறலவர்கள் பெருஞானக்கடலதனை
யிடையமிழாது கடக்கினும் ஈதளவென்றறியார்
விடையுடனேழன்றடர்த்தவன் மெய்யருள் பெற்றநல்லோர்
அடையவறிந்துரைக்க அடியோமுமறிந்தனமே.

3.35:
பாவளருந் தமிழ்மறையின் பயனே கொண்ட
பாண்பெருமாள் பாடியதோர் பாடல்பத்திற்
காவலனுங்கணவனுமாய்க் கலந்துநின்ற
காரணனைக் கறுத்துறநாங்கண்டபின்பு
கோவலனுங்கோமானுமானவந்நாள்
குரவைபிணை கோவியர்தங்குறி பேகொண்டு
சேவலுடன் பிரியாத பெடைபோற்சேர்ந்து
தீவினையோர் தனிமையெலாந் தீர்ந்தோநாமே.

3.36:
ஆதிமறையென வோங்கு மரங்கத்துள்ளே
அருளாருங்கடலைக் கண்டவன் நம்பாணன்
ஓதியதோரிரு நான்குமிரண்டுமான
ஒருபத்தும் பற்றாகவுணர்ந்துரைத்தோ
நீதியறியாத நிலையறிவார்க்கெல்லா
நிலையிதுவேயென்று நிலைநாடிநின்றோம்
வேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக்கெல்லாம்
விதையாகுமிது வென்றுவிளம்பினோமே.

3.37:
காண்பன வுமுரைப்பனவு மற்றொன்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடியகாதற்
பாண்பெருமாளருள் செய்த பாடல்பத்தும்
பழமறையின் பொருளென்று பரவுகின்றோம்
வேண்பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியெனன்றியம்பநின்றோ
நாண்பெரியோமல்லோம் நாம் நன்றுந்தீது
நமக்குரைப் பாருளரென்று நாடுவோமே.

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு : மூலம், காரணமும், யானெனது,
யாதாமிவை, இருவிலங்கு கழித்து, உறவை,
கருமமென, வினைவிடுத்து, என்னதியான்,
ஒண்டொடியாள், துய்ய மனத்தர், அறியாத,
தத்துவமும், பரக்கும், சோகம், ஒருக்காலே,
பொன்னை, வேதத்திரள், மூவுலகும், திருத்தம்,
இடம்பெற்றார், இரண்டு, மலையும், கண்ணன்கழல்,
பொங்கு, சீர்க்கடல், காசினி, அந்தமிலாபேர்,
தான்தனக்கு, கழியாத, நின்னருள், பரவு,
அலர்ந்த, சடையன், பாவளரும், ஆதிமறை,
காண்பனவும், அடற்புள்.
---

4. பரமபதசோபானம்

சிறப்புத்தனியன்
தேனேறு தாமரையா டிருமார் பன்றன்
றிண்ணருளா லவனடியில் விவேகம் பெற்றிங்
கூனேறு பவக்குழியை வெறுத்த தற்பி
னூர்விரத்தி யுடன்வினையின் றிரளுக் கஞ்சிக்
கூனேறு பிறையிறையோன் சாபந் தீர்த்தான்
குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு
வானேறும் வழிப்படிக ளடைவே கண்ட
வண்புகழ்த்தூப் புல்வள்ள லருள்பெற் றோமே.

4.1:
அடற்புள் ளரசினு மந்தணர் மாட்டினு மின்னமுதக்
கடற்பள்ளி தன்னினுங் காவிரி யுள்ள முகந்தபிரா
னிடைப்பிள்ளை யாகி யுரைத்த துரைக்கு மெதிவரனார்
மடைப்பள்ளி வந்த மணமெங்கள் வார்த்தையுண் மன்னியதே.

4.2:
கள்ள மனத்துடன் கண்டு முயன்ற கடுவினையா
னள்ளிரு ளாழியி னற்சுவை யைந்தென நாடியவோ
ரள்ளலி னாளும் விழுந்தழி யாவகை யாரணநூல்
வள்ளல் வழங்கிய வான்படி யான வழியிதுவே.

