nAlAyira divya pirapantam -part IV (2791-3342)
(in Tamil Script, unicode/utf-8 format)

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 2791-3342)



This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

C: Project Madurai 2001
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 2791-3342)

ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய
திருவாய்மொழி



ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாநுஜாய நம


திருவாய்மொழித் தனியன்கள்

நாதமுனிகள் அருளிச்செய்தது
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்fரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.

வெண்பாக்கள்

ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.

சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.

அனந்தாழ்வான் அருளிச்செய்த்து
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.

பட்டர் அருளிச்செய்தவை
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.

ஸ்ரீமதே ராமாநுஜாய நம
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி.

திருவாய் மொழி முதற் பத்து.

2791
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. (2) 1.1.1

2792
மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே. 1.1.2

2793
இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே. 1.1.3

2794
நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. 1.1.4

2795
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5

2796
நின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்
என்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே. 1.1.6

2797
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. 1.1.7

2798
சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனவுல கழித்தமைத் துளனே. 1.1.8

2799
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. 1.1.9

2800
பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
பரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. 1.1.10

2801
கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே. (2) 1.1.11

2802
வீடுமின் முற்றவும்--வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை--வீடுசெய்ம்மினே. (2) 1.2.1

2803
மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள்
என்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே. 1.2.2

2804
நீர்நும தென்றிவை--வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அத--னேர்நிறை யில்லே. 1.2.3

2805
இல்லது முள்ளதும்--அல்ல தவனுரு
எல்லையி லந்நலம்--புல்குபற் றற்றே. 1.2.4

2806
அற்றது பற்றெனில்--உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில்--அற்றிறை பற்றே. 1.2.5

2807
பற்றில னீசனும்--முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. 1.2.6

2808
அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. 1.2.7

2809
உள்ள முரைசெயல்--உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. 1.2.8

2810
ஒடுங்க அவன்கண்--ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. 1.2.9

2811
எண்பெருக் கந்நலத்து--ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. (2) 1.2.10

2812
சேர்த்தடத் தென்குரு--கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11

2813
பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உ ரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. (2) 1.3.1

2814
எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,
ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்,
தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,
அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே. 1.3.2

2815
அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,f
அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே? 1.3.3

2816
யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,
யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,
பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,
பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே. 1.3.4

2817
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,
உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. 1.3.5

2818
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே. 1.3.6

2819
ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து,
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே. 1.3.7

2820
நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே
மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,
நாளூநந் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி,
மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே. 1.3.8

2821
வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித்
தலத்து, எழு திசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்
புலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே. 1.3.9

2822
துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்,
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,
பு<யற்கரு நிறத்தனன் பெருநிலங் கடந்தநல் லடிப்போது ,
அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே. 1.3.10

2823
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2) 1.3.11

2824
அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய். நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி
வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ? (2) 1.4.1

2825
என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே? 1.4.2

2826
விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.
மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று , ஒருத்தி
மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே. 1.4.3

2827
என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்
நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ? 1.4.4

2828
நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,
நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.
மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே. 1.4.5

2829
அருளாத நீரருளி யவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி
யருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத்தோமே? 1.4.6

2830
என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது
என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருவாய்ச்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே. யான்வளர்த்த நீயலையே? 1.4.7

2831
நீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய்
நோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே. 1.4.8

2832
நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?
ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே. 1.4.9

2833
உடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்,
கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி
விடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே. 1.4.10

2834
அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை
வளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே. (2) 1.4.11

2835
வளவே ழுலகின் முதலாய்
வானோ ரிறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட
கள்வா. என்பன், பின்னையும்,
தளவேழ் முறுவல் பின்னைக்காய்
வல்லா னாயர் தலைவனாய்,
இளவே றேழும் தழுவிய
எந்தாய். என்பன் நினைந்துநைந்தே. (2) 1.5.1

2836
நினைந்து நைந்துள் கரைந்துருகி,
இமையோர் பலரும் முனிவரும்,
புனைந்த கண்ணி நீர்சாந்தம்
புகையோ டேந்தி வணங்கினால்,
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
வித்தாய், முதலில் சிதையாமே,
மனஞ்செய் ஞானத் துன்பெருமை
மாசூ ணாதோ மாயோனே. 1.5.2

2837
மாயோ னிகளாய் நடைகற்ற
வானோர் பலரும் முனிவரும்,
நீயோ னிகளைப் படை என்று
நிறைநான் முகனைப் படைத்தவன்
சேயோ னெல்லா அறிவுக்கும்,
திசைக ளெல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும்
தாயோன் தானோ ருருவனே. 1.5.3

2838
தானோ ருருவே தனிவித்தாய்த்
தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
வைகுந் தன்எம் பெருமானே. 1.5.4

2839
மானேய் நோக்கி மடவாளை
மார்வில் கொண்டாய். மாதவா.
கூனே சிதைய வுண்டைவில்
நிறத்தில் தெறித்தாய். கோவிfந்தா.
வானார் சோதி மணிவண்ணா.
மதுசூ தா.நீ யருளாய் உ ன்
தேனே மலரும் திருப்பாதம்
சேரு மாறு வினையேனே. 1.5.5

2840
வினையேன் வினைதீர் மருந்தானாய்.
விண்ணோர் தலைவா. கேசவா.
மனைசே ராயர் குலமுதலே.
மாமா யன்னே. மாதவா.
சினையேய் தழைய மராமரங்கள்
ஏழும் எய்தாய். சிரீதரா.
இனையா யினைய பெயரினாய்.
என்று நைவன் அடியேனே. 1.5.6

2841
அடியேன் சிறிய ஞானத்தன்,
அறித லார்க்கு மரியானை
கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி
புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ஆக்கை யடியாரைச்
சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்,
இதனில் மிக்கோர் அயர்வுண்டே? 1.5.7

2842
உண்டா யுலகேழ் முன்னமே,
உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும்
மனிசர்க் காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய
நெய்யூண் மருந்தோ? மாயோனே. 1.5.8

2843
மாயோம் தீய அலவலைப்
பெருமா வஞ்சப் பேய்வீய
தூய குழவி யாய்விடப்பால்
அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன்
மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மா னென்னம்மான்
அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே. 1.5.9

2844
சார்ந்த இருவல் வினைகளும்
சரித்து மாயப் பற்றறுத்து
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்
திருத்தி வீடு திருத்துவான்,
ஆர்ந்த ஞானச் சுடராகி
அகலம் கீழ்மேல் அளவிறந்து,
நேர்ந்த வுருவாய் அருவாகும்
இவற்றி னுயிராம் நெடுமாலே. 1.5.10

2845
மாலே. மாயப் பெருமானே.
மாமா யனே. என்றென்று
மாலே யேறி மாலருளால்
மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழ ரிசைகாரர்
பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவைபத்தும்
வல்லார்க் கில்லை பரிவதே. 1.5.11

2846
பரிவதி லீசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர்.
பிரிவகை யின்றிநன் னீர்தூய்
புரிவது வும்புகை பூவே. (2) 1.6.1

2847
மதுவார் தண்ணந் துழாயான்
முதுவே தமுதல் வனுக்கு
எதுவே தென்பணி என்னா
ததுவே யாட்செய்யு மீடே. 1.6.2

2848
ஈடு மெடுப்புமி லீசன்
மாடு விடாதென் மனனே
பாடுமென் நாவலன் பாடல்
ஆடுமெ னங்கம ணங்கே. 1.6.3

2849
அணங்கென ஆடுமெ னங்கம்
வணங்கி வழிபடு மீசன்
பிணங்கி யமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையி னானே. 1.6.4

2850
கொள்கைகொ ளாமையி லாதான்
எள்கலி ராகமி லாதான்
விள்கைவிள் ளாமைவி ரும்பி
உள்கலந் தார்க்கோ ரமுதே. 1.6.5

2851
அமுதம் அமரகட் கீந்த
நிமிர்சுட ராழி நெடுமால்
அமுதிலு மாற்ற இனியன்
நிமிர்திரை நீள்கட லானே. 1.6.6

2852
நீள்கடல் சூழிலங் கைக்கோன்
தோள்கள் தலைதுணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்க ழிமினே. 1.6.7

2853
கழிமின்தொண் டீர்கள் கழித்துத்
தொழுமின் அவனைத் தொழுதால்
வழிநின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே. 1.6.8

2854
தரும அரும்பய னாய
திருமக ளார்தனிக் கேள்வர்,
பெருமை யுடைய பிரானார்,
இருமை வினைகடி வாரே. 1.6.9

2855
கடிவார் தீய வினைகள்
நொடியா ருமள வைக்கண்
கொடியா அடுபுள் ளுயர்த்த
வடிவார் மாதவ னாரே. 1.6.10

2856
மாதவன் பால்சட கோபன்
தீதவ மின்றி யுரைத்த
ஏதமி லாயிரத் திப்பத்து
ஓதவல் லார்பிற வாரே. 1.6.11

2857
பிறவித்துயரற ஞானத்துள்நின்று,
துறவிச்சுடர்விளக்கம் தலைப்பெய்வார்,
அறவனை யாழிப் படையந fதணனை,
மறவியை யின்றி மனத்துவைப் பாரே. 1.7.1

2858
வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத்
துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்,
எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,
அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே. 1.7.2

2859
ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்,
மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை,
தூய அமுதைப் பருகிப்பருகி, என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே. 1.7.3

2860
மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை,
உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்
இசைவினையென்சொல்லி யான்விடுவேனே. 1.7.4

2861
விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை,
நடுவேவந்துய்யக் கொள்கின்றநாதனை,
தொடுவேசெய்திள ஆய்ச்சியர்க்கண்ணினுள்,
விடவேசெய்து விழிக்கும்பிரானையே. 1.7.5

2862
பிரான்பெருநிலங் கீண்டவன், பின்னும்
விராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,
மராமரமெய்த மாயவன், என்னுள்
இரானெனில்பின்னை யானொட்டுவேனோ. 1.7.6

2863
யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்,
தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,
ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல்
வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே. 1.7.7

2864
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைf நன்னெஞ்சந்
தன்னை, அகல்விக்கத் தானும்கில்லானினி,
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ fபீடுடை,
முன்னை யமரர் முழுமுத லானே. 1.7.8

2865
அமரர fமுழுமுத லாகிய ஆதியை,
அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,
அமர அழும்பத் துழாவியென் னாவி,
அமரர்த் தழுவிற் றினிய கலுமோ. 1.7.9