4.3:
அருவுருவானவையனைத் துமறிவாரேனும்
அருங்கலைகள் கற்றுரைக்க வல்லாரேனுந்
தரும வழியழியாமற் காப்பாரேனுந்
தனிமறையின் தாற்பரியந்தருவாரேனும்
இருவினையினொழுக்கத் தாலேவலோராது
இங்கேநாஞ்சிறையிருந்த வீனந்தீர்க்குந்
திருமகளார் பிரியாத தேவன் றிண்ணந்
தேறாதார் திண்படியிலேறதாரே.

4.4:
மறுத்தார் திருவுடன் மார்பிற்றதரித்வன் வாசகத்தை
மறுத்தார் மயக்கமும் மற்றதனால் வந்தமாநரகு
நிறுத்தார் பவத்தில் நெடுநாளுழன்றமை கண்டதனால்
வெறுத்து, ஆரண நெறியே வெள்கியோடவிரைவர்களே.

4.5:
வான்பட்ட மன்னிருளில் மயங்குமாறு
மறித்தொரு காலெனை யூழி சென்றால் அன்றோர்
ஊன்பட்ட வுடலாழி வினை யொழுக்கில்
ஒருகரையுங் காணாதே யொழுகு மாறுந்
தேன்பட்ட விடம்போலத்தித்திக்கின்ற
சிறுபயனே யுறுபயனென்ற ருந்துமாறுந்
தான்பட்ட படியிந் நேர்தானே கண்டு
தளர்ந்திடு மேல்வளர்ந்திடுமே தக்கவாறே.

4.6:
உலகத்துயர்ந்தவர் ஒன்றும்பயனிலு றுந்துயரும்
அலகிற்படாத அப்போகங்கவர்ந்தெழுமம் புயத்தோன்
கலகத் தொழில் மதுகைடபராற் படுங்கட்ட மெண்ணிற்
பலகற்ற மெய்யடியார் படியாரிக்கடும்பவத்தே.

4.7:
தந்திரங்கள ளவிலராய்த் தனத்தால் மிக்கதார்
வேந்தர் தொழவைய மாண்டார் மாண்டார்
சந்திரனுஞ்சூரியனும் வீயுங்காலந்
தாரகையின் வடமுற்றுத், தனிவானாளும்
இந்திரனுமேறுயர்த்த வீசன்றானும்
ஈரிரண்டு முகத்தானுமில்லா வந்நா
ணந்திருமால் நிலைகண்டார் நாகமெல்லா
நரகென்று நற்பதமே நாடுவாரே.

4.8:
துறவறமே துணிவார் துணுக்கற்ற விளந்துணிவோர்
உறவிலராதலின் நாமுயர்ந்தாரு டனொன்றி நின்றோ
மறவழி மாற்றி எம்மையலைத் தீர்த்தவர் மன்னருளாற்
கறவையுகந்த பிரான் கழல் சூடுங்கருத்தினமே.

4.9:
வந்தனபோல் வருவனவு மனந்தமாகி
மாளாத துயர்தருவல் வினை நெருப்புக்கு
இந்தனமாயெண்ணிறந்த காலமெல்லாம்
இன்னமும் மிப்பவக்குழிக்கே யிழியா வண்ணம்
வெந்ததொரு குழவியை நற்குமரனாக்கும்
வெறித்துள வவித்தகனார் விதியே கொண்டார்
பந்தனமா மவையனைத்தும் பாறுகைக்குப்
பழ மறையின் பரம நெறி பயிலுவாரே.

4.10:
கருமாலையில் வருங் கட்டங்கழிக் குங்கருத் துடையார்
ஒருமால்பெருகும் யோகின் முயன்றும் அதன்றியு நந்
திருமாலடியிணை திண் சரணாகுமெனவரித்துந்
தருமாலினியவை தானேயெனத் தக வெண்ணுவரே.

4.11:
முஞ்செய்த வினைத்திரளின் முளைத்த தன்றி
முற்றுள்ள முதலரிந்து முளைத்த கூற்றிற்றன்
செய்ய திருவருளா லிசைவு பார்த்துத்
தழல்சேர்ந்த தூலமெனத் தானே தீர்த்துப்
பின்செய்த வினையினினை வொன்றா தொன்றும்
பிழைபொறுத்து வேறுளது விரகான் மாற்று
மெஞ்செய்ய தாமரைக்கட் பெருமா னெண்ண
மெண்ணாதா ரெட்டிரண்டு மெண்ணா தாரே.