2866
அகலில் அகலும் அணுகில் அணுகும்,
புகலு மரியன் பொருவல்ல னெம்மான்,
நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,
பகலு மிரவும் படிந்து குடைந்தே. 1.7.10

2867
குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,
அடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,
மிடைந்த சொல் தொடை யாயிரத்திப்பத்து,
உடைந்து நோய்களை யோடு விக்குமே. 1.7.11

2868
ஓடும்புள்ளேரி, சூடும fதண்டுழாய்,
நீடு நின்றவை, ஆடும் அம்மானே. 1.8.1

2869
அம்மானாய்ப் பின்னும், எம்மாண fபுமானான,
வெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே. 1.8.2

2870
கண்ணா வானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,
தண்ணார் வேங்கட, விண்ணோர fவெற்பனே. 1.8.3

2871
வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே,
நிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே. 1.8.4

2872
வைக லும்வெண்ணெய், கைக லந்துண்டான்,
பொய்க லவாது, என் - மெய்க லந்தானே. 1.8.5

2873
கலந்தென்னாவி, நலங்கொள் நாதன்,
புலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே. 1.8.6

2874
கொண்டா னேழ்விடை, உண்டா னேழ்வையம்,
தண்டா மஞ்செய்து, என் - எண்டா னானானே. 1.8.7

2875
ஆனா னானாயன், மீனோ டேனமும்,
தானா னானென்னில், தானா யசங்கே. 1.8.8

2876
சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்,
எங்கும் தானாய, நங்கள் நாதனே. 1.8.9

2877
நாதன்ஞாலங்கொள் - பாதன், என்னம்மான்,
ஓதம் போல்கிளர், வேதநீரனே. 1.8.10

2878
நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன்,
நெர்த லாயிரத்து, ஓர்தலிவையே. 1.8.11

2879
இவையும் அவையும் உவையம் இவரும் அவரும் உவரும்,
அவையும fயவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்,
அவையுள் தனிமுத லெம்மான் கண்ணபிரானென்னமுதம்,
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச்சுழலு ளானே. 1.9.1

2880
சூழல fபலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை
கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்,
வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல fசேர்ந்தான் அவனென fனருகலி லானே. 1.9.2

2881
அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்,
கருகிய நீலநன் மேனி வண்ணன்செந fதாமரைக் கண்ணன்,
பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன்,
ஒருகதியின்சுவைதந்திட் டொழிவிலனென்னோடுடனே. 1.9.3

2882
உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர்
மடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே,
உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்,
கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே. 1.9.4

2883
ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி,
செக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான்,
நக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக,
ஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே. 1.9.5

2884
மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அதுவே,
காயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே,
சேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்,
தூயன் துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே. 1.9.6

2885
தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்,
தாளிணைமேலும்புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்
கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி,
நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே. 1.9.7

2886
நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்,
ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே,
பூவியல்நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும்,
காவிநன்மேனிக்கமலக் கண்ணனென்கண்ணினுளானே. 1.9.8

2887
கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான்காண்பன் அவன்கண்களாலே,
அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,
கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி
அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே. 1.9.9

2888
நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி,
கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்,
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே. 1.9.10

2889
உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு,
இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்,
இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு,
நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபொருமே. 1.9.11

2890
பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு,
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ,
ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக்
கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே. 1.10.1

2891
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்,
எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்,
மண்ணும்நீரு மெரியும்நல்வாயுவும்,
விண்ணுமாய்விரியு மெம்பிரானையே. 1.10.2

2892
எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
தம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை,
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை,
எம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே. 1.10.3

2893
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்
என்செய்யோம், இனியென்னகுறைவினம்?
மைந்தனை மலராள்மணவாளனை,
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4

2894
கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு,
உண்டானையுலகேழு மோர்மூவடி
கொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே. 1.10.5

2895
நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,
நோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,
தாயும்தந்தையுமா யிவ்வுலகினில்,
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே. 1.10.6

2896
எந்தையேயென்று மெம்பெருமானென்றும்,
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்,
எந்தையெம்பெருமானென்று வானவர்,
சிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வனையே. 1.10.7

2897
செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,
மல்கும்கண்பனி நாடுவன்மாயமே,
அல்லும்நன்பகலு மிடைவீடின்றி,
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே. 1.10.8

2898
நம்பியைத்தென் குறுங்குடிநின்ற, அச்
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,
உம்பர்வானவ ராதியஞ்சோதியை,
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ. 1.10.9

2899
மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,
மறக்குமென்றுசெந் தாமரைக்கண்ணொடு,
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,
மறப்பனோவினி யானென்மணியையே? 1.10.10

2900
மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர்
அணியை, தென்குரு கூர்ச்சடகோபன், சொல்
பணிசெயாயிரத் துள்ளிவைபத்துடன்,
தணிவிலர் கற்ப ரேல்கல்விவாயுமே. 1.10.11

&நறஸபஇ
திருவாய் மொழி இரண்டாம் பத்து

2901
வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. 2.1.1

2902
கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே. 2.1.2

2903
காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே. 2.1.3

2904
கடலும்மலையும்விசும்பும் துழாயெம்போல்,
சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்,
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ,
உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே. 2.1.4

2905
ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு,
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற,
வாழியவானமே, நீயும fமதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே. 2.1.5