4.12:
உறையிட்ட வாளென வூனு ளுறையு முயோகியரை
நறைமட் டொழிவற்ற நற்றுள வேந்திய நாயகன்றா
னிறைமட் டிலாத நெடும்பயன் காட்ட நினைந்துடலச்
சிறைவெட்டி விட்டு வழிப்படுத் தும்வகை செய்திடுமே.

4.13:
முங்கருவியீரைந்தும் மனத்திற்கூட்டி
முக்கியமாமருத்திலவை சேர்த்து, அதெல்லாம்
நன்குணருமுயிரினிற்சேர்த்து ஐம்பூத்ததை
நண்ணுவித்துத் தான் றன் பால்வைக்கு நாதன்
ஒன்பதுடன் வாசலி ரண்டுடைத் தாயுள்ளே
ஒரு கோடிதுயர் விளைக்கு முடம்பா யொன்றும்
வன் சிறையின் றலைவாசல் திறந்து நம்மை
வானேற வழிபடுத்த மனமுற்றானே.

4.14:
தெருளார் பிரமபுரத் திறைசேர்ந்து இடந்தீர்ந்தவர் தா
மருளார் பிரமபுரச் சிறைதீர்ந்தபின் வந்தெதிர்கொண்டு
அருளாலமரர் நடத்த இம்மாயயை கடந்த தற்பின்
சுருளார் பவநரகச் சுழலாற்றின் சுழ்ற்சியிலே.

4.15:
விழியல்லால் வேலில்லை விண்ணின் மாதர்
மேனியல்லால் வில்லில்லை மீனவற்கு
மொழியல்லால முதில்லையென்றுமுன்னாண்
முத்திவழி முனிந்தடைந்த மோகந்தீர்ந்தோங்
கழியல்லாற் கடலில்லை யென்பார்போலக்
காரியமே காரணமென்றுரைப்பார் காட்டும்
வழியல்லா வழியெல்லங்கடந்தோம் மற்றும்
வானேறும் வழிகண்டோ மகிழ்ந்திட்டோ மே.

4.16:
வன்பற்றுடன் மயல் பூண்டு மற்றோர்கதியால், இனநாள்
என்பற்றது பெறுந்தானமுமெத்தனை போதுளதாந்
துன்பற்ற தன்றுணிவாற் றுயர்தீர்க்குந்துழாய் முடியான்
இன்புற்ற நல்வழியால் ஏற்றுநற்பதமெண்ணுவமே.

4.17:
பண்டையிருவினையாற்றிற் படிந்து பாரங்
காணாதே யொழுகிய நாம் பாக்கியத்தால்
வண்டமருமலர் மாதர் மின்னாய் மன்ன
வைசயந்தி மணிவில்லாய் விளங்க, வான்சேர்
கொண்டலருண் மழை பொழியவந்த தொப்பாங்
குளிர்ந்து தெளிந்தமுதாய விரசை யாற்றைக்
கண்டணுகிக் கருத்தாலே கடந்து மீளாக்
கரைகண்டோ ர் கதியெல்லாங்கதித் திட்டோ மே.

4.18:
பூவளருந்தி ருமாது புணர்ந்த நம்புண்ணியனார்
தாவளமான தனித்திவஞ்சேர்ந்து தமருடனே
நாவளரும் பெருநான் மறையோதிய கீதமெல்லாம்
பாவளருந் தமிழ்ப் பல்லாண்டிசையுடன்பாடுவமே.

4.19:
அடலுரகமுண்டு மிழ்ந்தவருக்கன் போல
வழுக்கடைந்து கழுவிய நற்றரளம் போலக்
கடலொழுகிக் கரைசேர்ந்த கலமே போலக்
காட்டுதீக் கலந்தொழிந்த களிறேபோல
மடல்கவரு மயல்கழிந்த மாந்தர்போல
வஞ்சிறைபோய் மன்னர்பதம் பெற்றார்போல
உடன்முதலா வுயிர்மறைக்கு மாயைநீங்கி
யுயர்ந்த பதமே றியுணர்ந்தொன்றினோமே.

4.20:
மண்ணுலகில் மயல்தீர்ந்து மனந்ததும்பி
மன்னாத பயனிகந்து, மாலேயன்றிக்
கண்ணிலதென்றஞ்சியவன் கழலே பூண்டு
கடுஞ்சிறை போய்க்கரையே றுங்கதியேசென்று
விண்ணுலகில் வியப்பெல்லாம் விளங்கக் கண்டு
விண்ணவர்தங்குழாங்களுடன் வேதம்பாடிப்
பண்ணுலகிற் படியாத விசையாற்பாடும்
பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே

4.21:
மாளாத வினையனைத்தும் மாளநாம் போய்
வானேறி மலர்மகளாரன்பூணுந்
தோளாத மாமணிக்குத் தொண்டுபூண்டு
தொழுதுகந்து தோத்திரங்கள் பாடியாடிக்
கேளாத பழமறையின் கீதங்கேட்டுக்
கிடையாத பேரின்பம் பெருகநாளு
மீளாத பேரடிமைக்கன்பு பெற்றோ
மேதினியிலி ருக்கின்றோம் விதியினாலே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு : அடற்புள், கள்ளமன, அருவுரு-அனைத்தும்,
மறுத்தார், வான்பட்ட, உலகத்து, தந்திரங்களளவிலர்,
துறவறமே, வந்தன, கருமாலை, முஞ்செய்த,
உறையிட்ட, முன்கருவி, தெருளார், விழியல்லால்
வன்பற்றுடன், பண்டையிரு, பூவளரும், அடலுரகம்,
மண்ணுலகின், மாளாத, எண்டள.
---

5. பரமதபங்கம்

5.1:
எண்டள வம்புயத்துள் இலங்கும்மறுகோணமிசை
வண்பணிலந்திகிரி வளைவில்வளைவாய்முசலந்
திண்கையிலகுசம் சீர்திகழுங்கதை செங்கமலம்
எண்படையேந்திநின்றான் எழிலாழியிறையவனே.

5.2:
விடுநெறியஞ்சி விடத் தொடக்கிய
விதியரடைந்து தொழத்த ழைத்ததெழு
விழியருள் தந்து விலக்கடிக்களை
விரகிலியம்பி விலக்கி வைத்தனர்
கொடுவினையென் பதனைத் தினைத்தனை
கொணர்த லிகந்த குணத்தனத்தினர்
குருகையில் வந்து கொழுப்படக்கிய
குலபதி தந்த குறிப்பில் வைத்தனர்
கடுநரகன் புகழற்றி மற்றொரு
கதி பெறுமன்பிலெமைப் பொருத்தினர்
கமலையுகந்த கடற் கிடைக்கடல்
கருணை யுயர்ந்ததிடர்க் கொருக்கினர்
படுமுதலின்றி வளர்த்த நற்கலை
பலபலவொன்ற வெமக்குரைத்தனர்
பழ மறையந்தி நடைக் கிடைச்சுவர்
பரமதமென்றதிடித்த பத்தரே.

5.3:
போமுரைக்கும் பொருள் யாமறியோம் பொருளார் மறையிற்
றாமுரைக்கின்றன தாமேயறியுந் தரமுடையார்
ஆமுரைக்கென்றி வையாய்ந்தெடுத்து ஆரண நூல் வழியே
நாமுரைக்கும் வகை நல்லருளேந்திநவின்றனரே.

5.4:
சித்துமசித்து மிறையுமெனத் தெளிவுற்றுநின்ற
தத்துவ மூன்றும் தனித்தனிகாட்டுந்தனி மறையான்
முத்திவழிக்கிது மூலமெனத் துணிவார்களையுங்
கத்தி மயக்குங்கத கரை நாங்கடிகின்றனமே.

5.5:
முத்தின் வடங்களென முகுந்தன் புனைமூவகையாஞ்
சித்திலருசுருதிச் செவ்வைமாறிய சிந்தைகளாற்
பத்திலிரண்டு மெய்க்கப் பகட்டும் பரவாதியர்தங்
கத்தில் விழுந்தடைந்த அழுக்கின்று கழற்றினமே.

5.6:
நாக்கியலும் வகை நம்மையளித்த வர்நல்லருளாற்
பாக்கியமேந்திப் பரனடியார் திறம்பார்த்ததற்பின்
றாக்கியர் தங்கள் டலைமிசை தாக்கித் தனிமறைதான்
போக்கிய மென்றதனில் பொய்ம்மதங்களைப் போக்குவமே.