2906
நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம்கேட்டுன் மெய்ந்நீர்மைதோற்றாயே. 2.1.6

2907
தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்குஎம்
ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே,
வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி,
மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே. 2.1.7

2908
இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய்,
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால்,
உருளும்சகடம் உதைத்தபெருமானார்,
அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே. 2.1.8

2909
நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்,
அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே. 2.1.9

2910
வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்,
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த,
மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே. 2.1.10

2911
சோராதவெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே,
ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன்,
ஓராயிரம்சொன்ன அவற்றுளிவைப்பத்தும்,
சோரார்விடார்க்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. 2.1.11

2912
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
எண்ணின்மீதிய னெம்பெருமான்,
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட, நங்f
கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே. 2.2.1

2913
ஏபாவம்,பரமே, யேழுலகும்,
ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்,
மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்,
கோபாலகோளரி யேறன்றியே. 2.2.2

2914
ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை,
வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து,
மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட,
மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே. 2.2.3

2915
தேவுமெப் பொருளும்படைக்க,
பூவில்நான் முகனைப்படைத்த,
தேவனெம் பெருமானுக்கல்லால்,
பூவும்பூசனையும் தகுமே. 2.2.4

2916
தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே,
மிகும்தேவு மெப்பொருளும்படைக்க,
தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்,
மிகும்சோதி மேலறிவார்யவரே. 2.2.5

2917
யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,
பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,
அவரெம் ஆழியம் பள்ளியாரே. 2.2.6

2918
பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்,
வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்,
உள்ளுளா ரறிவார் அவன்றன்,
கள்ளமாய மனக்கருத்தே. 2.2.7

2919
கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்,
வருத்தித்தமாயப் பிரானையன்றி, ஆரே
திருத்தித்திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக்காக்கு மியல்வினரே. 2.2.8

2920
காக்குமியல்வினன் கண்ணபெருமான்,
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,
ஆக்கினான் தெய்வவுலகுகளே. 2.2.9

2921
கள்வா எம்மையு மேழுலகும், நின்
னுள்ளேதோற்றிய இறைவா. என்று,
வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்,
புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே. 2.2.10

2922
ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்
கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,
வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,
ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. 2.2.11

2923
ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,
தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே. 2.3.1

2924
ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய,
ஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த,
அத்தா, நீசெய்தன அடியேனறியேனே. 2.3.2

2925
அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து,
அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்,
அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று,
அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே. 2.3.3

2926
எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு,
எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே,
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்,
எனதாவியார?fயானார?f தந்தநீகொண்டாக்கினையே. 2.3.4

2927
இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்,
கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே,
தனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய்,
நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே. 2.3.5

2928
சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை,
தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை,
சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்
கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல்முன்னமே. 2.3.6

2929
முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே,
பன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே,
கன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா,
நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே. 2.3.7

2930
குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்,
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்,
உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்,
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே. 2.3.8

2931
கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்,
படிவான்மிறந்த பரமன்பவித்திரன்சீர்,
செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி,
அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே. 2.3.9

2932
களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று,
ஒளிக்கொண்டசோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ,
துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி,
அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே. 2.3.10

2933
குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை,
குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த,
குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி,
குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே. 2.3.11

2934
ஆடியாடி யகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று,
வாடிவாடு மிவ்வாணுதலெ. 2.4.1

2935
வாணுதலிம்மடவரல், உம்மைக்
காணுமாசையுள் நைகின்றாள், விறல்
வாணனாயிரந்தோள்துணித்தீர், உம்மைக்
காண நீரிரக்கமிலீரே. 2.4.2

2936
இரக்கமனத்தோ டெரியணை,
அரக்குமெழுகு மொக்குமிவள்,
இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்,
அரக்கனிலங்கை செற்றீருக்கே. 2.4.3

2937
இலங்கைசெற்றவனே, என்னும், பின்னும்
வலங்கொள்புள்ளுயர்த்தாய் என்னும், உள்ளம்
மலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக்
கலங்கிக்கைதொழும் நின்றிவளே. 2.4.4

2938
இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன
குவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு
திவளும்தண்ணந் துழாய்கொடீர், என
தவளவண்ணர் தகவுகளே. 2.4.5

2939
தகவுடையவனே யென்னும், பின்னும்
மிகவிரும்பும்பிரான் என்னும், என
தகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே. 2.4.6

2940
உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என
வள்ளலேகண்ணனேயென்னும், பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்
கள்விதான்பட்ட வஞ்சனையே. 2.4.7

2941
வஞ்சனே, என்னும் கைதொழும், தன்
நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும், விறல்
கஞ்சனைவஞ்சனை செய்தீர், உம்மைத்
தஞ்சமென்றிவள் பட்டனவே. 2.4.8

2942
பட்டபோதெழு போதறியாள், விரை
மட்டலர்தண்துழாய் என்னும், சுடர்
வட்டவாய்நுதி நேமியீர், நும
திட்டமென்கொ லிவ்வேழைக்கே. 2.4.9

2943
ஏழைபேதை யிராப்பகல், தன
கேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர்
வாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே. 2.4.10

2944
வாட்டமில்புகழ் வாமனனை, இசை
கூட்டிவண்சடகோபன் சொல், அமை
பாட்டோ ராயிரத்திப் பத்தால், அடி
குட்டலாகு மந்தாமமே. 2.4.11