5.7:
தீவகை மாற்றி அன்றோர்தேரிலா ரணம்பாடிய நந்
தேவகிசீர் மகனார் திறம்பாவருள் சூடியநா
மூவகைய மறியாத்தத்துவத்தின் முகமறிவார்
நாவகையே நடத்தும் நடைபார்த்து நடந்தனமே.

5.8:
வேலைப்புறமகங்காண்பது போல் வேதநன்னெறிசேர்
நூலைப்புற மகங்காண்டலில் னுண்ணறிவின்றி நின்றீர்
மாலைப் பெற வழிகாட்டிய தேசிகர் வாசகமே
யோலைப்புறத் திலெழுதுகின்றோம் உள்ளெழுதுமினே.

5.9:
சிறைநிலையாம் பவத்தில் சிறுதேனின்பமுண்டுழல்வார்
மறைநிலைகண்டறியா மயன் மாற்றிய மன்னருளாற்
றுறைநிலை பாரமெனத் துளங்காவமுதக்கடலாம்
இறைநிலையாமுரைத்தோம் எங்குருக் களியம்பினவே.

5.10:
வெறியார் துளவுடை வித்தகன்றன்மையின் மெய்யறிவார்
குறியார் நெடியவரென்று ஒருகுற்றம் பிறர்க்குரையார்
அறியார் திறத்திலருள்புரிந்து ஆரண நன்னெறியாற்
சிறியார் வழிகளழிப்பதுங் தீங்குகழிப்பதற்கே.

5.11:
மிண்டுரைக்க விரகு தருந்தருக்கங்கொண்டே
வேண்டுங்கால் வேண்டுவதே விளம்புகின்றார்
கண்டதற்கு விபரீதங்கத்து கின்றார்
காணாத குறைமறையிற் காட்ட நிற்பார்
பண்டொருத்தன் கண்டுரைத்தேன் நானேயென்னப்
பலவகையிலு பாதிகளாற் படிந்து வீழ்வார்
கொண்டலொக்குந் திருமேனிமாயக் கூத்தன்
குரைகழல் சேர்விதிவகையிற் கூடாதாரே.

5.12:
கண்டது மெய்யெனில் காணுமறையிலறிவு கண்டோ ம்
கண்டதலாத திலதெனில் கண்டிலங்குற்றமிதிற்
கண்டதுபோல் மறைகாட்டுவதும் கண்டதொத்ததனால்
உண்டதுகேட்கும் உலோகாயதரென்றுமீறுவதே.

5.13:
கண்டதனாற் கானாத தனுமிக்கின்றார்
கண்டொருத்தனுரைத்ததனைக் கவருகின்றார்
உண்டுபசிகெ டுமென்றே யுனர்ந்துண் கின்றார்
ஒன்றாலேயொன்றைத் தாஞ்சதிக்கின்றார்
பண்டுமுலையுண்டதனால் முலையுண்கின்றார்
பார்க்கின்றார் பலவல்லாத் தம்மை மற்றும்
கண்டு மதி கெட்ட நிலை காணகில்லார்
காணாத திலதென்று கலங்குவரே.

5.14:
காணாதில தெனுங்கல்வி யினாரைக் கடிந்ததற்பின்
கோணார்குதர்க்கங்கள் கொண்டே குழப்பும் பவுத்தர்களி
னாணாதனைத்துமில தென்றும் நால்வகையன்றிதென்றும்
வாணாளறுக்கின்ற மத்திமத்தான் வழிமாற்றுவமே.

5.15:
மானமிலைமேயமிலை யென்றும் மற்றோர்
வாதநெறியிலையென்றும் வாதுபூண்ட
தானுமிலை தன்னுரையும் பொருளுமில்லை
தத்துவத்தினுணர்த்தி சயமில்லையென்றும்
வானவருமான வருமனமும் வெள்க
வளம்பேசுமதி கேடன்மத்திமத்தான்
றேனநெறிகொண்டனைத்துந்தி ருடாவண்ணஞ்
செழுமதிபோலெழு மதியாற் சேமித்தோமே.

5.16:
முற்றுஞ்சகத்திலதென்றே பகட்டியமுட்டரை, நாஞ்
சுற்றுந்துறந்து துறையில்நின்றே துகளாக்கியபின்
மற்றொன்றிலது மதிபலவுண்டென்று வஞ்சனையாற்
சற்றுந்துறந்த யோகாசரனைச் சதிக்கின்றனமே.

5.17:
உளக்கதியை நாமுள்ளியுள்ளந்தேறி
உலகத்தாருகந்திசைய வுலகுண்டென்றோம்
இளக்கவாரிதாகிய நற்றருக்கஞ்சேர்ந்த
வெழின்மறையிலீ சனுடனெம்மைக் கண்டோ ம்
விளக்குநிரைபோல் மதிகள் வேறாய் வேறொன்
றறியாதே விளங்குமென விளம்புகின்ற
களக்கருத்தன் கண்ணிரன்டு மழித்தோம் நாணாக்
காகம்போற் றிரிந்தவனென் கதறுமாறே.

5.18:
பொருளொன்றிலதென்று போதமொன்றுகொண்ட பொய்யரை, நாந்
தெருள்கொண்டு தீர்த்த பின் காணவொண்ணாப் பொருள்தேடுகின்ற
மருள்கொண்ட சூதுரைக்கும் சௌத்திராந்திகன்வண்ணிக்கை நாம்
இருள்கொண்ட பாழ்ங்கிணரென்று இகழ்ந்தோடவியும்புவமே.

5.19:
நிலையில்லாப் பொருள்மதியை விளைத்துத் தான்
சேர்நிறங்கொடுத்துத் தானழியுந், தன்னால்வந்த
நிலையில்லாமதி தன்னில்நிறத்தைக் காணும்
இதுகாணும் பொருள் காண்கையென்ற நீசன்
முலையில்லாத் தாய்கொடுத்த முலைப்பாலுண்ணும்
முகமில்லாமொழியெனவே மொழிந்த வார்த்தை
தலையில்லாத் தாளூருங்கணக்காய் நின்ற
கட்டளை நாங்கண்டின்று காடினோமே.

5.20:
காண்கின்றவனிலை காட்சியுங்கண்டதுமுண்டு, அவைதாம்
எண்கொண்டனவன்று இவற்றிற்குணமு நிலையுமிலை
சேண்கொண்டசந்ததியால் சேர்ந்துமொன்றென நிற்க்குமென்ற
கோண்கொண்டகோளுரை வைபாடிகன் குறைகூறுவமே.

5.21:
கும்பிடுவாராரென்று தேடுகின்றார்
குணங்களையுந்தங்க ளுக்குக் கூறுகின்றார்
தம்படியைத்தமர்க்குரைத்துப் படிவிக்கின்றார்
தமக்கினிமேல் வீடென்று சாதிக்கின்றார்
தம்புடவையுணல் குறித்து நெடிதெண்கின்றார்
சந்ததிக்குத் தவம்பலிக்கத் தாம் போகின்றார்
செம்படவர் செய்கின்ற சிற்றினிப்பைச்
சேவகப் பற்றுடனே நாஞ்செகுத்திட்டோ மே.

5.22:
வேதங்கண் மௌலிவிளங்க வியாசன் விரித்த நன்னூற்
பாதங்களான பதினாறில் ஈசன்படிமறைத்துப்
பேதங்களில்லையென்று ஓர்பிரமப்பிச்சியம்புகின்ற
போதங்கழிந்தவனைப் புத்தர்மாட்டுடன் பூட்டுவமே.

5.23:
பிரிவில்லா விருளொன்று பிணக்கொன்றில்லப்
பெருவெயிலை மறைத்துலகங்காட்டுமென்ன
வறிவில்லா வறிவொன்றையவித்தைமூடி
யகம்புறமென்றி வையனைத்துமைக்குமென்பார்
செறிவில்லாப் புத்தருடன் சேர்ந்துகெட்டார்
சீவனையுமீசனையுஞ்சிதைக்கப்பார்த்தார்
நெறியில்லா நேர்வழியுந்தானேயானா
னெடுமாலை நாமடைந்து நிலைபெற்றோமே.

5.24:
சோதனைவிட்டொருத்தஞ்சொல மெய்யெனச் சோகதரைச்
சேதனையற்றவரென்று சிதைத்தபின், சீவர்கட்கோர்
வேதனைசெய்கை வெறுமறமென்று விளம்பிவைத்தே
மாதவமென்று மயிர் பறிப்பார்மயல் மாற்றுவமே.