2945
அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு,
அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்,
செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. 2.5.1

2946
திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,
திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,
ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே. 2.5.2

2947
என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம்,
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,
தன்னுள்கலவாத தெப்பொருளும்தானிலையே. 2.5.3

2948
எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்,
அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்,
எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்,
அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே. 2.5.4

2949
ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த,
காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு,
நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்,
பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே. 2.5.5

2950
பலபலவேயாபரணம் பேரும்பலபலவே,
பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்,
பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,
பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ. 2.5.6

2951
பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்,
காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்,
தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்,
பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம்போரேறே. 2.5.7

2952
பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,
தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,
என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை,
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. 2.5.8

2953
சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை,
எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை,
நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்,
அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே. 2.5.9

2954
ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே. 2.5.10

2955
கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை,
கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன்,
கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்,
கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே. 2.5.11

2956
வைகுந்தாமணிவண்ணனே, என்பொல்லாத்திருக்குறளா, என்னுள்மன்னி,
வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே,
செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்
செய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே. 2.6.1

2957
சிக்கெனச்சிறுதோரிடமும்புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள்
ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின்,
மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமாய், எங்கும்
பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே. 2.6.2

2958
தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப்
பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை,
நாமருவிநன்கேத்தியுள்ளிவணங்கிநாம்மகிழ்ந்தாட, நாவலர்
பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே. 2.6.3

2959
வள்ளலே,மதுசூதனா, என்மரகதமலையே, உனைநினைந்து,
தெள்கல்தந்த எந்தாய் உ<ன்னையெங்ஙனம்விடுகேன்,
வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து
உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே. 2.6.4

2960
உய்ந்துபோந்தென்னுலப்பிலாதவெந்தீவினைகளைநாசஞ்செய்துஉன்
தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ,
ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை,
சிந்தைசெய்தவெந்தாய் உ<ன்னைச்சிந்தைசெய்துசெய்தே. 2.6.5

2961
உன்னைச்சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்
முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?. 2.6.6

2962
முடியாததென்னெனக்கேலினி முழுவேழுலகுமுண்டான்,உகந்துவந்
தடியேனுள்புகுந்தான் அகல்வானும் அல்லனினி,
செடியார்நோய்களெல்லாம்துரந்தெமர்க்கீழ்மேலெழுபிறப்பும்,
விடியாவெந்நரகத்தென்றும் சேர்தல்மாறினரே. 2.6.7

2963
மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்,
பாறிப்பாறியசுரர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன்
றேறிவீற்றிருந்தாய் உ<ன்னை யென்னுள்நீக்கேலெந்தாய். 2.6.8

2964
எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்இலங்கைசெற்றாய், மராமரம்
பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா,
கொந்தார்தண்ணந்துழாயினாய், அமுதே,உன்னையென்னுள்ளேகுழைத்தவெf
மைந்தா, வானேறே, இனியெங்குப்போகின்றதே? 2.6.9

2965
போகின்றகாலங்கள்போயகாலங்கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி
ராகின்றாய் உ<ன்னைநானடைந்தேன்விடுவேனோ,
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே. 2.6.10

2966
கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங்
கண்ணனை, புகழ் நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,
எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே. 2.6.11

&நறஸபஇ
2967
கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்,
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,
ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்விண்ணோர்
நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே. 2.7.1

2968
நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,
காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை,
சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று,
வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே. 2.7.2

2969
மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது,
யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து,
தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்,
கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே. 2.7.3

2970
கோவிந்தன்குடக்கூத்தன்கோவலனென்றென்றேகுனித்து
தேவும்தன்னையும்பாடியாடத்திருத்தி, என்னைக்கொண் டென்
பாவந்தன்னையும்பாறக்கைத் தெமரேழெழுபிறப்பும்,
மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே. 2.7.4

2971
விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள்,
விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு,
விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி,
விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே. 2.7.5

2972
மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி,
துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்,
எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய,
விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே. 2.7.6

2973
திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்
உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று, உள்ளிப்
பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே,
மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே. 2.7.7

2974
வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்
காமனைப்பயந்தாய், என்றென்றுன்கழல்பாடியேபணிந்து,
தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க, என்னைத்
தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே. 2.7.8

2975
சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்
வெரீஇ, அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து,
மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
இரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே. 2.7.9

2976
இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்,
முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று,
தெருடியாகில்நெஞ்சே,வணங்கு திண்ணமறியறிந்து,
மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே. 2.7.10

2977
பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்,
எற்பரனென்னையாக்கிக் கொண்டெனக்கேதன்னைத்தந்த
கற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்
வெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே. 2.7.11

2978
தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை,
ஆமோதரமறிய வொருவர்க்கென்றெதொழுமவர்கள்,
தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்,
ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே. 2.7.12

2979
வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,
கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,
பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,
பண்ணில்பன்னிருநாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே. 2.7.13

2980
அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது, இருவரவர்முதலும்தானே,
இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்,
புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே. 2.8.1

2981
நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
நீந்தும்துயரில்லா வீடுமுதலாம்,
பூந்தண்புனல்பொய்கை யானை இடர்க்கடிந்த,
பூந்தண்துழா யென்தனிநாயகன்புணர்ப்பே. 2.8.2

2982
புணர்க்குமயனா மழிக்குமரனாம்,
புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி,
புணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர்,
புணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே. 2.8.3

2983
புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி,
நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்,
அலமந்துவீய வசுரரைச்செற்றான்,
பலமுந்துசீரில் படிமினோவாதே. 2.8.4

2984
ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்,
மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்,
தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே. 2.8.5

2985
தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்,
சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு,
பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை,
பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே? 2.8.6

2986
கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே. 2.8.7

2987
காண்பாராரெம்மீசன் கண்ணனையென்காணுமாறு,
ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா,
சேண்பாலவீடோ வுயிரோமற்றெப்பொருட்கும்,
ஏண்பாலும்சோரான் பரந்துளனாமெங்குமே. 2.8.8

2988
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9

2989
சீர்மைகொள்வீடு சுவர்க்கநரகீறா,
ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும்,
வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற,
கார்முகில்போல்வண்ணனென் கண்ணனைநான்கண்டேனே. 2.8.10

2990
கண்டலங்கள்செய்ய கருமேனியம்மானை,
வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன்,
பண்டலையில்சொன்னதமி ழாயிரத்திப்பத்தும்வல்லார்,
விண்டலையில்வீற்றிருந் தாள்வரெம்மாவீடே. 2.8.11

2991
எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்
செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே,
அம்மாவடியென் வேண்டுவதீதே. 2.9.1

2992
இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என்
மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்,
எய்தாநின்கழல் யானெய்த, ஞானக்
கைதா காலக்கழிவுசெய்யேலே. 2.9.2

2993
செய்யேல்தீவினையென் றருள்செய்யும், என்
கையார்ச்சக்கரக் கண்ணபிரானே,
ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்
எய்யாதேத்த, அருள்செய்யெனக்கே. 2.9.3

2994
எனக்கேயாட்செய் யெக்காலத்துமென்று, என்
மனக்கேவந் திடைவீடின்றிமன்னி,
தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே,
எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே. 2.9.4

2995
சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம்,
இறப்பிலெய்துகவெய்தற்க, யானும்
பிறப்பில் பல்பிறவிப்பெருமானை,
மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. 2.9.5

2996
மகிழ்கொள்தெய்வ முலோகம் அலோகம்,
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே,
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும்
மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே. 2.9.6

2997
வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்,
பேராதேயான் வந்தடையும்படி
தாராதாய், உன்னையென்னுள்வைப்பிலென்றும்
ஆராதாய், எனக்கென்றுமெக்காலே. 2.9.7

2998
எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்,
மிக்கார்வேத விமலர்விழுங்கும், என்
அக்காரக்கனியே, உன்னையானே. 2.9.8

2999
யானேயென்னை அறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே. 2.9.9

3000
ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை,
நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி,
தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை,
வேறேபோக எஞ்ஞான்றும்விடலே. 2.9.10

3001
விடலில்சக்கரத் தண்ணலை, மேவல்
விடலில்வண்குருகூர்ச் சடகோபன்சொல்,
கெடலிலாயிரத்துள் ளிவைபத்தும்,
கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே. 2.9.11

3002
கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்,
வளரொளிமாயோன் மருவியகோயில்,
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை,
தளர்விலராகில் சார்வதுசதிரே. 2.10.1

3003
சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது,
அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில்,
மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை,
பதியதுவேத்தி யெழுவதுபயனே. 2.10.2

3004
பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே,
புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில்,
மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை,
அயன்மலையடைவததுகருமமே. 2.10.3

3005
கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே,
பெருமலையெடுத்தான் பீடுறைகோயில்,
வருமழைதவழும் மாலிருஞ்சோலை,
திருமலையதுவே யடைவதுதிறமே. 2.10.4

3006
திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது,
அறமுயல் ஆழிப் படையவன்கோயில்,
மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை,
புறமலைசாரப் போவதுகிறியே. 2.10.5

3007
கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே,
உறியமர்வெண்ணெ யுண்டவன் கோயில்,
மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை,
நெறிபட அதுவே நினைவதுநலமே. 2.10.6

3008
நலமெனநினைமின் நரகழுந்தாதே,
நிலமுனமிடந்தான் நீடுறைகோயில்,
மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை,
வலமுறையெய்தி மருவுதல்வலமே. 2.10.7

3009
வலம்செய்துவைகல் வலங்கழியாதே,
வலம்செய்யும்ஆய மாயவன் கோயில்,
வலம்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை,
வலம்செய்துநாளும் மருவுதல்வழக்கே. 2.10.8

3010
வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது,
அழக்கொடியட்டா னமர்பெருங்கோயில்,
மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை,
தொழுக்கருதுவதே துணிவதுசூதே. 2.10.9

3011
சூதென்றுகளவும் சூதும்செய்யாதே,
வேதமுன்விரித்தான் விரும்பியகோயில்,
மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை,
போதவிழ்மலையே புகுவதுபொருளே. 2.10.10

3012
பொருளேன்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல்,
மருளில்வண்குருகூர் வண்சடகோபன்,
தெருள்கொள்ளச்சொன்ன வோராயிரத்துளிப்பத்து,
அருளுடையவன்தா ளணைவிக்கும்முடித்தே. 2.10.11

திருவாய் மொழி மூன்றாம் பத்து

3013
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே. (2) 3.1.1.