5.25:
சொன்னார் தாஞ்சொன்ன தெலாந்துறவோ மென்றுஞ்
சொன்னதுவே சொன்னதலதாகுமென்றுந்
தின்னாதுந்தின்னுமது மேகமென்றுஞ்
சிறியனுமாம் பெரியனுமாஞ்சீவனென்றும்
மன்னாதுமன்னுமதுமொன்றேயென்றும்
வையமெலாம் விழுகின்ற தென்றுமென்றுந்
தென்னாடும் வடநாடுஞ்சிரிக்கப் பேசுஞ்
சினநெறியார் சினமெல்லாஞ்சிதைத்திட்டோ மே.

5.26:
ஏகாந்திகமொன்றுமில்லையென்று ஆசையைத்தாமுடுப்பார்
சோகாந்தமாகத் துறப்புண்டபின் றொழில்வைதிகமென்று
ஏகாந்திகள்சொன்ன வீசன்படியில் விகற்பமெண்ணும்
லோகாந்தவீணர்தம் வேதாந்த வார்த்தை விலக்குவமே.

5.27:
ஒன்றெனவும் பலவெனவுந்தோற்றுகின்ற
உலகெல்லாமொரு பிரமந்தானேயாக்கி
நன்றெனவுந்தீதெனவும் பிரிந்தவெல்லா
நன்றன்றுதீதன்றேயென நவின்றார்
கன்றுமலர்பசுவு மலராகி நின்றே
கன்றாகிப் பசுவாகி நின்றவண்ணம்
இன்றுமறைமாட்டுக்கோரிடையனான
ஏகாந்தியிசைந்திட நாமியம்பினோமே.

5.28:
சாயா மறைகளிற் சத்தந்தெளிந்திடச் சாற்றுதலாற்
றூயாரிவரென்று தோன்றநின்றே பலசூதுகளான்
மாயாமதமும் மறுசினவாதும் பவுத்தமுஞ்சேர்
வையாகரணர்சொல்லும் மறுமாற்றங்கள் மாற்றுவமே.

5.29:
கலத்திற் கலங்கி வருங்காணிக்கெல்லாங்
கண்ணாறுசதிர வழிகட்டுவார் போல்
உலகத்தில் மறைசேர்ந்தவுரைக டம்மால்
ஒருபிழியுஞ்சேராமலு பகரித்தார்
பலகத்தும் பவுத்தர்முதலான பண்டைப்
பகற்கள்ளர் பகட்டழிக்கப் பரவும் பொய்யாஞ்
சிலகற்றுச் சித்தாந்தமறியகில்லாச்
சிறுவரினி மயங்காமற் சேமித்தோமே.

5.30:
கண்டதலாதன கட்டுதலாற்f கண்டவிட்டதனாற்
பண்டுள தானமறைக்குப் பழமையை மாற்றுதலாற்
கொண்டதுமீசனைக் கொள்ளாவகையென்று கூறுதலால்
கண்டகராய் நின்ற காணாதர் வாதங்கழற்றுவமே.

5.31:
ஆகமத்தை யனுமான மென்கையாலும்
அழியாத மறையழிக்க நினைத்தலாலும்
போகமற்றொரு பலம் போற்கிடக்கை தானே
புண்ணியர்க்கு வீடென்று புணர்த்தலாலு
மாகமொத்த மணிவண்ணன் படியை மாற்றி
மற்றவனுக்கொரு படியை வகுத்தலாலுங்
காகமொத்த காணாத தன் கண்ணை வாங்கிக்
காக்கைக்காரென்றலற்றக் காட்டினோமே.

5.32:
கோதம நூல்களைக் குற்றமிலாவகை கூட்டலுமாங்
கோதுகழித்து ஒருகூற்றிற்குணங்களைக் கொள்ளவுமாம்
யாது மிகந்து ஒருநீதியையாமேவகுக்கவுமாம்
வேதியர் நன்னயவித்தரமென்பது மெய்யுளதே.

5.33:
நான் மறைக்குத்துணையாக நல்லோரெண்ணு
நாலிரண்டிலொன்றான நயநூல்தன்னிற்
கூன்மறைத்தல் கோதுளது கழித்தன் மற்றோர்
கோணாத கோதில் வழிவகுத்தலன்றி
யூன்மறைத்த வுயிரொளிபோலொத்த தொவ்வாது
உயிரில்லாக்காணாத முரைத்தவெல்லாம்
வான்மறைக்கமடிகோலும் வண்ணமென்றொ
மற்றிதற்கார் மறுமாற்றம் பேசுவாரே.