3014
கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,
கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது,
ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ. 3.1.2.

3015
பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற,
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம்
பரஞ்சோதி கோவிந்தா. பண்புரைக்க மாட்டேனே. 3.1.3.

3016
மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்,நின்
மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே? 3.1.4.

3017
வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்,
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்,
வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே? 3.1.5.

3018
ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,
போதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்
மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே? 3.1.6.

3019
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை,
மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்
கேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே? 3.1.7.

3020
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது,
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்,
மாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால்,
மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே? 3.1.8.

3021
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,
மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே? 3.1.9.

3022
மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே,
முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே? 3.1.10.

3023
வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை,
சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்,
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்,
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே. (2) 3.1.11

3024
முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,
அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,
வெந்நாள்நோய் வீய வினைகளைவேர் அறப்பாய்ந்து,
எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே? (2) 3.2.1.

3025
வன்மா வையம் அளந்த எம் வாமனா,நின்
பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,
தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து,
நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ? 3.2.2.

3026
கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்,
எல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய்,
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா,
சொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே. 3.2.3.

3027
சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும்
ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்,
தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்
வாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே. 3.2.4.

3028
வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,
சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,
கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்,யா னுன்னை எங்குவந் தணுகிற்பனே? 3.2.5.

3029
கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்,
அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்
நற்பொற்fசோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே? 3.2.6.

3030
எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே.
மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி,
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற,
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே? 3.2.7.

3031
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்,
ஓவுத லின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,
பாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே,
கூவுகின்றேன் காண்பாலன்f எங்கொய்தக் கூவுவனே? 3.2.8.

3032
கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன்,
மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்,
தாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே? 3.2.9.

3033
தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்,
அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல,
கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு,
நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே. 3.2.10.

3034
உயிர்க ளெல்லா உலகமு முடையவனை,
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும்,
உயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே. (2) 3.2.11

3035
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி,
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே (2) 3.3.1

3036
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே. 3.3.2

3037
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,
தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,
எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே. 3.3.3

3038
ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,
நீச னென்நிறை வொன்றுமி லேன்,என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே. 3.3.4

3039
சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,
ஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ?,
வேதி யர்முழு வேதத் தமுதத்தை,
தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே. 3.3.5

3040
வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,
வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன
லாங்க டமை,அ துசுமந் தார்க்கட்கே. 3.3.6

3041
சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே. 3.3.7

3042
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே. (2) 3.3.8

3043
ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,
வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்
தாயன், நாண்மல ராமடித் தாமரை,
வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே. 3.3.9

3044
வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,
மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே. 3.3.10

3045
தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,
நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே. (2) 3.3.11

3046
புகழுநல் ஒருவன் என்கோ.
பொருவில்சீர்ப் பூமி யென்கோ,
திகழும்தண் பரவை என்கோ.
தீயென்கோ. வாயு என்கோ,
நிகழும்ஆ காச மென்கோ.
நீள்சுடர் இரண்டும் என்கோ,
இகழ்விலிவ் வனைத்தும் என்கோ
கண்ணனைக் கூவுமாறே. (2) 3.4.1

3047
கூவுமா றறிய மாட்டேன்
குன்றங்கள் அனைத்தும் என்கோ,
மேவுசீர் மாரி என்கோ.
விளங்குதா ரகைகள் என்கோ,
நாவியல் கலைகள் என்கோ.
ஞானநல் லாவி என்கோ,
பாவுசீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே. 3.4.2

3048
பங்கையக் கண்ணன் என்கோ.
பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ.
அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ.
திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ.
சாதிமா ணிக்கத் தையே. 3.4.3

3049
சாதிமா ணிக்கம் என்கோ.
சவிகோள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ,
தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ.
ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமல னையே. 3.4.4

3050
அச்சுதன் அமலன் என்கோ,
அடியவர் வினைகெடுக்கும்,
நச்சுமா மருந்தம் என்கோ.
நலங்கடல் அமுதம் என்கோ,
அச்சுவைக் கட்டி என்கோ.
அறுசுவை அடிசில் என்கோ,
நெய்ச்சுவைத் தேறல் என்கோ.
கனியென்கோ. பாலென் கேனோ. 3.4.5

3051
பாலென்கோ. நான்கு வேதப்
பயனென்கோ, சமய நீதி
நூலென்கோ. நுடங்கு கேள்வி
இசையென்கோ. இவற்றுள் நல்ல
மேலென்கோ, வினையின் மிக்க
பயனென்கோ, கண்ணன் என்கோ.
மாலென்கோ. மாயன் என்கோ
வானவர் ஆதி யையே. 3.4.6

3052
வானவர் ஆதி என்கோ.
வானவர் தெய்வம் என்கோ,
வானவர் போகம் என்கோ.
வானவர் முற்றும் என்கோ,
ஊனமில் செல்வம் என்கோ.
ஊனமில் சுவர்க்கம் என்கோ,
ஊனமில் மோக்கம் என்கோ.
ஒளிமணி வண்ண னையே. 3.4.7

3053
ஒளிமணி வண்ணன் என்கோ.
ஒருவனென் றேத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ.
நான்முகக் கடவுள் என்கோ,
அளிமகிழ்ந் துலகமெல்லாம்
படைத்தவை ஏத்த நின்ற,
களிமலர்த் துளவ னெம்மான்
கண்ணனை மாய னையே. 3.4.8

3054
கண்ணனை மாயன் றன்னைக்
கடல்கடைந் தமுதங் கொண்ட,
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் தன்மேல்,
நண்ணிநன் குறைகின் றானை
ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,
எண்ணுமா றறிய மாட்டேன்,
யாவையும் யவரும் தானே. 3.4.9

3055
யாவையும் யவரும் தானாய்
அவரவர் சமயந் தோறும்,
தோய்விலன் புலனைந் துக்கும்
சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
ஆவிசேர் உயிரின் உள்ளால்
அதுமோர் பற்றி லாத,
பாவனை அதனைக் கூடில்
அவனையும் கூட லாமே. 3.4.10

3056
கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன,
பாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,
வீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே (2) 3.4.11

3057
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர்
தண்கடல் வட்டத்துள் ளீரே. (2) 3.5.1

3058
தண்கடல் வட்டத்துள் ளாரைத்
தமக்கிரை யாத்தடிந் துண்ணும்,
திண்கழற் காலசு ரர்க்குத்
தீங்கிழைக் கும்திரு மாலை,
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்துழ லாதார்,
மண்கொள் உலகில் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே. 3.5.2

3059
மலையை யெடுத்துக்கல் மாரி
காத்துப் பசுநிரை தன்னை,
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச்சொல் லிநிறெப் போதும்,
தலையினோ டாதனம் தட்டத்
தடுகுட்ட மாய்ப்பற வாதார்,
அலைகொள் நரகத் தழுந்திக்
கிடந்துழைக் கின்ற வம்பரே. 3.5.3

3060
வம்பவிழ் கோதை பொருட்டா
மால்விடை யேழும் அடர்த்த,
செம்பவ ளத்திரள் வாயன்
சிரீதரன் தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டமிட் டாடிக்
கோகுகட் டுண்டுழ லாதார்,
தம்பிறப் பால்பய னென்னே
சாது சனங்க ளிடையே? 3.5.4

3061
சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்ப தற்கு,
ஆதியஞ் சோதி யுருவை
அங்குவைத் திங்குப் பிறந்த,
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும்துள் ளாதார்,
ஓதி யுணர்ந்தவர் முன்னா
என்சவிப் பார்ம னிசரே? 3.5.5

3062
மனிசரும் மற்றும் முற்றுமாய்
மாயப் பிறவி பிறந்த,
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானை,
கனியைக் கரும்பினின் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை,
முனிவின்றி ஏத்திக் குனிப்பார்
முழுதுணர் நீர்மையி னாரே. 3.5.6

3063
நீர்மை நூற்றுவர் வீய
ஐவர்க் கருள்செய்து நின்று,
பார்மல்கு சேனை அவித்த
பரஞ்சுட ரைநினைந் தாடி.
நீர்மல்கு கண்ணின ராகி
நெஞ்சம் குழைந்துநை யாதே,
ஊர்மல்கி மோடு பருப்பார்
உத்தமர்க்கட் கென்செய் வாரே? 3.5.7

3064
வார்ப்புனல் அந்தண் ணருவி
வடதிரு வேங்கடத் தெந்தை,
பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப்
பித்தரென் றேபிறர் கூற,
ஊர்ப்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்கநின் றாடி,
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படு வாரே. 3.5.8

3065
அமரர் தொழப்படு வானை
அனைத்துல குக்கும் பிரானை,
அமரர் மனத்தினுள் யோகு
புணர்ந்தவன் தன்னோடொன் றாக,
அமரத் துணியவல் லார்கள்
ஒழியஅல் லாதவ ரெல்லாம்,
அமர நினைந்தெழுந் தாடி
அலற்றுவ தேகரு மமே. 3.5.9

3066
கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னை,
திருமணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை,
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளங் குழைந்தெழுந் தாடி,
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதமை தீர்ந்தே. 3.5.10

3067
தீர்ந்த அடியவர் தம்மைத்திருத்திப் பணிகொள்ள வல்ல,
ஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை,
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்,
நேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே. (2) 3.5.11

3068
செய்ய தாமரைக் கண்ண னாயுல
கேழு முண்ட அவன்கண்டீர்,
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,
செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப்
பட்டி வைபடைத் தான்பின்னும்,
மொய்கொள் சோதியொ டாயி னானொரு
மூவ ராகிய மூர்த்தியே. (2) 3.6.1

3069
மூவ ராகிய மூர்த்தி யைமுதல்
மூவர்க் குமுதல் வன்றன்னை,
சாவ முள்ளன நீக்கு வானைத்
தடங்க டல்கிடந் தான்தன்னைத்,
தேவ தேவனைத் தென்னி லங்கை
எரியெ ழச்செற்ற வில்லியை,
பாவ நாசனைப் பங்க யத்தடங்
கண்ண னைப்பர வுமினோ. 3.6.2

3070
பரவி வானவ ரேத்த நின்ற
பரம னைப்பரஞ் சோதியை,
குரவை கோத்த குழக னைமணி
வண்ண னைக்குடக் கூத்தனை,
அரவ மேறி யலைக டலம
ரும்து யில்கொண்ட அண்ணலை,
இரவும் நன