5.34:
ஈசனுமற்றணங்குமிலதென்று எழில்நான்மறையிற்
பேசியநல்வினையால் பெரும்பாழுக்கு நீரிறைக்கு
நீசரைநீதிகளானிக மாந்தத்தினூல் வழியே
மாசின்மனங்கொடுத்தும் மறுமாற்றங்கண்f மாற்றுவமே.

5.35:
கனைகடல்போலொரு நீராஞ்சூத்திரத்தைக்
கவந்தனையு மிராகுவையும் போலக்கண்டு
நினைவுடனே நிலைத்தரும மிகந்து நிற்கு
நீசர்நிலை நிலைநாட வண்ணமெண்ணி
வினைபரவுசைமினியார் வேதநூலை
வேதாந்த நூலுடனே விரகாற்கோத்த
முனையுடைய முழுமதி நம்முனிவர்சொன்ன
மொழிவழியே வழியென்று முயன்றிட்டோ மே.

5.36:
முக்குணமாய்நின்ற மூலப்பிரகிருதிக்கு, அழியா
வக்குணமற்ற அருத்துணை மற்றதற் கீசனிலை
இக்கணனைப்படியை யைந்துமெண்ணில் முன்முத்தியென்னும்
பக்கணவீணர் பழம்பகட்டைப் பழுதாக்குவமே.

5.37:
ஈசனிலனென் பதனா லென்றுஞ்சீவர்
எங்குமுளரிலருணர்வை யென்றவத்தாற்
பாசமெனும் பிரகிருதிதன்னால் என்றும்
பலமுமிலை வீடுமிலை யென்னும் பண்பாற்
காசினி நீர் முதலான காரியங்கள்
கச்சபத்தின் கால்கை போலென்னுங்கத்தால்
நாசமலதிலை காணும் ஞாலத்துள்ளீர்
நாமிசையாச் சாங்கியத்தை நாடுவார்க்கே.

5.38:
தாவிப்புவனங்கள் தாளினை சூட்டிய, தந்தையுந்திப்
பூவிற்பிறக்கினும் பூதங்களெல்லாம் புணர்த்திடினு
நாவிற்பிரிவின்றி நாமங்கை வாழினும் நான்மறையிற்
பாவித்ததன்றியுரைப்பது பாறும் பதர்த்திரளே.

5.39:
காரணனாயுலக ளிக்குங்கண்ணன் றேசைக்
கண்ணாடி நிழல் போலக் காண்கையாலுந்
தாரணையின் முடிவான சமாதிதன்னைத்
தனக்கேறும் விளக்கென்று தனிக்கையாலுங்
காரணமாமது தனக்குப்பயனாஞ்
சீவன்கைவலிய நிலையென்று கணிக்கையாலுங்
கோரணியின் கோலமெனக்குக் குறிக்கலாகுங்
கோகனகத்தயன் கூறுஞ்சமயக் கூற்றே.

5.40:
சாதுசனங்களெலாஞ்சச்சை யென்னும் சலம்புணர்த்தார்
கோதம சாபமொன்றால் கொடுங்கோலங்கள் கொண்டுலகிற்
பூதபதிக்கடியா ரெனநின்று அவன் பொய்யுரையால்
வேதமகற்ற நிற்பார் விகற்பங்கள் விலக்குவமே.

5.41:
மாதவனே பரனென்று வையங்காண
மழுவேந்திமயல் றீர்க்க வல்லதேவன்
கைதவமொன்று கந்தவரைக் கடியசாபங்
கதிவியதாலதன் பலத்தைக்கருதிப் பண்டை
வேதநெறியணுகாது விலங்குதாவி
வேறாகவிரித் துரைத்த விகற்பமெல்லாம்
ஓதுவதுகுத்திரத்துக் கென்றுரைத்தான்
ஓதாதே யோதுவிக்கு மொருவன்றானே.

5.42:
கந்தமலர்மகள் மின்னுங்காரார் மேனிக்
கருணைமுகில் கண்ட கண்கள் மயிலாயாலும்
அந்தமில்பேரின்பத் திலடியரோடே
அடிமையெனும் பேரமுத மர